Tuesday, May 31, 2011

தாகூர் இலக்கிய விருது - 2011

1861-ம் ஆண்டு பிறந்து 1941-ல் பூதவுடலைத் துறந்து இயற்கை எய்தினாலும், தன்னுடைய படைப்புகளின் மூலம் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பவர் மகாகவி ரவீந்திரநாத் தாகூர்.

'ஜனகன மன' - என்ற பாடலின் மூலம் இந்தியர்களின் இரத்தத்தில் இரண்டறக் கலந்திருப்பவர். வங்காள தேசத்தின் தேசியப் பாடலிலும் இவருடைய பங்களிப்பு இருக்கிறது. இலங்கையின் தேசியப் பாடலை எழுதியவர் தாகூரின் கருத்துகளில் பற்றுடையவர் என்பதால் அங்கும் இவருடைய தழுவல் இருக்கிறது. தேசங்களைக் கடந்து உணர்ச்சிகரமான கவிதைகளின் மூலம் ஒலித்தவருக்கு 1913-ல் கீதாஞ்சலிக்காக நேபால் பரிசு கிடைத்தது. அதன் மூலம் நோபல் பரிசைப் பெற்ற ஐரோப்பியர் அல்லாத முதல் படைப்பாளி என்ற பெருமையைப் பெற்றார். கவிஞர், நாடகாசிரியர், சிறுகதையாளர், கட்டுரையாளர், மொழி பெயர்ப்பாளர், கல்வியாளர், பதிப்பாளர் என பன்முகங்கள் கொண்டவர். தாகூரின் பன்முக பங்களிப்பைக் கருத்தில் கொண்ட வாங்க அரசு, தேசத்தில் துவங்கப்படும் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்கு "ர" என்ற எழுத்தை திட்டப் பெயரின் முன்னாள் சேர்த்து மகாகவியைப் பெருமைப்படுத்துகிறார்கள். சாகித்ய அகாடமி, லலித்கலா அகாடமி, சங்கீத நாடக அகாடமி போன்ற அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் தாகூரின் ஜெயந்தி விழாவைக் கொண்டாடி வருகின்றன.

தாகூரின் 150-வது ஆண்டினை முன்னிட்டு, இந்திய இலக்கியங்களை கௌரவிக்கும் வகையில் கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனம் சாகித்ய அகாடமியுடன் இணைந்து வழங்கும் தாகூர் இலக்கிய விருதின் 2010-ற்கான பட்டியலை (Tagore Literature Award) அறிவித்திருக்கிறார்கள். விருதுக்கான பரிசீலனையில் 24 மொழிகளில் வெளியான இந்திய படைப்புகள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த ஆண்டிற்கான விருதுப் பட்டியலில் எஸ் ராமகிருஷ்ணனின் "யாமம்" இடம் பெற்றுள்ள மகிழ்ச்சியான செய்தியை நவீன படைப்பிலக்கியத்தில் ஆர்வமுள்ள இலக்கிய வாசகர்கள் அனைவரும் கொண்டாடுகிறார்கள். இவருடன் சேர்ந்து எட்டு மொழியின் படைப்பாளிகள் இந்த விருதினைப் பெறுகிறார்கள். ஒரு தமிழ் படைப்பாளி இந்த விருதின் மூலம் கௌரவிக்கப்படுவது இதுதான் முதல் முறை என்றாலும் விருதானது 2009-ல் தான் ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தெபாப்ரட்ட தாஸ் எழுதிய அசாமிய சிறுகதைத் தொகுப்பான "Nirabchita Galpa", சந்தோஷ் கஜுர்லவின் டோக்ரி மொழி கவிதை தொகுப்பான "Bandlondian Bahaaraan", விஜய் டான் தெத்தாவின் ராஜஸ்தானி சிறுகதைத் தொகுப்பான "Bataan Ri Fulwari", சிறுபான்மையினர் மொழியான சந்தளியில் 'சொமை கிஸ்கு' எழுதி வெளிவந்த நாவலான "Namalia", பேராசிரியர் RG ஜதவின் மராட்டிய விமர்சன நூலான "Nivadak samiksha", ப்ரஜ்னத் ரத் எழுதிய ஒரிய கவிதை நூல் "Samanya Asamanya", உருதுக் கவிஞர் சந்தர் பான் க்ஹயல் எழுதிய "Subah-e-Mashriq", எஸ் ராமகிருஷ்ணனின் 'யாமம்' நாவலையும் சேர்த்து மொத்தம் 8 படைப்புகள் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. எஸ்ராவின் படைப்புகள் மாய வசீகரம் கொண்டவை. வாசகனை உள்ளிழுத்து கற்பனைப் போர்வையில் உலாவச் செய்பவை. பனிக்கட்டியானது வெப்பத்தினால் உருகி, நீர்க் கட்டிகளாகச் சிதறி, நதியாக நகர்ந்து நீராகவே விரியும் இயல்புடையது எஸ்ரா-வின் எழுத்து. மையத்திலிருந்து விளிம்பு நோக்கி நகர்ந்து மீண்டும் மையமாக உருக்கொள்ளும் படிமங்களை இவருடைய எழுத்தில் நிறையவே காணலாம்.

