Saturday, March 30, 2013

செல்லாக்காசு – நடிகர் வீரேஷ்


1. ஆரோகணம் திரைப்படம் வெளிவந்த சமயம் – அந்தப் படத்தின் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்த வீரேஷுக்கு வாழ்த்துச் சொல்ல செல்பேசியில் அழைத்துப் பேசினேன். இணைப்பைத் துண்டிக்கும் சமயம் – “டெலி ஃபிலிம் ஸ்கிரிப்ட்” ஒன்றை எழுதிக் கொண்டிருப்பதாகத் தெரியப்படுத்தினான். 

“உங்களுக்கு நெறைய டேலன்ட் இருக்கு... அந்த ப்ராஜக்டும் நல்லா வரும்...” என - அதற்கும் சேர்த்தே வாழ்த்து கூறினேன்.

பிறிதொரு நாளில் அமுதுவை சந்திக்கச் சென்றிருந்த பொழுது, “1985-90 களில் நடக்கும் கதை” என்று எதிரில் உட்காரவைத்துக் கொண்டு முழுக் கதையையும் சொல்லத் துவங்கினான் விரூ. “அடடே... இன்னைக்கு நம்ம ராசிபலன்ல மரண மொக்கையை அனுபவிப்பீர்கள்-ன்னு போட்டிருக்குமோ? பேப்பர பார்க்காம வந்துட்டமே” என ஆரம்பத்தில் நினைத்துக் கொண்டேன்.

“பாருங்க...! சீன் இங்க ஆரம்பிக்குதுங்’ண்ணா! அப்பிடியே Zoom பண்ணி... Focus பண்ணி... இங்க டாப் ஆங்கிள்... (நடுவில் சில இடங்களில் கட்) அப்புறம் மாண்டேஜ் ஷாட்... நச்சின்னு இப்பிடி End ஆகுது...” என மொத்தக் கதையையும் கூறி முடித்தான். மேலதிகமாக “கத எப்பிடின்னா இருக்கு?” என்றான்.

“ஆங்... சூப்பர்...” என்றேன்.

“தேங்க்ஸ்’நா” என்றான்.

“அடக் கிறுக்கு பயலே!... அருமையான கதையச் சொல்லி இருக்க... நான் தானே உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்...” என்றேன்.

உண்மையில் கதையானது தொன்னூறுகளில் நடப்பதால் மனதிற்கு நெருக்கமாக இருந்தது. ஆனாலும் “இவன் எதுக்கு நம்மகிட்ட இந்தக் கதையச் சொல்லணும்...” என்று மனதில் நினைத்துக் கொண்டேன். அதெல்லாம் ஆகிறது கிட்டத்தட்ட மூன்று மாதம். ஸ்க்ரிப்டை வைத்துக் கொண்டு “செட் ப்ராபெர்ட்டி, அது... இது...” என ஓடிக் கொண்டிருக்கிறான். கூடவே தயாரிப்பாளரையும் தான் தேடிக் கொண்டிருக்கிறான் விரூ.


2. “இந்தப் பக்கமா வந்துட்டுப் போக முடியுமா’’ப்பா?” என ஒருவார காலமாகவே ஆண்டி கேட்டுக் கொண்டிருந்தார்கள். இன்றுதான் கொஞ்சம் போல நேரம் கிடைத்தது.

“ஏன்பா...! அவரு போயி மூணுமாசம் ஆகுது... அங்கிள் பீரோவுல பணம் ஏதாச்சும் இருக்கான்னு பார்த்து எடுத்துக் கொடு...!” என்றார்.

“ஆண்டி இதெல்லாம் ரொம்ப ஓவர்... இதுக்கா என்ன வரச் சொன்னீங்க? புருஷன் பீரோவுல பொண்டாட்டிக்குத் தான் உரிமை அதிகம்...” என்றேன்.

“ஆமா... அவர் இருக்கச் சொல்ல நீதானே ATM-ல பணம் எடுத்துக் கொடுப்ப...! உண்ணத் தவிர வேற யாரையும் அந்த பீரோவைத் தொடவே விட மாட்டாரு...! கஞ்சப் பிஸ்னாரி உயிரோட இருக்கச் சொல்ல அஞ்சி-பத்து கண்ணுல காமிச்சி இருக்குமா? ஏதாச்சும் துட்டு இருக்கான்னு பீராஞ்சிப் பாரு...” என்றார்.

கிட்டத்தட்ட 2500/- ரூபாய் ரொக்கமாக ஆங்காங்கு- கத்தைக் கத்தையாகக் கிடைத்தது. எல்லாம் 10, 20 & 50 ரூபாய் நோட்டுக்கள். பார்ப்பதற்கு சுருக்குப் பைபோல ஒன்றிருந்தது. எடுத்ததும் கலகலவென சப்தம் வந்தது. திறந்து பார்த்தால் - எல்லாம் தொன்னூறுகளின் மத்தியில் புழக்கத்தில் இருந்த 5 காசு, 10 காசு, 20 காசு, 25 காசு நாணயங்கள். கிறுக்குப் பையன் என்று நினைத்திருந்த வீரேஷ் தான் நினைவிற்கு வந்தான்.

“ஆண்டி... இதெல்லாம் செல்லாக் காசு.... நான் எடுத்துக்கட்டுமா?”

“ஓ... செல்லாக் காசுதான...! தாராளமா எடுத்துக்கோ... உனக்கா இல்லன்னு சொல்லுவேன்....” என்று கத்தைக் கத்தையாக பீரோவிலிருந்து எடுத்துக்கொடுத்த பணத்தை தடவித்தடவி எண்ணிக் கொண்டிருந்தார்.


3. கிராமத்திற்கு வந்ததும், எடுத்து வந்த செல்லாக் காசுகளை எனது அறையிலுள்ள மேசை மீது வைத்திருந்தேன். என்னைப் பெற்ற மகராசி நைசாக அதனை எடுத்துப் பார்த்திருக்கிறார்.

“எங்கடா பிச்ச எடுத்தன்னு கேக்கல...” அதற்கு பதிலாக “இந்த மாதிரி காசு’ங்கல நீயும் வச்சிருக்கியா?” என்றார்.

“இல்லியே.... ஒரு கபோதிக்குக் குடுக்கலாம்னு ஆன்டிக்கிட்ட வாங்கிட்டு வந்தேன்...”

“இதுன்னா கொஞ்சம் தான் இருக்கு... என்கிட்டே எவ்வளோ இருக்குப் பார்த்தியா...!?” என ஒரு தகர டப்பாவை திறந்து காண்பித்தார் என்னைப் பெற்ற மகராசி. எல்லாம் என்பதுகளின் மத்தியில் புழக்கத்தில் இருந்த அலுமினியக் காசுகள். (என்னுடைய தாயாருக்கு இது போன்ற நாணயங்களைச் சேகரிக்கும் பழக்கம் இருப்பது இன்று தான் எனக்கே தெரிய வந்தது.)

“ஆமா... யாரோ கபோதின்னு சொன்னியே... அவனுக்கு எதுக்கு இந்த மாதிரி காசுங்க?” என்றார்.

“ஒரு படம் எடுக்கப் போறான். அந்த காலத்துல நடக்குற கத...” என்றேன்.

“இதெல்லாம் கூடவா தேவைப்படும்... சரி இந்தா... அவன்கிட்டையே இதையும் கொடுத்துடு...!” என்று தகர டப்பாவை என்னிடம் நீட்டிவிட்டுச் சென்றார்கள்.


முடிவு:

விரேஷ் அந்தக் கதையை என்னை உட்கார வைத்துச் சொல்லவில்லை எனில் அலுமினியக் காசுகள் எனக்கும் செல்லாக் காசுகளாகத் தான் இருந்திருக்கும். அவற்றைப் பார்த்ததும் “இது எதுக்குங்க ஆண்டி இனிமே...! தூக்கிப் போட்டுடுங்க...” என சொல்லியிருப்பேன்.

“போகச்சொல்ல நீயே குப்பையில போட்டுட்டுப் போயிடு...” என அவர்களும் சொல்லி இருப்பார்கள்.

ஒரு சந்திப்பு – அதன் மூலம் கிடைக்கும் அனுபவங்கள் – நினைவின் தாழ்வாரத்தால் தலையில் தட்டி நம் வாழ்வின் தரிசனன்களை உணர்த்திவிடுகின்றன.

அலுமினியக் காசுகளைப் பார்த்ததும் “இவன் எதுக்கு நம்மகிட்ட இந்தக் கதையச் சொல்லணும்...” – என்று மனதில் நினைத்த வார்த்தைகள் அசரீரி போலக் காதில் கேட்டன. வாழ்வில் நடக்கும் எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கத் தானே செய்கிறது! தூக்கத்தில் வரும் கனவுகளாகவே இருந்தாலும் கூட.

Thursday, March 28, 2013

அஜால் குஜால் புத்தர்

என்னுடைய நண்பர்களில் ஒருவன் ‘சாமியார், மடம்’ என்று அலைந்து கொண்டிருந்தான். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவனுடைய புத்திக்கு எட்டவே இல்லை. “திருவண்ணாமலை கிரிவலம், திருப்பதி மலைவலம்” என்று எங்காவது தோதாக நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு சுற்றிக் கொண்டே இருப்பான். வீட்டிற்கு ஒரே பையன் வேறு.

