Saturday, April 20, 2013

கௌரவம் – திரை விமர்சனம்


சொன்னால் நம்ம மாட்டீர்கள்!. அந்த செலெப்ரிட்டி தமிழ் எழுத்தாளர் காதல்மணம் புரிந்தவர் தான். கடுமையான உழைப்பால் சமூகத்திலும் தலை நிமிர்ந்து வாழ்பவர் தான். காலம் கனிந்தது, எழுத்தாளரின் மகனும் தனது தோழியைக் காதலித்திருக்கிறார். தமிழ் படைப்பாளியான தனது தந்தையிடம் ஒரு பெண்ணின் மனதைத் திருடிய விஷயத்தைச் சொல்கிறார். சந்தோஷப்பட்டு விசாரித்த எழுத்தாளருக்குக் கோவம் பொத்துக்கொண்டு வருகிறது. ‘இந்தக் காதலை ஏற்க மாட்டேன்’ என்று பிடிவாதம் பிடிக்கிறார். காதல்மணம் புரிந்தவரே காதலுக்கு எதிரியா? என்று புருவத்தை உயர்த்தலாம். காரணம் வேறொன்றும் இல்லை. அந்தப் பெண் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் என்பது மட்டும்தான். தந்தையோ! மகனோ! – இதனை வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஆனால் இருவருக்கும் இடையே பனிப்போர் நடந்தது. மறுபடியும் காலம் கணிந்தது. இளைய தலைமுறை தான் வென்றது. வேறு வழியில்லாமல் தந்தையின் ஆசீர்வாதத்துடன் கல்யாணம் விமரிசையாக நடந்தது. எழுத்தாள வாரிசின் நண்பர்கள் சிலர் கிசிகிசு பாணியில் இதனை என்னிடம் பகிர்ந்ததுண்டு. சமூகத்தால் மெச்சப்படும் படித்தவர்களின் லக்ஷனமே இதுதான் எனில் கிராமங்களில் நடக்கும் பிரச்சனைகளைக் கேட்க வேண்டுமா? (யார் அந்த எழுத்தாளர்? யார் அந்த வாரிசு? என்பதெல்லாம் தேவையில்லாதது. பிரச்சனை பொதுவில் வெடிக்காதவரை முக்கால் உண்மைகளும் கிசுகிசுக்கள் தான்.) 

எனது ஊர் சென்னையிலிருந்து சொற்ப தொலைவில் தான் உள்ளது. இன்றும் கூட பிராமணர்களுக்கு ஒன்று, மேல் சாதிக்காரர்களுக்கு ஒன்று, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒன்று, கிருத்துவர்களுக்கு ஒன்று என (இரண்டு மாதத்திற்கு ஒரு பிணம் என்ற கணக்கில்) ஆயிரத்திற்கும் குறைவாக மக்கள் வசிக்கும் கிராமத்தில் நான்கு சுடுகாடுகள் உள்ளன. “ஓ... கிருஷ்ணபிரபு, இதென்னக் கொடுமை... சென்னைக்குக் கிட்டக்க வசிக்கிற... இப்படி எல்லாம் கூடவா இருக்கு...?” என நவநாகரீக நகரத்தில் வசிப்பவர்கள் கேட்கலாம். ஆனால் இதுதான் உண்மை.

சில நாட்களில் காலை ஐந்து மணிக்கு முழிப்புத் தட்டிவிடும். தேநீர் பருக வெளியில் எழுந்து செல்வேன். எனது தெருவில் வசிக்கும் பலரும் டீக் கடை மர மேசையில் அமர்ந்திருக்க, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் ஓரமாக அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருப்பார்கள். ஒருவரை ஒருவர் ஓட்டிக்கொண்டு அன்யோன்யமாக பேசிக் கொண்டிருப்பார்கள். ஆனால் “நீ அங்கதான் (தரை) இருக்கணும், நான் இங்க தான் (மேசை) இருக்கணும்...” என்ற டீலிங் அவர்களுக்குள் இருப்பது அப்பட்டமாகத் தெரியும்.

எனது தெருவில் வசிக்கும் பலரும் அரசியலில் இருக்கின்றனர். அவர்களைத் தேடிக்கொண்டு வீட்டிற்குப் பலரும் வருவார்கள். யாரும் பெயரைச் சொல்லி “அவர் இருக்கிறாரா?” என்று கேட்க மாட்டார்கள். “மாமா... இருக்காரா..? தல இன்னா பண்ணிக்குனு இருக்கு...?” என்று தான் ஆரம்பிப்பார்கள். (வார்டு மெம்பருக்கே, கௌன்சிலருக்கே - ‘தல கில’ன்னிக்குனு என்று கோவம் வரும்.) நானும் “இருக்காரு... இல்லன்னு...” சொல்லி அனுப்பிச்சிடுவேன். வந்ததவர்கள் சென்றதும் வீட்டிலுள்ள பெண்களில் சிலர் எப்பொழுதாவது முனுமுனுப்பார்கள்: “பத்துஜாதிக் காரனுக்கும் இவங்கலெல்லாம் மாமன் மச்சான். பழகறதுல ஒரு மொற வேணாம்...!” என்பார்கள். “ச்சே... உங்க ஸ்ட்ரீட் & ஃபேமிலி மெம்பர்ஸ் இவ்வளோ மோசமா?” என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இதுதான் உண்மை.

