Thursday, October 11, 2012

பாபா ஓர் சரணாலயம்


நீண்ட நாட்களாக வீட்டின் பின்புறமுள்ள காலி இடத்தில் குப்பையைக் கொட்டுகிறார்கள் பக்கத்து வீட்டினர். (சென்ற பதிவில் எழுதி இருந்தேனே... அவர்களே தான்... அத்துமீறி மரத்தை வெட்டிய அதே பக்கத்து வீட்டினர் தான்.) விசாரித்தால்  “வேறு யாரோ கொட்டுகிறார்கள் எங்களுக்குத் தெரியாது!” என்கிறார்கள். இத்தனைக்கும் வாரத்தின் மூன்று நாட்களில் குப்பையைச் சேகரிக்க, ஊர் பஞ்சாயத்து குப்பை வண்டியை ஏற்பாடு செய்துள்ளது. அவற்றில் கொண்டு குப்பையைக் கொட்டினால், வீட்டுக் கொள்ளையில் ஏதேனும் ‘மரம், செடி, கொடிகள்’ வளர்ந்து பூமி குளிர்ந்துவிடுமே.

ஆகவே, “இதோ பார் சர்மிளா! அவங்கள, நம்மோட மெனையில குப்பையைக் கொட்டுறத நிறுத்தச் சொல்லு! இல்லன்னா...!” என்றேன்.

“நான் சொன்னா கேப்பாங்களாடா?” என்று தயங்கினாள்.

“அடிப்பாவி! நம்ம சொல்லிக் கேக்குற மக்களா அவர்கள். அப்படிக் கேக்குறதா இருந்தா - மொதல்ல சொன்னதையே கேட்டிருப்பாங்க இல்ல. இப்போ நான் செய்யப் போறதே... வேற ஒரு விஷயம் – கவனமா கேளு... நைட்டெல்லாம் உட்கார்ந்து யோசித்தது...” என்றேன்.

“இன்னாடா செய்யப் போற? இதோ பாரு போலீசு கேசுன்னு போயிடாத!” என்றாள்.

“உனக்குக் கொஞ்சம் கூட அறிவே இல்லையா?! நம்ம என்ன அரசாங்க காண்ட்ராக்ட் எடுத்தா சம்பாதிச்சு இருக்கோம். இல்ல அரசாங்க வேலையில லஞ்சம் வாங்கி சம்பாதிச்சு இருக்கோமா? பணத்தை வாரி இறைக்க...!” என்றேன்.

“அப்போ! என்னடா பண்ணப் போற?” என்றாள்.

“அது ரொம்ப சிம்பிள்... நம்ம ஆர்டிஸ்ட் பாபு இருக்காரு இல்ல. அவருகிட்ட சொல்லி சிரிடி சாய்பாபா படத்தை 5  அடிக்கு, 3 அடி வரையச் சொல்லப் போறேன். அதுவும் மூணு படம் வரையச் சொல்லப் போறேன்.” என்றேன்.
ஆர்வமிகுதியில் “எதுக்குடா!?” என்றாள்.“அவங்க எங்க குப்பையைக் கொட்டுறான்களோ – அந்த காம்பவுன்ட் அருகில் ஆர்டிஸ்ட் பாபு வரையிற படங்கள கொண்டு போயி நட்டு வைக்கப் போறேன். வீட்டின் பின்னாலுள்ள இருப்பிடத்தை “சிருடி பாபா தோட்டம்” என்று பெயர் சூட்டப் போகிறேன். அவங்க எந்த எடத்துல குப்பையைக் கொட்டிட்டு வராங்களோ... அந்த எடத்தப் பார்த்து கன்னத்துல போட்டுக்க வைக்கப் போறேன். கோர்ட்டு கேசுன்னு போனாலும் இதே செலவு தானே ஆகும்.” என்றேன்.

“டேய்... குப்பையில கொண்டு பாபா படத்த வைக்காத... பாவம் சுத்திக்கப் போகுது!” என்றாள்.

“அத்துமீறி மரத்த வெட்டுறதால சுத்தாத பாவமா - இதனால சுத்திக்கப் போகுது?” என்றேன். மேலும் எழுத்தானது சரஸ்வதி என்கிறார்கள். “இங்கு சிறுநீர் கழிக்காதே”  என்று எழுதுகிறார்கள். அங்குதான் நம்முடைய மக்கள் சிறுநீர் கழிக்கிறார்கள். அப்படியெனில் சரஸ்வதியின் தெய்வீகத் தன்மை குறைந்துவிடுமா!?

“நட்டு வச்ச பாபா படத்தாண்ட குப்பையைக் கொட்டுனா என்ன செய்வ?”
“அதுவும் சிம்பிள்... எனக்குத் தெரிஞ்சி கவரப்பேட்டையில ஒரு பாபா கோவில் இருக்கு... அங்கக் கொண்டுட்டு போயி படத்தைக் கொடுத்து, நடக்கப் போறதச் சொல்லுவேன்.” என்றேன்.

“என்னடா நடக்கப் போகுது?” என்றாள்.

“எங்க வீட்டாண்ட இந்தப் படங்கள நட்டு வச்சேன். ஆனா... யாரோ தினமும் இந்தப் படங்கலாண்ட குப்பையைக் கொட்டுறாங்க. எனக்குக் கஷ்டமா இருக்கு... உங்க கோவில்ல இந்தப் படங்கள வச்சிக்கிறிங்களான்னு” கேட்பேன்.

