Thursday, March 28, 2013

அஜால் குஜால் புத்தர்

என்னுடைய நண்பர்களில் ஒருவன் ‘சாமியார், மடம்’ என்று அலைந்து கொண்டிருந்தான். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவனுடைய புத்திக்கு எட்டவே இல்லை. “திருவண்ணாமலை கிரிவலம், திருப்பதி மலைவலம்” என்று எங்காவது தோதாக நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு சுற்றிக் கொண்டே இருப்பான். வீட்டிற்கு ஒரே பையன் வேறு.

“அடடே... குடும்ப வாரிசே இல்லாமல் செய்துவிடுவானோ!” என்று அவனைப் பற்றிக் கவலைப்பட்ட நாட்கள் கூட உண்டு. “யோகிராம்... யோகிராம்...” என சில காலம் முணுமுணுத்துக் கொண்டிருந்தான். அந்த சமயத்தில் தான் வட இந்தியப் பயணம் சென்றிருந்தேன். அப்படியே எட்டிப் பிடித்து நேபாளமும் செல்ல நேர்ந்தது. சந்தையில் சுற்றிக் கொண்டிருந்த பொழுது புத்தனின் வித்யாசமான சிலையொன்றைப் பார்க்க நேர்ந்தது. தியானத்தில் ஆழ்ந்திருக்கும் புத்தனுடன், நிர்வாண கோலத்தில் ஒரு பெண்மணியும் இருந்தார். அடப் பாவிங்க சம்பா சம்புத்தனை இப்படிக் கூடவா புராடக்ட் ஆக்குவிங்க என மனதில் நினைத்துக் கொண்டேன்.



“இந்த மாதிரி அநியாயம் கூடவா பண்ணுவாங்க...!” என்று நினைத்துக் கொண்டு, அந்த சிலையைப் பற்றி மேலதிகமாக கடைக்காரரிடம் விசாரித்தேன். ஏதோ “......... தந்த்ரா” என சொல்லிவிட்டு “அப்பா-அம்மா சிலை” என அளந்துவிட்டுக் கொண்டிருந்தான். அப்பொழுதுதான் பொறி தட்டியது. என்னுடைய நண்பரில் இருவருக்காக தியானக் கலவியில் இருக்கும் புத்தனின் இரண்டு சிலைகளை வாங்கிக் கொண்டேன். இரண்டு பேரும் சொல்லியது இதைத்தான்:

“ஊடுன்னா ஊட்ல இத எப்பிடிடா வச்சிக்கிறது?”

இணையத்தில் புத்தனைப் பற்றி வாசித்துக் கொண்டு செல்கையில் நான் வாங்கிய சிலையைப் போன்ற புகைப்படங்களைக் காண நேர்ந்தது. சிலை வாங்கித் தந்த அதிர்ஷ்டமோ என்னவோ? இருவருக்கும் திருமணமாகி குழந்தைக் குட்டிகளுடன் சௌக்கியமாக வாழ்கிறார்கள்.

(இந்தச் சிலையைப் பற்றிய மேலதிகத் தகவல்கள் தெரிந்திருப்போர் மேலதிகமாக பின்னூட்டத்தின் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். அநாகரீகமான பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படும்.) கும்புடுக்குறங்க...

தொடர்புடைய பின்னூட்டங்கள்:

ஓவியர் நாகராஜன் அரவக்கோன்: (முகநூலில்)

புத்த மதம் மூன்று பிரிவுகளைக்கொண்டது முறையே ஹீனயானம்,மஹாயானம், வஜ்ரயானம். மூன்றாவது தான் திப்பேத் பின்பற்றுவது. இந்துமதத்தின் தாந்த்ரிக சிந்தனைகளை உள்ளடக்கியது. உருவவழிபாடும் கொண்டது. நேபாள திப்பேத் ஓவியங்களில் இவ்வித நிலைகள் இயல்பானவை. விரிவான விளக்கத்துக்கு கூகிளில் தேடினால் படிக்கலாம்.அல்லது எனது 'இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்' நூலில் படிக்கலாம்.

கவிஞர் வேல்கண்ணன்: (மின்னஞ்சலில்)

ஓஷோ எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். எந்த புத்தகம் என்று நினைவில்லை. அவ்வளவு 'ரொப்பி' விட்டார்கள். புத்தன் என்றாலே நிர்வாணம் என்ற அர்த்தமாகவும் கொள்ளலாம். அந்த நிர்வாணத்திற்கு உடல் சார்ந்து மனம் சார்ந்து என்ற இரு வேறு அர்த்தம் உண்டு. காமத்தை மன நிலை, உடல் நிலை மற்றும் தியான முறை மற்றும் சில பயிற்சியுடன் அனுகுவதின் மூலம் இறை நிலை அடையாளம் என்று இருக்கிறது. பொதுவாகவே 'தந்த்ரா' எனப்படுவது புத்த மதத்தில் இருப்பதால் புத்தனுடன் சேர்த்து யாரோ ஒரு கலைஞன்(ஓவியர், சிற்பி) கற்பனையில் உருவாக்கி பின் இதனை வடித்திருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். நேரில் பார்க்கும் போது இன்னும் சிலவற்றை பேசலாம்.

No comments:

Post a Comment