Friday, October 30, 2009

விருது - அமித்துவின் அம்மாவிடமிருந்து...

கி.ரா பங்குபெற்ற கேணி நிகழ்ச்சியில் தான் அமித்துவின் அம்மா சாரதாவை நேரில் பார்க்க நேர்ந்தது. எங்களுக்கிடையிலான இடைவெளி அதிகமாக இருந்ததினால் ஒருவருடன் ஒருவர் பேச இயலவில்லை. துளசி டீச்சரையும் என்னையும் பார்த்தவுடன் முகமெல்லாம் சிரிப்பு. சக மனிதர்கள் என்ற முறையில் அந்த அன்பு கலந்த சிரிப்பைத் தவிர வேறு என்ன வேண்டும் வாழ்க்கையில்.

அந்த அன்பின் முறையில் 'நான் வாசித்த தமிழ் புத்தகங்கள்' பதிவிற்கு Scrumptious blog award கொடுத்திருக்கிறார்கள். அதே அன்பை வேறுயாருடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கும் போது கொஞ்சமும் யோசனையின்றி சில நண்பர்கள் ஞாபகம் வந்தார்கள். அவர்கள்...

புத்தகம்
சேரலாதன் - கருப்பு வெள்ளை
J ஞானசேகர் - நிர்வாணம்
பீ'மோர்கன் - வழிப்போக்கன்
ரெஜோவாசன் - பட்டாம்பூச்சி விற்பவன்

நான் தொடர்ந்து விருப்பமுடன் வாசிக்கும் பதிவு சேரலின் 'புத்தகம்'. இந்த வலைப்பூவில் கவிதை, சிறுகதை, நாவல் என்று அவன் தேடிப்படிக்கும் புத்தகங்கள் பற்றிய தேவையான குறிப்புகளை நிறைவாக கொடுத்துக் கொண்டிருக்கிறான். அவனுடன் சேர்ந்து J ஞானசேகர், பீ'மோர்கன் மற்றும் ரெஜோவாசன் ஆகியோரும் தாங்கள் வாசிக்கும் புத்தகங்களை அறிமுகப் படுத்துகிறார்கள்.

இவர்களில் பீ'மோர்கன் புத்தகங்களைப் பற்றி எழுதும் பதிவுகள் அலாதியாக இருக்கும். புத்தகங்கள் பற்றிய குறிப்பு எங்கிருந்தாலும் தேடிப்படிக்கும் பழக்கமுடையவன் என்பதால் சேரல் மற்றும் நண்பர்களின் பதிவுகள் வாசிக்கக் கிடைத்தது மகிழ்ச்சியே. புத்தகம் தவிர்த்து இவர்கள் எழுதும் தனிப் பதிவுகளையும் விருப்பி வாசிப்பதுண்டு. என்னுடைய நேசத்தை இந்த நால்வருடனுமே பகிர்கிறேன்.

அன்பே சிவம் (முரளி பத்மநாபன்)

இவருடைய நட்பு புத்தகங்களின் மூலம் கிடைத்தது. சிறுகதைப் பட்டறையில் தான் முதன் முதலில் நேரில் சந்திக்க நேர்ந்தது. பயணம், சினிமா, புத்தகம் என தான் ரசித்த விஷயங்களைப் பதிவிடுகிறான். சிறுகதை எழுதுவதிலும் ஆர்வம் உள்ளவர். நிறைய புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவன். இனிய நண்பன்.

முதல் சுவடு (விஷ்ணு குமார்)

சுந்தர ராமசாமி பற்றிய 'நீ யார்' ஆவணப்படம் பார்க்கச் சென்றிருந்த இடத்தில் தான் முதன் முறையாக விஷ்ணு எனக்கு அறிமுகமானான். பாரதியின் மீது தீராத காதல் கொண்டவன். 'தமிழ் கவிதை' புனைவதில் மிக்க ஆர்வம் உடையவன். இவனுடைய தாய் மொழி சவுராஷ்டா என்பது அவனாக சொன்னாலன்றி அடுத்தவருக்குத் தெரியவராது. ஜப்பான் மொழியை வேறு பயின்று கொண்டிருக்கிறான். பழகுவதற்கு இனிமையானவன். எதிர்காலத்தில் நல்ல படைப்பாளியாக, மொழிபெயர்ப்பாளனாக வருவான் என்று எதிர்பார்க்கிறேன். அவனுடைய சில வரிகள்...