“யாரு அப்படி செஞ்சதுன்னு?” அவங்க ஒருவேளை கேட்டாங்கன்னா – “யாருன்னு தெரியல நண்பர்களே...! பக்த கோடிகள் எல்லாரும் எங்க வீட்டுக்கு ஒருநாள் விருந்துக்கு வரணும். பாபாவின் பக்தர்களை நான் உபசரிக்கணும்” என அழைப்பு விடுத்துவிட்டு வருவேன் என்றதும் சர்மிளா சிரித்தாள்.

அந்த சிரிப்பிற்கு அர்த்தம் இருக்கிறது. ஏனெனில் குப்பையைக் கொட்டியவர்கள் அந்தக் கோவிலின் மூலையில் என்றேனும் அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்யும் பொழுதும், மலர்களைத் தூவி வணங்கும் பொழுதும் துர்நாற்றம் அவர்களின் மூக்கைத் துளைக்கும். அவர்கள் உண்மையான சிரிடி பாபாவின் பக்தர்களாக இருந்தால்...

 “அந்நியர்களிடம் அன்பாய் இரு” என்பது தான் சிரிடி பாபாவின் முக்கியக் கோட்பாடு. “காட்டுமிராண்டித் தனமாக அடுத்தவர்கள் உங்களை வதைத்தாலும் பொறுத்துக் கொள்ளுங்கள்” என்பார். அந்த மகானை குப்பையோடு குப்பையாக நட்டு வைக்கும்படியும், என்னைக் காட்டுமிராண்டியாகவும் மாற்றப் போவது அதே பாபாவின் பக்தர்கள் தான்.

1. பண பலமும், அதிகார பலமும் சார்ந்து காவல் துறையின் சார்பு ஒருவேளை உண்மைக்கு எதிராகச் சாயலாம். ஒரு பக்கமாக துணை நிற்கலாம்.

2. அதே “பண பலமும், அதிகார பலமும்” உற்பத்தி செய்யும் பொய் சாட்சிகளின் மூலமும் - உண்மைக்குப் புறம்பாகப் பேசுதலின் மூலமும் நீதித்துறையின் சார்பு ஒருவேளை உண்மைக்கு எதிராகச் சாயலாம்.

மேற்கண்ட இரண்டின் மூலமும் உளுத்துப் போகச் செய்யும் உண்மைத் தன்மையினை - மனிதர்களின் உளவியல் மையத்தினை தகர்க்கும் பொழுது வாய்மையை நிலை நாட்டலாம் என்று நினைக்கிறேன்.

என்னடா இப்படி கீழ் தரமாக யோசிக்கிறோமே என்று எனக்குக் கொஞ்சமும் வருத்தம் இல்லை. “அரசியல் பலமும், பண பலமும்” இருக்கிறது என்ற கர்வத்தில்  “எதை வேண்டுமானாலும் செய்யலாம்! எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம்! பகையுடன் அடுத்தவர்களை உருட்டி விளையாடலாம்!” என்றிருப்பவர்களுக்கு, அவர்களின் உளவியல் கூறுகளைத் தகர்ப்பதின் மூலம் தான் பாடம் புகட்ட முடியும். இந்தச் செயலைச் செய்யப் போவதின் மூலம் நரகத்தில் எனக்கான இடத்தை ஆன்மீகவாதிகள் ஒதுக்கி வைக்கலாம். அதனை புன்சிரிப்புடன் ஏற்றுக் கொள்வேன். அதைப் பற்றி எனக்குக் கொஞ்சமும் கவலை இல்லை. வீட்டைச் சுற்றிலும் மைக்கா கவர் இல்லாத, குப்பைக் கூளங்கள் இல்லாத, காற்றில் சுதந்திரமாக கிளை விறித்தாடும் பச்சைப் பசேல் சுற்றமும் இருந்தால் போதும். இதைத் தவிர்த்து வேறெந்த சொர்க்கமும் எனக்கு வேண்டாம். பூவுலகின் நண்பனாக இருத்தலே எனக்கு அத்ம திருப்தி தான்..

“அக்காவைத் தூது அனுப்பி இருக்கிறேன்”. அவள் கொண்டு வரும் செய்தியைப் பொறுத்துத்தான் மற்றதையெல்லாம் யோசிக்கவேண்டும்.


பாபா ஓர் சரணாலயம் - அவன்
பாதங்கள் கமலாலயம்


# பொறந்த கொழந்தையையே குப்பைத் தொட்டியில் போடும் அவலம் இருக்கும் நம்முடைய சுற்றத்தில், வரைந்த ஆன்மீகவாதியின் படத்தை குப்பைக்கு நடுவில் நட்டு வைத்தால் குடியா முழுகிவிடும். கௌண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்...    

Wednesday, October 10, 2012

மரங்களை வெட்டாதீர்

கிராமத்தில் இருக்கும் என்னுடைய அண்டை வீட்டார், எங்களுடைய அனுமதியின்று மரங்களை வெட்டுவதும் – பிளாஸ்டிக், மைக்கா, திரவ மற்றும் திடக் கழிவுகளைக் கொட்டி பின்புறக் கொள்ளையை நாசப்படுத்துவதும் என ஓயாது தொல்லை கொடுத்துக் கொண்டு இருக்கின்றனர். அதைப் பற்றிய சட்ட ஆலோசனைகளைக் கேட்க வேண்டி முகநூலில் என்னைத் தொடரும் நண்பர்களிடம் வினா எழுப்பி இருதேன். அதை அப்படியே இங்கு பகிர்கிறேன். யாருக்கேனும் உதவும் என்ற நம்பிக்கையில்...  