நண்பர்களுடன் சேர்ந்து நடத்திய சிற்றிதழான "அட்சரம்" இவரைத் தீவிர இலக்கியவாதியாக அடையாளப்படுத்தியது. 2000-த்தில் வெளியான 'உபபாண்டவம்' தான் எஸ்ராவின் முதல் நாவல். இது மலையாளம், வங்காளம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்பே இரண்டு சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்து இருந்தாலும் ஆனந்த விகடனில் வெளியான "துணையெழுத்து, தேசாந்திரி, கதாவிலாசம், கேள்விக்குறி" போன்ற தொடர்கள் தான் எஸ்ராவை பரவலான வாசகர்களிடம் கொண்டு சென்றது. 'துணையெழுத்து' - அன்பும் அரவணைப்பும் கொண்ட முகம் தெரியாத மனிதர்களின் நெருக்கத்தைப் பற்றிக் கூறுகையில், 'தேசாந்திரி' - பயணத்தில் விருப்பமுள்ள தேசாந்திரியாக சுற்றி அலையும் இளைஞனின் பார்வையில் சிறப்புமிக்க இடங்களைப் பற்றி பேசியது.

இதுவரை வெளியான எஸ்ராவின் நாவல்களான "உபபாண்டவம், நெடுங்குருதி, உறுபசி, யாமம், துயில்" ஆகிய எதுவும் தொடராக பத்திரிகைகளில் வெளிவந்ததில்லை. எல்லாமே புத்தக வடிவில் தான் நமக்குக் கிடைத்திருக்கிறது. இவற்றில் யாமம் என்ற நாவலுக்குத் தான் 2010-ஆம் ஆண்டிற்கான தாகூர் இலக்கிய விருது கிடைத்திருக்கிறது.

இது நிதர்சனத்திற்கும், மாயைக்கும் இடைப்பட்ட நாவல். இந்த நாவல் மூன்று நூற்றாண்டுகளின் கதையை விவரிக்கிறது. அத்தர் தயாரிக்கும் கலையை ஒரு பக்கீர் (அல் அசர் முசாபர்) ஞானியிடமிருந்து கனவின் மூலம் வரமாகப் பெற்ற இஸ்லாமியக் குடும்பம் ஒன்றின் பத்துத் தலைமுறை வியாபாரக் கதையாக ஆரம்பமாகிறது. அந்த அத்தரின் பெயர் ‘யாமம்’. முக்கியக் கதாப்பாத்திரங்கள் தொடர்பற்று தனித்து நின்றாலும், அத்தர் அவர்களுக்கிடையிலான இடைவெளியை காற்றில் கலந்து வாசனையால் நிரப்புகிறது. சமயத்தில் காமத்தின் குறியீடாக புடைத்தெழுகிறது.

கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் காலூன்ற விழைந்த போது வாசனைத் திரவியமும், தானியமும், நெசவுத் துணிகளும் முக்கிய வியாபாரப் பொருட்களாகப் பயன்பட்டிருக்கிறது. இந்தியா மேற்கத்திய நவீனத்துவம் நோக்கி நகர்வதையும், மேற்கத்திய காலனியாதிக்க மனோபாவம் இந்தியாவில் காலூன்ற எத்தனிக்கும் தருணத்தையும் ஏராளமான உள்மடிப்புகளுடன் நகர்த்திச் செல்லும் நாவல். இரவானது உறக்கத்திலும், முழிப்பிலும் இருக்கும் மக்களைத் தாண்டி ஏராளமான ரகசியங்களை பூனையின் லாவகத்துடன் கவ்விச் செல்கிறது. இரவின் சுவாரஸ்யம் மிகுந்த உள்படிமங்களே கதைக் களன்களாக விரிகிறது. வித்யாசமான முயற்சிகாக எஸ்ரா விருது பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. இந்நாவல் ஏற்கனவே கனடாவின் இயல்விருது பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


http://koodu.thamizhstudio.com/katturaigal_21.php
நன்றி: கூடு இணைய இதழ், 30-05-2011

Thursday, May 19, 2011

கலைஞருக்கு கடிதம்

பழ.நெடுமாறன் எழுதிய பகிரங்கக் கடிதம்:

மதிப்புக்குரிய தலைவர் கருணாநிதி அவர்களுக்கு, வணக்கம். “எப்படி இருந்தவர்கள் இப்படி மாறிவிட்டார்களே’ என்ற தலைப்பில் மிகுந்த ஆதங்கத்துடன் எனது பழைய கடிதம் ஒன்றை எடுத்து மேற்கோள்காட்டி விடுத்திருந்த அறிக்கையைப் படித்துப் பார்த்தேன். தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் அதைப்பற்றிக்கூட கவலைப்படாமல், எனது கடிதம் குறித்து அறிக்கை வெளியிடும் அளவுக்கு உங்கள் மனநிலை இருந்திருக்கிறது என்பது புரிகிறது.

“பொடா’ சிறையில் நான் இருந்தபோது, நீங்கள் எழுதிய “தொல்காப்பியப் பூங்கா’ நூலைக் கையெழுத்திட்டு எனக்கு அனுப்பி வைத்தீர்கள். நானும் அதைப் படித்துப் பார்த்துவிட்டுத் தங்களுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் அனுப்பினேன்.

ஆனால், தாங்கள் செய்த, செய்துவரும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கும் தங்களது இலக்கியத்தைப் பாராட்டுவதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை நன்கு அறிந்திருந்தும் திசை திருப்புவதற்கு முயற்சி செய்திருக்கிறீர்கள். இப்போது மட்டுமல்ல, நீண்டகாலமாகவே இவ்வாறு செய்து வருகிறீர்கள்.

