Tuesday, March 22, 2011

2011 - காடுகளின் ஆண்டு

மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், எதிர்கால சந்ததி பயனுரவும் சில சிறப்பு தினங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. அவற்றில் நான் முக்கியமாகக் கருதுவது உலக வனதினம் - மார்ச் 21 (World forest day), உலக தண்ணீர் தினம் மார்ச் 22 (World Water Day) மற்றும் உலக வானிலை தினம் - மார்ச் 23 (World Meteorological Day) ஆகியவைதான். வானிலை, நீர், காடு ஆகிய மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பவை.

பூமியானது தட்டை என்பதால் இயற்கையிலேயே சில இடங்கள் பாலைவனமாகவும், சில இடங்கள் காடுகளாகவும் காணப்படுகிறது. பாலைவனத்தை ஒன்றும் செய்வதற்கில்லை என்பதால் அவற்றின் இயல்பிலேயே விட்டுவிடுகிறோம். காடுகலானது யொவனப் பெண்மாதிரி. வாய்ப்புக் கிடைக்கும்பொழுது அபகரிக்கத் தொடங்குகிறோம். துச்சாதனன் திரௌபதியின் சேலையை உருவியது போல இயற்கை வளங்களை உருவிக்கொண்டிருக்கிறோம். அரசுகளும் கண்கள் பொசுங்கிய திருதுராஸ்டன் போல வேடிக்கப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இயற்கையுடன் ஆடும் காம விளையாட்டில் தோல்வி காண்பது மனிதர்களாகவும், பாதிப்புகளை பெருமளவு சந்திப்பது ஒன்று முதல் ஐந்தறிவு உயிர்களாகவும் அமைந்துவிடுகிறது. ஜப்பான் சுனாமியில் ஏற்பட்ட மனித இழப்புகளையும், ஃபுகுஷிமா தைச்சி அணு உலை வெடிப்பின் கதிர்வீச்சு சீற்றத்தால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் மட்டுமே பேசுகிறோம். அங்கிருக்கும் விலங்குகள், தாவரங்கள், பூச்சி, புழுக்கள் பற்றி யோசிக்கிறோமா? அவற்றின் அழிவும் நம்முடைய செயலால் தானே ஏற்பட்டது.

இந்த வருடத்தை (2011) காடுகளின் ஆண்டாக (International Year of Forests, 2011) அறிவித்திருக்கிறார்கள். சூரியனில் கரும்புள்ளிகள் அதிகரித்து வருவதால், அதன் வெப்பக் கதிர்களின் வேகம் சற்று தணியும். அதனால் பனிப் பொழிவுகள், மழை அளவு அதிகரிக்கப் போகிறதாம். போதாக் குறைக்கு நிலவு வேறு இதுவரை இல்லாத கோணத்தில் சூரியனிடம் நெருங்கிச் செல்ல இருக்கிறதாம். மேற்கண்ட இரண்டு காரணங்களால் இந்த வருட மழையின் அளவு அதிகரித்து காடுகள் செழிப்பாக வளரும் என்று ஆரூடம் சொல்லி இருக்கிறார்கள். ஆகவேதான் இந்த வருடம் காடுகள் ஆண்டாக முன்மொழிந்திருக்கிறார்கள். இதில் முரண் என்னவென்றால், ஒரு வருடத்தின் சில மாதங்கள் மட்டுமே மழை பொழிந்து, எந்த நாட்டில் புதிதாக காடுகள் வளந்துவிடப் போகிறது. மென்மேலும் உயரும் மக்கள் தொகையால் காடுகளையும், ஏரிகளையும் ஆக்கிரமித்து குடியிருப்புகளை உண்டாக்குகிறோம். தயவுசெய்து காடுகளை அழிக்காதீர்கள், நம் சந்ததிகளுக்காக இயற்கையைக் கொஞ்சம் மிச்சம் வையுங்கள் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தத்தான் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22-ம் தேதி வன தினமாக கொண்டாடுமாறு அறிவித்திருக்கிறார்கள். கெஞ்சல்களுக்கு மனமிறங்கி மிச்சம் வைக்கும் காடுகள் வேண்டுமென்றால் ஓரளவிற்கு வளரலாம்.

3000க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு வளர்த்த மரங்களின் தந்தை சத்தியமங்களம் ஏழூர் ”அய்யாசாமி”, சத்குரு வாசுதேவ், பாரம்பரிய விதைகளின் உரிமைக்காகப் போராடும் வந்தனா சிவா, வாழை மரபணு வங்கியை ஏற்படுத்தியுள்ள எஸ்.உமா போன்றவர்கள் முனைப்புடன் செயல்பட்டாலும் இந்த விஷயத்தில் ஒவ்வொரு தனிநபரும் அக்கறை எடுக்க வேண்டும். நம்முடைய வீட்டின் முற்றத்திலோ, தெருவிலோ, சுற்றத்திலோ மரம் வளர்த்து நம் சந்ததிகளின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவ வேண்டும். மரங்கள் இல்லையேல் வானமும் பூமியும் எப்படி குளிரும்?

"ஸ்சப்பா... நாளுக்கு நாள் இந்த வெயில் அதிகமாகிக்குனே போகுதே?" என்ற கிசுகிசுப்பை உலகின் பல பகுதிகளிலும், பல மொழிகளிலும் சரளமாகக் கேட்க முடியும். ஆயிரம் வருடங்களுக்கு முன்பு பூமியை நோக்கி சூரியக் கதிர்கள் எப்படி தவழ்ந்து வந்ததோ, அதே வீரியத்தோடுதான் இப்பொழுதும் வெயிலின் கற்றைகள் கசிந்தோடுகிறது. எனில் பூமியின் மனிதர்கள் நாளுக்கு நாள் வெயிலின் சூட்டை அதிகமாக உணர்வது ஏன்? வெக்கையில் சிணுங்குவது ஏன்?

காட்டுமிராண்டித் தனமாக இயற்கையை கபளீகரம் செய்கிறோம் என்பதுதான் முக்கியக் காரணம். வாகனங்களின் கரும்புகை, குளிர்பதனப் பெட்டிகளின் குளோரோ ஃப்ளோரோ கார்பன் வெளியீடு, தொழிற் சாலைகளின் வேதிப்புகை, போதைக்காக உறிஞ்சி வெளிவிடும் புகையிலை, கஞ்சா போன்றவற்றின் மதுப்புகை என்று மனிதர்களின் அன்றாட தேவைகளுக்காக ஒவ்வொரு நிமிடமும் சுற்றுச்சூழலை கெடுத்துக் கொண்டிருக்கிறோம். நாளுக்கு நாள் அதிகரிக்கும் மக்கள் தொகை, பிராண வாயுவான ஆக்சிஜனை உள்ளிழுத்து வெளிவிடும் கார்பன்டை ஆக்சைடும் ஒரு வகையில் பூமியின் உஷ்ணத்திற்குக் காரணம். இதனை சமநிலை செய்ய மரங்கள் இருந்தால் தானே உலக உயிர்கள் நீண்ட நாள் வாழ முடியும்.

நாம் காடுகளை அழிக்கும்போது வாயு மண்டலத்தில் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு அதிகரிக்கிறது. நவீன விவசாய நடவடிக்கைகள், நிலத்தைப் பராமரிக்கும் முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் இதர முறையற்ற நடவடிக்கைகள் அனைத்தும் சேர்ந்து மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடு வாயுக்களின் அளவுகளை வளிமண்டலத்தில் அதிகரிக்கச் செய்கின்றன. நவீன மின் சாதனங்களின் பயன்பாடு "க்ளோரோ ஃபுளூரோ கார்பன்"கள் போன்ற வேதிக் கூறுகளை வேளியேற்றுகின்றன. CFCக்கள் ஓசோனில் ஓட்டைகள் ஏற்படக் காரணமாகின்றன. அதிகரிக்கப்பட்டு வரும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள் பூமியின் வெப்ப நிலையை அதிகரிக்கச் செய்கிறது. இதுவே சங்கிலித் தொடர்புபோல் தண்ணீர்ப் பிரச்சனைக்கும், பூமி வெப்பமடைவதற்கும் காரணமாக அமைகிறது.

உலகமே தண்ணீரால் சூழப்பட்டிருந்தாலும் அவற்றில் ஒரு சதவீத தண்ணீர் மட்டுமே உயிர் வளர்க்கப் பயன்படுகிறது. குட்டை, குளம், கிணறு, எரி, ஊற்று, அருவி, ஓடை, நதி, ஆறு, மழை, நிலத்தடி நீர் என பல வடிவங்களில் நமக்குக் கிடைக்கிறது. என்றாலும் துருவப் பகுதிகளில் பனிக் கட்டிகளாக உறைந்திருப்பதே அதிகம். உலகமே நீரால் சூழப்பட்டிருக்கிறது எனில் தண்ணீர்ப் பற்றாக்குறை எப்படி வருகிறது என்று நாம் யோசிக்க வேண்டும். பிரச்னையை ஆரம்பத்திலேயே வேரறுக்காமல் சமாளிக்கப் பார்க்கிறோம். அந்த சமாளிப்புகளில் ஒன்றுதான் தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம். இந்தத் திட்டத்திற்கு ஆகும் செலவு 5.5 லட்சத்திற்கும் மேலாக இருக்கும் என்று 2004 ஆம் ஆண்டு தோராயமாக கணக்கு சொன்னார்கள். இன்றைய தேதியில் அதற்கும் அதிகமாக செலவாகலாம். இவ்வளவு பெரிய தொகையை ஒரு திட்டத்திற்கு பயன்படுத்துவதின் மூலம் தேசத்திற்கு ஏற்படும் எதிர்விளைவுகளையும், பாதிப்புகளையும் நாம் யோசிப்பதே இல்லை. சினிமா நடிகர் உண்ணாவிரதம் இருந்து, ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்து துவக்கி வைத்தால், அதைவிடச் சிறந்த திட்டம் இல்லை என்ற மனநிலையில் தான் இருக்கிறோம். பத்திரிகைகளும் அவற்றை பெரிதுபடுத்தி நிபுணர்களின் கருத்தை ஆழப்புதைக்கும் செயலையே செய்கின்றன.

நீரின்றி அமையாது உலகு என்பதை கொஞ்சம் உற்று நோக்கினால் தெளிவாக உணர்ந்துகொள்ளலாம். ஓர் ஏக்கர் நிலம் பயிர்செய்ய 2000 லிட்டர் தண்ணீர் பயன்படுவதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அதே அளவு தண்ணீர் ஒரு காரினைத் (Car) தயாரிக்கவும் பயன்படுகிறது. மரப்பொருட்களைத் தவிர்த்து மற்ற எல்லா உற்பத்திக்கும் தண்ணீரின் பயன்பாடு அத்யாவசியமான ஒன்று. பன்னாட்டுத் தொழிற்ச் சாலைகளின் தயாரிப்புக் கிடங்குகள் இந்தியாவில் இருப்பதின் முக்கிய நோக்கமே இதுதான். இந்தியாவின் இயற்கை வளங்களைக் கபளீகரம் செய்வதுதான் அவர்களுடைய முக்கிய நோக்கமாக ஆரம்பம் முதல் இருந்துள்ளது. ஹீரோஹோண்டா, ஹுண்டாய், ஃபோர்ட், ரெனால்ட் நிஸ்ஸான் என்று எத்தனை தொழிற்ச்சாலைகள். ஒவ்வொரு நிறுவனமும் லட்சக் கணக்கான வாகனங்களை ஒவ்வொரு வருடமும் தயார் செய்து சந்தைக்கு அனுப்புகிறது. அவற்றில் இந்தியர்களின் வியர்வை மட்டுமில்லை, விலை மதிக்க முடியாத தண்ணீரும் உறைந்திருக்கிறது. ஒரு வருடத்தில் இவ்வளவு வாகனங்கள் தான் உற்பத்தி செய்யவேண்டும் என்ற விதியினை நிர்ணயிக்கலாம். அமேரிக்கா எவ்வளவு நிர்பந்தித்தாலும், பெட்ரோல் கொழிக்கும் நாடுகளின் அரசுகள் அதுபோன்ற விதிமுறைகளைத் தானே கடைபிடிக்கின்றன. இதுபோன்ற கடிவாளங்களைப் போடாமல் காலத்தையும், பணத்தையும் வீணாக்கும் செயலையே நாம் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம்.

உதாரணமாக, ஓர் ஊராட்சியில் தோராயமாக 60 கிராமங்கள் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவற்றில் 30 கிராமங்களில் கோவிலும், அதற்குச் சொந்தமான குளமும் இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த குளங்களைத் தூர் வாருவதற்காக, ஒவ்வொரு குளத்திற்கும் ரூபாய் 1 லட்சம் வீதம் 30 லட்ச ரூபாய் ஓர் ஊராட்சிக்கு ஒதுக்கப்படுகிறது. இந்தப் பணத்தை சரியாகப் பயன்படுத்தினால் குளத்தை நல்ல முறையில் பராமரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயரச் செய்யலாம். காய்ந்த ஆகாயத் தாமரையை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தவும், குளத்தின் கரையை ஒட்டி வளர்ந்த புல் பூண்டுச் செடிகளை வெட்டவும் மட்டுமே இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களுள் மழைநீர் சேகரிப்புத் திட்டம் ஆகச் சிறந்த ஒன்று. இவையிரண்டையும் சமரசமின்றி ஒழுங்காகச் செய்தாலே பாதி பிரச்சனையைத் தீர்கலாம். இதன் மூலம் இயந்திரங்களால் அளவுக்கதிகமாக தண்ணீர் உறிஞ்சப்பட்டு ஏற்படும் வெற்றிடமும், நல்ல தண்ணீரில் கடல்நீர் கலப்பதையும் வெகுவாகக் குறைக்க முடியும். நம்மைச் சுற்றியுள்ள நீர் நிலைகளில் கூட மனிதக் கழிவுகளையும், தொழிற்ச்சாலைகளின் நச்சுக் கழிவுகளையும் இட்டு நிரப்புகிறோம். உதாரணத்திற்கு அடையாறு, கூவம் போன்றவற்றை இங்குக் குறிப்பிடலாம். தோல் பதனிடுதல் மூலம் அபாயகரமான நச்சுக் கழிவு பாலாறில் சேர்வதை நாம் அறிந்ததே. ஈரோடு, திருப்பூர் போன்ற இடங்களில் சாயக் கழிவுகளால் ஏற்படும் சிக்கல்களும் நமக்குத் தெரிந்ததே.

நல்ல இடங்களை மாசுபடுத்திவிட்டு, இனி ஒன்றும் செய்ய இயலாது என்ற நிலை ஏற்படும்போது, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு சென்று அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கண்டுணர்ந்து, அதற்காக ஒரு 200 கோடி ரூபாய் திட்டம் செயல்படுத்தும் நடைமுறையில் தானே இருக்கிறோம். கோவில் குளத்தை சுரண்டுபவர்கள் கூவம் திட்டத்தையா விட்டுவைக்கப் போகிறார்கள். அப்படி இருக்கும் பொழுது நதிநீர்த் திட்டம் அரசியல் செய்பவர்களுக்கு எவ்வளவு பெரிய வரப்பிரசாதமாக அமையும்.

"இன்று வானிலை மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. கடலோரப் பகுதிகளின் சில இடங்களில் மழை பொழிய வாய்ப்புள்ளது" என்று வானிலை ஆய்வு மையம் தெரியப்படுத்தினால் நமுட்டுச் சிரிப்புச் சிரிக்கிறோம். அந்த கேலிப் புன்னகையின் அஸ்திவாரத்தை கட்டமைத்ததில் ஒவ்வொரு தனி மனிதருக்கும் பங்குண்டு. இயற்கை பல சாதங்கங்களை நமக்கு ஏற்படுத்தித் தருகிறது. அவற்றை சரியாகப் பயன்படுத்துவதே புத்திசாலித்தனம். காடுகளை வளர்த்து, தண்ணீரை சேமித்து உலகை ரட்சிப்பது நம் கையில் தான் உள்ளது. இதற்காக எந்தக் கடவுளும் பூமியில் இறங்கி வரப் போவதில்லை.

அடுத்ததாக, 2011ம் ஆண்டை சர்வதேச ரசாயன ஆண்டாகவும் (
International Year of Chemistry 2011) ஐ.நா. அறிவித்திருக்கிறது. வனப்பகுதிகளை அதிகரிக்கும் அதேநேரத்தில், பூமியை பாதுகாக்க ரசாயனங்களின் பயன்பாட்டை குறைப்பதே இதன் உள்நோக்கம். மெழுகுப் பூச்சு, உலோகப்பூச்சுக் கொண்ட பாலித்தீன் பைகளையும், ரசாயன உரங்களையும், நச்சுக் கழிவுகளையும் குறைப்பதின் மூலம் மட்டுமே இந்த இலக்கை அடைய முடியும் என்று நினைக்கிறேன்.

