Wednesday, December 25, 2013

ரஜினிக்கு ஒரு கடிதம்

ரஜினிக்கு,

நலம் தானே நண்பரே? நீங்கள் “இவன் வேற மாதிரி” படத்துக்கு எழுதியிருந்த கடிதத்தை, பிரபல தமிழ் நாளிதழ்களின் திரைப்பட விளம்பரப் பகுதியில் பார்க்க நேர்ந்தது. (22/12/2013 – தினகரன் & தினத்தந்தி நாளிதழ்). தனிப்பட்ட மடல்களில் ஆயிரம் பிழைகள் இருக்கலாம். அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை.

எழுத்துப் பிழைகள், ஒற்றுப் பிழைகள், வார்தை மற்றும் வாக்கியப் பிழைகளும் கூட இருக்கலாம். கடித எழுத்தில் இதெல்லாம் இயல்புதான். ஆனால், உங்களுடைய கடிதமானது பலகோடி ரசிகர்களின் கவனத்திற்குச் செல்லக் கூடிய ஒன்று. சமீப ஆண்டுகளில் திரைப்படங்களைப் பற்றி தாங்கள் எழுதிய பாராட்டுக் கடிதங்களை நாளிதழ் விளம்பரங்களிலும், திரைப்பட சுவரொட்டிகளிலும் நிறையவே பார்க்க முடிகிறது. எனினும் கவனம் கொண்டு வாசித்ததில்லை. ஆனால் மேற்படி குறிப்பிட்டுள்ள பிரபல நாளிதழ்களில் வெளியாகியிருந்த, “இவன் வேற மாதிரி” படத்தின் மடலை வாசிக்க நேர்ந்தது. அதில் சில விஷயங்கள் கண்ணில் பட்டன.

உதாரணமாக,

1. /-- படத்தை பார்த்தேன்--/ - என்ற வார்த்தைகளுக்கு இடையில் “ப்” சேர்ந்து “படத்தைப் பார்த்தேன்” என்பதாக வரவேண்டும்.

2. /--உட்ச்சகட்ட காட்ச்சிகள் பிரமிக்க வைக்கிறது--/ - என்ற வாக்கியத்திலும் பிழைகள் இருப்பதாகத் தோன்றுகிறது. உச்சகட்ட காட்சிகள் பிரம்மிக்க வைக்கிறது என்பது தான் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. மேலும் “பிரம்மிக்க வைக்கின்றன” என்றிருந்தால் இன்னும் கூட நன்றாக இருக்குமோ என்ற எண்ணமும் எழுகிறது.

3. போலவே, /-- இந்த படம் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்--/ என்ற வாக்கியமும் தங்களது மடலின் கடைசி வரியாக அமைகிறது. இதுவும் கொஞ்சம் போல உதைக்கக் கூடிய வாக்கிய அமைப்புதான். “இந்தப் படம் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்கள்” அல்லது “இந்தப் படத்தின் வெற்றிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்பது போல வாக்கியத்தை அமைத்திருந்தால் கோர்வையாகவும் அழகாகவும் இருந்திருக்கும்.

“இவன் இலக்கிய மாணவனாக இருப்பானோ?”, “மொழி ஆர்வலனோ?” என்பது போன்ற எண்ணங்கள் உங்களுக்கு எழலாம். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. வாசிப்பதில் மிகுந்த நாட்டம் உள்ளவன். அந்த வகையில் தான் தங்களின் கடிதத்தையும் வாசித்தேன். அதிலுள்ள ஒன்றிரண்டு அபிப்ராயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள நினைத்தேன். அவ்வளவே.

உங்களுடைய “Letter Pad” –ல் கைப்பட எழுதித் தரும் திரைப்படங்களைப் பற்றிய பாராட்டு வாசகங்கள் - ஸ்லோகங்கள் போல நாளிதழ்களிலும், திரைப்பட சுவரொட்டிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே கொஞ்சம் போல கவனம் எடுத்து எச்சரிக்கையுடன் எழுதித் தரலாமே. முடிந்தால் ஓர் உதவியாளரின் துணைகொண்டு, கடிதத்திலுள்ள பிழைகளைத் திருத்தி உரிய நபர்களுக்கு அனுப்பி வைக்கலாமே. ஓர் அரங்கக் கலைஞனாக இருந்தவருக்கு, மேடை நாடக நடிகராக இருந்தவருக்கு பிழையற்ற மொழியின் முக்கியத்துவம் பற்றி சொல்லித் தெறிய வேண்டியது இல்லையே.

மடலின் வழியே உங்களுடன் பேசியதில் மிக்க மகிழ்ச்சி நண்பரே. இக்கடிதத்தை நேர்மறையாக அணுகி, நட்புடன் சகித்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி.

அன்புடனும் நட்புடனும்,
கிருஷ்ணபிரபு

Friday, December 20, 2013

மாணவியை மிரட்டுவது ஞாயமா?


உப்பு சப்பில்லாத விஷயமாகத் தோன்றலாம். இதன் பின்னணியில் இருக்கும் மரபான உளவியல் அவசியம் களையப்பட வேண்டிய ஒன்று. ஆங்கிலேயர்களிடமிருந்து கடன் பெற்ற “
Sir, Madam” போன்ற வார்த்தைகளை – அரசு இயந்திர ஊழியர்களும், கல்வித்துறை ஊழியர்களும் பிடித்துக் கொண்டு விடாமல் தொங்கிக்கொண்டிருப்பதன் தாத்பர்யம் தான் எனக்கு இன்னும் விளங்கவில்லை. 

“யுவர் ஆனர், மை லார்ட்” – போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி என்னை அழைக்க வேண்டிய அவசியமில்லை. அதென்ன “யுவர் ஆனர், மை லார்ட்”? நீதிமன்றத்தில் எல்லோரும் சரிசமம். எனவே சாதாரணமாகவே வாதாடலாம். வேண்டுமெனில் “
Sir” என்ற வார்த்தையிப் பயன்படுத்துங்கள் என்கிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்ற நீதிநாயகம் சந்துரு.   

அம்பேத்கர் “மிஸ்டர், மிஸ், மிசர்ஸ்” என்ற அடைமொழியிட்டு பெயர் சொல்லியே எல்லோரையும் அழைக்கிறார். காந்திஜியை எல்லோரும் மகாத்மா என்றே அழைக்கிறார்கள். அம்பேத்கரோ “மிஸ்டர் காந்திஜி” என்றே ஒவ்வொருமுறையும் அழைக்கிறார். உச்சமாக “பூமியில் நிறைய மகாத்மாக்கள் பிறக்கிறார்கள். இறக்கவும் செய்கிறார்கள். ஆனால் தீண்டாமையால் ஒடுக்கப்படும் மக்களுக்கு அவர்களால் நல்லது எதுவும்  நடக்கவில்லை” என்கிறார். எல்லோராலும் மகாத்மா என்றழைக்கப்பட்ட ஒருவரை “மிஸ்டர் காந்தி... மிஸ்டர் காந்தி” என்றே இறுதிவரை அம்பேத்கர் அழைக்கிறார். அப்படியெனில் காந்தியை அம்பேத்கர் அவமானப் படுத்திவிட்டாரா? கலங்கப்படுத்திவிட்டாரா?

அம்பேத்கரின் வாழ்வில் சில விதிவிலக்குகளும் இருக்கின்றது. தன்னைப் படிக்க வைத்த பரோடா இளவரசரையும், பிறகு மேல்படிப்பு படிக்க, பத்திரிக்கை நடத்த என பல்வேறு உதவிகளை செய்த முற்போக்கான நவாப்பையும் “
Sir என்றே அழைக்கிறார். மற்ற எந்த ஒரு நபரையும் அவர் பெயர் சொல்லியே அழைக்கிறார். தனது பொருளாதார ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்த ஆங்கிலப் பேராசிரியரான வழிகாட்டியையும் கூட “மிஸ்டர் ...................” என்று பெயர் சொல்லியே அழைக்கிறார். 

சமீபத்தில் நான் படித்த கல்லூரியின் ஊழியர் ஒருவருக்கு, ஓர் இலக்கிய விழா சார்ந்த சந்தேகத்தை எழுப்பி – அதன் விவரம் தருமாறு கேட்டிருந்தேன். 

HI XYZ” என்று ஃபார்மலாக பெயருடன் “ஹாய்” சேர்த்து, பல கல்லூரிகளிலும்  ஏற்பாடாகியிருக்கும் ஓர் இலக்கிய விழா சார்ந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள மின்னஞ்சல் (E-Mail) & முகநூல் உள்பெட்டித்  தகவலை (FB Message) – நான் படித்த கல்லூரியில் வேலை செய்யும், அந்த கல்லூரியின் விழா பொறுப்பினை ஏற்றிருக்கும் “XYZ” என்ற நபருக்கு அனுப்பியிருந்தேன்.

எனக்கான பதில் மின்னஞ்சல் வந்து சேரவே இல்லை. சரி அந்த “XYZ” மிகவும் பிசியான நபராக இருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டேன். (கல்லூரி விரிவுரையாளர்களுக்கும், பேராசியர்களுக்கும் இருக்கக் கூடிய மேலதிக வேலையைக் காட்டிலும் – இந்த பிரபஞ்சத்தில் வேறு யாருக்கு இருக்கக் கூடும்.)

விழா நடைபெற்ற நாளன்று அந்த கல்லூரிக்குச் சென்று நோட்டம் விட்டேன். மத்திய அரசின் வருடாந்திர பட்ஜெட் தயாரிக்கும் இடமான குவாரண்டம் போல, உச்ச பட்ச பாதுகாப்பில் விழா நடக்கும் அரங்கமானது இருந்தது. யாருக்கும் அனுமதி இல்லை என்றார்கள். கல்லூரி மாணவர்களுக்கும் கூட அனுமதி இல்லையாம். அவ்வளவு ஏன்? போட்டியில் கலந்துகொள்ளும் நபர்களைத் தவிர்த்து – கல்லூரியில் பயிலும் இலக்கியத் துறை மாணவர்களுக்கும் கூட அனுமதி இல்லை. கூத்து என்னவெனில் நடந்தது “கவிதை ஒப்பிக்கும் போட்டி”...!

இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு பார்வையாளராக உட்கார அந்த இடத்தில்  அனுமதி இல்லை என்பது துருதிஷ்டம். போதிய இடவசதி இல்லை என்று சொல்லி சமாளிக்கலாம். கல்லூரி வளாகத்தில் திறந்தவெளி மேடை இருக்கிறதே...! அது எதற்கு...? 

சில துறையைச் சார்ந்த மாணவர்கள் தேர்வெழுதுகிறார்கள். அவர்களுக்குத் தொந்தரவாக இருக்கும் என்ற நொண்டிச் சாக்கைச் சொல்லலாம்...! அப்படியெனில், மாணவர்களுக்குத் தேர்வு நடக்கும் பொழுது, “எப்படி ஓர் இலக்கிய விழா ஏற்பாடாகியிருக்கிறது?”. மற்ற துறையைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலக்கியத்தில் ஆர்வம் இருக்காதா? ஒரு பல்கலைக் கழகம் இதையெல்லாம் யோசிக்காதா?. கவனத்தில் எடுத்துக் கொள்ளாதா? அல்லது கல்லூரி நிர்வாகம் தான் இதனை அவர்களுக்கு எடுத்துச் செல்லாதா? (நாற்பதுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பல்வேறு நிரல்களுடன் கூடிய இந்த இலக்கிய விழா நடக்கிறது. ஒரு பிரசித்திபெற்ற பல்கலைக்கழகமானது, சில தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நடத்தும் இதுபோன்ற சடங்கான விழாவினை ஆதாரத்துடன் கடுமையாக விமர்சனம் செய்து ஒரு பதிவினை எழுத வேண்டும் என்றிருக்கிறேன். அவகாசம் இருந்தால் அந்த விஷயங்களைப் பிறகு பார்க்கலாம்.)

“நல்ல விதி நேராகாகச் சென்றால், கோணல் விதி குறுக்கால் வருமாம்” என்பது போல, எதிரில் பழவேற்காடு மீனவ குப்பத்தைச் சேர்ந்த ஒரு தங்கை வந்துகொண்டிருந்தாள். பார்த்தும் பார்க்காதது போல முகத்தை வெட்டிக்கொண்டு சென்றவளை குரல் கொடுத்து அழைத்து பேசிக்கொண்டிருந்தேன். இதனை தூரத்திலிருந்த அந்த “
XYZ” என்ற நபர் பார்த்திருக்கக் கூடும் போல. நான் அங்கிருந்து கிளம்பியதும் தங்கையைத் தனியாக அழைத்து மிரட்டியிருக்கிறார்.

“உங்கூட பேசிக்கினு இருந்தாருள்ள... அவரு எனக்கு
HI  XYZ-ன்னு ஃபேஸ் புக்குல - எம்பேரச் சொல்லி எப்படி மெசேஜ் அனுப்பலாம்?. அந்த மாதிரி இனிமே அவர், என் பெயரைச் சொல்லி மேசேஜ் பன்னினாருன்னா நான் உன்ன சும்மா விடமாட்டேன்.” என்று உடன் வேலை செய்யும் பல ஆசிரியர்களுக்கு முன்னால் அந்தத் தங்கையை மிரட்டியிருக்கிறார். (தங்கையை மிரட்டியதற்கு ஆதாரம் இருக்குமாயின் நடந்திருக்கும் கதையே வேறு. அவள் தைரியத்துடன் பேசிவிட்டு வந்திருக்கிறாள் என்பதும் வேறு கதை.)

தங்கையைக் கூப்பிட்டு மிரட்டிய விஷயத்தை என்னுடைய காதில் ஒருவர் போட்டுவிட்டுச் சென்றார்.
தங்கை இளங்கலை படிக்கிறாள். அவளுக்கு முதலிரண்டு வருடத்தில் ஆங்கிலமும் பாடமாக வரும் (| & || Paper). அவளுடைய அண்ணன் கல்லூரிக்குச் சென்றிருந்தாலும்... இன்னும் பட்டம் வாங்கவில்லை. அவனுக்கு இன்னும் ஒன்றிரண்டு பாடத்தில் அரியர் இருக்கிறது. அந்த வகையில் இவள் தான் குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆகப் போகிறாள். கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த தலித் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணும் கூட.

எனக்கு எங்குமில்லாத கோவம் வந்துவிட்டது. மெயில் அனுப்பியது நான். முகநூலில் மெசேஜ் செய்ததும் நான். மிரட்ட வேண்டுமெனில் என்னை மிரட்டி இருக்கலாம். கேட்க வேண்டுமெனில் என்னிடம் நேரடியாகவே அதை பற்றிக் கேட்டிருக்கலாம். மின்னஞ்சலில் தனது அதிருப்தியை குறிப்பிட்டு, விமர்சனம் செய்து மின்னஞ்சல் அனுப்பி இருக்கலாம். அதை விட்டுவிட்டு, இந்த விஷயத்தில் சம்மந்தமே இல்லாத ஒரு மாணவியைக் கூப்பிட்டு மிரட்ட வேண்டிய அவசியம் தான் என்ன? எங்கிருந்து இதுபோன்ற குறுக்கு புத்தியும், பழிவாங்கும் மனப்பான்மையும் ஓர் ஆசிரியருக்கு வருகிறது? இந்த தைரியம் எப்படி அவர்களுக்கு வருகின்றது?

ஆகவே, கல்லூரி இருக்கும் பகுதியின் SFI President-ஐ அழைத்து என்னுடைய ஆதங்கத்தை மிக அழுத்தமாக பதிவு செய்தேன். கூடவே “Sir, Madam-ன்னு எல்லாம் இவங்கள எதுக்குக் கூப்பிடனும். அம்பேத்கரிடமிருந்து கடன்வாங்கிக் கொண்ட பெயரிட்டு அழைக்கும் முறைதான் என்னுடைய பழக்கமும் கூட. சம்மந்தமே இல்லாத விஷயத்திற்கு ஒரு மாணவி ஏன் தண்டிக்கப்படனும்? அவங்கள பேர் சொல்லி தான் கூப்பிட்டேன். ஆனால் மரியாதைக் குறைவாகவோ அல்லது தனிப்பட்ட தேவையில்லாத விஷயத்தையோ அவர்களிடம் எதுவும் பேசவில்லை. அதனால வர்ற பிரச்சனைய நான் பாத்துக்குறேன் தோழர். ஒன்றுமில்லாத விஷயத்திற்கு - என்னை வச்சி ஒரு மாணவிய பழி வாங்கறாங்கன்னா அத நீங்க தான் கவனிக்கணும்... ஒருத்தரை பிளாக்மெயில் பண்றதும், மிரட்டுவதும் சட்டப்படி தப்பு. சாட்சிகள் இருக்கும் பட்சத்தில் அந்த தங்கச்சிக்கு உங்க இயக்கம் சப்போர்ட் பண்ணணும் தோழர். ஒருவேளை சாட்சிகள் இல்லை எனினும் இந்த மாதிரி விஷயத்துக்கு எந்தவிதத்தில் தீர்வு காண்பது என்பதையும் யோசித்துப் பாருங்கள்.” என்றேன்.

“கண்டிப்பாங்க’ண்ணா...” என்றார் SFI President.

யாரேனும் நம்மைப் பெயர் சொல்லி அழைத்தால் அதனை அவமானமாகக் கருத வேண்டுமா? இந்தியர்களின் ஆன்மாவுடன் Sir, Madam போன்ற வார்த்தைகள் இரண்டறக் கலந்துவிட்டது போல. இந்த வார்த்தைகளைக் காதால் கேட்டு உச்சி குளிர்வதில் தான் இவர்களது ஜென்மப் பிறவியே இருக்கிறது போல. “வா, போ, வாடி, போடி, வாடா, போடா...” என்று ஒருமையில் அழைப்பது தவறு. பெயர் சொல்லியும், பெயருடன் “வாங்க போங்க” என்று அழைப்பது எந்த விதத்தில் மரியாதைக் குறைவான காரியம் என்றே புரியவில்லை.

