Saturday, December 31, 2011

தேவலோக வாழ்க்கை

இதோ இப்போதான் தர்ஷன் பிறந்தா மாதிரி இருக்கிறது. எதைப் பார்த்தாலும் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தவன் புதியவர்களின் முகம் பார்த்து அழ ஆரம்பித்துவிட்டான். என்னைப் பார்த்து அதிகமாகவே அழுகிறான். பயத்தில் தான் அழுவதாக நினைக்கிறேன். ஒரு பூனையைப் பார்த்து பூனை பயப்படுவதில்லை. நாயைப் பார்த்து நாயும் பயப்படுவதில்லை. யானையைப் பார்த்து யானை கூட பயப்படுவதில்லை. மனிதக் குழந்தைகள் மட்டும் ஏன் புதிய மனிதர்களைப் பார்த்து அழுகிறது?. அப்படியெனில் எது போன்ற ஜந்துக்கலாக வளர்ந்த மனிதர்களின் முகங்கள் குழந்தைகளின் கண்களுக்குப் புலப்படுகிறார்கள். இந்த சந்தேகம் நீண்ட நாட்களாக எனக்கு இருக்கிறது.

“இவன் ஏன் மாமா என்னைப் பார்த்து இப்புடி அழுவுறான்?” என்று தர்ஷனின் தாத்தாவிடம் கேட்டேன்.

“அவம்பேரு தர்ஷன் இல்ல. தூர்....தர்ஷன், அப்படித்தான் அழுவான். தொலவா இருந்து கேட்டுட்டுப் போ” என்றார்.

தொலைவாகச் சென்றதும் அழுகை சத்தம் நின்றது. தாத்தாவின் முகத்தைப் பார்த்து பேரன் சிரித்துக் கொண்டிருந்தான். பட்டாம்பூச்சி பறந்து பூக்களில் தேனெடுப்பது போல சிரிப்பானது இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தது. சாக்லேட் வேணும்னு அழுதுட்டு இருந்த பையன் இந்த அகில். “டேய்... இங்க வாடா விளையாடலாம்! நீ சீட்டிங் பண்ற போடா”-ன்னு பேசிட்டு இருந்த பையன். ஸ்கூலுக்கு அனுப்பியதிலிருந்து “வாங்க மாமா... போங்க மாமா”-ன்னு பேசப் பழகிவிட்டான். அகில் ஏதாச்சும் விளையாடலாம்மான்னு கேட்டா “டிவி பாக்க சொல்ல டிஸ்டர்ப் பண்ணாதிங்க மாமா. என்னோட பேவரைட் ப்ரோக்ராம்” என்கிறான். அப்படிச் சொன்னதும் அக்காவைப் பார்க்கிறேன்.

“டேய், இது கோல்மூட்ட வேறப் பழகிடுச்சிடா” என்று அக்க குறைபட்டுக் கொண்டாள்.

“என்ன ஜெயா சொல்ற?”

“ஆமாண்டா... அம்மா என்ன அடிட்சிட்டான்னு அங்கபோய் சொல்லுது. பாட்டி என்ன திட்டுறான்னு இங்க வந்து சொல்லுது. இதக் கேட்டுட்டு அவரு வானத்துக்கும் பூமிக்குமா குதிக்கிறாறுடா?” என்றாள்.

“வெங்கட் அந்த மாதிரி மனுஷன் இல்லையே ஜெயா? கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. கொழந்த தானே”.

“அட... ச்சீ... அவரப் பத்தியும் கோல் மூட்டுதுடான்னா” என்றாள்.

யார்கிட்ட ஜெயா?

“வேற யார்கிட்ட, உன்னோட சித்தப்பாவ சொன்னேன். அகிலோட தாத்தாவ” என்றாள்.

“அதானே பார்த்தேன். பையன் வீக்னெஸ் பார்த்து அடிக்கிறான். நம்மள நம்பி வெங்கட் ஆட்டத்துல எறங்கிடுவாரா என்ன?” என்று நினைத்துக் கொண்டேன். காலம் உருண்டோடுவதை குழந்தைகளே உணரச் செய்கிறார்கள். அன்பானவர்களின் அரவணைப்பை மட்டுமே நம்புவதும், அவர்களின் மூலம் காரியம் சாதிக்கும் முதிர்ச்சியுமே கால ஓட்டத்தின் வெண் திட்டுக்களாக விளங்குகிறது.

இந்த வருடத்தின் ஆகப்பெரிய அனுபவமாக இவையிரண்டும்தான் தோன்றுகின்றன. வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் வழிகாட்டிகள் தேவைப்படுகிறார்கள். அரவணைக்க அன்பு செலுத்த. மென்பொருள் துறையின் நேக்குப் போக்குகளை நாடிபிடித்துப் பயில வெங்கட் பெரிய இன்ஸ்பிரேஷன். வேலையை விட்டு ஏறக்குறைய இரண்டு வருடங்கள் ஆகிறது. சில நல்ல வேலைகள் கிடைத்தும் போவதற்கு மனமில்லை. வீட்டிலிருந்த படியே என்னை நேசிக்கும் சில நிறுவனங்களுக்கு பகுதி நேரமாக வேலை செய்துகொண்டிருக்கிறேன். மிகப் பெரிய வருவாய் இல்லையென்றாலும் “நானே ராஜா! நானே மந்திரி!” என்ற திருப்தி.

ஏறக்குறைய மூன்று வருடங்களாக வலைப்பூவில் எழுதுகிறேன். “என்னை யார் படிக்கப் போகிறார்கள்?” என்று நினைத்ததுண்டு. ஒருசிலர் நேரில் பார்த்து “பரவாயில்லையே! சுமாரா எழுதுறே!” என வாழ்த்தும்போது தொண்டையை அடைக்கும். நன்றாக ஞாபகம் இருக்கிறது. 2011-ஆம் ஆண்டின் ஆரம்ப நாட்களில் காலச்சுவடு பதிப்பகம் கு.அழகிரிசாமியின் மொத்த சிறுகதைத் தொகுப்பு வெளியிட ஏற்பாடு செய்திருந்தார்கள். அன்றைய தினம் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் சிறப்பு உரையாற்ற வந்திருந்தார். எதிர்பாராத விதமாக மூத்த எழுத்தாளர் திலீப்குமாரையும் அங்கு சந்திக்க நேர்ந்தது. விழா முடிந்ததும் தன்னிடமிருந்த “வெங்கட் சுவாமிநாதன் கட்டுரைத் தொகுப்பு” வெளியீடு பற்றிய அழைப்பிதழ்களை திலீப்குமார் விநியோகிக்க ஆரம்பித்தார். அவரிடமிருந்த அழைப்பிதழ்களில் பாதியை பிடுங்கிக் கொண்டு நானும் விநியோகிக்க ஆரம்பித்தேன். தமிழ்ச்செல்வன் எதிரில் வந்தார்.

“உங்களை ஏற்கனவே பார்த்திருக்கிறேன் தமிழ். மின்னஞ்சல் கூட...” என்று என்னுடைய பெயரை சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ளலாம் என்று ஆரம்பித்தேன்.

“கேணியில் நடந்த சேர்ந்திசை (choir) பற்றி எழுதியிருந்திங்களே. அந்த ஒரு எடத்த நுணுக்கமா கவனிச்சி எழுதி இருந்தீங்க. நல்லா இருந்தது” என்றார்.

“உங்களோட வார்த்தைகளைக் கேட்கும்பொழுது வானத்தில் பறப்பது போல இருக்குங்க தோழர்” என்றேன். தமிழகம் முழுவதும் தொடந்து பயணம் செய்பவர். ஏராளமான புத்தகங்கள் வாசிப்பவர். என்றாலும் சிறு விஷயத்தை ஞாபகம் வைத்துத் தட்டிக்கொடுத்தார். சமீபத்தில் அ மார்க்ஸ் கலந்துகொண்ட கேணி கூட்டம் நடைபெற்றது. அந்த நாளில் மட்டும் எழுத்தாளர் ஞாநியின் வீட்டிற்கு சீக்கிரமே சென்றுவிடுவது வழக்கம். திடீரென்று பாலபாரதி செல்பேசியில் அழைத்தார். “கேணிக்கு வெளியில் தான் இருக்கேன். ஒரு டீ போட்டுட்டு வரலாம் வா” என்றார். அழைத்துச்சென்று எழுதத் தேவையான பல விஷயங்களை சொல்லிக்கொடுத்தார். ஆரம்ப காலங்களில் செய்த தவறுகள். அதன்மூலம் கிடைத்த அனுபவம் என பலவற்றைப் பகிர்ந்துகொண்டார். “தொடர்ந்து எழுதிக்கொண்டே இரு. உனக்குன்னு மொழியும் தனித்தன்மையும் தானா வந்துடும்” என்று உற்சாகப்படுத்தினார்.

இணைய இதழ்களின் உள்ளடுக்கில் இயங்குபவர்களான தமிழ்பேப்பரின் ஹரன்பிரசன்னா, சொல்வனம் இதழின் ரவி மற்றும் பாஸ்கர் போன்றவர்கள் தொடர்ந்து உற்சாகப்படுத்தி கட்டுரைகளை கேட்டு வாங்கி பிரசுரம் செய்கிறார்கள். அவர்களுடைய அன்பும், அக்கறையும் மறக்க இயலாதது. கமர்ஷியல் சினிமாவையே பார்ப்பதற்கு பொறுமை இல்லாதவன் நான். “காட்சி ஊடகங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். புத்தக வாசிப்பு போலவே அதுவும் ஓர் அனுபவம். அதிலும் கவனம் செலுத்துங்கள்” என நண்பர் பாஸ்கர் சக்தி தொடர்ந்து அக்கறை செலுத்தி, குறும்படம் ஆவணப்படம், சினிமா போன்ற துறைகளில் கவனம் ஏற்படச் செய்தார். கடந்த சென்னை திரைப்பட விழாவில் “அழகர்சாமி குதிரை” படத்தில் சிறந்த பங்காற்றியமைக்காக தனிமனித சிறப்பு விருதை அவருக்குக் கொடுத்தார்கள். அதற்கான சிறு விழா “டிஸ்கவரி புக் பேலசில்” ஏற்பாடாகி இருந்தது. அதற்கு வருமாறு அழைத்தார். பாஸ்கரின் நெருங்கிய சினிமா நண்பர்களுடன் “கதை, வசனம், பாத்திரச் சித்தரிப்பு” என உரையாடியது வித்யாசமான அனுபவமாக இருந்தது. சென்னை திரைக்கல்லூரி மாணவர்களின் உதவியுடன் ஒரு குறும்படம் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். மருமகன் முத்துவுடன் சேர்ந்து. பாஸ்கரின் அன்பும் அக்கறையும் இல்லையெனில் இதுபோன்ற சோதனை முயற்சிகளில் இறங்கியிருக்கவே மாட்டேன்.

விமர்சகர் ஞாநி எப்போதுமே குறைபட்டுக் கொள்வதுண்டு. “சினிமாவில் ஆர்வம் இருப்பவர்கள் புத்தகம் வாசிப்பதில்லை. வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நிகழ்த்துக் கலைகளில் ஆர்வம் காட்டுவதில்லை. அரசியலில் ஈர்ப்பு உடையவர்கள் இலக்கியத்தை சீண்டுவதில்லை. ஓவியம், இசை, இலக்கியம், பரதம், நாடகம் எல்லாவற்றின் மீதும் இளைஞர்கள் ஆர்வம் செலுத்த வேண்டும். இளைஞர்கள் மீது எப்போதுமே எனக்கு பெரிய நம்பிக்கை உள்ளது. அதற்கான சிறு உந்துதலை ஏற்படுத்துவதுதான் கேணி சந்திப்பின் நோக்கம்” என்பார். அதற்கேற்றது போல மேடை நடிகர் பாரதிமணியும் தியேட்டர் லேப் ஏற்பாடு செய்திருந்த பஷீரின் நாடகத்திற்கு அழைத்திருந்தார். அவருக்காகச் சென்றிருந்தேன். நாடக அனுபவத்தை வலைப்பூவிலும் எழுதி இருந்தேன். அதை படித்த கனடா நாடகக் குழுவான அராங்கடல் நண்பர் செல்வன் அறிமுகமானார். பின்னர் பஷீரின் அதே குறுநாவலை அராங்கடலுக்காக நாடக வசனமாக மாற்றும் சூழல் ஏற்பட்டது. அதற்கான சன்மானத்தை நண்பர் தளவாய் சுந்தரத்தின் மூலம் செல்வன் கொடுத்தனுப்பினார். எழுதி சம்பாரித்த முதல் பணம் என்பதால் வியப்பாக இருந்தது. அக்கறையுடன் வழிகாட்டிய எல்லோரையும் செல்பேசியில் அழைத்து தம்பட்டம் அடித்துக் கொண்டேன். மிகவும் மகிழ்ந்தார்கள். பாரதிமணி மிகவும் சந்தோஷப்பட்டார்.

ஞாநியை மட்டும் நேரில் சென்று பார்த்தேன். “இதுதான் விஷயங்க ஞாநி என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கள்” என்று காலைத் தொட்டேன்.

“ஒரு மனிதனின் காலில் இன்னொரு மனிதன் விழுவதில் எனக்கு உடன்பாடில்லை. சந்தோஷமோ துக்கமோ சக மனிதனாக பகிர்ந்துகொள்ளலாம்... ம்... சொல்லுங்க...” என்றார். “இவர் தமிழ்நாட்டில் தானே இருக்கிறார். தமிழக கலாச்சாரம் தெரியவில்லையே. அம்மா இப்படித்தானே பழக்கி இருக்காங்க” என்று நினைத்துக் கொண்டேன்.

இங்கு பா ராகவனையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். “உங்கிட்ட கொஞ்சம் Stuff இருக்கு. கொஞ்சம் சிரமப்பட்டு உழைச்சா நல்லா வருவடா” என்பார். என்னை எப்படியாவது ஒரு புத்தகம் எழுத வைக்க வேண்டும் என்று மிகுந்த பிரயாசைபட்டார். பாரா கிழக்கில் இருந்தவரை நிறைவேறவில்லை. அவரை செல்பேசியில் அழைத்து தம்பட்டம் அடித்தேன்.

“நீ இன்னும் நல்லா வரணும்டா. ரொம்ப சந்தோசம்டா” என்றார்.

எழுத்தாளர் தமிழ்மகன், பாலுசத்யா, ராம்ஜி, வேல்கண்ணன், பிரபா, விதூஷ் அக்கா, பத்மா அக்கா, யுவா, நேசமித்ரன், கார்த்திகை பாண்டியன், அதியமான், கார்த்திகா வாசுதேவன், மரா, அ மு சையத், முத்துச்சாமி, விஷ்ணு, சாது என எல்லோரும் தொடர்ந்து வாசித்து, கைபிடித்து அழைத்துச் செல்கிறார்கள்.