1969-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் முதல்முதலாக என் மீது பொய் வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனாலும், முதலமைச்சராக அண்ணா இருந்தவரை, அந்த வழக்கு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், நீங்கள் முதலமைச்சரான உடனேயே என்னைக் கைது செய்து சிறையில் அடைக்க ஆணை பிறப்பித்தீர்கள்.6 மாத நன்னடத்தை ஜாமீன் கொடுத்துவிட்டு வீட்டுக்குப் போகலாம் என நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எனது மனசாட்சி ஏற்க மறுத்தது.

எந்தக் குற்றமும் செய்யாதபோது நன்னடத்தை ஜாமீன் எழுதிக்கொடுப்பதை நான் ஏற்கவில்லை. அதன் விளைவாக, ஆறு மாதம் சிறையில் இருக்க நேர்ந்தது. காமராஜ் மதுரை சிறைக்கே வந்து என்னைப் பாராட்டினார். அதைவிடச் சிறந்த பாராட்டு வேறு இல்லை. இதன் விளைவாக, தமிழகம் முழுவதற்கும் நான் அறிமுகமானேன். இதற்குக் காரணம் நீங்களே என்பதை இன்றும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

1978-ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இந்திரா காந்தி மதுரைக்கு வந்தபோது, அவருக்குக் கறுப்புக் கொடி காட்டுவது என்ற பெயரில் உங்கள் தொண்டர்கள் அவரது உயிருக்கு உலை வைக்க முயன்றார்கள்.

உங்களால் ஏவி விடப்பட்டவர்களின் கொடூரமான தாக்குதல்களிலிருந்து இந்திராவைக் காப்பாற்றிய பேறு எனக்குக் கிடைத்தது. அதன் மூலம் அகில இந்திய அளவில் அறிமுகமானேன். இதற்கும் நீங்களே காரணம் என்பதை உணர்ந்து உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

1985-ம் ஆண்டில் விடுதலைப் புலிகளின் துணையுடன் இலங்கைத் தமிழர் பகுதியில் ரகசியச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு சிங்கள ராணுவம் இழைத்து வரும் கொடுமைகளை ஆதாரப்பூர்வமாக அறிந்துவந்து வெளியிட்டபோது, நீங்கள் முரசொலி இதழில் என்னைப் பாராட்டி முழுப்பக்க அளவில் கட்டுரை எழுதினீர்கள். இப்போதும் அதை நன்றியோடு நினைவுகூர்கிறேன். ஆனால், நாம் ஒன்று கூடி உருவாக்கிய “டெசோ’ அமைப்பை நீங்கள் தன்னிச்சையாகக் கலைத்தீர்கள்.

ஈழத் தமிழர் பிரச்னையில் உங்களுக்கு உண்மையான ஈடுபாடு இல்லாமல் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறீர்கள் என்பதை உணர்ந்தபோது, உங்களுக்கு எதிர்நிலை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

காமராஜரோடு உங்களை ஒப்பிட்டும், உங்கள் ஆட்சியை காமராஜ் ஆட்சி என வருணித்தும் காங்கிரஸ்காரர்கள் சிலர் பேசுகிறார்கள். புரிந்து பேசுகிறார்களா அல்லது புரியாமல் பேசுகிறார்களா என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும். காமராஜ் மக்கள் தொண்டுக்காகத் திருமணத்தைத் துறந்தவர். பெற்ற தாயைக்கூட தன்னுடன் வைத்துப் பேணாதவர்.

ஒன்பது ஆண்டுகள் ஆங்கிலேயரின் கொடுமையான சிறையில் வாடியபோதும் அதுகுறித்து ஒருபோதும் பேசாதவர். மறையும்போது தான் உடுத்தியிருந்த துணிகளைத் தவிர, வேறு சொத்து இல்லாதவர். ஆனால், நீங்களோ மனைவி, துணைவி என பல்கிப் பெருகிய குடும்பங்களுடன் வாழ்பவர். அது மட்டுமல்ல, ஏழைக் குடும்பமான உங்கள் குடும்பம், இன்று ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தனது தாய் உள்பட, தனது குடும்பத்தவர் எவரையும் அரசியலில் அனுமதிக்காதவர் காமராஜ். அதைப்போலவே தான் உருவாக்கிய தி.மு. கழகத்தில் அண்ணா, தனது பிள்ளைகள் எவரையும் வாரிசாக அறிமுகப்படுத்தவில்லை.

ஆனால், நீங்கள் செய்ததை நாடறியும். 1970-களில் உங்களது மூத்த மகன் மு.க. முத்துவை எம்.ஜி.ஆருக்குப் போட்டியாகத் திரையுலகில் களமிறக்கினீர்கள். கட்சிக்காரர்களைத் தூண்டிவிட்டு ரசிகர் மன்றங்களை உருவாக்கினீர்கள். இறுதியில் மு.க. முத்துவை நிலைநிறுத்தவும் முடியவில்லை. எம்.ஜி.ஆரை கழகத்தில் நீடிக்க வைக்கவும் முடியவில்லை.

இதன் விளைவாக, 13 ஆண்டுகள் நீங்கள் பதவி இல்லாத இருளில் தடுமாற நேர்ந்தது. ஆனாலும் நீங்கள் பாடம் கற்கவில்லை. இப்போது இளம் நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோருக்குப் போட்டியாக உங்கள் பேரன் அருள்நிதியை கலை உலகில் இறக்கியிருக்கிறீர்கள். விஜய்யின் படங்களுக்கு பல முட்டுக்கட்டைகளைப் போட்டுத் தடுக்க நடைபெற்ற முயற்சி வெற்றி பெறவில்லை. விஜய்யின் பகையைத் தேடிக் கொண்டதுதான் மிச்சம். திரையுலகைக் கபளீகரம் செய்ய உங்கள் வாரிசுகள் செய்த முயற்சியின் விளைவாக, ஒட்டுமொத்தத் திரையுலகமும் உங்களுக்கு எதிராகத் திரும்பிவிட்டதே!

