Monday, February 17, 2014

சூப்பி எறியப்பட்ட மாங்கொட்டை


பெருமாள் முருகனுக்கு விளக்கு விருது கொடுத்து கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சேலம் நோக்கிப் புறப்படுகையிலே மனதில் சொல்ல முடியாத சந்தோசம் குடிகொண்டது. முருகனின் நாவல் படைப்புகளில் பலவும் என்னுடைய மனதிற்கு மிக நெருக்கமான ஒன்று. விருது வழங்கும் நிகழ்வில் அவரது நாவல்கள் குறித்துப் பேச வருமாறு அழைத்தபோது பல காரணங்களைச் சொல்லித் தவிர்க்கப் பார்த்தேன். உள்ளுக்குள் நடுக்கம் வேறு. அவற்றில் ஒன்று...

“ஐயோ... முருகன் எனக்குப் பேசத் தெரியாதே...! ”

“இந்த மாதிரி நிகழ்வுகளில் பேசிப் பழக்கமில்லையே...! அதெல்லாம் சரியா வாரதுங்க முருகன். வேற யாராச்சும் பேசினால் நன்றாக இருக்குமே...” என்று அடுக்கடுக்காக பல காரணங்களை அடுக்கினேன்.

“அதெல்லாம் ஒன்னும் வேணாம். ஓர் எழுத்தாளரைப் பற்றி சக எழுத்தாளர்கள் பேசுவது காலம் காலமாக நடக்கும் விஷயம். ஒரு வித்யாசம் இருக்கனுமில்ல. நீங்கலெல்லாம் பேசினால் நல்லா இருக்கும் பிரபு. வந்து பேசுங்க.” என்றார்.

“ஏங்க உங்க நாவல்களைப் பற்றி பேச ஒரு தகுதி வேண்டாமா? நானெல்லாம் பேசினா சரியா இருக்காதுங்க...! நீங்க ரிஸ்க் எடுக்காதிங்க...” என்று முருகனுக்கு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்.

“நீங்க வாங்க... அதெல்லாம் ஒன்னும் கவலைப் படாதீங்க...!” என்றார்.

“இவர் நம்மள எப்பிடி சூஸ் பண்ணாரு?” என்பதுதான் மனதில் எழுந்த கேள்வி. புத்தகம் வாசிக்கும் விஷயத்தில் படு சோம்பேறி நான். எனினும் முருகனின் எல்லா நாவல்களையும் வாசித்ததுண்டு. வாசக மனநிலையில், நினைவின் அடுக்குகளில் நீங்காமல் பொதிந்துள்ள புனைவுலகம் அவரது ஆரம்பகாலப் படைப்புகளான “ஏறுவெயில் (1991), நிழல்முற்றம் (1993), கூள மாதாரி (2000)” ஆகிய முதல் மூன்று நாவல்கள் தான். எழும்பூர் ரயில் நிலையத்தில் இரவு பதினோரு மணிக்கு ரயிலேரும் வரைகூட “என்ன பேசுவது? எப்படிப் பேசுவது?” என்பதையெல்லாம் யோசிக்கவில்லை. மறுநாள் காலை சேலம் ரயில் நிலையத்தில் கண்விழித்தபோது ஊரே பளிங்குபோல காட்சியளித்தது. ஆஹா... எவ்வளவு சுத்தமாக வைத்திருக்கிறார்கள்!.
நிகழ்வு துவங்க ஏறக்குறைய மூன்று மணிநேர கால இடைவெளி இருந்ததால், சேலம் ஜங்ஷனிலிருந்து – தமிழ்ச் சங்க வளாகத்திற்கு நடந்தே சென்று விடலாம் என்று யோசித்தவாறு நடந்துகொண்டிருந்தேன். ஒரு சிறிய சாலை. அதன் சின்னதொரு கிளைச் சந்தில் நுழைந்தேன். பெயர் கூட “ஜலால் தெரு” என்று நினைக்கிறேன். சிறுவனொருவன் கோலமிட்டுக் கொண்டிருந்தான். அவனது தாய் சிறுவனை ரசித்தவாறு பார்த்துக்கொண்டிருந்தாள். போக்கற்றுத் திரிந்ததில், போகும் வழியிலிருந்த “உழவர் சந்தை” எனது கண்களில் பட்டது. கால்கள் தன்னிச்சையாக சந்தையினுள்ளே புகுந்துவிட்டன. நேரம் சென்றது தெரியாமல் கூட்டத்தில் ஒருவனாக சுமார் ஒரு மணிநேரம் சுற்றிக் கொண்டிருந்தேன். வியாபாரிகளின், வாடிக்கையாளர்களின் பேச்சொலிகள் சலசலத்துக் கேட்டுக்கொண்டிருந்தன. சுற்றிலுமுள்ள தூரத்து மலைகளில் பட்டுத் தெரித்த சூரியனின் காலை ஒளி – காய்கறிகளின் வண்ணங்களை மெருகூட்டிக் கொண்டிருந்தன.

