Thursday, October 11, 2012

பாபா ஓர் சரணாலயம்


நீண்ட நாட்களாக வீட்டின் பின்புறமுள்ள காலி இடத்தில் குப்பையைக் கொட்டுகிறார்கள் பக்கத்து வீட்டினர். (சென்ற பதிவில் எழுதி இருந்தேனே... அவர்களே தான்... அத்துமீறி மரத்தை வெட்டிய அதே பக்கத்து வீட்டினர் தான்.) விசாரித்தால்  “வேறு யாரோ கொட்டுகிறார்கள் எங்களுக்குத் தெரியாது!” என்கிறார்கள். இத்தனைக்கும் வாரத்தின் மூன்று நாட்களில் குப்பையைச் சேகரிக்க, ஊர் பஞ்சாயத்து குப்பை வண்டியை ஏற்பாடு செய்துள்ளது. அவற்றில் கொண்டு குப்பையைக் கொட்டினால், வீட்டுக் கொள்ளையில் ஏதேனும் ‘மரம், செடி, கொடிகள்’ வளர்ந்து பூமி குளிர்ந்துவிடுமே.

ஆகவே, “இதோ பார் சர்மிளா! அவங்கள, நம்மோட மெனையில குப்பையைக் கொட்டுறத நிறுத்தச் சொல்லு! இல்லன்னா...!” என்றேன்.

“நான் சொன்னா கேப்பாங்களாடா?” என்று தயங்கினாள்.

“அடிப்பாவி! நம்ம சொல்லிக் கேக்குற மக்களா அவர்கள். அப்படிக் கேக்குறதா இருந்தா - மொதல்ல சொன்னதையே கேட்டிருப்பாங்க இல்ல. இப்போ நான் செய்யப் போறதே... வேற ஒரு விஷயம் – கவனமா கேளு... நைட்டெல்லாம் உட்கார்ந்து யோசித்தது...” என்றேன்.

“இன்னாடா செய்யப் போற? இதோ பாரு போலீசு கேசுன்னு போயிடாத!” என்றாள்.

“உனக்குக் கொஞ்சம் கூட அறிவே இல்லையா?! நம்ம என்ன அரசாங்க காண்ட்ராக்ட் எடுத்தா சம்பாதிச்சு இருக்கோம். இல்ல அரசாங்க வேலையில லஞ்சம் வாங்கி சம்பாதிச்சு இருக்கோமா? பணத்தை வாரி இறைக்க...!” என்றேன்.

“அப்போ! என்னடா பண்ணப் போற?” என்றாள்.

“அது ரொம்ப சிம்பிள்... நம்ம ஆர்டிஸ்ட் பாபு இருக்காரு இல்ல. அவருகிட்ட சொல்லி சிரிடி சாய்பாபா படத்தை 5  அடிக்கு, 3 அடி வரையச் சொல்லப் போறேன். அதுவும் மூணு படம் வரையச் சொல்லப் போறேன்.” என்றேன்.
ஆர்வமிகுதியில் “எதுக்குடா!?” என்றாள்.



“அவங்க எங்க குப்பையைக் கொட்டுறான்களோ – அந்த காம்பவுன்ட் அருகில் ஆர்டிஸ்ட் பாபு வரையிற படங்கள கொண்டு போயி நட்டு வைக்கப் போறேன். வீட்டின் பின்னாலுள்ள இருப்பிடத்தை “சிருடி பாபா தோட்டம்” என்று பெயர் சூட்டப் போகிறேன். அவங்க எந்த எடத்துல குப்பையைக் கொட்டிட்டு வராங்களோ... அந்த எடத்தப் பார்த்து கன்னத்துல போட்டுக்க வைக்கப் போறேன். கோர்ட்டு கேசுன்னு போனாலும் இதே செலவு தானே ஆகும்.” என்றேன்.

“டேய்... குப்பையில கொண்டு பாபா படத்த வைக்காத... பாவம் சுத்திக்கப் போகுது!” என்றாள்.

“அத்துமீறி மரத்த வெட்டுறதால சுத்தாத பாவமா - இதனால சுத்திக்கப் போகுது?” என்றேன். மேலும் எழுத்தானது சரஸ்வதி என்கிறார்கள். “இங்கு சிறுநீர் கழிக்காதே”  என்று எழுதுகிறார்கள். அங்குதான் நம்முடைய மக்கள் சிறுநீர் கழிக்கிறார்கள். அப்படியெனில் சரஸ்வதியின் தெய்வீகத் தன்மை குறைந்துவிடுமா!?

“நட்டு வச்ச பாபா படத்தாண்ட குப்பையைக் கொட்டுனா என்ன செய்வ?”
“அதுவும் சிம்பிள்... எனக்குத் தெரிஞ்சி கவரப்பேட்டையில ஒரு பாபா கோவில் இருக்கு... அங்கக் கொண்டுட்டு போயி படத்தைக் கொடுத்து, நடக்கப் போறதச் சொல்லுவேன்.” என்றேன்.

“என்னடா நடக்கப் போகுது?” என்றாள்.

