Friday, January 24, 2014

காலச்சுவடும் நானும் – புத்தகக் கண்காட்சி 2014


அன்றொருநாள் காலச்சுவடு கண்ணன் செல்பேசியில் அழைத்திருந்தார். எப்பொழுதும் போல சரமாரியாகத் திட்டப்போகிறார் என்றுதான் நினைத்தேன். “பிரபு... ராயப்பேட் உட்லேண்ட்ஸ் ஹோட்டல் வந்துடங்களேன்... கொஞ்சம் பேசணும்” என்றார். இது நடந்தது டிசம்பர் (2013) மாதத்தின் இரண்டாவது வாரம். 

“நமக்கென்ன வேலையா...! வெட்டியா...! ஓக்க்க்க்கே பார்க்க்க்க்கலாமே...” என்று கண்ணனைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன். விடுதியின் பழமையான தோற்றத்தில் அமைந்திருக்கும் வரவேற்பறையில் அமர்ந்திருந்தேன். பறவைகளின் கூச்சல்களும் கூக்குரல்களும் சொல்லமுடியாத மனமகிழ்வைப் பிரவாகம் செய்தன. இடையிடையே காலச்சுவடு கண்ணனின் குரல் உப்புக் காகிதத்தை இரும்புத் தகரத்தில் தேய்த்தது போன்ற அசௌகரியத்தை ஏற்படுத்தும் அசரீரி போல ஒலித்துக் கொண்டிருந்தன.

“பிரபு... ஒரு வேலையக் கொடுத்தா ஒழுங்கா செய்யிறீங்களா... பெண்டிங் பெண்டிங் பெண்டிங்...” - இப்படி ஏதாவது அவரும் சொல்ல, நானும் கேட்க, இரண்டு வருட நட்பு ஓடிக்கொண்டிருக்கிறது. “ஸ்கூல் டேசிலிருந்து இதுபோன்ற வசைகளெல்லாம் நமக்கு சகஜம் தானே...!” என்றவாறு மனதினைத் தேற்றிக் கொண்டு ரிசப்ஷனில் அமர்ந்திருந்த பொழுது, “வாங்க பிரபு... ரொம்ப நேரமா வெயிட் பன்றீங்க போல?” என்ற குரல் கேட்டதும் தான் சுதாரித்தேன்.

“January month – Book Expo (2014) வருது இல்ல... அதப்பத்தி பேசத் தான் கூப்பிட்டேன்...” என்றவாறு சிரித்தார் கண்ணன்.

“ஒருக்கா(ல்) நம்மள கவித எழுதச் சொல்லுவாரோ...! ஒருக்கா(ல்) நம்மள நாவல் எழுதச் சொல்லுவாரோ...! ஒருக்கா(ல்) நம்மள சிறுகதை எழுதச் சொல்லுவாரோ...! சொக்கா அவார்டு உனக்குத் தாண்டே....! அடுத்த சோ. டி. குரூஸ் நீ தாண்டே...!” என்பது போல மனசு றெக்கை கட்டிப் பறந்தது.

“Book Expo-ல நம்ம காலச்சுவடு பதிப்பகம் ஸ்டால் போடுவோம் இல்ல...” என்று பேசத் தொடங்கினார்.

“சரி மேட்டருக்கு வாங்க. சீக்கிரம்... சீக்கிரம்... கவிதையா? நாவலா? சிறுகதையா? எல்லாத்துக்கும் நான் ரெடி... சொக்கா அவார்டு உனக்குத் தாண்டே....!” என்பது போல மறுபடியும் மறுபடியும் மனசு றெக்கை கட்டிப் பறந்தது.

“காலச்சுவடு ஸ்டாலுக்கு இலக்கியம் தேடிட்டு வர யூத்ஸ் – எந்த மாதிரி புக்ஸ் தேடிட்டு வராங்க... எந்த மாதிரி புக்ஸ் செலக்ட் பண்றாங்கன்னு – புத்தகக் கண்காட்சி நடக்கற எல்லா நாளும் ஒரு ரிசர்ச் பண்ணனும்... அந்த ரிசர்ச் வேலைய நீங்க தான் பண்ணனும்...!” என்றார்.

