Monday, February 18, 2013

லிட் ஃபார் லைப் 2013 - சென்னை

தமிழ் புத்தக வெளியீடுகளும், தமிழ் படைப்பிலக்கியம் சார்ந்து விருது வழங்கும் விழாக்களும் பெரும்பாலும் சலிப்பையே ஏற்படுத்துகின்றன. விருது பெற்றதிற்கான சால்வை பரிமாறிக்கொள்ளும் பாராட்டு விழாக்கள் அதனினும் மோசமானவை. எனவே, ஒரு மாற்றம் வேண்டியும் – இதர மொழிகளில் இலக்கியத்தின் பொருட்டு ஏற்பாடாகும் விழாக்களைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்திலும், ஹிந்து நாளிதழ் விளம்பரப் படுத்தியிருந்த லிட் ஃபார் லைப் 2013 (The Hindu – Lit For Life) விருது வழங்கும் நிகழ்வுடன் ஏற்பாடு செய்திருந்த இரண்டு நாள் கருத்துப் பரிமாற்ற அமர்விற்குச் சென்றிருந்தேன். 

முதல் நாள் மதியம் “Rhyme and Reason: The Power Of Poetry” தலைப்பில் ‘ஜீத் தாயில், அர்விந்த் கிருஷ்ணா மேஹ்ரோத்ரா மற்றும் மீனா கந்தசாமி’ ஆகியோர் தேர்ந்தெடுத்த சில கவிதைகளை வாசித்து, பின்னர் ஆங்கிலக் கவிதை சார்ந்து உரையாடினார்கள். அதன் பின்னர் வாசகர்கள் கேள்வி கேட்டு, அதற்கு மேடையில் வீற்றிருந்த ஆளுமைகள் பதில் சொல்லும் தருணம் வந்தது. பிராந்திய மொழி வாசகர்களுக்கு சற்றேனும் நாங்கள் குறைந்தவர்கள் அல்ல என்பது போன்ற சலிப்பான கேள்விகள் தான் அவர்களிடம் கேட்கப்பட்டது. ஒரு சில கேள்விகள் மட்டுமே விதிவிலக்கு. ஆறேழு கேள்விகளுக்கு மேல் நேரம் இல்லை.

அதிலும் “ஆண்களிடம் உங்களுக்குப் பிடித்த இரண்டு நல்ல விஷயங்கள் இருந்தால் சொல்லுங்கள்!”, “ஏன் எழுதறோம்னு என்னைக்காவது நெனச்சதுண்டா?”, போன்ற மூன்றாம் தர கேள்விகள் தான் பெரும்பாலும் எழுந்தன. அதில் ஒருவர் “உங்களுடைய மொழிபெயர்ப்பு நூல்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனால், மூலப் படைப்பை கொஞ்சம் கூட பிசகாமல் அப்படியே மொழிபெயர்தோம் என்ற திருப்தி இருக்கிறதா?” என மொழிபெயர்ப்பாளர் அரவிந்திடம் கேட்டார். 

“சாத்தியமே இல்ல. அதெப்படி முடியும். மொழிபெயர்ப்பை விடுங்கள். சொந்தமாக எழுதும் விஷயங்களிலேயே அந்த திருப்தி இருக்காது.” என்றார். அதற்குள் நேரம் ஓடி மணியடித்ததால் நிகழ்வு முடிவுக்கு வந்தது. நமக்குத் தெரிந்த தமிழ் பிளாகர், பத்திரிகையாளர் அல்லது எழுத்தாளர் யாரேனும் கண்களில் தென்படுகிறார்களா என்று சுற்றிச் சுற்றிப் பார்த்தேன். ஒருவரையும் காணவில்லை. ஆகவே நாளைய தினத்தில் மீதியைப் பார்க்கலாம் என்று கிளம்பிவிட்டேன்.