“அடடே... குடும்ப வாரிசே இல்லாமல் செய்துவிடுவானோ!” என்று அவனைப் பற்றிக் கவலைப்பட்ட நாட்கள் கூட உண்டு. “யோகிராம்... யோகிராம்...” என சில காலம் முணுமுணுத்துக் கொண்டிருந்தான். அந்த சமயத்தில் தான் வட இந்தியப் பயணம் சென்றிருந்தேன். அப்படியே எட்டிப் பிடித்து நேபாளமும் செல்ல நேர்ந்தது. சந்தையில் சுற்றிக் கொண்டிருந்த பொழுது புத்தனின் வித்யாசமான சிலையொன்றைப் பார்க்க நேர்ந்தது. தியானத்தில் ஆழ்ந்திருக்கும் புத்தனுடன், நிர்வாண கோலத்தில் ஒரு பெண்மணியும் இருந்தார். அடப் பாவிங்க சம்பா சம்புத்தனை இப்படிக் கூடவா புராடக்ட் ஆக்குவிங்க என மனதில் நினைத்துக் கொண்டேன்.“இந்த மாதிரி அநியாயம் கூடவா பண்ணுவாங்க...!” என்று நினைத்துக் கொண்டு, அந்த சிலையைப் பற்றி மேலதிகமாக கடைக்காரரிடம் விசாரித்தேன். ஏதோ “......... தந்த்ரா” என சொல்லிவிட்டு “அப்பா-அம்மா சிலை” என அளந்துவிட்டுக் கொண்டிருந்தான். அப்பொழுதுதான் பொறி தட்டியது. என்னுடைய நண்பரில் இருவருக்காக தியானக் கலவியில் இருக்கும் புத்தனின் இரண்டு சிலைகளை வாங்கிக் கொண்டேன். இரண்டு பேரும் சொல்லியது இதைத்தான்:

“ஊடுன்னா ஊட்ல இத எப்பிடிடா வச்சிக்கிறது?”

இணையத்தில் புத்தனைப் பற்றி வாசித்துக் கொண்டு செல்கையில் நான் வாங்கிய சிலையைப் போன்ற புகைப்படங்களைக் காண நேர்ந்தது. சிலை வாங்கித் தந்த அதிர்ஷ்டமோ என்னவோ? இருவருக்கும் திருமணமாகி குழந்தைக் குட்டிகளுடன் சௌக்கியமாக வாழ்கிறார்கள்.

(இந்தச் சிலையைப் பற்றிய மேலதிகத் தகவல்கள் தெரிந்திருப்போர் மேலதிகமாக பின்னூட்டத்தின் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். அநாகரீகமான பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படும்.) கும்புடுக்குறங்க...

தொடர்புடைய பின்னூட்டங்கள்:

ஓவியர் நாகராஜன் அரவக்கோன்: (முகநூலில்)

புத்த மதம் மூன்று பிரிவுகளைக்கொண்டது முறையே ஹீனயானம்,மஹாயானம், வஜ்ரயானம். மூன்றாவது தான் திப்பேத் பின்பற்றுவது. இந்துமதத்தின் தாந்த்ரிக சிந்தனைகளை உள்ளடக்கியது. உருவவழிபாடும் கொண்டது. நேபாள திப்பேத் ஓவியங்களில் இவ்வித நிலைகள் இயல்பானவை. விரிவான விளக்கத்துக்கு கூகிளில் தேடினால் படிக்கலாம்.அல்லது எனது 'இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்' நூலில் படிக்கலாம்.

கவிஞர் வேல்கண்ணன்: (மின்னஞ்சலில்)

ஓஷோ எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். எந்த புத்தகம் என்று நினைவில்லை. அவ்வளவு 'ரொப்பி' விட்டார்கள். புத்தன் என்றாலே நிர்வாணம் என்ற அர்த்தமாகவும் கொள்ளலாம். அந்த நிர்வாணத்திற்கு உடல் சார்ந்து மனம் சார்ந்து என்ற இரு வேறு அர்த்தம் உண்டு. காமத்தை மன நிலை, உடல் நிலை மற்றும் தியான முறை மற்றும் சில பயிற்சியுடன் அனுகுவதின் மூலம் இறை நிலை அடையாளம் என்று இருக்கிறது. பொதுவாகவே 'தந்த்ரா' எனப்படுவது புத்த மதத்தில் இருப்பதால் புத்தனுடன் சேர்த்து யாரோ ஒரு கலைஞன்(ஓவியர், சிற்பி) கற்பனையில் உருவாக்கி பின் இதனை வடித்திருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். நேரில் பார்க்கும் போது இன்னும் சிலவற்றை பேசலாம்.

Tuesday, March 26, 2013

சூது கவ்வும் – நல்ல உதாரணம்

ஒடிசலான தேகத்துடனும் ஒட்டிய கன்னங்களுடனும் தான் - இரண்டு வருடத்திற்கு முன்பு யோகி அறிமுகமானான். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். விசாரித்ததற்கு MBA படிப்பதாகக் கூறினான். அன்றொரு நாள் கேணி கூட்டம் முடிந்து, உதயம் திரையரங்கை நோக்கியவாறு நடந்து கொண்டிருந்தோம். எதிரில் கிடந்த இருள் திட்டையும், மின் விளக்கில் கசியும் மஞ்சள் ஒளியையும் மீறி பேசிக்கொண்டே நடந்தோம். கண்கூசச் செய்யும் வாகனங்களின் முகப்பொளி இடையிடையே மின்னல் போல வெட்டின. “இலக்கிய வாசகராக இருப்பாரோ!” என்ற அனுமானத்தில் தான் பேசிக்கொண்டு வந்தேன். “அண்ணா! படிச்சி முடிச்சிட்டு சினிமாவுல சேரப் போறேங்கண்ணா...!” என்றான்.

வானத்துப் பட்சியின் எச்சில் களிம்பு தலையில் கொட்டியதைப் போல உணர்ந்தேன். “மொதல்ல நல்லா படிங்க & டிகிரிய முடிங்க... அதுக்குப் பிறகு சினிமா, பொடலங்கா, பச்ச மிளகாய், காய்கறிக் குருமா” என மத்ததையெல்லாம் பார்த்துக்கலாம் என்றவன், “ரிசல்ட் வந்தா உங்கள டிரேஸ் பண்ணுவேன் ஜாக்கிரதை” என்று எச்சரித்தேன். சிரித்துக்கொண்டே அன்றைய தினம் பிரிந்து சென்றான். அதன் பிறகும் ஒன்றிரண்டு இலக்கியக் கூட்டங்களில் சந்தித்ததுண்டு.

என்றாலும் கல்லூரி இறுதியாண்டில் இருக்கும் பொழுது எதற்காகவோ செல்பேசியில் அழைத்தவன் - உரையாடல் நிறைவடையும் பொழுது “அண்ணா! விஜய் டிவி சீரியல்ல நலன் சார் கிட்ட வொர்க் பண்றேன்’ங்கண்ணா. அவரும் எங்க ஊர்க்காரருதான்...” என்றான். “இத்தோட இவன் கத காலி டோய்...”-ன்னு தான் நெனச்சேன். சில நாட்கள் தொடர்பற்று இருந்தோம். நாட்களும் உருண்டோடிவிட்டது.

எனக்குத் தெரிந்த நண்பரொருவர் பரிச்சார்த்தமாக டெலி ஃபிலிம் எடுக்கத் தொடர்புகொண்ட போது, யோகியைத் தான் அழைத்துப் பேசினேன். ஒன் லைன் கேட்டவன் குழம்பிய முகத்துடன் பின்வாங்கினான். “இந்த ப்ராஜச்ட்ல நான் உதவி செய்ய முடியாது’ன்னா” என்றான். ஏனெனில் என்னுடைய நண்பரின் கதையும், யோகியின் இயக்குனர் நலனின் கதையும் ஒத்த தன்மையுடையவை. (ஏற்கனவே அதைப் பற்றி ஜாடை மாடையாக எழுதியிருக்கிறேன்: பொய்யாய் செதுக்கிய நாட்குறிப்பு - 01

நலனின் அந்தக் கதை திரைவடிவமாக சில நாட்களில் வெளிவர இருக்கிறது. அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா - நாளை காலை சத்தியம் திரையரங்கில் அடக்கமான முறையில் நடக்க இருக்கிறது. எகவே, “சூது கவ்வும்” முகநூல் பக்கத்தில் - இதுவரை (Official FaceBook Page) பகிர்ந்திருந்த விளம்பரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதிலொரு டிசைன் எனது கவனத்தை ஈர்த்தது. பொதுவாக “தயாரிப்பாளர், இயக்குனர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசை இயக்குனர், வசனகர்த்தா, கவிஞர்” போன்றவர்களுடைய பெயர்கள் தான் விளம்பர டிசைனில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் “தயாரிப்பு மேற்பார்வை, துணை இயக்குனர் & உதவி இயக்குனர்”-களின் பெயர்களும் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டு இப்பொழுது தான் முதன் முறையாகப் பார்க்கிறேன். நாளிதழின் செவ்வகப் பெட்டியினுள் எல்லா நபர்களின் பெயர்களையும் குறிப்பிட இயலாது. ஆனால் இணைய விளம்பரங்களில் அது சாத்தியம் தானே! இருந்தாலும் யாரும் அது சார்ந்த அக்கறையை எடுத்துக் கொள்வதில்லை. நலன் தான் முதன் முதலில் அதனைத் துவக்கி வைக்கிறார். 


