Thursday, October 21, 2010

அவள் அப்படித்தான் - ருத்ரையா

வரலாற்று சிறப்புமிக்க, தொழில் நுட்பத்தை அதீதமாகப் பயன்படுத்தப்பட்ட, இந்தியாவிலேயே முதன் முறையாக அதிக செலவில் எடுக்கப்பட்ட, ஹாலிவுட்டுக்கு நிகரான, தரமான சினிமாவைப் பற்றி பேசுவதற்காக நண்பர் சுரேஷ் கண்ணனுக்கு தொலைபேசி இருந்தேன். அப்பொழுது அவரிடம் ஒரு விஷயத்தைச் சொல்லி குறைபட்டுக் கொண்டேன்.

"சுகா, என்னால் ஐந்து நிமிடம்கூட பார்க்க முடியாத வேற்று மொழிப் படத்தை நீங்கள் ஐம்பது முறையேனும் பார்க்கிறீர்கள். உங்களுடைய பொறுமைக்கு வானத்தைக் கூட ஒப்பிட முடியாது. நல்ல தமிழ்ப் படங்கள் எவ்வளவு இருக்கின்றன. அவற்றை பற்றி நீங்கள் ஏன் எழுதுவதில்லை? என்றேன்.

அதற்காக, நீண்ட நாட்களுக்கு முன்பு எழுதியிருந்த 'அவள் அப்படித்தான்' பதிவினை படிப்பதற்காக பகிர்ந்திருந்தார்.

நான்கு மாதங்களுக்கு முன்பு என்னுடைய வேலையை ராஜினாமா செய்ததும், முதல் வேலையாக பாரிமுனை சென்று 70-ற்கும் மேற்பட்ட குறும்படங்களும் திரைப்படங்களும் சேகரித்தேன். ஒன்றைக் கூட இதுவரைப் பிரிக்காமல் வைத்திருந்தேன். அவற்றில் 'அவள் அப்படித்தான்' படமும் ஒன்று. எவ்வளவு நாள் தான் கொலுவைக் கலைக்காமல் இருப்பது. அதற்கான நேரம் சென்ற வாரத்தில் கிடைத்தது.

பிராந்திய மொழிப் படங்களில் நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக என்று வெவ்வேறு தளங்களில் தனது பங்களிப்பை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து சிறப்பாக கொடுத்துக் கொண்டிருக்கும் நாடகர் கமலஹாசனின் நெருங்கிய நண்பர் 'ஆனந்து'-வுக்காக என்ற எழுத்துக்களுடன் படம் ஆரம்பிக்கிறது.

'முழு வானில் ஒரு பாதை' - என்று பெண்களின் பிரச்சனைகளை ஆவணப் படம் எடுக்க நினைக்கும் அருண் (கமல்), அவனுக்கு உதவ நினைக்கும் தியாகு (ரஜினி), தியாகுவின் அலுவலக ஊழியர் மஞ்சு (ஸ்ரீபிரியா) ஆகியோரைக் கொண்டு கதை நகர்ந்தாலும், மஞ்சுவின் உளவியல் வெளிப்பாடுதான் சினிமாவின் மையக்கரு. (Dating, outing, live-in relationship, Car key change culture எல்லாம் இன்று சாதாரணமாக இருக்கக் கூடிய காலம். எனவே 25 வருடத்திற்கு முந்தைய வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்திற்கு நம்மை ஒன்ற வைத்துக் கொள்வது முக்கியம்.)

அருணின் கேமராக் கண்கள் காபரே நடனக்காரியின் இடை அசைவுகளை படமாக்குகிறது. அதனைத் தொடர்ந்து படமாக்குவதற்கு தியாகுவின் நிர்பந்தத்துடன் மஞ்சு துணைக்கு வருகிறாள். அருணின் மென்மையான ஆண்மை குணம் மஞ்சுவிற்குப் பிடித்திருக்கிறது. இருந்தாலும் அவனிடம் கடுமையாகப் பேசுகிறாள். பாறை போன்ற மனதில் வேர்விடத் துடிக்கும் அருணை ஜாக்கிரதையாகத் தவிர்க்கப் பார்க்கிறாள்.

அருணின் வீட்டிற்குச் செல்லும் மஞ்சு ஒரு புத்தகத்தைக் கையிலெடுத்து "நீங்க கம்யுனிஸ்டா?" என்று கேட்கிறாள்.

"இல்லையே...! எல்லாத்தையும் தெரிஞ்சிக்கத் தான் படிக்கிறேன். அப்படியே இருந்தாத் தான் என்ன?" என்று அருண் சொல்கிறான்.

கேள்விக்கான பதிலைச் சீண்டாமல் "எனக்கு செகப்பக் கண்டாலே எரிச்சல்" என்று எங்கோ நகர்ந்து செல்கிறாள். புரட்சிக்கான அதே நிறம் தானே விளக்குடன் தொடர்புபடுத்தி விபச்சாரத்தின் இடத்தை சுட்டிக்காட்டப் பயன்படுகிறது. அந்த முரண்பாடுகளே மஞ்சுவின் வாழ்விலும் பேச்சிலும் வெளிப்படுகிறது.

