Wednesday, April 11, 2012

குளோரியானா - செல்வநாதன்

1947 -ல் இலங்கையில் பிறந்த குளோரியானா G செல்வநாதன் சர்வதேச அளவில் நடக்கும் உலகத் திரைப்பட விழாக்களின் ஒருங்கிணைப்பாளராக தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருப்பவர். தமிழ்நாடு உலகத் திரைப்பட விழாவின் நிரந்தர உறுப்பினராக 2004 ஆம் ஆண்டு முதல் நியமனம் செய்யப்பட்டார். 2008 ஆம் ஆண்டு துவங்கி பெர்லினில் நடக்கும் ஆசிய பசுஃபிக் திரைப்பட விழாவின் இயக்குனராக செயல்பட்டு வருகிறார். இந்தத் துறையில் ஆசிய அளவில் ஊக்கத்துடன் செயல்படும் முதல் பெண் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கேம்பிரிஜ் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலம் மற்றும் ஊடகவியல் சார்ந்து டாக்டர் பட்டம் பெற்றவர். குறும்படம் மற்றும் ஆவணப்படங்களின் தயாரிப்பாளர். மூன்று ஆவணப்படங்களை இயக்கி இருக்கிறார். வானொலி மற்றும் தொலைக் காட்சியில் நீண்டகாலம் நிருபராகப் பணியாற்றிய அனுபவம் இவருக்கு இருக்கிறது. “வேர்ல்ட் தமிழ் டெலிவிஷன்” என்ற தொலைகாட்சி சேனலை ஜெர்மனில் சொந்தமாக நடத்தி இருக்கிறார். பல்வேறு இதழ்களிலும் பணியாற்றியிருக்கிறார். இருபது வருடங்களுக்கும் மேலாக தொழிற்கல்வி நிறுவனங்கள், தொழிற் கூடங்கள் மற்றும் பள்ளிகளில் வெளிநாட்டவருக்கு ஆங்கில மொழியைப் பயிற்றுவித்தவர். “4th Dimension of love” என்ற ஆங்கில நாவலையும் எழுதி இருக்கிறார். கடந்த எட்டு வருடங்களாக செவன்த் சேனல் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து உலகத் திரைப்பட விழாவை சென்னையில் நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு சென்னை வந்திருந்தபோது அவருடன் சேர்ந்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. திரையிடலின் பகுதி நேர இடைவெளியில் நம்முடன் புன்னகைத்தவாறே பேசத் துவங்கினார்.

சினிமா துறைக்கு வந்ததைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?

எந்த வசதியும் இல்லாத இலங்கையின் சிறு கிராமத்தில் பிறந்தேன். அந்த சூழலில் ஹாலிவுட் எல்லாம் ஒரு கனவு தானே. ஐந்தாவது படிக்கும் போதே சினிமாவின் மீது எனக்கு அளவு கடந்த பைத்தியம். ஜெமினி கணேசனை எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அவரை நேரில் சந்தித்துப் பேச ஆசையாக இருந்தது. அது இயலாது என்பதால் ஒரு தபால் கடித்தத்தில் என்னுடைய விருப்பத்தைத் தெரியப்படுத்தி அஞ்சல் வில்லையை ஒட்டாமல், முகவரியை மட்டும் எழுதி தபால் பெட்டியில் போட்டுவிட்டேன்.

சிறிய கிராமம் என்பதால் எல்லோரும் தெரிந்தவர்களாகத் தானே இருப்பார்கள். தபால்காரருக்கு எங்கள் வீட்டில் உள்ள எல்லோரையும் நன்றாகத் தெரியும். எனவே என்னுடைய பெயரைப் பார்த்துவிட்டு, கடிதத்தை வீட்டிற்கு எடுத்து வந்து கொடுத்துவிட்டார். பிறகு வீட்டிலுள்ள எல்லோரும் அந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு “இங்க இருந்துட்டு ஹாலிவுட் போற கனவெல்லாம் கூட உனக்கு இருக்கும் போல” என்று என்னைக் கேலி கூட செய்திருக்கிறார்கள்.

அப்போதிலிருந்தே என்றாவது ஒருநாள் சினிமா சார்ந்த ஏதேனும் ஒரு துறையில் உயர் பதவியை வகிக்க வேண்டும் என்று உள்ளுக்குள் ஒரு வெறி இருந்தது.

உங்களுடைய ஆரம்பக் கல்வி கூட சினிமா சார்ந்துதான் இருந்ததா?

