Saturday, December 31, 2011

தேவலோக வாழ்க்கை

இதோ இப்போதான் தர்ஷன் பிறந்தா மாதிரி இருக்கிறது. எதைப் பார்த்தாலும் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தவன் புதியவர்களின் முகம் பார்த்து அழ ஆரம்பித்துவிட்டான். என்னைப் பார்த்து அதிகமாகவே அழுகிறான். பயத்தில் தான் அழுவதாக நினைக்கிறேன். ஒரு பூனையைப் பார்த்து பூனை பயப்படுவதில்லை. நாயைப் பார்த்து நாயும் பயப்படுவதில்லை. யானையைப் பார்த்து யானை கூட பயப்படுவதில்லை. மனிதக் குழந்தைகள் மட்டும் ஏன் புதிய மனிதர்களைப் பார்த்து அழுகிறது?. அப்படியெனில் எது போன்ற ஜந்துக்கலாக வளர்ந்த மனிதர்களின் முகங்கள் குழந்தைகளின் கண்களுக்குப் புலப்படுகிறார்கள். இந்த சந்தேகம் நீண்ட நாட்களாக எனக்கு இருக்கிறது.

“இவன் ஏன் மாமா என்னைப் பார்த்து இப்புடி அழுவுறான்?” என்று தர்ஷனின் தாத்தாவிடம் கேட்டேன்.

“அவம்பேரு தர்ஷன் இல்ல. தூர்....தர்ஷன், அப்படித்தான் அழுவான். தொலவா இருந்து கேட்டுட்டுப் போ” என்றார்.

தொலைவாகச் சென்றதும் அழுகை சத்தம் நின்றது. தாத்தாவின் முகத்தைப் பார்த்து பேரன் சிரித்துக் கொண்டிருந்தான். பட்டாம்பூச்சி பறந்து பூக்களில் தேனெடுப்பது போல சிரிப்பானது இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தது. சாக்லேட் வேணும்னு அழுதுட்டு இருந்த பையன் இந்த அகில். “டேய்... இங்க வாடா விளையாடலாம்! நீ சீட்டிங் பண்ற போடா”-ன்னு பேசிட்டு இருந்த பையன். ஸ்கூலுக்கு அனுப்பியதிலிருந்து “வாங்க மாமா... போங்க மாமா”-ன்னு பேசப் பழகிவிட்டான். அகில் ஏதாச்சும் விளையாடலாம்மான்னு கேட்டா “டிவி பாக்க சொல்ல டிஸ்டர்ப் பண்ணாதிங்க மாமா. என்னோட பேவரைட் ப்ரோக்ராம்” என்கிறான். அப்படிச் சொன்னதும் அக்காவைப் பார்க்கிறேன்.

“டேய், இது கோல்மூட்ட வேறப் பழகிடுச்சிடா” என்று அக்க குறைபட்டுக் கொண்டாள்.

“என்ன ஜெயா சொல்ற?”

“ஆமாண்டா... அம்மா என்ன அடிட்சிட்டான்னு அங்கபோய் சொல்லுது. பாட்டி என்ன திட்டுறான்னு இங்க வந்து சொல்லுது. இதக் கேட்டுட்டு அவரு வானத்துக்கும் பூமிக்குமா குதிக்கிறாறுடா?” என்றாள்.

“வெங்கட் அந்த மாதிரி மனுஷன் இல்லையே ஜெயா? கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. கொழந்த தானே”.

“அட... ச்சீ... அவரப் பத்தியும் கோல் மூட்டுதுடான்னா” என்றாள்.

யார்கிட்ட ஜெயா?

“வேற யார்கிட்ட, உன்னோட சித்தப்பாவ சொன்னேன். அகிலோட தாத்தாவ” என்றாள்.

“அதானே பார்த்தேன். பையன் வீக்னெஸ் பார்த்து அடிக்கிறான். நம்மள நம்பி வெங்கட் ஆட்டத்துல எறங்கிடுவாரா என்ன?” என்று நினைத்துக் கொண்டேன். காலம் உருண்டோடுவதை குழந்தைகளே உணரச் செய்கிறார்கள். அன்பானவர்களின் அரவணைப்பை மட்டுமே நம்புவதும், அவர்களின் மூலம் காரியம் சாதிக்கும் முதிர்ச்சியுமே கால ஓட்டத்தின் வெண் திட்டுக்களாக விளங்குகிறது.

இந்த வருடத்தின் ஆகப்பெரிய அனுபவமாக இவையிரண்டும்தான் தோன்றுகின்றன. வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் வழிகாட்டிகள் தேவைப்படுகிறார்கள். அரவணைக்க அன்பு செலுத்த. மென்பொருள் துறையின் நேக்குப் போக்குகளை நாடிபிடித்துப் பயில வெங்கட் பெரிய இன்ஸ்பிரேஷன். வேலையை விட்டு ஏறக்குறைய இரண்டு வருடங்கள் ஆகிறது. சில நல்ல வேலைகள் கிடைத்தும் போவதற்கு மனமில்லை. வீட்டிலிருந்த படியே என்னை நேசிக்கும் சில நிறுவனங்களுக்கு பகுதி நேரமாக வேலை செய்துகொண்டிருக்கிறேன். மிகப் பெரிய வருவாய் இல்லையென்றாலும் “நானே ராஜா! நானே மந்திரி!” என்ற திருப்தி.