சிறுவயதில் நேரடியாகக் கண்ட அம்மாவின் கள்ளத் தொடர்பு மஞ்சுவின் மனதை வெகுவாக பாதிக்கிறது. தனது அம்மா சோரம்போனதை நினைத்து தனிமையில் வாடுகிறாள். தனிமை அவள் மீதான பாலியல் பலாத்காரத்தை நிகழ்த்துகிறது. வாழ்க்கையின் தொடர்ச்சியான மனச் சிக்கல்களுடன் கல்லூரியில் நுழைகிறாள். கல்லூரிப் பருவம் க்ருபா என்ற தோழனுடன் காதலை அரும்பச் செய்கிறது. சந்தர்ப வசத்தால் அவனைப் பிரிய நேர்கிறது. காதல் உதிர்கிறது. கசப்பான நினைவுகள் துளிர்க்கிறது. அதன் பின் மனோ என்பவனுடன் காதல் கொள்கிறாள். அவனோ மஞ்சுவைப் பயன்படுத்தி விட்டுத் தூக்கி எறிகிறான். வாழ்வின் சூதாட்டத்தில் அவள் தொடர்ந்து தோற்றுக் கொண்டே இருக்கிறாள். தோல்வியின் வலி சமூகத்தின் மீதான, குறிப்பாக ஆண்களின் மீதான வெறுப்பாக மாறுகிறது.

பெண்களை நிர்வாணக் கண்களில் மட்டுமே பார்க்கும் தியாகுவின் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்கிறாள் மஞ்சு. வியாபார சினிமா முற்றிலும் ஜீரணித்த ரஜினியின் ஆரம்பகால அசத்தலான நடிப்பு இந்தப் படத்தில் வெளிப்படுகிறது. ரஜினியிடம் இருக்கும் நடிப்புத் திறமை உண்மையிலேயே உயர்ந்தது. அவரும் சவாலான பாத்திரங்களையே விரும்புவார் என்று நினைக்கிறேன். இன்றைய திரைப்படங்களில் அவர் செய்யக் கூடிய கதாப்பாத்திரங்கள் எதிர்காலத்தில் அவரை நகையாடப்போகிறது. அந்த நகைப்பில் இது போன்ற பங்களிப்புகள் மறையத்தான் போகிறது.

கடுமையான வார்த்தைகளையும், நடத்தைகளையும் தன்னைச் சுற்றி சுவராக எழுப்பிக் கொண்டு சமூகத்திடமிருந்து தப்பிக்கப் பார்க்கும் மஞ்சு, அந்த போக்கினாலேயே அருணை இழக்கிறாள். அருவியில் நழுவவிட்டதை கடலில் தேடுவதைப் போல அருணைத் தேடி தியாகுவிடம் செல்கிறாள். கோயம்புத்தூரிலிருந்து மனைவியுடன் சென்னைக்கு வரும் அருணை வரவேற்பதுடன் படம் முடிகிறது.

கமல், ரஜினி, ஸ்ரீப்ரியா, உடன் நடித்த அனைவரும் கதாப் பாத்திரத்திற்குத் தேவையான பங்களிப்பைக் கூட்டியோ குறைத்தோ வழங்காமல் சரியாகச் செய்திருக்கிறார்கள். அதற்கான அச்சாணியாய் இருந்த ருத்ரையாவை நிச்சயம் பாராட்ட வேண்டும். படத்தின் வசனத்தை பிரபல எழுத்தாளர் வண்ணநிலவன், சோமசுந்தரம், ருத்ரையா மூவரும் சேர்ந்து எழுதியிருக்கிறார்கள். பல இடங்களில் வசனம் 'நறுக்' என்று இருக்கிறது. பின்னணி இசையிலும், பாடல்களிலும் இளையராஜாவின் தனித்தன்மை ஒ(லி)ளி வீசுகிறது. படத்திலுள்ள மூன்று பாடல்களுமே அருமையான பாடல்கள் தான். கீழுள்ள பாடல்களை YouTube-ல் கேட்கலாம்.

1. உறவுகள் தொடர்கதை - K.J. யேசுதாஸ்
2. பன்னீர் புஷ்பங்களே - கமல்ஹாசன்
3. வாழ்க்கை ஓடம் செல்ல - S.ஜானகி

ஜானகி அம்மா பாடிய பாடல் இணையத்தில் கிடைக்கவில்லை. கர்னாடக இசையின் ஒரு ராகத்தைப் பாடினால் மழை வரும் என்று நம்பப்படுகிறது. அந்த ராகத்தில் அமைந்தது இந்தப் பாடல்.

"வாழ்க்கை ஓடம் செல்ல
வாழ்வில் நீரோட்டம் இல்லை...
யாரும் தேரில் செல்ல
ஊரில் தீரும் இல்லை...
எங்கோ ஏதோ யாரோ...ஓஓஓ"

- என்ற பாடலை ஸ்டுடியோவில் பாடிவிட்டு வீட்டிற்கு சென்றார்களாம். வழியில் தூறல் விழுந்ததற்கான ஈர அடையாளம் இருந்ததாம். இதனை தொலைகாட்சியில் பேசும் பொழுது பகிர்ந்து கொண்டார்கள். நேரில் சந்தித்த பொழுது அதைப்பற்றி விசாரித்தேன். கண்கள் விரிய அந்த நிகழ்வை பசுமை மாறாமல் பகிர்ந்து கொண்டார்கள்.

திரைப்படத்தின் ஆரம்ப 14 நிமிடங்களை கீழுள்ள இணைப்பில் பார்க்கலாம்:
Aval Apadithaan 1/10

"குப்பை மாதிரி வேகமா வளரனும், அப்பத்தான் கோபுரமா உசர முடியும்னு" என்னோட தோழி அடிக்கடி சொல்லுவாள். கோபுரமாக உயர்வதின் ரகசியம் இதுதானோ என்னவோ. அதனால் தான் உச்ச நடிகர்கள் தங்களுக்கான குப்பைகளை கால இடைவெளியில் சேர்த்துக் கொண்டே வேகமாக வளர்கிறார்களோ என்னவோ. அதனால் தானே மகுடத்தின் மணியாகவும், கழுத்தின் ஆபரணமாகவும் உச்ச நட்சத்திரங்கள் வைரமாக ஜொலிக்கிறார்கள்.

