Saturday, September 14, 2013

நாங்களும் படிக்கணும் – ஆவணப்படம்

“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்” – இது வள்ளுவப் பெருந்தகையின் அட்டகாசமான குறள்களில் ஒன்று.

ஜேகே ஃபவுண்டேஷனின் “நாங்களும் படிக்கணும்” ஆவணப்பட அறிமுக விழாவிற்கு சகோதரி காமாட்சி அழைப்பு விடுத்திருந்தார். ஆவணப் படத்தில் பாட்டி வளர்க்கும் பிள்ளையாகத் தான் ரெனால்ட் ஒருசில நிமிடங்கள் திரையில் தோன்றினான். ஏதேனும் சுவாரஸ்யம் அவனிடம் இருக்க வேண்டுமென்று தோன்றியது. அதுவுமில்லாமல் ரெனால்டின் பக்கத்திலிருந்த இருக்கை காலியாக வேறு இருந்தது. ஆகவே பேச்சுக் கொடுக்கலாமென அங்கு சென்று அமர்ந்து கொண்டேன்.

அரசு பள்ளியில் படித்து, பத்தாவது பொதுத்தேர்வில் விழுப்புரம் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்றதற்காக ரெனால்டை மேடைக்கு அழைத்தார்கள். அவன் சென்று பரிசைப் பெற்றுக்கொண்டான். சற்று நேரம் கழித்து மீண்டும் ரெனால்டை அழைத்தார்கள். கணிதப் பாடத்தில் நூற்றுக்கு நூறு பெற்றதற்காகப் பரிசு கொடுத்தார்கள். அதையும் பெற்றுக்கொண்டு இருக்கைக்குத் திரும்பினான். மென்மையாக பேச்சுக் கொடுத்தேன்.

“ஓ... மேத்ஸ் உனக்கு நல்லா வருமோ?”

“ஆமா... புடிச்ச சப்ஜெக்ட்...” என்றான் கூச்சத்துடன். சற்று நேரத்திற்கெல்லாம் மீடியா தோழர்கள் புகைப்படம் எடுப்பதற்காக ரெனால்ட்டை அழைத்தார்கள். கூச்சத்துடனே அவர்கள் பின்னால் சென்றான். திரும்பியதும் மீண்டும் சில கேள்விகளைக் கேட்டேன்.

“அந்த படத்துல... பாட்டிதான் உங்கள வளக்கறதா காமிக்கிறாங்க?” என்றேன்.

“ஆமா... பாட்டிக் கூடத்தான் இருக்கேன்.” என்றான்.

“அப்பா...?” என்றேன்.

“அப்பா இல்ல...” என்றான்.

“அம்மா...” என்றேன்.

“இங்க தான் (சென்னையில) வீட்டு வேலை செய்யறாங்க...” என்றான்.

“ஜேகே பவுண்டேஷன் வறதுக்கு முன்னாடி உங்க ஸ்கூல் எப்படி இருந்துச்சி? இப்போ எப்படி இருக்குது?”

“முன்னெல்லாம் டீச்சர்ஸ் ரொம்ப ஆர்வமா இருக்கமாட்டாங்க. இப்பல்லாம் கொஞ்சம் ரிவிஷன் டெஸ்ட் எல்லாம் வெக்கிறாங்க. அக்கறையா அன்பா சொல்லிக் கொடுக்கறாங்க. அதுனால நல்லா இருக்குது.” என்றான்.

“நீ படிச்சி என்னவா ஆகலாம்னு மனசுல வச்சிருக்க?” என்றேன்.

“M.B.B.S படிக்கலாம்னு...” என்றான்.

இந்தக் குறைவான கேள்விகளைக் கேட்டு, சுருக்கமான பதில்களை வாங்க ஏறக்குறைய அரை மணிநேரம் பிடித்தது. இதற்குள் நிகழ்ச்சியும் முடிந்து மதிய உணவிற்காக எல்லோரையும் அழைத்தார்கள். அக்காவின் மகன் அகிலும், நானும் முதல் ஆளாக தட்டுக்களை எடுத்துக் கொண்டு வரிசையில் நின்றோம். சாப்பிட்டு முடித்து ஐஸ்கிரீமை கூட ஒரு வெட்டு வெட்டிக் கொண்டிருந்தோம். அப்பொழுதுதான் ரெனால்ட் சாப்பிடுவதற்காக உள்ளே நுழைந்தான். தட்டினை எடுத்துக் கொண்ட அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கைகளைக் கழுவிக்கொண்டு, ஓரமாக இருந்த பிளாஸ்டிக் இருக்கையொன்றில் அமர்ந்திருந்தான். அவன் “சாப்பிட்டானோ? இல்லையோ?” என்ற சந்தேகம் எனக்கு. அருகில் சென்று அவனைப் பார்த்துச் சிரித்தேன். மேலும் “சாப்பிட்டியா?” என்றேன்.