பேராசிரியர் அ. மார்க்ஸ், (மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக) தமிழ் துறைப் பேராசிரியர் அ. ராமசாமி, நாடகத் துறைப் பேராசிரியர் மு. ராமசாமி, பேராசிரியர் (வெங்கடா)சலபதி, மனிதவளத் துறைப் பேராசிரியர் ஸ்ரீனிவாசன், பேராசிரியர் பெருமாள் முருகன், ஆங்கிலத் துறைப் பேராசிரியை மங்கை, ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் ரத்னவேல், முனைவர் ராமகுருனாதன், முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் போன்ற பலரையும் கூட பெயர் சொல்லி கூப்பிட்டுப் பேசியிருக்கிறேன். ஒருவரும் முகம் சுழித்ததில்லை. அருவருப்பாகப் பார்த்ததில்லை. வாஞ்சையுடன் மட்டுமே பேசியிருகிறார்கள். அடுத்தடுத்த சந்திப்புகளிலும் அன்புடன் அனுகியிருக்கிறார்கள். வழி நடத்தியும் இருக்கிறார்கள். இவர்களில் பலரும் “நவீன படைப்பிலக்கியம், விமர்சனம், கட்டுரை, நாடகம்” என பல வடிவங்களில் வளமான பங்களிப்பை மொழிக்குச் செய்திருக்கிறார்கள். அந்தந்த துறைகளில் பழம் தின்று கொட்டையைப் போட்டவர்கள் என்பதும் முக்கியமான விஷயம்.
நேரடியாகக் கூப்பிட்டு என்னிடம் பேசியிருந்தால் அதற்கு மரியாதையாகவும் பணிவுடனும் விளக்கமளித்திருப்பேன். தரம்கெட்ட முறையில் ஒரு மாணவியைத் தனியாகக் கூப்பிட்டு மிரட்டிய ஓர் ஆசிரியரை விட்டுவிட முடியுமா? அப்படி மிரட்டியதை அந்த துறையைச் சேர்ந்த மற்ற ஆசிரியர்களும் பார்த்துக்கொண்டு எதிர்வினையாற்றாமல் இருந்திருகிறார்கள். படமெடுக்கும் நாகத்தின் படர்ந்த தலையில் நின்றுகொண்டு நர்த்தனம் ஆடுவதுதான் திருவிளையாடலா என்ன? மரபில் ஊறித் திளைக்கும் மனிதர்களுக்கு எதிராக - மாற்றத்தின் குறியீடாகவும், நவீனத்தின் அடையாளமாகவும் வாழ்வின் போக்கில் சில எதிர்வினைகளை ஆற்றுவதும் திருவிளையாடல் தானே...! அதைத் தான் செய்யலாம் என்றிருக்கிறேன்.

இனி என்னுடைய நக்கலும் நையாண்டியுமான திருவிளையாடல் ஆரம்பமாக இருக்கிறது. அதே கல்லூரியில் அடுத்து நடக்கவிருக்கும், அதே இலக்கிய விழாவின் மற்றொரு நிகழ்வைப் பற்றிய சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள, பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகம் விழாவினை நெறியாள்கை செய்யும் பொறுப்பினை ஒப்படைத்துள்ள அதே “
XYZ” என்ற நபருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப உத்தேசித்திருக்கிறேன். அந்த மின்னஞ்சலை இப்படி ஆரம்பித்தால் நன்றாக இருக்கும் தானே...!

Respected Prof XYZ,

Blah blah blah….
Blah blah blah…. Blah blah blah…. Blah blah blah….

With Humble,
Krishna Prabhu

மாணவியைக் கூப்பிட்டு மிரட்டிய விஷயம் என்னுடைய காதிற்கு வந்துவிட்டது என்பதை சூசகமாக உணர்த்த வேறு வழியில்லையே...! மேற்கண்ட மின்னஞ்சலைக் கண்டு மேன்மை பொருந்திய மாண்புமிகு ஸ்ரீலஸ்ரீ
“XYZ” அவர்கள் ஒற்றைக்காலில் நர்த்தனம் ஆடலாம். பதில் சொல்லும் விதமாக நானும் அந்தரத்தில் நடனம் ஆடலாம் என்றிருக்கிறேன். அதற்கும் மேல் கடவுள் விட்ட வழி... 

# ஒரு கல்லூரியின் பழைய மாணவனாக, அந்தக் கல்லூரியின் இலக்கிய விழாவில் பங்கெடுக்கும் உரிமை எனக்கிருக்கிறதா? இல்லையா?
என்று கேள்வி எழுப்ப நினைத்த எனக்கு “கல்லூரியில் பயிலும் இலக்கியத் துறை மாணவர்களே புறக்கணிக்கப் படுகிறார்கள்...” என்பது மலைப்பான விஷயமாக இருக்கிறது. மரபில் ஊறிய ஆசிரியையின் போக்கு அதனினும் மலைப்பாக இருக்கிறது.

மேலும் அட்டானமஸ் காலேஜ் என்பதால் உப்புசப்பான சமந்தமே இல்லாத விஷயத்திற்கெல்லாம் கூட மாணவர்கள் மிரட்டப்படுகிறார்கள் என்பது மேலதிக பதைப்பாக இருக்கின்றது.  
பழைமை ஊறிய கல்வித்துறையும், அந்த பழங்குட்டையில் ஊறிய பழைமைவாதி ஆசிரியர்களும் திருந்தவே மாட்டார்கள் போல.

அசுபம்... அமங்களம்... 

Sunday, October 20, 2013

ஒன்டிக்கட்டைகளின் ஓலங்கள்


சென்னையைப் பொருத்தவரை பேட்சுளர்களுக்கு வாடகைக்கு விடவே வீட்டின் உரிமையாளர்கள் பலரும் விரும்புவார்கள். ஏனெனில் வீட்டு வாடகையை எல்லோருமாகப் பங்கிட்டுக்கொண்டு உரிய தேதியில் வாடகைப் பணத்தைக் கொடுத்துவிடுவார்கள். சம்சாரிகளுக்கு விடுவதால் வாடகைப் பணம் பெறுவதில் பிரச்சனை இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் வாடகையை உயர்த்தினாலும் பேச்சுலர்ஸ் ஏனென்று கேட்காமல் கேட்கும் தொகையை சப்தமில்லாமல் கொடுத்து விடுவார்கள். இதே கிராமமென்று வரும் பொழுது சிக்கல் எழும். ஒன்டிக்கட்டைகளுக்கு வாடகைக்கு விடவே தயங்குவார்கள். என்னுடைய கிராம வீட்டை வாடகைக்கு விடும் பொழுதும் இதே குழப்பம் நிலவியது. 

ஒரு பிரபல கல்வி நிறுவனத்தின் – சமையல் கூட ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தங்க எனது கிராம வீட்டினைக் கேட்டிருந்தார்கள். பெரிய கல்வி நிறுவனம், வாடகைப் பிரச்னை இருக்காது என்பதால் அம்மாவும் ஒத்துக்கொண்டாள். ஆனால் பிரச்சனை வேறு ரூபத்தில் எழுந்தது.

நாங்கள் இருக்கும் பொழுதே பக்கத்து வீட்டு உரிமையாளர்கள் – எங்கள் பகுதியில் நுழைவதும் கிளைகளை வெட்டுவதும், குப்பைகளைக் கொட்டுவதும் என அராஜகம் செய்வார்கள். ஊர்பேர் தெரியாத பேச்சுலர்களை நடத்தும் விதத்தைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன?

பேச்சுலர்களை “நீங்கள் மொட்டை மாடியில் நிற்கக் கூடாது, வீட்டிற்கு உள்ளே மட்டும் தான் இருக்க வேண்டும், வந்தமா போனமான்னு இருக்கணும்” என்று ஊரிலுள்ள ஒருவர் வந்து மிரட்டிவிட்டுச் சென்றாராம். பக்கத்து வீட்டு ஆசாமி குடித்துவிட்டு வந்து ஆபாசமான வார்த்தைகளைச் சொல்லித் திட்டி இருக்கிறார். அவர்களுடைய வாரிசுகளில் ஒருவன் குடியிருப்பவர்களை அடிப்பதற்காக ஓடியிருக்கிறேன். ஊரிலிருக்கும் பெண்கள் “மொட்டைமாடி இருட்டுல நின்னுக்குனு... நீங்க எங்களையே தான் பாக்குறீங்க?” என மிரட்டி இருக்கிறார்கள்.

“அண்ணா... எங்களுக்கு பயமா இருக்குன்னா...!? எங்க வீட்டுல கூட இப்படியெல்லாம் திட்டினது இல்ல... செல்போன் சிக்னல் வரலன்னு மாடிக்கு போயி நின்னு பேச முடியல. தெருவுல நின்னும் ஊருல இருக்கும் யாருகிட்டயும் பேச முடியல” என குடியிருக்கும் பையன்களில் ஒருவன் அழைத்துப் பேசினான்.

மொத்தம் 12 பேர் அந்த வீட்டில் இருகிறார்கள். அதில் 7 பேர் வட இந்தியர்கள். மீதியுள்ள 5 பேர் தமிழர்கள். ஆறு நபர்கள் வீட்டிலிருந்தால், ஆறு பேர் வேலைக்குச் சுழற்சி முறையில் செல்பவர்கள். சரி அவர்களைச் சென்று பார்த்துவிட்டு வரலாம் என்று கிளம்பினேன். குடித்துவிட்டு தகராறு செய்வதாக ஒன்டிக்கட்டைகள் குறிப்பிட்டவர் எதிரில் வந்தார். அவரை மடக்கிக்கொண்டு “பக்கத்துல இருக்கவங்கள நிம்மதியா இருக்க விட மாட்டிங்களா? எதுக்கு குடிச்சிட்டு கலாட்டா பண்றிங்க?” என்றேன்.

“இல்லியே... நான் அப்படியெல்லாம் பண்ணலையே...” என்றார்.

இதென்னடா வம்பா போச்சிதுன்னு, குடியிருப்பவர்களை அடிப்பதற்கு ஓடியதாகக் குறிப்பிட்ட டிப்ளமோ படிக்கும் இளைஞரை “இன்னாடா... அடிப்பன்னு சொன்னியாமே...! அடிச்சிடுவையா...!?” என்றேன்.

“ஐயையோ... நான் ஏன்னா அப்படியெல்லாம் பண்ணப் போறேன்...!?” என்றான்.

அந்த நேரம் பார்த்து குடிகாரரின் நண்பர் வந்தார். “அவங்க அப்படி பண்றதுல என்ன தப்பு இருக்குது...!?” என்றார். இவர் உறவு முறையில் அம்மாவிற்குத் தம்பி.

“என்ன சொல்றிங்க...!?” என்றேன்.

“ஊருக்கு நடுவுல ஒரு 18 ஆம்பள பசங்கள கொண்டுவந்து உட்டுட்டு... எதுக்கு அசிங்கம் பண்றிங்க?” என்றார்.

“இன்னாது அசிங்கமா? குடிச்சிட்டு ங்கோத்தா ங்கொம்மான்னு பேசுறது அசிங்கமா? அவனவன் வேலைய பாக்குறது அசிங்கமா?” என்றேன். “நீங்க செஞ்சது தப்பு?” என்றார்.

அதாவது குடும்பத்திற்கு விடும்பொழுது, அவர்களுடைய “குலம், கோத்திரம், ஜாதி, மதம், மயிறு, மட்டு, லொட்டு, லொசுக்கு” என எல்லாவற்றையும் விசாரித்து வாடகைக்கு விடலாம். பேச்சுலர்ஸ் எனில் அதில் சாதியக் கலப்பு இருக்கும் இல்லையா? அதுதான் அவர்கள் கேட்க விழையும் முக்கியமான விஷயம். சென்ற வாரத்தில் பக்கத்து ஊரைச் சேர்ந்த மேல் சாதியைச் சேர்ந்த ஒரு பெண், தலித் இளைஞருடன் ஓடிவிட்டார் என்பதால் அவளது தந்தை தற்கொலை செய்துகொண்டார். நான்கு நாட்களுக்கு முன்பு எங்கள் கிராமத்து தலித் இளைஞனரை, பக்கத்து ஊரிலுள்ள தலித் இளைஞர்கள் சரமாரியாக வெட்டிக் கொன்றிருகிறார்கள். இந்த சம்பவங்கள் ஊரிலுள்ளவர்களின் உளவியலில் புகுந்து வேலை செய்கின்றதா என்று தெரியவில்லை.

“நீங்க 12 பேச்சுலற்கு வீட்டை வாடகைக்கு விட்டது தப்பு?” என பலரும் திரும்பத் திரும்பக் கூறினார்கள். இவர்கள் எல்லோருமே ஒருவகையில் எனக்கு தூரத்து உறவினர்கள் தான்.

“தோ... பாருங்க... அந்த பசங்க ஏதாச்சும் தப்பு சென்ஜாங்கண்ணா... என்கிட்டே சொல்லுங்க... சும்மா சத்தம் போட்டா நான் அடங்கிப் போவேன்னு நெனைக்காதிங்க...” என்றேன். என்னுடைய பதிலில் யாருக்கும் திருப்தியே இல்லை. உலகில் சில ருசிகரச் சம்பவங்கள் நடக்கின்றன. நண்பர்கள் அதனை கவனமாகக் கேட்க வேண்டும்.

“ஒருவருடைய மாமாவின் மகன், அதே நபருடைய அத்தையின் மகளைத் திருமணம் செய்ய இயலுமா?”, “ஒருவரது (ரெண்டு கை தள்ளிய) சித்தியின் மகன், அதே நபருடைய (ஒருகை தள்ளிய) சித்தியின் மகளைத் திருமணம் செய்ய இயலுமா?” – இதெல்லாம் பறந்து விரிந்த “அறம் சார்ந்த, மத ஒழுக்கம் சார்ந்த, இத்தியாதி எல்லா ஒழுக்க நியதிகளையும்” பின்பற்றும் நம் இந்திய மரபுச் சூழலில் ஆங்காங்கு நடக்கிறது. இனம் இனத்தோடு சேரும்பொழுது நியதிகள் நழுவி இதற்கெல்லாம் வழிவிடுகின்றன. இதுபோன்ற சூழல்களில் இருந்துகொண்டு ஒழுக்கங்களைப் பற்றிப் பேசும் நம்மவர்களுக்கு ரெண்டு பொன்னாட்டிகள், ஒன்பது சக்காளித்திகள் இருகிறார்கள். சுய ஒழுக்கம், சமூக ஒழுக்கம் என்று எதுவுமே இல்லாதவர்கள் – சாதியம் சார்ந்த ஒழுக்கத்தை மட்டும் விடாப்பிடியாகப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதின் மர்மம தான் எனக்கு விளங்கவே இல்லை. இவர்களின் பிரச்சனை தான் என்னவென்றும் புரியவில்லை? எதற்காக அடுத்தவர்களுக்குத் தொந்தரவு கொடுக்கிறார்கள் என்றும் தெரியவில்லை?

முத்தாய்ப்பாக ஒரு விஷயத்தைக் கூறினார்கள். “இங்க பாரு அவனுங்க ஹிந்தி காரனுங்க. பாம் வப்பானுங்க... ஏதாச்சும் கடத்தல் செய்வானுங்க... கள்ள நோட்டு மாத்துவானுங்க...” என்று குடித்துவிட்டு கலாட்டா செய்தவர் கூறினார். என்னால் அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. தொடர்ந்து அவர் பேசினார்: “கவரப்பேட்டை இன்ஸ்பெக்டர் தெரிஞ்சவர் தான்... அவரு எப்பன்னாலும் ரவுண்ட்ஸ் வருவாங்க... மாட்டினால் ஜெயிலுக்குத் தான் போவ...” என்றார். இவருக்குப் பின்னால் பெரிய அரசியல் வாதியின் குடும்பமே இருக்கிறது.

“என்ன மெரட்டுறீங்களா...?” என்றேன்.

“இல்ல உன் நல்லதுக்குத் தான் சொல்றேன்...!” என்றார்.

“அவங்க மாட்டினா ங்கோத்தா நான் தானே ஜெயிலுக்குப் போகப் போறேன்... உங்களுக்கு என்ன அதப் பத்திக் கவலை...!? உங்க வேலையைப் பாருங்க...” என்று நடு ரோட்டில் நின்றுகொண்டு தரமான வார்த்தைகளால் ஞாயம் கேட்டுவிட்டு, ஒன்டிக்கட்டைகளுக்கு ஆறுதல் கூறிவிட்டுத் திரும்பினேன்.

“யார் கண்டது ஊரிலுள்ளவர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்று...!?”

இப்படித் தான் போல, தனக்கு ஒத்துவராதவர்களைக் குற்றவாளியாக நிறுத்த ஒரு தந்திரமான சமூகம் பின்னணியில் வேலை செய்துகொண்டிருக்கிறது. அதிகாரம் கையில் இருப்பவர்கள் பொம்மலாட்ட மனிதர்களைப் போல சாதாரண மக்களை ஆட்டி வைக்க நினைப்பார்கள். படித்த, ஓரளவிற்கு சிந்திக்கத் தெரிந்த எனக்கே இதுபோன்ற எச்சரிக்கைகள் வருகிறது எனில், ஒடுக்கப்படும் ஒன்டிக்கட்டைகளின் நிலை பாவத்திலும் பாவம். பரிதாபத்திலும் பரிதாபம். நாம் பார்த்து வளர்ந்த மனிதர்கள், காலம்காலமாக சுற்றித் திரிந்த இடத்திலிருந்தே இதுபோன்ற எச்சரிக்கை எதிர்பொலிகள் வருகிறது எனில் தேசம் கடந்து, புலம்பெயர்ந்து வாழும் மனிதர்களை ஒரு நிமிடம் நினைத்துக் கொள்கிறேன்.

“அடக் கடவுளே... அவர்களது நிலைமை ரொம்பவும் கஷ்டம் தான்.”

யார் கண்டது? சிறைக்குச் சென்று திரும்பிய அனுபவத்தையும் இதேபோல ஒருநாளில்லை ஒருநாள் உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறதோ என்னமோ? எல்லாம் ஒரு அனுபவம் தானே...!

(“நிறைய பேரு சொல்லி இருக்காங்க. டேய்... நீ லாயர்க்கு படி... நல்லா வருவ...” என்று. நலவிரும்பிகள் சொல்லியதை கேட்டிருக்க வேண்டும் என்று இப்பொழுது தோன்றுகிறது.)

