Saturday, November 7, 2009

அன்று பெய்த மழை

மெல்லிய ஓசை "சரசர... சடசட..." வென கேட்டுக் கொண்டே இருந்தது. சிறு வயதிலிருந்தே கேட்டுப் பழகிய ஓசை என்பதால் சப்தம் வந்த திசையை நோக்கி கால்கள் தானாக இடம் பெயர்ந்தது. அலுவலகம் முழுவதும் குளிர்சாதன வசதி இருந்தாலும் இயற்கையாகப் பெய்யும் மழையின் சாரலும், காற்றில் பரவி எலும்பை உருக்கும் பனியின் புகையும் ஏற்படுத்தும் சிலிர்ப்புமே வாழும் வாழ்க்கையில் அலாதியானது.

இந்த வருட மழை அவ்வளவுதான்... இனி அடுத்த வருடம் தான் மழையை எதிர்பார்க்க முடியும் என்றிருந்த நிலையில் திடீரென பெய்த மழை உற்சாகத்தை ஏற்படுத்தியது.

அலுவலக தோழர்களிடம் கண்களில் மகிழ்ச்சியுடன் "வெளியே மழை பெய்யுதுடா... வந்து வேடிக்கை பாருங்க... ஜாலியா இருக்குது, வந்து சாரலை அனுபவியுங்கள்" என்றேன்.

"போங்க கிருஷ்ணா, நீங்கதான் ஒரு வேலை செய்யாம சும்மா இருக்கீங்க. நாங்களும் அப்படியா?... அதுவும் இல்லாம ஆபீஸ் டைம்ல வெளிய போனா யாராச்சும் ஏதாவது சொல்லப் போறாங்க... Tempt பண்ணாம எடத்த காலிபன்னுங்க கிருஷ்ணா" என்று பதில் கூறினார்கள்.

"டேய், நான் இதோட பத்துவாட்டி வெளிய போயி வேடிக்கை பார்த்துட்டு வந்துட்டேன். என்னை யாரும் எதுவும் சொல்லலையே..."

"உங்கள மாதிரி நாங்க வர முடியுமா... கிருஷ்ணா..." என்றார்கள்

சிறிது நேரம் கழித்து அனைவரும் Break Time-ல் வெளியில் சென்றோம்.

"We are almost missing many wonderful feelings & experience inbetween our working hours. இந்த Climate-க்கு கோட்டரும், வறுத்த வேர்கடலையும், சிகரெட்டும், சிக்கன் 65-ம் இருந்தா எப்படி இருக்கும். அதுதான் சரி கிருஷ்ணா..." என்று வெளியில் வந்த நண்பர்களில் ஒருவன் கூறினான்.

"டேய், அதோட நிறுத்திக்கோ... அதுக்கு மேல நீ என்ன சொல்லுவேன்னு எனக்குத் தெரியும்... மழையே ஓர் ஆனந்தமான விஷயம் தானே. அதை அனுபவிக்காமல் வேறு எங்கயோ போறயே..." என்று சொல்லிவிட்டு என்னுடைய இருக்கைக்கு வந்தேன்.

அப்படியே 'ஹேம்நாத்'திடம் "டேய் பொடிப்பயலே, இன்னைக்கு மழையில நனஞ்சிக்கினே வீட்டுக்கு போகலாம் சரியா...!" என்று சொல்லியிருந்தேன்.

"கண்டிப்பா கிருஷ்ணா, அனா நம்ம புறப்பட சொல்ல மழை பெய்யணுமே."

"அதெல்லாம் கண்டிப்பா பெய்யும், நீ கவலைப் படாதே... "

நல்லவேலை அலுவலகத்திலிருந்து கிளம்பும் போது லேசான மழை பெய்துகொண்டிருந்தது. ஆனந்தமாகப் புறப்பட்டோம். சாரை சாரையாக பெய்த மழையில் வாகனங்கள் அங்குமிங்கும் நகர்ந்துகொண்டிருந்தன. மேடு பள்ளங்களில் உருண்டு செல்லும் மழைத் தண்ணீரில் வாகனங்கள் மிதப்பது போலவே இருந்தன. நாங்களும் மிதந்துகொண்டிருந்தோம்.

ஓர் இடத்தில் "கிருஷ்ணா... இப்போ சாக்கடை தண்ணீரில் போயிட்டு இருக்கோம். கொஞ்ச நேரம் கழிச்சி நல்ல தண்ணீர் வரும் அப்போ கால்களை நனச்சிடுங்க." என்று ஹேம்நாத் கூறினான்.

"பரவாயில்லடா... வீட்டுக்கு போயி குளிச்சிடலாம். பிரச்சனை இல்ல..."

"நாலு வருஷம் முன்னாடி பெய்த மழையில் இந்த ஏரியாவுல ஒரே வெள்ளம்... என்னோட தொடை வரைக்கும் தண்ணி இருந்தது கிருஷ்ணா..."

"அப்போ... என்னோட இடுப்பளவு தண்ணி போயிருக்கும்... "

"ஆமா கிருஷ்ணா"

இப்படி பேசிக்கொண்டே சென்றுகொண்டிருக்கும் பொழுது காரில் சென்ற ஒருவனின் வண்டிச்சக்கரம் எங்கள் மீது சாலையிலுள்ள நீரை வாரி இறைத்தது.

"டேய்... பொடிப்பயல இப்பவும் சாக்கடை தண்ணியில தான் போயிட்டு இருக்கோமா?"

"ச்சே ச்சே... இல்ல கிருஷ்ணா, அந்த எடம் அப்பவே போயிடுச்சி கிருஷ்ணா. எதுக்கும் வீட்டுல போயி குளிச்சிடுங்க..."