முகநூல் ஸ்டேட்டஸ் 
ப்ளீஸ்... உங்களுக்குத் தெரிந்த சட்ட மற்றும் அறவழி ஆலோசனைகளைச் சொல்லுங்கள்:

பக்கத்து வீட்டில் இருப்பவர்களுடன் எங்களுக்கு பல ஆண்டுகளாக பேச்சு வார்த்தை இல்லை. ஒரு வகையில் அது நிம்மதியும் கூட... (வேண்டுமெனில் அதைப் பொதுவில் எழுதவும் தயங்க மாட்டேன்.)

விஷயம் என்னவெனில், எங்கள் வீட்டின் பின்புற காலி இடத்தில் சில மரங்கள் இருக்கிறது. அவற்றின் கிளைகள் பக்கத்து வீட்டில் எட்டிப் பார்க்கிறது. மரங்களுக்குத் தெரியுமா? இவர்கள் வேண்டியவர்கள்! இவர்கள் வேண்டாதவர்கள் என...

நாங்களே மரத்தின் கிளைகளைக் கழிக்க வேண்டும் என்றிருந்தோம். ஆனால் பாருங்கள்... எங்களுடைய அனுமதியில்லாமல், நாங்கள் கவனிக்காத பொழுது எங்களுடைய மரத்தின் கிளைகளை வெட்டிக் கூளமாக அப்படியே போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். அதில் இன்னும் சில குட்டி மரக் கன்றுகள் அழிந்துள்ளன. அமைதியான முறையில் எடுத்துக் கூறியும் அவர்கள் அடங்குவதாக இல்லை. திமிர் தனத்துடன் “அப்படித்தான் செய்வோம்” என்று சொல்லாமல், சொல்லுகிறார்கள். 
கத்தியை எடுத்துக்கொண்டு வந்து, அவர்களின் உறவினர் ஒருவர் எங்களை ‘வெட்டுவேன், குத்துவேன்’ என்றபோதும் ஒரு புன்னகையுடன் தான் கடந்து சென்றேன். கோவத்தில் இதெல்லாம் சகஜம்தான். ஆனால், மரத்தின் கிளைகளை வெட்டி நாசப்படுத்தும் போது என்னால் பொருக்க முடியவில்லை. 
இது சார்ந்து சட்ட ரீதியாக எப்படி அணுகுவது என்றும் எனக்குத் தெரியவில்லை! நான் இல்லாத நேரத்தில் என்னுடைய தாயார் தனியாக வீட்டில் இருக்கிறார். நான் ஏதேனும் பேசப்போய், தனியாக இருக்கும் அவர்களை ஏதேனும் செய்துவிட்டால் என்ன செய்வது!? அவர்களே உடல் நலம் இல்லாமல் பல நேரங்களில் மயங்கி கீழே விழுகிறார். 

அடுத்தவர்களின் வீட்டுக் காம்பவுண்ட் சுவரை இடிக்க வந்தால், திருட வந்தார்கள் என போலீசில் புகார் செய்யலாம். ஆனால் மரங்களை வெட்டினால் அப்படிச் செய்ய முடியுமா என்று தெரியவில்லை?
தொடர்ந்து மரங்களை வெட்டுவதும், கபளீகரம் செய்வதுமாக அவர்கள் தொந்தரவு செய்கிறார்கள். இது எனக்கான பிரச்சனை மட்டுமல்ல. ஒவ்வொரு தெருவிலும் இதுபோன்ற மக்கள் இருக்கிறார்கள். அவர்களை எப்படிச் சமாளிப்பது.
மரங்களை வெட்டுபவர்களுக்கு எதிராக அறவழியில் நின்று, இது போன்ற சமூக விரோதிகளுடன் போராட முடியுமா? அதற்காகக் குழு ஏதேனும் இருக்கிறதா? என்பதைப் பற்றி எனக்குத் தெரிய வேண்டும்.

சுற்றுச் சூழல் சார்ந்த இதுபோன்ற சிறு சிறு பிரச்சனைகளுக்கு பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், ஆக்டிவிஸ்ட், அரசியல்வாதிகள், நிருபர்கள் என பலருடைய கருத்தையும் நான் எதிர்பார்க்கிறேன். இலக்கியம் வாசித்து, இதயத்தில் அன்பை வழியவிடும் என்போன்றவர்கள் இவர்கள் மிகவும் சோதிக்கிறார்கள்.

ஆகவே, ப்ளீஸ்... உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லுங்கள்.

அதற்குக் கிடைத்த பின்னூட்டங்கள்: 

விமர்சகர் ஞாநி: உங்கள் வீட்டு மரத்தை உங்கள் அனுமதி இல்லாமல் வெட்டினாலும் போலீசில் புகார் செய்யலாம்.