ஏறக்குறைய மூன்று வருடங்களாக வலைப்பூவில் எழுதுகிறேன். “என்னை யார் படிக்கப் போகிறார்கள்?” என்று நினைத்ததுண்டு. ஒருசிலர் நேரில் பார்த்து “பரவாயில்லையே! சுமாரா எழுதுறே!” என வாழ்த்தும்போது தொண்டையை அடைக்கும். நன்றாக ஞாபகம் இருக்கிறது. 2011-ஆம் ஆண்டின் ஆரம்ப நாட்களில் காலச்சுவடு பதிப்பகம் கு.அழகிரிசாமியின் மொத்த சிறுகதைத் தொகுப்பு வெளியிட ஏற்பாடு செய்திருந்தார்கள். அன்றைய தினம் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் சிறப்பு உரையாற்ற வந்திருந்தார். எதிர்பாராத விதமாக மூத்த எழுத்தாளர் திலீப்குமாரையும் அங்கு சந்திக்க நேர்ந்தது. விழா முடிந்ததும் தன்னிடமிருந்த “வெங்கட் சுவாமிநாதன் கட்டுரைத் தொகுப்பு” வெளியீடு பற்றிய அழைப்பிதழ்களை திலீப்குமார் விநியோகிக்க ஆரம்பித்தார். அவரிடமிருந்த அழைப்பிதழ்களில் பாதியை பிடுங்கிக் கொண்டு நானும் விநியோகிக்க ஆரம்பித்தேன். தமிழ்ச்செல்வன் எதிரில் வந்தார்.

“உங்களை ஏற்கனவே பார்த்திருக்கிறேன் தமிழ். மின்னஞ்சல் கூட...” என்று என்னுடைய பெயரை சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ளலாம் என்று ஆரம்பித்தேன்.

“கேணியில் நடந்த சேர்ந்திசை (choir) பற்றி எழுதியிருந்திங்களே. அந்த ஒரு எடத்த நுணுக்கமா கவனிச்சி எழுதி இருந்தீங்க. நல்லா இருந்தது” என்றார்.

“உங்களோட வார்த்தைகளைக் கேட்கும்பொழுது வானத்தில் பறப்பது போல இருக்குங்க தோழர்” என்றேன். தமிழகம் முழுவதும் தொடந்து பயணம் செய்பவர். ஏராளமான புத்தகங்கள் வாசிப்பவர். என்றாலும் சிறு விஷயத்தை ஞாபகம் வைத்துத் தட்டிக்கொடுத்தார். சமீபத்தில் அ மார்க்ஸ் கலந்துகொண்ட கேணி கூட்டம் நடைபெற்றது. அந்த நாளில் மட்டும் எழுத்தாளர் ஞாநியின் வீட்டிற்கு சீக்கிரமே சென்றுவிடுவது வழக்கம். திடீரென்று பாலபாரதி செல்பேசியில் அழைத்தார். “கேணிக்கு வெளியில் தான் இருக்கேன். ஒரு டீ போட்டுட்டு வரலாம் வா” என்றார். அழைத்துச்சென்று எழுதத் தேவையான பல விஷயங்களை சொல்லிக்கொடுத்தார். ஆரம்ப காலங்களில் செய்த தவறுகள். அதன்மூலம் கிடைத்த அனுபவம் என பலவற்றைப் பகிர்ந்துகொண்டார். “தொடர்ந்து எழுதிக்கொண்டே இரு. உனக்குன்னு மொழியும் தனித்தன்மையும் தானா வந்துடும்” என்று உற்சாகப்படுத்தினார்.

இணைய இதழ்களின் உள்ளடுக்கில் இயங்குபவர்களான தமிழ்பேப்பரின் ஹரன்பிரசன்னா, சொல்வனம் இதழின் ரவி மற்றும் பாஸ்கர் போன்றவர்கள் தொடர்ந்து உற்சாகப்படுத்தி கட்டுரைகளை கேட்டு வாங்கி பிரசுரம் செய்கிறார்கள். அவர்களுடைய அன்பும், அக்கறையும் மறக்க இயலாதது. கமர்ஷியல் சினிமாவையே பார்ப்பதற்கு பொறுமை இல்லாதவன் நான். “காட்சி ஊடகங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். புத்தக வாசிப்பு போலவே அதுவும் ஓர் அனுபவம். அதிலும் கவனம் செலுத்துங்கள்” என நண்பர் பாஸ்கர் சக்தி தொடர்ந்து அக்கறை செலுத்தி, குறும்படம் ஆவணப்படம், சினிமா போன்ற துறைகளில் கவனம் ஏற்படச் செய்தார். கடந்த சென்னை திரைப்பட விழாவில் “அழகர்சாமி குதிரை” படத்தில் சிறந்த பங்காற்றியமைக்காக தனிமனித சிறப்பு விருதை அவருக்குக் கொடுத்தார்கள். அதற்கான சிறு விழா “டிஸ்கவரி புக் பேலசில்” ஏற்பாடாகி இருந்தது. அதற்கு வருமாறு அழைத்தார். பாஸ்கரின் நெருங்கிய சினிமா நண்பர்களுடன் “கதை, வசனம், பாத்திரச் சித்தரிப்பு” என உரையாடியது வித்யாசமான அனுபவமாக இருந்தது. சென்னை திரைக்கல்லூரி மாணவர்களின் உதவியுடன் ஒரு குறும்படம் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். மருமகன் முத்துவுடன் சேர்ந்து. பாஸ்கரின் அன்பும் அக்கறையும் இல்லையெனில் இதுபோன்ற சோதனை முயற்சிகளில் இறங்கியிருக்கவே மாட்டேன்.

விமர்சகர் ஞாநி எப்போதுமே குறைபட்டுக் கொள்வதுண்டு. “சினிமாவில் ஆர்வம் இருப்பவர்கள் புத்தகம் வாசிப்பதில்லை. வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நிகழ்த்துக் கலைகளில் ஆர்வம் காட்டுவதில்லை. அரசியலில் ஈர்ப்பு உடையவர்கள் இலக்கியத்தை சீண்டுவதில்லை. ஓவியம், இசை, இலக்கியம், பரதம், நாடகம் எல்லாவற்றின் மீதும் இளைஞர்கள் ஆர்வம் செலுத்த வேண்டும். இளைஞர்கள் மீது எப்போதுமே எனக்கு பெரிய நம்பிக்கை உள்ளது. அதற்கான சிறு உந்துதலை ஏற்படுத்துவதுதான் கேணி சந்திப்பின் நோக்கம்” என்பார். அதற்கேற்றது போல மேடை நடிகர் பாரதிமணியும் தியேட்டர் லேப் ஏற்பாடு செய்திருந்த பஷீரின் நாடகத்திற்கு அழைத்திருந்தார். அவருக்காகச் சென்றிருந்தேன். நாடக அனுபவத்தை வலைப்பூவிலும் எழுதி இருந்தேன். அதை படித்த கனடா நாடகக் குழுவான அராங்கடல் நண்பர் செல்வன் அறிமுகமானார். பின்னர் பஷீரின் அதே குறுநாவலை அராங்கடலுக்காக நாடக வசனமாக மாற்றும் சூழல் ஏற்பட்டது. அதற்கான சன்மானத்தை நண்பர் தளவாய் சுந்தரத்தின் மூலம் செல்வன் கொடுத்தனுப்பினார். எழுதி சம்பாரித்த முதல் பணம் என்பதால் வியப்பாக இருந்தது. அக்கறையுடன் வழிகாட்டிய எல்லோரையும் செல்பேசியில் அழைத்து தம்பட்டம் அடித்துக் கொண்டேன். மிகவும் மகிழ்ந்தார்கள். பாரதிமணி மிகவும் சந்தோஷப்பட்டார்.