“எங்க வீட்டாண்ட இந்தப் படங்கள நட்டு வச்சேன். ஆனா... யாரோ தினமும் இந்தப் படங்கலாண்ட குப்பையைக் கொட்டுறாங்க. எனக்குக் கஷ்டமா இருக்கு... உங்க கோவில்ல இந்தப் படங்கள வச்சிக்கிறிங்களான்னு” கேட்பேன்.

“யாரு அப்படி செஞ்சதுன்னு?” அவங்க ஒருவேளை கேட்டாங்கன்னா – “யாருன்னு தெரியல நண்பர்களே...! பக்த கோடிகள் எல்லாரும் எங்க வீட்டுக்கு ஒருநாள் விருந்துக்கு வரணும். பாபாவின் பக்தர்களை நான் உபசரிக்கணும்” என அழைப்பு விடுத்துவிட்டு வருவேன் என்றதும் சர்மிளா சிரித்தாள்.

அந்த சிரிப்பிற்கு அர்த்தம் இருக்கிறது. ஏனெனில் குப்பையைக் கொட்டியவர்கள் அந்தக் கோவிலின் மூலையில் என்றேனும் அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்யும் பொழுதும், மலர்களைத் தூவி வணங்கும் பொழுதும் துர்நாற்றம் அவர்களின் மூக்கைத் துளைக்கும். அவர்கள் உண்மையான சிரிடி பாபாவின் பக்தர்களாக இருந்தால்...

 “அந்நியர்களிடம் அன்பாய் இரு” என்பது தான் சிரிடி பாபாவின் முக்கியக் கோட்பாடு. “காட்டுமிராண்டித் தனமாக அடுத்தவர்கள் உங்களை வதைத்தாலும் பொறுத்துக் கொள்ளுங்கள்” என்பார். அந்த மகானை குப்பையோடு குப்பையாக நட்டு வைக்கும்படியும், என்னைக் காட்டுமிராண்டியாகவும் மாற்றப் போவது அதே பாபாவின் பக்தர்கள் தான்.

1. பண பலமும், அதிகார பலமும் சார்ந்து காவல் துறையின் சார்பு ஒருவேளை உண்மைக்கு எதிராகச் சாயலாம். ஒரு பக்கமாக துணை நிற்கலாம்.

2. அதே “பண பலமும், அதிகார பலமும்” உற்பத்தி செய்யும் பொய் சாட்சிகளின் மூலமும் - உண்மைக்குப் புறம்பாகப் பேசுதலின் மூலமும் நீதித்துறையின் சார்பு ஒருவேளை உண்மைக்கு எதிராகச் சாயலாம்.

மேற்கண்ட இரண்டின் மூலமும் உளுத்துப் போகச் செய்யும் உண்மைத் தன்மையினை - மனிதர்களின் உளவியல் மையத்தினை தகர்க்கும் பொழுது வாய்மையை நிலை நாட்டலாம் என்று நினைக்கிறேன்.

என்னடா இப்படி கீழ் தரமாக யோசிக்கிறோமே என்று எனக்குக் கொஞ்சமும் வருத்தம் இல்லை. “அரசியல் பலமும், பண பலமும்” இருக்கிறது என்ற கர்வத்தில்  “எதை வேண்டுமானாலும் செய்யலாம்! எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம்! பகையுடன் அடுத்தவர்களை உருட்டி விளையாடலாம்!” என்றிருப்பவர்களுக்கு, அவர்களின் உளவியல் கூறுகளைத் தகர்ப்பதின் மூலம் தான் பாடம் புகட்ட முடியும். இந்தச் செயலைச் செய்யப் போவதின் மூலம் நரகத்தில் எனக்கான இடத்தை ஆன்மீகவாதிகள் ஒதுக்கி வைக்கலாம். அதனை புன்சிரிப்புடன் ஏற்றுக் கொள்வேன். அதைப் பற்றி எனக்குக் கொஞ்சமும் கவலை இல்லை. வீட்டைச் சுற்றிலும் மைக்கா கவர் இல்லாத, குப்பைக் கூளங்கள் இல்லாத, காற்றில் சுதந்திரமாக கிளை விறித்தாடும் பச்சைப் பசேல் சுற்றமும் இருந்தால் போதும். இதைத் தவிர்த்து வேறெந்த சொர்க்கமும் எனக்கு வேண்டாம். பூவுலகின் நண்பனாக இருத்தலே எனக்கு அத்ம திருப்தி தான்..

“அக்காவைத் தூது அனுப்பி இருக்கிறேன்”. அவள் கொண்டு வரும் செய்தியைப் பொறுத்துத்தான் மற்றதையெல்லாம் யோசிக்கவேண்டும்.


பாபா ஓர் சரணாலயம் - அவன்
பாதங்கள் கமலாலயம்


# பொறந்த கொழந்தையையே குப்பைத் தொட்டியில் போடும் அவலம் இருக்கும் நம்முடைய சுற்றத்தில், வரைந்த ஆன்மீகவாதியின் படத்தை குப்பைக்கு நடுவில் நட்டு வைத்தால் குடியா முழுகிவிடும். கௌண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்...    

No comments:

Post a Comment