“இந்தச் சின்ன விஷயத்தைக் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கண்டுபிடித்துப் பாராட்ட வேண்டுமா?” என்ற கேள்வி எழலாம். இதையெல்லாம் நுட்பமாக கவனிக்கப் படாததால் தான் சிலர் வஞ்சிக்கப் படுகிறார்கள்.

இந்த ஆண்டு வெளிவந்த செலப்ரிட்டி இயக்குனர் ஒருவரின் படத்தில் பல உதவி இயக்குனர்கள் வேலை செய்திருக்கிறார்கள். படம் நல்ல முறையில் காட்சிப்படுத்தப்பட்டு, திரைக்கும் வந்துவிட்டது. ஏறக்குறைய ஒரு வருடம் அந்தப் படத்தில் வேலை செய்த, ஓர் உதவி இயக்குனரின் பெயர் டைட்டில் கார்டில் சேர்க்கப் படவில்லையென அவரது நண்பர்கள் வருத்தப்பட்டார்கள். படத்தின் இயக்குனருக்கும், உதவி இயக்குனருக்கும் பிரச்சனை என்றால் கூடப் பரவாயில்லை. அட... தயாரிப்பாளருடன் வாய்ச்சவடால் என்றால் கூட பரவாயில்லை. ஓரளவு ஜீரணித்துக் கொள்ளலாம். போஸ்ட் புரொடக்ஷன் நடக்கும் சமயத்தில், அசோசியேட் இயக்குனருடன் ஏற்பட்ட மனக் கசப்பின் காரணமாக – இயக்குனருக்குத் தெரிந்தோ தெரியாமலோ உதவி இயக்குனரின் பெயர் நீக்கப்பட்டிருக்கிறது. இதற்கேற்றார் போல அந்த பெரிய இயக்குனரும் எந்த உதவி இயக்குனரிடமும் நேரடியாகப் பேச மாட்டாராம். அசோசியேட் மூலமாகத் தான் அடுத்தவர்களிடம் பேசுவாராம். (ஆதாரங்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். மேலதிக விவரங்கள் கிடைத்தால் அதைப்பற்றி விலா வரியாக வலைப்பதிவில் எழுத வேண்டும் என்றிருக்கிறேன்.) இது ஒரேயொரு உதாரணம் தான். இதுபோன்ற ஏராளமான விஷயங்கள் நம்மைச் சுற்றிலும், சினிமாத் துறையில் நுழையும் நண்பர்களுக்கு ஆரம்ப காலங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

சினிமாத் துறையில் வேலைக்கான சம்பளத்தை எதிர்பார்க்கவே முடியாது. அதுவும் உதவி இயக்குனர்களின் தினசரி வாழ்க்கை அவலத்தின் சகதியில் நீந்துவதைப் போன்றது. இவை எல்லாவற்றையும் மீறி, ஓர் அடையாளத்திற்காகத் தானே ஆர்வமிகுதியில் அடிமைகள் போல வேலை செய்கிறார்கள். அதிலும் மண்ணள்ளிப் போடும் ஒருசிலரின் பின்னரசியல் மிகுந்த வேதனைக்குரியது. இதுபோன்ற ஆயிரமாயிரம் நெருக்கடிகளை மீறித்தான் ஒருவர் தன்னுடைய ஆளுமையை சினிமாத் துறையில் நிரூபிக்க வேண்டியிருக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் படத்தின் இதரப் பங்களிப்பாளர்களுக்கும் அக்கறையுடன் மதிப்புக் கொடுத்த நலன் குமாரசாமியைப் பாராட்ட நினைக்கிறேன். ஏ.ஆர். ரகுமான் ஆரோக்கியமான நல்ல துவகத்தை, அவருடைய தன்மையில், அவரால் முடிந்த அளவு தனது துறையில் ஏற்படுத்திக் கொடுத்தார். கருவி இசைக்கலைஞர்களின் பெயரையும், இதர இசைக் கலைஞர்களின் பெயரையும் சினிமா ஆல்பத்தின் பின்னட்டையில் குறிப்பிட்ட முதல் இசையமைப்பாளரான ஏ.ஆர். ரகுமானை இன்றளவிலும் பாராட்டிக் கொண்டிருக்கிறோம். அது போன்ற ஒரு ஆரோக்கியமான விஷயத்தைத் தான் நலன் குமாரசாமி தனது “சூது கவ்வும்” படத்தின் இணைய விளம்பரத்தில் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். நலனைப் போலவே - தலையில் கொம்பு முளைத்ததாகச் சுற்றிவரும் செலப்ரிட்டி இயக்குனர்களும், இனிமேல் முளைக்கவிருக்கும் மிடுக்கான அசோசியேட் இயக்குனர்களும், மற்ற நல்ல இயக்குனர்களும் இதனைத் தொடர்ந்தால் பாராட்டும் படி இருக்கும்.

இந்தப் படத்தில் எனக்குப் பரிச்சியமான ஒரே ஜந்து உதவி இயக்குனர் யோகி மட்டுமே! அவனுக்கும், சமீப காலங்களில் நம்பிக்கையளிக்கும் நடிகராக மிளிரும் சேதுவுக்கும், மொத்தப் படக் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.

நாளை முதல் “காதைக் கவ்வும்” இசையைக் கேட்டு மகிழுங்கள்.

# சூது கவ்வும் - நல்ல உதாரணம், என்பதை நலனின் முன்னுதாரணமான விளம்பர டிசைனுக்காக மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன். யோகிக்காக “முதல் நாள் –முதல் ஷோ” பார்ப்பேன். அதன் பிறகுதான் மற்றதெல்லாம். புரிகிறது தானே!

Thursday, March 21, 2013

சினிமாக் கங்காணி ஜெமோ

ஜெயமோகன் எழுதியிருந்த “ஞாநியும் பரதேசியும்” என்ற பதிவினைப் படித்தேன். எந்த ஒரு விஷயத்திலும் உடனுக்குடன் எதிர்வினை ஆற்றாமல், கொஞ்சம் ஆறப்போட்டு எழுதுவதுதான் ஜெமோ-வின் ஸ்டைல். “அப்படிப்பட்டவருக்கு உடனடியாக எது ஒன்றையும் சொல்லவேண்டுமா?” என்று நினைத்துத் தான் கொஞ்சம் தாமதமாக இதனை எழுதுகிறேன். இது அவருக்கான விமர்சனம் அல்ல. என்றாலும் இவரைப் போன்ற விசிலட்டித்தான் குஞ்சுகள் அதிகம் கொண்ட எழுத்தாளர்கள், விமர்சனத்தை நேர்கொண்டு அணுகாமல் – அதனை மடை மாற்றி விமர்சகர்கள் காழ்ப்புடன் சினிமாவை அணுகுகிறார்கள், படைப்பாளிகளை ஈவிரக்கமின்றி தாக்குகிறார்கள் என்ற இல்லாத காரணத்தைச் சுட்டிக்காட்டி, அதன் மூலம் கழிவிரக்கத்தைச் சம்பாதித்து, இறக்கப்பட்டுத் தன்னுடன் துணை நிற்கும் வாசகர்களின் மூலம் ஆளுமையை வளர்த்துக்கொண்டு – அப்பாவி வாசகர்களை தவறான புரிதலுக்கு இட்டுச்செல்லும் தன்மையைப் பற்றி அலசி ஆராய்வதுதான் இந்தப் பதிவின் நோக்கம். 


குடைபிடிக்கும் இடத்தில் ஜெமோ-வை மனத்தில் இருத்திக் கொண்டுதான் பத்தியை மேலும் தொடர்கிறேன். ஜெயமோகன் இணையத்தில் சினிமா சார்ந்து எழுதுபவர்களைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்:

/-- “வேறெந்த விஷயத்தைப்பற்றி எழுதுவதைவிடவும் வரப்போகும் முக்கியமான படத்தைப்பற்றி எழுதுவதற்கு இணையத்தில் ‘லைக்கு’கள் வந்துகுவியும். அந்தப் படத்துக்காகக் கோடிக்கணக்கில் செலவிட்டு செய்யப்படும் பிரச்சாரத்தின் துளியைத் தானும் அறுவடைசெய்துகொள்ளும் முனைப்பு அது.”--/ -- (ஜெமோ)