Sunday, March 20, 2011

சிட்டுக்குருவி தினம்

மார்ச் 20 - சிட்டுக்குருவி தினம் (House Sparrow) என்பதால் கவிஞர் ஆசைத்தம்பியுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன். அதன் தாக்கத்தில் தான் இந்தப் பதிவு. இந்தப் பறவையினத்தை சிட்டு, ஊர்க் குருவி, அடைக்கலாங் குருவி என்றும் கூட அழைக்கிறார்கள். "இந்தியாவில் அதிகமாகக் காணக் கிடைக்கும் பறவை எது?" என்று பறவையியல் அறிஞர் சலீம் அலியிடம் கேட்கப்பட்டதாம். காக்கையையும், சிட்டுக்குருவியையும் சொல்லலாம் என்று பதில் கூறினாராம். மனிதர்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் இவையிரண்டையும் காணமுடியும். ஓட்டு வீடுகளும், கூரை வீடுகளும் சிட்டுக் குருவிகளுக்கு வசதியான இருப்பிடங்கள். வீட்டின் எதோ ஒரு மூலையில் உத்திரத்திற்கு இடையில் கூடுகட்டி வாழப் பழகியவை. வீதிகளில் உள்ள மின்சாரக் கம்பிகளின் சட்டகத்தில் கூட இவற்றின் கூடுகளைப் பார்த்திருக்கிறேன்.

என்னுடைய தாய் வழிப் பாட்டி வீடு அந்த காலத்தில் கட்டப்பட்ட மூன்றடுக்கு சுண்ணாம்பு வீடு. கட்டடத்தைத் தாங்குவதற்காக நீண்ட மரச் சட்டங்களை உத்திரத்தில் ஆதாரமாகக் கொடுத்திருப்பார்கள். ஆங்காங்கு முற்றங்கள் இருக்கும் பெரிய வீடு. அந்த முற்றங்களில் நிமிர்ந்து பார்த்தால் சிட்டுக் குருவிகள் குதூகலத்துடன் கூட்டில் உறவாடும். ஒட்டடை அடிக்கும்பொழுது கூட பறவைகளின் கூடுகளை சிதைக்க மாட்டார்கள். "கூட்டக் கலச்சா குடும்பத்துக்கு ஆகாது" என்று சொல்வதைப் பலமுறை கேட்டிருக்கிறேன். மாட்டு வண்டிகளில் நெல்மூட்டைகள் ஏற்றும்பொழுது சிந்தும் நெல் பருக்கைகளையும், சாயந்திர நேரத்தில் தண்ணீர் தெளித்து போடும் வெள்ளைக் கோலங்களின் அரிசி மாவையும் சிறிய அலகால் கொத்தித் தின்பதைப் பார்த்திருக்கிறேன். நம்முடைய வீட்டின் கட்டுமானம் தற்போது முற்றிலும் மாறி இருக்கிறது. வீட்டின் வடிவமைப்பு நம்முடைய இருப்பிற்கு வேண்டுமானால் வசதியாக இருக்கலாம். நம்மை ஒட்டி வாழும் பறவைகளுக்கு ஏற்றதாக இல்லை என்பதே வருத்தமான உண்மை.

நம்முடைய கலாச்சாரமும் வாழ்வியல் முறையும் மாறமாற, நம் சார்ந்த பூகோள உயிரினங்களின் வாழ்வியல் பிரச்சனையாக மனிதர்கள் மாறிவிடுகிறார்கள். இன்றும் என்னுடைய கிராமத்தில் மார்கழி மாத கோலம் போடுகிறார்கள். சாணியை கோலத்தின் நடுவில் வைத்து பூசணிப்பூவை நடுகிறார்கள். கோலத்தில் அரிசி மாவைவிட வேதிப் பொருளான வண்ணப் பொடிகளையே (Color Powder) அதிகம் இட்டு நிரப்புகிறார்கள். புகைபடிந்த பனியின் இருளில் இறங்கி நடந்தால் மஞ்சளும், சிவப்பும், பச்சையும், வெல்வெட்டும் தெறிக்கின்றன. முற்றத்தை அழகுபடுத்துவதாக நினைத்துக் கொண்டு மண்ணின் தரத்தை வேதிக் காரங்களும், அமிலங்களும் தின்னக் கொடுக்கிறோம். இன்னும் சிலர் கோலம் அழியாத வண்ணம் Paint-டால் கூட வரைந்துவிடுகிரார்கள். வீட்டின் சுவர்களுக்கு பயன்படுத்தப்படும் வண்ணப்பூச்சுகளின் உப பொருட்களான வார்னிஷ் போன்றவற்றின் பயன்பாட்டினால் காற்றின் வெப்பநிலை அதிகரிக்கிறது என்றும் கூறுகிறார்கள். AC, Fridge போன்றவற்றின் க்ளோரோ ஃப்ளோரோ கார்பன் பற்றி எல்லோரும் பரவலாக அறிந்ததே. காற்றின் வெப்பநிலை உயர்வும் பறவைகளின் இயல்பான வாழ்க்கையை நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றன.

விவசாயப் புரட்சி என்ற அதி நவீனக் கொள்கையில் நச்சுத்தன்மை கொண்ட உரங்களையே நிலங்களில் பயன்படுத்துகிறோம். 65% விவசாய நிலங்கள் வேதி உரங்களால் தான் பயிராகிறது. பயிர்கள் வளர்ந்த பிறகும் பூச்சிக் கொல்லி அமிலங்களை இயந்திரத்தின் மூலம் தெளிக்கிறோம். வேதித் தன்மை அதிகமாகும் நிலங்களில் புழுக்கள் எப்படி வளரும். காற்றில் கலந்த அமிலத்தை மீறி பூச்சிகள் எப்படி வளரும். பின்னர் பறவைகளுக்கு எப்படி பசி தீரும். இதில் பிளாஸ்டிக், பாலித்தீன், உலோகப் பூச்சு மைக்காப் பைகளினால் வேறு சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறோம். முன்பெல்லாம் கிராமத்திற்கு வருபவர்களை நிழல்தரும் மரங்களே வரவேற்கும். இப்பொழுதெல்லாம் மக்கா குப்பைகளே வரவேற்கின்றன. இதில் பாலித்தீன் கவர்களுக்கு தடைவிதித்த கேரளா அரசின் தைரியமான முடிவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பசு, எருது போன்ற கால்நடை வளர்ப்பு இயற்கையை வளப்படுத்த பெரிதும் உதவும் என்கிறார்கள். குறிப்பாக பசுவின் சாணம் கிருமி நாசினியாக மட்டுமில்லாமல் அணுப் பிளவின் கதிர்வீச்சுத் தன்மையிலிருந்தும் பாதுகாக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

அடுத்த முக்கியமான பிரச்சனை பெட்ரோல் மற்றும் தொழிற்ச்சாலைகளால் ஏற்படும் கற்று மாசுபாடு. இந்த மாசுக் காரணிகளால் பாதிக்கப்படும் பூச்சிகளை சிட்டுக்குருவிகள் உண்பதில்லை. அதிகரித்துவரும் வாகனப் பயன்பாடும், முடுக்கிவிடப்படும் தொழில்மயமும் காற்றின் மாசுபாட்டை நாளுக்கு நாள் அதிகரிக்கவே செய்யப்போகின்றன. அண்டார்ட்டிக்காவிலிருந்து திரும்பிய பனி மனிதனின் ஆங்கிலப் பேட்டி உறைய வைப்பதாகவே இருக்கிறது. இதே முறையில் மக்கள் வாழ்ந்தால், பெட்ரோலை அதிகமாகப் பயன்படுத்தினால் இன்னும் 80 முதல் 100 ஆண்டுகளில் சென்னை போன்ற கடற்கரை நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் இருக்கிறது என்று ஆரூடம் சொல்கிறார். "ச்சே ச்சே இதெல்லாம் நடக்குமா என்ன?" என்ற சந்தேகம் வரலாம். கடலில் மூழ்கிய பூம்புகாரில் ஏராளமான தங்க வைர நகைகள் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். மாமல்லபுர அழகிய சிற்பங்களில் பலவும் கடலில்தான் மூழ்கி இருக்கின்றன என்றும் சொல்கிறார்கள். அதுபோலவே சென்னையின் கோட்டையும், இதர நகரங்களின் சிம்மாசனங்களும் மூழ்கலாம் இல்லையா? சென்னையின் மக்களே உங்களின் பங்காக கடலன்னைக்கு என்ன கொடுக்கப் போகிறீர்கள்?.

நீர் மாசுபாட்டின் ஏகோபித்த பங்கு தொழிற்ச்சாலைகளையே சாரும். எனினும் ஆற்றில் நீர் இருந்தால் தானே நீர் மாசுபடுவதற்கு. மணல் திருடுவதற்கு நீர் இருந்தால் எப்படி?. நிலத்தடி நீர் மட்டும் என்ன வாழ்கிறது. இந்தியாவிலிருந்து சுரங்கப்பாதை தோண்டி அமெரிக்க, ஜப்பான், வளைகுடா போன்ற நாடுகளுக்குச் செல்ல ஆராய்ச்சி நடக்கிறது. இதைச் சொல்லும் என்னை பைத்தியக்காரன் என்று நீங்கள் சிரிக்கலாம். வானத்தில் பறக்க முடியும் என்று சொன்னபோது ரைட் சகோதரர்களைப் பார்த்து உலகமே சிரித்ததாம். இதைப்படிக்கும் தமிழ் சமூகம் ரொம்பக் குறைவு. அதிலும் சிவனைக் கூட பித்தன் என்று சொல்லும் மரபுதானே நம்முடையது. யதார்த்தமாக யோசித்தால், மழைநீர் சேமிப்பை செயல் திட்டமாகக் கொண்டுவரும் அரசை அடுத்த முறை வீட்டிற்கு அனுப்புவோம். நமக்கு கிரைண்டரும், மிக்ஸியும், டிவியும் தானே முக்கியம். மின்சாதனப் பொருட்களை மீறி யோசித்தால் மூலையில் ரத்தக் கசிவு அல்லவா ஏற்படும்.

கடைசியாக செல்போன் கோபுரங்களுக்கு வருவோம். வானுயர்ந்த கோபுரங்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு சிட்டுக் குருவியின் அழிவிற்கு முக்கியமான காரணம். இவற்றின் அருகில் குருவிகளின் கூடு இருந்தால் அவற்றின் வாழ்நாள் குறைகிறது. குருவிகளின் மலட்டுத் தன்மைக்கும், நாட்கடந்த குஞ்சு பொறித்தலுக்கும் இந்த அலைக்கற்றைகள் காரணமாக அமைகின்றன. பொதுவாக 10 முதல் 15 நாட்களில் குஞ்சு பொரிக்கும் இந்த பறவைகள், செல்போன் கோபுரங்களின் அருகில் குஞ்சு பொறிக்கும் காலங்களில் இருக்க நேர்ந்தால் ஒரு மாதத்திற்கும் அதிகமான நாட்களை எடுத்துக் கொள்வதாக சொல்கிறார்கள். தெருவில் புணரும் நாயின் குறி மீது கல்லெறிவதும், அடைகாக்கும் பறவைக்கு சிக்கலை ஏற்படுத்துவதும் ஒன்றுதானே.

பூச்சி புழுக்களையும், பூவின் மொட்டுக்களையும், தானிய வகைகளையும் உண்டு வாழும் பறவைகளுக்காக கொஞ்சம் யோசிப்போம். எளிய வாழ்க்கை வாழும் அவைகளுக்காக நம்முடைய அதீதமான வசதிகளில் தேவையில்லாத கொஞ்சத்தைக் குறைத்துக் கொள்வோம். சிட்டுக் குருவிகளும் ஊரில் உலகத்தில் வாழட்டுமே.

Friday, March 18, 2011

கிழக்கின் இருட்டில் வெளிச்சம்

பாலுசத்யா எழுதிய "இன்று விடுமுறை" என்ற சிறுகதைத் தொகுப்பை அவரிடமிருந்து கடன் வாங்கியிருந்தேன். புத்தகத்தைத் திருப்பிக் கொடுப்பதற்கும், கிழக்கின் மொட்டை மாடிக் கூட்டத்திற்கும் சேர்த்து நியூ ஹொரிசன் மீடியாவிற்குச் சென்றிருந்தேன். பாலுசத்யா வெளியில் சென்றிருந்ததால் வரவேற்பரையில் உட்கார்ந்து, 'நம்ம சென்னை' இதழில் யுத்தம் செய் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் சத்யா பற்றி (ஒரு கலைஞனின் பயணம்) நண்பர் சந்தோஷ் எழுதியிருந்த கட்டுரையை வாசித்துக் கொண்டிருந்தேன். என்னருகில் இருந்த சிறுவன் பேச்சுக் கொடுத்தான். இதழிலிருந்து பார்வையை விலக்கி குரல் வந்த திசையைப் பார்த்தேன்.

"புத்தகம் வாங்க வந்திருக்கிங்களா... அண்ணா?" என்றான்.

"இல்ல கண்ணா... நண்பரைப் பார்க்க வந்திருக்கேன். ஆமா நீ இங்க என்ன பண்ற?"

"நான் கிழக்கு WareHouse-ல வேலை செய்யிறேங்கன்னா" என்றான்.

"சின்ன பையனா இருக்கியே. மேலபடிக்க வேண்டியது தானே" என்ற கேள்வி என்னையும் மீறி வெளிவந்துவிட்டது.

"படிக்கணும்ணா... 10th-ல 75% மார்க் வாங்கியிருக்கேன். கொஞ்ச பணத்தேவை இருந்தது. அடுத்த வருஷம் படிக்கப் போறேண்ணா" என்றான்.

"படிக்கறத விட்டுடாதப்பா. நல்ல மார்க் வேற வாங்கியிருக்கியே" எனும்போது அவனுடைய அலுவலகத் தோழன் அழைக்கவும் என்னைப் பார்த்து சிரித்துவிட்டு சொந்தக் காலில் ஓடினான். தரைக்கும் வலிக்காமல், காலுக்கும் வலிக்காமல் எச்சரிக்கையுடன் பாலுசத்யா நடந்து வந்தார். என்னைப் பார்த்ததும் உதட்டைக் குவித்து "உஸ்ஸ்ஸ்" என்று ஊதினார்.

"சின்ன குழந்தையா மாறிட்டிங்களா பாலு? இது என்ன விளையாட்டு?" என்றேன்.

"சத்தம் போடாதீங்க... குருநாதர் வராரு..." என்று கண்களை உருட்டி பரபரப்பாகக் கூறினார். தொலைந்த பொருளைத் தேடுவது போல, கீழ் தளத்தை உற்றுநோக்கியவாறு பாலுமகேந்திரா கடந்து சென்றார். கிழக்கின் ஊழியர்களைப் பார்த்துவிட்டு, மீண்டும் என்னைக் கடந்து செல்லும்போது "கிருஷ்ண பிரபு, இலக்கிய வாசகர் சார். தேடித்தேடி படிக்கக் கூடியவர் சார்" என்று ராட்சசப் படைப்பாளியிடம் பாலுசத்யா அறிமுகப்படுத்தி வைத்தார்.

ஒரு நிமிடம் நிதானித்து "அப்படியா..." என்று என்னைப் பார்த்தவர், "நம்ம எல்லாம் ஒரே வட்டத்தில் இருக்கோம். சந்தோசம்..." என்றவாறு இறுக்கமாகக் கையைப் பற்றினார். அந்தப் பற்றுதலில் இலக்கியத்தின் மேலுள்ள அவருடைய பிடிப்பு வெளிப்பட்டது. உரையாடலின் தொடக்கத்தைக்கூட இலக்கியப் பரிட்சயத்திலிருந்தே ஆரம்பித்தார். அன்றையதினம் பேச வேண்டிய தலைப்பும் "எழுத்திலிருந்து சினிமாவிற்கு" என்பதால் வாகாக அமைந்தது.

மற்ற சினிமாக்களில் இல்லாத ஏதோ ஒன்று என்னுடைய சினிமாக்களில் இருப்பதாக எல்லோரும் நினைக்கிறார்கள். அல்லது பேசிக் கொள்கிறார்கள். அது இலக்கியப் பரிட்சயம் தவிர்த்து வேறொன்றும் இல்லை என்று பேசத் தொடங்கியவர் எழுத்துலக அரசியலையும், சல்ஜாப்புகளையும் மெல்லிய ஸ்ருதியில் ஒரு பிடி பிடித்தார். சுஜாதாவின் கொடியை இலக்கியவாதிகள் என்றும் உயர்த்திப் பிடித்ததில்லை. ஏனென்றால் அவர் வெகுஜனப் பத்திரிகையில் நிறைய எழுதிவிட்டார் என்று சொல்கிறார்கள். வெகுஜனப் பத்திரிகையில் எழுதியதாலேயே அவருடைய எல்லாப் படைப்புகளும் குப்பைகள் என்று சொல்வோரும் இருக்கின்றனர். அந்த குப்பைகளைக் கிளறிப் பார்த்தால் 10 சிறந்த படைப்புகள் இருக்காதா என்ன? என்ற கேள்வியை முன்வைத்தார். ஜெயகாந்தனின் முத்திரைக் கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தபோது தவறவிடக் கூடாது என்று நினைப்பேன். அவருடைய கதைகளைப் படிப்பதற்காகவே காலை நான்கு மணிக்கு அலாரம் வைத்து கொழும்புவிற்குச் சென்று வாசித்துவிட்டுத் திரும்புவேன். புத்தகம் வாங்குவதற்கு பணம் இருக்காது என்பதால் ஒரு பிரதியை இரவல் வாங்கி, ரயில்வே பிளாட்பாரத்தின் இருள் சூழ்ந்த மஞ்சள் நிற வெளிச்சத்தில் படித்துவிட்டுத் திரும்புவேன். அவருடைய கதைகள் சோடை போனவையா என்ன?