நான்

என் தகப்பன்
அளித்திட்ட
பல துளிகளில்
என் தாய்
தேர்ந்தெடுத்த
ஒற்றைத் துளி
'நான்'.

பப்பு - (பிரபு)

தன்னுடைய வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களை எளிய தமிழில் அழகாக பகிர்ந்து கொள்கிறார். இவருடைய ஒவ்வொரு பதிவிலும் ஹாஷ்யத்திற்கு பஞ்சம் இருக்காது.

உணர்தலும் உணர்தல் நிமித்தமும் (முத்துசாமி பழனியப்பன்)

விஷ்ணுவுடன் கன்னிமரா நூலகத்தில் புத்தகம் வாங்கச் செல்லும் போது இவருடன் பழக்கம் ஆரம்பித்தது. கவிதை எழுதுவதில் தீவிர ஆர்வம் உடையவர். வார்ப்பு, உயிரோசை, தடாகம், கீற்று, அகநாழிகை, திண்ணை, தமிழ் ஆதர்ஸ் என பல இணைய இதழ்களில் இவருடைய படைப்புகள் அங்கீகரிக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

முடிவாக சுந்தர ராமசாமியின் கிருஷ்ணன் நம்பி பற்றிய நினைவோடை தான் இங்கு ஞாபகம் வருகிறது. "நான் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருப்பேன். அப்போது எனக்கு ஒரு ஆள்கூடத் தேவையில்லை. ஒரு முகம் அது மட்டும்தான் தேவையாயிருந்தது. அவன் என்ன கேட்கிறான், என்ன புரிந்துகொள்கிறான், என்ன எதிர்க்கேள்வி கேட்கிறான் என்பது போன்ற விஷயங்களைப் பொருட்படுத்திப் பேசும் நிதானமோ, பக்குவமோ எனக்கு அப்போது இருந்திருக்கவில்லை. நான்தான் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருப்பேன்." (நினைவோடை -கிருஷ்ணன் நம்பி)

எனக்கு முகம் கூட தேவையில்லை அவர்களின் கண்கள் மட்டும் இருந்தால் போதும் என்று எழுதித் தள்ளுகிறேன். நண்பர்களும் சிரமம் பார்க்காமல் தொடர்ந்து வாசிக்கிறார்கள். என்ன எழுதுகிறேன்?, எப்படி எழுதுகிறேன்?, எதற்காக எழுதுகிறேன்? என்ற முன்யோசனை எதுவும் இல்லாமல், அந்த நேரத்தில் எண்ணங்களில் தோன்றுவதை எழுதி வலைப்பூவில் சேர்ப்பிக்கிறேன். அதை நண்பர்கள் படித்துப் பாராட்டும் போதுதான் எங்கோ உறுத்துவது போல் இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக இவர்கள் அனைவருமே பதிவுலகில் நான் சேர்ந்த முக்கியமான உறவுகள். இதனை விருதுக்கான பரிந்துரை என்பதைவிட அன்பைப் பகிர்ந்துகொள்ளக் கிடைத்த நல்ல சந்தர்ப்பம் என்றே நினைக்கிறேன்.

சாரதா சொல்வதுபோல் "மேற்கூறியவர்கள் மூலம் இந்த அன்பு நிறைய பேருக்கு விருதின் வாயிலாக பல்கிப் பெருகும் என்று" நம்புகிறேன்

இந்த விருதினை எனக்கு அளித்த சாரதாவிற்கு மிக்க நன்றி.

:)

அன்புடன்,
கிருஷ்ண பிரபு.