"சரிடா... நாளைக்கு பார்க்கலாம்."

எனக்கான இடத்தில் என்னை இறக்கிவிட்டு ஹேம்நாத் புறப்பட்டான். மழை கொட்டிக்கொண்டே இருந்தது. உடம்பில் உயிர் ஒட்டிக்கொண்டுள்ளதைப் போல ஈரமும், குளிரும் என்னை அப்பிக்கொண்டிருந்தன. அந்த மாதிரியான நேரங்களில் தான் உஷ்ணத்தின் ஆனந்தமும் புரிய வருகிறது.

வீட்டிற்கு சென்று சேரும் வரை அடைமழை பெய்து கொண்டிருந்தது. சுடுதண்ணீரில் குளித்து முடித்து என்னுடைய உறங்கும் அறைக்குச் சென்றேன்.

சிமெட் ஓடு (சீமை ஓடு) வேயப்பட்ட கூரையின் மேலிருந்து சொட்டு சொட்டாக மழை நீர் சொட்டிக் கொண்டிருந்தது. ஆயிரம் துளிகளுக்கு ஒரு துளி வீதம் கூரையின் ஐந்து இடங்களில் ஆங்காங்கு ஒழுகிக்கொண்டிருந்தது. அதை நாங்கள் பாத்திரங்கள் வைத்து சேமித்துக் கொண்டிருந்தோம். துளிகள் பாத்திரங்களில் விழும் போது டங்... டிங்... டொங்.. என்ற சத்தம் எழும்பி அறைமுழுவதும் எதிரொலித்தது. சுவர்களும், தரையும் ஓதம் ஏற்படுத்தி குளிரும்படி செய்துகொண்டிருந்தது. இந்த நிலையில் தான் நண்பர் மார்க் நெருப்புக் கட்டிகளை சட்டியில் ஏந்திக்கொண்டு வந்தார். அவை தங்கம் போல் ஜொலித்துக் கொண்டிருந்தன.

பல வருடங்களுக்கு முன்பு நான் வாழ்ந்த கிராமங்களில் விறகு அடுப்புதான் பயன்படுத்துவார்கள். அப்பொழுதெல்லாம் மழைக் காலங்களிலும், குளிர் காலங்களிலும் சமயலரைக்குச் சென்று ஆனந்தமாகக் குளிர் காய்வேன். குழம்பு, பொரியல், வறுவலுடன் நெருப்பின் வாசனையும் ரம்யமாக இருக்கும்.

பிறகு அனைவரும் LPG அடுப்புகளுக்கும், மின் அடுப்புகளுக்கும் மாறிவிட்டார்கள். ஆகவே கரித்துண்டுகளையும், நெருப்பையும் பார்க்க முடிவதில்லை. நீண்ட நாட்கள் கழித்து தகதகவென ஜொலிக்கும் நெருப்புத் துண்டுகளைப் பார்த்த போது சொல்ல முடியாத சந்தோசம் பெருக்கெடுத்தது.

கைகளையும் கால்களையும் நெருப்பின் அருகில் நீட்டி மகிழ்ச்சியாக குளிர் காய்த்தேன். அடைமழைக்கு நெருப்பின் கதகதப்பு இதமாக இருந்தது. இளையராஜாவின் இதமான பாடல்கள் வானொலியில் வழிந்துகொண்டிருந்தது. பாதங்களை மழை நீரில் நனைத்துவிட்டு மீண்டும் நெருப்பில் காட்டினேன். மழைத் தண்ணீரில் கால்களை நனைப்பதும் நெருப்பில் காட்டுவதுமென என்னுடைய விளையாட்டு நெடுநேரம் தொடர்ந்தது. நள்ளிரவைத் தாண்டியும் விளையாட்டு அளிக்கவேயில்லை.

உலகமே ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது விளையாடிக் கொண்டிருக்கும் ஒரே ஜீவன் நானாகத்தான் இருக்குமோ என்ற எண்ணம் தோன்றியது. ஆகவே படுக்கைக்குத் திரும்பினேன். எப்பொழுது தூங்கினேன் என்று தெரியவில்லை. கண்விழித்த போது மழை சன்னமாக கொட்டிக் கொண்டிருந்தது.

3 comments:

 1. செம நடை தலைவா..

  அட்டகாசம்..நான் மழைக்காலத்தை ரொம்பவே மிஸ் பண்ணுறேன்..

  //பல வருடங்களுக்கு முன்பு நான் வாழ்ந்த கிராமங்களில் விறகு அடுப்புதான் பயன்படுத்துவார்கள். அப்பொழுதெல்லாம் மழைக் காலங்களிலும், குளிர் காலங்களிலும் சமயலரைக்குச் சென்று ஆனந்தமாகக் குளிர் காய்வேன்.//

  நான் மார்கழி மாதகாலையில் ஒவ்வொரு நாளும் குளித்து முடித்தவுடன் அடுப்பின் அருகில் வந்து நிற்பேன் சிறுவனாக இருந்தப்பொழுது..அப்ப ஒரு சாம்பல் வாசனை கலந்து வரும்ல..சூப்பர்.

  ReplyDelete
 2. கலக்கல் பதிவு கிருஷ்ணா. :)

  ReplyDelete
 3. மழை.. மழை.. மழை
  மழையை யார்யார் வாய் கேட்பினும் அழகு. அதுவும் கிருஷ்ணா! எஸ்.ரா தொணியில் உங்கள் கட்டுரை, மழை நின்றும் பெய்யும் மரம். என் ரசனை இன்னும் கொஞ்சம் கூடிப்போச்சு. :-)

  ReplyDelete