Thursday, October 17, 2013

தாய்மொழி வழிக் கல்வி -மாநில சிறப்பு மாநாடு - தமுஎகச


படத்தின் நூறாவது நாள் விழா – “இயக்குனர் (அவருடைய பெயரெழுதி) “*********” வருக வருக... நடிகை (அவருடைய பெயரெழுதி) “*******” வருக வருக...” இத்தியாதி அடிபொடிகள் (அவர்களுடைய பெயரெழுதி) வருக வருக...” என எங்கு திரும்பினாலும் ஒரே பேனர் மயம். அவுட் டேட்டெட் காமெடி நடிகர்களின் புகைப்படமும் பேனர்களில் இருந்தது. என்றாலும் “ஏதோ உண்மையிலேயே படவிழாதான் நடக்கிறது போல” என்று குழம்பியவாறு நின்றுகொண்டிருந்தேன். பாரிமுனை ராஜா அண்ணாமலை அரங்கத்தில் “தமுஎகச” ஏற்பாடு செய்திருந்த “தமிழ்வழிக் கல்வி மாநில அளவிலான சிறப்பு மாநாட்டிற்காக” அரைமணி நேரம் முன்னதாகவே சென்றிருந்ததால் வந்தவினை இது. ஏற்கனவே குழப்பத்தில் இருந்த என்னை, பக்கவாட்டில் நடந்து சென்ற ஒருவர் மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். (மாநாடு துவங்குவதற்கு முன்பு ஏதோ ஒரு படத்தின் ஷூட்டிங் எடுத்து இருக்கிறார்கள்.)

என்னிடம் பேச்சுக் கொடுத்தவர் “வணக்கம்... நானொரு புரட்சிக்கவிஞர். பேங்க்ல வேலை செய்றேன். ஆனா, எழுத்துதான் எனக்கு ஆத்மா – உயிர், எல்லாம். நான் மிமிக்ரியும் செய்வேன். பல குரலில் பாடுவேன். நித்யஸ்ரீ மகாதேவன், ஜேசுதாஸ், டிஎம்எஸ், சுசீலா எல்லார் வாய்ஸ்லையும் பாடுவேன்.” என அடுக்கிக்கொண்டே போனார். நானோ அவரைப் பார்த்து மிரண்டவாறு நின்றுகொண்டிருந்தேன்.

என்னுடைய மிரட்சியைப் பார்த்து “நான் பொய் சொல்றேன்னு தானே நெனைகிக்கிறீங்க? இப்பப் பாருங்க...” என விரல்களை எடுத்து வாயின் முன் அரண் போல வைத்துக் கொண்டார். “பூனை புள்ள பெத்த மாதிரி ஒரு சவுண்ட். அந்த ஒலியை ஆதாரமாக வைத்துக்கொண்டு ஒரு ஆலாபனையை எடுத்துவிட்டார். “இது நித்யஸ்றீ வாய்ஸ்...” என ஹிண்ட்ஸ் கொடுத்துவிட்டு - ஏதோ கர்நாடக சங்கீத ராகத்தில் அமைந்த பாடலை இழுத்து இழுத்து, கமகத்துடன் பெண்குரலில் பாடினார். எனக்கு மூச்சு முட்டியது. “இப்பப் பாருங்க ஜேசுதாஸ் வாய்ஸ்ல படறேன்...” என மீண்டும் ஒரு கர்நாடக ராகத்தில் அமைந்த பாடலை இழுத்து இழுத்து, கமகத்துடன் ஆண் குரலில் பாடினார். உண்மையிலேயே திறமையான மனிதர் தான் என்று நினைத்துக்கொண்டு - பேந்தப் பேந்த அவரைப் பார்த்து முழித்தேன்.

“இதையெல்லாம் ஒரு தற்பெருமைக்காக செஞ்சி காமிக்கிறேன்னு நெனச்சிக்காதிங்க. ஒரு அறிமுகத்துக்காகத் தான்...” என்றார்.

“இம்மாம் பெரிய விஷயத்தை, அற்பத்திலும் அற்பமான என்னிடம் எதற்குச் செய்து காண்பிக்கிறார்” என்ற குயுக்தியுடனும், அதிர்ச்சியுடனும், குழப்பத்துடனும் அந்த நரை தட்டிய வயோதிக மனிதரைப் பார்த்தவாறு பேந்தப் பேந்த விழித்தேன்.

“ஷார்ட் ஃபிலிமுக்கான நிறைய கருக்கள் உள்ளுக்குள்ள இருக்குது. யாருகிட்ட அதையெல்லாம் கொடுக்கறதுன்னு தான் தெரியல...” என்று சம்பாஷனையின் மணிமகுடமாக ஒரு பிட்டைத் தூக்கிப் போட்டார்.

“எம்மோவ்... இன்னைய தேதிக்கு சித்திரகுப்தன் நம்ம ஓலையில என்னமோ சிறப்பா எழுதி இருக்கறாண்டோவ்...” என நினைத்துக்கொண்டு சுதாரிப்பதற்குள் “ஆமா.... இங்கதான தமுஎகச-வின் தமிழ்வழிக் கல்வி மாநில அளவிலான சிறப்பு மாநாடு நடக்கிறதா சொல்லி இருந்தாங்க? இது என்ன சினிமா பங்ஷன் பேனருங்களா வச்சி இருக்காங்க?” என்றார்.

“அடக் கூறுகெட்டக் கவியே... அதத் தானைய்யா நானும் மண்டைய போட்டு கொடஞ்சிக்குனு இருக்குறேன். ஊடால நீ வேற என்னைய திகிலடைய வக்கிறயே...!” என்றவாறு மனதிற்குள் நினைத்துக் கொண்டு, அவரையும் அழைத்துக் கொண்டு கொஞ்ச தூரம் சென்றேன். நண்பர் “இரா. தெ. முத்து” எதிரில் வந்தார். அவரைக் கண்டதும் தான் எனக்கு உயிரே வந்தது. நெருங்கிச் சென்று அவருக்குக் குரல் கொடுத்தேன். பக்கத்தில் இருந்த “புரட்சிக் கவிஞர்” இரா. தெ. முத்துவைப் நிறுத்திக் கொண்டு, சுயபுரானத்தை மீண்டும் முதலிலிருந்து துவங்கினர். இரா. தெ புருவத்தை வில்லென வளைத்து - அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டு நின்றார்.

“இதையெல்லாம் தற்பெருமைக்காக சொல்லிட்டு இருக்குறேன்னு நெனச்சிக்காதிங்க. ஒரு அறிமுகத்துக்காகத் தான்...” என்று இரா. தெ-விடமும் கூறினார்.

“எனக்கு ப்ளாடர் வெடிக்கிறா மாதிரி இருக்குது. பிஸ் அடிச்சிட்டு வந்துட்றேனே” என்பதை உணர்த்தும் படியாக ஆள்காட்டி விரலை சைக்கிள் கேப்பில் நைசாகக் காண்பித்துவிட்டு அவசர அவசரமாக நழுவினேன். அந்தக் கவிக்கு நடுவிரலைக் காண்பித்து விட்டுச் சென்றிருந்தாலும் சிறப்பாகத் தான் இருந்திருக்கும்.

புரட்சிக்கவி நின்றுகொண்டிருக்கும் திசைக்கே ஒரு கும்பிடு போட்டுவிட்டு, அரங்கினுள் நுழைந்தால் தோழர் ச. தமிழ்ச்செல்வன் மேடையில் நின்றுகொண்டு ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். அதே மேடையின் ஒரோரத்தில் இரா. தெ. முத்துவும் நின்றுகொண்டிருந்தார். “துள்ளத் துடிக்கக் கழுத்தறுக்குறவங்களுக்கு டிமிக்கி குடுக்கறதும் ஒரு கலை தான்” என்று நினைத்துக் கொண்டேன். நீண்ட நாட்கள் கழித்து தமிழ்ச்செல்வனைப் பார்த்ததும், அவருடன் சில நிமிடங்கள் பேசியதும் மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

“எதாச்சும் எழுதுறீங்களா?” என்று தமிழ் கேட்டார்.

“இல்லிங்க தமிழ்... இப்பத் தானே சுத்தவே ஆரம்பிச்சி இருக்கோம்... அதுக்கெல்லாம் இன்னும் காலம் இருக்குது...” என்றேன்.

“பிரச்சனை அது இல்ல. சிறந்த படைப்புகள படிச்சிட்டதால... இதுதான் சிறந்ததுன்னு நெனசிக்கிறோம். அதனால, சிறந்ததத் தான் எழுதனும்னு ஒரு எண்ணத்த வேற வச்சிக்கறம். எழுதறது ஒரு டைம்ல நடந்துடனும். இப்பல்லாம் நான் எழுதிட்டு – அது புடிக்காம கிழிச்சி போட்டுக்குனு இருக்கேன்...” என்றார்.

“தோழர் சொல்றது ரொம்ப ரொம்ப ஞாயமா இருக்குதே...!” என்ற எண்ணங்களுடன் குளிரூட்டப்பட்ட அரங்கின் ஓரத்தில் சென்று அமர்ந்துகொண்டேன். விழா துவங்கி சிறப்பாகத் தான் சென்றுகொண்டிருந்தது. நீதிநாயகம் சந்துரு பேசும்வரை அரங்கில் இருக்கவேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். அவருக்கு முன்பு கல்வியாளர் வாஸந்திதேவி பேசினார். இந்தியக் கல்விமுறையின் நடைமுறைச் சிக்கல்கள், அதன் பின்னணி, அரசு பள்ளிகளின் தற்கால சூழல், தாய்மொழிக் கல்வியின் அத்யாவசியம், ஆங்கில மொழியை இரண்டாம் மொழிப் பாடமாகச் சிறப்பாகக் கற்றுக் கொடுக்க வேண்டியதின் அவசியம் என யதார்த்தத்துடன் சில ஆதங்கக் கேள்விகளை எழுப்பிப் பேசிக் கொண்டிருந்தார். பக்கத்தில் உட்கார்ந்திருந்த யாரோ ஒரு அள்ளக்கைக்கு அவருடைய பேச்சு பிடிக்கவில்லை போல. ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை - பேச்சை நிறுத்தும்படி சூசகமாகக் கைகளைத் தட்டி, ஓசை எழுப்பித் தெரிவித்துக் கொண்டிருந்தார். அவருடைய இந்தச் செய்கை எனக்கு அருவருப்பாக இருந்தது. வாஸந்திக்கு முன்னால் பேசியவர்கள் “குழந்தைகளுக்குத் தேங்காய் என்ற வார்த்தையைச் சொன்னால் தெரியவில்லை. கோக்கனட் என்றால் தான் தெரிகிறது. தூய தமிழிலுள்ள பொருள், அர்த்தம் போன்ற வார்த்தைகள் தெரியவில்லை. மீனிங் என்றால் தான் தெரிகிறது” என மேடைப் பேச்சுக்குத் தேவையான மாடுலேஷனுடன் அரங்கின் ஒட்டுமொத்தக் கைதட்டல்களை அள்ளினார்கள். அவர்களுக்கு மத்தியில் சா. தமிழ்ச்செல்வன், வாஸந்திதேவி போன்றோரது யதார்த்த மேடைப் பகிர்தல்கள் முக்கியமான ஒன்று. அதிலும் கல்வியாளர் வாஸந்திதேவியின் இந்தியக் கல்வி சார்ந்த யதார்த்த இடியாப்பச் சிக்கல்கல்களைத் தொட்டுப் பேசிய பேச்சு முக்கியம் வாய்ந்தது. அறிவுஜீவிகள் வீற்றிருக்கும் அரங்கில் இதுபோன்ற பேச்சுகளுக்கு இடையூறு ஏற்படுகிறது எனில் வேறென்ன சொல்ல. ஓர் அளவிற்கு மேல் என்னால் பொருக்க இயலவில்லை. ஆகவே அரங்கை விட்டு வெளியில் வந்துவிட்டேன். வீட்டிற்குச் செல்ல எப்படியும் இரவு பத்துமணி ஆகிவிடும். ஆகவே குறளகத்தை ஒட்டினாற்போல இருக்கும் ஆவின் பால் கடைக்கு நண்பர்களுடன் சென்றேன்.

ஒரு சிறுவன் தான் எங்களுக்கு காகிதக் கோப்பையில் பாலைக் கொடுத்தான்.

“சின்ன பையனா இருக்கியே... ஸ்கூலுக்கு போகல...” என்றேன். “இல்லை...” என்பது போலத் தலையை ஆட்டினான்.

“நல்லா படிப்பியா?” என்றேன்.

“ஆ(ங்)... ஃபஸ்ட் ரேங்க்குதான்...” என்று இழுத்தான்.

“படிப்பு வந்தா... இவன் ஏன்பா இங்க வேலைக்கு வரான்...” என்றார்கள் ஆவினில் இருந்த ஓர் அக்கா. நான் சிறுவனைப் பார்த்து சிநேகத்துடன் புன்னகை வீசினேன். அவன் பார்வை வேறெங்கோ நிலைகுத்தி இருந்தது.

“டேய்... அங்க என்ன பார்வை...!? அவனுக்கு தீஞ்ச ஏடா எடுத்துட்டு போயி போட்டுடாத. கொஞ்சம் வாசன வந்தாக் கூட அவ(ன்) சாப்புட மாட்டான்.” என்று அந்த அக்கா இன்ஸ்ட்டறக்ட் செய்து கொண்டிருந்தார்கள்.

“என்னங்க அக்கா...!? ஆவின் பூத் சார்பா ஏதாச்சும் வளக்கறீங்களா?” என்றேன்.

“வளக்கறது என்னப்பா... இருக்கற பாலேட கொண்டுட்டு போயி வைக்கிறோம்.” என்றார்கள்.

“பரவாயில்லையே...” என்றேன்.

“மூணு நாலு கழிச்சி இன்னிக்கிதான்பா கடைய தொறக்க வந்தோம். தூரத்துல எங்களப் பார்த்துட்டு ஆலொசறத்துக்கு எம்பிக் குதிக்கிது அந்த நாயி. ஆளுங்கள பார்த்தா அவ்வளோ சந்தோசம் அதுங்களுக்கு...” என்றாள் அந்த அக்கா.

“கடையத் தொறக்கும் போது அதுவும் கூட சேர்ந்து கதவத் தொறக்கும்பா” என்றார் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த – அதுவரைப் பேசாதிருந்த ஓர் நடுத்தர வயது அண்ணன்.

“ரொம்ப சுவாரஸ்யமா இருக்குதே...” என்றேன்.

“இது என்னாப்பா... யாரோ ஒரு ஆளு, டெய்லியும் ரெண்டு பாக்கட் பிஸ்கட் பாக்கட் வாங்கிட்டு வந்து – இங்க இருக்கற நாய்களுக்கு போட்டுட்டுப் போறாரு...” என்றார் அந்த அண்ணன்.

“பரவாயில்லையே... பணம் இருந்தாக் கூட மனசு வேணும் இல்ல...” என்றேன்.

“அவரப் பார்த்தா... அப்படி ஒன்னும் சம்பாதிக்கிற மாதிரிக் கூட இலிங்க தம்பி... இருந்தாலும் ஏதோ வாங்கிட்டு வந்துப் போடுறாரு...” என்றாள் அந்த அக்கா.

“வாயில்லா ஜீவன்களுக்கு சாப்பிடக் கொடுத்தால், ரொம்ப நன்றியோட நடந்துக்குங்க அக்கா... அதெல்லாம் நமக்கு சந்தோசம் தானே...” என்றவாறு, சைகையால் தலையை ஆட்டி “வரேங்கா” என ஆவினை விட்டுக் கிளம்பினோம்.

ஒரு நாய்க்குக் கூட கருகிய வாசனை இல்லாத தூய பாலேட்டினைப் போட வேண்டும் என்ற அக்கறை சாதாரணப் பெண்மணிக்கு இருக்கிறது, தெருநாய்கள் கூட பசியோடு இருக்கக் கூடாது என்ற அக்கறை கீழ் நடுத்தர வர்க்கத்தில் வாழும் ஒரு மனிதருக்கு இருக்கிறது – ஆனால், நம் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைப் புகட்ட வேண்டும், அறிவுப் பசியில் வாடக் கூடாது என்ற அக்கறை – அரசு இயந்திரங்களுக்கும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கும், குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் இருக்கிறதா? என்ற சமூகம் சார்ந்த சுயபரிசோதனையை – அவரவரது தளத்தில் நாம் எல்லோருமே செய்துகொள்ள வேண்டி இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட விழுக்காடு மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு – வேலைக்குச் செல்கிறார்கள். அப்படியே தொடர்ந்து படித்தாலும் – இளநிலை படிப்புக்குமேல் பலரும் படிப்பைத் தொடர்வதில்லை. அண்ணா பல்கலையில் கூட மெக்கானிக்கல் & சிவில் என்ஜினியரிங் படிப்புகள் தமிழ் வழியில் படிக்க முடியும் என்கிறார்கள். அப்படிப் படிப்பவர்களில் எத்தனை பேர் முதுநிலை செல்கிறார்கள். முதுநிலையிலும் அவர்கள் தமிழ் வழியில் படிக்க வசதி இருக்கிறதா? என்ற கேள்வியைக் குடைந்துகொண்டு போனால் ஆதங்கம் தான் மிஞ்சும்.

அண்ணா பல்கலையில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர் ஒருவரிடம் “ME, M.Phil, Phd போன்ற என்ஜினியரிங் சார்ந்த மேற்படிப்புகளை தமிழ் வழியில் படிக்கமுடியுமா? அதற்கான வாய்ப்பு இருக்கிறதா?” என்று கேட்டேன்.

“முடியாது... இது தொழின்முறை சார்ந்த படிப்பு...” என்ற பதில் வந்தது.

“BE எஞ்சினியரிங்கும் தொழின்முறை படிப்புதானே? அதனை தமிழ் வழியில் படிக்கும் பொழுது... மேற்படிப்புகளை ஏன் தமிழ் வழியில் தொடர முடியாது? ஒரே காரணம் ஆங்கில வழியில் படிப்பதால் கிடைக்கும் வேலை வாய்ப்பாகத் தான் இருக்கும். அப்படித்தானே...!?” என்றேன்.

“அதெல்லாம் எனக்குத் தெரியல. இதெல்லாம் அரசாங்க உத்தரவுகள். அதன்படித்தானே பல்கலைக் கழகங்கள் செயல்பட முடியும். என்றாலும் தமிழ் வழியில் என்ஜினியரிங் படித்த பலரும் ME – படிக்க இருக்கிறார்கள்” என்பதையும் அந்த நண்பர் தெரிவித்தார்.