“அங்க பாரு...!” என இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்ற ஒரு தம்பதியினரை அம்மா சுட்டிக் காட்டினாள். சுதாரித்து பார்ப்பதற்குள் அவர்கள் வேகமாகச் சென்று விட்டார்கள். “ஆமா... அவங்க யாரு...?” என்று கேட்டேன்.

“அந்தப் பையன் பக்கத்தூரு மோலியார் ஊட்டுப் பையன். அந்தப் பொண்ணு நம்மூரு காலனிதான். ரெண்டு பேரும் காதலிச்சாங்களாம். வயித்துல கொழந்தையக் கொடுத்துட்டு இருக்கான். அப்புறம் கல்யாணமும் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னானாம். காலனி பசங்க ஒண்ணா சேர்ந்து தோப்புல கட்டி போட்டு அடிச்சி பின்னி இருக்காங்க...! அப்புறந்தான் கல்யாணம் கட்டிக்க சமதிச்சானாம்...” என்றாள். இது உண்மையோ கட்டுக்கதையோ தெரியவில்லை. ஆனால் காதலித்த மேல்சாதிப் பையனும், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணும் சந்தோஷமாக வாழ்கிறார்கள். இதுவே மேல்சாதிப் பெண்கள் - தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆண்களைக் காதலித்தால் பிரச்சனை வேறு ரூபம் எடுக்கிறது. கடந்த ஓராண்டுகளில் எனது தாலுக்காவில் நடந்த ஒருசில விஷயங்களையே இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். பெரும்பாலும் நாளிதழ்களின் மாவட்டச் செய்தித் துணுக்குகளில் வந்த பெட்சிச் செய்திகளைத் தான் இங்கே பகிர்கிறேன். வெளிவராத விஷயங்கள் அநேகம் இருக்கலாம்.

அப்பாவின் நெருங்கிய உறவினர் ஒருவரின் மகள் கல்லூரியில் படிக்கிறாள். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவருடன் அவள் தலைமறைவாகிவிட்டாள். இதனைக் கேள்விப்பட்ட அவளின் தந்தைக்கு அதிர்ச்சியில் கைகால் விழுந்துவிட்டது. போலவே, பிரசித்திப் பெற்ற தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த ஒரு மேல்சாதி வகுப்பைச் சேர்ந்த உயர்நிலைப்பள்ளி மாணவி, வேன் ஒட்டுனருடன் ஓடிவிட்டாள். அந்த மாணவியின் குடும்பத்தாரை விட அதிகம் கவலைப்பட்டது பள்ளி நிர்வாகம் தான். இந்தச் சம்பவத்தால் பள்ளியின் பெயர் கெட்டுவிடுமோ என பிரச்சனையைப் பூசி மொழுகிவிட்டார்கள். காதலர்கள் சேர்ந்து வாழ்கிறார்களா என்பது தெரியாது.

அடுத்த சம்பவம் சற்று துர்துஷ்ட வசமானது. மேல்சாதிப் பெண் ஒருத்தி, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவனைக் கல்யாணம் செய்துகொண்டு கிராமத்திற்கு வருகிறாள். பெண்ணின் தந்தைக்கு கோவம் தலைக்கேறுகிறது. “ஆய்.... உன்ன வெட்டிப் பொத்தைக்கிறேன் பாரு...” என அரிவாளை எடுத்திருக்கிறார். சுற்றிலும் இருந்தவர்கள் அவரைத் தடுத்திருக்கிறார்கள். வீசிய அரிவாள் எசக்கு பிசக்காக அந்தப் பெண்ணின் கழுத்தில் பட்டு கீறல் ஏற்படுகிறது. உடனே பதறி அடித்து போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று தந்தையின் மீது கொலை முயற்சி புகார் கொடுக்கிறார் அந்தப் பெண். போலீசாரும் அவர் மீது FIR போட்டு உள்ளே தள்ளுகிறார்கள். நீதிமன்றமும் அவருக்குக் கடுங்காவல் தண்டனை அளிக்கிறது. சுற்றிலும் ஆட்கள் இருந்து தடுக்கவும் அந்தப் பெண் சிறு கீரளுடன் தப்பித்தாள். இல்லையெனில் அது உணர்வெழுச்சியால் நடந்த கொலையில் தானே முடிந்திருக்கும்.

