Wednesday, July 20, 2016

பஷீரும் தமிழ்ச் சூழலும்

முன் குறிப்பு: நிகழ்வைத் துவக்கிய விஜயன் ஒலிப் பெருக்கியை விரல்களால் ஜெண்ட்டிலாகத் தட்டி வேலை செய்கிறதா? என்று பரிசோதித்தார். அதற்கு ரோஹினி பதறினார்.

அடுத்ததாகப் பேச வந்த ரோஹினி, "மைக்க தட்டிப் பார்த்து செக் பண்ணாதீங்க. அது ரிஸ்க். விரலால் சுண்டி சத்தமெழுப்பி செக் பன்னுங்க..." என்று டெமோ கொடுத்துவிட்டுப் பேசினார். போலவே, பஷீர் படைப்புகள் பற்றிய தனது பார்வைகளையும் முன்வைத்துப் பேசினார். அடுத்ததாக என்னைப் பேச அழைத்தனர்.

மைக் முன்பு சிட்டிகை செய்து "ஆம் ஐ ரைட்?" என்றவாறு ரோஹினியைப் பார்த்தேன். அவர் ஜம்மென்று ஸ்நேகத்துடன் சிரித்தார். நான் சொன்னேன்:

"இந்தச் சப்தமும் செய்நேர்த்தியும்தான் பஷீர்...அவ்வளோதான் இதுக்கு மேல சொல்ல எதுவும் இல்ல" என்று பேசிய உரைதான் கீழே...



"உம்மினி வல்லிய ஓர் ஆள்"

இந்திய கிளாசிக் வரிசை எழுத்தாளர்களில் முதன்மையானவரான - முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை மலையாளத்தில் எழுதிப் புகழ் பெற்ற - வைக்கம் முகமது பஷீரின் நினைவைப் போற்றும் வகையில் ஏற்பாடாகியிருக்கும் இந்த ஒன்றுகூடல் நிகழ்வு மனதிற்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கிறது. நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கும் டிஸ்கவரி புக் பேலஸ் மற்றும் திரைப்பட இலக்கியச் சங்கம் ஆகியோருக்கு அன்பும் பாராட்டுக்களும்.

சென்ற வருடம் டிஸ்கவரி புக் பேலஸ் பஷீருக்கான நினைவுநாள் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். இவ்வருடம் வேறொருவர் அதனை முன்னெடுப்பது மகிழ்ச்சியான விஷயம். அடுத்த வருடம் ரோஹினோ ஷாஜியோ கூட நடத்த முன் வரலாம். ஷாஜி, மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர். ரோஹினி மலையாளம் கற்றறிந்தவர். இருவருக்குமே தமிழ், ஆங்கிலம் உட்பட்ட இதர மொழிகள் வேறு பரிச்சயம். இருமொழியின் (தமிழ், மலையாளம்) சிற்றிதழ், இலக்கியப் பரப்புச் சூழலிலும் ஆர்வம் கொண்டவர்கள். இன்னும் கூட சில மொழிகளில் இவர்களுக்குப் பாண்டித்யம் இருக்கலாம். நிகழ்வை ஒருங்கிணைக்கும் விஜயன் கமலபாலாவும் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர். மலையாளத்திலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்யும் முயற்சியில் இருப்பவர். ஆக, தமிழ் மட்டுமே அறிந்த நான், மொழிபெயர்க்கக் கடினமான பஷீரின் ஆக்கங்களைத் தமிழின் மொழியாக்க வழி புரிந்து கொண்டு இவர்களுடன் பங்கெடுத்துப் பேச இருப்பது - நடுக்கம், பதட்டம், குழப்பம் ஆகிய உணர்வுகளைப் பிசைந்த - கலவையான மனநிலையின் கொந்தளிப்பிற்குக் காரணமாக அமைகிறது.

என்ன பேசுவது? எப்படிப் பேசுவது? என்று தெரியவில்லை. வசதிக்காகத் தமிழ் கிளாசிக் எழுத்தாளர்களில் இருந்து ஆரம்பிக்கலாம் என்று தோண்றுகிறது. சமீபத்தில் ஒரு ஆப்ளிகேஷன் வாட்ஸாப், இணையதள சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவிக் கொண்டிருக்கிறது. தமிழின் சிறந்த கிளாசிக் எழுத்தாளர்கள் பலரது சிறுகதைகளும் அதில் வாசிக்கக் கிடைக்கிறது. நண்பர்கள் பரிந்துரைத்ததால் ஒருசில கதைகளை வாசித்துப் பார்க்க நினைத்தேன்.