கடைசிவரை அண்ணா காங்கிரஸ் எதிர்ப்பாளராகவே திகழ்ந்தார். மதுவிலக்குக் கொள்கையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால், அண்ணா மறைந்த உடனேயே நீங்கள் மதுக்கடைகளைத் திறந்து இளைய தலைமுறையின் சீரழிவுக்குக் காரணமானீர்கள். அதைப்போல 1971-ம் ஆண்டில் காங்கிரஸýடன் கைகோக்கத் தொடங்கி இன்றுவரை அந்த உறவை நீட்டிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறீர்கள்.

நேரு குடும்பத்துக்கும் தனக்கும் உள்ள உறவை யாரும் பிரித்துவிட முடியாது எனத் தம்பட்டம் அடிக்கிறீர்கள். 1959-ம் ஆண்டு சென்னைக்குப் பிரதமர் நேரு வந்தபோது கறுப்புக் கொடி என்ற பெயரில் அவர் மீது உங்களது தம்பிகள் செருப்புகளை வீசினார்கள்.

1978-ல் மதுரைக்கு இந்திரா காந்தி வந்தபோது கொலை முயற்சி நடைபெற்றது. அது மட்டுமல்ல, பாட்னாவில் வி.பி. சிங் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் எதிர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது, நான் வெளிநாட்டுப் பெண்ணை மணந்தவன் இல்லை என ராஜீவைச் சாடினீர்கள். நேரு குடும்பத்தின்மீது நீங்கள் வைத்திருக்கிற அளவற்ற அன்பின் அறிகுறிகள் இவை.

பல கட்டங்களில் காங்கிரஸ் தலைமையை மிரட்டிப் பணியவைக்க நீங்கள் முயற்சி செய்தீர்கள். மத்திய அமைச்சரவையில் மகனுக்கும், மகளுக்கும் இடம்கேட்டு நீங்கள் நடத்திய மிரட்டல் நாடகமும், சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக விடுத்த மிரட்டலும் கடைசியில் உங்களின் சரணாகதியில்தான் முடிந்தது.

1971-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு ஒன்பது இடங்களுக்கு மேல் தர முடியாது. சட்டமன்றத்தில் ஓரிடம்கூட கிடையாது என இந்திராவையே மிரட்டிப் பணியவைத்த நீங்கள், இன்று சோனியாவிடம் ஒவ்வொரு முறையும் சரணடைவதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.

அதிகாரம், பணம் ஆகியவற்றின் பலத்தோடு உங்கள் மகன் அழகிரி திருமங்கலம் இடைத்தேர்தலில் கையாண்ட தில்லுமுல்லுகள் உங்கள் ஆசியோடுதானே நடைபெற்றன. அதைத்தொடர்ந்து நடைபெற்ற அத்தனை இடைத்தேர்தல்களிலும் திருமங்கலம் சூத்திரத்தின் அடிப்படையில்தானே நீங்கள் வெற்றிபெற முடிந்தது. இதைக் கண்டு மகிழ்ந்து மகனை உச்சிமுகர்ந்து பாராட்டினீர்கள். ஆனால், தேர்தல் ஆணையம் விழிப்படைவதற்கு இவை காரணமாயிற்று என்பதை அப்போது நீங்கள் உணரவில்லை. சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையம் மிகுந்த கவனத்துடன் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாகத்தானே உங்களால் முறைகேடுகளை அரங்கேற்ற முடியவில்லை.

தேர்தல் முடிந்த பிறகு தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி விடுத்த அறிவிப்பு நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக நாடு முழுவதும் ரூ. 70 கோடி கைப்பற்றப்பட்டது. இதில் ரூ. 60 கோடி தமிழ்நாட்டில் மட்டும் கைப்பற்றப்பட்டது. நாங்கள் ஒரு கோடி ரூபாயைக் கைப்பற்றியிருக்கிறோம் என்றால் 40 முதல் 50 கோடி ரூபாயை விநியோகிக்கவிடாமல் தடுத்து இருக்கிறோம் என்று பொருள் எனக் கூறியுள்ளார்.

அவர் கூற்றுப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் ரூ. 2,400 கோடி முதல் ரூ. 3,000 கோடி வரை பணம் விநியோகிக்கவிடாமல் தடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. ஜனநாயகத்தைச் சீரழிக்கத் தமிழ்நாட்டில் உங்கள் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி குறித்து நீங்கள் இதுவரை வெட்கமடையவில்லையே, அது ஏன்?

நீங்கள் உள்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் தொகுதி மாறி போட்டியிட்டும் பயனில்லாமல் போனது ஏன்?

தி.மு.க. வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது ஏன்? மூத்த அமைச்சர்களும் கூட்டணித் தலைவர்களும் படுதோல்வி அடைந்தது ஏன்? நீங்கள் சிந்தித்தது உண்டா? இனிமேலாவது சிந்திப்பீர்களா?

இலவசங்களை அள்ளித் தந்தும், பல ஆயிரம் கோடி ரூபாய்களை வாரியிறைத்தும் பலமான கூட்டணி அமைத்தும் களம் இறங்கியபிறகு தோல்வியைத் தழுவியது ஏன்? இலங்கையில் நடைபெற்ற போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டபோது, அவர்களைக் காப்பாற்றுவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் உண்ணாவிரத நாடகத்தை நடத்தி காங்கிரஸூக்குத் துணை போனது இந்தத் தோல்விக்குரிய முக்கிய காரணமென்பதை இப்போதாவது உணர்கிறீர்களா?