ஞாநியை மட்டும் நேரில் சென்று பார்த்தேன். “இதுதான் விஷயங்க ஞாநி என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கள்” என்று காலைத் தொட்டேன்.

“ஒரு மனிதனின் காலில் இன்னொரு மனிதன் விழுவதில் எனக்கு உடன்பாடில்லை. சந்தோஷமோ துக்கமோ சக மனிதனாக பகிர்ந்துகொள்ளலாம்... ம்... சொல்லுங்க...” என்றார். “இவர் தமிழ்நாட்டில் தானே இருக்கிறார். தமிழக கலாச்சாரம் தெரியவில்லையே. அம்மா இப்படித்தானே பழக்கி இருக்காங்க” என்று நினைத்துக் கொண்டேன்.

இங்கு பா ராகவனையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். “உங்கிட்ட கொஞ்சம் Stuff இருக்கு. கொஞ்சம் சிரமப்பட்டு உழைச்சா நல்லா வருவடா” என்பார். என்னை எப்படியாவது ஒரு புத்தகம் எழுத வைக்க வேண்டும் என்று மிகுந்த பிரயாசைபட்டார். பாரா கிழக்கில் இருந்தவரை நிறைவேறவில்லை. அவரை செல்பேசியில் அழைத்து தம்பட்டம் அடித்தேன்.

“நீ இன்னும் நல்லா வரணும்டா. ரொம்ப சந்தோசம்டா” என்றார்.

எழுத்தாளர் தமிழ்மகன், பாலுசத்யா, ராம்ஜி, வேல்கண்ணன், பிரபா, விதூஷ் அக்கா, பத்மா அக்கா, யுவா, நேசமித்ரன், கார்த்திகை பாண்டியன், அதியமான், கார்த்திகா வாசுதேவன், மரா, அ மு சையத், முத்துச்சாமி, விஷ்ணு, சாது என எல்லோரும் தொடர்ந்து வாசித்து, கைபிடித்து அழைத்துச் செல்கிறார்கள்.

இதுவரை சென்றது எல்லாமே மகிழ்ச்சி நிறைந்த காலங்கள். அடுத்த ஆண்டுகளுக்கான சிறுசிறு முயற்சியும் திட்டமிடலும் இருக்கிறது. புத்தக விழாக்களுக்கு சாதாரண நுகர்வோராக சென்றிருக்கிறேன். தமிழின் முக்கிய பதிப்பகம் ஒன்றோடு சேர்ந்து வேலை செய்யும் சூழல் 2012-ம் ஆண்டு அமையும் என்றே நினைக்கிறேன் (பகுதி நேர வேலை). ஜனவரி கழித்து அதற்கான வேளைகளில் இறங்க வேண்டி இருக்கும். “புத்தகம் சார்ந்த வியாபாரம் எப்படி இருக்கிறது?” என்பதையும் நோட்டம் விட வேண்டும். “ஒரு லட்சம் தலைப்பில் ஒரு கோடி புத்தகங்கள்” என்ற விளம்பரமே மலைப்பை ஏற்படுத்துகிறது. சவால் நிறைந்த துறையாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

இதற்கிடையில் சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன். பூமி பூஜையின் போது செங்கல் எடுத்து வைத்ததோடு சரி. எல்லா வேலைகளையும் இளைய அண்ணனே பார்த்துக் கொள்கிறார். இரண்டு நாட்களாக ஒரே மழை. இன்றுதான் கொஞ்சம் தணிந்தது. கட்டிடப் பணிகளை பார்த்து வரலாம் என்று கிளம்பினேன். ஆண்டின் கடைசி நாள் என்பதால் மக்களெல்லாம் உற்சாகமாக தென்பட்டனர். “Where is the party tonight?” என்ற வார்த்தைகள் உள்ளுக்குள் ஒலிக்கிறதோ என்னவோ? புதிதாக வீடுகட்டும் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.

வாஸ்துப்படி வர்ணம் பூசப்பட்ட வீட்டின் ஜன்னல் கம்பியில் வளர்ப்பு நாய் கட்டப்பட்டிருந்தது. தெருவில் அலையும் நாயைப் பார்த்து இதுவும் நகரத் துடிக்கிறது. கயிற்றினால் கட்டப்பட்டுள்ளதால் வாலை ஆட்டிக்கொண்டு நாய் குலைக்கிறது. பிராணியை வளர்ப்பவர் வெளியில் வந்து நோட்டம்விட்டார். செல்லப் பிராணியின் தலையில் செல்லமாகத் தட்டிவிட்டு “அடுத்த வாரம் கூட்டிட்டுப் போறேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றார். தெரு நாய்கள் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருந்தது. ஒன்றையொன்று முகர்ந்துகொண்டு. நானும் சுதந்திரமாக நடந்துகொண்டிருந்தேன். நாயுடன் நாயாக எனது புதிய வீட்டை நோக்கி. அடுத்த வருடம் சிந்திப்போம்.

மங்களம்.... சுபம்....