இலங்கையில் தான் பனிரண்டாம் வகுப்பு வரை படித்தேன். அதன் பிறகு PUC படிப்பதற்காக சென்னை வந்தேன். படிப்பில் தேறியவுடன் ரேடியோ சிலோனில் வேலை கிடைத்தது. சிறுவயதில் இசையைப் பயின்றிருந்ததால் பாடகியாகவும் சில நிகழ்ச்சிகள் செய்திருக்கிறேன். சிறிது காலத்தில் கல்யாணமும் நடந்துவிட்டது. ஆகவே அந்த வேலையை விட வேண்டி வந்தது. இரண்டு மகளும், ஒரு மகனும் பிறந்திருந்தார்கள். போர் நடந்து கொண்டிருந்ததால் இலங்கையை விட்டு வெளியேற வேண்டிய சூழல். என்னுடைய தோழி பெர்லினுக்கு வருமாறு அழைப்பு விடுத்தாள். ஆகவே அங்கு செல்லலாம் என்று தீர்மானித்தோம்.

ஜெர்மனியைப் பொறுத்த வரை கல்வித் தகுதி இருந்தாள் தான் கௌரவமாக வாழ இயலும். அதுவும் வெளிநாட்டவராக இருக்கும் பட்சத்தில் முதுநிலையோ அல்லது ஆராய்ச்சிப் படிப்போ இருந்தாள் மிகவும் நல்லது. அப்பொழுதுதான் உங்களுக்கான சரியான அங்கீகாரம் கிடைக்கும். எனவே கேம்பிரிஜ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து “Translations in the Media” என்ற தலைப்பில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டேன். அதன் பிறகு என்னுடைய வாழ்க்கை வேறு பாதையில் பயணிக்கத் துவங்கியது.

ஆரம்பத்தில் இருந்தே திரைப்பட விழாக்கள் சார்ந்துதான் இயங்குகிறீர்களா?

அப்படிச் சொல்ல இயலாது... என்றாலும் வானொலி மற்றும் காட்சி ஊடகம் சார்ந்த எல்லா நிலைகளிலும் பணியாற்றி இருக்கிறேன். ஏற்கனவே இலங்கை வானொலியில் பணியாற்றிய அனுபவம் இருந்ததால் டாக்டர் பட்டம் பெற்ற பின்பு ஜெர்மன் தொலைக்காட்சியில் வேலைக்குச் சேர்ந்துவிட்டேன். எவ்வளவு தான் படித்திருந்தாலும் அவையாவும் பிரதானம் இல்லை. அடிமட்ட வேலைகளையும் சேர்த்தே செய்ய வேண்டியிருக்கும். இருப்பினும் நம்பிக்கையை மட்டும் எந்த நிலையிலும் இழந்ததே இல்லை. ஏதேனும் ஒரு வகையில் ஊடகத்துடன் தொடர்புடைய வேலையைச் செய்ய வேண்டும் என்பதால் பல சிக்கல்களையும் எதிர்கொண்டு நின்றேன். BBC போன்ற பிரபல நிறுவனங்களுக்குக் கூட நிருபராகப் பணியாற்றி இருக்கிறேன். பெர்லின் திரைப்பட விழாவில் மொழி பெயர்ப்பாளராகவும், ஹாலிவுட் நட்சத்திரங்களை நேர்முகம் செய்தல், பத்திரிகையாளர் சந்திப்பு போன்றவற்றிலும் பங்கெடுக்கும் சூழல் அமைந்தது. அதுதான் திருப்பு முனையாக அமைந்தது. ஒரு நிலையில் திரும்பிப் பார்த்த பொழுது ஆசியாவில் இருந்து திரைப்பட ஒருங்கிணைப்பாளராக பங்கெடுக்கும் ஒரே பெண்ணாக நான் மட்டுமே இருந்தேன். ஆகவே பலருடைய கவனமும் என் மீது விழ ஆரம்பித்தது. முக்கியமான உலகத் திரைப்பட விழாக்களில் ஜூரியாகவும் பங்கெடுத்து இருக்கிறேன். அதன் மூலம் கிடைத்த தொடர்புகள் தான் இந்தத் துறையில் உத்வேகத்துடன் இயங்கக் காரணமாக அமைந்தது.

2004 -ஆம் ஆண்டு முதல் சென்னை திரைப்பட விழாவை செவன்த் சேனல் நிறுவனத்துடன் இணைந்து நடத்துகிறீர்கள் இல்லையா?

2003–ஆம் ஆண்டே செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் எண்ணைத் தொடர்பு கொண்டார். அந்த வருடம் என்னுடைய கணவர் இறந்துவிட்டதால் வர இயலவில்லை. ஆகவே அதற்கடுத்த ஆண்டிலிருந்து கடந்த எட்டு வருடங்களாக தொடர்ந்து நடத்திக்கொண்டு வருகிறோம். இங்கு திரையிடப்படும் திரைப்படங்களில் பணியாற்றிய கலைஞர்களை கௌரவிக்கும் விழாவை ஆண்டுதோறும் பெர்லினிலும் நடத்திக்கொண்டு வருகிறோம்.