மௌலி: போலிசில் புகார் தாருங்கள், இன்றை தேதி போலிசுக்குப் பக்கத்து வீட்டுக்காரரே மேல் என்ற எண்ணம் வந்துவிடும்

பிரகாஷ் ராஜகோபால்: சொந்த வீடாக இருந்தால், போலிசுக்குப் போவதை விட பேசித் தீர்ப்பதே சிறந்தது.இரு வீட்டுக் காரர்களும் பெரிதும் மதிக்கும் சான்றோர் / பெரியவர் ஒருவரை அழைத்து வந்து மத்யஸ்தம் செய்ய முயற்சிக்கலாம்.(பக்கச் சார்பற்ற உங்களின் நியாயத்தை அவர்களுக்குப் புரியவைக்க). பல பத்தாண்டுகள் தொடர்ந்து வாழப் போகும் இடத்தில், நட்பு பாராட்டாவிடினும், பகைமை உணர்வு தொடர்ந்து கொண்டே போவதைத் தவிர்க்கலாம்.

சுரேஷ் கண்ணன்: காவல் துறையில் புகார் அளிக்கும் முன் அவர்கள் வீட்டுப் பெரியவர்களை அணுகி உரையாடுவது நல்லது என்று தோன்றுகிறது.

Sa Na கண்ணன்: வர்கள் செய்வது தவறுதான். ஆனால், உங்கள் வீட்டு மரக்கிளை அவர்கள் வீட்டுப் பக்கம் செல்வதால் நிச்சயம் இலைகள் கீழே விழுந்து குப்பை உருவாகியிருக்கலாம். அவர்களுக்கு இது பிடிக்கவில்லை எனும்போது நீங்கள் அவர்களுக்கு ஏற்றமாதிரி மாறுவதுதான் நிம்மதியைக் கொடுக்கும். அவர்கள் வீட்டுப் பக்கம் கிளைகள் எதுவும் போகாமல் பார்த்துக்கொண்டால் பிரச்னை தீரும் என்று நினைக்கிறேன்.

விமர்சகர் ஞாநி:  //பக்கத்து வீட்டில் இருப்பவர்களுடன் எங்களுக்கு பல ஆண்டுகளாக பேச்சு வார்த்தை இல்லை. ஒரு வகையில் அது நிம்மதியும் கூட... (வேண்டுமெனில் அதைப் பொதுவில் எழுதவும் தயங்க மாட்டேன்.)// இதுதான் கிருஷ்ணபிரபு மற்றும் அவர் குடும்பத்தாரின் மனநிலை. இவர்களுக்கு பொது மனிதர், சான்றோர், பெரியவர்கள் எதுவும் உதவமுடியாது. போலீஸ்தான் சரி.

முத்துச்சாமி பழனியப்பன்: நீங்களே ஒரு ஆள் பிடித்து அவர்கள் வீட்டுப் பக்கமாகப் போகும் மரக் கிளைகளை வெட்டி விடுங்கள், மரத்திற்கு எந்தப் பக்கம் வளர வேண்டும் என அவர்களுக்கும் தெரியாது தான், சண்டைக்கு இழுக்க வேண்டும் என முடிவான பிறகு நீங்கள் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள், தயவு செய்து போலிசுக்கு போகவே வேண்டாம், சாட்சிக்காரன் கால்ல விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல், முடிந்தால் பெரிய கயிறு வாங்கி மரத்தை உங்கள் வீட்டுப் பக்கமாக இழுத்துக் கட்டுங்கள், பெரிய மரமாக இருந்தால் வளையாது தான், ஆனால் இது அந்த முட்டாள்களுக்கு புரியாது, நாம சொல்றத கேட்கிறார்கள் என்ற நினைப்பு வந்து விடும், கிட்டத்தட்ட சின்னப் பசங்களை ஏமாத்துற டெக்னிக் தான் இது, அப்புறமா பக்கத்துக்கு வீட்டுகாரங்ககிட்ட சும்மா கூட ஒரு வாய்ப்பேச்சு இல்லாம இருந்தா இப்படியெல்லாம் வரத் தான் செய்யும்..யாராவது பேச முயற்சி பண்ணனும், எனக்கு என்ன சொல்றது ன்னு தெரியல


கிருஷ்ணபிரபு: நண்பர்களே பின்னூட்டத்திற்கு நன்றி.

என்னுடைய அண்ணன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வக்கீலாக இருக்கிறார். “போலீஸ், நீதிமன்றம்” என்று செல்வதில் எனக்குப் பிரச்சனையே இல்லை. 
என்னுடைய எண்ணம் என்னவெனில், செய்த தவறை அண்டை வீட்டார் உணர வேண்டும். அதற்காக மண்டையைக் குத்திக் கொண்டு யோசித்தேன்.

பின்புறத்தில் இருக்கும் சிறிய தோட்டத்திற்கு “சிரிடி பாபா தோட்டம்” என்று பெயர் சூட்ட இருக்கிறேன். அவர்கள் குப்பையைக் கொட்டும் இடத்தை ஆட்களை வைத்துச் சுத்தம் செய்து, அந்த இடத்தில் சினிமா போஸ்டர் போன்ற பெரிய சைஸ் ‘சிரிடி பாபா’வின் ஆளுயர போஸ்டரை நட்டு வைக்க இருக்கிறேன். 
அதைப் பற்றிய பதிவினை விரைவில் வலையேற்றுகிறேன்.