இதுவரை சென்றது எல்லாமே மகிழ்ச்சி நிறைந்த காலங்கள். அடுத்த ஆண்டுகளுக்கான சிறுசிறு முயற்சியும் திட்டமிடலும் இருக்கிறது. புத்தக விழாக்களுக்கு சாதாரண நுகர்வோராக சென்றிருக்கிறேன். தமிழின் முக்கிய பதிப்பகம் ஒன்றோடு சேர்ந்து வேலை செய்யும் சூழல் 2012-ம் ஆண்டு அமையும் என்றே நினைக்கிறேன் (பகுதி நேர வேலை). ஜனவரி கழித்து அதற்கான வேளைகளில் இறங்க வேண்டி இருக்கும். “புத்தகம் சார்ந்த வியாபாரம் எப்படி இருக்கிறது?” என்பதையும் நோட்டம் விட வேண்டும். “ஒரு லட்சம் தலைப்பில் ஒரு கோடி புத்தகங்கள்” என்ற விளம்பரமே மலைப்பை ஏற்படுத்துகிறது. சவால் நிறைந்த துறையாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

இதற்கிடையில் சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன். பூமி பூஜையின் போது செங்கல் எடுத்து வைத்ததோடு சரி. எல்லா வேலைகளையும் இளைய அண்ணனே பார்த்துக் கொள்கிறார். இரண்டு நாட்களாக ஒரே மழை. இன்றுதான் கொஞ்சம் தணிந்தது. கட்டிடப் பணிகளை பார்த்து வரலாம் என்று கிளம்பினேன். ஆண்டின் கடைசி நாள் என்பதால் மக்களெல்லாம் உற்சாகமாக தென்பட்டனர். “Where is the party tonight?” என்ற வார்த்தைகள் உள்ளுக்குள் ஒலிக்கிறதோ என்னவோ? புதிதாக வீடுகட்டும் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.

வாஸ்துப்படி வர்ணம் பூசப்பட்ட வீட்டின் ஜன்னல் கம்பியில் வளர்ப்பு நாய் கட்டப்பட்டிருந்தது. தெருவில் அலையும் நாயைப் பார்த்து இதுவும் நகரத் துடிக்கிறது. கயிற்றினால் கட்டப்பட்டுள்ளதால் வாலை ஆட்டிக்கொண்டு நாய் குலைக்கிறது. பிராணியை வளர்ப்பவர் வெளியில் வந்து நோட்டம்விட்டார். செல்லப் பிராணியின் தலையில் செல்லமாகத் தட்டிவிட்டு “அடுத்த வாரம் கூட்டிட்டுப் போறேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றார். தெரு நாய்கள் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருந்தது. ஒன்றையொன்று முகர்ந்துகொண்டு. நானும் சுதந்திரமாக நடந்துகொண்டிருந்தேன். நாயுடன் நாயாக எனது புதிய வீட்டை நோக்கி. அடுத்த வருடம் சிந்திப்போம்.

மங்களம்.... சுபம்....

Thursday, December 22, 2011

மை விலேஜ் இஸ் பம்பை – விவரணப்படம்

இந்தியா முழுவதும் கடந்த 2010-ஆம் ஆண்டில் மட்டும் 10, 670 குழந்தைகள் கடத்தப்பட்டிருப்பதாக ‘தேசிய குற்ற நிகழ்வுகள் பதிவு அமைப்பு’ உறுதி செய்திருக்கிறார்கள். இதில் 1, 408 குழந்தைகள் கொலை செய்யப்பட்டும் 5, 484 குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதாகவும் அதே ஆய்வு கூறுகிறது. கடத்தல் குற்றங்களில் தலைநகர் டெல்லி தான் முதலிடத்தில் இருக்கிறது. 29 பேர் கொல்லப்பட்டும், 304 பேர் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டும் இருக்கிறார்கள். டெல்லியை அடுத்து பீகார், உத்திர பிரதேசம், மராட்டியம், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், குஜராத் என பட்டியலிட்டிருக்கிறார்கள். இவை யாவும் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் மீது நடத்தப்படும் திட்டமிட்ட வன்முறை. பெரும்பாலும் இதுபோன்ற குற்றங்கள் மாநகரங்களிலுள்ள பெரு முதலாளிகள் சார்ந்து பணம் ஈட்டுவதற்காக நடத்தப்படுகிறது. இங்கு மற்றொரு விஷயத்தையும் நாம் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

அதே பெருநகரங்களில் வசிப்பவரா நீங்கள்? அரக்கப் பறக்க வேலைக்குச் செல்பவரா? நெரிசல் ஏற்படுத்தும் கூட்டத்துடன் பேருந்துகளிலும், ரயிலிலும் பயணம் செய்பவரா? சுற்றிப் பார்க்க மட்டுமே ஓரிரு தினங்கள் வருபவராக இருந்தாலும் பரவாயில்லை. நிச்சயம் இதுபோன்ற விளம்பரங்கள் உங்களின் கவனத்திற்கு வந்திருக்கும். ஒரு மின்னல் பார்வையில் அந்த கருப்பு வெள்ளை விளம்பர ஒட்டிகளை கடந்து சென்றிருப்பீர்கள்!

“காணவில்லை… தகவல் கிடைத்தால் தெரிவிக்க வேண்டிய முகவரி…” என்று சிறுவனின் புகைப்படம், பெயர், வயது, நிறம், உயரம், அங்க அடையாளம் என கடைசியாக உடுத்தியிருந்த ஆடை வரை பட்டியலிட்டு ஒட்டப்பட்டிருப்பதைக் கண்டிருக்கலாம். பேருந்து மற்றும் மின்சார ரயிலின் உட்சுவர்களில் கூட இதனைக் கவனித்திருக்கலாம். அதெப்படி வளர்ந்த, புத்தியுள்ள குழந்தைகள் காணாமல் போகும்? சமூகச் சிக்கலோ அல்லது உறவினால் ஏற்படக்கூடிய பிணக்குகளோ தான் இதற்கான முக்கிய காரணிகளாக இருக்கின்றன.

“வளர்ந்த குழந்தைகள் வீட்டைவிட்டு ஏன் வெளியேறுகின்றன? குழந்தைகளுக்கு அப்படியென்ன விரக்தி இருக்கப்போகிறது? காரணம் என்னவாக இருக்கும்?” என்பன போன்ற கேள்விகள் நமக்கு எழலாம். வழி தவறியும், பொருளீட்டும் ஆசையிலும், உறவுகள் கசந்து அவர்களிடம் முரண்பட்டும், பருவக் கோளாறினாலும் வீட்டைவிட்டு வெளியேறும் குழந்தைகள் பெருநகரங்களை நோக்கித்தான் பயணிக்கின்றன. இதைப் பற்றிய தெளிவான புள்ளிவிவரங்கள் இல்லையென்றாலும், இந்தியாவில் மட்டும் 30 விநாடிகளுக்கு ஒரு குழந்தையானது வீட்டைவிட்டு யாருக்கும் சொல்லாமல் ஓடிவிடுவதாக புள்ளிவிவரங்கள் தெளிவுபடுத்துகிறது. ஒரு வருடத்திற்கு 10, 368, 00 குழந்தைகள் இதுபோல இடம்பெயர்கிறார்கள். பொது இடங்களில் தான்தோன்றித் தனமாக சுற்றிக்கொண்டிருக்கும் குழந்தைகளை சந்தேகத்தின் பெயரில் விசாரிக்கும் பொழுதுதான் உண்மை நிலவரம் தெரியவருகிறது. இதில் சிலர் பிச்சை எடுக்கிறார்கள், சிலர் சமூகக் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள், சிலர் குழந்தைத் தொழிலாளர்களாக மாறுகிறார்கள், மிகச் சிலரோ பாலியல் தொழிலில் வலிந்து தள்ளப்படுகிறார்கள்.

இவர்களைக் காப்பதற்காகவே முக்கிய நகரங்களில் சிறுவர் காப்பகங்கள் அரசின் கண்காணிப்பில் செயல்படுகிறது. தென்னிந்தியாவைப் பொருத்தவரை ஆங்கிலேயர்கள் காலத்தில் 1887-ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட செங்கல்பட்டு குழந்தைகள் காப்பகம் தான் மிகவும் தொன்மையானது. அதன் பிறகு மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஏற்ப ஏராளமான காப்பகங்கள் கால இடைவெளியில் சென்னை (ராயபுரம்), கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, திண்டுக்கல், சேலம், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, வேலூர், திருவண்ணாமலை போன்ற தமிழகத்தின் முக்கிய இடங்களில் துவங்கப்பட்டது. இவையாவும் தமிழக அரசின் சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ், தமிழ்நாடு குழந்தைகள் சட்டம் 1920-ன் படி இயங்கிவருகின்றன.

ராயபுரத்தில் உள்ள தேசிய கவி சுப்ரமணிய பாரதியார் அரசினர் குழந்தைகள் இல்லம் மெட்ராஸ் ரோட்டரி கிளப் மூலம் 1955 -ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சர் சிந்தாமன் தேஷ்முக் முன்னிலையில் துவக்கப்பட்டது. இதில் சிறுவர் காப்பகமும் (Children Home), மீட்டுக் காவல் காப்பகமும் (Remand Home) செயல்படுகிறது. தற்போது 120 முதல் 150 குழந்தைகள் வரை இக்காப்பகத்தில் பாதுகாக்கப்படுகிறார்கள். இதில் முழுக்க முழுக்க ஆண்குழந்தைகள் மட்டுமே பராமரிக்கப் படுகிறார்கள். UNICEF, WorldVision மற்றும் சில தனியார் அமைப்புகள் தங்களால் இயன்ற உதவிகளை இதுபோன்ற காப்பகங்களுக்குச் செய்துத் தருகிறார்கள். மன அழுத்தத்திலுள்ள குழந்தைகளுக்கு சுயமுன்னேற்றம், மன ஆலோசனை, நீதிக் கதைகள் சொல்லுதல், அபாகஸ் வகுப்பெடுத்தல் போன்ற அத்தியாவசியமான உதவிகளையும் தன்னார்வலர்கள் மூலம் செய்துத் தந்து பக்கபலமாய் இருக்கிறார்கள்.

மீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள குழந்தைகளை தான் ஆர் வி ரமணி நேரில் கண்டு ஆவணப்படமாக எடுத்திருக்கிறார். ’மேரா கா(ன்)வ் ஹை பம்பை’ (என் கிராமம் பம்பை) எனப்படும் அதனை NFSC மற்றும் மறுபக்கம் இணைந்து நடத்திய கோடைத் திரைப்பட விழா 2011-ல் திரையிட ஏற்பாடு செய்திருந்தார்கள். சந்தேகத்தின் பெயரில் சிறைபிடிக்கப்படும் குழந்தைகள் முதலில் மீட்டுக் காவலில் தான் அமர்த்தப்படுகிறார்கள். அவர்களிடம் தகவல்கள் பெற்று உரிய நபர்களிடம் தொடர்பு கொள்கிறார்கள். போதிய ஆதாரங்கள் பெற்றபின் குழந்தைகளின் விருப்பப்படியும், அரசியல் சட்டத்திலுள்ள விதிமுறைகளைப் பின்பற்றியும் உரிமை கோருபவரிடம் ஒப்படைக்கிறார்கள். குழந்தைகள் நலவாரியம் (Child Welfare Commity) இதற்கான ஆயத்தங்களை செய்துத் தருகிறது. செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகளில் அதற்கான விசாரணை ராயபுரத்தில் நடக்கிறது. குழந்தைகளின் பெற்றோரோ அல்லது உரிமை கோரும் நபரோ அங்கு தோன்றி பதிலளிக்க வேண்டும்.

பெற்றோரை இழந்து உறவினரின் கண்காணிப்பில் வாழ்ந்துவரும் குழந்தை வீட்டிற்குச் செல்ல மனமில்லாத பட்சத்தில் சிறுவர் காப்பகத்திற்கு அனுப்பிவைத்து பாதுகாக்கப்படுகிறார்கள். வெளி மாநிலங்களிலிருந்து வந்த சில குழந்தைகளுக்கு சொந்த மொழி மட்டுமே தெரியும் நிலையில், அவர்களை மீட்க வரும் பெற்றோர்களுக்கும் ஆங்கில சரளம் வராத பட்சத்தில் வெளியிலிருந்து மொழி இடைநிலையாளர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். அதன்படி ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உதவச் சென்ற நண்பர் ஒருவர் மூலமே இந்த ஆவணப்படம் எடுக்க முடிந்தது. அதுவும் அவசர அவசரமாக இரண்டு நாட்களில் இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டது. முதல் நாள் காப்பகம் சென்றும், மற்றொருநாள் குழந்தைகளை வழியனுப்பும் போது சென்னை சென்ட்ரலுக்குச் சென்றும் ஒளிப்பதிவு செய்ததாக திரையிடலின் முடிவில் ஆர் வி ரமணி பகிர்ந்துகொண்டார்.

விசாரணையின் முடிவில் சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் குழந்தை நேரடியாக பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவதில்லை. அந்தந்த மாநிலத்தில் சிறுவர் காப்பக தலைமை காப்பகத்தில் ஒப்படைக்கப்படுகிறார்கள். அரசு ஊழியர்கள் விவரங்களை சரிபார்த்து உரிய நபர்களிடம் குழந்தைகள் சென்று சேருமாறு பணிக்கப்படுகிரார்கள்.

இதோ ரயில் வண்டி புறப்படத் தயாராக நிற்கிறது. இலக்கை நோக்கியும், இலக்கில்லாமலும் பயணிக்க ஏராளமானோர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். காப்பகத்தின் பொறுப்பில் உள்ள குழந்தைகளும் பயணப் பொறுப்பாளருடன் ஆயத்தமாக நின்று கொண்டிருக்கிறார்கள். ஸ்டேஷன் கார்டு தன் கையில் சுருட்டி வைத்திருக்கும் பச்சை வண்ணக் கொடியை அசைக்கும் நேரம் ரயிலானது மெல்ல நகரும். யார் கண்டது? இந்த ரயிலிலும் ஏதேனும் ஒரு குழந்தை யாருக்கும் சொல்லாமல் பயணித்துக் கொண்டிருக்கலாம். வழிதவறிய குழந்தை தூங்கிக் கொண்டிருக்கலாம். பருவக் கோளாறில் ஏதேனும் ஒரு ஜோடி கனவுகளுடன் சிறகடித்துப் பறக்கச் சென்று கொண்டிருக்கலாம்.

NFSC – கோடை திரைப்பட விழா – மே மாதம், 2011
மை விலேஜ் இஸ் பம்பை / ஆவணப்படம்/ 29 நிமிடம் / 2011
மொழி: ஆங்கிலம் / ஹிந்தி / தமிழ்

இடம்: தேசிய நாட்டுப்புற உதவி மையம்,
#505, காவேரி காம்ப்லஸ், 96 எம்.ஜி சாலை,
நுங்கம்பாக்கம், சென்னை - 600 034

Mera Gaon Hai Bambai (My Village is Bambai)
29 mins - Hindi, English, Tamil (With English Sub Title)

Credits:
Editing: R.V.Ramani, Monisha R Baldawa
Produced, Directed and Photographed by: R.V.Ramani

(முற்றும்)

*******************************************************************************************
ஆர் வி ரமணி 1957-ஆம் ஆண்டு பம்பாயில் பிறந்து பம்பாய் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்ற தமிழர். புகைப்பட நிருபராக சில ஆண்டுகள் பணியாற்றியவர். அதன்பிறகு புனே திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து 1985 -ஆம் ஆண்டு அசையும் நிழற்படக் கலைஞராக பட்டம் பெற்றவர். 1989 –ஆம் ஆண்டு சென்னைக்குத் திரும்பியவர் ஒளிப்பதிவாளராகவும், ஆவணப்படக் கலைஞராகவும் தன்னுடைய பயணத்தைத் தொடங்குகிறார்.

தனக்கென தனித் தன்மையான பாணியை அமைத்துக் கொண்டதின் மூலம் இந்திய அளவில் கவனிக்கப்படும் முக்கியமான கலைஞர். இவருடைய ஆக்கங்கள் குரோவேஷியா, ஜேர்மனி, நேபாளம், தென் கொரியா, மெக்ஸிகோ, பிரான்சு, ஜப்பான், பாகிஸ்தான், இந்தோனேஷியா, சீனா, ஸ்விசர்லாந்து, கொரியா போன்ற பல நாடுகளிலும், இந்தியாவின் புனே, கொச்சி, கொல்கொத்தா, சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத் போன்ற பல இடங்களிலும் நடைபெறும் உலகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு கவனத்தையும் பாராட்டையும் பெற்றிருக்கிறது.