“கங்கணம், ஆளண்டாப் பட்சி, மாதொருபாகன்” போன்ற பெருமாள் முருகனின் படைப்புகள் யாவும் வெவ்வேறு மனித சூழலின், மனித இருப்பின், உறவு முரண்களின், வாழ்வியல் யதார்த்தத்தின் பல்வேறு கோண பரிமாணங்களை முன்வைத்து நகர்ந்தாலும் – அந்த அசல் மனிதர்களின் வாழ்வியல் பிடிப்பானது உழவாகவும், விளைச்சலாகவும் தானே இருக்கிறது. “ஆளண்டாப் பட்சி” – உழவுக் குடும்பம் ஒன்றின் சிதரலையும், அதன் பின்னணியில் கரடு முரடான காடொன்று உழவு நிலத்திற்கு ஏற்ப மாற்றம் கொள்ள - ஒரு குடும்பமே போராடுவதையும் தானே சித்தரிக்கிறது.

“ஏறுவெயில்” நாவலின் ஆன்மா கூட உழவுக் குடும்பம் ஒன்றின் சிதறல் சார்ந்த பதிவு தான். இந்த நாவல் வெளிவந்து ஏறக்குறைய இருபதாண்டுகள் ஆகிறது. விவசாய நிலத்தின் ஒரு பகுதியை “காலனிக் குடியிருப்புகளாக” மாற்ற வேண்டி, பல ஏக்கர் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்துகிறது. பல குடும்பங்கள் இந்த நில எடுப்பினால் பாதிக்கப் பட்டாலும் - அதிலொரு குடும்பத்தின் நகரம் சார்ந்த இடப்பெயர்தலையும், அதன் பின்னணியில் சிறுவன் ஒருவனின் மனச் சிக்கலையும், குடும்பச் சரிவையும் முன்வைக்கும் நாவல். பெருமதிப்பிற்குரிய எழுத்தாளரான நாஞ்சில் நாடன் “நிழல் முற்றம்” நாவலுக்கு எழுதிய ‘கூரிய சிலாம்புகள்’ என்ற முன்னுரையில் “சூப்பி எறியப்பட்ட மாங்கொட்டை” என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகிறார். சூப்பி எறியப்பட்ட மாங்கொட்டைகள் திக்குத்தெரியாத திசையில் விழுந்து முளைப்பதைப் போல, கிராமத்து மனிதர்கள் தமது வேர்களை இழந்து சிறுநகரங்களை நோக்கியும், பெருநகரங்களை நோக்கியும் புலம் பெயர்வதை உணர்த்தத்தான் இப்படிக் கூறுகிறார். அரசு தனது ஆதாயத்திற்காக வேண்டி சூப்பிவிட்டு தூக்கி எறிந்த மனிதர்கள் தான் ஏறுவெயில் நாவலின் மாந்தர்கள். “மணி” என்ற வளர்ப்பு நாய் நாவலின் முதல் அத்யாயதில் வருகிறது. அது சிறுவனின் வளர்ப்பு நாய். புலப்பெயர்வினால் பழக்கப்பட்ட நாயே கூட மனிதர்களுடன் நெருங்க முடியாமல் விலகிச் செல்கிறது. சிறுவனைப் பார்த்து எதிர் திசையில் ஓடுகிறது. போலவே நாட்களும் ஓடுகிறது. சிறுவன் இளைஞனாக வளர்ந்து நிற்கிறான். நாவலின் இடையில் ஆங்காங்கு நாய் தலை காட்டிவிட்டுச் செல்கிறது. கடைசி அத்யாயத்தில் அந்நாய் அடையாலங்கலற்று, வீதியொன்றின் குழியிடுக்கில் அழுகிய நிலையில், புழுக்கள் நெளிய சகிக்க முடியாத துர்நாற்றத்துடன் சவமாகக் கிடக்கிறது. அதனை எடுத்து அடக்கம் செய்கின்றான் இளைஞன். ஒன்றின் அழிவில் இன்னொன்று பிறக்கிறது. நாயின் அழுகிய சதையில் நெளியும் புழுக்களைப் போல.