இதுபோன்ற ஓர் உணர்வெழுச்சி கொலை சம்பவத்தை, மர்ம முடிச்சுடன் அவிழ்த்து புரட்சியின் மூலம் வெளிக்கொணரும் திரைக்கதை ஆக்கமே “கௌரவம்”. இதனை எப்படி கௌரவக் கொலையில் சேர்க்கிறார்கள்? என்று தெரியவில்லை. இதனை கௌரவக் கொலை என்றால், “காதலி தன்னை நிராகரிக்கிறாள், இவளை என்னைத் தவிர வேறு யாரும் அனுபவிக்கக் கூடாது!” போன்ற மனச் சிக்கல்களால் இளைஞர்கள் செய்யும் வக்கிர ஆணாதிக்கத் தாக்குதல்களும் கௌரவக் கொலையில் தானே அடங்கும் என்ற சிக்கல் எழுகிறது.கதைப்படி ஊரைவிட்டுக் காதலனுடன் புலம்பெயர நினைக்கும் தங்கை, அசகுபிசகாக விதியின் விளையாட்டால் மேல்சாதி அண்ணனிடம் மாட்டிக் கொள்கிறாள். ரகசிய இடத்தில் பேசி சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்துச் செல்லத்தான் அண்ணன் கோவத்துடன் பேசுகிறான். ஆனால் எதிர்த்துப் பேசும் தங்கையை கோவத்தில் வெட்டி வீசுகிறான் அண்ணன். காதலனையும் வெட்டி இருவரையும் ஒன்றாகச் சேர்த்து புதைத்து விடுகிறார்கள். இந்த வக்கிர சம்பவத்தை இழையாகக் கொண்டதுதான் நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரித்து, ராதாமோகன் இயக்கியுள்ள கௌரவம் திரைப்படம். கௌரவக் கொலைகள் சார்ந்த உண்மையானப் புரிதலுடன் தான் “இந்தப் படம் கௌரவக் கொலைகளைப் பற்றிப் பேசுகின்றது” என ப்ரமோட் செய்கிறார்களா என்று விளங்கவில்லை. கௌரவக் கொலை என்பது தெளிவாக - நிதானத்துடன் – திட்டமிட்டுக் கூட்டமாகச் செய்யும் வகையில் சாரும். அது வீட்டின் நான்கு சுவர்களுக்குள்ளும் நடக்கிறது. நீதிமன்ற வாசலிலும் நடக்கிறது. இதற்கெல்லாம் நம்மிடம் வரலாறும் இருக்கிறது.

ஹரிச்சந்திரன் கட்டிய கழுத்துத் தாலி போல, ‘நம்பிக்கை இருக்கிறதோ? இல்லையோ?’ ஏதோ ஒரு லாப நட்ட கணக்கைச் சரி செய்வதற்காக சாதியச் சான்றிதழை யாரும் பார்க்காத வண்ணம் கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டுதான் இந்தியப் பிரஜைகள் அனைவரும் திரிகிறோம். சாதியைத் தீவிரமாக எதிர்பவர்கள் கூட சாதியச் சான்றிதழை வைத்துக் கொண்டுதான் எதிர்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையிலோ அல்லது சென்னையை ஒட்டிய விரிவாக்க நகரங்களிலோ சாதியம் சார்ந்த வெளிப்படையான ஒடுக்கு முறைகள் இல்லை என்பது போன்ற தோற்றத்தை நவநாகரீக கலாச்சாரம் அளிக்கலாம். நீர் பூத்த நெருப்புப்போல சாதி எல்லா இடங்களிலும் இருக்கிறது. பத்திரிகை தொழில் முதல் பில்லியர்ட்ஸ் விளையாடும் மைதானம் வரை இருக்கிறது. என்றாலும் கிராமங்களில் அது வெளிப்படையாகவே இருக்கிறது. வட தமிழகத்தைக் காட்டிலும், தென் தமிழகத்தில் இந்த ஒடுக்குமுறை தலைவிரித்து ஆடுகிறது. சமயத்தில் கௌரவக் கொலையிலும் சென்று முடிகிறது.

தொழில் தொடங்கும் முனைப்பில் படத்தின் ஹீரோ தென்தமிழகம் செல்கிறார். மீண்டும் அவர் விமானத்தில் சென்னைக்குத் திரும்ப வேண்டும். ஃபிளைட் கேன்சல் என்பதால், தமிழகத்தின் புவியியல் வரைபடத்தில் இல்லாத, அதேசமயத்தில் தன்னுடன் என்ஜினியரிங் படித்த ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த நண்பன் ஒருவனின் சிற்றூருக்குச் செல்கிறார். தன் நண்பனைப் பற்றிய விவரங்களை ஊரார் சொல்ல மறுக்கிறார்கள். மாயமான நண்பனின் சித்தப்பா மட்டுமே உதவ முன்வருகிறார். தன் நண்பன் மேல்சாதிப் பெண்ணைக் காதலித்து, அந்தப் பெண்ணுடன் ஊரைவிட்டே வெளியேறிவிட்டான் என்ற செய்தி மட்டுமே அவர் மூலமாகக் கிடைக்கிறது.

‘என் பையன எப்படியாவது கண்டுபுடுச்சி கொடுப்பா...’ என்று நண்பனின் அப்பா, ஹீரோவின் காலில் விழ எத்தனிக்க, ஹீரோவும் அந்த முயற்சியில் தீவிரமாக இறங்குகிறார். இதற்கு பக்கபலமாக இருப்பது அந்தப் பகுதியில் பொதுவுடைமைவாதியாக இருக்கும் நாசரின் மகள். இவர் சட்டம் படித்தவர் என்பதால் பல விஷயங்களில் ஹீரோவுக்கு உதவியாக இருக்கிறார். ஊரைவிட்டு மாயமான நண்பனைத் தேட பல முயற்சிகள் எடுக்கிறார்கள். பல எதிர்ப்புகள், மிரட்டல்கள் என அனைத்தையும் தாண்டி தன்னோடு படித்த கல்லூரி நண்பர்கள் எல்லோரையும் ஒன்றிணைத்து அந்த கிராமத்தில் உண்மையை வெளிக்கொண்டுவரப் போராடுகிறார்கள்.