Thursday, December 22, 2011

மை விலேஜ் இஸ் பம்பை – விவரணப்படம்

இந்தியா முழுவதும் கடந்த 2010-ஆம் ஆண்டில் மட்டும் 10, 670 குழந்தைகள் கடத்தப்பட்டிருப்பதாக ‘தேசிய குற்ற நிகழ்வுகள் பதிவு அமைப்பு’ உறுதி செய்திருக்கிறார்கள். இதில் 1, 408 குழந்தைகள் கொலை செய்யப்பட்டும் 5, 484 குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதாகவும் அதே ஆய்வு கூறுகிறது. கடத்தல் குற்றங்களில் தலைநகர் டெல்லி தான் முதலிடத்தில் இருக்கிறது. 29 பேர் கொல்லப்பட்டும், 304 பேர் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டும் இருக்கிறார்கள். டெல்லியை அடுத்து பீகார், உத்திர பிரதேசம், மராட்டியம், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், குஜராத் என பட்டியலிட்டிருக்கிறார்கள். இவை யாவும் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் மீது நடத்தப்படும் திட்டமிட்ட வன்முறை. பெரும்பாலும் இதுபோன்ற குற்றங்கள் மாநகரங்களிலுள்ள பெரு முதலாளிகள் சார்ந்து பணம் ஈட்டுவதற்காக நடத்தப்படுகிறது. இங்கு மற்றொரு விஷயத்தையும் நாம் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

அதே பெருநகரங்களில் வசிப்பவரா நீங்கள்? அரக்கப் பறக்க வேலைக்குச் செல்பவரா? நெரிசல் ஏற்படுத்தும் கூட்டத்துடன் பேருந்துகளிலும், ரயிலிலும் பயணம் செய்பவரா? சுற்றிப் பார்க்க மட்டுமே ஓரிரு தினங்கள் வருபவராக இருந்தாலும் பரவாயில்லை. நிச்சயம் இதுபோன்ற விளம்பரங்கள் உங்களின் கவனத்திற்கு வந்திருக்கும். ஒரு மின்னல் பார்வையில் அந்த கருப்பு வெள்ளை விளம்பர ஒட்டிகளை கடந்து சென்றிருப்பீர்கள்!

“காணவில்லை… தகவல் கிடைத்தால் தெரிவிக்க வேண்டிய முகவரி…” என்று சிறுவனின் புகைப்படம், பெயர், வயது, நிறம், உயரம், அங்க அடையாளம் என கடைசியாக உடுத்தியிருந்த ஆடை வரை பட்டியலிட்டு ஒட்டப்பட்டிருப்பதைக் கண்டிருக்கலாம். பேருந்து மற்றும் மின்சார ரயிலின் உட்சுவர்களில் கூட இதனைக் கவனித்திருக்கலாம். அதெப்படி வளர்ந்த, புத்தியுள்ள குழந்தைகள் காணாமல் போகும்? சமூகச் சிக்கலோ அல்லது உறவினால் ஏற்படக்கூடிய பிணக்குகளோ தான் இதற்கான முக்கிய காரணிகளாக இருக்கின்றன.

“வளர்ந்த குழந்தைகள் வீட்டைவிட்டு ஏன் வெளியேறுகின்றன? குழந்தைகளுக்கு அப்படியென்ன விரக்தி இருக்கப்போகிறது? காரணம் என்னவாக இருக்கும்?” என்பன போன்ற கேள்விகள் நமக்கு எழலாம். வழி தவறியும், பொருளீட்டும் ஆசையிலும், உறவுகள் கசந்து அவர்களிடம் முரண்பட்டும், பருவக் கோளாறினாலும் வீட்டைவிட்டு வெளியேறும் குழந்தைகள் பெருநகரங்களை நோக்கித்தான் பயணிக்கின்றன. இதைப் பற்றிய தெளிவான புள்ளிவிவரங்கள் இல்லையென்றாலும், இந்தியாவில் மட்டும் 30 விநாடிகளுக்கு ஒரு குழந்தையானது வீட்டைவிட்டு யாருக்கும் சொல்லாமல் ஓடிவிடுவதாக புள்ளிவிவரங்கள் தெளிவுபடுத்துகிறது. ஒரு வருடத்திற்கு 10, 368, 00 குழந்தைகள் இதுபோல இடம்பெயர்கிறார்கள். பொது இடங்களில் தான்தோன்றித் தனமாக சுற்றிக்கொண்டிருக்கும் குழந்தைகளை சந்தேகத்தின் பெயரில் விசாரிக்கும் பொழுதுதான் உண்மை நிலவரம் தெரியவருகிறது. இதில் சிலர் பிச்சை எடுக்கிறார்கள், சிலர் சமூகக் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள், சிலர் குழந்தைத் தொழிலாளர்களாக மாறுகிறார்கள், மிகச் சிலரோ பாலியல் தொழிலில் வலிந்து தள்ளப்படுகிறார்கள்.

இவர்களைக் காப்பதற்காகவே முக்கிய நகரங்களில் சிறுவர் காப்பகங்கள் அரசின் கண்காணிப்பில் செயல்படுகிறது. தென்னிந்தியாவைப் பொருத்தவரை ஆங்கிலேயர்கள் காலத்தில் 1887-ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட செங்கல்பட்டு குழந்தைகள் காப்பகம் தான் மிகவும் தொன்மையானது. அதன் பிறகு மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஏற்ப ஏராளமான காப்பகங்கள் கால இடைவெளியில் சென்னை (ராயபுரம்), கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, திண்டுக்கல், சேலம், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, வேலூர், திருவண்ணாமலை போன்ற தமிழகத்தின் முக்கிய இடங்களில் துவங்கப்பட்டது. இவையாவும் தமிழக அரசின் சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ், தமிழ்நாடு குழந்தைகள் சட்டம் 1920-ன் படி இயங்கிவருகின்றன.

