Monday, May 24, 2010

தி வே ஹோம்

ஜிபுரோ (கொரியப் படம்) - இயற்கையின் சூழலில் அமைந்த மலை கிராமத்தில் எளிமையாக வாழும் பாட்டிக்கும், நகரச் சூழலின் பரபரப்பான வாழ்க்கைக்குப் பழக்கப்பட்ட பேரனுக்கும் இடையிலான முரண்பட்ட வாழ்க்கை எங்கு சங்கமிக்கிறது என்பது தான் கதை. எளிமையான கதைக்கு சுவாரஸ்யமான திரைக்கதையை பார்த்துப் பார்த்து செதுக்கி இருக்கிறார்கள். மொத்தப் பட வசனத்தையும் இரண்டு பக்க வெள்ளைத் தாளில் எழுதி விடலாம். ஆகவே திரையில் தென்படும் ஒவ்வொரு காட்சிகளும், ஒளிப்பதிவும், இசையும் படத்தின் வெற்றிக்கு பக்கபலம் என்றுதான் சொல்ல வேண்டும். நடிகர்களும் தங்களது அருமையான திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தமக்கான பணியை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். நடித்திருக்கும் பலருக்கும் இது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

கணவனைப் பிரிந்த பெண் ஒருத்தி, பள்ளி விடுமுறையில் இருக்கும் தன் மகனான ஏழு வயது சிறுவனை (
சாங் வூ - 7 வயது) மலை கிராமத்தில் தனிமையில் வசிக்கும் தன் அம்மாவின் (கிம்- யூல்-பூ - 77 வயது) வீட்டிற்கு முதன் முறையாக அழைத்துச் செல்கிறாள். அந்த பயணத்திலிருந்தே படம் துவங்குகிறது. குக்-கிராமத்திற்குச் செல்லும் பேருந்துப் பயணமே அவனுக்கு அலுப்பூட்டுவதாக அமைகிறது. உடன் பயணிக்கும் வெள்ளந்தியான மனிதர்களின் பேச்சும், உடல் மொழியும் அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. பாதியிலேயே திரும்பிவிடலாம் என்று அம்மாவுடன் சண்டை போடுகிறான்.

சிறுவனை அடித்து இழுத்துக்கொண்டு
பாட்டியிடம் செல்கிறாள். கணவனைப் பிரிந்து வாழும் அவள், தனக்கொரு வேலை கிடைக்கும் வரை அவனை பார்த்துக்கொள்ளுமாறு பாட்டியிடம் கூறிவிட்டு கடைசிப் பேருந்தைப் பிடிக்கப் புறப்பட்டுவிடுகிறாள்.

மலையின் மேலுள்ள குடிசை வீட்டில் பாட்டியும் பேரனும் தனியாக வசிக்கிறார்கள். தனது குறும்புத்தனத்தால் ஏகப்பட்ட இடைஞ்சல்களை சுற்றியுள்ளவர்களுக்குக் கொடுக்கிறான். சுவையான உணவிற்காகவும், விளையாட்டுப் பெருட்களுக்காகவும் சிறுவன் கொடுக்கும் தொல்லைகளை துறவியின் அமைதியுடன் முதியவள் எதிர்கொள்கிறாள்.

அன்பான பணிவிடைகளும், எளிமையான தியாகமும் மூதாட்டியின் மீதான அன்பை சிறுவனுக்கு ஏற்படுத்துகிறது. அழுக்கானவள் என்றும், பைத்தியக்கார ஊமை என்றும் ஆரம்பத்தில் வெறுத்து ஒதுக்கிய பாட்டியை பிரிய மனமில்லாமல் கடைசியில் சிறுவன் தவிக்கிறான். சில வார்த்தைகளை எழுதி தபாலில் அனுப்ப அவளுக்குக் கற்றுத் தருகிறான். முடிவில் பேரனை வழியனுப்பிவிட்டு சோகம் ததும்ப அந்த மலைப்பாதை வழியே தனிமையுடன் கூன் முதுகிட்டு பாட்டி நடந்து செல்கிறாள். திரையில் இருள் கவிய 'எல்லா பாட்டிகளுக்கும் இந்தப் படம் சமர்ப்பணம்' எனும் எழுத்துக்களுடன் படம் முடிகிறது.

பாட்டிகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்குமான உறவு மாதிரியான பலமான விஷயம் வேறெதுவும் இல்லை. நாள் முழுவதும், வருடம் முழுவதும் பெற்றவர்களுடன் இருந்தாலும் விடுமுறையின் சில தினங்களில் பகிரக் கிடைக்கும் தாத்தா பாட்டியின் அன்பு வருடம் முழுவதற்குமான உற்சாக ஆற்றல் தரும் விஷயமாக சிறுவர்களுக்கு இருக்கிறது.