மேற்கத்திய திரைப்படங்களை தமிழகத்தில் திரையிடுவதைப் போலவே தமிழர்களின் படைப்புகளுக்கான ஒரு பிரத்யோக விழாவை ஜெர்மனியில் எடுக்கும் எண்ணம் உங்களுக்குத் தோன்றியதுண்டா?

நிச்சயமாக இருக்கிறது. தமிழர்களின் குறும்படங்களை மட்டுமே திரையிடும் ஒரு திரைப்பட விழாவை பெர்லினில் நடத்தும் திட்டம் இருக்கிறது. அது சம்மந்தமாக சில நிறுவனங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். தமிழகத்திலிருந்தும் (6), இலங்கையிலிருந்தும் (6), உலகின் இதர பகுதிகளிலிருந்தும் (6) தமிழில் எடுக்கப்படும் குறும்படங்களுக்கான விழாவாக இதனை முன்னெடுக்க விரும்புகிறோம். 18 குறும்படங்கள் பங்குபெறும் மூன்று நாள் விழாவாக இதனைத் திட்டமிட்டு இருக்கிறோம். தொடரும் ஆண்டுகளில் எண்ணிக்கை கூடலாம்.

குறும்படங்களை “தமிழகம், இலங்கை, மலேசியா” என்று பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியம் என்ன?

தமிழகத்தையும், இலங்கையையும் நாம் சேர்த்து வைத்துப் பார்க்க முடியாது. இலங்கைத் தமிழர்களை பிரத்யேக கவனம் கொடுத்து உத்வேகப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறேன். தொழில் நுட்ப கூறுகளும், வசதி வாய்ப்புகளும் தமிழகத்தைக் காட்டிலும் ஈழத் தமிழர்களுக்குக் குறைவாகவே கிடைக்கிறது. அவர்களையும் அடையாளப்படுத்த வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது தானே. மற்றபடி பிரித்துப் பார்க்கிறேன் என்பது ஏற்புடைய கருத்து அல்ல.

நீங்கள் ஆங்கிலத்தில் எழுதிய “4th Dimension of love” என்ற நாவல் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்...

நீண்ட காலமாகவே நாவல் எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் 2005-ல் தான் அதற்கான தருணம் அமைந்தது. என்னுடைய வாழ்வில் நடந்த சம்பவங்களையே கொஞ்சம் வித்யாசமாக இதில் சொல்லி இருக்கிறேன். ஊடகத் துறையில் பெண்கள் பணியாற்றும் போது அவர்களுக்கு ஏற்படக்கூடிய இன்னல்களை இந்தப் படைப்பில் சொல்லி இருக்கிறேன். மீடியாவில் பணியாற்றும் பெண்களை சுலபத்தில் களங்கப் படுத்திவிடுவார்கள்.

BBC நிறுவனத்திற்காக நரசிம்மராவை பேட்டி எடுக்கச் சென்ற அனிதா பிரதாபனையே இதற்கு உதாரணமாகக் கூறலாம். “I know you all journalist are disgusting…“ என்று பொதுப்படையாக எல்லோரையும் சாடினார். ஒரு நாட்டின் உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவர் எப்படி அது போன்ற கருத்துக்களை வெளிப்படுத்தலாம். “ஏன் இப்படி நடக்கிறது?” என்பதை தான் இந்த நாவலில் வேறு விதமாகச் சொல்லி இருக்கிறேன்.

இந்த நாவல் திரைப்படமாக எடுக்கப்பட இருக்கிறதாமே?

ஆமாம். ஜெர்மன் குடியுரிமை பெற்றவர்களுக்கு ஒரு வசதி இருக்கிறது. 49% பங்குகளை ஜெர்மன் பட நிறுவனங்கள் கொடுக்கும். 51% பங்குகளை படம் எடுப்பவர்கள் கொடுக்க வேண்டும். படம் தோல்வி அடைந்தால் பணத்தை நாங்கள் திருப்பிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே தான் ஜெர்மன் நிறுவனங்களுடன் இணைந்து எடுக்கலாம் என்றிருக்கிறேன். ஒரு நிறுவனம் “சரி” என்று சொல்லி இருக்கிறார்கள். என்றாலும் கடைசி வரை எதையும் உறுதியாகச் சொல்ல இயலாது.

உங்களுடைய ஆவணப்பட அனுபவங்களைப் பற்றி சொல்லுங்களேன்?