முதலில் சுந்தர ராமசாமியின் "பிரசாதம்" கதையின் முதல் பத்தியை வாசித்தபோது ஏதோ குறையாக இருப்பது போலத் தோண்றவும் மூலத்துடன் ஒப்பிட்டேன்.

சுந்தர ராமசாமி கதையை இப்படி ஆரம்பிக்கிறார்: (பக்கம்: 113, சுரா முழுத்தொகுப்பு, இரண்டாம் பதிப்பு- 2008, காலச்சுவடு வெளியீடு)

எழுபத்திமூன்று நாற்பத்தியேழு சுற்றிச் சுற்றி வந்தான். அன்றிரவுக்குள் அவன் ஐந்து ரூபாய் சம்பாதித்தாக வேண்டும். அப்பொழுதுதான் தலைநிமிர்ந்து வீட்டை நோக்கிச் செல்ல முடியும். பொன்னம்மையின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க முடியும். அவள் சிரிப்பதைப் பார்க்க முடியும்.

(சரஸ்வதி, 1958) ஆண்ட்ராய்டு ஆப்பில் கதை இப்படி ஆரம்பிக்கிறது:

எழுபத்திமூன்று நாற்பத்தியேழு சுற்றிச் சுற்றி வந்தான். அன்றிரவுக்குள் அவன் ஐந்து ரூபாய் சம்பாதித்தாக வேண்டும். அப்பொழுதுதான் தலைநிமிர்ந்து முகத்தை ஏறிட்டுப் பார்க்க முடியும். அவள் சிரிப்பதைப் பார்க்க முடியும்.

முதல் பத்தியில் அறிமுகமாகும் ஒரு கதாப்பாத்திரத்தின் பெயரும், ஒரு வாக்கியத்தின் சில பகுதிகளும் விடுபட்டுள்ளது. சுராவின் கதையில் மட்டும்தான் பிரச்சனை இருக்குமோ என்று நினைத்துக்கொண்டு அடுத்ததாக ஜி. நாகராஜனை மூலத்துடன் அங்குமிங்கும் ஒப்பிட்டேன். 'டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்' என்ற சிறுகதை: (பக்கம் 400, ஜி. நாகராஜன் ஆக்கங்கள், முதற் பதிப்பு -2007, காலச்சுவடு வெளியீடு, தொகுப்பாசிரியர்: ராஜமார்த்தாண்டன்)

"அடுத்தவாட்டி எப்ப வருவீங்க?" என்று கேட்டுக்கொண்டே அவள் கட்டிலிலிருந்து எழுந்து அவர் அருகே வந்து நிற்கிறாள்.

"நீ கூப்பிடும்போது வருவேன்" என்றுவிட்டு அவர் பையிலிருந்து ஒரு ஐந்து ரூபாய்த் தாளை அவளிடத்து நீட்டுகிறார். அவள் அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டு, தலையணைக்கு அடியில் வைக்கிறாள். அவர் கதவைத் திறந்துகொண்டு வெளியே செல்கிறார்.


(கண்ணதாசன், நவம்பர் 73)

ஆண்ட்ராய்டு ஆப்பில் இருப்பது:

"அடுத்தவாட்டி எப்ப வருவீங்க?" என்றுவிட்டு அவர் பையிலிருந்து ஒரு ஐந்து ரூபாய்த் தாளை அவளிடத்து நீட்டுகிறார். அவள் அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டு, தலையணைக்கு அடியில் வைக்கிறாள். அவர் கதவைத் திறந்துகொண்டு வெளியே செல்கிறார்.

இக்கதையில் ஒரு உரையாடலே விழுங்கப் பட்டுள்ளது.

இப்பொழுது கு. ப. ராவின் கனகாம்பரம்: (பக்கம்: 156, திருத்தப்பட்ட இரண்டாம் பதிப்பு - 2014 காலச்சுவடு வெளியீடு, தொகுப்பாசிரியர்: பெருமாள்முருகன்)

"மணி!" என்று வாசலில் நின்றுகொண்டே ராமு கூப்பிட்டான். நண்பன் வீட்டில் இருக்கிறானோ இல்லையோ என்று அவனுக்குச் சந்தேகம்.

