Saturday, December 26, 2009

உயிர்மை புத்தக வெளியீடு

25-12-2009 அன்று 'உயிர்மை' பதிப்பகம் ஏற்பாடு செய்திருந்த 11 எழுத்தாளர்களின் 12 நூல்களின் வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். நான் சென்றிருந்த பொழுது விழாவிற்கான சுவடே இல்லாமல் தேவநேயப் பாவாணர் அரங்கம் பூட்டப்பட்டு இருந்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளியில் நடமாடிக் கொண்டிருந்தேன். ஒருவர் தொல். திருமாவளவனின் ஆளுயர விளம்பரப் பலகையை தயார் செய்து கொண்டிருந்தார். அவரைக் கடந்து பிரிட்டிஷ் கௌன்சில் லைப்ரரிக்குச் சென்றேன். செல்லும் வழி முழுவதும் புத்தகம் பற்றியும், நூலகம் பற்றியும் ஏராளமான வாசகங்கள் சுவரில் எழுதியிருந்தார்கள். அதில் எனக்குப் பிடித்த ஜப்பானியப் பழமொழி...

"நண்பர்களும், புத்தகங்களும் குறைவாக இருந்தாலும் நல்லவைகளாக இருக்கட்டும்."

புத்தம் புதிய எழுத்தாளர்களின் வருகையும், அளவுக்கதிகமான புத்தக வெளியீடுகளும் நடப்பதால் இந்த வாசகம் என்னை யோசிக்க வைத்தது. யோசனையுடனே திரும்பிய பொழுது உயிர்மையிலிருந்து வெளியிட இருக்கும் புத்தகங்களுடன் காரில் வந்து சகாக்கள் இறங்கினார்கள். அவர்கள் வந்த அரை மணி நேரம் கழித்துதான் தேவநேயப் பாவாணர் அரங்கம் திறக்கப்பட்டது. உள் சென்று அமர்ந்து கொண்டேன். சிவசங்கர் என்றொரு நண்பர் அறிமுகமானார். எழுத்தாளர் தமிழ்மகன் வந்தவுடன் இருவரும் சென்று அறிமுகம் செய்து கொண்டோம். தனிப்பட்ட முறையில் புத்தக வெளியீட்டிற்கு வரும்படி அனுப்பியிருந்த மின்னஞ்சலுக்கு நன்றி கூறினேன்.

நலம் விசாரித்துவிட்டு "உங்களோட ஊர் எது?" என்று என்னிடம் கேட்டார்.

அவருக்குப் புரியுமோ! புரியாதோ! என்று கும்மிடிப்பூண்டி போகும் வழி என்றேன்.

"அடடே.. பொன்னேரி பக்கத்துல தான் என்னோட சொந்த ஊர் இருக்குது. உங்களுக்கு 'ஜெகநாதபுரம்' தெரியுமா?" என்றார்.

எங்க ஊரிலிருந்து 5 கி.மீ
தூரத்துல தான் 'ஜெகநாதபுரம்' இருக்குங்க தமிழ்.

"ரொம்ப நெருங்கிட்டோம். அதனால நிறைய பேச வேண்டியது இருக்கு. வெளிவர இருக்கும் நாவல் வெட்டுப்புலி கூட திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி பகுதிகளில் நடப்பதுதான்" என்றவாறு நண்பர்களை நோக்கி நகர்ந்தார்.

முத்துசாமி, உழவன் (நவநீத கிருஷ்ணன்), நிலாரசிகன் என்று ஒருவர் பின் ஒருவராக நண்பர்கள் வர ஆரம்பித்தனர். சுகுமாரன், ஞானக்கூத்தன், மனுஷ்ய புத்திரன், தமிழ்செல்வன், சாரு, பாஸ்கர் சக்தி, எஸ் ரா - என்று பல எழுத்தாளர்களையும் காண முடிந்தது. சில சினிமா பிரமுகர்களையும் காண முடிந்தது.

'தேநீர்' அருந்த நண்பர்களுடன் (பதிவர்கள்) வெளியில் வந்தேன். பாரதி மணி எதிரில் வந்து கொண்டிருந்தார். அருகில் சென்றதும் நட்புடன் கைகுலுக்கினார். நிலாரசிகனின் சிறுகதைத் தொகுப்பில் எனக்கான சில சந்தேகங்கள் இருந்தது. அவற்றை பென்சிலில் குறித்து வைத்திருந்தேன். அவற்றைப் பற்றி அவருடன் விவாதம் செய்து கொண்டிருந்தபோது தமிழ்செல்வன் எதிரில் வந்தார். நிலாவிடம் புத்தகத்தைக் கொடுத்துவிட்டு தமிழ்செல்வனுக்கு வணக்கம் கூறினேன். சிரித்தார்.

உங்களுடைய 'வெயிலோடு போய்...' சிறுகதையை வாசித்தேன். நன்றாக இருந்தது. அந்தக் கதை 'பூ' என்ற சினிமாவாக ஊடக மாற்றம் அடைந்ததில் உங்களுக்கு மன நிறைவு இருக்கிறதா?

அது எப்படி இருக்கும். சினிமா என்பது வேறு ஊடகம் இல்லையா!... ஆனா படம் ஓரளவிற்கு பேர் வாக்கிடுச்சி இல்ல... அவங்க உழைப்பு பாராட்டப்பட வேண்டியதுதான்.

உங்களுடைய கதைக்கான கரு எப்படி கிடைக்கிறது? சொந்த அனுபவமா அல்லது உங்களை பாதிக்கும் விஷயங்களின் தாக்கமா?

ரெண்டுமே தான்... என்னை பாதிக்கிற அடுத்தவர்களின் சம்பவங்களைக் கூட சொந்த அனுபவமாக உணரும் போதுதானே எழுத்தின் மூலமாக வாசகர்களை உணரச் செய்ய முடியும்.

கோணங்கி எப்படி இருக்காரு?

நல்லா இருக்கான். இங்கதான் சென்னையில இருக்கான்...ஒரு நாவல் எழுத வந்திருக்கான்.

ஓ அப்படியா...! அவரை விசாரிச்சதா சொல்லுங்க...

இவ்வளவு நேரம் பேசியதற்கு நன்றி தெரிவித்துவிட்டு நிலாவை நோக்கித் திரும்பினேன். அவர்கள் எதையோ பேசிக்கொண்டிருந்தார்கள். தூரத்தில் எழுத்தாளர் சுகுமாரனுடனும், நர்சிம்மிடமும் சிவராமன் (பைத்தியக்காரன்) பேசிக் கொண்டிருந்தார். என்னை அருகில் அழைத்து சுகுமாரனிடம் அறிமுகப் படுத்தினார். பயந்துகொண்டே அருகில் சென்று அவருடைய மதிலுகள் மொழிபெயர்ப்பை பாராட்டிப் பேசினேன்.

புதிதாக நிறைய பேர் தமிழில் கவிதைகள் எழுதுகிறார்கள். அவர்களுடைய பங்களிப்பு எப்படி இருக்கிறது?

நன்றாக செய்கிறார்கள்... ஆனால், மொழிக்கு என்ன செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். அவர்களுக்கான மொழியில் சிறந்து விளங்கி, ஒரு எல்லையைத் தாண்டினால் தான் படைப்பிலக்கியத்தில் அவர்களை அடையாளப்படுத்திக் கொள்ளமுடியும்.

"ஒரு கவிஞனுக்கு தேவையான மொழி என்று எதைக் கூறுகிறீர்கள்?" என்று கேட்டேன்.

மொழி என்று நான் சொல்ல வருவது "sense of language". அதனைக் கண்டடைவதுதான் கவிஞனுக்கு மிகப் பெரிய சவால்.

தமிழ்ச் சிறுகதைகள் பற்றி...?

முன்பு இருந்த மாதிரி இப்பொழுது இல்லை...

என்ன சொல்றீங்க சுகுமாரன்?

சரி... நீங்களே சமீபத்துல சிறுகதை எழுதுபவர்கள் பத்து பேரை சொல்லுங்களேன்? - என்று கூறினார்.

"எஸ். ரா, சாரு, யுவன் சந்திர சேகர்..."

"இவங்க எல்லோரும் பத்து வருஷம் முன்னாடியே எழுத ஆரம்பிச்சிட்டாங்க. நான் கேட்டது சமீபத்தில்..." என்று சொல்லவும் திணறிப்போனேன்.

ஜே. பி சாணக்யா இன்னும் சிலரைத் தவிர வேறு யாரும் சொல்லிக்கிறா மாதிரி செய்யலை. தமிழ் சிறுகதை எப்படி இருந்தது...! இப்போ அந்த வீரியம் இல்லன்னுதான் சொல்லணும்.

உயிர்மை வெளியிட்ட மலையாள மொழி பெயர்ப்பான 'காளி நாடகம்' நல்ல சிறுகதைத் தொகுப்பு என்றேன்.

"அதுவும் என்னோட மொழி பெயர்ப்புதானே..." என்ற போது இயக்குனர் தங்கர் பச்சான் நெருங்கி வந்து அவருடன் கைகுலுக்கினார். கிளி பச்சை கலரில் டி-ஷர்ட் அணிந்த அழகான வாலிபர் பவ்யமுடன் தங்கருக்கு பின்னால் நின்றுகொண்டிருந்தார். இதற்கு மேல் அங்கு நிற்பது சரியல்ல என்று சிவராமனிடம் விடைபெற்று நர்சிம்மின் அருகில் சென்றேன். அவருடன் யுவ கிருஷ்ணாவும், ஆதிஷாவும் நின்றுகொண்டிருந்தனர். சில நாட்களுக்கு முன்பு நர்சிம்மின் "புளிக்காரக்கா" படிக்கக் கிடைத்தது. மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். கதை பிடித்திருந்ததால் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு உள்ளே சென்றேன்.

உமா சக்தியின் புத்தக வெளியீடு இருப்பதால் உமா சக்தி, அமித்துவின் அம்மா (சாரதா), அகநாழிகை, பாஸ்கர் சக்தி இன்னும் பலரைக் காண முடிந்தது.

நிகழ்ச்சியை ஆரம்பித்து கே.வைத்தியநாதன் (தினமணி, ஆசிரியர்), ஞானக்கூத்தன், பிரபஞ்சன் ஆகிய மூவரையும் மேடைக்கு அழைத்தார்கள். பிரபஞ்சன் கொஞ்சம் தாமதமாக வந்து மேடையில் கம்பீரமாக அமர்ந்தார்.

நூல் வெளியீட்டு விழாவில் "தினமணி' ஆசிரியர் கே.​ வைத்தியநாதன் பேசியது தமிழ் மகனின் இணையத் தளத்தில் படிக்கக் கிடைக்கிறது. (http://www.tamilmagan.in/2009/12/blog-post_25.html)

சினிமா இயக்குனர்கள் தங்கர் பச்சான், எஸ்.பி.ஜனநாதன், வெற்றி மாறன், அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இலக்கிய கூட்டங்களில் சினிமாக்காரர்களைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது. தமிழ் சினிமாவில் மற்றம் வருமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Thursday, December 24, 2009

நிலாரசிகனின் புத்தக வெளியீடு

"மொத்தம் இருபது எழுத்தாளர்களின் நூல்கள் டிசம்பர் 20-ம் தேதியன்று திரிசக்தி பதிப்பகம் வெளியிடுகின்றது. அதில் கவிஞர் நிலாரசிகனின் முதல் சிறுகதைத் தொகுப்பும் அடக்கம் (யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள்)... ஆகவே எங்கும் சென்றுவிடாதீர்கள்" - என்று ஒரு வார காலமாகவே நண்பர் சதீஷ் அன்புக் கட்டளை பிறப்பித்திருந்தார்.

ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னையிலுள்ள அக்காவின் வீட்டிற்குச் சென்று அவள் குழந்தைகள் விளையாடுவதை மதியம் வரை வேடிக்கைப் பார்ப்பது என்னுடைய முக்கியமான வேளைகளில் ஒன்று. அவள் வீடு என் கிராமத்திலிருந்து 60 கி.மீ தொலைவில் இருப்பதால் பேருந்திலோ, ரயிலிலோ பயணம் செய்து கொண்டிருப்பேன். அவள் வீட்டிற்குச் சென்று திரும்புவதற்கே அன்று முழுவதும் சரியாக இருக்கும். குடும்ப விசேஷங்களையும், நெருங்கிய நண்பர்களையும் கூட சில நேரங்களில் தவிர்த்துவிடுவேன். இதை மீறி கேணி சந்திப்பைத் தவிர்த்து வெளியில் எங்கும் சென்றதில்லை. புத்தக வெளியீட்டைப் பற்றி யோசித்துப் பார்த்தது கூட கிடையாது. இந்த வருடம் தான் சில நண்பர்கள் புத்தக வெளியீட்டிற்கு அழைப்பு விடுத்தார்கள். அதில் நிலா ரசிகனின் 'நண்பர் சதீஷும்' ஒருவர்.

சென்னைச் சிறுகதைப் பட்டறையில் அவர்களுடன் கலந்து கொண்டிருந்தாலும் இருவருடனும் பேசிப் பழக்கமில்லை. அசோகமித்திரன் பங்கு பெற்ற கேணி நிகழ்ச்சியில் தான் அதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. நிகழ்ச்சி முடிந்து பேசிக் கொண்டிருந்ததில் நிலாரசிகனுக்கு சிறுகதையில் ஆர்வம் வர 'கி.ரா' முக்கிய ஆளுமையாக இருந்ததாகக் கூறினார். அவரைக் காணச் சென்ற அனுபவத்தை ரசமாகக் கூறிக் கொண்டிருந்தார். மேலும் சில விஷங்களைப் பேசிவிட்டு களைந்து சென்றோம்.

தேவநேயப்பாவாணர் அரங்கில் மாலை 6 மணிக்கு மேல் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிக்கு மாலை 4. 45 மணிக்கே சென்றுவிட்டேன். மாம்பழக் கலரில் குர்தா அணிந்த ஒருவர் என்னை இருகரம் கூப்பி வர வேற்றார். அவருடன் இருந்தவர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

நீங்கள் யார் என்பது போல என்மீது பார்வையை
ச் செலுத்தினார். நிலாரசிகனுக்காக வந்திருப்பதாகக் கூறினேன். மகிழ்ச்சியுடன் என்னை அமரச் செய்தார். அவருடைய கதைகளைப் படித்தேன் நன்றாக இருக்கின்றது.அதிலும் கடைசி கதை வித்யாசமான முயற்சி என்றார்.

"நீங்கள் எழுத்தாளரா?" என்று கேட்டேன்.

சிரித்துக் கொண்டே இல்லை என்றார். கொஞ்ச நேரம் உரையாடியதில் ஆங்கில நாளிதழில் அவர் 20 ஆண்டுகாலம் வேலை செய்திருப்பதும், அவருடைய சுய முன்னேற்றப் புத்தகம் வெளிவந்திருப்பதும் தெரியவந்தது. அவர் தான் திரிசக்தியின் எடிட்டர் ரமணன் என்று சொல்லிய போது மேலும் ஆச்சர்யமாக இருந்தது.

எடிட்டர் வேலை கடினமாகவும், சவாலாகவும் இருக்குமே?

நிச்சயமா... நம்மையும் மீறி சில தவறுகள் நிகழ்ந்துவிடும். கடினமான வேலை தான் என்றார்.

இலக்கிய பீடம் விக்கிரமன் இந்த வயதில் கூட மாத இதழை நடத்துகிறார். அவர்கள் நடத்தும் நாவல் போட்டிக்கு வரும் படைப்புகள் அனைத்தையும் வாசித்து பிழையைத் திருத்துகிறார். நேரில் அவரைப் பார்த்த போது அசந்துவிட்டேன்.அவருடைய புத்தகம் கூட இன்று வெளி வருகிறது என்று நினைக்கிறேன் என்றவாறு அவரைப் பார்த்தேன்.

