Thursday, June 21, 2012

ஆள காணமே மச்சி

ஒவ்வொரு வாரமும் ஞாயிறு மதியம் அந்த வகுப்பிற்குச் செல்லக் கட்டணம் கட்டியிருந்தேன். வகுப்பு நன்றாகச் சென்று கொண்டிருந்தது. ஒருவன் இடையில் வந்து சேர்ந்தான். முதல் நாள் வந்ததும் ஓர் ஓரத்தில் சென்று அமர்ந்தான். அமைதியான பையன் என்று நினைத்துக் கொண்டேன். ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொள்ள ஏற்ற தோற்றம் அவனுக்கு. குள்ளமாகவும், அளவெடுத்துச் செதுக்கிய உடல்வாகுடனும் மங்கோலியர்களைப் பிரதிபலிப்பது போல அழகாக இருப்பான். குழந்தையின் வெகுளித்தனம் அவனுடைய முகத்தில் வெளிப்படும். இரண்டு வாரங்கள் சென்றது. சுருட்டி வைத்திருந்த ஆஞ்சநேயர் வாலை அவிழ்த்து விட்டான். அப்பப்பா ஊமைக் குசும்பு என்பார்களே அது அவன் தான்.

தெலுங்கு பிராமின் என்பதால் பல தமிழ் வார்த்தைகள் அழுந்தியும், சுழலும் நாக்கிலிருந்தும் வெளிப்படும். அவன் “அண்ணா“ என்று அழைப்பதே ஒரு விதமாக இருக்கும். சில சமயங்களில் சொல்ல வரும் விஷயத்தை நடிகர் ரஜினியின் குரலில் வெளிப்படுத்துவான். “டேய்... அவன்ல்லாம் ஒரு ஆலுன்னு அவன் குரலில் பேசுறியே“ என்று சீண்டுவேன். “தலிவரப் பத்தி உனக்கு இன்னான்னா தெரியும்“ என்று உரிமையுடன் சண்டைக்கு வருவான். குடும்ப உறுப்பினர்களைப் பற்றித் தரக்குறைவாக பேசினால் கூட அப்படி ஒரு கோவம் ரஜினி ரசிகர்களுக்கு வருமா என்பது சந்தேகமே. கார்த்தியின் அத்தை வீணை டீச்சர் என்பதால் இசையும் ஓரளவிற்குப் பரிட்சயம். அல்லது கேள்வி ஞானமாகக் கூட இருக்கலாம். காதிற்கு இனிமையாகப் பாடுவான். சில ஸ்லோகங்கள் கூட ரசிக்கும்படி ஏற்ற இறக்கத்துடன் கார்த்தி சொல்லக் கேட்டதுண்டு. பொறாமையாகக் கூட இருக்கும்.

பாடம் நடக்கும்போது, சில வார்த்தைகளைக் கேலி பேசி என்னைச் சிரிக்க வைப்பான்.உதாரணமா, 'குசுரி' என்றால் மருந்து என்று பொருள்படும் ஜப்பானிய வார்த்தை. நேட்டிவ் ஜேப்பநிஸ் அந்த வார்த்தையைச் சொல்லி விளக்கும் பொழுது, அவர்களுக்குத் தெரியாமல் என் காதில் கேட்கும்படி 'இன்னா ரீ?' என்று கேட்பான். 'எனக்குத் தெரியாது போடா...!' என்பேன்.

இது கூட தெரியாதா 'குசு... குசு...குசு... குசுரீ' என்பான். அதைக்கேட்டு கொல்லென்று சிரிப்பேன். சென்செய்(ஆசிரியர்) என்னைப் பார்த்து எச்சரித்துவிட்டு பாடத்தில் கவனம் செலுத்துவார். இந்த மாதிரி வார்த்தைகள் எல்லா மொழியிலும் இருக்கிறது. “என்னோட தாய்மொழி தெலுங்கில் கூட இருக்கு. ஆமா “பூ“-வுக்கு தெலுங்குல என்ன வார்த்தைத் தெரியுமா?“ என்பான். “டேய் தம்பி... நானும் ஆந்திரா பார்டர் தான். கொஞ்சம் மூடுறியா?“ என்பேன்.

“அண்ணா... ஆண்டவன் ஓட்டைன்னு எதுக்கு வச்சிருக்கான். தொறந்து இருக்கணும்னு தானே? அத எதுக்கு மூடச் சொல்றிங்க.“ என்பான்.

