Sunday, July 21, 2013

அரசுப் பள்ளி ஆசிரியரின் ராஜினாமா

தான் செய்யும் வேலையை ராஜினாமா செய்யும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்குத் தெரியும். நீங்கள் திறமைசாலியாக இருந்து, நீண்டகாலம் ஒரு நிருவனத்தில் வேலை செய்கிறீர்கள் என்றால் உங்களது ராஜினாமா கடிதத்தை சுலபத்தில் ஏற்க மாட்டார்கள். “எதுக்காக வேலைய விட்டுட்டுப் போறீங்க? உங்களுக்கு இங்க என்ன பிரச்சனை? கம்பெனி பெனிஃபிட்ஸ் எதாச்சும் ஒத்து வரலையா? சம்பளம் பத்தலையா?” போன்ற பல கேள்விகளை நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் முதல், உங்களைத் தலைமையேற்று நடத்தும் ஊழியர் வரை எல்லோரும் கேட்பார்கள். நாம் சொல்வோம், “நல்ல ஆப்பர்ச்சூநிட்டிங்க. மிஸ் பண்றதுக்கு மனசு வரல...” போன்ற ஏதேனும் பொய்யான காரணங்கள் அதன் பின்னால் இருக்கும். உண்மையான காரணம் “காசு, பணம், துட்டு, மணி மணி”.

ஆனால் நானிங்கு பேச விரும்புவது சக்திவேல் சிதம்பரம் என்ற அரசுப் பள்ளி ஆசிரியரைப் பற்றி. கடந்த ஓராண்டுகாலமாகவே சக்தியை முகநூலில் பின்தொடர்ந்து வருகிறேன். மனதிற்கு நெருக்கமான சமூக இணையதள நண்பன் கூட. எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி வசதிகளற்ற கிராமப்புற மாணவர்களின் நலன் சார்ந்து அர்பணிப்புடன் வேலை செய்து வருபவன். தன்னுடைய சம்பளத்தின் பெரும் பகுதியை மாணவர்களின் படிப்பிற்காக பயன்படுத்திய உன்னதமானவன். தனது நண்பர்களின் மூலமும் தொடர்ந்து உதவி செய்து வந்தவன். தான் செய்யும் ஆசிரியப் பணியை மணம் ஒன்றி செய்ய இயலவில்லை என்றால், நண்பனது ராஜினாமாவைப் பற்றி பெரிதாக பேசும் எண்ணம் எழுந்திருக்காது.
(இன்போசில் கம்பெனியில் வேலை செய்த சங்கரன்கோவிலைச் சேர்ந்த அசோக் என்பவன் ஆறு மாதங்களுக்கு முன்பு வங்கித் தேர்வெழுதி IOB-ல் வேலைக்குச் சேர்ந்தான். ஒரே மாதத்தில் அந்த வேலையை உதறித் தள்ளிவிட்டு மீண்டும் இன்போசிஸ் வேலையில் சேர்ந்துகொண்டான். அசோக் போன்றவர்களின் முடிவானது கவனத்தில் கொண்டு அலச வேண்டியதில்லை. வங்கி பணிச்சூழல் அசோகிற்கு ஒத்துவரவில்லை ஆகவே உதறித் தள்ளினான். அவனுடைய இந்தச் செயலால் சமூகத்திற்குப் பெரிய இழப்பொன்றும் இல்லை.)
ஆனால், வசதியிலாத மாணவர்களின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு – மனம் ஒன்றி ஆசிரியப் பணியைச் செய்தவர் சக்திவேல் சிதம்பரம். சரியாகப் படிக்காத மாணவர்களுக்கு, பொதுத் தேர்வு நெருங்கும் சிலமாதங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் பள்ளியிலேயே கூட பாடம் எடுத்திருக்கிறார். தமிழகத்தின் மின்வெட்டு பிரச்சனை எல்லோரும் அறிந்ததே. அதனைச் சமாளிக்க நண்பர்களின் துணைகொண்டு UPS வாங்கி, அதன்மூலம் மாணவர்களின் படிப்பிற்கு உதவி செய்திருக்கிறார். (இதைப் பற்றி தி ஹிந்து நாளிதழில் நண்பர் AD பாலா எழுதியிருக்கிறார்.) எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பள்ளி மாணவர்களை, தனது சொந்தப் பிள்ளைகளாக பாவித்து பணி செய்யும் ஆசிரியர்கள் மிகக் குறைவு. அதிலும் சக்திவேல் போன்றவர்கள் அரிதிலும் அரிது. சக்தி முகநூலில் பின்வருமாறு எழுதி இருக்கிறார்:

ஆரம்ப காலத்தில் தனியார் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது TRB தேர்வுகளுக்கு விண்ணப்பித்தது கூட இல்லை. "ABCD கூட தெரியாத பையனுக்கு நான் என்னத்த English சொல்லி குடுக்கறது சார்?"

உடன் பணிபுரிந்த அஷோக் மாஸ்டர் சொன்னார்,"நீங்க exam எழுதாமயே வேலை வேணாம், விருப்பமில்லைனு சொன்னா எப்டி சார்? எழுதுங்க, select ஆகுங்க, அப்புறம் வேலை வந்ததுக்கு அப்புறம் வேணாம்னு சொல்லுங்க!"

அடுத்த தேர்வில் வெற்றி பெற்றேன். வேணாம்னு சொல்ல என் மக்க விடல.

அம்மா கண்ணுல ஆனந்தக் கண்ணீரைப் பாத்த பிறகு ஒரு பொறுப்புள்ள (!) பிள்ளை என்ன பண்ண முடியும் சொல்லுங்க? கழுதை ஒரு எட்டு வருஷம் பொறுத்து resign பண்ணிக்கலாம்னு அப்பவே decide பண்ணிட்டேன்!!!!!!

அதுக்கு அப்புறம் நானும் பல முறை தலையால தண்ணி குடிச்சி பாத்துட்டேன். ஒவ்வொரு நாளும் இந்த Government வாத்தியாருங்க பண்ற அலும்பு தாங்க முடியல என்னால.

"நான் ஒரு senior வாத்தியாரு, எனக்கு தொடர்ந்து 3 period போட்டா என்ன அர்த்தம்"-னு கேட்டாரு ஒரு வாத்தியாரு!

"எதுக்கு இப்ப evening class? எதாவது ஆச்சுன்னா என் வேலை போகும், என் தாலிய அறுக்காத"-னாரு ஒரு Headmaster!

"இந்த பையனுக்கு இன்னா வயசிருக்கும் இவன் என்னை போயி Games நடத்துடான்றான்? நான் என்ன PT Master-ஆ இல்ல Drill Master-ஆ" என்று நடு கிரவுண்டில் நின்று கத்தினார் ஒரு PET Master!!!!!
-------------------------------
இவர்களையும் இந்த மானங்கெட்ட பிழைப்பையும் உதறித் தள்ள பலமுறை எத்தனித்துள்ளேன். ஒவ்வொரு முறையும் குடும்பப் பொருளாதாரம் குறித்தும், நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் என்னிடம் சுருங்கச் சொல்லி விளங்கச் செய்தவர் அன்புத் தங்கை Cimi Meena.

"Private school போனா இத விட அடிமைத்தனமா இருக்கனும். இங்க நாலு ஏழை பசங்களுக்காவது உதவி பண்றோம். நாமளும் போயிட்டா அவங்க என்ன பண்ணுவாங்க?"
---------------------
அரசுப் பள்ளி மாணவர்களை என்னுடனே வைத்து நாள் முழுவதும், வருடம் முழுவதும் பார்த்துக்கொள்ள முடியும் என்ற எண்ணம் கடந்த மாதம் ஏற்பட்டபோது, தொலைபேசியில் அழைத்து விவரம் சொன்னேன்.

"நல்ல வாய்ப்பு. Resign பண்ணிடு."
---------------------------
தம்பி உடையானைப் பற்றி எனக்குத் தெரியாது.
தங்கை உடையான் Government-க்கு அஞ்சான்.
நன்றி மீனா.

சக்திவேல் சிதம்பரம் போன்றவர்களின் ராஜினாமா அரசுப் பள்ளிகளுக்குப் பெரிய இழப்பு. அதனினும் இழப்பு சக்தி வேலை செய்த பள்ளியில் படித்த கிராமப்புற மாணவர்களுக்குத் தான். சக்திவேல் அரசு அங்கீகாரம் பெற்ற வேறொரு தனியார் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்துவிட்டார். அந்த மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள். நல்ல வழிகாட்டலுடன் கூடிய தெளிவான கல்வி அவர்களுக்குக் கிடைக்கும். சக்திவேல் தரமான ஆங்கில ஆசிரியர் என்பதையும் நம் மக்களின் கவனத்திற்குக் கொண்டுவரக் கடமைப் பட்டிருக்கிறேன். (எல்லா பாடங்களும் எடுக்கக் கூடிய ஆசிரியரும் கூட.) கீழ்நாத்தூர் புறவழிச் சாலையில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் “பகவான் உயர்நிலைப் பள்ளியை” நண்பர்களுக்குக் கொஞ்சம் அழுத்தமாகவே பரிந்துரை செய்கிறேன்.
திருவண்ணாமலை – கீழ்நாத்தூர் பகுதியில் வசிக்கும் நண்பர்களுக்கு சக்திவேலைப் பற்றியும், அவர் பொறுப்பேற்றுள்ள பள்ளியைப் பற்றியும் அறிமுகம் செய்து வையுங்கள். சக்தி போன்றவர்களிடம் குழந்தைகள் பாடம் படிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

சக்திவேல் சிதம்பரத்தைத் தொடர்புகொள்ள: 

Saturday, July 20, 2013

லவ் + முத்தம் = ஜோடனையற்ற காதல்

நட்புவட்டதிலுள்ள ஒருவனுக்கு மின்னஞ்சல் அனுப்பும் சமயத்தில், வேறொரு நண்பர் பக்கத்தில் இருந்தார். சில வார்த்தைகளைக் கண்டு நம் மக்கள் ஏன் தான் முகம் சுளிக்கிரார்களோ தெரியவில்லை!. கோக்கு மாக்கா யோசிக்கிறதே நம்ம பொழப்பாச்சே.

பொதுவாகவே “Sorry” என்ற வார்த்தைக்கு அடுத்ததாக நான் அதிகம் பயன்படுத்தும் வார்த்தை “Thanks”.அதற்கடுத்தது “Love” என்ற வார்த்தையைப் பல வாக்கிய அமைப்பில் பயன்படுத்துவேன். “Thanks & regards” – என்ற வார்த்தையை மின்னஞ்சலில் ஃபார்மலாக எல்லோரும் பயன்படுத்துவார்கள். நானோ “Thanks & Love” –என்றுதான் பயன்படுத்துவேன். சில நெருக்கமான நண்பர்களுக்கு “Love to you” – என்று அனுப்புவேன். குறுஞ்செய்திக்கும் இது பொருந்தும். சிலருக்கு “Hugs & Love” – என்று குறிப்பிட்டு அனுப்பி வைப்பேன்.

