Saturday, May 23, 2015

இலக்கிய சூழலில் இதெல்லாம்...

இயல்பாகப் பேசுவது எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே. இயல்பும் உண்மையும் கசக்கும். அப்படி ஒரு சம்பவம் தான் நடந்திருக்கிறது. இடைமறித்துப் பேசியவர் இப்படித்தான் ஆரம்பித்தார்.

“நீங்க அந்த புக்ஸ் பத்தி எங்கிட்டே சொல்றதுக்கு முன்னாடி... என்ன பத்தி கொஞ்சம் சொல்லணும்” என்றார்.

நானும் “சரி சொல்லுங்க...” என்றேன்.

“நான் ஒரு எழுத்தாளன். என் பேரு கிருஷ்ண மூர்த்தி. நாவல் எழுதியிருக்கேன். புத்தகமா வந்திருக்கு... ப்ருஹன்னளை....” என்று அடுக்கியவாறு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

“ஓ... எஸ்... அது நீங்க தானா? உங்க படைப்பின் மேல் எனக்குப் பெரிய மரியாதை எல்லாம் கிடையாது. அத பத்தி பேசுற எடமும் இது இல்ல... அப்படியே பேசினாலும் அதையெல்லாம் ஃபேஸ், ட்விட்டர்ன்னு போட்டு தேவையில்லாம விளையாடுவீங்க. இன்னொரு சந்தர்ப்பத்துல வாய்ப்பிருந்தால் நம்ம - உங்களோட படைப்புகள் பத்தி பேசலாம்... இப்ப இந்தப் புத்தகத்தைப் படிச்சிட்டு உங்களோட கருத்தைச் சொல்ல முடியுமா?”

இப்படிச் சொன்னால் யாருக்குத்தான் கசப்பு தோன்றாது. தன்னை “ரயிட்டர்” என்று சொல்லிக் “கொல்லும்” கிமு பக்கங்கள் எழுதுபவருக்குக் கசப்பு மேலிட்டதில் வியப்பொன்றும் இல்லை. ஆர்வக் கோளாறுகள் நம் சூழலில் சிதறிக் கிடக்கிறார்கள். ஒரு நண்பருக்காக வேண்டி – சில ஆண்டுகளுக்கு முன்பு - இளம் எழுத்தாளர்களின் படைப்புகளை சேகரித்துக் கொண்டிருந்தேன். கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் “ப்ருஹனன்ளை” என்ற நாவலின் கையெழுத்துப் பிரதியைப் படித்துவிட்டுத் தன்னுடைய முகநூலில் “நாவலின் மொழி நன்றாக இருக்கிறது. இன்னும் கூட கொஞ்சம் போல உழைத்தால் கிருஷ்ண மூர்த்தியால் நல்ல நாவல்களை எழுத முடியும்” என்ற தன்மையில் பகிர்ந்திருந்தார். “பருக்கை” என்ற நாவலைப் படித்துவிட்டு மிகுந்த சோர்வில் இருந்த எனக்கு, இந்நாவலாவது ஆசுவாசத்தைக் கொடுக்காதா என்று நினைத்துத் தான் பிரதியொன்றை வாங்கிப் படிக்க நினைத்தேன்.

இளங்கோவைத் தொடர்பு கொண்டு “நாவலின் பிரதியொன்று கிடைக்குமா?” என்று விசாரித்தேன். “எழுத்தாளரிடமே கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்” என்றார் இளங்கோ.

விமலாதித்த மாமல்லன் ‘ப்ருஹனன்ளை’ அடித்துத் துவைத்துக் கொடியில் தொங்க விடாத குறையாகக் காயப்போட்டார். மகாபாரதக் கதையை நவீன நோக்கில் முன்வைக்கும் பிரதியாக இருக்குமோ என்ற ஆவலில் தான் வாங்கினேன். இந்த நாவல் எனக்குப் பிடிக்கவில்லை. ஆகவே, முகநூலில் கூட இந்நாவல் குறித்து கடுமையாக விமர்சித்து பகிர்ந்த ஞாபகம். ஓர் இலக்கியவாதியைப் பகைத்துக்கொள்ள இது போன்ற சம்பவங்கள் போதாதா? படைப்பு வேறு, படைப்பாளி வேறு என்ற புரிதல் நம் மக்களிடம் இல்லாதது தான் இங்கு பிரச்சனையே. எல்லாவற்றையும் புகழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். கருத்து ரீதியாக முரண்படுபவர்களை எந்த விதத்தில் டேமேஜ் செய்யலாம் என்பதையே இவர்கள் ரூம் போட்டு யோசிப்பார்கள் போல. சரி விஷயத்திற்கு வருவோம்.