எல்லாருமே வாழ்க்கையில் கடந்து வந்த அனுபவங்கள் தான்... திரையில் பார்க்கும் பொழுது இழந்துவிட்ட எதையோ ஞாபகப்படுத்துவதை உள்ளுணர்வு ஏற்படுகிறது. மொத்தப் படமும் ஆங்கில வரிகளுடன் யூட்யுப்-ல் காணக் கிடைக்கிறது.

Youtube Link:

The Way Home - Part 1
The Way Home - Part 2
The Way Home - Part 3
The Way Home - Part 4
The Way Home - Part 5
The Way Home - Part 6
The Way Home - Part 7
The Way Home - Part 8
The Way Home - Part 9
The Way Home - Part 10

இந்தப் படத்தைப் பற்றிய நண்பர் சுரேஷ் கண்ணனின் விமர்சனம்: பாட்டிமார்களுக்குச் சமர்ப்பணம்

Sunday, May 9, 2010

கேணி சந்திப்பு - எழுத்தாளர் பாமா

அரசு ஆரம்பப் பள்ளியில் தான் என்னுடைய படிப்பு தொடங்கியது. என்னுடைய வீட்டிற்கு ஐந்து மீட்டர் தொலைவிலேயே அந்த பள்ளி இருக்கும். ஒவ்வொரு இடைவெளியின் போதும் வீட்டிற்கு வந்து வயிறார சாப்பிட்டுவிட்டுச் செல்லும் வசதி கூட இருந்தது.

அப்பொழுதெல்லாம் வருடத்திற்கு ஒரு முறை செருப்பும், டிரௌசரும்,சட்டையும், சில பாடப் புத்தகங்களும் எங்களுக்குக் கொடுப்பார்கள். யாரோ பரிசு தருகிறார்கள் என்ற களிப்பில், முண்டியடித்துக் கொண்டு அவைகளை மகிழ்ச்சியுடன் வாங்கியது கனவில் கண்டது போல் ஞாபகம் இருக்கிறது. வேடிக்கை என்னவெனில் ஒரு வாரத்தில் செருப்பு அறுந்துவிடும், ஒரு மாதத்தில் சட்டைக் கிழிந்துவிடும், அதற்கு முன் ட்ரௌசரில் உட்காரும் இடத்தில் ஓட்டை விழுந்துவிடும். சட்டையை கரிகந்தைக்கும், ட்ரௌசரை கால்மிதிக்கவும் வீட்டில் பயன்படுத்திக் கொள்வார்கள். என்னுடன் படித்த பலரும் (முக்கால் பங்கு) ஏழைகள் என்பதால் பள்ளியில் கொடுத்த உடைகளையே வருடம் முழுவதும் பத்திரமாக பயன்படுத்திக் கொள்வார்கள். இதெல்லாம் பிற்படுத்தப் பட்டவர்களுக்கும், தலித்துகளிக்கும் அரசு அளிக்கும் சலுகை என்பதை கல்லூரி வந்ததும் தான் தெரிந்துகொண்டேன்.

தலித்துகளுடன் ஒரே பள்ளியில் படித்திருந்தாலும், என்னுடைய நெருங்கிய நண்பர்கள் பலரும் தலித்துகளாக இருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை அனுபவங்கள் எனக்கு அந்த அளவிற்குப் பரிச்சயம் இல்லை. அதற்கான சந்தர்ப்பமும் இன்றுவரை எனக்கு வாய்க்கவில்லை. ராஜ்கௌதமன் எழுதிய சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை ஆகிய புனைவுகள் தான் தலித்துகளின் இயல்பான வாழ்க்கையை எனக்கு அடையாளம் காட்டின. அவருடைய சகோதரி என்று தெரிய வந்ததும் தான் பாமாவின் படைப்புகளை வாசிக்க ஆரம்பித்தேன்.

கேணியில் உரையாற்றுவதற்கு முன் பாமா-வைப் பார்த்து பேசும் சந்தர்ப்பம் வாய்த்தது. ராஜ் கௌதமனின் புனைவுகளை சிலாகித்துப் பேசினேன். "ஓ நீங்க படிச்சிருக்கிங்களா! இதை எதற்கு எங்கிட்ட சொல்றீங்க? அவருக்கே லெட்டர் போடுங்கன்னு" சொல்லி சிரிச்சாங்க... அப்படியே பக்கத்தில் இருந்த மற்றொரு சகோதரரான மார்க்கை அறிமுகப் படுத்தினார்கள்.