அரசு தான் என்றில்லை. விவசாயிகளே கூட நிலத்தைக் கூறுபோட்டு விற்கும் காலமிது என்பதும் மறுப்பதற்கில்லை. சாலை விரிவாக்கத் திட்டத்தில், தூக்கி வீசப்பட்டு இடம் பெயரும் குடும்பங்கள் தான் எத்தனை எத்தனை. கிராமம் கூறு போடப்படுவதையும், அதன் பின்னணியில் ஒரு நகரத்தின் வளர்ச்சி உருக்கொள்வதையும் – மனித உறவின் சிக்கல் மிகுந்த உணர்வுகளைக் கொண்டு படைக்கப்பட்ட நாவல்கள் நவீன இலக்கிய ஆக்கத்தில் முயற்சிக்கப்பட்டுள்ளதா என்று உறுதியாகத் தெரியவில்லை. இப்படைப்பை இயக்குனர் பாலுமகேதிரா திரைப்படமாக எடுக்க ஆசைப்பட்டிருக்கிறார். அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு, பின்னர் கைகூடாமல் போனதில் எல்லோருக்கும் வருத்தம் தான். கனவுகள் நிராசையாவது சகஜம் தானே! இரண்டு நாட்களுக்கு முன்னர் இயற்கையுடன் கலந்த பாலுவின் ஆன்மா சாந்தியடையட்டும்.

தமிழ்ச் சங்க வளாகம் – சேலம் ஜங்ஷனிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவாவது இருக்கும் என்றே நினைக்கிறேன். சாலையெல்லாம் அவ்வளவு சுத்தமாக இருக்கிறது. வழியெல்லாம் கட்டடங்கள். சாலையோர விரிந்து பரந்த நிலத்தில் பிரம்மாண்ட பொறியியல் கல்லூரிகள். ஒரு காலத்தில் இவையெல்லாம் உழவு நிலங்களாகத் தானே இருந்திருக்கும். தமிழ்ச் சங்க வளாகத்தைச் சுற்றிலும் பெரும் பணக்காரர்களின் அழகழகான வீடுகள். உள் (விளையாட்டு) அரங்க காஸ்மோ கிளப், திருமண மண்டபம், மருத்துவமனை, விளையாட்டு மைதானம் என எத்தனையெத்தனை வளர்ச்சிகள். எல்லாம் மனிதத் தேவையின் பொருட்டு உருமாறியவை. விழா நடந்த அரங்கின் ஜன்னல் கதவைத் திறந்தால் – பிள்ளைகள் ஆக்ரோஷத்துடன் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். சுட்டெரிக்கும் வெயில் சிறுவர்களுக்கு நிலவின் சுகந்த ஒளி.

சிறுவர்களின் உலகமே வானத்தின் கீழுள்ள விரிந்த பரப்பு தானே. பதின்ம, வளரிளம் பருவத்து சிறுவர்களின் உலகம் பறந்து விரிந்தது. பெருமாள் முருகனின் படைப்புகளில் உலவும் சிறுவர்களின் உலகமும் அத்தகையதொரு எல்லையற்ற பெருவெளி. பதின்பருவத்து சிறுவர்களின் “உடல்சிக்கல், மனச்சிக்கல், வாழ்வியல் சிக்கல், பொருளாதாரச் சிக்கல்” மட்டுமல்லாது கிராமத்து வாழ் சிறுவர்கள் மீதான சாதிய, பாலியல் வன்முறைகளை எந்தவித சமரசங்களும் இன்றி இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்ட முறையில் இவரது படைப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. சிறுவர்களின் சிக்கல்களை முன்வைத்த ஏராளமான சிறுகதைகள் நம்மிடம் இருக்கின்றன. எனினும் நாவலில் மிகக் குறைவாகத் தான் கையாளப்பட்டுள்ளன. கி. ராஜநாராயனின் “பிஞ்சுகள்”, பூமணியின் “வெக்கை” போன்ற படைப்புகள் சிறுவர் சார்ந்து படைக்கப்பட்டிருந்தாலும், பெருமாள் முருகனின் படைப்புகள் அவற்றிலிருந்து மாறுபட்ட பரிமாணத்தில் அமைந்திருக்கின்றன. கதைக்களத்தின் யதார்த்த வாழ்க்கை பலவிதங்களில் நம்முன் பரிமாணம் கொள்கிறது.