Monday, October 19, 2009

கவிதை வாசிப்பு...1 - சேரல்

நட்சத்திரத் தொழிற்சாலை

அணைந்தணைந்தெரியும்
தெருவிளக்கு

நட்சத்திரங்களாகின்றன
நதி விழும்
மழைத்துளிகள் - சேரலாதன்
(http://seralathan.blogspot.com/2009/10/blog-post_19.html)

******************************
"அணைந்தணைந்தெரியும்
தெருவிளக்கு

நட்சத்திரங்களாகின்றன" - மழை நாட்களில் தெரு விளக்குகள் விட்டு விட்டு வெளிச்சத்தை உமிழ்ந்து நட்சத்திரம் போல் தோற்றம் அளிக்கின்றன. இதுவரை கவிதையைப் புரிந்து கொண்ட எனக்கு அதற்கு மேல் மூளை வேலை செய்யவில்லை.

'நதி விழும்
மழைத்துளிகள்' - நதி எப்படி விழும். மழைத்துளிகள் தானே வானத்திலிருந்து பூமியை நோக்கி கீழே விழும்.

மேலே உள்ள தெரு விளக்கு மற்றும் நட்சத்திரத்திற்கான உருவகத்திற்கும், கடைசியில் உள்ள வரிகளுக்கும் சமந்தமே இல்லையே என்று சேரலுக்கு தொலைபேசியில் அழைப்புவிடுத்து எனது சந்தேகத்தைக் கேட்டேன்.

கி.பி: சேரல் உன்னுடைய கவிதையைப் படித்தேன். கொஞ்சம் கேள்வி கேட்கணுமே... வேலையா இருக்கையா என்ன?
சேரல்: அதனால என்ன , கேளுங்க கிருஷ்ணா... :-)
கி.பி: தெரு விளக்கு மற்றும் நட்சத்திரத்திற்கான உருவகம் புரியுது. அதற்கு அடுத்த இரண்டு வரிகளுக்கும் பாயைப் பிராண்ட வச்சுட்டயே!
சேரல்: இல்ல கிருஷ்ணா, அங்க தான் தப்பு பண்றீங்க... மழைத்துளிகள் தான் இங்கு நட்சத்திரங்களுக்கு உவமையாகின்றன.
கி.பி: இதோ பாரு சேரல், இந்த fraud-வேலை எல்லாம் எங்கிட்ட வேணாம்.
சேரல்: (சிரிக்கறாரு...) நான் ஆத்தங்கரைப் பக்கமா இருக்கேன்னு வச்சுக்கோங்க. அங்க தெரு விளக்கு விட்டு விட்டு எரியுது. இது ஒரு நிகழ்ச்சி... இந்த வெளிச்சத்தின் ஊடக நான் மழைத்துளியை பார்க்கிறேன்.
கி.பி: சரி...
சேரல்: Street Lamp விட்டு விட்டு எரியும் போது மழைத்துளியில் வெளிச்சம் பட்டு, துளிகள் அனைத்தும் எனக்கு நட்சத்திரம் போல் காட்சி அளிக்கின்றன. எனவே "நட்சத்திரங்களாகிய மழைத் துளிகள் நதியில் விழுகின்றன - (நதி விழும்
மழைத்துளிகள்) என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கி.பி: அடடே விளக்கம் நல்லாத்தான் இருக்கு . நன்றி சேரல்...

Tuesday, October 13, 2009

கேணி இலக்கிய சந்திப்பு - கி ராஜ நாராயணன்

கன்று பசுவினைத் தேடி பால் குடிக்க ஓடுவதைப் போல துள்ளலுடன் கேணி இலக்கிய சந்திப்புச் சென்றிருந்தேன். பல வருடங்களாகவே கி ரா-வைப் பார்த்துப் பேசவேண்டும், "கதை சொல்லுங்கள் ஐயா" என்று உரிமையுடன் கேட்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. கேணி இலக்கிய சந்திப்பின் மூலம் அந்த ஆசை நிறைவேறியது.