இன்டர்நெட்டில் “ஃபேஸ்புக் (FaceBook), ட்விட்டர் (Twitter) மற்றும் பிளாக் (Blogger Page)” ஆகிய ஒருசில சமூக இணையத் தளங்கள் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதில் முகநூல் சேவையானது Closed Network என்ற தன்மையில் வரக்கூடியது. அதிகபட்சமாக 5000 நபர்களுடன் மட்டுமே நட்பில் இருக்க முடியும் என்பதுதான் உண்மை. அவர்களில் பலரும் சந்தித்த நண்பர்களாகவும், அறிமுகமான நண்பர்களாகவும், ஒத்த கருத்துடையவர்களாகவும் மட்டுமே இருப்பார்கள். ஆகவே இந்த வசதி பெரும்பாலும் தொடர்பிலுள்ள நண்பர்களுடன் கருத்துக்களை பரிமாரிக் கொண்டு உடனுக்குடன் விவாதம் செய்யும் தன்மையில் இருக்கும். ட்விட்டர் & பிளாக் போன்ற சேவைகள் இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. ஜெமோவின் ஆதங்கத்திற்குக் காரணம் விமர்சகர் ஞாநி பரதேசியைப் பற்றி முகநூலில் பகிர்ந்திருந்ததைப் பற்றியது. ஜெமோவின் சகாக்கள் அவருடைய காதில் போட்டிருக்கிறார்கள். அதற்குத் தான் ஜெமோ பொங்கி எழுதிருக்கிறார். ‘ஜெமோ, எஸ்ரா’ போன்றவர்கள் என்ன செய்தாலும் கொண்டாட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா? என்ற சந்தேகம் எழுகிறது. ‘எரியும் பனிக்காடு’ நாவலானது ஆவணப் புனைவுவின் வகையில் சேரும். அதுவுமில்லாமல் ஏறக்குறைய 80 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கதை. சுதந்திரப் போராட்டத்தை ஒட்டி நிகழும், மலையகத் தேநீர்த் தோட்டங்களில் வஞ்சிக்கப்படும் மலைவாழ் மக்கள் மற்றும் உள்ளூர் அகதிகளாகச் சென்றவர்களின் வதைபடும் வாழ்க்கைப் பற்றி நாவல் பேசுகிறது. இதுபோன்ற மக்களுடன் தனது வாழ்நாளைக் கழித்த மருத்துவர் டேனியலின் நாவலைத் தான் (The Red Tea) பாலா படமாக எடுத்திருக்கிறார். இந்த நாவலையும் நாஞ்சில் நாடனின் இடலாக்குடி ராசா என்ற சிறுகதையையும் இணைத்து உருவாக்கிய திரைக்கதையை முன்வைத்து தனது கருத்தினை விமர்சகர் ஞாநி பின்வருமாறு பகிர்கிறார்.

/-- எந்தப் படத்தையும் முழுமையாக ஏற்கவும் முடியாது. நிராகரிக்கவும் முடியாது என்ற வாதங்கள் வைக்கப்படுகின்றன. இது ஏற்றுக் கொள்ளவேண்டிய உண்மை போல தோன்றும். ஆனால் இதே வாதம் படு மோசமான மசாலா படங்களுக்கும் பொருந்தும். அவற்றில் கூட ஓரிரு ஏற்கத்தக்க அம்சங்கள் எப்போதும் இருக்கத்தான் செய்கின்றன. இரண்டு கதைகளும் கருப்பொருளில் தொடர்புடையவையே அல்ல. எனில், இதற்கான அவசியம் என்ன ? எரியும் பனிக்காடு அதனளவில் முழுமையாகப் படமாக்கப்பட்டாலே மூன்று மணி நேரப் படமாக எடுக்கும் சாத்தியங்களும் பாத்திரங்களும் உள்ள நாவல். ஆனால் அதில் பாலா தன் படங்களில் வழக்கமாக வைத்திருக்ககூடிய பார்முலாவுக்கான பாத்திரம் எதுவுமில்லை.--/ -- (ஞாநி)

மேலதிகமாக திரைப்படத்தின் கால நிர்ணயம் சார்ந்த நுட்பமான கேள்வியை ஞாநி எழுப்புகிறார். 

/-- எரியும் பனிக்காடு நாவலை எழுதிய டாக்டர் டேனியல் ஒரு விஷயத்தை தெளிவாக முன்னுரையில் சொல்லியிருக்கிறார். அந்தக் கதை 1900களில் தேயிலைத்தோட்டங்களில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி அப்போது அங்கே வேலை பார்த்தவர்களிடம் அவர் கேட்டு பதிவு செய்ததன் அடிப்படையில் எழுதுவதாக் சொல்கிறார். தன் கதையின் ஆரம்பத்திலேயே கதை நடக்கும் வருடம் 1925 என்று சொல்கிறார். அந்தக் கிராமம் அரிஜனங்கள் வாழும் கிராமம் என்று எழுதுகிறார். பாலாவோ தன் படத்தில் கதை நடப்பது 1939ல் என்கிறார்.--/ -- (ஞாநி)

/-- பாலா காட்டும் தேயிலை எஸ்டேட்டும் 1939ன் எஸ்டேட் அல்ல. ஏனென்றால் 1936 லேயே தேயிலைத் தோட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆரம்பமாகிவிட்டன. அதற்கான விழிப்புணர்ச்சி அங்கே தொடங்கிவிட்டது. பாலாவின் எஸ்டேட்டில் அதற்கான அறிகுறியே இல்லை. காரணம் நாவல் 1925ல் நடப்பதாக டேனியல் சொன்னதை பாலா 1939 என்று மாற்றிய தவறுதான். ஏன் 1939 என்று மாற்றினார் ? --/ -- (ஞாநி)

இவையாவும் மூளையைக் கொஞ்சமேனும் தேய்த்து பல கோணங்களில் யோசிக்கும் யாரொருவருக்குமே எழக்கூடிய சந்தேகங்கள் தானே. இதைப் பற்றியெல்லாம் ஜெமோ வாயே திறக்கவில்லை. இதன் பிறகு ஞாநி பகிர்ந்ததுதான் ஜெமோவின் இரத்தக் கொதிப்பு ஏறக் காரணமோ என்ற ஐயம் எழுகிறது. ஜெமோ இந்துத்துவத்தை வக்காலத்து வாங்கக் கூடியவர் என்பது ஊரறிந்த விஷயம். பாலாவின் இந்துத்துவ எண்ணம் சார்ந்த காட்சிப்படுத்தலை ஞாநி பின்வருமாறு எழுதுகிறார்.

/-- எழுத்தாளர் டாக்டர் டேனியல் 1940 எஸ்டேட்டுக்குள் வந்தார். பாலாவின் படத்தில் வரும் கிறித்துவ டாகடர் பரிசுத்தமும் அப்போதுதான் வரவேண்டும் என்பதற்காக கதையை பாலா 1939ஆக மாற்றியிருக்கிறார். அதாவது டேனியல் பாத்திரத்தைத்தான் பரிசுத்தமாக பாலா இழிவுபடுத்த் திட்டமிட்டிருக்கிறார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.பாலாவின் இந்துத்துவ அரசியல் தொடர்ந்து கண்காணிக்கப்படவும் ஆய்வு செய்யப்படவும் வேண்டியதாகும். டேனியலின் நாவலில் அவர் தன்னையே ஆபிரகாம் என்ற டாக்டர் பாத்திரமாக்கி தான் எஸ்டேட்டுக்கு வந்ததையும் தன் அனுபவங்களையும் சொல்கிறார். தொழிலாளர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடியதை விவரிக்கிறார். அந்த கிறிஸ்துமஸ் அனுபவங்களை பாலா எடுக்கவில்லை. நேர்மாறாக டேனியலைக் கேவலப்படுத்தி குத்தாட்டம் போட்டு மதமாற்றம் செய்யும் கோமாளியாகக் காட்டியிருக்கிறார். கதை உரிமையை படமாக்க பாலாவுக்குக் கொடுத்த டேனியலின் வாரிசுகள் இதற்காக பாலா மீது அவதூறு நஷ்ட ஈடு வழக்கு போட போதுமான முகாந்தரம் இருக்கிறது. மத போதகர்களை கிண்டலடிப்பதையும், படத்தின் முதல்பாதியில் நாஞ்சில் நாடனின் சரமாரியான தென் தமிழக பாலியல் கெட்ட வார்த்தை வசவுகளையும் யூ படத்தில் அனுமதித்திருக்கும் சென்சார் போர்ட், இனி பாலாவின் ஆன்மீக வழிகாட்டி ஜக்கி, ஜயேந்திரர், பிஜே போன்றோரை கிண்டல் செய்தும், சென்னை தமிழ் வசவுகளை சரமாரியாக அனுமதிக்கவும் முன்வரவேண்டும் என்று வலியுறுத்த விரும்புகிறேன். --/ -- (ஞாநி)

இதுபோன்ற கருத்துக்களை பகிர்ந்த ஞாநிக்கு ஜெமோ நேர்மையான முறையில் எதிர் வினையாற்றியிருக்கலாம். அதை விடுத்து “குய்யோ... முறையோ...” என அந்தக்காலத்து கருப்பு வெள்ளைப் பட குணச்சித்திர நாயகி கண்ணாம்பாள் போல குமுறுகிறார். மேலும் நடிகர்களை துன்புறுத்துவது போன்ற பாலாவின் யூ டியூப் காணொளி குறித்து அங்கலாய்த்ததுடன் நிற்காமல், அது சார்ந்து ஞாநி பகிர்ந்த நிலைத்தகவளுக்கு மன்னிப்புக் கூறும்படியும் எதிர்பார்க்கிறார்.