“ஆ(ங்)... சாப்பிட்டேன்” என்றான் தலையை ஆட்டியவாறே சங்கோஜத்துடன்.

“உண்மையச் சொல்லு... பிளேட்ட எடுத்த அஞ்சி நிமிஷத்துல வயிறு நெறைய சாப்பிட முடியாதே ரெனால்ட்...!” என்று கண்களை உருட்டினேன்.

“இல்லைங்க’ண்ணா... இந்த மாதிரி சாப்புட்டு பழக்கமில்ல... இப்பிடி சாப்புட்றது என்னமோ மாதிரி இருக்குது...” என்றான்.

“சரி... நான் வேணும்னா கூட வரேன்... மூனுமணி நேரம் டிராவல் பண்ணி ஊருக்குப் போகணும் இல்லியா? வா... நீ வந்து சாப்புடு. நான் ஹெல்ப் பண்றேன்.” என்றேன்.

“இல்லன்னா... எனக்கு வேண்டாம்.” என்றான் தயக்கமாக. இதோட விழுப்புரம் போனால் தான் அவன் சாப்பிட முடியும். சொல்ற பேச்சையும் கேட்க மாட்டேன் என்கிறான். இவனை என்ன செய்ய? நேராக ஸ்வீட் கொடுப்பவரிடம் சென்றேன்.

“இங்க பாருங்க ரெண்டு ஸ்வீட் மட்டும்” எடுத்துக்கறேன் என்றேன்.

“ஓ... தாராளமா எடுத்துக்கோங்க சார்...” என்றார். அதனை எடுத்துக்கொண்டு வந்து ரெனால்டிடம் நீட்டினேன். தயக்கத்துடன் வாங்கி கொஞ்சம் கொஞ்சமாகக் கடித்து முழுங்கினான். விழா முடிந்து தமயந்தி சித்தி, அகில், அனைன்யா – ஆகியோருக்குப் பிரியா விடைகொடுத்து அனுப்பிவிட்டு வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். மியூசிக் அகாடமியின் அருகில் செல்லும் பாலத்தின் கீழ் அவன் நின்றுகொண்டிருப்பது போலப்பட்டது. அவனே தான்...! வாகனங்கள் விரைந்துசெல்லும் சாலையின் ஓரத்தில், வேகாத வெயிலில் நின்றுகொண்டு, செல்பேசியைக் காதில் வைத்திருந்தான் ரெனால்ட். முகத்தில் வியர்வை வழிந்து கொண்டிருந்தது.

“மொதல்ல ப்ளாட் ஃபாரமுக்கு வா...” என்றதும் நடைபாதைக்கு நகர்ந்தான் காதோரம் வைத்திருந்த செல்பேசியை எடுக்காமல். “நீ என்ன தம்பி இங்க நிக்கிற? உன்னோட Team-அ மிஸ் பண்ணிட்டியா?” என்றேன் அக்கறையுடன்.

“இல்லன்னா... அம்மா இங்கதான வீட்டு வேலை செய்யறாங்க... இந்த எடத்துக்கு வரச் சொன்னாங்க. அதான் ஒரு அஞ்சி நிமிஷம் பார்த்துட்டு போலாம்னு நிக்கிறேன்.” என்றான். அதற்கு மேல் அங்கிருந்து தாயையும் மகனையும் சங்கடப்படுத்த வேண்டாமென்று “”Okie… Bye bye” என சொல்லிவிட்டுக் கிளம்பினேன். அந்தத் தாய் “வந்தாளா? இல்லையா?” என்பது கடவுளுக்கே வெளிச்சம். தாயைச் சந்தித்த மகிழ்ச்சியுடன் ரெனால்ட் ஊருக்குத் திரும்பினானா என்பதும் கடவுளுக்கு வெளிச்சம்.