நான் அமர்ந்திருந்த இடம் விரிசல் கண்டு, உட்கார்ந்திருந்த நாற்காலி நழுவி, பாதாள இருளின் கதகதப்பான வெளியில் தள்ளப்பட்டு, ஆயிரம் கைகள் கொண்ட அசுரக் கடவுள் என்னை கசக்கிப் பிழிவது போல உணர்ந்தேன். தொண்டையில் எச்சில் இறங்கவில்லை. சுதாரித்துக் கொண்டு, கண்ணனைப் பார்த்துச் சொன்னேன்:

“அய்யய்ய... இந்த மாதிரி வொர்க் செய்யுறது எல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராதுங்க கண்ணன்... அதெல்லாம் படிச்ச பசங்க பண்றது... ஏதோ கவுஜை, நோவுல்னு ஏதாச்சும் ஈசியான விஷயத்த கான்ட்ரிபியூட் பண்ணச் சொல்லுவீங்கன்னு பார்த்தா(ல்)... நீங்க என்னடான்னா ஆச காட்டி மோசம் பண்றீங்களே...! யாராச்சும் எஜூகேட்ஸ் இருந்தா(ல்) அவங்ககிட்ட அப்ப்ரோச் பண்ணி, இந்த மாதிரி கசடா புசடா வேலையக் கொடுங்க...” என்றது மட்டுமல்லாமல் “நமக்குத் தொழில் எழுத்து” என்பதைக் கூறாமல் கூறினேன்.

“யூத்ஸ் என்ன மாதிரி இலக்கியம் படிக்கிறாங்க?”-ன்னு “ஒரு யூத் ரிசர்ச் பண்ணா நல்லா இருக்கும்”-ன்னு எனக்குத் தோணுது. “அதா(ன்) உங்கக்கிட்ட இந்த அசைன்மென்ட்டக் கொடுக்கறேன்” என்றார்.

அடடா... பலவீனம் பார்த்து மனிதர் அடிக்கிறாரோ என்ற சந்தேகம் ஒருபுறம் இருந்தாலும், எதற்கும் இருக்கட்டுமே என்று தலையாட்டிக் கூறிவிட்டேன்: “சரி... நான் செய்யறேன். ஆனா, இந்த ரிசர்ச் எதுக்குன்னு தெரிஞ்சிக்கலாங்களா?”

“பாருங்க பிரபு... ஒரு பழமொழி சொல்லுவாங்க... உங்களுக்குத் தெரியுங்களா?” என்றார்.

“சொல்லுங்களேன்... தெரிஞ்சிக்கிறேன்...” என்றேன்.

“எச்சி எ(இ)லய எடுக்கச் சொன்னா – எத்தன பேர் சாப்பிட்டாங்கன்னு கேக்கக் கூடாது. சொல்றத செய்யணும்” என்றார். “ஓக்க்க்க்கே... நீங்க பழமொழி எல்லாம் சொல்லி இவ்வளோ பாராட்டி பேசுறீங்க. யூத்துன்னு வேற என்னை நம்பிட்டு இருக்கீங்க... அதனால கண்டிப்பா செய்யிறேன்...” என்றேன்.

சிங்கம் போல சுற்றிக் கொண்டிருந்தவனை காலச்சுவடு கண்ணன் சிறையிலடைத்தது இப்படித்தான். சென்னை புத்தகக் கண்காட்சியின் (2014) ஒவ்வொரு நாளும் காலச்சுவடு அரங்கிற்கு (Stall) வரும் இளைஞர்களின் பின்னால் ஓடிக் கொண்டிருந்ததும் இதனால் தான். அப்பப்பா...! ஏறக்குறைய ஆயிரம் நண்பர்களிடம் பேசியிருக்கிறேன். மலைப்பாகத் தான் இருக்கிறது.

ஆனால், ஒரு விஷயத்தைக் கண்ணனிடம் தெளிவாகக் கூறியிருந்தேன்: “எனக்கு ஒரு ரேக்கின் சில பகுதிகள் வேணும் கண்ணன். அதில், சில புத்தகங்களை வைத்துக் கொண்டு – புத்தகங்களின் சிறப்பு பற்றியும், அந்தந்த எழுத்தாளர்களின் அளப்பரிய இலக்கிய பங்களிப்புகளைப் பற்றியும் - காலச்சுவடு ஸ்டாலிற்கு புத்தகங்களைத் தேடிக்கொண்டு வரும், சக (இளம்) வாசகர்களிடம் பேசவேண்டும்.” என்றேன்.