எவ்வளவு முடியுமோ அவ்வளவு அருகில் அவரைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் முதல் வரிசையில் உட்கார்ந்தேன். ஒரு பெண் 'உன்னதம்' இதழைப் படித்துக் கொண்டிருந்தார்கள். நியூசிலாந்து பதிவரான 'துளசி கோபால்' என்று பிறகு தெரியவந்தது. வாயைத் திறந்தால் ஹாஸ்யம் தான். அவருடைய பதிவைக் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அவரின் மூலம் 'நாச்சியார்' அறிமுகமானார்.இவர்களைத் தவிர வேறு சில பரிட்சயமான பதிவர்களையும் பார்க்க முடிந்தது. முக்கியமாக "அமித்துவின் அம்மா" வந்திருந்தார்கள். அமித்துவைப் பிரிந்து வந்த பதட்டம் அவர்களுடைய முகத்தில் தெரிந்தது.

ஞானியுடன் கி.ரா தம்பதியர் வருவதைப் பார்த்து அசந்துவிட்டேன். அவ்வளவு அழகான ஜோடி. குழந்தைகளின் குதூகல மகிழ்ச்சி அவர்களுடைய முகத்தில் தெரிந்தது. ஒருவருக்கொருவர் அனுசரணையாக நடந்து கொள்கின்றனர். கூட்டத்தினரைப் பார்த்து புன்னகைத்தவாறே தெரிந்தவர்களின் ஷேம நலன்களை விசாரித்துவிட்டு இருக்கையில் அமர்ந்தனர்.

"கரிசல் தந்தை புதுச்சேரியில் எப்படி இருக்கிறார், எந்த சூழலில் வாழ்கிறார், தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்" என்று சொல்லி ஞானி கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

"பிரியமான அன்பர்களே... கேணி இலக்கிய சந்திப்பைப் பற்றி ஞானி என்னிடம் சொல்லியவுடன், இந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. சென்னையில் இப்படி ஒரு சந்திப்பை எதிர்பார்க்கவில்லை. இந்தத் தோட்டம், சூழல் மற்றும் அமைப்பு கருதியே பார்க்க வந்தேன். மேலும் இந்தச் சந்திப்பை ஒரு கலந்துரையாடல் மாதிரி எடுத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் ஒரு திருப்தி இருக்கும்" என்று உரையை ஆரம்பித்தார்.

அறிமுக உரையில் ஞானி ஒரு விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டார். 'நான் என்ன தலைப்பில் பேசப்போகிறேன்' என்ற தகவல் தான் அது. எனக்கு எந்தத் தலைப்பும் ஒத்து வராது. அதனால் நாட்டுப்புறக் கதைகள் பற்றிப் பேச விரும்புகிறேன். என்னுடைய கதைகளை விட நாட்டுப்புறக் கதைகள் தான் என்னை வசீகரம் செய்தது.

ஆனால் 'மணிக்கொடி' முதல் எல்லோரும் நாட்டுப்புறக் கதைகளை ஒதுக்கித்தான் இருக்கிறார்கள்.

40 எழுத்தாளர்கள் என்னைப் பற்றி கருத்து தெரிவித்த புத்தகம் ஒன்று வெளிவரப் போகிறது.அதில் "ஏன் இன்னும் கிராமியக் கதைகளைக் கட்டிக்கொண்டு அழுகிறீர்கள்? அதைத் தாண்டி ஏன் எழுதவில்லை" என்று என்னிடம் கேட்கிறார்கள்.

கரிசல் இலக்கியம் என்பது ஒரு சமுத்திரம் மாதிரி. சமுத்திரத்தில் ஏராளமாக மீன்கள் இருப்பது போல கிராமியக் கதைகளும் நிறையவே நம்மிடம் இருக்கிறது. தேடல் தான் நம்மிடம் இல்லை. ஆரம்பத்தில் கிராமியக் கதைகளை இரண்டு தொகுதிகளாக வெளியிட்டேன். அதைப் பார்த்து வேறு சிலர் தாமாக முன்வந்து சில கதைகளைக் கொடுத்தார்கள்.