ஓ... மை காட்...! ஒருத்தி இங்க ஓடா ஒழைச்சி காச சம்பாதிச்சி தன்னோட புள்ளைய படிக்க வெக்கிறா. பையனும் நல்லா படிக்கிறான். தோ... இன்னிக்கிக் கூட ரெண்டு பரிசை தட்டிட்டு வந்திருக்கான். அந்தப் பையனோட – லைம்லைட், மீடியாவின் பிளாஷ் வெளிச்சம், பாராட்டு, மரியாதை – இத்தியாதி இத்தியாதி எல்லாவற்றையும் பார்க்க வேண்டியவள் - ஓடாய் உழைக்கும் பெற்றவள் தானே. இதை எல்லாத்தையும் பார்த்திருந்தால் அந்தப் பெண் எவ்வளவு சந்தோஷப் பட்டிருப்பாள். தனது ரத்தமும் சதையுமான மகனை நினைத்து எவ்வளவு பெருமை பட்டிருப்பாள்.

தோ... பக்கத்தில் தான் அந்தத் தாய் இருந்திருக்கிறாள். அவளது மனம் குளிர ஒரு வாய்ப்பைக் கொடுக்கமால் போய்விட்டோமே...!

காமாட்சி சிஸ்டர் கிட்டயும், ஜெயகிருஷ்ணன் கிட்டயும் பர்சனலா ஓர் வேண்டுகோள்... இல்லை இல்லை அன்புக் கட்டளையே இட வேண்டும். அடுத்த வருடம் மாணவர்கள் பரிசளிப்பு விழா சென்னையில் நடப்பதாக இருந்தால், பரிசு பெரும் மாணவர்களின் பெற்றோர்கள் யாரெல்லாம் சென்னையில் வேலை செய்கிறார்களோ, அவர்களையெல்லாம் விழாவிற்கு வருகை தருமாறு JK Foundation சார்பில் அழைப்பு விடுக்க வேண்டும். பார்வையாளர்களின் கரவொலி, சிறப்பு விருந்தினர்களின் முகஸ்துதி பாராட்டுகளைவிட – பிள்ளைகளைப் பெற்றவர்களின் மனக்குளிர்ச்சியும், ஆசிர்வாதமும் JK Foundation குடும்பத்தாருக்கு என்றென்றும் கிடைக்க வேண்டும்.

வேறென்ன சொல்ல...

குறிப்பு:
பின்தங்கிய கிராமப்புறத்தைச் சேர்ந்த 10 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 10 நடுநிலைப் பள்ளிகளை ஜேகே அறக்கட்டளை தத்தெத்டுதிருகிறார்கள். மாதம் ஒன்றிற்கு சுமார் 10 லட்ச ரூபாய் செலவு செய்து பள்ளிகளின் அடிப்படை நிர்வாகப் பணிகள், மாணவர்களின் படிப்புக்குத் தேவையான அடிப்படை வசதிகள், தேவையான பட்டதாரி ஆசிரியர்கள், மாலை நேர உணவு போன்றவற்றை 20 பள்ளிகளுக்கும் ஏற்பாடு செய்துத் தருகிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாக இதனைச் செய்து வருகிறார்கள். இதர பின்தங்கிய மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளிகள் சார்ந்த மேலும் சிலபல திட்டங்களையும் இவர்கள் வைத்திருகிறார்கள். கிராமப்புற அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த இவர்கள் செலவிடும் தொகையைக் கணக்கிட்டால் தரமானதொரு தனியார் பள்ளியையே துவங்கிவிடலாம். தொடர்ந்து கவனிப்போம் ஜேகே பவுண்டேஷனின் சிறப்பான சேவையை. 

Thursday, September 12, 2013

யட்சி – குறும்பட அறிமுகம்

மரணத்தை தழுவத் துடிக்கும் எழுத்தாளனையும், ஒரு தேவதை போல அவனது பாதுகாப்பில் வளர்ந்து வரும் சிறு பெண்ணையும் மையப்படுத்தி தரமணி திரைக்கல்லூரி மாணவர் மணிமாறனால் இறுதியாண்டு செய்முறைப் பயிற்சிக்காக எடுக்கப்பட்ட குறும்படம் தான் “யட்சி”. சென்னை எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரி வழங்கிய இக்குறும்படம் – இந்த ஆண்டு நடைபெற்ற கோவா உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் (2013) – இக்குறும்படம் சிறந்த கதைக்கான சிறப்புப் பரிசையும் பெற்றுள்ளது.

