Saturday, June 18, 2011

அபாயத்தை நோக்கி இன்ஜினியரிங் கல்லூரிகள்

தமிழகத்தில் இந்த ஆண்டு, 65 ஆயிரம் இன்ஜினியரிங் சீட்களுக்கு மேல், காலியாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளைப் போலவே, இன்ஜினியரிங் கல்லூரிகளும் மூடல் அபாயத்தை நோக்கி முன்னேறுகின்றன.

மழைக்காலத்தில் முளைக்கும் காளான்கள் போல, தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்லூரிகள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. 2010-11ம் கல்வியாண்டு நிலவரப்படி, நாடு முழுவதும், 3,241 இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. அவற்றில், தமிழகத்தில் மட்டும், 486 கல்லூரிகள், கட்டடம் கட்டி, மாணவர்களுக்காக காத்திருக்கின்றன. அதாவது, நாட்டின் ஒட்டுமொத்த இன்ஜினியரிங் கல்லூரிகளில், 15 சதவீதம் தமிழகத்தில் தான் இருக்கின்றன. இருக்கிற கல்லூரிகளே, கட்டணம் கட்டுவதற்கு மாணவர்கள் இன்றி, ஈயோட்டிக் கொண்டிருக்கும் வேளையில், பெரிய தெரு பிள்ளையார் கோவில் பிரசாதம் மாதிரி, கேட்பவருக்கெல்லாம் புதிய கல்லூரி துவக்க அனுமதி கொடுத்துக் கொண்டிருக்கிறது ஏ.ஐ.சி.டி.இ., இந்த ஆண்டு, தமிழகத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் ஏ.ஐ.சி.டி.இ., அனுமதிக்காக காத்திருக்கின்றன. இவற்றில், 18 புதிய கல்லூரிகளுக்கு, இந்த ஆண்டு அனுமதி கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

இப்படி, தினம் ஒரு கல்லூரி உருவாவதால், அவற்றின் தரம் கேள்விக்குறியாகிவிடுகிறது. அதனால் தான், நாடு முழுவதும் உள்ள நிகர்நிலை பல்கலைக் கழகங்களின் தரம் பற்றி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு வந்தது. அதில், தரம் குறைந்த பல்கலைகளாக, யு.ஜி.சி.,யால் அடையாளம் காட்டப்பட்டவற்றில், தமிழகம் முதலிடம் பிடித்திருந்தது. அவர்களின் கணிப்புப்படி, 16 பல்கலைகள், தரத்தைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல், வெறுமனே கல்லா கட்டிக்கொண்டிருந்தவை. தமிழகத்தில் இப்போது, இரண்டு லட்சம் இன்ஜினியரிங் சீட்கள் இருக்கின்றன. ஆனால், இன்ஜினியரிங் சேர்பவர்களின் ஐந்தாண்டு சராசரியோ, வெறும், 97 ஆயிரம் தான். தொடர்ந்து நான்காண்டுகளாக, சராசரியாக, 20 ஆயிரம் சீட்கள் காலியாகக் கிடக்கின்றன. இது, அரசு ஒதுக்கீட்டு சீட்களின் எண்ணிக்கை தான். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களைச் சேர்த்தால், காலியிடங்களில் எண்ணிக்கை, 50 ஆயிரத்தைத் தாண்டும்.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம், இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்வதற்கான அடிப்படைத் தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டதற்குப் பிறகும், இந்த நிலைமை மாறாதது தான். இன்னும் சொல்லப்போனால், மதிப்பெண்கள் குறைக்கப்பட்ட பிறகு, காலியான சீட்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்திருக்கிறது. கடந்த, 2008-09ம் ஆண்டு, இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஒரு லட்சத்து, 22 ஆயிரத்து, 931 பேர் சேர்ந்தனர். அதிர்ச்சி தரத்தக்க வகையில், 2009-10ம் ஆண்டு இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து, 20 ஆயிரத்து, 74 ஆகக் குறைந்தது. அந்த ஆண்டு மட்டும் மொத்தம், 52 ஆயிரத்து, 371 சீட்கள் காலியாக இருந்தன.

கடந்த ஆண்டு, 2 லட்சத்து, 4,541 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. இந்த ஆண்டு, 2.20 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டன. ஆனால், திக்கித் திணறி ஒரு லட்சத்து, 70 ஆயிரம் விண்ணப்பங்களைத் தான் விற்க முடிந்தது. கடந்த ஆண்டை விட, 34 ஆயிரம் விண்ணப்பங்கள் குறைவாக விற்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் பார்க்கும்போது, நிச்சயமாக இந்த ஆண்டு, 65 ஆயிரம் சீட்கள் காற்றாடும் என எதிர்பார்க்கலாம். இதே மாதிரி தான், புற்றீசல்கள் போல ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் துவக்கப்பட்டன. என்னமோ, ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கெல்லாம், தங்கத் தாம்பாளத்தில் அரசு வேலை காத்திருப்பது போல, எஸ்.எஸ்.எல்.சி.,யிலும், பிளஸ் 2விலும் நல்ல நல்ல மதிப்பெண் பெற்றவரெல்லாம், ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தனர்.