ஆனந்த விகடன் பகிர்ந்திருந்த இந்தக் காணொளிக்கு “பரதேசி ரியாலிட்டி டீஸர்” என தலைப்பிட்டிருந்தார்கள். இதுவே பழைய ஜெயமோகனாக இருந்திருந்தால் – இதுபோன்ற வீடியோவை பதிவேற்றிய ஆனந்த விகடனை கிழிகிழியென கிழித்திருப்பார். இப்பொழுது கோடம்பாக்கக் கங்காணிகளின் கடைக்கண் பார்வை இவருக்குத் தேவைப்படுகிறது இல்லையா? ஆகவே ஞானியிடம் பின்வருமாறு கேள்வி கேட்கிறார்:

/-- இப்போது பரதேசி படம் வந்துவிட்டது. அதைப்பார்ப்பவர்களுக்குத் தெரியும் அந்த விளம்பரப்படத்தில் பாலா நடிகர்களை அடிப்பதாகக் காட்டியிருப்பது முழுக்க அந்தப்படத்தில் வந்த காட்சிகளைத்தான் என்று. அவர் நடிக்காத காரணத்துக்காக எவரையும் அடிக்கவில்லை, மாறாக நடிப்புச் சொல்லித்தருகிறார் என்று தெளிவாகிவிட்டது. பரதேசி குழுவினரே விளக்கமும் அளித்துவிட்டனர். பரதேசி படத்தை ஞாநி பார்த்தும் விட்டார். தான் தவறாகப்புரிந்துகொண்டமைக்காக ஒரு சொல் மன்னிப்புகோர ஞாநி முன்வந்தாரா? --/ -- (ஜெமோ)


பாலா குறித்த ஜெயமோகனின் கரிசனம் மெய்சிலிர்க்க வைக்கிறது. உண்மை என்னவெனில் தொழின்முறை சினிமா கலைஞர்களே கூட இந்த டீஸருக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். பாலாவின் பிதாமகன் படத்தில் நடித்திருந்த மனோபாலா தோழர் மார்க்ஸ்-ஐ தொடர்புகொண்டு குமுரியிருக்கிறார். தோழர் அதனை முகநூலில் கூட தெரியப்படுத்தியிருந்தார். ஜெமோவின் உச்சப் புரட்டே இனிமேல் தான் ஆரம்பிக்கிறது. ஞாநியை மட்டுமல்லாமல் இதர சினிமா சார்ந்த எழுத்தளர்களின் மீதும் புழுதியை வாரித் தூற்றுகிறார். ஹாலிவுட் நடிப்புப் பயிற்சியை காரணம் காட்டி, சினிமா இயக்குனர் பாலாவிற்குத் துணைநிற்கும் இவர் பின்வருமாறு கூறுகிறார்:

/-- ஞாநியின் கோபம் என்பது மிகமிகத் தனிப்பட்ட காழ்ப்பு சார்ந்தது. இன்று தமிழில் சினிமா பற்றி எழுதக்கூடிய எழுத்தாளர்கள் பெரும்பாலும் அனைவருமே வணிகசினிமாவுக்குள் நுழைய பெரும் கனவுகளுடன் முட்டிமோதியவர்கள். சில படங்களில் சம்பந்தப்பட்டவர்கள் உண்டு. அந்த வாய்ப்பு கிடைக்காமல் வருடங்களைத் தொலைத்தவர்கள் உண்டு. இன்றும் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருப்பவர்களும் உண்டு. தோல்வியின் அவமதிப்பு அவர்களில் வன்மமாகத் தேங்கிவிட்டிருக்கிறது. அவர்களைப்பொறுத்தவரை சினிமாபற்றி எழுதுவதென்பது அந்த விஷத்தை சினிமாக்கலைஞர்கள் மீது உமிழ்வதுதான்--/ -- (ஜெமோ)

‘கமர்ஷியல் சினிமாவை இவ்வளவு நுட்பத்துடன் அவதானிக்க வேண்டுமா? விமர்சனம் செய்ய வேண்டுமா?’ என்ற நாலாந்தர வாதம் தீராநதியில் எழுதும் கௌதம சித்தார்த்தன், முகநூலில் பகிரும் ஒருசில எழுத்தாளர்கள் மீது (சினிமாவுடன் தொடர்புடைய நபர்களால்) வைக்கப்படுகிறது. இதை விட அபத்தம் வேறென்ன இருக்கிறது. உலகத்திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் கலைப்படங்கள் ஒரு வட்டத்திற்கு மட்டுமே சென்று சேருவது போலத் தோன்றினாலும், உலகமெல்லாம் திரையிடப்படும் இடங்களில் அதன் மேக்கிங் சார்ந்தும், உள்ளடக்கம் மற்றும் இதர விஷயங்கள் சார்ந்தும் விவாதிக்கப்படுகிறது. ஆனால் கமர்ஷியல் திரைப்படங்கள் பெருவாரியான மக்களைச் சென்று சேர்கிற பட்சத்தில் – சாதாரண மக்களைச் சென்று சேரும் ஆக்கங்கள் “என்ன அரசியலைப் பேசுகிறது? என்ன தத்துவத்தைப் பேசுகிறது? என்ன கலாச்சாரத்தைப் பேசுகிறது? மொழி சார்ந்த விஷக் கங்குகளை எப்படித் திணிக்கிறது?” என்பது போன்ற விஷயங்களைப் பதிவு செய்யாமல் – வியாபார சினிமாவை மக்கள் நலன் சார்ந்து எந்த வகையில் முன்னெடுப்பது. அது கூடாது என்கிறார் ஜெயமோகன். ஏனெனில் அவர் சமந்தப்பட்ட சினிமா வியாபாரத்தின் குறிப்பிட்ட பங்கு அவருக்குச் சென்று சேர்க்கிறது இல்லையா? அதனால் தான் பின்வருமாறு கேக்கிறார்:

/-- எழுத்தாளர்கள் சினிமாவுக்குச் சென்று நல்ல சினிமாவுக்காக ஏதும் செய்யவில்லை என்று சொல்லும் ஞாநி அப்படி ஏதும் நடந்துவிடக்கூடாது என்று தான் உள்ளூர நினைக்கிறார்....

.... இதைத்தான் எஸ்.ராமகிருஷ்ணனுக்கும் செய்தார் ஞாநி. பெயர்தெரியாத ஏதோ உதவி இயக்குநர் நாலாந்தர இணைய இதழ் ஒன்றில் எஸ்.ராமகிருஷ்ணனின் சினிமாவாய்ப்புகளை இல்லாமலாக்கும் நோக்குடன் எழுதிய அப்பட்டமான அவதூறுக்கட்டுரையை தன்னுடைய ஃபேஸ்புக் தளத்தில் புழக்கத்துக்கு விட்டார் அவர். [அதைப்போன்ற அப்பட்டமான அவதூறுக் கட்டுரைகள் என்னைப்பற்றியும் வந்துள்ளன. ]ஞாநியின் உணர்ச்சிதான் என்ன? சினிமாவில் எழுத்தாளர்கள் வெற்றிபெற்றுவிடக்கூடாது, ஏனென்றால் அது அவர் தோற்ற துறை. ஓர் ஆளுமையின் கீழ்மையின் அடிமட்டம் இது. --/ (ஜெமோ)

‘கஸ்தூரி மான்’ படத்தைச் சார்ந்த கேள்விக்கு ஞாநிதான் பதில் சொல்ல வேண்டும். அதை அவர் பார்த்துக் கொள்வார். ஆனால் ஞாநி சினிமாவில் பங்காற்றும் எழுத்தாளர்களுக்கு எதிரானவர் என்பதை நிரூபிக்க எப்படிக் கூட்டுச் சேர்க்கிறார் பாருங்கள்? “எஸ்ரா” சார்ந்த வியாபார நட்டக் கட்டுரையை பலரும் படித்துப் பகிர்ந்திருந்தார்கள். ஆனால் ஞாநி போன்ற கடுமையான விமர்சகர்களின் வாயை அடைக்க இதுபோன்ற சம்பவங்களை தூசுத் தட்டுகிறார் ஜெமோ. பாலா சாருக்கு தேயிலைத் தோட்டக் கங்காணிபோல எஸ்ரா சல்யூட் அடித்து ஒரு பதிவினை அவருடைய இணையத்தளத்தில் எழுதியிருந்தார். நாஞ்சில் நாடனைத் தவிர்த்து மற்ற எல்லோருக்கும் அதில் வாழ்த்துச் சொல்லி இருந்தார். நாஞ்சிலின் மீது அவருக்கு அப்படியென்ன வஞ்சமா தெரியவில்லை. ‘வசனம்’ தான் இந்தப் படத்தை உலகத் தரத்திற்கு உயர்த்துகிறது என ஊர் உலகமே கொண்டாடுகிறது. அப்படியிருக்க எஸ்ரா அதுபற்றி ஒரு வார்த்தைக் கூட எழுதாதது ஆச்சர்யமாக இருந்தது. ‘எஸ்ரா, ஜெமோ’ போன்றவர்கள் தான் சக போட்டியாள வசனகர்த்தா திரைத்துறையில் மின்னுவதைப் பார்த்து அநியாயத்திற்கும் அதிர்ந்துபோய் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். மாறாக விமர்சகர்கள் மீது பழியைத்தூக்கிப் போடுகிறார் ஜெமோ. 