கன்னியாகுமரியில் ஆழிப்பேரலை தாக்கியபோது மயிரிழையில் உயிர் தப்பியவர். அந்த கோர சம்பவத்தில் இவருடைய கேமரா தொலைந்து பலத்த சேதத்துடன் மீண்டும் கிடைத்திருக்கிறது. சுனாமியால் பாதிப்புக்குள்ளான அந்தக் கேமராவை மையமாக வைத்தும் ஆவணப்படம் எடுத்திருக்கிறார். இதுவரை 20-ற்கும் மேற்பட்ட பல்வேறு ஆவணப் படைப்புகளைத் தந்திருக்கிறார். பல சிரமங்களுக்கு மத்தியில் எடுக்கப்பட்ட “எழுத்தாளர் சுந்தர ராமசாமி” பற்றிய ஆவணப்படம் அவைகளுள் முக்கியமானது.

இலக்கிய வட்டத்திலும், சுரா-வின் தீவிர வாசகர்கள் மத்தியிலும் அந்த அரிய முயற்சி சரியான வரவேற்பைப் பெறவில்லை என்ற வருத்தம் இவருக்கு இருக்கிறது. “வெகுஜனப் பத்திரிகைகளும், நாளிதழ்களும் கொடுத்த கவனிப்பைக் கூட சிற்றிதழ்கள் கொடுக்கத் தவறிவிட்டன. எழுத்தாளுமைகளைப் பற்றிய ஆவணப்படம் வெளிவரும்போது, அது சார்ந்த தீவிர கவனிப்பைக் கொடுக்கும்போது தான் எதிர்வரும் இளம் திரைக் கலைஞர்கள் புதுப்புது முயற்சியில் ஈடுபடுவார்கள். அப்பொழுதுதான் பல்துறை ஆளுமைகளின் தகவல்களும் பதியப்படும். இலக்கிய சிற்றிதழ்கள் இது சார்ந்து யோசிக்க வேண்டும்” என்று மன வேதனையுடன் பகிர்ந்து கொள்கிறார்.

உலகத் திரைப்பட விழாக்களில் நடுவராகவும் பணியாற்றியிருக்கிறார். பயணங்களில் விருப்பமுள்ளவர். மலையேற்றங்களை பெரிதும் விரும்புவதாகக் கூறுகிறார். தற்போது பெசன்ட் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் தனது மகனுடன் வசித்து வருகிறார்.

ரமணியின் படைப்புகளுக்காக தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி:

+91 98401 57606
Email: ramanirv@hotmail.com
Web: www.ramanifilms.com
*******************************************************************************************

பயன்பட்ட தளங்கள்
1. www.missingindiankids.com
2. www.icmec.org
3. http://indianfolklore.org/home.htm
4. www.ramanifilms.com

நன்றி: சொல்வனம் இணைய இதழ் (26-11-2011)

Thursday, December 15, 2011

நான் ஒரு அரை மலையாளி

நண்பருடன் பேசிக்கொண்டு ஒரு தேனிர் கடையை நெருங்கினேன். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் நண்பர் காரசாரமாகப் பேசிக் கொண்டுவந்தார். “என்ன ஆனாலும் சரி அவர்களை விடக்கூடாது” என்றார்.

“உங்களுக்கு ஒன்று தெரியுமா? நான் ஒரு அரை மலையாளி” என்றேன். என்னை அடிப்பதுபோல பார்த்ததால் அவருக்கு விளக்க வேண்டி இருந்தது.

என்னுடைய அப்பாவின் சித்தப்பா தன்னுடைய அக்காவின் மகளை திருமணம் செய்து வாழப் பிடிக்காமல் தள்ளிவைத்துவிட்டு ஒரு மலையாள செவிலியரை இரண்டாம் தாரமாக காதல் திருமணம் செய்துகொண்டார். எங்களுடைய குடும்பத்தில் அவருடைய வாரிசுகள் மட்டும் கிட்டத்தட்ட 30 பேர் இருக்கிறார்கள். அம்மாவின் அத்தை பெண் ஒரு மலையாளியை காதல் திருமணம் செய்து கொண்டாள். அது தவிர என்னுடைய இன்னொரு சின்ன பாட்டியின் அம்மா ஒரு மலையாளியை வீட்டில் வைத்து வளர்த்தார் (குட்டன்). இந்தியன் ஆர்மியில் வேலை செய்து ஓய்வு பெற்ற அவருக்கு இரண்டு மகள்கள். என் உடன்பிறவா சகோதரிகள். சகோதரிகள் இருவரும் டெல்லி, கண்ணூர் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இருவருமே அப்படி ஒரு அன்பைப் பொழிவார்கள். குட்டனின் சித்தி மகனும் (வேணு) எங்கள் ஊரில் தான் இருக்கிறார். மெடிக்கல் கடையில் வேலை செய்கிறார். உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவரை கலந்தாலோசிப்பதற்கு முன் அவரிடம் தான் ஆலோசனை கேட்பேன்.

சிறுவயதில் என்னுடன் மாயா, மஞ்சு என்ற இரட்டையர் படித்தனர். அவர்களும் மலையாளிகள். சில காரணங்களால் இடையில் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டு இளநிலை கணிதம் படிக்கும்போது மஞ்சுவை மீண்டும் சந்தித்தேன். அதே மஞ்சு... அதே அன்பு...

“டேய் உன்ன இங்க பார்ப்பேன்னு நினைக்கவே இல்லடா!” என்றாள்.

“ச்சி போடி!” என்றேன். அதைக் கேட்டு கொல்லென்று சிரித்தாள். நானும் அவளுடன் சேர்ந்து சிரித்தேன்.

அதே இளங்கலையில் ஆல்பன் என்றொரு நண்பன் புதிதாகக் கிடைத்தான். இப்பொழுது கணித ஆசிரியனாக இருக்கிறான். அருமைனான சக நண்பன். மகிழ்ச்சியுடன் சென்ற கல்லூரிக் காலம் முடிந்து முதுகலை படிக்க பச்சையப்பன் கல்லூரியில் காலெடுத்து வைத்தேன். எந்தவொரு பாடத்திலும் தேற முடியவில்லை. அங்கிருந்த இரண்டு வருடங்களில் எனக்குக் கிடைத்த ஒரே நல்ல விஷயம் “கிறிஸ்டோபர்”. உலகின் எந்த மூளைக்குச் சென்றாலும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை செல்பேசியில் தொடர்பு கொண்டு அக்கறையுடன் நலம் விசாரிப்பான். இப்பொழுது ஏதோ பன்னாட்டு நிறுவனத்தில் அனிமேஷன் சார்ந்து வேலை செய்கிறான். முதுநிலைக் கணிதத்தில் வித்யா ரபீந்தரும் தோழியாகக் கிடைத்தாள். நல்ல சகோதரனாக மதிப்புக்கொடுத்து அன்புடன் பழகக் கூடியவள். வித்யாவுடன் முகநூலில் இன்றும் உறவு தொடர்கிறது. வித்யாவின் தங்கை கூட மகளிர் கிரிக்கெட்டில் தமிழக அளவில் விளையாடியவள் என்று நினைக்கிறேன்.

படித்து முடித்து இதுவரை பல நிறுவனங்களுக்கு நிரந்தர ஊழியனாகவும், தற்கால ஊழியனாகவும் பணியாற்றி இருக்கிறேன். அங்கெல்லாம் பல மலையாளிகளுடன் வேலை செய்து இருக்கிறேன். ஒருவரையும் குற்றம் குறை சொல்வதற்கு இல்லை. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் நான் அதிக நாட்கள் வேலை செய்த நிறுவனத்தின் பங்குதாரர்களில் பிரஜோஷ் பாலகிருஷ்ணனும் ஒருவர்.

அவருடைய நிறுவனத்தில் சேர்ந்த புதிதில் எனக்கு பிறந்த நாள் வந்தது. மொத்தம் 35 நபர்கள் மட்டுமே வேலை செய்து கொண்டிருந்தோம். கேக்கில் மெழுகுவத்தி ஏற்றி வெட்டச் சொன்னார்கள். இதிலெல்லாம் எனக்கு அவ்வளவாக ஆர்வமில்லை என்பதால் கோபத்தில் சிடுசிடு என்று வெடித்துக் கொண்டிருந்தேன். என்னைச் சுற்றி எல்லோரும் இருக்கிறார்கள். பிரஜோஷ் மட்டும் இல்லை. செல்பேசியில் அழைத்தபோது Spencer Plaza-ல் இருப்பதாகச் சொல்லிவிட்டார். கடமைக்கு கேக் வெட்டி எல்லோருக்கும் கொடுத்தேன். சம்ரதாயங்கள் எல்லாம் முடிந்து வீட்டிற்கு சென்றுவிட்டேன்.

மறுநாள் காலையில் அலுவலகத்தில் நுழைந்தபோது மொழுமொழு காகிதத்தால் சுற்றப்பட்ட பரிசுப் பொருளை என்னிடம் கொடுத்தார். பிரித்துப் பார்த்தல் மரப் பொருளால் செய்த மணல்கடிகாரம் இருந்தது. முந்திய தினம் தொலைபேசியில் அழைத்தபோது அவர் வெளியில் இருந்ததற்கான அர்த்தம் புரிந்தது. இதுவரை நான் பத்திரப்படுத்தி பாதுகாத்து வரும் பொருட்களில் அவருடைய பரிசுப் பொருளும் ஒன்று.

இத்தனைக்கும் அவர்களிடம் வேலை செய்தபோது ஊழியன் என்ற முறையில் தொல்லைகளைத் தான் அதிகம் கொடுத்திருக்கிறேன். நான் கொடுத்த சிரமங்களையும் மீறி என்மீது அன்பாக இருந்தார். இன்று அதே நிறுவனத்தில் ஏறக்குறைய 100 நபர்கள் வேலை செய்கிறார்கள். அங்கிருந்து வெளியில் வந்து வருடங்கள் ஓடிவிட்டது. இப்பொழுது கூட முன்னனுமதி இன்றி, எந்த நேரத்தில் சென்றாலும் அவருடைய அறைக்குச் சென்று பார்க்கலாம். அந்த அளவிற்கு தன்மையுடன் பழகக் கூடியவர். பிரஜோஷின் தம்பி பிரதீப் பாலகிருஷ்ணனும் என்னுடன் தான் பணி செய்தார். அன்பில் அண்ணனை விஞ்சக்கூடிய தம்பி.

எனக்கு ஆங்கிலத்தில் சமாளிக்கத் தெரியுமே தவிர்த்து, செய்யும் வேலை சார்ந்த கோப்புக்களை ஆங்கிலத்தில் முறையாக தயாரிக்கத் தெரியாது. அவசர நேரத்தில் தன்னுடைய முக்கியமான வேலைகளைக் கூட ஒதுக்கி வைத்துவிட்டு எனக்காக வேலைசெயதவர் ராமகிருஷ்ணன் ராகேஷ். அப்படிச் செய்யவேண்டும் என்ற அவசியம் அவருக்கில்லை. இருந்தாலும் எனக்கென செய்துக் கொடுப்பார். ராமுவின் உதவி இல்லாமல் போயிருந்தால் வாடிக்கையாளர்களை சமாளித்திருக்கவே முடியாது. பூர்வீகம் பாலக்காடு என்றாலும் தமிழகத்தில் ஆங்கில வழியில் படித்தவர். ஹிந்தியை இரண்டாம் மொழியாகக் கொண்டதால் இவருக்கு தாய்மொழியான மலையாளமும் தெரியாது, வாய் மொழியான தமிழும் எழுதப் படிக்கத் தெரியாது. பிறகு நிவாஸ், ஷிஜு, நாசெர் என்று பல மலையாளிகளின் நட்பும் அரவணைப்பும் அதே நிறுவனத்தில் கிடைத்திருக்கிறது.

முத்துவின் மூலம் அறிமுகமான “வினோத் நிச்துல்யா” பற்றியும் இங்கே சொல்லியாக வேண்டும். புனர்ஜனி ஆவணப்படம் பற்றி தமிழில் எழுதிய கட்டுரையை இயக்குனர் மது ஏறவங்கராவிற்காக மலையாளத்தில் மொழி பெயர்த்தவர். ஈழத் தமிழர்கள் பற்றிய குறும்படம் எடுக்கும்போது அதனுடைய மொழிமாற்றத்திலும் பங்காற்றி உதவி செய்தவர். இதுபோல இன்னும் பல நபர்களின் பெயர்கள் சட்டென்று ஞாபகத்தில் வரவில்லை.

தமிழர்களை மலையாளிகள் அடிக்கிறார்கள், கொடுமை செய்கிறார்கள் என்று ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சியிலும், பத்திரிகை ஊடகங்களிலும் செய்து வெளியிடுகிறார்கள். ரத்த உறவிலும், நேச உறவிலும் ஏறக்குறைய 50 மலையாளிகளுடன் நெருக்கமாகப் பழகி இருக்கிறேன். யோசித்துப் பார்த்தல் எண்ணிக்கை நூறையும் தாண்டலாம். இவர்களில் ஒருவர் கூட மோசமானவர் இல்லை.

தமிழனான என்னுடன் தனிப்பட்ட முறையில் பழகும் மலையாளிகள் என்னை மோசமாக நடத்தவில்லை. தனிநபர் தர்மம் இங்கு நேசத்துடன் காப்பாற்றப்படுகிறது. சமூக தர்மமும், பொது தர்மமும் தனிப்பட்ட நபர்களால் சாத்தியப்படுவதில்லை. இனத்தையோ, மக்களையோ தலைமை ஏற்று நடத்துபவர்களுக்கு தர்மத்தின் மீது பற்றே இருப்பதில்லை. பற்றில்லாதபோது மனிதம் தழைப்பதில்லை. மனிதத்திற்கு மதிப்பில்லாதபோது வன்முறைகள் வெடிக்கிறது. இங்குதான் விஷமிகள் குளிர் காய்கிறார்கள்.

இதனை பாமர மக்கள் புரிந்துகொள்ள முடியாமல் போவது வியப்பில்லை. அறிவுஜீவிகளே புரிந்துகொள்ளாமல் இருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. “உலகெல்லாம் தமிழன் அடிவாங்குகிறான். இனியும் பொறுக்கக் கூடாது” என்று கூக்குரல் இடுகிறார்கள்.

தமிழன் அடிவாங்குவதற்கும், பலியாவதற்குமான சூழ்நிலையை இனத்தையும் மானத்தையும் காப்பாற்றுகிறோம் என்று முழக்கமிடும் அரசியல்வாதிகள் தானே உருவாக்குகிறார்கள். தமிழகம் என்றில்லை உலகின் பல இடங்களிலும் அரசியல் இப்படித்தானே நடக்கிறது. உங்களால் அவர்களை அடிக்க முடியுமா? ஏன் இப்படி மக்களுக்கு எதிராக அரசியல் செய்கிறீர்கள் என்று கேட்க முடியுமா? என்று நண்பரைப் பார்த்து கேட்டேன்.

நாயர் போட்ட சாயாவைக் குடித்துக் கொண்டே முன்னைக் காட்டிலும் கோவமாக நண்பர் என்னைப் பார்த்து சீறினார்.

