Thursday, December 22, 2011

மை விலேஜ் இஸ் பம்பை – விவரணப்படம்

இந்தியா முழுவதும் கடந்த 2010-ஆம் ஆண்டில் மட்டும் 10, 670 குழந்தைகள் கடத்தப்பட்டிருப்பதாக ‘தேசிய குற்ற நிகழ்வுகள் பதிவு அமைப்பு’ உறுதி செய்திருக்கிறார்கள். இதில் 1, 408 குழந்தைகள் கொலை செய்யப்பட்டும் 5, 484 குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதாகவும் அதே ஆய்வு கூறுகிறது. கடத்தல் குற்றங்களில் தலைநகர் டெல்லி தான் முதலிடத்தில் இருக்கிறது. 29 பேர் கொல்லப்பட்டும், 304 பேர் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டும் இருக்கிறார்கள். டெல்லியை அடுத்து பீகார், உத்திர பிரதேசம், மராட்டியம், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், குஜராத் என பட்டியலிட்டிருக்கிறார்கள். இவை யாவும் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் மீது நடத்தப்படும் திட்டமிட்ட வன்முறை. பெரும்பாலும் இதுபோன்ற குற்றங்கள் மாநகரங்களிலுள்ள பெரு முதலாளிகள் சார்ந்து பணம் ஈட்டுவதற்காக நடத்தப்படுகிறது. இங்கு மற்றொரு விஷயத்தையும் நாம் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

அதே பெருநகரங்களில் வசிப்பவரா நீங்கள்? அரக்கப் பறக்க வேலைக்குச் செல்பவரா? நெரிசல் ஏற்படுத்தும் கூட்டத்துடன் பேருந்துகளிலும், ரயிலிலும் பயணம் செய்பவரா? சுற்றிப் பார்க்க மட்டுமே ஓரிரு தினங்கள் வருபவராக இருந்தாலும் பரவாயில்லை. நிச்சயம் இதுபோன்ற விளம்பரங்கள் உங்களின் கவனத்திற்கு வந்திருக்கும். ஒரு மின்னல் பார்வையில் அந்த கருப்பு வெள்ளை விளம்பர ஒட்டிகளை கடந்து சென்றிருப்பீர்கள்!

“காணவில்லை… தகவல் கிடைத்தால் தெரிவிக்க வேண்டிய முகவரி…” என்று சிறுவனின் புகைப்படம், பெயர், வயது, நிறம், உயரம், அங்க அடையாளம் என கடைசியாக உடுத்தியிருந்த ஆடை வரை பட்டியலிட்டு ஒட்டப்பட்டிருப்பதைக் கண்டிருக்கலாம். பேருந்து மற்றும் மின்சார ரயிலின் உட்சுவர்களில் கூட இதனைக் கவனித்திருக்கலாம். அதெப்படி வளர்ந்த, புத்தியுள்ள குழந்தைகள் காணாமல் போகும்? சமூகச் சிக்கலோ அல்லது உறவினால் ஏற்படக்கூடிய பிணக்குகளோ தான் இதற்கான முக்கிய காரணிகளாக இருக்கின்றன.

“வளர்ந்த குழந்தைகள் வீட்டைவிட்டு ஏன் வெளியேறுகின்றன? குழந்தைகளுக்கு அப்படியென்ன விரக்தி இருக்கப்போகிறது? காரணம் என்னவாக இருக்கும்?” என்பன போன்ற கேள்விகள் நமக்கு எழலாம். வழி தவறியும், பொருளீட்டும் ஆசையிலும், உறவுகள் கசந்து அவர்களிடம் முரண்பட்டும், பருவக் கோளாறினாலும் வீட்டைவிட்டு வெளியேறும் குழந்தைகள் பெருநகரங்களை நோக்கித்தான் பயணிக்கின்றன. இதைப் பற்றிய தெளிவான புள்ளிவிவரங்கள் இல்லையென்றாலும், இந்தியாவில் மட்டும் 30 விநாடிகளுக்கு ஒரு குழந்தையானது வீட்டைவிட்டு யாருக்கும் சொல்லாமல் ஓடிவிடுவதாக புள்ளிவிவரங்கள் தெளிவுபடுத்துகிறது. ஒரு வருடத்திற்கு 10, 368, 00 குழந்தைகள் இதுபோல இடம்பெயர்கிறார்கள். பொது இடங்களில் தான்தோன்றித் தனமாக சுற்றிக்கொண்டிருக்கும் குழந்தைகளை சந்தேகத்தின் பெயரில் விசாரிக்கும் பொழுதுதான் உண்மை நிலவரம் தெரியவருகிறது. இதில் சிலர் பிச்சை எடுக்கிறார்கள், சிலர் சமூகக் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள், சிலர் குழந்தைத் தொழிலாளர்களாக மாறுகிறார்கள், மிகச் சிலரோ பாலியல் தொழிலில் வலிந்து தள்ளப்படுகிறார்கள்.