“நான் கொடுத்த வேலைய ஒழுங்கா செஞ்சிட்டு... பிறகு எதை வேணும்னாலும் பண்ணுங்க...” என்றார் கண்ணன். மேலும் “யார் யாரு... அந்த ரைட்டர்ஸ்...?” என்றும் கேட்டார்.

“அது சஸ்பென்ஸ்...! ஆல்சோ கண்ணன் உங்களோட பந்திக்கு நான் வரல... என்னோட பந்திக்கு நீங்களும் வரக்கூடாது...” என்றேன்.

“நான் சொன்ன பழமொழிய நாசூக்கா - எனக்கே சொல்லிக் காமிக்கிறீங்களா பிரபு?” என்றார்.

“I donna mean it” என்றேன் தோள்களைக் குளுக்கியவாறு, சிரித்துக்கொண்டே.

“இங்கிலீசு... நீங்க Book Fair-ல யூத்ஸ் கிட்ட பேசப் போறீங்க. பேச்சைக் கொஞ்சம் அடக்கி பேசக் கத்துக்கோங்க... பின்னாடி ஹாஸ்பிடல் ட்ரீட்மென்ட்டுன்னு வந்தா அதுக்கும் நான் பொறுப்பு இல்ல...” என்றார் கண்ணன்.

“அத நான் பாத்துக்கறேன். நீங்க கவலைப் படாதீங்க... சென்னை புக் ஃபேர்ல மீட் பண்ணலாம்.” என்று எழுந்துகொண்டேன். “க்கும்... இந்த பந்தாவுக்கெல்லாம் ஒன்னும் கொறை இல்ல... ஆனா, செயல்ல தான் ஒன்னுத்தையும் காணோம்...” என்றார் குத்தலாக.

ஏறக்குறைய அறுநூறு தலைப்பிலான புத்தகங்கள் காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் வெளிவந்துள்ளன. மீள்பதிப்பு புத்தகங்களைச் சேர்க்காமல் – சுமார் 60 புதிய புத்தகங்கள் இந்த வருடம் காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் வெளியீடு கண்டுள்ளன. எந்தெந்த எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுப்பது என்பதில் ஆரம்பத்தில் கொஞ்சம் போல சிரமம் இருந்தது. முதலில் “பெருமாள் முருகன்” தான் நினைவிற்கு வந்தார். பின்னர் “கவிஞர் சுகுமாரன்”. அதன்பின் ஆ. ரா. வெங்கடாசலபதி. வைக்கம் முகமது பஷீரின் படைப்புகளைத் தொடர்ந்து மொழிபெயர்த்த “குளச்சல் மு யூசுப்”. உலக இலக்கியங்களைத் தொடர்ந்து தமிழுக்குக் கொண்டுவரும் “ஜி. குப்புசாமி” மற்றும் மொழி பெயர்ப்பாளர் “எம். எஸ்”. போலவே, கட்டுரையாளர் “பி. ஏ. கிருஷ்ணன்”.


