Thursday, December 15, 2011

நான் ஒரு அரை மலையாளி

நண்பருடன் பேசிக்கொண்டு ஒரு தேனிர் கடையை நெருங்கினேன். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் நண்பர் காரசாரமாகப் பேசிக் கொண்டுவந்தார். “என்ன ஆனாலும் சரி அவர்களை விடக்கூடாது” என்றார்.

“உங்களுக்கு ஒன்று தெரியுமா? நான் ஒரு அரை மலையாளி” என்றேன். என்னை அடிப்பதுபோல பார்த்ததால் அவருக்கு விளக்க வேண்டி இருந்தது.

என்னுடைய அப்பாவின் சித்தப்பா தன்னுடைய அக்காவின் மகளை திருமணம் செய்து வாழப் பிடிக்காமல் தள்ளிவைத்துவிட்டு ஒரு மலையாள செவிலியரை இரண்டாம் தாரமாக காதல் திருமணம் செய்துகொண்டார். எங்களுடைய குடும்பத்தில் அவருடைய வாரிசுகள் மட்டும் கிட்டத்தட்ட 30 பேர் இருக்கிறார்கள். அம்மாவின் அத்தை பெண் ஒரு மலையாளியை காதல் திருமணம் செய்து கொண்டாள். அது தவிர என்னுடைய இன்னொரு சின்ன பாட்டியின் அம்மா ஒரு மலையாளியை வீட்டில் வைத்து வளர்த்தார் (குட்டன்). இந்தியன் ஆர்மியில் வேலை செய்து ஓய்வு பெற்ற அவருக்கு இரண்டு மகள்கள். என் உடன்பிறவா சகோதரிகள். சகோதரிகள் இருவரும் டெல்லி, கண்ணூர் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இருவருமே அப்படி ஒரு அன்பைப் பொழிவார்கள். குட்டனின் சித்தி மகனும் (வேணு) எங்கள் ஊரில் தான் இருக்கிறார். மெடிக்கல் கடையில் வேலை செய்கிறார். உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவரை கலந்தாலோசிப்பதற்கு முன் அவரிடம் தான் ஆலோசனை கேட்பேன்.

சிறுவயதில் என்னுடன் மாயா, மஞ்சு என்ற இரட்டையர் படித்தனர். அவர்களும் மலையாளிகள். சில காரணங்களால் இடையில் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டு இளநிலை கணிதம் படிக்கும்போது மஞ்சுவை மீண்டும் சந்தித்தேன். அதே மஞ்சு... அதே அன்பு...

“டேய் உன்ன இங்க பார்ப்பேன்னு நினைக்கவே இல்லடா!” என்றாள்.

“ச்சி போடி!” என்றேன். அதைக் கேட்டு கொல்லென்று சிரித்தாள். நானும் அவளுடன் சேர்ந்து சிரித்தேன்.

அதே இளங்கலையில் ஆல்பன் என்றொரு நண்பன் புதிதாகக் கிடைத்தான். இப்பொழுது கணித ஆசிரியனாக இருக்கிறான். அருமைனான சக நண்பன். மகிழ்ச்சியுடன் சென்ற கல்லூரிக் காலம் முடிந்து முதுகலை படிக்க பச்சையப்பன் கல்லூரியில் காலெடுத்து வைத்தேன். எந்தவொரு பாடத்திலும் தேற முடியவில்லை. அங்கிருந்த இரண்டு வருடங்களில் எனக்குக் கிடைத்த ஒரே நல்ல விஷயம் “கிறிஸ்டோபர்”. உலகின் எந்த மூளைக்குச் சென்றாலும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை செல்பேசியில் தொடர்பு கொண்டு அக்கறையுடன் நலம் விசாரிப்பான். இப்பொழுது ஏதோ பன்னாட்டு நிறுவனத்தில் அனிமேஷன் சார்ந்து வேலை செய்கிறான். முதுநிலைக் கணிதத்தில் வித்யா ரபீந்தரும் தோழியாகக் கிடைத்தாள். நல்ல சகோதரனாக மதிப்புக்கொடுத்து அன்புடன் பழகக் கூடியவள். வித்யாவுடன் முகநூலில் இன்றும் உறவு தொடர்கிறது. வித்யாவின் தங்கை கூட மகளிர் கிரிக்கெட்டில் தமிழக அளவில் விளையாடியவள் என்று நினைக்கிறேன்.