“இந்த மாதிரி எங்கடா பேசக் கத்துக்குன?“

“அது என்ன மாயம்னு தெரியல? மந்திரம்னு தெரியல மச்சி... உன்ன பார்த்தா மட்டும் அருவி மாதிரி கொட்டுது மச்சி“ என்பான் ரஜினியின் குரலில்.

“என்னது மச்சியா?“

“ஆமாண்ணா...“ என்பான் சாதாரண குரலில்.

ஒவ்வொரு வாரமும் இதுபோல குண்டக்க மண்டக்க பேசியே விடுமுறை நாட்களை இனிமையாக்கிக் கொண்டிருந்தான். JLPT தேர்வுக்கான நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்தன. “இங்கப் பாரு கார்த்தி, ஜப்பானிய மொழிய கத்துக்குனே ஆகணும்னு நான் இங்க வரல. எனக்குத் தேவ ஒரு அனுபவம். அதுக்காகத் தான் வரேன். ஆனா நீ அப்படி இல்ல...! மரியாதையா கவனி, இல்ல சாக அடிட்சிடுவேன்“ என்று திட்டும்பொழுது, “இங்க பாரு மச்சி லைஃப்புன்னா ஜாலியா இருக்கணும்... சிஸ்டமாட்டிக்கா இருக்கக் கூடாது... பீ கூல்...“ என்பான்.

குளிர் கால ஞாயிற்றுக் கிழமையின் காலை நேரத்தில் மீனாட்சி கல்லூரியில் எங்களுக்கான தேர்வு நடத்த ஏற்பாடாகியிருந்தது. என்னுடைய வகுப்பில் மொத்தம் பனிரெண்டு பேர். பரீட்சை எழுத வந்திருந்தவர்கள் கிட்டத்தட்ட ஆயிரம் நபர்கள். ஓர் ஓரத்தில் அமர்ந்து கார்த்தி வேகம் வேகமாகப் படித்துக் கொண்டிருந்தான். அருகில் சென்று நின்றேன். என்னைப் பார்த்து சிரித்துவிட்டு மேலும் படித்துக் கொண்டிருந்தான். வகுப்புத் தோழர்களும் அவனுடன் இருந்தனர். அவர்களிடமிருந்து விலகி காலாற நடக்கத் துவங்கினேன். பத்து வயது முதல் நாற்பது வயது வரையுள்ள பலரும் படித்துக் கொண்டிருந்தனர். தேர்வு முடிந்து வெளியில் வரும்போதே தெரிந்துவிட்டது நாங்கள் “அவுட்“ என்று. கார்த்திக்கு சரியாக எழுதாதது கொஞ்சம் வருத்தம் தான்.

இது போன்ற உலக மொழிகளைப் படிக்க பணம் கட்டினால், சிரமப்பட்டு படித்து அதன் மூலம் வேலை வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வது புத்திசாலிக்கு அழகு. “சாலித் தனங்கள் கூறு என்ன விலை“ என்று கேட்பவன் ஆயிற்றே. இணையம் தொடர்பாக பார்த்துக் கொண்டிருந்த வேலையை நான் விட்டுவிட்டேன். சென்னைப் புறநகரில் இருக்கும் நோக்கியா கம்பெனியில் கார்த்தி வேலைக்குச் சேர்ந்தான். பெரும்பாலும் அவனுக்கு இரவில் தான் வேலை. இருவரும் அதன்பிறகு பேசிக்கொள்வது வெகுவாகக் குறைந்துவிட்டது. எப்பொழுதாவது செல்பேசியில் அழைப்பேன். “தூங்குறேண்ணா... எழுந்ததும் கூப்பிடுறேண்ணா“ என்பான் உளறலில். “சரி கண்ணா... Have a nice dreams“ என்பேன். ஞாபகம் இருந்தால் எழுந்ததும் செல்பேசியில் அழைப்பான். “சொல்லு மச்சி“ என்று ஆரம்பிப்பான்.

“என்ன தொற சந்தோஷமா இருக்கீங்க“.

“Bcoz... Bcoz... I had a nice dream“ என்பான்.