"ஆமாங்க... அவருடைய புத்தகம் கூட வெளிவருகிறது. அவர் பிழைதிருத்தி அனுப்பிய கையெழுத்துப் பிரதியை அப்படியே பத்திரமா வச்சிருக்கேன். ஒரு கமா, புள்ளியைக் கூட கவனமா சரி செய்து அனுப்பியிருக்கிறார்" என்று சொல்லியவாறு வாசலை நோக்கி நகர்ந்தார். நாஞ்சில்நாடன் புன்னகையுடன் வந்துகொண்டிருந்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் வெங்கட் சுவாமிநாதனும் வந்து சேர்ந்தார்.

அவர்கள் குழுவாக பேசிக் கொண்டிருப்பதை தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் நாஞ்சில் நாடன் மட்டும் வெளியில் செல்வது போல் தெரிந்தது. எழுத்தாளர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைக் காண நிழல் மாதிரி அவரைப் பின்தொடர்ந்தேன். நீண்ட நேரம் யாருடனோ மொபைலில் பேசிக்கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து வெளிவர இருக்கும் புத்தகங்களைப் பல்வேறு கோணங்களில் ஒருவர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். நாஞ்சில் நாடன் திரும்பும் வரை புகைப்படம் எடுக்கத் தேவையான உதவிகளை செய்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் நண்பர் சதீஷும் அங்கு வந்தார். "தூரத்தில் பார் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் இருக்கிறார், இங்கேயே இரு அவர் வரும் பொழுது அறிமுகம் செய்து கொண்டு பேசலாம்" என்றேன்.

"ஐயோ கிருஷ்ணா... அவருடைய புத்தகம் ஒன்றையும் வாசித்ததில்லை. என்னை விட்டுடுங்க..." என்று ஓடிவிட்டார்.

நானும் வாசித்ததில்லை. பாரதி மணியைப் பாராட்டி எழுதியதைத்தான் படித்திருக்கிறேன். அதை வச்சி சமாளிச்சிடலாம்... வாங்க என்ற போது அவர் உண்மையிலேயே ஓடிவிட்டார். நான் என்னுடைய மனசாட்சியுடன் பேசிக்கொண்டிருந்தது போல் எனக்குப் பட்டது.

கைபேசியில் உரையாடலை முடித்த நாஞ்சில் நாடன் எதிரில் வரவும் வழிமறித்து வணக்கம் சொன்னேன். பாரதி மணியைப் பற்றி நீங்கள் எழுதியதைப் படித்தேன். நன்றாக இருந்தது. திருநவேலிக்காரங்க மேல மணிக்குத் தனி பாசம் என்றேன்.

"ஆமாம், ஆமாம் இப்போ கூட சமீபத்துல அவருக்கு ஃபோன் செய்திருந்தேன்" என்றார்.

உங்களுடைய புத்தகம் வாசித்ததில்லை!.... என்று இழுத்தேன்.

"அதனால என்ன இனிமே படிக்கலாமில்ல" என்றார்.

உங்களுடைய கதைக்கான கரு எப்படிக் கிடைக்கிறது, எந்த நிலையில் சாத்தியமாகிறது?

எல்லோருக்குமே படைப்பிற்கான மூலம், அனுபவம் அல்லது புனைவு என்ற இரண்டு வகைகளில் கிடைக்கும். என்னுடையது கரு சொந்த அனுபவத்தில் கிடைப்பது. அது சமந்தமா உதாரணங்களுடன் பேசியவர் நேரம் ஆகவும் நண்பர்கள் காத்துக் கிடப்பார்கள் என்று விடைபெற்றுக் கிளம்பினார்.

பழைய படியே பூனை போல் அவரைப் பின்தொடர்ந்தேன். செல்லும் வழியில் வெளிவர இருக்கும் புத்தகங்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். 'நிலாரசிகன், விக்கிரமன், வெங்கட் சுப்பிரமணியன்' ஆகியோரது புத்தகங்களை எடுத்துக் கொண்டு புத்தகத்திற்கான பணத்தைக் கொடுத்தேன். ஒரு சொட்டு ரத்தம் ரசீதின் மேல் விழுந்தது. பதற்றத்துடன் அருகில் வேலை செய்து கொண்டிருந்தவரைப் பார்த்தேன். அவருடைய விரல் கீறப்பட்டு ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. தயவு செய்து அதை சரிசெய்யப் பாருங்க என்று சொல்லிவிட்டு மீதிப் பணத்தை வாங்கிக் கொண்டு கிளம்பினேன். புத்தகத்தை மறந்திட்டிங்களே? என்ற குரலைக் கேட்டுதிரும்பினால் முத்துசாமி பழனியப்பன் நான் வாங்கிய புத்தகங்களுடன் நின்றுகொண்டிருந்தார்.

உள்ளே விஷ்ணு, அதி பிரதாபன், சதீஷ் மற்றும் பலர் இருந்தனர். புகைப்படம் எடுப்பதற்கு விஷ்ணு தன்னுடைய கேமராவை சரிசெய்து கொண்டிருந்தார். அவர்களின் அருகில் சென்று அமர்ந்து கொண்டோம்.

வேலையாக இருந்த நிலாரசிகனும் வந்து சேர்ந்தார். எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் வணக்கம் தெரிவித்தார். என்னை அவருக்கு அறிமுகம் செய்து கொண்டு சிறுகதைத் தொகுப்பை வாங்கிவிட்டதையும் தெரியப்படுத்தினேன்.

"நீங்க தான் மொத போனி... சரியா விக்கலையோ சும்மா விடமாட்டேன்" என்று கூறினார்.

"சொந்தக் காசுல சூனியம் வச்சிக்கிட்டமோ!" - என்று யோசிக்கலானேன். நிகழ்ச்சி ஆரம்பிக்க சிறிது நேரம் இருக்கும் போது சொந்த வேலையின் காரணமாக அங்கிருந்து புறப்பட வேண்டியிருந்தது. ஆகவே அவரின் அழைப்பிற்கு நன்றி தெரிவித்துக் கிளம்பினேன். எனக்கு முன்வரிசையில் 'யுவ கிருஷ்ணா' உட்கார்ந்து கொண்டிருந்தார். என்னை அறிமுகம் செய்து கொண்டு பேச ஆரம்பித்தேன். உங்களுடைய பதிவை படித்திருக்கிறேன் என்றார். புதிய தலைமுறை இதழுக்கு மக்களிடம் வரவேற்பு எப்படிஇருக்கின்றது என்பதைப் பற்றி சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வெளியில் வந்தேன்.

பரபரப்பான அண்ணா சாலையில் நடக்கத் துவங்கினேன். என்னுடைய பேருந்தும் கிடைத்து ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.

ஒரு எழுத்தாளரின் புத்தக வெளியீடு நடக்கும் சமயத்தில், வெளியிடவிருக்கும் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும் ஒரே ஆள் உலகத்தில் நானாகத் தான் இருக்கும். பேருந்து நின்றுநின்று சென்று கொண்டிருந்தது. நானும் பக்கம் பக்கமாகப் புரட்டிக் கொண்டிருக்கிறேன்.

Tuesday, December 15, 2009

எழுத்தாளர் திலீப் குமார்

சந்திப்பு தொடங்குவதற்கு 20 நிமிடங்கள் இருக்கும் போதே கேணிக்குச் சென்றுவிட்டேன். யாருமே இல்லாததால் வற்றிய கிணறினை எட்டிப் பார்ப்பது போல் இருந்தது. ஞானியின் குரல் மட்டுமே உள்ளறையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தது. வெளியில் செல்ல வாசலுக்கு வந்தேன், பாஸ்கர் சக்தி அவருடைய நண்பருடன் நின்றுகொண்டிருந்தார்.

அருகில் சென்று மிரச்சியுடன் அவரைப் பார்த்தேன். "ஞானி வந்துவிட்டாரா?" என்று கேட்டார்.

"அவருடைய குரல் உள்ளறையில் கேட்டது. ஆனால்...மற்றவர்கள்....?" என்றேன்.

"15 நிமிடங்கள் இருக்கிறதே... மக்கள் வந்துவிடுவார்கள்..." என்று சொல்லிவிட்டு அவரும் எங்கோ சென்றுவிட்டார்.

மீண்டும் தனியாளாக மிரட்சியுடன் நின்றுகொண்டிருந்தேன். சிவராமன் (பைத்தியக்காரன்) வந்து தேநீர் அருந்திவிட்டு வரலாமா? என்று சுத்தத் தமிழில் கேட்டார். பலூன் விற்பவனின் பின்னால் குழந்தை செல்வது போல சிவராமனுடன் சென்றுகொண்டிருந்தேன். தமிழின் சிறந்த புத்தகங்களைப் பற்றி அந்த நேரத்தில் பேச முடிந்தது. தேநீர் அருந்திவிட்டு கேணிக்குத் திரும்பிய போது 10 நபர்கள் இருந்தார்கள்.அவர்களுடன் நானும் சென்று அமர்ந்துகொண்டேன். சினிமாவில் எடிட்டிங் துறையில் பணியாற்றும் இருவரும், தரமணி ஃபிலிம் இன்ஸ்ட்யூடில் பயிலும் இருவரும் எனதருகில் அமர்ந்திருந்தனர்.

கூட்டம் ஆரம்பிக்க சிறிது நேரம் இருந்த போது இரண்டாம் குழந்தைப் பருவத்திலிருக்கும் 'அஞ்சளா' அருகில் வந்தமர்ந்தார். என்னைப் பற்றி அறிமுகம் செய்துகொண்டு அவரைப் பற்றி விசாரித்தேன். சிரித்தார்....

நீங்கள் என்ன பதிவு எழுதுகிறீர்கள்? என்று கேட்டேன்.

"Me... Blog...No..." என்றார்.

துருவி விசாரித்ததில், அவர் டெல்லியில் வாழ்ந்தவர் என்பதும், சாகித்ய அகாடமிக்காக பெங்காலி மற்றும் ஹிந்தி படைப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் என்பதும் தெரியவந்தது. (உரையாடலின் போது இந்திரா பார்த்த சாரதியின் மாணவி என்றும், பிரபல எழுத்தாளரின் வகுப்புத் தோழி என்றும் கூறினார்.)

) 0 (

"நானும் பாஸ்கர் சக்தியும் சேர்ந்து கேணி சந்திப்பை ஆரம்பிக்கும் போது, அதிகமாக 30 நபர்கள் வருவார்கள் என்றுதான் நினைத்திருந்தோம். எஸ்.ரா -பங்கு பெற்ற முதல் சந்திப்பில் 150 பேரும், விடாத மழைக்கு இடையிலும் அசோகமித்திரன் பங்கு பெற்ற சந்திப்பில் 90 பேரும் பங்கு பெற்றனர்.ஆகவே இந்தச் சந்திப்பு தான் இலக்கிய சந்திப்பு போல இருக்கிறது. ஆனாலும் 30 நபர்களுக்கு அதிகமாகத் தான் இருக்கிறார்கள்" -என்று ஆரம்பித்தார்

30 வருட கால எழுத்தாள நண்பரான திலீப் குமாரை அறிமுகம் செய்வதற்கு முன்பு "எத்தனை பேர் இவருடைய சிறுகதைகளைப் படித்திருக்கிறீர்கள்?" என்று கேட்டார்.

5 பேர் கையை உயர்த்தினார்கள்.

ஒரு சிறுகதையாக இருந்தாலும் பரவாயில்லை என்று சொல்லிய போது, மேலும் 3 பேர் கையை உயர்த்தினார்கள் அதில் நானும் ஒருவன்.

இந்தக் கேள்வியை எதற்கு நான் கேட்கிறேன் என்றால் அவருடைய புத்தகங்கள் இப்போது அச்சில் இல்லை. மீண்டும் அவருடைய புத்தகங்கள் இளம் வாசகர்களுக்குக் கிடைக்க வேண்டும், அதற்கு தேவையான நடவடிக்கைகளை அவர் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சிறுகதை, இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு என்று அவர் ஆற்றிவரும் சீரிய பங்களிப்பையும், வெளிநாட்டிலுள்ள நூல் நிலையங்களுக்கு மிகுந்த சிரமங்களுக்கிடையில் முக்கியமான நவீன இலக்கியங்களை அறிமுகம் செய்து வைப்பதையும் சிலாகித்துப் பேசினார். அமேரிக்கா, மெக்ஸிகோ போன்ற நாடுகளிலுள்ள பல்கலைக் கழகங்களின் தமிழ் த்துறை மாணவர்களுக்கு பகுதி நேர ஆசிரியராக இருந்து நவீன இலக்கியம் பற்றி வகுப்பெடுப்பதாகவும் கூறினார்.

1857 முதல் 2007 வரையிலான சிறந்த சிறுகதைகளை வரிசைப்படுத்தி அதனை வெளியிடுவதில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார் என்ற உப தகவலையும் வெளியிட்டார். இவர் செய்யும் வேலைகளை மாணவர்கள் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளலாம். அந்த அளவிற்கு இலக்கியப் பணி ஆற்றியவர். என்றாலும் இவர் பள்ளிப் படிப்பை தாண்டாதவர் என்பது குறிப்பிடத்தக்கது என்றபோது பிரம்மிப்பாக இருந்தது.

பாஷா பாரதி, சாரல் விருது போன்ற பல முக்கியமான விருதுகளைப் பெற்ற அவருடன் எழுபதுகளின் தொடக்கத்தில் ஒரே வீட்டில் வசித்த போது இருவரும் சேர்ந்து மொட்டை அடித்ததையும் சொல்லி சந்தோஷப்பட்டார்.

இலக்கிய நண்பர்களின் சம்மதத்துடன் - திலீப் குமாரின் 'நிகழ மறுத்த அற்புதம்' என்ற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட திருமதி ஜேம்ஸ் இப்போது என்ன செய்ய வேண்டும்? என்ற குறும்படம் திரையிடப்பட்டது. அதன் பிறகு திலீப் குமார் தனது உரையாடலைத் துவக்கினார்.

) 0 (

பொதுவாகவே எனக்குக் கூச்சம் அதிகம். பிரபஞ்சன், எஸ்.ரா-வைப் போல எனக்குப் பேசவராது. கூட்டத்துக்குப் போறேன்னு என்னோட மனைவியிடன் சொன்ன போது "இன்னுமாயா இந்த ஊரு உன்ன நம்புது?" -ன்னு வடிவேல் மாதிரி சொன்னாங்க. அதனால கொஞ்சம் சமாளிச்சுக்கோங்க.

என்னுடைய ஆரம்ப கால பள்ளி வாழ்க்கை முரணானது. மூன்றாம் வகுப்பு வரை தமிழ் பள்ளியிலும், எட்டாவது வரை குஜராத்தி மொழிப் பள்ளியிலும் கல்வி பயின்றேன். எதிர்பாராத விதமாக என்னுடைய பதின் பருவத்தில் தந்தையை இழக்க நேர்ந்ததால், குடும்ப சூழ்நிலை காரணமாகக் கல்வி வாய்ப்பை 14 வயதிலேயே இழந்தேன். குடும்ப கஷ்டத்தைக் கலைவதர்க்காக ஜவுளிக் கடையில் வேலைக்கு சேர்ந்தேன். ஒரு நாளைக்கு 35-/ ரூபாய் சம்பளம். லாட்டரி சீட்டு, டீத் தூள், கேஸ் பர்னர் போன்ற பல பொருட்களையும் விற்றிருக்கிறேன். Dry Clean Shop-ல் Bill போடும் வேலையையும், டெலிவரி செய்யும் வேலையையும் செய்திருக்கிறேன். வேலை கடினமாக இருக்கும். படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால் கையில் கிடைக்கும் அனைத்தையும் படிப்பேன்.

மாறிமாறிப் படித்ததால் தமிழ், குஜராத்தி, ஆங்கிலம் ஆகிய எந்த ஒரு மொழியிலும் சரியான தேர்ச்சி இருக்கவில்லை. சுய முயற்சியால் தமிழ் மொழியைக் கற்க முற்பட்டேன். ஆனால், எனக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை. ஆங்கிலத்தையும் அதுபோலவே கற்றுக் கொண்டேன்.