சினிமா கலைஞர்கள் வித்யாசமான முயற்சிகள் மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. சன் தொலைக்காட்சிக்காக 'கதைநேரம்' என்ற வித்யாசமான முயற்சியை, தமிழின் முக்கியமான படைப்பாளிகளின் சிறுகதைகளை தொலைகாட்சித் தொடர்களாக எடுத்தபொழுது ஒருவரும் அதைப் பற்றிய பதிவை முன்வைக்கவில்லை என்ற கோவம் எனக்கிருக்கிறது. எழுத்தாளர்களும், எழுத்தாளர்களின் சங்கங்களும் கூட அதைப் பற்றி வாய்திறக்கவில்லை. சரி... அதற்குள் செல்ல நான் விரும்பவில்லை என்றவாறு 'இலக்கியத்திலிருந்து சினிமாவிற்கு' பற்றி தொடர்ந்து பேசினார். அவற்றின் சாரத்தை ஏற்கனவே இந்தப் பதிவில் எழுதி இருக்கிறேன். கேணியில் பேசியதை சிறிதே மாற்றி கிழக்கின் மொட்டை மாடியில் பகிர்ந்து கொண்டார்.

இலக்கியமும் சினிமாவும் - கேணி இலக்கிய சந்திப்பு

பாலு மகேந்திரா போன்ற உன்னதப் படைப்பாளிகளை நாம் இரண்டாம் இடத்திலேயே வைத்திருக்கிறோம் என்பதுதான் உலுக்கக் கூடிய உண்மை. "ரஜினியையும், கமலையும் அறிமுகப்படுத்தினார் என்பதாலேயே பாலச்சந்தர் கொஞ்சம் உயரமான பீடத்தில் வைத்துப் பார்க்கப்படுகிறார். அவர்களுக்கு வித்யாசமான பாத்திரங்களைக் கொடுத்ததால் பாரதிராஜாவும் மெச்சப்படுகிறார். இயக்குனர் சிகரம், இயக்குனர் இமையம் என்றெல்லாம் அடைமொழி வேறு கொடுக்கிறார்கள். ஊமைப் படமாக (Silent Cinema) பார்க்கப்பட்ட திரைப்படம் பேசும் சினிமாவாக (Verbal Cinema) பரிமாற்றம் அடைந்தது பெரிய வரப்பிரசாதம். பேச்சே சினிமாவாக மாறிக்கொண்டிருந்த சமயத்தில் மகேந்திரன், பாலுமகேந்திரா போன்றவர்கள் சினிமாவை வேறு தளத்திற்கு நகர்த்தினார்கள். அதிலும் உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், வீடு, சந்தியாராகம் போன்ற படங்கள் உலகத் தரத்திற்கு நிகரானவை. Pure Indian Content. ருத்ரையா, ஞான ராஜசேகரன் போன்றவர்கள் கூட குறிப்பிடப் பட வேண்டியவர்கள். பல இடங்களிலும் இவர்களுடைய இருப்பு இருட்டடிப்பு செய்யப்படுகிறது" என்று சினிமாத் துறை நண்பர் ஆக்ரோஷமாகப் பகிர்ந்து கொண்டார்.

இரண்டு தேசிய விருதுகள் பெற்ற பாலு மகேந்திராவிற்கு சரியான கௌரவம் தரப்படுகிறதா என்ற சந்தேகம் எனக்கும் இருக்கிறது. சுய லாபத்திற்காக தேவையானவர்களைப் புகழ்ந்து பேசி காரியம் சாதிக்கும் உலகில் வாழ்கிறோம் என்பது மேலும் மேலும் சோம்பலை ஏற்படுத்துகிறது. வியாபார யுக்தியிலும், அதிகார மையத்திலும் கட்டுண்ட சினிமா உலகம் என்றுதான் இயல்பு நிலைக்குத் திரும்புமோ, உச்சத்தில் இருப்பவர்கள் சமரசம் இல்லாமல் பேசக் கூடிய தருணம் எப்பொழுதுதான் வாய்க்குமோ தெரியவில்லை.

தொடர்புடைய பதிவு:

1. கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம் - பிரதிபலிப்பான்
2. நிசப்தத்தில் மிதந்துவந்த குரல் - ஹரன்பிரசன்னா
3. நிகழ்வின் ஒலிவடிவம் - ரேடியோஸ்பதி

Wednesday, March 16, 2011

கண்டேன் ராசாவை நேரில்

ராசாவை என்றதும் உங்கள் மனம் அலையலையாக நீந்தி திஹாருக்கு சென்றிருக்கலாம். அந்த... ஆ ராசாவை பார்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. அப்படியே பார்க்க நேர்ந்தாலும் துக்கத்தில் இருப்பவரிடம் என்ன பேசுவது. ஊழலில் பணம் சேர்த்தாரோ இல்லையோ, உயிருக்குயிரான நண்பரை இழந்துவிட்டாரே!... அய்யகோ... அது இருக்கட்டும் ஊடக பத்திரிகையாளர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

நான் பார்த்தது ராசாய்யாவை. சின்னத் தாயம்மாள் பெற்றெடுத்த சின்ன ராசாவை. கருத்த குட்டையான உருவம். எல்லோரையும் ஈர்க்கக் கூடிய ஆளுமை. தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்தவர். ஆம்... இசையே பிரவாகமாக ஓடும் இளைய ராஜாவை நேரில் பார்த்தேன்.

கடந்த வாரம் கேணி இலக்கிய சந்திப்பில் பாஸ்கர் சக்தியிடம் கைகுலுக்கி விடைபெற்ற போது "அழகர்சாமியின் குதிரை திரைப்பட பாடல்களின் இசை வெளியீடு 16-ஆம் தேதி சத்யம் தியேட்டரில் நடக்குது. வந்துடுங்க" என்றார்.

"இளையராஜா வருவாரா பாஸ்கர்?" என்ற கேள்வியை அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

"ம். இசைஞானி வருவாரு... நீங்க வாங்க..." என்றார்.

மெகா சீரியல்களிலும், திரைப்படங்களிலும் கதாப்பாத்திரங்களை வைத்துக்கொண்டு Comedy செய்வதுபோல, என்னை வைத்துக்கொண்டு ஏதாவது முயற்சி செய்கிறாரோ என்று யோசித்தேன். முகப்புத்தகத்தில் (FaceBook) கூட நண்பர்கள் எல்லோருக்கும் அழைப்பு விடுத்தார். சென்னையில் சில இடங்களுக்குத் தனியாக செல்ல முடியாது. அதுவும் உயர்தர கேளிக்கை கூடங்களில் ஆணாக இருந்து தனியாகச் செல்வது குற்றத்திலும் குற்றம். "தனி ஆளா வரதுக்கு வெக்கமா இல்ல... தூ" -ன்னு காரி துப்புவாங்க. பிறகு அரங்கினுள் நுழைவதே கேள்விக் குறியாகிவிடும். ஜோடி சேரும் அளவிற்குத் திறமையும் இல்லை. நண்பர்கள் யாராவது உடன் வருவதாக இருந்தால் வெளியில் நின்று வேடிக்கைப் பார்த்துவிட்டு திரும்பிவிடலாம் என்று நினைத்தேன். ராம்ஜியாகூ வருவதாக சம்மதம் தெரிவித்தார்.

மேஸ்ட்ரோ-வைப் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் ஆசை. ஒரு முறை அதற்கான வாய்ப்பு கிடைத்து, கடைசி நிமிடத்தில் முடியாமல் போனது. இந்த விழாவிற்குச் சென்றால் பார்க்கலாம். கூச்சம் என் போன்றவர்களை சுலபத்தில் விடுவதில்லை. இதுவரை சத்யம் திரையரங்கிற்கு ஹேம்நாத்துடன் ஒரேஒரு முறை மட்டுமே சென்றிருக்கிறேன். அதுகூட சினிமா பார்க்க அல்ல. இசை வெளியீடு என்பது பிரபலங்கள் பங்கேற்கும் வைபோகத் திருவிழா. கலைந்த தலைமுடியும், எண்ணெய் வடியும் முகமும், ஏளனமான பார்வையும், எகத்தாளமான பேச்சும் கொண்ட என்னை சாலையோரம் சென்றாலே கழுத்தைப் பிடித்துத் தள்ளுவார்கள். "அரங்கினும் எப்படி செல்வது?" என்று யோசித்தேன். ராம்ஜி யாகூ, மணிஜி, வண்ணத்துப்பூச்சி சூர்யா, உண்மைத் தமிழன் போன்றவர்களின் முகம் தென்படவும் ஓரளவிற்கு தைரியம் வந்தது.

அலர்ஜி, ஆஸ்துமாவுக்கான அலோபதி மருத்துவர் ஸ்ரீதருடன் பாஸ்கர் சக்தி பேசிக் கொண்டிருந்தார். "நண்பருடைய பெயர் ஸ்ரீதர். இவர் ஒரு கவிஞர்" என்று அறிமுகம் செய்து வைத்தார். கூடவே அமெரிக்கா ரிட்டர்ன் என்பதையும் சேர்த்து சொல்லி இருக்கலாம். சரி... சினிமா டென்ஷன்ல மறந்து போயிருப்பார். விழா தொடங்கவும் எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு உள்ளே சென்றோம்.

படத்தில் பயன்பட்ட பொம்மைக் குதிரையை பத்திரிகையாளர்கள் சுற்றி சுற்றி படமெடுத்துக் கொண்டிருந்தனர். படத்தில் நடித்து பாத்திரங்களுக்கு உயிர்கொடுத்த நடிகர்களையும் புகைப்படம் எடுத்தவாறு இருந்தனர். கடைசி வரிசை எங்கிருக்கிறது என்று தேடினேன். அதற்கு முன் வரிசையின் ஓரத்தில் அமர்ந்துகொண்டேன். தேனி ஈஸ்வரும், பாஸ்கர் சக்தியும் விகடனில் வேலை செய்தனர் என்பதாலோ என்னவோ, என்னுடைய வரிசையிலும், அதற்கு பின் வரிசையிலும் விகடன் நிருபர்கள் உட்கார்ந்திருந்தனர். அருகில் இருந்தவரிடம் சொல்லிக்கொண்டு முன்வரிசைக்குச் சென்று பார்த்தேன். இளையராஜா உட்கார்ந்து கொண்டிருந்தார். இமைக்காமல் அவரையே முறைத்துப் பார்த்தேன்.

"குதிக்கிற குதிக்கிற குதிரக்குட்டி... என் மனச காட்டுதே..." -என்ற ஃ பிரான்சிஸ் கிருபாவின் பாடல் இளையராஜாவின் வித்யாசமான குரலில் ஒலித்தது. மண்மனம் வீசக்கூடிய பாடல். வேறொரு சந்தர்பத்தில் நெருங்கிச்சென்று அவரிடம் பேசலாம் என்று இருக்கைக்குத் திரும்பினேன். படத்தின் ட்ரைலரும் அதைத் தொடர்ந்து இரண்டு பாடல்களும் காண்பித்தார்கள்.

மல்லையாபுரம், அகமலை, குரங்கணி ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்ட காட்சிகள் பச்சைப் பசேல் என்று கண்களைக் கொள்ளை கொள்கின்றன. இடையிடையே ஓடும் மேகங்களும், சிற்றோடைகளும், ஒற்றைப் பாதைகளும் இயற்கையின் வாசலுக்கே அழைத்துச் செல்கிறது. நடிகர்கள் அல்லாத கிராம மக்களை, கதையின் முக்கியத்துவம் கருதி நடிகர்களாகப் பயன்படுத்தியது பாராட்டத்தக்க முயற்சி. அப்பு என்ற குதிரைக்கும், அப்புக்குட்டி என்ற கதாநாயகனுக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி நன்றாகவே வந்திருக்கிறது. கல்யாணியாக வரும் சரண்யா மோகனுடனான கெமிஸ்ட்ரியை விட அதிகம் என்றே சொல்ல வேண்டும். ஓர் இடத்தில் அப்புக்குட்டி வெயிலில் படுத்துத் தூங்குவான். அதைப் பார்க்கும் குதிரை வெயிலை மறைத்து அவனுக்கு நிழல் கொடுக்கும். இது போன்ற நிறைய காட்சிகள் இருக்கின்றன. சுரேஷ் கண்ணன் போன்றவர்கள் கவனித்து எழுத நிறைய விஷயங்கள் திரைப்படத்தில் இருக்கும் என்றே நினைக்கிறேன். "குதிரை கட்டவிழ்க்கப்பட்டது" என்ற வார்த்தைகளுடன் பிய்ந்த கயிற்றினை அறுத்துக் கொண்டு ஓட எத்தனிக்கும் குதிரையின் மூலம், படம் விரைவில் திரைக்கு வருகிறது என்ற கான்செப்டை யார் யோசித்தார்கள் என்று தெரியவில்லை. அந்தக் காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

மூன்று வருடமாக நின்றுபோன திருவிழாவை நடத்தப் போவதாக அறிவித்துக் கொட்டப்படும் முரசைத் தொடர்ந்து ஒலிக்கும் "அடியே இவளே... ஊருக்குள்ள திருவிழாவாம்... அழகர்சாமிக்கு..." என்ற பாடலும், இடையிடையே ஒலிக்கும் கிராமியக் கருவிகளும் கூத்துப் பரம்பரை விழாக்களை நினைவுபடுத்தியது. இசைஞானி இளையராஜாவின் பாடலும், பின்னணி இசையும் திரைப்படத்தின் பரிமாணத்தை அழுத்தமாகப் பதிவு செய்யும் என்றே நினைக்கிறேன். ஹங்கேரி இசைக் குழுவைச் சேர்ந்த 5 கலைஞர்களை வரவழைத்து படத்தின் இசைக்காக பயன்படுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரைலர் மற்றும் பாடல்காட்சிகள் ஒளிபரப்பாகி முடிந்ததும், சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப் பட்டவர்களும், படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்களும் மேடையேற்றப் பட்டார்கள். சுசீந்திரன் வரவேற்புரை கொடுக்கத் துவங்கியதும் தியேட்டரிலிருந்து கிளம்பினேன். என் பாட்டி பகிர்ந்துகொண்ட விஷயம் ஒன்று ஞாபகம் வந்தது.

"டேய், தலக் காவேரின்னு சொல்றாங்க. காவேரி அங்கதான் பொறக்குதாம். மலைமேல ஏறிப் பாத்தா ரெண்டடிக்கு ரெண்டடி சின்னதா ஒரு குழி இருக்குதுடா. ஊற்று மாதிரி லேசா தண்ணி வருது. அதுதான் இவ்வளோ பெரிய ஆறா விரிஞ்சி ஓடுதான்னு ஆச்சர்யமா இருக்குதுடா" என்று 35 வருடங்களுக்கு முன்பு பார்த்ததை 5 வருடங்களுக்கு முன்பு பகிர்ந்து கொண்டாள்.

இளையராஜாவை தூரத்திலிருந்து பார்த்தபோது "கட்டை குட்டையான அகத்திய முனி போன்ற இந்த எளிமையான உருவத்திலிருந்தா தமிழர்களை மயக்கும் மெட்டுக்கள் வந்து கொண்டிருக்கின்றன. உலகெல்லாம் ஒலிக்கின்றன" என்று நினைத்துக் கொண்டேன். இந்த ஏப்ரல் மாதம் அழகர்சாமியின் குதிரை கட்டவிழ்க்கப்பட்டு திரைக்கு வருகிறதாம். தவறாமல் சென்று பார்க்க வேண்டும். முடிந்தால் நீங்களும் பாருங்கள்...