குடும்ப உறவுகள், கல்லூரியில் உடன் படித்த நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்த மனதிற்கு நெருக்கமான நண்பர்களுக்கு மட்டும் எவ்வளவு பெரிய உதவி செய்தாலும் - “Thanks” என்ற வார்த்தை மட்டும் வாயிலிருந்து வரவே வராது. அவர்களுக்கு வெறுமனே “With Love” என்று சுருக்கமாக முடித்துக் கொள்வேன்.

என்னுடைய தலையெழுத்து, ஆண் நண்பர்கள் தான் எனக்கு ஜாஸ்தி. தோழிகளோ சொற்பத்திலும் சொற்பம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை அவர்களிடம் பேசினாலே அதிகம். தொடர்பில் இருக்கும் தோழர்கள் எல்லோரிடமும் இந்த “லவ்” கலந்த வார்த்தைகளை – ஜோசியக்கிளி சீட்டை இழுத்துப் போடுவதைப் போல ஆளுக்கேற்றார்போல் பயன்படுத்துவேன்.

“அதென்னங்க கிருஷ்ணா... கூச்ச நாச்சமில்லாம கூடப் பழகற ஆம்பளைங்க எல்லாருக்கும் லவ் போட்டு மெசேஜ் பண்றிங்க...” என்று கேட்டார் அருகிலிருந்த நண்பர். மேலும் “உங்க முகநூலில் கூட இதுபோன்ற காமெடித் தனங்களைச் செய்கிறீர்களே...!” என்றார் அவர். ராணுவ அதிகாரிகள் பயன்படுத்தும் ரகசிய சங்கேத வார்த்தையா “லவ்”. நேசத்தை வெளிப்படுத்தும் சாதாரண வார்த்தைதானே அது. “அதைப் பயன்படுத்துவதில் உங்களுக்கு என்ன பிரச்னை?” என்றேன்.

“ஜென்ஸ் ஃபிரண்ட்டுங்க கிட்ட லவ் டெக்ஸ்ட் அனுப்பறது கொஞ்சம் Hard-டா இருக்குங்க கிருஷ்ணா...!” என்றார்.

“ஆரம்பத்துல எனக்கும் Hard-டா தான் இருந்துச்சு... இப்போல்லாம் பழகிடுச்சி...” என்றேன்.

“ஐயையோ நீங்க பலான ஆளா?” என்று நக்கலடித்தார்.

“சில பேரு, சில விதமான நேசங்களை அனுபவிக்காமலேயே காலத்த கடந்து வந்துடறாங்க ப்ரோ... அந்த மாதிரி ஆட்கள் என்னோட நட்பு வட்டத்துல ரொம்ப ரொம்ப அதிகம். அதுபோன்ற ஆட்கள் இது போன்ற லவ் டெக்ஸ்ட் மெசெக் பார்த்தாங்கன்னா ரொம்ப சந்தோஷப்படுவாங்க. ஒருசில லவ் பீலிங்கை கிராஸ் பண்ணாம சாகக் கூடாது ப்ரோ..” என்றேன்.

“இதெல்லாம் டகால்டி பேச்சு... டிப்ளோமாசி (Diplomacy)...” என்றார்.

அடக் கடவுளே என்று நினைத்துக் கொண்டேன். “ஓர் ஆண் ஒரு பெண்ணுக்கு சொல்லும் லவ் எவ்வளவு முக்கியமோ, அது போலவே ஓர் ஆண் ஓர் ஆணிடம் வெளிப்படுத்தும் கள்ளங்கபடமற்ற லவ்வும், ஒரு பெண் ஒரு பெண்ணிடம் வெளிப்படுத்தும் கள்ளங்கபடமற்ற லவ்வும் ரொம்ப மிக முக்கியம்... ப்ரோ...” என்றேன்.

“இதெல்லாம் கேக்கறதுக்கு நல்லாருக்கும் கிருஷ்ணா...” என்றார்.

இப்படித் தான் என்னுடைய பழைய கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது, ஒரு சந்தேகம் எழுந்தது. மருமகனும் அதே கம்பெனியில் வேறொரு கட்டிடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவனை இண்டர்காமில் அழைத்துப் பேசினேன். அந்த சம்பவத்தை உரையாடிக் கொண்டிருந்த ப்ரோ-விடம் பகிர்ந்துகொண்டேன்.

“மருமகனே, உனக்குத் தெரிஞ்ச ஆண்களிடமிருந்து முத்தங்கள் கிடைத்திருக்கிறதா? If you say yes... யாரெல்லாம் முத்தம் கொடுத்திருக்காங்க? கடைசியாக உனக்கு முத்தம் கொடுத்த ஆண் யார்? ஏதாச்சும் ஞாபகம் இருக்கா?” என்று கேட்டேன்.

“இல்லியே மாமா...! அப்பாவுக்கு என்ன ரொம்ப பிடிக்கும். அப்பான்னா எனக்கு உயிராச்சே. அவரும் கூட சின்ன வயசுல கொடுத்ததா ஞாபகம். வளர்ந்த பின்னாடி பேசரதோட சரி... சரியா ஞாபகப்படுத்த முடியலங்க மாமா... அப்பா கொடுத்த முத்தங்கள் கூட சுத்தமா ஞாபகம் இல்லியே...!” என்று இழுத்தான்.

“அண்ணன்... ஃப்ரென்ட், சித்தப்பா, மாமா... இப்பிடி யாராச்சும் கொடுத்து இருக்காங்களா?” என்றேன்.

“அப்பா கொடுத்ததே ஞாபகம் இல்ல... நீங்க இதெல்லாம் வேற கெளறி விடுறிங்ன்களே...” என்றான்.

“உனக்கு பிடித்தமான பெண்கள் யாராவது....” என்று முடிப்பதற்குள், “ஆங்... நல்லா ஞாபகம் இருக்குங்க மாமா...” என்று சில உறவுகளை ஞாபகம் கூர்ந்தான்.

ஹேம்நாத், ராமகிருஷ்ணன் போன்ற இதர அலுவலக நண்பர்களிடமும் “ஆண் உறவின் அன்பான முத்தம்” சார்ந்த கேள்வியை எழுப்பினேன். “என்ன கிருஷ்ண இதெல்லாம் கேட்டுக்குனு? அப்படி எதுவும் ஞாபகம் இல்லை...” என்று மண்டையைச் சொறிந்தார்கள். இன்னொரு நண்பரான பிரதீப்பிடம் கேட்டேன்.

“யோவ் சாமியாரெ... நம்மள எல்லாம் ஏன்டா பெத்தம்னு மண்டையைக் கவுந்துக்குனு பூரா பேரும் நிக்கறாங்கன்னா... அவங்க முத்தம் வேற கொடுப்பாங்களா? குசும்புதானே இதெல்லாம்...” என்றார்.

முத்தம் என்பது பாசத்தின் வெளிப்பாடு இல்லையா? ஆரத் தழுவி முத்தமிடுவதை எல்லோரிடத்தும் செய்ய முடியுமா? நெருங்கிய உறவுகளிடம் இது போன்ற நேசத்தைக் காட்டுவதில் நாம்மென்ன குறைந்துவிடப் போகிறோம். அப்படி என்ன வெட்கம் வேண்டிக்கிடக்கிறது. மேடவாக்கத்தில் வசிக்கும் என்னுடைய அக்காவின் வீட்டிற்குச் செல்லும் போதெல்லாம் அகிலைத் தான் என்னுடைய கண்கள் தேடும். அம்மா, பெரியம்மா, பாட்டி, தங்கை என பெண்கள் இருக்கும் சூழலில் அகில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். வீட்டில் நுழையும் சமயத்தில் டிவியில் ஏதேனும் சேனலில் மும்முரமாக மூழ்கியிருப்பான். அல்லது வெளியில் விளையாடிக் கொண்டிருப்பான்.

“ஏய் அகில்... இங்க வாடா...” என்பேன். வேண்டா வெறுப்பாக என்னிடம் வருவான்.

“உன்ன பாக்குறதுக்காக மாமா எவ்வளோ தொலைவு டிராவல் பண்ணி வந்திருக்கேன்.” என்று இருக்க அனைத்து முத்தமிடுவேன். “இங்க பாரு நீ ஸ்கூல் முடிச்சி காலேஜ் போனாக் கூட உனக்கு நான் முத்தம் கொடுப்பேன்... ஐ லவ் யூ அகில்” என்பேன். அகில் புரிந்தும் புரியாதுமாக தலையை ஆட்டிக்கொள்வான். இதுநாள் வரையில் அவனுக்கு “ஒரு சாக்லேட், ஒரு பிஸ்கட்” என்று எதையும் வாங்கிக் கொடுத்ததில்லை. ஒரு குழந்தையின் சராசரித் தேவைக்கும் அதிகமாகவே விளையாட்டுப் பொருட்களும், சிற்றுண்டிகளும் அவனுக்குக்க் இடைக்கின்றன. எனவே அகிலைப் பார்க்கும் ஒவ்வொரு தருணத்தில் அவனுக்காக என்னிடமிருப்பது முத்தங்களும், நேசங்களும், உச்சி முகர்தலும் மட்டுமே. வளர்ந்து வந்து ஓர் இளைஞனாக நிற்கும் பொழுது அகிலின் நினைவில் பூரணமாக என்னுடைய ஞாபகம் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். அக்காவின் மகனிடம் உணர்வுப்பூர்வமாகப் பகிர்வதை, நண்பர்களுடன் வார்த்தைகளைக் குழைத்து பகிர்ந்துகொள்வதில் எனக்குத் தயக்கமே இருந்ததில்லை.

பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு பலவிதங்களிலும் கேலி பேசிய நண்பர் நீண்ட நாட்கள் கழித்து ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அவரது வாழ்வின் முக்கியமான தருணத்தை என்னுடன் பகிர்ந்துகொண்டார். உடனே அவருக்கு பின்வருமாறு பதில் அனுப்பினேன்.

“So happy about it. Give a deep kiss & a warm hug to the cute little darling on behalf of me. The God may bless him”, With love, light & joy - Krishna Prabhu

“He said love to you in his language” – என்ற பதில் வந்தது.

ஒரு குழந்தை பிறந்தால் தான் கள்ளங்கபடமற்ற நேசம் ஆண்களின் இதயத்தில் பூக்கிறது போல. அந்தப் பூ மரணிக்கும் வரையிலும் உதிராமல் பார்த்துக் கொள்வது தான் ஆகச் சிரமமான காரியம். கொஞ்சம் போல பிரயாசைப் பட்டு பழகிக்கொண்டால் வாழ்வே இன்பமயம். (சமூகத்தில் குற்றங்கள் கூட பாதியாகக் குறைந்துவிடும். குடும்பத்திலுள்ள ஆண் உறவுகளின் முரண் தான் பலரையும் மிருகங்களாக்கி சமூகத்தில் உலாவும் படி செய்துள்ளன.)