வைரம் மண்ணில் இருந்து மட்டும் எடுக்கப் படுவதில்லையே. பாம்பின் விஷமாகக் கூட நம்பப்படுகிறதே. அதனால் தானே வைரம் உயிரை எடுக்கும் விஷமாகவும் பயன்படுகிறது. தற்போதைய சினிமா - தயாரிப்பாளர்கள் சமூகத்தின் மீது உமிழும் விஷமாகத் தானே இருக்கிறது. விஷத்தைத் தானே நாசூக்காக வியாபாரம் செய்கிறார்கள். உண்மையான கலை வடிவம் குழி தோண்டி புதைக்கப் படுகிறது. காலம் ஒருநாள் அவற்றை உண்மையான வைரமாக மாற்றும்.

அவள் அப்படித்தான் - எதிர்காலம் கண்டெடுக்க வேண்டிய அற்புத வைரம்.

Tuesday, October 19, 2010

அகநாழிகை புத்தக வெளியீடு

விழா தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாவகே சாரு நிவேதிதா வந்திருந்தார். அதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே CSK வந்துவிட்டார். எப்படி இவ்வளவு துல்லியமாக சொல்கிறேன் என்றால் CSK வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே நான் அங்கு இருந்தேன். ஞாயிறன்று முரளி வருவதாகச் சொல்லி இருந்தான். அவனுக்கான புத்தகம் வாங்கவே கொஞ்சம் சீக்கிரம் சென்றிருந்தேன். அதுவும் ஒரு வகையில் நல்லதாகவே அமைந்தது. புதுக்கவிதை எழுதும் 'சா முத்துவேல், யாத்ரா, வேல்கண்ணன், பெஸ்கி' என்று பல நண்பர்களையும் நீண்ட நாள் கழித்து பார்க்கக் கிடைத்தது. சா முத்துவேலுக்கு இளமை திரும்பியிருந்தது. என்னுடைய பொறாமையை மறைக்காமல் அவரிடம் தெரியப்படுத்தினேன்.

குறித்த நேரத்தை விட கொஞ்சம் தாமதமாக விழா தொடங்கியது. சாரு பேச ஆரம்பித்தார். 'பரத்தை கூற்று' - புத்தகத்தை முதலில் சிறுகதைத் தொகுதி என்று நினைத்தாராம். கவிதை என்றதும் வருவதற்கு தயக்கமாக இருந்தது என்றார். என்னை வெளியிட அழைத்ததற்காக CSK-வைப் பாராட்டுகிறேன் என்றார். அதன் பிறகு உலக இலக்கியம், உலக எழுத்தாளர்கள், உலகக் கவிதை, உலகப் படம் என்று என்னென்னமோ பேசினார். அவற்றில் பதிவாகியிருக்கும் பாலியல் தொழிலாளிகளின் வலிகளை உணர்துவதற்காக பல மேற்கோள்களைக் காட்டினார். 'வைரமுத்து, இளையராஜா, கமல்ஹாசன்' போன்ற பிரபலமானவர்களைப் பற்றி ஏற்கனவே பல சந்தர்பங்களில் பகிர்ந்து கொண்ட அதே கருத்துக்களை இங்கும் பகிர்ந்து கொண்டார். அவர்களுக்கு வழங்கிவரும் அடைமொழி குறித்த தன்னுடைய கருத்துக்களை முன்வைத்தார்.

ஒருமணி நேரத்திற்கும் மேலாகப் பேசியவர் கடைசி ஐந்து நிமிடங்கள் 'பரத்தை கூற்று' கவிதை புத்தகத்திற்காக எடுத்துக் கொண்டார். ஒருசில கவிதைகளை வாசித்துக் காண்பித்தார். "சுஜாதா இருந்திருந்தால் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடி இருப்பார். அப்படிப்பட்ட கவிதைகள் நிறைய இருக்கிறது. அவர் எவ்வளவோ கவிஞர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். மனுஷ்யபுத்ரனைத் தவிர மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. பரத்தைகளின் வலி கவிதைகளில் இல்லை" என்று அனைவருக்கும் நன்றி கூறி உரையை முடித்தார்.

70-ற்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்ததால் நாங்கள் விட்ட மூச்சுக்காற்றே அறையை உஷ்ணமாக்கியது. சுற்றியிருந்த வெக்கையும், உள்ளிருந்த புழுக்கமும் வெளியில் வந்தவுடன் கரைந்து சென்றது போல இருந்தது. நண்பர்களிடம் விடைபெற்று பேருந்து நிறுத்தத்திற்கு வந்தேன். முன் பார்த்திராத நபரிடம் "இங்கு நிற்கும் வண்டிகள் உதயம் திரையரங்கு செல்லுமா?" என்று கேட்டேன்.

சிரித்துக் கொண்டே அருகில் அழைத்து உட்காரச் சொல்லி என்னைப் பற்றி விசாரித்தார். இது போன்ற தருணங்களில் சொல்வதற்கென்றே தயார் செய்து வைத்திருந்த வரிகளை வார்த்தை பிறழாமல் சொல்லிக் கொண்டிருந்தேன். இடையில் ஒரு சில கேள்விகளைக் கேட்டார். அதற்கும் சலிக்காமல் வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டிருந்தேன். ஒரு நிலையில் போதும் என்று நிறுத்திவிட்டு அவரைப் பற்றி விசாரித்தேன்.