அஃதாவது ரைட்டர் கிருஷ்ண மூர்த்தி காலச்சுவடு அரங்கில் பட்ட நரக வேதனையைப் பற்றிச் சொல்லி இருக்கிறர். அதில் பல விஷயங்கள் விடுபட்டிருக்கின்றன.

/-- காலச்சுவடு அரங்கில் நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். ஏதோ ஆய்வு செய்கிறார் போல. சில புத்தகங்களைக் கொடுத்து வலுக்கட்டாயமாக வாசிக்கச் சொன்னார்--/

“சில புத்தகங்களை வலுக்கட்டாயமாகக் கொடுத்து வாசிக்கச் சொன்னார்” என்கிறார். எந்திரன் படத்து சிட்டியா இவர். சில புத்தகங்களை ஓரிரு நிமிடங்களில் படித்து முடிக்க. “பண்பாட்டு அசைவுகள்” என்பது ஒரே புத்தகத்தைத் தான் ஆய்விற்குப் பயன் படுத்தினோம். அதன் ஒரு பக்கத்தை மட்டுமே வாசிக்கச் சொல்லி ஆய்வு செய்தோம். மேலும், வாசிக்கச் சொல்லி அதெப்படி ஒருவரைக் கட்டாயப்படுத்த முடியும். காலச்சுவடு அரங்கில் வாசகர்களைப் பார்த்து ஆய்வுக்காகப் பேசும் பொழுது. “உங்க கூட ரெண்டு நிமிஷம் பேசலாமா? ஒரு சின்ன ரிசர்ச். எனக்கு நீங்க ஹெல்ப் பண்ண முடியுமா?” என்று அடங்கிய குரலில் கேட்ட பிறகே அரங்கிற்கு வந்தவர்களுடன் பேசினேன்.

“இல்ல... அதுக்கெல்லாம் எனக்கு நேரம் இல்ல...” என்பவர்களையோ, உதட்டைப் பிதுக்கியவர்கலையோ நான் என்றுமே தொந்தரவு செய்ததில்லை. அது போல நிறைய பேர் விருப்பமில்லை என சென்றிருக்கிறார்கள்.

“ஒஹ்... பேசலாமே...” என்பவர்களிடம் மட்டும் தொ.ப-வின் “பண்பாட்டு அசைவுகள்” புத்தகத்தில் “பண்பாட்டு அசைவுகள்” என்ற தலைப்பில் எழுதப் பட்டிருக்கும் சிறியதொரு பக்கத்தைக் கொடுத்துப் படிக்கச் சொல்லி கருத்து கேட்டேன். அப்படிப்பட்ட உதிரி மனிதராகக் காலச்சுவடிற்கு வந்த ஆயிரத்தி சொச்ச பார்வையாளர்களில் ஒருவராகக் கிருஷ்ண மூர்தியைச் சந்தித்தேன். அவரிடமும் “உங்க கூட ரெண்டு நிமிஷம் பேசலாமா? ஒரு சின்ன ரிசர்ச். எனக்கு நீங்க ஹெல்ப் பண்ண முடியுமா?” என்று கேட்டேன்.

அவரும் சம்மதித்தார். நானும் தொ.பாவின் ஆய்வு நூலையும், “கெட்ட வார்த்தை பேசுவோம்” நூலைப் பற்றியும் பேசலாம் என்று துவங்கியபோது. கிருஷ்ண மூர்த்தி என்னை இடைமறித்துப் பேசினார்.

