Sunday, July 14, 2013

சினிமா காப்புரிமை - ஜெமோ கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

நலம் தானே? எனக்கொரு சந்தேகம் நீண்ட நாட்களாகவே இருக்கின்றது. “குறும்படம் சார்ந்து நீங்கள் வேலை செய்திருக்கிறீர்களா?” என்பது தெரியவில்லை. ஆனால் சினிமாவில் உங்களது பங்களிப்பை கடந்த சில ஆண்டுகளாக பார்த்துக் கொண்டு வருகிறேன். நேரடியாகவே கேள்விக்கு வருகிறேன். சினிமாவுக்கான கதை & திரைக்கதையை ஓர் எழுத்தாளன் எழுதி, வேறு இயக்குனர் சினிமாவாக எடுக்கிறார் என்றால், “கதை & திரைக்கதை” சார்ந்த உரிமம் எழுத்தாளனுக்குத் தானே செல்ல வேண்டும். மாறாக தயாரிப்பாளர்களுக்குச் சென்று கொண்டிருக்கிறது.

சென்ற தலைமுறை படைப்பாளிகள் இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். “கண்ணா லட்டு தின்ன ஆசையா?” என்ற திரைப்படத்தை வெளியிட தடைகோரி கே.பாக்கியராஜ் நீதிமன்றம் செல்கிறார். ஏனெனில் கதை தன்னுடையது என்கிறார். போலவே, “தில்லுமுல்லு” ரீமேக் படத்தை வெளியிடத் தடைகோரி விசு நீதிமன்றம் செல்கிறார். காரணம் திரைக்கதை மற்றும் வசனங்கள் என்னுடையது என்கிறார். ஆனாலும், சினிமாவில் எழுத்து சார்ந்து இயங்குபவர்களுக்கு ஞாயம் கிடைப்பதாகத் தெரியவில்லை.

இறுதியாக தயாரிப்புக் கம்பெனிகள் தான் நீதிமன்றத்தில் வெற்றி வாகை சூடுகின்றன. இது தமிழ் சூழலில் மட்டும் தான் நடக்கிறதா? அல்லது மலையாளத் திரையுலகிலும் இதுதான் நிலைமையா?

நீங்கள் 14 மலையாளப் படங்களுக்கு ஒரே நேரத்தில் “கதை, திரைக்கதை, வசனம்” எழுதுவதை கே. என். சிவராமன் வசந்தம் இதழில் கவர் ஸ்டோரியாக எழுதியதை படித்ததால் தான் இந்தக் கேள்வியை உங்களிடம் கேட்கத் தோன்றுகிறது.

வர்த்தக, வியாபாரம் சார்ந்து மட்டுமே இந்தக் கேள்வியை எழுப்பவில்லை. “எமோஷனல் வேல்யூ” – நாம் படைக்கும் எல்லாவற்றிலுமே இருக்கிறது. ஓர் எழுத்தாளன் – அவனுடைய படைப்பு சார்ந்த “எமோஷனல் வேல்யூ” சார்ந்தும் இந்தக் கேள்விக்கு பதில் அளிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

“மலையாள சினிமா உலகில் எழுத்தாளர்களுக்கு மதிப்பிருக்கிறது சரி... எழுத்தாளர்களுக்கான வியாபார ஞாயமும் இருக்கிறதா? இல்லையேல் தமிழ் சினிமாவைப் போலவே சினிமா எழுத்தாளர்கள் அங்கும் வஞ்சிக்கப்படுகிரார்களா?”

நீண்ட தெளிவான பதில் கிடைத்தால் மகிழ்வேன். நன்றி...

அன்புடன்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.

B.Jeyamohan
10:43 (12 hours ago)
அன்புள்ள கிருஷ்ணபிரபு

சினிமா ஒரு தொழில். அதைப்பற்றி ஏன் இந்த உணர்ச்சிகரமான ஈடுபாடு, ஏன் இத்தனை விவாதம் என எனக்குப்புரியவில்லை. தமிழ் சினிமாவில் எழுத்தாளனின் இடம் வணிகரீதியாக நிரூபிக்கப்படவில்லை. ஆகவே அவனுக்கு இங்கே பெரிய இடம் இல்லை. அவ்வளவுதான். எழுத்தாளனின் பங்களிப்பு வணிகரீதியாக நிரூபிக்கப்பட்டால் இடம் உருவாகும்.