நாட்டுப்புறக் கதையை சொல்ல ஆரம்பித்தால் எங்கோ கேட்டது போலவே இருக்கும். ஒரு பாகவதர் 25 ராகங்களை வைத்துக் கொண்டு வாழ் நாள் முழுவதும் கச்சேரி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஏன் அந்த ராகங்களையே அவர் திரும்பத் திரும்பப் பாடுகிறார் என்று கேட்கிறோமா? விருப்பம் இருக்கிறது என்பதால் கேட்கிறோம். அவரும் பாடுகிறார். அது போலதான் கிராமியக் கதைகளும்.

மறுபடியும் மறுபடியும் ஒரே கதைகளை வேறுவேறு கற்பனைகளில் கேட்கும் பழக்கம் இன்றுள்ள குழந்தைகளுக்கு இல்லை. ஏனெனில் அவர்களை அவசரமா பழக்கிட்டோம். "தூங்க சொல்ல எழுப்பி வெளிக்கி(கக்கூஸ்) இருக்க வக்கிறோம், குளிக்க வைக்கிறோம், பள்ளிக்கு அனுப்புறோம். புதுப்புது விஷயங்களை அவர்கள் தெரிஞ்சிக்க வேக வேகமா பழக்கறோம். அதெல்லாம் தப்பு. முன்னடிஎல்லாம் அப்படி இல்ல.

இந்தக் கூட்டத்தை "ராகுகாலக் கூட்டம்"னு சொல்லலாம். ஏன்னா ஞாயிறு மாலை 4.30 - 6.00 ராகுகாலம். சரியா அந்த நேரத்துல இந்தக் கூட்டத்தை ஞானி ஏற்பாடு பண்ணியிருக்காரு. ராகு போல கொடுக்கரவனும் இல்லை, கேது போல கெடுப்பவனும் இல்லைன்னு சொல்லுவாங்க உங்களுக்குத் தெரியுமா?

இந்த இடத்தில் ஜோசியம் மற்றும் சகுனம் சமந்தமான இரண்டு கதைகளைச் சொன்னார். (ஜோசியரிடம், வியாழன் அவருடைய மகனுக்கு ஜாதகம் கணித்தது மற்றும் நாய் ஒன்று சகுனம் பார்த்து வெளியில் செல்ல நினைக்கும் கதை). 'கிராமியக் கதைகள்- கி. ரா' என்ற புத்தகத்தில் அந்தக் கதைகளைப் படித்த ஞாபகம்.

"இப்படி பேசிக்கிட்டே போனா வெறுப்பா இருக்குதோ?. வேறுமாதிரி வேணும்னா பேசலாமா" என்று சிறிது நேரம் பேச்சை நிறுத்தினார். அந்த நேரம் பார்த்து கிராவிடம் ஞானி ஒரு கேள்வி கேட்டார்.

"ஆரம்பத்தில் இடது சாரியில் இருந்த நீங்கள் பிறகு வேறு திசையில் பயணித்தது எப்படி? உங்களுடைய நம்பிக்கையில் எதனால் மாற்றம் வந்தது?"

"அதாவது ஆரம்பத்துல கம்யுனிஸ்டா இருந்தவனுக்கு, இப்ப கடவுள் நம்பிக்கை எப்படி வந்துச்சுன்னு கேக்குறீங்க(எல்லோரும் சிரிக்கிறார்கள்) அப்படிதானே?" - என்று பேச்சைத் தொடங்கினார்.

ஆங்கில மருத்துவம் மற்றும் மூலிகை மருத்துவம் சமந்தமான ஆராய்ச்சியை தொடர்புபடுத்தி அழகான கதை ஒன்றைச் சொல்லி ஞானியின் கேள்விக்குப் பதிலளித்தார்.

மேலும் பெரியார் ஒரு முறை பொதுக் கூட்டத்தில் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது மின்சாரம் (ஜெனரேட்டர்) தடைப்பட்டு, ஒலிபெருக்கியில் அவர் குரல் வெளிவரவே இல்லையாம். பின்னர் சரி செய்யப்பட்டு மீண்டும் பேசத் தொடங்கினாராம். சில விநாடிகளில் மீண்டும் ஜெனரேட்டரில் கோளாறு ஏற்பட்டதாம். இதுபோல் பல முறை நடந்ததாம். பெரியார் சலித்துப் போய், ‘அட ராமா!’ என்று உரக்கச் சொல்லிவிட்டாராம். அவரே தன்னை மறந்த நிலையில் மனதின் ஆழத்திலிருந்து அப்படி சொல்லி இருக்கிறார். இது எல்லோருக்கும் நேர்வது தானே என்று கூறினார்.