“நீங்க அந்த புக்ஸ் பத்தி எங்கிட்டே சொல்றதுக்கு முன்னாடி... என்ன பத்தி உங்கக்கிட்ட கொஞ்சம் சொல்லணும்” என்றார்.

நானும் “சரி சொல்லுங்க...” என்றேன்.

“நான் ஒரு எழுத்தாளன். என் பேரு கிருஷ்ண மூர்த்தி. நாவல் எழுதியிருக்கேன். புத்தகமா வந்திருக்கு... ப்ருஹன்னளை....” என்று அடுக்கியவாறு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

“ஓ... எஸ்... அது நீங்க தானா? உங்க படைப்பின் மேல் எனக்குப் பெரிய மரியாதை எல்லாம் கிடையாது. அத பத்தி பேசுற எடமும் இது இல்ல... அப்படியே பேசினாலும் அதையெல்லாம் ஃபேஸ், ட்விட்டர்ன்னு போட்டு தேவையில்லாம விளையாடுவீங்க. இன்னொரு சந்தர்ப்பத்துல நம்ம - உங்களோட படைப்புகள் பத்தி பேசலாம்... இப்ப இந்தப் புத்தகத்தைப் படிச்சிட்டு உங்களோட கருத்தைச் சொல்ல முடியுமா?” என்றேன்.

சிரித்துக்கொண்டே, தன்னுடன் அழைத்து வந்தவரை அருகில் நிற்க வைத்துக்கொண்டு படித்தார். இடைப் பட்ட நேரத்தில் வேறு சில வாசகர்களிடம் பேசச் சென்றுவிட்டேன். ஒரு சுற்று முடித்துவிட்டு வரும்பொழுது கிருஷ்ணமூர்த்தி படித்து முடித்திருந்தார்.

“உங்களோட ஃபீட் பேக் என்னன்னு சொல்ல முடியுமா?” என்று கேட்டேன்.

“ஒரு புத்தகத்த முழுசா படிக்காம நான் என்ன சொல்லிட முடியும்.” என்றார்.

“நீங்க சொல்றதும் சரிதான். உங்களோட நேரத்தை எங்களுக்காகச் செலவிட்டதுக்கு நன்றி... முடிந்தால் உங்களோட மின்னஞ்சல் மற்றும் செல்பேசி இலக்கங்களைக் கொடுத்துட்டுப் போங்க” என்று கேட்டு வாங்கி கொண்டு, உங்களுக்கு வாய்ப்பிருந்தால் கிரா-வின் “பிஞ்சுகள்”, பாஸ்கர் சக்தி-யின் “கனக துர்கா”, கீரனூர் ஜாகீர்ராஜா-வின் நாவல்களில் எதையேனும் முயற்சி செய்து பாருங்கள் என சொல்லியிருக்க நிறையவே வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் நான் சந்தித்த ஒவ்வொரு இளம் வாசகர்களிடமும் இதைத் தான் சொல்லிக் கொண்டிருந்தேன். இதற்கு முந்திய வருடம் – தமிழ்ச்செல்வன் சிறுகதைகள், திலீப்குமார் சிறுகதைகள், லக்ஷ்மி சரவண குமாரின் “உப்பு நாய்கள்” ஆகிய புத்தகங்களைப் பலருக்கும் பரிந்துரைத்திருக்கிறேன்.

கிராவின் “பிஞ்சுகள்” நாவல் வெறும் 35 ரூபாய் தான். கையெழுத்துப் பிரதியிலேயே “இலக்கிய சிந்தனை” விருது பெற்ற நாவல் என்று பரிந்துரைத்து தான் சந்தித்த எல்லோரையும் அனுப்பி வைத்தேன். கிருஷ்ண மூர்த்தி உட்பட. விலை மலிவு என்ற காரணத்தால் ஒருவேளை கிருஷ்ண மூர்த்தி முயற்சி செய்திருக்கலாம். சரி போகட்டும் அடுத்ததற்கு வருவோம்.

