Tuesday, August 5, 2014

சக பயணியின் சிரிப்பு

சென்னைக்கு அவசரமாகச் செல்ல வேண்டிய சூழல். போகும் வழியில் உ. நா. அரசு கல்லூரித் தமிழ்த்துறை முதுநிலை மாணவரிடம் கொடுத்திருந்த இந்துகோபன் எழுதி, குளச்சல் மு யூசுப் மொழியாக்கம் செய்திருந்த “திருடன் மணியன்பிள்ளை” புத்தகத்தை வாங்கலாம் என்று சென்றிருந்தேன். கல்லூரியின் நுழைவாயில் கேட்டை இழுத்து மூடியிருந்தார்கள். ஏராளமான போலீஸ் பாதுகாப்பும் இருந்தது. காவலரிடம் சொன்னேன்:

“பாருங்க... என்னோட ஒரு புத்தகம் உள்ள இருக்குற மாணவரிடம் இருக்குது...! வாங்கிட்டுப் போகணும்...”

“அதெல்லாம் உள்ள விட முடியாதுங்க.” என்றார்.

“என்னங்க விஷயம்? ஏதாச்சும் பிரச்சனையா?” என்றேன்.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல... போயிட்டு ஒருவாரம் கழிச்சி வாங்க.” என்றார். அதே கல்லூரியில் படிக்கும் முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்களும் வெளியில் காத்திருந்தனர்.

“என்னப்பா விஷயம்...?” என்றேன்.

“காலேஜ் அட்மிஷன் பிரச்சனைங்க அண்ணா... லூசுப் பசங்க காலேஜ் படிக்கிற எங்களையும் உள்ளே விட மாட்டேன்றாங்க.” என்றான்.

நல்லக் கதையாகத் தான் இருக்குது என்று நினைத்துக் கொண்டு முதுநிலை மாணவரை செல்பேசியில் அழைத்தேன். அவரும் நுழைவாயிலுக்கு வந்துசேர்ந்தார். நண்பரின் கையிலிருந்த “திருடன் மணியன்பிள்ளை” என்ற புத்தகத்தின் முன்னட்டையைப் பார்த்த போலீஸ்காரர்கள் வாயைப் பிளந்துகொண்டு எங்களிருவரையும் நோட்டம் விட்டார்கள். போலீஸ்காரகள் அப்படிப் பார்த்தது எனக்கு ஜாலியாக இருந்தது. “ஒரு நிமிஷம் உங்க காதைக் கொடுங்களேன்” என்றார் முதுநிலை மாணவர். ஏதோ ரகசியம் சொல்வதுபோலக் கூறினார்:

“சில எடங்கள்ல செக்ஸ் படம் பார்த்தா மாதிரி பீலிங் இருந்துச்சி’ண்ணா இந்த புக்ல.”

“அடச் சீ... நாசமத்துப் போறவனே...!” என்றேன். இதற்கிடையில் என் கைக்கு மாறியிருந்த புத்தகத்தைப் பிடுங்கியவாறு ஒரு தோழர் கேட்டார்:

“இது என்ன புக்? நீங்க என்ன பண்றீங்க?”

“இது திருட்டுப் புத்தகம். நான் ப்ரீ லான்ஸ் ஜர்னலிஸ்ட். ஆமா... என்னை கேள்வி கேக்குறீங்களே... நீங்க யாரு?”

“நான் தமிழ்ல பிஎச்டி முடிச்சி இருக்கேன். வேலைக்காக ரெசியூம் கொடுக்கலாம்னு வந்தேன். உள்ளே விட மாட்டேன்றாங்க...!” என்றார்.

“அட நாசமத்துப் போறவங்களா...! காலேஜ்ல படிக்க அப்ளிகேஷன் போட்றவங்களையும் உள்ள விட மாட்டிங்க. வேலை கேட்டு வறவங்களையும் விட மாட்டிங்க. இங்கியே படிக்கிற பசங்களையும் உள்ள விட மாட்டிங்க. என்னை மாதிரிப் பொறுக்கித் தனமாகச் சுற்றுகிறவர்களையும் அனுமதிக்க மாட்டிங்க. நல்லா இருங்கடே...! இந்த காலேஜக் கட்ட இடம் கொடுத்தவரே எங்க தூரத்துச் சொந்தம் தான். வாழ்ந்து கெட்டவங்களுக்கு இது தாண்டா மரியாத” என்று அழாதக் குறையாக சென்னைக்குக் கிளம்பினேன்.