பத்திரிக்கை, தொலைக்காட்சி என செய்தி நாடெங்கும் பரவி கவனத்தை ஈர்க்கிறது. ஆனால் நண்பன் கொல்லப்பட்டது ஆட்டிசம் பாதித்த சிறுவன் வரைந்த நுணுக்கமான ஓவியத்தின் மூலம் தெரிய வருகிறது. ஊரைவிட்டு வெளியேற நினைத்த காதல் ஜோடிகளை வெட்டிக் கொலைசெய்து பாழடைந்த பேய் கோவிலின் அருகில் புதைத்துவிட்ட உண்மை தெரியவருகிறது. அதை செய்தது யார் என்பதும், அந்த கொடூர குற்றத்தை செய்தவர்களின் முடிவு என்ன என்பதும் தான் படத்தின் முடிவு.

ஆட்டிசம் பாதித்த சிறுவன் இரவு நேரத்தில் தனியாகச் சென்று வேறெங்கும் தங்குவானா? என்ற கேள்வி முதலில் எழுகிறது. அதுவும் பேய் கோவில் என்றழைக்கப்படும் இடத்தில் அவன் தங்குவது தெரிந்தும், அவனுடைய உறவினர்கள் சாதாரணமாக விட்டுவிடுவது எப்படி?. “இவனுக்குப் பேய் பிடித்துவிட்டது” என குழந்தையை மென்மேலும் சித்திரவதை தானே செய்வார்கள்? போலவே, படத்தின் ஓரிரு காட்சிகளில் அமானுஷ்ய மனிதராக காலனியில் சுற்றிக்கொண்டிருக்கும் சித்தர் கதாப்பாத்திரமும் படத்தில் ஒட்டாமல் துருத்திக் கொண்டு நிற்கிறது. அட்டவணை சாதிகள் (Schedule Castes) மற்றும் பழங்குடி(யின) மக்கள் (Schedule Tribes) மீதான தீண்டாமைக் கொள்கைகளை இந்து-வர்ண தத்துவ சமயங்கள் தான் வளர்த்தெடுத்திருக்கிறது. சித்தர் எனில் காவி உடை அணிந்த சந்நியாசி போன்றத் தோற்றத்தில் தான் இருக்க வேண்டுமா? அந்த சித்தருக்கு ஏன் இந்துத்துவ அடையாளம் பூச வேண்டும்? சாதாரண ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களில் சித்தர்களும் தோன்றி இருக்கிறார்களே. கதாநாயகனாக நடித்த அல்லு சிரிஷ்-க்கு (அல்லு அர்ஜுனாவின் தம்பி) இது முதல் படம் என்பதால் வேறொன்றும் சொல்லுவதற்கில்லை. கதாநாயகியும் பெரிதாக ஒன்று ஈர்க்கவில்லை. மற்ற நடிகர்களுக்கும் பெரிதாக வேலை ஒன்றும் இல்லை. ராதாமோகனின் படங்களில் குமாரசாமி நல்ல முறையில் பயன்படுத்தப்படுவார். இந்தப் படத்திலும் பல இடங்களில் ரசிக்க வைக்கிறார்.

எஸ்கர்ஷன் செல்லும் இடங்களில் சந்திக்கும் சாகசப் பயணமாகத் தான் முழுத் திரைக்கதையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நடைமுறை சாத்தியம் தானா? என்ற கேள்வியும் எழுகிறது. போலவே, கிராமத்தில் வசிப்பவர்கள் அறியாமையில் வாழ்பவர்கள் என்ற சித்திரம் படம் முழுவதும் விரவிக் கிடக்கிறது. படத்தில் காட்சிப்படுத்தியது யதார்த்த கிராமமே இல்லை. ஆட்டிசம் பாதித்த சிறுவனைத் தவிர வேறெந்த சிறுவனையும் படத்தில் காணவே இல்லை என்பதும் குறையாகப் படுகிறது.

மேல்சாதிக்காரர்கள் அனுப்பும் ரவுடிகள், கிராமத்தில் புகுந்து ஊரையே சூறையாடும் பொழுது ஒருவர் கூட எதிர்த்து அடிக்காமல் அடிவாங்கிக் கொள்வது ஆச்சர்யத்தையே ஏற்படுத்துகிறது. அந்த ஊரில் இளைஞர்களே இல்லையா? என்ற வியப்பு மேலிடுகிறது. ஆனால் ஹீரோவும், அவருடைய நண்பரும் தன்னை எதிர்க்கவரும் நான்கு ரவுடிகளை அடித்துத் துரத்துகின்றனர். இதுபோன்ற காட்சிப்படுத்தல்களால் தான் முக்கியமான திரையாக்கமாக கவனிக்கப்பட வேண்டிய படம் கமர்ஷியல் பட்டியலிலும் சேர்க்கிறது.