# போலீஸ், கேஸ் என்று போனாலும் அதே செலவுதானே.  

Saturday, October 6, 2012

இளம் ஓவியர் முகில்

தொழில்முறையாக MindFresh எத்தனையோ பயிலரங்குகளை ஏற்பாடு செய்தாலும், என்னுடைய மனதிற்கு நெருக்கமான பட்டறை என்றால் Flying Elephants தான். இந்த Package முழுக்க முழுக்க டீன் ஏஜ் வயதுடையோருக்கானது. துரு துருவென்று சேட்டை செய்யும் பனிரெண்டு வயது மாணவர்கள் முதல், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கலென அழிட்சாட்யம் செய்யும் விடலைப் பருவத்தின் விளிம்பில் நிற்கும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வரை – எல்லா வகையினரையும் ஒன்றாக ஒரே இடத்தில் கட்டிப்போடுவது யார் ஒருவருக்குமே சிரமமான காரியம் தான். அதுவும் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை - நான்கு நாட்களுக்குத் தொடர்ந்து அவர்களுடைய கவனத்தைக் குவிக்கும்படி செய்யவேண்டும்.

நான்கு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் பயிலரங்கு என்பதால் காலாண்டு மற்றும் அரையாண்டு அல்லது முழு ஆண்டுப் பரீட்சை விடுமுறைகளில் தான் இந்தப் பட்டறையை ஏற்பாடு செய்ய முடியும். இதில் நுட்பமான இன்னொரு சிக்கலும் இருக்கிறது. வருடமெல்லாம் ‘படிப்ஸ் படிப்ஸ்’ என பள்ளிகள் வாட்டி வதைப்பதால், விடுமுறை நாட்களில் இதுபோன்ற இத்தியாதி பட்டறைகளுக்குக் குழந்தைகள் வரத் தயங்குவார்கள். அவர்களே விரும்பி வருவது மிகமிக அபூர்வம். பெற்றோர்கள் தான் வலுக்கட்டாயமாக கொண்டு வந்து சேர்ப்பார்கள். எந்தவித அழுத்தமும் இல்லாமல் விளையாடிக் களிக்க சிறுவர்கள் விரும்புவது இயல்புதானே.

முதல்நாள் காலையில் பெயர்களைச் சொல்லி பதிவு செய்யும் போது, குழந்தைகள் முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டு சோர்வுடன் இருப்பார்கள். பார்ப்பதற்கே ஹாஸ்யமாக இருக்கும். அவர்களை வயதிற்கு ஏற்றார்போல குழுவாகப் பிரித்து, ஓர் அலைவரிசையில் கொண்டு வந்து சேர்ப்பதற்குல்லாகவே முதல் நாள் சென்றுவிடும். அடுத்தடுத்த நாட்களில் குழந்தைகள் பட்டறையுடன் இரண்டறக் கலந்துவிடுவார்கள். கடைசி நாளில் பிரிவதற்கு மனமில்லாமல் கண்ணீர்விடும் குழந்தைகளும் உண்டு. இந்த முறையும் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக சாது எனக்குத் தெரியப்படுத்தினான்.

“யாருடா அது!” என்று கேட்டேன்.

“அதான் கிருஷ்ணா... தினமலர் சப் எடிட்டர் சேதுவோட பையன்” என்றான்.
“ஓ முகிலா...!” என்றேன்.

(கண்ணாடி போட்டுக்கொண்டு, திருநீர் வைத்துள்ளவர் தான் ஓவியர் முகில் கிருஷ்ணா)

முகில் எனக்கு அறிமுகமானதே வித்யாசமாக இருந்தது. பட்டறையின் முதல்நாளில் ஒரு சிறுவன் என்னிடம் நெருங்கி “அங்கிள்! இந்தப் பையன் என்ன நோண்டிக்கிட்டே இருக்கான் அங்கிள்! அவனக் கொஞ்சம் சும்மா இருக்கச் சொல்லுங்க” என்றான் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு அருகிலிருந்தவனைக் காண்பித்து.

“ஏன்டா சும்மா அவன தொந்தரவு செய்யுற?” என்றேன்.

“அங்கிள்... சும்மா விளையாடுனா கூட இவன் செய்ங்குனு அழுவுறான் அங்கிள்...” என்றான்.

“அது எப்படிடா சும்மாவே செய்ங்குனு அழுவான்... நீ இந்த நாலு நாளும் என்ஜாய் பண்ணுடா தங்கம். ஆனா யாரையும் டிஸ்டப் பண்ணக்கூடாது... சரியா?” என்றேன்.

“ஓகே அங்கிள்” என்றான்.

“சரி போகட்டும் நீ என்னடா படிக்கிற?” என்றேன்.

“அங்கிள்... தயவுசெய்து கிண்டல் பண்ணமாட்டேன்னு சொல்லுங்க? அப்பதான்  எந்த கிளாஸ்னு சொல்லுவேன்” என்றான்.

“இது என்னாடா டீலிங்... சும்மா சொல்லுடான்னா?” என வாய்விட்டுச் சிரித்தேன்.

“நான் எட்டாவது படிக்கிறேன் அங்கிள்” என்றான். ஆனால், பார்ப்பதற்கு ஆறாவது படிப்பது போன்ற தோற்றத்தில் இருந்தான். தோற்றத்திற்கு ஏற்றதுபோல செம துருதுரு. PhoniX குழுவின்  பயிற்றுநர்களான ஷோபாவையும், சாதுவையும் இரண்டில் ஒன்று பார்த்துவிட்டான். முகிலின் தனித் திறமை எனில் ஓவியம் வரைதல். பயிற்சியின் இரண்டாம் நாளில் ஓர் ஓவியம் வரைந்து கொண்டு வந்திருந்தான். அதைப் பார்த்து நானும் (தினேஷ்)ஆதியும் வாய் பிளந்தோம்.