சென்னைவாசி. பெயர் பிரபா என்றார். மெட்ராஸ் பல்கலையில் 'சங்ககால இலக்கியம்' பற்றி Phd செய்து கொண்டிருக்கிறாராம். 'பரத்தை கூற்று' என்றதும் ஆவலுடன் வந்திருந்தேன். "எதிர்பார்த்த அளவிற்கு இல்லை" என்றார். இதற்குள் பேருந்து வரவும் உள்ளே சென்று கடைசி இருக்கையில் அமர்ந்துகொண்டோம். மின் விளக்குகளின் வெளிச்சத்தில் ஈரத்தரை நகர்ந்து கொண்டிருந்தது.

உங்களை புத்தக வெளியீட்டு விழாவில் பார்த்தேன். அதனால் தான் உங்களைப் பற்றி விசாரித்தேன் என்றார். அவரைப் பார்த்த ஞாபகம் எனக்குக் கொஞ்சமும் இல்லை.

"இவ்வளவு ரிஸ்க் எடுத்து இந்த மாதிரி விழாவிற்கு வர வேண்டிய அவசியம் இல்லை. புத்தகம் படிக்கிறீங்க இல்ல... அதுவே போதும்..." என்று அவர் சொல்லியதும் நான் அதிர்ந்தேன்.

"நான் முண்டியடித்து எந்த ரிஸ்கும் எடுக்கலையே!" என்றேன்.

"இரண்டு மணி நேரம் பயணம் செய்து வரீங்க இல்ல... அதைச் சொன்னேன்..." என்றார்.

பிரபா எழுதி "கண்ணாடி" என்ற கவிதைப் புத்தகமும், "பல்பம், பிஞ்சுகள்" ஆகிய குறு நாவல்களும் வெளிவந்துள்ளதாம். NCBH - ல் கிடைக்கிறது என்றார். உதயம் திரையரங்கைப் பார்த்ததும் எழுந்து கொண்டேன். வண்டி நின்றதும் கீழே இறங்கி அவரைப் பார்த்துச் சிரித்தேன். என்னைப் பார்த்து கையசைத்தார். எந்திரன் படத்தின் போஸ்டரை சில நொடிகள் மறைத்தவாறு பேருந்து என்னைக் கடந்து சென்றுகொண்டிருந்தது.

Friday, October 15, 2010

அழகியல் அறிவும், இசை மருத்துவமும்

அமெரிக்காவில் இருக்கும் பொழுது aesthetic intelligence - சார்ந்த ஒரு புதிர் விளையாட்டில் அனில் ஸ்ரீனிவாஸ் கலந்து கொண்டாராம். அதனை கேணி உரையாடலின் இடையில் எங்களுடன் பகிர்ந்துகொண்டார். இதற்கு ஒரு பேனாவும் காகிதமும் போதும் என்றார். வந்திருந்த 80-ற்கும் அதிகமான நண்பர்களில் 8-ற்கும் குறைவானவர்களே பேனா-பேப்பருடன் வந்திருந்தோம். அதில் நானும் ஒருவன். புதிரின் ஆரம்பமாக அவர் சொல்லும் பெயர்களை வரிசையாக எழுதச் சொன்னார். அவர் உதடசைத்து உச்சரித்த பெயர்கள்...

1) Gnani
2) Pushpa
3) Hari
4) Arivazhagan
5) Surya

"இந்தப் பெயர்களை உங்களுக்குப் பிடித்த மாதிரி மாற்றி வரிசைப் படுத்துங்கள்" என்றார்.

"எவ்வளவோ பண்றோம்... இதைப் பண்ண மாட்டோமா!" என்று வரிசையை '2 - 1 - 3 - 5 - 4' இப்படி மாற்றினேன்.

"நீங்கள் ஏன் இப்படி வரிசையை மாற்றினீர்கள்? காரணம் என்ன?" என்று முதல் வரிசையில் இருந்ததால் என்னிடமிருந்து உரையாட ஆரம்பித்தார்.

2) Pushpa - அம்மாவின் பெயர்
1) Gnani - பிடித்த எழுத்தாளர் மற்றும் கேணி நண்பர்
3) Hari - என்னுடைய பழைய கம்பெனியின் நிறுவனர். வேலை கொடுத்து உபசரித்த நண்பர்.
5) Surya - இந்த பெயரில் சில நண்பர்கள் இருக்கிறார்கள்.
4) Arivazhagan - நல்ல தமிழ் பெயர். Out of fashion என்று சொல்லவில்லை. இந்தப் பெயரில் எனக்குத் தெரிந்து யாரும் இல்லை என்றேன்.

"நீங்கள் பிழைத்துக் கொள்வீர்கள்" என்றார்.

"யாராவது அகர வரிசைப்படி எழுதி இருக்கிறீர்களா?" என்றார்.
ஒரு சிலர் ஆம்... என்றனர்.

"யாராவது வரிசையை மாற்றாமல் அப்படியே இருக்கட்டும் என்று இருக்கிறீர்களா?".
ஒருவர் தலையசைத்தார்.