இவர்களைக் காப்பதற்காகவே முக்கிய நகரங்களில் சிறுவர் காப்பகங்கள் அரசின் கண்காணிப்பில் செயல்படுகிறது. தென்னிந்தியாவைப் பொருத்தவரை ஆங்கிலேயர்கள் காலத்தில் 1887-ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட செங்கல்பட்டு குழந்தைகள் காப்பகம் தான் மிகவும் தொன்மையானது. அதன் பிறகு மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஏற்ப ஏராளமான காப்பகங்கள் கால இடைவெளியில் சென்னை (ராயபுரம்), கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, திண்டுக்கல், சேலம், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, வேலூர், திருவண்ணாமலை போன்ற தமிழகத்தின் முக்கிய இடங்களில் துவங்கப்பட்டது. இவையாவும் தமிழக அரசின் சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ், தமிழ்நாடு குழந்தைகள் சட்டம் 1920-ன் படி இயங்கிவருகின்றன.

ராயபுரத்தில் உள்ள தேசிய கவி சுப்ரமணிய பாரதியார் அரசினர் குழந்தைகள் இல்லம் மெட்ராஸ் ரோட்டரி கிளப் மூலம் 1955 -ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சர் சிந்தாமன் தேஷ்முக் முன்னிலையில் துவக்கப்பட்டது. இதில் சிறுவர் காப்பகமும் (Children Home), மீட்டுக் காவல் காப்பகமும் (Remand Home) செயல்படுகிறது. தற்போது 120 முதல் 150 குழந்தைகள் வரை இக்காப்பகத்தில் பாதுகாக்கப்படுகிறார்கள். இதில் முழுக்க முழுக்க ஆண்குழந்தைகள் மட்டுமே பராமரிக்கப் படுகிறார்கள். UNICEF, WorldVision மற்றும் சில தனியார் அமைப்புகள் தங்களால் இயன்ற உதவிகளை இதுபோன்ற காப்பகங்களுக்குச் செய்துத் தருகிறார்கள். மன அழுத்தத்திலுள்ள குழந்தைகளுக்கு சுயமுன்னேற்றம், மன ஆலோசனை, நீதிக் கதைகள் சொல்லுதல், அபாகஸ் வகுப்பெடுத்தல் போன்ற அத்தியாவசியமான உதவிகளையும் தன்னார்வலர்கள் மூலம் செய்துத் தந்து பக்கபலமாய் இருக்கிறார்கள்.

மீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள குழந்தைகளை தான் ஆர் வி ரமணி நேரில் கண்டு ஆவணப்படமாக எடுத்திருக்கிறார். ’மேரா கா(ன்)வ் ஹை பம்பை’ (என் கிராமம் பம்பை) எனப்படும் அதனை NFSC மற்றும் மறுபக்கம் இணைந்து நடத்திய கோடைத் திரைப்பட விழா 2011-ல் திரையிட ஏற்பாடு செய்திருந்தார்கள். சந்தேகத்தின் பெயரில் சிறைபிடிக்கப்படும் குழந்தைகள் முதலில் மீட்டுக் காவலில் தான் அமர்த்தப்படுகிறார்கள். அவர்களிடம் தகவல்கள் பெற்று உரிய நபர்களிடம் தொடர்பு கொள்கிறார்கள். போதிய ஆதாரங்கள் பெற்றபின் குழந்தைகளின் விருப்பப்படியும், அரசியல் சட்டத்திலுள்ள விதிமுறைகளைப் பின்பற்றியும் உரிமை கோருபவரிடம் ஒப்படைக்கிறார்கள். குழந்தைகள் நலவாரியம் (Child Welfare Commity) இதற்கான ஆயத்தங்களை செய்துத் தருகிறது. செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகளில் அதற்கான விசாரணை ராயபுரத்தில் நடக்கிறது. குழந்தைகளின் பெற்றோரோ அல்லது உரிமை கோரும் நபரோ அங்கு தோன்றி பதிலளிக்க வேண்டும்.