“சென்னை போன்ற நகர்புறங்களில் ஜாதிய வகைப்பாடுகள் இல்லை” என்பதை வசனத்தின் மூலம் நிறுவ ராதாமோகன் முயன்றிருக்கிறார். இது முற்றிலும் புரட்டு. சென்னை போன்ற நகரங்களில் சகமனித அக்கறையே இல்லை எனும்பொழுது, மனிதம் சார்ந்த சாதிய வகைப்பாடுகளில் அக்கறை இல்லை என்பதை நேர்மறையாக எடுத்துக்கொள்ள இயலாது. பக்கத்து வீட்டில் யார் வசிக்கிறார்கள் என்பதைக் கூட தெரிந்துகொள்ள விரும்பாத பொருளாதாரம் அழுத்தும் இயந்திர வாழ்க்கையைத் தான் இந்த மக்கள் வாழ்கிறார்கள். சென்னையில் “முதலியார் தெரு, நாயக்கன் தெரு, செட்டி தெரு” என இன்றளவிலும் சாதியப் பெயர்களை அடைமொழிகளாகக் கொண்ட சாலைகளும், நிழற்சாலைகளும் இருக்கிறது. சில வீடுகளில் “பிராமணர்களுக்கு மட்டும், அசைவர்களுக்கு மட்டும், சைவர்களுக்கு மட்டும்” என்ற அளவில் தான் வீடுகள் கூட வாடகைக்குக் கிடைக்கும். அடிமட்டத் தொழிலாளி சரவணபவனில் பணம் கொடுத்து சாப்பிட்டுவிட்டு ஹாயாக வெளியில் வருவதால் சாதியம் சார்ந்த சமூக ஒடுக்குமுறை நகரங்களில் இல்லையென்று சொல்லிவிட முடியாது. சாக்கடையைச் சுத்தம் செய்யும் எந்தத் தொழிலாளியும் மைலாப்பூர் அக்ரஹாரத்திலோ அல்லது அல்ட்ரா மார்டன் அப்பார்ட்மென்டிலோ உள்ளே சென்று வீட்டு உரிமையாளருடன் பேச முடியுமா? துப்புரவுத் தொழிலாளர்கள் சரவணபவனில் உள்ளே சென்று சாப்பிட அனுமதிக்கப்படுவார்களா? நகரங்களில் தீண்டாமை இல்லை என்பது முழுப் பொய். ஆனால், எளிய கதாப்பாத்திரத்தின் மூலம் இந்த உண்மையை திசைதிருப்ப ராதா மோகன்முயல்கிறாரோ என்ற ஐயம் எழுகிறது. தொழிலாலும், பொருளாதார வசதியாலும் பிளவுபட்ட மனித சாதிகள் எல்லா இடங்களிலும், எல்லா காலங்களிலும் இருக்கிறது.

குடும்பத்து உறுப்பினர்கள் மற்றும் சாதியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் காதல்மணம் புரிந்தவர்கள் எங்கு வாழ்ந்தாலும் தேடிக் கண்டுபிடித்து சாதிய கட்டுக்கோப்பைப் பாதுகாக்கக் கொடுக்கும் நரபலிதானே கௌரவக் கொலை. இல்லாத ஊரினை உருவாக்கியதுபோல, இல்லாத சாதியின் பெயரை புதிதாகக் கண்டுபிடித்து அதன் கட்டுக்கோப்பில் ஓர் அழுத்தமான திரைக்கதையை உருவாக்கி இருக்கலாம். தான் எடுத்துக் கொண்ட விழுமியமான கௌரவக் கொலைகள் பற்றிய முக்கியமான பிரச்னையை அழுத்தமாகப் பதிவு செய்ய ராதாமோகன் தவறி இருக்கிறார். இதில் இயக்குனரை குறை சொல்வதிலும் ஞாயம் இல்லை. “சாதியம் கூடாது, சாதியம் சார்ந்த வன்முறைகளும் கொலைகளும் கூடாது” என்ற கருத்தினைப் பதிவு செய்யும் படைப்பாளிகள் சாதிய அமைப்பகளுக்கு பயந்து, நீர்த்துப் போகும் அவல நிலைதான் சமூகத்தில் இருக்கிறது. எந்தச் சாதியாலும் திரைப்படம் வெளிவருவதில் பிரச்சனை இருக்கக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுடன் முழுத் திரைக்கதையும் அமைக்கப்பட்டுள்ளது அப்பட்டமாகத் தெரிகிறது. அதுவே படத்தின் பலவீனமாகவும் அமைகிறது.

ஐம்பது வருடங்களுக்கு முன்பு ஆந்திர நாயுடு சமூகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் எனது கிராமத்திற்கு வருகிறது. விவசாய நிலங்களைக் குத்தகை எடுத்து பிழைக்க வந்த குடும்பம் அது. அந்தக் குடும்பத்துப் பெண், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவரைக் காதல் செய்து, திருமணமும் செய்துகொண்டு அதே ஊரில் வசிக்கிறார்கள். காலம் கனிந்து வாரிசுகளும் தோன்றுகிறார்கள். நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அந்தப் பெண்ணை தலைமுழுகி விடுகிறார்கள். இந்தத் தம்பதிகளின் ஒரு வாரிசின் மனைவிதான் இன்று எங்கள் ஊரின் தலைவி. நல்லவைக்கும் சரி, தீயவைக்கும் சரி - எல்லா கிராமங்களிலும் சராசரி வரலாறு இருக்கிறது. அதனை நேர்மையுடன் பதிவு செய்வது மிக முக்கியம்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது... “லவ் பண்ணி கல்யாணம் செஞ்சிக்கினானே...!” தனது ஆசைத் தம்பி என்று ஒருவார காலம் அன்ன ஆகாரம் இன்றி வெறும் தண்ணீரை மட்டுமே குடித்து பட்டினிக் கிடந்தவள் தான் எனது தாயார். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் எவ்வளவோ மாறிவிட்டாள். உறவுகளில் எந்தப் பிள்ளையாவது காதல் மணம் புரிந்துகொண்டாலோ! அல்லது காதல் பற்றிய பேச்சு எழுந்தாலோ!, “அந்தக் காலமா இது...? அவங்கவுங்க வாழ்கய அவங்கவங்க பாத்துக்கற காலம் இது... அதெல்லாம் சேர்த்து வச்சிடுங்க... சந்தோஷமா இருக்கட்டும்...” என்று கூலாகவும் அசத்தலாகவும் பேசுகிறாள். காலம் கனிந்து எவ்வளவோ விஷயங்கள் மாறிவிட்டது. மாறவேண்டிய விஷயங்கள் இன்னும் கூட எவ்வளவோ இருக்கிறது. சாதியம் துவங்கி கமர்ஷியல் தமிழ் சினிமா பார்முலா வரை அவற்றை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். “கௌரவம்” பார்த்தால் மாற்றங்கள் நிகழ்ந்துவிடுமா என்ன?