அவருக்கு நான் இரண்டு வாய்ப்புகள் கொடுத்தேன். “அரை மலையாளியான என்னை அடி. இல்லையேல் முழு மலையாளியான சாயா போடும் நாயரை அடி” என்றேன்.

கோபத்தில் நண்பன் குமுறினான். இருவரும் நாயரைப் பார்த்தோம். சர்கஸ் காண்பிப்பது போல பாதாளத்தில் ஒரு கையையும், ஆகாயத்தில் ஒரு கையையும் வைத்துக் கொண்டிருந்தார். இடையில் ஓடிய தேநீரிலிருந்து புகை வழிந்துகொண்டிருந்தது.

யாரோ யார்யாரோ? யாரோடு யாரோ? எவர் நெஞ்சிநில்தான் யாரோ?

Monday, October 31, 2011

புனர்ஜனி – ஆவணப்படம்

உரசிச் செல்லும் பனிக்காற்று, தவழ்ந்தோடும் குளிர் நதிகள், பச்சைப் பசேல் மலைப் படுகை, மின்னல் போல் நீரூற்று என இயற்கை எழில் கொஞ்சுவதால் “கடவுளின் சொந்த நாடு” என்று கேரளா வர்ணிக்கப்படுகிறது. உலகில் பார்க்க வேண்டிய 50 சுற்றுலா இடங்களின் பட்டியலில் கேரளாவிற்கும் முக்கிய இடமுண்டு. இதனால் வெளிநாடுகளிலிருந்தும், அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட இந்தியாவிலிருந்தும் விடுமுறை நாட்களைக் கழிக்க ஏராளமானோர் கேரளாவிற்கு வந்து செல்கின்றனர். உண்மையில் தென்னிந்தியாவின் இதர மாநிலங்களைக் காட்டிலும் கேரளாவின் தட்பவெட்பம் வசிப்பதற்கேற்ற சூழலாக இருக்கலாம். ஆனால் ஐம்பதாண்டு கால இயற்கை வள புள்ளியியல் விவரங்களை ஆராய்ந்தால் இன்றைய கேரளாவின் உண்மை நிலவரம் தெரியவரும். குளிர்பானக் கம்பெனியின் நச்சுக் கழிவுகள் பாதித்த பிளாட்சிமடா நிலச் சீரழிவு மற்றும் அளவிற்கு அதிகமான நிலத்தடி நீர் சுரண்டல் ஆகியவை தேசிய அளவில் எதிர் விளைவுகளை ஏற்படுத்திய பிரச்சினைகளில் மிக முக்கியமானவை. அதைப் போன்றதொரு பிரச்சினைதான் 1980-களின் மத்தியில் துவங்கிய ‘கொடுங்கரப்பள்ளம்’ நீராதாரப் பிரச்சினை. பெருக்கெடுத்து ஓடிய நதி, கிராம மக்களின் அபரிமிதமான இயற்கை சுரண்டலால் 1990–களின் இறுதியில் முற்றிலும் உலர்ந்து வறண்டிருக்கிறது. அதனால் பல வாழ்க்கைப் பிரச்சினைகளைச் சந்தித்த கிராம மக்களின் கூட்டு முயற்சியால், ஏறக்குறைய இறந்துவிட்ட நதிக்கு 25 ஆண்டுகள் கழித்து உயிர் கொடுத்திருக்கிறார்கள். அதைத்தான் மது எரவன்கரா ‘புனர்ஜனி’ என்ற ஆவணப்படமாக எடுத்திருக்கிறார். ‘புனர்’ என்றால் மறுபடியும், ‘ஜனி’ என்றால் பிறப்பு – ஆகவே இறந்த நதியின் மீள்பிறப்பு ஆவணமே புனர்ஜனி .


(Punarjjani – The River).

The rivers are our brothers;
they quench our thirst.
The rivers carry our canoes,
and feed our children.
You must remember,
and teach your children,
That the river are our
brothers and yours,
and you must henceforth give the rivers
the kindness you would give any brother.

– என்று அமெரிக்க ஜனாதிபதிக்கு 1854-ல் சிகப்பிந்தியர்களின் தலைவர் எழுதிய கடிதத்தின் வரிகளிலிருந்தே ஆவணப்படம் துவங்குகிறது.

நீலகிரி, கோயம்புத்தூர், மல்லபுரம் மற்றும் பாலக்காடு ஆகிய பகுதிகளை எல்லைகளாகக் கொண்டுள்ள ‘அட்டப்பாடி’ தமிழக-கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. குறும்பர், முடுகர், இருளர் போன்ற பழங்குடியினர் இங்கு காலங்காலமாக வசித்து வருகின்றனர். காட்டிலுள்ள வளங்களுக்காகவும், விவசாய நிலங்களை அபகரிக்கவும் திருவிதாங்கூர் மற்றும் கோயம்புத்தூரில் இருந்து 1940 முதல் 1980 வரையுள்ள காலகட்டத்தில் தொல்குடியினர் அல்லாதோர் அதிகமாக குடியேறி மலைக்காடுகளை அபகரித்திருக்கின்றனர். பவானி, குந்தி, சிறுவாணி, வரகர், கொடுங்கரப்பள்ளம் ஆகிய முக்கிய நதிகள் இங்கு ஓடி செழிக்கின்றன. பவானி தமிழகத்தில் தவழ்ந்து காவேரியில் சங்கமிக்கிறது. முக்கியமாக, நெல், தேங்காய், பாக்கு, மரச்சீனி, வாழை, இஞ்சி, மஞ்சள், தேயிலை, ஏலக்காய், லவங்கம் போன்றவை தென்மேற்கு மலைச் சரிவுகளில் பயிரிடப்படுகின்றன. வறட்சிப் பகுதிகளான கிழக்கு மலைச்சரிவில் ராகி, நிலக்கடலை, சூரியகாந்தி, கரும்பு, பருத்தி போன்றவை பயிரிடப்படுகின்றன. அடர்ந்த காடுகளில் மருத்துவ குணம் நிரம்பிய அரிய வகை மருத்துவ மூலிகைகள் கூட ஏராளமாகக் கிடைக்கின்றன.

காடுகளை அழிப்பது, மரங்களை வெட்டுவது, கட்டுப்பாடில்லாத நில ஆக்கிரமிப்பு, மண் அரிப்பு போன்ற காரணங்களால் பசுமையுடன் காட்சியளித்த மலைப் பிரதேசம் எண்பதுகளின் மத்தியில் பாறைகளாக காட்சியளிக்க ஆரம்பித்திருக்கிறது. மழை நீர் சேமிப்பிலும் தடை ஏற்பட்டு நிலத்தடி நீர் மட்டமும் குறையத் துவங்கியிருக்கின்றது. மக்களின் பேராசை இயற்கைச் சுழற்சியில் சிக்கலை ஏற்படுத்தியதால் நீரூற்றும் இல்லாமல் போக, ‘கொடுங்கரப்பள்ளம்’ உலர்ந்து வற்றியிருக்கிறது. பெரு நதிகளான பவானி மற்றும் குந்தியின் மூன்று முக்கிய கிளை நதிகளில் கொடுங்கரப்பள்ளமும் ஒன்று. நதியின் இறப்பால் ஆற்றின் நீர்வரத்து குறையவே அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் விவசாயமும், தன்னிச்சையான விளைச்சலும் பாதித்திருக்கிறது. இதனால் இயற்கை வளங்களை நம்பியிருந்த தொல்குடியினர் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். சிலர் வறண்ட பகுதிகளிலிருந்த களிமண்ணால் செங்கல் சூலை அமைத்து பிழைத்திருக்கின்றனர்.

(கடைசியில் இருப்பவர் கவிஞர் சுகதகுமாரி)

கவிஞரும், சுற்றுப்புற ஆர்வலருமான சுகதகுமாரி இந்த நெருக்கடிகளை தனது நாட்குறிப்பில் எழுதியிருக்கிறார். பசுமையான நாட்களையும், வறட்சியான நாட்களையும் நேரில் கண்டவர் என்பதால் படைப்பாளிக்குரிய அக்கறையுடன் இதனை பதிவு செய்திருக்கிறார். 1980-களின் மத்தியில் எழுதிய சில பகுதிகளை வாசித்துக்காட்டும் அதே நேரத்தில் திரையிலும் மலையாள எழுத்துக்கள் பின்னணியில் ஓடுகின்றன. பழங்குடி வயோதிகர்களின் நேர்முகமும் கவிஞரின் வரிகளுக்கு வலு சேர்க்கிறது.

ஒருகட்டத்தில் நீர் பற்றாக்குறையால் கிராம மக்கள் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். ஆயிரமாயிரம் வருடங்களாக இயற்கையுடன் இசைந்து வாழ்ந்தவர்களில் சிலர், பிழைப்பு தேடி அருகிலுள்ள நகரங்களுக்கு இடம்பெயர நேர்கிறது. காலூன்றிய நிலத்தை விட்டு வெளியில் செல்ல மனமில்லாத கிராமவாசிகள் AHADS (Attapady Hills Area Development Society) என்ற வளர்ச்சித் திட்ட சுய உதவிக் குழுமத்தில் ஒன்றிணைந்து வற்றிய நதிக்கு மீண்டும் உயிர் கொடுக்க முயற்சி செய்கிறார்கள். இதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கேரள அரசு ஜப்பானிய நிதி நிறுவனத்துடன் (Japan Bank for International Cooperation - JBIC) இணைந்து 258.31 கோடி ரூபாய் அளவிற்கான திட்டங்களை தொலைநோக்குப் பார்வையில் செயல்படுத்தி இருக்கிறது. அதற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்ட அரசு அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்கள். கிராம மக்களும் முனைப்புடன் செயல்படவே நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆலோசனைகளை வழங்கி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி வறண்ட ஊற்றுக்கு உயிர் கொடுக்கிறார்கள்.

மூன்று பகுதிகளாகப் பிரித்து, திட்டம் வகுத்து, பல குழுக்களாக இவர்கள் உழைத்திருக்கிறார்கள். முதலில் மலைச் சரிவுகளில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்திருக்கிறார்கள். விலங்குகளிடமிருந்து மரக்கன்றுகளைப் பாதுகாக்கவும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். இரண்டாவதாக மலைகளில் கிடைக்கும் சிறுசிறு கற்பாறைகளைக் கொண்டே மதகுகளை ஏற்படுத்தி மண் அரிப்பையும் குறைத்திருக்கிறார்கள். கற்கள் நகர்ந்துவிடாமல் இருக்க கம்பி வலைகளையும் பொருத்தியிருக்கிறார்கள். அந்த மதகுகளின் மூலமே தேவையான இடங்களில் பள்ளம் வெட்டி மழைநீர் சேமித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயரும்படி செய்திருக்கிறார்கள். மூன்றாவதாக தாழ்ந்த நிலப்பகுதிகளில் ஆங்காங்கு மலைக்காடுகளில் பாதுகாப்பான குழிகளைத் தோண்டி, பலநூறு பள்ளங்களை ஏற்படுத்தி, மழைக்காலங்களில் உருண்டோடும் தண்ணீரை வீணடிக்காமல் குளங்கள் ஏற்படுத்தி நீரினை சேமித்திருக்கிரார்கள்.1996 முதல் செயல்படுத்தப்பட்ட திட்டம் 2008-களின் இறுதியில்தான் பலன் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. 2008-ஆம் ஆண்டிலிருந்து வருடத்தின் 10 மாதங்கள் கொடுங்கரைப்பள்ளம் காலநிலைக்கு ஏற்றார்போல வழிந்தோடுகிறது. செயலூக்கத்துடன் கூடிய சுய உதவிக் குழுவின் பயிற்சி திட்டமே இதையெல்லாம் சாத்தியப்படுத்தியிருக்கிறது. இதனை மக்களும் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
மேலும் காய்கறித் தோட்டம், மண்வள மேம்பாட்டுத் திட்டம், ஆட்டு மந்தைக் குடில் அமைப்பு, காற்றாலை மின்சாரத் திட்டம் போன்ற எல்லா திட்டங்களுமே சுய உதவிக் குழுவின் மூலமே பெரும்பாலும் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு திட்டத்தின் சரியான வளர்ச்சியிலும் பெண்களின் பங்கு கணிசமானது. அதிலும் பழங்குடியின பெண்களே அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டிருக்கிறார்கள்.

கேரளாவின் காற்றாலை மின்சார விசைகள் அட்டப்பாடியில்தான் அதிகமாக இருக்கிறதாம். அதற்காக ஏராளமான மரங்களை வெட்டி, காட்டினை அழித்து இதனை சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள். கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உயிரைக்கொடுத்து, இறந்த நதிக்கு 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜீவன் கொடுத்திருக்கிறார்கள். காற்றாலைகள் முக்கியமா? இயற்கை வளங்கள் முக்கியமா? என்பதை அரசு இயந்திரம் உணர வேண்டும். ஆவணப் படத்தின் இறுதியில் ஓடும் வரிகள் அதனை அழுத்தமாக உணர்த்துகிறது.

When the last tree is fellled
When the last fish is floating dead
only then you will realize its value
you will then realize that
there is no value for the money
you value now the most
(Tribal chief, Papa new Guinea)

கடந்த மாதம் ‘மது எரவான்கரா’ சென்னை வந்திருந்ததால் தேசிய நாட்டுப்புறவியல் உதவி மையத்தில் (NFSC - Chennai) சிறப்புத் திரையிடல் ஏற்பாடாகியிருந்தது. திரையிடலின் முடிவில் படம் உருவான விதம் பற்றி மது பகிர்ந்துகொண்டார். “மாத்ருபூமி மலையாள இதழின் இணைப்பு மலரில் கொடுங்கரப்பள்ளம் பற்றி நோபல் ஜோஸ் எழுதிய கட்டுரையே இந்த ஆவணப்படத்தை எடுப்பதற்கு உந்துதலாக இருந்தது. முழுப்படத்தையும் முடிக்க 15 மாதங்கள் எடுத்துக் கொண்டது. பல்வேறு கால நிலைகளில் அங்கு சென்று உண்மை நிலவரங்களை உள்வாங்கி, பல்வேறு கிராம மக்கள் மற்றும் அலுவலர்களுடன் உரையாடி, அதிலிருந்து தேவையான விஷயங்களை படம் பிடித்தோம். கடைசி மூன்று மாதங்கள் மட்டுமே படப்பிடிப்பை வைத்துக் கொண்டோம்.” என்று பகிர்ந்துகொண்டார். தயாரிப்புச் செலவுகளை வி.ஆர். ரவி ஏற்றுக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான சன்னி ஜோசப் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இசை, படத்தொகுப்பு, கலை என்று ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். இந்தப்படம் இத்தாலி, ஜப்பான், ஜேர்மனி, கனடா மற்றும் அமெரிக்க உலகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட தேர்வாகி இருக்கிறது.

(முற்றும்)

NFSC – சிறப்புத் திரையிடல் - ஆகஸ்ட் 18, 2011
புனர்ஜனி / ஆவணப்படம்/ ஆங்கிலம்/ 30 நிமிடம் / 2011

இடம்: தேசிய நாட்டுப்புற உதவி மையம்,
#505, காவேரி காம்ப்லஸ், 96 எம்.ஜி சாலை,
நுங்கம்பாக்கம், சென்னை - 600 034


*********************************************************
மது ஏறவங்கரா பற்றி...

மது ஆலப்புழாவிலுள்ள எரவன்கராவில் பிறந்தவர். ஆவணப்பட இயக்குனர், எழுத்தாளர், சினிமா விமர்சகர், சினிமா திறனாய்வாளர், உலக திரைப்பட விழாக்களில் ஜூரி என பன்முகத் தன்மையைக் கொண்டவர்.