கடந்த ஒருவருடத்திற்கு முன்பு அவனிடம் பேசியது. அதன்பிறகு கார்த்தியத் தொடர்பு கொள்ள முடியாமலே போனது. அவனே அழைக்கட்டும் என வெறுத்துப் போய் விட்டுவிட்டேன். என்னுடைய இந்த செயல் எந்த ஒரு பெரிய குற்றத்திற்கும் நிகரானது என்ற குற்ற உணர்ச்சியை எழுத்தாளர் மதுமிதா லைக் செய்திருந்த இந்த புகைப்படம் ஏற்படுத்திவிட்டது. (புற்றுநோய் முற்றிய நிலையிலும் அவனுடைய முகத்தைப் பாருங்கள். எவ்வளவு சந்தோசம்... வதக்கி எடுக்கும் வலியை அவன் எங்கு புதைத்திருக்கக் கூடும்.)ரஜினியை பலமுறை கடுமையாக விமர்சித்துப் பேசியதுண்டு. சமூக இணையத் தளங்களில் அவருக்கு எதிரான பல விஷயங்களைப் பகிர்ந்ததுண்டு. என்றாலும் எளிமையுடனும், இரக்கத்துடனும் இருப்பதால் தான் ரசிகர்கள் அவரைக் கொண்டாடுகிறார்கள் போல. உயிருக்குப் போராடிய தன்னுடைய ரசிகனைப் பார்க்க நேரம் கொடுத்து, கட்டித் தழுவி அவனை சந்தோஷப்படுத்தி இருக்கிறாரே! வறண்ட நிலத்தின் மண் தரையில் விழுந்த மேகத் துளியாக வாழ்வின் விளிம்பில் இருந்த சிறுவனின் ஆழ்மனம் குளிர்ந்திருக்கும் இல்லையா! என்றாவது ரஜினியைப் பார்க்கும் சந்தர்ப்பம் நேர்ந்தால் இந்த ஒரு செயலுக்காக ஆரத் தழுவி நன்றி சொல்வேன்.

“ரஜினியாவது...! உன்னைப் பார்ப்பதாவது?“ என்கிறீர்களா...

ரஜினி மாறுவேடத்தில் கூட்டத்தோடு கூட்டமாக எளிய மனிதராகச் சுற்றிக் கொண்டிருப்பாராம். நான் வேடமேற்காமல் சுற்றிக் கொண்டிருக்கிறேன். பெரிய முள்ளும், சிறிய முள்ளும் ஒரு புள்ளியில் சந்தித்துத்தானே ஆகவேண்டும். அதுதானே காலத்தின் கட்டாயமும் கூட. அந்த நடிப்புக் கலைஞனை ஒருநாள் நிஜத்தில் சந்தித்து கைகுலுக்குவேன். நன்றி சொல்வேன்...

கார்த்தி புற்று நோயால் போராடி உயிர் விட்டிருக்கிறான். அவனுக்கு குடலில் கேன்சர் இருந்ததாம். கவனிக்காமல் விட்டிருக்கிறார்கள். இரவு வேலை செய்ததால் அடிக்கடி வாயிற்று வலி மற்றும் ஜீரணக் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. சாதாரண சுகமின்மை என்று தான் அவனுடைய பெற்றோர்கள் நினைத்திருக்கிறார்கள். கேன்சர் என்று முற்றிய நிலையில் தான் உணர்ந்திருக்கிறார்கள்.

இனி மருத்துவம் பார்த்து பிரயோஜனம் இல்லை என்ற நிலையில், ஆந்திராவில் இருக்கும் சொந்த கிராமத்திற்கு அழைத்துச் சென்று கவனித்திருக்கிறார்கள். ஒரு நாள் நெஞ்சை அடைப்பது போல் இருக்கிறது என்று மார்பைப் பிடித்துக் கொண்டு அம்மாவின் தோலில் சாய்ந்திருக்கிறான். அவசர சிகிச்சை அளிக்க மருத்துவமனை நோக்கி ஓடியிருக்கிறார்கள். போகும் வழியிலேயே அவன் உயிர் பிரிந்திருக்கிறது. ஆகக்கூடி இருபத்தி ஐந்து வயது இருக்காது. எனக்குத் தெரிந்து எந்தக் கெட்டப் பழக்கமும் அவனுக்கு இல்லை. என்றாலும் விதி வலியது தானே!

“இப்படி அல்பாயுசுல போயிட்டியேடா கார்த்தி!?“ என்று அவனிடம் கேட்டால், அதற்கும் அவனிடம் ஒரு பதில் இருக்கும்.

இனி அது “மௌனம்“... மரணித்த மௌனம்...