படித்து முடித்து இதுவரை பல நிறுவனங்களுக்கு நிரந்தர ஊழியனாகவும், தற்கால ஊழியனாகவும் பணியாற்றி இருக்கிறேன். அங்கெல்லாம் பல மலையாளிகளுடன் வேலை செய்து இருக்கிறேன். ஒருவரையும் குற்றம் குறை சொல்வதற்கு இல்லை. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் நான் அதிக நாட்கள் வேலை செய்த நிறுவனத்தின் பங்குதாரர்களில் பிரஜோஷ் பாலகிருஷ்ணனும் ஒருவர்.

அவருடைய நிறுவனத்தில் சேர்ந்த புதிதில் எனக்கு பிறந்த நாள் வந்தது. மொத்தம் 35 நபர்கள் மட்டுமே வேலை செய்து கொண்டிருந்தோம். கேக்கில் மெழுகுவத்தி ஏற்றி வெட்டச் சொன்னார்கள். இதிலெல்லாம் எனக்கு அவ்வளவாக ஆர்வமில்லை என்பதால் கோபத்தில் சிடுசிடு என்று வெடித்துக் கொண்டிருந்தேன். என்னைச் சுற்றி எல்லோரும் இருக்கிறார்கள். பிரஜோஷ் மட்டும் இல்லை. செல்பேசியில் அழைத்தபோது Spencer Plaza-ல் இருப்பதாகச் சொல்லிவிட்டார். கடமைக்கு கேக் வெட்டி எல்லோருக்கும் கொடுத்தேன். சம்ரதாயங்கள் எல்லாம் முடிந்து வீட்டிற்கு சென்றுவிட்டேன்.

மறுநாள் காலையில் அலுவலகத்தில் நுழைந்தபோது மொழுமொழு காகிதத்தால் சுற்றப்பட்ட பரிசுப் பொருளை என்னிடம் கொடுத்தார். பிரித்துப் பார்த்தல் மரப் பொருளால் செய்த மணல்கடிகாரம் இருந்தது. முந்திய தினம் தொலைபேசியில் அழைத்தபோது அவர் வெளியில் இருந்ததற்கான அர்த்தம் புரிந்தது. இதுவரை நான் பத்திரப்படுத்தி பாதுகாத்து வரும் பொருட்களில் அவருடைய பரிசுப் பொருளும் ஒன்று.

இத்தனைக்கும் அவர்களிடம் வேலை செய்தபோது ஊழியன் என்ற முறையில் தொல்லைகளைத் தான் அதிகம் கொடுத்திருக்கிறேன். நான் கொடுத்த சிரமங்களையும் மீறி என்மீது அன்பாக இருந்தார். இன்று அதே நிறுவனத்தில் ஏறக்குறைய 100 நபர்கள் வேலை செய்கிறார்கள். அங்கிருந்து வெளியில் வந்து வருடங்கள் ஓடிவிட்டது. இப்பொழுது கூட முன்னனுமதி இன்றி, எந்த நேரத்தில் சென்றாலும் அவருடைய அறைக்குச் சென்று பார்க்கலாம். அந்த அளவிற்கு தன்மையுடன் பழகக் கூடியவர். பிரஜோஷின் தம்பி பிரதீப் பாலகிருஷ்ணனும் என்னுடன் தான் பணி செய்தார். அன்பில் அண்ணனை விஞ்சக்கூடிய தம்பி.

எனக்கு ஆங்கிலத்தில் சமாளிக்கத் தெரியுமே தவிர்த்து, செய்யும் வேலை சார்ந்த கோப்புக்களை ஆங்கிலத்தில் முறையாக தயாரிக்கத் தெரியாது. அவசர நேரத்தில் தன்னுடைய முக்கியமான வேலைகளைக் கூட ஒதுக்கி வைத்துவிட்டு எனக்காக வேலைசெயதவர் ராமகிருஷ்ணன் ராகேஷ். அப்படிச் செய்யவேண்டும் என்ற அவசியம் அவருக்கில்லை. இருந்தாலும் எனக்கென செய்துக் கொடுப்பார். ராமுவின் உதவி இல்லாமல் போயிருந்தால் வாடிக்கையாளர்களை சமாளித்திருக்கவே முடியாது. பூர்வீகம் பாலக்காடு என்றாலும் தமிழகத்தில் ஆங்கில வழியில் படித்தவர். ஹிந்தியை இரண்டாம் மொழியாகக் கொண்டதால் இவருக்கு தாய்மொழியான மலையாளமும் தெரியாது, வாய் மொழியான தமிழும் எழுதப் படிக்கத் தெரியாது. பிறகு நிவாஸ், ஷிஜு, நாசெர் என்று பல மலையாளிகளின் நட்பும் அரவணைப்பும் அதே நிறுவனத்தில் கிடைத்திருக்கிறது.