மேற்கூறிய சம்பாஷணையை என்ஜினியரிங் மாணவர் மட்டுமல்ல, கலை, அறிவியியல், கணக்குப்பதிவு, அக்கவுண்ட்ஸ் என எந்தத் துறை மாணவருடன் உரையாடினாலும் உங்களுக்குக் கிடைக்கும். தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்திருக்கலாம். கிளாசிக் மொழி என உலக அளவில் ஆராய்ச்சியாளர்கள் ஒத்துக்கொள்ளலாம். என்றாலும் தற்போது வழக்கில் இருக்கும் மனிப்பிரவாக மொழி – ரீஜினல் லாங்குவேஜ். தமிழ் மட்டுமல்ல, கன்னடம், மலையாளம், தெலுங்கு, குஜராத்தி போன்ற பல மொழிகளும் ரீஜினல் லாங்குவேஜ் தான். ஹிந்தி போன்று தேசிய மொழி அல்ல. என்றாலும் அவரவர் தாய்மொழியில் பயில்வது கற்பனைத் திறனையும், துறை சார்ந்த தெளிவாக சிந்திக்கும் கண்டுபிடிப்பாளர்களையும், அறிஞர்களையும் நமக்குக் கொடுக்கும்.

தாய்மொழி வழியில் பயிலும் மாணவர்கள், குறிப்பாகத் தமிழ் மொழியை பயிற்றுமொழியாகக் கொண்ட மாணவர்கள் - கல்லூரி இளநிலையை வரை பிரச்சனை இல்லாமல் படிப்பைத் தொடரலாம். முதுநிலை என்று வரும் பொழுது ஆங்கில வழியில் தான் படிக்கவேண்டி இருக்கிறது. ஆங்கிலத்தில் தான் தேர்வெழுதவேண்டி இருக்கிறது. இதன் காரணமாகவே பலரும் முதுநிளைக்குச் செல்வதில்லை. அப்படியே சென்றாலும் படிப்பில் சோபிக்க முடிவதில்லை. குறிப்பாக வாஸந்திதேவி சொல்வதுபோல அரசுப் பள்ளியில், தாய்மொழி வழியில் யாரெல்லாம் படிக்கிறார்கள் என்று பார்த்தால் தலித்துக்களும், விளிம்புநிலை மனிதர்களின் வாரிசுகளும் தான். ஆகவே இந்த சிக்கல் வர்க்கம சார்ந்த பிரிவினையை ஏற்படுத்துகிறது. அடித்தட்டு மக்கள் ஓரளவிற்கு மேல் கல்வியை மேற்க்கொண்டு தொடர முடியாத சிக்கல் எழுகிறது. கர்நாடகப் பல்கலைகளில் முதுநிலைப் படிப்பை அவர்களது தாய்மொழியில் எழுத முடியும். ஆகவே தான் முதுநிலைக்குச் செல்லும் அவர்களது மாணவ விழுக்காடு அதிகம் இருக்கிறது. (கன்னடக்காரர்களின் தாய்மொழி வழிக் கல்வித்தரம் குறித்த ஆய்வு அவசியம் தேவை. கல்வித் தரம் சரியில்லை எனில் அது சார்ந்த விழிப்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கிறது.)

தாய்மொழியில் பாடங்களைக் கறப்பது பலவகையிலும் நன்மை பயக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை. அதே நேரத்தில் உலக வர்த்தகத்தில் வளரும் நாடாகிய இந்தியாவைப் போன்ற நாடுகள் வலிமையுடன் காலூன்ற உலகமொழிப் பரிட்சயம் மிக மிக அவசியம். ஆகவே உலகமொழியை இரண்டாம் பாடமாக சரியாகப் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியமும் நமக்கு இருக்கிறது. மாறாக வேலைகளை மட்டுமே உற்பத்தி செய்யும் ஆங்கில வழிக் கல்வி மேலும் மேலும் சிக்கலைத் தான் உண்டாக்கும். இந்தப் புரிதலுக்கான விவாதத்தை முன்னெடுக்கும் விதமாகத் தான் தமுஎகச-வின் இந்த மாநில அளவிலான சிறப்பு மாநாட்டை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து மதுரை, கோவை போன்ற இடங்களிலும் தொடர் மாநாடுகளை இவர்கள் நடத்த இருக்கிறார்கள். அந்தந்த நகரத்தில் வசிக்கும் கல்வி ஆர்வலர்கள் ஆதரவு கொடுத்தால் – இந்த மாநாடு மேலும் சிறப்படையும்.

Sunday, October 6, 2013

தங்கமீன்களும், மாலனின் தப்புக் கணக்கும்


அபிலாஷின் தங்கமீன்கள் திரைப்படத்தைப் பற்றிய கட்டுரையின் ஆரம்ப விவரணைகள் கொஞ்சம் நெருடலாகவே இருந்தது. அந்த வரிகள் பின்வருமாறு:

/-- தமிழில் பல அற்புதமான படங்கள் வந்துள்ளன. கமல், மணிரத்னம், செல்வராகவன், மிஷ்கின், வெற்றிமாறன், தியாகராஜா குமாரராஜா என நமது உன்னத கலைஞர்கள் தந்த படங்களை ஒருமுறை நினைத்துப் பாருங்கள் – அவை வேறேதவது ஒரு படத்தை நினைவுபடுத்தும். நமது படங்கள் வரிசையாய் அடுக்கி வைத்த கண்ணாடிகள் போல் ஒன்றையொன்று பிரதிபலித்தபடியே இருக்கின்றன. ஒரு காரணம் இவர்கள் எல்லாம் கதைகூறலில் தேர்ந்தவர்கள் என்பது. சொந்தமாக ஒரு வாழ்க்கையை அறிந்து சொல்லும் மரபு நம் இலக்கியத்தில் உள்ளது; ஆனால் சினிமாவில் மிக அரிது. ராமின் “தங்கமீன்களின்” ஒரு சிறப்பு அதைப் போல் மற்றொரு படம் தமிழில் இல்லை என்பது.--/

படிக்க: http://thiruttusavi.blogspot.in/2013/10/blog-post.html

முதல் பத்தியின் கடைசி வரிகள் கொஞ்சம் கவனிக்கப் பட வேண்டிய ஒன்று.

“ராமின் தங்கமீன்களின் ஒரு சிறப்பு அதைப் போல் மற்றொரு படம் தமிழில் இல்லை என்பது”

தங்கமீங்கள் திரைப்படத்தின் சிறப்பான விஷயங்களை மட்டுமே அபிலாஷ் தேடிப் பிடித்து வியந்தோதுகிறாரோ என்ற ஐயம் எனக்கு எழுகிறது. கல்யாணி கேரக்டரைப் பற்றி மிக நுட்பமாக ஆராய்ந்து பேசும் அபிலாஷ், மேலதிகமாக மலையாள படங்களில் சிலதை எடுத்துக்கொண்டு கல்யாணியின் பாத்திர வார்ப்பு பற்றி ஓர் ஆராய்ச்சியே செய்துவிடுகிறார். அபிலாஷ் மட்டுமல்ல, பல விமர்சகர்களும் கல்யாணியை சிலாகித்து தான் எழுதுகிறார்கள். ஆனால், கல்யாணி கேரக்டருக்கு இணையான முக்கியக் கதாப்பாத்திரமான குழந்தைப் பாத்திரத்தின் பலவீனமான பாத்திர வார்ப்பைப் பற்றிப் பேசாமலேயே எல்லோரும் கடந்து விடுகிறார்கள். இந்தப் படத்தில் “தந்தை – மகள்” ஆகிய பாத்திரங்கள் தண்டவாளம் போல ஒன்றுக்கொன்று அச்சு பிசகாமல் திரைக்கதையின் மீதமர்ந்து பயணிக்க வேண்டிய கதாப்பாத்திரங்கள்.

கல்யாணியின் மகள் துருதுருவென கன்று போலச் சுற்றி வருகிறாள். இந்த அதிவேகச் செயல்பாடு “சிறுமியின் கவனத்தை சிதறச் செய்கிறதோ?” என்று யோசித்துக் கொண்டு வருகையில், “M”, “W” போன்ற ஒரே மாதிரி வடிவில் அமைந்த எழுத்துக்களை – ஆசிரியையின் சொற்படி கரும்பலகையில் எழுத முடியாமல் சிறுமி தவிக்கிறாள். ஓரிடத்தில் “M” என்ற எழுத்துக்குப் பதில் “W” என எழுதுகிறாள். அதிலிருந்து அந்தச் சிறுமியை சக மாணவர்கள் “W” என அழைக்கத் துவங்குகின்றனர். மூன்றாவது படிக்க வேண்டிய சிறுமிக்கு 7 வயது இருக்க வேண்டும். ஆனால், இரண்டாவது படிக்கிறாள். இரண்டாவது படிக்கும் குழந்தைக்கு எழுத்து சார்ந்த அடையாளச் சிக்கல் இருப்பது கொஞ்சம் கவனிக்கக வேண்டிய விஷயம். பிறகு கல்யாணி கதாப்பாத்திரத்தில் நடித்த “ராம்” கூட, தங்கமீன்கள் நீந்திக் கொண்டிருக்கும் குளத்தங்கரையில் “M”, “W” எழுத்துரு சார்ந்த பிரத்தியேக வகுப்பையே அந்தச் சிறுமிக்கு எடுக்கிறார். இதைக் கொண்டு ஒப்பு நோக்குகையில் அந்தச் சிறுமி “டிஸ்லக்ஷியா போன்று ஏதேனும் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிறப்புக் குழந்தையா?” என்ற ஐயம் எழுகிறது. (“தாரே சமன் பார்” – அமீர்கான் தயாரித்து இயக்கிய டெஸ்லெக்ஷியா பற்றிய பிளாக் பஸ்டர் திரைப்படம் என்பது சொல்லித்தெரிய வேண்டியது இல்லை.)

“அதிவேகச் செயல்பாட்டல் படிப்பில் கவனக் குறைவுடன் தத்தளிக்கும் குழந்தையா?” அல்லது “(டிஸ்லக்ஷியாவால் பாதிக்கப்பட்ட) சிறப்புக் குழந்தையா?” என்ற சந்தேகத்தை, அவளுடைய கேள்வி கேட்கும் குணமும், கேள்விக்கு ஏடாகூடமாக பதில் சொல்லும் குணமும் வேறு மாதிரியாக யோசிக்க வைக்கிறது.

அபிலாஷ் சொல்கிறார்: /-- நமது உன்னத கலைஞர்கள் தந்த படங்களை ஒருமுறை நினைத்துப் பாருங்கள் – அவை வேறேதவது ஒரு படத்தை நினைவுபடுத்தும். நமது படங்கள் வரிசையாய் அடுக்கி வைத்த கண்ணாடிகள் போல் ஒன்றையொன்று பிரதிபலித்தபடியே இருக்கின்றன.--/

தங்கமீன்கள் பார்த்தபோது பாலுமகேந்திராவின் குறும்படம் ஒன்று தான் ஞாபகத்திற்கு வந்தது. பத்திரிகையாளர் மாலன் நாராயணன் எழுதி தாய் இதழில் வெளியான “தப்புக் கணக்கு” சிறுகதையை சன் டிவியில் ஒளிபரப்பான பாலுவின் கதை நேரத்திற்காக குறும்படமாக எடுத்திருக்கிறார்.

சிறுகதையில் ஒரு சிறுமி (ஜனனி) தாத்தாவிற்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள். ஏனெனில் அந்த பள்ளிச் சிறுமிக்குத் தாத்தாவிடம் கேட்க ஒரு கேள்வி இருக்கிறது. சிறுமியைப் பற்றி மாலன் பின்வருமாறு சொல்கிறார்: “ஜனனியின் கேள்விகளுக்கு பதில் சொல்வது தேன் கூட்டில் கல் வீசுவது போல. ஒரு கேள்விக்குப் பதில் சொன்னால் அத்தோடு ஓயாது. சரம்சரமாய் கேள்விகள் கிளம்பும்”. (கல்யாணியின் மகளும் நிறைய கேள்வி கேட்பவள்.)

தாத்தா மட்டுமே ஜனனியின் கேள்விக்குப் பொறுமையாக பதில் சொல்வது மட்டுமல்லாது, தொடர்ந்து கேள்விகள் கேட்கும் பழக்கத்தைத் தட்டிக் கொடுப்பார். வீட்டிலுள்ள மற்றவர்கள் “கொஞ்சம் சும்மாயிரேன்மா... இப்படியெல்லாம் பேசக்கூடாதும்மா...” என்கிறார்கள்.

பரீட்சை பேப்பரில் “7 X 2= 14” என்று எழுதியிருப்பதற்கு - கணக்கின் குறுக்கே தவறு என சிகப்பு மையினால் கோடு போட்டு, மார்ஜின் பக்கத்தில் பூஜ்யம் மதிப்பெண்கள் போட்டிருக்கிறாள் பள்ளி ஆசிரியை.

“7 X 2= 14 தவறான விடையா?” என்பதுதான் ஜனனியின் கேள்வி. அடுத்த நாள் வேலைக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு தாத்தா பள்ளிக்குச் சென்று ஆசிரியையிடம் முறையிடுகிறார்.

“இதிலே என்ன தப்பு மேடம்?”

“ஒரு வாரத்திற்கு ஏழு நாட்கள். அப்படியானால் இரு வாரத்திற்கு ” 2 X7=14” என்கிறாள் ஆசிரியை.

“சரி 7 X 2= 14 என குழந்தை எழுதினால் அது தப்பா?” என்கிறார் தாத்தா.

“தப்பு தான். வகுப்பில் எப்படிச் சொல்லிக் கொடுத்திருக்கிறோமோ அப்படித்தான் எழுதணும். 2 X 7= 14 என்று சொல்லிக் கொடுத்திருக்கிற போது, 7 X 2= 14 என்று எழுதினால் தவறுதான்” என்கிறாள் ஆசிரியை.

“டீச்சர் இது அநியாயம்!” என பிரின்சிபால், கல்வித்துறை அதிகாரி என பிரச்சனை சார்ந்து புகார் கொடுக்கிறார் தாத்தா. கல்வித் துறை மந்திரியிடமும் புகார் செய்வதற்கு முன்பு ஜனனியின் பெற்றோர்களிடம் பேசிவிடலாம் என்று பேசிப் பார்க்கிறார்.

“டீச்சர் சொல்றது தப்பாயிருக்கலாம்பா, ஆனா அவங்க சொல்லிக் கொடுத்த மாதிரியே பரீட்சையில எழுதறதுக்கு இவளுக்கு என்ன கேடு?” என்கிறார் ஜனனியின் அப்பா.

“சரி, எழுத்தல்ல, அது தப்பா?” என்கிறார் ஜனனியின் தாத்தா.

“ஏன் அவ எழுத்தல்ல?” என்கிறாள் ஜனனியின் அம்மா.

“அவளையே கூப்பிட்டு கேளு” என்கிறார் தாத்தா.

“ஒரு வாரத்திற்கு ஏழு நாள். இரண்டு வாரத்திற்கு எத்தனை நாள்?” என்று பரிட்சையில் கேட்கப்பட்ட கேள்வியைக் கேட்கிறார்கள்.

“ஏழு இன்ட்டு ரெண்டு இஸ் ஈக்குவல்டு பதினாலு” என்கிறாள்.

“ஏழு இன்ட்டு ரெண்டு எப்படி? ஒரு வாரத்திற்கு ஏழு நாட்கள். அப்போ ரெண்டு இன்ட்டு ஏழு தானே?” என்று கேட்கிறார்கள்.

“இல்லே தாத்தா. ஒரு வாரத்துல ஒரு சண்டே, ஒரு மண்டே, ஒரு டியூஸ்டே இப்படி ஏழு நாள்... ரெண்டு வாரத்துல ரெண்டு சண்டே, ரெண்டு மண்டே, ரெண்டு டியூஸ்டே...” என்று விரல் விட்டு எண்ணுகிறாள் ஜனனி. “ஸோ... ஏழு நாள். ஒவ்வொன்னும் ரெண்டு தடவை. அதான் ஏழு இன்டு ரெண்டு...” என்கிறாள் புத்திசாலித்தனமாக ஜனனி.

“கிரேட்...” என்கிறார் தாத்தா. “இது வித்யாசமான சிந்தனை. மொத்த கிளாசும் டீச்சர் சொல்லிக் கொடுத்த மாதிரி குதிரைக்குப் பட்டைக் கட்டின மாதிரி போறச்சே, மூளைய உபயோகிச்சு நீ கணக்கு போட்டிருக்க பாரு, இது கிரியேட்டிவிட்டி! இது புத்திசாலித்தனம்!” என்று உற்சாகத்தில் பூரிக்கிறார் தாத்தா.

“சந்தோஷப் படாதிங்கப்பா... இது கவலைப் பட வேண்டிய விஷயம்” என்கிறார் ஜனனியின் அப்பா.

“என்னடா சொல்றே?” என்கிறார் தாத்தா.

“இது பெண் குழந்தை. ஞாபகம் வச்சிக்கோ. சொல்லிக் கொடுத்த மாதிரியில்லாம வேறு மாதிரி யோசிக்கிற குழந்தை, பின்னால பெரியவளானா நிறைய கேள்வி கேப்பா. இதுநாள் வரைக்கும் நடைமுறையில் இருக்கிற சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் இதையெல்லாம் கேள்வி கேட்பார்கள். வித்யாசமா சிந்திக்கறதனாலையே காயப்படுவா. ஊரோட, உலகத்தோட, ஒத்து வாழாம இருந்தா அவளுக்கும் அவஸ்தை. மற்றவர்களுக்கும் இம்சை”

“அதனால..” என்கிறார் தாத்தா.

கடைசியில் “டீச்சர் எப்படிச் சொல்லிக் கொடுக்கிறார்களோ அப்படியே கணக்குப் போடு. அதிகப் பிரசங்கித் தனம் எல்லாம் வேண்டாம்” என்று அழுத்தமாகச் சொல்லியவாறு புறப்படுகிறார் அப்பா. கண்களில் ஈரம் சொட்ட அந்தச் சிறுமியை தாத்தா பார்க்கிறார் என்பதாக கதை முடியும்.