இரண்டாம் நாளில் இரண்டு விஷயங்கள் சுவாரஸ்யமான அமர்வாக எனக்குப் பட்டது. “The Art Of The Tale: Story Tellers at Work” – இந்தத் தலைப்பில் “டிமேரி N. முராரி, மிருதுளா கௌஷி & அனோஷ் ஈரானி” ஆகியோர் உரையாடினார்கள். கதை சொல்லல், கதை கேட்டல் சார்ந்து படைப்பாளிகள் தத்தமது வாழ்வியல் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். அதன் சாயல் தன்மை படைப்பில் ஊடுருவுவது பற்றியும் பேசினார்கள்.

அடுத்ததாக “In Brief: The Power Of Short Fiction” இதில் “அசோக் பெர்ரி(ஸ்ரீலங்கா) & பென்யமின் (மலையாளம்)” ஆகியோர் மிருதுளா கௌஷியுடன் உரையாடினார்கள். பென்யமின் “ஆடு ஜீவிதம்” என்ற நாவலுக்காக ‘அபு துபாய் சக்தி விருது, கேரள சாகித்ய அகாடமி விருது’ போன்ற குறிப்பிடத்தக்க விருதுகளைப் பெற்றிருக்கிறார். இந்திய பல்கலைக் கழகங்களில் இவருடைய படைப்புகள் பாடப் பகுதிகளாக வைக்கப் பட்டுள்ளன. பத்து இளம் படைப்பாளிகளில் ஒருவராக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் இவரை 2011-ஆம் ஆண்டு பரிந்துரை செய்திருந்தது. இந்த அமரவும், உரையாடலும் நன்றாகவே இருந்தது. அமர்வின் முடிவில் பென்யமினின் “ஆடு ஜீவிதம்” புத்தகம் வித்யாசமான வாசக அனுபவத்தைக் கொடுக்கிறது என மிருதுளா கௌஷி பரிந்துரை செய்தார். உயிர்மை பதிப்பகத்தால் இந்தப் புத்தகம் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. 

தி ஹிந்து லிட் ஃபார் லைப் 2012-ஆம் ஆண்டிற்கான விருது “Em and the Big Hoom” என்ற நாவலுக்காக எழுத்தாளர் ஜெர்ரி பிண்டோ என்பவருக்கு அறிவித்திருக்கிறார்கள். அவருக்கு வாழ்த்துக்கள். 

முக்கால் மணி நேரத்தில் பொடலங்காயைப் பற்றிக் கூட பெருசாக எதையும் பேசிவிட முடியாது. அப்படியிருக்கையில் கவிதை, சிறுகதை, நாவல் போன்ற விஷயங்கள் எம்மாத்திரம். இலக்கியத்திற்காக ஆண்டுதோறும் தி ஹிந்து விழா எடுக்கிறார்கள். ஆகவே ஒவ்வொரு அமர்வையும் சம்ராதாயமாக, சடங்காக முடக்கி விடாமல், மேலதிகமான நேரத்தை ஒதுக்கி நிகழ்வினை இன்னும் சிறப்பிக்கலாம் என்றே தோன்றுகிறது.

Saturday, February 16, 2013

பலாத்கார விளையாட்டு


சென்னை பீச் ஸ்டேஷனில் எப்பொழுதும் அந்தக் கடையில்தான் முக்கியமான உலகப் படங்களை வாங்குவது வழக்கம். வாடிக்கை நுகர்வோராக இருப்பதால் கடையில் வேலை செய்யும் இரண்டு சிறுவர்களும்கூட எனக்கு நல்ல பரிச்சியம். எனினும் தீப்பெட்டியை அடுக்கி வைத்தது போலுள்ள எல்லா கடைகளையும் நோட்டம் விட்டுக் கொண்டே செல்வது என்னுடைய வழக்கம். “மேட்டர் CD வேணும்னாலும் கெடைக்கும்… வந்து பாருங்க” என முச்சந்தியில் நின்று, கைபிடித்து இழுக்கும் வேசி போல, தனது கடையில் வியாபாரம் செய்ய சிறுவர்கள் விரும்பி அழைப்பார்கள். அப்படித்தான் ஒரு சிறுவன் மெல்லிய குரலில் காதைக் கடித்தான். “பிட்டு படம் வேனுமாங்கண்ணா? என்றான். அவனுடைய கண்களையே உற்றுப் பார்த்தேன். மேலும் தொடர்ந்தவன் “ரேப்பிங் கேம்ஸ் வேணும்னாலும் இருக்கு! வாங்கிக்கிறீங்களா?” என்றான்.