என்னுடைய மருமகன் முத்துவிடம் கேட்ட, இதர நண்பர்களிடம் கேட்ட அதே கேள்வியைத் தான் உங்களிடமும் கேட்கிறேன். எனக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் கூட இல்லை. உங்களுக்குள்ளாகவே ஞாபகப்படுத்திப் பார்த்துக் கொண்டாலும் பரவாயில்லை. என்னுடைய கேள்வி இதுதான்:

“உங்களுக்கு முத்தமிட்ட ஆண் உறவுகள் யார் யார்? கடைசியாக முத்தமிட்டது யார்? அந்தத் தருணம் உங்களுக்கு ஞாபகம் இருகிறதா?” நிற்க. “I miss you da” என்ற வாக்கியத்தை நீங்கள் அதிகம் பயன்படுத்தி இருக்கலாம். ஓர் ஆணாக, “I love you da” என்று உங்களது நேசத்தை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்ட நண்பன் யார்?, ஆண் உறவுகள் யார்யார்?

வாழ்வில் பெண்களுக்கான நேசம் வெளிப்படையாகக் கிடைத்துவிடும். சில நேரங்களில் அந்த நேசம் காமத்துடன் சமந்தப்பட்டதாகக் கூட இருக்கும். இந்திய சூழலில் ஓர் ஆணுக்கு – சக ஆணிடமிருந்து வெளிப்படையான நேசம் கிடைப்பது அத்திப்பூ கதைதான். குறிஞ்சிமலர் கதைதான். மகாமகம் தெப்பக்குள விழா என்றும் சொல்லிக்கொள்ளலாம்.

ஏனெனில் நம்மிடமிருந்து முரண்படும் குடும்ப உறவுகளை “மோசமான தந்தை, மோசமான மகன்,மோசமான சகோதரன், மோசமான சித்தப்பா, மோசமான பெரியப்பா, மோசமான மாமன்கள், மோசமான பங்காளிகள், மோசமான மருமகன், மோசமான நண்பன்” என்றே நெற்றியில் பச்சைகுத்திவிட்டு அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பலரும் நம்மிடமிருந்து விலகியே இருக்கிறார்கள். நம்மைச் சுற்றிலும் மனதிற்கு நெருக்கமாக இருப்பவர்கள் சொற்பத்திலும் சொற்பமே. ஆகவே கூச்சநாச்சம் என்ன வேண்டிக் கிடக்கிறது?

அன்பான மனநிலையை வெளிப்படுத்தக் கிடைக்கும் அரிதான தருணங்களில் மகிழ்வுடன் “ஐ லவ் யூ” சொல்லுங்கள். அந்த வார்த்தை கடந்த கால மனக்குறைகளை ஆற்றும். மனதிற்கு மிக நெருக்கமான உறவு எனில் கள்ளங்கபடமற்று கட்டிப்பிடித்து முத்தத்தைக் கூட வெகுமதியாகத் தாருங்கள். அது கடந்த கால ரணங்களை ஆற்றும். அப்படிச் செய்யவில்லையேல் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் என்ன வித்யாசம்? நான் மறுபடியும் கேட்கிறேன். உண்மையுடன் பதில் சொல்லுங்கள். ““உங்களுக்கு முத்தமிட்ட ஆண் உறவுகள் யார் யார்? கடைசியாக முத்தமிட்டது யார்?”.

இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முன்வந்தால் நாம் எவ்வளவு நேச வறட்சியுடன் வாழ்கிறோம் என்பது உங்களுக்குப் புலப்படும். அந்த மனக் குறையை நீங்கள் யோசித்துப் பார்த்தால் ஜோசியக்கிளி சீட்டை இழுத்துப் போடுவதைப் போல “லவ்” என்ற வார்த்தையை ஆளுக்கேற்றார் போல் பயன்படுத்துவதிலுள்ள ஞாயமும் உங்களுக்குப் புரியும்.

யார் கண்டது? இந்த கணத்திலிருந்து நீங்களும் ஜோசியக் கிளியாக மாறலாம். அன்பெனும் திசையை நோக்கி சிறகடித்துப் பறக்கலாம்.

சுபம்... மங்களம்...

Friday, July 19, 2013

மரியான் – திரை விமர்சனம்

ராஞ்சனா ஹிந்தியில் ஹிட் என்று சொல்கிறார்கள். நம்மாட்கள் குருவி படத்தையும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் என்று தானே சொல்லுவார்கள். ராஞ்சனாவின் தமிழ் டப்பிங் வெர்ஷனான அம்பிகாபதி அட்டர் பிளாப். “ஆடுகளம்” – 2011-ல் தனுஷுக்கு தேசியவிருது வாங்கிக் கொடுத்த வெற்றிமாறனின் படம். அதன்பிறகு தனுஷ் நடித்த “சீடன், மாப்பிள்ளை, வேங்கை, மயக்கம் என்ன, 3” போன்றவற்றில் பலவும் சுமாரான படங்கள். கடைசி மூன்று படங்களும் பிளாப் என்றே சொல்லலாம். “3” படத்தின் தோல்வி தனுஷை “எதிர் நீச்சல்” படத்தைத் தயாரிக்கும் அளவிற்குக் கொண்டு சென்றுள்ளது. தொடர் தோல்வியிலிருந்து மீண்டு ஒரு பம்பர் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தான், விதவிதமாக கதாப்பாதிரங்களாகத் தேர்ந்தெடுத்து, அதீதமான உழைப்பைக் கொடுத்து தனுஷ் நடித்து வருகிறார். 
“சீடன், மாப்பிள்ளை, வேங்கை” போன்ற கமர்ஷியல் படங்களை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால், “மயக்கம் என்ன?, 3” ஆகிய படங்களில் தனுஷ் தனது கடினமான உழைப்பையும் நடிப்பையும் கேரக்டர் மாடுலேஷனில் கொட்டியிருப்பார். தனுஷின் நடிப்பு மெச்சப்பட்டாலும் இரண்டு படங்களுமே பெரிதாகப் போகவில்லை. இரண்டு நெருங்கிய சொந்தங்களுடன் கைகோர்தப் படங்கள் (செல்வராகவன் & ஐஸ்வர்யா R தனுஷ்) என்பது குறிப்பிடத்தக்கது. “3” – வெளியான பின்பு - இனி ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் நடிப்பேனா என்பது சந்தேகம் தான் என்ற ரீதியில் பேட்டி கூட கொடுத்திருந்தார். ராஞ்சனாவில் துடுக்குத் தனமான கதாப்பாத்திரம். கடினப் பிரயத்தனப் பட்டு வேற்றுமொழியில் சொந்தமாகப் பேசியும் நடித்திருந்தார். ஹிந்தியில் படம் ஹிட் என்கிறார்கள். நான் தான் சொன்னேனே நம்மாட்கள் குருவியைக் கூட பம்பர் ஹிட் என்பார்கள். தேவயானி நடித்த “திருமதி தமிழ்” திரையரங்குகளில் 80 நாட்கள் ஓடியிருக்கிறது. தேவயானியின் கணவர் ராஜகுமாரனின் நடிப்பை திரைத் துறையைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகள் தொலைபேசியில் கூப்பிட்டுப் பாராட்டினார்களாம். திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் பாராட்டு விழாகூட சமீபத்தில் நடந்தது.

கொலைவெறி தந்த அடையாளத்தை அளவீடாகக் கொண்டும் ராஞ்சனாவின் ஹிட்டைப் பார்க்கவேண்டி இருக்கிறது. இனி கொலைவெறி போன்ற மெட்டுக்களில் பாடல்கள் பாடப்போவதில்லை எனவும் தனுஷ் பகிர்ந்ததாக நாளேடுகளில் படித்த ஞாபகம். மேலும், ஹிந்தி சினிமாவின் லேட்டஸ்ட் டிரென்ட் 80’s லவ். அந்த கான்செப்டில் ராஞ்சனாவிற்கு முன்பு வெளிவந்த ஒன்றிரிரண்டு ஹிந்திப் படங்கள் சூப்பர் ஹிட் என்று சினிமா பற்றி எழுதும் நண்பரொருவர் பகிர்ந்துகொண்டார். ஆகவே டிரென்டிற்குக் கிடைத்த வெற்றியாகவும் ராஞ்சனாவைப் பார்க்க வேண்டி இருக்கிறது.

ஆக “சீடன், மாப்பிள்ளை, வேங்கை, மயக்கம் என்ன, 3” என்ற பட்டியலில், தனுஷ் நடித்து தென்னகத்தில் வெளியான “அம்பிகாபதி”யும் தோல்விப் பட்டியலில் சேர்க்கிறது என்பதுதான் உண்மை. எனவே தனுஷைப் பொருத்தவரை மரியான் படத்தின் வெற்றி மிக முக்கியமான ஒன்று. சும்மா சொல்லக் கூடாது, இந்தப் படத்தில் ஒரு நடிகனாக தனுஷ் வெளுத்து வாங்கியிருக்கிறார். அருமையாக நடித்திருக்கிறார். ஏற்றுக் கொண்ட கதாப் பாத்திரத்திரத்திற்கு வாங்கும் சம்பளத்திற்கேற்ப துலாக்கோளில் துல்லியமாக பாரம் நிறுத்தி, கூடவும் கூடாமல் குறையவும் குறையாமல் ஞாயம் செய்துவிடுகிறார். பார்வதி மேனன், அப்புக்குட்டி, உமா ரியாஸ்கான் போன்றோரும் பக்கபலமாக நடித்திருக்கின்றனர்.

மைலாப்பூர் வாசியான இயக்குனர் பரத் பாலாவுக்கு இதுதான் முதல் தமிழ் படம். ஏ. ஆர். ரகுமான் இசையமைத்து நடித்த “வந்தே மாதரம்” ஆல்பத்தை இயக்கியதன் மூலம் இவர் அகில இந்திய ஃபேமஸ் என்பது குறிப்பிடத்தக்கது. தினசரிகளில் படித்த ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு, கற்பனை வேர்களில் பயணித்து மரியான் படத்தின் கதையை பரத்பாலா ஆக்கியிருக்கிறார். நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய முயற்சி தான். திரைக்கதை ஆக்கத்தில் பரத் பாலா – ஸ்ரீராம் ராஜன் என்பவருடன் கைகோர்த்திருக்கிறார். உண்மையில் இருவரும் சேர்ந்து கொஞ்சம் போல சொதப்பி இருக்கிறார்கள். முதல் பாதி ஜவ்வு போல இழுக்கிறது. இரண்டாம் பாதி ஓரளவிற்குப் பரவாயில்லை. கடல் மற்றும் கடல் சார்ந்த படங்களில் வரும் ஹீரோக்கள் வித்தியாசமானவர்கள். தனியாளாக சமுத்திரத்திற்குச் செல்லுவார்கள். ஆளுயர மீனை கயிற்றில் கட்டி நடுவிரலில் கொக்கிபோட்டு இழுத்து வருவார்கள், புயல் எச்சரிக்கை விட்டு காற்றடிக்கும் சமயத்தில் தான் கவனம் பிசகாமல் ஹீரோக்கள் மீன்பிடிக்க நடுக் கடலுக்குச் செல்வார்கள். இதுபோன்ற ஏகப்பட்ட அசகாய சாகசத்தை கதாநாயகர்கள் செய்வார்கள். அதற்கு இந்தப் படமும் விதிவிலக்கல்ல.
(மரியான் இயக்குனர் பரத்பாலா & அவருடைய உதவியாளர்கள் டீம்)

ஒருவகையில் கமர்ஷியல் சினிமாவில் இதுபோன்ற சாகசங்கள் தவிர்க்கமுடியாத ஒன்று. வில்லன் கதாப்பாத்திரமும் அடி வாங்குகிறாரே ஒழிய ஒருவரையும் திருப்பி அடிக்கவில்லை. யாருமில்லா நேரத்தில் ஹீரோயினியை மட்டும் வில்லங்க ஆசாமி ஓரிடத்தில் பலவந்தம் செய்கிறார். அந்த நேரம்பார்த்து கதாநாயகியின் தந்தை பின்மண்டையில் அடிக்கவும், வில்லன் செத்த பாம்பாகப் படுத்துவிடுகிறார். தனுஷிடம் கூட அடிவாங்குகிறாரே ஒழிய திருப்பி அடிக்கவில்லை.