ஒரு முறை குஜராத்தி பள்ளியில் படிக்கும் போது ஆண்டு மலருக்காக ஒரு சிறுகதை எழுதினேன். சிறப்பு என்னவெனில் தமிழ் மொழியில் எழுதினேன். எங்களுடைய தமிழ் வாத்தியார் ஒரு மாதிரி... 'சாக்ரடீஸ்' என்ற வார்த்தையை 'சாக்ரடீசு' என்றும், 'விஷம்' என்ற வார்த்தையை 'விடம்' என்றும்தான் சொல்ல வேண்டும் என்று அடம்பிடிப்பார். மறதியில் தவறாகக் கூறினாலும் அடித்துவிடுவார். அவரிடம் என்னுடைய சிறுகதையை எழுதிக் கொடுத்துவிட்டேன்.

கதை வித்யாசமாக இருக்க வேண்டுமென்று 1962-ல் நடந்த போரினை மையமாக வைத்து எழுதினேன். 'மங்களா' - கதையின் நாயகி.
கதையின் தலைப்பு 'அசம்பாவிதம்'. போரினால் விதவையாகிறாள். தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையையும் நாட்டுக்கு அற்பணிக்கும் திலகமாக அவளைக் கற்பனை செய்து எழுதினேன். இந்த பாத்திரத்திற்கு கண்ணம்மா தான் எனக்கு Inspiration. படம் ஆரம்பித்து முடியும் அரை அழுது கொண்டிருப்பார்களே அவர்களே தான்.

அதன் பிறகு நீண்ட காலம் எழுதுவதைப் பற்றி நினைத்ததில்லை. ஜவுளிக் கடையில் வேலை செய்தபோது தினம்தோறும் டீ குடிப்பதற்கு காலணா கொடுப்பார்கள். அப்படி டீ-குடிக்கச் சென்ற போது ஒரு முறை 'ஞான ரதம்' இலக்கியப் பத்திரிகையை பார்க்க நேர்ந்தது. ஜெய காந்தன் ஆசிரியராக இருந்து வெளிவந்த பத்திரிகை. இரண்டு நாள் டீ-காசை மிச்சப்படுத்தி அந்தப் பத்திரிகையை வாங்கினேன். அந்த சூழ்நிலையில் எனக்கு அது ஒரு பெரிய தொகை. இருந்தாலும் எனக்குள் இருந்த இலக்கிய ஆர்வம் பற்றிக் கொண்டது.

உடனே என்னுடைய நான்கு கவிதைகளை 'ஞான ரத்தத்திற்கு' அனுப்பினேன். ஜெயகாந்தன் எதிரில் இருப்பவர்களை ஆச்சர்யப் படுத்துபவர். நாம் ஒன்று நினைத்து "இதை ஏன் எழுதினீர்கள்?" என்று கேட்டால்... "நீ ஏன் படிக்கிறாய்?" என்று திருப்பிக் கேட்பார்..." அவரிடமிருந்து நான் அனுப்பிய கவிதைக்கான ஒரு கடிதம் வந்தது. "நீங்கள் ஷெல்லியைப் படித்ததுண்டா?" என்று. இல்லை என்று ஒரு பதில் கடிதம் எழுதினேன்.

கவிதை நன்றாக இருக்கிறது என்று அவர்களும் பதில் கடிதம் போட்டார்கள். நீண்ட நாட்கள் பிரசுரம் ஆகாததால் விசாரித்து மீண்டும் ஒரு கடிதம் எழுதினேன். கவிதை தொலைந்துவிட்டது என்றார்கள். மேலும் சிறுகதை எழுதி அனுப்புமாறு கேட்டார்கள். நானும் ஒன்னரை பக்க கதையை பெரிய பெரிய எழுத்துகளில் 6-பக்கங்கள் வருவது போல எழுதி அனுப்பினேன். அதிர்ஷ்ட வசமாக அந்தக் கதை பிரசுரம் ஆனது.

நீண்ட நாள் கழித்து 'ஞான ரதம்' என்னை வசீகரித்ததைப் பற்றி ஜெய காந்தனை நேரில் சந்தித்த போது தெரியப்படுத்தினேன். "அந்த காசிற்கு நீ நல்ல சினிமா பார்த்திருக்கலாமே!" என்றார். அவர் எப்பவுமே அப்படித்தான். பகட்டான தோரணையான மனிதர். அவருக்கு இதெல்லாம் பிடிக்கும் ஆனால் பகிரங்கமாகத் தெரியப்படுத்த மாட்டார். என்னைப் பொறுத்தவரை ஜெயகாந்தன் மாதிரியான ஆட்கள் ஹால் டிக்கெட் மாதிரி. அது இருந்தால் தான் தேர்வு எழுத முடியும். எது எப்படி இருந்தாலும் தேர்வுதானே முக்கியம்.

அதன் பிறகு எனக்கு tuberculosis (TB) வந்து கொடுமையான வலியை அனுபவித்தேன். ஒருநாள் திடீரென ரத்த வாந்தி எடுத்தேன். இரவு 2 மணிக்கு நடந்தே 4 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மருத்துவமனைக்குச் சென்றோம். அவர்கள் ஸ்கேன் எடுக்க வேண்டும் 60 ரூபாய் ஆகும் என்றார்கள். அந்தக் காலத்தில் TB தீவிர வியாதி என்பதால் சீக்கிரமே இறந்து விடுவேன் என்று தான் நினைத்தேன். இரண்டு மாத காலம் வீட்டிலிருந்து ஒய்வு எடுக்கச்சொன்னார்கள். தயவு செய்து இதையெல்லாம் சுய இரக்கத்திற்காக சொல்கிறேன் என்று நினைத்து விடாதீர்கள். நான் கடந்து வந்த பாதையை உங்களுடன் பகிந்து கொள்கிறேன்.

ஒய்வு நேரத்தில் சும்மா இல்லாமல் "தீர்வு" என்ற கதையை எழுதிக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்த அண்ணன் கோவத்துடன் கதையைப் பிடுங்கி எங்கள் வீட்டின் பக்கத்திலுள்ள குழியில் போட்டுவிட்டார். அந்தக் குழி எங்கள் பகுதியிலுள்ள பெண்கள் மலம் கழிக்கும் இடம். இது நடந்தது மாலை 6 மணிக்கு என்பதால் அங்கு சென்று எடுத்துவரவும் முடியவில்லை. ஆகவே அதன் மீது யாரும் மலம் கழித்து விடக்கூடாது என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். பாருங்கள் கடவுளை எதற்கெல்லாம் கூப்பிடவேண்டியிருக்கிறது. நல்ல வேலை யாரும் அசம்பாவிதம் செய்யவில்லை. விடிந்தவுடன் அந்தத் தாள்களை எடுத்து கதையை வேறு பிரதியெடுத்து கணையாழிக்கு அனுப்பிவைத்தேன். கணையாழியில் அது பிரசுரம் காண ஒரு வருட காலத்திற்கும் மேலானது.

ஒரு முறை நான் சென்னையிலிருந்த போது கணையாழி கஸ்தூரிரங்கனை சந்திக்க நேர்ந்தது. அப்பொழுது "தீர்வு" கதையை ஞாபகப் படுத்தினேன். அது நல்ல கதையாச்சே அப்பவே
போட சொல்லிட்டேனே! என்று அருகிலிருந்தவரிடம் கூறினார். அவர் தேடித் பார்த்து விட்டு கடைசி நாலு பக்கங்கள் தொலைந்துவிட்டது என்றார். அதன் பிறகு உட்கார்ந்து மீண்டும் எழுதிக் கொடுத்தேன். இன்று வரை அந்தக் கதை என்னை அடையாளப்படுத்துகிறது. "தீர்வு" வெளியான பிறகு நிரந்தரமாக சென்னைக்கு வந்துவிட்டேன். அப்பொழுதுதான் ஞானியுடன் ஒரே வீட்டில் வசிக்க நேர்ந்தது என்று சிநேகத்துடன் அவரைப்பார்த்தார்.

சிரமங்களுக்கிடையிலும் க்ரியா ராமகிருஷ்ணனுடன் 15 வருடங்கள் இருந்ததன் மூலம் தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள் அறிமுகமானார்கள். நானும் நேரம் கிடைக்கும் போது எழுதத் துவங்கினேன். பின்னர் நவீன தமிழ் இலக்கியத்தில் படிப்படியாகப் பரிச்சயம் கொள்ள என்னால் முடிந்தது. மொழி, அறிவு சார்ந்த போதாமையையும் மீறி நான் எழுதுவதற்கு நான் சந்தித்த மனிதர்களே காரணம்.

) 0 (

வறுமை காரணமாக சிறுவயதிலேயே வேலைக்குச் சென்றதால் அடித்தட்டு மக்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. நான் ஜவுளிக் கடையில் வேலை செய்த போது ஒரு விபச்சார விடுதியின் ஸ்தாபகர் எங்கள் கடைக்கு வருவார். அங்கிருக்கும் பெண்களை வெளியில் அனுப்பமாட்டார்கள். ஆகவே யார் யாருக்கு என்னென்ன வேண்டுமென்று கேட்டு ஒரு பேப்பரில் எழுதிக் கொண்டு வருவார். அதைப் பார்த்தாலே அங்கு எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று தெரிந்துவிடும். 32 Size Bra நாலு செட், 36 Size Bra மூணு செட் என்று அவர்களுக்குத் தேவையானது எல்லாமே இருக்கும். என்னுடைய கடையில் நான்தான் சிறியவன் என்பதால் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு அவர்களிடம் கொடுக்கச் செல்வேன்.

அங்கு குயின் என்றொரு பெண் இருந்தாள். அந்தக் காலத்துலேயே நல்லா படிச்சவங்க. இங்க்லீஷ் எல்லாம் நல்லா பேசுவாங்க.அதனால எல்லாருக்கும் அவங்க மேல ஒரு மோகம். சில பேருக்கு வாழ்க்கையின் பெரிய லட்சியமே காசு சேர்த்து வச்சி அவங்களை அடையறதுதான். எங்கிட்ட ரொம்ப அன்பா இருப்பாங்க. அவங்கள பத்திக் கூட ஒரு கதை எழுத யோசிச்சிக்குனு இருக்கேன்.

இதே மாதிரி ஒரு முறை என்னோட நண்பனை சினிமா பார்க்க கூப்பிட்டு இருந்தேன். அவனுடைய அம்மா விதவை. வேலையிலிருந்து சீக்கிரமே புறப்பட்டு வீட்டிற்கு சென்று சாப்பிட்டுட்டு வந்துவிட்டேன். அவனோட வீட்டிற்கு அருகில் சென்ற போது வெளியே நின்று கொண்டிருந்தான். "நீ இன்னும் கிளம்பலயாடா?" என்று கேட்டேன். "கொஞ்சம் பொருடா" என்று சொன்னான். நீண்ட நேரம் கழித்து ஒரு ஆள் அவனுடைய வீட்டிலிருந்து வெளியே வரவும் இவன் சென்று சாப்பிட்டுவிட்டு வந்தான்.

சினிமா பார்த்துவிட்டு திரும்பும் போது அதைப் பற்றி விசாரித்தேன். "எங்க அம்மா எனக்காக ரொம்ப கஷ்டப் படுறாங்கடா. அவங்களுக்கு அது சந்தோஷமா இருக்கும் போல... அதான் அப்படியே விட்டுட்டேன்..." என்று சொன்னான்.

பொருளாதார ஏற்றத் தாழ்வுகளாலும், 4 தலைமுறைகளுக்கு முன்பே தமிழகத்திற்கு வந்ததினாலும் எங்கள் சமூகத்தினரிடையே எங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்டிருந்த ஒதுக்கம், கல்வி இழப்பு, என் தனிப்பட்ட எண்ணங்கள் இவற்றால் என்னுடைய தனித்துவத்தை அடையாளப்படுத்தப் போராடினேன். அந்த தனித்துவம் எனக்கு இலக்கியமாக அமைந்தது. மேற்சொன்ன மனிதர்களின் பரிச்சயம் அதற்கான
களமாக அமைந்தது.

பெரிய பத்திரிகையின் தீபாவளி இதழுக்காக என்னிடம் ஒரு காதல் கதையைக் கேட்டிருந்தார்கள். எனக்கு காதல் கதையெல்லாம் வராது என்று சொல்லிவிட்டேன். "என்ன சார்... நீங்க பெரிய எழுத்தாளர் எதாச்சும் ஒன்னு எழுதிக் கொடுங்களேன். உங்களைப் போல எழுத்தாளர்கள் எல்லாம் எழுதறாங்க நீங்க மட்டும் ஏன் நிராகரிக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்.

"நீங்கள் எத்தனை சிறுகதைகளை ஒதுக்குகிறீர்கள். அதன் மூலம் எத்தனை நூறு பேரை நிராகரிக்கிறீர்கள். நீங்கள் நிராகரிப்பதை அவர்கள் எப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். அந்த நூறு எழுத்தாளர்களில் ஒருவன் உங்களுடைய ஒரேஒரு பத்திரிகையை நிராகரிப்பதற்கு நீங்கள் ஏன் இவ்வளவு கோவப்படுகிறீர்கள்" என்று கூறினேன்.

ஜெயகாந்தன் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை அவருடைய படைப்புகளில் கொண்டுவந்தது போல, என்னை பாதித்த விஷயங்களை எழுதத்தான் நானும் பிரியப்படுவேன். பல மனிதர்களை ஏற்றுக் கொள்வதாலும், அவர்களுடைய உணர்விற்கு மதிப்பளிப்பதாலும், நகைச்சுவை உணர்வு இருப்பதாலும் வாழ்க்கையின் யதார்த்த நிலைகளைக் கொண்டே என்னுடைய இலக்கிய முயற்சிகளை மேற்கொள்ள விழைகிறேன். மற்றபடி எந்த இலக்கியக் கொள்கையோடும் என்னை நான் இணைத்துக் கொண்டு செயல்பட்டதில்லை என்று கூறியதோடு நீண்ட நேரம் பேசி அருத்துவிட்டதாகத் தெரிகிறது என்பது போல் பார்த்தார்.

எஸ். ராவின் புத்தக வெளியீட்டிற்கு நேரம் ஆனதால் எல்லோரும் பரபரப்பாக இருந்தார்கள். ஒரு சிலர் சத்தமில்லாமல் கடைசி வரிசையிலிருந்து நழுவினார். ஞானி மட்டும் கூலாக இருந்தார். அவர் பேச்சின் மீதான உரையாடலையும் தொடங்கி வைத்தார். யாருமே கேள்வி கேட்காமல் அமைதியாக இருந்தனர். அடியேன் முதல் கேள்வியைக் கேட்டு துவக்கி வைத்தேன். அதன் பிறகு கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கும் சுவாரஸ்யமாக பதில் கூறினார். ஆரம்பம் முதலே அவருடைய பேச்சில் ஆங்காங்கு நகைச்சுவை வெளிப்பட்டது. கேள்வி நேரத்தின் போது அதிகமான நகைச்சுவை வெளிப்பட்டது.

நல்ல எழுத்தாளர் என்பதையும் மீறி நல்ல மனிதரைச் சந்தித்த திருப்தியுடன் கேணியிலிருந்து திரும்பினேன்.

திலீப் குமாரின் இரண்டு சிறுகதைகள் இணையத்தில் படிக்கக் கிடைக்கிறது.
1. கண்ணாடி
2. அக்ரகாரத்தில் பூனை


பின் குறிப்பு:
1. என்னுடைய ஞாபகத்
தில் இருப்பதை எழுதி இருக்கிறேன்.
2. நண்பர் 'ரவி பிரகாஷ்' வராததால் பதிவு நீண்டு விட்டது.
3.
அவர் பேசியது அனைத்துமே நகைச்சுவையாக இருந்தது. படிக்கும் போது சீரியசாகத் தெரிந்தால் அதற்கு நானே பொறுப்பு. கிட்டத்தட்ட மூன்று மணிநேரப் பேச்சின் சிறு வடிவம். ஆகவே பல விஷயங்கள் விடுபட்டிருக்கலாம்.

