Tuesday, February 18, 2014

பிரபலங்களின் முன் விற்பனைப் பிரதிநிதி

தோப்பில் முகமது மீரானின் சாய்வு நாற்காலியைப் படிக்கும் பொழுது, அடூர் கோபாலகிருஷ்ணனின் திரையாக்கமான “எலிப் பத்தாயம்” நினைவுக்கு வரலாம். “சாய்வு நாற்காலி” வாழ்ந்து கெட்ட கடலோர கிராம நிலச் சுவாந்தார் ஒருவனின் கதை. தனிப்பட்ட ஒருவனின் பூர்ஸ்வா வாழ்க்கையால் ஒரு குடும்பத்திற்கு நேரும் அவலத்தை சித்தரிக்கும் படைப்பு. பாலியல் இச்சையையும் வயிற்றுப் பசியையும் பிரதானமாகக் கருதும் ஒருவனால் குடும்ப கௌரவம் நடுத்தெருவுக்கு வருவதையும், இதன் காரணமாக உறவுகள் நிலைகுலைந்து சிதருவதையும் முன்வைக்கும் பிரதி.

குடும்ப கௌரவத்தைத் தூக்கிச் சுமக்கும் மனது ஒருபுறம், காமத்தில் திளைத்த இளமைக் காலங்களும், அந்த காம நினைவுகளை மறக்க முடியாமல் உடல் சூதேறித் திரியும் முதுமையேரிய வயோதிக உடலின் அசைபோடும் மனது மறுபுறம் என தரவாட்டுக்காரனின் வாழ்வியல் சிக்கலை முன்வைக்கும் படைப்பு. “சாய்வு நாற்காலி” – 1997 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற படைப்பு. இது தமிழக கடற்கரையோர கிராமத்தில் நடக்கும் கதை எனில், “மீஸான் கற்கள்” – கேரள கடற்கரையோர நிலச்சுவாந்தார் ஒருவனின் குடும்ப, சமூக வாழ்வைப் பிரதிபலிக்கும் படைப்பு.

ஒருமுறை மொழிபெயர்பாளர் குளச்சல் மு யூசுப் - எழுத்தாளர் ஜெயமோகனிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது “ஸ்மாரக சிலகள் – நல்ல நாவலாச்சே. முடிஞ்சா தமிழுக்குக் கொண்டுவர முடியுமான்னு பாருங்க.” என்று சொன்னாராம் ஜெமோ.

புனத்தில் குஞ்சப்துல்லாவின் மலையாள மூலம் “ஸ்மாரக சிலகள்” மத்திய சாகித்ய அகாடமி (1980), மாநில சாகித்ய அகாடமி (1977) ஆகிய இரண்டு விருதுகளையும் பெற்றுள்ளது. இளம் வயதிலேயே நாவலாசிரியர் இவ்விருதுகளைப் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. காலச்சுவடு பதிப்பகம் இப்புதினத்தை 2004-ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்கள். குளச்சல் மு யூசுப் இதனை மொழிபெயர்த்திருக்கிறார். “நினைவுச் சிலைகள்” என்ற பெயரில் சிவன் என்பவராலும் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. எனினும் குளச்சல் மு யூசுப்பின் “மீசான் கற்கள்” பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

இரண்டு படைப்புகளும் இஸ்லாம் மார்கத்து வாழ்வியலை நம்முன் வைப்பதால், கடற்கரையோர முஸ்லீம் குடும்பங்களின் வட்டார மொழி கையாளப்பட்டிருக்கும். ஆகவே வாசிப்பதற்கு சற்றே சிரமமாக இருக்கும். எனினும் அட்டகாசமான வாசிப்பனுபவத்தை வாசகர்களுக்குக் கடத்தும் நாவல்கள். நம்மில் பலர் சாய்வு நாற்காலியை வாசித்திருக்கலாம். ஆனால் மீஸான் கற்கள் அப்படியல்ல. ஆகவே காலச்சுவடு அரங்கில் நின்றிருந்த போது நல்ல வாசகர்களாக எனக்குப்பட்ட சில செலப்ரிடிகளுக்கு இப்புத்தகத்தைப் பரிந்துரை செய்தேன். அந்தச் சம்பவங்களில் சில...


இயக்குனர் & நடிகர் - கரு பழனியப்பன்: கிபி: “பழனி இந்த புத்தகத்த படிச்சி இருக்கிங்களா?”

“இல்லியே... நல்லா இருக்குமா?” என்றார்.

கிபி: “லைப்ரரியில கெடச்சா டிரை பண்ணி பாருங்க... நல்லா இருக்கும்.”

“அப்படியா...” என்று புத்தகத்தைப் பற்றி கேட்டுத் தெரிந்துகொண்டார். மேலும் “உங்கள எங்கயோ பார்த்தா போல இருக்குதே...?” என்றார் கரு. பழனி.

கிபி: “பாஸ்கர் சக்தி, கவிதா பாரதின்னு ரெண்டு பேரு டீக்கடை அரசியல் சங்கம் ஒண்ணு நடத்துறாங்க இல்ல. அவிங்க போடுற கூட்டத்துக்கு எப்பவாச்சும் வாரதுடுண்டு. நமக்கும் ஒரு அரசியல் பின்புலம் வேணும்ல...”

“ஓ... சரி சரி... புத்தகத்த எடுத்துக்குறேன்...” என்று சிரித்துவிட்டுக் கடந்து சென்றார்.

கவிஞர் & பாடலாசிரியர் நா. முத்துக்குமார்: கிபி: “முத்துகுமார்... ஒரு நிமிஷம்...! இந்த புத்தகத்தைப் படிச்சி இருக்கிங்களா?”

புத்தகத்தை உற்றுப் பார்த்தவர், “குளச்சல் யூசப் மொழிபெயர்ப்பா...! ஏற்கனவே அவரோட மொழிபெயர்ப்ப படிச்சிருக்கேன். ஏனோ தெரியல... என்னால அவரோட எரியாக்குள்ள போக முடியல...” என்றார்.

கிபி: “சரி சரி... அப்போ வேண்டாம்... வேற எதாச்சும் உங்களுக்குப் புடிச்ச புத்தகத்த நீங்களே பாருங்க...” என்று சொல்லிவிட்டு வேறொருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். கடந்து சென்ற முத்துக்குமார் அடுத்த சில நிமிடங்களில் என்னுடைய தோள்களைத் தொட்டுக்கொண்டு நின்றிருந்தார்.

கிபி: “சொல்லுங்க முத்து... Do you need any help?”

“புத்தகத்துக்கு தானே செலவு பண்றோம். நான் படிக்கலன்னாலும் கூட இருக்க யாராச்சும் படிப்பாங்க இல்ல. நீங்க சொல்றத பார்த்தா முக்கியமான புத்தகமா தெரியுது... நான் ஒண்ணு எடுத்துக்கறேன்.” என்றார்.

எழுத்தாளர் & சினிமா ஆர்வலர் சுகா: “மூங்கில் மூச்சு, வேணுவனம்” சுகாவுடன் ஒருவர் வந்திருந்தார். அதுநாள் வரை சுகாவுடன் கூட ஒரு வார்த்தை பேசியதில்லை. உடன் இருந்தவரை நேரில் பார்த்ததில்லை என்றாலும் தொலைபேசியில் நிறைய பேசி பழகியதுண்டு. பிறகுதான் தெரிந்தது அவர் சொல்வனம் பாஸ்கர் என்பது.

கிபி: “இந்த புத்தகத்த படிச்சி இருக்கிங்களா சுகா...?”

“நான் புக்ஸ் வாங்க வரல. ஏற்கனவே பர்சேசிங் முடிச்சாச்சு. சும்மா பாக்கறதுக்காக வந்தேன். இருந்தாலும் ஏதோ சொல்ல வறீங்க... சொல்லுங்க...” என்றார்.

கிபி: “நல்ல ட்ரான்ஸ்லேஷன். முடிஞ்சா வாசிச்சி பாருங்க...” என்றேன்.

இரண்டு நாட்கள் கழித்து சுகா மீண்டும் வந்திருந்தார். மறக்காமல் பரிந்துரைத்த புத்தகத்தை எடுத்துவந்து, என்னிடம் காண்பித்துவிட்டு “நல்லா இருந்தா உங்ககிட்ட பேசறேன்...” என்றார்.

கிபி: “நல்லா இல்லைன்னா என்ன கூப்பிட்டு திட்டுங்க... பாஸ்கர் கிட்ட செல்பேசி இலக்கங்கள் இருக்குது...” என்றேன். சிரித்துக்கொண்டே பேன்ட் பாக்கட்டில் கையை நுழைத்தவாறு கடந்து சென்றார். சில நேரங்களில் பாலுமகேந்திராவும் அதுபோன்ற மேனரிசத்துடன் கடந்து சென்றதுண்டு.


எழுத்தாளர், அரசியல்வாதி – சிவகாமி I.P.S: கிபி: “ஹேலோ சிவமாமி... நான் இங்க சேல்ஸ் மேன். இந்த புத்தகத்த பாருங்களேன்.”

“ஒரு நிமிடம் புத்தகத்தின் பின்னட்டையைப் பார்த்தவர். இந்த நாவல இன்னும் படிச்சதில்ல. நல்லா தான் இருக்கும் போல எடுத்துக்கறேன்.” என்று கடந்து சென்றார்.

இயக்குனர் சசி: கிபி: “சசி... நான் இங்க சேல்ஸ் மேன். இந்த புக் உங்களுக்கு புடிக்குதா பாருங்களேன்.”

“நல்ல புத்தகங்களா...?” என்றார்.

கிபி: “ஓரளவுக்கு... புத்தகத்த பிரிச்சி பாருங்க. புடிச்சி இருந்தா வாங்கிக்கோங்க...”

“ஒரு நிமிடம் பக்கங்களைப் புரட்டியவர். சரி எடுத்துக்கறேன்” என்றதுடன், “கு. அழகிரிசாமி மொத்தத் தொகுப்பு இங்க இருக்குதுங்களா?” என்றார்.

பெருமாள் முருகன் தொகுப்பில் வெளிவந்த “கு. பா. ரா சிறுகதைத் தொகுதியை” எடுத்து அவரிடம் நீட்டினேன்.

“மன்னிக்கணும்... கு. அழகிரிசாமி தொகுப்பு கேட்டேன்.” என்றார் சசி.

கிபி: “ஓ... சாரி... சாரி... ஏதோ ஞாபகத்துல தப்புப் பண்ணிட்டேன்.” என்றேன்.

“ச்சே ச்சே... இதெல்லாம் சகஜம் தானே” என்று சிரித்தார். “நான் இங்க சேல்ஸ் மேன்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவரிடம் பேசிக்கொண்டிருந்தாலும் – மிகப் பணிவாகவும், மரியாதையுடனும் சசி பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. சக மனிதனாக நேசிக்கத்தகுந்த மனிதர் இயக்குனர் சசி.


கவிஞர் வா. மணிகண்டன்: கிபி: “மணி... மீஸான் கற்கள் படிச்சி இருக்கியா?”

“இல்லியே கிருஷ்ணா...! எதாச்சும் ஸ்பெஷல் புத்தகமா அது.”

கிபி: “நல்ல நாவல் மணி... ட்ரை பண்ணி பாரு...”

இரண்டு நாட்கள் கழித்து புத்தகச் சந்தைக்கு வந்தபோது மறக்காமல் வாங்கிக்கொண்டு சென்றான் நண்பன் மணி.

வலசை இதழ் 
கார்த்திகைப் பாண்டியன்: கிபி: “கார்த்தி... இந்த புக் படிச்சி இருக்கியாடா?”

“இல்லையேடா... நல்லா இருக்குமா?”

கிபி: “நீதான் படிச்சி பார்த்துட்டு சொல்லணும்”

பில் கவுண்டரிலிருந்து கிளம்பும் போது “டேய்... இங்க பாருடா... கெளம்பறேன்...” என புத்தகத்தைத் காட்டி கையசைத்துவிட்டுச் சென்றான்.

இயக்குனர் சமுத்திரக்கனி: கிபி: “ஹேலோ கனி... இங்க நான் சேல்ஸ் ரேப். இந்த புக்க பத்தி சொல்லட்டுமா?”

“அச்சோ. புக்ஸ் பத்தின்னா வேணாம்னா சொல்லுவேன்... தாராளமா... சொல்லுங்க...” என்றார் சந்தோஷமாக. கனியும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். இரண்டு இளைஞர்கள் வந்து “ஃபோட்டோ பிளீஸ்” என்றார்கள். அவர்களுடன் சிரித்துக்கொண்டு நின்றுவிட்டு மீண்டும் என்னிடம் பேச வந்தார். மீண்டும் சில இளைஞர்கள் அழைத்தனர். அடுத்தடுத்து ரசிகர்கள் வரவும் “ஐயோ... இது சரிப்பட்டு வராது... உங்களுக்கும் டிஸ்டர்ப் ஆகுது... நான் கெளம்பறேன்” என்று கைகொடுத்துவிட்டு கடந்து சென்றார்.

இயக்குனர் வெற்றிமாறன்: சிலபல வருடங்களுக்கு முன்பு உயிர்மையின் புத்தக வெளியீட்டு நிகழ்வு. அரங்கில் ஏராளமான கூட்டம். தாடியைத் தடவி விட்டவாறு பக்கத்தில் இருந்தவரிடம் அந்த இளைஞன் கூறிக் கொண்டிருந்தார்: “எனக்கும் இலக்கியத்துக்கும் என்ன சமந்தம். இலக்கியத்த பத்தி எனக்கு என்ன தெரியும்? என்ன எதுக்கு இங்க கூப்பிட்டாங்கன்னு தெரியல?”

மேடையில் அறிவிப்பு செய்து, மேடை ஏறும் பொழுது தான் கூச்சப்பட்டவாறு பேசிக் கொண்டிருந்த தாடிவைத்த இளைஞர் வெற்றிமாறன் என்பதே தெரிய வந்தது. அவருடைய முதல் திரைப்படம் வந்திருந்த நேரம் என்று நினைக்கிறேன்.

சமீபத்தில் கூட காலச்சுவடு புத்தக வெளியீட்டில் வெற்றிமாறனைப் பார்க்க நேர்ந்தது. போலவே புத்தகக் கண்காட்சியிலும் எனக்கு அருகில் புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

கிபி: “ஹலோ வெற்றி... இந்த புக்ஸ் எல்லாம் பாருங்களேன்.”

“நீங்களே சொல்லுங்க...” என்றார்.

“என் பெயர் சிவப்பு...” என்று வாயை எடுத்தேன் “படிச்சிட்டேன்” என்றார்.

“கடல், சின்ன சின்ன விஷயங்களின் கடவுள், செம்மீன், பனி, கடவுளும் கிழவனும்...” எந்த புத்தகத்தைப் பற்றிக் கூறினாலும் “படிச்சிட்டேன்” என்றார்.

கடைசி அஸ்திரமாக “மீஸான் கற்கள்” என்றேன். “படிச்சிட்டேன்” என்றார்.

கிபி: “சரி... அப்போ நீங்களே பார்த்து செலக்ட் பண்ணிக்கோங்க” என்றேன். வெற்றியும் கடந்து சென்றார்.