மரியான் கதாப்பாத்திரம் சூடான் கம்பெனியில் வேலை செய்வதில் இருந்துதான் திரைப்படம் ஆரம்பிக்கிறது. காலத்தை நிர்ணயிக்கும் எந்த ஒரு விஷயமும் படத்தில் இல்லை. சுவற்றில் மாட்டிய கேலண்டர் இருந்தாலும், அதில் தேதிகள் முழுவதும் கிழிக்கப்பட்டு கன்னி மரியாள் அல்லது ஜீசஸின் உருவம் அச்சிடப்பட்ட காகித அட்டை மட்டும் சுவற்றில் தொங்குகிறது. ஒரேயொரு அதரகாலத்துத் தொலைபேசிதான் மரியானின் சொந்த ஊரான கடல் கிராமத்தில் இருக்கின்றது. அதுவம் ஓர் அரசு பள்ளியில் தான் இருக்கின்றது. பள்ளியின் கரும்பலகையில் ஏதோதோ எழுதியிருந்தாலும், தேதி மட்டும் நுட்பமாகத் தவிற்கப் பட்டிருக்கின்றது. 


அரசு பள்ளியின் தொலைபேசி மூலம் தான் கதாநாயகியை சூடானிலிருந்து கதாநாயகன் தொடர்பு கொள்கிறான். “செல் ஃபோன், டிவி” போன்ற நவீன சாதனங்கள் எதுவும் திரைப்படத்தில் தென்படவில்லை. சூடானிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பும் வழியில் தான், மரியான் கொள்ளையர்களால் கடத்தப்படுகிறான். பின்னோக்கு யுக்தியில் திரைப்படம் பயணித்து, சூடானில் கடத்தப்பட்ட இடத்திலிருந்து மீண்டும் நிகழ்காலத்தில் தொடர்கிறது. கடத்தல் காரன் ஒருவனுடைய கழுத்தில் மண்டை ஓடுபோன்ற ஒன்று தொங்குகிறது. அவனுடைய கும்பல் எப்பொழுதும் துப்பாக்கியால் சுட்டவன்னமே இருக்கிறார்கள். சொந்த நாட்டின் எண்ணெய் வளம் சுரண்டபடுவதை எதிர்த்து அவர்கள் தீவிரவாதத்தைக் கைகளில் எடுக்கிறார்கள். அவர்களைக் குடிகாரர்களாகவும், மோசமானவர்களாகவும் மட்டுமே சித்தரிக்கும் வேலையைச் செய்யாமல் - அவர்களது பாத்திரத்திற்கு இன்னும் கூட ஞாயத்தைச் செய்திருக்கலாம்.   

கடத்தல்காரர்களிடம் இருந்து மரியான் தப்பி இந்தியா திரும்புவதுதான் கதை. “அவன் ஏன் வெளிநாடு செல்கிறான்? எப்படித் தாயகம் திரும்புகிறான்?” என்பதுதான் வலைப் பின்னலில் சொல்லப்பட்டுள்ளது. மீன்பிடி வலையில் சிக்கிய சத்தைகள் போல சில இடங்கள் சோர்வையே ஏற்படுத்துகின்றன. தமிழர்கள் கடத்தப்பட்டதைக் குறித்த நாளிதழ் செய்தியோ அல்லது வானொலி செய்தியோ படத்தில் எங்குமே பதிவு செய்யப்படவில்லை. தூதரகங்கள் தலையிட்டது போன்ற எந்தப் பதிவும் திரைப்படத்தில் இல்லை.

நடிகர்களின் காஸ்டியூம் பெரும்பாலான காட்சிகளில் தகதக ஜகஜகவென ஜொலிக்கின்றன. மூச்சடக்கி கடலின் ஆழத்தில் சென்று ஏதேனும் சேகரிப்பவர்கள் காட்டர்ன் டிரெஸ் போடுவார்களா என்பது சந்தேகமே. அப்படியே போட்டாலும் தகதக ஜகஜகவென போடுவார்களா என்பது அதனினும் சந்தேகமே. ஒருகிராமத்தில் மின்சாரம் இருக்கிறது. வீடுகளில் மின்விசிறியும் இருக்கின்றது. பொத்தானைத் தட்டினால் பளீரென ஒளிரும் மின்விளக்கும் இருக்கின்றது. அப்படியிருக்க லாந்தர் விளக்கையும், சிம்னி விளக்கையும் பயன்படுத்துவானேன். காட்சிகளின் அழகியலைக் கூட்ட பயன்படுத்தியிருக்கும் இதுபோன்ற விஷயங்கள் ஒருவிதமான அந்நியத் தன்மையை ஏற்படுத்துகின்றன. மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் செய்தது போலவே ஏ. ஆர். ரகுமான் இந்தப் படத்திலும் செய்திருக்கிறார். பாடல்கள் ஒன்று கூட படத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்டவில்லை. ஜவ்வுபோல இழுக்கும் திரைக்கதையை இவரது மெட்டுக்கள் மேலும் ஜவ்வு போல இழுக்கின்றன.

வசனப் பங்களிப்பை ஜோ டி குரூஸ் ஏற்றிருக்கிறார். எனினும் சிறப்பாகப் பங்காற்றியிருக்கிறார் என்று சொல்ல முடியாது. சில தருணங்களில் தேய்ந்த வட்டார வழக்குகளும், சில இடத்தில் தெளிவான தமிழ் உச்சரிப்புகளும் இருக்கின்றன. ஏற்கனவே சொல்லியதுபோல செல் ஃபோன் வராத நவீன அறிவியியல் கண்டுபிடிப்புகளுக்கு முற்பட்ட, தொலைக்காட்சியும் அதிக புழக்கத்தில் இல்லாத, வானொலி மட்டுமே இருக்கக்கூடிய கிராமத்தில் புழங்கும் வட்டார மொழி இந்தப் படத்தில் இருப்பதுபோல தெரியவில்லை. மரியானின் பின்னால் சுற்றுவதால் ஹீரோயினின் வீட்டிற்கு முன்பு நின்று மரியானின் தாய் கூச்சலிட்டு விட்டுச் செல்கிறார். அதன் பின்னர் இரவுநேரத்தில் தனியறையில் படுத்திருக்கும் ஹீரோ மரியானை சந்தித்து லிப் லாக் செய்யப் போராடுகிறார் ஹீரோயின் பனிமலர். 

(நடிகர் தனுஷுடன் - எழுத்தாளர் ஜோ டி குரூஸ்)

“ஏய்... சீவி(அம்மா) சும்மாவே ஊரைக் கூட்டிடுவா... நீவேற கூட இருக்குற... இங்கிருந்து போயிடு...” என்கிறார் ஹீரோ.

“காலைலயே வீட்டுக்கு முன்னாடி நின்னு announcement பண்ணிட்டாங்க” என்கிறாள் ஹீரோயின் பனிமலர்.

ரொமான்ஸ் சீன் என்பதால் தனுஷின் இளவட்ட ரசிகர்கள் அரங்கைப் பிளக்கும் வகையில் கோஷமிட்டார்கள். என்றாலும் இந்த “announcement” என்ற வார்த்தை அமெரிக்கன் ஆக்செண்டில் தெளிவாகக் காதில் கேட்டது. உண்மையில் “ஜோ டி குரூஸ்” நிறையவே பங்காற்றியிருப்பார் என்ற நம்பிக்கையில் தான் சென்றிருந்தேன். அவரை முழுமையாகப் பயன்படுத்தினார்களா என்பதும் சந்தேகமாகவே இருக்கின்றது.

தனுஷ் மற்றும் பார்வதி மேனனுக்கு அடுத்தபடியாக பாராட்டப்பட வேண்டிய முக்கியமான நபர் கேமரா மேன் Marc Koninckx. இவரது செய் நேர்த்தியால் தான் ஒவ்வொரு ஃப்ரேமும் கண்களைக் கவர்கிறது.

நடிப்பாலும், கேமராவாலும் ஓரளவிற்குத் தப்பி இருக்கும் படம் “மரியான்”. அதற்குமேல் வேறொன்றும் சொல்லுவதற்கு இல்லை. படத்தை எத்தனை முறை பார்க்கலாம் என்பது அவரவர் விருப்பம். (இத்தனை முறை பார்க்கலாம், அத்தனை முறை பார்க்கலாம் என்று நாட்டாமை செய்யும் தீர்ப்பு என்னுடைய தன்மைக்கு ஒத்துவராத ஒன்று.)

“படம் என்ன அரசியல் பேசுது? இதுவரைக்கும் பேசாத எந்த விஷயத்தைப் பேசுது?” என்று ஆராய்ந்து அலசுவது தேவையில்லாத வேலை என்று நினைக்கிறேன். இதற்கு முன்பு அதுபோல ஆராய்ந்து ஏதேனும் தீர்வு கண்டோமா? ஒவ்வொரு கடல் சார்ந்த படங்கள் வெளியான போதும் இது போன்ற ஆதங்கங்கள் ஏராளமாக முன் வைக்கப்பட்டுள்ளன. கமர்ஷியல் சினிமா காதலைத் தான் மையமாகப் பேசும். ஏனெனில் காதல் மட்டுமே எல்லா காலங்களிலும் சினிமா மூலம் விற்பனையாகும் ஒப்பற்ற பண்டம். மரியான் படமும் காதலைத் தான் பேசுகிறது. இது ஆவரேஜ் மூவி தான். என்றாலும் இளைஞர்கள் இருக்கிறார்கள் மரியானைக் காப்பாற்ற. அப்படியும் இல்லையெனில், நாந்தான் ஆரம்பத்திலேயே சொன்னேனே “குருவி”-யைக் கூட பாக்ஸ் ஆபீஸ் ஹிட் லிஸ்டில் சேர்த்து அழகு பார்க்கும் வம்சாவளி நாம். அவ்வளவு சீக்கிரத்தில் மாறிவிடுவோமா என்ன?

மரியானை நடுக்கடலில் தவிக்க விடுவோமா என்ன?