பயிற்சிக் கல்லூரிக்கான எந்தக் கட்டமைப்பும் இல்லாமல், வெறுமனே நான்கு சுவர்களை மட்டும் கட்டி, பிழைப்பு நடத்தியவர்கள் எல்லாம் உண்டு. அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது, அங்கே, இங்கே நான்கு கம்ப்யூட்டர்களைக் கடன் வாங்கி, பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு ஆசிரியர் வேஷம் போட்டு, அதிகாரிகளைக் கவனித்து, அனுமதியைத் தொடர்ந்தவர்கள் ஏராளம். அவற்றின் நிலைமை, தற்போது பல்லிளித்துவிட்டது. 26 ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் உரிமத்தை, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை ரத்து செய்துவிட்டது. 54 கல்லூரிகள், "போதுமடா சாமி' என, தாங்களாகவே இழுத்து மூடிவிட்டன.தரம் குறைந்த நிறுவனங்களை அரசு அதிகாரிகள் அனுமதிப்பதும், எந்த முன்யோசனையும் இல்லாத மாணவர்கள், ஏதேனும் ஒரு, "டுபாக்கூர்' கல்லூரியில் சேர்ந்து, எதிர்காலத்தைத் தொலைப்பதும் தான், இதற்கெல்லாம் காரணம். கிடுக்கிப்பிடியை இறுக்காவிட்டால், இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கும் இதே கதி தான் ஏற்படும்.

- ஆர்.ரங்கராஜ் பாண்டே -

நன்றி: தினமலர் நாளிதழ்

Saturday, June 4, 2011

வகீசன் - கனடா இசையமைப்பாளர்

தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை பல வருடங்களாக பார்ப்பதே இல்லை. நேரமும் பொறுமையும் இல்லை என்றாலும், எல்லாவற்றிலுமே ஒரு நாடகத்தன்மை இருப்பதே அவைகளைத் தவிர்ப்பதர்க்கான முக்கியக் காரணம்.

"தற்போது பாடக் கூடிய 1% இளம் பாடகர்கள் தான் நம்பிக்கை அளிக்கிறார்கள். மீதமுள்ள 99% நபர்கள் மேடையை அலங்காரம் செய்வதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். இந்தப் போக்கு ரொம்பவும் வருத்தம் அளிக்கிறது" என்று SPB தனது நேர்முகத்தில் ஒருமுறை பகிர்ந்துகொண்டார். அவற்றை நிரூபிப்பது போலவே இருக்கிறது இதுபோன்ற நிகழ்ச்சிகள்.

முன்னேறிய நாடுகளில் தஞ்சம் அடைந்த ஈழத் தமிழர்கள் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொள்கிறார்கள் என்பதால் சமீப காலமாக விஜய் டிவி பார்த்து வருகிறேன். நான் பார்க்கத் துவங்கியபோது கனடா, சிங்கப்பூர், நியுசிலாந்து போன்ற நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் திறமையை நிரூபித்துக் கொண்டிருந்தார்கள்.

பால் வடியும் முகம், குழந்தைத் தனமான உடல் மொழி, பாடும்பொழுது மட்டும் அபரிமிதமான ஆற்றலை வெளிப்படுத்தும் தன்மை - என்று சாய் ஈசன் சற்றே என்னுடைய கவனத்தை ஈர்த்தார். பதின் பருவத்தில் இருப்பதால் என்னுடைய செல்லப் பிள்ளை என்று கூட சொல்லலாம். பள்ளி படிப்பைக் கூட பாதியில் நிறுத்திவிட்டு, தனியார் தொலைகாட்சி நடத்தும் பாடல் போட்டியில் கலந்து கொள்வதற்கு நிறையவே தைரியம் வேண்டும். இசைதான் வாழ்க்கை என்ற முடிவை எடுக்காமல் இது சாத்தியம் ஆகாது. அதற்கு மேல் பெற்றோர் மற்றும் உடன் பிறப்புகளின் தாங்குதல் இல்லாமல் கலைப் பயணம் இனிமையாக அமையாது.

சாய் ஈசன் பற்றிய சுய தகவல்கள் இணையத்தில் கிடைக்கிறதா என்று தேடியபொழுது வக்கீசன் வலையில் சிக்கினார். இவர் சாய் ஈசனின் சகோதரர்களில் ஒருவர். "சரிகா" என்ற இசைக் கல்லூரியின் முதல் பட்டதாரி மாணவர். கனடாவில் எடுக்கப்பட்ட "மதி" என்ற தமிழ் படத்தின் பின்னணி இசையமைப்பாளர். அதைத் தொடர்ந்து "என் கண் முன்னாலே", "பாரதம்" போன்ற தயாரிப்பில் இருக்கும் படங்களுக்கும் இசைப் பங்களிப்பு செய்து கொண்டிருக்கிறார்.

நேரம் எடுத்து படத்தையும், இசைக் கோர்வையையும் கவனிக்க வேண்டும்.

:-)

மதி - கனடா தமிழ் படம்

Part - 1
Part - 2
Part - 3
Part - 4
Part - 5
Part - 6
Part - 7
Part - 8
Part - 9
Part - 10
Part - 11

கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர்கள் தங்களுடைய முயற்சிகளில் ஏதோ செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை சற்று உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

Tecmaztars