பக்கத்தில் நின்றிருந்த ஒரு கவிஞர் கூறினார்: “சில சினிமாகாரங்க எதுவும் படிக்கலன்னாலும் படிச்சதா காமிச்சிப்பாங்க”

கிபி: “எது எப்படியோ... வெற்றிமாறனைப் பார்த்தல் இனி எதிர்த்திசையில் ஓடுவேன். ஏனெனில் அவரிடம் விற்பதற்கு என்னிடம் எதுவும் இல்லையே...!”

எழுத்தாளர் நாஞ்சில்நாடன்: நாடனை நோக்கிச் செல்லும்போதே காலச்சுவடு கண்ணன் உத்தேசித்திருக்க வேண்டும். “தச்சன் இருக்கும் தெருவுல ஊசி விக்கப் போறீங்களா...?” என்றார்.

“சும்மா இருங்க கண்ணன். எல்லாம் எனக்குத் தெரியும்...!” என்றேன்.

கிபி: “ஹேலோ நாஞ்சில் நாடன்... எப்படி இருக்கீங்க...?”

“நல்லா இருக்கேன்... நீங்க?” என்றார்.

கிபி: புத்தகத்தை அவரிடம் கொடுத்து “இந்த புத்தகத்த படிச்சிருக்கீங்களான்னு பாருங்களேன்?”

“ஓ... மீஸான் கற்களா...! பத்து வருஷமா நானும் பாக்கறவங்க கிட்ட எல்லாம் படிச்சி பாருங்கன்னு ரெக்கமண்ட் பண்றேன். எவன் கேக்குறான்...! வந்தபோதே படிச்சிட்டேன்...” என்றேன்.

கிபி: “ஓ... உங்களுக்குப் புடிச்சி இருந்துசிங்களா?”

“நிச்சயமா... வாசிக்க வேண்டிய புத்தகம்...” என்றார்.

காலச்சுவடு கண்ணன் கிண்டலுடன் சிரித்தார். அதன் உள்ளர்த்தம் “தச்சனிடம் ஊசி விற்காதே” என்பது போல இருந்தது. எனினும் நாஞ்சில் நாடனைப் பார்த்தால் எதிர்த் திசையில் ஓடமாட்டேன். நாஞ்சில்நாடன் பரந்துபட்ட வாசிப்பாளி என்பது தெரியும். அவரிடம் தெரிந்துகொள்ள, கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது.

“ஓ... மீஸான் கற்களா...! பத்து வருஷமா நானும் பாக்கறவங்க கிட்ட எல்லாம் படிச்சி பாருங்கன்னு ரெக்கமண்ட் பண்றேன். எவன் கேக்குறான்...!” என்று நாஞ்சில் நாடன் பகிர்ந்த போது “சரி... நம் வார்த்தைகள் காற்றிலோ நீரிலோ எழுதியதாகத் தான் இருக்கட்டுமே” என்று நினைத்துக்கொண்டேன்.

Monday, February 17, 2014

சூப்பி எறியப்பட்ட மாங்கொட்டை


பெருமாள் முருகனுக்கு விளக்கு விருது கொடுத்து கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சேலம் நோக்கிப் புறப்படுகையிலே மனதில் சொல்ல முடியாத சந்தோசம் குடிகொண்டது. முருகனின் நாவல் படைப்புகளில் பலவும் என்னுடைய மனதிற்கு மிக நெருக்கமான ஒன்று. விருது வழங்கும் நிகழ்வில் அவரது நாவல்கள் குறித்துப் பேச வருமாறு அழைத்தபோது பல காரணங்களைச் சொல்லித் தவிர்க்கப் பார்த்தேன். உள்ளுக்குள் நடுக்கம் வேறு. அவற்றில் ஒன்று...

“ஐயோ... முருகன் எனக்குப் பேசத் தெரியாதே...! ”

“இந்த மாதிரி நிகழ்வுகளில் பேசிப் பழக்கமில்லையே...! அதெல்லாம் சரியா வாரதுங்க முருகன். வேற யாராச்சும் பேசினால் நன்றாக இருக்குமே...” என்று அடுக்கடுக்காக பல காரணங்களை அடுக்கினேன்.

“அதெல்லாம் ஒன்னும் வேணாம். ஓர் எழுத்தாளரைப் பற்றி சக எழுத்தாளர்கள் பேசுவது காலம் காலமாக நடக்கும் விஷயம். ஒரு வித்யாசம் இருக்கனுமில்ல. நீங்கலெல்லாம் பேசினால் நல்லா இருக்கும் பிரபு. வந்து பேசுங்க.” என்றார்.

“ஏங்க உங்க நாவல்களைப் பற்றி பேச ஒரு தகுதி வேண்டாமா? நானெல்லாம் பேசினா சரியா இருக்காதுங்க...! நீங்க ரிஸ்க் எடுக்காதிங்க...” என்று முருகனுக்கு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்.

“நீங்க வாங்க... அதெல்லாம் ஒன்னும் கவலைப் படாதீங்க...!” என்றார்.

“இவர் நம்மள எப்பிடி சூஸ் பண்ணாரு?” என்பதுதான் மனதில் எழுந்த கேள்வி. புத்தகம் வாசிக்கும் விஷயத்தில் படு சோம்பேறி நான். எனினும் முருகனின் எல்லா நாவல்களையும் வாசித்ததுண்டு. வாசக மனநிலையில், நினைவின் அடுக்குகளில் நீங்காமல் பொதிந்துள்ள புனைவுலகம் அவரது ஆரம்பகாலப் படைப்புகளான “ஏறுவெயில் (1991), நிழல்முற்றம் (1993), கூள மாதாரி (2000)” ஆகிய முதல் மூன்று நாவல்கள் தான். எழும்பூர் ரயில் நிலையத்தில் இரவு பதினோரு மணிக்கு ரயிலேரும் வரைகூட “என்ன பேசுவது? எப்படிப் பேசுவது?” என்பதையெல்லாம் யோசிக்கவில்லை. மறுநாள் காலை சேலம் ரயில் நிலையத்தில் கண்விழித்தபோது ஊரே பளிங்குபோல காட்சியளித்தது. ஆஹா... எவ்வளவு சுத்தமாக வைத்திருக்கிறார்கள்!.
நிகழ்வு துவங்க ஏறக்குறைய மூன்று மணிநேர கால இடைவெளி இருந்ததால், சேலம் ஜங்ஷனிலிருந்து – தமிழ்ச் சங்க வளாகத்திற்கு நடந்தே சென்று விடலாம் என்று யோசித்தவாறு நடந்துகொண்டிருந்தேன். ஒரு சிறிய சாலை. அதன் சின்னதொரு கிளைச் சந்தில் நுழைந்தேன். பெயர் கூட “ஜலால் தெரு” என்று நினைக்கிறேன். சிறுவனொருவன் கோலமிட்டுக் கொண்டிருந்தான். அவனது தாய் சிறுவனை ரசித்தவாறு பார்த்துக்கொண்டிருந்தாள். போக்கற்றுத் திரிந்ததில், போகும் வழியிலிருந்த “உழவர் சந்தை” எனது கண்களில் பட்டது. கால்கள் தன்னிச்சையாக சந்தையினுள்ளே புகுந்துவிட்டன. நேரம் சென்றது தெரியாமல் கூட்டத்தில் ஒருவனாக சுமார் ஒரு மணிநேரம் சுற்றிக் கொண்டிருந்தேன். வியாபாரிகளின், வாடிக்கையாளர்களின் பேச்சொலிகள் சலசலத்துக் கேட்டுக்கொண்டிருந்தன. சுற்றிலுமுள்ள தூரத்து மலைகளில் பட்டுத் தெரித்த சூரியனின் காலை ஒளி – காய்கறிகளின் வண்ணங்களை மெருகூட்டிக் கொண்டிருந்தன.

“கங்கணம், ஆளண்டாப் பட்சி, மாதொருபாகன்” போன்ற பெருமாள் முருகனின் படைப்புகள் யாவும் வெவ்வேறு மனித சூழலின், மனித இருப்பின், உறவு முரண்களின், வாழ்வியல் யதார்த்தத்தின் பல்வேறு கோண பரிமாணங்களை முன்வைத்து நகர்ந்தாலும் – அந்த அசல் மனிதர்களின் வாழ்வியல் பிடிப்பானது உழவாகவும், விளைச்சலாகவும் தானே இருக்கிறது. “ஆளண்டாப் பட்சி” – உழவுக் குடும்பம் ஒன்றின் சிதரலையும், அதன் பின்னணியில் கரடு முரடான காடொன்று உழவு நிலத்திற்கு ஏற்ப மாற்றம் கொள்ள - ஒரு குடும்பமே போராடுவதையும் தானே சித்தரிக்கிறது.

“ஏறுவெயில்” நாவலின் ஆன்மா கூட உழவுக் குடும்பம் ஒன்றின் சிதறல் சார்ந்த பதிவு தான். இந்த நாவல் வெளிவந்து ஏறக்குறைய இருபதாண்டுகள் ஆகிறது. விவசாய நிலத்தின் ஒரு பகுதியை “காலனிக் குடியிருப்புகளாக” மாற்ற வேண்டி, பல ஏக்கர் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்துகிறது. பல குடும்பங்கள் இந்த நில எடுப்பினால் பாதிக்கப் பட்டாலும் - அதிலொரு குடும்பத்தின் நகரம் சார்ந்த இடப்பெயர்தலையும், அதன் பின்னணியில் சிறுவன் ஒருவனின் மனச் சிக்கலையும், குடும்பச் சரிவையும் முன்வைக்கும் நாவல். பெருமதிப்பிற்குரிய எழுத்தாளரான நாஞ்சில் நாடன் “நிழல் முற்றம்” நாவலுக்கு எழுதிய ‘கூரிய சிலாம்புகள்’ என்ற முன்னுரையில் “சூப்பி எறியப்பட்ட மாங்கொட்டை” என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகிறார். சூப்பி எறியப்பட்ட மாங்கொட்டைகள் திக்குத்தெரியாத திசையில் விழுந்து முளைப்பதைப் போல, கிராமத்து மனிதர்கள் தமது வேர்களை இழந்து சிறுநகரங்களை நோக்கியும், பெருநகரங்களை நோக்கியும் புலம் பெயர்வதை உணர்த்தத்தான் இப்படிக் கூறுகிறார். அரசு தனது ஆதாயத்திற்காக வேண்டி சூப்பிவிட்டு தூக்கி எறிந்த மனிதர்கள் தான் ஏறுவெயில் நாவலின் மாந்தர்கள். “மணி” என்ற வளர்ப்பு நாய் நாவலின் முதல் அத்யாயதில் வருகிறது. அது சிறுவனின் வளர்ப்பு நாய். புலப்பெயர்வினால் பழக்கப்பட்ட நாயே கூட மனிதர்களுடன் நெருங்க முடியாமல் விலகிச் செல்கிறது. சிறுவனைப் பார்த்து எதிர் திசையில் ஓடுகிறது. போலவே நாட்களும் ஓடுகிறது. சிறுவன் இளைஞனாக வளர்ந்து நிற்கிறான். நாவலின் இடையில் ஆங்காங்கு நாய் தலை காட்டிவிட்டுச் செல்கிறது. கடைசி அத்யாயத்தில் அந்நாய் அடையாலங்கலற்று, வீதியொன்றின் குழியிடுக்கில் அழுகிய நிலையில், புழுக்கள் நெளிய சகிக்க முடியாத துர்நாற்றத்துடன் சவமாகக் கிடக்கிறது. அதனை எடுத்து அடக்கம் செய்கின்றான் இளைஞன். ஒன்றின் அழிவில் இன்னொன்று பிறக்கிறது. நாயின் அழுகிய சதையில் நெளியும் புழுக்களைப் போல.

அரசு தான் என்றில்லை. விவசாயிகளே கூட நிலத்தைக் கூறுபோட்டு விற்கும் காலமிது என்பதும் மறுப்பதற்கில்லை. சாலை விரிவாக்கத் திட்டத்தில், தூக்கி வீசப்பட்டு இடம் பெயரும் குடும்பங்கள் தான் எத்தனை எத்தனை. கிராமம் கூறு போடப்படுவதையும், அதன் பின்னணியில் ஒரு நகரத்தின் வளர்ச்சி உருக்கொள்வதையும் – மனித உறவின் சிக்கல் மிகுந்த உணர்வுகளைக் கொண்டு படைக்கப்பட்ட நாவல்கள் நவீன இலக்கிய ஆக்கத்தில் முயற்சிக்கப்பட்டுள்ளதா என்று உறுதியாகத் தெரியவில்லை. இப்படைப்பை இயக்குனர் பாலுமகேதிரா திரைப்படமாக எடுக்க ஆசைப்பட்டிருக்கிறார். அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு, பின்னர் கைகூடாமல் போனதில் எல்லோருக்கும் வருத்தம் தான். கனவுகள் நிராசையாவது சகஜம் தானே! இரண்டு நாட்களுக்கு முன்னர் இயற்கையுடன் கலந்த பாலுவின் ஆன்மா சாந்தியடையட்டும்.

தமிழ்ச் சங்க வளாகம் – சேலம் ஜங்ஷனிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவாவது இருக்கும் என்றே நினைக்கிறேன். சாலையெல்லாம் அவ்வளவு சுத்தமாக இருக்கிறது. வழியெல்லாம் கட்டடங்கள். சாலையோர விரிந்து பரந்த நிலத்தில் பிரம்மாண்ட பொறியியல் கல்லூரிகள். ஒரு காலத்தில் இவையெல்லாம் உழவு நிலங்களாகத் தானே இருந்திருக்கும். தமிழ்ச் சங்க வளாகத்தைச் சுற்றிலும் பெரும் பணக்காரர்களின் அழகழகான வீடுகள். உள் (விளையாட்டு) அரங்க காஸ்மோ கிளப், திருமண மண்டபம், மருத்துவமனை, விளையாட்டு மைதானம் என எத்தனையெத்தனை வளர்ச்சிகள். எல்லாம் மனிதத் தேவையின் பொருட்டு உருமாறியவை. விழா நடந்த அரங்கின் ஜன்னல் கதவைத் திறந்தால் – பிள்ளைகள் ஆக்ரோஷத்துடன் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். சுட்டெரிக்கும் வெயில் சிறுவர்களுக்கு நிலவின் சுகந்த ஒளி.