எனினும் பெருமாள் முருகனுடைய இரண்டு நாவல்கள், ஜி குப்புசாமியின் தொடர் உலக இலக்கிய மொழி பெயர்ப்புகள், குளச்சல் யூசுப்பின் மலையாள மொழிமாற்றங்கள் பற்றியும் தான் புத்தகச் சந்தைக்கு வரும் நண்பர்களிடம் ஓரிரு தகவல்கள் பகிரவேண்டும் என்றிருந்தேன். அந்த நேரத்தில் தான், மத்திய சாகித்ய அகாடமி விருதுக்கு - ஜோ. டி குரூஸின் படைப்பான கடல் வாழ் பரதவர்களின் சிக்கல் மிகுந்த வாழ்வைப் பிரதிபலித்த, காலச்சுவடு பதிப்பகத்தில் வெளியீடு கண்ட கொற்கை நாவல் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது என்ற மகிழ்ச்சிகரமான அறிவிப்பு வெளியானது. ஆகவே தோப்பில் முகமது மீரானையும் (ஒரு கடலோர கிராமத்தின் கதை, சாய்வு நாற்காலி), புனத்தில் குஞ்சப்துல்லாவையும் (மீஸான் கற்கள்) துணைக்குச் சேர்த்துக்கொண்டேன். எனக்குத் தேவையான காலச்சுவடு புராடக்ஸ் பிரம்மாதமாக அமைந்தது. மத்திய சாகித்ய அகாடமி விருது பெற்ற படைப்புகளான “கொற்கை, சாய்வு நாற்காலி, மீஸான் கற்கள், செம்மீன்” ஆகிய படைப்புகளை ஓர் அடுக்கிலும், நோபல் மற்றும் புக்கர் விருது பெற்ற படைப்பாளிகளின் மொழிபெயர்ப்புகளை மற்றொரு ரேக்கிலும் எடுத்து வைத்துக் கொண்டேன்.

“கொற்கை”க்காக 2013 ஆம் ஆண்டு “ஜோ.டி. குரூஸ்” சாகித்ய அகாடமி பெற்றிருக்கிறார் எனில், “சாய்வு நாற்காலி”க்காக 1997-ஆம் ஆண்டு “தோப்பில் முகமது மீரான்” மத்திய சாகித்ய விருது பெற்றிருக்கிறார். இந்நாவல் கடற்கரையோர தமிழக கிராமத்தின் இஸ்லாமிய நிலச்சுவான்தார் ஒருவனின் வாழ்வியல் சரிவை முன்வைக்கும் பிரதி. குடும்பத்து முன்னோர்களின் பெருமையைப் பேசிக்கொண்டு, யதார்த்த வாழ்வினை விரலிடை மணலாக நழுவவிடும் கதையம்சம் கொண்ட நாவல். இது அவனுடைய கடந்தகால காம இச்சை நினைவுகள், நிகழ்கால யதார்த்த வாழ்வியல் சிக்கல் மற்றும் சிற்றின்பத்தில் திளைக்க விரும்பும் அவனது ஆழ்மான எண்ணங்களை முன்வைத்து நகரும் நாவல். போலவே, 1980-களின் ஆரம்ப ஆண்டுகளில் “ஸ்மாரக சிலகள்” என்ற மலையாள நாவலுக்காக எழுத்தாளர் புனத்தில் குஞ்சப்துல்லா கேரள சாகித்ய அகாடமி மற்றும் மத்திய சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறார். இந்த மலையாள நாவலை தமிழில் மொழிபெயர்த்தால் சிறப்பாக இருக்கும் என எழுத்தாளர் ஜெயமோகன் – குளச்சல் மு யூசப்பிடம் பரிந்துரை செய்திருக்கிறார். இந்நாவலும் கேரள கடற்கரையோர இஸ்லாமிய நிலச்சுவாந்தார் ஒருவனையும், அவனைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்வியலையும் சித்தரிக்கும் நாவல். இது “மீஸான் கற்கள்” என தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.