எழுத்தாளர் சுஜாதா இருந்த வரை – ஜெமோ, எஸ்ரா போன்றவர்கள் கோடம்பாக்கக் கதவுகளை முட்டிமோதி பிரயத்தனப் பட்டார்கள். சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சுஜாதா போல இவர்களால் எழுத்திலும் சரி, சினிமாவிலும் சரி ஜொலிக்க முடியவில்லை என்ற தாழ்வு மனப்பான்மையே விமர்சகர்களைச் சார்ந்து தரக்குறைவாக பேச வைக்கிறது என்று நினைக்கிறேன். இவர்கள் கைகோர்க்கும் வியாபார சினிமா பல நேரங்களில் தோல்வியில் தான் முடிகிறது. “எழுத்தாளர்கள் பங்குபெறும் திரைப்படங்கள் பெரும்பாலும் தோல்வியில் முடிகின்றன” என்பதை இன்னொரு கோணத்திலும் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. 

சினிமா இயக்குனர்களின் திறமையற்ற திரைக்கதை ஆக்கத்திலும் இருக்கிறது இல்லையா? கடல் அருமையான கதை. அதனை மணிரத்னம் சொதப்பி இருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய தன்மையிலும் பேசலாம் இல்லையா? ஆனால் மணிரத்னத்தை உயர்த்திப் பிடிக்க “காட்சிப் படிமங்களால் நகரும் தமிழின் முதல் சினிமா...” என ஜெமோ குழாம் பேசுகிறது. இங்குதான் உண்மையைக் குழி தோண்டிப் புதைக்கிறார்கள். இதென்ன வார்த்தை விளையாட்டு என்று தெரியவில்லை. சினிமா என்பதே காட்சிப் படிமங்களால் நகரும் படைப்பாக்கம் தானே! கடல் படத்தை இந்தத் தன்மையின் முதல் ஆரம்பம் என எப்படிச் சொல்ல முடியும்?
இந்தக் கூத்தில் “காட்சிப் படிமங்களால் திரைக்கதையை நகர்த்தும் தமிழின் முதல் படம் பரதேசி” என முத்துக்குமாரசாமி ஒரு திரியைக் கொளுத்திப் போடுகிறார். ஜெமொவிற்குக் கேடயம் வைக்கிறாரோ என்று நினைத்துக் கொண்டேன். சரி விஷயத்திற்கு வருவோம். ஜெமோ தொடர்ந்து பின்வருமாறு பிதற்றுகிறார்:

/-- ஞாநி எல்லாவகையிலும் தோற்றுப் பின்வாங்க நேர்ந்தது. அரசு தொலைக்காட்சியில் வெற்றி முக்கியமல்ல, தொடர்புகளே முக்கியம். அதைக்கொண்டு அவர் சில திராபையான தொடர்களை எடுத்தார் அவ்வளவுதான். ஞாநியின் சினிமா அனுபவங்கள் கசப்பானவை என்பதை நான் அறிவேன். ஆனால் வேறு வழியே இல்லை. அவ்வளவுசெயற்கையாக இருக்கும் அவரது நடிப்பு .--/

ஞாநி ஓர் இன்டிபென்டன்ட் ஃபிலிம் மேக்கர் வகையில் சேர்பவர். குறும்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் ஆட் ஃபிலிம்ஸ் போன்றவற்றை ஏற்கனவே எடுத்திருக்கிறார். முக்கியமாக திலீப் குமார் போன்ற எழுத்தாளர்களின் சிறுகதையை குறும்படங்களாக எடுத்தால் – கதை அந்த சிருகதையாலருடையது என்று நேர்மையாக சொல்லிவிடுகிறார். ஆக, ஞாநியுடன் சினிமாவிற்கு டேட்டா என்ட்ரி வேலை செய்யும் எழுத்தாளர்களும், மேலதிகமாக வசனம் எழுதும் எழுத்தாளர்களும் எந்த வகையில் ஒபிட்டுக்கொள்ள இயலும். அடிப்படையில் ஜெமோ போன்றவர்களுடைய மனப்பான்மையே தவறு. இதுகூடத் தெரியாத குழந்தையா ஜெயமோகன்.

ஞாநியுடன் பழகியவர்களுக்குத் தெரியும் அவர் சமரசம் செய்துகொள்ளாத பத்திரிகையாளர் என்று. மற்றவர்களைப் போல கூழைக் கும்பிடு போட்டிருந்தால் அவர் கூட நிறைய படங்களுக்கு வசனம் எழுதியிருக்கலாம். லொகேஷன் பார்க்க “பாலா சார், மணி சார்” போன்றவர்களுடன் தஞ்சாவூர், திருநெல்வேலி, காசி என சுற்றியிருக்கலாம்.

கடைசியாக ஒரு ஞாயத்தை பாலாவிற்காகக் கேட்டிருக்கிறார் ஜெமோ:

/-- ஞாநி உட்பட இந்தக் கும்பல் பாலாவைப்பற்றி என்னென்னவோ வசைபாடியிருப்பதைப் பார்க்கிறேன். எவ்வளவு கீழ்மை. இந்த அளவுக்கு வசைபாட, சமூகவிரோதிபோல வேட்டையாடப்பட , அந்தக்கலைஞன் தமிழ்ச்சமூகத்திற்குச் செய்த அநீதிதான் என்ன? --/

இதற்கு பரதேசியையே உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். “நான் கடவுள், கடல்” போன்ற படங்களில் ‘கதை இலாகா, திரைக்கதை, வசனம்’ போன்ற பொறுப்புகளில் ஜெமோவின் பெயர் வரும். ஆனால் பரதேசி திரைப்படத்தின் முன்பாதி நாஞ்சில் நாடனின் “இடலாக்குடி ராசா” என்ற சிறுகதையின் சாரம். நாஞ்சிளின் பெயர் கதை இலாக்காவில் ஏன் வரவில்லை? (இந்த விஷயத்தில் இயக்குனர் மகேந்திரன், வசந்த், வசந்தபாலன், சுசீந்திரன் போன்ற கண்ணியமானவர்களும் இருக்கிறார்கள்.) சரி போகட்டும் “ரெட் டீ”-யைத் தமிழில் மொழி பெயர்க்கவில்லை எனில் பாலாவின் கவனத்திற்கு வந்திருக்குமா? மொழிபெயர்ப்பாளர் இரா. முருகவேள் சார்ந்து ஒரு வார்த்தை சொல்லியிருப்பாரா?

நாஞ்சில் நாடனை இருட்டடிப்பு செய்வது தமிழுக்குச் செய்யும் திரோகம் இல்லையா? இது போதாதா? இத்தனைக்கும் நாஞ்சில் நாடன் ஜெமோ-வின் பலவருடகால நண்பர்தானே!? எழுத்தாளர்களின் அறம் நாளுக்கு நாள் மரணித்துக் கொண்டே வருகிறது. பாலாவின் ஜனரஞ்சக சினிமா வெளிச்சம் தன்மீதும் விழ, அவருடன் கைகோர்க்க – விமர்சகர்களைத் திட்டி தேவையற்று வக்காலத்து வாங்குவது கீழ்த்தரமான விஷயம். அதைத் தான் ஜெமோ நுட்பமாகச் செய்துகொண்டிருக்கிறார்.

ஞாநியைப் பற்றி வாய்கிழியப் பேசும் ஜெமோ – கதை இலாக்காவில் நாஞ்சில் நாடனின் பெயரை இருட்டடிப்புச் செய்து தன்னுடைய பெயரைப் போட்டுக்கொண்ட பாலாவின் அறமற்ற செயலைப் பற்றி பேச ஜெமோ முன்வருவாரா? மனமைத்துனம், கைமைத்துனம் துவங்கி சிட்டுக்குருவி லேகியத்தின் மூலிகைச் சேர்ப்பு வரை யார் எதைக்கேட்டாலும் பதிலளிக்கும் ஜெமோ – பாலா நாஞ்சில் நாடனுக்குச் செய்த இருட்டடைப்பைப் பற்றி பேச முன்வருவாரா?

Friday, March 8, 2013

சுண்டாட்டம் – திரை விமர்சனம்

கிராமத்தில் வாழ்ந்த எங்களுக்கெல்லாம் பள்ளி விடுமுறையானது கொண்டாட்டங்கள் நிறைந்தது. கோடை விடுமுறையில் பாட்டியின் பிறந்த ஊரான ஆமூரில் சில நாட்களும், அம்மாவின் தங்கை வாழ்க்கைப் பட்டுச் சென்ற புதுவண்ணாரப் பேட்டை(கூட்டுசாலை)-யில் சில நாட்களும் தஞ்சம் அடைவோம். அம்மாவின் தங்கை அந்த காலத்திலேயே BA படித்தவள். என்றாலும் குடும்ப சூழ்நிலை காரணமாக பேக்கரியில் வேலை செய்த ஒருவருக்குக் கட்டாயத் திருமணம் முடித்தார்கள். சித்தியின் கணவர் என்னமோ தங்கமானவர். நிறைய சம்பாதிக்கத் தெரியவில்லையே தவிர, அன்பான மென்மையான மனிதர். விடுமுறைக்குச் செல்லும் மாலை நேரங்களில் - மீன் மார்கெட், பீச், சினிமா தியேட்டர் என திருவற்றியூர் முதல் மகாராணி தியேட்டர் வரை எங்காவது செல்லும் பொழுது தெருவீதிகளில் சிறுவர்களும் இளைஞர்களும் திரள் திரளாக நின்று கேரம்போர்ட் விளையாடுவதைப் பார்த்திருக்கிறேன். (வியாசர்பாடி, ஜமாலியா போன்ற இடங்களில் இப்பொழுதும் கூட அரிதாகப் பார்க்கலாம்). விரல்களால் சுண்டி விளையாடும் அந்த விளையாட்டை மையமாகக் கொண்ட கதைக் களம் தான் சுண்டாட்டம்.