முத்துவின் மூலம் அறிமுகமான “வினோத் நிச்துல்யா” பற்றியும் இங்கே சொல்லியாக வேண்டும். புனர்ஜனி ஆவணப்படம் பற்றி தமிழில் எழுதிய கட்டுரையை இயக்குனர் மது ஏறவங்கராவிற்காக மலையாளத்தில் மொழி பெயர்த்தவர். ஈழத் தமிழர்கள் பற்றிய குறும்படம் எடுக்கும்போது அதனுடைய மொழிமாற்றத்திலும் பங்காற்றி உதவி செய்தவர். இதுபோல இன்னும் பல நபர்களின் பெயர்கள் சட்டென்று ஞாபகத்தில் வரவில்லை.

தமிழர்களை மலையாளிகள் அடிக்கிறார்கள், கொடுமை செய்கிறார்கள் என்று ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சியிலும், பத்திரிகை ஊடகங்களிலும் செய்து வெளியிடுகிறார்கள். ரத்த உறவிலும், நேச உறவிலும் ஏறக்குறைய 50 மலையாளிகளுடன் நெருக்கமாகப் பழகி இருக்கிறேன். யோசித்துப் பார்த்தல் எண்ணிக்கை நூறையும் தாண்டலாம். இவர்களில் ஒருவர் கூட மோசமானவர் இல்லை.

தமிழனான என்னுடன் தனிப்பட்ட முறையில் பழகும் மலையாளிகள் என்னை மோசமாக நடத்தவில்லை. தனிநபர் தர்மம் இங்கு நேசத்துடன் காப்பாற்றப்படுகிறது. சமூக தர்மமும், பொது தர்மமும் தனிப்பட்ட நபர்களால் சாத்தியப்படுவதில்லை. இனத்தையோ, மக்களையோ தலைமை ஏற்று நடத்துபவர்களுக்கு தர்மத்தின் மீது பற்றே இருப்பதில்லை. பற்றில்லாதபோது மனிதம் தழைப்பதில்லை. மனிதத்திற்கு மதிப்பில்லாதபோது வன்முறைகள் வெடிக்கிறது. இங்குதான் விஷமிகள் குளிர் காய்கிறார்கள்.

இதனை பாமர மக்கள் புரிந்துகொள்ள முடியாமல் போவது வியப்பில்லை. அறிவுஜீவிகளே புரிந்துகொள்ளாமல் இருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. “உலகெல்லாம் தமிழன் அடிவாங்குகிறான். இனியும் பொறுக்கக் கூடாது” என்று கூக்குரல் இடுகிறார்கள்.

தமிழன் அடிவாங்குவதற்கும், பலியாவதற்குமான சூழ்நிலையை இனத்தையும் மானத்தையும் காப்பாற்றுகிறோம் என்று முழக்கமிடும் அரசியல்வாதிகள் தானே உருவாக்குகிறார்கள். தமிழகம் என்றில்லை உலகின் பல இடங்களிலும் அரசியல் இப்படித்தானே நடக்கிறது. உங்களால் அவர்களை அடிக்க முடியுமா? ஏன் இப்படி மக்களுக்கு எதிராக அரசியல் செய்கிறீர்கள் என்று கேட்க முடியுமா? என்று நண்பரைப் பார்த்து கேட்டேன்.

நாயர் போட்ட சாயாவைக் குடித்துக் கொண்டே முன்னைக் காட்டிலும் கோவமாக நண்பர் என்னைப் பார்த்து சீறினார்.

அவருக்கு நான் இரண்டு வாய்ப்புகள் கொடுத்தேன். “அரை மலையாளியான என்னை அடி. இல்லையேல் முழு மலையாளியான சாயா போடும் நாயரை அடி” என்றேன்.

கோபத்தில் நண்பன் குமுறினான். இருவரும் நாயரைப் பார்த்தோம். சர்கஸ் காண்பிப்பது போல பாதாளத்தில் ஒரு கையையும், ஆகாயத்தில் ஒரு கையையும் வைத்துக் கொண்டிருந்தார். இடையில் ஓடிய தேநீரிலிருந்து புகை வழிந்துகொண்டிருந்தது.

யாரோ யார்யாரோ? யாரோடு யாரோ? எவர் நெஞ்சிநில்தான் யாரோ?

No comments:

Post a Comment