:-)))

Tuesday, March 15, 2011

கூத்து மரபு - கருத்தரங்கம்

சங்கீத நாடக அகாடமி
(இசை, நாட்டியம் மற்றும் நாடகத்துக்கான தேசிய நிறுவனம், புதுடில்லி)

கூத்து மரபு

கருத்தரங்கம் மற்றும் தெருக்கூத்து / கடைக்கூத்து விழா
கூத்துக் கலைக்கூடம், கட்டைக்க்கூத்து சங்கம், புஞ்சரந்தாங்கல் கிராமம்,
காஞ்சிபுரம் (செய்யாறு அருகில்)

நிகழ்வுகள்
விக்ருதி ஆண்டு பங்குனி 1 முதல் 6 வரை (2011 மார்ச் 15-20)
தினசரி இரவு 8.00 pமணி மற்றும் 10 மணி

1. பங்குனி 1 (15.03.2011) செவ்வாய் கிழமை
கலைமகள் நாடக சபா, எலிமேடு வழங்கும் - மதுரை வீரன்
ஆசிரியர் திரு எலிமேடு வடிவேலு

கடைக்கூத்து குருகுலம், வழங்கும் - வில்வளைப்பு
ஆசிரியர் திரு பி ராஜகோபால்

2. பங்குனி 2 (16.03.2011) புதன் கிழமை
கிருஷ்ணகிரி தெருக்கூத்து பயிற்சி மன்றம் வழங்கும் - கிருஷ்ணன் தூது
ஆசிரியர் திரு சண்முகம்

கண்ணப்ப தம்புரான் தெருக்கூத்து மன்றம், புரிசை வழங்கும் - இந்திரஜித்
ஆசிரியர் புரிசை திரு சமந்தன்

3. பங்குனி 3 (17.03.2011) வியாழக் கிழமை
கலரி தொல்களயியல் மேம்பாட்டு மையம், சேலம் வழங்கும் - வன்னிய நாடகம்
ஆசிரியர் திரு மாணிக்கம்பட்டி கணேசன்,

யாகசேனா கட்டைக்கூத்து மன்றம், கீழ் புதுப்பாக்கம் வழங்கும் - திரௌபதி துகில்
ஆசிரியர் திரு கமலக்கண்ணன்

4. பங்குனி 4 (18.03.2011) வெள்ளிக் கிழமை
அகரம் அங்காளம்மன் கட்டைக்கூத்து நாடக மன்றம் வழங்கும் - குறவஞ்சி
ஆசிரியர் திரு சரவணன்

தான்தோன்றியம்மன் தெருக்கூத்து நாடக சபா, ஆக்கூர் வழங்கும் -
அபிமன்யு சுந்தரி திருக்கல்யாணம்
ஆசிரியர் திரு. ஆக்கூர் ஏழுமலை

5. பங்குனி 5 (19.03.2011) சனிக் கிழமை
ஆறுசுத்திப்பேட் இரணியன் நாடகக்குழு வழங்கும் - ஹிரண்யனும் பிரஹலாதணும்
ஆசிரியர் திரு முத்துக்கிஷ்ணன்

ரேணுகாம்பாள் கட்டைக்கூத்து நாடக மன்றம், சிருவாஞ்சிப்பட்டு வழங்கும் -
மின்னல் ஒளி சிவபூஜை / அர்ச்சுனன் குறவஞ்சி
ஆசிரியர் திரு சிருவாஞ்சிப்பட்டு சீதாராமன்

6. பங்குனி 6 (20.03.2011) ஞாயிற்றுக் கிழமை

செஞ்சி துரை பாஞ்சாலியம்மன் நாடக மன்றம் வழங்கும் - காளமேக சூர சம்ஹாரம்
ஆசிரியர் திரு வ ராஜாமணி

ஓம் சக்திவேல் நாடக மன்றம், காட்பாடி வழங்கும் - கர்ண மோட்சம்
ஆசிரியர் திரு எம். கங்காதரன்

கருத்தரங்கம்
2011 மார்ச் 16 - 21 காலை 10.00 மணி

கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள்
ந முத்துசாமி, பி ராஜகோபால், புரிசை கண்ணப்ப சம்பந்தன்,
மிருதங்கம் டி ரங்கசுவாமி மு ராமசாமி, பிரளயன், பிரசன்னா சாமி,

கூத்து மரபு விழா ஒருங்கிணைப்பாளர்:
வி ஆர் தேவிகா

தொடர்பு: 91 44 2724 2044, 99 44 369 600

நிகழ்வு மாறுதலுக்கு உட்பட்டவை

அனைவரும் வருக என்று சங்கீத நாடக அகாதமி அழைக்கிறார்கள்...
நன்றி: தினமணி நாளிதழ்

கேணியில் ட்ராஸ்கி மருது - 02


1977-ஆம் ஆண்டு சிற்பி ஓய்வுபெற்று கும்பகோணம் சென்றபோது என்னையும் உடன்வருமாறு அழைத்தார். சென்னையில் இருப்பதையே நான் விரும்பினேன். ஏனெனில் ஏராளமான வாய்புகள் இங்கிருந்தது. 1960-70 கள் ஓவியத் துரையின் முக்கியமான மறுமலர்ச்சி ஆண்டுகள். 60-களில் ஓவியர் பணிக்கர், தனபால், ஆதிமூலம் போன்றவர்களும், 70-களில் ஓவியர் சந்தானராஜ், அந்தோனிதாஸ், பாஸ்கர் போன்றவர்களும் வீரியத்துடன் செயல்பட்டுக் கொண்டிருந்த காலம். இவர்கள் எல்லோருமே ஓவியத் துறையின் ஒரு தலைமுறை மாற்றம் நிகழ காரணமாக இருந்திருக்கிறார்கள். அந்த காலகட்டத்தில் அவர்களுடன் இருக்க நேர்ந்தது என்னுடைய பெரிய பாக்கியம். தனித்து இயங்கிய ஓவியம் - சிறு பத்திரிகை, சினிமா என்று விரிந்தது மட்டுமல்லாமல், அதனுடைய இயல்பையும் காப்பாற்றிக் கொண்டது. இன்றுள்ள நிலையில் Manual Work-ன் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. எதிர்காலத்தில் எப்படி இருக்கப்போகிறது என்றும் கலக்கமாக இருக்கிறது. கல்லூரியில் எனக்கு மூத்த மாணவரான ஓவியர் சந்ருவுடன் இருந்த நாட்கள் மிகவும் இனிமையானது. பல விஷயங்களை ஒன்றாகக் கற்றுக் கொண்டோம். முயற்சியின் அடிப்படையில் செய்முறையாக அனைத்தையும் கற்க முடிந்தது.

நான் வரையும் ஓவியத்தில் ஓர் அசையும் தன்மை இருக்கும். சிறுவயதிலிருந்தே எனக்கு அனிமேஷனில் விருப்பம் அதிகம். மதுரையில் ரீகல் டாக்கிஸ் என்றொரு திரையரங்கம் இருந்தது. பகலில் நூலகமாகவும், இரவில் சினிமா அரங்கமாகவும் மாறிவிடும் அதிசய திரையரங்கம். ஏராளமான படங்களை அங்கு பார்த்திருக்கிறேன். குறும்படங்கள், ஆவணப்படங்கள், அனிமேஷன் படங்கள் என அனைத்து வகையான படங்களையும் அங்கே திரையிடுவார்கள். சினிமா பார்க்கும் ஆர்வத்தை எனக்குள் தூண்டியது அப்பாதான். "பள்ளிக் கூடத்தில் பாலைவனம் என்ற வார்த்தையைத் தான் ஆசிரியர் சொல்லித் தருவார். சினிமாவில் அதனை நேரடியாகப் பார்க்கலாம். எனவே சினிமாவிற்குப் போ. பாடங்களைப் பிறகு படித்துக் கொள்ளலாம்" என்பார். டாலியை அப்பாதான் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். பிகாசோவை கடுமையாக விமர்சனம் செய்வார். டாலிக்கு கம்யூனிச இயக்கத்தினருடன் தொடர்பிருந்தது. ட்ராஸ்கியுடனான அவருடைய தொடர்பையும் சொல்லி இருக்கிறார்.

Animation என்று வரும்போது ஒரு நொடிக்கான விஷயத்தை 16, 24, 36 என்ற Frame எண்ணிக்கையில் தொடர் ஃபிரேம்களில் சொல்ல வேண்டும். திரையில் சில நொடிகள் தான் வரும் என்றாலும், அதற்கான மறைவு வேலைகள் அதிகம். 101 Dalmatians, 10 commandments, Samson and Delilah போன்ற படங்களை சிறு வயதிலேயே பார்த்திருக்கிறேன். அனிமேஷனில் எங்காவது குறையிருந்தால் கண்டுபிடித்து விடுவேன். கதை போகிற போக்கிலேயே கவனித்து விடுவேன். அந்தத் திறமை எனக்கிருந்தது. இவற்றையெல்லாம் பகிர்ந்துகொள்ளத் தான் ஒருவரும் இல்லை. 1980-85 வரை பகிர்ந்து கொள்ள யாருமே கிடைக்கவில்லை. அதன் பிறகு வெங்கியுடன் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தேன். அவன் மட்டும் தான் சொல்லுவதைக் கேட்டுக் கொள்வான். இவற்றையெல்லாம் சினிமாவில் பரிசோதிப்பது அதனினும் கடினம். ஏதாவது நட்டம் ஏற்பட்டால் சொந்த செலவில் தான் சரிக்கட்ட வேண்டும். சினிமாவில் உள்ளவர்களுக்கு எல்லாவற்றையும் விளக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும். மனோபாலா போன்றவர்களை வற்புறுத்தி அழைத்துச் சென்று படங்களைக் காண்பித்து விளக்கியிருக்கிறேன். Vertical Camera-வில் மட்டுமே இதனை சோதித்துப் பார்க்க முடியும். செலவு அதிகமாகும் என்பதால் யாரும் முயற்சி எடுக்காமல் இருந்தார்கள். 80-கள் வரை விளம்பரப் படங்களில் கூட இதையெல்லாம் முயற்சி செய்யவில்லை. பெரிய Vision இல்லாமலே இருந்தார்கள். அப்படியே செய்தாலும், டிஸ்னியின் தாக்கமாகவே அவைகளெல்லாம் இருந்தது.

ஒரு காலம் வரை அனிமேஷனில் விருப்பமுள்ளவர்கள் தனித்து இயங்க முடியாத சூழல் இருந்தது. Photography, Animation ஆகியவை சினிமாத் துறையில் மட்டுமே இருந்தது. இவற்றைக் கற்றுக்கொள்ள சினிமா துறைக்குத் தான் செல்ல வேண்டும். ஆர்டிஸ்ட்-ஐ விட தொழில் நுட்பம் கடினமாக இருந்த காலகட்டம். ஆரம்ப காலத்தில் தனித் தனியாக இருந்த எல்லாம் இன்று ஒரே விஷயமாகிவிட்டன. டெக்னாலஜி மாறினாலும் Technique அதேதான். சின்னச் சின்ன அனுமானங்களின் ஊடே அனைத்தையும் அனுசரித்து செல்ல வேண்டியிருக்கிறது.

ஆங்கில இதழில் அனிமேஷன்ஸ் பற்றிய "Computer is an artist friend" கட்டுரையை வாசித்தேன். அனிமேஷன் வேலைகளின் சாத்தியத்திற்கு கணினியின் பயன்பாட்டினை விளக்கிய அருமையான கட்டுரை. அதைப்படித்துவிட்டு கம்ப்யூடர் வாங்க ஆசைப்பட்டேன். PC, MAC எல்லாம் வராத காலம். ஒரு கம்ப்யூட்டரின் விலையே 22 லட்ச ரூபாய். ஒமேகா என்ற இதழில் ஒரு முகவரி கொடுத்து கம்ப்யூட்டர் விற்பனை செய்வதாகச் சொல்லி தொலைபேசி எண்ணையும் கொடுத்திருந்தார்கள். அவர்களுடன் தொடர்பு கொண்டதில், வீட்டிற்கே வந்து அதைப் பற்றி பேசுவதாகக் கூறினார்கள். இரண்டு நாட்கள் கடந்தும் அவர்கள் வரவில்லை. பொறுமையிழந்து அவர்களைத் தேடி குறிப்பிட்டிருந்த முகவரிக்குச் சென்று கதவைத் தட்டினேன். வாசலிலேயே நிற்கவைத்துப் பேசினார்கள். "உங்க வீட்டிற்கே வரோம். இங்கருந்து கெளம்புங்க" என்று விரட்டினார்கள். கள்ள மார்க்கெட்டில் கம்ப்யூட்டர் விற்றுக் கொண்டிருந்த காலம். பிறகு முதல் கம்ப்யூட்டரை பார்க்க பூனாவிற்கு ரயிலில் கிளம்பினேன். அவர்களே அழைத்துக் கொண்டு சென்றார்கள். ஓவியர்களே நிரல் எழுதிய Design Software கிடைத்த காலம். அந்த மென்பொருட்கள் அருமையாக இருக்கும். அவையெல்லாம் இப்பொழுது இல்லை.

மத்திய அரசின் Weaver Service Centers-ல் வேலை பார்த்த பொழுது கைநிறைய சம்பளம். ஆனாலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பணியில் இருப்பது சிரமமாக இருந்தது. அதிலிருந்து வெளியில் வர நினைத்தேன். சாரங்கன் அவருடைய படத்திற்கு அனிமேஷன் செய்யவேண்டும் என்றார். மூன்று மாதம் 20 மணி நேரங்கள் வேலை செய்து 300 அடி செய்து கொடுத்தேன். பெரிய வெற்றிப் படம் இல்லை. என்றாலும் என்னுடைய வேலையில் நான் திருப்திப்பட்டேன். முதன் முதலில் செய்த அனிமேஷனை திரையில் பார்க்கும் பொழுது ஆறு வினாடிகள் மட்டுமே குறை இருந்தது. அதற்கு ஆர்ட் கிளப் அவார்ட் கொடுத்தார்கள். உடனே மத்திய அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டேன். அனிமேஷன் செய்ததற்காக கிடைத்த பணத்தில் ஒரு கம்ப்யூட்டர் வாங்கிவிட்டேன்.

பிரசாத் லேப் உரிமையாளார் எங்களுடைய அனிமேஷனைப் பார்த்துவிட்டு எங்களை அழைத்துப் பேசினார். அதன் பிறகு ஐந்து கோடி ரூபாய் செலவில் அனிமேஷனுக்கான வசதியான லேப் நிறுவினார்கள். Vector என்ற கணினிப் பயிற்சி மையத்தையும் தொடங்கினார்கள்.

சினிமாவில் சேர்ந்த போது ஆரம்பத்தில் Optical Animation செய்து வந்தேன். வேலுபிரபாகரன் பரீட்சார்த்த முயற்ச்சிகள் செய்தபொழுது அவருடன் சேர்ந்து வேலை செய்திருக்கிறேன். அவருடைய முயற்சிகளுக்கு என்னையும் சேர்த்துக் கொள்வார். பிறகு ஸ்ரீதருடன் வேலை செய்திருக்கிறேன். அப்போதுதான் நாசரின் தொடர்பு ஏற்பட்டது. அதன் மூலம் தேவதை படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

சிறுவயதில் கூட கேமரா மூலம் படம் எடுத்திருக்கிறேன். பொம்மைக் கடையில் 45 ரூபாய்க்கு வாங்கியது. என்னுடைய சேமிப்பையும், வீட்டில் செலவிற்காக வைத்திருந்ததையும் போட்டு வாங்கியது. அந்தக் கேமராவில் Table Lamp வெளிச்சத்தில் சின்னச் சின்ன பொம்மை வீரர்களை நிற்க வைத்துப் படங்கள் எடுப்பேன். நான் வரைந்த பின்னணியையும், வீரர்களையும் கொண்டு முயற்சி செய்வேன். என்றாலும் முதன் முதலில் கேமராவைப் பார்த்தது தாத்தாவின் ஷூட்டிங்கில் தான். கேமராவின் வழி உலகம் வேறு மாதிரி தெரிந்தது. அது மறக்க முடியாத முதல் அனுபவம்.

திரைப்படங்களில் என்னுடைய பங்களிப்பு மிகவும் தீர்மானிக்கப்பட்ட சிறிய அளவில் தான் இருக்கிறது. அங்கு எல்லாவற்றையும் தீர்மானிப்பவர் இயக்குனர் தான். எனக்கான குறைந்த பகுதியில் ஆகச்சிறந்த பங்களிப்பைக் கொடுக்கவே விரும்புகின்றேன். வெற்றிகரமான விளம்பரப் படங்களுக்கு ஸ்டோரி போர்ட் வரைந்திருக்கிறேன். ஸ்டோரி போர்டின் முக்கியத்துவத்தை எழுதியும், நானே வரைந்தும் செயல்பட்டிருக்கிறேன். சிவக்குமார், நாசர் போன்றவர்களுடன் இதே மாதிரி சினிமாவிலும் பணியாற்றி இருக்கிறேன். தேவதை படத்திற்கு வரைந்த ஸ்டோரி போர்டும், கலர் ஸ்கீமும் இப்பொழுது கூட என்னிடம் இருக்கிறது. நாசரிடமும் கொஞ்சம் இருக்கிறது.