சிறுவர்களின் உலகமே வானத்தின் கீழுள்ள விரிந்த பரப்பு தானே. பதின்ம, வளரிளம் பருவத்து சிறுவர்களின் உலகம் பறந்து விரிந்தது. பெருமாள் முருகனின் படைப்புகளில் உலவும் சிறுவர்களின் உலகமும் அத்தகையதொரு எல்லையற்ற பெருவெளி. பதின்பருவத்து சிறுவர்களின் “உடல்சிக்கல், மனச்சிக்கல், வாழ்வியல் சிக்கல், பொருளாதாரச் சிக்கல்” மட்டுமல்லாது கிராமத்து வாழ் சிறுவர்கள் மீதான சாதிய, பாலியல் வன்முறைகளை எந்தவித சமரசங்களும் இன்றி இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்ட முறையில் இவரது படைப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. சிறுவர்களின் சிக்கல்களை முன்வைத்த ஏராளமான சிறுகதைகள் நம்மிடம் இருக்கின்றன. எனினும் நாவலில் மிகக் குறைவாகத் தான் கையாளப்பட்டுள்ளன. கி. ராஜநாராயனின் “பிஞ்சுகள்”, பூமணியின் “வெக்கை” போன்ற படைப்புகள் சிறுவர் சார்ந்து படைக்கப்பட்டிருந்தாலும், பெருமாள் முருகனின் படைப்புகள் அவற்றிலிருந்து மாறுபட்ட பரிமாணத்தில் அமைந்திருக்கின்றன. கதைக்களத்தின் யதார்த்த வாழ்க்கை பலவிதங்களில் நம்முன் பரிமாணம் கொள்கிறது.

மனித வாழ்க்கை பாலியல் வாழ்க்கையை அல்லது பாலியல் கிளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது என்கிறார் உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்ட். மேலும் இன்பக் கொள்கையும் (Pleasure Principle), இருப்புக் கொள்கையும் (Reality Princple) உயிர்களின் உளப்பண்புகளில் ஆதிக்கம் செலுத்தினாலும் – இவற்றின் தாய் வேராகச் செயல்படுவது “கட்டாயமும் மூர்க்கமும்” என்கிறார். உடலே இவற்றின் ஆதாரம். உள்ளுணர்சிகள் அனைத்திற்கும் மூர்க்கம் பொதுவாக இருப்பதால், மூர்க்கத்தோடு தொடர்புடைய கட்டாயத்தன்மை (Compulsion) உள்ளுணர்சிகளின் பொதுப் பண்பாக அமைந்து விடுகிறது. உதாரணமாக, உடலியல் தேவைகள் (Somatic Needs) கட்டாயத்தின் அடிப்படையில் உந்தப்படுகின்றன. இந்த உந்துதல்களே இறுக்கம் மற்றும் தளர்வுக்குக் காரணங்களாக அமைகின்றன.

“நிழல்முற்றம், கூள மாதாரி” ஆகிய நாவல்களில் பதின்பருவத்து சிறுவர்களின் உடலியல் சிக்கலும், காம வேட்கையின் விருப்பங்களும் உளவியல் தன்மையில் சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கும். நிழல் முற்றத்தில் வரும் படத்துக்காரன் தனது மனைவியைப் பிரிந்து பாலியல் வறட்சியில் தவிக்கிறான். இந்நாவலின் முக்கியப் பாத்திரமான சக்திவேலின் முகம், படத்துக்காரனுக்கு மனைவியின் முகத்தை ஞாபகப்படுத்துவதால் மூர்க்கம் கொள்கிறான். ஆகவே, சக்திவேலை தனியாக அழைத்து வந்து மதுவினை அருந்தச் செய்து பாலியல் இச்சையைத் தீர்த்துக்கொள்ள பயன்படுத்திக் கொள்கிறான்.

“டே சக்தி... நெசமேச் சொல்றன்டா, எம்பொண்டாட்டி மூஞ்சியாட்டமே உனக்குடா. குண்டு மூஞ்சி... பொதுபொதுன்னு கன்னம்டா. லேசா வந்திருக்குதே மீச... அது மட்டும் இல்லாட்டி நீ அவளேதாண்டா. சக்தி, எங்கண்ணு... டேய்...” என போதையில் படத்துக்காரன் சக்திவேலினை அழுத்திப் பிடிக்கவும், “விலக்கவே முடியாத இருள்போல அவன் கவிவதைத்தான் சக்திவேலால் உணர முடிந்தது” என்ற விவரணையுடன் அத்யாயம் முடிகிறது. எதிர்க்க முடியாமல் இச்சையின் தூண்டிலில் விழுகிறான் சக்திவேல். (அத்யாயம்: 9, பக்கம்: 71-76)

போலவே, பாலியல் தொழில் செய்யும் திருநங்கை “கருவாச்சி” தனது வாடிக்கையாளருடன் இருட்டுத் திரையரங்கில் அமர்ந்திருக்க, கருவாச்சியை நெருங்குகிறான் சக்தி. பக்கத்து இருக்கையில் அமர்ந்து திருநங்கையின் இடுப்பில் கையை வைத்து முதலில் லேசாகத் தடவுகிறான். கருவாச்சி எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருக்கவும் இடுப்பை லேசாகத் தடவுகிறான்.

“காலு மசுறுக் கூட ஒழுங்கா மொளைக்காத உனக்கு... இது எதுக்குடா... ம்? லொக்கா லொக்காங்கிற... ம்...” என்கிறாள்/ன் கருவாச்சி. (அத்யாயம்: 12, பக்கம்: 97)

கைக்குழந்தையுடன் தனது மனைவி இருக்கும்பொழுது, சக்திவேலை கடையில் துணைக்கு வைத்துவிட்டு திருநங்கையுடன் உறவுகொள்ளச் செல்கிறான் பீடாக் கடைக்காரன். “வளரிளம் பருவத்தில் இருக்கும் சக்திவேல், பாலியல் வறட்சியில் தவிக்கும் படத்துக்காரன், கிளி போன்ற அழகான மனைவியிருந்தும் திருநங்கையுடன் சில நொடிகலேனும் புணரத் துடிக்கும் பீடாக் கடைக்காரன்” என உடல் சார்ந்து, இச்சை சார்ந்து இவர்களின் உள்ளுணர்வு மூர்க்கம் கொள்கிறது.

இதைத்தான் “மூர்க்கத்தோடு தொடர்புடைய கட்டாயத்தன்மை (Compulsion) உள்ளுணர்சிகளின் பொதுப் பண்பாக அமைந்துவிடுகிறது” என்று ஃப்ராய்ட் சொல்கிறார். மேலும், கட்டாயத் திருப்பத்தை இன்பியலுக்கும் (Hedonism) மேலான உளப் பண்பாகக் கொள்வதால் தான் இரட்டைப் பாலுமையே (Bi-sexuality) கட்டாயத் திருப்பத்திற்கு (Repetition Compulsion) அடிப்படையாக உள்ளது என்கிறார் (தனது ஆய்வு முழுமைக்கும் செக்ஸ் உணர்வை முதன்மை உணர்வாகக் கொள்ளும்) சிக்மண்ட் ஃப்ராய்ட். கிராமமும் அற்ற, நகரமும் அற்ற குழந்தைத் தொழிலாளர்களுடைய வாழ்வின் கணங்களை – சிறுவர்களின் போக்கிலும், தியேட்டர் தொழில் சார்ந்த சிக்கலான அனுபவங்களின் ஊடாகவும் உலவி உளவியல் நோக்கில் நிழல் முற்றத்து படைப்பாக்கியிருக்கிறார் பெருமாள் முருகன்.

கூள மாதாரியில் சிறுவர்களின் உலகம் வேறு வகையாகக் கையாளப் பட்டிருக்கிறது. இது முழுக்க முழுக்க கிராமத்துச் சிறுவர்களின் வாழ்வியல் சிக்கலையும், கொத்தடிமைகளாக வாழும் நிலையையும், சிறுவர்களுக்கு இடையிலுள்ள சாதிய அடுக்கின் கூறுகளையும் நுட்பமாக முன்வைத்து நகரும் படைப்பு. நான்கு சிறுவர்களும், மூன்று சிறுமிகளும் தான் நாவலிலுள்ள பிரதானப் பாத்திரங்கள். பொட்டல் மேய்ச்சல் வெளியில் தான் முழுக்கதையும் நகர்கிறது. கிரா-வின் பிஞ்சுகள் நாவலில் கூட சிறுவர்கள் பறவையைத் தேடி கிராமத்தின் விரிந்த நிலத்தில் இங்குமங்கும் அலைந்தாலும், வீடானது தவிர்க்க முடியாததோர் அம்சமாக படைப்பில் இருக்கும். கூள மாதாரி நாவலின் இரண்டு சின்ன இடங்களில் மட்டும் தான் வீடு இடம்பெறும். மற்றபடி இந்நாவல் முழுக்க முழுக்க மேய்ச்சல் நிலத்தையே (Geographical Landscape) சுற்றிவருகிறது. இந்த வடிவத்தில் நிறைய உலகத் திரைப்படங்கள் வந்திருக்கிறது. ஆனால் எழுத்திலக்கியத்தில் இதுபோன்ற முயற்சிகள் மிகச் சொற்பம் தான். பனைமரத் தோப்பு, தரிசு நிலம், கிணற்றடி, கிணற்றுக் குளியல், வெள்ளாமைப் படல் என இயற்கையின் சூழலில் நாவல் விரிந்து செல்கிறது. இந்தத் தன்மையில் அமைந்த தமிழ் நாவல்களே வேறு இல்லையென்று கூட சொல்லலாம். வட்டார பாலியல் அர்த்தம் பொதிந்த கொச்சை வார்த்தைகள் ஏராளமாக நாவலெங்கும் இரைந்து கிடக்கின்றன. பால்யகால கிராமத்து வாழ்க்கையை நினைத்துப் பார்க்கையில், இரைந்துகிடக்கும் வார்த்தைகளை எடுத்துக் கோர்த்து ரகசியமாக ரசிக்கத் தோன்றுகிறது. இதன் ஆங்கில மொழியாக்கமாகிய “SEASONS OF THE PALM” 2004 ஆம் ஆண்டிற்கான “கிரியாமா” பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

பசுபிக் கடலோர நாடுகள், தெற்காசிய நாடுகள் ஆகியவற்றில் வாழும் மக்களுக்கிடையே பரஸ்பரப் புரிதலை (Mutual Understand) உருவாக்கும் முயற்சியாக இப்பகுதி (இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கத் துணைக்கண்டம் போன்ற நாடுகள்) வாழும் மக்களின் யதார்த்த வாழ்கையை மையமாகக் கொண்டு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அல்லது மொழிபெயர்க்கப்படும் படைப்புக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசு கிரியாமா. அதன்படி 2004 ஆம் ஆண்டிற்கான பட்டியலில் பரிந்துரைக்கப்பட்ட இருநூறு நாவல்களில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்து – கடைசி சுற்றுக்குத் தகுதி பெற்ற நாவகளில் கூள மாதாரி-யின் மொழியாக்கமும் ஒன்று. இதனை ஆய்வாளர் வ. கீதா மொழியாக்கம் செய்திருக்கிறார். நிழல் முற்றம் நாவலையும் வ. கீதா “Current Show” என்ற தலைப்பில் மொழி பெயர்த்திருக்கிறார். “மாதொருபாகன்” - அனிருத் மொழிபெயர்ப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

“மாதொருபாகன்” – காளியும் பொன்னாவும் குழந்தையில்லாத் தம்பதிகள். ஒருவரை ஒருவர் அளவுகடந்து நேசிக்கின்றனர். குழந்தையில்லா ஒரே குறைதான் அவர்களுக்கு. மகாபாரதத்தில் அம்பிகைக்கும், அம்பாலிகைக்கும் வியாசன் விந்துதானம் செய்கிறான். தாயின் கூச்சத்தால் கருவிலேயே சபிக்கப்பட்டு பிறந்தவனாகிய பாண்டுவின் மனைவியான குந்தியும் விந்துதானம் பெற வேண்டி கணவனுடன் கானகம் செல்கிறாள். இது காலம் காலமாக நடக்கும் ஒன்று தான். அறிவியல் விஞ்ஞான வளர்ச்சியில் “டெஸ்ட் டியூப் பேபி” வரை மழலைச் செல்வங்கள் பெற வேண்டி எவ்வளவோ நடக்கிறது. இந்நாவலும் அத்தகையதோர் சிக்கலான முடிச்சை உள்ளடக்கமாகக் கொண்டதுதான். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்ற புனிதத் தளம். அங்கு நடக்கும் பதினாங்கு நாள் திருவிழாவின் கடைசி நாளின் இரவுத் திருவிழா – கல்யாணமாகியும் பல ஆண்டுகள் குழந்தையில்லாத பெண்களுக்கு முக்கியமான நிகழ்வு. அப்பெண்கள் கோவிலுக்குச் சென்று முகத்தில் சந்தனம் பூசிக்கொண்டு வந்திருக்கும் இளைஞர்களில் - தனக்குப் பிடித்த யாரேனும் ஒருவனுடன் இரவு முழுவதும் தங்கி, உடலுறவு கொண்டு கருவைச் சுமந்து வரலாம். வந்திருக்கும் பெண்களைப் பொருத்தவரை அவர்கள் சாமி. வாலிபர்களைப் பொருத்தவரை இந்த வாய்ப்பு கிடைத்தற்கரிய மகானுபவம். இளைஞனாக இருந்தபோது காளியும் உடலுறவு சுகத்தினை முதன்முறையாக அனுபவிக்க இந்த விழாவுக்குச் சென்றிருக்கிறான். அப்படியிருக்கையில், தனது மனைவியையே மாற்றான் ஒருவனுடன் உறவுகொள்ள அனுப்பி வைக்கவேண்டிய சூழல். காளியின் குடும்பமே இதற்கான ஏற்பாடுகளில் இறங்குகிறது.

தனக்கு ஆண்மை இல்லையோ என்று நினைக்கும் கணவன் (காளி). குழந்தைப் பேரு இல்லாததால் மலடி என்பதைக் காரணம் காட்டி - கட்டிய புருஷனே தன்னை ஒதுக்கி வைத்துவிட்டு இன்னொருத்தியைத் திருமணம் செய்துகொள்வானோ என்று நினைக்கும் மனைவி (பொன்னா). தம்பதிகளின் அகச்சிக்களையும், அவர்கள் சந்திக்கும் புறச்சூழல் நெருக்கடிகளையும் முன்வைத்து, திருச்செங்கோடு சமூகத்திலிருந்த ஒரு வழமையை பதிவாக்கிய அதே சமயத்தில், பக்கத்திற்குப் பக்கம் உணர்வுகளைக் கொப்பளிக்கும் படைப்பாக்கியிருக்கிறார் முருகன்.

இவரது படைப்புகளில் நல்லவர்கள் தீயவர்கள் என்ற பாகுபாடே இல்லை. பூக்குழி நாவலின் சரோஜாவைத் தீயிட்டுக் கொளுத்தும் மாமியார் மாராயி மற்றும் இதர சாதி வெறியர்களைத் தவிர்த்து எல்லோருமே அசலான யதார்த்த மனிதர்கள். சூழலின் தன்மையால் பிணக்கு கொள்கிறார்கள். உறவுகளுக்குள் விரிசல்களும் மோதல்களும் எழுகிறது. எனினும் இவர்கள் மனிதத்தின் மான்பைத் தாங்கிப் பிடிக்கிறார்கள். ஆளண்டாப் பட்சியில் வரும் விவசாயக் குடும்பத்தின் மூத்த ஆண்ணன், இளைய தம்பியான முத்துவின் மனைவி பெருமா தனியாக இருக்கும் சமயத்தில் நெருங்கிச் சென்று, மோகத்தின் உந்துதலில் அவளது ஒருபக்க மார்பை அழுத்திப் பிடிக்கிறான். அவள் திமிறிக்கொண்டு ஊரையே கூட்டிவிடுகிறாள். எனினும் மூத்த அண்ணன் தீயவனாகச் சித்தரிக்கப்படவில்லை.