வினோத நோயினால் பாதிக்கப்பட்ட வயோதிக எழுத்தாளன் தேவதச்சன் (பரிக்ஷா ராஜாமணி), நோய் முற்றிய நிலையில் எடுக்கப்போகும் தற்கொலை முடிவு பற்றிய காட்சிகளாக இக்குறும்படம் விரிகின்றது. முடிவு என்ன என்பதை குறும்படத்தின் ஆரம்பத்திலேயே இயக்குனர் சொல்லி விடுகிறார். “இதுதான் முடிவு…!” என்பதை ஆரம்பத்திலேயே தெளிவாகச் சொல்லிவிட்டு குறும்படத்தை அலுப்பில்லாமல் நகர்த்துவது சவாலான, சிரமமான காரியம். குறும்படம் முழுவதும் ஒரு சின்ன அறையில் படமாக்கப்பட்டுள்ளது. கடைசி ஒரு காட்சியில் மட்டுமே கேமரா அறையை விட்டு வெளியே நகர்கிறது. திரைக்கதையாசிரியராக மணிமாறனுக்கும், ஒளிப்பதிவாளராக ராமனாதனுக்கும் இது கடினமானதாகத் தான் இருந்திருக்க வேண்டும். என்றாலும் இருவரும் படத்தின் சுவாரஸ்யம் குறையாமல் அமைத்திருகிறார்கள்.

டெட்ராப்ளீஜியா (Tetraplegia) எனும் வகைப் பக்கவாதத்தால் உடம்பிலுள்ள தசைநரம்புகள் பாதிக்கப்பட்டு இரண்டு கால்களும், இடதுகையும் ஏற்கனவே செயலிழந்த நிலையில், வலது கை மட்டுமே அசையும் நிலையில் உயிர்ப்புடன் உள்ளது. அதுவும் கூட ஓரிரு நாட்களில் செயலிழந்து போகலாம் என்று மருத்துவ பரிசோதனைகள் மூலம் எழுத்தாளர் தேவதச்சனுக்குத் தெரிய வருகின்றது. பல நாவல்களும், சிறுகதைகளும், பயணக் கட்டுரைகளும் எழுதி அவருக்குப் பெயர் வாங்கிக்கொடுத்த கை ஓரிரு நாட்களில் செயலிழக்க இருக்கின்றது. இதனைத் தாங்கிக்கொள்ள முடியாத மனநிலையில் தற்கொலை செய்துகொள்ள தேவ் முடிவெடுக்கிறார். அதேசமயத்தில் தனது பாதுகாப்பில் வாழும் சிறுமியின் எதிர்காலம் பற்றியும் யோசிக்கத் துவங்குகிறார். தனிமையில் வாழும் எழுத்தாளன் தனது இறுதி முடிவான தற்கொலை எண்ணத்தை – தன்னுடைய பாதுகாப்பில் வாழும் இலக்கியா (நிவேதா) என்ற சிறுமிக்கு விடுமுறை நாளின்போது ஒட்டகக் கதையின் மூலம் மறைமுகமாக உணர்த்தத் துவங்குகிறார்.

“தேவ்… Friday வே சொன்னாங்க தமிழ் மிஸ்…! Monday வரும்போது ஒரு ஸ்டோரி எழுதிட்டு வரணுமாம்… அதுவும் நான் ரைட்டர் வீட்டுப் பொண்ணாம். நான் தான் மொதல்ல கொடுக்கணுமாம்…!” என்று சொல்லிவிட்டு புத்தகத்தையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு எழுதுவதற்குத் தயாராகிறாள் இலக்கியா.

“மொதல்ல நான் கத சொல்லிட்றேன். சரின்னு பட்டா எழுது… இல்லன்னா எழுத வேண்டாம்.” என்கிறார் தேவ். தன்னுடைய கையறு நிலையையே உருவகக் கதையாகச் சொல்லத் துவங்குகிறார் தேவ்.

ஒரு பெரிய பாலைவனத்தில் ரெண்டே ரெண்டு ஒட்டகம் மட்டும் வாழ்ந்து கொண்டிருந்ததாம். ஒண்ணு பெரிய ஒட்டகம், இன்னொன்னு அதோட குட்டி. திடீரென அங்கு வெப்பம் அதிகமானதால், இரண்டு ஒட்டகமும் சேர்ந்து வேறு இடத்திற்கு இடம்பெயர முடிவெடுக்கின்றன. பெரிய ஒட்டகத்திற்கு காலில் அதிகமான காயங்கள் இருந்ததால் வேகமாக முன்னேறி நடக்க முடியவில்லை. ஆகவே சின்ன ஒட்டகத்திடம் “நீ மட்டும் தனியா போயிடு” –ன்னு சொல்லுச்சாம்.