Wednesday, April 17, 2013

டீன் வொர்க்ஷப் - சென்னை

photo & design courtesy: dinakaran.com
மைன்ட் ஃபிரஷ் நிறுவனர் கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி பதிமூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் துறையில் இருக்கிறார். இதுவரை இரண்டு லட்சத்திற்கும் மேலானவர்களுக்கு பயிற்சியளித்திருக்கிறார். இவர் குழந்தைகள் சார்ந்தும், கல்லூரி மாணவர்கள் மற்றும் கார்பரேட் நிறுவனங்கள் சார்ந்தும் ஆர்வத்துடன் இயங்கக் கூடியவர். இன்போசிஸ்,அண்ணா பல்கலைக்கழகம், அசோக் லைலேன்ட், அழகப்பா பல்கலைக்கழகம், பம்பாய் பங்குவர்த்தக நிறுவனம், KGB செக்யூரிட்டிஸ் போன்ற ஸ்தாபனங்கள் இவருடைய வாடிக்கையாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

“ஃப்ளையிங் எலபேன்ட்ஸ்” – ஓர் அறிமுகம்:

“மொபைல், இன்டர்நெட், ஐ-பேட், டிவி” என கவனச் சிதறல்களை ஏற்படுத்தும் நவீன ஊடகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த படிதான் இருக்கின்றன. “கிரிக்கெட், ஃபலே ஸ்டேஷன், கம்ப்யூட்டர் கேம்ஸ்” என பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். நேரத்தை விழுங்கும் இதுபோன்ற உபகரணங்களால் – மன அழுத்தம், மன இறுக்கம் அதிகமாகி – வளரிளம் பருவ குழந்தைகளின் படிப்பு பாத்திக்கிறது. இதனைக் கடக்காத பெற்றோர்களே உலகத்தில் இருக்க முடியாது. மைன்ட் ஃப்ரெஷின் இந்த நான்கு நாள் பயிலரங்கம் அதற்கான தீர்வாக இருக்கும்.

குழந்தைகளின் முழுத் திறனையும் கண்டறிந்து, அவற்றை ஊக்குவித்து – முழு கவனத்தையும் படிப்பில் குவியச் செய்யும் வகையில் பயிலரங்கத்தின் பாடத் திட்டங்கள் இருக்கும். கல்வியை தேர்வுக்கான ஆயத்தமாக அல்லாமல், அவர்கள் விரும்பி விளையாடும் விளையாட்டைப் போலவே குழந்தைகளின் இலக்காக படிப்பை மாற்றும் பயிலரங்கம்.

“என் பையன் எப்பப் பாரு மொபைல் போன் வச்சிட்டு நோன்டிட்டே இருக்கான்...!”

“என்னோட பசங்க நல்லா படிப்பாங்க...! ஆனா சொல்பேச்சு கேக்குறது இல்ல...! பெரியவங்கள மதிக்கறதே இல்ல...! தானென்ற திமிர்...!”

“என்னோட பையன் விளையாட்டுன்னா... தோ வந்துட்டேன்னு முன்னாடி போயி நிக்கிறான்... ஆனால் படிக்கறதே இல்ல...!”

“என் பையன் நல்லா படிச்சிட்டு இருந்தான்... ஒன்பதாவது போனதுல இருந்து ரொம்ப மோசம் ஆயிட்டான்...!”

“பத்தாவதுல என் பையன் ஸ்கூல் ஃபஸ்ட். பதினொன்னாவது வேற ஸ்கூல் மாத்தினோம்.... அதுல இருந்து அவன் படிக்கறதே இல்ல...!”