பெற்றோரை இழந்து உறவினரின் கண்காணிப்பில் வாழ்ந்துவரும் குழந்தை வீட்டிற்குச் செல்ல மனமில்லாத பட்சத்தில் சிறுவர் காப்பகத்திற்கு அனுப்பிவைத்து பாதுகாக்கப்படுகிறார்கள். வெளி மாநிலங்களிலிருந்து வந்த சில குழந்தைகளுக்கு சொந்த மொழி மட்டுமே தெரியும் நிலையில், அவர்களை மீட்க வரும் பெற்றோர்களுக்கும் ஆங்கில சரளம் வராத பட்சத்தில் வெளியிலிருந்து மொழி இடைநிலையாளர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். அதன்படி ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உதவச் சென்ற நண்பர் ஒருவர் மூலமே இந்த ஆவணப்படம் எடுக்க முடிந்தது. அதுவும் அவசர அவசரமாக இரண்டு நாட்களில் இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டது. முதல் நாள் காப்பகம் சென்றும், மற்றொருநாள் குழந்தைகளை வழியனுப்பும் போது சென்னை சென்ட்ரலுக்குச் சென்றும் ஒளிப்பதிவு செய்ததாக திரையிடலின் முடிவில் ஆர் வி ரமணி பகிர்ந்துகொண்டார்.

விசாரணையின் முடிவில் சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் குழந்தை நேரடியாக பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவதில்லை. அந்தந்த மாநிலத்தில் சிறுவர் காப்பக தலைமை காப்பகத்தில் ஒப்படைக்கப்படுகிறார்கள். அரசு ஊழியர்கள் விவரங்களை சரிபார்த்து உரிய நபர்களிடம் குழந்தைகள் சென்று சேருமாறு பணிக்கப்படுகிரார்கள்.

இதோ ரயில் வண்டி புறப்படத் தயாராக நிற்கிறது. இலக்கை நோக்கியும், இலக்கில்லாமலும் பயணிக்க ஏராளமானோர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். காப்பகத்தின் பொறுப்பில் உள்ள குழந்தைகளும் பயணப் பொறுப்பாளருடன் ஆயத்தமாக நின்று கொண்டிருக்கிறார்கள். ஸ்டேஷன் கார்டு தன் கையில் சுருட்டி வைத்திருக்கும் பச்சை வண்ணக் கொடியை அசைக்கும் நேரம் ரயிலானது மெல்ல நகரும். யார் கண்டது? இந்த ரயிலிலும் ஏதேனும் ஒரு குழந்தை யாருக்கும் சொல்லாமல் பயணித்துக் கொண்டிருக்கலாம். வழிதவறிய குழந்தை தூங்கிக் கொண்டிருக்கலாம். பருவக் கோளாறில் ஏதேனும் ஒரு ஜோடி கனவுகளுடன் சிறகடித்துப் பறக்கச் சென்று கொண்டிருக்கலாம்.

NFSC – கோடை திரைப்பட விழா – மே மாதம், 2011
மை விலேஜ் இஸ் பம்பை / ஆவணப்படம்/ 29 நிமிடம் / 2011
மொழி: ஆங்கிலம் / ஹிந்தி / தமிழ்

இடம்: தேசிய நாட்டுப்புற உதவி மையம்,
#505, காவேரி காம்ப்லஸ், 96 எம்.ஜி சாலை,
நுங்கம்பாக்கம், சென்னை - 600 034

Mera Gaon Hai Bambai (My Village is Bambai)
29 mins - Hindi, English, Tamil (With English Sub Title)

Credits:
Editing: R.V.Ramani, Monisha R Baldawa
Produced, Directed and Photographed by: R.V.Ramani

(முற்றும்)

*******************************************************************************************
ஆர் வி ரமணி 1957-ஆம் ஆண்டு பம்பாயில் பிறந்து பம்பாய் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்ற தமிழர். புகைப்பட நிருபராக சில ஆண்டுகள் பணியாற்றியவர். அதன்பிறகு புனே திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து 1985 -ஆம் ஆண்டு அசையும் நிழற்படக் கலைஞராக பட்டம் பெற்றவர். 1989 –ஆம் ஆண்டு சென்னைக்குத் திரும்பியவர் ஒளிப்பதிவாளராகவும், ஆவணப்படக் கலைஞராகவும் தன்னுடைய பயணத்தைத் தொடங்குகிறார்.