பயிலரங்கம் முடிந்து வீட்டிற்குத் திரும்பும் சமயத்தில் தான் முகில் கண்கலங்கியிருக்கிறான். அதைத்தான் சாது என்னிடம் தெரியப்படுத்தினான். அதற்கு மறுநாள் ஜெயா என்னை அழைத்தாள். “டேய்... அந்தப் பையன் முகில் ஒரு ட்ராயிங் பண்ணியிருக்காண்டா! எவ்வளோ... நல்லா வரஞ்சி(யி)ருக்காண்டா!” என்றாள்.

“வொர்க் ஷாப்-லையே பார்த்தேன் ஜெயா...” என்றேன்.

“டேய்... இது Flying Elephants கான்செப்ட வச்சி அவனோட கற்பனையை வரைஞ்சி அனுப்பிச்சி இருக்காண்டா!” என்றாள்.

“தயவு செய்து எனக்கு அனுப்பிவை ஜெயா! நானும் பார்க்குறேன்...” என்ற அடுத்த நொடி என்னுடைய மின்னஞ்சலில் அட்டாச்மென்ட் ஃபைல் வந்து சேர்ந்தது. அதில் பயிற்சி வகுப்பைப் பற்றிய முகிலின் சில வார்த்தைகளும் இருந்தன...


Thank you for giving such a nice opportunity for coaching.
The coaching was very useful to me.
Unlike school it was a different experience.
I learnt many new things.
I will apply these in my daily life.
HEARTILY THANKING YOU
-MUGIL KARTHICK

இணையம் சார்ந்த வேலையை விட்டதே இதுபோன்ற சிறுசிறு சந்தோஷங்களுக்காகத் தான். அதைப் பூரணமாக அனுபவிக்கிறேன். அடுத்த டீன் வொர்க் ஷாப் நடைபெற இருக்கும் டிசம்பர் மாதத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். யார் கண்டது! இதைப் படிக்கும் உங்களுடைய குழந்தைகளையும் ஒருவேளை அங்கு சந்திக்க நேரலாம். ஏதேனும் ஒரு கலைவடிவத்தில்...

அடுத்த பயிலரங்கின் விவரம்:


Start:December 27, 2012 8:00 am
End:December 30, 2012 5:00 pm
Organizer:MindFresh
Phone:98409 27660
Email:contact@mindfresh.in
Venue: IITM Research Park, Hall 3
Address: Taramani, Near Tidel Park, Chennai, Tamil Nadu, 600113, India
Link: www.mindfresh.in/event/flying-elephants

Thursday, October 4, 2012

திருடன் போலீஸ்


ராயப்பேட்டை பென்ஷன் ஆபீசுக்குப் போய்விட்டு, அங்கிருந்து அங்கிள்-ஐ சந்திக்க  கீழ்ப்பாக்கம் சென்றிருந்தேன். இன்றைய தினம் பகல் நேரத்தில் கொளுத்திய வெயிலைச் சொல்லிமாளாது. ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்தபோது அங்கிள் சொன்னார்.

“ரெண்டு பெரிய வேலய இன்னிக்கி முடிட்சிட்டப்பா. நீ இல்லன்னா ரொம்ப கஷ்டப்பட்டிருப்பேன்பா. நீ நல்லா இருக்கணும்.”

ஒவ்வொரு மாதமும் அந்த இரண்டு வேலையை முடித்துவிட்டுத் திரும்பும்  பொழுதும் இதே வார்த்தைகளை அங்கிள் சொல்லுவார். பெரிதாக ஒன்றும் இல்லை. ATM-ல் இருந்து அவர் கேட்கும் தொகையை எடுத்துக் கொடுப்பேன். அப்படியே சூப்பர் மார்கெட் சென்று வீட்டிற்குத் தேவையான மளிகைப் பொருட்களை வாங்கி வருவோம். ஹப்பா... எவ்வளவு கடினமான பணி. இதை முடித்துவிட்டுத் தான் அந்த பேருந்து நிலையத்திற்குச் சென்றிருந்தேன்.
கோயம்பேடு பிளாட்ஃபா(ர்)ம் ஒரு பார்வையில் ஆங்கில எழுத்து “E வடிவில் இருக்கும். எப்பொழுது அங்கு சென்றாலும் அந்த “E வடிவை நான்கு முறையாவது சுற்றி வருவேன். நடைப் பயிற்சிக்கு நடைப் பயிற்சியும் ஆச்சு, பொழுதுக்குப் பொழுதும் போகும் இல்லையா?


நேற்றைய தினமும் அப்படித்தான் நடந்து கொண்டிருந்தேன். எனக்கே தெரியாமல் அந்த போலீஸ் என்னை பின் தொடர்ந்திருக்கிறார். ஒரு புள்ளியில் என்னை மடக்கி விசாரிக்க ஆரம்பித்தார்.

“நீ எந்த ஊருக்குப் போகணும்? நீ இங்க எப்ப வந்த?”

“நான் கும்மிடிபூண்டி செல்லும் வழியிலுள்ள கிராமத்துக்குப் போகணும். இங்க வந்து 2 மணி நேரம் ஆகுது...