ராயபுரத்தில் உள்ள தேசிய கவி சுப்ரமணிய பாரதியார் அரசினர் குழந்தைகள் இல்லம் மெட்ராஸ் ரோட்டரி கிளப் மூலம் 1955 -ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சர் சிந்தாமன் தேஷ்முக் முன்னிலையில் துவக்கப்பட்டது. இதில் சிறுவர் காப்பகமும் (Children Home), மீட்டுக் காவல் காப்பகமும் (Remand Home) செயல்படுகிறது. தற்போது 120 முதல் 150 குழந்தைகள் வரை இக்காப்பகத்தில் பாதுகாக்கப்படுகிறார்கள். இதில் முழுக்க முழுக்க ஆண்குழந்தைகள் மட்டுமே பராமரிக்கப் படுகிறார்கள். UNICEF, WorldVision மற்றும் சில தனியார் அமைப்புகள் தங்களால் இயன்ற உதவிகளை இதுபோன்ற காப்பகங்களுக்குச் செய்துத் தருகிறார்கள். மன அழுத்தத்திலுள்ள குழந்தைகளுக்கு சுயமுன்னேற்றம், மன ஆலோசனை, நீதிக் கதைகள் சொல்லுதல், அபாகஸ் வகுப்பெடுத்தல் போன்ற அத்தியாவசியமான உதவிகளையும் தன்னார்வலர்கள் மூலம் செய்துத் தந்து பக்கபலமாய் இருக்கிறார்கள்.

மீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள குழந்தைகளை தான் ஆர் வி ரமணி நேரில் கண்டு ஆவணப்படமாக எடுத்திருக்கிறார். ’மேரா கா(ன்)வ் ஹை பம்பை’ (என் கிராமம் பம்பை) எனப்படும் அதனை NFSC மற்றும் மறுபக்கம் இணைந்து நடத்திய கோடைத் திரைப்பட விழா 2011-ல் திரையிட ஏற்பாடு செய்திருந்தார்கள். சந்தேகத்தின் பெயரில் சிறைபிடிக்கப்படும் குழந்தைகள் முதலில் மீட்டுக் காவலில் தான் அமர்த்தப்படுகிறார்கள். அவர்களிடம் தகவல்கள் பெற்று உரிய நபர்களிடம் தொடர்பு கொள்கிறார்கள். போதிய ஆதாரங்கள் பெற்றபின் குழந்தைகளின் விருப்பப்படியும், அரசியல் சட்டத்திலுள்ள விதிமுறைகளைப் பின்பற்றியும் உரிமை கோருபவரிடம் ஒப்படைக்கிறார்கள். குழந்தைகள் நலவாரியம் (Child Welfare Commity) இதற்கான ஆயத்தங்களை செய்துத் தருகிறது. செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகளில் அதற்கான விசாரணை ராயபுரத்தில் நடக்கிறது. குழந்தைகளின் பெற்றோரோ அல்லது உரிமை கோரும் நபரோ அங்கு தோன்றி பதிலளிக்க வேண்டும்.

பெற்றோரை இழந்து உறவினரின் கண்காணிப்பில் வாழ்ந்துவரும் குழந்தை வீட்டிற்குச் செல்ல மனமில்லாத பட்சத்தில் சிறுவர் காப்பகத்திற்கு அனுப்பிவைத்து பாதுகாக்கப்படுகிறார்கள். வெளி மாநிலங்களிலிருந்து வந்த சில குழந்தைகளுக்கு சொந்த மொழி மட்டுமே தெரியும் நிலையில், அவர்களை மீட்க வரும் பெற்றோர்களுக்கும் ஆங்கில சரளம் வராத பட்சத்தில் வெளியிலிருந்து மொழி இடைநிலையாளர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். அதன்படி ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உதவச் சென்ற நண்பர் ஒருவர் மூலமே இந்த ஆவணப்படம் எடுக்க முடிந்தது. அதுவும் அவசர அவசரமாக இரண்டு நாட்களில் இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டது. முதல் நாள் காப்பகம் சென்றும், மற்றொருநாள் குழந்தைகளை வழியனுப்பும் போது சென்னை சென்ட்ரலுக்குச் சென்றும் ஒளிப்பதிவு செய்ததாக திரையிடலின் முடிவில் ஆர் வி ரமணி பகிர்ந்துகொண்டார்.

விசாரணையின் முடிவில் சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் குழந்தை நேரடியாக பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவதில்லை. அந்தந்த மாநிலத்தில் சிறுவர் காப்பக தலைமை காப்பகத்தில் ஒப்படைக்கப்படுகிறார்கள். அரசு ஊழியர்கள் விவரங்களை சரிபார்த்து உரிய நபர்களிடம் குழந்தைகள் சென்று சேருமாறு பணிக்கப்படுகிரார்கள்.

இதோ ரயில் வண்டி புறப்படத் தயாராக நிற்கிறது. இலக்கை நோக்கியும், இலக்கில்லாமலும் பயணிக்க ஏராளமானோர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். காப்பகத்தின் பொறுப்பில் உள்ள குழந்தைகளும் பயணப் பொறுப்பாளருடன் ஆயத்தமாக நின்று கொண்டிருக்கிறார்கள். ஸ்டேஷன் கார்டு தன் கையில் சுருட்டி வைத்திருக்கும் பச்சை வண்ணக் கொடியை அசைக்கும் நேரம் ரயிலானது மெல்ல நகரும். யார் கண்டது? இந்த ரயிலிலும் ஏதேனும் ஒரு குழந்தை யாருக்கும் சொல்லாமல் பயணித்துக் கொண்டிருக்கலாம். வழிதவறிய குழந்தை தூங்கிக் கொண்டிருக்கலாம். பருவக் கோளாறில் ஏதேனும் ஒரு ஜோடி கனவுகளுடன் சிறகடித்துப் பறக்கச் சென்று கொண்டிருக்கலாம்.