மனித வாழ்க்கை பாலியல் வாழ்க்கையை அல்லது பாலியல் கிளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது என்கிறார் உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்ட். மேலும் இன்பக் கொள்கையும் (Pleasure Principle), இருப்புக் கொள்கையும் (Reality Princple) உயிர்களின் உளப்பண்புகளில் ஆதிக்கம் செலுத்தினாலும் – இவற்றின் தாய் வேராகச் செயல்படுவது “கட்டாயமும் மூர்க்கமும்” என்கிறார். உடலே இவற்றின் ஆதாரம். உள்ளுணர்சிகள் அனைத்திற்கும் மூர்க்கம் பொதுவாக இருப்பதால், மூர்க்கத்தோடு தொடர்புடைய கட்டாயத்தன்மை (Compulsion) உள்ளுணர்சிகளின் பொதுப் பண்பாக அமைந்து விடுகிறது. உதாரணமாக, உடலியல் தேவைகள் (Somatic Needs) கட்டாயத்தின் அடிப்படையில் உந்தப்படுகின்றன. இந்த உந்துதல்களே இறுக்கம் மற்றும் தளர்வுக்குக் காரணங்களாக அமைகின்றன.

“நிழல்முற்றம், கூள மாதாரி” ஆகிய நாவல்களில் பதின்பருவத்து சிறுவர்களின் உடலியல் சிக்கலும், காம வேட்கையின் விருப்பங்களும் உளவியல் தன்மையில் சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கும். நிழல் முற்றத்தில் வரும் படத்துக்காரன் தனது மனைவியைப் பிரிந்து பாலியல் வறட்சியில் தவிக்கிறான். இந்நாவலின் முக்கியப் பாத்திரமான சக்திவேலின் முகம், படத்துக்காரனுக்கு மனைவியின் முகத்தை ஞாபகப்படுத்துவதால் மூர்க்கம் கொள்கிறான். ஆகவே, சக்திவேலை தனியாக அழைத்து வந்து மதுவினை அருந்தச் செய்து பாலியல் இச்சையைத் தீர்த்துக்கொள்ள பயன்படுத்திக் கொள்கிறான்.

“டே சக்தி... நெசமேச் சொல்றன்டா, எம்பொண்டாட்டி மூஞ்சியாட்டமே உனக்குடா. குண்டு மூஞ்சி... பொதுபொதுன்னு கன்னம்டா. லேசா வந்திருக்குதே மீச... அது மட்டும் இல்லாட்டி நீ அவளேதாண்டா. சக்தி, எங்கண்ணு... டேய்...” என போதையில் படத்துக்காரன் சக்திவேலினை அழுத்திப் பிடிக்கவும், “விலக்கவே முடியாத இருள்போல அவன் கவிவதைத்தான் சக்திவேலால் உணர முடிந்தது” என்ற விவரணையுடன் அத்யாயம் முடிகிறது. எதிர்க்க முடியாமல் இச்சையின் தூண்டிலில் விழுகிறான் சக்திவேல். (அத்யாயம்: 9, பக்கம்: 71-76)

போலவே, பாலியல் தொழில் செய்யும் திருநங்கை “கருவாச்சி” தனது வாடிக்கையாளருடன் இருட்டுத் திரையரங்கில் அமர்ந்திருக்க, கருவாச்சியை நெருங்குகிறான் சக்தி. பக்கத்து இருக்கையில் அமர்ந்து திருநங்கையின் இடுப்பில் கையை வைத்து முதலில் லேசாகத் தடவுகிறான். கருவாச்சி எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருக்கவும் இடுப்பை லேசாகத் தடவுகிறான்.

“காலு மசுறுக் கூட ஒழுங்கா மொளைக்காத உனக்கு... இது எதுக்குடா... ம்? லொக்கா லொக்காங்கிற... ம்...” என்கிறாள்/ன் கருவாச்சி. (அத்யாயம்: 12, பக்கம்: 97)

கைக்குழந்தையுடன் தனது மனைவி இருக்கும்பொழுது, சக்திவேலை கடையில் துணைக்கு வைத்துவிட்டு திருநங்கையுடன் உறவுகொள்ளச் செல்கிறான் பீடாக் கடைக்காரன். “வளரிளம் பருவத்தில் இருக்கும் சக்திவேல், பாலியல் வறட்சியில் தவிக்கும் படத்துக்காரன், கிளி போன்ற அழகான மனைவியிருந்தும் திருநங்கையுடன் சில நொடிகலேனும் புணரத் துடிக்கும் பீடாக் கடைக்காரன்” என உடல் சார்ந்து, இச்சை சார்ந்து இவர்களின் உள்ளுணர்வு மூர்க்கம் கொள்கிறது.