குழந்தைகளின் துறுதுறு தன்மையையும், கற்பனைச் சிறகுகளை முறிக்கும் கல்வி முறையையும் கொண்ட இந்தியக் கல்வி பாடத் திட்டங்களை பற்றிய போதாமையையும் நுட்பமாக பதிவு செய்திருப்பார் மாலன். சிக்கலுக்கான தீர்வு எதையும் சொல்லாமல், சிறுமிக்கு உறுதுணையாக நிற்கும் தாத்தாவை ஒரு கையறு நிலையில் சிறுகதையின் முடிவில் நிருத்தியிருப்பார். பாலு மகேந்திராவின் கதை நேரத்திற்காக இந்தச் சிறுகதையை இயக்குனர் பாலு மகேந்திரா குறும்படமாக எடுக்கும் பொழுது இன்னும் மெனக்கெட்டு சிறப்பாகச் செய்கிறார். (பாலு மகேந்திரா கதை நேரத்தில் எடுக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட குறும்படங்களின் திரைக்கதை வடிவத்தை புத்தகமாக வம்சி பதிப்பகம் வெளியிட்டிருகிறார்கள். குறும்படத்தின் குறுந்தகடுகளும் புத்தக இணைப்பாகக் கிடைக்கிறது. அதில் தப்புக் கணக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை.)

குறும்படமானது “தாத்தா – பேத்தி” என்று விரிகிறது. தங்கமீன்கள் “அப்பா – மகள்” என்று விரிகின்றது. ஆக, “ராமின் “தங்கமீன்களின்” ஒரு சிறப்பு அதைப் போல் மற்றொரு படம் தமிழில் இல்லை” என அபிலாஷ் சொல்வது கொஞ்சம் அதிகம் தான். குறும்படத்திலேயே இந்த முயற்சி நடந்திருக்கிறது. அதனை ராம் தனது மானசீக குருவாகக் கருதும் பாலுமகேந்திரா இயக்கி இருக்கிறார். அதன் திரைக்கதை மற்றும் குறுந்தகட்டினை ராமின் ஆதர்ஷ நண்பர்களில் ஒருவரான வம்சி பதிப்பகத்தின் உரிமையாளர் பவா செல்லத்துரை வெளியிட்டிருக்கிறார்.

குறும்படத்தில் தீர்வு எதுவும் இருக்காது. தங்கமீங்களில் தீர்வு இருக்கிறது. தனியார் பள்ளியில் மக்கு போல சுற்றித் திரியும் சிறுமி, அரசாங்கப் பள்ளியில் சேர்கப்பட்டவுடன் சோபிக்கத் துவங்குகிறாள். எழுத்துரு அடையாளச் சிக்கலில் தவிக்கும் சிறுமி – கட்டுரை எழுதி முதற்பரிசு வாங்குகிறாள். பள்ளியின் ஆண்டு விழாவில் அந்தக் கட்டுரையை மேடையில் நின்றுகொண்டு வாசிக்கத் துவங்குகிறாள் என்பதுடன் படம் நிறைவு பெறுகிறது. இங்கு தான் யதார்த்தச் சிக்கல்களிலிருந்து “தங்கமீன்கள்” வழுவி நிற்கிறது.

“தங்கமீன்கள்” உணர்வு பூர்வமான கதை என்பதை மறுப்பதற்கில்லை. என்றாலும் திரைப்படமானது சிறுமியை மையமாக வைத்துச் சுழல்கிறது. அப்படியிருக்க சிறுமியின் பாத்திர வார்ப்பை மிக நுட்பமாக ஆராய வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்த விஷயத்தில் ராம் கொஞ்சம் போல சறுக்கி இருக்கிறார். “ராமின் “தங்கமீன்களின்” ஒரு சிறப்பு அதைப் போல் மற்றொரு படம் தமிழில் இல்லை” என்பதெல்லாம் அதிகபட்ச ஒப்புமையாகத் தான் இருக்கிறது. வேறென்ன சொல்ல...!

மாலனின் தப்புக் கணக்கு சிறுகதையை வாசிக்க: தப்புக் கணக்கு

Saturday, September 14, 2013

நாங்களும் படிக்கணும் – ஆவணப்படம்

“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்” – இது வள்ளுவப் பெருந்தகையின் அட்டகாசமான குறள்களில் ஒன்று.

ஜேகே ஃபவுண்டேஷனின் “நாங்களும் படிக்கணும்” ஆவணப்பட அறிமுக விழாவிற்கு சகோதரி காமாட்சி அழைப்பு விடுத்திருந்தார். ஆவணப் படத்தில் பாட்டி வளர்க்கும் பிள்ளையாகத் தான் ரெனால்ட் ஒருசில நிமிடங்கள் திரையில் தோன்றினான். ஏதேனும் சுவாரஸ்யம் அவனிடம் இருக்க வேண்டுமென்று தோன்றியது. அதுவுமில்லாமல் ரெனால்டின் பக்கத்திலிருந்த இருக்கை காலியாக வேறு இருந்தது. ஆகவே பேச்சுக் கொடுக்கலாமென அங்கு சென்று அமர்ந்து கொண்டேன்.

அரசு பள்ளியில் படித்து, பத்தாவது பொதுத்தேர்வில் விழுப்புரம் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்றதற்காக ரெனால்டை மேடைக்கு அழைத்தார்கள். அவன் சென்று பரிசைப் பெற்றுக்கொண்டான். சற்று நேரம் கழித்து மீண்டும் ரெனால்டை அழைத்தார்கள். கணிதப் பாடத்தில் நூற்றுக்கு நூறு பெற்றதற்காகப் பரிசு கொடுத்தார்கள். அதையும் பெற்றுக்கொண்டு இருக்கைக்குத் திரும்பினான். மென்மையாக பேச்சுக் கொடுத்தேன்.

“ஓ... மேத்ஸ் உனக்கு நல்லா வருமோ?”

“ஆமா... புடிச்ச சப்ஜெக்ட்...” என்றான் கூச்சத்துடன். சற்று நேரத்திற்கெல்லாம் மீடியா தோழர்கள் புகைப்படம் எடுப்பதற்காக ரெனால்ட்டை அழைத்தார்கள். கூச்சத்துடனே அவர்கள் பின்னால் சென்றான். திரும்பியதும் மீண்டும் சில கேள்விகளைக் கேட்டேன்.

“அந்த படத்துல... பாட்டிதான் உங்கள வளக்கறதா காமிக்கிறாங்க?” என்றேன்.

“ஆமா... பாட்டிக் கூடத்தான் இருக்கேன்.” என்றான்.

“அப்பா...?” என்றேன்.

“அப்பா இல்ல...” என்றான்.

“அம்மா...” என்றேன்.

“இங்க தான் (சென்னையில) வீட்டு வேலை செய்யறாங்க...” என்றான்.

“ஜேகே பவுண்டேஷன் வறதுக்கு முன்னாடி உங்க ஸ்கூல் எப்படி இருந்துச்சி? இப்போ எப்படி இருக்குது?”

“முன்னெல்லாம் டீச்சர்ஸ் ரொம்ப ஆர்வமா இருக்கமாட்டாங்க. இப்பல்லாம் கொஞ்சம் ரிவிஷன் டெஸ்ட் எல்லாம் வெக்கிறாங்க. அக்கறையா அன்பா சொல்லிக் கொடுக்கறாங்க. அதுனால நல்லா இருக்குது.” என்றான்.

“நீ படிச்சி என்னவா ஆகலாம்னு மனசுல வச்சிருக்க?” என்றேன்.

“M.B.B.S படிக்கலாம்னு...” என்றான்.

இந்தக் குறைவான கேள்விகளைக் கேட்டு, சுருக்கமான பதில்களை வாங்க ஏறக்குறைய அரை மணிநேரம் பிடித்தது. இதற்குள் நிகழ்ச்சியும் முடிந்து மதிய உணவிற்காக எல்லோரையும் அழைத்தார்கள். அக்காவின் மகன் அகிலும், நானும் முதல் ஆளாக தட்டுக்களை எடுத்துக் கொண்டு வரிசையில் நின்றோம். சாப்பிட்டு முடித்து ஐஸ்கிரீமை கூட ஒரு வெட்டு வெட்டிக் கொண்டிருந்தோம். அப்பொழுதுதான் ரெனால்ட் சாப்பிடுவதற்காக உள்ளே நுழைந்தான். தட்டினை எடுத்துக் கொண்ட அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கைகளைக் கழுவிக்கொண்டு, ஓரமாக இருந்த பிளாஸ்டிக் இருக்கையொன்றில் அமர்ந்திருந்தான். அவன் “சாப்பிட்டானோ? இல்லையோ?” என்ற சந்தேகம் எனக்கு. அருகில் சென்று அவனைப் பார்த்துச் சிரித்தேன். மேலும் “சாப்பிட்டியா?” என்றேன்.

“ஆ(ங்)... சாப்பிட்டேன்” என்றான் தலையை ஆட்டியவாறே சங்கோஜத்துடன்.

“உண்மையச் சொல்லு... பிளேட்ட எடுத்த அஞ்சி நிமிஷத்துல வயிறு நெறைய சாப்பிட முடியாதே ரெனால்ட்...!” என்று கண்களை உருட்டினேன்.

“இல்லைங்க’ண்ணா... இந்த மாதிரி சாப்புட்டு பழக்கமில்ல... இப்பிடி சாப்புட்றது என்னமோ மாதிரி இருக்குது...” என்றான்.

“சரி... நான் வேணும்னா கூட வரேன்... மூனுமணி நேரம் டிராவல் பண்ணி ஊருக்குப் போகணும் இல்லியா? வா... நீ வந்து சாப்புடு. நான் ஹெல்ப் பண்றேன்.” என்றேன்.

“இல்லன்னா... எனக்கு வேண்டாம்.” என்றான் தயக்கமாக. இதோட விழுப்புரம் போனால் தான் அவன் சாப்பிட முடியும். சொல்ற பேச்சையும் கேட்க மாட்டேன் என்கிறான். இவனை என்ன செய்ய? நேராக ஸ்வீட் கொடுப்பவரிடம் சென்றேன்.

“இங்க பாருங்க ரெண்டு ஸ்வீட் மட்டும்” எடுத்துக்கறேன் என்றேன்.

“ஓ... தாராளமா எடுத்துக்கோங்க சார்...” என்றார். அதனை எடுத்துக்கொண்டு வந்து ரெனால்டிடம் நீட்டினேன். தயக்கத்துடன் வாங்கி கொஞ்சம் கொஞ்சமாகக் கடித்து முழுங்கினான். விழா முடிந்து தமயந்தி சித்தி, அகில், அனைன்யா – ஆகியோருக்குப் பிரியா விடைகொடுத்து அனுப்பிவிட்டு வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். மியூசிக் அகாடமியின் அருகில் செல்லும் பாலத்தின் கீழ் அவன் நின்றுகொண்டிருப்பது போலப்பட்டது. அவனே தான்...! வாகனங்கள் விரைந்துசெல்லும் சாலையின் ஓரத்தில், வேகாத வெயிலில் நின்றுகொண்டு, செல்பேசியைக் காதில் வைத்திருந்தான் ரெனால்ட். முகத்தில் வியர்வை வழிந்து கொண்டிருந்தது.

“மொதல்ல ப்ளாட் ஃபாரமுக்கு வா...” என்றதும் நடைபாதைக்கு நகர்ந்தான் காதோரம் வைத்திருந்த செல்பேசியை எடுக்காமல். “நீ என்ன தம்பி இங்க நிக்கிற? உன்னோட Team-அ மிஸ் பண்ணிட்டியா?” என்றேன் அக்கறையுடன்.

“இல்லன்னா... அம்மா இங்கதான வீட்டு வேலை செய்யறாங்க... இந்த எடத்துக்கு வரச் சொன்னாங்க. அதான் ஒரு அஞ்சி நிமிஷம் பார்த்துட்டு போலாம்னு நிக்கிறேன்.” என்றான். அதற்கு மேல் அங்கிருந்து தாயையும் மகனையும் சங்கடப்படுத்த வேண்டாமென்று “”Okie… Bye bye” என சொல்லிவிட்டுக் கிளம்பினேன். அந்தத் தாய் “வந்தாளா? இல்லையா?” என்பது கடவுளுக்கே வெளிச்சம். தாயைச் சந்தித்த மகிழ்ச்சியுடன் ரெனால்ட் ஊருக்குத் திரும்பினானா என்பதும் கடவுளுக்கு வெளிச்சம்.

ஓ... மை காட்...! ஒருத்தி இங்க ஓடா ஒழைச்சி காச சம்பாதிச்சி தன்னோட புள்ளைய படிக்க வெக்கிறா. பையனும் நல்லா படிக்கிறான். தோ... இன்னிக்கிக் கூட ரெண்டு பரிசை தட்டிட்டு வந்திருக்கான். அந்தப் பையனோட – லைம்லைட், மீடியாவின் பிளாஷ் வெளிச்சம், பாராட்டு, மரியாதை – இத்தியாதி இத்தியாதி எல்லாவற்றையும் பார்க்க வேண்டியவள் - ஓடாய் உழைக்கும் பெற்றவள் தானே. இதை எல்லாத்தையும் பார்த்திருந்தால் அந்தப் பெண் எவ்வளவு சந்தோஷப் பட்டிருப்பாள். தனது ரத்தமும் சதையுமான மகனை நினைத்து எவ்வளவு பெருமை பட்டிருப்பாள்.

தோ... பக்கத்தில் தான் அந்தத் தாய் இருந்திருக்கிறாள். அவளது மனம் குளிர ஒரு வாய்ப்பைக் கொடுக்கமால் போய்விட்டோமே...!

காமாட்சி சிஸ்டர் கிட்டயும், ஜெயகிருஷ்ணன் கிட்டயும் பர்சனலா ஓர் வேண்டுகோள்... இல்லை இல்லை அன்புக் கட்டளையே இட வேண்டும். அடுத்த வருடம் மாணவர்கள் பரிசளிப்பு விழா சென்னையில் நடப்பதாக இருந்தால், பரிசு பெரும் மாணவர்களின் பெற்றோர்கள் யாரெல்லாம் சென்னையில் வேலை செய்கிறார்களோ, அவர்களையெல்லாம் விழாவிற்கு வருகை தருமாறு JK Foundation சார்பில் அழைப்பு விடுக்க வேண்டும். பார்வையாளர்களின் கரவொலி, சிறப்பு விருந்தினர்களின் முகஸ்துதி பாராட்டுகளைவிட – பிள்ளைகளைப் பெற்றவர்களின் மனக்குளிர்ச்சியும், ஆசிர்வாதமும் JK Foundation குடும்பத்தாருக்கு என்றென்றும் கிடைக்க வேண்டும்.

வேறென்ன சொல்ல...

குறிப்பு:
பின்தங்கிய கிராமப்புறத்தைச் சேர்ந்த 10 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 10 நடுநிலைப் பள்ளிகளை ஜேகே அறக்கட்டளை தத்தெத்டுதிருகிறார்கள். மாதம் ஒன்றிற்கு சுமார் 10 லட்ச ரூபாய் செலவு செய்து பள்ளிகளின் அடிப்படை நிர்வாகப் பணிகள், மாணவர்களின் படிப்புக்குத் தேவையான அடிப்படை வசதிகள், தேவையான பட்டதாரி ஆசிரியர்கள், மாலை நேர உணவு போன்றவற்றை 20 பள்ளிகளுக்கும் ஏற்பாடு செய்துத் தருகிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாக இதனைச் செய்து வருகிறார்கள். இதர பின்தங்கிய மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளிகள் சார்ந்த மேலும் சிலபல திட்டங்களையும் இவர்கள் வைத்திருகிறார்கள். கிராமப்புற அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த இவர்கள் செலவிடும் தொகையைக் கணக்கிட்டால் தரமானதொரு தனியார் பள்ளியையே துவங்கிவிடலாம். தொடர்ந்து கவனிப்போம் ஜேகே பவுண்டேஷனின் சிறப்பான சேவையை. 

Thursday, September 12, 2013

யட்சி – குறும்பட அறிமுகம்

மரணத்தை தழுவத் துடிக்கும் எழுத்தாளனையும், ஒரு தேவதை போல அவனது பாதுகாப்பில் வளர்ந்து வரும் சிறு பெண்ணையும் மையப்படுத்தி தரமணி திரைக்கல்லூரி மாணவர் மணிமாறனால் இறுதியாண்டு செய்முறைப் பயிற்சிக்காக எடுக்கப்பட்ட குறும்படம் தான் “யட்சி”. சென்னை எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரி வழங்கிய இக்குறும்படம் – இந்த ஆண்டு நடைபெற்ற கோவா உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் (2013) – இக்குறும்படம் சிறந்த கதைக்கான சிறப்புப் பரிசையும் பெற்றுள்ளது.

வினோத நோயினால் பாதிக்கப்பட்ட வயோதிக எழுத்தாளன் தேவதச்சன் (பரிக்ஷா ராஜாமணி), நோய் முற்றிய நிலையில் எடுக்கப்போகும் தற்கொலை முடிவு பற்றிய காட்சிகளாக இக்குறும்படம் விரிகின்றது. முடிவு என்ன என்பதை குறும்படத்தின் ஆரம்பத்திலேயே இயக்குனர் சொல்லி விடுகிறார். “இதுதான் முடிவு…!” என்பதை ஆரம்பத்திலேயே தெளிவாகச் சொல்லிவிட்டு குறும்படத்தை அலுப்பில்லாமல் நகர்த்துவது சவாலான, சிரமமான காரியம். குறும்படம் முழுவதும் ஒரு சின்ன அறையில் படமாக்கப்பட்டுள்ளது. கடைசி ஒரு காட்சியில் மட்டுமே கேமரா அறையை விட்டு வெளியே நகர்கிறது. திரைக்கதையாசிரியராக மணிமாறனுக்கும், ஒளிப்பதிவாளராக ராமனாதனுக்கும் இது கடினமானதாகத் தான் இருந்திருக்க வேண்டும். என்றாலும் இருவரும் படத்தின் சுவாரஸ்யம் குறையாமல் அமைத்திருகிறார்கள்.