முள்ளிவாய்க்கால் போரின் இறுதிக்கட்டத்தில் மக்களைக் காப்பதற்காக தனது மகனையே களமுனைக்கு அனுப்பிக் காவுகொடுக்க ஒரு தலைவன் முன்வந்தான். அதே காலகட்டத்தில் தில்லியில் தனது மகனுக்கும், மகளுக்கும் பதவி பெறுவதற்காக மடிப்பிச்சை ஏந்தி நின்றார் ஒரு தலைவர் என்ற தீராத பழிக்கு ஆளாகிவிட்டீர்களே!

உங்களின் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், இயற்கை வளங்கள் கொள்ளை, மோதல் சாவுகள், உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல், அன்னிய நிறுவனங்களுக்குத் தடையில்லாத மின்சாரத்தை வழங்கிவிட்டு மக்களுக்கு மின்சாரத் தடை ஏற்படுத்திய கொடுமை போன்றவற்றை விரிக்கின் பெருகும். உங்கள் தோல்விக்கு இவையெல்லாம் துணை நின்றன.

திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவதில் வல்லவர் நீங்கள் என்பதை நான் மறுக்கவில்லை. நீங்கள் எழுதிய வசனங்களிலேயே என் மனதில் இன்னமும் நிற்பது “மனசாட்சி உறங்கும்போதுதான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது’ என பூம்புகார் படத்தில் நீங்கள் எழுதிய வசனம் உங்களுக்கு இன்று எல்லா வகையிலும் பொருத்தமாகிறது. ஈழத் தமிழர்களை மட்டும் நீங்கள் கைவிடவில்லை. தமிழக மீனவர்களையும் கைவிட்டீர்கள். ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க எதுவும் நீங்கள் செய்யவில்லை.

உங்கள் மகள் கனிமொழி, ஆ. ராசாவுடன் கூட்டுச்சேர்ந்து நடத்திய ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடிமறைக்க நீங்கள் செய்த முயற்சி எதிர்விளைவை அல்லவா ஏற்படுத்தி விட்டது. ஈழத் தமிழர் பிரச்னையில் துரோகம் செய்த மத்திய அரசுக்கு ஆதரவாக நீங்கள் நடந்து கொண்டதற்குக் கிடைத்த கைமாறுதானே ஸ்பெக்ட்ரம். குடும்ப நலனைக் காப்பாற்ற காங்கிரஸ் தலைமையுடன் பணிந்து போனீர்கள். ஆனால், தமிழக மக்கள் உங்களையும் காங்கிரஸையும் கூட்டணி சேர்ந்த கட்சிகளையும் கூட்டாகத் தண்டித்து விட்டார்கள்.

மதம், ஜாதி, பிராந்திய வேறுபாடுகள் இல்லாமலும் ஒட்டுமொத்த தமிழகமும் உங்களுக்கு எதிராகத் திரண்டது ஏன்? பல காலம் உங்களின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்த சென்னை தவிடு பொடியானது ஏன்? அண்ணா வளர்த்த கட்சி, கடைசிக் கட்டத்தில் வடிவேலுவையும், குஷ்புவையும் நம்பி நிற்க வேண்டிய அவலத்துக்கு யார் பொறுப்பு?>கடந்த ஐந்தாண்டு காலத்தில் எந்த மாநில முதலமைச்சரும் சந்தித்திராத பாராட்டு விழாக்களை நடத்தி, இதுவரை யாரும் பெற்றிராத விருதுகளையும் உங்கள் துதிபாடிகள் உங்களுக்கு அளித்தபோது கூச்சமின்றி அவற்றை ரசித்து ஏற்றீர்களே, இன்றைக்கு அந்தத் துதிபாடிகள் உங்களைத் தனிமையில் விட்டுவிட்டு, “அற்ற குளத்து அறுநீர் பறவைகளாக’ப் பறந்துவிட்டார்களே.

அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்து உயர்ந்த நிலையில் இருந்த காமராஜ் 1967-ம் ஆண்டு தேர்தலில் தோற்றபோது மக்கள் தீர்ப்பை மதித்து ஏற்கிறேன் என்று கூறினார். அவருக்கு இருந்த ஜனநாயகப் பண்பு உங்களிடம் காணப்படாதது ஏன்? “மக்கள் ஓய்வளித்து விட்டார்கள்’ என்று நீங்கள் கூறியதன் மூலம் ஜனநாயகத்தையும் பொது வாழ்க்கையையும் மாசுபடுத்தி விட்டீர்கள்.

பொது வாழ்க்கைக்கு வருகிறவர்கள் கடைசிவரை மக்களுக்குத் தொண்டாற்றுவதையே கடமையாகக் கொண்டு செயல்படுவார்கள். பதவியில் இருந்தால் மக்கள் தொண்டு, பதவியில் இல்லாவிட்டால் ஓய்வு என்று சொல்பவர் உண்மையான மக்கள் தொண்டராக இருக்க முடியாது.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோல்விக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகும் பக்குவம் தங்கபாலுவுக்குக்கூட இருக்கிறது. ஆனால், பொது வாழ்க்கைக்குப் பொன் விழா கொண்டாடிய உங்களுக்கு இன்னமும் அந்தப் பக்குவம் வராதது ஏன்? இந்தக் கட்டத்திலேயாவது பிறரிடம் இல்லையென்றாலும் உங்கள் வாரிசிடமாவது எல்லாவற்றையும் ஒப்படைக்கலாம் என நீங்கள் எண்ணியதுண்டா?