“எங்க வேல செய்யுற?” என்றார்.

“வேல எதுவும் செய்யல. ராயப்பேட்டை பென்ஷன் ஆபீஸ் போயிட்டு ஊருக்குத் திரும்பி கொண்டிருக்கிறேன்.”

“அப்ப இங்க ஏன் ரொம்ப நேரமா சுத்திட்டு இருக்க? உன்ன கேமராவுல வாச் பண்ணிட்டாங்க! போலீஸ் ஸ்டேஷன்-கு கூட்டிட்டு வரச் சொல்லிட்டாங்க!” என்றார்
“சரி... வாங்க போகலாம்.”

“ப்ரூப் எதாச்சும் இருக்கா?” என்றார்.

“ஓ இருக்கே! இந்தாங்க என்னோட டிரைவிங் லைசென்ஸ். இதோ என்னோட வோட்டர்ஸ் ஐடி.”

“உன்னோட மொபைலைக் கொடு...” என்றதும் சற்றும் யோசிக்காமல் எடுத்துக் கொடுத்துவிட்டேன். அப்படியே “உன்ன பாத்தா சும்மா இருக்க மாதிரி தெரியலையே?” என்றார்.

“ஆமா... வீட்டில் இருந்தே வொர்க் பண்றேன். கொஞ்சம் தமிழில் எழுதுவேன்.”
“பைத்தியக்காரன் மாதிரி சுத்தச் சொல்லவே நெனச்சேன்... உங்களுக்கு எல்லாம் வெக்கமா இல்ல!? எவன் பின்னாடியாவது சுத்த வேண்டியது. அத அப்படியே எழுத வேண்டியது. இதுல உங்களுக்கு இன்னாயா கெடைக்குது. பல்லான மேட்டர்ல கூட உன்ன உட்கார வெக்க முடியும் தெரியுமா?”

அவ்வளோ எல்லாம் நான் வொர்த் இல்லை என்பதாக மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். நானும் போலீசும் நடந்து கொண்டிருந்தோம். ஸ்டேஷனுக்குத்தான் போகப் போகிறோம் என்று ஜாலியாகச் சென்று கொண்டிருந்தேன். காலியாக இருந்த பயணியர் இரும்பு இருக்கையில் உட்கார வைத்துக் கொண்டார்.

உன்னோட பேக்கில் (Bag) என்ன இருக்கு?என்றார்.

“ரெண்டு மூணு புத்தகங்கள்....” என்று அவரிடம் முதுகுப் பையை நீட்டினேன். உதாசீனமாக என்னைப் பார்த்தவர் “உங்களோட ரிலேஹான்ஸ் யாராவது வந்து தான் உங்களை கையெழுத்துப் போட்டுட்டு கூட்டிட்டுப் போகணும்” என்றார்.

“சரி என்னோட மொபைலைக் கொடுங்க என்னோட மருமகனை வரச் சொல்றேன்.”
“நீயே பொடிசு மாதிரி இருக்க?” என்றார்.

“சரி என்னோட அக்காவ வந்து கூட்டிட்டுப் போகச் சொல்றேன். இல்லன்னா என்னோட இன்னொரு கசின் வருவாரு...”

“எழுத்தாளர்னு சொல்ற... ஜர்னலிஸ்ட் யாரையும் தெரியாதா? அந்த வார்த்தைய சொல்லித் தானே மெரட்டுவிங்க...” என்றார்.

“ஓ... பாலபாரதியைத் தெரியுமே...! அவர வேனும்னாக் கூட கூப்புட்றேன்...” என்று சொல்லிவிட்டு, “பத்திரிகையாளராக அல்ல, ஓர் அண்ணனாக” என்பதை மனதில் நினைத்துக் கொண்டேன். அந்த போலீஸ் கடைந்தெடுத்த முட்டாள். நான் தமிழில் கொஞ்சம் எழுதுவேன் என்றுதானே சொன்னேன். ஜர்னலிஸ்ட் என்றா சொன்னேன். வார்த்தைகள்... வார்த்தைகள் ரொம்ப முக்கியம்.

சீருடைப் பணியாளர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. “சரி நீங்க போங்க...” என்று சொல்லிவிட்டு கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டார். எனக்கும் முகமெல்லாம் வியர்த்திருந்தது. சட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு நடக்கலானேன். 

# (மருமகன், ஜெயா, பாலபாரதி – இவங்க மூணு போரையும் போலீஸ் ஸ்டேஷனில் நிருத்தலாம்னு நெனச்சேன். ஜஸ்ட் மிஸ்...)

Wednesday, October 3, 2012

டீனேஜ் வொர்க் ஷாப்


கீர்த்தன்யாவின் நான்கு நாள் விடலைகள் பயிலரங்கிற்கு சென்னையின் பல பகுதிகளிலிருந்தும் – 12  வயது முதல் 17 வயது வரையுள்ள, கிட்டத்தட்ட 35 குழந்தைகள் வந்திருந்தனர். குழந்தைகளை கவனித்துக் கொள்ள அக்காவிடம் பகுதிநேர பயிற்றுனர்கள் (Coach) பலரும் இருக்கிறார்கள். குழந்தைகளைக் கண்காணிக்கும் பணியில் அமர்த்துபவர்களைப் பொறுத்தவரை அக்கா சமரசம் செய்துகொள்ளவே மாட்டாள். பொறுமைசாலிகளாகவும், கோவப் படாதவர்களாகவும், சமயோஜிதமாக நடந்து கொள்பவர்களாகவும் இருக்கவேண்டுமென எதிர் பார்ப்பாள். என்றாலும் சாதுவை அவர்களில் ஒருவராக வைத்துக் கொள்ளுமாறு நேரில் சந்திக்கும் ஒவ்வொரு தருணத்திலும் அக்காவை நச்சரித்துக் கொண்டிருந்தேன். முன்பொருமுறை சாது என்னிடம் பகிர்ந்ததுண்டு...