Thursday, July 18, 2013

திசை மாறும் பறவைகள் – கல்விச் சூழல்

ஹிந்து நாளிதழில் ZOHO ஊழியர் “சரண்பாபு”-வைப் பற்றி வெளிவந்திருந்த ஒரு செய்தியை முகநூலில் பகிர்ந்திருந்தேன். (Coding a success)

“+2 படித்துவிட்டு கணினி நிரல் எழுதுபவராக இருக்கிறாரா?” என்று சில நண்பர்கள் வியப்புடன் கேட்டனர். சிலர் ஸ்ரீதர் வேம்புவை பாராட்டித் தள்ளினர். இதுபோன்ற “வியப்புகளும், பாராட்டுகளும்” தேவையில்லாத விஷயமாகத் தான் எனக்குப் படுகிறது.“ஸ்ரீதர் வேம்பு” - தெளிவான பிசினஸ் மேன். “சரண் பாபு” – தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, தனது பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்ட ஒருவர். பரஸ்பர இருத்தலியல் தேவைதான் இவர்கள் இருவரையும் பிணைத்திருக்கிறது. “மகாபாரத மனிதர்கள் காட்டும் மகத்தான வாழ்க்கை” என்று சாருகேசி மொழிபெயர்த்த குர்சரண் தாஸ் எழுதிய “The Difficulty Of Being Good” என்ற ஆங்கிலப் புத்தகத்தில் ஒரு வாக்கியம் வரும்.

“ஒருவரது சுயநலம் சமுதாய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் எனில் சுயநலமானது சிறப்பான ஒன்றுதானே..!” என்கிறார் குர்சரண் தாஸ். இந்திய கல்வி நிறுவனங்களில் என்ஜினியரிங் படித்த மாணவர்கள் குரங்குகளைப் போல சுயநலம் சார்ந்து நாடுவிட்டு நாடு தாவுகிறார்கள். தனியார் கல்லூரிகளில் படித்த என்ஜினியரிங் மாணவர்கள் வானரங்களைப் போல ஆறுமாதத்திற்கு ஒருமுறை கம்பெனி விட்டுக் கம்பெனி மாறுகிறார்கள். பெரிய பெரிய நிறுவனங்கள் இந்தத் தாவுதலை சுலபமாகத் தாங்கி விடும். என்றாலும் சிறு மற்றும் நடுத்தர தனியார் நிறுவனங்கள் – பட்டதாரிகளின் இந்த சுயநலத் தாவுதலைச் சமாளிக்க முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள். இங்குதான் ஸ்ரீதர் வேம்பு – Zoho-வை வளர்த்தெடுக்கும் நேரத்தில் புத்திசாலித் தனமாக “Zoho University” என்ற தொலைநோக்குத் திட்டத்தைப் பற்றி யோசிக்கிறார். தன்னுடைய தொழில் வளர்ச்சி சார்ந்த சுயநலம் Zoho-வின் நிறுவனருக்கு இதில் இருக்கிறது. எனினும் மறைமுகமாக சமுதாய முன்னேற்றத்திற்கும் ஸ்ரீதர் வேம்புவின் சுயநலம் வழிவகுக்கிறது. (கிராமப்புற எளிய மாணவர்களின் நலன் கருதி யாரேனும் Zoho University-ன் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டால், பதில் மின்னஞ்சல் வருவதில்லை என்ற வருத்தத்தைப் பலரும் தெரிவிக்கின்றனர். இதனை Zoho கவனத்தில் எடுத்துக்கொண்டால் மகிழ்சியே.)

பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் ஒரு புள்ளியில் தன்னுடைய விருப்பப் படிப்பைத் தவிர்த்து, வேறு பாதை நோக்கிப் பயணிக்கத் தொடங்குகிறார்கள். கிண்டி கார்பொரேஷன் பள்ளியில் படித்த சரண் பாபுவை சூழல் தான் வேலை தேட வைத்திருக்கிறது. இன்று அவர் கணினி நிரல் எழுதுபவராக மென்பொருள் துறையில் முத்திரைப் பதித்து வருகிறார் என்பதை ஹிந்து நாளிதழின் மூலம் அறிய நேர்ந்தது. எல்லோருடைய வாழ்விலும் இதுபோன்ற மடைமாற்றங்கள் நிகழும் என்று சொல்லுவதற்கில்லையே. மடைமாற்றங்கள் நல்ல பாதைக்கு எல்லோரையும் இட்டுச் செல்லும் என்பதையும் எதிர்பார்க்க முடியாது தானே.

சமீபத்தில் தொலைதூர கிராமத்தில் வசிக்கும் தம்பியொருவரிடம் பேசினேன். இளங்கலையில் தேறிய அந்தத் தம்பி, சென்னை பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறையில் முதுநிலை படிக்க விண்ணப்பித்திருக்கிறார். தம்பியை நேர்முகத்திற்கும் அழைத்திருக்கிறார்கள். தம்பியின் பதில்கள் நேர்முகம் செய்தவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

“பாருங்க... நீங்க பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். அந்த கோட்டாவுல உங்களுக்குக் கண்டிப்பா எடம் கெடைக்கும். நீங்க வந்து உடனே ஜாயின் பண்ணிக்கலாம்” என்று நம்பிக்கை அளித்திருக்கிறார் தேர்வு செய்தவர்.

“நான் தொலைதூர கிராமத்துல இருக்கேன் சார். ஹாஸ்டல் ஃபெசிலிட்டிக்கு உத்தரவாதம் கொடுத்திங்கன்னா... நான் உடனே வந்து ஜாயின் பண்ணிக்கிறேன். சென்னையில ரூம் எடுத்து பிரைவேட்டா தங்கி படிக்கறது கஷ்டங்க சார்.” என தனது சூழலை சொல்லி இருக்கிறார் அந்தத் தம்பி.

“அதுக்கெல்லாம் நாங்க உத்தரவாதம் கொடுக்க முடியாது. படிக்கறதுக்கு சீட்ட கன்ஃபார்ம் பண்ணிட்றேன். மத்தத நீங்க தான் பாத்துக்கணும்.” என்கிறார் நேர்முகம் செய்தவர்.

ஏன்யா... கிராமத்துல இருந்து சென்னையில் படிக்க ஒரு மிடில் கிளாஸ் பையன் வரான், இளங்கலையில் தமிழுக்குச் சமந்தமே இல்லாத வேறு பாடத்தை எடுத்துப் படித்திருந்தாலும் இலக்கியம் படிக்க விருப்பத்தோட வரான், அதுவும் முதல் தலைமுறை பட்டதாரி என்னும் பொழுது, அவனுக்கான வசதிகளை செய்துகொடுப்பதில் – ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஜெர்க் அடிக்கிறது என்பது வேதனைக்குரிய விஷயம். சென்னையைச் சுற்றிலுமுள்ள தலித்துகளும், பிற்படுத்தப் பட்டவர்களும் மட்டுமே, சென்னை போன்ற நகரங்களில் படிக்க இயலும் எனில் அதனைவிட வேதனைக்குரிய விஷயம் என்னவாக இருக்க முடியும். கல்லூரியில் இடம் கிடைத்தாலும், விடுதியில் இடம் கிடைக்க இவர்கள் போராட வேண்டி இருக்கிறது. இதோ அந்தத் தொலைதூர கிராமத்தில் வசிக்கும் இளைஞர் வேறு துறையைச் சார்ந்து, தொலைதூரத் தமிழகத்தில் இருக்கும் வேறொரு கல்லூரியில் சேர்ந்து படிக்க இருக்கிறார். அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் வசதி படைத்த அல்லது சென்னையிலுள்ள அல்லது புறநகர் சென்னையிலுள்ள பிற்படுத்தப்பட்ட மாணவர் ஒருவர் – அந்த தமிழ் இலக்கியத் துறையின் கேஸ்ட் கோட்டா இடத்தை நிரப்பக் கூடும் என்றாலும் பொருளாத மற்றும் யதார்த்தச் சிக்கல் மாணவரின் விருப்பப் படிப்பை சூறையாடத் தானே செய்திருக்கிறது.

சாதிய அடிப்படையில் ஒருவருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கிறீர்கள் சரி. அவரை நேர்முகத்திற்கும் அழைக்கிறீர்கள் அதுவும் சரி. எனினும் பொருளாதாரச் சிக்கலால் அவருடைய படிப்பு கேள்விக் குறியாகிறது எனில் அதனைப் பல்கலைக் கழகம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டாமா? அதுவும் முதல் தலைமுறை பட்டதாரி எனில் அவரது விண்ணப்பப் படிவத்தை கவனமாக கருத்தில் கொண்டு பல்கலைக் கழகம் இந்த மாணவரின் சூழ்நிலையை பரிசீலனை செய்ய வேண்டாமா? அப்படி செய்யாமல் துறை சார்ந்த எதிர்கால ஆளுமைகளை எப்படி உருவாக்குவீர்கள்? கல்விக் குழுக்கள் சமுதாயத்தை எப்படி கடைத்தேற்றும்? பல்கலைக் கழகத்தில் சேருவதற்கான தகுதியிருந்தும், அதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியாத சூழல் இந்த மாணவ இளைஞர் ஒருவருக்கு மட்டும் இல்லை. எத்தனை எத்தனை இளைஞர்கள் இவரைப் போல ஆண்டுதோறும் பாதிக்கப் படுகிறார்களோ தெரியவில்லை!

கிராமப்புற தலித் மாணவர்களுக்கு மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் – தரமான படிப்பானது எட்டாக் கனியாகவே இருக்கின்றது. திறமையான மாணவர் என்று தெரிந்தால், நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு வைத்து – அதன் மூலம் தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு பணி உத்தரவாதத்துடன் ஒரு தனியார் நிறுவனம் மாணவர்களை படிக்க வைக்க முன்வருகிறது. ஆனால் நூற்றாண்டுகால பழமைமிக்க ஆசியாவின் புகழ்பெற்ற ஒரு பல்கலைக் கழகம், ஏராளமான கல்வி மானியங்களை சன்மானமாகப் பெரும் பிரசித்திபெற்ற ஒரு பல்கலைக் கழகம் – கிராமப்புற மாணவர்கள் தகுதியானவர்கள் தான் என்று தெரிந்திருந்தும், அவர்களின் வாழ்வியல் முன்னேற்றத்தில் பங்கெடுக்க முடியாத சூழலில் இருக்கிறது எனில் அது வேதனைக்குறிய விஷயம். ஒரு பல்கலைக் கழகத்திற்கே இதுதான் நிலைமை எனில் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளை என்ன சொல்வது?

மனிதர்களின் பதில் காற்றைக் குழைத்து நீரால் எழுதுவதற்குச் சமமானது. காலம் சொல்லும் பதிலோ அர்த்தம் நிறைந்தது. சரண் பாபுவைப் பற்றிய ஹிந்து நாளிதழ் செய்தி காலம் சொல்லிய பதில்களில் ஒன்று. போலவே, தொலைதூர கிராமத்துத் தம்பியைப் பற்றியும் ஒருநாளில்லை ஒருநாள் காலம் நிச்சயமாக பதில் சொல்லும். அன்றைய தினம் உங்களுக்கு அவனை அறிமுகப்படுத்துகிறேன். காலம் சொல்ல வேண்டிய பதிலுக்கு தம்பி தன்னை ஆயத்தப் படுத்திக்கொண்டு வருகிறார். மீண்டும் சிந்திப்போம்.