ஒருவரின் பெருமைக்கும் சிறுமைக்கும் அவரவர்கள் செயல்பாடே அடிப்படை என்பதை வள்ளுவர் கூறுகிறார். குறளோவியம் தீட்டிய தாங்கள், இதை உணராதது ஏன்?

“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்” என்று கூறியுள்ளார்.

நன்றி: தினமணி நாளிதழ்

Monday, May 2, 2011

கோடை திரைப்பட விழா - சென்னை

மேற்கத்திய மோகமும், இயந்திரத்தனமான நவீன வாழ்க்கையும் நிகழ்த்துக் கலைகளை நம்மிடமிருந்து விளிம்பின் நுனிக்கு நகர்த்திவிட்டன. அரிதாரம் பூசிய செயற்கை முகங்களின் வரவால், இரத்தமும் சதையுமான வட்டாரக் கலைஞர்களின் இருப்பும் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. அழிந்து வரும் பழங்காலக் கலைகளை அதன் இயல்பு மாறாமல் பதிவு செய்யவும், அதைச் சார்ந்த கலைஞர்களின் சமூகச் சிக்கலை ஆவணப்படுத்தவும் காப்பகம் ஒன்றை உருவாக்கி ஒளிப்படங்கள் மற்றும் நூலகம் அமைத்து 1997 முதல் தேசிய நாட்டுப்புறவியல் ஆதரவு மையம் (NFSC) செயல்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் போன்ற இடங்களிலும், கேரளா, மத்தியபிரதேசம், ஓடிஸா, கர்நாடகா, ஜார்கண்ட் போன்ற இந்திய மாநிலங்களிலும் இவர்கள் கிளைகள் அமைத்துச் செயல்பட்டு வருகிறார்கள். தமிழகம் மட்டுமன்றி அயல்நாட்டினர் பலரும் தமிழகத்தில் நாட்டுப்புற ஆய்வுகளை மேற்கொள்ள இவர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை நுங்கம்பாக்கத்திலுள்ள NFSC அலுவலகத்தில் திரையிடலுடன் கலந்துரையாடலும் நடைபெறுகிறது. ஆர்வமுள்ள எல்லோருக்கும் அனுமதி இலவசம்.

தேசிய நாட்டுப்புறவியல் ஆதரவு மையமும் (NFSC), இயக்குனர் அமுதனின் தலைமையில் மதுரையை களமாகக் கொண்டு செயல்படும் 'மறுபக்கம்' அமைப்பும் சேர்ந்து ஏப்ரல் 4 முதல் 8 வரை கோடை திரைப்பட விழாவினை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதற்காக National Institute Of Design (அகமதாபாத்), மறுபக்கம் (மதுரை), Burundi Film Centre (கனடா), Magic Lantern Foundation (புது தில்லி) ஆகிய நான்கு குழுக்கள் தயாரித்து இயக்கிய 25 குறும்படங்கள் மற்றும் ஆவணப் படங்களை திரையிடலுக்காக தேர்வு செய்திருந்தார்கள். ஒவ்வொரு நாளும் மாலை 4 மணி முதல் 8 மணி வரை திரையிடலுடன் கலந்துரையாடலும் ஏற்பாடாகியிருந்தது.


1. தட்டும் பொறத்தப்பன் (மலையாளம் - P. சுதேவன்)

சுதேவன் வளர்ந்து வரும் மலையாளக் குறும்பட இயக்குனர்களுள் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். இந்தப் படைப்பில் கேரள அரசியலின் போக்கையும், அரசியல் பிரஞையின்றி வாழும் மக்களின் போக்கையும் தொடர்புபடுத்தி குறும்படமாக எடுத்துள்ளார். மன வளர்ச்சி குன்றிய பிரம்மச்சாரி ஒருவன் உடல்நலம் குன்றி படுக்கையை விட்டு நகர முடியாத தாயுடன் ஒரு பழைய வீட்டில் வசிக்கிறான். அண்டை வீட்டாரின் சிறுசிறு உதவியின் மூலம் இருவரும் நாட்களைக் கடத்துகிறார்கள். அரசியல் காரணங்களால் போலீசாரால் துரத்தப்படும் குற்றவாளி அந்த வீட்டின் பாழடைந்த பரணில் ஒளிந்து கொள்கிறான். தொடர்ந்த மூன்று நாட்களுக்கு அங்கேயே இருக்க வேண்டிய சூழல் குற்றவாளிக்கு ஏற்படுகிறது. பசியையும், தாகத்தையும் போக்கிக்கொள்ள 'தட்டும்பொறத்தப்பன்' என்ற குறுஞ்சாமியாக பிரமச்சாரியுடன் பேசுகிறான். குறுஞ்சாமியின் குரலாக ஒலிக்கும் குற்றவாளியை பிரமச்சாரி முழுமையாக நம்புகிறான். தனது தாயின் உடல்நிலை சரியாகவேண்டி, குற்றவாளி கேட்கும் எல்லா வசதிகளையும் செய்து தருகிறான். பரணில் மலஜலம் கழிக்கும் சப்தத்தை படுத்த படுக்கையிலிருக்கும் தாய் லேசாக உணர்கிறாள். அதைப் பற்றிய சந்தேகத்தை அவள் எழுப்புகிறாள். குலதெய்வத்தை சந்தேக்கிக்கக் கூடாது என்று சீறுகிறான் பிரமச்சாரி. யாரும் பரணுக்கு செல்லக் கூடாது என்று கட்டளைப் பிறப்பித்து காவலுக்கு இருக்கிறான்.