“என்ன சொன்ன?” என்றேன்.

“ரேப்பிங் கேம்ஸ்” என சில குறுந்தகடுகளை என்னிடம் நீட்டினான். “பூங்கா, சுரங்கப்பாதை, கடற்கரை, தனி பங்களா, யாருமற்ற அலுவலகம்” என விதவிதமான இடங்களில் பெண்ணை பலாத்காரம் செய்யும் கேம்ஸ் என தன்னிடமிருந்த குறுந்தகடுகளைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தான். பார்த்ததும் அதிர்ந்துவிட்டேன். அவனிடமே குறுந்தகடுகளைத் திருப்பிக் கொடுத்துவிட்டு துண்டைக் காணோம், துணியைக் காணோம் என ஓட்டம் எடுத்தேன். இது நடந்து ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு மேல் இருக்கும். பின்னர் உட்கார்ந்து நிதானமாக யோசித்த பிறகுதான் ஞானோதயம் வந்தது. “அடடே… அந்த பலாத்கார விளையாட்டு குறுந்தகடுகளை வாங்கி, அதைப் பற்றி வலைப்பூவில் ஆதாரத்துடன் எழுதி இருக்கலாமே!” என்று. பின்னர் முயற்சி செய்து சில பலாத்கார விளையாட்டுக்களை வாங்கி, விகடன் மாணவ நிருபர் ஒருவருக்குக் கொடுத்து அதைப் பற்றி எழுதுமாறு பரிந்துரைத்தேன். ஏனோ தெரியவில்லை அவரால் முடியாமல் போனது. இந்த விளையாட்டை திறம்பட விளையாடுவதற்கு ஆறு மாதகாலப் பயிற்சி வேண்டும் என்பது வேறு விஷயம். “கற்பழிப்பதற்குக் கூட குறைந்தபட்ச உழைப்பு தேவைப்படுகிறது.” என்ற எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் வரிகள்தான் எனக்கு ஞாபகம் வருகிறது. இந்த விளையாட்டுக்களை விளையாட எவ்வளவு நேரமும் உழைப்பும் விரயமாகிறது.

கணினியானது குழந்தைகளின் கணிசமான நேரத்தை விழுங்குகிறது. கணினியில் விளையாடுவதை குழந்தைகள் சந்தோஷமாக உணர்கிறார்கள் போல. அவர்களின் விருப்ப விளையாட்டுகளும் குரூரத்தை அடிப்படையாக வைத்து கட்டமைக்கப்பட்டதாகவே இருக்கின்றன. இந்தப் புரிதலும் தெளிவும், பெற்றவர்களுக்கு இருக்கிறதா என்பது சந்தேகம்தான். பைக் திருட்டு, கார் திருட்டு மட்டுமல்லாமல், திருடிய வாகனத்தில் மூலம் பல்பொருள் அங்காடிக்குச் சென்று பொருட்களைத் திருடிவிட்டு போலீசிடம் மாட்டிக் கொள்ளாமல் தப்புவது என விளையாட்டின் பட்டியல் நீள்கிறது. மேலும் திருடிவிட்டு தப்பிச் செல்லும்போது, கையிலுள்ள துப்பாக்கி மூலம் எதிரில் வரும் எல்லோரையும் கண்மண் தெரியாமல் - கணினியில் விளையாடும் குழந்தைகள் சுட்டுத் தள்ளுகிறார்கள். எவ்வளவு கோரமான விஷயம் இது! இவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும்போதுதான் பலாத்கார விளையாட்டை நாடிச் செல்கிறார்கள். இதுபோன்ற விளையாட்டுகளை இணையத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளவும் முடியும் என்பது விழிப்புடன் கவனிக்க வேண்டிய ஒன்று.