"எங்கேயோ வெளிலே போயிருக்கா, நீங்க யாரு?" என்று மணியின் மனைவி கதவண்டை நின்றுகொண்டு மெல்லிய குரளில் கேட்டாள்.

(கலைமகள், மார்ச், 1938)

ஆண்ட்ராய்டு ஆப்பில் இருப்பது:

"எங்கேயோ வெளிலே போயிருக்கா, நீங்க யாரு?" என்று மணியின் மனைவி கதவண்டை நின்றுகொண்டு மெல்லிய குரளில் கேட்டான்.

மனைவியின் உரையாடல் கேட்டான் என்று முடிகிறது.

அழியாச்சுடர் - மெளனி: (பக்கம்: 42, தொகுப்பாளர்: சுகுமாரன், முதற் பதிப்பு - 2010, காலச்சுவடு வெளியீடு)

அவள் பார்வையைத் திருப்பியது நானாக இருக்கலாம். ஆனால் திரும்பி, உன்னையும் கூட்டி, அவள் பின்னோடு உள்செல்ல என்னை இழுத்தது எது? எனக்குத் தெரியவில்லை. அப்போதைய சிறுபிள்ளைத்தனமாக இருக்கலாம்.காதல் அது இது என்று காரணம் காட்டாதே. காரணமற்றது என்றாலும் மனக்குறைவு உண்டாகிறது. வேண்டுமானால் கர்வம் என்ற காரணம் வைத்துக்கொள். (காரணமற்றே நடந்த காரியமும், காரணம் கொள்வதற்கு வேண்டி, காரணம்தான் போலும். அவள் பின்னோடு நான் சென்றேன்.)

(மணிக்கொடி - 1937)

ஆண்ட்ராய்டு ஆப்பில் இருப்பது:

'உன்னையும் கூட்டி' என்பது 'உன்னையும் கூட்டிக்கொண்டு' என்று இருக்கிறது. அடைப்புக் குறிக்குள் இருக்கும் ரெண்டு மூன்று வாக்கியங்கள் இருக்கிறது அல்லவா? அதுவும் விடுபட்டுள்ளது.

பூமணி் 'ரீதி' என்ற கதையை 'அந்தப்படியே முடிவாயிற்று.' என்று ஆரம்பிக்கிறார். மொபைல் ஆப்பில் 'அப்படியே முடிவாயிற்று.' என்று துவங்குகிறது. பி.எஸ். ராமையாவின் 'நக்ஷத்திரக் குழந்தைகள்', கு. அழகிரிசாமியின் 'ராஜா வந்திருக்கிறார்' எனப் பல கதைகளிலும் இதுபோல நிறைய நுட்பமான விஷயங்கள் பேசுவதற்கு இருக்கிறது. (எழுத்துப்பிழை வாக்கியப் பிழைகள் நேராமல் தமது படைப்புகள் வெளிவர சாரு, யுவன் போன்றவர்கள் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். அவர்களை இதற்காகப் பாராட்டியே ஆக வேண்டும்.)

ஏனைய கதைகளைப் பற்றி இங்குப் பேச வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி எழலாம். சுட்டிக் காட்டியுள்ள அதே குறைபாடுகளுடன் எஸ். ராமகிருஷ்ணன் தொகித்தளித்துள்ள 100 சிறந்த சிறுகதைகள் (டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு) புத்தகத்திலும் அச்சாகியுள்ளது. இரண்டு பாகங்களாக அச்சாகியுள்ள புத்தகத்தில் இதுபோலச் சுட்டிக்காட்ட நிறையவே இருக்கிறது. (மொபைல் ஆப், எஸ்ரா தொகுப்பு இரண்டிற்கும் பயன்பட்ட தரவுகள் ஒரே இடத்திலிருந்து கிடைத்திருக்கலாம்.)

எஸ். ராமகிருஷ்ணன் தொகுத்த புத்தகங்கம் மட்டுமல்ல, 90% பதிப்பகங்களும் கவனக் குறைவுடன்தான் கிளாசிக் எழுத்தாளர்களை அனுகுகிறார்கள். இது போன்ற பதிப்புச் சூழலில் நாட்டுடமை ஆக்கப்பட்ட புதுமைப்பித்தன் படைப்புகளைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். (புதுமைப்பித்தன் கதைகளைத் தொகுத்த ஆ.இரா. வேங்கடாசலபதியைப் பாராட்டினால் காலச்சுவடு ஏஜென்ட் ஆகி விடுவேன். புதுமைப்பித்தன் தனது படைப்புகளில் வைத்த புள்ளி, காற்புள்ளி, ஆச்சர்யக்குறிக்கும் சலபதி கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசினால், சலபதிக்கு நான் புகழ் பாடுகிறேன் என்பார்கள். நான் பாடித்தான் சலபதியின் செய்நேர்த்தி உலகிற்குத் தெரிய வேண்டும் இல்லையா?)