இதைத்தான் “மூர்க்கத்தோடு தொடர்புடைய கட்டாயத்தன்மை (Compulsion) உள்ளுணர்சிகளின் பொதுப் பண்பாக அமைந்துவிடுகிறது” என்று ஃப்ராய்ட் சொல்கிறார். மேலும், கட்டாயத் திருப்பத்தை இன்பியலுக்கும் (Hedonism) மேலான உளப் பண்பாகக் கொள்வதால் தான் இரட்டைப் பாலுமையே (Bi-sexuality) கட்டாயத் திருப்பத்திற்கு (Repetition Compulsion) அடிப்படையாக உள்ளது என்கிறார் (தனது ஆய்வு முழுமைக்கும் செக்ஸ் உணர்வை முதன்மை உணர்வாகக் கொள்ளும்) சிக்மண்ட் ஃப்ராய்ட். கிராமமும் அற்ற, நகரமும் அற்ற குழந்தைத் தொழிலாளர்களுடைய வாழ்வின் கணங்களை – சிறுவர்களின் போக்கிலும், தியேட்டர் தொழில் சார்ந்த சிக்கலான அனுபவங்களின் ஊடாகவும் உலவி உளவியல் நோக்கில் நிழல் முற்றத்து படைப்பாக்கியிருக்கிறார் பெருமாள் முருகன்.

கூள மாதாரியில் சிறுவர்களின் உலகம் வேறு வகையாகக் கையாளப் பட்டிருக்கிறது. இது முழுக்க முழுக்க கிராமத்துச் சிறுவர்களின் வாழ்வியல் சிக்கலையும், கொத்தடிமைகளாக வாழும் நிலையையும், சிறுவர்களுக்கு இடையிலுள்ள சாதிய அடுக்கின் கூறுகளையும் நுட்பமாக முன்வைத்து நகரும் படைப்பு. நான்கு சிறுவர்களும், மூன்று சிறுமிகளும் தான் நாவலிலுள்ள பிரதானப் பாத்திரங்கள். பொட்டல் மேய்ச்சல் வெளியில் தான் முழுக்கதையும் நகர்கிறது. கிரா-வின் பிஞ்சுகள் நாவலில் கூட சிறுவர்கள் பறவையைத் தேடி கிராமத்தின் விரிந்த நிலத்தில் இங்குமங்கும் அலைந்தாலும், வீடானது தவிர்க்க முடியாததோர் அம்சமாக படைப்பில் இருக்கும். கூள மாதாரி நாவலின் இரண்டு சின்ன இடங்களில் மட்டும் தான் வீடு இடம்பெறும். மற்றபடி இந்நாவல் முழுக்க முழுக்க மேய்ச்சல் நிலத்தையே (Geographical Landscape) சுற்றிவருகிறது. இந்த வடிவத்தில் நிறைய உலகத் திரைப்படங்கள் வந்திருக்கிறது. ஆனால் எழுத்திலக்கியத்தில் இதுபோன்ற முயற்சிகள் மிகச் சொற்பம் தான். பனைமரத் தோப்பு, தரிசு நிலம், கிணற்றடி, கிணற்றுக் குளியல், வெள்ளாமைப் படல் என இயற்கையின் சூழலில் நாவல் விரிந்து செல்கிறது. இந்தத் தன்மையில் அமைந்த தமிழ் நாவல்களே வேறு இல்லையென்று கூட சொல்லலாம். வட்டார பாலியல் அர்த்தம் பொதிந்த கொச்சை வார்த்தைகள் ஏராளமாக நாவலெங்கும் இரைந்து கிடக்கின்றன. பால்யகால கிராமத்து வாழ்க்கையை நினைத்துப் பார்க்கையில், இரைந்துகிடக்கும் வார்த்தைகளை எடுத்துக் கோர்த்து ரகசியமாக ரசிக்கத் தோன்றுகிறது. இதன் ஆங்கில மொழியாக்கமாகிய “SEASONS OF THE PALM” 2004 ஆம் ஆண்டிற்கான “கிரியாமா” பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