பீச் ஸ்டேஷன் செல்வதற்காக பூங்கா ரயில் நிலையத்தில் காத்திருந்தேன். என்னருகில் முதியவர் ஒருவர் உட்கார்ந்திருந்தார். நான்கு பேர் ஒரு ஸ்ட்ரெக்ச்சரில் பிணத்தைக் கருப்பு பாலித்தீன் கவரால் சுருட்டியவாறு பொட்டலம் கட்டிச் சுமந்துகொண்டு வந்தனர். சரியாக எங்களது இருக்கைக்குப் பின்னர் பிணத்தை வைத்துவிட்டுக் குமட்டுவது போன்ற உடல்மொழியை வெளிப்படுத்தி - வாந்தி எடுக்காத குறையாக தலையில் கையை வைத்துக்கொண்டு இங்குமங்கும் நடந்தனர். பிணத்தைச் சுமந்தவர்களில் மூன்று முதியவர்கள், ஒருவன் மட்டும் முப்பது வயதுக்குள் இருப்பவன்.

நாங்கள் அமர்ந்திருந்த இருக்கையின் அருகில் அந்த இளைஞன் வந்து அமர்வதற்கு இடம் கேட்டான். சாராய வாடையும், ஏதோ அழுகியது போன்ற சாக்கடை நாற்றமும் அவன் மீது வீசியது. போலீசார் தூரத்தில் நின்றுகொண்டிருந்தனர். உடனே நான் எழுந்துகொண்டு அவனிடம் கேள்வி கேட்டேன்:

“அச்சச்சோ... செத்துப் போனவரு வயசானவரா இளைஞரா...?”

என்னுடைய கேள்வியைக் காதில் வாங்காமல் “ஐயோ... நான் எப்படி சாப்புடுவேன்... என்னால நாத்தம் தாங்க முடியலையே...” என்று புலம்பினான். நான் அருகில் இருந்த பிணத்தைச் சுமந்து வந்த வயதானவரிடம் நகர்ந்தேன். அவரிடம் கேட்டேன்:

“அச்சச்சோ... செத்துப் போனவரு வயசானவரா இளைஞரா...?”

“யாருக்குத் தெரியும்... செத்து நாலுநாள் இருக்கும் போல... சாக்கடைத் தண்ணியிலையே இருந்திருக்குறான். இந்தப் பொணம் - கூவம் நாத்தம்... கூ( ) நாத்தம் அடிக்குதுடா சாமி... எவ பெத்த புள்ளன்னு தெரியலையே...” என்றார்.

தவித்துக் கொண்டிருந்த இளைஞனுக்குத் “தண்ணி வேணுமா...!” என்றார், ஆரம்பத்தில் என்னருகில் ரயிலுக்காகக் காத்திருந்த சக வயோதிகப் பயணி. “கொஞ்சம் இருந்தா கொடுங்க ஐயா...” என்றான் குமட்டலில் தவித்தவன்.

மஞ்சள் நிறத் தண்ணீர் பாட்டிலை இளைஞனிடம் நீட்டினார் சக பயணி. கொஞ்சம் போல வாயில் தண்ணீரை ஊற்றிக்கொண்டு, ஒரு மிடறுக்கு மேல் விழுங்க முடியாமல் தண்ணீர் பாட்டிலைத் திருப்பிக் கொடுத்தான் பிணத்தைச் சுமந்து வந்த இளைஞன்.

உடைந்த ஆங்கிலத்தில் நயமாக சக பயணியிடம் மிதமாகக் குரலில் கூறினேன்: “It’s not hygienic… You first throw it away” “You wanna me to make this guy to feel bad. I will not…” என்றவாறு மஞ்சள் நிறத் தண்ணீர் பாட்டிலின் மூடியைத் திருகி பைக்குள் வைத்துக்கொண்டார்.

“Oh no… I never meant like that… He touched a decomposed dead body without a proper hand GLOUZ I suppose. You please don’t misunderstand me.” என்று சால்ஜாப்புக் கூறினேன்.

சக பயணி லேசாகச் சிரித்தார். எனக்கு அவரைப் பார்த்துச் சிரிக்கத் தோன்றவில்லை. நம்மைக் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கும் மனிதர்களைப் பார்த்து எப்படிச் சிரிப்பது?. எனினும், இந்த மனிதர் மிகமிக நல்ல மனிதர். இதுபோன்ற மனிதர்கள் நீண்டநாள் ஜீவித்திருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். எனினும், என் போன்று முகம் சுளிக்கும் மனிதர்கள் தானே உலகமெல்லாம் பல்கிப்பெருகி முளைத்திருக்கிறார்கள். கடற்கரை ரயில் நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்து எக்மோர் சென்று, வேலைகளையெல்லாம் முடித்துக் கொண்டு – அண்ணா சாலையிலுள்ள சாகித்ய அகாடமிக்குச் செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன். பன்னிரண்டாவது படிக்கும் அடையாள அட்டையைக் கழுத்தில் சுமந்தவாறு மாணவர்கள் நான்கு பேர் பேசிக் கொண்டிருந்தனர். நல்ல ஆங்கிலப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள். ஒவ்வொரு வாக்கியத்தை ஆரம்பிக்கும்போதும் “ங்கோத்தா” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர். நடுநடுவில் “பாடு, கூ.., சூ... பூ...” போன்ற வார்த்தைகளுக்குப் பஞ்சமில்லை. பக்கத்தில் என் போன்று பலரும் நின்று கொண்டிருந்தனர். எங்களை ஒரு பொருட்டாகவே அவர்கள் கருதவில்லை. தமிழிலுள்ள கெட்ட வார்த்தைகளைச் சரளமாக மாணவர்கள் பேசியது மிகுந்த சந்தோஷமாக இருந்தது. எனினும் அவர்களை டெஸ்ட் செய்தேன்.