Monday, July 15, 2013

சென்னை மாணவர்களின் ரவுடித்தனம்

(வண்டி எண்: TDJ 0014, பதிவு எண் TN – 01, N 9793: 159 A திருவெற்றியூர் to CMBT)பாரிமுனையில் நண்பர்களுடனான வியாபார அடிப்படையிலான தேநீர் உரையாடலை முடித்துவிட்டு, நண்பர் பிச்சைப்பாத்திரம் சுரேஷ் கண்ணனைச் சந்திக்க மதியம் போல சென்றிருந்தேன். சில நிமிட நேரங்கள்தான் அவருடன் பேச முடிந்தது. அங்கிருந்து கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரிக்குச் செல்வதுதான் என்னுடைய பயணத் திட்டம். பாரிசிலிருந்து 15G சொகுசு பேருந்தில் ஏறி டெய்லர்ஸ் சாலையில் இறங்கினேன். சொகுசுப் பேருந்துகள் பச்சையப்பன் கல்லூரி நிறுத்தத்தில் நிற்காது என்பதால் தான் ஒரு நிறுத்தத்திற்கு முன்பே இறங்கி, வேறொரு பேருந்திற்காகக் காத்திருந்தேன். திருவற்றியூரிலிருந்து கோயம்பேடு நோக்கிச் செல்லும் 159-A தடம் எண் “White Board” பேருந்து உடனே வந்தது. ஒரே ஓட்டமாக ஓடி பேருந்தில் ஏறினேன். சில இளைஞர்கள் பேருந்திலும், சில இளைஞர்கள் படியிலும், சில இளைஞர்கள் பேருந்துக்கு வெளியிலும் நின்றிருந்தனர். பேருந்து மெதுவாக நகர்ந்து வேகம் எடுத்தது. வெளியில் நின்றிருந்த மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி பயணம் செய்ய ஓடி வந்தார்கள்.

உள்ளே நின்றிருந்த இளைஞர்கள் குரலெழுப்பி ஆரவாரம் செய்தார்கள். பச்சையப்பன் கல்லூரியைப் புகழ்ந்து கானாப் பாடல்களும் பாடிக் கொண்டிருந்தனர்.

“ஏம்பா இப்பிடி பண்றிங்க? விழுந்திங்கன்னா என்ன ஆவறது? உள்ள வாங்க?” என்றார் மத்திய வயதுடைய நடத்துனர் சலிப்பான குரலில். உள்ளே நின்றிருந்த மாணவர்களில் ஒருவன் நடத்துனரின் முகத்தில் அறைந்து கீழே தள்ளினான். அவர் பயணிகள் இருக்கைகளுக்கு இடையிலுள்ள இடைவெளியில் கீழே சரிந்தார். கடைசி இருக்கையில் நான் அமர்ந்திருந்ததால் மாணவர்களின் ரவுடித்தனம் எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. சுதாரித்து எழுந்து செல்வதற்குள் நான்கு மாணவர்கள் நடத்துனரின் மார்பில் எட்டி எட்டி உதைத்தனர். முன்பக்கத்தில் நின்றிருந்த மாணவர்களும் இந்த அடாவடியில் சேர்ந்துகொண்டனர். ஏறக்குறைய பதினைந்து மாணவர்கள் இருந்தனர். நான்கைந்து பேர் ஒன்றாகச் சேர்ந்து நடத்துனரைத் தாக்கினர். கண்டக்டரின் பணப்பை அவருடைய கக்கத்தில் இருந்தது. இல்லையேல் அவர்கள் காலால் எத்துவதை நடத்துனரால் தடுத்திருக்க முடியும் என்றே நினைக்கிறேன்.

ரவுடி மாணவர்கள் எல்லோருக்கும் 18 - 20 வயதுதான் இருக்கும். நடத்துனருக்கு 35-40 வயதிருக்கும் என்றே நினைக்கிறேன். முகத்திலும், தலையிலும் என்னைக் காட்டிலும் குறைவான நரைமுடிகள் தான் தென்பட்டன. பயணிகள் எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டோம். கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த நான் எழுந்து நடத்துனரின் அருகில் செல்ல நினைக்கையில், கைக்குழந்தையுடன் அருகில் உட்கார்ந்திருந்த தாயொருத்தி “ஐயையோ பயமா இருக்கு...” என்றவாறு எழுந்து நின்று கொண்டாள். குழந்தைக்கு மிஞ்சிப் போனால் ஒன்றரை வயது காணாது.

அவளுடைய கையை பிடித்து “நீங்க உக்காந்துக்கோங்க...! இந்த எடத்த விட்டு நகராதிங்க...” என்று அவளை சமாதானப்படுத்தி விட்டுத் திரும்பிப் பார்க்கிறேன். சரமாரியாக நடத்துனரை அடித்துக் கொண்டிருந்த இளைஞர்களும், படிக்கட்டில் நின்றுகொண்டிருந்த இளைஞர்களும், பேருந்தின் முன்னால் நின்றுகொண்டிருந்த மாணவர்களும் – அவசர அவசரமாக பேருந்தைவிட்டு இறங்கி ஓடிக்கொண்டிருந்தனர். இதற்குள் வண்டி பச்சையப்பன் கல்லூரியை நெருங்கிவிட்டது. சிலர் பச்சையப்பன் கல்லூரியை ஓட்டினார் போல இருக்கும் பெட்ரோல் பங்கின் பக்கத்தில் செல்லும் நிழற்சாலையிலும், சிலர் பச்சையப்பன் கல்லூரி பேருந்து நிற்கும் இடத்திலுள்ள தகரத் தடுப்பின் இடைவெளி வழியாகவும், சிலர் மதில் சுவரேறியும் கல்லூரிக்குள் நுழைந்து விட்டனர். முன்னால் அமர்ந்திருந்த பெண் ஒருவர் அடி வயிற்றிலிருந்து குரலெடுத்து மாணவர்களுக்கு சாபம் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆண்கள் இருக்கையில் அமர்ந்திருந்த எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர். கண்டக்டர் நிராயுத பாணியாக “ஒரு பொது எடத்துல இப்படிப் போட்டு அடிக்கிறாங்க!? ஒருத்தராவது எதாச்சும் கேட்டிங்களா? இங்கிருந்து பஸ்ஸ எடுக்க நான் விடமாட்டேன்” என்று பேசிக்கொண்டே நடந்தவாறு, தனது மொத்தக் கோவத்தையும் ஓட்டுனரிடம் காண்பித்துக் கொண்டிருந்தார். பச்சையப்பன் கல்லூரிக்கு முன்பு எப்பொழுதுமே ஒன்றிரண்டு போலீஸ் பாதுகாப்பில் இருப்பார். இரண்டு நாட்களாக கல்லூரிக்குள் ஏதோ மாணவர்கள் சண்டை என்பதால் அதிகப்படியான போலீசார் காவலுக்கு நின்றிருந்தனர். நான் பேருந்தை விட்டுக் கீழிறங்கி நேராக போலீசாரிடம் சென்றேன். “பேருந்தில் நடந்த களேபரத்தை” விளக்கமாகச் சொல்லிக் கொண்டிருந்தேன்.

“தேவிடியா பசங்க... பஸ்சுல இருக்க பொம்பளைங்கள வச்சி அவனுங்க மூஞ்சியிலையே காறித் துப்பச் சொல்ல வேண்டியது தானே...! தாயோளி மவனுங்க...” என்று சில போலீசார் நான் விளக்கியதைக் கேட்டுத் திட்டிக் கொண்டிருந்தது காதில் கேட்டது.

கண்டக்டர் இறங்கி கல்லூரிக்குள் ஓடினார். அவரின் பின்னாலேயே சில காவலர்களும் ஓடினர். ஒரு பெண் போலீஸ் தான் இன்சார்ஜ் என்றார்கள். அவரிடம் “என்னுடைய பெயர், முகவரி, மொபைல் எண்” – போன்றவற்றைக் கொடுத்து, “எப்போ வேணும்னாலும் கூப்பிடுங்க...! நான் வந்து சாட்சி சொல்றேன்... இந்த காலேஜ் பசங்கதான் கண்டக்டர அடிச்சாங்க...” என்றேன். “நிச்சயமா கூப்பிட்ரேங்க சார்...” என்றார்.

தகவல்கள் கொடுக்கும் பொழுது நானும் பச்சையப்பன் கல்லூரியின் முன்னால் மாணவன் தான் என்றதும் அந்தப் பெண் காவலர் சிரித்தார். எனக்கென்னவோ முகத்தில் காரி உமிழ்ந்தது போலவே இருந்தது.

இதைப் போலவே நீண்ட நாட்களுக்கு முன்பு, கேணி இலக்கிய சந்திப்பு முடிந்து, அறிவு ஜீவி நண்பர்களுடன் வெளியில் நின்று ஒருமுறை பேசிக் கொண்டிருந்தேன். பதின் பருவ இளைஞர்கள் இரண்டு குழுக்களாக ஒருவருடன் ஒருவர் மோதிக் கொண்டனர். ஒருவன் கீழே விழுந்ததில், மண்டையில் நல்ல அடிபட்டு மயக்கு நிலைக்குச் சென்றுவிட்டான். சுற்றிலும் இருந்த எல்லோரும் செய்வதறியாமல் உறைந்துவிடோம். எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் தான் 108-க்குத் தொடர்பு கொண்டு ஆம்புலன்சை வரவழைக்க போராடிக் கொண்டிருந்தார். புரசைவாக்கம் வழியாகச் செல்லும் பேருந்தில் ஒருநாள் பள்ளி மாணவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து ஒருவரை ஒருவர் காட்டுமிராண்டித் தனமாக அடித்துக் கொண்டனர். இவற்றையெல்லாம் சின்னச் சின்ன சண்டைகள் என கவனிக்காமல் விட்டு விடுகிறோம். அதுதான் பிரச்சனையே.

சென்னைக் கல்லூரி மாணவர்கள் வீச்சருவாலை வைத்துக்கொண்டுச் சுற்றுவதாக சமீபத்தில் நாளேடுகளில் கூட எழுதினார்கள். நானே கூட சில மாணவர்கள் ஆயுதங்களுடன் சுற்றுவதைப் பார்த்திருக்கிறேன். சென்னையைச் சுற்றிலுமுள்ள எல்லா கல்லூரிகளிலும் 20 சதவீத மாணவர்கள் விஷக் கிருமிகளாகத் தான் இருக்கிறார்கள். “வெட்டுவது, குத்துவது, வழிப்பறி, அடிதடி” போன்ற காரியங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் மாணவர்களாகத் தான் இருக்கிறார்கள். காவல் துறைக்கும் இது தெரிந்தே இருக்கிறது. என்றாலும் மாணவர்களை ஒன்றும் செய்ய முடிவதில்லை. ஏனெனில் அவர்களின் பின்னால் மாணவ சமுதாயமே இருக்கிறது. நல்ல பிள்ளைகளுக்கு துணை நிற்கிறதோ இல்லையோ, தருதலைகளுக்குத் துணை நிற்க இந்தியா முழுவதிலுமுள்ள ஸ்டூடன்ட் ஃபேடரேஷன் அமைப்புகள் தயங்குவதே இல்லை.