தனக்கென தனித் தன்மையான பாணியை அமைத்துக் கொண்டதின் மூலம் இந்திய அளவில் கவனிக்கப்படும் முக்கியமான கலைஞர். இவருடைய ஆக்கங்கள் குரோவேஷியா, ஜேர்மனி, நேபாளம், தென் கொரியா, மெக்ஸிகோ, பிரான்சு, ஜப்பான், பாகிஸ்தான், இந்தோனேஷியா, சீனா, ஸ்விசர்லாந்து, கொரியா போன்ற பல நாடுகளிலும், இந்தியாவின் புனே, கொச்சி, கொல்கொத்தா, சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத் போன்ற பல இடங்களிலும் நடைபெறும் உலகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு கவனத்தையும் பாராட்டையும் பெற்றிருக்கிறது.

கன்னியாகுமரியில் ஆழிப்பேரலை தாக்கியபோது மயிரிழையில் உயிர் தப்பியவர். அந்த கோர சம்பவத்தில் இவருடைய கேமரா தொலைந்து பலத்த சேதத்துடன் மீண்டும் கிடைத்திருக்கிறது. சுனாமியால் பாதிப்புக்குள்ளான அந்தக் கேமராவை மையமாக வைத்தும் ஆவணப்படம் எடுத்திருக்கிறார். இதுவரை 20-ற்கும் மேற்பட்ட பல்வேறு ஆவணப் படைப்புகளைத் தந்திருக்கிறார். பல சிரமங்களுக்கு மத்தியில் எடுக்கப்பட்ட “எழுத்தாளர் சுந்தர ராமசாமி” பற்றிய ஆவணப்படம் அவைகளுள் முக்கியமானது.

இலக்கிய வட்டத்திலும், சுரா-வின் தீவிர வாசகர்கள் மத்தியிலும் அந்த அரிய முயற்சி சரியான வரவேற்பைப் பெறவில்லை என்ற வருத்தம் இவருக்கு இருக்கிறது. “வெகுஜனப் பத்திரிகைகளும், நாளிதழ்களும் கொடுத்த கவனிப்பைக் கூட சிற்றிதழ்கள் கொடுக்கத் தவறிவிட்டன. எழுத்தாளுமைகளைப் பற்றிய ஆவணப்படம் வெளிவரும்போது, அது சார்ந்த தீவிர கவனிப்பைக் கொடுக்கும்போது தான் எதிர்வரும் இளம் திரைக் கலைஞர்கள் புதுப்புது முயற்சியில் ஈடுபடுவார்கள். அப்பொழுதுதான் பல்துறை ஆளுமைகளின் தகவல்களும் பதியப்படும். இலக்கிய சிற்றிதழ்கள் இது சார்ந்து யோசிக்க வேண்டும்” என்று மன வேதனையுடன் பகிர்ந்து கொள்கிறார்.

உலகத் திரைப்பட விழாக்களில் நடுவராகவும் பணியாற்றியிருக்கிறார். பயணங்களில் விருப்பமுள்ளவர். மலையேற்றங்களை பெரிதும் விரும்புவதாகக் கூறுகிறார். தற்போது பெசன்ட் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் தனது மகனுடன் வசித்து வருகிறார்.

ரமணியின் படைப்புகளுக்காக தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி:

+91 98401 57606
Email: ramanirv@hotmail.com
Web: www.ramanifilms.com
*******************************************************************************************

பயன்பட்ட தளங்கள்
1. www.missingindiankids.com
2. www.icmec.org
3. http://indianfolklore.org/home.htm
4. www.ramanifilms.com

நன்றி: சொல்வனம் இணைய இதழ் (26-11-2011)

4 comments:

 1. நல்ல பதிவு.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  உங்களது நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. படித்துவிட்டு பகிர்ந்தமைக்கு நன்றி தோழர்...

  ReplyDelete
 3. அருமையான பதிவு கிருஷ்ணா.

  ReplyDelete