- இது போன்ற ஏராளமான குறைகளுடன் தான் கீர்த்தனாவிடம் பெற்றோர்கள் வருவார்கள். “வளரிளம் பருவம்” என்பது மனக் கிளர்சியும், அதையொட்டி எழும் ரகசியக் கேள்விகளும் குழப்பங்களும் கலவரங்களும் அடையும் பருவம். கணினி, செல்பேசி போன்ற நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கம் நம்மைக் கற்பனை உலகில் கட்டிப்போடுகிறது. ஒரேயொரு கிளிக் போதும். ஆன்மிகம் முதல் ஆபாசம் வரை செவ்வகத் திரையில் கண்டுகளிக்கலாம். தமது குழந்தைகள் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் விளையாட்டுக்களை அதிகமாகப் பயன்படுத்துவது தான் இன்றையப் பெற்றோர்களின் ஆகப் பெரியக் கவலையே. குழந்தைகள் வெளிப்படுத்தும் மட்டற்ற கோவம், சொல் பேச்சுக் கேளாமை,உணர்வுக் குமுறல், படிப்பில் மங்கிக்கொண்டு வருதல், மன அழுத்தம் மற்றும் மன வேதனை என பிரச்சனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

“கணிதம், வேதியியல், இயற்பியியல்” என எத்தனையோ படங்களை இந்தியப் பள்ளிகளின் மூலம் குழந்தைகளுக்குக் கற்றுத் தருகிறோம். பெற்றோர்களின் தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாக “அபாக்கஸ்,மியூசிக், கராத்தே, யோகா” என விடுமுறையிலும் கூட குழந்தைகளை ஏதேனும் வகுப்புகளுக்கு அனுப்புகிறோம். ஆனால் “வாழ்வினை எப்படி எதிர்கொள்ள வேண்டும்...” என்பதை போதிக்கும் ஏதேனும் ஒரு பள்ளி இந்திய அளவில் இருக்கிறதா? நவீன உலகத்தின் நெருக்கடிகளை சமாளிக்கும் வகையிலான கற்பித்தல் முறை நம் இந்திய சமூகத்தில் இருக்கிறதா?

இந்த இடைவெளியை நிரப்ப கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி “மைன்ட்ஃப்ரஷ்” என்ற நிறுவனத்தைத் துவங்கி பயிற்சியளித்து வருகிறார். இதில் 12 வயது சிறுவர் முதல் 60 வயது முதியவர் வரையிலும் பயன்பெற்றுள்ளனர். ஒவ்வொரு வயதினருக்கு ஏற்ப பலவிதப் பட்டறைகளை கீர்த்தன்யா ஏற்பாடு செய்திருக்கிறார்.

“FLYING ELEPHANTS” என்பது 12வயது முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான மூன்றரை நாள் பயிற்சிப் பட்டறை. குழந்தைகளின் “கவனக்குறைவு, கவனச்சிதறல்” போன்ற அகச் சிக்கல்களையும், உடல் சார்ந்த சிக்கல்களையும் அவர்களாகவே புரிந்துகொண்டு –அவற்றைச் சரிசெய்து கொள்ளும் தன்மையில் அமைந்த பயிலரங்கம் இது. மனித மூளையின் முழுச் செயல்திறனை “அறிவியல், விஞ்ஞானம், உளவியல்” போன்ற தன்மைகளில் வீடியோ காட்சிகளுடன் ஒளிபரப்பி, தனிப்பட்ட ஒவ்வொருவரின் செயல்திறனையும் ஆற்றலையும் வெளிக்கொண்டு வருகிறார்.

“பறக்கும் யானை” என்ற வித்யாசமான பெயரைப் பற்றிய கேள்விகள் உங்களுக்கு எழலாம். மனதை ஒருமுகப்படுத்தும் பளுதூக்கும் வீரன், தன்னிலும் பத்துமடங்கு எடையினை ஒலிம்பிக்கில் தூக்கி தங்கப் பதக்கத்தைத் தட்டிச் செல்கிறான். அது எப்படி அந்த வீரனால் முடிந்தது. மனம் வைத்தால் யானை போன்ற பாரத்தையும் தூக்கிக்கொண்டு பறக்கலாம் என்பதுதான் உண்மை.

“FLYING ELEPHANTS” மூலம் என்ன நடக்கும்? என்பதற்கு சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியரின் மகன் யஷ்வந்தின் கல்வி முன்னேற்றம் இதற்கு நல்ல உதாரணம். மாநில அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேடுப்பதால், அதற்கான பயிற்சியை மேற்கொள்வதால் யஸ்வந்தால் படிப்பில் சரியான முறையில் கவனம் செலுத்த முடியவில்லை. ஒன்பதாம் வகுப்பு வரை யஷ்வந்த் 50 மதிப்பெண்களைத் தாண்டியதில்லை. இவனுக்குப் படிப்பில் ஆர்வமே இருந்ததில்லை. தந்தையோ அல்லது தாயோ பக்கத்திலிருந்து அவனை கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். “நான் ஒன்னும் படிப்புல கெட்டி இல்ல... கணக்கு பாடம் எனக்கு சுத்தமா வராது...” என அவனுக்கான எல்லைகளை அவனே வகுத்துக் கொண்டு,அதில் வட்டமடித்துக் கொண்டிருந்தான். “நான் படிப்புல சுமார் தான்...” என்ற தாழ்வு மனப்பான்மையில் யாரிடமும் அதிகம் பேசாமல் ஒதுங்கியே இருப்பான். இதனால் அவனுடைய நீச்சல் பயிற்சியிலும் கவனத்தைச் செலுத்த முடியாமல் தவித்தான்.