Wednesday, December 2, 2009

மணியுடன் சில மணித்துளிகள்

முன்பெல்லாம் ஏதாவது ஆலோசனை தேவையென்றால் வினோத்திடம் கேட்பேன். அவன் சிகிச்சைக்காக கேரளா சென்றுள்ளதால் முத்துவிற்கு ஃபோன் செய்தேன்.

"டேய் முத்து, பாரதி மணி [S K S மணி] -ன்னு ஒரு மேடை நடிகர் சென்னையில இருக்காரு... பாபா, அந்நியன் போன்ற வர்த்தகப் படங்களிலும்,
பாரதி போன்ற நிறைய விருதுப் படங்களிலும் நடித்தவர். அவருடைய மொபைல் நம்பர் கெடச்சிது. அதான் அவரைப் பார்க்க போகலாம்னு இருக்கேன். நீ என்ன சொல்ற..."

அவனுக்கு சினிமா ஆர்வம் அதிகம் என்பதால். "சரி மாமா, போய்த் தொலைங்க" என்று கூறினான்.

விசேஷம் என்னவென்றால் அவருக்கு வயது 72. ஆகச்சிறந்த விசேஷம் என்னவென்றால் அவருடைய 'பல நேரங்களில் பல மனிதர்கள்' புத்தகம் தான். தன்னுடைய ஐம்பது வருட டெல்லி வாழ்க்கையையும், தான் சந்தித்த சிறந்த ஆளுமைகளுடனான அனுபவங்களையும் கட்டுரையாக்கியுள்ளார்.

"ரஜினியுடன் நடிப்பவர், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா போன்றவர்களுடன் மேடை நாடகத்திற்கு விவாதித்தவர், அமரர் நேருவுக்கு தோல் கொடுத்து ஒன்றாக நடந்தவர், அருந்ததி ராய், ராஜீவ் காந்தி போன்றவர்களுடன் கை குளுக்கியவர், கா நா சு -வுடன் ஒரே வீட்டில் வாழ்ந்தவர்" நமக்கு எங்கு நேரம் கொடுக்கப் போகிறார் என்று நினைத்துக் கொண்டு அவருடைய மொபைலில் தொடர்புகொண்டேன்.

முடுக்கிவிடப்பட்ட எண்கள் எதிரே ஒலிக்கிறது. காலை 9 மணி என்பதால் நீண்ட நேரமாக ஒலிக்கிறது. எதிர் முனையில் மொபைலை எடுத்தவர் "ஹலோ" என்றார். நானும் வணக்கம் சொல்லிவிட்டு, "ஐயா, பாரதி மணி இருக்கிறார்களா?" என்றேன்.

"நான் தான் பேசறேன். சொல்லுங்க..."

"நான் கிருஷ்ணப் பிரபு பேசறேன். உங்களை இன்று பார்க்க வரலாம் என்றிருக்கிறேன். வீட்டில் இருப்பீர்களா மணிஜி?" என்று கேட்டேன்.

"ஓ நீங்களா!... அந்தப் பதிவர் தானே. என்னை பாக்கறதுக்கு எதுக்கய்யா Appointment. தாராளமா வாரும்"

"என்ன சொல்றீங்க மணிஜி... எவ்வளோ பெரிய
மேடை நடிகர் நீங்க!. எதாச்சும் ஒத்திகை அல்லது ஷூட்டிங் இருக்கும் இல்ல..." என்றேன்.

"அதெல்லாம் ஒன்னும் இல்லை. சும்மா தான் இருக்கேன் நீங்க தாராளமா வாங்க."

"உங்களுடைய முகவரி தெரியாது... அதனால கொஞ்சம் சொல்றீங்களா நான் எழுதிக்கிறேன்?" என்றேன்.

"எதுக்கு எழுதிக்கிட்டு. நான் SMS அனுப்பிடறேன்..." என்று சொல்லி முடித்தார். அடுத்த இரண்டு நிமிடங்களில் எனக்கான குறுந்தகவல் வந்து சேர்ந்தது.

பனி பொழியவேண்டிய காலத்தில் லேசான தூறல் தூறிக் கொண்டிருந்தது. என்னுடைய
சாதாரண இயல்பும் மாறி லேசான பதற்றம் இருந்தது. "சாய் நகர், மூன்றாவது பிரதான சாலை, விருகம்பாக்கம்" - இதற்கு கோயம்பேட்டில் இருந்து வடபழனி செல்வதுதான் சரியென்று அங்கு சென்று பிறகு விருகம்பாக்கம் செல்லும் பேருந்தில் ஏறினேன்.

ஓட்டுனரின் அருகில் சென்று 'சாய் நகர் வந்தால் தெரியப்படுத்துங்கள்' என்று சொல்லிவிட்டு அவரின் பின்னால் உட்கார்ந்து கொண்டேன். மண்டையை மண்டையை ஆட்டியவர் தூங்கிவிட்டார் என்று நினைக்கிறேன். கோயம்பேடு மார்கெட் நெருக்கமாக வரவும் நான் விழித்துக் கொண்டேன்.

"இதைத் தாண்டியா 'சாய் நகர்' இருக்கிறது?" என்றேன்.

"அடடே... மூணு ஸ்டாப்பிங் முன்னாடியே சாய் நகர் போயிடுச்சே... என்னப்பா இப்போ வந்து கேக்குற..."

திருவிழாவில் உறவினர்களைத் தொலைத்துவிட்டு அழுதுகொண்டிருக்கும் குழந்தையைப் பார்ப்பது போல் இரக்கமுடன் என்னைப் பார்த்தார். இதெல்லாம் என் வாழ்க்கையில் சகஜம் என்பது போல் அவரை நோக்கி சமாதானப் புன்னகையை வீசினேன். . முன்வைத்த காலை பின்வைப்பதில்லை என்ற கொள்கையை உடையதால் மூன்று நிறுத்தங்கள் பின்னோக்கி சென்றேன். (
கோயம்பேட்டிலிருந்து நடந்தே சென்றிருக்கலாம். கோவில் சுற்றுவது போல் பாரதி மணியின் வீட்டை மையமாக வைத்து சுற்ற வேண்டும் என்றிருந்தால் யாரால் மாற்றமுடியும்.)

வழியில் விசாரித்துக் கொண்டே அவருடைய அடுக்குமாடி குடியிருப்பிற்குச் சென்று அழைப்பு மணியை அழித்தினேன். கதவு திறக்கப்பட்டு என்னை எதிர் கொண்டவர் "நீங்க தானே கிருஷ்ண பிரபு, Come in... Come in..." என்று உள்ளேஅழைத்தார். நான் வரவேற்பரையிலேயே நின்றுவிட்டேன். அவருடைய படுக்கை அறையிலிருந்து மீண்டும் குரல் கேட்டது "Come in... Come in... Take you space here"

சங்கோஜத்துடன் உள்ளே சென்று உட்கார்ந்து கொண்டேன். அவரிடம் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. புகையிலையை லேசாகத் தூவி புகையிழுக்கும் பைப்பை உதட்டில் திணித்து பற்ற வைத்துக்கொண்டே என்னைப் பற்றி விசாரித்தார். சொந்தக் கதை, வந்தக் கதையையெல்லாம் சொல்லிவிட்டு அவரைப் பற்றி விசாரித்தேன். இடையே புகை பிடிக்கறது சிரமமா இருந்தா சொல்லிடுங்க என்றார்.

அவருடைய டெல்லி வாழ்க்கையையும், நண்பர்களுடனான அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். நிகம்போத் காட், பூர்ணம் விஸ்வநாதன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, அருந்ததி ராய், ரிலையன்ஸ் பாலு போன்ற பல நபர்களுடனான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

தயங்கி தயங்கி, "நான் சினிமாவையோ டிவியையோ அவ்வளவாகப் பார்ப்பதில்லை" என்றேன்.

No problem... நானும் பார்ப்பதில்லை. பழி வாங்கறத தவிர வேற என்ன இருக்கு அதுல... அப்படியே பார்த்தாலும் "animal channels" -தான் பார்க்கிறேன் என்றார்.

ராஜ் டிவியில் எஸ். ரா திரைக்கதை எழுதிய ஒரு நாடகத்தில் நடித்ததைப் பற்றி கேட்டேன்.

ரஜினி கூட அந்த சீரியலை விரும்பிப் பார்த்தாராம். எங்கயாவது வெளிய போயிட்டாலும் சௌந்தர்யாவிடம் சொல்லி ரெக்கார்ட் பண்ணச் சொல்லுவாராம். சில வெளியூர்களுக்கு ஷூட்டிங் போகும் போது பெண்கள் வந்து அந்த வயசான கேரக்டரில் நடித்ததைச் சொல்லி பாராட்டுவாங்க. எனக்கே ஆச்சர்யமா இருந்தது என்று கூறினார். எது எப்படி இருந்தாலும் ஒரு மேடை நாடகத்தில் நடித்துவிட்டு கீழிறங்கும் போது, 'நல்லா நடிச்சீங்க' என்று சொல்லி கை குளுக்குவாங்க பாருங்க... அந்த 'கிக்கே' தனி என்று கூறினார்.

மூன்று படுக்கையறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் அவர் மட்டும் தனியாக இருக்கவும், அவருடைய குடும்பத்தைப் பற்றி எப்படி விசாரிப்பது என்று தெரியாமல் தவித்தேன். நீண்ட நேரம் தொண்டையிலேயே இருந்ததால் பேச்சோடு பேச்சாக அந்தக் கேள்வி வெளியே வந்துவிட்டது.

நீங்கள் மட்டும் இருப்பதாகத் தெரிகிறது...?

ஓ அதுவா ... என்னோட ரெண்டு பெண்களும் Phd முடிச்சிட்டு நல்ல வேலைல இருக்காங்க. பெரியவ பெங்களூரில் தான் இருக்கா. அங்க இருக்கப்போ வாஸந்தி, பாவண்ணன், சொல்வனம் (இணையத்தளம்
) நிறுவனர் என சில நண்பர்களைப் பார்ப்பதுண்டு. வீட்டுக்கு வந்து பேசிட்டுப் போவாங்க. அவ கூப்பிடுராலேன்னு போனா Return Ticket கெடைக்கலன்னு சொல்லி படுத்தி எடுத்துட்ரா. இங்க இருக்க உங்களுக்கு என்னப்பா கொறச்சல், எதுக்கு தனியா இருந்து கஷ்டப் படனும்ன்னு சொல்றா. எனக்கு என்னமோ இங்கதான் சரியா வருது. இப்போல்லாம் புறப்படுற தேதி, கெளம்பற தேதி-ன்னு ரெண்டு டிக்கெட்டும் இருந்தாதான் போறது.

சாப்பாட்டுக்கு கஷ்டமா இருக்குமே... யார் சமைக்கிறார்கள்...?

இதோ பாருங்க, எனக்கு நாக்கு நாலு முழம். ருசியா சாப்பிடனும். அதனால வார நாட்களில் சமையல் செய்யறவங்க வந்து சமைப்பாங்க. அவங்களுக்கு எதுஎது எப்படி இருக்கனும்னு சொல்ல சொல்ல அவங்க சமைப்பாங்க. ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் நான் சமைப்பேன். இன்னைக்குக் கூட என்னோட சமையல் தான் என்று எழுந்து போனார்.

வரும்போது ஒரு தட்டில் வத்தல், வாழைப்பழம், கைக்குத்தல் அரிசி சாதம் (தேங்காய்த் துருவலுடன்) எடுத்துக் கொண்டு வந்தார். அவர்தான் சாப்பிடப் போகிறார் என்று நினைத்தேன். ஆனால் என்னிடம் நீட்டினார். கா நா சுவுக்கு என்னுடைய சமையல் என்றால் அலாதிப்பிரியம் தெரியுமோ என்றார். அதைப் பற்றி ஒரு கட்டுரைஅமுதசுரபி தீபாவளிமலரில் வந்திருக்கே பார்த்தீர்களா? என்று என்னிடம் நீட்டினார்.

இட்டிலி வடையில் அந்தக் கட்டுரையைப் படிக்க: அமிதாப் பச்சனிடம் க.நா.சு. கேட்ட கேள்வி! - பாரதி மணி

நான் அசை போட்டுக் கொண்டே புத்தகத்தை வாங்கினேன். ஒரு கையில் தட்டுடனும், ஒரு கையில் கட்டுரையுடனும் உட்கார்ந்து கொண்டிருந்தேன். நீங்க சாப்பிட்ட பிறகே படியுங்கள் என்ற சலுகையை வழங்கினார். சமையலைப் பற்றிய பல விஷயங்களையும் பகிர்ந்துகொண்டார். அதில் வறுத்த கொட்டையை அரைத்து தயார் செய்யும் காபியும் அடக்கம். அதை அவருடைய நண்பர்கள் பலரும் விரும்புவார்களாம். இந்த மாதிரி வித்யாசமான விஷயங்கள் எனக்கும் பிடிக்கும் அதற்கு இன்னொரு நாள் வருவோம் என்று நினைத்துக் கொண்டேன்.

நீங்க கொடுத்த dish ருசியாவும் வித்தியாசமாகவும் இருந்தது...

ஒரு நண்பர் நீண்ட நாட்களுக்கு முன்பு 'சரவணா பவன் அண்ணாச்சி இதைதான் தினமும் சாப்பிடுகிறார்' என்று அறிமுகம் செய்து வைத்தார். அதிலிருந்து நானும் இரண்டு வருடமாக இதைதான் சாப்பிடுகிறேன். என்ன ஒன்னு... அவர மாதிரி ஜெயிலுக்கு போக வேண்டியதுதான் பாக்கி என்றதும் பற்கள் தெரிய சிரித்தேன்.

இந்த பைப்ல எப்போதிலிருந்து சிகரட் பிடிக்க ஆரம்பிச்சீங்க?

முதல்ல ஆறு மாதத்திற்கு ஒரு முறை சிகரெட் பிடிப்போம்.
பிறகு தினம் மூன்றானது. அதன் பிறகு தினமும் முப்பது என்றானது. இதைப் பிடிக்கறதால அதைக் கணிசமா குறைச்சிட்டேன்.

பல வருஷங்களுக்கு முன்னாடி நெருங்கிய நண்பர் பிறந்த நாள் பரிசா கொடுத்தான். ரொம்ப நாளா உபயோகிக்காம வச்சிருந்தேன். இப்போ என் கூடவே இருக்குது என்றார். நான் அவருடைய மேசையைப் பார்த்தேன். அங்கு 6 சிகரெட் பைப்கள் இருந்தன.

நீங்கள் பூர்ணம் விஸ்வநாதனைப் பற்றி எழுதிய கட்டுரையை விரும்பி வாசித்தேன். (
அம்மா பரதேவதே! சுஜாதா எங்கே இருக்கார்?)

ஓ என்னுடைய புத்தகம் படித்தீர்களா?

இல்லை இல்லை. உயிர்மை - இணையத் தளத்தில் படிக்கக் கிடைக்கிறது. உங்களைப் பார்க்க வந்ததே புத்தகம் வாங்கிக் கொள்ளத்தான். என்றதும் அவரிடம் இருந்த 'பல நேரங்களில் பல மனிதர்கள்' புத்தகத்தின் பிரதியை அன்பளிப்பாகக் கொடுத்து ஆசீர்வதித்தார். புத்தகத்தில் என்னைப் பற்றி எழுதியவர்கள் நிறைய பொய் சொல்லி இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு சிரித்தார்.

நான் எழுந்து நின்று அவரிடமிருந்து அந்தப் புத்தகத்தை ஆர்வத்துடன் வாங்கிக் கொண்டேன்.