விளையாட்டானது கணினியுடன் முடிவதில்லை. நவீன தொழில்நுட்பத்தின் தாக்கம் செல்பேசி வரை நீள்கிறது என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. சில மாதங்களுக்கு முன்பு எனது உறவுக்கார பையனை சந்தித்து உரையாட நேர்ந்தது. முன்னேறிய கிராமமான எங்களது ஊர் அடங்கிய தாலுக்காவில் பிரபல தனியார் பள்ளி ஒன்றுள்ளது. சுற்றிலுமுள்ள கிராமத்திலிருந்து ஏராளமான பிள்ளைகள் அதில் படிக்கிறார்கள். உறவுக்காரப் பையன் அந்தப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கிறான். தன்னுடன் ஒரே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மற்றொரு பையனுடன் அவன் பேசிக் கொண்டிருந்தான். உறவுக்கார குழந்தைகளிடம் கோமாளி வேடமேற்று பழகுவது என்னுடைய வழக்கம். ஆகவே பல நேரங்களில் ஒளிவு மறைவில்லாமல் என்னை ஓட்டுவதாக நினைத்து பல உண்மைகளையும் சிறுவர்கள் கக்குவார்கள். அப்படித்தான் அன்றும் நடந்தது. இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். இடையில் நான் புகுந்தேன்.

“ஹே… அந்த கேம்ஸ் எனக்கும் கொடுக்குறியாடா?” என்கிறான் பத்தாம் வகுப்பு மாணவன்.

“அப்புறம் நான் மாட்டிக்கிறதுக்கா? கெளம்புடா காத்து வரட்டும்” என்கிறான் உறவுக்காரப் பையன்.

“டேய்… கேம்ஸ்தான கொடேண்டா. அவனும் விளையாடட்டும்…” என்கிறேன் நான்.

“மேட்டர் தெரியாம பேசாத கிச்சா. அதெல்லாம் அவன் விளையாடக் கூடாது…” என்கிறான், பெரிய மனுஷத்தனமாக என்னுடைய உறவுக்காரப் பையன்.
“பெரிய மயிறு வெளையாட்டு… இவரு மட்டும்தான் வெளையாடுவாரு…. சும்மா குடுடா, அவனும் நாலு பேர சுட்டுத் தள்ளட்டும்” என்கிறேன் சிறுபிள்ளைத்தனமாக நான்.

“அய்யே! என்ன கேம்ஸ் தெரியுமா அது?” என்கிறான் உறவுக்காரப் பையன்.
“சொன்னாத்தான தெரியும்?” என்கிறேன் நான்.

“அந்த கேம்ஸ் Touch Screen-ல தான் வெளையாட முடியும். ஒரு பொண்ணு Dress போட்டுட்டு இருக்கும். ஒவ்வொரு parts-ஆ Touch பண்ணி தேச்சா… டிரஸ் எல்லாம் Disappear ஆகும். அதான் கேம்ஸ்…” என்றான் ஆங்கிலமும் தமிழும் கலந்து.

“டேய்… என்னடா இது…?” என்று கேட்டதற்கு, “நீயெல்லாம் வெத்து… இது தெரியாம அவனுக்கு கொடுக்கச் சொல்ற… அவன் மாட்டிக்கிட்டா என்னைய போட்டு மொத்தவா?” என கேலிசெய்து சிரிக்கிறான் உறவுக்காரப் பையன். பக்கத்திலிருந்த அவனுடைய நண்பனும் சிரிக்கிறான். “நாம வெத்துதான்” என்பதை நினைத்து நானும் விரக்தியுடன் சிரித்துக்கொண்டேன்.