யாராவது வார்த்தையின் நீள அளவை கருத்தில் கொண்டு அடுக்கி இருக்கிறீர்களா?.
ஒருவர் மட்டுமே அதுபோல அடுக்கியிருந்தார். அதாவது,

3) Hari
1) Gnani
5) Surya
2) Pushpa
4) Arivazhagan

இந்த முறையில் யார் அடுக்கி இருக்கிறார்களோ, அவர்கள் மிகுந்த அறிவாளிகள், உலகின் ஒரு சதவிகித மனிதர்களுக்குத் தான் இந்த அழகியல் அறிவு இருக்கும். இசை அல்லது நுண்கலையைப் படித்திருந்தால் இந்த அறிவு அதிகமாக இருக்கும் என்று சொல்லிவிட்டு "நீங்கள் என்ன செய்கிறீர்கள்?" என்று அந்த நண்பரைப் பார்த்து கேட்டார். அவரும் டிசைன் சமந்தப்பட்ட வேலையில் இருப்பதாகக் கூறினார்.

இது எதேர்ச்சையாக நடந்ததா அல்லது குறிவைத்துப் பழி வாங்கியதா என்று தெரியவில்லை. கொடுத்திருந்த பெயர்களில் நால்வர் எனக்கு நெருக்கமானவர்கள். அது மட்டுமில்லாமல் Keyboard 4 மாதமும், கிடார் - 8 மாதமும் பயின்றிருக்கிறேன். போலவே என்னுடைய மாமா வெங்கட் - ஆயில் பெயிண்டிங், அக்ராலிக் பெயிண்டிங் போன்றவற்றை செய்து உலக வங்கிக்கும், பல பெரிய நிறுவனங்களுக்கும் கொடுக்கும் கடைசி நாள் வரை தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்திருக்கிறேன். இது போதாதென்று ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று வெங்கட்டின் தனியறைகுச் சென்று அவர் வரைந்திருக்கும் வண்ண ஓவியங்களைப் பார்த்து "இந்த கலர் காம்பினேஷன் நல்லா இருக்கே, இந்த Brush Stroke நல்லா இருக்கே" என்று நுணுக்கமாகப் பாராட்டவும் செய்வேன். இருந்தும் அழகியல் அறிவு என் மூளைக்கு எட்டாதது என்? எதற்கும் மாமாவிடம் இதே விளையாட்டை விளையாடிப் பார்க்க வேண்டும் என்றிருக்கிறேன்.

அழகியல் அறிவைத் தவிர்த்து இசையானது மருத்துவ ஆராய்ச்சியிலும் சில நோய்களை குணப்படுத்தப் பயன்படுகிறது. லேண்ட் மார்க்கில் சென்று பார்க்க வேண்டுமே! Vedic mantras for Pregnancy ladies, Music for Kidneys, Heart, Stomach, Relax என்பது மட்டுமில்லாமல் Music for pregnancy ladies, Diabetics, Music for baby's sleep, Prenatal music என்று பல வகைகளில் இருக்கிறது. "இவையெல்லாம் உண்மையிலேயே பயனுள்ள இசைத்தானா அல்லது விற்பனை நோக்கில் செய்யப்படுகிறதா?" என்று கேட்டேன்.

மனித மூளையைத் தூண்டும் தன்மை இசைக்கு இருக்கிறது. ஆனால் இவர்கள் செய்வது வியாபார நிமித்தமாகத் தான். அதிகமாக நம்பாதீர்கள்.

சில இசை உங்களுடைய உணர்வுகளைத் தூண்டிவிடும். Mozart Effect - என்ற இசையியல் ஆராய்ச்சி கூட நடந்து கொண்டிருக்கிறது. Mozart-ன் இசையைக் கேட்கும் பொழுது மூளையின் சில பகுதிகள் பிரத்யோகமாகச் செயல்படுகிறது என்பதை நிறுபித்திருக்கிறார்கள். நல்ல உணர்வுகளைத் தூண்டுமாறு இசையைக் கேட்க வேண்டும். இரைச்சல் மிகுந்த பாடல்களை அதிகம் கேட்காதீர்கள். அது மூளைக்கு நல்லது அல்ல என்று அனில் பகிர்ந்து கொண்டார்.

"யுவன் இசையமைக்கும் பொழுது சில ஒலி அதிர்வுகளில் பாடல் பதிவு செய்யாதே என்று சொல்லிவிடுவேன். அப்படி இருந்தாலும் அதை நீக்கச் சொல்லுவேன். ஏனெனில் சில அதிர்வுகளில் பாடல்களைக் கேட்பது மனித மூளைக்கு நல்லதல்ல. அதுபோன்ற இசையைக் கொடுப்பது பாவம்" என்று இளையராஜா சொல்லியது ஞாபகத்திற்கு வந்தது. இதை மாஸ்ட்ரோ பகிர்ந்து கொண்ட பொழுது யுவன் அருகில் இருந்தார்.

தற்போது கேட்கக் கூடிய இசை எல்லாமே அதிகமான இரைச்சலைக் கொண்டுதான் வருகின்றன. அப்படியெனில் நம் மூளையைக் கெடுக்கக் கூடிய வேலையை தான் இசையமைப்பாளர்கள் செய்து கொண்டிருக்கிறார்களா?

அனில் ஸ்ரீநிவாஸ் - 2 - அழகியல் அறிவும், இசை மருத்துவமும்

Tuesday, October 12, 2010

கேணி இசை சந்திப்பு - அனில் ஸ்ரீநிவாஸ்

இசையை ரசிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா? குழந்தையின் அழுகையைக் கூட தாயின் இதமான பேச்சைக் காட்டிலும், தாலாட்டுதானே சமாதானம் செய்கிறது. நண்பர்களுக்கு ஒரு கேள்வி... "உங்களுக்கு எந்த மாதிரி இசை பிடிக்கும்?"