ஒரு படைப்பை நுட்பமாக இப்படிப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறதா? என்று யோசிக்கலாம். ஒரு படைப்பாளி வார்த்தைத் தேர்விலும், வாக்கிய அமைப்பிலும் கவனமாக இருக்கிறான். மலையாளத்தில் பஷீரும் மிக கவனமாக வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்.

'பால்யகால சகி' கையெழுத்துப் பிரதியில் ஏறக்குறைய 250 பக்கங்கள் வரை இருந்திருக்கிறது. நான்காண்டு காலம் நாவலை வெளியிடாமல் வேறு இருந்திருக்கிறார். புத்தகம் அச்சில் வந்தபோது பஷீர் பயன்படுத்தியிருந்த வட்டாரச் சொற்களை நல்ல மலையாளச் சொற்களாகப் பதிப்பகத்தார் மாற்றி அச்சிட்டிருக்கிறார்கள். மிகுந்த கோபம் அடைந்த பஷீர் மறுபடியும் கையெழுத்துப் பிரதியில் எழுதியது போலவே அச்சிட்ட பின் நாவலை வெளியிட்டிருக்கிறார்.

தமிழ் கிளாசிக் எழுத்தாளர்களும் தமது வார்த்தைத் தேர்விலும், வாக்கிய அமைப்பிலும் மக்களிடம் புழங்கிய மொழியின் கூர்மையில் கவனமுடன்தான் இருந்திருக்கிறார்கள். ஆகவே, இதுபோன்ற விஷயங்களில் கூர்மையுடன் இருப்பதே படைப்பாளிகளுக்குச் செய்யும் உட்சபட்ச மரியாதை என்று நினைக்கிறேன்.

நமக்குப் பரிச்சயமான மொழியின் கிளாசிக் ஆளுமைகளின் எழுத்துக்களே இதுபோலத்தான் அரையும் குறையுமாக நவீன சாதனங்களிலும், அச்சாகும் புத்தகத்திலும் படிக்கக் கிடைக்கிறது எனில், நமக்கு அந்நியப்பட்ட மொழியிலிருந்து தமிழுக்கு வரும் புத்தகங்களை நாம் கவனமாகத்தான் தேர்ந்தெடுத்து வாசிக்கிறோமா? என்ற ஐயமும் எழுகிறது.

மாநிலக் கல்லூரி மாணவர்களுக்குப் "புத்தகத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி?" என்ற தலைப்பில் பெருமாள்முருகன் உரையாற்றியபோது, "மண்வெட்டியை வாங்கச் செல்லும் ஒரு விவசாயி கண்ணை மூடிக்கொண்டு வாங்குவானா? பத்து கடைகளில் ஏறியிறங்கி அதன் கூர்த் தன்மை, பயன்பாடு போன்றவற்றை மனதில் இருத்திச் சிறந்த பொருளைத்தானே தெரிவு செய்கிறான். புத்தகங்கள்தானே அறிவையும் கலாச்சாரத்தையும் வளர்த்தெடுக்கும் ஆயுதம். அப்படி இருக்கையில் சிறந்த புத்தகத்தைத் தேர்ந்தெடுக்க மெனக்கெடுகிறோமா?" என்ற கேள்வியை முன்வைத்தார்.

அந்தக் கேள்வியை மொழியாக்கப் புத்தகத்திற்கும் பொருத்திப் பார்க்க முடியும் என்றே நினைக்கிறேன். கடந்த 60 ஆண்டுகளில் நேரடியாகவே மலையாளத்திலிருந்து புனைவுகளும் அ-புனைவுகளும் தமிழுக்கு வந்திருக்கின்றன.