கிருஷ்ணா! எனக்கு 24 வயசாகுது. இது வரைக்கும் தொடர்ந்து 2 மணி நேரம் கூட ஒரே இடத்தில் உட்கார்ந்ததில்ல. “ஸ்கூல், காலேஜ், சினிமா தியேட்டர்” –ன்னு எல்லாத்துக்கும் இது பொருந்தும்  என்றான்.

சாதுவின் இயல்பைத் தெரிந்துதான் அக்காவிடம் பரிந்துரை செய்திருந்தேன். அக்கா, என்ன நினைத்தாளோ தெரியவில்லை! மறுப்பேதும் சொல்லாமல் சாதுவை எடுத்துக் கொண்டாள். பயிலரங்கின் மூன்றாம் நாளில் சாது மெல்ல என்னிடம் நெருங்கினான். “கிருஷ்ணா! எனக்குக் கடுப்பா இருக்கு! என்ன இங்க கொண்டுட்டு வந்து போட்டு ஏன் டார்ச்சர் பண்றிங்க!? என்னால முடியல!  இதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட பொருக்க முடியாது... இப்பவே...” என்று நற நறவென தாடைப் பற்களைக் கடிக்கப் போகிறான் என்றுதான் நினைத்தேன்.

மாறாக, “கிருஷ்ணா! ஐ லவ் திஸ் ஜாப்... ஐ லவ் திஸ் கிட்ஸ்” என காதோரம் கிசுகிசுத்துவிட்டு குழந்தைகளுடன் சேர்ந்து ‘Chamak Chalo’ சொல்லியவாறு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டான். வாண்டூஸ்களோ – இடுப்பை ஒடித்து வெட்டியவாறு, கால்களைத் தரையில் உதைத்து, கைகளைக் காற்றில் நீட்டி நடனமாடிக் கொண்டிருந்தனர். ஒருசிலர் கைகளையும், பின்புறத் தோளையும் பற்றி பனைமரம் போல அவனை பாவித்து ஏறிக் கொண்டிருந்தனர்.


வெளியில் நின்றிருந்த அக்காவிடம் “சாது எப்படி? ஓரளவிற்கு பரவாயில்லையா? உனக்கு சரியா இருப்பானா?” என்றவாறு பல கேள்விகளை எழுப்பினேன்.

“டேய் வீணாப்போனவனே!... MindFresh is not a place for me. It’s a perfect place for young kids. அவங்களுக்கு எது சரிப்பட்டு வருதோ – அத வச்சிக்க நான் தயங்கவே மாட்டேன். சாதுவிடம் ரொம்ப ஈஸியா கொழந்தைங்க SET ஆயிட்டாங்க... அதுக்கு மேல நான் முடிவெடுக்க என்ன இருக்கு...” என்றாள் பக்குவமாக. 

ஏழாவது படிக்கும் சிறுவன்/சிறுமி கூட “கீர்த்தன்யா... கீர்த்தன்யா...” என்று உரிமையுடன் ஏலம் போட்டுக்கொண்டு அக்காவைச் சுற்றிவரும் ரகசியம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். நான் சாதுவைச் சுட்டியவாறு நன்றிப் பெருக்குடன் அக்காவைப் பார்த்தேன். 

“டேய்... டேய்... ஓவர் ஆக்டிங் கொடுக்காத... ஒடம்புக்கு ஆகாது!” என்பதைப் போல நக்கலாகச் சிரித்துவிட்டு, கண்ணாடிக் கதவைத் திறந்துகொண்டு, குளிரூட்டப்பட்ட அறைக்குள் நுழைந்தாள். சக தோழியின் வருகையைக் கண்ட குழந்தைகளின் ஆரவாரக் குரல் ஒரே மூச்சில் வெளிப்பட்டு காதைப் பிளந்தது.

“கவனிக்கிறோம்” நண்பர்களுடனான சந்திப்பு ஏற்பாடாகியிருந்ததால், பட்டறையின் கடைசி நாளன்று குழந்தைகளுடன் பொழுதைக் கழிக்க முடியவில்லை என்பதில் மிகப் பெரிய வருத்தம். பின்னிரவில் சாதுவை செல்பேசியில் அழைத்தேன்.

“அடேய்... வொர்க் ஷாப் நல்லபடியா முடிஞ்சிதா?”

“அதை ஏன் கேக்குறீங்க கிருஷ்ணா!... சில கொழந்தைங்க அழுதுட்டாங்க...” என்றான்.

“ஏன்டா...? என்ன ஆச்சு?”
“Team -யும், Friends -யும் மிஸ் பண்றாங்க இல்ல... அதான்...!” என்றான்.

குழந்தைகளின் உலகம் அலாதியானது. அழுகையையும் சேர்த்துத் தான் சொல்கிறேன்.

:-( 

WebSite: www.mindfresh.in