நடத்துனரைத் தாக்கிய மாணவர்கள் ஓடி கல்லூரிக்குள் தஞ்சம் அடைந்து விட்டார்கள். (ஏறக்குறைய பதினைந்து மாணவர்கள்) போலீசால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இத்தனைக்கும் நான் காவலர்களிடம் “ஒரு பையன் பழுப்பு நிற பேண்டும், வெள்ளை சட்டையும் அணிந்திருந்தான். புடிச்சிட்டு வாங்க நான் அடையாளம் சொல்றேன்... இப்போதான் அந்தப் பக்கம் ஓடினான்” என்றேன். ஒட்டகத்தை முழுங்கிய மலைப்பாம்பு போல காவலர்கள் நெளிந்தார்கள். அவர்களைச் சொல்லியும் குற்றம் இல்லை. யதார்த்தம் அவர்களைத் தடுக்கிறது. வேறென்ன செய்ய இயலும்.

இன்று கண்டக்டரை அடித்தார்கள். ஒரு தாய் தனது குழந்தையை அனைத்துக் கொண்டு பயந்து அலறினாள். நாளை மற்றொரு நாள் – இதே இளைஞர்கள் பொது இடத்தில் பெண்களின் கையைப் பிடித்து இழுக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். பாலியல் பலாத்காரம் செய்ய மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? சென்னை போன்ற மாநகரங்களில் குற்றச் செயல்கள் அதிகம் நடக்கக் காரணம் தறுதலை மாணவர்கள் தான். அவர்களால் தான் மற்ற மாணவர்களின் பெயரும் கெடுகிறது. ரவுடி மாணவர்களுக்குக் கடிவாளம் போட்டாலே பாதி சமூகக் குற்றங்கள் குறைய வாய்பிருக்கிறது.

கண்டக்டருடன், டிரைவரும் கல்லூரிக்குள் சென்று தனது ஆதங்கத்தை போலீசாரிடம் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தனர். நான் அந்த பெண் காவலரிடம் நடந்ததைக் கூறி குற்றத்தைப் பதிவு செய்ய வேண்டிக் கொண்டிருந்தேன். சாலையின் ஓரத்தில் நின்றிருந்த பிரச்னை நடந்த பேருந்தில் இருந்து யாரும் கீழே இறங்கவில்லை.

“மாணவ சமூகமே...! இலங்கைத் தமிழர்களுக்கு உண்ணாவிரதம் இருந்து ஈழத்தை மீட்கப் போகிறோம்...” என்று புறப்பட்டீர்கள் சரி. பாராட்ட வேண்டிய சமூக அக்கறை தான். “தமிழ் நாட்டுல இருக்க தமிழர்களை எப்போதிருந்து நிம்மதியாக வாழ வாழ விடப் போகிறீர்கள்...!?”

# “கணித மேதை ராமானுஜம்” இங்க தான் படிச்சாரு, “மு. வ” இங்கிட்டுதான் வேலை செஞ்சாரு, “அண்ணா” இங்க தான் படிச்சாரு, “முரசொலி மாறன்” இங்குட்டு தான் நொட்டினாரூ, “வைரமுத்து” இங்க தான் ஒலாவினாரூ என பட்டியலிடும் பச்சையபா’ஸ் முன்னாள் மாணவர்களே... இந்த விஷயத்தையும் பகிருங்கள். இந்தக் கல்லூரியின் லட்சணம் எல்லோருக்கும் தெரிய வேண்டும் இல்லையா?

Sunday, July 14, 2013

சினிமா காப்புரிமை - ஜெமோ கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

நலம் தானே? எனக்கொரு சந்தேகம் நீண்ட நாட்களாகவே இருக்கின்றது. “குறும்படம் சார்ந்து நீங்கள் வேலை செய்திருக்கிறீர்களா?” என்பது தெரியவில்லை. ஆனால் சினிமாவில் உங்களது பங்களிப்பை கடந்த சில ஆண்டுகளாக பார்த்துக் கொண்டு வருகிறேன். நேரடியாகவே கேள்விக்கு வருகிறேன். சினிமாவுக்கான கதை & திரைக்கதையை ஓர் எழுத்தாளன் எழுதி, வேறு இயக்குனர் சினிமாவாக எடுக்கிறார் என்றால், “கதை & திரைக்கதை” சார்ந்த உரிமம் எழுத்தாளனுக்குத் தானே செல்ல வேண்டும். மாறாக தயாரிப்பாளர்களுக்குச் சென்று கொண்டிருக்கிறது.

சென்ற தலைமுறை படைப்பாளிகள் இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். “கண்ணா லட்டு தின்ன ஆசையா?” என்ற திரைப்படத்தை வெளியிட தடைகோரி கே.பாக்கியராஜ் நீதிமன்றம் செல்கிறார். ஏனெனில் கதை தன்னுடையது என்கிறார். போலவே, “தில்லுமுல்லு” ரீமேக் படத்தை வெளியிடத் தடைகோரி விசு நீதிமன்றம் செல்கிறார். காரணம் திரைக்கதை மற்றும் வசனங்கள் என்னுடையது என்கிறார். ஆனாலும், சினிமாவில் எழுத்து சார்ந்து இயங்குபவர்களுக்கு ஞாயம் கிடைப்பதாகத் தெரியவில்லை.

இறுதியாக தயாரிப்புக் கம்பெனிகள் தான் நீதிமன்றத்தில் வெற்றி வாகை சூடுகின்றன. இது தமிழ் சூழலில் மட்டும் தான் நடக்கிறதா? அல்லது மலையாளத் திரையுலகிலும் இதுதான் நிலைமையா?

நீங்கள் 14 மலையாளப் படங்களுக்கு ஒரே நேரத்தில் “கதை, திரைக்கதை, வசனம்” எழுதுவதை கே. என். சிவராமன் வசந்தம் இதழில் கவர் ஸ்டோரியாக எழுதியதை படித்ததால் தான் இந்தக் கேள்வியை உங்களிடம் கேட்கத் தோன்றுகிறது.

வர்த்தக, வியாபாரம் சார்ந்து மட்டுமே இந்தக் கேள்வியை எழுப்பவில்லை. “எமோஷனல் வேல்யூ” – நாம் படைக்கும் எல்லாவற்றிலுமே இருக்கிறது. ஓர் எழுத்தாளன் – அவனுடைய படைப்பு சார்ந்த “எமோஷனல் வேல்யூ” சார்ந்தும் இந்தக் கேள்விக்கு பதில் அளிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

“மலையாள சினிமா உலகில் எழுத்தாளர்களுக்கு மதிப்பிருக்கிறது சரி... எழுத்தாளர்களுக்கான வியாபார ஞாயமும் இருக்கிறதா? இல்லையேல் தமிழ் சினிமாவைப் போலவே சினிமா எழுத்தாளர்கள் அங்கும் வஞ்சிக்கப்படுகிரார்களா?”

நீண்ட தெளிவான பதில் கிடைத்தால் மகிழ்வேன். நன்றி...

அன்புடன்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.

B.Jeyamohan
10:43 (12 hours ago)
அன்புள்ள கிருஷ்ணபிரபு

சினிமா ஒரு தொழில். அதைப்பற்றி ஏன் இந்த உணர்ச்சிகரமான ஈடுபாடு, ஏன் இத்தனை விவாதம் என எனக்குப்புரியவில்லை. தமிழ் சினிமாவில் எழுத்தாளனின் இடம் வணிகரீதியாக நிரூபிக்கப்படவில்லை. ஆகவே அவனுக்கு இங்கே பெரிய இடம் இல்லை. அவ்வளவுதான். எழுத்தாளனின் பங்களிப்பு வணிகரீதியாக நிரூபிக்கப்பட்டால் இடம் உருவாகும்.

அப்படி நிரூபணமாகிவிடக்கூடாது என முயலும் சினிமா காரர்கள் உண்டு. டிஸ்கஷன் வழியாக வாழ்பவர்கள் அவர்கள். எழுத்தாளர்கள் இதழாளர்கள் சிலருக்கும் அவ்வாறு எழுத்தாளன் இடம் நிரூபணமாகக்கூடாது என்ற பதற்றம் உண்டு. கடல் சம்பந்தமான விமர்சனங்களில் எழுத்தாளர்கள் சினிமாவுக்கு தேவையே இல்லை என்ற குரல் ஒலிப்பதை நீங்கள் காணலாம். இதெல்லாமே எதிர்மறை அம்சங்கள். வணிகத்தில் வணிகவெற்றி மட்டுமே அடையாளாமாக ஆகும்

மலையாளத்தில் எழுத்தாளன் இடம் வணிகரீதியாக நிறுவப்பட்டது. ஆகவே அங்கே இந்தப்பிரச்சினை ஏதும் இல்லை. டைடிலில் கதை-திரைக்கதை- வசனம் என்றே இருக்கும். படத்தின் முழு உரிமையும் எழுத்தாளனுக்கே. மறு ஆக்கம் உட்பட

ஜெ

Monday, July 8, 2013

சிறுவர் இலக்கிய வட்டம்

குழந்தைகளின் உலகம் பேண்டஸி நிறைந்தது. பேண்டஸியாக வாழும் பொழுது யதார்த்தச் சிக்கல்கள் தவிர்க்க முடியாத ஒன்று. கற்பனை உலகில் சுற்றித் திரிய பெரியவர்கள் விரும்புவதில்லை. பெரியவர்களின் யந்திரத் தனமான வாழ்க்கை சிறுவர்களை தனிமைச் சிறையில் வலிந்துத் தள்ளுகிறது. சமீப ஆண்டுகளின் தமிழ் மாநில மின்வெட்டுப் பிரச்சனை எல்லோரும் அறிந்த ஒன்றுதான். விடுமுறை நாட்களில் என்னுடைய அக்காவின் மகன் அகில் சொல்கிறான்:

“அம்மா... போர் அடிக்குது’ம்மா...” – எட்டு வயது கூட நிரம்பாதவன் இந்த வசனத்தைப் பேசுகிறான். வீட்டிலிருக்கும்போது, மின்சாதன விளையாட்டுப் பொருட்கள் தான் அவனுடைய நண்பர்களாக இருக்கின்றன. அல்லது சிறுவர் தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் தான் மூழ்கிவிடுகிறான்.

இது ஒரு பக்க பிரச்சனை என்றால், பெரியவர்களின் மனச் சிக்கல் வேறு விதமானது. மைன்ட் ஃப்ரஷ் நிறுவனர் கீர்த்தனா கிருஷ்ணமூர்த்தியிடம் முன் வைக்கப்படும் கேள்விகளில் பெரும்பாலும் இந்தக் கேள்வி இடம்பெற்றுவிடும்.

“மேடம், இந்த பசங்க தொல்ல தாங்கல...! சரியான வாலா இருக்காங்க... எந்தப் பொருள வாங்கி வச்சாலும் ரெண்டு வாரத்துல ரிப்பேர் பண்ணி வச்சிடுறாநுங்க. இல்லன்னா ஓடச்சிடுறானுங்க. என்ன பண்றதுன்னே தெரியல? எதனோட வேல்யுவுமே இவங்களுக்குத் தெரிய மாட்டேங்குது.”

பெற்றோர்களுக்கான குழந்தை வளர்ப்பு பயிலரங்கில் இந்தக் கேள்வி ஒவ்வொரு முறையும் கேட்கப்படும். “ஐயையோ.. இந்தப் பிரச்சனை எங்களுக்கும் இருக்கு... என்ன பண்றதுன்னே தெரியல” என மற்ற பெற்றோர்களும் ஆமாம் சாமி போடுவார்கள்.