எங்களுடைய உரையாடலில் பகிர்ந்து கொண்ட சில விஷயங்கள் புத்தகத்திலும் இருக்கிறது என்றார்.அதன் பிறகு பேச்சு அவர் சமீபத்தில் நடித்துவரும் 'படித்துறை' சினிமாவிற்கு திரும்பியது. பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனகராக இருந்த சுகா படத்தை இயக்குகிறார். அதில் அவர் ஏற்று நடிக்கும் பாத்திரத்தின் புகைப்படம் சிலவற்றை மொபிலில் காண்பித்தார். வெளிவராத படம் என்பதால் சுகாவின் பதிவுகளுக்கு (வேணுவனம்) பேச்சை மாற்றினேன்.

சுகாவைப் பற்றி சில மணித்துளிகள் பேசிவிட்டு மணியைப் பார்த்தேன். என்னுடைய கைபேசியில் நண்பகல் 1 மணி என்றிருந்தது. இதற்கு மேல் இருப்பது அவருக்கு சிரமமாக இருக்குமென்று அவருடன் கை குலுக்கிவிட்டு புறப்படுவதாகக் கூறினேன். வாசல் வரை வந்து வழியனுப்பினார். எனக்கென்னவோ வழியெல்லாம் காஃபி வாசனை வந்துகொண்டே இருந்தது.

Monday, November 16, 2009

கேணி சந்திப்பு - அசோகமித்திரன்

இரண்டு நாட்களாக அடை மழை பெய்து கொண்டிருந்தது. வீட்டின் ஜன்னலருகில் அமர்ந்து தூறிக் கொண்டிருக்கும் வானத்தையே பார்த்துக் கொண்டிருக்கலாம் என்றிருந்தது. இரண்டாம் ஞாயிறு என்பதால் இருப்புக் கொள்ளவில்லை. அசோகமித்திரன் பங்கு பெற்று கேணியில் உரையாற்ற இருக்கிறார். மழை என்னவோ நின்றபாடில்லை.

"கேணி சந்திப்பு நிச்சயமாக நடைபெறும் கண்டிப்பாக வரவும்" என்று பி
பு குறுஞ்செய்திஅனுப்பியிருந்தார். உடனே அவருக்கு ஃபோன் செய்து "என்னங்க நிஜமாவா சொல்றீங்க? இவ்வளோ மழை பொழியுதே... ரொம்ப வயசானவரு... எதுக்கு அவர தொந்தரவு செய்யணும். அடுத்த மாதம் சந்திப்பை வச்சிக்கலாமே... அவருக்கு வேறு சமீப காலமா உடம்பு சரியில்லையே" என்று கூறினேன்.

"இல்லைங்க கிருஷ்ணா. ஞாநிகிட்ட கேட்டேன்... கண்டிப்பா கேணி சந்திப்பு நடக்கும்னு சொல்லிட்டாரு" என்று பதில் கூறினார்.

இனி விதி விட்ட வழி என்று ஞானியின் இல்லம் நோக்கிப் புறப்பட்டேன். நன்றாக பெய்து கொண்டிருந்த மழை உதயம் திரையரங்கில் இறங்கியதும் நின்ற மாதிரி தெரிந்தது. 'அந்த பயம் இருந்தால் சரி' என்று வானத்தைப் பார்த்து வருண பகவானை எச்சரித்தேன். ஞானி வீட்டின் நுழைவாயிலில் ஒரு வாளியில் தண்ணீரை வைத்திருந்தார்கள். கால்களைக் கழுவிக்கொண்டு உள்ளே சென்றேன். இந்த மாதக் கூட்டம் வீட்டிற்குள்தான் நடைபெறும் என்றார்கள். சாய்ந்துகொள்ள வசதியாக சுவரோரமாக அமர்ந்துகொண்டேன்.

எனக்கு வலப்பக்கத்தில்
இருந்தவர் எழுத்தாளர் பிரபஞ்சனின் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தார். ஓரக்கண்ணால் அவரைப் பார்த்தேன். அவரும் என்னைப் பார்த்தார். சிரித்துக் கொண்டோம்.

"இன்று வரவிருப்பது அசோகமித்திரன்" என்றேன்.

"அப்படியா?
இருக்கட்டுமே... புத்தகம் நன்றாக இருக்கிறது. அதனால் படித்துக் கொண்டிருக்கிறேன்.நீங்கள் என்ன செய்கிறீர்கள்?" என்றார்.
"நான் வேலை செய்துகொண்டிருக்கிறேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள்?"
"ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருக்கிறேன்"
என்றார்.
அப்படியெனில் தமிழ் இலக்கிய சந்திப்பில் எப்படி ஆர்வம் வந்தது?
"எனக்கு கவிதை எழுதுவதில் விருப்பம் அதிகம். புத்தகம் கூட வெளியிட்டிருக்கிறேன்.
இன்று பார்த்து என்னுடைய புத்தகத்தை எடுத்துக் கொண்டு வரவில்லை."
"அதனால என்ன...எழுதிய கவிதையில் ஒன்றை சொல்லுங்கள் கேட்டுக்கொள்கிறேன். ..."

அவரும் ஹைக்கூ மாதிரி ஒரு கவிதையை எனக்குக் கூறினார். புரியவில்லை என்றதும் ஆர்வத்துடன் விளக்கிக் கூறினார். கவிதை கேட்ட மயக்கத்தில் இடப்பக்கமாகத் திரும்பினேன்.

மழையில் நனைந்த ஒருவர் அருகில் உட்கார்ந்தார். சிரித்ததும் பதிலுக்கு சிரித்தார்.
என்னைப்பற்றி விசாரித்து தெரிந்துகொண்டார். பதிலுக்கு நானும் விசாரித்தேன்.

"நீங்கள் என்ன செய்கிறீர்கள்?"
"நடித்துக்கொண்டிருக்கிறேன்..."
என்றார்.
"ஓ... நீங்கள் ஷேக்ஸ்பியரின் ரசிகரா?"
"நீங்க என்ன சார் சொல்றீங்க?" என்றார்.
"All the world's a stage, And all the men and women merely players - அப்படின்னு அவரு தானே சொல்லி இருக்காரு..."
"இல்லைங்க சார்... நான் வில்லனா நடிக்க சினிமாவில் முயற்சி செய்றேன். சில டிவி சீரியலிலும், டாகுமெண்டரி படங்களிலும் நடிச்சிக்கினு இருக்கறேன். ஆமா... இங்க என்ன சார் நடக்குது?" என்றார்.

"என்னை 'கிருஷ்ண பிரபு' என்றே கூப்பிடலாம். 'சார்' போடுற அளவிற்கு நான் இன்னும் பெரிய ஆள் ஆகலை. இது இலக்கிய கூட்டம். படைப்பிலக்கியம் பற்றி மூத்த எழுத்தாளர்கள்
வந்து பேசுவாங்க. சில நேரங்களில் சினிமாக்காரங்களும் வருவாங்க. ஆமா... இங்க எப்படி வந்தீங்க?" என்றேன்.

"
வண்டிய இந்த பக்கத்துல சர்வீசுக்கு விட்டிருக்கேன். அதை வாங்கலாம்னு போகும்போது இங்க ஒரே கூட்டம், மழை வேற ஓயாம கொட்டிக்குனு இருந்தது. அங்க இருக்காரே (பதிவர் அகத்தியன்) அவருதான் இங்க வாங்கன்னு கூப்பிட்டாரு. வந்துட்டேன்."

அடடா இது இலக்கிய கூட்டமாச்சே... அசோகமித்ரன்னு பேர்போன எழுத்தாளர் இங்க வரப் போறாரு. அவரோட நாங்க பேசப்போறோம். அவர் சிநிமாகாரன்களைப் பத்தி 'கரைந்த நிழல்கள்-னு ஒரு நாவல் எழுதி இருக்காரு. அவருடைய புலிக் கலைஞன் என்ற சிறுகதை மிகவும் பிரபலம். அதுவும் வேஷம் போடுறவன் பற்றியதுதான் என்று மூச்சுவிடாமல் பேசினேன்.

சுவாரஸ்யமே இல்லாமல்
"அப்படியா" என்றார்.

"தப்பா நெனைக்காதீங்க நடுவுல உட்கார்ந்தா பாதியில எழுந்து போக முடியாது. அதனால வாசல் ஓரமா உட்கார்ந்துக்கோங்க பிடிக்கலன்னா பாதியில போயிடலாம்" என்றேன்.

"இலிங்க, இவளோ தொலைவு வந்துட்டேன். முழுசுமா பார்த்துட்டு போயிடறேனே..." என்றார்.

வெளியில் பார்த்தேன் மழை தூறிக்கொண்டிருந்தது. அசோகமித்திரன் அவருக்கான இடத்தில் வந்தமர்ந்து பேச ஆரம்பித்தார். இடையில் ஞானி குறுக்கிட்டு "நான் வரவேற்புரை கொடுத்துவிடுகிறேனே" என்றார். "Sorry sorry. very sorry" என்று ஞானியைப் பேச அனுமதித்தார்.

தொடக்க உரையாக ஞானி பேசியதையும் அதைத் தொடர்ந்து அசோகமித்திரன் பேசியதையும் எழுத்தாளர் ரவி பிரகாஷ் அழகாக பதிவிட்டுள்ளார்: அசோகமித்திரனும் எனது மித்திரனும்!

அசோகமித்திரன் எந்த தலைப்பில் பேசவிருக்கிறார் என்று ஞானி அவருடைய முகப்புரையில் குறிப்பிடவில்லை. அசோகமித்ரனும் அதைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. தனது உடல் உபாதைகளைப் பற்றி சக மனிதர்களிடம் பேசுவது போல பேச ஆரம்பித்தார். எழுத்தாளரா தான் வாழ்ந்த ஏழ்மையான நாட்களையும், சக எழுத்தாளர்களான ஜி நாகராஜன், கண்ணன் போன்றோரின் குடிப்பழக்கமும், அதனால் தான் பட்ட கஷ்டங்களையும் கூறிய பொழுது நெருடலாக இருந்தது.

ஒரு முறை எழுத்தாளர் கண்ணனுடைய குடும்பம் மிகுந்த வறுமையில் இருக்கவும், அவர்களுடைய குடும்பத்திற்கு தையல் இயந்திரம் வாங்கிக்கொடுக்க முடிவெடுத்திருக்கிறார். உடனே வங்கியில் கடன் வாங்க மேனேஜரை அணுகியிருக்கிறார்.

நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? உங்களுக்கு நிரந்தர வருமானம் இருக்கிறதா? என்று இவரிடம் கேட்டிருக்கிறார்கள்.
எழுத்தாளருக்கு எங்கிருந்து நிரந்தர வருமானம் இருக்கப் போகிறது. இருந்தாலும் மிகுந்த சிரமத்திற்கிடையில் அந்த குடும்பத்திற்கு உதவியிருக்கிறார். சில நாட்களிலெல்லாம் அந்த மெஷினை அடகு வைத்து கண்ணன் குடித்திருக்கிறார். பிறகு வங்கிக் கடனை இவர்தான் தீர்த்தாராம்.

மகா குடிகாரனாக இருந்தாலும் கண்ணனுடைய மனைவி மக்கள் அவரிடம் அன்பாக இருந்தார்கள் என்று சொல்லி சந்தோஷப்பட்டார். "எங்கிருந்தாலும் அந்த பெண்கள் சந்தோஷமா இருக்கணும்" என்று ஆசீர்வதித்தார்.
சில நேரங்களில் மளிகை பொருட்கள் வாங்க வைத்திருக்கும் பணத்தை ஜி நாகராஜன் உரிமையுடன் எடுத்துக் கொள்வாராம். எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டாராம்.

இவையனைத்தையும் கேட்டுக்கொண்டிருக்கும் போது
துக்கம் அடைத்துக்கொண்டு வந்தது. ஏனோ தெரியவில்லை என்னுடைய உடல் பாரமாவதை உணர்ந்தேன். என்னடா என்று பார்த்தால் சினிமாக்கார சகா என்னுடைய தோல் மீது சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். 'தூங்குறவங்களை பாதியில எழுப்பினா ஆயுசு கம்மின்னு' எனக்கு சொல்லி இருக்காங்க. அதனால் பாரத்தை தாங்கிக் கொண்டேன்.

தூக்கம் களைந்து எழுந்த சகா "எனக்கு 6 மணிக்கு ஒருவரைப் பார்க்க வேண்டும். வெளிய போனா தப்பா நெனைப்பாங்களா? என்று கேட்டார்.

"ச்சீ... ச்சீ... அப்படி கூட யாராவது நெனைப்பாங்களா?" என்று சொன்ன போது என்னுடைய பாரம் குறைவதை உணர முடிந்தது.

வெளியே பார்த்தேன் மழை நின்றிருந்தது. காற்றில் குளிர்ச்சியுடன் அசோகமித்ரனின் பேச்சு கேட்டது.அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

முன்பெல்லாம் இலக்கிய சந்திப்பாக இருக்கட்டும், கலந்துரையாடலாக இருக்கட்டும் முன்யோசனையுடன் செய்வார்கள். என்ன பேச வேண்டும் என்று யோசித்து செய்வார்கள். இப்பொழுதெல்லாம் அப்படியில்லாதது வருத்தமாக இருக்கிறது.

வரும்போது ஒரு மூட்டையில் குப்பையைக் கட்டி (ஞாநிக்காக அவர் கொண்டு வந்த புத்தகங்கள்) இங்க எடுத்து வந்து கொட்டியிருக்கிறேன். வீட்டில் இது போல இன்னும் நிறைய குப்பை இருக்கிறது அதைக் கொட்ட இடமில்லாமல் தவிக்கிறேன்.

இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் குப்பைத் தொட்டி எப்பொழுதுமே நிறைந்து வழிகிறது. என்னுடைய குப்பைகளையும் கொட்டினால் தொட்டியை மீறி வெளியில் வந்து பறக்கும். யாருடைய கையிலாவது அந்த குப்பைகள் மீண்டும் கிடைத்துவிடும் என்று பயமாக இருக்கிறது. ஆகவே காலியாகும் சமயத்தை எதிர் பார்க்கிறேன்.

'எழுத்தாளன்' என்பது நான் எப்போதோ பார்த்த வேலை. அதைப் பற்றி இப்போது பேச பயமாக இருக்கிறது.
இப்பொழுதெல்லாம் ஞாபக மறதி அதிகமாகியிருக்கிறது. எதைப் பற்றியும் பேச இயலவில்லை. சில நேரங்களில் கதைகளைப் படிக்கிறேன். யார் எழுதினார்கள் என்று மறந்துவிடுகிறேன். ஆகவே என்னுடைய உரையை இதனுடன் முடித்துக் கொள்கிறேன். ஏதாவது கேள்வி வேண்டுமானால் கேளுங்கள் என்றார்.

தண்ணீர், மானசரோவர், புலிக் கலைஞன் மற்றும் இதர சிறுகதைகளைப் பற்றி கேள்வி கேட்டார்கள்.
அவற்றில் சில...

1.
உங்களுக்கு ஆண்பிள்ளைகள் தானே இருக்கிறார்கள்... ஆனால் பெண்களைப் பற்றி நிறைய எழுதி இருக்கிறீர்களே?
எனக்கு இரண்டு சகோதரிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றார்.

2.
உங்களுடைய நாவல் தண்ணீரைப் பற்றி?
எவ்வளோ பேரு பேசிட்டாங்க. கூட்டம் கூட்டமா பேசிட்டாங்க. நாங்க அந்த காலத்துல தண்ணிக்கு ரொம்ப கஷ்டப்பட்டோம். You know, my 4 years old son was sitting in the que for one bucket water. very sad.