NFSC – கோடை திரைப்பட விழா – மே மாதம், 2011
மை விலேஜ் இஸ் பம்பை / ஆவணப்படம்/ 29 நிமிடம் / 2011
மொழி: ஆங்கிலம் / ஹிந்தி / தமிழ்

இடம்: தேசிய நாட்டுப்புற உதவி மையம்,
#505, காவேரி காம்ப்லஸ், 96 எம்.ஜி சாலை,
நுங்கம்பாக்கம், சென்னை - 600 034

Mera Gaon Hai Bambai (My Village is Bambai)
29 mins - Hindi, English, Tamil (With English Sub Title)

Credits:
Editing: R.V.Ramani, Monisha R Baldawa
Produced, Directed and Photographed by: R.V.Ramani

(முற்றும்)

*******************************************************************************************
ஆர் வி ரமணி 1957-ஆம் ஆண்டு பம்பாயில் பிறந்து பம்பாய் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்ற தமிழர். புகைப்பட நிருபராக சில ஆண்டுகள் பணியாற்றியவர். அதன்பிறகு புனே திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து 1985 -ஆம் ஆண்டு அசையும் நிழற்படக் கலைஞராக பட்டம் பெற்றவர். 1989 –ஆம் ஆண்டு சென்னைக்குத் திரும்பியவர் ஒளிப்பதிவாளராகவும், ஆவணப்படக் கலைஞராகவும் தன்னுடைய பயணத்தைத் தொடங்குகிறார்.

தனக்கென தனித் தன்மையான பாணியை அமைத்துக் கொண்டதின் மூலம் இந்திய அளவில் கவனிக்கப்படும் முக்கியமான கலைஞர். இவருடைய ஆக்கங்கள் குரோவேஷியா, ஜேர்மனி, நேபாளம், தென் கொரியா, மெக்ஸிகோ, பிரான்சு, ஜப்பான், பாகிஸ்தான், இந்தோனேஷியா, சீனா, ஸ்விசர்லாந்து, கொரியா போன்ற பல நாடுகளிலும், இந்தியாவின் புனே, கொச்சி, கொல்கொத்தா, சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத் போன்ற பல இடங்களிலும் நடைபெறும் உலகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு கவனத்தையும் பாராட்டையும் பெற்றிருக்கிறது.

கன்னியாகுமரியில் ஆழிப்பேரலை தாக்கியபோது மயிரிழையில் உயிர் தப்பியவர். அந்த கோர சம்பவத்தில் இவருடைய கேமரா தொலைந்து பலத்த சேதத்துடன் மீண்டும் கிடைத்திருக்கிறது. சுனாமியால் பாதிப்புக்குள்ளான அந்தக் கேமராவை மையமாக வைத்தும் ஆவணப்படம் எடுத்திருக்கிறார். இதுவரை 20-ற்கும் மேற்பட்ட பல்வேறு ஆவணப் படைப்புகளைத் தந்திருக்கிறார். பல சிரமங்களுக்கு மத்தியில் எடுக்கப்பட்ட “எழுத்தாளர் சுந்தர ராமசாமி” பற்றிய ஆவணப்படம் அவைகளுள் முக்கியமானது.

இலக்கிய வட்டத்திலும், சுரா-வின் தீவிர வாசகர்கள் மத்தியிலும் அந்த அரிய முயற்சி சரியான வரவேற்பைப் பெறவில்லை என்ற வருத்தம் இவருக்கு இருக்கிறது. “வெகுஜனப் பத்திரிகைகளும், நாளிதழ்களும் கொடுத்த கவனிப்பைக் கூட சிற்றிதழ்கள் கொடுக்கத் தவறிவிட்டன. எழுத்தாளுமைகளைப் பற்றிய ஆவணப்படம் வெளிவரும்போது, அது சார்ந்த தீவிர கவனிப்பைக் கொடுக்கும்போது தான் எதிர்வரும் இளம் திரைக் கலைஞர்கள் புதுப்புது முயற்சியில் ஈடுபடுவார்கள். அப்பொழுதுதான் பல்துறை ஆளுமைகளின் தகவல்களும் பதியப்படும். இலக்கிய சிற்றிதழ்கள் இது சார்ந்து யோசிக்க வேண்டும்” என்று மன வேதனையுடன் பகிர்ந்து கொள்கிறார்.

உலகத் திரைப்பட விழாக்களில் நடுவராகவும் பணியாற்றியிருக்கிறார். பயணங்களில் விருப்பமுள்ளவர். மலையேற்றங்களை பெரிதும் விரும்புவதாகக் கூறுகிறார். தற்போது பெசன்ட் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் தனது மகனுடன் வசித்து வருகிறார்.

ரமணியின் படைப்புகளுக்காக தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி:

+91 98401 57606
Email: ramanirv@hotmail.com
Web: www.ramanifilms.com
*******************************************************************************************

பயன்பட்ட தளங்கள்
1. www.missingindiankids.com
2. www.icmec.org
3. http://indianfolklore.org/home.htm
4. www.ramanifilms.com

நன்றி: சொல்வனம் இணைய இதழ் (26-11-2011)

Thursday, December 15, 2011

நான் ஒரு அரை மலையாளி

நண்பருடன் பேசிக்கொண்டு ஒரு தேனிர் கடையை நெருங்கினேன். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் நண்பர் காரசாரமாகப் பேசிக் கொண்டுவந்தார். “என்ன ஆனாலும் சரி அவர்களை விடக்கூடாது” என்றார்.

“உங்களுக்கு ஒன்று தெரியுமா? நான் ஒரு அரை மலையாளி” என்றேன். என்னை அடிப்பதுபோல பார்த்ததால் அவருக்கு விளக்க வேண்டி இருந்தது.