போலவே “கங்கணம்” நாவலில் வரும் சக்கிலியன் குப்பன் – கதை நாயகனான மாரிமுத்துவின் பாட்டிக்கு இரவு நேரக் காவலிருக்கும் பொழுது, 17 வயது மகனின் திருமணதிற்காக வேண்டி மனம் பிறழ்ந்த நிலையிலிருக்கும் பாட்டியின் சேமிப்புப் பணத்தை எடுத்துக் கொள்கிறான். நாவலின் கடைசி அத்யாயத்தில் மாரிமுத்துவின் கால்களில் குப்பன் விழுந்து மன்றாடுகிறான். “பெரியாத்தா உள்ள செத்துக் கெடக்கறா! கொஞ்ச நேரத்துல உங்களுக்குக் கல்யாணம். உங்கள மார்மேல தூக்கி வளத்தேனே. உங்களுக்குக் கெடுதி நினைப்பேனா. நீங்க போயிடுங்கைய்யா” என்று மன்றாடுகிறான். இந்த சக்கிலியக் குப்பன் திருடன் அல்ல. சகமனிதன் மீதான, தனது முதலாளியின் வாழ்வு மீதான அக்கறை கொண்ட கிராமத்து மனிதன். 32 -வயதாகியும் பல்வேறு காரணங்களால் திருமணம் தள்ளிப் போகும் ஒருவனின் வாழ்க்கை மீதான அக்கறையை வெளிப்படுத்தும் தூய உள்ளம் கொண்ட நேசிக்கத் தகுந்த மனிதன். போலவே கங்கணம் மாரிமுத்து தூக்கக் கலக்கத்தில் நிலவின் ஒளியில் பட்டுத் தெறிக்கும் தாயின் இடுப்பைப் பார்த்து ஒருநிமிடம் சபலப்படுகிறான். அடுத்த நொடி சுதாரித்து உள்ளறையில் சென்று படுத்துக்கொள்கிறான்.

“அன்னைக்கும் இதே மாதிரி நிலாடா. இந்த நெலா இருக்குதே இது பொல்லாததுடா. யாரையும் மானங்கெட வெச்சிரும். அன்னைக்கும் அப்படித்தான். ஒடம்பெல்லாம் கணகணன்னு வேவுது. திடுக்குனு முழுச்சிப் பாக்கறன். எதுத்தாப்பல நெலா வெளிச்சத்துல ஒரு இடுப்பு மின்னுது. அப்படியே எந்திரிச்சிப் போயி அந்த இடுப்பக் கட்டிக்கோனும்னு தோணுது. எந்திரிச்சிட்டன். அப்பா எங்கருந்தோ அறிவு வந்து அது உங்கம்மாடான்னுது. அய்யோன்னு மனசுக்குள்ள கத்திக்கிட்டு ஊட்டுக்குள்ள எந்திரிச்சிப் போயிட்டன். அன்னையிலருந்து நான் தனியாத்தான் படுதுக்கறன். அப்பேற்பட்ட அயோக்கியண்டா நான்.” (கங்கணம்: பக்கம் - 299)

கூள மாதாரியின் செவிடி, தான் வேலை செய்யும் கவுண்டச்சியின் குழந்தையை எப்பொழுதும் இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டிருகிறாள். ஆடு மேய்க்கும் இடத்திற்கும் தூக்கிச் செல்கிறாள். ஒருமுறை கிணற்றில் குதித்து நீராடுகையில், குழந்தையின் ஞாபகம் வந்து கிணற்றின் மேலேறி வருகிறாள். “ச்சே... இந்தக் கொழந்தயோட கழுத்த பிச்சி வானத்துல எறிந்சிட்டா எவ்வளோ நிம்ம்மதியா இருக்கலாம்” என்று நினைக்கிறாள். யானையில் தூங்கும் குழந்தையின் முகத்தைப் பார்த்ததும், “இந்தக் கொழந்தையையா அப்படி நெனச்சோம்...” என்று வருந்துகிறாள். வாழ்வின் நெருக்குதல்கள் இதுபோன்ற மனசஞ்சலத்தை உருவாக்குவதும், அதிலிருந்து விடுபடுவதும் தவிர்க்க முடியாத ஒன்றுதானே.

கிராமத்தில் வாழ்பவர்கள் எல்லா வகையிலும் வெள்ளந்தியானவர்கள் என்ற பொதுப்புத்தியில் எழுதிச் செல்லாமல், சந்தற்ப சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களும் பலமும் பலவீனமும் கொண்ட எளிய கிராமத்து மனிதர்கள் தான் என்பது போல பாத்திரங்களை பெருமாள் முருகன் வார்த்தெடுக்கிறார்.

“இருண்ட உலகத்தில் வாழும் விளிம்புநிலை மனிதர்கள் என்று யாருமே இல்லை. நல்லது-கெட்டது, தீயவன்–கொடியவன், நன்மை-தீமை, உயர்ந்தவை-தாழ்ந்தவை என்ற பேதம் எதுவுமே உலகத்தில் இல்லை. இவை யாவும் நம்முடைய கற்பிதங்கள்” என்று கூறுவார் எழுத்தாளர் பிரபஞ்சன். எல்லாமே சூழலைப் பொறுத்து வெளிப்படும் மனிதர்களின் கன நேர உணர்வுகள் தான். பெருமாள் முருகனின் மொத்த நாவல்களையும் அசைபோடுகையில் எழுத்தாளர் பிரபஞ்சனின் கூற்று உறுதிப்படுகிறது. நாஞ்சில்நாடன் பகிர்ந்ததைப் போல “சூப்பி எறியப்பட்ட மாங்கொட்டைகள் திக்குத் தெரியாமல் முளை விடுவதைப் போல”, இவர்கள் தத்துவ விசாரணைகள் எதுவும் அற்று வாழ்வின் மீதான நம்பிக்கையில் துளிர் விடக் கூடிய யதார்த்த மனிதர்கள்”. நாமெல்லாம் கூட அந்த நம்பிக்கையில் துளிர்த்தவர்கள் தானே...!

“இன்னும் பத்து நவல்களாவது எழுதும் எண்ணம் எனக்கிருக்கிறது. ஏராளமான வேலைகள் மிச்சம் இருகிறது” என்றார் முருகன். அந்த வகையில் நாம் பாக்கியசாலிகள். ஏனெனில், எதிர்காலத்தில் முருகனைப் பற்றி நிறையவே பேசலாம். அதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது.
Prof. Ezhilarasi Akka (Mrs. Perumal Murugan) with her younger son Elam Parithi 
at Vilakku Viruthu Function.

Photo Courtesy By: www.facebook.com/chandrujcm 

Monday, February 10, 2014

பேராசிரியரின் கைகளில் செருப்பு

“மீடியம் சைஸ் லீவிஸ் பிரான்ட் அண்டர்வேர்” கெடைக்கறது குதரக் கொம்பான விஷயம் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. ஆகவே, சென்ற வாரத்தின் ஒருநாள் நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையிலிருக்கும் லீவிஸ் ஷோ ரூமுக்கு யதேர்ச்சையாகச் செல்ல நேர்ந்தது. நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் அமைந்துள்ள டி.பி.ஐ அலுவலகத்திலிருந்து நடந்தவாரே லீவிஸ் ஷோ ரூமை அடைந்தேன். சாயம் போன அரதப் பழசான கால்சட்டையும், தையல் பிரிந்த கிழிசல் கண்ட சட்டையும் வேறு அணிந்திருந்தேன். சுமார் இரண்டு கி.மீ தொலைவிருந்தால் அதிகம் தான். 

வேர்த்து விறுவிறுத்தவாறு கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றதும், முதல் வேலையாக காலணிகளைக் கழட்டி ஓரமாக விட்டுவிட்டு, உள்ளாடை இருந்த ரேக்கிற்குச் சென்று ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். வெள்ளை வெளேரென்றிருந்த ஒருவர் என்னிடம் நெருங்கி பவ்யத்துடன் “சார்... நீங்க செப்பல்ஸ் போட்டுக்கிட்டே பாக்கலாங்க சார்...” என்றார்.

“இல்ல... டிபிஐ-ல இருந்து ரெண்டு, மூணு கிலோமீட்டர் தூரம் நடந்து தான் இங்க வந்திருக்கேன். எதையெல்லாம் மிதிச்சி (எச்சிலும் துப்பலும்) நடந்து இங்க வந்திருக்கேன்னு எனக்கே தெரியல... இவ்வளோ பளபளன்னு வேற மெயிண்டன் பண்றிங்க. மனசு கேக்கல அதான் செருப்ப கழட்டி ஒரு ஓரமாக உட்டுட்டேன்” என்றேன்.

கண்கள் அகல விரிய “ஒஹ்... தேன்ங்க் யூ... தேன்ங்க் யூ சார்...” என்றார் அந்த உருண்டை முகம் கொண்ட வெள்ளை மனிதர். சாயம்போன கால் சட்டையும், கிழிந்த டீ ஷர்ட்டும் அணிந்திருந்த என்னை மட்டுமல்ல – பென்ஸ் காரில் வந்திறங்கி யாரேனும் அந்தக் கடைக்குள் நுழைந்திருந்தாலும் கூட அவர் அப்படித்தான் நடந்துகொண்டிருப்பார்.

பிப்ரவரி 05, 06, 07 ஆகிய மூன்று நாட்களும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதி நல்கையுடன் – பொன்னேரி “உலகநாத நாராயணசுவாமி அரசினர் கல்லூரியின் தமிழ்த்துறை, “தமிழ்ச் செவ்வியல் மரபில் நெய்தல்நில வாழ்வியல்” என்ற தலைப்பில் மூன்று நாள் தேசிய கருத்தரங்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். எனக்கு மிகப் பிடித்த முனைவர்களான பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவராக இருந்த வளவன், சென்னை பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் வீ. அரசு மற்றும் ஜோ.டி. குரூஸ் ஆகியோரும் பங்கேற்க இருந்ததால் விழாவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தேன்.

துவக்க நாளில் சாகித்ய அகாடமி விருதுபெற்ற ஜோ.டி. குரூஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று விழாவினை சிறப்பித்தார். மூன்று நாட்களிலும் ஏற்பாடாகியிருந்த பல்வேறு அமர்வுகளில் பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் கட்டுரையை சமர்ப்பித்து மாணவர்கள் முன்பு, தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள். நிறைவு நாளன்று பேராசிரியர் வீ. அரசு கலந்து கொண்டு, சமர்ப்பித்த கட்டுரைகளின் நூல் வடிவத்தை வெளியிடுவதாக இருந்தது. அதற்க்கு முன்பு – இவ்விழாவினை ஒருங்கிணைத்து கருத்தரங்கம் நடைபெறுவதற்குக் காரணமாக இருந்த உதவிப் பேராசிரியர் செல்வகுமார் நன்றியுரை ஆற்றினார்.

இக்கருத்தரங்கு நடைபெறுவதற்கு தமிழ் ஆர்வலரான உ.நா. அரசு கல்லூரி முதல்வர் வீரபத்ரனும், தமிழ்த் துறைத் தலைவர் பொன்முடி சுடரொளியும் காட்டிய ஈடுபாட்டினைச் சுட்டிக்காட்டிய செல்வகுமார், பேராசியர் அரசுவுடனான ஒரு சம்பவத்தையும் பகிர்ந்துகொண்டார். (பெருமாள் முருகன் & வீ. அரசு ஆகியோரின் மாணவர் உதவிப் பேராசிரியர் செல்வகுமார்.)

செல்வகுமார் சொல்கிறார்: இது நடந்தது 1996 –ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். தமிழ்த் துறையில் அப்பொழுது தான் சேர்ந்திருந்த நேரம். கிராமத்திலிருந்து புதிதாகச் சென்னைக்கு வந்திருந்த காலம். ஒருநாள் பேராசிரியர் அரசு ஐயா அவர்கள், பெசன்ட் நகரில் இருந்த அவரது இல்லத்திற்கு எங்களை அழைத்துச் சென்றிருந்தார். கடற்கரை பக்கம் என்பதால் அங்கும் அழைத்துச் சென்றிருந்தார். கடற்கரையைப் பார்த்ததும் பேராசிரியருடன் சென்றிருந்த எங்கள் மூன்று பேருக்கும் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. கால்களை கடலில் நனைக்க ஆசைப்பட்டு எங்களது செருப்புகளைக் கழட்டி விட்டுவிட்டு முழங்கால் நனைய அலைபுரளும் கடலோரத்தில் உடன் வந்திருந்த ஐயாவை மறந்து சந்தோஷித்திருந்தோம். திடீரென ஞாபகம் வந்து ஐயாவைத் திரும்பிப் பார்த்ததும் அதிர்ந்துவிட்டோம். எங்களது மூன்று பேருடைய செருப்புகளும் ஐயாவின் விரல்களில் தொங்கிக் கொண்டிருந்தது. நாங்கள் பதறி அடித்துக்கொண்டு அவரிடம் ஓடிச்சென்று கேட்டோம்... “என்னங்கையா எங்க செருப்ப நீங்க கையில வச்சிக்குனு இருக்கீங்க...?”

“பின்ன... கடலல செருப்பு எல்லாத்தையும் உள்ள இழுத்துட்டா... பின்னாடி ஓடுறது நமக்கு சிரமம் இல்ல...” என்றாராம் பேராசிரியர் வீ. அரசு. இதுபோன்ற பக்குவப்பட்ட யதார்த்த மனிதர்களைப் பார்ப்பதே அரிதிலும் அரிதுதான். மேற்கூறிய சம்பவங்கள் இரண்டும், ஒரு ஜென் கதையைத் தான் ஞாபகப்படுத்தியது. அகல் வெளியீட்டில் பிரசுரம் கண்ட “ஜென் கதைகள்” தொகுப்பில் இக்கதை உள்ளது.

அலைக்குப் பிறந்த ஞானம்

“ஓ... நான் எவ்வளவு துயரப்படுகிறேன். மற்ற அலைகள் எல்லாம் பிரம்மாண்டமாக இருக்கின்றன. நானோ ரொம்பக் குட்டியாக இருக்கிறேன். சில அலைகள் மிகவும் வலுவாக இருக்கின்றன. நானோ ரொம்பப் பூஞ்சையாக இருக்கிறேன்.” என அலை துயரப்படுகிறது.

“உன் சுயத்தையே நீ இன்னும் பார்க்கவில்லை. அதனால் தான் நீ துயரப் படுகிறாய்.”

“நான் அலை இல்லையா? அப்படியென்றால் வேறென்ன?” என்று அலை கேட்கிறது.

“அலை என்பது உனது தற்காலிக வடிவம். நீ உண்மையில் தண்ணீர்.”

“தண்ணீரா?” என்கிறது அலை.

“உனது அடிப்படையான சாராம்சம் தண்ணீர் என்பதை நீ உணரும் போது, அலையாக இருப்பது குறித்து மனம் குழம்பமாட்டாய். அதோடு, உனது வாட்டமும் போய்விடும்.”