பெருமாள் முருகனின் “கூள மாதாரி” ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு, 2004 ஆம் ஆண்டு க்ரிமா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட புத்தகம். ஆசிய பிராந்திய மொழிகளின் – மொழியாக்கம் செய்யப்பட்ட சுமார் 200 நாவல்களிலிருந்து, அந்த வருடத்தின் கடைசி சுற்றுக்குத் தகுதிபெற்ற முதல் ஐந்து நாவல்களில் கூள மாதாரியும் ஒன்று. இந்நாவல் கிராமம் ஒன்றின் ஆடு மேய்க்கும் பதின் பருவத்து சிறுவர், சிறுமியர் பற்றிய கதை. முழுநாவலுமே களத்து மேட்டில் பயனிக்குமாறு பெருமாள் முருகன் கட்டமைத்திருப்பார். போலவே நிழல்முற்றம் டூரிங் டாக்கிஸ் ஒன்றின் வளரிளம் பருவத்து கூலித் தொழிலாளிகளின் கதை. இரண்டு நாவலுமே பதின்பருவத்து உடல்சார்ந்த சிக்கல், வாழ்வியல் சிக்கல் மற்றும் அந்த பருவத்திற்கே உரிய கேளிக்கைகள் என நுட்பமான விஷயங்களை பதிவு செய்து காட்சிகளாக விரியும் படைப்புகள். இளம் வாசகர்களிடம் பேசும்பொழுது, அவர்கள் கடந்துவந்த பருவத்தின் வாழ்வியல் சம்பவங்களைப் பதிவு செய்த படைப்புகளைப் பற்றிப் பேசினால் நன்றாக இருக்கும் என்பதால் இவ்விரண்டு நாவல்களையும் முதலிலேயே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அதுவுமில்லாமல் பெருமாள் முருகன் தமிழின் கொண்டாடப்பட வேண்டிய மிகமிக மிகமிக முக்கியமான எழுத்தாளர் என்பது என் எண்ணம். சிலபல காரணங்களால் முக்கியமான படைப்பாளிகள் பரவலாக அறியப்பட்ட விருதுக் குழுக்களால் அடையாளப் படுத்தாமல் போகும் சூழலில் – அதுபோன்ற முக்கியமான தமிழ் ஆளுமைகள் விளக்கு விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப் படுகிறார்கள். அந்த வகையில் 2013-ஆம் ஆண்டின் விளக்கு விருது பெருமாள் முருகனுக்கு வழங்கப்பட்டுள்ளது. (இதற்கு முந்திய ஆண்டு இலங்கை எழுத்தாளர் நுஃமானுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முறையே கவிஞர் விக்கிரமாதித்யன், எழுத்தாளர் திலீப்குமார் என பின்னோக்கி வரிசை நீளும்.)

அடுத்ததாக ஜி குப்புசாமி. இவரைப் பற்றி என்ன சொல்ல!. கடுமையான உழைப்பாளி. உலக அளவில் பரவலாக அறியப்படும் தற்கால நவீன உலக இலக்கியப் படைப்புகளை தமிழுக்குக் கொண்டுவரும் முக்கியமான பணியைச் செய்து வருகிறார். புக்கர் பரிசு பெற்ற படைப்புகளான அருந்ததிராயின் “The God Of Small Things” மற்றும் ஜான் பான்விலின் “The Sea” ஆகியவற்றை “சின்ன சின்ன விஷயங்களின் கடவுள், கடல்” என மொழியாக்கம் செய்திருக்கிறார். போலவே 2006-ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெற்ற ஓரான் பாமுக்கின் “My Name Is Red & The Snow” ஆகிய நாவல்களை “என் பெயர் சிவப்பு & பனி” என மொழிமாற்றம் செய்திருக்கிறார். எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் பரிந்துரையால் தான் “என் பெயர் சிகப்பு” நாவலை மொழிபெயர்க்கும் எண்ணம் வந்தது என ஜி. குப்புசாமி புத்தகத்தின் முன்னுரையில் கூட நினைவு கூர்ந்திருக்கிறார். மேலும் “இஸ்தான்புல்” என்ற பாமுக்கின் அடுத்த நாவலையும் தமிழுக்குக் கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறார். மேலேயுள்ள ஒவ்வொரு புத்தகத்தின் பின்னணியிலும் அவரது கடும் உழைப்பு இருக்கிறது. “பனி” நாவலை மொழியாக்கம் செய்ய ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாகக் கடைசியாக சந்தித்தபோது குப்புசாமி கூறினார்.

புத்தகங்களைத் தேடிக்கொண்டு வருபவர்களிடம் எப்படியும் பேசியாக வேண்டிய சூழலில் தள்ளப்பட்டுள்ளேன். அவர்களிடம் மேலே பட்டியலிட்டுள்ள மிக முக்கியமான படைப்பாளிகளைப் பற்றிய சின்ன டெமோ கொடுப்பதில் நாமென்ன குறைந்துவிடப் போகிறேன்.