நடனம், ஓவியம், இசை, திரைப்படம் போன்ற கலைக் கூறுகள் மொழியைக் கடந்து எல்லோராலும் ரசிக்கப்படுகிறது. புரியும் தன்மையில் இருக்கின்றன. அந்த வகையில் அனிமேஷனும் எல்லையற்ற சாத்தியக் கூறுகளைக் கொண்டுள்ளன. நினைத்தவற்றை நினைத்த விதத்தில் செய்யக்கூடிய சுதந்திரம் எனக்கிருக்கிறது. கலாப்பூர்வமாக இயங்கக் கூடிய களத்தை என் சார்ந்து நானே அமைத்துக் கொண்டேன். நான் எதையெல்லாம் செய்ய விரும்பினேனோ அவை அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறேன். அதுவே எனக்குப் பெரிய சந்தோசம். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கடைசி இரண்டு வரிகளை அழுத்தமாகக் கூறி அனுபவப் பகிர்வுகளை நிறைவு செய்தார். அதைத் தொடர்ந்து நீண்ட நேர கேள்வி பதில் விவாதம் நடந்தது. இறுதியாக பாஸ்கர் சக்தியின் நன்றியுரையுடன் கேணி ஓவியர் சந்திப்பு இனிதாக நிறைவு பெற்றது.

மருதுவின் ஓவியம் சார்ந்த தகவல்களை அந்திமழை இதழின் ஒரு பகுதியாகக் காணக் கிடைக்கிறது: M. Trotsky Marudu - An Indian Artist

ஓவியர்களின் வலைப்பூ - அனிகார்த்திக்

பின் குறிப்பு:
1. என்னுடைய ஞாபகத்தில் இருப்பதை மட்டுமே எழுதி இருக்கிறேன்.
2. அவருடைய 4 மணிநேர பேச்சின் சிறுவடிவம் தான் இது. ஆகவே தகவல்கள் நிறைய விடுபட்டிருக்கலாம். அதற்கு நானே பொறுப்பு. பிழை இருந்து யாரேனும் தெரிவித்தால் சரிசெய்துவிடுகிறேன்.
3. அடுத்த மாதம் நடக்கும் கேணி சந்திப்பில், ஓய்வுபெற்ற தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா I.A.S அல்லது கர்னாடக சங்கீத கலைஞர் T.M கிருஷ்ணா இவர்களில் யாரேனும் ஒருவர் பங்குகொள்ளலாம். நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளவும்.

Monday, March 14, 2011

கேணியில் ட்ராஸ்கி மருது - 01

12-08-1953-ல் மதுரையில் இருக்கும் கோரிப்பாளையம் என்ற பகுதியில் ஓவியர் ட்ராஸ்கி மருது பிறந்தார். நவீன ஓவியத்தின் கூறுகளை ஆதிமூலம், தட்சிணா மூர்த்தி, நாகை பாஸ்கர் போன்றவர்களுக்குப் பின் வெகுஜனப் பத்திரிகையில் பயன்படுத்திய முன்னோடிகளில் மருதுவின் பங்கு தனிச்சிறப்பு நிறைந்தது. பள்ளி வாழ்க்கையை மதுரையிலும், அதன் பிறகு ஓவியத்தை பாடமாக எடுத்து சென்னை கலைக் கல்லூரியிலும் படித்தவர். ஓவிய பட்டயப் படிப்பில் 1976ஆம் ஆண்டு, முதல் மாணவராக தேர்ச்சி பெற்றவர். 1977-ஆம் ஆண்டு அதே கல்லூரியின் முதுநிலை பட்டயப் படிப்பிலும் தேர்ச்சி பெற்று 1978-ல் டெல்லியிலுள்ள Garhi Arts Studio -வில் சேர்ந்து வரைகலை பயிற்சி பெற்றவர். மத்திய அரசின் Weavers Service Center-ல் டெக்ஸ்டைல் டிசைனராக சிறிது காலம் பணியாற்றியவர். அனிமேஷன் துறையில் ஆர்வம் இருந்ததால் வேலையை ராஜினாமா செய்தவர்.

1980-களில் சினிமா போஸ்டர் டிசைனராகவும், 1990-களில் தமிழ், தெலுங்கு மற்றும் இதர தென்னிந்தியப் படங்களின் Special Effects & Digital Effects இயக்குனராகவும் பணியாற்றியவர். முதன் முதலில் கணினியைப் பயன்படுத்திய தமிழக ஓவியர்களில் ஒருவர். தமிழ்நாடு திரைப்பட இயக்கத்தைத் துவக்கியவர்களில் ஒருவர். அனிமேஷன் பயிலரங்குகள் மற்றும் அது சார்ந்த முயற்சிகளில் முனைப்புடன் செயல்படுபவர். தேவதை, நந்தலாலா போன்ற படங்களின் கலை இயக்குனராகவும் அவதாரம் எடுத்தவர் என்று அவருடைய ஓவியம் சார்ந்த பன்முகத் தன்மையை சொல்லிக் கொண்டே போகலாம். இந்த மாதக் கேணி சந்திப்பில் தன்னுடைய ஓவியம் சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை ஆர்வமுடன் பகிர்ந்து கொண்டார்.

காந்தியின் வார்தா ஆசிரமத்தில் சேர்வதற்காக என் தாத்தாவின் ஒரே வாரிசான அப்பா 14 வயதில் வீட்டைவிட்டு ஓடியிருக்கிறார். சில மாதங்கள் கழித்து இந்த விவரம் தெரிந்த தமிழர் ஒருவர் வீட்டிற்கு கடிதம் எழுதி தெரியப்படுத்தியிருக்கிறார். அப்பாவையும் ரயிலில் ஏற்றி மதுரைக்கு அனுப்பியிருக்கிறார்.

அதன்பின் அவருக்கு இலங்கைப் போராளிகளுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. பண்டார நாயக் ஆட்சி காலத்தில், தலைமறைவு வாழ்க்கை வாழ மதுரைக்கு வந்த ட்ராஸ்கியவாதிகளுடன் நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாகவே என்னுடைய பெயரை 'ட்ராஸ்கி' என்று வைத்தார். 'மருது' என்பது குடும்பப் பெயர். குடும்பத்தின் ஒரே மகன் என்பதால் இயக்கவாதிகள் அவரை தீவிர அரசியலில் ஈடுபடுத்தவில்லை. கொல்வினார் டி சில்வா, என்.எம்.பெரேரா போன்றவர்களுடன் சேர்ந்து கையெழுத்து பத்திரிகை எல்லாம் நடத்தி இருக்கிறார். அப்பாவிற்கு பெரியார் மீது ஈடுபாடு இருந்தது. அதனால் பாரதிதாசன் நடத்திய குயில் பத்திரிகை, திராவிட நாடு இவைகளெல்லாம் சிறுவயதிலேயே படிக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. புராண, இதிகாசங்களை கேலி செய்து வரும் சித்திரக் கதைகளை (Comics) ஆர்வத்துடன் படித்த ஞாபகம் பசுமையாக இருக்கிறது. சிறுகதை, நாவல், இலக்கியம் சார்ந்து கொஞ்சமாக படித்திருக்கிறேன்.

பிறந்த நாளுக்குக் கூட புத்தகங்களை பரிசாகக் கொடுப்பதை என் தந்தை வழக்கமாகக் கொண்டிருந்தார். தன்னுடைய நண்பர்களுக்கும் புத்தகங்களையே பரிசாகத் தருவார். சேகுவேராவின் வாழ்க்கை, தான்பரீனின் இயக்கம், மருது பாண்டியர்களின் புத்தகம் என பலவற்றையும் படிக்கக் கொடுப்பார். அவற்றில் ஓரியன்ட் லாங்மேன் தமிழில் வெளியிட்ட வீர சிவாஜி, மார்கபோலோ போன்றவை என்னை அதிகம் கவர்ந்தன. திப்பு சுல்தான், கான் சாஹிப், குஞ்ஞி மரக்காயர் போன்ற கலகக்காரர்களைப் பற்றியும் சிறுவயதிலேயே படிக்கக் கிடைத்தது. தாத்தா ஊரில் செல்வாக்குள்ள மனிதர் என்பதால் அப்பாவை கவுன்சிலர் பதவிக்கு நிற்குமாறு வற்புறுத்தினார்கள். சங்கரையா வருவதற்கு முன்பு அதற்கான வாய்ப்பிருந்தது. மேடைப் பேச்சு, கட்சிப் பணி, அரசியல் செயல்பாடு ஆகியவற்றில் அப்பாவிற்கு ஆர்வமில்லை என்பதால் மறுத்துவிட்டார்.

மதுரை ரயில் நிலையத்திற்கு எதிரில் உள்ள கட்டிடத்தில் பாரதி புத்தக நிலையம் இருந்தது. அப்பாவின் நண்பரான சுவாமிநாதன் அதனை நடத்தி வந்தார். எனவே அப்பாவுடன் அங்கு செல்வது வழக்கம். விளையாட்டில் ஆர்வம் இல்லாததால் விருப்பமுடன் செல்வேன். இருவருக்குமே பெரிய மனிதர்களுடன் தொடர்பிருந்தது. அவர்களெல்லாம் மதுரைக்கு வரும்பொழுது கட்டிடத்தின் மேல்தளத்திலுள்ள அறையில் தான் தங்குவார்கள். ஜீவானந்தம், பாரதிதாசன் போன்றவர்கள் கூட தங்கியிருக்கிறார்கள். அங்குதான், "ஓவியம் வரைவது எப்படி?" போன்ற புத்தகங்களை படிக்கக் கிடைத்தது. மாலை முழுவதும் அங்குதான் இருப்போம். நான் ஆரம்பத்தில் இருந்து ஆங்கில வழிக் கல்வியில் படித்தேன். அப்பொழுது ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். ஓர் அளவிற்கு மேல் ஆங்கில வழியில் படிக்க வாய்ப்புகள் இல்லை. எனவே தமிழ் வழிக் கல்விக்கு மாற்ற என்னுடைய மாமா யோசனை கூறினார். அதன்படியே தமிழ்வழிக் கல்விக்கு மாற்றிவிட்டார்கள்.

அந்நேரத்தில் சின்னம்மாவின் திருமணம் சென்னையில் நடந்தது. அதற்காக எல்லோரும் சென்றிருந்தோம். என்னுடைய குடும்பத்தினர் சினிமா துறையில் தொடர்புடையவர்கள். சின்னத் தாத்தா M S சோலைமலை பிரபல கதை வசனகர்த்தா. 'பாகப் பிரிவினை', 'பாவ மன்னிப்பு', 'பதிபக்தி' போன்ற வெற்றிப் படங்களின் வசனகர்த்தா அவர்தான். டைரக்டர் பீம்சிங் திருப்பதியிலிருந்து வந்தவர். அவருக்கு மதுரை, திருநெல்வேலி, தென்மாவட்டங்களின் வாழ்வியல் கலாச்சாரம் தெரியாது. அவருடைய படங்களில் அந்தந்த வட்டார வழக்கங்கள் தெளிவாக இருப்பதற்கு தாத்தாதான் காரணம். நடிகர் S S ராஜேந்திரன் (SSR) என்னுடைய பெரியப்பா மகன். SSR பிக்சர்ஸ் என்ற பெயரில் படங்கள் கூட எடுத்தார்.

திருவிளையாடல் படம் வெளிவந்த பின் சென்னை வர நேர்ந்தது. தாத்தாவின் மூலம் ஸ்டுடியோவிற்கு சென்றிருந்தேன். படத்திற்காக போடப்பட்ட அரண்மனை போன்ற SetUp-ல் உலாவியது மறக்க முடியாத அனுபவம். எல்லோரும் ஷூட்டிங் பார்க்க சென்று விடுவார்கள். யாருமற்ற அரங்குகளில் தனியாக நின்று கொண்டிருப்பேன். இல்லாத ஒன்றை இருப்பது போல காண்பிக்கும் அந்த மேஜிக் என்னை மயக்கியது. அரண்மனை போன்ற பெரிய Setup-ல், பூப்போன்ற டிசைன்களைப் பேப்பரில் வரைந்து மொசைக் போல தரையில் ஒட்டியிருப்பார்கள். அவற்றை உரித்தெடுக்க கணுக்காலுக்கும் அதிகமாக தண்ணீரை ஊற்றி ஊற வைத்திருந்தார்கள். தண்ணீரில் நின்றுகொண்டு காலியான அரண்மனை சிம்மாசனங்களையும், இருக்கைகளையும் பார்ப்பதற்கு விநோதமாக இருந்தது. சிவாஜி விறகு விற்கும் வீதி போன்ற SetUp-ல் கூட தன்னந் தனியாக அலைந்திருக்கிறேன். சினிமா உருவாகும் இடத்தில் இருக்கிறோம் என்பது சிலிர்ப்பாக இருந்தது. இந்த அனுபவங்களே ஓவியம் சார்ந்த என்னுடைய ஆர்வத்தை அதிகப்படுத்தியது.

பள்ளி அளவிலான ஓவியப்போட்டி எங்கு நடந்தாலும் என்னுடைய பள்ளியின் சார்பாக கலந்துகொண்டு பரிசினை வாங்கிவருவது வழக்கமானது. அப்படி ஒருமுறை நடந்த போட்டியில் சென்னை ஓவியக் கல்லூரியில் இருந்து ஓர் ஆசிரியர் வந்திருந்தார். என்னுடைய வரையும் திறமையைப் பார்த்துவிட்டு ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படிக்குமாறு ஆலோசனை கூறினார். எனக்குள் ஏற்கனவே இருந்த முடிவுக்கு அச்சாணி போல அது அமைந்தது. ஓவியக் கல்லூரியில் சேர எட்டாவது படித்திருந்தால் போதும். எனவே அதற்கு மேல் படிக்கமாட்டேன் என்று வீட்டில் சொல்லிவிட்டேன். வீட்டிற்கு தெரியாமல் சென்னைக் கல்லூரிக்கு விண்ணப்பமும் அனுப்பிவிட்டேன். அவர்களும் நேர்முகத்திற்கு அழைத்திருந்தார்கள். உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்ததால் நேர்முகத்திற்கு அந்த ஆண்டு செல்ல முடியவில்லை.


வேறு வழியில்லாமல் ஒன்பதாவது சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன். அந்த சமயத்தில் தான் National Geography-ல் அனிமேஷன் பற்றி வெளியான 27 பக்கக் கட்டுரையை வாசித்தேன். அதற்கு முன்புவரை அனிமேஷன் எப்படி செய்கிறார்கள் என்று தெரியாது. பின்னணியைத் தனியாகவும், அசையும் பிம்பங்களைத் தனியாகவும் வரைகிறார்கள் என்ற அடிப்படை உண்மைகளைக் கூட அதிலிருந்துதான் தெரிந்துகொண்டேன். அந்த நேரத்தில் 101 Dalmatians படம் மதுரைக்கு வந்தது. பின்னணிக்காக ஒருமுறை, அனிமேஷனுக்காக ஒருமுறை, இயக்கத்திற்காக ஒருமுறை என்று ஒரே நாளின் நான்கு காட்சிகளை தொடர்ந்து பார்த்தேன். வீட்டில் என்னைக் காணாமல் தேடியிருக்கிறார்கள். மாமாதான் திரையரங்கிற்குச் சென்று பார்க்கச் சொல்லி இருக்கிறார். உறவினர்கள் வந்து அடித்து இழுத்துக் கொண்டு போனார்கள். புதுமைப் பித்தனையும் அந்த வயதில் தான் படிக்க ஆரம்பித்தேன். அவருடைய கதைகள் பிடித்திருந்ததால் தொடர்ந்து வாசித்தேன்.


இரண்டாவது முறை ஓவியக் கல்லூரியில் விண்ணப்பித்த போது, வீட்டில் அனுமதி பெற்று சென்னைக்குச் சென்றேன். ஆரம்பத்தில் அப்பா அனுப்புவதற்குத் தயங்கினார். ஓவியத்தைப் படித்தால் எதிர்காலத்தில் தேவையான அளவிற்கு பொருளீட்ட முடியுமா என்று யோசிக்கலானார். இந்தத் துறைக்கு இருக்கும் வரவேற்பும், வாய்ப்புகளும் சரியாகத் தெரியாததால் குழப்பத்துடனே இருந்தார். தாத்தாவின் சமாதானத்தின் பொருட்டாக மட்டுமே என்னை படிக்க அனுப்பினார். சென்னையில் தாத்தா இருந்த இரண்டு தெருக்கள் தள்ளி ஓவியர் சிற்பி தனபால் இருந்தார். அவர் எழுதிய 'உயிருள்ள படிப்பு' என்ற ஆனந்த விகடனில் வெளிவந்த கட்டுரையை படித்திருக்கிறேன். ஓவியக் கல்லூரியில் தரப்படும் பயிற்ச்சிகள் குறித்து தெளிவாக அதில் எழுதியிருந்தார். ஓவியத்தை பாடமாக எடுத்துப் அந்தக் கட்டுரையும் ஒரு வகையில் காரணமாக அமைந்தது. வரைந்திருந்த படங்களை எடுத்துக்கொண்டு அவரிடம் சென்றேன். அது RB பாஸ்கருக்கு திருமணம் முடிந்த இரண்டாம் நாள். ஆதிமூலம், கன்னியப்பன் போன்ற முக்கியமான ஓவியர்கள் அங்கிருந்தனர். படங்களை அவர்களிடம் கொடுத்து கருத்துக் கேட்டேன். எல்லோரும் பாராட்டினார்கள்.