என்னுடைய அப்பாவின் சித்தப்பா தன்னுடைய அக்காவின் மகளை திருமணம் செய்து வாழப் பிடிக்காமல் தள்ளிவைத்துவிட்டு ஒரு மலையாள செவிலியரை இரண்டாம் தாரமாக காதல் திருமணம் செய்துகொண்டார். எங்களுடைய குடும்பத்தில் அவருடைய வாரிசுகள் மட்டும் கிட்டத்தட்ட 30 பேர் இருக்கிறார்கள். அம்மாவின் அத்தை பெண் ஒரு மலையாளியை காதல் திருமணம் செய்து கொண்டாள். அது தவிர என்னுடைய இன்னொரு சின்ன பாட்டியின் அம்மா ஒரு மலையாளியை வீட்டில் வைத்து வளர்த்தார் (குட்டன்). இந்தியன் ஆர்மியில் வேலை செய்து ஓய்வு பெற்ற அவருக்கு இரண்டு மகள்கள். என் உடன்பிறவா சகோதரிகள். சகோதரிகள் இருவரும் டெல்லி, கண்ணூர் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இருவருமே அப்படி ஒரு அன்பைப் பொழிவார்கள். குட்டனின் சித்தி மகனும் (வேணு) எங்கள் ஊரில் தான் இருக்கிறார். மெடிக்கல் கடையில் வேலை செய்கிறார். உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவரை கலந்தாலோசிப்பதற்கு முன் அவரிடம் தான் ஆலோசனை கேட்பேன்.

சிறுவயதில் என்னுடன் மாயா, மஞ்சு என்ற இரட்டையர் படித்தனர். அவர்களும் மலையாளிகள். சில காரணங்களால் இடையில் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டு இளநிலை கணிதம் படிக்கும்போது மஞ்சுவை மீண்டும் சந்தித்தேன். அதே மஞ்சு... அதே அன்பு...

“டேய் உன்ன இங்க பார்ப்பேன்னு நினைக்கவே இல்லடா!” என்றாள்.

“ச்சி போடி!” என்றேன். அதைக் கேட்டு கொல்லென்று சிரித்தாள். நானும் அவளுடன் சேர்ந்து சிரித்தேன்.

அதே இளங்கலையில் ஆல்பன் என்றொரு நண்பன் புதிதாகக் கிடைத்தான். இப்பொழுது கணித ஆசிரியனாக இருக்கிறான். அருமைனான சக நண்பன். மகிழ்ச்சியுடன் சென்ற கல்லூரிக் காலம் முடிந்து முதுகலை படிக்க பச்சையப்பன் கல்லூரியில் காலெடுத்து வைத்தேன். எந்தவொரு பாடத்திலும் தேற முடியவில்லை. அங்கிருந்த இரண்டு வருடங்களில் எனக்குக் கிடைத்த ஒரே நல்ல விஷயம் “கிறிஸ்டோபர்”. உலகின் எந்த மூளைக்குச் சென்றாலும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை செல்பேசியில் தொடர்பு கொண்டு அக்கறையுடன் நலம் விசாரிப்பான். இப்பொழுது ஏதோ பன்னாட்டு நிறுவனத்தில் அனிமேஷன் சார்ந்து வேலை செய்கிறான். முதுநிலைக் கணிதத்தில் வித்யா ரபீந்தரும் தோழியாகக் கிடைத்தாள். நல்ல சகோதரனாக மதிப்புக்கொடுத்து அன்புடன் பழகக் கூடியவள். வித்யாவுடன் முகநூலில் இன்றும் உறவு தொடர்கிறது. வித்யாவின் தங்கை கூட மகளிர் கிரிக்கெட்டில் தமிழக அளவில் விளையாடியவள் என்று நினைக்கிறேன்.

படித்து முடித்து இதுவரை பல நிறுவனங்களுக்கு நிரந்தர ஊழியனாகவும், தற்கால ஊழியனாகவும் பணியாற்றி இருக்கிறேன். அங்கெல்லாம் பல மலையாளிகளுடன் வேலை செய்து இருக்கிறேன். ஒருவரையும் குற்றம் குறை சொல்வதற்கு இல்லை. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் நான் அதிக நாட்கள் வேலை செய்த நிறுவனத்தின் பங்குதாரர்களில் பிரஜோஷ் பாலகிருஷ்ணனும் ஒருவர்.

அவருடைய நிறுவனத்தில் சேர்ந்த புதிதில் எனக்கு பிறந்த நாள் வந்தது. மொத்தம் 35 நபர்கள் மட்டுமே வேலை செய்து கொண்டிருந்தோம். கேக்கில் மெழுகுவத்தி ஏற்றி வெட்டச் சொன்னார்கள். இதிலெல்லாம் எனக்கு அவ்வளவாக ஆர்வமில்லை என்பதால் கோபத்தில் சிடுசிடு என்று வெடித்துக் கொண்டிருந்தேன். என்னைச் சுற்றி எல்லோரும் இருக்கிறார்கள். பிரஜோஷ் மட்டும் இல்லை. செல்பேசியில் அழைத்தபோது Spencer Plaza-ல் இருப்பதாகச் சொல்லிவிட்டார். கடமைக்கு கேக் வெட்டி எல்லோருக்கும் கொடுத்தேன். சம்ரதாயங்கள் எல்லாம் முடிந்து வீட்டிற்கு சென்றுவிட்டேன்.

மறுநாள் காலையில் அலுவலகத்தில் நுழைந்தபோது மொழுமொழு காகிதத்தால் சுற்றப்பட்ட பரிசுப் பொருளை என்னிடம் கொடுத்தார். பிரித்துப் பார்த்தல் மரப் பொருளால் செய்த மணல்கடிகாரம் இருந்தது. முந்திய தினம் தொலைபேசியில் அழைத்தபோது அவர் வெளியில் இருந்ததற்கான அர்த்தம் புரிந்தது. இதுவரை நான் பத்திரப்படுத்தி பாதுகாத்து வரும் பொருட்களில் அவருடைய பரிசுப் பொருளும் ஒன்று.

இத்தனைக்கும் அவர்களிடம் வேலை செய்தபோது ஊழியன் என்ற முறையில் தொல்லைகளைத் தான் அதிகம் கொடுத்திருக்கிறேன். நான் கொடுத்த சிரமங்களையும் மீறி என்மீது அன்பாக இருந்தார். இன்று அதே நிறுவனத்தில் ஏறக்குறைய 100 நபர்கள் வேலை செய்கிறார்கள். அங்கிருந்து வெளியில் வந்து வருடங்கள் ஓடிவிட்டது. இப்பொழுது கூட முன்னனுமதி இன்றி, எந்த நேரத்தில் சென்றாலும் அவருடைய அறைக்குச் சென்று பார்க்கலாம். அந்த அளவிற்கு தன்மையுடன் பழகக் கூடியவர். பிரஜோஷின் தம்பி பிரதீப் பாலகிருஷ்ணனும் என்னுடன் தான் பணி செய்தார். அன்பில் அண்ணனை விஞ்சக்கூடிய தம்பி.