3. இப்பொழுதெல்லாம் எழுத்தாளர்களுக்கு உடனுக்குடன் பாராட்டுகள் வருகிறது. உங்களுக்கு பாராட்டுகள் எப்படி வந்தது?
தபாலில் தான். உங்களுடைய படைப்பில் தகவல் பிழை இருக்கிறதே என்று ஒரே வரியில் இருக்கும்

4.
உங்களுடைய படைப்பு சினிமாவாக ஊடக மாற்றம் பெறாதது வருத்தம் இருக்கிறதா?
இல்லை. நான் எழுதுவது படிக்க தான். ஆனால் என்னுடைய புத்தகத்தில் உள்ள காட்சிகள் சில படங்களில் பார்க்க நேர்வதுண்டு. Dozen கணக்குல பார்த்திருக்கிறேன். புத்தகத்தை படித்துவிட்டு அதுபோல வைக்கிறார்களா! இயல்பாகவே அமைகிறதா என்று தெரியவில்லை.

5.
உங்களுடைய 'ஒற்றன்' நாவலில் ஒருவர் Chart போட்டு நாவல் எழுதினர் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்? (அடியேன் கேட்டது)
உண்மைதான். பேரு நாட்டு எழுத்தாளர். எழுத்தாளரின் பெயரையும் புத்தகத்தின் பெயரையும் குறிப்பிட்டார். புத்தகம் சரியாக விற்கவில்லை என்பதையும்கூறினார்.

6. உங்களுடைய காலங்களில் இந்த மாதிரி கூட்டங்கள் நடைபெற்றதா?
அப்படியெல்லாம் இல்லை. அவ்வளவு சுலபமா எந்த கூட்டமும் இருக்காது. அப்படியே கூடினாலும் அதற்கான முன்யோசனையுடன் கூடுவார்கள். இப்பொழுதெல்லாம் அப்படி நடக்கிறதா என்று தெரியவில்லை. என்னை பொறுத்தவரை எழுத்தாளர்கள் இந்த மாதிரி
க் கூட்டத்தில் பங்கு பெறுவதைத் தவிர்க்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுடைய படைப்பாற்றல் சிதைவுறாமல் இருக்கும்.

7. உங்க
ளை இந்தியாவின் ஹெமிங்க்வே என்று கூறுவதைக் கேட்கும் போது எப்படி உணர்கிறீர்கள்?
அந்தாளு அவருடைய வேலையை செஞ்சாரு... அவரு எங்கயோ இருக்காரு. நம்ம எங்கயோ இருக்கோம்.

8. சிறுகதைக்கு வடிவம் இருக்கிறதா?
நிச்சயமாக இல்லை. அது ஒரு அனுபவத்தைத் தரவேண்டும். சிறுகதைக்கோ நாவலுக்கோ வடிவம் கிடையாது.

9. அப்படியெனில் சிறுகதைக்கு வடிவம் இல்லை என்று சொல்லிவிடலாமா?
இல்லை இல்லை. நான் கூறியது என்னுடைய கருத்து. அவரு எனக்கு ஹெல்ப் செய்திருக்கிறார். வடிவம் இருக்குன்னா அந்த சார்ட் மாதிரி ஆயிடும் இல்ல? படைப்பு ஒரு அனுபவத்தைத் தரனும் என்று அவருடைய கைகள் என்னை சுட்டியது. கண்கள் ஒரு நிமிடம் என்னைப் பார்த்து கேள்வி கேட்டவரை ஊடுருவியது.

"எவ்வளோ பேரு உட்கார இடமில்லாமல் நிக்கறாங்க. மழை வேற பெய்யுது. எங்க இருந்தெல்லாம் வந்திருக்கான்களோ!. ரொம்ப கஷ்டமா இருக்குது" என்று கூடம் நிறைவுறும் போது கூறினார்.

அடலேறு, நிலா ரசிகன் மற்றும் மகரந்தன் ஆகியோருடன் பேசிக்கொண்டு இருந்துவிட்டு அசோகமித்ரனைப் பற்றி பல நாட்களுக்கு முன்பு படித்தனை நினைத்துக் கொண்டே சாலைகளில் நடந்துகொண்டிருந்தேன்.

ஆட்டோவில் போன அசோகமித்திரன்

வீட்டுக்கு வீடு கலர் டிவி கொடுத்து தமிழை வளர்க்கிறேன் என்று முழக்கமிடுபவர்கள் இது போன்ற மூத்த படைப்பாளிகளுக்கு என்ன செய்தார்கள் என்று பார்த்தால் விரக்திதான் மிஞ்சும். சரி... நாமாவது தமிழ் புத்தகம் வாங்குகிறோமா என்றால் அதுவும் இல்லை.

"வீட்டுக்கு கிளம்பியவர், முடியாமல் மயக்கத்தில் அப்படியே தரையில் உட்கார்ந்துவிட்டார். உடனே சிலர் அவருக்கு தண்ணீர் எடுத்துவந்து கொடுத்தார்கள். கொடுத்தவர்களுக்கு நிச்சயம் அவர் அசோகமித்திரன் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை." - உலகம் அறிந்த எழுத்தாளருக்கே இதுதான் நிலைமை என்றால். மற்றவர்களை நினைக்கும் போது நடுக்கமாக இருக்கிறது.

**************************************************

புலிக் கலைஞன்
சிறுகதையை வாசிக்க 'ச.ந.கண்ணன்' அவர்களின் இணையப் பக்கத்திற்கு செல்லவும்:[1] [2] [3]

ஜெய மோகனின் : அசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்

Friday, November 13, 2009

சேரலின் அழைப்பு: தொடர் பதிவு

பிடித்த, பிடிக்காத விஷயங்களாக தமிழகத்தைத் தொடர்புபடுத்தி, தமிழக பிரபலங்களைத் தொடர்புபடுத்தி பதில்கள் தருமாறு சேரல் சொல்லி இருந்தான். ஆனால் எண்ணங்கள் அந்த நிபந்தனையை மீறிச் செல்கிறது.. அதை அப்படியே இங்கு பதிகிறேன். அழைப்பிற்கு நன்றி சேரல்.

இந்தத் தொடர் பதிவுக்கான விதிகளாகக் கொடுக்கப்பட்டிருப்பவை

1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நீங்க எழுதறப்பவோ நாங்க அதைப் படிக்கறப்பவோ அவரு ஷீட்டிங்குக்கோ, மீட்டிங்குக்கோ வெளிநாடு போயிருக்கலாம்.. தப்பில்ல!)

I always break the rules. ha ha ha ha ha... But i hope others will follow...

2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்.

நான் யாரன்னு கண்டு பிடிப்பேன் சேரல்...! முயற்சி செய்கிறேன்.

3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.

4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.

இனி பட்டியல்....

01.
பிடித்த நிர்வாகி : ஸ்ரீதர் வேம்பு (zoho corporation - http://www.zohocorp.com/) சப்தமே இல்லாமல் சாதனை செய்துகொண்டிருக்கும் தமிழர்.
பிடிக்காத நிர்வாகி : ராமலிங்க ராஜு (காரணம் உங்களுக்கே தெரியும்.)

02.
பிடித்த தலைவர் : நர்மதா அணையின் அருகிலுள்ளவர்களுக்காகப் போராடும் 'மேதா பட்கர்'. நோபல் பரிசு வாங்கிய பர்மாவின் இரும்புப் பெண்மணி ஆங் சான் சூ கி மற்றும் செடி,கொடிகளுக்காகக்கூட குரல் கொடுத்த கென்யாவின் வங்காரி மாதாய். இவர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் அவர்களைப் பற்றி நாளேடுகளில் படித்தேன் என்பது நிறைவான விஷயம். இவர்களுடைய எளிமையான வாழ்வு என்னைக் கவருகிறது. அவர்கள் நினைத்திருந்தால் எப்படி வேண்டுமானாலும் சுகமாக வாழ்ந்து இருக்கலாம். ஆனால் ஒரு தலைமுறைக்காகவே போராடுகிறார்கள்.
பிடிக்காத தலைவர்: 'மனிதன் ஒரு அரசியல் விலங்கு' என்று யாரோ ஒரு தத்துவமேதை கூறியது ஞாபகம் வருகிறது. அதற்கும் ஒரு படி மேலே சென்று மத அரசியல், ஜாதி அரசியல், கட்சி அரசியல், ஆன்மீக அரசியல், ஊடக அரசியல் என்று மிருகங்களாகக் காட்சியளிக்கும் தொண்டன் முதல் தலைவன் வரை அனைவரும். "அட, அப்போ தற்போதுள்ள எல்லா அரசியல் வாதிகளும் என்று சொல்கிறீர்களா?" நிச்சயமாக... அப்போ கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ், வை கோ, எல்லாரையும் சேர்த்துக்கோங்க.

03.
பிடித்த எழுத்தாளர்கள்: கி ரா, அ முத்துலிங்கம், அசோகமித்திரன், மாலன், குரு மூர்த்தி(www.gurumurthy.net), பாரதி, மதன், சுஜாதா, ஜெ. மோ, எஸ். ரா, கல்கி, ராஜ் கௌதமன், ஆதவன், பாவண்ணன்... இன்னும் இன்னும்...
பிடிக்காத எழுத்தாளர்கள் : சொந்த ஆதாயத்திற்காக தகவல் பிழையுடன் எழுதும் அனைவரும். குறிப்பாக அரசியல் எழுத்தாளர்கள். சில நேரங்களில் BJP மற்றும் RSS இயக்கத்தை உயர்த்திப் பிடிக்கிறாரோ என்று குரு மூர்த்தியையும் நெருடலுடன் வாசித்ததுண்டு.

04.
பிடித்த இயக்குனர்கள்: 1.கருப்பு வெள்ளை படம் 'சபாபதி' பட இயக்குக்னர் (பெயர் தெரியவில்லை), 2.காதலிக்க நேரமில்லை 'ஸ்ரீதர்', 3. சில்ரேன்ஸ் ஆப் ஹெவன் 'மஜித் மஜிடி' 3. இயக்குனர் பாக்கியராஜ் ('தூறல் நின்னு போச்சு'-எவ்வளோ அழகான திரைப்படம்!)... (யாரு கண்டா என்னோட மருமகன்கள் முத்துவும், வினோத்தும் கூட இந்த வரிசையில பின்னாளில் வரலாம். பிரபலங்கள் ஆகலாம்.)
பிடிக்காத இயக்குனர்கள்: உதவி இயக்குனர்களிடம் வேலை வாங்கிவிட்டு டைட்டிலில் தன்னுடைய பெயரைப் போட்டுக்கொள்ளும் அனைத்து இயக்குனர்களும். (அப்போ எல்லா இயக்குனரும் என்று சொல்கிறீர்களா? அப்படியும் எடுத்துக் கொள்ளலாம்.)

05.
பிடித்த இசைக்கலைஞர்: இசைஞானி இளையராஜா... (அவருடைய படைப்பில் பங்கு செலுத்திய நிறைய பேர்...). ஒரே வருடத்தில் 20 முதல் 30 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்று தெரிய வரும் பொழுது பிரம்மிப்பாக இருக்கிறது. அவருக்கு உதவியாளர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிடிக்காத இசைக்கலைஞர்: 1. இளையராஜா இசையமைத்த அனைத்துப் பாடல்களுமே பிரசித்தி பெற்றது என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் குறுகிய நாட்களில் படத்திற்கு இசையமைக்கும் அளவிற்கு பரபரப்பாக இருந்திருக்கிறார். அந்த மாதிரியான நேரங்களில் சில சோர்வான படைப்புகள் வருவது இயல்புதானே. அதுபோன்ற அவசர நிலை படைப்புகளைக் கொடுத்த அவருடைய இசை எனக்குப் பிடிக்காது. அந்த நேரங்களில் "நீயா இதை செய்தது?" என்று கோபம் வரும். அடுத்த நிமிடமே அவருடைய சிறந்த படைப்பைக் கேட்டு என்னை சரி செய்துகொள்வேன்.
2. பழையப் பாடல்களை ரீ-மிக்ஸ் செய்பவர்கள் அனைவரும்.

06.
பிடித்த பாடகர்: ஜேசுதாஸ் மற்றும் எஸ்.பி.பி
பிடித்த பாடகி: ஜானகி அம்மா
பிடிக்காத பாடகர்கள்: பிடிக்காதவர்கள் என்று யாரும் ஞாபகம் வரவில்லை. பிடிக்காத பாடல்களை உடனே மாற்றிவிடுவேன். சில நேரங்களில் பிடித்த பாடல்களிலேயே சில கோளாறு இருக்கும். அதாவது பாடும்போது இடையிடையே மூச்சு விடுவதும், எடுப்பதும் கேட்கக் கூடாது. அப்படியில்லாமல் சில பாடல்களைக் கேட்கும் போது பாடியவர்களின் மீது எரிச்சலாக இருக்கும். உதாரணமாக 'முன்பே வா என் அன்பே வா- பாடலில் ஸ்ரேயா கோஷல்' மற்றும் 'எனதுயிரே எனதுயிரே' - பாடலில் நிகில் மாத்யூ.

07.
பிடித்த அரசு அதிகாரி: T.N.சேஷன் (தேர்தல் அதிகாரி), இறையன்பு I.A.S மற்றும் கிரண் பேடி I.P.S (அரசு நிர்வாகத்திலுள்ள அரசியல் காரணமாக வேலையை ராஜினாமா செய்துவிட்டார் என்று நினைக்கிறேன்.) உங்களுக்குத் தெரிந்து நேர்மையானவர்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள். பகிர்ந்துகொள்ளலாம்.
பிடிக்காத அரசு அதிகாரி: நிறைய பேர் இருக்கிறார்கள். நாங்கள் தான் ஏணிகள் என்று சொல்லிக் கொள்ளும் ஆசிரியர்கள். பரீட்சை முடிவுக்காக குழந்தைகள் காத்திருக்கும் போது விடைத்தாள்களைத் திருத்தமாட்டோம் ஊதிய உயர்வு வேண்டும் என்று அடம் பிடிக்கும் சங்கங்கள் முழுவதும். (எனக்குப் பிடித்த நிறைய பேர் இதில் அடங்குவார்கள். அதை அவர்களிடமே சொல்லி இருக்கிறேன்.)

08.
பிடித்த பத்திரிகையாளர்: மாலன்
பிடிக்காத பத்திரிகையாளர்: நக்கீரன் கோபால்

அழைக்கும் பதிவர்கள் :

வேல் கண்ணன்
ரகுநாதன்
சுள்ளிக்காடன் ஹிஜு
நிர்வாணம் ஞானசேகர்
அடலேறு

Saturday, November 7, 2009

அன்று பெய்த மழை

மெல்லிய ஓசை "சரசர... சடசட..." வென கேட்டுக் கொண்டே இருந்தது. சிறு வயதிலிருந்தே கேட்டுப் பழகிய ஓசை என்பதால் சப்தம் வந்த திசையை நோக்கி கால்கள் தானாக இடம் பெயர்ந்தது. அலுவலகம் முழுவதும் குளிர்சாதன வசதி இருந்தாலும் இயற்கையாகப் பெய்யும் மழையின் சாரலும், காற்றில் பரவி எலும்பை உருக்கும் பனியின் புகையும் ஏற்படுத்தும் சிலிர்ப்புமே வாழும் வாழ்க்கையில் அலாதியானது.

இந்த வருட மழை அவ்வளவுதான்... இனி அடுத்த வருடம் தான் மழையை எதிர்பார்க்க முடியும் என்றிருந்த நிலையில் திடீரென பெய்த மழை உற்சாகத்தை ஏற்படுத்தியது.

அலுவலக தோழர்களிடம் கண்களில் மகிழ்ச்சியுடன் "வெளியே மழை பெய்யுதுடா... வந்து வேடிக்கை பாருங்க... ஜாலியா இருக்குது, வந்து சாரலை அனுபவியுங்கள்" என்றேன்.

"போங்க கிருஷ்ணா, நீங்கதான் ஒரு வேலை செய்யாம சும்மா இருக்கீங்க. நாங்களும் அப்படியா?... அதுவும் இல்லாம ஆபீஸ் டைம்ல வெளிய போனா யாராச்சும் ஏதாவது சொல்லப் போறாங்க... Tempt பண்ணாம எடத்த காலிபன்னுங்க கிருஷ்ணா" என்று பதில் கூறினார்கள்.