மேற்கூறிய இரண்டு சம்பவங்களையும் நினைவுபடுத்தும் விதமாக, சமீபத்திய பேருந்து பயண அனுபவம் எனக்கு ஏற்பட்டது. இரண்டு மாணவர்கள் முன்னிருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். பின்னிருக்கையில் அமர்ந்தவாறு புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தேன். அவர்கள் பேசிய விஷயம் கவனத்தை திசை திருப்பியது. ஆகவே அவர்கள் மீது கவனம் சென்றது. இரண்டு மாணவர்களின் கழுத்திலும் பிரபல கல்லூரியின் அடையாள அட்டை தொங்கிக் கொண்டிருக்கிறது. அடையாள அட்டையை தாங்கிக் பிடிக்கும் கழுத்துப் பட்டையில் கல்லூரியின் பெயர் அச்சிடப்பட்டிருந்தது. இரண்டு மாணவர்களும் பேசிக் கொள்கிறார்கள்.

மாணவன் 1: “பக்கத்து வீட்டு ஆண்டிய கரக்ட் பண்ணா வீட்டுல மாட்டிக்க வேண்டி இருக்கு… லாட்ஜி போட்டு தங்கினா - ரெயிட்ல புடிச்சி அசிங்கப் படுத்துறாங்க! பஸ்ல போட்டு தாக்குனா நாடே சேர்ந்து காறித் துப்புது! அப்போ எப்புடி தாண்டா ஒருத்தன் என்ஜாய் பண்றது” (கவுண்டமணி தனது மனைவியை அடித்துக் கொண்டிருக்க. மாமியார் கேரக்டர் இடையில் வந்து தடுக்கும்பொழுது பேசும் பிரபல நகைச்சுவை துணுக்கு இது. நீண்ட நாட்களுக்கு முன்பு டிவியில் பார்த்த ஞாபகம். அந்த காமெடியின் ரீமேக்)

மாணவன் 2: “டேய்… கிளாஸ்மேட்-கிட்டையே ஒரு வார்த்த, ரெண்டு வார்த்த பேச முடியல… இதுல கரக்ட் பண்றதும், ரேப் பண்றதும்தான் ஒரு கேடா உனக்கு…”

மாணவன் 1: “எனக்குன்னு ஒரு சான்ஸ் கெடைக்காமையா போகும்… அப்ப என்னை ப்ரூவ் பன்றேண்டா மச்சி…”

மாணவன் 2: “என்னையும் கூப்பிட மறந்துடாதடா…!”

இருவரின் பேச்சும் எங்கோ ஆரம்பித்து, எங்கெங்கோ பயணப்பட்டுக் கொண்டிருந்தது. ‘திடீரென ஆசிரியரைப் பற்றிய எள்ளல். கெளதம் மேனனின் மொக்கை சினிமா பற்றிய விமர்சனம். உடன் படிக்கும் மாணவியைப் பற்றிய கேலி. ரோட்டில் செல்லும் ஆட்கள் - என சம்பாஷணை சுழன்று சுழன்று தொடர்பில்லாமல் சொற்கள் உதிர்ந்து கொண்டிருந்தன.

சம்பாஷணையின் மற்ற எல்லா இடங்களும்கூட ஒரு வக்கிர ஹாஸ்யம்தான். நேரத்தை ருசிகரமாகக் கடத்த மேற்கொள்ளும் வெகுளித்தனத்தின் வெளிப்பாடு என்ற அளவில்கூட எடுத்துக் கொள்ளலாம். ஆனால் “கிளாஸ்மேட்-கிட்டையே ஒரு வார்த்த, ரெண்டு வார்த்த பேச முடியல” – என்ற இடம்தான் எனக்கு மிகவும் அபாயகரமான விஷயமாகத் தெரிந்தது. இங்குதான் சிக்கலும் ஆரம்பிக்கிறது. சக மனிதர்களிடம் பேசுவதையே ஜேப்படித் திருட்டு போல துரிதமாகவும், அதே சமயத்தில் யாரும் அறியாமலும் செய்ய வேண்டியது இருக்கிறது பெரும்பாலான கல்லூரி வளாகங்களில் இதுதான் நிலைமை. எவ்வளவு பெரிய துர்பாக்கியம் இது.