ஜென் தத்துவம் போதிக்கும் இந்த விஷயம் உண்மை தானே நண்பர்களே. ஒவ்வொரு மனிதனும் அறிவாலும் உழைப்பாலும் உச்சத்தை அடைந்தாலும், தலைமைப் பொறுப்பில் இருந்தாலும் – எல்லோரும் சக மனிதர்கள் என்பதை ஒருசிலர் தானே உணர்ந்து வாழ்வினை எளிதாக அமைத்துக் கொள்கிறார்கள். அந்த லீவிஸ் விற்பனைப் பிரதிநிதிக்காவது கஸ்டமர் சாட்டிஸ்ஃபேக்ஷன் என்றொரு நிர்பந்தம் இருக்கிறது. பேராசிரியர் அரசுவுக்கு அதெல்லாம் ஒன்றுமே இல்லை. எனினும் தனது மாணவர்களை சக நண்பர்களாகவும், சக மனிதர்களாகவும் நேசிக்கக் கூடிய பக்குவம் இயல்பிலேயே அவருக்கு இருந்திருக்கிறது போலும். இதுபோன்ற ஆசிரியர்கள் அருகிக்கொண்டே வருகிறார்கள். பதினெட்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் என்றாலும், அரசுவின் இந்தச் செயல் மாணவர்கள் எல்லோராலும் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. “ஆய்வாளர், எழுத்தாளர், நடக்கக்காரர், விமர்சகர்” என எத்தனையோ காரணங்கள் இருக்கிறது. அவரை நெருங்கிச் சென்று கைகுலுக்க. இதுநாள் வரை அப்படிச் செய்ததில்லை. கருத்திரங்கில் பேசி முடித்து வெளியில் வந்ததும் அரசுவின் அருகில் சென்றேன். “உங்கள சந்திச்சதுல ரொம்ப சந்தோஷங்க அரசு... சென்னை கூட்டங்களில் கடைசி வரிசையில நின்னு, உங்களுடைய பேச்சுக்களைக் கேட்டதுண்டு. எங்க ஊருக்கு வந்து பேசி இருக்கீங்க... ரொம்ப அருமையா பேசுனீங்க... ரொம்ப சந்தோசம்... ரொம்ப சந்தோசம்...” என்று கைகுளுக்கினேன். சிரித்துக்கொண்டே அவரும் கைகளை நீட்டினார்.

எங்களது நான்கு கைகளும் ஒன்றாக சங்கமித்தன. உண்மையில் அவருடைய பேச்சுக்கான கைகுலுக்கல் அல்ல அது. இதுபோன்று ஆயிரம் மேடைகள் கண்டிருப்பார் அவர். எனினும், மாணவர்களின் செருப்பைக் கைகளில் ஏந்திய பேராசிரியரின் விரல்களைத் தொட்டுப்பார்க்கும் சந்தர்ப்பம் இனி வாழ்வில் கிடைக்குமோ என்னவோ! அவருடைய ரேகைகளை என்னுடைய கைகளில் கடத்திக் கொண்டேன்.

பேராசிரியர் வீ அரசுவைக் கொண்டாட வேண்டிய தருணமும் இதுதான். ஏனெனில் இன்னும் சில மாதங்களில் தனது ஆசிரியப் பணியிலிருந்து அரசு ஓய்வு பெறப்போகிறார். அவருக்கு நமது காதலும், நேசமும் உரித்தாகட்டும்.

கோபக்காரன் என்றும் உங்களைச் சொல்கிறார்கள். எனினும் கோபம் இருக்கும் இடத்தில் தானே குணமும் இருக்கும். நீங்கள் அதிசய மனிதர் அரசு. எளிமையான விஷயங்களெல்லாம் என் போன்றவர்களுக்கு அதிசயமாகத் தானே இருக்கிறது.

:-)

Sunday, February 9, 2014

முள்ளும் மலரும் – வேர்களைத் தேடி

ஓர் இதழையும் (புதிய தரிசனம்), ஒரு பதிப்பகத்தையும் (அம்ருதா), ஒரு குறும்பட ஆர்வலரையும் (அருண் தமிழ் ஸ்டுடியோ) – போலவே, “முள்ளும் மலரும்” திரைப்படம் சார்ந்து. 

பழைய வார இதழ்களையும், மாத இதழ்களையும் (அதன் பதிப்பாளர்களால்) புத்தகக் கண்காட்சி போன்ற விழாக்கால நாட்களில் வாசகர்களுக்கு இலவசமாகக் கொடுப்பது வழக்கம் தான். இதெல்லாம் ஒரு மார்கெட்டிங் முறை. அப்படித் தான், கடந்த சென்னை புத்தகக் கண்காட்சியின் ஒருநாள் – கால்போன போக்கில் நடந்து கொண்டிருந்த பொழுது - “புதிய தரிசனம் (பார்வை 1, ஏப்ரல் 16-30, 2013)” என்ற ஃபோர்ட்நைட் இதழ் என்னுடைய கைகளுக்கு வந்து சேர்ந்தது. பக்கங்களைப் புரட்டிக் கொண்டே வந்ததில் ஒரு விஷயம் கண்களில் பட்டது. பக்கம் 29-ல் அருண் தமிழ் ஸ்டுடியோ (ஏப்ரல் 11-ல், 11.16 am) – தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்த “முள்ளும்... மலரும்...” என்ற நிலைத்தகவல் பகிர்வு தான் அது. ஏறக்குறைய ஒன்றரை வருடத்திற்கு முந்திய இதழ் என்றாலும் இப்பொழுதுதானே கைகளுக்குக் கிடைத்தது. ஆகவே, பேச வேண்டியது அவசியமாகிறது.

நிலைத்தகவலின் இரண்டாவது பத்தி எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இயக்குனர் மகேந்திரனின் “முள்ளும் மலரும்” திரைப்படத்தைப் பற்றி அவர் பகிர்ந்திருந்த வரிகள் பின்வருமாறு:

“ஒரு சிறுகதையை, இந்த அளவிற்கு நேர்த்தியாக சிறுகதையில் சில மாற்றங்களோடு, இனி ஒருவரால் எடுக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை. இத்தனைக்கும் அந்த சிறுகதையை எங்கே மாற்ற வேண்டும் என்று மிக தெளிவாக மகேந்திரன் ஒரு வரையறையை செய்திருக்கிறார். அந்த இடத்தைத் தவிர, வேறு எந்த இடத்தில் அந்த சிறுகதையை மாற்றி இருந்தாலும் இப்படி நான் முள்ளும் மலரும் படத்தை பற்றி நான் பேசிக்கொண்டிருக்க முடியாது.”

இதனினும் ஹாஸ்யக் கூத்து வேறொன்றும் இருக்க முடியாது. “புதிய தரிசனம்” எடிட்டராவது கொஞ்சம் கவனத்து பிரசுரம் செய்திருக்கலாம். “முள்ளும் மலரும்” – அருண் தமிழ் ஸ்டுடியோ நினைப்பது போல “சிறுகதை” அல்ல. தொடராக வெளிவந்து வாசகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற உமா சந்தரனின் தொடர் நாவல். இத்தொடர் பின்னர் புத்தகமாகவும் வெளிவந்துள்ளது. (இவரது இயற்பெயர் பூர்ணம் ராமச்சந்திரன். தனது தாயின் பெயரான “உமா”வை சேர்த்துக்கொண்டு உமா சந்திரன் என்ற பெயரில் எழுதியவர். இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது சகோதரர் பூர்ணம் விஸ்வநாதன் நாடக உலகிலும், திரைப்பட குணசித்திர நடிப்பிலும் கோலோச்சிய பூர்ணம் விஸ்வநாதன் என்பது குறிப்பிடத்தக்கது. உமா சந்திரனின் புதல்வர் தான் ஆர். நடராஜ் I.P.S)

“முள்ளும் மலரும்” கல்கி வெள்ளி விழாப் போட்டியில் நடுவர்கள் அனைவராலும் விருப்பத்துக்குரிய படைப்பு என ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரிய நாவல். 1976, ஆகஸ்ட் மாதம் “கல்கி” வெள்ளிவிழா இதழில் தொடங்கி எட்டு மாதங்கள் தொடர்ச்சியாக வெளிவந்த இந்த நாவலை அருணா பப்ளிகேஷன்ஸ் வாயிலாக முதற்பதிப்பும், அதன் பின் 1982-ல் வானதி பதிப்பகத்தின் மூலம் மறுபதிப்பும், 2008-ஆம் ஆண்டு மூன்றாம் பதிப்பாக “அம்ருதா”விலும் பிரசுரம் கண்ட நாவல் என்பதை யூகிக்க முடிகிறது. அந்த காலத்திலேயே ரூபாய் 10, 000 –த்தை பரிசுத் தொகையாகப் பெற்ற நாவல் இது. இந்த விஷயங்கள் எல்லாம் அம்ருதா பதிப்பித்த புத்தகத்தில் உள்ளது. ஆர். நடராஜ் IPS மற்றும் இயக்குனர் மகேந்திரன் எழுதிய முன்னுரைகள் அதே அம்ருதா பதிப்பக வெளியீட்டில் இருக்கின்றது. மகேந்திரனின் முன்னுரையில் “முள்ளும் மலரும்” திரைக்கதையாக உருவான கதையை “நாவல் திரைப்படமானது எப்படி?” என தெளிவாக விளக்கியுள்ளார். அவற்றில் சில: “காளியின் வின்ச் ஆபரேட்டர் உத்தியோகமும், அவனுடைய வித்தியாசமான சுய கெளரவமும் என்னைக் கவர்ந்தன. நாவலில் ‘காளி’யைப் புலி ஒன்று தாக்கி, அவனது ஒரு கை போய்விடும். அந்த அத்தியாயத்தோடு நாவலை மூடி வைத்துவிட்டேன்.”

“பிறகு காளி, அவன் தங்கை வள்ளி, இருவரின் குழந்தைப் பருவம் என்று ஒவ்வொன்றாக புதிது புதிதாய்ச் சேர்த்துக் கொண்டேபோய் திரைக்கதையின் கடைசிக் காட்சி வரை என் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி திரைக்கதை எழுதி முடித்துவிட்டேன்.”

“துக்ளக் பத்திரிகையில் சினிமா விமர்சனம் எழுதிவந்த நான் தமிழ்ப் படங்களை எப்படியெல்லாம் விமர்சித்திருக்கிறேன்? நானா இப்போது அதே தவறுகளைச் செய்கிறேன். (கமர்ஷியல் சினிமாவிற்கு வசனம் எழுதுவது.)”

“மறுபடியும் மறுபடியும் என்னைக் கதை வசனம் எழுதச்சொல்லி வற்புறுத்திய படத் தயாரிப்பாளர்களிடம் திடீரென இப்படிச் சொன்னேன்: என்னிடம் கதையே இல்லை... ஏதாவது நாவல்கள் வாங்கி வாருங்கள். எனக்குப் பிடித்த நாவலுக்கு நான் திரைக்கதை வசனம் எழுதித் தருகிறேன். இதுதான் என் முடிவு. அவர்களும் சம்மதித்தார்கள். அப்படி என்னிடம் வந்து சேர்ந்த நாவல்களில் ஒன்றுதான் முள்ளும் மலரும். ஏதோ எனது பர்சனல் டயரியில் அந்தரங்க உணர்வை எழுதி வைத்துக்கொள்ளும் விதமாகத்தான் அந்தற்குத் திரைக்கதை எழுதினேன். எனக்கு நன்றாகத் தெரியும், அந்த திரைக்கதையை எந்தத் தயாரிப்பாளர் கேட்டாலும் படமெடுக்க நிச்சயம் ஒத்துக்கொள்ளமாட்டார். ஏனெனில் தமிழ் சினிமாவின் வழக்கமான ‘மெலோ டிராமா’, அதிக வசனம், ஓவர் ஆக்டிங், டூயட், மாமூல் க்ளைமாக்ஸ் எதுவும் எனது முள்ளும் மலரும் திரைக்கதையில் கிடையாது. வேறு மாதிரிச் சொன்னால் அதுவரை நான் கதை வசனம் எழுதி வெற்றி கண்ட படங்களின் ஃபார்முலா சுத்தமாக இதில் இல்லை.”

பின்னர் முக்தா ஃபிலிம்ஸ் அதிபர் முக்தா சீனிவாசன் இந்த படத்தைத் தயாரிக்க முன்வந்திருக்கிறார். “நான் சொல்லப் போறது அண்ணன் - தங்கச்சி கதை” என்று மகேந்திரன் சொல்லவும், வேறெதையும் கேட்காமல் முக்தா சீனிவாசன் நடையைக் கட்டி இருக்கிறார். பின்னர் ஷூட்டிங் ஸ்பாட் எதற்கும் கூட சீனிவாசன் வரவில்லையாம். வேணு செட்டியார் மற்றும் படத்தின் கேமராமேன் ஒருவருடன் 2000 கிலோமீட்டர்கள் சுற்றி லொகேஷன் பார்த்திருக்கிறார்கள். பின்னர் கேமரா மேன் இந்தப் படத்திலிருந்து விலகிக்கொள்ள, யாரை கேமரா மேனாகப் பயன்படுத்துவது என்று மகேந்திரன் குழம்பி இருக்கிறார். நடிகர் கமல்ஹாசன் தான் பாலுமகேந்திராவை மகேந்திரனுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். பின்னர் இளையராஜா இந்தக் கூட்டணியுடன் சேர்ந்துகொள்ள மகேந்திரனுக்கு நம்பிக்கை பிறந்திருக்கிறது. பின்னர், ஒருநாள் படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் குழு “என் தலையில இடிய எறக்கிட்டையே... படம் தேறாது” என்று சொல்லி இருகிறார்கள். அதுபோலவே இரண்டு வாரங்கள் டென்ட் கொட்டாய்களிலும், டூரிங் டாக்கீஸ்களிலும் கூட்டமே இல்லையாம். மூன்றாவது வாரத்திலிருந்து திரைப்படத்தைக் காண வந்த கூட்டம் அலைமோதியதாம். பின்னர் மகேந்திரனைத் தேடிவந்த தயாரிப்பாளர் ஒரு பிளாங்க் செக்கை நீட்டி “உனக்கு எவ்வளவு வேணுமோ ஃபில் பண்ணிக்கோ என்று நீட்டினாராம்.”

“இந்தப் படத்தை நீங்க தயாரிச்சதே. கோடி ரூபாய்க்கு சமம்” என்றாராம் இயக்குனர் மகேந்திரன்.

இந்த எல்லா விஷயங்களும் அம்ருதா வெளியிட்ட புத்தகத்தின் முன்னுரையில் தெளிவாக இருக்கிறது. அப்படியிருக்க ஆதாரமில்லாத தகவலை – அதாவது “முள்ளும் மலரும்” சிறுகதை, திரைப்படமாக ஆக்கப்பட்டது என அருண் தமிழ் ஸ்டுடியோ எப்படி எழுதினர் என்பது எனக்கு இன்னும் கூட விளங்கவில்லை!. இந்த விஷயத்தை அருமை நண்பர் அருணின் கவனத்திற்கு நண்பர்கள் எடுத்துச் சென்றால் மகிழ்வேன். (ஒருவேளை புதிய தரிசனம் பிழையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்திருந்ததற்கு, அதற்கடுத்த இதழில் வருத்தத்தையும் பதிவு செய்திருக்கலாம்.)