சுந்தர ராமசாமி, குறிஞ்சிவேலன், ஆ. மாதவன், சுகுமாரன், குளச்சல் மு. யூசுப், யூமா வாசுகி, எஸ்.ராமன், ஸ்ரீபதி பத்மநாபா, ஜெயஸ்ரீ, ஷைலஜா எனப் பட்டியல் நீளும். ஞாபகத்தில் இருந்து இந்தப் பெயர்களைச் சொல்கிறேன். இன்னும் பலரும் இருக்கிறார்கள். இதில் பஷீரை மொழியாக்கம் செய்தவர்கள் என்று எடுத்துக்கொண்டால் (சினிமா PRO) சுரா, சுகுமாரன், குளச்சல் மு. யூசுப் ஆகியோரைச் சொல்லலாம். இளங்கலை கல்லூரி நாட்களில் ஒரு மலையாள மொழியாக்கப் புத்தகத்தைப் நூலகத்திலிருந்து எடுத்துப் படித்தேன். முன்னட்டையில் நீலபத்மநாபனின் பெயர் இருந்தது பசுமையாக ஞாபகம் இருக்கிறது. அவரே மொழியாக்கம் செய்ததா அல்லது பலரின் மொழிபெயர்ப்புகளைத் தொகுத்தாரா என்றுதான் ஞாபகம் இல்லை.

இதுபோக, பஷீரின் படைப்புகளைத் தமிழில் மொழியாக்கம் செய்யும் உரிமையைத் தரவே மாட்டேன் என்று அனீஷ் (பஷீரின் மகன்) பிடிவாதத்துடன் இருந்துள்ளதை யூசுப் - உலகப் புகழ்பெற்ற மூக்கு - சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளில் அடுத்தடுத்து பஷீரின் படைப்புகள் தமிழுக்கு வருவது ஆரோக்கியமான விஷயம்.

பஷீரின் ஆக்கங்களைப் பலரும் மொழியாக்கம் செய்திருந்தாலும் என் மனதிற்கு நெருக்கமான மொழிபெயர்ப்பாளராக குளச்சல் மு. யூசும்தான் இருக்கிறார். யூசுப்பின் மொழியாக்கம் வழியாகத்தான் பஷீர் பற்றிய சித்திரத்தை என்னால் ஏற்படுத்திக்கொள்ள முடிகிறது. இதில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். வேறு மொழிபெயர்ப்பாளரை நீங்கள் சிறப்பனவராகக் கருதலாம்.

பஷீரின் நினைவு தினத்தில் இந்த இலவச ஆண்ட்ராய்ட் ஆப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அப்படிக் கேள்வி எழுவது நியாயமும் கூட. இலவச ஆப்பில் பஷீரின் சில கதைகளும் படிக்கக் கிடைக்கின்றன. "பிறந்த நாள்" என்ற கதையும் அதில் இருக்கிறது. மொழிபெயர்ப்பாளர் பெயர் இல்லை. "ஜென்ம தினம்" என்ற பெயரில் பஷீர் எழுதிய கதை. இதன் மலையாள மூலம் இணையத்தில் கிடைக்கிறது. முதல் வரியை பஷீர் இப்படி ஆரம்பிக்கிறார்:

"மகர மாதம் 8-ஆம் தேதி."

இந்த ஆரம்ப வரி "ஜனவரி 19-ஆம் தேதி" என்று ஆப்பில் இருக்கிறது.

இதேகதையில் இன்னொரு உதாரணத்தை மட்டும் சொல்லலாம் என்று தோண்றுகிறது. ஆன்ராய்டின் ஒரு பத்தி விவரணை:

மேத்யூ கையிலிருந்த டூத் பிரஷ்ஷால் பல் துலக்கியவாறு குளியலறைக்குள் நுழைந்தான். ஆங்காங்கே சில கூக்குரல்கள் கேட்டன. உரத்த சத்தங்களும் ஒலித்தன. சினிமா பாடல்களை யாரோ பாடினர். இங்கு தங்கியிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்களும் க்ளர்க்குகளும்தான்.

இதே பத்தி குளச்சல் மு. யூசுப்பின் மொழியாக்கத்தில்:

மாத்யூ கையிலிருந்த பிரஷைக் கடித்துப் பிடித்தபடி குளியலறைக்குள் சென்றான். கட்டடத்திற்குள் கூச்சல்கள், ஆரவாரம், இடையிடையே சிருங்காரப் பாடல்கள். மாணவர்களும் குமாஸ்தாக்களும்தான்.