ஒருபுறம் குழந்தைகள் விளையாடும் குரூர விளையாட்டுக்கள், மற்றொரு புறம் அவர்களே வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் விளையாடக் கூடிய ஆபாச விளையாட்டுக்கள். இதன் இணைகோடு போல, சக மாணவியிடம் தோழமையுடன் பேசுவதையே கள்ளத்தனமாக யாரும் பார்க்காதபோது செய்ய வேண்டிய நிர்பந்தம், என சிறுவர்களையும் இளைஞர்களையும் சிக்கலுக்கு உள்ளாக்குகிறோம்.

இந்தியாவில் மட்டும் வருடத்தில் ஏறக்குறைய இரண்டரை லட்சம் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள் என புள்ளிவிவரம் தருகிறார்கள். கணக்கில் வராமல் இதுபோன்ற பத்து மடங்கு அதிக அளவில் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு மன உளைச்சலில் வாழ்வார்கள் என்பதுதான் நிதர்சனம். ஒருமுறை என்னுடைய உறவுக்கார பெண் டாக்டரேட் (வேதியியல்) படிக்க பிரியப்படுவதாகவும், சென்னையின் ஒரு பிரசித்திபெற்ற பல்கலைக்கழகத்தில் யாரேனும் தெரிந்தவர் இருந்தால், அதைப் பற்றி விசாரித்துச் சொல்லும்படியும் கேட்டிருந்தார். எனவே, எனக்குத் தெரிந்து முனைவர் பட்டம் பெறுவதற்கு போராடிக் கொண்டிருக்கும் பலருடைய காதிலும் போட்டு வைத்தேன். ஒருவர் செல்பேசியில் அழைத்து எல்லா விவரங்களையும் கூறினார். மேலும் “யாருக்காக இதையெல்லாம் விசாரிக்கிறீர்கள்?” என்றார்.

“உறவுக்காரப் பெண் தான். என்னுடைய சகோதரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்!” என்றேன்.

“சொல்றேன்னு தப்பா நெனைக்காதிங்க… ரொம்ப தெரிஞ்சவங்களா இருந்தா, டாக்டரேட் சேர வேண்டாம்னு சொல்லிடுங்க… வேற மாதிரி டார்ச்சர் எல்லாம் இருக்கும்…” என்றார். பல பெண்களும் அதிகம் படித்து உயர்ந்த பதவிகளில் இருக்கும் சில பேராசிரியர்களின் பாலியல் வக்கிரங்களை எதிர்த்து போராடித்தான் வெற்றி பெற வேண்டியிருக்கிறது என்பது ஒரு கசப்பான உண்மை.


இதோ சென்ற வாரம் டெல்லியில் நடந்த பலாத்காரத்தை இந்தியாவே கூர்ந்து கவனிக்கிறது. ஜனாதிபதி மாளிகை முன்பு பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக நீதிகேட்டு போராட்டம் நடத்துகிறார்கள். அந்த சகோதரியைப் பற்றிய தற்போதைய நிலவரங்களை நாளேடுகளும் தொடர்ந்து பிரசுரம் செய்து வருகின்றன. தொலைதூர கிராமங்களிலுள்ள பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதையும் நாளேடுகள் சமீப நாட்களில் பிரசுரித்து வருவதைப் பார்க்க முடிகிறது. இவையெல்லாம் கவனத்தில் கொண்டு பரிசீலிக்க வேண்டிய முக்கியமான சமூகப் பிரச்சனைதான் என்பதை மறுப்பதற்கில்லை.

அதே அளவுக்கு, பின்விளைவுகளை யோசித்துப் பார்த்தால் அதைவிட முக்கியமான விஷயம், இளம் தலைமுறையினர் டிஜிடல் விளையாட்டு விளையாடுகிறார்கள் என்பதுதான். அதில் பலாத்கார விளையாட்டும் அடக்கம். “விளையாட்டுதான் வினையாகிறது” என்பது நம்மவர்களுக்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை.

நன்றி: சொல்வனம் (இணைய இதழ் இதழ் 79 | 25-12-2012|)