“தம்பி... எஸ்.இ.ஐ.டி போகணும்... எந்த பஸ் போகும்?”

“23C-ல போகுங்க அண்ணா... அந்த பஸ் தான் போகும்...” என்று தன்மையான, மரியாதையான பதிலை நாகரீகமாகச் சொல்லிவிட்டு – அவர்களது உலகில் மீண்டும் ஐக்கியமாகினர். சாகித்ய அகாடமியிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்தேன். பழைய கட்டிடத்தினுள் நுழைந்து புறநகர் ரயில் நிலையத்தை அடைய நினைத்து உள்ளே சென்றேன். துப்பாக்கியை ஏந்திய ஐம்பதுக்கும் மேற்பட்ட போலீசார் காவலுக்கு நின்றிருந்தனர்.

“ஒருக்கால் எவனாவது பாம் வச்சி வெடிக்கிறதுக்கு இருக்குதோ” என்று நினைத்துக் கொண்டேன். பயணப் பொதிகள் குவியலாகக் கிடக்க, அதைச் சுற்றிலும் சில நபர்கள் அமர்ந்திருந்தனர். ஒரு சிலர் உணவுப் பொட்டலத்தைப் பிரித்து வைத்துக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். சில நிமிடங்கள் அவர்களை நோட்டம் விட்டேன். அவர்களில் ஒருவர் கூட சிரிப்பதுபோலத் தெரியவில்லை. எனக்கோ ஒன்றும் புரியவில்லை!. போலீசாரிடம் விசாரித்தால் கையிலுள்ள மரக்கொம்பாலும், ஸ்டீல் குச்சியாலும் பின்புறத்தில் ஒன்று வைப்பார்கள். மெல்ல நகர்ந்து புத்தகக் கடையின் அருகிலிருந்த ஒருவரிடம் விசாரித்தேன்.

“எதுக்கு இவ்வளோ போலீஸ் இருக்குறாங்க? இவங்க எல்லாரும் யாரு?”

“ஏதோ அகதிகள்னு சொல்றாங்க... எங்க போறாங்கன்னு தெரியல” என்றார்.

“ஓ... சரி சரி...” என்று ரயிலைப் பிடிக்க ஓடினேன். ஒரு வேலை எக்மோர் புத்த விகாரத்திற்கு வந்திருந்த சிங்களப் பயணிகளாகவும் இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். “அகதிகள்” என்ற வார்த்தையைக் கேட்டதும் தான் நாடே “இந்தியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தை மூட வேண்டும்” என்று கோஷம் எழுப்புவது ஞாபகத்திற்கு வந்தது. நான் சிட்டுபோலப் பறந்து ரயிலைப் பிடிக்க ஓடினேன். பயணத்தில் இதெல்லாம் நமக்கொரு வேடிக்கை. “பிறப்பது, சாப்பிடுவது, வளர்வது, படிப்பது, வேலைக்குச் செல்வது, போக்கிடம் தெரியாமல் உட்கார்ந்திருப்பது, மரணிப்பது” – இதுபோலத்தான் எல்லோரது வாழ்க்கையும் நகர்ந்து கொண்டிருகிறது. இதில் சில கைகுளுக்கல்களும், புன்னகைப் பரிமாற்றங்களும், உரையாடல்களும், உச்சிக்கொட்டல்களும்.

பூங்கா ரயில் நிலையத்தில் சக பயணி சிந்திய சிரிப்பு மனிதத்துவம் நிரம்பியது நண்பர்களே. இந்த மனிதம் தான் நம்மை முன்னோக்கி நகர்த்துகிறது. அடுத்தடுத்த தருணங்களில் முகம் தெரியாத மனிதர்களுடன் சேர்ந்து நம்பிக்கையுடன் நகர்வதுதானே வாழ்க்கை. வாக்குமூலம் போலச் சொல்ல நினைத்ததைச் சொல்லிவிட்டேன். இப்போதைக்கு வேறெதுவும் இல்லை. முதலில் இங்கிருந்து நகருங்கள்...! முடிந்தால் ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு...!

மேடையே வையகம் ஒரு மேடையே
வேசமே அங்கெல்லாம் வெறும் வேசமே
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே