நான்கு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் பயிலரங்கு என்பதால் காலாண்டு மற்றும் அரையாண்டு அல்லது முழு ஆண்டுப் பரீட்சை விடுமுறைகளில் தான் இந்தப் பட்டறையை ஏற்பாடு செய்ய முடியும். இதில் நுட்பமான இன்னொரு சிக்கலும் இருக்கிறது. வருடமெல்லாம் ‘படிப்ஸ் படிப்ஸ்’ என பள்ளிகள் வாட்டி வதைப்பதால், விடுமுறை நாட்களில் இதுபோன்ற இத்தியாதி பட்டறைகளுக்குக் குழந்தைகள் வரத் தயங்குவார்கள். அவர்களே விரும்பி வருவது மிகமிக அபூர்வம். பெற்றோர்கள் தான் வலுக்கட்டாயமாக கொண்டு வந்து சேர்ப்பார்கள். எந்தவித அழுத்தமும் இல்லாமல் விளையாடிக் களிக்க சிறுவர்கள் விரும்புவது இயல்புதானே.
முதல்நாள் காலையில் பெயர்களைச் சொல்லி பதிவு செய்யும் போது, குழந்தைகள் முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டு சோர்வுடன் இருப்பார்கள். பார்ப்பதற்கே ஹாஸ்யமாக இருக்கும். அவர்களை வயதிற்கு ஏற்றார்போல குழுவாகப் பிரித்து, ஓர் அலைவரிசையில் கொண்டு வந்து சேர்ப்பதற்குல்லாகவே முதல் நாள் சென்றுவிடும். அடுத்தடுத்த நாட்களில் குழந்தைகள் பட்டறையுடன் இரண்டறக் கலந்துவிடுவார்கள். கடைசி நாளில் பிரிவதற்கு மனமில்லாமல் கண்ணீர்விடும் குழந்தைகளும் உண்டு. இந்த முறையும் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக சாது எனக்குத் தெரியப்படுத்தினான்.
“யாருடா அது!” என்று கேட்டேன்.
“அதான் கிருஷ்ணா... தினமலர் சப் எடிட்டர் சேதுவோட பையன்” என்றான்.
“ஓ முகிலா...!” என்றேன்.
(கண்ணாடி போட்டுக்கொண்டு, திருநீர் வைத்துள்ளவர் தான் ஓவியர் முகில் கிருஷ்ணா)
முகில் எனக்கு அறிமுகமானதே வித்யாசமாக இருந்தது. பட்டறையின் முதல்நாளில் ஒரு சிறுவன் என்னிடம் நெருங்கி “அங்கிள்! இந்தப் பையன் என்ன நோண்டிக்கிட்டே இருக்கான் அங்கிள்! அவனக் கொஞ்சம் சும்மா இருக்கச் சொல்லுங்க” என்றான் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு அருகிலிருந்தவனைக் காண்பித்து.
“ஏன்டா சும்மா அவன தொந்தரவு செய்யுற?” என்றேன்.
“அங்கிள்... சும்மா விளையாடுனா கூட இவன் செய்ங்குனு அழுவுறான் அங்கிள்...” என்றான்.
“அது எப்படிடா சும்மாவே செய்ங்குனு அழுவான்... நீ இந்த நாலு நாளும் என்ஜாய் பண்ணுடா தங்கம். ஆனா யாரையும் டிஸ்டப் பண்ணக்கூடாது... சரியா?” என்றேன்.
“ஓகே அங்கிள்” என்றான்.
“சரி போகட்டும் நீ என்னடா படிக்கிற?” என்றேன்.
“அங்கிள்... தயவுசெய்து கிண்டல் பண்ணமாட்டேன்னு சொல்லுங்க? அப்பதான் எந்த கிளாஸ்னு சொல்லுவேன்” என்றான்.
“இது என்னாடா டீலிங்... சும்மா சொல்லுடான்னா?” என வாய்விட்டுச் சிரித்தேன்.
“நான் எட்டாவது படிக்கிறேன் அங்கிள்” என்றான். ஆனால், பார்ப்பதற்கு ஆறாவது படிப்பது போன்ற தோற்றத்தில் இருந்தான். தோற்றத்திற்கு ஏற்றதுபோல செம துருதுரு. PhoniX குழுவின் பயிற்றுநர்களான ஷோபாவையும், சாதுவையும் இரண்டில் ஒன்று பார்த்துவிட்டான். முகிலின் தனித் திறமை எனில் ஓவியம் வரைதல். பயிற்சியின் இரண்டாம் நாளில் ஓர் ஓவியம் வரைந்து கொண்டு வந்திருந்தான். அதைப் பார்த்து நானும் (தினேஷ்)ஆதியும் வாய் பிளந்தோம்.
பயிலரங்கம் முடிந்து வீட்டிற்குத் திரும்பும் சமயத்தில் தான் முகில் கண்கலங்கியிருக்கிறான். அதைத்தான் சாது என்னிடம் தெரியப்படுத்தினான். அதற்கு மறுநாள் ஜெயா என்னை அழைத்தாள். “டேய்... அந்தப் பையன் முகில் ஒரு ட்ராயிங் பண்ணியிருக்காண்டா! எவ்வளோ... நல்லா வரஞ்சி(யி)ருக்காண்டா!” என்றாள்.
“வொர்க் ஷாப்-லையே பார்த்தேன் ஜெயா...” என்றேன்.
“டேய்... இது Flying Elephants கான்செப்ட வச்சி அவனோட கற்பனையை வரைஞ்சி அனுப்பிச்சி இருக்காண்டா!” என்றாள்.
“தயவு செய்து எனக்கு அனுப்பிவை ஜெயா! நானும் பார்க்குறேன்...” என்ற அடுத்த நொடி என்னுடைய மின்னஞ்சலில் அட்டாச்மென்ட் ஃபைல் வந்து சேர்ந்தது. அதில் பயிற்சி வகுப்பைப் பற்றிய முகிலின் சில வார்த்தைகளும் இருந்தன...
Thank you for giving such a nice opportunity for coaching.
The coaching was very useful to me.
Unlike school it was a different experience.
I learnt many new things.
I will apply these in my daily life.
HEARTILY THANKING YOU
-MUGIL KARTHICK
இணையம் சார்ந்த வேலையை விட்டதே இதுபோன்ற சிறுசிறு சந்தோஷங்களுக்காகத் தான். அதைப் பூரணமாக அனுபவிக்கிறேன். அடுத்த டீன் வொர்க் ஷாப் நடைபெற இருக்கும் டிசம்பர் மாதத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். யார் கண்டது! இதைப் படிக்கும் உங்களுடைய குழந்தைகளையும் ஒருவேளை அங்கு சந்திக்க நேரலாம். ஏதேனும் ஒரு கலைவடிவத்தில்...
அடுத்த பயிலரங்கின் விவரம்:
Start:December 27, 2012 8:00 am
End:December 30, 2012 5:00 pm
Organizer:MindFresh
Phone:98409 27660
Email:contact@mindfresh.in
Venue: IITM Research Park, Hall 3
Address: Taramani, Near Tidel Park, Chennai, Tamil Nadu, 600113, India
Link: www.mindfresh.in/event/flying-elephants
No comments:
Post a Comment