Thursday, June 7, 2012

லஞ்ச காக்கிகள் – நக்கீரன்

நடவடிக்கை எடுக்காத உள்துறை – ஆதாரத்துடன் அம்பலம்

சென்னையில் லஞ்ச ஒழிப்புத் துறையின் அதிரடி ரெய்டுகளில் கையும் களவுமாக சிக்கிய... காவல்துறை அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையும்... உள்துறை அமைச்சகமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது ஆதாரத்துடன் அம்பலமாகியிருக்கிறது. எந்தெந்த போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும்போது எந்தெந்த போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் வாங்கி பிடிபட்டிருக்கிறார்கள்? எவ்வளவு தொகை லஞ்சம் வாங்கும்போது கைப்பற்றப்பட்டது? என்று ஆராய்ந்தபோது.

அந்த லிஸ்டில் உள்ள பலரும் தற்போது உயர் போலீஸ் அதிகாரிகளாக வலம் வருகிறார்கள் என்ற ஷாக்கை உண்டாக்கியது. இப்படி லஞ்சப் பேய்களாக உலா வந்த காக்கிகளின் விபரங்களை தகவல் பெரும் உரிமை சட்டத்தின் (ஆர்.டி.ஐ) மூலம் பெறுவதற்குள் பட்ட பாடுகளை வேதனையுடன் விவரிக்கிறார் சமூக ஆர்வலரும் பொதுநல வழக்குகளை தொடுப்பவருமான பிரபல வழக்கறிஞர் கார்த்திகேயன்.

எந்தப் பிரச்சனையானாலும் ஏழை எளிய மக்கள் புகார் கொடுக்கப் போவது போலீஸ் ஸ்டேஷன்தான். ஆனா, குற்றம் செஞ்சவனை தண்டிக்காமல் காப்பாற்றுவது... அப்பாவிகள் மேலே பொய்க்கேஸ் போட்டு தண்டிக்கிறது இதுக்கெல்லாம் மிக முக்கிய காரணமா இருக்கிறது லஞ்சம்தான். இப்படி அப்பாவிகளுக்கு துரோகம் செய்யும் காக்கிகள்... லஞ்ச ஒழிப்புத்துறையின் மூலம் கையும் களவுமாக பிடிபட்டு என்ன தண்டனைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்? என்பதை தெரிஞ்சிக்கிறதுக்காக மூன்று வருஷத்துக்கு முன்னால 2008 டிசம்பர் 30-ந்தேதி தமிழக உள்துறைக்கு ஆர் டி ஐ மூலம் தகவல் கேட்டு அனுப்பியிருந்தேன்.

அதாவது... தமிழக காவல்துறைக்குட் பட்ட சென்னை மாநகரத்தில் 2003-ல் இருந்து எத்தனை காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையால் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது? எத்தனை காவல்துறை அதிகாரிகள் ரெய்டில் பிடிபட்டார்கள்? அவர்களின் பெயர், பதவி மற்றும் முகவரி என்ன? எவ்வளவு தொகை கைப்பற்றப்பட்டது? அவர்கள் மீது துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? அதன் விசாரணை அறிக்கை நகல்? எத்தனை போலீஸ் அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? அந்த வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? உள்ளிட்ட கேள்விகளைத்தான் அனுப்பியிருந்தேன். ரெண்டு மாசத்துக்கப்புறம் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர்கிட்டயிருந்து 2009 பிப்ரவரி 3-ந் தேதி எனக்கு ஒரு கடிதம் வந்தது.

அதில், தகவல் பெரும் உரிமை சட்டத்தை அமல்படுத்தும் துறையான தமிழக அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறையின் 2008 ஆகஸ்டு 26-ந் தேதி வெளியிடப்பட்ட (G.O-158) அரசாணைப்படி... லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் பெரும் உரிமை சட்டத்திலிருந்து விளக்கு அளிக்கப்பட்டுள்ளதால்... நீங்கள் கேட்டனுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலாது என்றிருந்தது.

தகவல் பெரும் உரிமை சட்டப்படி... மனித உரிமை மீறல்கள் அல்லது ஊழல் சம்பந்தமாக எந்தத் துறையில் தகவல் கேட்டாலும் தகவல் அளிக்க வேண்டும்னு இருக்கும்போது லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் பெரும் உரிமைச் சட்டம் பொருந்தாதுன்னு அரசாணை வெளியிட்டது தவறாச்சேன்னு மறுநாளே... திரும்பவும் அதே கேள்விகளை முன்வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை தலைவருக்கு ஆர.டி.ஐ மூலம் முதல் மேல்முறையீடு செய்தேன்.