மும்பை - இந்தியா (2003), யமகடா – ஜப்பான் (2005). பிரிஸ்பேன்– ஆஸ்திரேலியா (2006), இஸ்தான்புல் – துருக்கி (2008), டொராண்டோ– கனடா (2010) ஆகிய இடங்களில் நடந்த உலகத் திரைப்பட விழாக்களில் ஜூரியாகப் பங்காற்றியிருக்கிறார். சிறுகதை, பயணக் கட்டுரை, சினிமா திறனாய்வு, மொழிபெயர்ப்பு, சினிமா வரலாறு என்று எழுத்து சார்ந்து இயங்கக் கூடியவர்.

ஸ்நானகதங்கள் (சிறுகதை), மலையாள சினிமாயும் சாஹித்யவும் (ஆய்வு), அலிவின்டே மந்தரங்கள் (சினிமா திறனாய்வு), அமர்த்தியா சென்னின் சம்ஸ்காரம், யுக்தி, சமூஹம், சலபயாத்ரகள் (பயணம்), மலையாள சினிமாயிலே அவிஷ்மரநீயர் (சினிமா வரலாறு), நிஷாதம் (வசனம்), பர்லிவயலுகளே உலகுன்ன காட்டு – சமகலீனா லோக சினிமா (சினிமா திறனாய்வு) ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார். சில புத்தகங்களுக்காக தேசிய மற்றும் மாநில அரசின் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

நங்கூரம் என்ற மலையாள சினிமாவில் வேலை செய்திருக்கிறார். “Plastics, The Milky Way, The Story of PDDP, Crystals, Bricks, Kalarippayattu, Forensic Science, The Films of Adoor Gopalakrishnan, Asmara- The City of Dreams ( Eritrea ), Victims of Silence ( Eritrea ), Nehna I-V ( Eritrea ), Punarakhyanam , The Magic Wheel ( Bahrain ) and Punarjjani” போன்ற ஆவணப் படங்களை எடுத்திருக்கிறார். நிஷாதம் மற்றும் பக்கள்மழா என்ற ஆவணப் புனைவையும் முயற்சி செய்திருக்கிறார்.

1999 ஆம் வருடத்தின் தேசிய விருதையும், ஜனாதிபதியின் தங்கப் பதக்கத்தையும் பெற்றவர். ‘மலையாள சினிமாயும் சாஹித்யவும்’ என்ற சினிமா புத்தகத்திற்கான அதே வருடத்தின் மாநில விருதையும் பெற்றிருக்கிறார். 2000 & 2002 –ற்கான சினிமா விமர்சகர் விருதையும் 2003-ல் கேரள அரசின் சினிமா விமர்சகர் விருதையும், 2007–ஆம் ஆண்டிற்கான கேரள அரசு தொலைகாட்சி விருதையும் பெற்றிருக்கிறார். இலக்கியம் மற்றும் சினிமா சார்ந்து தீவிரமாக இயங்குவதால் இந்திய கலாச்சாரத் துறையால் சிறந்த படைப்பாளியாக கெளரவிக்கப் பட்டிருக்கிறார். FIPRESCI – இந்தியக் கிளையின் செயற்குழு உறுப்பினர்.

அவருடைய படைப்புகளுக்காக தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி:

மது எரவன்கரா,
எரவன்கரா அஞ்சல்,
மவேளிக்கரா, கேரளா
பின்கோடு- 690 108,
இந்தியா.

மின்னஞ்சல்: eravankara@gmail.com

*********************************************************

மேலதிக தகவலுக்கு

1. http://indianfolklore.org/home.htm
2. http://ahads.org
நன்றி - சொல்வனம் இணைய இதழ்.

Wednesday, October 26, 2011

ஏக்கத்தின் குரல்

பதினைந்து வருடங்களுக்கு முன் சண்டிகரில் ஒரு நாடகம் நடக்கிறது. ஒத்திகைக்குப் பின் நாடகக்காரி விரதம் இருப்பது போல் தனித்திருக்கிறாள். பிராணாயாமம் அவளை விழித்திருக்கச் செய்கிறது. ரசிகர்களின் பசிக்காக மேடையேறியவள் சபையினரை வணங்குகிறாள். மீண்டும் வணங்குகிறாள். மறுபடியும் மறுபடியும் வணங்குகிறாள். நாட்டியம், கிராமியக் கலை, சிலம்பாட்டம் உள்ளிட்ட சில பாரம்பரிய கலை வடிவங்களின் குரு வணக்கத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, வார்த்தைகளற்ற பாவங்களை உடலசைவில் உண்டாக்கி, அதையே படிமமாகக் கொண்டு – ஒரு பெண் தனக்குள் இருக்கும் அக்னியை (சக்தியை) வெளிக்கொணர்வதாக மேடையில் நாடகம் அரங்கேறுகிறது. கூத்துப்பட்டறையில் தன்னை புடம் போட்டுக்கொண்ட கலைராணியின் ‘பெண்’ என்ற இந்நாடகம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெறுகிறது.

அரங்கின் மூலையில் கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்திருந்த, கோவாவைச் சோந்த ஹாட்மேன் டிசூசா என்ற நாடக இயக்குநர் கலைராணியின் திறமையால் கவரப்பட்டு தன்னுடன் ஒரு நாடகம் செய்ய அழைக்கிறார். அதற்காக உகாண்டா கவிஞர் Okot p’Bitek’ எழுதிய ‘Song of Lowino’ என்ற கவிதையை தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். கணவனை இழந்த பழங்குடிப் பெண் ஒருத்தி தன் மணவாழ்க்கையில் அனுபவிக்க நேர்ந்த ஒடுக்குமுறை அவஸ்தைகளையே இக்கவிதை பேசுகிறது. ஜாஸ் இசையின் பின்னணியில் ஆங்கிலத்தில் போடப்பட்ட இந்நாடகம் பின்னர் மு. நடேஷ் என்பவரால் தமிழாக்கம் செய்யப்பட்டு, இந்திய வாத்தியக் கருவிகளின் இசைப் பின்னணியில், 1994 ம் ஆண்டிலிருந்து பல மேடைகளில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. கூத்துப்பட்டறை நவராத்திரி விழாவிற்காக நீண்டநாள் கழித்து மீண்டுமொரு முறை கடந்த வியாழனன்று அரங்கேற்றப்பட்டது.

செம்மண் விளக்கின் மஞ்சள் வெளிச்சத்தில் கொலுவில் வைக்கப்பட்ட பொம்மைகள் பிரகாசிக்கின்றன. பொம்மையின் பல வண்ணத் திட்டுக்கள் இருண்ட அரங்கில் தெறிக்கின்றன. அமைதியை குலைக்கும் வகையில் பறையொலி முழக்கம் அதிர்வை உண்டாக்குகிறது. பறையொலி தேய்ந்து பூனையின் கத்தல் லேசாக ஒலிக்கிறது. விம்மிக்கொண்டே தன்னுடைய கணவன் இறந்ததாக நினைத்து அழத் தொடங்குகிறாள் பழங்குடிப் பெண் லெவினோ. ஆப்ரிக்க தொல்குடி அச்சோலி மரபில் வாழும் இவளுக்கும், மேற்கத்திய மோகத்தில் திளைக்கும் தன் கணவன் ஒகோல் என்பவனுக்குமான முரண் எண்ணங்களே நாடகத்தின் அடிநாதம். கலாசாரத்தையும், சகமனித உணர்வுகளையும் மதிக்கத் தெரியாத தன்னுடைய கணவன் இறந்ததாக நினைத்து அழுகிறாள்.

ஒகோல் இறந்தான். ஊர் தலைவனின் மகன், எருதின் மைந்தன், அளவில்லாத வன்முறைகளால் கொல்லப்பட்டான். ஓர் அசைவில்லாத குட்டை போல பிணமாகக் கிடக்கிறான்’ என்ற ஒப்பாரியுடன் பிதற்றலை ஆரம்பிக்கிறாள். சொந்த கலாசாரத்தை மறந்து மேற்கத்திய மோகத்தில் வாழும் அவனைச் சாடுகிறாள். பாழடைந்த கட்டடத்தில் விட்டுவிட்டுப் போன பயன்படுத்த முடியாத பொருளைப் போலவும், காட்டு விலங்கினைப் போலவும் தன்னை பாவித்த கணவனை கொச்சையான அசைவுகளின் மூலம் நையாண்டி செய்கிறாள். தன்னுடைய முன்னோர்களின் மரபுசார் கலாசாரத்தை அன்றாட வாழ்வில் பின்பற்றியதை நினைத்து கர்வமும் கொள்கிறாள். தன்னுடைய இயலாமையை நினைத்து கொலுவிற்கு மத்தியில் நின்று லெவினோ மூர்க்கமாக அழுகிறாள். சாம்பலை எடுத்துத் தூவிக்கொண்டே ருத்ரதாண்டவம் ஆடுகிறாள். அப்பொழுது பழைய நினைவுகளின் பொருட்டு தலையிலும், பாசத்தின் வெளிப்பாடாக மார்பிலும், விரக வேதனையில் பெண்ணுறுப்பிலும் அடித்துக்கொண்டு அழுகிறாள்.

நவீன உலகுடன் தொடர்பற்று வாழும் லெவினோவை முற்றிலும் வெறுக்கிறான் ஒகோல். அவனுடைய நெருக்கத்தையும், அந்தரங்க உணர்வுகளை நேசமுடன் பகிர்ந்து கொள்ளவும் லெவினோ விரும்புகிறாள். அது முடியாமல் போகவே தனிமையில் பேசிக்கொள்கிறாள். உலகத்தின் ஆண்கள் தங்களை நேசிக்கும் பெண்களின் உணர்வுகளை ஆற்றுப்படுத்துவதே இல்லை. அதற்கு பெரும்பாலான ஆண்கள் முயல்வதுகூட இல்லை. உலகமெல்லாம் இந்த முரண் பொருந்திப் போவதால் காலனியாதிக்க கலாசார நகலெடுப்பின் குறியீடாகவே ஓகோலை கருத வேண்டியிருக்கிறது. தேவையான இடத்தில் பறவைகளின் சப்தங்களையும், விலங்குகளின் கேவல்களையும் கச்சிதமாகப் பயன்படுத்தி நாடகத்தின் உணர்ச்சி வெளிப்பாட்டை வேறு தளத்திற்கு நகர்த்திச் செல்கிறார் கலைராணி.

சூரியனின் மறைவிற்காக காத்திருக்கிறாள் லெவினோ. “அவன் வருவானா? அடுத்து சாவதற்குமுன் இதே இடத்திற்கு நேரத்தில் வந்து சேர்வானா?” என்று தனிமையில் ஏங்குகிறாள். ‘பிறப்புறுப்பை பித்தநீர் எரிக்கிறது. அவயங்கள் காற்றில் அலைக்கழிக்கப் படும் அதே நேரத்தில் அவர்களது கொட்டைகள் வகுப்பறையில் நசுக்கப்பட்டன, பெரிய பக்கங்களுக்கு இடையே’ என்று, ஏட்டுப்படிப்பின் மேற்கத்திய மோகத்தில் தறிகெட்டுத் திரியும் அறிவுஜீவி ஆண்களை விரையடிக்கப்பட்ட வண்டி மாடுகளாகச் சித்தரிக்கிறாள். சிலர் கோவில் மாடுகளாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மையே. மேற்கின் சூரியன் சீக்கிரமே அஸ்தமிக்கும். அவளுடைய கணவன் ஒகோலும் வந்து சேர்வான். இரவின் முடிவில் உதயமாகும் விடிகாலைச் சூரியனை பூனை விழுங்கி சப்தமிடும் அதே வேலையில் லெவினோவின் குரல் மீண்டும் ஒலிக்கத் துவங்கும்.

சாங் ஆஃப் லெவினோ–வைத் தொடர்ந்து நந்திகிராமில் 1993ம் ஆண்டு முதன்முறையாக பரிசோதனை முயற்சியில் அரங்கேற்றப்பட்ட கலைராணியின் மற்றொரு நாடகமான ‘வருகலாமோ அய்யா…’ நிகழ்த்தப்பட்டது.
ஓர் ஊர்வலத்தில் தேரானது நகரும்பொழுது நாதஸ்வரத்தில் மல்லாரி ராகம் வாசிப்பார்கள். அதற்குமுன் பறை மேளம் கொட்டப்பட வேண்டுமென்பது ஐதீகம். அப்பொழுதுதான் தேர் புறப்படும். இதனை நா.முத்துசாமி தான் எழுதிய ‘England’ என்ற நாடகத்தில் பயன்படுத்தி இருப்பார்.

‘மல்லாரியில் நகராத தேருக்கு
பறை கொட்டும் வேண்டும்’

இதனை ஆரம்ப வரிகளாக வைத்து, நந்தனார் சரித்திரக் கீர்த்தனையின் பல்லவி மற்றும் அனுபல்லவியைத் தவிர்த்துவிட்டு சரணத்தை மட்டுமே முழுவதுமாக எடுத்துக்கொண்டு, நா.முத்துசாமியின் வரிகளுக்கு அடுத்து வருமாறு அமைந்த கலைராணியின் தனிநடிப்பு பல பரிசோதனை முயற்சிகளை உள்ளடக்கியதாக இருந்தது. பக்தியை லட்சியமாகக் கொண்ட நந்தனார் தில்லை நடராஜனை தரிசிக்க பேராவல் கொள்ளும் பகுதிகளை பரதத்தின் அபிநய சாயலிலும், ஒடுக்கப்படும் பெண்களின் குரலாக வெளிப்படும் கலைராணியின் உள்ளார்த்த சுயபரிசோதனைப் பகுதிகளை நவீனத்தின் சாயலிலும் அமைத்து திறம்படச் செய்திருந்தார். ஓர் ஆணின் குரலில் நந்தனாராகவும், அதேவேளையில் ஒடுக்கப்படும் பெண்களின் குரலாகவும் ஒலிப்பதால் இருபாலினரையும் அடையாளப்படுத்தும் விதமாக உடையலங்காரத்தில் கவனம் செலுத்தியிருந்தார்.

கோபலகிருஷ்ண பாரதியார் தான் இயற்றிய நந்தனார் சரித்திர பாடல்களில் தில்லை நடராஜனின் அருங்குணத்தையும், நந்தனாரது எளிமையான திட பக்தியையும் புகழ்ந்துப் பாடியுள்ளார். நந்தன் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர் என்பதால் கோவிலுக்குள் நுழைய தடைவிதிக்கிறார்கள். எனவே சந்நிதிக்குள் நுழைந்து மூலவரை தரிசிக்க முடியாமல் தவிக்கிறார்.

திட பக்தியால் ஈசனின் மனம் குளிர்ந்து, நந்தனின் கனவில் தோன்றி “நான் உன்னைப் பொன்னம்பலத்திற்கு வரச்செய்து தரிசனம் தருகிறேன்” என்று உறுதிமொழி கொடுக்கிறார். நந்தனுக்கு சந்தேகம் வலுக்கிறது. “இவ்வளவு நாள் தன்னை கீழ் சாதியன் என்று கோவிலுக்குள் நுழையவிடாத சமூகம் இதற்கு எப்படி சம்மதிப்பார்கள்?” என்ற பயம் அவருக்கு ஏற்படுகிறது. தன்னுடைய கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
எனவே ‘உன் அருகில் நான் வருகலாமோ ஐயா’ என்று சிவனை நோக்கி கசிந்துருகிப் பாடுகிறார். புண்ணியம் செய்யாததால் இந்தப் பூவுலகில் கீழ்சாதியில் பிறந்து, சந்நிதிக்கு வெளியே நின்று உன் தரிசனம் கிடைக்காமல் தவிக்கிறேன்’ என்று ஏங்குகிறார்.