ரகுமானின் இசை, யுவனின் இசை, இளையராஜாவின் இசை, MSV-யின் இசை, வித்யாசாகர், GV பிரகாஷ், MSS அம்மா இசை, நித்யஸ்ரீ, சௌம்யா, SPB, ஜானகி, சுசீலா, TMS, ஜேசுதாஸ் என்று பட்டியல் நீண்டு யாராவது ஒருவரை உங்கள் மனம் இந்த நேரத்தில் தேர்வு செய்திருக்கும். அதற்கான காரணமும் இருக்கும்.அந்த நபரை மறந்துவிடாதீர்கள். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். கேணி இசைச் சந்திப்பைப் பற்றி பேசிவிட்டு இவர்களிடம் வரலாம்.

அனில் ஸ்ரீநிவாசன் - அமெரிக்காவில் MBA [மேனஜ்மென்ட் & எகனாமிக்ஸ்] முடித்துவிட்டு, அங்கேயே இரண்டு வருடம் வேலையும் பார்த்துவிட்டு, இசைதான் இனி வாழ்க்கையென வேலையை உதறிவிட்டு முழுநேர இசைக்கலைஞராக தன்னை மாற்றிக் கொண்டவர். தொண்டு நிறுவனத்துடன் இணைந்து தமிழ் நாட்டிலுள்ள பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நல்ல இசை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடியவர். மேற்கத்திய இசையை முறைப்படி பயின்றவர். இளையராஜா போன்ற முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணிபுரிபவர். குருசரனுடன் இணைந்து இவர் வெளியிட்டுள்ள பாரதியார் பாடல்கள் ஆல்பம் மிகுந்த வரவேற்ப்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது. உன்னி கிருஷ்ணன் போன்றவர்களுடன் இணைந்து மேடை கச்சேரி செய்யக் கூடியவர். இவரைப் பற்றி பூரணமாகவும் இசை வாசிப்புகளைக் கேட்கவும் அவருடைய இணைய தளத்திற்குச் செல்லவும்: http://www.thisandtheother.com

அனில் பேச ஆரம்பிக்கும் பொழுது புழுக்கமாக இருந்தது. திருவாரூரிலுள்ள பள்ளியில் இசை விழிப்புணர்வு நேரத்தின் போது கிடைத்த அனுபவத்துடன் பேச ஆரம்பித்தார். இசை மும்மூர்த்திகளை மனதில் வைத்துக் கொண்டு 'ட்ரினிட்டி என்றால் என்ன?' - என்று மாணவர்களைப் பார்த்து கேட்டிருக்கிறார்.

யாருமே பதில் சொல்லவில்லையாம். ஒரே ஒரு மாணவர் மட்டும் எழுந்து மூன்று நடிகைகளின் பெயரைக் கூறினானாம் [திரிஷா, நயன்தாரா, ****]. விளையாட்டுக்குச் சொல்கிறான் என்று நினைத்து மறுபடியும் அதே கேள்வியைக் கேட்டாராம். மாணவன் அதே பதிலைத் திரும்பவும் கூறினானாம். அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் ஒன்று சேர்ந்து சிரித்தார்களாம். சிறுவர்களுக்குத் தெரியவில்லை என்றால் கூடப் பரவாயில்லை. ஆசிரியர்களே இப்படி இருந்தால் எப்படி என்று அனிலுக்கு பயங்கரக் கோவம் வந்துவிட்டதாம். காரணம், அந்த பள்ளியின் இரண்டு தெருக்கள் தள்ளி இசை மும்மூர்த்திகள் [தியாகராஜர், சியாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சதர்] பிறந்த தெரு இருக்கிறதாம்.

இன்றைய நிலையில் ஏதாவது ஒன்றை அடையும் வழியாகத் தான் இசையை பயன்படுத்துகிறார்கள். புகழ், பணம், சூப்பர் சிங்கர் ஷோ, 35 லட்ச ரூபாய் வீடு என்று இவற்றைக் கருத்தில் கொண்டுதான் இசையை பார்க்கிறார்கள். ஒரு நண்பர், ஒருநாள் காலையில் ஃபோன் செய்திருந்தார். அவருடைய மகன் எங்களுடைய இசைப்பள்ளியில் தான் படிக்கிறார். "என் மகன் டிவி போட்டியில கலந்துக்கப் போறான், அனுப்புறேன்... ஏதாவது டிப்ஸ் கொடுங்க" என்று சொன்னார்.

"சரிங்க இன்னைக்கு சாயந்திரம் அனுப்பி வைங்க" என்று சொன்னேன். "இல்லைங்க, அதுக்கெல்லாம் நேரம் இல்ல. இன்னைக்கு மதியம் அவன் போட்டியில கலந்துக்கனும்" என்று சொல்கிறார். பெற்றவர்கள் தான் நேரடியாக இம்சிக்கிறார்கள் என்றால் போட்டிக்கு வரும் நடுவர்கள் வேறு மாதிரி படுத்துகிறார்கள். பாடுபவர்கள் குழந்தைகள். பாடல்களோ Adult Expression Songs. அதில் இந்த உச்சரிப்பு சரியில்லை. பாவம் சரியில்லை என்று பார்க்கவே... கேட்கவே... சகிக்கவில்லை. போட்டி நடத்துவதை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. இது போன்ற நிகழ்ச்சிகளும், அதில் வெற்றி பெறுவதும் தான் மேலானவை என்ற மாயையை ஊடகங்கள் ஏற்படுத்துவது சரியில்லை என்று அழுத்தமாகக் கூறினார்.