பசுபிக் கடலோர நாடுகள், தெற்காசிய நாடுகள் ஆகியவற்றில் வாழும் மக்களுக்கிடையே பரஸ்பரப் புரிதலை (Mutual Understand) உருவாக்கும் முயற்சியாக இப்பகுதி (இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கத் துணைக்கண்டம் போன்ற நாடுகள்) வாழும் மக்களின் யதார்த்த வாழ்கையை மையமாகக் கொண்டு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அல்லது மொழிபெயர்க்கப்படும் படைப்புக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசு கிரியாமா. அதன்படி 2004 ஆம் ஆண்டிற்கான பட்டியலில் பரிந்துரைக்கப்பட்ட இருநூறு நாவல்களில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்து – கடைசி சுற்றுக்குத் தகுதி பெற்ற நாவகளில் கூள மாதாரி-யின் மொழியாக்கமும் ஒன்று. இதனை ஆய்வாளர் வ. கீதா மொழியாக்கம் செய்திருக்கிறார். நிழல் முற்றம் நாவலையும் வ. கீதா “Current Show” என்ற தலைப்பில் மொழி பெயர்த்திருக்கிறார். “மாதொருபாகன்” - அனிருத் மொழிபெயர்ப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

“மாதொருபாகன்” – காளியும் பொன்னாவும் குழந்தையில்லாத் தம்பதிகள். ஒருவரை ஒருவர் அளவுகடந்து நேசிக்கின்றனர். குழந்தையில்லா ஒரே குறைதான் அவர்களுக்கு. மகாபாரதத்தில் அம்பிகைக்கும், அம்பாலிகைக்கும் வியாசன் விந்துதானம் செய்கிறான். தாயின் கூச்சத்தால் கருவிலேயே சபிக்கப்பட்டு பிறந்தவனாகிய பாண்டுவின் மனைவியான குந்தியும் விந்துதானம் பெற வேண்டி கணவனுடன் கானகம் செல்கிறாள். இது காலம் காலமாக நடக்கும் ஒன்று தான். அறிவியல் விஞ்ஞான வளர்ச்சியில் “டெஸ்ட் டியூப் பேபி” வரை மழலைச் செல்வங்கள் பெற வேண்டி எவ்வளவோ நடக்கிறது. இந்நாவலும் அத்தகையதோர் சிக்கலான முடிச்சை உள்ளடக்கமாகக் கொண்டதுதான். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்ற புனிதத் தளம். அங்கு நடக்கும் பதினாங்கு நாள் திருவிழாவின் கடைசி நாளின் இரவுத் திருவிழா – கல்யாணமாகியும் பல ஆண்டுகள் குழந்தையில்லாத பெண்களுக்கு முக்கியமான நிகழ்வு. அப்பெண்கள் கோவிலுக்குச் சென்று முகத்தில் சந்தனம் பூசிக்கொண்டு வந்திருக்கும் இளைஞர்களில் - தனக்குப் பிடித்த யாரேனும் ஒருவனுடன் இரவு முழுவதும் தங்கி, உடலுறவு கொண்டு கருவைச் சுமந்து வரலாம். வந்திருக்கும் பெண்களைப் பொருத்தவரை அவர்கள் சாமி. வாலிபர்களைப் பொருத்தவரை இந்த வாய்ப்பு கிடைத்தற்கரிய மகானுபவம். இளைஞனாக இருந்தபோது காளியும் உடலுறவு சுகத்தினை முதன்முறையாக அனுபவிக்க இந்த விழாவுக்குச் சென்றிருக்கிறான். அப்படியிருக்கையில், தனது மனைவியையே மாற்றான் ஒருவனுடன் உறவுகொள்ள அனுப்பி வைக்கவேண்டிய சூழல். காளியின் குடும்பமே இதற்கான ஏற்பாடுகளில் இறங்குகிறது.

தனக்கு ஆண்மை இல்லையோ என்று நினைக்கும் கணவன் (காளி). குழந்தைப் பேரு இல்லாததால் மலடி என்பதைக் காரணம் காட்டி - கட்டிய புருஷனே தன்னை ஒதுக்கி வைத்துவிட்டு இன்னொருத்தியைத் திருமணம் செய்துகொள்வானோ என்று நினைக்கும் மனைவி (பொன்னா). தம்பதிகளின் அகச்சிக்களையும், அவர்கள் சந்திக்கும் புறச்சூழல் நெருக்கடிகளையும் முன்வைத்து, திருச்செங்கோடு சமூகத்திலிருந்த ஒரு வழமையை பதிவாக்கிய அதே சமயத்தில், பக்கத்திற்குப் பக்கம் உணர்வுகளைக் கொப்பளிக்கும் படைப்பாக்கியிருக்கிறார் முருகன்.