ஒரு மாசத்துக்கப்புறம் அதாவது 2009 மார்ச் 3-ந் தேதி ஏற்கனவே அனுப்பின பதிலையே திருப்பி அனுப்பியிருந்தாங்க. நானும் விடாம... 2009 ஜூன் 4-ந் தேதி மாநில தகவல் ஆணையத்துக்கு இரண்டாவது மேல்முறையீடு செய்தேன். லஞ்ச ஒழிப்புத்துறைக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது மாநில தகவல் ஆணையம். 2009 அக்டோபர் 14-ந் தேதி தமிழக அரசின் நிர்வாக சீர்திருத்தத் துரையின் அரசாணை தகவல்பெரும் உரிமை சட்டத்திற்கு முரணானது. அதனால், இந்த உத்தரவு கொடுக்கப்பட்ட இரண்டு வாரத்துக்குள் மனுதாரர் கார்த்திகேயன் கேட்ட கேள்விகளுக்கு முழுமையான தகவல்களை இலவசமாக தரவேண்டும்னு தகவல் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், அப்படியும் அந்தத் தகவல்களை தராமல், என்மீதும் தகவல் ஆணையம் மீதும் வழக்கு தொடுத்தது லஞ்ச ஒழிப்புத்துறை.

ஆனால் 12-01-2010 அன்று நீதியரசர் சந்துரு அவர்கள் இந்த வழக்கை தள்ளுபடி செய்துட்டாரு. இந்த உத்தரவுக்கு எதிராக மறுபடியும் சென்னை உயர்நீதி மன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்ய... அந்த மனுவையும் நீதியரசர் முருகேசன் மற்றும் சசீதரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தள்ளுபடி செய்துவிட்டது. ஆனா, அதுக்கப்புறமும் கூட தகவல்களை தராம சைலண்டாக இருக்குதே லஞ்ச ஒழிப்புத்துறை... அப்படியென்ன ரகசியம் இருக்கிறது என்று யோசித்துவிட்டு ‘நீதிமன்றம் உத்தரவிட்டபிறகும் தகவல் தராமல் காலதாமதம் செய்வதால் லஞ்ச ஒழிப்புத்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன்’னு நோட்டீஸ் அனுப்பினேன். பிறகு உச்சநீதிமன்றமும் போன லஞ்ச ஒழிப்புத்துறையின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது உச்சநீதிமன்றம். ஆனால் 2012 மே 25-ந் தேதிதான் நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் வந்துதுங்க” என்று பெருமூச்சுவிடும் வழக்கறிஞர் கார்த்திகேயன், “இப்போதான் தெரியுது... ஏன் நான் கேட்ட கேள்விகளுக்கு மூணு வருஷம் கழிச்சு பதில் அனுப்பியிருக்கு லஞ்ச ஒழிப்புத்துறைன்னு. சென்னையில் லஞ்சம வாங்கும்போது பிடிபட்ட காவல்துறை அதிகாரிகள் யார் மேலையுமே ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழோ, துறை ரீதியான நடவடிக்கையோ எடுக்கப்படவே இல்லைன்னு. மேலும், குறைந்த பட்சம் தற்காலிக பணியிடை நீக்கம் கூட செய்யப்படவில்லை என்பதுதான் வேதனை. மேலும், சட்டம் ஒழுங்கு, க்ரைம் போலீஸ் அதிகாரிகள் யார், யார் லஞ்சம வாங்கிச் சிக்கினார்கள், அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற தகவல் தராமல் ரகசியமாகவே வைத்திருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.

இப்படி இருந்தா... லஞ்சம வாங்குற அதிகாரிகளுக்கு எப்படி பயம் வரும்? லஞ்ச ஊழல் எப்படி ஒழியும்? லஞ்சம வாங்குற அதிகாரிகளை ஒரு அரசாங்கமே காப்பாற்றுவதற்கு என்ன காரணம்? சென்னையில் மட்டுமே இப்படின்னா தமிழ்நாடு முழுக்க பிடிபட்ட காவல்துறை அதிகாரிகள் யார் யார்? அவங்க மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கு? என்பது பெரிய கேள்விக்குறியை உருவாக்குது? என்கிறார் வேதனையுடன்.

நிருபர்: ம. மனோ-
நன்றி: நக்கீரன் இதழ் (2012 ஜுன் 06-08)