)()(0)()(0)()(0)()(

கேணி கூட்டம் ஆரம்பித்து இன்றுடன் சரியாக ஒரு வருடம் ஆகிறது என்ற குதூகலத்துடன் இலக்கிய சந்திப்பை ஞாநி தொடங்கி வைத்தார். இந்த முறை சந்திப்பில் ஒரு புதுமையைச் செய்திருந்தார் ஞாநி. பாமாவின் 'சாமியாட்டம்' என்ற சிறுகதையை வினோதினி என்ற நாடகக் கலைஞர் (Trained Acting Professional) நடித்துக் காட்டினார். கதையில் நான்கு பாத்திரங்கள் வரும். அனைத்துப் பாத்திரங்களையும் அவரே ஏற்று நடித்தார் (Solo Performance). ஒவ்வொரு பாத்திரத்திற்கு ஏற்றார் போல அவர் வெளிப்படுத்திய முகபாவமும், உடல் மொழியும் எல்லோரையும் கவர்ந்தது. நாடகம் முடிந்ததும் நீண்ட நேரம், தொடர்ந்து கரவொலி கேட்டுக் கொண்டே இருந்தது. பாமா தாவிச் சென்று கலங்கிய கண்களுடன் விநோதிநியைத் தழுவிக் கொண்டார். கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

கிராமத்தில் இயல்பான வாழ்க்கை வாழ்ந்துவிட்டு இந்த பரபரப்பான சூழலுக்கு வருவது விநோதமாக இருக்கிறது. என்னுடைய படைப்புகளின் கருக்கள் அனைத்தும் என்னுடைய வாழ்க்கை அனுபவத்திருந்து கிடைத்தவை தான். அதில் புனைவிற்காக சில விஷயங்களைச் சேர்ப்பேன். இதுவரை 50 சிறுகதைகள் எழுதிஇருக்கிறேன். சாமியாட்டமும் என்னுடைய வாழ்க்கையில் கிடைத்த அனுபவம் தான். பெண் ஆணைச் சார்ந்து வாழக்கூடிய உயிரியாக மட்டுமே பார்க்கப் படுகிறாள். 'அப்பா... கணவன்... மகன்...' என்று அவர்களுடைய வாழ்க்கை ஆண்களின் உலகைச் சார்ந்து மட்டுமே அமைகிறது. இங்குதான் பெண்ணின் வெளி, இடம், இருத்தல் ஆகியவற்றை உறுதி செய்யவேண்டிய கட்டாயம் அமைகிறது. பெண்களை பெண்களாகவே இருக்க விடுங்கள் அது போதும். அவர்களுடைய வாழ்க்கையை வாழ விடுங்கள்.

சில தாக்கங்கள் பல நாட்கள் என்னை முடக்கி வைக்கிறது. அவற்றைத்தான் என்னுடைய படைப்பில் கொண்டுவர முனைப்புடன் இருக்கிறேன். எனக்கு 50 வயசு ஆகுதுங்க. இப்பொழுதும் என்னுடைய வாழ்க்கையை ரசிக்கிறேன். நான் கஷ்டப்பட்ட காலங்களும் இருக்கிறது. அடுத்த வேலை சாப்பாட்டிற்கு வழியில்லாமல் தெருவில் நின்றிருக்கிறேன். அரசாங்க வேலையை விட்டுவிட்டு கன்னியர் மடத்தில் ஏழாண்டுகாலம் இருந்துவிட்டு, அதை உதறிவிட்டு வெளியில் வந்த பொழுது தீவிரமாக என்னை எதிர்த்தார்கள். 'கருக்கு' வெளிவந்த பொழுது கிராமமும், குடும்பமும் ஒன்றாக சேர்ந்துகொண்டு எனக்கு எதிராக நின்றார்கள். காலம் கடந்து என்னை புரிந்துகொண்ட அதே ஊர் மக்கள் என்னை அழைத்து மேடையில் ஏற்றி மாலை போட்டு கௌரவம் செய்திருக்கிறார்கள். என் ஊர் மக்களின் பாராட்டைத் தான் எனக்குக் கிடைத்த பெரிய கௌரவமாக நினைக்கிறேன்.

நீங்கள் தலித்தியத்தை பற்றி மட்டும் ஏன் எழுதுகிறீர்கள் என்று பல இடங்களிலும் கேட்கிறார்கள். "அதை எழுத ஆட்கள் இல்லை என்பதால் தான் எழுதுகிறேன். அது என்னுடைய கடமையும் பொறுப்பும்" என்று நினைக்கிறேன். மனுஷனை மனுஷன் மதிக்கணும் அவ்வளவுதாங்க. மத்த எதுவுமே பெருசில்ல. இப்பொழுதுள்ள வாழ்க்கை பணம், பகட்டு பதவியை மட்டுமே கொண்டு அடுத்தவர்களின் மீதான மதிப்பை நிர்ணயிக்கிறது. பணமும் பகட்டுமே பாசத்தை நிர்ணயிக்கிறது. சுயநலம் தான் பிரதானமாக இருக்கிறது. உறவுகள் இருக்கமாகிக் கொண்டே போகிறது. பக்கத்து வீட்டு மனிதர்களுடன் கூட சகஜமாக பேசும் நிலை இன்று இருக்கவில்லை. இந்த மாதிரி சூழலில் தான் நான் கடந்துவந்த பழைய வாழ்க்கையை மெளனமாக தேடுகிறேன். மெளனமாக ரசிக்கிறேன்.