டெட்ராப்ளீஜியா (Tetraplegia) எனும் வகைப் பக்கவாதத்தால் உடம்பிலுள்ள தசைநரம்புகள் பாதிக்கப்பட்டு இரண்டு கால்களும், இடதுகையும் ஏற்கனவே செயலிழந்த நிலையில், வலது கை மட்டுமே அசையும் நிலையில் உயிர்ப்புடன் உள்ளது. அதுவும் கூட ஓரிரு நாட்களில் செயலிழந்து போகலாம் என்று மருத்துவ பரிசோதனைகள் மூலம் எழுத்தாளர் தேவதச்சனுக்குத் தெரிய வருகின்றது. பல நாவல்களும், சிறுகதைகளும், பயணக் கட்டுரைகளும் எழுதி அவருக்குப் பெயர் வாங்கிக்கொடுத்த கை ஓரிரு நாட்களில் செயலிழக்க இருக்கின்றது. இதனைத் தாங்கிக்கொள்ள முடியாத மனநிலையில் தற்கொலை செய்துகொள்ள தேவ் முடிவெடுக்கிறார். அதேசமயத்தில் தனது பாதுகாப்பில் வாழும் சிறுமியின் எதிர்காலம் பற்றியும் யோசிக்கத் துவங்குகிறார். தனிமையில் வாழும் எழுத்தாளன் தனது இறுதி முடிவான தற்கொலை எண்ணத்தை – தன்னுடைய பாதுகாப்பில் வாழும் இலக்கியா (நிவேதா) என்ற சிறுமிக்கு விடுமுறை நாளின்போது ஒட்டகக் கதையின் மூலம் மறைமுகமாக உணர்த்தத் துவங்குகிறார்.

“தேவ்… Friday வே சொன்னாங்க தமிழ் மிஸ்…! Monday வரும்போது ஒரு ஸ்டோரி எழுதிட்டு வரணுமாம்… அதுவும் நான் ரைட்டர் வீட்டுப் பொண்ணாம். நான் தான் மொதல்ல கொடுக்கணுமாம்…!” என்று சொல்லிவிட்டு புத்தகத்தையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு எழுதுவதற்குத் தயாராகிறாள் இலக்கியா.

“மொதல்ல நான் கத சொல்லிட்றேன். சரின்னு பட்டா எழுது… இல்லன்னா எழுத வேண்டாம்.” என்கிறார் தேவ். தன்னுடைய கையறு நிலையையே உருவகக் கதையாகச் சொல்லத் துவங்குகிறார் தேவ்.

ஒரு பெரிய பாலைவனத்தில் ரெண்டே ரெண்டு ஒட்டகம் மட்டும் வாழ்ந்து கொண்டிருந்ததாம். ஒண்ணு பெரிய ஒட்டகம், இன்னொன்னு அதோட குட்டி. திடீரென அங்கு வெப்பம் அதிகமானதால், இரண்டு ஒட்டகமும் சேர்ந்து வேறு இடத்திற்கு இடம்பெயர முடிவெடுக்கின்றன. பெரிய ஒட்டகத்திற்கு காலில் அதிகமான காயங்கள் இருந்ததால் வேகமாக முன்னேறி நடக்க முடியவில்லை. ஆகவே சின்ன ஒட்டகத்திடம் “நீ மட்டும் தனியா போயிடு” –ன்னு சொல்லுச்சாம்.

“அவ்வளோ பெரிய பாலைவனத்துல குட்டி ஒட்டகம் எப்படி தேவ் தனியா போகும்… போயிரு போயிருன்னா எப்படிப் போகும்?” என்கிறாள் இலக்கியா.

எதையோ சிந்தித்தவாறு கதையை மேலும் தொடர்கிறான் தேவ். “என்னோட நண்பன் பக்கத்து காட்டுல தான் இருக்கான். அவன் உனக்கு வழி காட்டுவான். இருட்ட வேற ஆரம்பிச்சிடுச்சி. மணல்ல சூடு வேற கொறைய ஆரம்பிக்கும். உன்னால தனியா போக முடியும். நீ வேகமா தப்பிச்சி போயிடு”ன்னு பெரிய ஒட்டகம் குட்டி ஒட்டகத்திடம் சொல்லியதாகச் சொல்கிறான் தேவ்.

“அதுவே குட்டி ஒட்டகம்!. தனியா எப்பிடி காட்டுக்குள்ள போகும்?. வேற ஏதாச்சும் அனிமல்ஸ் அடிச்சி சாப்பிடுட்சின்னா… அதான் பயப்படுது” என்று குறுக்கிடுகிறாள் சிறுமி.

இங்கு எழுத்தாளனுக்கே உரிய புத்திசாலித் தனத்துடன் தேவ் கதையை மடைமாற்றித் தொடர்வதும், சிறுமி இடையிடையே கேள்விகளை எழுப்பி அவனை திக்குமுக்காடச் செய்வதுமாக திரைக்கதை பயணிக்கிறது. ஓரிடத்தில் அந்தச் சிறுமி கேட்கிறாள்:

“கதையில இவ்வளோ மிஸ்டேக்ஸ் வருது… உன்னப் போயி எல்லாரும் பெரிய ரைட்டர்னு சொல்றாங்க?”

இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மேலும் கதையைத் தொடர்கிறான் தேவ். தன்னுடைய இறுதி முடிவானது குழந்தையை நிர்கதியற்றவளாக மாற்றும் என்பதால், சிறுமியைப் பார்த்துக் கொள்ளும்படி தன்னுடைய நெருங்கிய நண்பர்களிடம் செல்பேசி வழியே இடையிடையே கேட்டுக்கொள்கிறான் தேவ். ஒரே நபரை ஏற்பாடு செய்யாமல், ஒவ்வொரு விஷயத்திற்கும் சிறப்பாக ஒரு நபரை ஏற்பாடு செய்கிறான் தேவ். பொழுது புலர்கிறது. தேவ் சொன்ன கதையை எழுதிக்கொண்டு சிறுமி பள்ளிக்குப் புறப்படுகிறாள்.

“தேவ் நான் கெளம்புறேன். உன்ன ச்சேர்ல உட்கார வெக்க கணேஷ் அண்ணன வரசொல்லிட்டுப் போறேன்.” என்கிறாள். கதவருகே சென்றவளை அழைக்கிறான் தேவ்.

“இலக்கியா… கனேசன உடனே வரச் சொல்லாத. ஒருமணி நேரம் கழிச்சி வரச் சொல்லு…” என்கிறான். தலையாட்டிவிட்டுச் செல்கிறாள் இலக்கியா.

வார நாட்களுக்கே உரிய தனிமையின் கோரப்பிடியில் மீண்டும் சிக்குகிறான் தேவ். தூக்கக் கலக்கத்தில் படுக்கையில் கிடக்கும் அவனிடம் சொல்லிக்கொண்டு அறையைவிட்டு வெளியேறுகிறாள் சிறுமி. கட்டிலின் அருகிலிருக்கும் மேசையிலிருந்து சவரப் பிளேடினை பற்களால் கவ்வியவாறு தனது வலதுகை மணிக்கட்டு நரம்பை தேவ் அறுத்துக் கொள்கிறான். தூரத்தில் சமுத்திரம் தெரியும் நாலு வழிப் பாதையில் – பள்ளியை நோக்கி மகிழ்ச்சியுடன் நடக்கத் துவங்குகிறாள் சிறுமி.
“காலைல எழுந்து பார்த்த குட்டி… பெரிய ஒட்டகம் செத்து போனதுலையும் ஒரு ஞாயம் இருக்குதுன்னு நெனச்சிக்கிட்டு தன்னுடைய பயணத்தை தொடங்குச்சாம்…” என்று மணிக்கட்டு நரம்பை அறுத்துக்கொண்ட தேவின் குரல் பின்னணியில் கேட்கிறது.

“அந்த ஒட்டகம் பாவமுள்ள தேவ்?” என்ற இலக்கியாவின் குரலும் கேட்கிறது.

“குட்டி ஒட்டகமா?” என்று கேட்கிறான் தேவ்.

“ஹூஹூம்… பெரிய ஒட்டகம்” என்கிறாள் இலக்கியா. சிறுமியின் கழிவிறக்கம் ஒட்டகத்தின் மீதானதல்ல என்பதை வளர்ந்த பின்பு அவள் உணரக்கூடும். அதனை உணர்த்தும் விதமாக, நான்குவழிப் பாதையின் ஓர் ஓரத்திலிருந்து எரியும் குப்பையிலிருந்து வெளிப்படும் புகையானது காற்றில் பரவ, புகையிலிருந்து விலகியவாறு இலக்கியா நடக்கத் துவங்குகிறாள்.

சர்கர நாற்காலியில் அமர்ந்தவாறும், படுக்கையில் கிடந்தவாறும் ஓர் அடிகூட அங்குமிங்கும் நகராமல் இருந்த இடத்தில் இருந்தவாறே முக பாவனைகள் மூலம் இயல்பான நடிப்பினை வெளிப்படுத்தி – தன்னுடைய கதா பாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார் ராஜாமணி. இவர் “ப்ரியாராஜ்” என்ற பெயரில் ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் துணுக்குக் கட்டுரைகள் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. (குமுதம் போன்ற இதழ்களில் எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்தை நையாண்டி செய்தவர்.) “சென்னையின் கதை (1921)” என்ற கிளின் பார்லோ எழுதிய ஆங்கில ஆவண நூலை தமிழில் மொழி பெயர்த்து பரவலான கவனத்தையும் பெற்றிருக்கிறார். அடிப்படையில் இவர் எழுத்தாளனும் என்பதால் தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை கச்சிதமாக உள்வாங்கி இயல்பாக நடித்திருக்கிறார். ராஜாமணிக்கு குறும்படங்களில் நடித்த அனுபவம் ஏற்கனவே இருக்கின்றது.

ஆனால் சிறுமி கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நிவேதாவிற்கு இதுதான் முதல் குறும்படம். என்றாலும் ராஜாமணிக்கு ஈடுகொடுத்து சிறப்பாக நடித்திருக்கிறாள். அவளுடைய உடல்மொழியும், பேச்சும், இயல்பும் திரைக்கதை கோரியிருந்த தேவதைக் கதா பாத்திரத்தை கண்முன் நிறுத்துகிறது. கருப்பு-வெள்ளை நிறமுடைய நாயைக் குறும்படத்தின் நெடுகிலும் கதை ஓட்டத்திற்கு ஏற்றார்போல பயன்படுத்தி, எழுத்தாளனின் இருள்சூழ்ந்த மனநிலையையும், தேவதை போன்ற சிறுமியின் மனநிலையையும் அழகியல் குறியீடாக வெளிப்படுத்திய அளவில் மணிமாறனைப் பாராட்டலாம். படத்தொகுப்பு, இசை, கலை இயக்கம் போன்றவையும் மெச்சும் படியாகத் தான் இருக்கின்றன. வருங்காலத்தில் இவர்களால் சிறந்த படைப்புகளைக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்தக் குறும்படம் ஏற்படுத்துகின்றது.

எழுத்து & இயக்கம்: மணிமாறன்
ஒளிப்பதிவு: ராமநாதன். SP
படத்தொகுப்பு: லோகேஸ்வரன். J
ஒலி வடிவமைப்பு: மணிகண்டன். S
பதப்படுத்தியது: ஜெகநாதன்
இசை: ஆண்டனி ஜார்ஜ்
கலை இயக்கம்: முத்துக்குமார். CK
நடிகர்கள்: பரிக்ஷா ராஜாமணி, நிவேதா

நன்றி: சொல்வனம் - இணைய இதழ்

Friday, August 16, 2013

ஆதலால் காதல் செய்வீர் – ஒரு பார்வை

நண்பர்களைப் பார்ப்பதற்காக தரமணி திரைக் கல்லூரிக்கு விசிட் அடித்துவிட்டு, மத்திய கைலாஷ் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தேன். குரோட்டன்ஸ் செடியை நூல்பிடித்து வெட்டியதைப் போல, தலையிலுள்ள சுருட்டை முடியை ஹேர்கட் செய்திருந்தார் ஒருவர். டிப் டாப்பான தோற்றத்தில் வேறு அந்த நபர் இருந்தார். நெருங்கிச் சென்று “நீங்க பழநியண்ணனோட மூத்த மகன் தானே...!” என்று கேட்டேன். 

“ஆமாங்கண்ணா...” என்றார். விசாரித்ததற்கு MSW (சோஷியல் வொர்க்) படிப்பதாகக் கூறினார்.

“பாக்குறதுக்கு ஃபேஷன் டிசைன் படிக்கறவரு மாதிரி விநோதமா இருக்கீங்க...! மாடலிங் பன்றிங்களோ...? ஹேர் ஸ்டைல் வித்யாசமா இருக்கே?” என்று கமென்ட் அடித்தேன்.

“எதுக்கு மொக்கை போடுறீங்க...?” என்பது போல மெலிதாகச் சிரித்துக் கொண்டார். பேருந்து வரவும் அவருக்கு டாட்டா காட்டிவிட்டு ஏறிக்கொண்டேன். தூரத்திலிருந்து பார்பதற்கு - புட்டபதி சாய்பாபா போல அவரது தலைமுடி புதராகத் தெரிந்தது. 


புதிதாகக் குடியேறியிருக்கும் பொன்னேரி வீட்டின் அடுத்த தெருவில் தான் பழநியண்ணன் குடும்பத்துடன் வசிக்கிறார். திரையில் அவரது மூத்த மகனின் (மோகன்பாபு என்கிற பிரசாத்) முகத்தைப் பார்த்ததும் ஆச்சர்யம் தாங்கவில்லை. பொன்னேரி பழைய பஸ் ஸ்டாண்டில், மசூதியை ஒட்டினாற் போல “பழநி கூல் டிரிங்க்ஸ்” என்றொரு சிறிய பழரசக் கடை இருக்கும். ஏறக்குறைய இருபத்தைந்து வருடங்களாக அந்தக் கடை இருக்கிறது. பழநியண்ணனுக்கு உடல்நிலை சரியில்லையெனில் மோகன்பாபுவை அங்குக் காண முடியும். அவர் தான் ஹீரோவின் கல்லூரித் தோழனாக “ஆதலால் காதல் செய்வீர்” படத்தில் நடித்திருக்கிறார். ரொம்பவும் அழுத்தமான கதாப்பாத்திரம் ஏற்றிருக்கிறார் என்றெல்லாம் சொல்ல முடியாது. இனி நல்ல கதாப்பாத்திரங்கள் அமைந்து கோலிவுட்டில் மோகன்பாபு ஜொலிக்க வாழ்த்துக்கள்.

“ஆதலால் காதல் செய்வீர்” - காதல் செய்பவர்கள் மனதளவில் மட்டுமின்றி, உடலளவில் நெருங்கி விளையாடி குஷியை அனுபவிப்பதும் சகஜம் தான். மெரீனா பீச் சென்று பாருங்கள். பெசன்ட் நகர் சென்று பாருங்கள். சென்னை செம்மொழிப் பூங்காவிற்குச் சென்று பாருங்கள். காதலர்கள் நெருக்கமாக அமர்ந்துகொண்டு ஒருவரை ஒருவர் பிசைந்து மயங்கிக் கிடப்பார்கள். அருகில் யாரேனும் கடந்து சென்றால் கூட அவர்களுக்குப் பிரச்னை இல்லை. உடல் கிளர்ச்சியை விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள். 
“தூ... இதெல்லாம் ஒரு காதலா...? ஒடம்பு சொகத்துக்கு அலையுற சனியனுங்க...! நல்ல குடும்பத்துல பொறந்ததுங்களா இதுங்க...!? உச்சி வெயில் கொளுத்துதே... சூத்து வெந்துடாது... நாதாரிங்க...” என்போம். நம்மால் செய்ய இயலாத ஒன்றை, அடுத்தவன் செய்யும் பொழுது அடிவயிற்றில் புகை கிளம்புவதும் சகஜம் தானே. அதுவுமில்லாமல் அட்டகாசமான ஃபிகர்ஸ் எல்லாம், அட்டு பசங்கக் கூட சுத்தறது ஜீரணிக்கக் கூடிய ஒன்றா என்ன?

இதே விஷயத்தை ‘ஓர் அமெரிக்கரோ! ஆங்கிலேயரோ! ஜெர்மனியரோ! அல்லது ஏதேனும் மேற்கத்திய நாட்டினரோ’ கோவா பீச்சில் - நிர்வாணக் குளியளுடன், இதழுடன் இதழ் கவ்வி முத்தமிட்டு சந்தோஷித்திருக்கும் காட்சியைக் காண நேர்ந்தால்: “என்னமா லைஃப்-அ என்ஜாய் பன்றான்யா வெளிநாட்டுக்காரன். அவனுங்களுக்கு ஒடம்பெல்லாம் மச்சம்’யா!? பொறந்தா அந்த நாட்டுல பொறக்கனும்யா” என்று ஆதங்கப்படுவோம். உலகின் எந்தப் பகுதியில் வசிப்பவராக இருந்தால் என்ன? காதலில், காம எண்ணங்கள் பீரிடுவதும் ஒரு பகுதி தானே. நமது சமூக அமைப்பு திருமணத்திற்கு முன்பு உடலளவில் நெருங்கிப் பழகுவதையும், உடலுறவு கொள்வதையும் ஒரு பெரிய சமூகக் குற்றமாகக் கருதுகிறது. அந்த உளவியல் சிக்கலைத் தான் இந்தப் படம் பேசுகிறது.

மரபான கலாச்சார வாழ்வு, யதார்த்த வாழ்வியல் முறையிலிருந்து (Life style) முரண்பட்டு விலகுவதை சுசீந்திரன் திரைக்கதையாக வடித்துள்ளார். நடுத்தர குடும்பத்து ஆணும், பெண்ணும் காதலிக்கின்றனர். மரபான கலாச்சாரப் பின்னணியிலிருந்து வந்திருந்தாலும், நபர்கள் வட்டத்தில் அவர்களது வாழ்வியல் முறை மேற்கத்திய கலாச்சாரத்தை ஒத்திருக்கிறது. “காஃபி டே, ஷாப்பிங், டின்னர்” என்று சுற்றுகிறார்கள். போலவே ‘மது அருந்துதல், டேட்டிங் செல்லுதல்’ போன்றவற்றை ‘ஃபிரண்ட்ஸ் பார்ட்டி’ என்ற ஒற்றை வார்த்தையில் கடந்து செல்கிறார்கள். இப்படிப் பட்டவர்களின் முதிர்ச்சியற்ற காதல், கவனக் குறைவான பாதுகாப்பற்ற உடலுறவு மற்றும் அது சார்ந்த பின் விளைவுகள் பற்றியே படம் அலசுகிறது.