இவரது படைப்புகளில் நல்லவர்கள் தீயவர்கள் என்ற பாகுபாடே இல்லை. பூக்குழி நாவலின் சரோஜாவைத் தீயிட்டுக் கொளுத்தும் மாமியார் மாராயி மற்றும் இதர சாதி வெறியர்களைத் தவிர்த்து எல்லோருமே அசலான யதார்த்த மனிதர்கள். சூழலின் தன்மையால் பிணக்கு கொள்கிறார்கள். உறவுகளுக்குள் விரிசல்களும் மோதல்களும் எழுகிறது. எனினும் இவர்கள் மனிதத்தின் மான்பைத் தாங்கிப் பிடிக்கிறார்கள். ஆளண்டாப் பட்சியில் வரும் விவசாயக் குடும்பத்தின் மூத்த ஆண்ணன், இளைய தம்பியான முத்துவின் மனைவி பெருமா தனியாக இருக்கும் சமயத்தில் நெருங்கிச் சென்று, மோகத்தின் உந்துதலில் அவளது ஒருபக்க மார்பை அழுத்திப் பிடிக்கிறான். அவள் திமிறிக்கொண்டு ஊரையே கூட்டிவிடுகிறாள். எனினும் மூத்த அண்ணன் தீயவனாகச் சித்தரிக்கப்படவில்லை.

போலவே “கங்கணம்” நாவலில் வரும் சக்கிலியன் குப்பன் – கதை நாயகனான மாரிமுத்துவின் பாட்டிக்கு இரவு நேரக் காவலிருக்கும் பொழுது, 17 வயது மகனின் திருமணதிற்காக வேண்டி மனம் பிறழ்ந்த நிலையிலிருக்கும் பாட்டியின் சேமிப்புப் பணத்தை எடுத்துக் கொள்கிறான். நாவலின் கடைசி அத்யாயத்தில் மாரிமுத்துவின் கால்களில் குப்பன் விழுந்து மன்றாடுகிறான். “பெரியாத்தா உள்ள செத்துக் கெடக்கறா! கொஞ்ச நேரத்துல உங்களுக்குக் கல்யாணம். உங்கள மார்மேல தூக்கி வளத்தேனே. உங்களுக்குக் கெடுதி நினைப்பேனா. நீங்க போயிடுங்கைய்யா” என்று மன்றாடுகிறான். இந்த சக்கிலியக் குப்பன் திருடன் அல்ல. சகமனிதன் மீதான, தனது முதலாளியின் வாழ்வு மீதான அக்கறை கொண்ட கிராமத்து மனிதன். 32 -வயதாகியும் பல்வேறு காரணங்களால் திருமணம் தள்ளிப் போகும் ஒருவனின் வாழ்க்கை மீதான அக்கறையை வெளிப்படுத்தும் தூய உள்ளம் கொண்ட நேசிக்கத் தகுந்த மனிதன். போலவே கங்கணம் மாரிமுத்து தூக்கக் கலக்கத்தில் நிலவின் ஒளியில் பட்டுத் தெறிக்கும் தாயின் இடுப்பைப் பார்த்து ஒருநிமிடம் சபலப்படுகிறான். அடுத்த நொடி சுதாரித்து உள்ளறையில் சென்று படுத்துக்கொள்கிறான்.

“அன்னைக்கும் இதே மாதிரி நிலாடா. இந்த நெலா இருக்குதே இது பொல்லாததுடா. யாரையும் மானங்கெட வெச்சிரும். அன்னைக்கும் அப்படித்தான். ஒடம்பெல்லாம் கணகணன்னு வேவுது. திடுக்குனு முழுச்சிப் பாக்கறன். எதுத்தாப்பல நெலா வெளிச்சத்துல ஒரு இடுப்பு மின்னுது. அப்படியே எந்திரிச்சிப் போயி அந்த இடுப்பக் கட்டிக்கோனும்னு தோணுது. எந்திரிச்சிட்டன். அப்பா எங்கருந்தோ அறிவு வந்து அது உங்கம்மாடான்னுது. அய்யோன்னு மனசுக்குள்ள கத்திக்கிட்டு ஊட்டுக்குள்ள எந்திரிச்சிப் போயிட்டன். அன்னையிலருந்து நான் தனியாத்தான் படுதுக்கறன். அப்பேற்பட்ட அயோக்கியண்டா நான்.” (கங்கணம்: பக்கம் - 299)