“FLYING ELEPHANTS”-ன் மூன்றுநாள் பயிலரங்கம் அவனுக்கே அவனை யாரென்று அடையாளம் காட்டியது. சின்னச் சின்ன பயிற்சிகள் மற்றும் விளையாட்டின் மூலம் ஆழ்மனதின் உத்வேகத்தைத் தூண்டியத்தில், அவனுடைய அபரிமிதமான செயல்திறன் வெளிப்பட்டது.வகுப்புப் பாடங்களை சுலபமாகப் படித்து அதனை கிரகித்துக்கொள்ளும் வழிமுறைகளை அவன் புரிந்துகொண்டான். இப்பொழுது தற்போது எல்லா பாடங்களிலும் தொடர்ந்து 90 மதிப்பெண்களைப் பெற்று வருகிறான்.

டீன்னேஜ் வயதில் தோன்றும் காதல் பற்றியும், அதன் சிக்கல் குறித்தும் கூட வளரிளம் பருவ குழந்தைகளிடம் பேசி, அது சார்ந்த புரிதலை குழந்தைகளுக்கு ஏற்படுத்துகிறோம். “கேர்ள் பிரண்ட், பாய் பிரண்ட்” கலாச்சாரம் தற்போது பெரிதாக வளர்ந்து வருகிறது. இதுவே பிள்ளைகளின் படிப்பு சார்ந்த கவனச் சிதறலை ஏற்படுத்தும் மிக முக்கியமான விஷயம். இதனைச் சரியாகக் கையாளாமல் வேறொன்றும் சாத்தியம் இல்லை. ஆகவே ஹார்மோன் தூண்டுதலில் அறியாத வயதில் தோன்றும் காதல் குறித்தும் அவர்களிடம் பேசி, அது சார்ந்த சிக்கல்களை தீர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

வீட்டில் சண்டை போடுதல் அல்லது பிரிந்து வாழ்தல் போன்ற செயல்களால் பெற்றோர்கள் குழந்தைகளின் மனதில் பயத்தையும், உணர்வுக் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி விடுகின்றனர். ஒரு பையன் தனது தாயாருடன் கீர்த்தயாவிடம் வந்தான். அவனுடைய தந்தைக்கு வித்யாசமான ஒரு சுபாவம் இருந்தது. எல்லாமே அவருக்கு பிரச்சனை தான். சிறு பிழைக்குக் கூட கற்பனை செய்ய முடியாத சண்டையிட்டு ஊரையே கூட்டிவிடுவார். பருவ வயதைப் பையன் அடையும் பொழுது அவனுக்கும், எதற்கெடுத்தாலும் வாக்குவாதத்தில் ஈடுபடும் தன்மை வந்துவிட்டது. மூன்றரை நாள் டீன் வொர்க்ஷபிற்கு அனுப்பி வைக்குமாறு அவனது தாயிடம் பரிந்துரைத்தோம்.. பயிற்சிப் பற்றைக்குப் பின், பெற்றோருடனான அவனது உறவுமுறை பெரிதும் மாறிவிட்டது. தேவையில்லாத பிரச்சனைகளுக்கு சண்டையிடுவதைக் காட்டிலும் தனக்குப் பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்தத் துவங்கிவிட்டான்.

பயிலரங்கின் இறுதிநாளில் “Flying Elephants” ல் பெற்றோர்களுக்கான அமரவும் இருக்கிறது. குழந்தைகளை அவர்களின் மகிழ்ச்சியான தருனங்களைக் குலைக்காமல் – நல்ல முறையில் வழிநடத்த இந்த அமர்வு பயன்படும்.

பயிற்சிப் பட்டறையானது நியூரோ லிங்குஸ்டிக் ப்ரோகிராம் (NLP), தொழில்முறை பகுப்பாய்வு (TA), சில்வா மைண்ட் Dynamix மற்றும் சமூக உளவியல் ஆகியவை கலந்த பயிற்சி முறையாகும். பயிலரங்கமானது பெரும்பாலும் கோடை விடுமுறை மற்றும் குறுகிய விடுமுறை நாட்களில் மட்டுமே நடத்தப்படுகிறது.

எதிர்வரும் 25, 26, 27, 28 April 2013ஆகிய நான்கு நாட்களுக்கு பயிலரங்கம் ஏற்பாடாகியுள்ளது. 9840927660 / 8939221530 ஆகிய இலக்கங்களுக்கு அழைத்து பயிலரங்கத்தில் கலந்துகொள்ள முன்பதிவு செய்து கொள்ளலாம். 40 குழந்தைகள் மட்டுமே ஒரு பயிலரங்கில் கலந்துகொள்ள முடியும்.

(இதனைத் தொடர்ந்து மே மாதத்திலும் இரண்டு பயிலரங்கங்கள் ஏற்பாடாகியிருக்கிறது.)

வெப்சைட் : www.mindfresh.in. மின்னஞ்சல்:contact@mindfresh.in Mob: 9840927660 / 8939221530

“ஃப்ளையிங் எலபேன்ட்ஸ்” பற்றிய காணொளிகள்:
www.youtube.com/watch?v=GOrLavITFI0,
www.youtube.com/watch?v=q9wne2Fmn3c
www.youtube.com/watch?v=oRezTFonB-g

முந்திய பயிலரங்கில் பங்கு பெற்றவர்களின் அனுபவங்கள்:
www.youtube.com/watch?v=Z_adpYDN79w
www.youtube.com/watch?v=t7XzCAIA1eA

கீர்த்தன்னாயா-வின் இதர காணொளிகள்:
www.youtube.com/user/TheMindfresh