இதுபோன்ற ஒப்பீடுகள் அவசியம் தேவை என்று நினைக்கிறேன். அது மூலப் பிரதியை நெருங்க இன்னும் இன்னும் வழிவகுக்கும் என்று நினைக்கிறேன். கதையில் ஒரு நண்பரின் மாளிகை வீட்டிற்கு முக்கியப் பாத்திரம் செல்கிறார். இரும்புக் கதவு அடைக்கப் பட்டிருந்தது என்று ஒரு பிரதியிலும், தகரக் கதவு அடைக்கப் பட்டிருந்தது என்று இன்னொரு பிரதியிலும் இருக்கிறது. அதே போல ஒரு தோழர் கதையின் மையப் பாத்திரத்தைச் சந்திக்க வருகிறார். அவரது பெயர் கங்காதரன். அவர் பற்றிய வர்ணனையில் கதராடை, கதர் ஜிப்பா அணிந்திருந்தார் என்பதுடன், அரசியல்வாதிகளின் அடையாளங்களில் ஒன்றான துண்டு பற்றியும் ஓரிடம் வருகிறது.

ஒரு பிரதியில் 'நீலச் சால்வை' என்றும், ஒப்பிட்ட யூசுப்பின் மொழியாக்கப் பிரதியில் 'நீள சால்வை' என்றும் இருக்கிறது. துண்டின் நிறத்தைப் பற்றிக் கதைசொல்லி மூலத்தில் சொல்கிறாரா? அல்லது அளவைப் பற்றிச் சொல்கிறாரா? எதைப் பற்றிச் சொல்ல வருகிறார்? ஏனெனில் துண்டும் நிறமும் இந்திய நிலப்பரப்பின் சாதிய, மத, அரசியல் கலாச்சாரத்தின் குறியீடு அல்லவா? இதையெல்லாம்தான் நுட்பமாக வாசித்து வாசகர்களாகிய நாம் பஷீரிடம் இன்னும் இன்னும் நெருங்க வேண்டும் என்கிறேன். இதையெல்லாம்தான் இதுபோன்ற நிகழ்வுகள் செய்யவேண்டும். ஆரோக்கியமான விவாதத்தினை முன்னெடுக்க வேண்டும். பஷீருக்கு மட்டுமல்ல சக்கரியா, எம்.டி. வாசுதேவன் போன்றோருக்கும் இதுபோன்ற அனுகுதல் பொருந்தும்.

                         கோட்டோவியம்: நம்பூதிரி                           

ஒரு சமூகத்தின் ரகசிய அடுக்குகளில் உட்புகுந்து, அச்சமூகத்தைச் சேர்ந்த மனிதர்களின் வாழ்வியல் கலாச்சாரக் கூறுகளின் பரிமாணங்களை ரத்தமும் சதையுமாகச் சொல்லும் வலிமையான வடிவமாங்களில் பிரதானமான வடிவமாக இலக்கியங்களே இருக்கிறது. தன் காலத்தில் எழுதியவர்கள் பாராமுகத்துடன் தவிர்த்த ஒரு சமூகத்தின் வாழ்வைத்தான் பஷீரும் தனது படைப்புகளின் வழி அலசி ஆராய்ந்திருக்கிறார். அவையாவும் சிறுகதைகளாகவும் நாவல்களாகவும் அச்சேரியுள்ளன. படைப்புகள் வெளியான சமயத்தில் அதற்கான எதிர்வினைகளும் கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. அந்த எதிர்வினைகளையும் விமர்சனங்களையும் புரிந்துகொள்ளாமால் பஷீர் என்ற பெரு விருட்சத்தின் அடி காண முடியாத உள்மடிப்புகளையும், மேற்பரப்பில் பெருக்கெடுக்கும் பகடியையும் புரிந்துகொள்ள முடியாது.

உதாரணத்திற்கு, 1958-ல் 'எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது' நாவலைத் துணைப்பாட நூலாக அங்கீகரித்த பொழுது கேரள சட்டசபையில் நடந்த விவாதத்தைச் சொல்லலாம்.

"தயவு செய்து அந்த நாவலைப் பாடத் திட்டத்திலிருந்து ஒதுக்கிவிடுங்கள்" என்று அரசாங்க உத்தரவு வந்தபோது பஷீர் கடிதம் எழுதினார் என்பது வேறு விஷயம். ஆனால் நாவலில் ஆபாசம் இருக்கிறது, மத நம்பிக்கையாளர்களின் மனதைப் புண்டுத்துகிறது என்பது ஒரு பிரிவினரின் வாதமாக இருந்திருக்கிறது. சில சமுதாயங்களும், மதவாதிகளும், அவர்களின் ஆதரவு பெற்ற பத்திரிகைகளும் பிற்போக்குவாதிகளுக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள். இவையாவும் மலையாளச் சூழலில் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. இந்தக் கசப்பான அனுபவங்களை 'பாத்துமாவின் ஆடு' முன்னுரையில் பஷீர் பதிவு செய்திருக்கிறார்.