“நீங்க கேக்குற கேள்வி சிக்கல் நிறைந்த ஒன்றுதான். ஞாயமான கேள்வியும் கூட. இதுக்கு பதில் சொல்றதும் கஷ்டம் தான். ஏன்னா...? உங்களோட வேர்வை நீங்க வாங்குற எல்லா ப்ராபர்டிலையும் இருக்கு. உங்க கஷ்டம் எனக்கு புரியுது. ஆனா... நீங்க ஒரு 300 வருஷத்துக்கு முன்னாடி வாழறதா இப்ப நெனசிக்கொங்க. அப்பல்லாம் அரசர்களோட ஆட்சிதான் நடந்துட்டு இருந்ததுன்னு உங்களுக்கே தெரியும்.” “ம்... ம்... ம்...” என்ற சப்தம் பெற்றோர்களிடமிருந்து எழும்.

“பாருங்க... நீங்க வாழற சமஸ்தானத்தோட ராஜா உங்ககிட்ட வந்து...இதோ பக்கத்துல இருக்க விளையாட்டு மைதானத்த ரெண்டு ரவுண்ட் ஓடிட்டு வாங்கன்னு சொல்றாரு. என்ன செயவிங்க?”

“கண்டிப்பா ஓடுவோம்...!” – இது பெற்றோர்கள்.

“சரி.... மைதானத்த ரென்று ரவுண்டு ஓடிநிங்க இல்ல... உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லன்னு வச்சிக்கோங்க?” என கீர்த்தனா சொன்னதும், சிலரது முகங்களில் அதிர்ச்சி ரேகைகள் எழும்.

“நெருப்புன்னா வாய் சுடாதுங்க. உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்ல. ஆனா. அந்த ராஜா உங்க எல்லோரையும் – ஊர் எல்லையில் இருக்கும் காவல் தெய்வமான கருப்பசாமி கோவிலை 101 முறை சுத்தச் சொல்றாரு... என்ன செயவிங்க?”

“ம்....ம்... கண்டிப்பா சுத்துவோம்.” – இது பெற்றோர்கள்.

“சரி... நீங்க எல்லோரும் ராஜா சொல்றாருன்னு ஏன் ஓடணும்?”

“ஓடலைன்னா கழுத்த வெட்டி தெருவுல தொங்க வுட்டுட மாட்டாரு...!” – இது யாரேனும் ஒரு பெற்றோர்.

“ஹாங்... அந்த காலத்து ராஜா மாதிரியே - உங்க பசங்களையும் நீங்க கண்ட்ரோல் பண்ணனும்னு ஆசப்படுறீங்க...! இது நடக்கற காரியமா?”

“கண்ட்ரோல் பண்ணலைன்னா பசங்க எப்படி ஒழுக்கமா வளருவாங்க?”

பசங்க கூட நெறைய பேசுங்க. நல்ல நல்ல ஒழுக்கக் கதைகள் சொல்லுங்க. வெறுமனே “பசிக்குதா? சாப்புடுறீயா? ஹோம் வொர்க் பண்ணிட்டியா? மெகா சீரியல் போடப்போறாங்க... இப்பவே சாப்புட்டுட்டு போயிடு?” – இதைத் தவிர குழந்தைகளிடம் வேறேதாவது பேசுறோமா?. குழந்தைகள் விளையாடும் கம்ப்யூட்டர் கேம்ஸ் எல்லாமே வன்முறை நிறைந்ததாகத் தான் இருக்கிறது. அப்படியிருக்கையில் குழந்தைகளிடம் மென்மையான சுபாவத்தை எப்படி எதிர்பார்க்கிறீர்கள் என்ற விதமாகத் தான் இருக்கும் கீர்த்தன்யாவின் கேள்விகள். கீர்த்தனா கேட்பதிலும் ஞாயம் இருக்கிறது. பெற்றோர்கள் தயங்குவதிலும் ஞாயம் இருக்கிறது. ஏனெனில் “மெகா சீரியல், ஆபீஸ் வொர்க்” என்று மூழ்கிவிடும் நாம் குழந்தைகளுக்கு எப்படிக் கதைகளைச் சொல்லுவது. கதைகளைப் படித்தால் தானே, சுவாரஸ்யம் குறையாமல் அடுத்தவர்களுக்கு கதை சொல்ல முடியும். இதற்கெல்லாம் நமக்கு நேரம் இருக்கிறதா? இந்த சிக்கலைத் தீர்வாகத் தான் “சிறுவர் இலக்கிய வட்டம்” முன்னெடுக்கப்பட இருக்கிறது.

குழந்தைகள் இலக்கியம் சார்ந்து தீவிரமாக இயங்கிவரும் நண்பன் விழியன் (உமாநாத்) மற்றும் இன்னும் சில வாசக நண்பர்களால் துவங்கப்பட்ட வட்டம் இது. குழந்தைகள் சார்ந்த கதையுலகினை வாசிப்பின் மூலமும், கதை சொல்லல் மூலமும் – கட்டி எழுப்ப ஒரு சிறு முயற்சிக்கான அடித்தளமாக நண்பர்கள் வட்டம் துவங்கிச் செயல்பட இருக்கிறது. சென்ற மாதம் இந்த ஆயத்தப் பணிகளுக்கான முதற் கூட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக சென்ற ஞாயிறன்று இரண்டாம் சந்திப்பும் இனிதாகவே நடந்து முடிந்தது. பல நண்பர்களும் சந்திப்பிற்கு விருப்பத்துடன் வந்திருந்தார்கள்.

கதை சொல்ல நண்பர்கள் தயாராக இருக்கிறார்கள். குழந்தைகளைத் தேடி நண்பர்கள் வருவார்கள். பெற்றோர்கள் அருகில் இருக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. வாரத்திற்கு ஒருமுறை உங்களுடைய குடியிருப்புப் பகுதிக்கு வந்து, குழந்தைகளை அமர்த்தி கதையுடன், கிராப்ட் செய்யவும் கற்றுத் தருகிறார்கள். ஒரு மொட்டை மாடி கொடுத்தால் போதுமானது. 7 வயது முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இது மிகவும் பயன்படும். ஆர்வமிருக்கும் நண்பர்கள் விழியனை (உமானாத்) தொடர்பு கொள்ளலாம். முதலில் சென்னை போரூரைச் சுற்றியுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இருந்தும், சென்னையிலுள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளிளிருந்தும் இதனைத் துவங்கலாம் என்றிருக்கிறோம்.

“ஹேய்... உங்கள்ள யாரெல்லாம்பா காகிதக் கப்பல் செஞ்சி இருக்கீங்க?” என்று எழுத்தாளர் பாலபாரதி நண்பர்களைப் பார்த்து கேட்டார். ஏறக்குறைய எல்லோருமே தலையாட்டினோம். “சாதா கப்பல், கத்திக் கப்பல், மூடு கப்பல்” என எத்தனை விதமான கப்பல்களை மழைக்காலத்தில் செய்திருப்போம். இன்று மழை பெய்தால் எந்தக் குழந்தையாவது விதவிதமான கப்பல்கள் செய்கிறதா? இதனைப் பெரிய குறையாகவும் சொல்ல முடியாது தான். ஆனால் நாம் அருகில் அமர்ந்து சொல்லிக் கொடுத்தால் குழந்தைகள் செய்து மகிழ்வார்கள் இல்லையா? இதுபோலவே ஓவியத்தையும், இதர கிராப்ட் வகையராக்களையும் செய்துக் காண்பித்தால் குழந்தைகள் மகிழ்வார்கள் இல்லையா? இதுபோன்ற சின்னச் சின்ன சந்தோஷங்களை குழந்தைகளின் வாழ்கையில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது நம் எல்லோரின் கடமை இல்லையா?

“குழந்தைகள் எந்த புள்ளியில் கதை கேட்க ஆரம்பிக்கின்றன? எந்தப் புள்ளியில் கதை சொல்ல ஆரம்பிக்கின்றன?” என்பது சற்றே நுட்பமாக அவதானிக்க வேண்டிய ஒன்று. தவழும் குழந்தையை தோளில் வைத்துக்கொண்டு “அங்க பாரு காக்க...! இங்க பாரு குருவி...!” என்கிறோம்.

குழந்தையும் “ங்கா... ஆ... ம்ம்ம்ம்” என்று ஏதாவது பதிலை மழலையில் சொல்கிறது. புத்தி தெரியும் வரை பெற்றவர்களும் வேறு வழியில்லாமல் குழந்தைகளிடம் பேசுகிறார்கள். குழந்தைகளும் அவர்களை தொல்லை செய்கிறது. அதுவே ஓரளவிற்கு வளர்ந்து பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தவுடன் – குழந்தைகளிடம் பேசுவதே குறைந்துவிடுகிறது. குழந்தைகளும் “டிவி, விடியோ கேம்ஸ், ப்ளே ஸ்டேஷன்ஸ்” என்று மடைமாற்றி வேறு திசையில் பயணிக்க ஆரம்பிக்கிறார்கள். இங்கிருந்துதான் குழந்தைகளின் மொழி சார்ந்து, உறவுகள் சார்ந்த சிக்கல்களே ஏற்படுகிறது. அந்த இடைவெளியை இட்டு நிரப்பும் ஆவலில் தான் இந்த “சிறுவர் இலக்கிய வாசகர் வட்டம்” முன்னெடுக்கப்பட இருக்கிறது. கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த காலத்தில் “தாத்தாவும், பாட்டியும்” கதை சொல்வார்கள். குழந்தைகளும் “ம்” கொட்டி ஆவலுடன் கதைகளைக் கேட்பார்கள். இதனை, கவிஞர் “குகை மா புகழேந்தி” மிக அழகாகப் பதிவு செய்கிறார்.

"கதை சொல்லும்
குருட்டுக்கிழவி
“ம்...” சொல்லும் புறாக்கள்"

- இதோ கூடுவிட்டுக் கூடு பாய்ந்து குருட்டுக் கிழவிகளாக மாற, ஆர்வமிருக்கும் நண்பர்கள் காத்துக் கிடக்கிறார்கள். உங்கள் வீட்டிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் குழந்தைகள் இருக்கிறார்கள் தானே. மழைக்கு ஒதுங்கி நிற்கும் சிறு இடமே என்றாலும் போதும். நண்பர்கள் ஒதுங்கிக் கொள்ள இடம் தாருங்கள். குழந்தைகளை “புறா”-க்களைப் போல பறக்கவிடுங்கள்.

# “அரசு பள்ளி, தனியார் பள்ளி, அடுக்குமாடிக் குடியிருப்பு, வீட்டு வசதிக் குடியிருப்பு” என குழந்தைகள் அதிகம் வசிக்கும் பகுதியில் – சிறுவர்களுக்குக் கதை சொல்லுதல் மற்றும் சிறுவர் இலக்கியம் சார்ந்து ஆர்வமுடன் செயல்ப
ட  நினைக்கும் நண்பர்கள் இந்த வட்டத்தில் இணைத்துக் கொள்ளலாம். அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் எனில் மிக்க சந்தோசம். உங்களது நண்பர்களிடம் இதைப் பற்றி பகிர்ந்துகொள்ளுங்கள்.