அடுத்த அவதாரம் தான் நானெடுத்த மிக முக்கியமான அவதாரம். கவிதை என்றாலே எப்போதும் எனக்கு அலர்ஜி. உண்மையில் மிக சொற்பமான கவிதைகளைத் தான் வாசித்திருக்கிறேன். ஆனால் நிச்சயமாக எனக்குத் தெரியும் – திரைப்பட பாடலாசிரியர்களான “வைரமுத்து, நா. முத்துக்குமார், பா. விஜய், தாமரை” போன்ற கவிகளின் தொகுப்புகளைத் தேடிக்கொண்டு கவிதைப் பிரியர்கள் வருவார்கள். போலவே, Poet-டுகலான “தனுஷ், சிம்பு” என பட்டியல் இன்னுமின்னும் நீளும் என்பது நண்பர்களுக்குச் சொல்லித் தெறிய வேண்டியதில்லை. அவர்களிடம் வாண்ட்டேடாக சில கவிதைகளை படித்துக் காண்பிக்க வேண்டும் என்ற சபதமேற்றேன். ஓரளவிற்கு பலனும் இருந்தது.

கவிஞர் சுகுமாரனின் “கையில் அள்ளிய நீர்” கவிதையை வாசித்துக் காண்பித்தேன். போலவே தேவதச்சனின் “சுதந்திர யாத்திரை”, பெருமாள் முருகனின் “தனக்குரியது” போன்ற கவிதைகளையும் - சல்மா, மாலதி மைத்ரி, வா. மணிகண்டன், நகுலன், அனார், சர்மிளா சையத்” போன்றோரது ஒருசில கவிதைகளையும் நண்பர்களுக்குக் கோடிட்டுக் காண்பித்தேன். அவ்வளவே...!

கவி நேசர்கள் சுகுமாரனின் “கையில் அள்ளிய நீர்” மற்றும் பெருமாள் முருகனின் “தனக்குரியது”, தேவதச்சனின் “சுதந்திர யாத்திரை” ஆகிய கவிதைகளை மிகவும் ரசித்துக் கேட்டார்கள். பத்திநாதன் அண்ணா கூட ஒருமுறை “நீ கவிதை வாசித்து காமிச்சி தான் இந்தத் தொகுப்பு எல்லாம் விக்கப் போகுதா?” என்றார்.

“இங்க விக்கிறது, விக்காதது இல்லிங்கண்ணா பிரச்சனை. அறிமுகம் தான்... அது மட்டும் தான்” என்றேன். பத்தி’யண்ணா தலையிலடித்துக் கொண்டார். (இவர் போரின் மறுபக்கம் – என்ற தன்வரலாற்று நூலை எழுதியவர். தமிழக அகதி முகாம்களின் அவல நிலையை விவரித்துச் சொல்லும் இந்நூல் காலச்சுவடு பதிப்பில் வெளிவந்துள்ளது.)

பெரும்பாலான இளம் வாசகர்கள் சாகித்ய அகாடமி விருது பெற்ற ஜோ.டி குரூஸின் “கொற்கை” நாவலைத் தேடிக்கொண்டு காலச்சுவடு பதிப்பக அரங்கிற்கு வருவார்கள் என்றுதான் நினைத்திருந்தேன். என்னுடைய எண்ணத்தில் மரண அடி விழுந்தது...! ஜி நாகராஜனின் “குறத்தி முடுக்கு, நாளை மற்றொரு நாளே”, சுந்தர ராமசாமியின் “ஒரு புளிய மரத்தின் கதை, ஜேஜே சில குறிப்புகள்” & மௌனியின் தொகுப்பு, பா சிங்காரத்தின் “புயலிலே ஒரு தோணி” போன்ற புத்தகங்களைத் தேடிக்கொண்டு தான் வந்திருந்தார்கள். பெரும்பாலும் ஜி நாகராஜன் தான் இளைஞர்களின் குறியாக இருந்தார். ஜி நாகராஜனின் “மொத்தத் தொகுப்பு கிடைக்குமா?” என சுமார் நூறு நபர்களாவது விசாரித்திருப்பார்கள். (இவர்கள் எல்லோரிடமும் உப்பு நாய்கள் வாசித்துப் பாருங்கள் என்று சொல்லி அனுப்பினேன்.)