கூள மாதாரியின் செவிடி, தான் வேலை செய்யும் கவுண்டச்சியின் குழந்தையை எப்பொழுதும் இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டிருகிறாள். ஆடு மேய்க்கும் இடத்திற்கும் தூக்கிச் செல்கிறாள். ஒருமுறை கிணற்றில் குதித்து நீராடுகையில், குழந்தையின் ஞாபகம் வந்து கிணற்றின் மேலேறி வருகிறாள். “ச்சே... இந்தக் கொழந்தயோட கழுத்த பிச்சி வானத்துல எறிந்சிட்டா எவ்வளோ நிம்ம்மதியா இருக்கலாம்” என்று நினைக்கிறாள். யானையில் தூங்கும் குழந்தையின் முகத்தைப் பார்த்ததும், “இந்தக் கொழந்தையையா அப்படி நெனச்சோம்...” என்று வருந்துகிறாள். வாழ்வின் நெருக்குதல்கள் இதுபோன்ற மனசஞ்சலத்தை உருவாக்குவதும், அதிலிருந்து விடுபடுவதும் தவிர்க்க முடியாத ஒன்றுதானே.

கிராமத்தில் வாழ்பவர்கள் எல்லா வகையிலும் வெள்ளந்தியானவர்கள் என்ற பொதுப்புத்தியில் எழுதிச் செல்லாமல், சந்தற்ப சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களும் பலமும் பலவீனமும் கொண்ட எளிய கிராமத்து மனிதர்கள் தான் என்பது போல பாத்திரங்களை பெருமாள் முருகன் வார்த்தெடுக்கிறார்.

“இருண்ட உலகத்தில் வாழும் விளிம்புநிலை மனிதர்கள் என்று யாருமே இல்லை. நல்லது-கெட்டது, தீயவன்–கொடியவன், நன்மை-தீமை, உயர்ந்தவை-தாழ்ந்தவை என்ற பேதம் எதுவுமே உலகத்தில் இல்லை. இவை யாவும் நம்முடைய கற்பிதங்கள்” என்று கூறுவார் எழுத்தாளர் பிரபஞ்சன். எல்லாமே சூழலைப் பொறுத்து வெளிப்படும் மனிதர்களின் கன நேர உணர்வுகள் தான். பெருமாள் முருகனின் மொத்த நாவல்களையும் அசைபோடுகையில் எழுத்தாளர் பிரபஞ்சனின் கூற்று உறுதிப்படுகிறது. நாஞ்சில்நாடன் பகிர்ந்ததைப் போல “சூப்பி எறியப்பட்ட மாங்கொட்டைகள் திக்குத் தெரியாமல் முளை விடுவதைப் போல”, இவர்கள் தத்துவ விசாரணைகள் எதுவும் அற்று வாழ்வின் மீதான நம்பிக்கையில் துளிர் விடக் கூடிய யதார்த்த மனிதர்கள்”. நாமெல்லாம் கூட அந்த நம்பிக்கையில் துளிர்த்தவர்கள் தானே...!

“இன்னும் பத்து நவல்களாவது எழுதும் எண்ணம் எனக்கிருக்கிறது. ஏராளமான வேலைகள் மிச்சம் இருகிறது” என்றார் முருகன். அந்த வகையில் நாம் பாக்கியசாலிகள். ஏனெனில், எதிர்காலத்தில் முருகனைப் பற்றி நிறையவே பேசலாம். அதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது.
Prof. Ezhilarasi Akka (Mrs. Perumal Murugan) with her younger son Elam Parithi 
at Vilakku Viruthu Function.

Photo Courtesy By: www.facebook.com/chandrujcm 

1 comment:

  1. குறிஞ்சிநெட்டில் என் புத்தக அறிமுகக் கட்டுரை. பெருமாள்முருகனின் கங்கணம் நாவல்.

    /மறந்து போவது வயதாவதன் சாதாரண அறிகுறியாக இருப்பினும் அதன் உச்சத்தில் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றும் கலந்துவிடுகின்றன. நிறைவேறாத ஆசைகளைச் சுமந்துகொண்டிருக்கும் ஆழ்மனது, மூளை பலவீனப்படும் இந்த இறுதிக்காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு மேலே வந்து தன் ஆட்டத்தை ஆரம்பிக்கிறது. உச்சமான போதையின் பிடியிலும் இது நிகழ்வதைக் காணலாம்/

    http://kurinjinet.blogspot.sg/2015/05/10.html?m=1

    ReplyDelete