விஷயம் போலீசுக்குத் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வருகிறார்கள். வீட்டைச் சோதனை செய்யும் போது யாரும் அங்கு இல்லை என்பதால் போலீஸ் திரும்பிச் செல்கிறார்கள். பிரமச்சாரியுடன் சேர்ந்து ஊர் மக்களும் தட்டும்பொறத்தப்பனை நம்புவது போல படம் முடிகிறது.

Links:

Promo: http://www.youtube.com/watch?v=JeTm9I9wzWw

2. மை வில்லேஜ் இஸ் பம்பாய் (ஹிந்தி & தமிழ் - RV ரமணி)

வித்யாசமான முயற்சிகளின் மூலம் தனக்கென ஒரு பாதை வகுத்துக் கொண்டவர் RV ரமணி. இந்த ஆவணப்படம் பல்வேறு காரணங்களால் அரசு நடத்தும் "சிறுவர் பாதுகாப்பு இல்லத்திற்கு" கொண்டுசெல்லப்படும் குழந்தைகள் பற்றியது. பயணச் சீட்டில்லாமல் வெளியூர் ரயில்களின் மூலம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிடிபடும் சிறுவர்கள், பேருந்து நிறுத்தங்களில் அலையும் சிறுவர்கள், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரியும் குழந்தைகள் அனைவரையும் இந்தக் காப்பகத்தில் (Juvenile Homes) தங்க வைத்துப் பராமரிக்கிறார்கள். ராஜஸ்தான், அசாம், ஓடிஸா, கல்கத்தா, மத்தியப் பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா போன்ற பல இடங்களிலிருந்து வரும் சிறுவர்களும் இங்கு வைத்து கண்காணிக்கப் படுகிறார்கள். சில குழந்தைகளின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து அழைத்துச் செல்கிறார்கள். குழந்தைகள் விரும்பினால் அங்கேயே தங்கியும் படிக்கலாம்.

பிடிபட்ட சிறுவர்கள், அவர்களை பராமரிக்கும் ஊழியர்கள், மீட்கவரும் உறவினர்கள் என்று நேர்முகத்திலேயே முழு ஆவணப்படமும் செல்கிறது. ஆங்காங்கு நகைச் சுவையுடன் எடுக்கப் பட்டிருந்தாலும், பல்வேறு காரணங்களால் வீட்டைவிட்டு வெளியேறி திக்குத் தெரியாமல் அலையும் குழந்தைகளைப் பற்றிய புரிதலை இந்த ஆவணப்படம் ஏற்படுத்துகிறது. கூடவே இனம்புரியாத மன அழுத்தத்தையும் இந்த ஆவணப்படம் படிமமாக விட்டுச் செல்கிறது.

Links:

Website: http://www.ramanifilms.com

3. அதா அஸ்மான் (ஹிந்தி & ஆங்கிலம் -சமினா மிஸ்ரா)

சமினா மிஸ்ரா புதுதில்லியை வாழ்விடமாகக் கொண்ட எழுத்தாளர் மற்றும் ஆவணப்பட இயக்குனர். இந்திய முஸ்லிம்களின் நிலை, பெண்குழந்தைகள் மற்றும் பெண்களின் நலவாழ்வு குறித்த படைப்புகளில் விருப்பத்துடன் செயல்படுபவர்.

'அதா அஸ்மான்' - உத்திரப் பிரதேசத்திலுள்ள அல்மோரா மற்றும் சீத்தாப்பூர் மாவட்டத்தின் பின்தங்கிய மலை கிராமத்தில் வாழும் பெண்களின் நலவாழ்வை மையமாகக் கொண்ட ஆவணப்படம்.

பெண்கள் எப்பொழுதும் வேலை செய்துகொண்டே இருக்கிறார்கள். ஆண்களுக்கு நிகரான உழவு, கால்நடை பராமரிப்பு போன்ற கடுமையான வேலைகளைச் செய்கிறார்கள். அது முடிந்ததும் வீட்டு வேலைகளையும் அவர்களே கவனித்துக் கொள்கிறார்கள். ஆனால் அதற்குத் தேவையான ஓய்வை எடுத்துக் கொள்வதில்லை. உடல் சுகவீனம் ஏற்பட்டாலும் வேலை செய்வதிலிருந்து அவர்கள் பின்வாங்குவதில்லை. நிலைமை மோசமானால் ஒழிய மருத்துவமனையை நாடுவதில்லை. ஆரம்ப சுகாதார மையம் கிராமத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளதால், உள்ளூரில் இருக்கும் ஒருவரிடம் வைத்தியம் பார்த்துக் கொள்கிறார்கள். அனுபவத்தின் அடிப்படையில் அவரும் ஊசி போட்டு, ஆங்கில மருந்துகளை பரிந்துரைக்கிறார். முறையாக மருத்துவம் பயின்றவர் இல்லையென்றாலும் நோயாளிகள் அவரை வீட்டிற்கே அழைத்து உதவி செய்யுமாறு கேட்கிறார்கள்.