கேணி ஓவியர் சந்திப்பு - ட்ராஸ்கி மருது - 02

பின் குறிப்பு:
1. என்னுடைய ஞாபகத்தில் இருப்பதை மட்டுமே எழுதி இருக்கிறேன்.
2. அவருடைய 4 மணிநேர பேச்சின் சிறுவடிவம் தான் இது. ஆகவே தகவல்கள் நிறைய விடுபட்டிருக்கலாம். அதற்கு நானே பொறுப்பு. பிழை இருந்து யாரேனும் தெரிவித்தால் சரிசெய்துவிடுகிறேன்.
3. அடுத்த மாதம் நடக்கும் கேணி சந்திப்பில், ஓய்வுபெற்ற தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா I.A.S அல்லது கர்னாடக சங்கீத கலைஞர் T.M கிருஷ்ணா இவர்களில் யாரேனும் ஒருவர் பங்குகொள்ளலாம். நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளவும்.


அழகர்சாமியின் குதிரை - இசை வெளியீடு

முகப்புத்தகத்தில் (FaceBook) பாஸ்கர் சக்தியின் அழைப்பு:

நண்பர்களே!`அழகர்சாமியின் குதிரை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு உங்கள் அனைவரையும் அழைக்கிறேன். சத்யம் திரையரங்கில் வரும் புதன்கிழமை (16.03.11)மாலை 6.30 மணிக்கு...அவசியம் வாருங்கள்.

சிறுகதை எழுத்தாளராக பாஸ்கர் சக்தியை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவருடைய "வேலப்பர் மலை, காளான், ஏழுநாள் சூரியன் ஏழுநாள் சந்திரன், தக்ளி" போன்ற கதைகளின் வரிசையில் தேனீ சார்ந்த ஹாஸ்யக் கதையான "அழகர் சாமியின் குதிரை"யும் ரொம்பப் பிடிக்கும். இந்தக் கதையை திரைப்படமாக எடுக்கிறார்கள் என்றவுடன் வியப்பு மேலிட்டது. அதே நேரத்தில் சந்தோஷமும் கூட. பல படங்களுக்கு வசனம் எழுதி இருந்தாலும், அவருடைய கதை திரைப்படமாவது இதுதான் முதல் முறை. இயக்குனர் சுசீந்திரன் இயக்குகிறார்.

நண்பர் வெங்கட்ராமனின் தொகுப்புகள் வலைப்பதிவில் முழுக்கதையும் படிக்கக் கிடைக்கிறது: அழகர் சாமியின் குதிரை – பாஸ்கர் சக்தி


சில மாதங்களுக்கு முன், அவள் விகடனில் பாஸ்கர் சக்தியின் தாயார் பேட்டி கொடுத்திருந்தார்கள்.

"எப்பவும் புத்தகமும் கையுமா படிச்சிட்டே இருப்பான். கதை எழுதறேன்னு வேற சுத்திட்டு இருந்தான். அவனோட கதையை சினிமா எடுக்கறாங்கலாமே. சந்தோஷமா இருக்கு. அவனோட கதையே அவனை காப்பாத்திடுச்சு" என்று சொல்லி இருந்தார்கள். பேட்டியுடன் ஒரு புகைப்படத்தையும் இணைத்திருந்தார்கள்.

அது எப்படி பாஸ்கர்? ஒண்ணுமே தெரியாத பச்ச கொழந்த மாதிரி மொகத்தை வச்சிக்கினு போட்டோவுக்கு போஸ் கொடுக்குறிங்க? என்று கேட்டிருந்தேன்.

"நம்ம மொகத்துல என்ன வாழுது!. எல்லாம் தேனி ஈஸ்வரின் கேமரா செய்யற விஷயம்" என்றார்.

அதே தேனி ஈஸ்வர் தான் இந்த படத்தின் மூலம், முதன் முறையாக ஒளிப்பதிவாளராக அவதாரம் எடுக்கிறார். கிடைத்த வாய்ப்பை நல்ல விதமாக பயன்படுத்திக் கொள்வார் என்றே நம்புகிறேன். இசைகூட இசைஞானிதான் கவனித்துக் கொள்கிறார். முக்கியமான பணிகளை தேனி மனிதர்களே கவனித்துக் கொள்வதால் மண்ணின் மனம் குறைவில்லாமல் வீசும் என்று எதிர்பார்க்கிறேன். அப்படியே படம் திரைக்கு வரும் நாளையும்தான்.

இசை வெளியீட்டிற்கு தங்கையின் புருஷனுடன் செல்ல இருக்கிறேன். உள்ள விடலேன்னா என்ன பண்றது? நம்ம என்ன காட்டிற்கா போகப்போகிறோம். சத்யம் திரையரங்கிற்கு தானே. வர்றவங்க போறவங்கள வேடிக்கைப் பார்த்துட்டு வந்துட வேண்டியதுதான். இசை வெளியீட்டிற்கு இளையராஜா வருவதாக பாஸ்கர் உறுதிப்படுத்தி இருக்கிறார். இப்பொழுதே என் கால்கள் அரிக்கிறது.

:-)

பாஸ்கர் சக்தியின் சார்பாக "வருக... வருக..." என்று அடியோன் எல்லோரையும் வரவேற்கிறேன். வாய்ப்புள்ள நண்பர்கள் விழாவில் தயக்கமில்லாமல் கலந்து கொள்ளலாம்.

நன்றி...

Friday, March 11, 2011

தியேட்டர் லேப் - 6வது ஆண்டு விழா

"தியேட்டர் லேப் வழங்கும் 'சப்தங்கள்' நாடகத்தில் பஷீராக நடிக்கப் போகிறேன். பம்மல் சம்மந்த முதலியாரின் 'சங்கீதப் பைத்தியம்' அதைத் தொடர்ந்து அரங்கேற இருக்கிறது. என்னுடன் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்களேன்" என்று நாடக நடிகர் பாரதிமணி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். பிடித்த எழுத்தாளரின் பாத்திரத்தில் மனதிற்குகந்த நண்பர் நடிப்பதைத் தவற விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். எல்லா நாடகங்களும் மாலையில் தான் அரங்கேறும். இதுவோ காலை 10 மணிக்கு அரங்கேற இருக்கிறது என்பதையும் குறிப்பிட்டிருந்தார். அதன்படி சரியான நேரத்திற்குச் சென்றிருந்தேன்.

நாடகம்: சப்தங்கள் (வைக்கம் முகமது பஷீர்)
தமிழில்: குளச்சல் மு யூசுப்

இருளின் அடர்த்தியில் நாடக மேடை தனித்திருந்தது. பட்டு போன்ற ரோமங்களைக் கொண்ட பூனையின் முதுகினைத் தடவுவதுபோல கால்களால் கீழ் தளத்தைத் தேய்த்தவாறு அரங்கின் கடைசி இருக்கைக்கு முன்னேறினேன். இருட்டுக்குப் பழகிய கண்களுக்கு மேடையுடைமைகள் (புத்தகங்கள், மதுக்கிண்ணம், Flask, சட்டி, ஜோல்னாபை) தென்பட்டது. யாருமற்ற மேடையின் அழகு சற்றே கூடியிருந்தது. நாடகம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் பவா செலத்துரையின் கதையினை தழுவி எடுக்கப்பட்ட "என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம்" என்ற குறும்படம் திரையிடப்பட்டது. இருபது நிமிடம் கழித்து திரையிடல் நிறுத்தப்பட்டு இருள் சூழ்ந்தது. ஊன்றுகோலைப் பற்றியவாறு இருட்டின் நிழல் போல பாரதிமணி மேடையில் தோன்றினார்.

பஷீரின் படைப்புகளை நினைக்கும் பொழுது குளச்சல் மு யூசுப்பை நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவருக்கு முன் சிலர் மொழி பெயர்த்திருந்தாலும், மூலத்தின் சாயலைக் குலைக்காமல் ஞாயம் செய்தவர் யூசுப் தான். பஷீரின் தனித்தன்மையே அவருடைய வட்டார மொழியும், எளிமையும் தான். பெண்களின் வனப்பையும் அழகையும் படைப்பாளிகள் இலக்கியமாக்கினால், வாயுத் தொல்லையால் காற்றுப் பிரிவதை (குசு) சிறுகதையாக்கியவர் பஷீர். சப்தங்கள் அவருடைய படைப்புகளில் சற்றே வித்யாசமானது. இராணுவ வீரனின் ஊசலாடும் மனநிலையும், தாழ்வு மனப்பான்மையும், குற்ற உணர்ச்சியுமே கதையின் மையக்கரு. பஷீருடனான உரையாடலில் காட்டருவிபோல் தன்னுடைய போக்கில் செல்லும் அவனுடைய பகிர்தலே கதையின் நீட்சி. கதை சொல்லலில் சிக்கலான நடையையும், முரணான வடிவத்தையும் பஷீர் பயன்படுத்தியிருப்பார்.

துர்நாற்றம் வீசும் உடலுடன் அழுக்கான உடையணிந்து இராணுவ வீரன் அறிமுகமாகிறான். அவனால் தண்ணீரில் குளிக்க முடியவில்லை. ஏனெனில் யுத்த ஞாபகங்களால் தண்ணீரை பூமியின் இரத்தம் என்று நம்புகிறான். நாற்சந்தியில் அனாதைக் குழந்தையாக பூசாரியால் கண்டெடுக்கப்படும் அவன், வளர்ந்து இரண்டாம் உலகப் போரில் பங்கேற்கிறான். யுத்தம் முடிந்ததும் போகும் இடம் தெரியாமல் உளவியல் சிதைவுடன் அலைகிறான். இருநாட்டு அரசியல் யுத்தத்தில் அப்பாவி வீரர்களைக் கொன்று குவித்தது அவன் மனதை அரிக்கிறது. போர் விமானத்தின் இரைச்சலும், குண்டு மழையும், யுத்தத்தின் வெப்பமும், மரண ஓலங்களும் அவனுக்கு தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறது. மரணத்துடன் போராடும் நண்பனை கருணைக் கொலை செய்தது மனம் கூசச் செய்கிறது. அவனுடைய முதல் உடலுறவு ஆண் வேசியுடன் அமைந்துவிடுகிறது. பிறந்ததில் இருந்தே பெண்களின் வாசத்தை அறியாதவன். வனப்புடைய பெண்களை பார்க்க நேர்ந்தால் மனம் காமத்தின் இச்சையை சுரக்கிறது. இடையிடையே உரையாடல் தத்துவ ரீதியில் வளர்கிறது.

ஒரு வேசியை அவளுடைய பச்சிளங் குழந்தையுடன் சந்திக்கிறான். அவளை சல்லாபிக்க ஒருவன் அழைக்கிறான். மந்த மயக்கத்தில் மயங்கிக் கிடக்கும் இவனருகில் குழந்தையைக் கிடத்திவிட்டு பாழடைந்த கோவிலுக்கும் அவர்கள் செல்கிறார்கள். ஆயிரம் எறும்புகள் கடித்ததால் குழந்தை வீரிட்டு அழுகிறது. இராணுவ வீரன் குழந்தையைக் கையில் எடுத்து காப்பாற்றுகிறான். இச்சை தீர்ந்து இருப்பிடம் திரும்பும் வேசி குழந்தையைத் திருடுவதாக நினைத்து அவனுடைய மார்பில் எட்டி உதைக்கிறாள். பின்னால் உண்மையை உணர்ந்து பசியால் வாடும் அவனுக்கு கால் ரூபாயை வீசிவிட்டுச் செல்கிறாள். மனச் சோர்விலிருந்து தப்பிக்க தண்டவாளத்தில் தலை கொடுத்து தற்கொலை செய்ய நினைக்கிறான். அதுவும் தோல்வியில் முடிந்து தண்டவாளத்தை இரைச்சலுடன் கடந்து செல்கிறது ரயில் என்பது போல கதை முற்றுப் பெரும்.

நோயுற்ற மனநிலையின் முனகலும், காமத்தின் ஏக்கங்களும், தனிமையின் விகாரங்களும் தான் சப்தங்களாக நாவல் முழுதும் வெளிப்படுகிறது. முழுக் கதையின் பரிமாணத்தையும் வெளிப்படுத்தி நிகழ்த்துக் கலையை உச்ச அனுபவமாக மாற்றுவது சவால் நிறைந்த பணி. அந்த வகையில் பாரதி மணியின் நீண்ட கால அனுபவம் கவர்ச்சியாக இருந்தது. எள்ளலான கேள்விகளைக் கேட்கும் பொழுது அரங்கம் அதிர சிரிக்க வைத்தார். புரியும் படியான ஒரு சில மலையாள வசனங்களும், தமிழ் உச்சரிப்பின் லாவகமும், உடல் மொழியும் நாடகத்துடன் ஒன்ற வைத்தது.

இராணுவ வீரன் கதாப் பாத்திரத்தில் ஏறக்குறைய 10 நபர்கள் நடித்தனர். இந்த முயற்சி நாடகத்தின் இயல்பை சில இடங்களில் நீர்த்துப் போகச் செய்தது. "ஒரே பாத்திரத்தில் இத்தனை நபர்களைப் பயன்படுத்த வேண்டிய தேவை என்ன?" என்ற கேள்வி எழுந்தது.

"ஒவ்வொரு கலைஞருக்கும் தனித்தன்மை இருக்கிறது. அதற்கேற்ப அவர்களைப் பயன்படுத்துவதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. எல்லோருக்கும் வாய்ப்பளிக்க வேண்டிய பொறுப்பும் எனக்கிருக்கிறது. மற்றபடி வேறெந்தக் காரணமும் இல்லை" என்று C.H.ஜெயராவ் விவாதத்தின் போது பகிர்ந்துகொண்டார். இதற்கு முன் இது போன்ற பரீட்சார்த்த முயற்சிகள் நடந்துள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.

ஆண் வேசியாக மேடையேறும் திருநங்கை ரம்யா வராத காரணத்தால் வேசியின் கதாப் பாத்திரத்தையும் சேர்த்து சபரி ஏற்றார். மேடையின் இண்டு இடுக்கு விடாமல் காமத்தைக் கொப்பளித்து சுழன்றாடினார். விளிம்பு நிலை சபலதாரிகளாக நடித்த இருவரும் மெச்சும்படி செய்திருந்தனர்.

சப்தங்கள் படித்து முடித்ததும் குளச்சல் மு யுசுப்பிற்கு தொலைபேசி இருந்தேன். உரையாடலின் சில பகுதிகள் தெளிவான உச்சரிப்பிலும், சில பகுதிகள் வட்டார வழக்கிலும் கலந்து இருக்கும். முதல் அத்தியாயத்தில் கூட இந்த வேறுபாட்டினைக் காண முடியும். நாவலின் இறுதிப் பகுதிகளான வேசியுடனான உரையாடலில் அதனைத் தெளிவாக கவனிக்க முடியும். அதனைக் குறிப்பிட்டு அவரிடம் கேள்வி எழுப்பினேன்.

"அதைத் தெரிந்தேதான் பஷீர் பயன்படுத்தி இருக்கிறார். மொழிபெயர்ப்பின் போது அதைப்பற்றி பலவாறு யோசித்தேன். சேலம், நாகர்கோவில், கோவை, சென்னை என்று பல வட்டார மொழிகளை தேர்வுசெய்து பார்த்தோம். இறுதியில் சென்னை மொழி இசைவுடன் இருந்ததால் பயன்படுத்திக் கொண்டோம். குறிப்பாக கடைசி மூன்று அத்யாயங்களில் சென்னை மொழியின் வீச்சு அதிகமாக இருக்கும்." என்று பகிர்ந்து கொண்டார். நாடகத்தில் கூட கடைசி பகுதி வெகு சிறப்பாக வந்திருந்தது. குழந்தையின் அழுகையையும், துப்பாக்கியின் வெடிச் சத்தத்தையும், ரயிலோசையையும் பின்னணியில் சேர்த்திருந்தால் இன்னும் நெருக்கமாக இருந்திருக்கும். மொத்தத்தில் சில குறைகளும், பல நிறைகளும் கொண்ட சப்தங்கள் நாடகம் பார்க்க வேண்டி ஒன்று. முழு நாடகத்தையும் வீடியோவில் பதிவு செய்தார்கள். சில நாட்களில் விற்பனைக்கும் கிடைக்கலாம். கதைக்கு வடிவம் கொடுத்து இயக்கியவர் C.H.ஜெயராவ். மணி பாரதி உதவி இயக்குனராக செயல்பட்டுள்ளார்.

நடிகர்கள்: பாரதிமணி / சபரி / அருண் / சுவாமி / ஜெய் ஆனந்த் /
மணி குட்டி / லிங்கேஷ் / ஜகதீஷ் / அவிதேஜ் / சுரேந்திரன் /
விஜய் அதித்யா / கார்த்திக் / ரம்யா / பிரபாத் / மரகதம் / மணிபாரதி / ரவி



சங்கீதப் பைத்தியம்

பம்மல் சமந்த முதலியார் நவீன தமிழ் நாடகங்களின் தந்தையாகக் கருதப்படுபவர். 'சுகுணா விலாஸ் சபா' என்ற நாடகக் குழுவை ஆரம்பித்து 96 நாடகங்களை எழுதியவர். நகைச்சுவை, நையாண்டி, சமூக அரசியல் சாடல் போன்றவற்றை கருவாகக் கொண்ட இவரது நாடகங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. அவற்றில் சில திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன.

