Thursday, July 21, 2011

சமச்சீர் கல்வி

விவேகானந்தர் முதன் முறையாக வெளிநாடு சென்றிருந்தபோது ஒரு போட்டியில் கலந்து கொண்டாராம். துப்பாக்கியால் ஒரு பொருளை குறி தவறாமல் சுட வேண்டும். சரியாகச் சுட்டால் பெரிய பரிசுத் தொகை கிடைக்கும். பல நபர்களும் கலந்து கொண்டு தோற்றுவிட்டார்களாம். விவேகானந்தர் சுடுவதற்கு தயாரானாராம்.

ஒரு முறை சுட்டுப் பழகினாராம். குறி தவறிவிட்டது. அடுத்த முறையும் சுடுவதற்கு தயாரானாராம்.

அருகில் இருந்தவர்கள் சிரித்திருக்கிறார்கள். "எங்களாலேயே முடியவில்லை. உங்களுக்கு ஏன் இந்த வீண் வேலை" என்றார்களாம்.

"இந்த முறை சரியாக சுட்டுவிடுவேன் பாருங்கள்" என்றாராம். சொல்லியது போலவே துல்லியமாக சுட்டுவிட்டாராம். எல்லோருக்கும் ஆச்சர்யம்.

"இது எப்படி உங்களால் முடிந்தது" என்று பலரும் கேட்டார்களாம்.

"உங்கள் எல்லோருக்கும் பரிசுத் தொகைதான் கண்களில் தெரிந்தது. பரிசானது பெரியதாகும் பொழுது இலக்கு கண்களுக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் இலக்கு ஒன்று தான்" என்றாராம்.

மகாபாரதத்தில் கூட மரத்திலுள்ள கிளியின் கண்ணுக்கு சரியாக குறிவைத்தது அர்ச்சுனன் ஒருவன் தான். வாழ்வில் ஒருசிலர் மட்டுமே இலக்கை நோக்கிச் செல்கிறார்கள். மற்றவர்கள் எல்லோருக்கும் பணம் தான் பிரதானம். சூழ்நிலைகளும் மலைப்பாம்புபோல் அவர்களை நெருக்குகிறது.

துருதுஷ்ட விதமாக, பகுதி நேரமாக நான் சார்ந்திருக்கும் கணினித் துறையும் பணத்தை மட்டுமே பிரதானமாகப் பார்க்கும் ஒரு துறை. நிறைய பணம் கொடுக்கிறார்கள் என்பதற்காகவே தனது ஆசையை விட்டுவிட்டு நிரல் எழுதுபவர்களாகவும், கணினி ஓவியர்கலாகவும், விற்பனைப் பிரதிநிதிகளாகவும் விருப்பமில்லா திசையில் பயனிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். யாரையோ பத்திரப்படுத்த சுயத்தை இழந்து தொலைந்து போகிறார்கள்.

"சம்பளப் பணம் அதிகமாகக் கொடுக்கிறார்கள் என்று யார் ஒருவர் சமந்தமே இல்லாத கிடைத்த வேலைக்கு செல்கிறார்களோ, அவர்களால் வாழ்வில் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது" என்று நந்தன் நிலகானி (Infosys) சொல்லியதை மறந்து விட முடியாது.

இன்றையத் தலைமுறையினரை அதிகம் யோசிக்க விடுவதே இல்லை. தனது குழந்தை ஏதாவது ஒரு பொறியியலாளர் பட்டம் வாங்க வேண்டும். கல்லூரியின் கடைசி வருடம் வளாக நேர்முகத்தில் கைநிறைய சம்பளத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்பது தானே இந்தியப் பெற்றோரின் லட்சியமாக இருக்கிறது. எதிர்காலத்தில் தான் எதுசார்ந்த ஆளுமையாக வர வேண்டும் என்பதை பள்ளிக் குழந்தைகளே தீர்மானிக்க முடியாத ஒரு கல்வி அமைப்புதானே நமக்கும் இருக்கிறது.