/-- சீக்கிரத்திலேயே என்னை எழுத்தாளர் என்று அறிந்துகொண்டார்.--/

கிருஷ்ண மூர்த்தி வேண்டுமெனில் மறந்திருக்கலாம். அவருடன் வந்த நண்பருக்கு வேண்டுமெனில் நன்றாக ஞாபகம் இருக்கலாம். கிருஷ்ண மூர்த்தி – தான் ஒரு எழுத்தாளன் என்று சுயபுராணம் படிவிட்டுத் தான் என்னிடம் பேசவே செய்தார். வெத்தலையில் மை தடவி எது ஒன்றையும் அறிந்து கொள்ளும் திறமை எனக்கு இது வரையிலும் இருந்ததில்லை என்பதை கிமு நம்ப வேண்டும்.

/-- வாசிக்க வேண்டிய விஷயங்கள் கடலென இருக்கிறது.--/

இப்படி ஒரு வார்த்தையை நான் கூறி இருக்க வாய்ப்பே இல்லை. “ஜோ டி குரூஸ், பாமா” முதல் “ரமேஷ் ரக்சன்” வரை வாசிக்காமலே புனைகதைகள் எழுதும் படைப்பாளிகள் நிறைய பேர் நம்மிடம் இருக்கிறார்கள் என்ற வரலாறு அறியாதவனா நான்.

/-- இப்போது உன் சரக்கு செல்லாது என்ற தொனியிலேயே சில நூல்களை என் தலையில் கட்ட விரும்பினார். --/

அஃதாவது ரியிட்டர் கிருஷ்ண மூர்த்தி – யாரிடமும் இந்தப் புத்தகங்களை வாங்குங்கள் என்று நான் சொல்லவும் இல்லை. கட்டாயப் படுத்தவும் இல்லை. “படிச்சி பார்த்துட்டு ஃபீட் பேக் சொல்லுங்க” என்று மட்டும் தான் கோரினேன். ஒரு கஸ்டமரா “இந்தப் புத்தகத்தை வாங்க வைக்கத் தான் இவன் நம்மகிட்ட பேசரானோ” என்ற உளக்கூறு உங்களுக்கு வேலை செய்திருக்கலாம்.

ஒருவேளை இப்படிச்சொல்லி இருப்பேன்: “தொ.பா-வை உங்களுக்கு அறிமுகம் செய்து வைத்ததில் எனக்கு மிகுந்த சந்தோசம். தேங்க் யூ...”

/-- இப்போது உன் சரக்கு செல்லாது என்ற தொனியிலேயே--/

‘தொனியில’ எங்கையா சொன்னேன். நேரடியாவே, உங்களுடைய நெற்றிப்பொட்டில் அடித்தது போலத் தெளிவாகத் தானே சொன்னேன். “உங்க படைப்பின் மேல் எனக்குப் பெரிய மரியாதை எல்லாம் கிடையாது. அத பத்தி பேசுற எடமும் இது இல்ல... இன்னொரு சந்தர்ப்பத்துல நம்ம - உங்களோட படைப்புகள் பத்தி பேசலாம்...” என்று தானே சொன்னேன்.

இவற்றையெல்லாம் மீறி, என்றாவது ஒரு நல்ல படைப்பொன்றை உங்களது எழுத்தில் படிக்க நேர்ந்தால் நிச்சயமாக மனம் திறந்து பாராட்டவும் செய்வேன். எனக்கு யார் எழுதுகிறார்கள் என்பதெல்லாம் முக்கியமில்லை. படைப்பு நன்றாக இருந்தாள் பாராட்ட வேண்டியது தான்.

/--நாவலுக்குள் செல்வதற்கு முன் அந்நாவல் வாங்கும் போது ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை சொல்ல விழைகிறேன். --/

விழைவதை முழுசாக விழைந்தால் பிரச்சனை இல்லை. அரை குறையாக ஆர்வக்கோளாறில் விழைந்தால் பிரச்சனை தான். அது நாவல் எழுதுவதாக இருந்தாலும் சரி, நாவலைப் பற்றி எழுதுவதாக இருந்தாலும் சரி, நாவல் வாங்கிய அனுபவத்தைப் பற்றி எழுதுவதாக இருந்தாலும் சரி.