Mozart -ன் 12-வது வயதில் குழந்தைகளுக்கான ஓர் இசைப் போட்டி நடத்தியிருக்கிறார்கள். ஏழ்மையான குடும்பம் என்பதால் பரிசுக்காக வேண்டி மொசார்ட் கலந்துகொண்டாராம். போட்டியில் கலந்து கொண்டவர்களை தனியறையில் ஒரு பென்சிலும் காகிதமும் கொடுத்து உட்காரவைத்துவிட்டு Tune அமைக்கச் சொன்னார்களாம். இசைக் கருவியைப் பயன்படுத்தாமல் இரண்டு மணி நேரத்தில் "Twinkle Twinkle Little Star" என்ற பாடலின் 32 வகையான (Variations) இசைக் கோர்ப்புகளை தயார் செய்து வைத்திருந்தாராம். அவருக்குதான் முதல் பரிசும் கிடைத்ததாம். இவர் 35 வயதுகள் மட்டுமே வாழ்ந்திருக்கிறார். அதற்குள் 6000 இசைக் கோர்ப்புகளை நமக்குக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். Mozart Effect என்ற தனி மியூசிக் தெரஃபியே இருக்கிறதாம்.

பியானோ, வயலின் எல்லாம் மேற்கத்திய இசைக்கருவி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பியானோ இரண்டு இந்திய இசைக் கருவிகளின் சேர்மானம் என்றார். என்னால் நம்பவே முடியவில்லை. காஷ்மீரின் சந்தூர் என்ற இசைக்கருவியும், பண்டைய இந்தியாவின் யாழ் என்ற இசைக்கருவியும் சேர்ந்தது தான் பியானோ. அடுத்த நாட்டினர் முழுமை பெறாமல் செய்ததை எடுத்துக் கொண்டுபோய், மெருகேற்றி அதை தங்களுடையது என்று காப்புரிமை வாங்கிக் கொண்டு வியாபாரப் படுத்துவதில் மேற்கத்தியர்களை மிஞ்ச முடியாது. பியானோவும் அப்படித்தான் மேற்கத்தியர்கள் இசைக்கருவியானது என்றபொழுது, அனில் சொல்லியதை நம்பாமல் இருக்க முடியவில்லை.

இடையில் காற்று குளிர்ச்சியைப் பரப்பியது. மழை வந்து பியானோ நனைந்துவிடுமோ என்ற பதட்டத்திலேயே இருந்தார். மழையால் நனைத்துவிட முடியாத உறையைக் கொண்டு வந்ததும் தான் சமநிலைக்கு வந்தார். Music therophy மற்றும் மேல்நாட்டில் Btech architecture படிப்பில் இசையும் ஒரு பாடமாம். அதன் காரணங்களையும் சிறப்பையும் பற்றி விரிவாகப் பேசினார். இசை மற்றும் கலையைக் கற்பதால் aesthetic intelligence அதிகமாவதையும் சுவாரஸ்யமாக எடுத்துக் கூறினார்.

அதே மாதிரி தான் 'மேற்கத்திய இசை மேல்நாட்டு இசையாக மாறி, அதுவே மேலான இசையாகவும் மெல்லிசையாகவும் அர்த்தம் கொல்லப்பட்டுவிட்டது'. எல்லா இசையும் ஒன்றுதான். யார் இசையமைக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. அது கேட்பதற்கு இனிமையாக இருக்கவேண்டும். இசையை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. இசை பொதுவானது. ஓர் இசைவடிவம், அடுத்த இசை வடிவத்தை ஏற்றுக்கொண்டு புதிதாகத் தோற்றமளிக்கும். அதனைக் குறை என்றும் சொல்ல முடியாது. கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசைகூட ஈரான், பெர்சியா போன்ற நாடுகளின் ராகங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் இந்திய திரையிசையைச் சொல்லலாம். 1950-களிலேயே எல்லாவற்றையும் செய்துவிட்டார்கள் என்று MSV, மதன் மோகன் போன்றவர்களுடைய பாடல்களை வாசித்துக் காண்பித்தார். அதிலும் 198 0-களின் தொடக்கத்தில் இளையராஜா செய்த இசை உச்சம் என்றே சொல்ல வேண்டும்.

உதாரணமாக... (http://www.youtube.com/watch?v=A5-W9rYg0nw பாடல் ஆரம்பிக்கும் முன்பான காட்சிகளுடன் YouTube-ல் பார்க்கக் கிடைக்கிறது. re-recording வுடன் சேர்த்து இந்தப் பாடலைக் கேளுங்கள்.)

பூபாளம் இசைக்கும்
பூமகள் ஊர்வலம் (2)
இருமனம் சுகம்பெரும்
வாழ்நாளே...(2)

பாடலை Jazz-ல் ஆரம்பித்து வெஸ்டேர்ன் சென்று, ஹிந்துஸ்தானி ராகம் தொட்டு பிறகு கர்னாடக ராகம், மீண்டும் வெஸ்டேர்ன் என்று எல்லாவற்றையும் இளையராஜா பயன்படுத்தியிருக்கிறார். இதனை நமக்கேற்ற வடிவத்தில் தந்திருப்பார். இந்த விளக்கம் முதல் நான்கு வரிகளுக்கு மட்டுமே என்றார்.... இதுபோல இளையராஜாவின் ஏராளமான பாடல்களைச் சொல்லலாம். எந்த தொழில் நிட்பமும் இல்லாமல் இவற்றையெல்லாம் இளையராஜா செய்திருக்கிறார். பழைய சவுண்ட் ரெக்கார்டிங் தியேட்டர்கள் எல்லாம் கால்பந்தாட்ட மைதானம் மாதிரி இருக்கும். ஒரு பாடல் பதிவாக்கப்பட்டால் எல்லா இசைக்கலைஞர்களும் அங்கு இருப்பார்கள். அவரிடம் சில முறை பணியாற்றியிருக்கிறேன். உன்னதமான இசையமைப்பாளர். வியாபர ரீதியாக தன்னை விளம்பரப் படுத்திக் கொள்ளத் தெரியாதவர்.