“அவ்வளோ பெரிய பாலைவனத்துல குட்டி ஒட்டகம் எப்படி தேவ் தனியா போகும்… போயிரு போயிருன்னா எப்படிப் போகும்?” என்கிறாள் இலக்கியா.

எதையோ சிந்தித்தவாறு கதையை மேலும் தொடர்கிறான் தேவ். “என்னோட நண்பன் பக்கத்து காட்டுல தான் இருக்கான். அவன் உனக்கு வழி காட்டுவான். இருட்ட வேற ஆரம்பிச்சிடுச்சி. மணல்ல சூடு வேற கொறைய ஆரம்பிக்கும். உன்னால தனியா போக முடியும். நீ வேகமா தப்பிச்சி போயிடு”ன்னு பெரிய ஒட்டகம் குட்டி ஒட்டகத்திடம் சொல்லியதாகச் சொல்கிறான் தேவ்.

“அதுவே குட்டி ஒட்டகம்!. தனியா எப்பிடி காட்டுக்குள்ள போகும்?. வேற ஏதாச்சும் அனிமல்ஸ் அடிச்சி சாப்பிடுட்சின்னா… அதான் பயப்படுது” என்று குறுக்கிடுகிறாள் சிறுமி.

இங்கு எழுத்தாளனுக்கே உரிய புத்திசாலித் தனத்துடன் தேவ் கதையை மடைமாற்றித் தொடர்வதும், சிறுமி இடையிடையே கேள்விகளை எழுப்பி அவனை திக்குமுக்காடச் செய்வதுமாக திரைக்கதை பயணிக்கிறது. ஓரிடத்தில் அந்தச் சிறுமி கேட்கிறாள்:

“கதையில இவ்வளோ மிஸ்டேக்ஸ் வருது… உன்னப் போயி எல்லாரும் பெரிய ரைட்டர்னு சொல்றாங்க?”

இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மேலும் கதையைத் தொடர்கிறான் தேவ். தன்னுடைய இறுதி முடிவானது குழந்தையை நிர்கதியற்றவளாக மாற்றும் என்பதால், சிறுமியைப் பார்த்துக் கொள்ளும்படி தன்னுடைய நெருங்கிய நண்பர்களிடம் செல்பேசி வழியே இடையிடையே கேட்டுக்கொள்கிறான் தேவ். ஒரே நபரை ஏற்பாடு செய்யாமல், ஒவ்வொரு விஷயத்திற்கும் சிறப்பாக ஒரு நபரை ஏற்பாடு செய்கிறான் தேவ். பொழுது புலர்கிறது. தேவ் சொன்ன கதையை எழுதிக்கொண்டு சிறுமி பள்ளிக்குப் புறப்படுகிறாள்.

“தேவ் நான் கெளம்புறேன். உன்ன ச்சேர்ல உட்கார வெக்க கணேஷ் அண்ணன வரசொல்லிட்டுப் போறேன்.” என்கிறாள். கதவருகே சென்றவளை அழைக்கிறான் தேவ்.

“இலக்கியா… கனேசன உடனே வரச் சொல்லாத. ஒருமணி நேரம் கழிச்சி வரச் சொல்லு…” என்கிறான். தலையாட்டிவிட்டுச் செல்கிறாள் இலக்கியா.

வார நாட்களுக்கே உரிய தனிமையின் கோரப்பிடியில் மீண்டும் சிக்குகிறான் தேவ். தூக்கக் கலக்கத்தில் படுக்கையில் கிடக்கும் அவனிடம் சொல்லிக்கொண்டு அறையைவிட்டு வெளியேறுகிறாள் சிறுமி. கட்டிலின் அருகிலிருக்கும் மேசையிலிருந்து சவரப் பிளேடினை பற்களால் கவ்வியவாறு தனது வலதுகை மணிக்கட்டு நரம்பை தேவ் அறுத்துக் கொள்கிறான். தூரத்தில் சமுத்திரம் தெரியும் நாலு வழிப் பாதையில் – பள்ளியை நோக்கி மகிழ்ச்சியுடன் நடக்கத் துவங்குகிறாள் சிறுமி.
“காலைல எழுந்து பார்த்த குட்டி… பெரிய ஒட்டகம் செத்து போனதுலையும் ஒரு ஞாயம் இருக்குதுன்னு நெனச்சிக்கிட்டு தன்னுடைய பயணத்தை தொடங்குச்சாம்…” என்று மணிக்கட்டு நரம்பை அறுத்துக்கொண்ட தேவின் குரல் பின்னணியில் கேட்கிறது.