எனக்கு இலக்கியத்தில் பெரிதாக சாதிக்க வேண்டும், சாகித்ய அகாடமி வாங்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது. என்னுடைய படைப்புகளை பாடத்திட்டத்தில் வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இருந்துட்டுப் போகட்டும். சிலர் என்னுடைய படைப்புகளை ஆராய்ச்சி செய்கிறார்களாம். அவர்களும் ஆராய்ச்சி செய்து பெரியவர்களாக ஆகட்டும். எனக்கான முனைப்பு என்னவெனில் என்னுடைய மக்களின் அவலங்களைப் பதிவு செய்யவேண்டும். அவ்வளவுதான்.

கடைசியாக கலீல் ஜிப்ரானின் ஒரு கதையைச் சொல்லி தனது உரையை நிறைவு செய்தார்.

ஒரு தோட்டத்தில் பல வண்ண பூக்கள் தரையோடு தரையாக இருந்தனவாம். அதே தோட்டத்தில் உயர வளர்ந்த ரோஜாச் செடியில், ஒரு ரோஜாப்பூ பூத்துக் குளிங்கியதாம். தரையோடு தரையாக இருந்த சிறு பூ ஒன்று சக பூக்களிடம் பேசியதாம்.

"நாமும் ரோஜா மாதிரி பெருசா மதில் சுவரைத் தாண்டி வளர்ந்தால் உலகத்தில் எல்லாவற்றையும் ரசிக்கலாம் இல்லையா?" என்று கேட்டதாம்.

"உனக்கு ஏன் இந்த நடக்காத ஆசை" என்று மற்ற பூக்கள் எல்லாம் அதனைப் பார்த்து சிரித்ததாம். மனவருத்தப் பட்ட சிறு பூ, இறைவனிடம் வேண்டிக் கொண்டதான். இறைவனும் இந்தப் பூவை ரோஜாவின் உயரத்திற்கு பெருசாக்கிட்டாராம். சிறு பூவும் மதில் சுவரைச் சுற்றியுள்ள காட்சிகளைப் பார்த்து ரசித்ததாம்.

எதிர்பாராத நாளில் புயல் காற்று அடித்து ரோஜாச்செடியும், உயரமாக வளர்ந்த சிறு பூச்செடியும் மண்ணோடு மண்ணாக விழுந்ததாம்.

"இது உனக்குத் தேவையா? எங்களை மாதிரியே மண்ணோடு மண்ணாக இருந்திருந்தால் மிதிபட்டாலும் உயிரோடு இருந்திருக்கலாம் இல்லையா?" என்று கேலி பேசி சிரித்துக்கொண்டதாம்.

மற்றவர்களால் மிதிபட்டு நூறாண்டுகாலம் வாழ்வதைவிட, ஒரு நாள் வாழ்ந்தாலும் சுதந்திரமாக உயரத்தில் வாழ்ந்தோம். அதுவே போதும் என்று ரோஜா சொல்லியதாம்.

ஆகவே "நாமும் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பது முக்கியமில்லை. சுதந்திரமாக, சுயமரியாதையுடன் வாழ்கிறோமா என்பதுதான் முக்கியம்" என்று தனது உரையை முடித்தார். அதைத் தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்குத் தொடர்புடைய, தொடர்பில்லாத பல கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் கூறி பாமா கூட்டத்தை நிறைவு செய்தார்.

நண்பர் ஜாக்கி சேகரின் கேணி பற்றிய பதிவு: எழுத்தாளர் பாமா..ஞானி வீட்டு கேணி கூட்டம்(09•05•2010)

பின் குறிப்பு:
1. என்னுடைய ஞாபகத்தில் இருப்பதை மட்டுமே எழுதி இருக்கிறேன்.
2. அடுத்த மாதம் கேணிக்கு 'ஆய்வாளர் கீதா' வரவிருப்பதாக ஞாநி அறிவித்தார். விருப்பமிருப்பவர்கள் கலந்து கொண்டு அவருடன் உரையாடலாம்.
3. பாமாவின் புத்தகங்கள் 'தழும்புகள் கயங்களாகி (கருக்கு, சங்கதி - நாவல்), கிசும்புக்காரன்,கொண்டாட்டம் (சிறுகதைகள்)' ஆகியவை விடியல் மற்றும் ஆழி பதிப்பகத்தில் வாங்கக் கிடைக்கிறது.