எனக்கு ஆங்கிலத்தில் சமாளிக்கத் தெரியுமே தவிர்த்து, செய்யும் வேலை சார்ந்த கோப்புக்களை ஆங்கிலத்தில் முறையாக தயாரிக்கத் தெரியாது. அவசர நேரத்தில் தன்னுடைய முக்கியமான வேலைகளைக் கூட ஒதுக்கி வைத்துவிட்டு எனக்காக வேலைசெயதவர் ராமகிருஷ்ணன் ராகேஷ். அப்படிச் செய்யவேண்டும் என்ற அவசியம் அவருக்கில்லை. இருந்தாலும் எனக்கென செய்துக் கொடுப்பார். ராமுவின் உதவி இல்லாமல் போயிருந்தால் வாடிக்கையாளர்களை சமாளித்திருக்கவே முடியாது. பூர்வீகம் பாலக்காடு என்றாலும் தமிழகத்தில் ஆங்கில வழியில் படித்தவர். ஹிந்தியை இரண்டாம் மொழியாகக் கொண்டதால் இவருக்கு தாய்மொழியான மலையாளமும் தெரியாது, வாய் மொழியான தமிழும் எழுதப் படிக்கத் தெரியாது. பிறகு நிவாஸ், ஷிஜு, நாசெர் என்று பல மலையாளிகளின் நட்பும் அரவணைப்பும் அதே நிறுவனத்தில் கிடைத்திருக்கிறது.

முத்துவின் மூலம் அறிமுகமான “வினோத் நிச்துல்யா” பற்றியும் இங்கே சொல்லியாக வேண்டும். புனர்ஜனி ஆவணப்படம் பற்றி தமிழில் எழுதிய கட்டுரையை இயக்குனர் மது ஏறவங்கராவிற்காக மலையாளத்தில் மொழி பெயர்த்தவர். ஈழத் தமிழர்கள் பற்றிய குறும்படம் எடுக்கும்போது அதனுடைய மொழிமாற்றத்திலும் பங்காற்றி உதவி செய்தவர். இதுபோல இன்னும் பல நபர்களின் பெயர்கள் சட்டென்று ஞாபகத்தில் வரவில்லை.

தமிழர்களை மலையாளிகள் அடிக்கிறார்கள், கொடுமை செய்கிறார்கள் என்று ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சியிலும், பத்திரிகை ஊடகங்களிலும் செய்து வெளியிடுகிறார்கள். ரத்த உறவிலும், நேச உறவிலும் ஏறக்குறைய 50 மலையாளிகளுடன் நெருக்கமாகப் பழகி இருக்கிறேன். யோசித்துப் பார்த்தல் எண்ணிக்கை நூறையும் தாண்டலாம். இவர்களில் ஒருவர் கூட மோசமானவர் இல்லை.

தமிழனான என்னுடன் தனிப்பட்ட முறையில் பழகும் மலையாளிகள் என்னை மோசமாக நடத்தவில்லை. தனிநபர் தர்மம் இங்கு நேசத்துடன் காப்பாற்றப்படுகிறது. சமூக தர்மமும், பொது தர்மமும் தனிப்பட்ட நபர்களால் சாத்தியப்படுவதில்லை. இனத்தையோ, மக்களையோ தலைமை ஏற்று நடத்துபவர்களுக்கு தர்மத்தின் மீது பற்றே இருப்பதில்லை. பற்றில்லாதபோது மனிதம் தழைப்பதில்லை. மனிதத்திற்கு மதிப்பில்லாதபோது வன்முறைகள் வெடிக்கிறது. இங்குதான் விஷமிகள் குளிர் காய்கிறார்கள்.

இதனை பாமர மக்கள் புரிந்துகொள்ள முடியாமல் போவது வியப்பில்லை. அறிவுஜீவிகளே புரிந்துகொள்ளாமல் இருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. “உலகெல்லாம் தமிழன் அடிவாங்குகிறான். இனியும் பொறுக்கக் கூடாது” என்று கூக்குரல் இடுகிறார்கள்.

தமிழன் அடிவாங்குவதற்கும், பலியாவதற்குமான சூழ்நிலையை இனத்தையும் மானத்தையும் காப்பாற்றுகிறோம் என்று முழக்கமிடும் அரசியல்வாதிகள் தானே உருவாக்குகிறார்கள். தமிழகம் என்றில்லை உலகின் பல இடங்களிலும் அரசியல் இப்படித்தானே நடக்கிறது. உங்களால் அவர்களை அடிக்க முடியுமா? ஏன் இப்படி மக்களுக்கு எதிராக அரசியல் செய்கிறீர்கள் என்று கேட்க முடியுமா? என்று நண்பரைப் பார்த்து கேட்டேன்.

நாயர் போட்ட சாயாவைக் குடித்துக் கொண்டே முன்னைக் காட்டிலும் கோவமாக நண்பர் என்னைப் பார்த்து சீறினார்.

அவருக்கு நான் இரண்டு வாய்ப்புகள் கொடுத்தேன். “அரை மலையாளியான என்னை அடி. இல்லையேல் முழு மலையாளியான சாயா போடும் நாயரை அடி” என்றேன்.

கோபத்தில் நண்பன் குமுறினான். இருவரும் நாயரைப் பார்த்தோம். சர்கஸ் காண்பிப்பது போல பாதாளத்தில் ஒரு கையையும், ஆகாயத்தில் ஒரு கையையும் வைத்துக் கொண்டிருந்தார். இடையில் ஓடிய தேநீரிலிருந்து புகை வழிந்துகொண்டிருந்தது.

யாரோ யார்யாரோ? யாரோடு யாரோ? எவர் நெஞ்சிநில்தான் யாரோ?