போகட்டும், இனி அம்ருதாவின் “முள்ளும் மலரும்” பதிப்புக்கு வருவோம். முதற்பதிப்பு 1967, முறையே 1976, 1982, 2008 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்த பதிப்புகள் வெளிவந்துள்ளதென குறிப்பிட்டிருக்கிறார்கள். “இதயத்திலிருந்து...” என்ற முன்னுரையில் ஆர். நடராஜ், இ. கா. ப: “முள்ளும் மலரும் - முதலில் வானதி பதிப்பகம், திருநாவுக்கரசு அவர்களால், 1982-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது” என்கிறார். உமா சந்திரன் “நன்றி” என்ற பின்னுரையில் “1976 ஆகஸ்ட் மாதம் கல்கி வெள்ளி விழா இதழில் தொடங்கி எட்டு மாதங்கள் தொடர்ச்சியாக வெளிவந்த இந்த நாவல் அருணா பப்ளிகேஷன்ஸ் வாயிலாக முதற்பதிப்பு வெளியானது” என்கிறார். 

தலையைச் சுற்றுகிறாதா... “1976 ஆகஸ்டில் வெளிவந்த தொடருக்கு, 1967-ல் முதற்பதிப்பு வந்தது எனில் யாருக்குத் தான் தலையைச் சுற்றத்து! ப்ரூஃப் பார்த்தவர்களின் கவனக் குறைவாக இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது. அம்ருதா பதிப்பகம் இதனை கவனத்தில் எடுத்துக் கொண்டால் மகிழ்வேன். (மறுபதிப்பு வந்ததா என்று தெரியவில்லை. அப்படி வந்தால் இந்த முரண்கள் களையப்பட வேண்டும் என்ற உந்துதலில் தான் கோடிட்டுக் காண்பிக்கிறேன்.)

மற்றபடி அருணுக்குச் சொல்ல என்ன மிச்சம் இருக்கிறது? அவர் வழி தனி வழி. ஆதாரத்துடன் ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்டினால், நண்பர்கள் வட்டத்திலிருந்து நீக்கிவிடுவர். அவருடைய கவனத்திற்கு இந்த விஷயங்களெல்லாம் சென்றால் மகிழ்ச்சி தான்.

நேற்றைய ரயில் பயணத்தில் நண்பர் பிரபாகரன் தவசிமுத்துவை சந்திக்க நேர்ந்தது. அவர் பகிர்ந்த விஷயம் எனக்கு ஏற்றுக்கொள்ளும் படியாக இருந்தது.

“கிருஷ்ணா, ஒரு விஷயம் தனக்குப் பிடித்திருந்தால், அந்த விஷயத்தை பிரம்மப் பிரயத்தனம் செய்தாவது உலகின் மிகச் சிறந்த ஓர் ஆக்கம், நோபலுக்கு நிகர், ஆஸ்காருக்கு ஈக்குவல், கேன்சைவிட கெத்து என்று நிறுவும் வேலையை தற்கால எழுத்தாளர்களும், முகநூல் டெம்ப்லேட் ரைட்டர்களும் ஹயக்கமின்றி செய்கிறார்கள்” என்றார்.

எனக்கும் பிரபாவின் கருத்து ஏற்புடையதாகத் தான் இருந்தது. கணிதத்தில் X, Y, Z, P, Q, R, A, B, C ஆல்ஃபா, பீட்டா, காமா, தீட்டா, டெல்டா என்பது போன்ற பல குறியீட்டு எழுத்துக்களையும் எடுத்துக்கொண்டு கணித சூத்திரங்களை நிரூபணம் செய்வோம். அதுபோலத் தான் தற்கால சினிமா கருத்துப் பகிர்தல்கள், வியந்தோதல்கள் மற்றும் விமர்சனங்களில் “குறியீடுகள்” என்ற வார்த்தை அதிகம் பயன்படுத்தப் படுகிறதோ என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடிவதில்லை.

கடைசியாக, அருண் தமிழ் ஸ்டுடியோ பின்வருமாறு முடித்திருந்தார்: “முள்ளும் மலரும் படத்திற்கு நான் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நினைப்பே, என்னுடைய எல்லா கவலைகளையும் தாண்டி, இப்போதைக்கு என் மனதில் ஓடிக்கொண்டிருகிறது.”

நண்பர் செய்ய வேண்டிய விஷயங்களில் கொஞ்சம் போல கவனம் எடுத்துக் கொண்டு செய்தால் நல்லது. இல்லையேல் காற்றில் பரவும் கிருமி போல தவறான தகவல்கள் பரவும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

Sunday, February 2, 2014

BAPASI-ன் கவனத்திற்கு


பபாசிக்கு கவலையே வேண்டாம். “ஒன்னுக்கு போற எடம் சரியில்ல... கப்பு தாங்கலன்னு...” எதையும் நான் சொல்ல வரல. இந்த மேட்டரே வேற.

புத்தகக் கண்காட்சியில் சேல்ஸ் மேன் வேலையுடன், காலச்சுவடு பதிப்பகம் சார்ந்த சிறு ஆராய்ச்சியும் செய்ததால் எனக்கொரு சந்தேகம் வந்துவிட்டது. “இலக்கிய ஆக்கங்களைப் படிப்பதில் இளைஞர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்களா?. போலவே, இதர தமிழ்ப் புத்தகங்களையும் படிக்க முன் வருகிறார்களா?” என்பது தான் ஆய்வின் பிரதான நோக்கம். ஆனால் மற்றொரு விதத்தில் எனக்கு மண்டையே வெடித்துவிடும் போலக் கூட இருந்தது. ஏனெனில் பத்து நாட்களில் ஏறக்குறைய 1,000 இளைஞர்களைக் காலச்சுவடு பதிப்பக அரங்கில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். சாரை சாரையாக இளைஞர்கள் வந்துகொண்டே இருந்தார்கள். அதில் பலரும் முதன் முறையாக புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. “முதன்முறையா புத்தகம் வாங்க வரோம் எதாச்சும் புக்ஸ் ரெஃபர் பண்ணுங்களேன்” என்று கேட்டார்கள்.

“இங்க தமிழ் லிட்டரரி புக்ஸ் தான் கெடைக்கும்...” என்று சொல்லியது தான் தாமதம் “அந்த மாதிரி புக்ஸ் தான் தேடிட்டு வந்திருக்கேன்.” என்று பலரும் கூறினார்கள். பொறியியல், மருத்துவம், பொருளியல், கணிதம், ஆராய்ச்சி என பல்துறை மாணவர்களும் இதில் அடக்கம்.

சந்தித்தவர்களில் சுமார் 700 நண்பர்களாவது ஏதேனும் புத்தகத்தை வாங்கிக் கொண்டு தான் சென்றார்கள். எல்லோரும் “டிவி விளம்பரம், டிவி நியூஸ், நாளிதழ் செய்திகள், முகநூல் பகிர்தல்” போன்ற ஏதேனும் ஒன்றைப் பார்த்து வந்தவர்களாகத் தான் இருந்தார்கள். சந்தித்த இளைஞர்களுடன் பேசியதில் – அவர்களுடைய இருப்பிடமானது பெரும்பாலும் சென்னையாகத் தான் இருந்தது. ஒருசிலர் “காஞ்சிபுரம், வேலூர், திருப்பூர், பாண்டிச்சேரி, மதுரை, சேலம், பெங்களூர்” போன்ற இடங்களிலிருந்தும் வந்தவர்களாக இருந்தார்கள். (இவர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவு.)

“திருவற்றியூர், கத்திவாக்கம், மீஞ்சூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பழவேற்காடு” போன்ற இடங்களிலிருந்தும், அவ்வளவு ஏன்...! “அம்பத்தூர், ஆவடி, ரெட்டில்ஸ், ஊத்துகோட்டை, திருவள்ளூர்” போன்ற இடங்களிலிருந்தும் யாரேனும் நண்பர்கள் வருகிறார்களா என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஒருவரையும் காணவில்லை. மீஞ்சூரிலிருந்து “பொன்தமிழ்” என்ற தரமணி திரைத்துறை மாணவர் வந்திருந்தார். திருவற்றியூரிலிருந்து திரைப்படங்களைப் பற்றி எழுதும் பதிவர் பிரபா வந்திருந்தார். ஆயிரத்தில் இரண்டு பேர் என்பது மிகமிகக் குறைவான விகிதம். ரயில் பயணத்தில் கூட புத்தக சந்தைக்குச் சென்று திரும்பிய ஒருவரையும் பார்க்க முடியவில்லை. “எங்கோ இடிக்கிறதே...!” என்று மண்டையே வெடித்தது. அப்படிப்பட்ட சூழலில் தான் “வேலம்மாள் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பொன்னேரி”-க்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் ஒருநாள், மதியம் போல உணவு நேரத்தில் அந்த கல்லூரிக்குச் சென்றிருந்தேன். ஆகவே, ஏராளமான மாணவர்கள் அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்தார்கள். ஏறக்குறைய ஐம்பது நண்பர்களிடம் பேசினேன். உனக்கென்ன இவ்வளவு அக்கறை என்ற சந்தேகம் வரலாம். புத்தகக் கண்காட்சியின் ஸ்டார் ஸ்பான்சர்களில் “வேலம்மாள் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பொன்னேரி”-யும் ஒன்று. ஆனந்த விகடன் போலவே, இந்தக் கல்வி நிறுவனத்தின் பேனர்களையும் பெரிது பெரிதாக கண்காட்சியின் பல இடங்களிலும் நீங்கள் பார்த்திருக்கலாம். ஆகவேதான் இந்தக் கேள்விகள்:

“ஒரு ரெண்டு நிமிஷம் உங்கக்கிட்ட பேசலாமா?”

“ம்... சொல்லுங்க...”

“ரெண்டு வாரத்துக்கு முன்னாடி மவுன்ட் ரோடு, நந்தனம் YMCA கிரவுண்டுல சென்னை புக் ஃபேர் நடந்துச்சு... அதப்பத்தி உங்களுக்குத் தெரியுங்களா?” என்றேன். (45 மாணவர்களும் 5 மாணவிகளும் இதில் அடக்கம்)

“ஹூஹூம்... எங்களுக்குத் தெரியாதே...” என்று 43 மாணவர்கள் தெரிவித்தனர். இரண்டு மாணவர்களுக்குத் தெரிந்திருந்தும் கண்காட்சிக்கு அவர்களால் செல்ல முடியவில்லை. தேர்வு இருந்ததால் செல்ல முடியவில்லை என்ற காரணத்தைக் கூறினார்கள். மாணவிகளில் ஒருவருக்குத் தான் கண்காட்சி பற்றிய தகவல் தெரிந்திருந்தது. விடுதியில் தங்கிப் படிப்பதால் அந்தச் சகோதரியால் புத்தகக் கண்காட்சிக்குச் செல்ல முடியவில்லை என்று தெரிவித்தாள். மற்ற நான்கு மாணவிகளும் “புத்தகக் கண்காட்சியைப் பற்றி எங்களுக்கு எந்த ஐடியாவும் இல்லை” என்றார்கள். ஸ்டூடன்ஸ் எப்பவுமே இப்படித்தானே. படிக்கிற விஷயத்துல அவங்களுக்கு ஆர்வம் இருக்காதென்று நீங்கள் நினைக்கலாம். அதற்கடுத்து அவர்களிடம் நான் கேட்ட கேள்வி முக்கியமானது:

“சரி... புத்தகக் கண்காட்சி நடந்தது உங்க கவனத்திற்கு வரல... அப்படி நடக்கறது உங்களுக்குத் தெரிஞ்சிருந்தா விசிட் பண்ணி இருப்பீங்களா?” என்றேன்.

“காலேஜ் டேஸ்ல போக முடியாது.” என்றார்கள்.

“பொங்கல் விடுமுறை நாட்களிலும், சனி ஞாயிறுகளிலும் முழு நாட்கள் புத்தகக் கண்காட்சி நடக்கும். காலை 11 மணியிலிருந்து இரவு 9 மணிவரை. மற்ற நாட்களில் மதியம் இரண்டு மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரைக்கும் நடக்கும்” என்றேன். “ஓ எஸ்... லீவ் டேஸ்ன்னா கண்டிப்பா பிரெண்ட்ஸ் கூட விசிட் பண்ணி இருப்போம்.” என்றார்கள்.

“அப்படின்னா... எந்த மாதிரி புக்ஸ் எடுத்து இருப்பீங்க...” என்றேன்.

“அதெப்படி இப்பவே சொல்ல முடியும். அங்க போனா தானே சொல்ல முடியும். எந்த புக் புடிச்சி இருக்குதோ அத வாங்குவோம். சப்ஜெக்ட் புக், ஆங்கில நாவல், தமிழ் புக்ஸ்” என ஏகப்பட்ட பதில்கள் வந்தன. “நாங்க எதுக்கு அங்க போகணும்?” என்ற பதிலும் ஒருசிலரிடமிருந்து வந்தது. ஒருசிலர் என்னை துச்சமாகக் கடந்து சென்றார்கள்.

“புக் ஃபேர் பத்தி - டிவி விளம்பரம், டிவி நியூஸ், பேப்பர் செய்தின்னு எல்லாத்துலையும் போட்டாங்களே நீங்க பாக்கலையா?” என்றேன்.

“இல்லியே... அதுக்கெல்லாம் எங்களுக்கு டயம் இல்ல...” என்ற பதில் தான் பெரும்பாலும் வந்தது. “நியூஸ் எல்லாம் மனுஷன் பார்ப்பானா? அதுக்கு மெகா சீரியல் எவ்வளவோ மேல்” என்ற பதிலும் தான் வந்தது. “காலைல காலேஜுக்கு வந்தா ஈவினிங் தான் வீட்டுக்குப் போறோம். ஏரியா பிரண்ட்ஸ் கூட சேட், சாங்க்ஸ் கேக்குறது, முடிஞ்சா மூவீஸ் பாக்குறதுன்னு ரிலாக்ஸ் பன்றதுக்கே நேரம் சரியா இருக்கும்.” என்றார்கள்.

“அப்போ புக்ஸ் வாங்கினா எப்படி படிப்பீங்க?” என்றேன்.

“டெய்லி பஸ்ல வரும்போதும், போகும்போதும் சப்ஜெக்ட் புக்ஸ் தானே படிக்கிறோம். போர் அடிச்சா மொபைல்ல பாட்டு கேக்குறோம். அதுவும் போர் அடிச்சா வேற புக்ஸ் படிப்போம் இல்ல...” என்ற பதிலும் வந்தது.