அப்படி நிரூபணமாகிவிடக்கூடாது என முயலும் சினிமா காரர்கள் உண்டு. டிஸ்கஷன் வழியாக வாழ்பவர்கள் அவர்கள். எழுத்தாளர்கள் இதழாளர்கள் சிலருக்கும் அவ்வாறு எழுத்தாளன் இடம் நிரூபணமாகக்கூடாது என்ற பதற்றம் உண்டு. கடல் சம்பந்தமான விமர்சனங்களில் எழுத்தாளர்கள் சினிமாவுக்கு தேவையே இல்லை என்ற குரல் ஒலிப்பதை நீங்கள் காணலாம். இதெல்லாமே எதிர்மறை அம்சங்கள். வணிகத்தில் வணிகவெற்றி மட்டுமே அடையாளாமாக ஆகும்

மலையாளத்தில் எழுத்தாளன் இடம் வணிகரீதியாக நிறுவப்பட்டது. ஆகவே அங்கே இந்தப்பிரச்சினை ஏதும் இல்லை. டைடிலில் கதை-திரைக்கதை- வசனம் என்றே இருக்கும். படத்தின் முழு உரிமையும் எழுத்தாளனுக்கே. மறு ஆக்கம் உட்பட

ஜெ

3 comments:


 1. தமிழில் தயாரிக்கப்பட்டு வெளியான ஒரு படம், வேற்று மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டால், அதற்குக் கிடைக்கும் பணத்தில், கதாசிரியருக்கு 60 சதவிகிதமும், தயாரிப்பாளருக்கு 40 சதவிகிதமும் கிடைக்கும்.. கதை ஒரு நபர்.. திரைக்கதை ஒரு நபர் எனில் இருவருக்கும் சமமாக 30 சதவிகிதமாக பிரித்துக் கொள்வார்கள்..!

  பாக்யராஜின் வாதம், இன்று போய் நாளை வா படத்திற்கு நான்தான் கதாசிரியர். அந்தப் படத்தைக் காப்பி செய்த தமிழ்ப் படத்தில் எனக்கும் உரிமையுள்ளது. ஆகவே எனக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்பது..

  இராம.நாராயணன் சொல்லும் பதில் : ஒரு படத்தை வேறு மொழியில் ரீமேக் செய்யப்பட்டால் மட்டுமே கதாசிரியருக்கும் அந்தப் பணத்தில் பங்கு தரப்பட வேண்டும்.. ஆனால் அதே மொழியிலேயே மீண்டும் படம் தயாரிக்கப்பட்டால், படத்தின் தற்போதைய உரிமம் வைத்திருப்பவருக்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும்.. அனுமதி வாங்கினால் போதும்...!

  இதுதான் சிக்கல்..! இது இப்போதைக்கு முடியாது.. கோர்ட்டுதான்.. நீதிமன்றம் இந்த வழக்கிற்கு சொல்லப் போகும் தீர்ப்பில் பல கதாசிரியர்களுக்கு நல்லதே நடக்கும்..!

  விசு வழக்கு என்னவெனில் தில்லுமுல்லுவின் ஒரிஜினல் கதாசிரியர் தான் இல்லையென்றாலும், தில்லுமுல்லு தமிழ்ப் பதிப்பிற்கு திரைக்கதை எழுதியவன் நான்தான். ஆகவே அந்தப் படத்தை அப்படியே எடுத்திருந்தால் திரைக்கதைக்காக எனக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்பது..!

  ஆனால் படத்திலோ விசுவின் திரைக்கதையை சுத்தமாக தூக்கியெறிந்துவிட்டு விசு அளித்திருந்த பாட்டு சொல்லிக் கொடுக்க வரும் ரஜினி - இதில் கராத்தே சொல்லிக் கொடுக்க வரும் ஹீரோ.. இப்படியாக மாறிப் போனதில் விசுவின் கோரி்ககை நிராகரிக்கப்பட்டுவிட்டது. அவரே வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டுவிட்டார்..!

  கதாசிரியர்களுக்கென்றே தனி சங்கம் உள்ளது. அதில் அனைவரும் தங்களது கதைகளை பதிவு செய்து வைத்துக் கொண்டு பின்னர் பிரச்சினையெனில் பேசித் தீர்த்துக் கொள்வது நல்லது..! ஆனால் யாரும் இங்கே செய்வதில்லை..! ஏனெனில் இங்கே எடுக்கப்படும் கதைகள் அனைத்துமே இங்கேயிருந்தே எடுக்கப்பட்டது..! 

  ReplyDelete