சங்கீதப் பைத்தியம் 75 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட முழு நீள நையாண்டி நாடகம். ஓர் அரசன், தன் தாயின் ஆத்மா சாந்தியடைய நாட்டு மக்கள் அனைவரும் சங்கீத மொழியில் பேச வேண்டும் என்று ஆணையிடுகிறான். மீறினால் அபராதம் செலுத்த வேண்டும். இந்த ஆணை நாட்டு மக்களிடையே பெருத்த குழப்பத்தை ஏற்படுத்துகிறது. வியாபாரத்திற்காக அந்நாட்டிற்கு வந்து சேர்பவர்கள் திணறுகிறார்கள். பூண்டு விற்பவர்கள் முதல், பூசாரி வரை செய்வதறியாது பாடிக்கொண்டே தவிக்கிறார்கள். அந்த நேரத்தில் ஒரு சாமியார் பாடியவாறு அரசனின் சமஸ்தானத்திற்கு வந்து சேர்கிறான்.

இரண்டு அண்ணன் தம்பிகள் அவரை தரிசிக்கின்றனர். அவரிடம் இசையைக் கற்றுக்கொள்ள இருவரும் பிரியப்படுகின்றனர். தம்பியானவன் சாமியாரை தன்னுடைய வீட்டிற்கு வருமாறு அழைக்கிறான். அவனுடைய உள் நோக்கத்தைப் புரிந்து கொண்ட அண்ணனோ அவரைத் தன்னுடன் வருமாறு அழைக்கிறான். இருவருக்கும் வாக்குவாதம் முற்றுகிறது. அரச காவலன் அவர்களுடைய சண்டைக்கிடையில் வருகிறான். பாடிக்கொண்டே இருவரும் பிரச்னையை விளக்குகிறார்கள். தம்பியானவன் கையூட்டின் மூலம் தீர்ப்பை தனக்கு சாதகமாக்குகிறான். சாமியாரும் அவனுடன் செல்கிறான்.

தம்பியானவன், சந்தேக புத்தியில் சாமியாரை அடிக்கும் பொழுது மயங்கி விழுகிறார். சாமியார் இறந்துவிட்டதாக நினைத்து, பதறிப்போய் அண்ணனின் வீட்டில் கொண்டு சேர்க்கிறான். அண்ணனோ பயந்து தம்பி வீட்டில் கொண்டு போட்டுவிடுகிறான். இருவரும் சந்நியாசியைப் பந்தாடுகிறார்கள். பிரச்சனை அரசனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. மன்னனின் தலைமையில் விசாரணைக் குழு கூடுகிறது. தம்பியையும் அண்ணனையும் விசாரணைக் கூண்டில் நிறுத்துகிறார்கள். யாருக்கு தண்டனைக் கொடுக்கலாம் என்று வரும்பொழுது சந்நியாசி கண்விழிக்கிறார். பிரச்சனைக்குத் தீர்வு சொல்கிறார். அப்படியே இசையில் தான் பேச வேண்டும் என்ற ஆணையையும் சமயோஜிதமாக தடை செய்யச் சொல்கிறார். நாடகமும் இனிதே முடிகிறது. ஒவ்வொரு கதாப்பாத்திரத்தில் நடித்தவர்களும் முக்கியத்துவம் உணர்ந்து நடித்தார்கள். குறிப்பாக சாமியார் வேடமேற்ற கார்த்திக் அருமையாக நடித்தார். அவருடைய பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திய போது கரகோஷம் அரங்கையே அதிரச் செய்தது. நாடகத்தை இயக்கியவர் C.H.ஜெயராவ். சுரேந்திரன் உதவி இயக்குனராக செயல்பட்டுள்ளார்.

நிறைவுப் பகுதியாக சப்தங்கள் நாடகம் குறித்து மெகா சீரியல் இயக்குனர் திருச்செல்வன், இயக்குனர் மீரா கதிரவன், கவிஞர் குட்டி ரேவதி, சிறப்புக் குழந்தைகள் பயிற்சியாளர் ஜலாலுதீன் ஆகியோர் உரையாற்றினர். சங்கீதப் பைத்தியம் குறித்து நாடக ஆசிரியர் மற்றும் பேராசிரியர் அய்யாசாமி உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து நீண்டகால நாடக அனுபவங்களை பாரதி மணி பகிர்ந்து கொண்டார். ISSHINRYU கராடே மாணவர்களின் சாகச நிகழ்ச்சியுடன் THeatre Lab நடத்திய 6வது ஆண்டு விழா கொண்டாட்டம் இனிதே நிறைவு பெற்றது.

தொடர்புடைய பதிவு:

பஷீரின் கதைகளில் நானும் ஒரு காதலியாவது… - குட்டி ரேவதி



Tuesday, March 1, 2011

கவிதைப் பட்டறை - இரண்டாம் நாள்

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், கலை பண்பாட்டுத் துறை 26-02-2011 முதல் 10-03-2011 வரை வழங்கும் பதிமூன்று நாள் கலை இலக்கியத் திருவிழா பிப்ரவரி 26-ல் துவங்கியது. முதல் நாள் அரசியல் நெடி அடிக்குமென்பதால் தவிர்த்திருந்தேன். இரண்டாம் நாள் ஞாயிறு என்பதால் சொந்த வேலை காரணமாக செல்ல இயலவில்லை. விழாவின் ஒரு பகுதியான கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமை ஏற்கும் மூன்றாம் நாள் நிகழ்ச்சியான கவிதைப் பட்டறைக்கு அ மு சையதும் வருவதாகச் சொல்லி இருந்தான். ஆகவே சுவாரஸ்யத்துடன் கிளம்பினேன். மெரினா லைட் ஹவுஸ் - சாந்தோம் - சத்யா ஸ்டுடியோ வரை வாழை மரத் தோரணைகள் நம்மை வரவேற்றன. அடடே...! கலைவிழா என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். "என் பெயரன் திருமணத்திற்கு வருகை தரும்..." என்று அச்சடித்த ப்ளெக்ஸ் பேனர்களில் மருத்துவர் ஐயாவின் சிரித்த முகம் என்னை பாதித்தது. பேருந்தோ பொறுமையை சோதிக்குமாறு நெரிசலில் சிக்கி ஆமை வேகத்தில் சென்றது. காற்றில் வாழை இலைகள் வீசிக்கொண்டு ஆடின.

சிலப்பதிகாரத்தில் ஓர் இடம் வரும். கோவலனும் கண்ணகியும் மதுரை நகரத்திற்கு நெருக்கமாக வருகிறார்கள். மதிலின் மேலுள்ள கொடிகள் காற்றில் ஆடிக் கொண்டிருப்பதை, "இந்த நகரத்திற்கு வராதீர்கள். உங்களுக்கு ஆபத்து காத்துக் கொண்டிருக்கிறது. எனவே திரும்பிச் சென்றுவிடுங்கள்" என்பது போல இளங்கோ அடிகள் வேறுமாதிரி உருவகப் படுத்தியிருப்பார். கொடியின் ஆன்மா கூடு விட்டு கூடு பாய்ந்து வாழையாக பேசுகிறதோ என்று தோன்றியது.

சத்யா ஸ்டுடியோவிற்கு 11 மணி சகிதம் சென்று சேர்ந்தேன். எம்ஜிஆர் ஜானகி கல்லூரியின் நான்கு ஆசிரியர்கள், ஒரே நேரத்தில் இதய வலி காரணமாக சென்ற மாதத்தின் ஒருநாள் மருத்துவமனையில் சேர்ந்ததாக நாளேடுகளில் படித்தேன். காலஞ்சென்ற மாணவியின் சார்பாக அவர்களை வெள்ளைக் கொடியுடன் விசாரித்துவிட்டுச் செல்லலாமா என்று தோன்றியது. பொடி நடையாக, ஏசு அழைக்கிறார் ஜெப கோபுரத்தின் (Jesus Calls) அருகிலுள்ள இசைக் கல்லூரிக்குச் சென்று விழா அரங்கினைத் தேடிக் கொண்டிருந்தேன். நடுக்காட்டில் கயவர்களிடம் சிக்கிக்கொண்ட அபலையைப் போல அரங்கினைக் கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறினேன். சையது வந்து கதாநாயகன் போல விழா அரங்கிற்கு அழைத்துச் சென்றான். விழா துவங்கியதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. கவிஞர் விக்ரமாதித்யன், ஓவியர் ட்ராஸ்கி மருது, எழுத்தாளர் அழகிய பெரியவன் ஆகியோர் பார்வையாளரோடு பார்வையாளராக அமர்ந்திருந்தனர். யவனிகா ஸ்ரீராம் தாமதமாக வந்து இணைந்து கொண்டார். கவிஞர் தேவதேவன், யுவன் சந்திரசேகர், ரமேஷ் பிரேதன் ஆகியோரை கடைசி வரை காணக் கிடைக்கவில்லை.

கவிஞர் இளையபாரதியும், உமா சக்தியும் விழாவினைத் துவக்கி வைத்தார்கள். அப்துல் ரகுமானுக்கு பதில் விக்ரமாதித்யன் தலைமை உரையாற்றினார். சங்க இலக்கியத்தையும் கவிஞர்கள் அக்கறையுடன் தெரிந்து கொள்ள வேண்டும். எதுகை மோனை, ஓசை போன்ற விஷயங்களை விடமுடியாமல் தவித்த கவிஞர்களையும், உரைநடை வசனம் போன்றவற்றை மடக்கிப் போட்டு புதுப்பாதை வகுத்த கவிஞர்களையும், பிற்கால மரபினை தோளில் சுமந்த புதுமைப்பித்தன், கு ப ரா, பசுவய்யா, ஞானக்கூத்தன் போன்றவர்களுடைய பங்களிப்பையும், அதனைத் தொடர்ந்து கவிதையின் வடிவத்தை அடுத்த தளத்திற்கு முன்னகர்த்திய தேவதேவன், தேவதச்சன், சுகுமாரன் என்று பலரையும் பற்றி பேசினார். உயிரெழுத்து, காலச்சுவடு, உயிர்மை என்று அவரவர்களுக்கு வாசகர் வட்டம் இருக்கிறது. என்றாலும் தொடக்க காலத்திலிருந்தே நவீன கவிதையை படைப்பாளிகள் சொந்த செலவில் தான் கொண்டு வந்திருக்கிரார்கள். சுகுமாரனையே கூட உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். சமீபத்திய சங்கர் ராமசுப்ரமணித்தின் புத்தகம் நிறைய செலவாகவில்லை என்று கேள்விப்பட்டேன். ஸ்ரீ நேசன் தென்காசியில் இருக்கிறார். அவருடைய புத்தகம் ஆழி வெளியீட்டில் வந்துள்ளது. அதனை தென்காசியில் வாங்க முடியாது. திருநெல்வேலியிலும் கிடைக்காது. சென்னைக்கு வந்தால் தான் வாங்க முடியும். இந்த நிலைமையில் தான் நிறைய கவிஞர்கள் இருக்கிறார்கள். இங்கு வருவதற்கு முன்புகூட கிரியாவிற்கு சென்று கொண்டாலத்தி (ஆசைத்தம்பி) வாங்கிப் படித்துவிட்டுத் தான் வந்திருக்கிறேன். இதையெல்லாம் மீறித்தான் நவீன கவிதைத் தொகுப்புகள் வந்துகொண்டிருக்கின்றன என்று கவிதை குறித்தும், கவிஞர்களின் நிலை குறித்தும் விரிவாகப் பேசினார். அதைத் தொடர்ந்து ட்ராஸ்கி மருது உரையாற்ற வந்தார்.

அடிப்படையில் ஒரு கவிஞனின் படைப்பு நிலைக்கு என்ன மனநிலை இருக்கிறதோ, அதே தளத்தில் தான் ஓவியனின் மனநிலையும் இருக்கிறது. 1960-70 களில் சிறு பத்திரிகை நண்பர்களுடன் இயங்கும் வாய்ப்பு ஓவியர் ஆதிமூலம், தட்சிணா மூர்த்தி, நாகை பாஸ்கர் போன்றவர்களின் மூலம் கிடைத்தது. அந்த காலத்தில் சிறுபத்திரிகை நடத்துவது கடினமான செயல். 'கணையாழி, கசடதபற' போன்ற இதழ்களை உதாரணத்திற்குச் சொல்லலாம். ஓவியம் எல்லோருக்கும் சென்று சேரவேண்டுமென்று ஆதிமூலம் போன்றவர்கள் வலியச் சென்று சிறுபத்திரிகையில் இணைந்து பணியாற்றினார்கள். அதுவரை தனித்து இயங்கிய ஓவிய (Painting) சூழல், ஒரு காலத்திற்குப் பிறகு எழுத்துடன் சேர்ந்து இயங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த காலத்தில் நானும் அவர்களுடன் நெருக்கமாக இருந்திருக்கிறேன். அப்பொழுது தனபால், கே மாதவன் போன்றவர்கள் கூட என்னுடன் நெருக்கமாக இருந்தார்கள். சுபமங்களா-வின் ஆரம்பம் முதல் கடைசி இதழ் வரை என்னுடைய ஓவியங்கள் தான் இருக்கும். இந்த சூழல் சிறுகதை, நாவல் கவிதை என்று இயங்கிய நண்பர்களுடனான தொடர்பிற்கு வழி வகுத்தது.

பாப்லோ மேகசின் வந்த பிறகு ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது. அழகான ஓவியங்களுக்கு பதில் சிதைந்த ஓவியத்தை படைப்புகளுக்கு ஏற்ப பயன்படுத்தினார்கள். ஆரம்பத்தில் சிறுபத்ரிகையின் இந்தச் செயலை பெரிய பத்திரிகைகள் கிண்டலடித்தன. சிறு பத்திரிகையில் பணியாற்றிய நண்பர்கள் 80களின் ஆரம்பத்தில் வெகுஜன பத்திரிகைகளில் சேர்ந்தார்கள். பெரிய பத்திரிகைகள் தங்களுடைய நிலையிலிருந்து மாற வேண்டி இருந்தது. கிறுக்கல் ஓவியத்தில் கூட ஏதோ இருக்கிறது என்று வாசகர்களும் கவனிக்க ஆரம்பித்தார்கள். 30 வருடங்கள் தொடர்ந்து இயங்கியதால் தான் இந்நிலை சாத்தியமானது. அட்சரத்திலிருந்து தொடங்குவதைப் போலத்தான் இதையும் கருத வேண்டும்.

படைப்பை வாசித்துவிட்டு ஓவியத்தைப் பார்க்கிறார்கள். அல்லது ஓவியத்தைப் பார்த்துவிட்டு படிக்கிறார்கள். எனவே ஓவியத்துடன் தொடர்பு கொள்ள ஒரு சிறு பகுதியேனும் அதில் இருக்க வேண்டும். படைப்பிலிருந்து தனியாக எடுத்தாலும் ஓவியம் தனித்து இயங்க வேண்டும். எழுத்து சார்ந்த மகிழ்ச்சியான தருணங்கள் ஏராளமாக நினைவிலிருக்கின்றன. அவற்றை ஏற்படுத்திக் கொடுத்த நண்பர்களுக்கும், சிறு பத்திரிகைகளுக்கும் நன்றி...என உரையாடலை முடித்துக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து அழகிய பெரியவன் மெல்லிய சாரல் போல பேச ஆரம்பித்தார். சாரல் மழையாகி சொட்டச் சொட்ட நனைத்தது. இலக்கியத்தில் மனதிற்கு நெருக்கமாக உரையாடுவது கவிதைதான். கவிதைக்குத் தடைகள் இல்லை. அவைகள் கொடுக்கக் கூடிய படிமங்களும், அனுபவங்களும் சொல்லில் அடங்காதவை. 3000 ஆண்டுகளான கவிதை மரபில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை வெளிப்படுகிறது. அதில் பாணன், பறையன், துடியன், கடம்பன், இழிசினர் போன்ற சொற்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவையனைத்தும் மனதை உறுத்தும் அதே வேலையில் இவர்கள் தான் தொல்குடிகள், இவர்கள் இல்லையேல் சமூகம் இல்லை என்பதும் புலனாகிறது. 'யோனி பேதம்' போன்ற கடுமையான சொற்களைக் கூட சங்க இலக்கியத்தில் காண முடிகிறது என்று வரிகளையும், கவிதைகளையும் மேற்கோள் காட்டிப் பேசினார். மேலும் மொழிவிளையாட்டு மற்றும் தத்துவ விசாரணையில் எழுதுவதுதான் நவீனம் என்ற நிலை மாறி ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் புழக்கத்தை பதிவு செய்யும் சமகால படைப்பாளிகளின் கவிதைகளை ஆங்காங்கு மேற்கோள்காட்டி தலித்திய களத்தில் அவருடைய நிலைப்பாடுகளைப் பகிர்ந்துகொண்டார்.