“பூமியில் புலையனாய்ப் பிறந்தேனே
புண்ணியம் செய்யாமல் இருந்தேனே
சாமி உன் சந்நிதி வந்தேனே
பவசாகரம் தன்னையும் கடந்தேனே
கரை கடந்தேனே
சரணம் அடைந்தேனே
தில்லை வரதா பரிதாபமும் பாவமும் தீரவே (வருகலாமோ ஐயா…)”

நந்தனார் தில்லை அம்பல நடராஜனை வெளியில் தேடுகிறார். சிவம்தான் அவருக்கு லட்சியம். ஆருத்ரா நன்னாளில் நடராஜரை நேரில் தரிசித்து அவருடன் இரண்டறக் கலக்க வேண்டும் என்பதே அவருடைய குறிக்கோள். ஆகவே பக்தி வழியில் மென்மையாக வெளிப்படுகிறார். நந்தனார் சிவத்தில் கலந்தபோது கலைராணி ரசிகர்களுடன் கலந்ததை நான் உணர்ந்தேன். ஒரு நடிகையாகவும் ஒரு ரசிகனாகவும் இது ஓர் உச்சம். கலையே தெய்வம் என்ற அகம் வெளிப்படும் தருணம். சாமானியர்களின் லட்சியம் இருப்பைச் சார்ந்தது. இருப்பின் தேவைகளைச் சார்ந்தது. வாழ்வின் இருப்பில் கோவம் வெறுப்பு, காதல், தோழமை என்று எல்லாமே கலந்திருக்கும். அதற்கேற்பவே நம் குரல் அமையும்.
இரண்டு வெவ்வேறு முரண் தன்மைக்கேற்ப குரலையும், உடல் மொழியையும் சரியாக வெளிக்கொணர்வது மிகக் கடினமான செயல். கலைராணிக்கு அது சர்வ சாதாரணமாக வாய்க்கிறது.

இயக்கி நடித்தவர்: நடிகை கலைராணி
அரங்க ஒளியமைப்பு: ஆவணப்பட இயக்குனர் R.V.ரமணி
இசை: கருணா பிரசாத், மணிகண்டன், சரத் மற்றும் பரத்
அரங்க வடிவமைப்பு: கலைச் செல்வன்.
பின்னரங்க உதவி: பிரபு.

பயன்பட்ட தளங்கள்:
1. http://www.youtube.com/watch?v=mrvk-aFVjUw
2. http://kalairaani.weebly.com

(நன்றி - தமிழ் பேப்பர் - இணைய இதழ்)

Wednesday, October 5, 2011

டி எம் கிருஷ்ணா – கேணி சந்திப்பு

சங்ககாலம் முதல் சமகாலம் வரை இசையானது பல்வேறு வடிவங்களில் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு இசை வடிவமும் அதனதன் சிறப்பியல்புகளால் மெச்சப்படுகிறது. “கருவி இசை, வெஸ்டர்ன் மியூசிக், கர்னாடக இசை, ஹிந்துஸ்தானி, தமிழிசை, சூஃபி இசை, ஜென் இசை, கிராமிய இசை, கஸல், திரையிசை” என்று சொல்லிக் கொண்டே போகலாம். அதில் தென்னிந்திய இசை வடிவங்களில் ஒன்றான கர்னாடக சங்கீதத்திற்கு தனித்துவமான இடமுண்டு. மரபின் வடிவ நேர்த்தியாலும் (Structure), புத்தாக்கம் (Innovative) மற்றும் தனித்துவக் கற்பனையாலும்(Creative) சிறந்து விளங்கும் இசைக் கலைஞர்கள் கால இடைவெளியில் தோன்றிய வண்ணமே இருக்கிறார்கள்.

எந்த ஒரு கலைஞனுமே தான் சார்ந்த துறையைப் பற்றி பேசும்பொழுது மயக்க நிலைக்கு செல்வது வழக்கம். தன்னுடைய கலைதான் “ஆகச் சிறந்த கலை” என்பதை நிறுவுவதிலேயே குறியாக இருப்பார். நடுநிலையோடு மரபையும், வரலாற்றையும் அணுகக் கூடியவர்கள் மிகக் குறைவு. அதை பொதுவில் பேசக்கூடியவர்கள் அதனினும் குறைவு. அப்படி விரல்விட்டு எண்ணப் பட வேண்டிய அரிய நபர்களுள் கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தவிர்க்க முடியாத ஆளுமை.

ஜூலை மாதம் நடைபெற்ற கேணி சந்திப்பில் பங்கேற்று “கர்னாடக இசை - ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். “தேர்ந்தவர்கள் இருப்பின் இடையிடையே பகிர்ந்துகொள்ளலாம். தவறுகள் இருந்தால் உடனே திருத்தலாம். இந்த சந்திப்பு முழுவதும் கலந்துரையாடல் தன்மையில் அமைவதையே நானும் விரும்புகிறேன். முதலில் கர்னாடக இசையைப் பற்றிய வரலாற்றையும், இப்போதிருக்கும் நிலையையும் பார்க்கலாம்” என்று ஆரம்பித்தார்.

பொதுவாகவே நம்முடைய கலைப் படைப்பு எந்த வடிவத்தில் இருந்தாலும், ‘நாடகம், இலக்கியம், இசை’ என்று எதுவாக இருந்தாலும் 2000 வருடப் பழமை வாய்ந்தது என பெருமை பேசுவோம். அதில் நமக்கு திமிரும் இருக்கிறது. உண்மையில் ஆராய்ந்து பார்த்தால், இன்றைக்கு ‘கர்னாடக இசை’ என்று நாம் சொல்லிக்கொள்ளும் வடிவம் 2000 வருடப் பழமையானது இல்லை. வரலாற்று நோக்கில் ஆராய்ந்து - கி.மு இரண்டாம் நூற்றாண்டிலிருந்து பார்க்கும் பொழுது இரண்டு விதமான ஆதாரங்கள் நமக்குக் கிடைக்கின்றன. அவை பரத முனியால் எழுதப்பட்ட ‘நாட்டிய சாஸ்திரா’ என்ற சம்ஸ்கிருத ஆக்கமும், தமிழில் இளங்கோவடிகளால் எழுதப்பட்ட ‘சிலப்பதிகார’மும் தான். சங்கீதத்திற்கான முழுமையான நூலாக சிலப்பதிகாரத்தைக் கருத முடியாது என்றாலும் அதில் சங்கீதமும் இருக்கிறது. இங்குமங்கும் சிதறிக்கிடந்த சங்கீத ஆதாரங்களை கி.பி பத்தாம் நூற்றாண்டில் ஒன்றாக திரட்டி ஒரு வடிவம் கொடுத்திருக்கிறார்கள். இப்போதுள்ள கர்னாடக இசை வடிவத்துடன் அவற்றை ஒப்பீடு செய்தால் அதிக ஒற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை

இரண்டுக்கும் மேற்பட்ட இசை வடிவங்கள் அப்போதே இருந்திருக்கின்றன என்பதுதான் உண்மை. கி.பி எட்டாம் நூற்றாண்டிலிருந்து பார்க்கப்போனால் தமிழிசை என்றும், சம்ஸ்கிருத இசையென்றும் செவ்வியல் இசையை பிரிக்க முடியாது. மத்திய பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற வட இந்தியப் பகுதிகளின் பாரம்பரிய இசையில் தமிழ் நாட்டின் பாரம்பரிய இசை ஆறாம் நூற்றாண்டிலேயே சங்கமிக்க ஆரம்பித்துள்ளது. எவ்வளவு நுணுக்கமாகப் பார்த்தாலும் இப்போதுள்ள இசைவடிவத்தின் துவக்கம் 11-ஆம் நூற்றாண்டாக எடுத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் பழமை கொண்டாடுவது நியாயமே இல்லை. அதன்பிறகும் இசையானது புத்தாக்கம் பெற சமூகத் தொடர்பே (Social Interaction) காரணமாக இருந்திருக்கிறது.

ஏற்கனவே இருந்த தமிழக இசையும், விஜய நகர ஆட்சியும் இசை வளர்ச்சிக்கு இரண்டு முக்கிய காரணிகளாக இருந்திருக்கின்றன. அரசாண்ட மன்னர்களின் பங்களிப்பும் மிக முக்கியமானது. கர்நாடகம், ஆந்திரத்திலிருந்து இசை வித்வான்கள் வந்து கலந்துரையாடும் இடமாக தஞ்சாவூர் இருந்திருக்கிறது. ஆகவே அவர்களுடைய இசைநுட்பம் நமக்கும், நம்முடைய சிறப்பை அவர்களும் பரிச்சயப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு தாராளமாகவே அமைந்திருக்கிறது. இதற்கான ஆவணங்கள் கூட நம்மிடம் இருக்கிறது.

விசேஷமாக கவனித்து ரசிக்கக் கூடிய, தஞ்சாவூர் பாணியில் வாசிக்கப்படும் மிருதங்கம், மராட்டியர்களின் ‘மிருதங்’ என்ற பாணியில் இருந்து வந்ததுதான். புதுக்கோட்டை மிருதங்க வாசிப்பு முறை தவிலிலிருந்து வந்திருக்கிறது. இதில் ரசிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் மொழியாலும், கலாசாரத்தாலும் வேறுபட்டிருந்தாலும் இசையால் அனைவரும் சங்கமித்திருக்கிறார்கள் என்பதுதான். ‘Fusion’ என்பதே இன்றுதான் வந்ததுபோல மிகைபடுத்திப் பேசிக்கொள்கிறோம். வரலாற்றைக் கூர்ந்து நோக்கினாலே மரபில் கலப்பிசை இருப்பது தெரிகிறது.

“கலையோ, பழக்கமோ, மொழியோ” - எதுவாக இருந்தாலும், அது அவ்வளவு இயற்கையாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு சென்று, அந்த நாட்டின் கலாச்சாரத்துடன் சங்கமித்து, அவர்களிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாதபடி மாறி இருக்கிறது. மிருதங்கத்தைக் கேட்கும்போது நம்முடைய இசையென்றுதானே சொல்லிக் கொள்கிறோம். எனவே 13-ஆம் நூற்றாண்டிலிருந்தே கலப்பிசை நடந்திருக்கிறது. அதிலிருந்து 18-ஆம் நூற்றாண்டு வரையுள்ள இடைப்பட்ட காலத்தில்தான் இப்போதுள்ள இசைக்கான வடிவமே கிடைத்திருக்கிறது. அதற்கு முன்னாலும் முத்துத் தாண்டவர், அருணாசல கவிராயர் போன்ற நிறைய ஆளுமைகள் இசையை வளர்த்திருக்கிறார்கள். அருணாசல கவிராயர் இசையமைத்தாரா என்பது தெரியவில்லை என்றாலும் பாடல் வரிகளை அவர் எழுதியிருக்கிறார்.

கர்னாடக இசையென்று வரும்பொழுது “தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர், ஸ்யாமா சாஸ்திரி” ஆகிய மூன்று பேரை மட்டும்தான் இன்றைக்கு பெரும்பாலும் பேசுகிறோம். மூன்று பேருமே ஒரே காலகட்டத்தில் வாழ்ந்த மேதைகள். “ஏன் இவர்களைப் பற்றி மட்டும் பேசுகிறோம்?” என்பது முக்கியமான கேள்வி. ஏனெனில் இவர்களுடைய இசைப் பங்களிப்பு வியக்கும்படியானது. அவர்களுடைய கீர்த்தனையைக் கேட்டு இன்புறும் ஒருவருக்கு அனைத்து உணர்வுகளையும் கடத்திவிடுகிறார்கள். ராகத்திற்கும் தாளத்திற்கும் வடிவம் கொடுத்தது அவர்கள்தான். அந்த மேதைகள்தான் இப்போதிருக்கும் கலைஞர்களுக்கு சோறு போடுகிறார்கள். அதுதான் நிஜம். அவர்களுடைய இசைக்கோர்ப்புகள் இல்லையெனில் எங்களுக்குக் கச்சேரியே நடக்காது. அதனால் இப்போதிருக்கும் வடிவம் அவர்களால் வந்தது எனலாம். மேற்கத்திய இசையென்று வரும்பொழுது ‘மொசார்ட், பீதொவன், ஃபாக்’ ஆகியோரைப் பற்றி பேசுவார்கள்.

மும்மூர்த்திகள் மூவரும் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள். 1747-ல் தியாகராஜர் தஞ்சாவூர் செல்கிறார். தஞ்சாவூரை ஆண்ட மராட்டியர்கள் காலத்தை கர்நாடக இசையின் பொற்காலம் எனலாம். அந்த அளவிற்கு இசைக்காக செய்திருக்கிறார்கள். மற்ற எல்லா இசையைக் காட்டிலும் “கர்னாடக சங்கீதத்திற்கு என்ன சிறப்பு?” என்ற கேள்வி எழலாம். எளிமையாக சொல்ல வேண்டுமெனில் ஹிந்துஸ்தானி, வெஸ்டர்ன் என்று எந்த இசையாக இருந்தாலும் ‘பாடல், கற்பனை’ என இரண்டு வடிவங்கள் இருக்கிறது.

குருவிடம் சில பாடல்களைக் கற்றுக்கொள்கிறோம். அதாவது ஏற்கனவே இசையமைத்த பாட்டுக்களைக் கற்றுக் கொண்டு அப்படியே திரும்பிப் பாடுவது ஒரு முறை. இரண்டாவதாக அதில் நம்முடைய சொந்தக் கற்பனையை இடறாமல் பயன்படுத்திப் பாடுவது. மற்ற மரபிசைகளை எடுத்துக் கொண்டால் ஏதேனும் ஒன்று அதிகமாக இருக்கும். ஒன்று எடுப்பாக இருந்தால் மற்றொன்று குறைச்சலாக இருக்கும். கர்னாடக இசையின் பெரிய சிறப்பே இரண்டும் சரிவிகிதத்தில் இருக்கும் என்பதுதான். நிறைய கம்போஸ் செய்து பழகினால் தான் கற்பனை வரும். கற்பனையாக இருப்பதால் தான் கம்போசிஷன் வருகிறது. மரபில் வந்த ஒழுங்கு வடிவத்திற்கு ஒரு மரியாதை இருப்பது போலவே இசைக் கலைஞர்களின் சொந்தக் கற்பனைக்கும் ஒரு மரியாதை இருக்கிறது. இவை இரண்டிற்கும் சரியான மதிப்பு கர்னாடக இசை வடிவத்தில் இருப்பதாக எனக்குப் படுகிறது.

தாளம் மற்றும் ராகம் சார்ந்து இந்த சந்திப்பில் பேசப் போவதே இல்லை. யாரேனும் அதைப்பற்றி கேள்வி கேட்டால் பிறகு பேசலாம். இன்றைக்கு நாம் பாடும் கச்சேரி முறையும் அரதப் பழசானது இல்லை. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில்தான் அரங்கிசை வடிவமே (Music Academy & Sabha Form) நமக்குக் கிடைத்திருக்கிறது. முதலில் ‘கச்சேரி’ என்பது சங்கீதத்திற்கான வார்த்தையே கிடையாது. இசைக்கும் அந்த வார்த்தைக்கும் சம்பந்தமேயில்லை. நீதி மன்றத்திலிருந்து வந்ததுதான் ‘கச்சேரி’ என்ற வார்த்தை. “கோர்ட் கச்சேரி” என்று பழக்கத்தில் பேசியதை நீங்கள் கேட்டிருக்கலாம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தேசிய இயக்கமும் (National Movement) சுதந்திரப் போராட்டமும் வலிமையாக இருந்தன. நாட்டின் மீதான மரியாதையும், கலாச்சாரத்தின் மீதான மரியாதையும் கூட நிறையவே இருந்தது. அந்த காலத்தில் மேற்கத்திய இசைக்கு மேடை, நாற்காலிகள், அமர்ந்து ரசிக்கும் மக்கள் என்று கனகச்சிதமாக (Formal) இருந்திருக்கும். நம்முடையதை அப்படிச் சொல்ல முடியாது. வாழ்க்கை முறையுடன் கலைகளும் சேர்ந்தே இருக்கும் (Informal Presentation). நாட்டுப்புறக் கலைகளை அப்படிச் சொல்லலாம்.