ஹீரோவாக நடித்திருக்கும் சினிமா தயாரிப்பாளர் ஒருவரது மகன் “சந்தோஷ் ரமேஷ்” பல இடங்களில் நெருட வைக்கிறார். பார்க்கச் சகிக்கவில்லை. சில இடங்களில் கதாப்பாதிரதிற்கு கச்சிதமாகப் பொருந்திப் போகிறார். ஹீரோயின் கொள்ளை அழக்காக ஜொலிக்கிறார். இவ்வளோ அழகான பொண்ணு ஒருத்தன லவ் பண்ணா...!? எந்த பையன் தான் சும்மா இருப்பான். பூர்ணிமா பாக்கியராஜ், ஜெயபிரகாஷ் போன்றவர்கள் நடுத்தர பெற்றோர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். கேமரா, எடிட்டிங் போன்றவையும் திரைப்படத்திற்கு கைகொடுதிருக்கிறது. இந்தப் படத்தின் மியூசிக்கை “ஆஹா ஓஹோ”-ன்னு பேசுறாங்க. அதெல்லாம் சபை நாகரீகம் கருதி முகஸ்துதி செய்கிறார்கள்.

கட்டுக்கோப்பான இசையும், பாடல்களும் இருந்திருந்தால் இன்னும் கூட இந்தப் படம் முத்திரையைப் பதித்திருக்கும். பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கும். யுவன் ஷங்கர் ராஜா இந்தத் திரைப்படத்தில் தனது முக்கியத்துவத்தை உணராமல் வேலை செய்திருக்கிறார். படத்தின் கடைசியில் வரும் பாடல் ஆளையே உருக்குகிறது என்று சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது. பாலாவின் “சேது” திரைப்படத்தின் வரும் “வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா மார்ப்பு துடிக்குதடி...” என்ற கிளைமேக்ஸ் பாடலுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். அதெல்லாம் அதீத ஒப்பீடு. காட்சிகள் ஏற்படுத்தும் சலனத்தைக் கூட, இருட்டு அரங்கில் ஒலிக்கும் பாடல் ஏற்படுத்தவில்லை.

லாஜிகல் மிச்டேக்ஸ் கிடக்கட்டும். எனக்குத் தெரிந்து குறையாகப்படுவது. இந்தப் படத்தில் சொல்லிக்கொள்ளும்படி காமெடி டிராக்கே இல்லை. சுசீந்திரன் எதற்காகத் தவிர்த்தார் என்று தெரியவில்லை. ரெட்டை அர்த்த ஜோக்குகளை துணிந்து சேர்த்திருக்கலாம். (சமீபத்தில் +2 படிக்கும் மாணவர் ஒருவர் அனுப்பி இருந்த ஜோக்கை இங்கு பகிர்ந்தால் என்னுடைய உருவச் சிலையை எரிப்பீர்கள்.)

மொத்தத்தில் “ஆதலால் காதல் செய்வீர்” திரைப்படத்தை விழிப்புணர்வுப் படம் போல எல்லோரும் பகிர்கிறார்கள். கதையுடன் ஒட்டிய விஸ்தாரமான காமெடி டிராக் இல்லாததுதான் அப்படியொரு மூடினை கிரியேட் செய்கிறது போல. இது எல்லோரும் பார்க்கக் கூடிய “பீல் குட் மூவி” தான். தாராளமாக ஒருமுறை தியேட்டருக்குச் சென்று பார்க்கலாம்.

நல்ல படத்தைக் கொடுத்த இயக்குனர் சுசீந்திரன் அவர்களுக்கும், தயாரிப்பாளரான அவரது தம்பி “நல்லு ஸ்டுடியோஸ்” தாய் சரவணன் அவர்களுக்கும், பழநிய’ண்ணனின் மூத்த மகன் மோகன் பாபுவுக்கும், சில ப்ரேம்களில் வந்து சென்ராலும், நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படும் குறும்படங்களில் தொடர்ந்து முத்திரை பதித்து வரும் நடிகரான ராம் சந்திரன் அவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

Thursday, August 15, 2013

எதேர்சையான சந்திப்பு - காஞ்சிவரம் லோகு

எதிரில் வந்தவனை அப்படியே மடக்கினேன்...! முதலில், கபடியில் உள்ளிறங்கி ஆடுவதுபோல நெருங்கினேன். என்ன ஒண்ணு...! கையையும் காலையும் நீட்டி “டச்” ஒன்று தான் செய்யவில்லை.

இரண்டு மூன்று சந்திப்புகளை முடித்துவிட்டு CMBT-யில் பேருந்தைப் பிடிப்பதற்காக சாவகாசமாக சென்று கொண்டிருந்தேன். கருப்பு நிற லன்ஞ்ச் பேக் ஒரு கையில். தூரலில் இருந்து தப்பிக்க கருப்பு நிறக் குடை மற்றொரு கையில். நான்கு அடி ஆறு அங்குலம் உயரத்திற்கு மேல் இருப்பார் என்று சொல்லிவிட முடியாது. “டடக் புடக்... டடக் புடக்...” என எதிரில் வந்து கொண்டிருந்தார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு மூங்கில் குச்சி போல ஒல்லியாக இருந்தவன், பூசணிக்காய் போல உருண்டு திரண்டிருகிறான். “கண்கள்...” – இந்த ஒன்று தான் அவனை அடையாளம் காட்டியது. ஆகவே துணிந்து மடக்கினேன்.

“என்னை யாருன்னு தெரியுதா...!?”

“நீ கிருஷ்ணபிரபு தானே!?... பார்த்தியா உன் பேர கூட நான் ஞாபகம் வச்சிருக்கேன்.” என்றான்.

“அடப்பாவி... இந்த ஆயிரம் பேரு கூட்டத்துல உன்ன கண்டு புடிச்சது நான் தான்டா... உன் பேரு லோகு தானே!?...” என்றேன். “பரவாயில்லையே... ஞாபகம் வச்சிருக்க....!” என்றான்.

அதெப்படி மறக்க முடியும்?... காஞ்சிபுரம் கலக்டர் ஆபீசுக்கு எதிரில் இருக்கும் கூட்டுறவு மேலாண்மை பட்டாயப் படிப்பை ஓராண்டு காலம் தங்கிப் படித்தேன். மாலை நேரத்தில் நண்பர்களுடன் இறகுப் பந்து விளையாடுவேன். லோகநாதனும் உடன் விளையாடுவான். “சாப்பாடு, வகுப்பு, உறக்கம், விளையாட்டு” – இப்படியே நாட்கள் கடந்து சென்றது. கடைசித் தேர்வும் முடிந்தது. எல்லோரும் வீட்டிற்குக் கிளம்பினோம். உடைமைகளை பேக் செய்துகொண்டு அவரவர் இல்லங்களுக்குத் திரும்ப, என்னுடன் தங்கிய அறைத் தோழர்கள் எல்லோரும் சீக்கிரமாகவே கோ-ஆபரேடிவ் இன்ஸ்டிடியூட்டை விட்டுக் கிளம்பினோம். ஆகவே யாருடனும் அதிகமாகப் பேசமுடியவில்லை.

வீட்டு உரிமையாளரிடம் சாவியைக் கொடுத்துவிட்டு – காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த ஒரு பேருந்தில் நண்பர்கள் அமர்ந்து “ச்சே... இனிமே இந்த ஊருன்னா ஊருக்கு வரமுடியாது இல்ல... எவ்வளோ நல்ல ஊரு...” என்று பேசிக் கொண்டிருந்தோம். ஓரிடத்தில் பிறந்து, ஓரிடத்தில் வளர்ந்து, பேச்சுலராக ஓரிடத்தில் தங்கிப் படிப்பவர்களுக்குத் தான் அந்த அருமை புரியும். (வேலையின் நிமித்தம் பேச்சுலர்ஸ் லைஃப்-ஐ வாழ்பவர்களை எங்களது குரூப்பில் சேர்ப்பதில்லை.)

வியர்க்க விறுவிறுக்க லோகு ஓடி வந்து கொண்டிருந்தான். பேருந்தின் ஜன்னலில் தலையை நீட்டி “என்னடா விஷயம்...!” என்று விசாரித்தோம்.

“மச்சி... உங்க அட்ரஸ், காண்ட்டாக்ட் நம்பர் இதெல்லாம் குடுக்காம போறீங்கலேடா...!” என்றான்.

“அடப்பாவி அதுக்காடா இப்பிடி ஓடிவர...?” என்றோம்.

“பஸ்சு போயிடுச்சின்னா பிறகெப்படி வாங்குறது...!?” என்றான்.

நாங்கெல்லாம் ஒரு ஆளுன்னு, தேடிப் புடிச்சி நட்பு பாராட்டுபவர்களை எப்படி மறக்க!? அதனால் தான் சுதந்திர தினத்தன்று எதிரில் வந்தவனை அப்படியே மடக்கினேன். பரிமாறிக்கொண்ட முகவரிகளும், தொலைபேசி இலக்கங்களும் மாறி – தொடர்பற்று இருந்தோம். எனினும் காலம் எதிரெதிரே நிறுத்தி இருக்கின்றது. இப்படித்தான் எதிர்பார்க்காமல் சில விஷயங்கள் நடந்து விடுகிறது.

சுதந்திர தினம் என்பதால் கோயம்பேட்டில் ஏகப்பட்ட கெடுபிடி. பயணிகளின் உடைமைகளை சரிபார்த்துத் தான் உள்ளே விட்டார்கள். லோகுவின் கைப்பையை ஒரு பெண் போலீஸ் திறந்தார். உள்ளே காலி லஞ்ச் பாக்ஸ்சும், சில நொறுக்குத் தீனிகள் இருந்தன.

“இந்த கவர்மென்ட் வேலை பாக்குறவங்க நொறுக்குத் தீனி இல்லாம எங்கயும் நகர மாட்டாங்க போல...” என்றேன். பெண் போலீஸ் சிரித்தார். 

ஒரு வழியாக உள்ளே சென்றோம். நீண்டநேரம் பேசிவிட்டு, லோகுவினை காஞ்சிபுரம் பேருந்தில் ஏற்றிவிட்டுத் தான் ஊருக்குத் திரும்பினேன். இந்த பத்தாண்டுகளில் லோகு வக்கீலுக்குப் படித்திருக்கிறான். TNPSC தேர்வெழுதி அரசாங்க உத்தியோகத்திலும் சேர்ந்திருக்கிறான். வேலையில் சேர்ந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறதாம். சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் தான் வேலை செய்கிறானாம். என்றேனும் ஒருநாள் அவனை சிந்தாதிரிப் பேட்டை அலுவககத்தில் சென்று பார்க்க வேண்டும். இத்தனை ஆண்டுகளில் பொறுப்புள்ள ஒரு மனிதனாக மாறி இருக்கிறான்.

என்னையும் சொல்லுங்க...! வெறுமனே சும்மாத்தானே சுத்திட்டு இருக்கேன்...!

ஆனாலும், வெறுமனே ஊர் சுற்றுவதிலும் ஒரு பிரயோஜனம் இருக்கின்றது. பாருங்கள்...! பத்தாண்டுகளுக்கு முன்பு சந்தித்தவனை – இதோ அடையாளம் கண்டுகொண்டு அளவலாவிவிட்டு வந்தேன். இதெல்லாம் வெறுமனே சும்மா இருப்பதால் தானே வாய்க்கிறது.

Saturday, August 3, 2013

மௌனித்து நிற்கும் அப்பாக்கள்

சினிமாவில் கூட ஒரு தந்தையானவன், தனது மகளிடம் கண்ணியமாக (பர்ஃபெக்டா) இருக்கணும்னு எதிர்பார்ப்பவன், நல்ல விஷயங்களை தொடர்ந்து செய்யும் - வெளியுலகிற்குத் தெரியாத ஒரு கலைஞனை நாளிதழ்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பவன், இளைஞர்கள் செய்யும் வித்தியாசமான முயற்சியைத் தட்டிக்கொடுத்து ஊக்குவிப்பவன் – சொந்த வாழ்வில் தனது மகளுக்கு பாதகமாக நடந்துகொள்வானா? சில மாதங்களுக்கு முன்பு நடிகை சுகாசினி தனக்கே உரித்தான பாவனையில் மாநிறம் கொண்ட நடிகர்கள் ஹீரோக்களாக நடிப்பதை அலுத்துக்கொண்டு கருத்து தெரிவித்த போது, மேடையிலேயே தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது மட்டுமல்லாமல், இதுபோன்ற கருத்துக்களைப் பொதுமேடையில் முன் வைத்ததற்காக வருத்தத்தைப் பதிவு செய்யவில்லை எனில் “மேடையை விட்டு நான் இறங்க மாட்டேன்” என்று உணர்ச்சிவசப் பட்டார். இதையெல்லாம் மறந்துவிட்டு ஒருவரை மதிப்பிடக் கூடாது.

காதலானது சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்யும் என்பதால் காதல் சார்ந்த பிரச்னைகளுக்கு, காதலர்களுக்கு ஆதரவாக முற்போக்குவாதிகள் குரலெழுப்புகிறார்கள். உண்மையில் பாராட்டப் பட வேண்டிய விஷயம் தான். தற்போதெல்லாம் காதல் சார்ந்த பிரச்சனைகளைப் பற்றி ஊடகங்களில் நிறையவே எழுதுகிறார்கள். அதுவும் பிரபலங்கள் வீட்டுப் பிரச்சனை எனில் ஊடகங்களுக்கு இருட்டுக்கடை அல்வா கிடைத்த மாதிரிதான். அவர்களே சினிமாத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தால் – ஒரு முழம் மல்லிகைப் பூவையும் சேர்த்தே இந்த ஊடகப் பிரதிநிதிகள் வாங்கிக் கொள்கிறார்கள். அந்த அளவிற்குக் குதூகலத்துடன் எழுதுகிறார்கள். நடிகர் ரஜினி துவங்கி, இயக்குனர் சேரன் வரை நிறைய பேரை இதற்கு உதாரணமாகக் கூறலாம். பிரபலங்கள் தான் என்றில்லை - பெற்ற மகள்களுக்கு முன்னால் எப்பேர்பட்ட தந்தையும் குட்டிக்கரணம் அடித்து, தேவைப்பட்டால் கைகட்டி வாய் பொத்தி நிற்கிறார்கள் என்பது தான் உண்மை.

மகாநதி திரைப்படத்தின் ஓர் உணர்வுப் பூர்வமான காட்சி. சோனாகச்சியின் விபச்சார அறையில் தனது மகளை ஒவ்வொரு அறையாகத் தேடிக்கொண்டு செல்கிறான் சேது. விலைமகளாக அங்கங்கள் தெரிவது போலப் படுத்திருக்கிறாள் சேதுவின் (கமலஹாசன்) மகள் காவேரி. ஓர் அறைக் கதவை மெதுவாகத் திறந்து பார்க்கையில் சப்தம் எழுகிறது. ஊரிலிருந்து தேடிக்கொண்டு வந்த தந்தைதான் பின்னால் நிற்கிறார் என்பதை அறியாத மகள் மெதுவான குரலில் முனகுகிறாள்.

“தேவுடியா பசங்களா...! கொஞ்ச நேரம் ரெஸ்ட் கொடுங்களாண்டா...” – இந்த வசவைக் கேட்ட தந்தை வெடித்துக் கதறுகிறான். இந்த இடத்தில் கமல்ஹாசன் “எப்படி ஆக்ட் செய்திருப்பார்...!” என்று சொல்லித் தெறிய வேண்டியதில்லையே. அழுகைச் சத்தத்தைக் கேட்ட விலைமகளான காவேரி திரும்பிப் பார்க்கிறாள். தந்தையை அடையாளம் கண்டுகொண்ட மகள் பதறித் துடிக்கிறாள். அங்கங்கள் தெரிவதுபோல ஆடையணிந்த பதற்றம் வேறு அவளுக்கு. பணம் கொடுத்து புணர வந்தக் காமந்தர்கள் பலரையும் தாங்கிய படுக்கையின் மேல் விறித்திருந்த போர்வையை எடுத்து அங்கங்களை மறைத்துக் கொள்கிறாள் காவேரி. முகத்தை மூடிக்கொண்டு அழுகிறாள் அந்தச் சிறுமி. தந்தையான கமல்ஹாசன் பதறியடித்து ஓடி, தனது மகள் காவேரியை இரண்டு கைகளிலும் தூக்கிக்கொண்டு வேகமாக ஓடுவது போன்ற காட்சி.

தந்தையாக நடித்த கமலஹாசனின் கைகள், மகளாக நடித்த காவேரியின் வனப்பான முலைப் பகுதியின் சமீபத்தில் இருந்திருக்கிறது. இந்த காட்சியைப் பற்றிய அதிருப்தியை பலரது முன்னிலையில் ஓர் உதவி இயக்குனர் கமலஹாசனிடம் நேரிடையாகச் சொல்கிறார்.

“அதெப்படி சார்... மகளோட மார்புப் பகுதியை தொட்டாமாதிரி ஒரு அப்பா அவளைத் தூக்கிட்டு போவாரு. அது சரியா இருகாதுங்க சார்.” என்கிறார் அந்த உதவி இயக்குனர். அடுத்த நாளிலிருந்து அந்த உதவி இயக்குனர் மகாநதி ஷூட்டிங்கில் வேலை செய்யவில்லை. எளிதில் உணர்ச்சிவசப்படும் அந்த நபர் வேறு யாருமல்ல இயக்குனர் & நடிகன் சேரன் தான். காலங்கள் ஓடியதில் இயக்குனர் சேரன் “பாரதி கண்ணம்மா, ஆட்டோகிராஃப், பொற்காலம், தவமாய் தவமிருந்து” போன்ற பல செண்டிமெண்ட் படங்களைத் தமிழில் கொடுத்து பிரபலம் அடைந்தது வேறு கதை. தொழில் ரீதியாக சினிமாவில் முத்திரைபதித்த சேரனைத் தான் ஊடகங்கள் வில்லனைப் போல சித்தரிக்கின்றன. சேரனை தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசியதில்லை. ஆனால் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இரண்டு சந்தர்பங்களில் சேரனை நுட்பமாகக் கவனித்ததுண்டு. அந்த சம்பவங்களை மனதில் இருத்தி சேரனைப் பற்றி பகிர வேண்டியது முக்கியமெனப் படுகிறது.

மறுபக்கம் ஆர்.பி.அமுதன் ஓராண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய “பீ” & மயானம் சார்ந்த ஆவணப்படங்களை சென்னை பல்கலைக்கழக, தமிழ்த் துறை பவளவிழா அரங்கத்தில் திரையிட ஏற்பாடு செய்திருந்தார். வீ. அரசு தலைமையில் ‘இயக்குனர் சேரன், எழுத்தாளர் முத்துகிருஷ்ணன்’ போன்ற பலர் இந்தத் திரையிடலில் கலந்து கொண்டார்கள். சேரன் மேடையில் அமுதனைப் பாராட்டிப் பேசிக்கொண்டிருந்தார். ஆங்கில நாளிதழ் ஒன்றிலிருந்து நிகழ்வை கவர் செய்ய ஒரு புகைப்பட நிருபர் வந்திருந்தார். சேரன் மேடையில் பேசுவதை ஏதாவதொரு கோணத்தில் ஃபோட்டோ எடுக்க அந்தப் புகைப்பட நிருபர் படாதபாடு பட்டுக்கொண்டிருந்தார். சேரன் புகைப்படக் காரரின் ஃப்ரேமில் சிக்கவே இல்லை.