/-- என் திறமைகள் அனைத்தையும் கலந்து சமாளித்துக் கொண்டிருந்தேன்.--/

ஜமாளிங்கோ ஜமாளிங்கோ... நல்லா ஜமாளிங்கோ... இதையெல்லாம் பார்க்கத் தானே நாங்களெல்லாம் இந்தப் பிறவியையே எடுத்திருக்கிறோம். உங்களோட காக் டெயில் திறமைகளின் கலவை என்னைப் போன்றவர்களுக்குக் கொஞ்சம் ஸ்பெஷல்.

/-- பின் தான் வதையே ஆரம்பித்தது. --/

அஃதாவது ரயிட்டர் கிருஷ்ண மூர்த்தி - படைப்பாளிகள் என்று தம்மைத்தாமே சொல்லிக் கொல்லும் சிலர், தமிழன்னைக்குக் கொடுக்கும் வதையை விடவா நாம் போன்ற சக மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் கொடுத்துவிடப் போகிறோம்.

அஃதாவது ரியிட்டர் கிருஷ்ண மூர்த்தி மாதிரி – சென்னை புத்தகக் கண்காட்சியில் – ஏறக்குறைய நூறு நபர்களை ஒவ்வொரு நாளும் சந்தித்திருக்கிறேன். நேர்மையாக முகத்திற்கு நேரே சிடுசிடுவென பொரிந்து தள்ளும் நபர்களையும், இன்முகத்துடன் பேசும் தோழர்களையும், சகாய சத்ருக்கலான சக ஊழியர்களையும் என 99% நபர்களையும் கூட சமாளித்துவிடலாம். போலியான 1% மனிதர்களைச் சந்திப்பது தான் வாழ்வின் சலிப்பினை ஏற்படுத்தக்கூடிய தருணமாக அமையும். வடிகட்டிய நூற்றில் ஒரு நபராக - சுய பெருமையிலும், சுய தம்பட்டதிலும், சம்பவங்களைத் திரிப்பதிலும் கவனம் செலுத்தும் - அஃதாவது ரியிட்டர் கிருஷ்ண மூர்த்தியைச் சொல்லலாம்.

என்றேனும் ஒருநாள் இவர் “பண்பாட்டு அசைவுகள்”, “கனக துர்கா”, இல்லையேல் கீரனூர் ஜகீர்ராஜாவின் படைப்புகளைப் பற்றியும் எழுதலாம். அன்றும் கூட என்னுடைய முகமும், குரலும் இவருக்கு ஒலிக்கும்.

புத்தகங்களைப் படிக்கும் பொழுது இவருக்கு என்னுடைய முகமும், கசப்பான அனுபவமும் ஞாபகம் வருவதாகச் சொல்லி இருக்கிறார். அதற்கு பதில், சிறுகதை நாவல் என்று எதையாவது எழுத உட்காரும் பொழுது என்னுடைய முகமும், என்னைச் சந்தித்த கசப்பான அனுபவமும் இவருக்கு ஞாபகம் வந்து தொலைக்கலாம். சரி போகட்டும் இதெல்லாம் நம்ம கையிலா இருக்குது!

அசோகமித்ரனை சந்தித்த கிருஷ்ண மூர்த்தி “பதிப்பகத்தார் ஒருவரும் தனக்கு ராயல்டி சரியாகக் கொடுப்பதில்லை” என அ.மி சொல்லியது போலப் பகிர்ந்து - காலச்சுவடு கண்ணன் அசோகமித்ரனுக்கே நேரடியாகத் தொலைபேசியில் பேசி, “அப்படியெல்லாம் நான் சொல்லவே இல்லையே...” என்று அசோகமித்ரன் சொல்ல – கண்ணன் தனது முகநூலில் அதனைப் பகிர்ந்திருந்தார். கால இடைவெளியில் இதுபோல இல்லாத விஷயங்களைத் திரித்துக் கூறுவதையே தன்னுடைய வேலையாக வைத்திருக்கிறார் போல. எதுக்கு இந்த பிழைப்பு என்று கேட்கிறேன்.