இதுவரை மூன்று ஆவணப்படங்கள் எடுத்திருக்கிறேன். ஜோத்பூர் மகாராஜாவின் அரண்மனை சுவர்களில் ஓவியங்கள் இருக்கிறது. அதனைத் தீட்டியது போலிஷ் நாட்டு ஓவியர் ஸ்டீபன் நப்ளின். சுவரில் வரைந்த ஓவியங்கள் என்பதால் தனியே பிரித்தெடுக்க முடியாது. பழுதுபார்க்கும் நிபுணர்களும் இல்லாமல் போகவே அதனை ஆவணப்படுத்த மகாராஜா விரும்பி இருக்கிறார். எனவே அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மகாராஜாவின் நேர்முகம் கூட அந்தப் பதிவில் இருக்கிறது.

இரண்டாவதாக எடுத்த ஆவணப்படம் இந்தியருக்கும் (அப்பா), அசீரியருக்கும்* (அம்மா) பிறந்த பெண் குழந்தை பற்றியது. அவர்களிருவரும் ஈராக்கில் சந்தித்து திருமணம் செய்துகொள்கிறார்கள். அந்தப் பெண் குழந்தை தன்னுடைய தாயின் நூறு சொந்தங்களை வெவ்வேறு நாடுகளில் தேடிக் கண்டுபிடிக்கிறாள். அவள் எழுத்தாளரும் பாடகரும் ஆவார். பன்முக ஆளுமையான அவரைப் பற்றிய ஆவணப்படம் தான் அது. சிறந்த படத்திற்கான விருது கூட அதற்குக் கிடைத்தது.

பல் மருத்துவர் டாக்டர் பாலாஜி பற்றிய ஆவணப்படம் தான் மூன்றாவது. அவருடைய மருத்துவ முறைகள், அறுவைச் சிகிச்சைகள் போன்றவை அதில் இருக்கும்.

“World Tamil Television” பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?

ஏதாவது செய்யவேண்டும் என்று ஊக்கத்துடன் ஆரம்பித்த ஒன்று. சில சிக்கல்களால் அதனை ஆரம்ப கட்டத்திலேயே நிறுத்த வேண்டி வந்தது. காரணம், இதனை அரசியல் செய்தி சேனலாக நினைத்துவிட்டார்கள். எனவே தினந்தோறும் ஜேர்மனியின் செய்தித் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு ஒளிபரப்பும் நிகழ்ச்சி சார்ந்து உயர் அதிகாரி ஒருவருக்கு எல்லாவற்றையும் தெளிவுபடுத்த வேண்டும். இத்தனைக்கும் சேனலை நடத்துவதற்கான உரிமத்தை சட்ட முறைப்படி விண்ணப்பித்து தான் பெற்றிருந்தேன்.

“தொலைகாட்சியை நிறுத்துவதற்கான இலங்கை அரசின் கோரிக்கையை ஜெர்மனி அரசு நிராகரித்துவிட்டது” என்று என்னுடைய புகைப்படத்துடன் செய்தியை வெளியிட்டு விட்டார்கள். நாளிதழ்கள் தங்களது முதல் பக்கத்தில் அதனைப் பற்றி எழுதி பெரிது படுத்திவிட்டன. இரண்டு நாடுகளுக்கு இடையிலான உரசல் ஏற்பட இது காரணமாக அமைந்துவிட்டது. அதன் பிறகு என்னால் ஸ்ரீலங்கா செல்ல முடியாமல் போனது. மீறிச் சென்றால் இலங்கை அரசின் சிறையில் தான் என்னுடைய கடைசி காலத்தைக் கழிக்க வேண்டும். பிறந்த நாடுதான் எனக்கு விரோதமாகிவிட்டது. ஆனால் மற்ற எல்லா நாடுகளும் எனக்கு நட்பு நாடுகள் தான். “திரைப்பட விழாக்களுக்காக பிரான்ஸ், கனடா, நெதர்லாந்து, சுவிசர்லாந்து, டென்மார்க், இந்தியா போன்ற பல நாடுகளுக்கும் சென்று வருகிறேன். பிறந்த மண்ணைத் தவிர...” என்றவரின் கண்ணில் சோகம் இழையோடியது.

விருப்பமான துறையில் நீண்டகாலம் பணியாற்றி தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டிருந்தாலும். பிறந்த ஊரில் கால் பதிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கும் இருக்கும் தானே. அடுத்தடுத்த திரைப்படம் திரையிடும் நேரம் நெருங்கிவிட்டதால் நம்மிடம் விடைபெற்றுக் கொண்டு இருட்டறையை நோக்கி நடக்கத் துவங்கினார்.

*அசீரியன் - ரஷ்யாவிற்கும் இராக்கிற்கும் இடையிலுள்ள ஒரு பகுதியில் வாழ்ந்த இனம்.

நன்றி: பண்புடன் இணைய இதழ் (www.panbudan.com)