இதில் முக்கியமான விஷயம், இந்த மாணவர்கள் கல்வி பயிலும் கல்லூரி தான் புத்தகக் கண்காட்சியின் ஸ்டார் ஸ்பான்சர் என்பதே ஒருவருக்கும் தெரியவில்லை. நான் சொல்லியதை வியப்பாகவே கேட்டுக் கொண்டிருந்தார்கள். வேலம்மாள் கல்வி அறக்கட்டளை ஸ்டார் ஸ்பன்சராக இருக்கும் விஷயத்தை, கல்லூரி அலுவலக நிர்வாகத்தினர் மாணவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவில்லை. அல்லது தேவையில்லாத விஷயம் என்று கூட நினைத்திருக்கலாம். ஆனால் பபாசி மாணவர்களின் கவனத்திற்குக் கொண்டு செலுமாறு வேண்டுகோள் வைக்கலாம் இல்லையா? ஏனெனில் சென்னையைச் சுற்றிலும் உள்ள இதர வேலம்மாள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஏறக்குறைய 30, 000 மாணவர்களுக்கு மேல் படிப்பார்கள் என்பதற்கு நான் உத்தரவாதம். அண்ணா நகர், முகப்பேர் வேலம்மாள் உயர்நிலைப் பள்ளியில் மட்டும் ஏறக்குறைய 12,000 பள்ளி மாணவர்கள் படிக்கிறார்கள். சூரப்பட்டு, பஞ்ஜெட்டி உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கையைக் கூட்டினால் தலையைச் சுற்றும். சூரப்பட் & பொன்னேரியிலுள்ள வேலம்மாள் கல்லூரிகளில் ஏறக்குறைய 7, 000 மாணவர்கள் படிப்பார்கள்.

இந்த ஒரு கல்லூரியின் நிலைமை இதுவாக இருப்பின் பரவாயில்லை. “மீஞ்சூர் ஜெயின் கல்லூரி, பொன்னேரி உலகநாத நாராயணஸ்வாமி அரசினர் கல்லூரி, கிருஷ்ணாபுரம் ஸ்ரீதேவி கல்லூரி” போன்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் சில மாணவர்களை “பொன்னேரி ரயில் நிலையம், பொன்னேரி பேருந்து நிலையம், பழவேற்காடு பஜார்” போன்ற இடங்களில் சந்தித்துப் பேசினேன். ஒருவருக்கும் புத்தகக் கண்காட்சி நடந்ததைப் பற்றிய எந்தவொரு தகவலும் தெரியவில்லை. சிலமுறை உ.நா அரசு கல்லூரிக்கு நேரிலும் சென்று பல்துறை மாணவர்களையும் சந்தித்தேன்.

“இன்னாது... புத்தகக் கண்காட்சியா...? அப்படியெல்லாம் கூட நடக்குமா...?” என்று மாணவர்கள் வியப்புடன் கேட்டார்கள். எனினும் கண்காட்சிக்குச் சென்று புத்தகம் வாங்குவதிலுமுள்ள ஆர்வத்தையும் தெரியப்படுத்தினார்கள். இதில் பலரும் புனைவு சார்ந்த புத்தகம் வாங்குவதில் ஆர்வமுடனே இருக்கிறார்கள். எனினும், 50 மாணவர்களில் 20 மாணவர்கள், “நாங்க எதுக்கு புக் ஃபேர் போகணும். அதெல்லாம் போக மாட்டோம். லீவ் நாளுன்னா ப்ரண்ட்ஸ் கூட விளையாடுவோம்.” என்றார்கள்.

வடசென்னை மற்றும் நகரத்திற்கு வெளியிலுள்ள கல்லூரிகளில் தான் இந்த நிலைமை இருக்கக்கூடும். சென்னை கல்லூரிகளிலுள்ள மாணவர்கள் படுசுட்டிகள் என்று நீங்கள் நினைக்கலாம். இந்த சந்தேகம் எனக்கும் இருந்தது. ஆகவே “பச்சையப்பன் கல்லூரி, D.G வைஷ்ணவா கல்லூரி, லயோலா கல்லூரி” போன்ற மாணவர்களையும் சந்தித்துப் பேசினேன். ஒருசிலரை “நுங்கம்பாக்கம் ரயில் நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், கீழ்பாக்கம் பச்சையப்பன் பேருந்து நிறுத்தம்” போன்ற இடங்களிலும் சந்தித்துப் பேசினேன். மூன்றாவது வருடம் படிக்கும் மாணவர்கள் ஒருசிலருக்கு புத்தகக் கண்காட்சி பற்றி தெரிந்திருந்தது. ஏனெனில் இதற்கு முந்தைய ஆண்டுகளில் பூந்தமல்லி நெடுஞ்சாலையின், பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரிலுள்ள ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் புத்தகக் கண்காட்சி நடந்துள்ளதால் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பயிலும் மாணவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

லயோலா கல்லூரி மட்டும் புத்தகக் கண்காட்சியைப் பற்றிய குறிப்பையும், கண்காட்சி நடக்கும் இடத்திற்கு செல்லும் வழியையும், பேருந்துத் தடங்களையும் குறிப்பிட்டு காலேஜ் நோட்டிஸ் போர்டில் செய்தி வெளியிட்டிருந்தார்களாம். ஒருசில மாணவர்கள் தெரிவித்தனர். அதையும் கூட பல மாணவர்கள் பார்க்கவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது. “S. A. என்ஜினியரிங் காலேஜ், வேல் டெக் என்ஜினியரிங் காலேஜ்” போன்ற கல்வி நிறுவனங்களில் படிக்கும் ஒருசில மாணவர்களிடமும் பேசினேன். யாருக்குமே எதுவும் தெரியவில்லை.

சரி கல்வி நிறுவனங்களில் தான் இந்த நிலைமை எனில், பொன்னேரி கிளை நூலகத்தில் ஏராளமான இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்து கொண்டிருப்பார்கள். அவர்களிடமும் அணுகி “புத்தகக் கண்காட்சி” பற்றிய அதே கேள்விகளைக் கேட்டேன். சரிபாதி நபர்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. பபாசி இதையெல்லாம் கருத்தில்கொண்டு ஏதேனும் யுக்தியைக் கையாண்டு “புக் ஃபேர்” பற்றிய விவரங்களை முன்கூட்டியே மாணவர்களிடம் கொண்டு சென்றால் “Actual Audience & Visitors” விகிதத்தை அதிகரிக்கலாமே.

சென்னையைச் சுற்றிலுமுள்ள கல்லூரிகளுக்குக் கண்காட்சி சார்ந்த ஒரு சுற்றறிக்கையை அனுப்பலாம். போலவே, சென்னை நகர்புரதிற்கு வெளியிலுள்ள தலைமை கிளை நூலகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கையைப் போன்ற A4 SIZE அளவுள்ள சுவரொட்டிக் கூட அனுப்பி வைக்கலாம். மிஞ்சிப் போனால் 25 தலைமை கிளை நூலகங்கள் இருந்தாலும் அதிகம் தான். (சில ஆராய்ச்சி நிறுவனங்களில் மாணவர்களுக்கு புத்தகம் வாங்க வவுச்சர் கொடுப்பார்கள். அதனைப் புத்தகச் சந்தைகளில் அவர்கள் கொடுத்து புத்தகம் வாங்கிக்கொள்ளலாம். டெல்லி போன்ற நகரங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த நடைமுறை இருந்தது. சென்னை போன்ற நகரத்தில் உள்ள பெரிய பல்கலைக்கழகங்கள் படிப்பில் சிறந்த மாணவர்களுக்கு இதுபோன்ற சலுகைச் சீட்டைக் கொடுத்து ஊக்குவிக்கலாம்.) எனினும் ஆர்வமுள்ள மாணவர்கள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது எனில், பபாசி அதனை கவனத்தில் எடுத்துக்கொண்டு – சென்னையைச் சுற்றிலும் சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கல்லூரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பலாமே. மாணவர்களை புத்தகச் சந்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கலாமே. வருவார்களா? இல்லையா? என்பது வேறு விஷயம். புத்தகச் சந்தையைப் பற்றிய விவரம் மாணவர்களுக்குச் சென்று சேர்வதே ஒருவகையில் நல்லது தானே...!

சென்னையைச் சுற்றிலும் ஏறக்குறைய 100 அரசுக் கல்வி நிறுவனங்களும், தனியார் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளும் இருக்கும். கல்லூரிக்கு இரண்டாயிரம் பேர் என்று வைத்துக் கொண்டாலும் எண்ணிக்கை லட்சங்களில் செல்லும். இதில் 90% சதவீத நபர்கள் டிவி விளம்பரம், செய்திகள், நாளிதழ்களை வாசிக்காதவர்கள். இவர்கள் தான் முக்கியமான ஆடியன்ஸ். “ஜோசியம், சமையல் குறிப்பு, தாம்பத்திய டிப்ஸ்” தவிர்த்த இதர புத்தகங்களை வாங்கக் கூடிய ஆடியன்ஸ் இவர்கள் தான். இவர்களிடம் சினிமா, விளையாட்டு தவிர்த்த மற்ற விஷயங்களைக் கொண்டு சேர்ப்பதில் மிகுந்த சிரமம் இருக்கிறது. எனினும் கொண்டு செல்வதில் தான் சாதுர்யம் இருக்கிறது.

இசைக் கலைஞர்களைப் பற்றி எழுதும் ஷாஜி தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டதாக ஞாபகம். ஷாஜி சோனி கம்பெனியின் ஆடியோ விற்பனைப் பிரதிநிதியாக இருந்தபொழுது ரகுமான் பகர்ந்ததைக் குறிப்பிட்டிருக்கிறார். இசை தயாரிப்பாளர் எ. ஆர். ரகுமான் பின்வருமாறு சொல்லி இருக்கிறார்: “யங் ஆடியஸ் வாங்கனும்னு நெனைக்கறத கண்டிப்பா வாங்கிடுவாங்க. இசை ஆல்பத்த அவங்ககிட்ட எப்படி எடுத்துட்டு போயி சேக்கறதுன்னு பாருங்க”

ரகுமானின் வார்த்தைகள் இசைத் தகட்டிற்கு மட்டுமல்ல. செல்போன், ஐபேட், கூலிங் கிளாஸ், பைக், கார், ரீபாக் ஷூ, அடிடாஸ் ஷர்ட், பார்ன் வீடியோஸ் போலவே புத்தகத்திற்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன். பபாசி கவனத்தில் எடுத்துக்கொண்டால் சரி.

மாணவர்களின் ரவுடிக் கலாச்சாரம்

இளங்கலை கணிதம் பயின்றபோது “தியாகராஜன்” என்ற மாணவர் கல்லூரி சேர்மன் தேர்தலில் நின்று தோற்றவர். கத்திவாக்கத்திலிருந்து தான் தினமும் கல்லூரிக்கு வருவார். படிக்கும் காலத்தில் அவரைப் பார்த்தாலே என் போன்ற அப்ரானிகளுக்குக் கொஞ்சம் பயம் கலந்த நடுக்கம். திடீரென பளபளக்கும் வீச்சரிவாலை கையில் வைத்துக்கொண்டு கல்லூரிக்குள் வீதி உலா வருவார். அங்குமிங்கும் கத்தியுடன் அலைந்துவிட்டு, ஒரு மாஸ் காண்பித்துவிட்டு வெளிநடப்பு செய்வார். கல்லூரி முடிக்கும் வரை பெரிதாக ஒன்றும் அசம்பாவிதம் நடக்கவில்லை. கொலை குத்து இல்லையென்றாலும் அடிதடிகளுக்குப் பஞ்சம் இருக்காது. அதன் பின்னர் அவரைப் பற்றிய தகவல் எதுவும் இல்லை. ஒருநாள் நாளிதழ்களில் தியாகுவின் பெயரைப் பார்த்ததும் அதிர்ந்துவிட்டேன். வட சென்னையின் பிரபல தாதாவாக தியாகுவின் புகைப்படத்துடன் பெயரும் இருந்தது. பின்னர் ஒரு மாத இதழில் அவரது பெயரையும் என்கவுண்டர் லிஸ்டில் பார்த்ததாக ஞாபகம். (கல்லூரி படிக்கும் வரை தியாகுவின் பின்னால் ஐந்து நபர்களுக்கு மேல் யாரும் இருக்க மாட்டார்கள்). திருந்தி வாழ ஆசைப்படுவதாகவும் அவர் பேட்டி கொடுத்திருந்தார்.

போலவே மீண்டும் ஒரு பரபரப்பான செய்தியை, கூடிய சீக்கிரமே நாளேடுகளில் வாசிக்க வேண்டிய சூழல் உருவாகலாம் என்று தான் நினைக்கிறேன். எப்பொழுதும் போல கிபி விளையாடுகிறான் என்று தான் நண்பர்கள் நினைக்கக் கூடும். இது கொஞ்சம் சீரியஸ் மேட்டர்.

வேலையை முடித்துவிட்டு மௌன்ட் ரோட்டிலிருந்து சென்னை சென்ட்ரலுக்குச் செல்ல, டிவிஎஸ் பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தேன் (Jan - 31, 2014). சில பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிந்ததால், ஓரளவிற்கு காலியாக வந்த பேருந்தில் ஏறிக்கொண்டேன். ஸ்பென்சர் பிளாசாவின் சிக்னல் அருகில், கண்ணிமைக்கும் நேரத்தில் திபுதிபுவென மாணவர்கள் ஓடிவந்து ஏறிக்கொண்டனர். தடதடதடவென பேருந்தின் தகரத்தைத் தட்டியவாறு “அக்கா பொன்னே கேளு, நந்தனம் பசங்க பொட்டைங்க... பச்சையபாஸ் பசங்க பொட்டைங்க... நியூ காலேஜ் பசங்க மட்டும்தான் வாட்டான ஆம்பளைங்க... எத்திராஜ் பொண்ணுங்க தெவிடியாளுங்க... குயின் மேரிஸ் பொண்ணுங்க தெவிடியாளுங்க... அக்கா பொண்ணே கேளு...” என்றவாறு சகிக்கமுடியாத வார்த்தைகளைப் போட்டு கானா பாடிக்கொண்டு வந்தனர்.

சென்ட்ரல் வரவும் படியில் நின்றிருந்த மாணவர்கள் இறங்கிக்கொண்டனர். பொதுமக்களின் நண்பர்களாம் போலீஸ் கூட அரண்டுமிரண்டு தான் மாணவச் செல்வங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். கொஞ்ச நேரத்தில் சில மாணவர்கள் சலசலவென சப்தமெழுப்பி ஏதோ வம்புத்தனம் செய்து கொண்டிருந்தனர். யாரோ ஒருவர் சம்பவங்களைப் புகைப்படம் கூட எடுத்துக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு போலீஸ்காரர் சாலையில் வந்துகொண்டிருந்த ஷேர் ஆட்டோவை நெருங்கி, பின்புறத்தில் ஓங்கி ஓர் அடியடித்தார். உண்மையில் அது மாணவர்களின் மீது விழ வேண்டிய பேரடி. நானோ...! பாட்சா படத்தின் முன்பாதி ரஜினியைப் போல சலசலக்கும் திசைக்கு எதிரான திசையில் ஓடிக் கொண்டிருந்தேன்.