“அந்த ஒட்டகம் பாவமுள்ள தேவ்?” என்ற இலக்கியாவின் குரலும் கேட்கிறது.

“குட்டி ஒட்டகமா?” என்று கேட்கிறான் தேவ்.

“ஹூஹூம்… பெரிய ஒட்டகம்” என்கிறாள் இலக்கியா. சிறுமியின் கழிவிறக்கம் ஒட்டகத்தின் மீதானதல்ல என்பதை வளர்ந்த பின்பு அவள் உணரக்கூடும். அதனை உணர்த்தும் விதமாக, நான்குவழிப் பாதையின் ஓர் ஓரத்திலிருந்து எரியும் குப்பையிலிருந்து வெளிப்படும் புகையானது காற்றில் பரவ, புகையிலிருந்து விலகியவாறு இலக்கியா நடக்கத் துவங்குகிறாள்.

சர்கர நாற்காலியில் அமர்ந்தவாறும், படுக்கையில் கிடந்தவாறும் ஓர் அடிகூட அங்குமிங்கும் நகராமல் இருந்த இடத்தில் இருந்தவாறே முக பாவனைகள் மூலம் இயல்பான நடிப்பினை வெளிப்படுத்தி – தன்னுடைய கதா பாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார் ராஜாமணி. இவர் “ப்ரியாராஜ்” என்ற பெயரில் ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் துணுக்குக் கட்டுரைகள் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. (குமுதம் போன்ற இதழ்களில் எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்தை நையாண்டி செய்தவர்.) “சென்னையின் கதை (1921)” என்ற கிளின் பார்லோ எழுதிய ஆங்கில ஆவண நூலை தமிழில் மொழி பெயர்த்து பரவலான கவனத்தையும் பெற்றிருக்கிறார். அடிப்படையில் இவர் எழுத்தாளனும் என்பதால் தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை கச்சிதமாக உள்வாங்கி இயல்பாக நடித்திருக்கிறார். ராஜாமணிக்கு குறும்படங்களில் நடித்த அனுபவம் ஏற்கனவே இருக்கின்றது.

ஆனால் சிறுமி கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நிவேதாவிற்கு இதுதான் முதல் குறும்படம். என்றாலும் ராஜாமணிக்கு ஈடுகொடுத்து சிறப்பாக நடித்திருக்கிறாள். அவளுடைய உடல்மொழியும், பேச்சும், இயல்பும் திரைக்கதை கோரியிருந்த தேவதைக் கதா பாத்திரத்தை கண்முன் நிறுத்துகிறது. கருப்பு-வெள்ளை நிறமுடைய நாயைக் குறும்படத்தின் நெடுகிலும் கதை ஓட்டத்திற்கு ஏற்றார்போல பயன்படுத்தி, எழுத்தாளனின் இருள்சூழ்ந்த மனநிலையையும், தேவதை போன்ற சிறுமியின் மனநிலையையும் அழகியல் குறியீடாக வெளிப்படுத்திய அளவில் மணிமாறனைப் பாராட்டலாம். படத்தொகுப்பு, இசை, கலை இயக்கம் போன்றவையும் மெச்சும் படியாகத் தான் இருக்கின்றன. வருங்காலத்தில் இவர்களால் சிறந்த படைப்புகளைக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்தக் குறும்படம் ஏற்படுத்துகின்றது.

எழுத்து & இயக்கம்: மணிமாறன்
ஒளிப்பதிவு: ராமநாதன். SP
படத்தொகுப்பு: லோகேஸ்வரன். J
ஒலி வடிவமைப்பு: மணிகண்டன். S
பதப்படுத்தியது: ஜெகநாதன்
இசை: ஆண்டனி ஜார்ஜ்
கலை இயக்கம்: முத்துக்குமார். CK
நடிகர்கள்: பரிக்ஷா ராஜாமணி, நிவேதா

நன்றி: சொல்வனம் - இணைய இதழ்