ஒரு கட்டத்தில் பேசுவதை நிறுத்திவிட்டு, அந்த ஃபோட்டோ ஜர்னலிஸ்டிடம் “இங்க பாருங்க Sir... என்ன எதுக்கு ஃபோட்டோ எடுக்குறீங்க? இப்போ நான் ஃபோட்டோ எடுக்கறதுக்கு விட்டுட்டேன்னா - நாளைக்கு என்னோட ஃபோட்டோவ போட்டு இந்த ஈவண்ட சும்மாவாச்சும் கவர் பண்ணிடுவிங்க. இந்த முக்கியமான டாக்குமென்ட்றிய எடுத்தது அவர் தான். அவர ஃபோட்டோ புடிச்சி பேப்பர்ல போடுங்க. அமுதனைப் பத்தி கொஞ்சம் அதிகமா கவர் பண்ணுங்க. அதுதான் ஞாயம். நீங்க என்ன தொடர்ந்து ஃபோட்டோ எடுத்திங்கன்னா – நான் பேசறத நிருத்திடுவேன்.” என்றார் ஆர்.பி.அமுதனை சுட்டிக் காட்டியவாறு. மறுநாள் காலையில் ஆங்கில நாளிதழைப் புரட்டினேன். சேரன் மேடையில் பேசுவதைப் போன்ற படம் போட்டு, நிகழ்வைப் பற்றி எழுதியிருந்தார்கள். சேரன் எதிர்பார்க்காத சமயத்தில் தூரத்தில் நின்றவாறு ஜூம் செய்து அந்தப் புகைப்படக்காரர் ஒருவேளை ஃபோட்டோ எடுத்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். என்றாலும் சேரனின் முன்யோசனையை நினைத்து சிரித்துக் கொண்டேன்.

ஒருமுறை இலக்கிய விருது நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, இரவு நேரத்தில் அசோகமித்திரன் பேருந்திற்காகக் காத்துக் கொண்டிருந்தாராம். அந்தப் பக்கமாக சேரன் வந்திருக்கிறார். "ஐயா... நீங்க இந்த நேரத்துல இங்க இருக்குறீங்களேய்யா? ஏதாவது உதவி வேனுமாங்கைய்யா." என்று கேட்டிருக்கிறார்.

"வேளச்சேரி பஸ்ல ஏத்தி விட்டுடுங்களேன்" என்று சொல்லியிருக்கிறார் அசோகமித்திரன்.

"ஐயோ... இந்த நேரத்துல எப்படிங்கைய்யா நீங்க பஸ்ல போவிங்க..." என்று தனது காரில் அசோகமித்ரனை ஏற்றி அவரது வீட்டில் இறக்கிவிடச் சொல்லியிருக்கிறார். இதனை ஆனந்த விகடனில் படித்ததாக ஞாபகம். "எவ்வளோ பெரிய எழுத்தாளர் இந்தமாதிரி தனியா உட்கார்ந்துட்டு இருந்தாரே. நம்ம பார்த்தால போச்சு. இல்லன்னா எவ்வளோ கஷ்டப்பட்டிருப்பாரு என்று அசோகமித்ரனை அனுப்பி வைத்துவிட்டு அருகிலிருந்தவர்களிடம் வருத்தப்பட்டாராம் சேரன்.

அதற்கடுத்த சந்திப்பு எதிர்பாராமல் நிகழ்ந்த ஒன்று. மியூசிகல் நாவலை வெளியிடும் ‘பாதை பதிப்பக’த்தின் அங்கத்தினரான அர்ஜூன் செல்பேசியில் அழைத்து “ரணம் சுகம்” இசை வெளியீட்டிற்கு வரவேண்டுமென்று அழைப்பு விடுத்தார். ஏ.வி.எம் பிரிவ்யூ தியேட்டரில் இசைவெளியீடு ஏற்பாடாகியிருந்தது. சென்னை புத்தகக் கண்காட்சில் ஒரேயொரு முறைதான் பாதை அர்ஜுனை சந்தித்திருக்கிறேன். பல மாதங்கள் அவருடன் தொடர்பே இல்லாமல் இருந்தது. என்றாலும் ஞாபகத்தில் இருத்தி அழைத்திருந்ததால் மறுக்க முடியாமல் சென்றிருந்தேன். “மாலை 5 மணிக்கு இசை வெளியீடு” என்ற தகவல் வந்திருந்தது. கொஞ்சம் முன்னதாக 4.30 மணிக்கே AVM preview theatre-க்குச் சென்றுவிட்டேன். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒருசில கலைஞர்கள் “ரணம் சுகம்” புத்தக ஆல்பத்திலிருந்து ஒருசில வரிகளைப் பாடிக் கொண்டிருந்தார்கள். தொண்டையில் மீன் முள் சிக்கியதால் நெளிகிறார்களோ என்பதுபோல எனக்குப் பட்டது. அடுத்த ஐந்து நிமிடங்களில் சிகப்பு நிறக் கார், பார்க்கிங்கில் வந்து என்னருகே நின்றது. காரிலிருந்து இறங்கிய லட்சணமான பெண், “அப்பா வந்துட்டாரு. கார்ல தான் உட்கார்ந்துட்டு இருக்காரு. ப்ரோக்ராம் ஸ்டார்ட் ஆகும் பொழுது சொல்லுங்க. அவர் வந்துடுவாரு.” என்று தொலைபேசியில் யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தாள். அப்பொழுதுதான் கவனித்தேன் இயக்குனர் சேரன் முன்னிருக்கையில் தவமாய் தவமிருப்பது போல உட்கார்ந்து கொண்டிருந்தார்.

பாடுபவர்களையும், வருவோர் போவோரையும் கவனித்துக் கொண்டிருந்தார். அறிமுகமில்லாத ஒருவரிடம் பேசிக்கொண்டே சேரனை கவனித்துக் கொண்டிருந்தேன். புத்தகங்களைப் புரட்டுவதும், வேடிக்கை பார்ப்பதுமென சாவகாசமாக உட்கார்ந்திருந்தார். அநேகமாக ஏதேனும் ப்ளேயர் முடுக்குவிக்கப்பட்டு பாடலும் ஓடிக் கொண்டிருந்திருக்கலாம். ஏனெனில் அவர் உற்சாகமான மனநிலையில் தான் இருந்தார். ஏறக்குறைய நாற்பது நிமிடங்கள் கழித்துத் தாமதமாகத் தான் நிகழ்ச்சியைத் துவக்கினார்கள். பொறுமையாக அமர்ந்திருந்தார். போதுமான பார்வையாளர்கள் வந்து சேரவில்லை என்பதுதான் இசை வெளியீடு தாமதமானதற்கு முக்கியக் காரணம். இதே நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த இயக்குனர் ராம், படவா கோபி ஆகிய இருவரும் நிகழ்ச்சி துவங்கிய பின்னர் தான் வந்து சேர்ந்தார்கள். முதலில் மேடையேறிய சேரன் மைக்கைக் கேட்டு வாங்கினார். நிகழ்ச்சி தாமதமானதற்காக திட்டப்போகிறார் என்றுதான் நினைத்தேன்.

“நான் ரொம்ப முன்னாடியே வந்து கார்ல உட்கார்ந்துட்டு எல்லாரையும் கவனிச்சிட்டு இருந்தேன். ரொம்ப ஓடியாடி பரபரப்பா வேலை செய்யிறிங்க. ஆடியன்ஸ் ரொம்ப கொறைவா இருக்காங்களேன்னு கவலைப்படாதிங்க. நல்ல விஷயங்களுக்கு குறைவான நண்பர்கள் தான் ஆதரவு கொடுப்பாங்க. நம்பிக்கையோட தொடர்ந்து பயணம் செய்யுங்க. உங்களோட பதிப்பகத்தின் பெயரே பாதை. இன்னிக்கி நீங்க போட்ற விதை நாளைக்கு பாதையெங்கும் மரமா, செடியா, கொடியா வளர்ந்து நிக்கும். என்னால முடிஞ்ச உதவிய உங்களுக்குப் பண்றேன். வாழ்த்துக்கள்” என்றார். (“ரணம் சுகம்” – மியூசிகல் நாவலை சேரன் தயாரிப்பதற்கு முன்வந்தார். பின்னர் அந்த ப்ரொஜெக்ட் என்ன ஆனது என்று தெரியவில்லை.)

“பாதை” இளைஞர்களுக்கு இயக்குனர் சேரன் “வாய் சவடால் விடுகிறாரோ?” என்று நீங்கள் நினைக்கலாம். சங்ககிரி ராஜ்குமார் இயக்கிய “வெங்காயம்” படம் ஒன்றிரண்டு திரையரங்குகளாவது கிடைத்து தியேட்டரில் ஓடியதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் இயக்குனர் சேரனும் ஒருவர். மூட நம்பிக்கைகளை விமர்சித்து எடுக்கப்பட்ட முற்போக்கான முக்கியமான தமிழ் படம். சேரனின் உதவி மனப்பான்மையை சங்ககிரி ராஜ்குமார் கூட நெகிழ்ச்சியுடன் சில இடங்களில் பகிர்ந்துண்டு. முற்போக்கான விஷயத்தைப் பேசிய திரைப்படம் மக்களைச் சென்று சேரவேண்டும் என்று நினைக்கும் முற்போக்கான மனிதன், தனது சொந்த வாழ்விலும் முற்போக்கான எண்ணங்கள் உடையவனாகத் தானே இருக்கவேண்டும். “எனது தந்தையால் உயிருக்கு ஆபத்து. ரவுடியைப் போல என்னுடைய காதலனைத் துரத்துகிறார்” என்று சேரனின் 20 வயது நிரம்பிய இரண்டாவது மகள் கமிஷனரிடம் புகார் கொடுத்திருக்கிறாராம்.

எனது சொந்த வாழ்விலிருந்தே சில விஷயங்களைப் பேச வேண்டியிருக்கிறது. அம்மாவின் ரத்த உறவினருக்கு நெருங்கிய சொந்தமான ஒரு வயோதிகப் பெண்மணி வீட்டிற்கு வந்திருந்தாள். அந்த அம்மணியின் பேத்திக்கு திருமணம் நிச்சயமாகியிருந்தது. அதுவும் காதல் திருமணம் என்று கேள்விப்பட்டேன். ஆகவே "ஆமா... உங்க பேத்திக்கு கல்யாணமாமே! அவங்க லவ் பன்றவருக்கே பேசி முடிட்சிட்டிங்கலாமே... ரொம்ப சந்தோசம்..." என்றேன்.

இல்லியே இது அரேஞ்ஜிடு மேரேஜ் என்ற ரீதியில் சமாதானம் பேசியவள், கல்யாணப் பெண்ணிடம் என்ன சொறிஞ்சி விட்டாலோ தெரியவில்லை. அதுவும் மாப்பிள்ளை வீட்டார் சம்ரதாயதிற்காக பெண் பார்க்க வரும் நேரத்தில் மணப்பெண்ணின் வாயைக் கிளரியிருகிறாள். சிறுவயது முதலே ஆங்கில வழியில் பயின்று என்ஜினியரிங் படித்து, பன்னாட்டு கம்பெனி ஒன்றில் உயர்தர வேலையில் இருப்பவள். சம்பவ இடத்திலில்லாத என்னை, ஊரார் முன்னிலையில் மிக மோசமாக வசவு பாடியிருக்கிறாள்.

“என்னை பத்தி பேசறதுக்கு அவனுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு? செருப்பால அடிப்பான் அவன. பொட்டப் பய(ன்). நான் இல்லாத சொல்ல என்னைப் பத்தி பேசறானா? மகளிர் போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணி அந்த பொட்டைய போலீஸ்ல புடிச்சி கொடுக்கறேன் பாரு!” என்று தரக்குறைவான வசவு மொழி வசனங்களைப் பேசி இருக்கிறாள்.

சின்ன அண்ணனிடமிருந்து செல்பேசி அழைப்பு வந்தது. எடுத்துப் பேசினேன். ஹலோ என்று சொல்லி முடிக்கும் முன்னர் "ங்கோத்தா... அவங்கள ரெண்டுல ஒன்னு பாத்துடறேன். பஜ்ஜேரிங்க நம்மள பத்தி இன்னாடா நெனட்சிக்குனு இருக்காளுங்க? முண்டைங்க..." என்று பொறிந்து தள்ளினான்.

“இன்னாடா நடந்தது?” என்றேன். "செருப்பால அடிக்கனமும்னு மத்தி (பெரிய மனுஷி) சொல்றா... பொட்டப் பயன்னு பேத்தி சொல்றா... போலீஸ்ல புடுட்சிக் கொடுக்கணும்னு சொல்றா அவளோட சித்திகாரி..." என கோவத்தில் கொக்கரித்தான் அண்ணன்.

“எப்போவ்... பொட்டன்னு சர்டிஃபிகேட் கொடுத்துட்டாங்க இல்ல. போலீஸ்ல புடிச்சி குடுத்தா லேடீஸ் செல்லுல போடச்சொல்லி ரெக்கமண்ட் பண்ணச் சொல்லு...” என்று ஒருவாராக பேசி சூழலை சமாளித்தேன். அம்மாவின் ரத்த உறவு என்பதால், என்ஜினியரிங் படித்த மணப்பெண்ணின் தகப்பனாரை அழைத்து இரண்டு தரப்பிலும் சமாதானம் பேசி பிரச்னையை முடித்தோம்.

அந்தக் கிழவி அந்தப் பெண்ணிடம் என்ன சொன்னாலோ தெரியவில்லை. என்றாலும் கோவப்பட்ட என்ஜினியரிங் மாணவி, மிகவும் கீழ்த் தரமாகப் பேசியது மட்டுமல்லாமல், போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுப்பேன் என்ற அளவில் கொதித்தெழுந்தாள். தனது காதல் திருமணத்தைப் பற்றி “யார் பேசினார்கள்? என்ன பேசினார்கள்?” என்பதை முழுவதுமாகத் தெரிந்துகொள்ளாமல், பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்து கைநிறைய சம்பாதித்து சொந்தக் காலில் நிற்கும் ஒரு பெண்ணே – காதல் சார்ந்த விஷயங்களில் குயுக்தியாக யோசிக்கும் பொழுது, எந்தவித பொருளாதாரப் பற்றுதலும் இல்லாத கல்லூரி மாணவி எடுப்பார் கைபிள்ளையாக இருந்தாலும் இருக்கலாம் இல்லையா? சாதிக்காக பெற்ற பிள்ளைகளையே கவுரவக் கொலை செய்பவர்கள் இருக்கிறார்கள் எனில், காதலித்தவர்களுக்காக எந்த விளிம்பிற்கும் சென்று பெற்றவர்கள் முகத்தில் கரியைப் பூசும் பிள்ளைகளும் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. கமிஷனரிடம் கொடுத்த ஒரு போலீஸ் கம்ப்ளைண்டை மட்டும் வைத்துக்கொண்டு சேரனை அளவிடுவது அபத்தம். அவரைப் பற்றி செய்தித்தாள்களில் காதலுக்கு எதிரான வில்லன் போல சித்தரித்திருப்பது சங்கடமாகத் தான் இருக்கிறது.

அஜயன் பாலா, சங்ககிரி ராஜ்குமார், வசந்தபாலன் போன்றோர் சேரனுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் எழுதியிருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் சேரனுடன் பழகி இருகின்றனர். ஆனால், தனிப்பட்ட முறையில் சேரன் எனக்குப் பழக்கமானவர் அல்ல. அவரைத் தூக்கிப் பிடிக்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை. இரண்டு சந்தர்பங்களில் அவருடைய இயல்பான பேச்சைக் கேட்டிருக்கிறேன். அவரைப் பற்றி நம்பத் தகுந்த தொழில்முறைத் தகவல்களையும் பகிர்ந்திருகிறேன். அதிலிருந்தே அவரை பற்றி ஒருவாறு யூகத்திற்கு வரமுடியும் என்று நினைக்கிறேன்.

தன்னுடன் பழகியவர்கள், புதியவர்கள் என்று வரும்பொழுதே அவர்களது நளன் சார்ந்து யோசிக்கிறார் எனில், ஒரு தகப்பனாக தன்னுடைய மகளின் எதிர்காலம் குறித்து எந்த அளவிற்கு யோசித்திருப்பார். ஒரு மனிதன் தகப்பனாக மௌனத்தை அடைகாத்து, சமூகத்தின் தனிமனித விமர்சனங்களை சப்தமில்லாமல் மென்று முழுங்குகிறான் எனில் அதற்கு ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். அந்த அர்த்தங்களும் தன்னுடைய மகளின் நிம்மதியான எதிர்கால வாழ்வு பற்றியதாகத் தான் இருக்கும்.

மகளின் காதலுக்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பதால் மட்டுமே, முற்போக்கான ஒரு மனிதனைப் பற்றிய எதிர்மறையான தகவல்களை இணைய ஊடகத்தில் ஒருவர் பின் ஒருவராகப் பகிர்வது எந்த விதத்திலும் ஞாயம் இல்லை. தனது மகளின் எதிர்காலம் என்று வரும் பொழுது சிலர் மௌனித்து நிற்கிறார்கள். சிலர் கொஞ்சம் போல அதிருப்தி அடைகிறார்கள். சிலர் வன்முறையைக் கைகளில் எடுக்கிறார்கள். வன்முறையைப் பிரயோகிப்பவர்கள் சார்ந்து குரல் எழுப்புங்கள். மற்றவர்களை இலக்காக வைத்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் பாவம். ஏனெனில் நமக்கும் குடும்பம் இருக்கிறது. நமக்கும் பிரச்சனைகள் இருக்கிறது. ஊடகங்கள் வேசிமைத் தனத்துடன் சம்பவங்களைப் பிரசுரித்தாலும் நாம் தான் கொஞ்சம் முன்பின் யோசித்து விஷயங்களைப் பகிர வேண்டும். அவ்வளவே...!