"டேய், நான் இதோட பத்துவாட்டி வெளிய போயி வேடிக்கை பார்த்துட்டு வந்துட்டேன். என்னை யாரும் எதுவும் சொல்லலையே..."

"உங்கள மாதிரி நாங்க வர முடியுமா... கிருஷ்ணா..." என்றார்கள்

சிறிது நேரம் கழித்து அனைவரும் Break Time-ல் வெளியில் சென்றோம்.

"We are almost missing many wonderful feelings & experience inbetween our working hours. இந்த Climate-க்கு கோட்டரும், வறுத்த வேர்கடலையும், சிகரெட்டும், சிக்கன் 65-ம் இருந்தா எப்படி இருக்கும். அதுதான் சரி கிருஷ்ணா..." என்று வெளியில் வந்த நண்பர்களில் ஒருவன் கூறினான்.

"டேய், அதோட நிறுத்திக்கோ... அதுக்கு மேல நீ என்ன சொல்லுவேன்னு எனக்குத் தெரியும்... மழையே ஓர் ஆனந்தமான விஷயம் தானே. அதை அனுபவிக்காமல் வேறு எங்கயோ போறயே..." என்று சொல்லிவிட்டு என்னுடைய இருக்கைக்கு வந்தேன்.

அப்படியே 'ஹேம்நாத்'திடம் "டேய் பொடிப்பயலே, இன்னைக்கு மழையில நனஞ்சிக்கினே வீட்டுக்கு போகலாம் சரியா...!" என்று சொல்லியிருந்தேன்.

"கண்டிப்பா கிருஷ்ணா, அனா நம்ம புறப்பட சொல்ல மழை பெய்யணுமே."

"அதெல்லாம் கண்டிப்பா பெய்யும், நீ கவலைப் படாதே... "

நல்லவேலை அலுவலகத்திலிருந்து கிளம்பும் போது லேசான மழை பெய்துகொண்டிருந்தது. ஆனந்தமாகப் புறப்பட்டோம். சாரை சாரையாக பெய்த மழையில் வாகனங்கள் அங்குமிங்கும் நகர்ந்துகொண்டிருந்தன. மேடு பள்ளங்களில் உருண்டு செல்லும் மழைத் தண்ணீரில் வாகனங்கள் மிதப்பது போலவே இருந்தன. நாங்களும் மிதந்துகொண்டிருந்தோம்.

ஓர் இடத்தில் "கிருஷ்ணா... இப்போ சாக்கடை தண்ணீரில் போயிட்டு இருக்கோம். கொஞ்ச நேரம் கழிச்சி நல்ல தண்ணீர் வரும் அப்போ கால்களை நனச்சிடுங்க." என்று ஹேம்நாத் கூறினான்.

"பரவாயில்லடா... வீட்டுக்கு போயி குளிச்சிடலாம். பிரச்சனை இல்ல..."

"நாலு வருஷம் முன்னாடி பெய்த மழையில் இந்த ஏரியாவுல ஒரே வெள்ளம்... என்னோட தொடை வரைக்கும் தண்ணி இருந்தது கிருஷ்ணா..."

"அப்போ... என்னோட இடுப்பளவு தண்ணி போயிருக்கும்... "

"ஆமா கிருஷ்ணா"

இப்படி பேசிக்கொண்டே சென்றுகொண்டிருக்கும் பொழுது காரில் சென்ற ஒருவனின் வண்டிச்சக்கரம் எங்கள் மீது சாலையிலுள்ள நீரை வாரி இறைத்தது.

"டேய்... பொடிப்பயல இப்பவும் சாக்கடை தண்ணியில தான் போயிட்டு இருக்கோமா?"

"ச்சே ச்சே... இல்ல கிருஷ்ணா, அந்த எடம் அப்பவே போயிடுச்சி கிருஷ்ணா. எதுக்கும் வீட்டுல போயி குளிச்சிடுங்க..."

"சரிடா... நாளைக்கு பார்க்கலாம்."

எனக்கான இடத்தில் என்னை இறக்கிவிட்டு ஹேம்நாத் புறப்பட்டான். மழை கொட்டிக்கொண்டே இருந்தது. உடம்பில் உயிர் ஒட்டிக்கொண்டுள்ளதைப் போல ஈரமும், குளிரும் என்னை அப்பிக்கொண்டிருந்தன. அந்த மாதிரியான நேரங்களில் தான் உஷ்ணத்தின் ஆனந்தமும் புரிய வருகிறது.

வீட்டிற்கு சென்று சேரும் வரை அடைமழை பெய்து கொண்டிருந்தது. சுடுதண்ணீரில் குளித்து முடித்து என்னுடைய உறங்கும் அறைக்குச் சென்றேன்.

சிமெட் ஓடு (சீமை ஓடு) வேயப்பட்ட கூரையின் மேலிருந்து சொட்டு சொட்டாக மழை நீர் சொட்டிக் கொண்டிருந்தது. ஆயிரம் துளிகளுக்கு ஒரு துளி வீதம் கூரையின் ஐந்து இடங்களில் ஆங்காங்கு ஒழுகிக்கொண்டிருந்தது. அதை நாங்கள் பாத்திரங்கள் வைத்து சேமித்துக் கொண்டிருந்தோம். துளிகள் பாத்திரங்களில் விழும் போது டங்... டிங்... டொங்.. என்ற சத்தம் எழும்பி அறைமுழுவதும் எதிரொலித்தது. சுவர்களும், தரையும் ஓதம் ஏற்படுத்தி குளிரும்படி செய்துகொண்டிருந்தது. இந்த நிலையில் தான் நண்பர் மார்க் நெருப்புக் கட்டிகளை சட்டியில் ஏந்திக்கொண்டு வந்தார். அவை தங்கம் போல் ஜொலித்துக் கொண்டிருந்தன.

பல வருடங்களுக்கு முன்பு நான் வாழ்ந்த கிராமங்களில் விறகு அடுப்புதான் பயன்படுத்துவார்கள். அப்பொழுதெல்லாம் மழைக் காலங்களிலும், குளிர் காலங்களிலும் சமயலரைக்குச் சென்று ஆனந்தமாகக் குளிர் காய்வேன். குழம்பு, பொரியல், வறுவலுடன் நெருப்பின் வாசனையும் ரம்யமாக இருக்கும்.

பிறகு அனைவரும் LPG அடுப்புகளுக்கும், மின் அடுப்புகளுக்கும் மாறிவிட்டார்கள். ஆகவே கரித்துண்டுகளையும், நெருப்பையும் பார்க்க முடிவதில்லை. நீண்ட நாட்கள் கழித்து தகதகவென ஜொலிக்கும் நெருப்புத் துண்டுகளைப் பார்த்த போது சொல்ல முடியாத சந்தோசம் பெருக்கெடுத்தது.

கைகளையும் கால்களையும் நெருப்பின் அருகில் நீட்டி மகிழ்ச்சியாக குளிர் காய்த்தேன். அடைமழைக்கு நெருப்பின் கதகதப்பு இதமாக இருந்தது. இளையராஜாவின் இதமான பாடல்கள் வானொலியில் வழிந்துகொண்டிருந்தது. பாதங்களை மழை நீரில் நனைத்துவிட்டு மீண்டும் நெருப்பில் காட்டினேன். மழைத் தண்ணீரில் கால்களை நனைப்பதும் நெருப்பில் காட்டுவதுமென என்னுடைய விளையாட்டு நெடுநேரம் தொடர்ந்தது. நள்ளிரவைத் தாண்டியும் விளையாட்டு அளிக்கவேயில்லை.

உலகமே ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது விளையாடிக் கொண்டிருக்கும் ஒரே ஜீவன் நானாகத்தான் இருக்குமோ என்ற எண்ணம் தோன்றியது. ஆகவே படுக்கைக்குத் திரும்பினேன். எப்பொழுது தூங்கினேன் என்று தெரியவில்லை. கண்விழித்த போது மழை சன்னமாக கொட்டிக் கொண்டிருந்தது.

Friday, October 30, 2009

விருது - அமித்துவின் அம்மாவிடமிருந்து...

கி.ரா பங்குபெற்ற கேணி நிகழ்ச்சியில் தான் அமித்துவின் அம்மா சாரதாவை நேரில் பார்க்க நேர்ந்தது. எங்களுக்கிடையிலான இடைவெளி அதிகமாக இருந்ததினால் ஒருவருடன் ஒருவர் பேச இயலவில்லை. துளசி டீச்சரையும் என்னையும் பார்த்தவுடன் முகமெல்லாம் சிரிப்பு. சக மனிதர்கள் என்ற முறையில் அந்த அன்பு கலந்த சிரிப்பைத் தவிர வேறு என்ன வேண்டும் வாழ்க்கையில்.

அந்த அன்பின் முறையில் 'நான் வாசித்த தமிழ் புத்தகங்கள்' பதிவிற்கு Scrumptious blog award கொடுத்திருக்கிறார்கள். அதே அன்பை வேறுயாருடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கும் போது கொஞ்சமும் யோசனையின்றி சில நண்பர்கள் ஞாபகம் வந்தார்கள். அவர்கள்...

புத்தகம்
சேரலாதன் - கருப்பு வெள்ளை
J ஞானசேகர் - நிர்வாணம்
பீ'மோர்கன் - வழிப்போக்கன்
ரெஜோவாசன் - பட்டாம்பூச்சி விற்பவன்

நான் தொடர்ந்து விருப்பமுடன் வாசிக்கும் பதிவு சேரலின் 'புத்தகம்'. இந்த வலைப்பூவில் கவிதை, சிறுகதை, நாவல் என்று அவன் தேடிப்படிக்கும் புத்தகங்கள் பற்றிய தேவையான குறிப்புகளை நிறைவாக கொடுத்துக் கொண்டிருக்கிறான். அவனுடன் சேர்ந்து J ஞானசேகர், பீ'மோர்கன் மற்றும் ரெஜோவாசன் ஆகியோரும் தாங்கள் வாசிக்கும் புத்தகங்களை அறிமுகப் படுத்துகிறார்கள்.

இவர்களில் பீ'மோர்கன் புத்தகங்களைப் பற்றி எழுதும் பதிவுகள் அலாதியாக இருக்கும். புத்தகங்கள் பற்றிய குறிப்பு எங்கிருந்தாலும் தேடிப்படிக்கும் பழக்கமுடையவன் என்பதால் சேரல் மற்றும் நண்பர்களின் பதிவுகள் வாசிக்கக் கிடைத்தது மகிழ்ச்சியே. புத்தகம் தவிர்த்து இவர்கள் எழுதும் தனிப் பதிவுகளையும் விருப்பி வாசிப்பதுண்டு. என்னுடைய நேசத்தை இந்த நால்வருடனுமே பகிர்கிறேன்.

அன்பே சிவம் (முரளி பத்மநாபன்)

இவருடைய நட்பு புத்தகங்களின் மூலம் கிடைத்தது. சிறுகதைப் பட்டறையில் தான் முதன் முதலில் நேரில் சந்திக்க நேர்ந்தது. பயணம், சினிமா, புத்தகம் என தான் ரசித்த விஷயங்களைப் பதிவிடுகிறான். சிறுகதை எழுதுவதிலும் ஆர்வம் உள்ளவர். நிறைய புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவன். இனிய நண்பன்.

முதல் சுவடு (விஷ்ணு குமார்)

சுந்தர ராமசாமி பற்றிய 'நீ யார்' ஆவணப்படம் பார்க்கச் சென்றிருந்த இடத்தில் தான் முதன் முறையாக விஷ்ணு எனக்கு அறிமுகமானான். பாரதியின் மீது தீராத காதல் கொண்டவன். 'தமிழ் கவிதை' புனைவதில் மிக்க ஆர்வம் உடையவன். இவனுடைய தாய் மொழி சவுராஷ்டா என்பது அவனாக சொன்னாலன்றி அடுத்தவருக்குத் தெரியவராது. ஜப்பான் மொழியை வேறு பயின்று கொண்டிருக்கிறான். பழகுவதற்கு இனிமையானவன். எதிர்காலத்தில் நல்ல படைப்பாளியாக, மொழிபெயர்ப்பாளனாக வருவான் என்று எதிர்பார்க்கிறேன். அவனுடைய சில வரிகள்...

நான்

என் தகப்பன்
அளித்திட்ட
பல துளிகளில்
என் தாய்
தேர்ந்தெடுத்த
ஒற்றைத் துளி
'நான்'.

பப்பு - (பிரபு)

தன்னுடைய வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களை எளிய தமிழில் அழகாக பகிர்ந்து கொள்கிறார். இவருடைய ஒவ்வொரு பதிவிலும் ஹாஷ்யத்திற்கு பஞ்சம் இருக்காது.

உணர்தலும் உணர்தல் நிமித்தமும் (முத்துசாமி பழனியப்பன்)

விஷ்ணுவுடன் கன்னிமரா நூலகத்தில் புத்தகம் வாங்கச் செல்லும் போது இவருடன் பழக்கம் ஆரம்பித்தது. கவிதை எழுதுவதில் தீவிர ஆர்வம் உடையவர். வார்ப்பு, உயிரோசை, தடாகம், கீற்று, அகநாழிகை, திண்ணை, தமிழ் ஆதர்ஸ் என பல இணைய இதழ்களில் இவருடைய படைப்புகள் அங்கீகரிக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

முடிவாக சுந்தர ராமசாமியின் கிருஷ்ணன் நம்பி பற்றிய நினைவோடை தான் இங்கு ஞாபகம் வருகிறது. "நான் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருப்பேன். அப்போது எனக்கு ஒரு ஆள்கூடத் தேவையில்லை. ஒரு முகம் அது மட்டும்தான் தேவையாயிருந்தது. அவன் என்ன கேட்கிறான், என்ன புரிந்துகொள்கிறான், என்ன எதிர்க்கேள்வி கேட்கிறான் என்பது போன்ற விஷயங்களைப் பொருட்படுத்திப் பேசும் நிதானமோ, பக்குவமோ எனக்கு அப்போது இருந்திருக்கவில்லை. நான்தான் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருப்பேன்." (நினைவோடை -கிருஷ்ணன் நம்பி)

எனக்கு முகம் கூட தேவையில்லை அவர்களின் கண்கள் மட்டும் இருந்தால் போதும் என்று எழுதித் தள்ளுகிறேன். நண்பர்களும் சிரமம் பார்க்காமல் தொடர்ந்து வாசிக்கிறார்கள். என்ன எழுதுகிறேன்?, எப்படி எழுதுகிறேன்?, எதற்காக எழுதுகிறேன்? என்ற முன்யோசனை எதுவும் இல்லாமல், அந்த நேரத்தில் எண்ணங்களில் தோன்றுவதை எழுதி வலைப்பூவில் சேர்ப்பிக்கிறேன். அதை நண்பர்கள் படித்துப் பாராட்டும் போதுதான் எங்கோ உறுத்துவது போல் இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக இவர்கள் அனைவருமே பதிவுலகில் நான் சேர்ந்த முக்கியமான உறவுகள். இதனை விருதுக்கான பரிந்துரை என்பதைவிட அன்பைப் பகிர்ந்துகொள்ளக் கிடைத்த நல்ல சந்தர்ப்பம் என்றே நினைக்கிறேன்.

சாரதா சொல்வதுபோல் "மேற்கூறியவர்கள் மூலம் இந்த அன்பு நிறைய பேருக்கு விருதின் வாயிலாக பல்கிப் பெருகும் என்று" நம்புகிறேன்

இந்த விருதினை எனக்கு அளித்த சாரதாவிற்கு மிக்க நன்றி.

:)

அன்புடன்,
கிருஷ்ண பிரபு.