ஒருவரிடம் துடுக்காகக் கேட்டேன்: “அப்படி என்ன தான் இருக்கு ஜி. நாகராஜனிடமும், சுராவிடமும்?” “தங்களோட சொந்தக் கருத்து எதையும் இவங்க நமக்கு போதிக்கிறதில்ல. எல்லாத்தையும் தூர நின்னு எழுத்துல சொல்லிட்டு போறாங்க. அதான்...” என்றார்.

“கலை, அறிவியியல், என்ஜினியரிங், மருத்துவம்” என பல துறைகளிலும் பயிலும் மாணவர்கள் இலக்கியப் புத்தகங்கள் வாங்க வந்திருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. சந்தித்துப் பேசிய ஆயிரம் நண்பர்களில் சுமார் எழுநூறு பேராவது “இப்போதான் ஃபிக்ஷன் படிக்க ஆரம்பிச்சி இருக்கேன்... எதாச்சும் நல்ல புக்ஸ் இருந்தா(ல்) ரெக்கமண்ட் பண்ணுங்களேன்...” என்ற கோரிக்கையை முன்வைத்தார்கள். ஒரு சிலர் சுஜாதாவை மட்டும் வாசித்தவர்களாக இருந்தார்கள். மேலும் ஒரு சிலர் “எஸ்ரா, ஜெமோ, சாரு” போன்றவர்களது விசிரிகளாக இருந்தார்கள். அவர்களிடம் “அசோகமித்திரன், ஜெயகாந்தன் (ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்), அ. முத்துலிங்கம்” போன்றோரது புத்தகங்களைப் பற்றியும், அவர்களது நீரோட்டம் போன்ற இலகுவான எழுத்து பற்றியும் பேசினேன். நண்பர்களும் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டனர்.

எனினும், என்னைப் பொருத்தவரை இந்த வருடம் பெருமாள் முருகனின் வருடம். போலவே ஜி குப்புசாமியின் வருடமும் கூட. சந்தித்துப் பேசிய ஆயிரம் நண்பர்களிடமும் “பெருமாள் முருகன், பெருமாள் முருகன், பெருமாள் முருகன்” என்றும் “ஜி குப்புசாமி ஜி குப்புசாமி ஜி குப்புசாமி” என்றும் இருவரது பங்களிப்பு குறித்தும் தான் அதிகம் பேசினேன்.

முடிவாக “உங்கக் கூட பேசினதுலையும், இந்த ரைட்டர்ஸ் பத்திய சின்ன டெமோ கொடுத்ததுலையும் எனக்கு அளவில்லாத சந்தோசம். அடுத்த வருஷம் புத்தகக் கண்காட்சிக்கு வரும்போது உங்களோட லிஸ்டுல இந்த ரைட்டர்ஸ் பெயரும் இருந்தால் நான் ரொம்பவும் சந்தோஷப் படுவேன்.” என்றேன்.

“நிச்சயமாக...” என்றவாறு நண்பர்கள் கடந்து சென்றார்கள். நாட்கள் மிக வேகமாக நகர்கிறது. பன்னிரண்டு நாட்கள் ஓடியதே தெரியவில்லை. கடைசியாக காலச்சுவடு கண்ணனுக்கு எதிரில் சென்று திமிருடன் நின்றேன். ஏனெனில் நான் தான் ஆயிரம் நண்பர்களைச் சந்தித்திருக்கிறேனே!. அதைப் பற்றிய குறிப்பும் இருக்கிறதே. சென்செஸ் ரிப்போட்டை அவரிடம் நீட்டினேன்.

புரட்டிப் பார்த்தவருக்கு வியப்பு தான் மிஞ்சும் என்று நினைத்தேன். புருவத்தை உயர்த்தியவர் என்னைப் பார்த்துக் கேட்டார்: “எத்தனை நாட்கள் முழுநாள் கண்காட்சி நடந்தது.”

“சரியா தெரியலை... ஒரு ஏழு நாள் இருக்கும்” என்றேன்.

“சரி ஆறு நாளுன்னே வச்சிக்கோங்க. உங்களுக்கு சலுகையா இருக்கட்டும். காலையில 11 மணிக்கு Book Fair ஆரம்பிச்சா – நீங்க மதியம் ஒரு மணிக்குத் தான் கண்காட்சிக்கு வந்தீங்க. ஒத்துக்குறீங்களா?” என்றார்.