2013-ல் புதுமைப்பித்தனின் 'துன்பக் கேணி'சிறுகதை தலித்துகளை அவமதிப்பதாகக் கூறி, சென்னைப் பல்கலைக்கழகப் பாடத் திட்டத்திலிருந்து நீக்கக் கோரி வழக்கு தொடரப்படுகிறது. அவர்கள் வண்ணனிலவனின் 'கடல்புறத்தில்' நாவலுக்கும் தடை விதிக்கக் கோரினர். இதன் விளைவாகத் தடை விதிக்கக் கோரிய படைப்புகள் மட்டுமல்லாமல் 'பொன்னகரம்' சிறுகதையையும் பாடத்திட்டத்திலிருந்து பல்கலைக் கழகம் நீக்கி உத்தரவு பிறப்பித்தது. இது சார்ந்த விவாதம் அறிவுஜீவிகள் மத்தியில் எழுந்து அடங்கிவிட்டது. கருத்துச் சுதந்திரம் சார்ந்த பெருமாள்முருகனின் 'மாதொருபாகன்' சர்ச்சையையும், சமீபத்தில் வெளியான தீர்ப்பையும் கூட இங்கு நினைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். எடுத்துக் கொண்ட கருப்பொருளின் கூர் மழுங்கிவிடாமல், கீழ்த்தட்டு மக்களின் மனமொழியோடு, அவர்களின் வாழ்க்கையை, கலாச்சாரத்தைத் தம் படைப்புகளில் இவர்கள் வார்த்தெடுத்து இருக்கிறார்கள். எனினும் காலத்தின் கண்ணாடி போல் இப்படைப்புகள் மிளிரும்.

"பஷீருடன் ஒப்பிட்டுப் பேச நம் மொழியில் எவரும் இல்லை. அவருடைய எழுத்து முற்போக்கு இலக்கியத்தின் அசலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு." என்று சுந்தர ராமசாமி தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். (சுபமங்களா, 1994)

சுரா இதைச் சொல்லி இருபத்திரண்டு ஆண்டுகள் ஆகிறது. கவிஞர் சுகுமாரனுடன் பஷீர் குறித்து பேசிக்கொண்டிருக்கையில், "பஷீரைப் போல ஒருவரைச் சொல்ல முடியாது. ஆனால், தமிழில் தோப்பில் முகமது மீரானையும், மலையாளத்தில் புனத்தில் குஞ்ஞப்துல்லாவையும்..." என்றார். எனக்குப் புரிந்துவிட்டது. கீரனூர் ஜகீர்ராஜாவும் இருக்கிறார்தானே. மீரானும் அப்துல்லாவும் சாகித்ய விருதுகளைப் பெற்றவர்களும் கூட. கும்பமுனி நாஞ்சில் நாடன் கேணி இலக்கிய சந்திப்பில் உரையாடியபோது கூறியதுதான் ஞாபகம் வருகிறது.

"எழுதுவது என்பது ஒலிம்பிக் ஜோதியைத் தூக்கிக்கொண்டு ஓடுவது போல. இலக்கியத்தின் மூலம் எனது மொழியைத் தூக்கிக்கொண்டு நான் ஓடுகிறேன். எனது ஓட்டம் முடிவிற்கு வரும்பொழுது அடுத்த தலைமுறையினர் நான் விட்ட இடத்திலிருந்து தூக்கிக்கொண்டு ஓடுவார்கள்".

கடைசியாக இதைச்சொல்லி முடிக்கலாம் என்று நினைக்கிறேன். பஷீர் தன் வாழ்நாளில் ஏறக்குறைய 2000 பக்கங்கள் எழுதியிருக்கிறாராம். ஆனால், அவரைப் பற்றி 4000 பக்கங்களுக்கு உண்மையும் பொய்யுமான விஷயங்கள் எழுதப் பட்டிருக்கிறதாம். அதில், கடுஞ்சாயா உபசரிப்பையும், ஒரு கையை உயர்த்தி உள்ளன்புடன் கூறும் ஆசிர்வாதத்தையும் பெரும்பாலான எல்லாருமே பதிவு செய்திருப்பார்கள். ஆசிர்வதிக்கும் பொழுது "கடவுள் ஆசீர்வதிக்கட்டும்...வளமோடு வாழ்வீர்களாக..." என்பாராம்.