கர்னாடக இசையும் பரத நாட்டியம் போலவே அரங்கேறியிருக்கிறது. பரதத்திற்கு ‘சதிர்’ என்று பெயர். சதிராட்டமாக இருக்கட்டும், பாட்டுக் கச்சேரியாக இருக்கட்டும் எல்லாமே வாழ்வுடன் ஒன்றியதாக இருக்கும். இவையனைத்தும் பெரும்பாலும் கோவிலில்தான் நடக்கும். கச்சேரியை மூன்று மணிநேரம் கேட்பார்கள். ராஜாவோ அல்லது ஜமீந்தாரோ நடத்துவார். வாழ்க்கைக்கு ஒன்றியவாறு கலையும் அரங்கேறியபடி இருக்கும். இன்றைக்குக்கூட கச்சேரி நடந்துகொண்டிருக்கும் போது சிலர் இடையிடையே பேசுவார்கள். “அவர்கள் ஏன் பேசுகிறார்கள்?” என்று நினைப்போம். நம்முடைய சமூக வழக்கமே அப்படித்தான் இருந்திருக்கிறது. “சார்… இந்தப் பாட்டுப் பாடுங்களேன்” என்று இப்பொழுதுகூட சபாக்களில் திடீரெனக் குரல் கொடுப்பார்கள். மேற்கத்திய நாடுகளில் இதையெல்லாம் பார்க்கவே முடியாது.

“மேற்கத்தியர்கள் மட்டும்தான் எலுமிச்சை வெளிச்சத்தில் கச்சேரி செய்வீர்களா? எங்களாலும் செய்துகாட்ட முடியும்” என்று நம்மவர்கள் ஆரம்பித்திருக்கலாம் என்பது என்னுடைய நம்பிக்கை. அதற்காக உருவானதுதான் சபா. இங்கு சபாவின் வேலையே கலாசார கலைகளை அழகுடன் வழங்குவது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் இது வந்திருக்கலாம்.

முன்பே சொன்னது போல இரண்டரை மணிநேர கச்சேரியை ஒரு கலைஞர் நடத்துகிறார் என்றால், அவருடைய கற்பனையும், மரபு வடிவமும் அதில் இருக்கும். பக்க வாத்தியம் என்று பார்த்தால் மிருதங்கம், கஞ்சிரா, தம்புரா இவையெல்லாம் இருக்கும். கால்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாடுவதற்கு எப்படி மைதானம் தேவைப்படுகிறதோ, அதேபோல கச்சேரி செய்வதற்கு ஒரு களம் வேண்டும். அதைத்தான் தம்புரா செய்கிறது. மற்றபடி வயலின் மிக முக்கியமான கம்பிக்கருவி. வயலின் இந்திய செவ்வியல் இசைக்கு வந்ததே பெரிய கதை. முத்துசாமி தீட்சிதரின் சகோதரர் பாலுசாமி தீட்சிதர் மணலியில் இருந்திருக்கிறார். மணலியில் பிரிட்டிஷ் ஆர்மியின் மியூசிக் பேண்ட் இருந்திருக்கிறது. அதைக் கற்றுக்கொள்ள வேண்டுமென இவருக்கு ஆசை ஏற்பட்டிருக்கிறது. ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு, தனது மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுத்து, பிறகுதான் நம்மிசைக்கு கொண்டு வந்திருக்கிறார். அவர் வடிவமைத்த வயலின் வேறு மாதிரியானது. இப்பொழுது கச்சேரிகளில் வாசிக்கும் கருவி எல்லாமே ஐரோப்பிய வயலின்தான். இதைக் கலப்பிசை இல்லையென்றால் வேறெந்த இசையை அப்படிச் சொல்வது. இன்றைக்கு வயலின் இல்லாத கச்சேரியை இசைக் கலைஞர்களால் யோசிக்கவே முடியாது.

கச்சேரியின் வடிவம் என்று வரும்பொழுது கடந்த அறுபது ஆண்டுகளில் பெரிதாக ஒன்றும் மாறிவிடவில்லை. அதைப்பற்றிய கேள்விகள் எனக்கும் இருக்கிறது. மாற்றுவதற்கான முயற்சியை செய்துகொண்டுதான் இருக்கிறேன்.

பொதுவாக பாடல்களை எடுத்துக் கொண்டு, அதன் ஒரு வரியை கற்பனைக் கலந்து பாடுவோம். இல்லையேல் ஸ்வரத்தை வைத்துக் கொண்டு மெருகேற்றுவோம். ஆலாபனை செய்தல், ஸ்வர ஆலாபனை, பக்க வாத்தியம், துக்கடா என்று நிறைவு செய்வோம். துக்கடா பாடி கச்சேரியை நிறைவு செய்வதை அரியக்குடி ராமானுஜ ஐயங்கார்தான் வடிவமைத்துக் கொடுத்தார் என்று எல்லோரும் நம்புகிறார்கள்.

மொழி சார்ந்த விவாதம் கர்னாடக சங்கீதத்தில் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. முக்கியமாக பாடப்படும் மொழிகள் தெலுங்கு மற்றும் சமஸ்கிருதம் மட்டுமே. அதன் பிறகு தமிழ் வருகிறது. சிலர் கன்னடமும் பாடுகிறார்கள் என்றாலும் தமிழ் அளவிற்குப் பாடப்படுவதில்லை. மலையாளத்தில் சில பாடல்கள் இருந்தாலும் யாரும் விருப்பத்துடன் பாடுவதில்லை. நாயக்கர் மற்றும் மராட்டியர்கள் காலத்தில் தெலுங்கும் சமஸ்கிருதமும் பரவலாக வழக்கத்தில் இருந்ததால் அந்த மொழிகள் ஆதிக்கத்துடன் இருந்திருக்கின்றன. எனவே பாடுமொழியாக அரசாண்டவர்களின் வழக்கு மொழியே இருந்திருக்கிறது. இது “சரியா? தவறா?” என்ற முடிவிற்கு வருவதைவிட, உண்மையை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். அதே காலகட்டத்தில் மும்மூர்த்திகள் வாழ்ந்ததால் அவர்களும் இந்த மொழியிலேயே பாட நேர்ந்திருக்கிறது. 1920 களில் தமிழ் இயக்கம் (Tamil Moment) ஆரம்பித்து இன்று வரை நிறைய தமிழ் பாடல்கள் கச்சேரிகளில் பாடப்படுகிறது. சென்ற நூற்றாண்டில் பாபநாசம் சிவன் இதை ஆரம்பித்து வைத்து பெரும் பங்காற்றி இருக்கிறார். அதேபோல கோபாலகிருஷ்ண பாரதியின் பங்களிப்பும் பிரமிக்கத்தக்கது.

புரந்தரதாசர்தான் கர்நாடக இசைக்கு “ச ரி க ம ப த நி ச” என்ற சரளி வரிசையை ஏற்படுத்திக் கொடுத்தார் என்று எல்லோரும் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். புத்தகத்திலும் இதையே எழுதி இருப்பார்கள். இதில் நம்பகத்தன்மை இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் வரலாற்று ஆவணங்களிலும், இதர குறிப்புகளிலும் இதற்கான ஆதாரங்கள் எங்குமே இல்லை. மேலதிகமாக நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம் சார்ந்தது. புரந்தரதாசரின் மெட்டுக்கள் தொலைந்துவிட்டதால் அவருடைய பாடல்கள் எதுவும் கச்சேரியில் வரவில்லை. எனவே அவருடைய பாடல்களுக்கு யார் வேண்டுமானாலும் மெட்டுப் போடலாம். பாரதியின் பாடல்களுக்கு மெட்டமைப்பதைப் போல என்று வைத்துக்கொள்ளலாம். மாணவர் பரம்பரை இருந்ததால் தியாகராஜரின் மெட்டுக்கள் அப்படியே நமக்குக் கிடைத்திருக்கின்றன.

அடுத்ததாக, எதைப் பற்றி பாடுகிறோம் என்பதையும் பார்க்க வேண்டும். அதைப் பற்றிய விவாதங்களை நேர்மையுடன் முன்னெடுக்க வேண்டும் என்பதும் என்னுடைய எண்ணம். தென்னிந்தியாவில், 14-ஆம் நூற்றாண்டிலிருந்தே பக்தியை பரப்புவதற்கு இசையைப் பயன்படுத்தி இருக்கிறோம். அதனால் பாடலின் உள்ளடக்கம் (Content) 99% பக்தி சார்ந்ததாகவும் இந்து மதத்தை சார்ந்ததாகவும் இருக்கிறது. இந்த கால கட்டத்திற்கு முன் வாழ்ந்த ஷேத்ரக்ஞையா முற்றிலும் மாறுபட்ட பாடல் வரிகளை எழுதியிருக்கிறார். அவையாவும் காதல் மற்றும் காமம் சார்ந்து இருக்கிறது. பொதுவில் பேசமுடியாத காமரசம் சொட்டும் வரிகளைப் பயன்படுத்தி அருமையான இசையை கொடுத்திருக்கிறார்.

வேறெந்த கலையை எடுத்துக் கொண்டாலும் சமூக மாற்றத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது. எழுத்தோ கவிதையோ - அதன் உள்ளடக்கம் காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது. கர்னாடக சங்கீதத்தில் மட்டும் அதுபோன்ற மாற்றங்கள் எதுவும் ஏற்படவே இல்லை. இன்றளவும் “இராமா கிருஷ்ணா கோவிந்தா” என்றுதான் பாடிக் கொண்டிருக்கிறோம். இது சரியா? தவறா? என்று விவாதிக்க விரும்பவில்லை. சமகால இதர விஷயங்களை ஏன் பாடக்கூடாது என்றுதான் கேட்கிறேன். மூன்று வருடங்களுக்கு முன்பு ஹிந்து ஃபெஸ்ட் (The Hindu Fest) விழாவில் நடந்த சம்பவத்துடன் உரையை நிறைவு செய்யலாம் என்று நினைக்கிறேன்.

அந்த விழாவில் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடாகியிருந்தது. கேள்வி கேட்க என்னை அழைத்திருந்தார்கள். அதற்கு முன் சந்தூர் இசைக் கலைஞர் சிவக்குமார் சர்மா தான்சேன் பற்றிய கதையைப் பகிர்ந்து கொண்டார். அக்பர் சபையிலிருந்த ஆஸ்தான ஹிந்துஸ்தானி கலைஞரைப் பற்றிய கதை. தான்சேனின் இனிமையான பாடலில் மயங்கிய அக்பர், அவரின் குருவைப் பார்க்க ஆசைப்படுகிறார்.

“அரசர்களுக்காக எனது குரு என்றுமே பாடுவதில்லை. அவரின் பாடலைக் கேட்க வேண்டுமெனில் எளிய மனிதராக மாறு வேடத்தில் வர வேண்டியிருக்கும். அதற்கு சம்மதம் எனில் அழைத்துச் செல்கிறேன்” என்கிறார் தான்சேன்.

அரசர் அக்பரோ விடுவதாக இல்லை. தான்சேனுடன் குருவைப் பார்க்க புறப்படுகிறார். இசைகானத்தைக் கேட்டவர் மலைத்து நிற்கிறார். “தேவகானம் போல இருக்கிறதே! எப்படி ஒரு மனிதரால் இது போல மதுரமாகப் பாடமுடிகிறது?” என்று தான்சேனிடம் வினா எழுப்புகிறார்.
“ஏனெனில் அரசே, நான் மனிதர்களுக்காகப் பாடுகிறேன். அவரோ இறைவனுக்காகப் பாடுகிறார்”. என்று தான்சேன் பதிலளிக்கிறார். இந்தக் கதையின் உட்பொருளில் இருந்தே என்னுடைய கேள்வியை எழுப்பினேன்.

“ஒருவர் தெய்வத்திற்காகப் பாடுவதற்கும், அக்பருக்காகப் பாடுவதற்கும், எதிரில் இருப்பவர்களுக்காகப் பாடுவதற்கும் பெரிய வித்யாசம் ஒன்றுமில்லை. வேறொருவருக்காகப் பாடுகிறோம் என்றாலே அதன் வடிவம் மாறிவிடுகிறது. Reebok Shoe- வைப் பற்றி பாடுவதற்கும், ராமரைப் பற்றி பாடுவதற்கும் வித்யாசம் இருப்பது போலத் தோன்றவில்லை” என்று அந்தக் கலந்துரையாடலில் சொல்லியிருந்தேன். என்னுடைய கருத்துக்களை வார்த்தை மாற்றாமல் தி ஹிந்து நாளிதழில் பிரசுரித்திருந்தார்கள். எனக்கான கடுமையான விமர்சனங்களை முன் வைக்கப்பட்டது. சிலவிதமான மிரட்டல்கள் கூட வந்திருந்தது. எல்லாமே புதுவித அனுபவமாக அமைந்தது. தொடர்ந்த வருடத்தின் மார்கழி உற்சவத்திற்காக ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் இசை நிகழ்ச்சி செய்யக் கேட்டிருந்தார்கள். பொதுவாகவே கச்சேரிகளுக்கு ஒரு கரு (Theme) இருக்கும். அதை முன்னரே முடிவு செய்துவிடுவோம். இந்த முறை அதை நான் சொல்லப் போவதில்லை. “ரசிகர்களே யூகித்து முடிவு செய்யட்டும்” என்று சொல்லிவிட்டேன்.

முதல் பாடல் சங்கப்பாடலில் வரும் மீனவர்களின் காதல் மற்றும் வதந்தி பற்றியது. அடுத்ததாக ஸ்பென்சர் வேணுகோபால் எழுதிய பாடலைப் பாடினேன். கடவுளைப் பற்றிய ஒரு வார்த்தைக் கூட அதில் இருக்கக் கூடாது என்று கேட்டு வாங்கினேன். அன்புணர்வைப் பற்றி எழுதிக் கொடுத்திருந்தார். பிறகு திருவனந்தபுரம் நகரத்தை வர்ணிக்கும் மலையாளப் பாடல் பாடினேன். சிறைச்சாலை, மருத்துவமனை மற்றும் நகரத்திலுள்ள முக்கியமான இடங்களைப் பற்றிய குறிப்புகள் பாடலில் இருக்கும். அடுத்ததாக உலகத்தின் அழகை, இயற்கையை, சிருஷ்டியை வர்ணிக்கும் சமஸ்கிருத பாடலைப் பாடினேன். அடுத்தடுத்த பாடல்களாக பாரதியின் சின்னஞ்சிறு கிளியே, மழையை வர்ணிக்கும் பெங்காளிப் பாடல் என்று கச்சேரியை நிறைவு செய்தேன்.