ஓடிய வேகத்தில், பின் மதியம் 2.35 மணிபோல கும்மிடிப்பூண்டி செல்லப் புறப்படும் சென்ட்ரல் நிலைய ரயிலைப் பிடித்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. போலவே Front 3rd Compartment – 2nd class-ல் ஏறி, வசதியாக அமர்ந்து கொண்டு நிம்மதியாக மூச்சு வாங்கினேன். பக்கத்தில் ஒன்றிரண்டு மாணவர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் எப்படிப் பேச்சுக் கொடுப்பது என்றும் யோசித்துக் கொண்டிருந்தேன்.

“அண்ணா” என்று ஒரு மாணவன் என்னை அழைத்தான். கண்களைக் கூர்மையாக்கிக் கொண்டு அந்த இளைஞனைப் பார்த்தேன். “Friends வருவாங்க’ண்ணா... கொஞ்சம் முன்னாடி போயி உக்கா(ர்)ந்துக்கங்களேன்.” என்றான்.

“சரிப்பா...” என்று இரண்டு இருக்கைகள் தள்ளிச் சென்று பார்த்தேன். மாணவர்கள் அமர்ந்திருந்தனர். இன்னும் கொஞ்சம் தள்ளிச் சென்று பார்த்தேன். ரயில் பெட்டி முழுவதும் கல்லூரி மாணவர்கள் அமர்ந்திருந்தார்கள். நோட்டம் விடுவதற்கு வசதியாக காலியான இருக்கையைப் பார்த்து அமர்ந்துகொண்டேன். யாரேனும் கிடைத்தால் பேசவும் தயாராக இருந்தேன். சிறிது நேரத்தில் இளமையின் மெருகேறிய, மாநிறமான இளைஞன் ஒருவன் பக்கத்தில் வந்தமர்ந்தான். ஸ்நேகமாக அவனைப் பார்த்துச் சிரித்தேன். அவனும் நட்புடன் ஸ்நேகப் புன்னகை வீசினான். பேச்சு பேச்சாகவே சென்று கொண்டிருந்தது. திடீரென...

“அண்ணா... மீஞ்சூர் ஸ்டேஷன் வறதுக்கு முன்னாடி – நந்தியம்பாக்கம் ஸ்டேஷன் வந்தா கொஞ்சம் எழுந்து முன்னாடி போயிடுறீங்களா?” என்றான்.

ஒருவேளை மீஞ்சூர் ஜெயின் கல்லூரி மாணவிகளில் யாரேனும் ஒருத்தி இவனைப் பார்க்க வருவாளோ...! இருவரும் வழக்கமாக உட்காரும் இருக்கை இதுவாக இருக்குமோ...! என்றவாறு குழம்பிக் கொண்டிருந்தேன். “அண்ணா... அந்த ஜன்னல் விண்டோ கதவு மூடுதான்னு கொஞ்சம் செக் பண்ணிப் பாருங்க.” என்றவாறு இன்ஸ்ட்ரெக்ஷன் கொடுத்துக் கொண்டிருந்தான்.

“ஒருவேளை கம்பார்மெண்டில் இவன் குடும்பமே நடத்தப் போறானோ...? சேச்சே... இருக்காது... இவ்வளோ டீசென்ட்டா பேசுறானே” என்றவாறு பல விஷயங்களையும் பல்லான பல்லான விதத்தில் யோசித்துக்கொண்டு “ஜன்னல்னாலும் விண்டோ-னாலும் ஒண்ணுதான் தம்பி. நடு சென்டர் மாதிரி” என்று சிரித்தேன்.

“நல்லாத் தான் கடிக்கிறீங்க. கொஞ்ச நேரத்துல தண்டவாளத்துல இருக்கற கல்லெடுத்து வண்டிக்குள்ள உடுவாங்க... அதையும் சேர்த்தே வாங்கிக்கலாம் இருங்க” என்றான்.

“எனக்கு பகீரென்றது. இந்த கம்பார்மென்ட் பசங்க பூராவும் பச்சயபாஸ் காலேஜில படிக்கிறோம். எங்களுக்கும் ஜெயின் காலேஜ் பசங்களுக்கும் கொஞ்ச நாளாவே பிரச்சனையில தான் ஓடிட்டு இருக்குது. எவனாச்சும் ஜெயின் காலேஜ் பசங்க வண்டியில ஏறினாங்க-ன்னா அவங்க காலி... தர்ம அடி அடிக்கப்போறோம்...” என்றான்.

“அடப்பாவிங்களா...! நீங்கல்லாம் படிக்கிற பசங்களா?” என்றேன்.

“அண்ணா... நாங்க சும்மாதான்னா இருக்குறோம்... அவங்க வந்தமா, படிச்சமா, போனோம்மான்னு இருந்தா பிரச்சனை இல்ல... எங்கக் கூடவே சண்டைக்கு வரணுங்க... அவங்க மீஞ்சூர் லோக்கல் பாய்ஸ். அதனால பொன்னேரி, கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டில இருந்து வர பசங்கள டிரைன்ல இருந்து எறக்கி அடிக்கறானுங்க’ண்ணா... அப்போ நாங்க என்ன பொட்டைங்களா...!? அந்த பசங்க கத்தி கம்புன்னு வசிக்குனு மெரட்டறாங்க’ண்ணா” என்றான்.

“இருந்தாலும் ஒருத்தர ஒருத்தர் அடிசிக்கிறது நல்லாவா இருக்கு?” என்றேன்.

“இன்னாங்ண்ணா... அப்படிச் சொல்லிட்டிங்க. அப்போ இதுக்கு முன்னாடி இருந்த ரூட்டுத் தல எங்களப் பாத்து காறித் துப்ப மாட்டாராண்ணா. நான் இருக்கச் சொல்ல ரூட்டு எப்புடி இருந்துச்சு... நீங்க என்னடான்னா அடிவாங்கிட்டு வறீங்கன்னு காறித் துப்ப மாட்டாரு... அதெல்லாம் ஒரு கெத்துண்ணா. அதெல்லாம் நம்ம தான் காப்பாத்திக்கணும்” என்றான்.

“ஓ... இதுல பரம்பரைய வேற உருவாக்குறீங்களா?” என்றேன்.

இதற்குள் நந்தியம்பாக்கம் வரவும் “எழுந்து கொஞ்சம் முன்னாடி போயிடுங்க’ண்ணா” என்றான். நான்கு இருக்கைகள் தள்ளிச் சென்று நின்றுகொண்டேன். மீஞ்சூர் வந்ததும் ரயில் நின்றது. ஓவென ஐம்பது மாணவர்களும் குரலெழுப்பினர். ஒரு மாணவன் முகத்தில் கைக்குட்டையைக் கட்டிக்கொண்டு பளபளக்கும் இரண்டுமுழ வீச்சரிவாளைக் கையில் பிடித்தபடி ரயில் நிலையத்தில் இறங்கினான். ரயில்பெட்டியில் இருந்த மாணவர்களின் கூக்குரல் வானத்தை எட்டியது. ஓடிச்சென்று வெளியில் எட்டிப் பார்த்தேன். போர்க்களத்தில் நிற்கும் வீரனைப் போல அந்த மாணவன் நின்றுகொண்டிருந்தான். மீஞ்சூர் ரயில் நிலையத்தில் மயான அமைதி. பச்சை விளக்கெரிந்த சிக்னல் கிடைக்கவும் ரயில் மெதுவாகக் கிளம்பியது. ரயில் சிறிதுதூரம் நகர்ந்ததும் தான் வீச்சரிவாளைப் பிடித்துக் கொண்டிருந்த, முகத்தை மறைத்திருந்த மாணவன் ஓடிவந்து ஏறினான். கொஞ்சம் தவறியிருந்தால் ஓடும் ரயிலிலிருந்து மாணவன் வீச்சரிவாளுடன் கீழே விழுந்திருப்பான். அதற்குள் சக நண்பன் அவனுக்குக் கைகொடுத்து ரயில் பெட்டியின் உள்ளிழுத்துப் போட்டான். எனக்கென்னவோ சாகசத் திரைப்படத்தின் உச்சகட்டக் காட்சியைப் போலவே அந்த ஒருசில நிமிடங்கள் இருந்தது. கைக்குட்டையைக் கழட்டியதும் தான் தெரிந்தது. அவன் ரயில் பெட்டியில் முதலில் என்னிடம் பேச்சுக் கொடுத்த மாணவன். கீழே விழ இருந்தவனை உள்ளிழுத்துப் போட்டவன் என்னிடம் இரண்டாவதாக பேச்சுக் கொடுத்த மாணவன். அருகில் சென்று அவர்களிடம் கத்தினேன்:

“படிக்கிற பசங்களா நீங்க...? அசிங்கமா இல்ல...? கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா கீழ விழுந்து செத்திருப்பான் அவன்...!”

“இதெல்லாம் சகஜம்’ண்ணா...” என்றவாறு அவர்கள் என்னைக் கடந்து செல்கையில் “டம்” என்ற மிதமான சப்தம் கேட்டது. யாரோ ரயிலின் மீது கல்லெறிந்து இருக்கிறார்கள். இருவரும் ஓடிச்சென்று மாணவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.

“அந்த போலீஸ் தேவிடியா பையன் தான் மச்சி கல்லெடுத்து அடிச்சான். நான் பார்த்தேண்டா...” என்று ஒருவன் கூறினான். அதற்குமேல் மாணவர்கள் குசுகுசுவென ஏதோ பேசிக் கொண்டார்கள். திடீரென அந்த மாணவர்களுக்குள் சலசலப்புச் சத்தம் கேட்டது. யார்மீதேனும் கல்லடி பட்டு ரத்தம் வழிகிறதோ என்றவாறு எட்டிப் பார்த்தேன். ஒரே கும்பலைச் சேர்ந்த நண்பர்கள் இருவர் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ள எக்கிக் கொண்டிருந்தனர்.

ஒரு கல்லூரி மாணவனின் அருகில் சென்று கேட்டேன்: “ஏன் அவங்க ரெண்டு பேரும் அடிச்சிக்க டிரை பண்றாங்க...?”

“தேவையே இல்லாம ஒரு ஸ்கூல் பையன எங்க பிரண்டுல ஒருத்தன் அடிச்சிட்டான்னா... அதுக்காகத் தான் இன்னொருத்தன் அடிக்கப் போறான்” என்றான்.

“யார... ஸ்கூல் பையனையா?” என்றேன்.

“அவன்தான் யூனி ஃபார்ம்ல இருக்கான்ல... அப்போ எதுக்கு அந்த ஸ்கூல் பையன தேவையில்லாம அடிச்ச... சின்ன பையன ஏன்டா அடிக்கிற... தேவிடியா பையான்னு கேட்டுட்டான். அதாண்ணா பிரச்சனை... அதெல்லாம் சமாதானம் ஆயிடுவானுங்க... நீங்க போங்க...” என்றான். அதற்குள் பொன்னேரி ரயில் நிலையம் வந்துவிட்டது. ஒரு பதட்டத்துடனே ரயிலைவிட்டு இறங்கினேன். போலவே மாணவர்களில் சிலரும் இறங்கினார்கள். அதில் ஒருவன்: “நான் சின்ன பையன கோவத்துல அடிச்சது தப்புதான். அதுக்காக அந்தண்ணன் என்னை அடிச்சிருந்தாலும் வாங்கிப்பேன். ஆனா தேவிடியா பையன்னு சொன்னது தப்புன்னா... அதான் அவர அடிக்கப் போனேன்.” என்றவாறு ஒருவன் புலம்பிக்கொண்டிருந்தான்.

பச்சை விளக்கு சிக்னல் பளீரெனத் தெரிந்தது. ரயில் மிதமாக நகர்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் வேகம் எடுத்தது. பேசிக்கொண்டிருந்த மாணவர்கள் ஓடிச்சென்று குரங்குபோலத் தாவி, காந்தம் போல பெட்டியின் ஓரங்களில் ஒட்டிக்கொண்டு உள்ளே சென்றார்கள். எல்லோருமே கிராமப்புற மாணவர்கள். மரியாதைத் தெரிந்தவர்களாகவும் இருக்கிறார்கள். பொதுமக்களுக்கு எந்த இடையூரையும் ஏற்படுத்தவில்லை. கும்பலில் ஒருவர் தவறாக நடந்தாலும் – அவர்களில் ஒருவரே சகபயணிக்காக ஞாயம் கேட்கிறார். ஆனால், இவர்கள் தான் “கத்தி, கிரிக்கெட் மட்டை, கிரிகெட் ஸ்டம்ப்” என ஆயுதங்களை எடுத்துக்கொண்டு வேறு கல்லூரி மாணவனை அடிக்கச் செல்கிறார்கள். இந்த முரனை என்னென்று சொல்லவது.

பேருந்துகளிலும், ரயில்களிலும் “ரூட்டுத் தல” கலாச்சாரம் பாலியல் நோய் போல பரவிக்கொண்டு வருகிறது. இதனைத் தடுக்க வேண்டியது மிகமிக முக்கியம். உயர்நீதிமன்ற மாணவர்கள் அடித்துக் கொண்டதை வீடியோ படம் எடுத்துப் போட்டதை எல்லோரும் பார்த்திருக்கிறோம் தானே...! திருவள்ளூர் மாவட்ட பெட்டிச் செய்தியில் என்றேனும் ஒருநாள் கீழ்கண்ட விவரங்கள் வரக்கூடும். அன்றைய தினம் என்னை நினைத்துக் கொள்ளுங்கள்: பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும், மீஞ்சூர் ஜெயின் கல்லூரி மாணவர்களும் ஆயுதங்களுடன் மோதல் – “சில மாணவர்கள் படுகாயம், மருத்துவமனையில் அனுமதி”

இதெல்லாம் ஓர் அபாய எச்சரிக்கை தான். நம் வீட்டு மொட்டுக்கள் – வெளியில் கன்னிகளாக வெடிக்கிறர்கள். வன்முறை நம் வீட்டில் கண்ணுக்குத் தெரியாமலே வளர்ந்து கொண்டிருக்கிறது. என்றேனும் ஒருநாள் குரூரம் நம் வீட்டு வாசலில் வந்து ரத்தக் களரியுடன் நிற்கத்தான் போகிறது. அன்றைய தினம் உணர்வோம் நாம் படிப்பது செய்திகளை அல்ல. சுற்றிலும் நடக்கும் உண்மைச் சம்பவங்களை என்று. பெற்றோர்களும் கல்லூரி நிர்வாகமும் மாணவர்களின் நலனில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையேல் கஷ்டம் தான். மாணவர்களின் ரூட்டுத் தல ரௌடிக் கலாச்சாரம் தொடர்ந்து கொண்டிருக்கும். “கத்தி, வீச்சரிவாள், வன்முறை ஆயுதங்கலென” மாணவர்கள் பொதுமக்களுடன் பயணம் செய்வது பலவிதத்திலும் அபாயம் நிறைந்தது. ரேகிங், ஈவ் டீசிங் போலவே “ரூடுத் தல” கலாச்சாரத்திற்கும் கடுமையான சட்டங்கள் இயற்றினால் நன்றாகத் தான் இருக்கும். பார்க்கலாம் நடக்கிறதா என்று...!

டிஸ்கி: சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகர பேருந்துப் பயணத்தில் கிடைத்த ஓர் அனுபவம்:

மாணவர்களின் ரவுடித்தனம்