“ஆமா.... ஆனா... உவ்வளோ உன்னிப்பா என்னை நீங்க வாச் பண்ணீங்களா?” என்றேன்.

“இரவு 9 மணிக்கு Book Fair முடியுதுன்னா – 8 மணிக்கே வீட்டுக்கு கெளம்பிட்டிங்க... ஆம் ஐ ரைட்?” என்றார்.

“எக்ஸ்சாக்ட்லி...” என்றேன்.

“ஆறுநாள் முழுநாள் கண்காட்சி. நீங்க மதியம் ஒரு மணிக்கு தான் என்ட்ரி ஆகி இருக்கீங்க. ஆகவே, ஆரெண்டு பன்னெண்டு, கண்காட்சி நடந்த எல்லா நாளும் ஒருமணி நேரம் சீக்கிரமா(க)வே கெளம்பிட்டிங்க... அதையும் சேர்த்தால் பதனொன்னொன்னு ஒண்ணு பன்னொன்டு. இதில் மூன்றாம் நாள் லீவ் எடுத்துட்டீங்க. ஆக மொத்தத்தையும் கூட்டினால் 32 மணிநேர ரிப்போர்ட் மிஸ்ஸிங்...” என்றார் கண்ணன் கூட்டிக் கழித்து.

“இட்’ஸ் இஞ்ஜஸ்டிஸ்...” என்றேன் ஆற்றாமையில்.

“நீங்க எதை சொல்றிங்க...?” என்றார்.

“பதனொன்னொன்னு ஓன்னு பன்னொன்டு”ங்கறது என்றேன்.

“சரி சரி... அத அப்புறம் பேசிக்கலாம். ஆனால் 32 மணிநேரம் என்பது 4 முழுநாள் வேலைக்குச் சமமான கால அவகாசம். அப்படின்னா... உங்க வேலையில குறை இருக்குறது உண்மை தானே” என்றார்.

“ஹூம்.... இல்ல நீங்க போங்கு ஆட்டம் ஆடுறீங்க கண்ணன்” என்றேன்.

“யாரு நானா...! பிரபு, நீங்க லேட்டா வந்து சீக்கிரமா போனிங்களா இல்லையா? இந்த லட்சணத்துல உங்களுக்கு இண்டர்னொட்டின் இலக்கிய நடுமரம்னு வேற விளம்பரம் பண்றாங்க...” என்றார்.

“நாங்கெல்லாம் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோம் கண்ணன்...” என்றேன்.

“சரி சரி... ஏதோ இத்தனை நாள் வேலை செய்யிறேன்னு நம்ம ஸ்டால்ல ஓபி அடிச்சி இருக்கீங்க. உங்கள கஷ்டப் படுத்தினதா இருக்க வேண்டாம். அதனால உங்களுக்குத் தேவையான புத்தகத்தை எடுத்துக்குனு வீட்டுக்குப் போங்க...” என்றார் கண்ணன்.

“பேக்கட்ல பணம் இல்லிங்கிலே கண்ணன்...” என்றேன்.

“அத... அப்புறம் பாத்துக்கலாம்... இப்போ எடுத்துட்டுப் போங்க... அடுத்த புக் ஃபேர்ல வேற ஒரு ரிசர்ச் இருக்குது... சந்திக்கலாம்... பை பை” என்றவாறு எழுந்து சென்றார் கண்ணன். காலச்சுவடு நாக’க்காவின் பரிந்துரை இல்லையேல் இந்த புத்தக ஆஃபரும் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே, அக்காவிற்கு எப்பொழுதும் போல என்னுடைய அன்பும் நேசமும். இப்படியாக இந்த வருடத்தின் புத்தகச் சந்தை இனிதே முடிந்தது. அடுத்த புத்தகச் சந்தைக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. சிறந்த முறையில் திட்டம் வகுத்து நுட்பமான முறையில் கண்ணனை ஏமாற்ற வேண்டும். அதற்கான தீவிர திட்டம் வகுத்தலில் இறங்கவேண்டும்.

அதுவரை... Bye Bye சென்னை புக் ஃபேர் 2014.