இறுதியில் "கி ராவிற்கு ஒரு விஷயத்தில் நம்பிக்கை இருந்தது. இப்பொழுது அது மாறி இருக்கிறது அவ்வளவுதான்" என்று முடித்தார்.

பிறகு எதைப் பற்றியெல்லாம் நாட்டுப்புறக் கதைகள் இருக்கிறது என்று பேசத் தொடங்கினார்.

கடவுள் தொடங்கி, ராஜாக்கள் (ஊர்சுற்றி ராஜாக்கள், நாடாளும் ராஜாக்கள்), பிச்சைக்காரர்கள், பரதேசி, சாதுக்கள், துறவிகள், தேவர்கள், சபைக்கு முன்னாள் சொல்ல முடியாத சில கதைகள் (எல்லோரும் சிரிக்கிறார்கள்), பேய், பிசாசு, பூதம், தாழ்வு மனப்பான்மை, திமிர், கர்வம், கோபம், சோகம், இது போன்ற உணர்வுகள், வதந்திகள், அது பரவும் விதம், அறிவாளிகள் பற்றி, மாமியார்-மருமகள் பிரச்சனை, தகப்பன்-மகன், கணவன் மனைவி, பொறாமை, லஞ்சம், வீரம், காதல், நட்பு, பாலியல், ஞாய தீர்ப்பு என எவற்றைப் பற்றியெல்லாம் நாட்டுப்புறக் கதைகள் வந்திருக்கிறது என்று விளக்கினார்.

லஞ்சம், ஞாய தீர்ப்பு, சகுனம், தாழ்வு மனப்பானை பற்றி அவர் கூறிய உதாரணக் கதைகளைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்றிருந்தது.

கேள்வி நேரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பெரும்பாலும் கதைகளிலேயே பதில் கூறினார். ஒருவர் ஹாரி பார்ட்டர் கதைகளை முன்வைத்து கேட்டக் கேள்விக்கு, சுவாரஸ்யமான மாயக் கதை (பெருவிரல் குள்ளன் கதை) ஒன்றைக் கூறினார். நேரம் போவது தெரியாமல் கேட்டுக் கொண்டிருந்தோம். நேரம் 7 மணியைத் தாண்டிச் சென்றதனால் கூட்டம் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

சந்திப்பின் முடிவில் 'உன்னதம்' , 'அகநாழிகை' சிற்றிதழ்களை அறிமுகம் செய்தது மகிழ்ச்சியாய் இருந்தது. விஷ்ணு அசோகமித்ரனின் நாவலை எனக்காக வாங்கி வந்திருந்தான். அவனிடமிருந்து அதை வாங்கிக் கொண்டு திரும்புவதற்கு மனமில்லாமல் கி. ராவின் நினைவுகளுடன் வீடு திரும்பினேன்.

இதே சந்திப்பைப் பற்றிய இதர பதிவுகள்:

ரவிபிரகாஷ் - ராகு காலக் கூட்டம்!
கி.ராவுடன் 'கேணி’யில்...

பி.கு:-
1.இந்தப் பதிவை கி ரா-வின் இயல்பான மொழியில் பதிய வேண்டும் என்று தான் நினைத்தேன். அவருடைய மொழியை என்னை மறந்து கேட்டது என்னமோ உண்மைதான். ஆனால் எழுத வரவில்லை. அவர் பேசியதில் 5 சதவீதம் கூட இங்கு பதியவில்லை. அவர் பேசியதின் Outline -என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.
2. அனைவருடைய வசதிக்கும் ஏற்றவாறு, அடுத்த மாதம் முதல் கேணி இலக்கிய சந்திப்பு மாலை 3.30 மணிக்கு நடக்கும் என்று அறிவித்தார்கள்.