ஏறக்குறைய ஆறு வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த சித்தி, இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த பின்னர் விவாகரத்துப் பெற்று – கார் டிரைவரான கணவரின் நண்பருடன் சேர்ந்து வாழத் தொடங்கினாள். அதன்பின் குடும்ப உறவுகளெல்லாம் அவளை ஒதுக்கி வைத்தார்கள். அப்போதிலிருந்து வட சென்னை வாசமும் அற்றுப் போனது.

ஒரு ரெபரன்ஸ்-க்காக 1985 முதல் 1990 –ம் ஆண்டுகளுக்கு இடையில் பயணிக்கும், நகர வாழ்க்கையை மையமாகக் கொண்ட படைப்புகளில் சிலவற்றை தேடிக் கொண்டிருந்தேன். தேவைப்படுவது போல உருப்படியாக ஒன்றும் கிடைக்கவில்லை. சுண்டாட்டம் (கேரம்ஃபோர்ட்) & பூகோளம் (பாக்ஸிங்) ஆகிய இரண்டு திரைப்படங்களும் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் நடக்கும் கதையை மையமாகக் கொண்டது என்பதால் படம் வெளிவந்ததும் பார்த்துவிட வேண்டும் என்றிருந்தேன். அதில் சுண்டாட்டம் மகளிர் தினமான மார்ச் 8 -ல் திரைக்கு வந்திருக்கிறது. ஜூலை 22, 1990 - ஞாயிற்றுக் கிழமை என கொட்டை எழுத்துகளில் போட்டு, நம்மைத் தயார்படுத்திய பிறகுதான் சினிமா பயணிக்கத் துவங்குகிறது.

பெரும்பாலான திரைப்படங்களில் வாய்ஸ் ஓவரில் கதையைச் சொல்வது நெருடலாகவே இருக்கிறது. கவுதம் வாசுதேவன் படங்களில் இது மிக அதிகமாக இருக்கும். வார்த்தைகளால் கதையைச் சொல்ல சினிமா எதற்கு? (நான் பார்க்கும் பெரும்பாலான குறும்படங்களில் இந்த முறைதான் பயன்படுத்தப்படுகிறது. இதனைக் கொஞ்சம் தவிர்த்து, காட்சியின் மூலம் கதையை நகர்த்தினால் நன்றாக இருக்கும்.)

ரவுடிக் கும்பல் ஒருவனைத் துரத்துகிறார்கள். ஓடவிட்டு அவனை வெட்டுகிறார்கள். வில்லன் பாக்யா கூலாக கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு அறிமுகமாகிறார். (வில்லன் வேடமோ! குணச்சித்திர வேடமோ! கச்சிதமாகச் செய்கிறார் இந்த நடிகர்.) ஆஹ்ஹ்...! நீங்கள் சரியாக கணித்திருப்பீர்கள். ஆம்... இப்பொழுது ஹீரோவின் முறை. அவர் கள்ளத்தனமாக பெட்டிங் செய்து கேரம்போர்ட் விளையாடிக் கொண்டிருக்கிறார். எதிரிகள் சாதூர்யமாக ஹீரோவை ஏமாற்றுகிறார்கள். அவர்களிடம் சண்டையிட்டு ஜெயித்த பணத்தைப் பிடுங்கிச் சென்று தண்ணியடிக்கிறார்கள் ஹீரோ கும்பல். அங்கிருந்து சினிமா அரங்கிற்குச் செல்கிறார்கள். ஹீரோ மட்டும் தன்னை எடைபோட்டுப் பார்க்கிறார். துண்டுச் சீட்டு வெளி வருகிறது. அதில் “உங்கள் தேவதையைக் காண்பீர்கள்” என எழுதியிருக்கிறது. ஹீரோவும் உதடு விரியச் சிரித்துக் கொண்டு அரங்கின் உள்ளே செல்கிறார். அங்கே ப்ளூ ஃபிலிம் ஓடிக்கொண்டிருக்கிறது. “எந்த தேவதை புளூ பிலிம் பார்க்க இங்க வரப்போறா? ஹீரோவின் கண்களில் படப் போறா?” என்ற யோசனையும் உடனெழுந்தது. நல்லவேளை அப்படி எதுவும் நடக்காமல் - போதையில் தல்லாடியவேறே வீட்டிற்குச்சென்று, தட்டைக் கூட பயன்படுத்தாமல் தரையில் மண்சோறு சாப்பிடுகிறார். ஹீரோவின் அம்மா, அப்பா, தங்கை ஆகியோர் அறிமுகமாகிறார்கள். பின்னர் ஹீரோ தூங்கச் செல்கிறார்.

“டக் டக் டக்” என கதவு தட்டும் ஓசை கேட்கிறது. ஹீரோ கண்விழிக்கிறார். நொந்தவாறு எழுந்து சென்று கதவையும் திறக்கிறார். பல் தேய்க்காத அவருடைய முகத்தில் பளிச்சென சூரிய ஒளி அடிக்கிறது. அது சூரிய ஒளி இல்லை – தங்கையின் தோழியான ஹீரோயினியின் முக ஒளி என்பதை அறிகிறார். “தேவதையைக் காண்பீர்கள்!” துண்டுச் சீட்டு அவருக்கு ஞாபகம் வருகிறது. எனக்கோ “அம்மா, அப்பா, தங்கை” ஆகிய மூவரும் இரவு நேரத்தில் வீட்டில் தானே இருந்தார்கள். கதவைக் கூட திறக்காமல் எப்படி அவர்கள் வெளியில் சென்றிருப்பார்கள் என யோசித்துக் கொண்டிருந்தேன். (சரி போகட்டும் ஒரு மூலையில் தூங்கிக் கொண்டிருப்பார்கள்.)

பின்னர் ஹீரோ, ஹீரோயினியை நினைத்து மறுகிறார். கனவுலகில் மிதக்கிறார். பாஸ்போர்ட் எடுக்க்கும் ஏஜெண்டைப் பார்க்கச் செல்லும் இடத்தில் சிலர் கேரம் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பாக்யாவின் ஆட்கலெனத் தெரியாமல் அவர்களுடன் மல்லுக்கட்டி சண்டை போடுகிறார் ஹீரோ. மீண்டும் அதே இடத்திற்குச் சென்று மாட்டிக் கொள்கிறார். ரவுடிகள் துரத்த, ஹீரோ ஓட... ரவுடிகள் துரத்த, ஹீரோ ஓட... கடைசியில் பாக்யாவின் வீட்டு கக்கூசில் ஒளிந்துகொல்கிறார். பின்னர் பாக்கியாவிடமே கையும் களவுமாக மாட்டிக் கொள்கிறார். இங்கு தான் டிவிஸ்டே ஆரம்பிக்கிறது. பாக்கியா கேரம்போர்ட் வெறியர். அதற்கென கேசினோ டைப் நைட் கிளப் கூட நடத்துகிறார். எனவே இதுவரை வில்லனென நினைத்த பாக்கியா ஹீரோவுக்கு இணக்கமாகிறார். பாக்கியாவின் ஆஸ்தான ப்ளேயர் (டிரக் அடிக்ட்) ஹீரோவுக்கு வில்லனாக மாறுகிறார். தன்னுடைய இடத்தை ஹீரோ பிடித்துவிட்டதால், அவரைப் பழிவாங்கத் துரத்துகிறார் டிரக் அடிக்ட் பிளேயர். வெறியில் இரண்டு கொலைகளைக் கூட செய்கிறார். ஆரம்பத்தில் ஒருவனை போட்டுத் தள்ளினார்களே, அவர்களுடைய கேங்க் பாக்யாவை போட்டுத் தள்ளப் பார்க்கிறார்கள். அதற்கு பாக்கியாவின் தளபதிகளில் ஒருவரையே பயன்படுத்தப் பார்க்கிறார்கள். (பாஸ்போர்ட் எடுக்கும் இடத்தில் ஹீரோ சண்டையிட்டு அடித்தாரே... அவர் தான்...)