சர்ப்பமானது விஷத்தையும் கக்கும், வைரத்தையும் கக்கும் என்பார்கள். இளம் சர்ப்பங்கள் வைரத்தைக் கக்குகிறோம் என்று நினைத்துக் கொண்டு தான் விஷத்தைக் கக்கும் போல. அஃதாவது கிருஷ்ண மூர்த்தி, நீங்கள் கக்குவது விஷமத்தில் தோய்த்தெடுத்த விஷத்திலும் விஷம் என்பதை நீங்கள் உணர வேண்டும்.

கடைசியாக மகாபாரதத்திலிருந்து ஒரு ரெஃபரன்ஸ். பாரத யுத்தத்தில் அபிமன்யு இறந்தவுடன் தர்மனை அர்ஜுனன் பலவாறு திட்டித் தீர்க்கிறான். கோபம் தெளிந்து “கடவுளே... என்னுடைய அண்ணனை ஒருமையில் திட்டிவிட்டேனே. இப்பொழுதே என்னுடைய தலையை நானே அறுத்துக்கொண்டு சாகப் போகிறேன்...” என்கிறான் அர்ஜுனன்.

“இதற்காகவா உன்னுடைய உயிரினை விடப் போகிறாய்... உன்னை நீயே புகழ்ந்து பேசிக்கொள். தற்புகழ்ச்சி தற்கொலைக்கு நிகரானது.” என்கிறான் கண்ணன் என்கின்ற கிருஷ்ணன்.

“நான் எழுத்தாளன்... நான் எழுத்தாளன்... நான் எழுத்தாளன்...” என்று செல்லுமிடமெல்லாம் பதவிப் பிரமாணம் செய்துகொள்வது போல மறுபடியும் மறுபடியும் சொல்லி - அறிமுகம் செய்து கொள்வதாக நினைத்துக்கொண்டு - உங்களை நீங்களே புகழ்ந்து கொள்வதற்கு முன், பாரதக் கதையின் மேற்கூறிய சிறு கீற்றினை நினைத்துக் கொள்ளுங்கள்.

அப்படியும் இல்லையெனில் ‘ப்ருஹனன்ளை’-யின் பின்னட்டையை வாசித்துப் பாருங்கள். கடைசி வரியில் “... காரணம் நான் படைப்பாளி இல்லை” என்று வாக்குமூலம் கொடுத்திருப்பீர்கள்.

வாக்குமூலத்தை மறந்துவிட்டு அடுத்தவர் மீது புழுதி வாரித் தூற்றலாமா? அப்படியே தூற்ற நினைத்தாலும் அடிப்படையில் ஒரு ஞாயம் இருக்க வேண்டாமா? யோசித்துப் பார்த்து உங்களுடைய இலக்கியப் பணியைத் தொடருங்கள். அஃதாவது ரயிட்டர் கிருஸ்ணமூர்த்தி உங்களது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

பொதுவாகவே கிராமத்தில் சொல்லுவார்கள் - சின்ன கல்லில் பீ துடைக்கக் கூடாது என்று. கிரா-வின் கிராமியக் கதையொன்றில் "ஆளோட எலக்காரத்தக் கண்டுள்ள ஆவாரையும் பீ வாரி எறக்கிது" என்றொரு சொற்றொடர் வரும். நானோ... சின்னக் கல்... சமயத்தில் ஆவாரைச் செடியும் கூட... மேதகு இலக்கிய உழைப்பாளிக்கு இதனைச் சொல்லிக்கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன்.

குறிப்பு: ஒருத்தர் நம்மள பத்தி கசப்போட இருக்காருன்னா... அதுக்கான காரணம் முழுசா மக்களுக்குத் தெரியணும் இல்ல. அதுக்காகத்தான் இந்தப் பதிவு.

மேலும், சம்பவங்களைத் திரித்து நிறையவே கிருஷ்ண மூர்த்தி பொய் சொல்லியிருக்கிறார். பொய் பேசும் படைப்பாளிகளை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு கொள்வதும் ஒரு வகையில் நல்லது தானே! அதற்காகவும் தான் இந்தப் பதிவு.