பஷீர் உயிருடன் இருந்து பேரப் பிள்ளைகளாகிய நம்முடன் ஒருவேளை உடனிருந்தால், இப்பொழுதும் அந்த வார்த்தைகளைத்தான் சொல்லியிருப்பார். அவருடைய சார்பில் உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்:

"ஏ... தமிழ் சமூகமே, வளமோடு வாழ்வீர்களாக..."

நன்றி...

பின் குறிப்பு:

1. பஷீர் பெண்ணியவாதி எழுத்தாளர் என்பார்கள். அவர் ஆணாதிக்க எழுத்தாளர்தான் என்று ஷாஜி தனது உரையில் குறிப்பிட்டார். அதற்குப் பூவன்பழம் கதையை உதாரணமாகக் கூறவும் செய்தார். பஷீர் பற்றிய மேலும் பல ஸ்திரமான எண்ணங்களைப் பதிவு செய்தார். அடுத்தடுத்த ஆண்டில் இன்னும் விரிவான பஷீர் பற்றிய விவாதம் முன்னெடுக்கப் பட்டால் மகிழ்ச்சிதான்.

2. கு. அழகிரிசாமியின் கதையிலும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கிறது என்று உரையில் குறிப்பிட்டிருக்கிறேன் இல்லையா? அழியாச்சுடர் இணையப் பக்கத்திற்கு "ராஜா வந்திருக்கிறார்" கதையை நான்தான் தட்டச்சு செய்து 29-05-2010-ல் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தேன். ஒற்றுப் பிழை, வார்த்தைப் பிழை, உரையாடல் விழுங்கப்பட்டது என 50-க்கும் மேற்பட்ட பிழைகள் அதில் இருக்கிறது எனக் குற்ற வாக்குமூலத்தைப் பதிவு செய்கிறேன். ஏறக்குறைய ஆறு வருடம் கழித்துத் திரும்பிப் பார்க்கையில் நான் மூலத்துடன் சரிபார்க்காமல் தட்டச்சு செய்து கதையை அனுப்பியதின் அபத்தத்தை உணர்கிறேன்.

3. டெக்கீஸ்மீது எனக்கு மிகப் பெரிய மரியாதை உள்ளது. அவர்கள் தங்களது வேலையை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். இதுபோன்ற ஆப் முயற்சிகள் ஊக்கப்படுத்தப்பட வேண்டிய ஒன்று. சரியானவர்களின் வழிகாட்டுதலில் இதுபோன்ற முயற்சிகளில் தொடர்ந்து அவர்கள் ஈடுபட வேண்டும்.

பயன்பட்ட நூல்கள்:

1. உலகப் புகழ்பெற்ற மூக்கு - காலச்சுவடு (2011)
2. பால்யகால சகி - காலச்சுவடு (2013)
3. எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது - காலச்சுவடு (2011)
4. பாத்துமாவின் ஆடு - காலச்சுவடு (2011)
5. புதுமைப்பித்தனுக்குத் தடை - காலச்சுவடு (2016)
6. காலம் முழுதும் கலை - கிழக்கு (2006)
7. அசோகமித்திரன் கட்டுரைகள் 2 - கிழக்கு (2004)
8. மனக்குகை ஓவியங்கள் - காலச்சுவடு (2011)
9. தற்காலத் தமிழ்ச் சிறுகதைகள் - சாகித்ய அகாடமி
10. மெளனி படைப்புகள் - காலச்சுவடு (2010)
11. கு.ப.ரா சிறுகதைகள், முழுத் தொகுப்பு - காலச்சுவடு (2014)
12. ஜி. நாகராஜன் ஆக்கங்கள் - காலச்சுவடு (2007)
13. சுந்தர ராமசாமி சிறுகதைகள், முழுத்தொகுப்பு - காலச்சுவடு (2008)
14. நூறு சிறந்த சிறுகதைகள் - டிஸ்கவரி புக் பேலஸ்
15. ஆயிரம் சிறுகதைகள் (மொபைல் ஆண்ட்ராய்ட் ஆப்)