சரியான தருணத்திற்காக அந்தத் தளபதி காத்திருக்கிறார். காதலியுடன் திருட்டுக் கல்யாணம் செய்துகொள்ள ஊரைவிட்டு ஓட நினைக்கும் ஹீரோ, அதிகாலையில் CAR-ஐக் கடனாகக் கேட்க பக்யாவிடம் வருகிறார். அந்த நேரத்தில் பாக்கியாவை போட்டுத் தள்ளும் விஷயம் ஹீரோவிற்குத் தெரியவந்து, அவருடைய அடிவயிறு கூரிய கத்தி கொண்டு குத்தப்படுகிறது. பாக்யா அவரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றுகிறார். இதற்குள் ஹீரோயினி வீடு மாற்றிக்கொண்டு வெளியூர் சென்றுவிடுகிறார். அவரைக் காணாமல் தவிக்கிறார் ஹீரோ. ஹீரோ ஃபாரின் செல்லும் அவசரத்தில் இருக்க, திடீரென அண்ணனுடன் CAR-ல் வந்து இறங்குகிறார் ஹீரோயின். ஆனால் டிரக் அடிக்ட் பிளேயரால் கழுத்தருத்து கொல்லப்படுகிறார் ஹீரோயின். வாழ்க்கை போட்சேன்னு வாய்ஸ் ஓவரில் வருத்தப்படுகிறார் ஹீரோ. பாரத் தியேட்டர், பாரதி கல்லூரி என்று கண்பிக்கப்படுவதால் – இதனை வட சென்னை கதைக் களமாகக் கொண்டுதான் பார்க்க வேண்டி இருக்கிறது. சினிமாக்களைப் பொருத்த வரை - வட சென்னை மக்களை ரவுடிகளாகவும், போதைக்கு அடிமையானவர்களாகவும், காமத்தில் திளைப்பவர்களுமாகவே சித்தரிக்கிறார்கள். சுண்டாட்டமும் இதில் விதிவிலக்கில்லை.

வட சென்னை மக்கள் உண்மையில் உடலளவில் கடுமையாக உழைக்கக் கூடியவர்கள். “வெல்டிங், எலக்ரிஷன், மீன் பிடித்தல், பளு தூக்குதல், கூலி வேலை” என ஆண்கள் எதையும் தயங்காமல் செய்யக் கூடியவர்கள். குளிரூட்டப்பட்ட இடத்தில் வேலை செய்பவர்களே மதுவினை எடுக்கும் பொழுது, பாரம் சுமப்பவர்கள் உடல்வலியை தாங்கிக்கொள்ள போதை தரும் பொருட்களை எடுத்துக் கொள்ளுதல் இயல்புதானே. பெண்கள் கூட “மார்கெட் வியாபாரம், கையேந்திபவன், பூ வியாபாரம்” என தங்களால் முடிந்த வேலையைச் செய்யக் கூடியவர்கள். அவர்களை தாசிகளாக மட்டுமே சித்தரிப்பது அவலத்திலும் அவலம்.

லோ பட்ஜெட் படம் என்பதால் தொண்ணூறுகளின் தன்மையை படத்தில் கொண்டுவர சிரமப்பட்டிருக்கிரார்கள். இருபதாண்டுகளில் சென்னை எவ்வளவோ மாறிவிட்டது. பேருந்து, பணம், நாணயம், ஆடைகள் என எல்லாம் மாறிவிட்டது. ஆகவே படமாக்குவது சிரமம் தான். எடைபோடும் மெஷினில் பளபளக்கும் வட்ட வடிவ புதிய நாணயத்தையே ஹீரோ நுழைக்கிறார். போலவே பல நடிகர்களும் அணிந்துள்ள ஆடைகளும் பளபளவென புதியதாகவே இருப்பது போலத்தோன்றியது. ஆரம்பத்தில் தலைகாட்டிய ஹீரோவின் குடும்பத்தார் நடுவில் காணாமல் போய்விட்டனர். வயிற்றில் குத்தப்பட்டு மருத்ஹ்டுவன மனையில் சிகிச்சை பெரும்பொழுதும் யார்யாரோ ஹீரோவின் அருகில் இருக்கின்றனர். குடும்பத்தார் தூரத்து உறவினர்கள் போல வந்து செல்கின்றனர். இதிலெல்லாம் கொஞ்சம் கவனம் செலுத்தி மெனக்கெட்டு இருக்கலாம். இசையும் கூட சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

இர்பான் நன்றாகச் செய்திருக்கிறார். துடிப்புள்ள நடிகர் தான்... என்றாலும் அவருக்கென நேரம் வாய்க்க வேண்டும் தானே! சுண்டாட்டத்தை அவர் ரொம்பவும் எதிர்பார்க்கக் கூடும். ஆனால் பிரயோஜனம் இல்லை.

Saturday, March 2, 2013

நகல் மனிதர்களின் முக ஒற்றுமை

எல்லோருக்கும் இது நடந்திருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் எனக்குப் பல முறை நிகழ்ந்திருக்கிறது. சிலர் உற்றுப் பார்ப்பார்கள். நானும் அவர்களையே பார்ப்பேன். பின்னர் கடந்து சென்றுவிடுவார்கள்.

சிலர் மட்டும் நெருங்கி வந்து கேட்பார்கள்:

“ஏனுங்க நீங்க கோயந்த்தூருங்களா?”

“இல்லியே...!” என்பேன். அவர்களுக்குத் தெரிந்த யாரேனும் ஒருவரது பெயரைச் சொல்லி “நீங்க அவரோன்னு நெனச்சேன்... சாரி...” என்பார்கள். போலவே, “நீங்க ராம்னாட்டா? நீங்க மதுரை தானே? உங்களுக்கு கடலூர் பக்கம் தானே சொந்த ஊரு?” என்று பலரும் கேட்டிருக்கிறார்கள். அந்த சமயங்களிலெல்லாம் எனக்கு ஆச்சர்யமாகவே இருக்கும்.

“மச்சான் உன்னைய போலவே ஒருத்தன அத்திப்பட்டு ஸ்டேஷன்ல பார்த்தேண்டா” என பொன்னேரியில் வசிக்கும் சில நண்பர்கள் கூட சொல்லியதுண்டு. “சச்சின், எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த்” போன்ற பல பிரபலங்களுடைய நகல் மனிதர்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். எனக்கும் கூட எழுத்தாளர் பாஸ்கர் சக்தியும், தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர் பஞ்சு அருணாச்சலத்தின் மகன் சுப்புவும் ஒரே ஜாடையில் இருப்பது போல சில நேரங்களில் தோன்றும். பாஸ்கரிடம் கூட ஒருமுறை சொல்லி இருக்கிறேன். “அப்படி எதுவும் இல்லியே கிபி” என்று தான் அவர் கூறினார்.

இணையத்தில் உலாவும் பொழுது சில நண்பர்களுடைய முக ஒற்றுமைகளை ஒப்பிட்டுப் பார்த்து ஆட்சர்யப்பட்டிருக்கிறேன். அவற்றில் சில:

1. முகநூல் தோழர் சரவண வீரையா & உடன் வேலை செய்த நண்பர் இன்பராஜ் (
இந்த ஒரு புகைப்படத்தில் மட்டுமே இருவரும் ஆச்சில் வார்த்தது போல இருக்கிறார்கள்.)

2. எனது செல்லப் பிள்ளைகளில் ஒன்றான ஜகந்த் & எழுத்தாளர் தமிழ்மகனின் செல்லப் புதல்வர் மாக்சிம். (ஆண்கள் பெண்கள் – புத்தக வெளியீட்டில் தமிழ் மகனிடம் இந்த ஒற்றுமையைச் சுட்டிக் காட்டினேன். “ஆமாம் பிரபு... ரெண்டுபேரும் ஒரே மாதிரி தான் இருக்கானுங்க” என்றார்.)


3. ஆந்திர அரசியல் தலைவர் ஜனார்த்தன ரெட்டியும், ஜேகே குரூப்ஸ் நிறுவனரும், ஜேகே ஃபவுண்டேஷன் மூலம் விழுப்புரம் அரசு பள்ளிகளை தத்தெடுத்து மாணவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு உதவி செய்பவருமான ஜெயகிருஷ்ணன். 


4மயின்ட் ஃப்ரெஷின் நல விரும்பிகளில் ஒருவரான பள்ளி ஆசிரியர் கீர்த்தி & எழுத்தாளர் அரவிந்தனின் (நம்ம சென்னை) துணைவியார் ஸ்ரீதேவி (பாடகி)5. இந்த ஆங்கிலப் பாடகன் யாரென்று தெரியவில்லை. ஆனால் சாதுவின் நண்பன் லோகேஷ் போலவே இருக்கிறார்.இதெல்லாம் உதாரணங்கள் மட்டுமே. யாரென்றே தெரியாத, பயணத்தில் கடந்து செல்லும் மனிதர்களின் முகங்களில் - நெருக்கமான நண்பர்களின் ஒற்றுமையைக் காண்கிறேன். போலவே நானும் யார் யாருக்கெல்லாமோ தெரிந்தவன் போல இருக்கிறேன். என்னிடம் நான்கு முகக் கண்ணாடிகள் இருக்கின்றன. அவற்றை விரும்பியபடி மாற்றி மாற்றி அணிந்துகொள்வேன். அணியும் கண்ணாடிகள் கூட கடந்து செல்பவர்களின் மனதுக்கு நெருக்கமானவனாக என்னை நிறுத்தி விடுகிறது போல. “எது எப்படியோ? வம்பு தும்பில் மாட்டாமல் இருந்தால் சரி!” என்றுதான் ஒவ்வொரு முறையும் நினைத்துக் கொள்கிறேன்.

பின்குறிப்பு: நண்பர்களின் புகைப்படங்களையும், பெயர்களையும் – அனுமதி பெறாமல் பயன்படுத்தி இருக்கிறேன். அவர்கள் என்னை மன்னித்து, ஆசிர்வதித்து  அருள் பாளிப்பார்கலாக! 

நன்றி...