RainBow (101.4) பண்பலையில் 'கடைசி பென்ச்' நிகழ்ச்சி நடத்தும் கவிஞர் சரவணனுடன் கடைசி இருக்கையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். எங்களுடைய வரிசையில் நடுத்தர பெண் ஒருவர் மாணவர்கள் எழுதிய தேர்வுத் தாள்களை திருத்துவதுபோல எழுதிய வார்த்தைகளை சுழித்துக் கொண்டிருந்தார். அடுத்ததாக பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன் உரையாற்றுவார் என்றதும் சலனமில்லாமல் எழுந்து சென்றார்.

அடிமைத் தனத்திற்கு எதிராகப் போர் தொடுக்கும் கருவியாகப் பயன்படும் பெண் கவிஞர்களின் படைப்புகள் சார்ந்த பார்வையை பேராசிரியர் பத்மாவதி முன்வைத்தார். அவருடைய பேச்சில் பிரெஞ்சு ஆளுமைகளான சாச்சு, பாத், சௌசௌ, பொடலங்கா, பெங்களூர் கத்திரிக்கா என்று வாயில் நுழையாத பல பெயர்களும் அடிபட்டன. போலவே பிராய்டின் சில கருத்துக்களையும் மேற்கோள்காட்டிப் பேசினார். பெண்கள் சார்ந்து முறையாக கவிதை எழுதியவர்களில் கனிமொழி முக்கியமானவர் என்று பதிவு செய்தார். தமிழச்சி, மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, வெண்ணிலா போன்றவர்களைத் தவிர்த்த பெயர்களை உச்சரிக்கத் தயங்கினார். சிலருடைய பெயரைத் தவிர்த்து கவிதையை மட்டும் வாசித்தார். மையங்களை உடைத்து வரலாறை மீட்டெடுக்க சில வார்த்தைகள் வீரியமாகப் பயன்படுத்தப் படுகிறது. "முலைகள், யோனி" போன்ற வார்த்தைகள் எதிர்வினையை முன்வைக்கத் தான். அதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை என்றார். குடிபோதையில் சுற்றித் திரிந்த ஒவையாரின் வரலாறு இன்குலாப் எழுதியிருப்பதாக பேச்சோடு பேச்சாக பகிந்துகொண்டார்.

மதிய உணவிற்குப் பிறகு யவனிகா ஸ்ரீராம் பேசினார். ௨௦௦௦ வருட தமிழ் மரபு இருந்தாலும், மருத்துவ குறிப்புகளைக் கூட கவிதையாக வைத்திருப்பது தமிழின் சிறப்பு. வேறு எந்த மொழியிலும் இத்தகைய சிறப்பைக் காண இயலாது. எழுதத் துவங்குவதுதான் கவிதையின் துவக்கம். ஆகவே தயக்கமில்லாமல் எழுதுங்கள். தரமானதா இல்லையா என்பதை பிறகு பார்த்துக்கொள்ளலாம். லட்சியவாதங்கள் தோற்றபோது தோன்றியவைதான் நவீனக் கவிதைகள். மரபிலிருந்து நவீனக் கவிதையின் புள்ளி எங்கு வேறுபடுகிறது என்பதைப் பார்க்க வேண்டும், மாணவர்களின் எழுச்சி இதற்கு ஆரம்பமாக இருந்திருக்கலாம். குழந்தைப் பருவத்தின் விளையாட்டுதான் கவிதைகள் ஆகிறது. சேட்டைகள் தான் கவிதைகளை உருவாக்குகிறது. சிறுவயதில் பார்த்த கட்சிகளின் துருப்பு பின்னாளில் படைப்பிற்கான வித்தாகிறது.

குழந்தைப் பருவத்தில் பார்த்த செம்பருத்தி பூவாகவும், வழிபாட்டுக்கான பொருளாகவும் மட்டுமே நமக்கு அர்த்தப்பட்டிருக்கும். பள்ளிக்கு செல்லும் பொழுது ஹைபிஸ்கஸ் ரோசா சைனான்சிஸ் என்று வேறு மாதிரி தெரியவரும். கல்லூரிக்கு சென்றதும் வேறு மாதிரி அர்த்தப்படும். ஒன்றைக் குறித்தான வேறுபட்ட அர்த்தங்கள் மனதை உருத்தும்பொழுது, பறவைப் பார்வையில் பார்க்கும்பொழுது படைப்பாக வெளிப்படுகிறது. மாங்காய் என்ற சொல்லை உச்சரிக்கும் பொழுது உங்களுடைய வாயில் நீர் சுரக்கலாம். இல்லாத மாம்பழம் எப்படி இந்த அனுபவத்தை உங்களுக்குத் தருகிறது.. இங்கு மாங்காய் புளித்ததோ? வாய் புளித்ததோ? என்ற சொலவடைதான் ஞாபகம் வருகிறது என்ற நீண்ட சுவாரஸ்யமான உரையாற்றினார். கவிஞர்களான சக்தி ஜோதி, உமா ஷக்தி, உமா தேவி, பாண்டியன் செல்வன் போன்றோர் கவிதை வாசிப்புடன் விழா இனிதே முடிந்தது.

ஒரே குறை என்னவென்றால், விழா துவங்க தாமதமானதால் கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைப் பட்டறை துவங்கும் முன்பே திரும்பிச் சென்றுவிட்டார். "கோவப்பட்டு சென்றுவிட்டாரா?" என்றால் எனக்குத் தெரியாது. சென்னையின் வாகன நெரிசல் சொல்வதற்கில்லை. இதில் பிரபலங்களின் பெயரன், கொள்ளுப் பெயரன் போன்றோருடைய கல்யாணம் நெரிசலை அதிகப் படுத்தியிருக்கலாம். பார்வையாளர்களும், இதர விருந்தினர்களும் தாமதமாக வருவதற்கு வேறு காரணம் தேவையில்லையே. இருந்தாலும் என்னுட்பட எல்லோரும் சிந்திக்க ஒரு விஷயம் இருக்கிறது. என் வயதிலும் இரண்டு மடங்கு வயோதிகரான கவிக்கோ எப்படி சீக்கிரம் வந்தார். கவிதை என்பது சிலருக்கு ஆர்வம். சிலருக்கோ இலக்கியம். ஒரு சிலருக்குத் தான் மூச்சு.



கோடிகளை விழுங்கும் கிரிகெட்

சில நாட்களுக்கு முன்பு என்னுடைய நண்பர் ஒருவரின் குடும்ப விழாவிற்காக 3 நட்சத்திர ஓட்டலுக்கு சென்றிருந்தேன். நான் எங்கு சென்றாலும் கூடுமான வரையில் அழுக்கான உடையில் செல்வது வழக்கம். அன்றும் அப்படித்தான், ஊரெல்லாம் சுற்றிவிட்டு, சாயம் போன உடையில் எண்ணெய் வழியும் முகத்துடன் நுழைவாயிலை கடக்க முயன்றேன். ஓட்டலின் காவலர் என்னை வழிமறித்தார். நண்பரோ எங்களை நோக்கி ஓடோடி வந்தார். காவலரிடம் சொல்லிவிட்டு என்னை உள்ளே அழைத்து சென்றார். இந்த நட்சத்திர உணவகம் புறம்போக்கு நிலத்தை தேவைக்கு அதிகமாக ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளதாக நாளேடுகளில் படித்திருந்ததை முன்னமே நண்பரிடம் குறிப்பிட்டிருந்தேன்.

"இத பாருடா... பொறம்போக்கு மாதிரி சுத்தறவனுக்கே பொறம்போக்கு நெலத்த சொந்தம் கொண்டாட முடியல. உள்ள நொழையவும் சிபாரிசு தேவைப் பட்றத எங்க கொண்டு சொல்ல?" என்றேன்.

"ரஜினி மாதிரி தத்துவம் புழிய ஆரம்பிச்சிட்டியா?" என்றான் நண்பன்.

தனியார் நிறுவனங்கள் மட்டுமல்ல, அரசு சார்ந்து இயங்கக் கூடிய பொது நிறுவனங்களும் சராசரி மக்களை கோமாளிகளாக்கவே செயல்படுகிறது. அந்த வகையில் கிரிக்கெட் தொடர்புடைய சமீபத்திய ரங்கராஜ் பாண்டேவின் கட்டுரை எனக்கு முக்கியமாகப் படுகிறது.

*கோடிகளை விழுங்கிய தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்:தமிழக அரசுக்கு நோட்டீஸ்*

சென்னையின் மையப்பகுதியில் ஒரு கிரவுண்டு விலை என்ன என்பது தெரிந்தவர்களுக்கு, இந்த செய்தி கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருக்கும். 1,800 கோடி ரூபாய் மதிப்புள்ள, 347 கிரவுண்டு நிலத்தை, சொற்ப தொகைக்கு, ஆண்டு குத்தகையாக தாரை வார்த்திருக்கிறது தமிழக அரசு.

தலைநகரின் இதயப் பகுதியில் அமைந்துள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், உலகப் பிரசித்தம்; அதில் தான் பிரச்னையே. 1994 மற்றும் 95ம் ஆண்டுகளில், சேப்பாக்கத்தில் உள்ள, 347 கிரவுண்டு இடம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கும், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்புக்கும் குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. ஒரு பகுதி 2015 ஆண்டு வரையும், மறுபகுதி 2025ம் ஆண்டு வரையும் விடப்பட்டுள்ளது.இந்த, 347 கிரவுண்டின் மொத்த குத்தகை தொகை, ஆண்டுக்கு 8.5 லட்ச ரூபாய் மட்டுமே. மாதக்கணக்கு பார்த்தால், 71 ஆயிரம் ரூபாய் தான். சென்னை அண்ணா சாலையில், இந்த தொகைக்கு, ஒரு கடை கூட வாடகைக்கு கிடைக்காது.இந்த விஷயம் நன்றாக தெரிந்தும், இவ்வளவு சொற்ப தொகைக்கு, 347 கிரவுண்டு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

சரி, "பொதுநலனுக்கு தானே; போனால் போகிறது' என்றால், அதுவும் இல்லை என்றாகிறது. கிரிக்கெட் கிளப்புகளுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த இடத்தில், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம், டென்னிஸ் மைதானம், கிளப் ஹவுஸ், விருந்தினர் விடுதி, நீச்சல் குளம் மற்றும் துணைமின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.சங்கத்தின் உறுப்பினர்களோ, அவர்களோடு தொடர்பு உடையவர்களோ தவிர, சுத்துப்பட்டுப் பகுதிக்குள், ஒரு ஈ, காக்காய் கூட நுழைய முடியாது. சரி, உறுப்பினராகி விட்டால் போச்சு என்றால், அதற்கும் கட்டணம், லட்சங்களில் இருக்கிறது.

"அப்புறம் எங்கிருந்து பொதுநலன் வருகிறது' என கேள்வி எழுப்பியுள்ளார், இந்து மக்கள் கட்சியின் அமைப்பு செயலர் கண்ணன்.இவர் சார்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலருக்கும், வருவாய் துறைச் செயலருக்கும் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் அனுப்பியுள்ள நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது:சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ள வாலாஜா சாலை பகுதியின் வழிகாட்டி மதிப்பு, சதுரடிக்கு, 5,430 ரூபாய். சந்தை மதிப்பு ஒரு கிரவுண்டுக்கு, 5.2 கோடி ரூபாய்க்கு குறைவானதில்லை. இதை, 347 கிரவுண்டுக்கு கணக்கிட்டால், 1,800 கோடி ரூபாய். குத்தகைத் தொகை 7 சதவீதம் எனக் கொண்டால், தமிழக அரசுக்கு மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் சேர்ந்து, ஆண்டுதோறும், 126 கோடி ரூபாய் தர வேண்டும்.அவ்வளவு வேண்டாம்... வழிகாட்டி மதிப்பீடையே எடுத்து கொண்டால் கூட, ஆண்டு குத்தகைத் தொகை, 31 கோடி ரூபாய் வர வேண்டும். கொடுப்பதோ, வெறும், 8.5 லட்ச ரூபாய் தான்.

இதில், வியப்புக்குரிய இன்னொரு அம்சம்: ஒரு பகுதி எட்டு லட்ச ரூபாய்க்கும், அதே அளவுள்ள இன்னொரு பகுதி, வெறும், 61 ஆயிரம் ரூபாய்க்கும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது தான். இதில் இருந்து, குத்தகைக்கு விடப்பட்டபோது, சந்தை மதிப்பும் சட்டை செய்யப்படவில்லை; வழிகாட்டி மதிப்பீடும் மதிக்கப்படவில்லை எனத் தெரிகிறது.இதன் மூலம், தமிழக அரசுக்கு வர வேண்டிய பல கோடி ரூபாய் வருவாய், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கும், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்புக்கும் திருப்பிவிடப்பட்டுள்ளது. இச்சங்கங்கள் இரண்டும், லாபநோக்கில்லாமல் செயல்படும் சமூக சேவை நிறுவனங்களும் அல்ல.தற்போது நடந்து வரும் உலகக் கோப்பை, அடுத்து வரும் ஒரு நாள் போட்டிகள், ஐ.பி.எல்., போட்டிகள் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பின் வருமானத்துக்கு குறைவில்லை. அத்தனையும் மக்கள் பணம்; இருப்பதும் மக்கள் இடம்.எனவே, சம்பந்தப்பட்ட இடத்துக்கு புது குத்தகைத் தொகையை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும். பழைய இழப்பை வசூலிக்க வேண்டும். அவர்கள் மறுத்தால், கிரிக்கெட் ஸ்டேடியத்தை தவிர மற்ற அனைத்து இடங்களையும் கைப்பற்றி, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்த வேண்டும்.

இது தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலருக்கும், வருவாய் துறைச் செயலருக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். அதன் நகலை, கவர்னருக்கும் அனுப்பி உள்ளோம். உரிய பதில் வராவிட்டால், சட்டரீதியான நடவடிக்கை எடுப்போம்.இவ்வாறு ராஜா செந்தூர்பாண்டியன் கூறினார்.

- ஆர்.ரங்கராஜ் பாண்டே

"ங்கோத்தா லாஸ்ட் ஓவர் போடறவன் எவ்வளோ பொறுப்பா இருக்கணும்? ங்கொம்மால இப்பிடி பண்ணிட்டானே?" என்று பள்ளிக்கு செல்லும் சிறுவன் முதல், கல்லூரிக்கு செல்லும் விடலையையும் சேர்த்து, அலுவலகத்திற்குச் செல்லும் இளைஞர்கள் துவங்கி, ஓய்வுபெற்ற மூத்தக்குடி வரை உதிர்க்கும் வார்த்தைகளை கதம்பமாகக் கேட்க முடிகிறது.

கிரிக்கெட் என்பது இந்தியா போன்ற நாடுகளில் பெரிய வர்த்தகம். அதை நம்பி லட்சக் கணக்கானவர்கள் பிழைக்கலாம். ஆனால் சராசரி மக்களால் 'சேரி' என்று அழைக்கக் கூடிய, கீழ் நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழக்கூடிய மக்கள் வசிக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட காலனிகள் சென்னையின் மையப்பகுதியில் இருக்கிறது. அவற்றை ஆதாரமாகக் கொண்டு லட்சக் கணக்கான குடும்பங்கள் தின வாழ்க்கையை மேற்கொள்கின்றன. அவற்றையெல்லாம் அரசாங்கம் எடுத்துக்கொண்டு, அவர்களுக்கான குடியிருப்புகளை சென்னைக்கு வெளியில் அமைக்க அரசாங்கம் யோசித்துக் கொண்டிருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்தக் கூடிய எந்த அமைப்பையும் நான் எதிர்க்கவில்லை. அரசாங்கத்தையும் சேர்த்துத்தான். என்றாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விரோதமாக செல்லக் கூடிய எதையும் வெளிச்சம் போட்டுக் காண்பிக்க வேண்டிய கடமையை படித்தவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

விடுதிகளும், விளையாட்டு மைதானங்களும் புறநகர் பகுதிகளில் இருப்பினும் கேளிக்கைக்காகவும், பயிற்சிக்காகவும் சொகுசு வண்டிகளில் செல்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்காக எளிய மக்களை பந்தாட வேண்டாமே. ஒவ்வொரு பந்தையும் நுட்பமாக கவனித்து பகிரக்கூடிய நண்பர்கள் இதுபோன்ற விஷயங்களையும் பொதுவில் வைக்கலாமே?. தேவையான கவனிப்பை ஏற்படுத்தலாமே?

குறிப்பு: இந்தப் பதிவு கே வி ஆர், வானவில் கார்த்திக், கிழக்கு பத்ரி போன்ற கிரிகெட் பிரிய நண்பர்களுக்கு சமர்ப்பணம்...

நன்றி: தினமலர் நாளேடு.