சத்துணவு, இலவச சீருடை, வாரத்தில் இரண்டு நாள் முட்டை என்று முடிந்த அளவிற்கு கடந்த பல ஆண்டுகளாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். சமச்சீர் கல்வி, தமிழ் வழிக் கல்வி என்று இன்னும் ஏதேதோ யோசிக்கிறோம். அதிலும் அரசியல், மத உணர்வு என்று தான் சார்ந்த விழுமியங்களை பாடத்திட்டத்தில் சேர்ப்பதை, நல்ல ஆற்று நீரில் சாக்கடை கலப்பதை சலனமற்று வேடிக்கைப் பார்ப்பது போல ஆட்சியாளர்கள் திணிப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.புத்தகத்தில் உள்ளதை அப்படியே அவர்களின் மூளையில் ஏற்றப் பார்க்கிறோம். பாடத் திட்டங்களைத் தாண்டி அவர்களுக்கு எதையும் போதிப்பதில்லை. அதிக மதிப்பெண்கள், அதன் மூலம் உலகின் ஏதாவது ஒரு மூலையில் அதிக சம்பளத்தில் வேலை என்று பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாக குழந்தைகளை உருமாற்றும் வார்ப்புகளாகத் தானே கல்வி நிறுவனங்கள் செயல்படுகிறது.

மேற்கத்திய நாட்டில் ஆசிரியராகப் பணிபுரியும் நண்பர் ஒருவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு நிலவும் ஆரம்பக் கல்வி பற்றி உரையாடினேன். பள்ளிக் குழந்தைகள் மீது அவர்கள் செலுத்தும் அக்கறை வியக்கும் படியாக இருந்தது. ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மன நல ஆலோசகர் பகுதி நேரமாகவோ அல்லது முழுநேரமாகவோ பணியாற்றுவாராம். அவருடைய வேலையே குழந்தைகளுடன் பழகி அவர்களுடைய விருப்பப் பாடத்தையும், விருப்பத் துறையையும் தெரிந்துகொள்ள வேண்டுமாம். அடுத்தடுத்த வகுப்புகளுக்குச் செல்லும் போது விருப்பத் துறைக்குச் செல்ல, எந்த பாடப் பிரிவை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்குவார்களாம்.

ஒருவருக்கு வரலாறு பிடிக்கும் எனில் அதை முக்கியப் பாடமாக எடுத்துப் படிக்கும் போது அந்தத் துறையில் உள்ள சவால்கள், வேலை வாய்ப்புகள், பின்னடைவுகள் என்று எல்லாவற்றையும் விளக்குவார்களாம். மாணவன் கவனம் செலுத்தும் மற்ற பாடங்கள் சார்ந்த தகவல்களையும் விளக்குவார்களாம். அதிலிருந்து ஏதாவது ஒரு துறையை மாணவன் தேர்வு செய்துகொள்வானாம். இந்தியக் குழந்தைகள் இங்குதான் அப்பாவிகள் ஆகிறார்கள். "என்ன படிக்கிறோம்? எதற்காகப் படிக்கிறோம்? அதன் மூலம் எது சார்ந்த ஆளுமையாக பரிமளிக்கப் போகின்றோம்?" என்ற எந்த முகாந்திரமும் இல்லாத ஒரு கல்வியைத் தான் கொடுத்துக் கொண்டிருகின்றோம். பந்தையத்தில் ஓடும் குதிரைகளைப் போல குழந்தைகளை விரட்டாமல், உள்மனச் சிக்கல்களைக் கொடுக்காமல், வாழ்வை அவர்களுடைய போக்கில் எதிர்கொண்டு பயணிக்கும் தெளிவான சிந்தனையாளர்களை உருவாக்கும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

சமச்சீர் கல்வியே ஆனாலும் இதே கல்வியைத் தான் வேறு மாதிரி கொடுக்கப் பார்க்கின்றோம். ஒருவனுடைய சுயமரியாதையையும், தன்னம்பிக்கையையும் எந்தக் கல்வி மீட்டெடுக்கிறதோ அதுதான் உண்மையான கல்வி. மற்ற எல்லாமே பாரபட்சமான கல்வி முறைதான்.

The Falling Standards of our Education System - English blog written by Deepak

Part 1 - The Pathetic Engineering Admissions
Part 2 - Admissions in The Medical Stream
Part 3 - The Sudden Rush for Arts & Science
Part 4 - Conclusion