பலவீனமாக உள்ளவர்கள் கருத்தரிக்கும் காலங்களின் தங்களைப் பார்த்துக்கொள்ள வேண்டிய முறையையும், கருத்தரிக்காமல் இருக்க காப்பர்டீ, ஆணுறை போன்றவற்றை பயன்படுத்துமாறு ஊரக மருத்துவ அலுவலர்கள் வீடுகளுக்கே சென்று ஆலோசனை கூறினாலும் வெட்கப்பட்டு மறுத்துவிடுகிறார்கள். வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களுக்காக அரசாங்கம் பல்வேறு நலத் திட்டங்களைக் கொண்டுவந்தாலும், அவையனைத்தும் அவர்களுக்குச் சென்று சேர்கிறதா? கிராம மக்களும் அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்களா? என்பதும் ஆராயப்படவேண்டியது. ஒரு நாட்டின் வளர்ச்சியே மக்களின் கல்வி அறிவு மற்றும் அடிப்படை மருத்துவ வசதி பெறுவதிலும் தான் இருக்கிறது. நகரம் சார்ந்த வாழ்க்கை பெண்களுக்கான எவ்வளவோ வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தாலும், கிராமப்புறப் பெண்களின் நிலைமை மோசமான ஒன்றாகவே இருக்கிறது. அவற்றை ஆவணப்படுத்திய முக்கியமான படங்களில் இதுவும் ஒன்று.

Links:
http://www.youtube.com/watch?v=JNiigBYLtvc

4. ரேடியேஷன் ஸ்டோரிஸ் (தமிழ் - RP அமுதன்)

'பீ', 'செருப்பு' போன்ற குறும்படங்களின் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றவர் இயக்குனர் அமுதன். 2006 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த உலகத் திரைப்பட விழாவில் 'பீ' படத்திற்கு தேசிய ஜூரி விருது பெற்றிருக்கிறார். "இத்தாலி, சீனா, ஜெர்மனி" போன்ற நாடுகளில் நடக்கும் திரைப்பட விழாக்களில் இவருடைய படங்கள் திரையிடப்பட்டு இருக்கின்றன. மதுரை குறும்பட மற்றும் ஆவணப்பட விழாவை 1998 முதல் நடத்திக் கொண்டு வருகிறார். சென்னை கோடைகால திரைப்பட விழாவை ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்பட்டவர்.

கதிரியக்கத் தனிமங்களின் இயல்புத் தன்மை பாதிக்கப்படாத வரையில், அபாயகரமான கதிரியக்கத்தை அவை வெளிப்படுத்துவதில்லை. தோண்டி எடுத்து அவற்றைப் பிரித்தெடுத்துச் சுத்தம்செய்யும்போது வீரியம் மிக்க கதிரியக்கத்தை வெளிப்படுத்துகின்றன. சரியான முறையில் கழிவு நீக்கம் செய்யாமல் விடுவதன் காரணமாகத் தொழிலாளர்களும் சுற்றியுள்ள மக்களும் புற்று நோய் மற்றும் குறையுள்ள குழந்தைப் பிறப்புகளுக்கு உள்ளாகித் தவிக்கிறார்கள்.

கேரளா மற்றும் தமிழகக் கடற்கரையில் டைட்டானியம் ஆக்சைடு - இரும்பு, யுரேனியம் மற்றும் தோரியம் போன்ற கதிரியக்கத் தனிமங்களுடன் கிடைக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் மணவாளக் குறிச்சி என்ற இடத்தில் மிடாலம், பெரியவில்லை, சின்னவேலி ஆகிய கடற்கரை கிராமங்கள் இருக்கின்றன. மீன்பிடித் தொழில்தான் இங்கு பிரதானம். மோனோசைட், தோரியம் போன்ற கதிரியக்கத் தாதுக்கள் கடற்கரை மணலில் கணிசமாகக் கிடைப்பதால், அரசின் அனுமதி பெற்று IREL என்ற தனியார் நிறுவனத்தை அங்கு ஏற்படுத்தியிருக்கிறார்கள். பாதுகாப்பற்ற முறையிலான மணல் சேகரிக்கும் பணியில் கிராம மக்கள் கூலித் தொழிலாளியாக ஈடுபடுத்தப்பட்டதால் கதிரியக்கத்தின் வீரியம் அவர்களை பாதித்திருக்கிறது. இதனால் புற்றுநூய், உடல் ஊனம், குறையுள்ள குழந்தைகள் என கிராம மக்களே அவதிப்படுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களின் நேர்காணல்கள் ஆவணப்படத்தில் எச்சரிக்கை மணி அடிப்பதுபோல இருக்கிறது.

டாக்டர் லால்மோகன் இதைப்பற்றிய ஆழமான, வலிமைமிக்க ஆதாரங்களை தனது ஆய்வறிக்கையில் முன்வைத்தும் அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுத்ததாகத் தெரியவில்லை. போராடிப்பார்த்து பொருமையிழந்தவர், ஒருநிலைக்கு மேல் இங்கிருக்கப் பிடிக்காமல் அமெரிக்க சென்றுவிட்டதாக அமுதன் தனது கலந்துரையாடலில் பகிர்ந்துகொண்டார். அணுசக்தி தொடர்பான துறைகளில் தனியார் நுழைவது பற்றிய அதிருப்திக் குரல்கள் சுனாமி போல எழுந்தாலும், அவற்றையும் மீறி பல வேதனைச் சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றிக்கு கடிவாளம் போட அரசு முன்வர வேண்டும் என்பதை இதுபோன்ற ஆவணப்படங்கள் தான் உணர்த்துகின்றன.

Links:

http://magiclanternfoundation.org/blog/2010/08/radiation-stories-at-bangalore
http://www.thehindu.com/arts/cinema/article19223.ece

தொடர்புக்கு:

http://www.indianfolklore.org - 044 2822 9192, 044 4213 8410
மறுபக்கம் - 93444 79353