Monday, October 19, 2009

கவிதை வாசிப்பு...1 - சேரல்

நட்சத்திரத் தொழிற்சாலை

அணைந்தணைந்தெரியும்
தெருவிளக்கு

நட்சத்திரங்களாகின்றன
நதி விழும்
மழைத்துளிகள் - சேரலாதன்
(http://seralathan.blogspot.com/2009/10/blog-post_19.html)

******************************
"அணைந்தணைந்தெரியும்
தெருவிளக்கு

நட்சத்திரங்களாகின்றன" - மழை நாட்களில் தெரு விளக்குகள் விட்டு விட்டு வெளிச்சத்தை உமிழ்ந்து நட்சத்திரம் போல் தோற்றம் அளிக்கின்றன. இதுவரை கவிதையைப் புரிந்து கொண்ட எனக்கு அதற்கு மேல் மூளை வேலை செய்யவில்லை.

'நதி விழும்
மழைத்துளிகள்' - நதி எப்படி விழும். மழைத்துளிகள் தானே வானத்திலிருந்து பூமியை நோக்கி கீழே விழும்.

மேலே உள்ள தெரு விளக்கு மற்றும் நட்சத்திரத்திற்கான உருவகத்திற்கும், கடைசியில் உள்ள வரிகளுக்கும் சமந்தமே இல்லையே என்று சேரலுக்கு தொலைபேசியில் அழைப்புவிடுத்து எனது சந்தேகத்தைக் கேட்டேன்.

கி.பி: சேரல் உன்னுடைய கவிதையைப் படித்தேன். கொஞ்சம் கேள்வி கேட்கணுமே... வேலையா இருக்கையா என்ன?
சேரல்: அதனால என்ன , கேளுங்க கிருஷ்ணா... :-)
கி.பி: தெரு விளக்கு மற்றும் நட்சத்திரத்திற்கான உருவகம் புரியுது. அதற்கு அடுத்த இரண்டு வரிகளுக்கும் பாயைப் பிராண்ட வச்சுட்டயே!
சேரல்: இல்ல கிருஷ்ணா, அங்க தான் தப்பு பண்றீங்க... மழைத்துளிகள் தான் இங்கு நட்சத்திரங்களுக்கு உவமையாகின்றன.
கி.பி: இதோ பாரு சேரல், இந்த fraud-வேலை எல்லாம் எங்கிட்ட வேணாம்.
சேரல்: (சிரிக்கறாரு...) நான் ஆத்தங்கரைப் பக்கமா இருக்கேன்னு வச்சுக்கோங்க. அங்க தெரு விளக்கு விட்டு விட்டு எரியுது. இது ஒரு நிகழ்ச்சி... இந்த வெளிச்சத்தின் ஊடக நான் மழைத்துளியை பார்க்கிறேன்.
கி.பி: சரி...
சேரல்: Street Lamp விட்டு விட்டு எரியும் போது மழைத்துளியில் வெளிச்சம் பட்டு, துளிகள் அனைத்தும் எனக்கு நட்சத்திரம் போல் காட்சி அளிக்கின்றன. எனவே "நட்சத்திரங்களாகிய மழைத் துளிகள் நதியில் விழுகின்றன - (நதி விழும்
மழைத்துளிகள்) என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கி.பி: அடடே விளக்கம் நல்லாத்தான் இருக்கு . நன்றி சேரல்...

Tuesday, October 13, 2009

கேணி இலக்கிய சந்திப்பு - கி ராஜ நாராயணன்

கன்று பசுவினைத் தேடி பால் குடிக்க ஓடுவதைப் போல துள்ளலுடன் கேணி இலக்கிய சந்திப்புச் சென்றிருந்தேன். பல வருடங்களாகவே கி ரா-வைப் பார்த்துப் பேசவேண்டும், "கதை சொல்லுங்கள் ஐயா" என்று உரிமையுடன் கேட்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. கேணி இலக்கிய சந்திப்பின் மூலம் அந்த ஆசை நிறைவேறியது.

எவ்வளவு முடியுமோ அவ்வளவு அருகில் அவரைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் முதல் வரிசையில் உட்கார்ந்தேன். ஒரு பெண் 'உன்னதம்' இதழைப் படித்துக் கொண்டிருந்தார்கள். நியூசிலாந்து பதிவரான 'துளசி கோபால்' என்று பிறகு தெரியவந்தது. வாயைத் திறந்தால் ஹாஸ்யம் தான். அவருடைய பதிவைக் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அவரின் மூலம் 'நாச்சியார்' அறிமுகமானார்.இவர்களைத் தவிர வேறு சில பரிட்சயமான பதிவர்களையும் பார்க்க முடிந்தது. முக்கியமாக "அமித்துவின் அம்மா" வந்திருந்தார்கள். அமித்துவைப் பிரிந்து வந்த பதட்டம் அவர்களுடைய முகத்தில் தெரிந்தது.

ஞானியுடன் கி.ரா தம்பதியர் வருவதைப் பார்த்து அசந்துவிட்டேன். அவ்வளவு அழகான ஜோடி. குழந்தைகளின் குதூகல மகிழ்ச்சி அவர்களுடைய முகத்தில் தெரிந்தது. ஒருவருக்கொருவர் அனுசரணையாக நடந்து கொள்கின்றனர். கூட்டத்தினரைப் பார்த்து புன்னகைத்தவாறே தெரிந்தவர்களின் ஷேம நலன்களை விசாரித்துவிட்டு இருக்கையில் அமர்ந்தனர்.

"கரிசல் தந்தை புதுச்சேரியில் எப்படி இருக்கிறார், எந்த சூழலில் வாழ்கிறார், தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்" என்று சொல்லி ஞானி கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

"பிரியமான அன்பர்களே... கேணி இலக்கிய சந்திப்பைப் பற்றி ஞானி என்னிடம் சொல்லியவுடன், இந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. சென்னையில் இப்படி ஒரு சந்திப்பை எதிர்பார்க்கவில்லை. இந்தத் தோட்டம், சூழல் மற்றும் அமைப்பு கருதியே பார்க்க வந்தேன். மேலும் இந்தச் சந்திப்பை ஒரு கலந்துரையாடல் மாதிரி எடுத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் ஒரு திருப்தி இருக்கும்" என்று உரையை ஆரம்பித்தார்.

அறிமுக உரையில் ஞானி ஒரு விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டார். 'நான் என்ன தலைப்பில் பேசப்போகிறேன்' என்ற தகவல் தான் அது. எனக்கு எந்தத் தலைப்பும் ஒத்து வராது. அதனால் நாட்டுப்புறக் கதைகள் பற்றிப் பேச விரும்புகிறேன். என்னுடைய கதைகளை விட நாட்டுப்புறக் கதைகள் தான் என்னை வசீகரம் செய்தது.

ஆனால் 'மணிக்கொடி' முதல் எல்லோரும் நாட்டுப்புறக் கதைகளை ஒதுக்கித்தான் இருக்கிறார்கள்.

40 எழுத்தாளர்கள் என்னைப் பற்றி கருத்து தெரிவித்த புத்தகம் ஒன்று வெளிவரப் போகிறது.அதில் "ஏன் இன்னும் கிராமியக் கதைகளைக் கட்டிக்கொண்டு அழுகிறீர்கள்? அதைத் தாண்டி ஏன் எழுதவில்லை" என்று என்னிடம் கேட்கிறார்கள்.

கரிசல் இலக்கியம் என்பது ஒரு சமுத்திரம் மாதிரி. சமுத்திரத்தில் ஏராளமாக மீன்கள் இருப்பது போல கிராமியக் கதைகளும் நிறையவே நம்மிடம் இருக்கிறது. தேடல் தான் நம்மிடம் இல்லை. ஆரம்பத்தில் கிராமியக் கதைகளை இரண்டு தொகுதிகளாக வெளியிட்டேன். அதைப் பார்த்து வேறு சிலர் தாமாக முன்வந்து சில கதைகளைக் கொடுத்தார்கள்.

நாட்டுப்புறக் கதையை சொல்ல ஆரம்பித்தால் எங்கோ கேட்டது போலவே இருக்கும். ஒரு பாகவதர் 25 ராகங்களை வைத்துக் கொண்டு வாழ் நாள் முழுவதும் கச்சேரி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஏன் அந்த ராகங்களையே அவர் திரும்பத் திரும்பப் பாடுகிறார் என்று கேட்கிறோமா? விருப்பம் இருக்கிறது என்பதால் கேட்கிறோம். அவரும் பாடுகிறார். அது போலதான் கிராமியக் கதைகளும்.

மறுபடியும் மறுபடியும் ஒரே கதைகளை வேறுவேறு கற்பனைகளில் கேட்கும் பழக்கம் இன்றுள்ள குழந்தைகளுக்கு இல்லை. ஏனெனில் அவர்களை அவசரமா பழக்கிட்டோம். "தூங்க சொல்ல எழுப்பி வெளிக்கி(கக்கூஸ்) இருக்க வக்கிறோம், குளிக்க வைக்கிறோம், பள்ளிக்கு அனுப்புறோம். புதுப்புது விஷயங்களை அவர்கள் தெரிஞ்சிக்க வேக வேகமா பழக்கறோம். அதெல்லாம் தப்பு. முன்னடிஎல்லாம் அப்படி இல்ல.

இந்தக் கூட்டத்தை "ராகுகாலக் கூட்டம்"னு சொல்லலாம். ஏன்னா ஞாயிறு மாலை 4.30 - 6.00 ராகுகாலம். சரியா அந்த நேரத்துல இந்தக் கூட்டத்தை ஞானி ஏற்பாடு பண்ணியிருக்காரு. ராகு போல கொடுக்கரவனும் இல்லை, கேது போல கெடுப்பவனும் இல்லைன்னு சொல்லுவாங்க உங்களுக்குத் தெரியுமா?

இந்த இடத்தில் ஜோசியம் மற்றும் சகுனம் சமந்தமான இரண்டு கதைகளைச் சொன்னார். (ஜோசியரிடம், வியாழன் அவருடைய மகனுக்கு ஜாதகம் கணித்தது மற்றும் நாய் ஒன்று சகுனம் பார்த்து வெளியில் செல்ல நினைக்கும் கதை). 'கிராமியக் கதைகள்- கி. ரா' என்ற புத்தகத்தில் அந்தக் கதைகளைப் படித்த ஞாபகம்.

"இப்படி பேசிக்கிட்டே போனா வெறுப்பா இருக்குதோ?. வேறுமாதிரி வேணும்னா பேசலாமா" என்று சிறிது நேரம் பேச்சை நிறுத்தினார். அந்த நேரம் பார்த்து கிராவிடம் ஞானி ஒரு கேள்வி கேட்டார்.

"ஆரம்பத்தில் இடது சாரியில் இருந்த நீங்கள் பிறகு வேறு திசையில் பயணித்தது எப்படி? உங்களுடைய நம்பிக்கையில் எதனால் மாற்றம் வந்தது?"

"அதாவது ஆரம்பத்துல கம்யுனிஸ்டா இருந்தவனுக்கு, இப்ப கடவுள் நம்பிக்கை எப்படி வந்துச்சுன்னு கேக்குறீங்க(எல்லோரும் சிரிக்கிறார்கள்) அப்படிதானே?" - என்று பேச்சைத் தொடங்கினார்.

ஆங்கில மருத்துவம் மற்றும் மூலிகை மருத்துவம் சமந்தமான ஆராய்ச்சியை தொடர்புபடுத்தி அழகான கதை ஒன்றைச் சொல்லி ஞானியின் கேள்விக்குப் பதிலளித்தார்.

மேலும் பெரியார் ஒரு முறை பொதுக் கூட்டத்தில் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது மின்சாரம் (ஜெனரேட்டர்) தடைப்பட்டு, ஒலிபெருக்கியில் அவர் குரல் வெளிவரவே இல்லையாம். பின்னர் சரி செய்யப்பட்டு மீண்டும் பேசத் தொடங்கினாராம். சில விநாடிகளில் மீண்டும் ஜெனரேட்டரில் கோளாறு ஏற்பட்டதாம். இதுபோல் பல முறை நடந்ததாம். பெரியார் சலித்துப் போய், ‘அட ராமா!’ என்று உரக்கச் சொல்லிவிட்டாராம். அவரே தன்னை மறந்த நிலையில் மனதின் ஆழத்திலிருந்து அப்படி சொல்லி இருக்கிறார். இது எல்லோருக்கும் நேர்வது தானே என்று கூறினார்.

இறுதியில் "கி ராவிற்கு ஒரு விஷயத்தில் நம்பிக்கை இருந்தது. இப்பொழுது அது மாறி இருக்கிறது அவ்வளவுதான்" என்று முடித்தார்.

பிறகு எதைப் பற்றியெல்லாம் நாட்டுப்புறக் கதைகள் இருக்கிறது என்று பேசத் தொடங்கினார்.

கடவுள் தொடங்கி, ராஜாக்கள் (ஊர்சுற்றி ராஜாக்கள், நாடாளும் ராஜாக்கள்), பிச்சைக்காரர்கள், பரதேசி, சாதுக்கள், துறவிகள், தேவர்கள், சபைக்கு முன்னாள் சொல்ல முடியாத சில கதைகள் (எல்லோரும் சிரிக்கிறார்கள்), பேய், பிசாசு, பூதம், தாழ்வு மனப்பான்மை, திமிர், கர்வம், கோபம், சோகம், இது போன்ற உணர்வுகள், வதந்திகள், அது பரவும் விதம், அறிவாளிகள் பற்றி, மாமியார்-மருமகள் பிரச்சனை, தகப்பன்-மகன், கணவன் மனைவி, பொறாமை, லஞ்சம், வீரம், காதல், நட்பு, பாலியல், ஞாய தீர்ப்பு என எவற்றைப் பற்றியெல்லாம் நாட்டுப்புறக் கதைகள் வந்திருக்கிறது என்று விளக்கினார்.

லஞ்சம், ஞாய தீர்ப்பு, சகுனம், தாழ்வு மனப்பானை பற்றி அவர் கூறிய உதாரணக் கதைகளைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்றிருந்தது.

கேள்வி நேரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பெரும்பாலும் கதைகளிலேயே பதில் கூறினார். ஒருவர் ஹாரி பார்ட்டர் கதைகளை முன்வைத்து கேட்டக் கேள்விக்கு, சுவாரஸ்யமான மாயக் கதை (பெருவிரல் குள்ளன் கதை) ஒன்றைக் கூறினார். நேரம் போவது தெரியாமல் கேட்டுக் கொண்டிருந்தோம். நேரம் 7 மணியைத் தாண்டிச் சென்றதனால் கூட்டம் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

சந்திப்பின் முடிவில் 'உன்னதம்' , 'அகநாழிகை' சிற்றிதழ்களை அறிமுகம் செய்தது மகிழ்ச்சியாய் இருந்தது. விஷ்ணு அசோகமித்ரனின் நாவலை எனக்காக வாங்கி வந்திருந்தான். அவனிடமிருந்து அதை வாங்கிக் கொண்டு திரும்புவதற்கு மனமில்லாமல் கி. ராவின் நினைவுகளுடன் வீடு திரும்பினேன்.

இதே சந்திப்பைப் பற்றிய இதர பதிவுகள்:

ரவிபிரகாஷ் - ராகு காலக் கூட்டம்!
கி.ராவுடன் 'கேணி’யில்...

பி.கு:-
1.இந்தப் பதிவை கி ரா-வின் இயல்பான மொழியில் பதிய வேண்டும் என்று தான் நினைத்தேன். அவருடைய மொழியை என்னை மறந்து கேட்டது என்னமோ உண்மைதான். ஆனால் எழுத வரவில்லை. அவர் பேசியதில் 5 சதவீதம் கூட இங்கு பதியவில்லை. அவர் பேசியதின் Outline -என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.
2. அனைவருடைய வசதிக்கும் ஏற்றவாறு, அடுத்த மாதம் முதல் கேணி இலக்கிய சந்திப்பு மாலை 3.30 மணிக்கு நடக்கும் என்று அறிவித்தார்கள்.