ரகுமான் கூட தென்னாப்பரிக்க இசை, சூபி இசை, பாப், ஜாஸ் என்று ஏராளமான இசையைத் தனது படங்களில் பயன்படுத்துகிறார். அதனால்தான் நாடு கடந்தும் கூட அவருடைய இசை ரசிக்கப் படுகிறது என்றார். அதன் பிறகு பியானோ வாசித்துக் காண்பித்தார். அதைத் தொடர்ந்து வாசகர்கள் கேள்வி எழுப்பினார்கள். சந்திப்பின் முடிவாக ஹேராம் படத்தின் 'நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி...' பாடலை வாசித்து நிறைவு செய்தார்.

இனி ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கான பதிலுக்கு வருவோம். அதற்கு முன் என்னுடைய மருமகனுக்கு சொல்லிய சூஃபி கதையை உங்களுக்கும் சொல்லிவிடுகிறேன்...

RA புரம், பெலிசியா கட்டிடத்தின் எட்டாவது மாடியில் என்னுடைய மருமகனுக்காகக் காத்துக் கொண்டிருந்தேன். உடைந்த கையினை அசைத்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையில் இருப்பதை அவனுடைய நடையே உணர்த்தியது. அவனிடம் விபத்து நடந்ததைப் பற்றியும், அறுவை சிகிச்சை செய்ததது பற்றியும் கேள்விகள் கேட்டேன். ஒரு கேள்விக்கும் சரியான பதில் கிடைக்கவில்லை. அப்பொழுதுதான் அந்தக் கதையை சொல்லத் தொடங்கினேன். கதை என்றதும் மருமகன் சந்தோஷமானான்.

கதை கூட கேள்வியில் தான் ஆரம்பிக்கும். "மழை ஏன் பொழிகிறது?" என்பதுதான் அந்தக் கேள்வி.

முகம் சுளித்துக் கொண்டே "என்ன மாமா, சின்ன பசங்ககிட்ட கேக்குற மாதிரி கேக்குறீங்க? கதை தானே சொல்றேன்னு சொன்னீங்க?" என்றான்.

"பதில் சொன்னால் தான் கதையை ஆரம்பிக்க முடியும். சொல்லுடா" என்று அதட்டினேன்.

"மேகத்துல தண்ணி சேந்து கனமா ஆயிடும். மழையா வந்துடும். கடல் தண்ணியை காற்று உறிஞ்சி மேகத்துக்குக் கொடுக்கும். மேகம் கனமாக, கனமாக நெறைய மழையா வரும்" என்று ஆறாம் வகுப்பு மாணவன் மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு பயந்துகொண்டே சொன்னான்.

எனக்கு என்னவோ அள்ளி எடுத்து அவனுக்கு முத்தம் கொடுக்க வேண்டும் போல இருந்தது. Corporate Office என்பதால் என்னை கட்டுப்படுத்திக் கொண்டேன். நீ சொல்லியது சரியான பதிலாக இருக்கலாம் மருமகனே. என்றாலும் "எப்படி மழை பொழிகிறது? என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வாய்" என்று தொடர்ச்சியாக இன்னொரு கேள்வியையும் கேட்டேன்.

"ஆமாம் இல்ல... மாமா..." என்று அசடு வழிந்தான். ஒரு கேள்வி கேட்கப்படும் பொழுது, அலசி ஆராயாமல் நமக்குத் தெரிந்த பதிலை பொருத்திவிடுகிறோம். அதுதான் பிரச்சனையே. "எந்த மாதிரி..? என்ற வினா எழும் பொழுது "கிராமிய இசை, தாலாட்டு இசை, கர்நாடிக் இசை, ஹிந்துஸ்தானி இசை, திரை இசை, கருவி இசை" என்ற பட்டியலாக இல்லாமல் "யாருடைய...?" என்ற கேள்விக்கான பதிலைத் தான் பெரும்பாலும் பதிலாக கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஏனெனில் யாரோ ஒருவருடன் நம்மை இழந்துவிடுகிறோம். "இசை யார் வழியாகவும் நமக்குக் கிடைப்பதில்லை. இசைதான் சிலரின் வழியாக நமக்குக் கிடைக்கிறது" என்று அனில் சொன்ன வார்த்தைகளை நினைத்துக் கொண்டேன்."உங்களுக்கு எந்த மாதிரி இசை பிடிக்கும்?" என்ற கேள்விக்கு இனி பதில் சொல்லும் பொழுது யோசித்துவிட்டுத் தான் சொல்ல வேண்டும் என்றிருக்கிறேன். உங்களிடம் கூட இந்தக் கேள்வியை ஆரம்பத்தில் கேட்டிருந்தேன் இல்லையா? நீங்கள் யோசித்த பதிலை பின்னூட்டத்தில் அளித்தால் நிச்சயம் மகிழ்வேன். ஆமாம், உங்களின் பதில் தான் என்ன?