இறுதியாக “கச்சேரியின் கரு என்ன?” என்று ரசிகர்களை பார்த்துக் கேட்டிருந்தேன். ஒவ்வொருவரும் தங்களுக்குத் தோன்றிய தலைப்பை பரிந்துரை செய்தார்கள். எனக்கு இது “பக்தி” என்றேன். “ஏன்?” என்று கேட்டார்கள். பக்தி என்பது அர்ப்பணிப்பு. எதைப் பற்றி பாடினாலும் அதில் அர்ப்பணிப்பு இருக்கவேண்டும். கல்லோ ராமரோ – எதுவாக இருந்தாலும் அர்ப்பணிப்புடன் பாடவேண்டும். அதுதான் முக்கியம் என்றேன். இப்படிப் பேசியதற்கான எதிர்வினைகளை இதுவரையிலும் கடந்துகொண்டுதான் வருகிறேன். “ஏன் இப்படி இருக்கிறோம்?” என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டே இருக்கிறேன். என்றாலும் இதுதான் வரலாறு, இதுதான் நிதர்சனம்” என்ற புரிதலுடன் உரையாடலை நிறைவு செய்யலாம் என்பதாக பேசி முடித்தார் டி எம் கிருஷ்ணா.

சில நேர மௌனத்தின் வெற்றிடங்களை இயற்கையின் கொடைகளான பட்சிகளின் கூவலும், பூச்சிகளின் ரீங்காரமும், செயற்கைச் சாலையின் வாகன இரைச்சலும் நிறைவுசெய்கின்றன. இடைவெளியின் முடிவில் மீண்டும் மனிதக் குரல்கள் ஒலிக்கின்றன. அவை மொழியாகி கலந்துரையாடல் தன்மையில் இசைக்கான விவாதத்தை நோக்கி முன் நகர்கின்றன.

இடம்: ஞாநி இல்லம், #39 - அழகிரிசாமி சாலை, கே கே நகர், சென்னை.
நாள்: ஜூலை 10, 2011
*****************************

நன்றி: சொல்வனம் இணைய இதழ்

Tuesday, September 27, 2011

விசையுடன் பாயும் அம்பு(தலித்)

தலித் அதிகாரிகளுக்கு மூவர் போடும் முட்டுக்கட்டை

தமிழக அரசில் கூடுதல் தலைமைச் செயலராகவும், திட்டம் மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் கமிஷனராகவும் இருக்கிறார் ‘கிறிஸ்துதாஸ் காந்தி I.A.S’. இவரது தலைமையில் ‘அம்பு’ (அம்பேத்கார் அனைத்துலக பணியாளர் சங்கக் கூட்டமைப்பு) என்கிற அமைப்பு தலித் மக்களின் முன்னேற்றத்திற்காக இயங்கி வருகிறது. சமீபத்தில் தலித் எம்.எல்.ஏ-க்களையும் அதிகாரிகளையும் வரவழைத்து விருந்து கொடுத்திருக்கிறார் கிறிஸ்துதாஸ் காந்தி. இந்தச் சூழ்நிலையில் அவரைச் சந்தித்தோம்.

அம்பு என்கிற அமைப்பினை உருவாக்கியதன் நோக்கம் என்ன?


தமிழகத்தின் நிர்வாக சரித்திரத்தில் பட்டியலின (எஸ்.சி மற்றும் எஸ் .டி) பணியாளர்களுக்கான ஒரு அமைப்பு 2006 வரை யாரும் சரியாக உருவாக்கவில்லை. உருவாக்கத்திற்காக சிறுசிறு முயற்சிகள் எடுக்கப்பட்ட போதெல்லாம் அதனை அரசு துறைகளிலும் மத்திய நிறுவனங்களிலும் பட்டியலின பணியாளர் சங்கத்துக்கு ஏற்பளிக்கப்பட்டு ஆண்டுக்கு 4 கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் இதனை சாதி சங்கமாகப் பாவித்து அவற்றோடு ஒட்டுவதே தீட்டு என்ற மனப்போக்கிலே அதிகாரிகள் இருக்கிறார்கள். இந்த அவல நிலையை மாற்றுவதற்காக, அனைத்து சிறுசிறு அமைப்புகளை ஒன்று திரட்டும் முயற்சியில் 2006-ல் ஈடுபட்டோம். பட்டியலின ஐ.ஏ.எஸ்-கள், உதவி கலெக்டர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் யாரும் ஈடுபாடு காட்டவில்லை. ஆனால் அனைத்து துறைகளிலும் உள்ள பட்டியலின அலுவலர்கள் ரொம்பவே ஆர்வம் காட்டினார்கள். அம்பு உருவானது. இதுவரை பட்டியலினத்தைச் சேர்ந்த 77 அமைப்புகள் அம்புவில் இணைந்துள்ளன. அனைத்து எஸ்.சி., எஸ்.டி அமைப்புகளுக்கும் நாலெட்ஜ் பேங்காக செயல்படுவது அம்புவின் முதல் நோக்கம். அடுத்து, பட்டியலின பணியாலர்களுக்குரிய உரிமைகளை அவர்களுக்கு எடுத்துச்சொல்வதும் அவர்களுக்காகப் போராடுவதும்தான் முக்கிய நோக்கம். 2006-ல் துவக்கப்பட்ட அம்பு, பல்வேறு வெற்றிகளைப் பெற்றிருக்கிறது.

தமிழக பட்டியலின எம்.எல்.ஏ.க்களை அழைத்து விருந்து கொடுத்திருக்கிறீர்களே?


ஒவ்வொரு மானியக் கோரிக்கையின் போதும் பட்டியலின எம்.எல்.ஏக்களை அழைத்து, பட்டியலினத்துக்கான பிரச்சினைகளை அவர்களோடு கலந்து பேசவும் புதிய திட்டங்களை அரசுக்கு எடுத்துச் சொல்லவும் இத்தகைய விருந்து கூட்டங்களை நடத்துகிறோம். டெல்லியில் இதுபோன்ற முயற்சிகள் அடிக்கடி நடக்கும். இதில் பட்டியலின மக்களின் அனைத்து பிரச்சினைகளும் அலசப்படும். கடந்த ஆண்டுகளில் நடந்த இந்த விருந்துக் கூட்டங்களுக்கு ஒவ்வொரு எம்.எல்.ஏ-க்களையும் தனித்தனியாக நாங்கள் அழைத்தபோது, “எங்க கட்சித் தலைமை என்ன சொல்லுமோ என யோசிக்கிறோம்” என்று கூறி, வருவதற்குத் தயங்கினர். அதனால் இந்தாண்டு தனித்தனியாக அழைப்பதை விட்டு விட்டு, ஒவ்வொரு கட்சித் தலைமைக்கும் கடிதம் எழுதி ‘நாங்கள் நடத்தும் பாராட்டுக் கூட்டத்துக்கு தங்கள் கட்சி பட்டியலின எம்.எல்.ஏ-க்களை அனுப்பி வையுங்கள்’ எனக் கேட்டுக் கொண்டோம். ஆனால் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய குடியரசு கட்சி, புதிய தமிழகம் கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகள் எம்.எல்.ஏ-க்களை அனுப்பி வைக்கவில்லை.


தலைமைச் செயலகத்திலுள்ள பட்டியலின ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட உயரதிகாரிகள் சிந்தனைகள் எப்படி இருக்கிறது?

தமிழக ஐ ஏ எஸ் அதிகாரியில் 60 பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு ஐ.ஏ.எஸ் அதிகாரியும் தேர்வு செய்யப்படும் போது, ‘என் சமூக மக்களுக்காக சேவை செய்ய கிடைத்த ஒரு வாய்ப்பு இது’ என்று சொல்வர். ஆனால் வேலைக்கு வந்த பிறகு இவரது பனியின் மூலமாக எஸ்.சி. மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வதே இல்லை. பட்டியலின மக்களின் பாதுகாப்பிற்காக, அவர்களின் வளர்ச்சிக்காக இருக்கக்கூடிய சட்டங்களையும் திட்டங்களையும் கூட இவர்கள் கண்டுகொள்வதே கிடையாது.

இது மிகப்பெரிய சமூகத் துரோகம். அதிகாரிகளில் 100-க்கு 90 சதவீதம் பேர் எஸ்.சி., எஸ்.டி மக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளையும் பொறுப்புகளையும் தட்டிக்கழித்து துரோகம் செய்துகொண்டிருக்கிறார்கள். மீதமுள்ள 10 சதவீத அதிகாரிகளோ பட்டியலின மக்களுக்கான கடமைகளை செய்வதில் நெருக்கடிகளை சந்திக்கிறார்கள். உங்களை யார் இதிலெல்லாம் கவனம் செலுத்தச் சொன்னது என்று உயரதிகாரிகள் கோபமாக கேள்விகள் கேட்பது, கான்பிடன்ஷியல் ரிபோர்டில் இவர் சாதி தீவிரம் காட்டுகிறார் என்று குறிப்பிடுவது, அரசியல் வாதிகளால் இவரை மாற்றுங்கள் என்று அழுத்தம் கொடுப்பது போன்ற நெருக்கடிகள். ஆனால் இந்த நெருக்கடிகளுக்கெல்லாம் பயப்படாமல் எங்கு பணியமர்த்தப் பட்டாலும் எனது மக்களுக்கான பணியை சிறப்பாக செய்வேன் என்று அந்த 10 சதவீத அதிகாரிகள் நினைப்பதால் நெருக்கடிகளெல்லாம் இயல்பாக தெரியும்.

அம்பு நடத்தும் கூட்டங்களில் கலந்துகொள்ள எஸ்.சி அதிகாரிகள் ஆர்வம் காட்டாததற்கு காரணம்?

தங்களை எஸ்.சி என அடையாள படுத்திக்கொள்ள இவர்கள் விரும்புவதில்லை. அப்படி சொல்லிக்கொள்வதை கேவலமாக கருதுகிறார்கள். நான் ஒரு எஸ்.சி அதிகாரி என மார்தட்டிச் சொல்ல வேண்டிய ஒரு காட்சியை இவர்கள் தவிர்த்து தலை கவிழ்ந்து நிற்பது இந்த சமூகத்துக்குச் செய்கிற மற்றொரு துரோகம்.

பட்டியலின மக்களுக்கு நன்மை செய்வதற்காகத்தான் ஆதிதிராவிடர் நலத்துறை இருக்கு. அந்த துறையின் செக்ரட்டிரியாக நியமிக்கப்படுபவர்கள் எஸ்.சி யாகத்தான் இருப்பார். அதன் மூலம் நிறைய நன்மை செய்ய முடியுமே?

பட்டியலின மக்களின் கடமைகளை செய்யாத அதிகாரிகளில் இவர்தான் முதலிடத்தில் இருப்பார். குறிப்பாக ஒண்ணு சொல்லவா? தாட்கோ ஒப்பந்தப் பணிகளை எஸ்.சி ஒப்பந்ததாரர் மட்டும்தான் எடுக்க வேண்டும் என்பது 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட அரசாணை. அதை மாற்ற வேண்டுமென எஸ்.சி துறை செக்ரடரிக்கும் தாட்கோ எம்.டி-க்கும் (இவரும் எஸ்.சி அதிகாரிதான்) அழுத்தம் தரப்பட்டது. முடியாது என்று சொல்லியிருக்க வேண்டாமா? ஆனால் அப்படி மறுக்காமல் இருவரும் அரசாணையை மாற்ற சம்மதித்தனர். மாத்தியாச்சு. இதை எங்குபோய்ச் சொல்வது? அதனால் எஸ்.சி மக்களுக்கான நன்மைகளை செய்வதற்கு எதிரியாக இருப்பது எஸ்.சி அதிகாரிகளே.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நலத் திட்டங்கள் பலவற்றை கொண்டு வந்திருக்கிறது தமிழக அரசு. அதனை நடைமுறைப்படுத்த தயங்குகிற அதிகாரிகள் மீது தலைமைச் செயலரிடம் புகார் கூறலாமே?


எஸ்.சி விசயங்களை எஸ்.சி அதிகாரிகள் கையாள்வதற்கு முட்டுக்கட்டை போடுவதே தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், நிதித்துறைச் செயலர் ஆகிய மூவர்தான். வன்கொடுமை சட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறதா என கவனிக்கவேண்டிய பொறுப்பு எஸ்.சி துறை செக்ரடரிக்கு இருக்கு. ஆனால் காவல்துறையை கையாளும் உள்துறைச் செயலரின் இசைவுகளின்றி எஸ்.சி செக்ரடரியால் ஒன்றும் செய்ய முடியாது என்ற சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதே சூழல் நிதித் துறையாலும் கையாளப்படுகிறது. இதற்குக் காரணம் மேற்கண்ட 3 பதவிகளிலும் எஸ்.சி அல்லாத அதிகாரிகளே அமர்த்தப்பட்டு வருவதுதான். எந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியிடமும், “உன் டிபார்ட்மென்ட் வேலையை நீ பார்க்கக் கூடாது” என உத்தரவிட முடியாது. ஆனா ஆதிதிராவிடர் நலத்துறை செக்ரடரிக்கு மட்டும் அந்த உத்தரவு வரும். இட ஒதுக்கீடு, வன்கொடுமை சட்டம், துணைத் திட்டங்கள் அமலாக்கம் ஆகிய மூன்று விஷயங்களில் ஒரு துரும்பைக் கூட எஸ்.சி துறை செக்ரட்டிரியால் எடுத்துப்போட முடிவதில்லை.

எஸ்.சி அதிகாரிகள் அச்சம் கொள்கிற நிலைதான் நிர்வாகத்தில் இருக்கிறது. அம்பேத்கர் படத்தைத் தனது அறையில் வைத்துக்கொள்ளக்கூட இவர்களிடம் தயக்கம் இருக்கிறது. காரணம்... ஒன்று பயம், மற்றொன்று தனது சாதி வெளியில் தெரிந்துவிடுமே என்கிற நிலை.


தேர்தலில் ஆளும் கட்சிகள் தோற்பதற்கு பட்டியலின எம்.எல்.ஏக்கள் தான் காரணம் என்று சொல்லி வருகிறீர்களே?

எனது பார்வையில் ஆளும் கட்சிகள் தேர்தலில் தோற்பதற்கு எஸ்.சி – எம்.எல்.ஏக்களும் அதிகாரிகளும் தான் வழி வகுக்கிறார்கள். ஏனெனில் இவர்கள் இவர்களது மக்களுக்காக செய்ய வேண்டிய தேவைகளை செய்ய மறுக்கிறார்கள் அல்லது தடுக்கப்படுகிரார்கள்.

'இதில் எது உண்மையாக இருந்தாலும் ‘அரசுகள்தான் இதை செய்கின்றன’ என்று எங்கள் மக்கள் நம்புகிறார்கள். அது தேர்தலில் அப்படியே பிரதிபலிக்கிறது. பொதுவாக தேர்தல் என்றால் மற்ற சமூகத்தினரின் வாக்குகள் எல்லா கட்சிகளுக்கும் பிரிந்து விழும். ஆனால் எஸ்.சி வாக்குகள்தான் சாய்ந்தால் ஒரே பக்கம் சாயும். சாய்கிறது. மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்டவர்கள் 20 சதவீதம் தான்.

ஆனால் தேர்தலில் பதிவாகும் வாக்குகளில் 40 சதவீத வாக்குகள் தாழ்த்தப்பட்டவர்களுடையது. அதனால் அதன் தாக்கம் பெரியது. ஆகவே எஸ்.சி மக்களின் பணிகளை எஸ்.சி எம்.எல்.ஏ-க்களும் அதிகாரிகளும் செய்வதற்குரிய முறையான போக்குகளை ஆளும் கட்சிகள் எடுத்தாலே அந்தக் கட்சி மீண்டும் வெற்றி பெரும்.

-சந்திப்பு:
ஆர். இளையசெல்வன்

படங்கள்: ஸ்டாலின்.

நன்றி: நக்கீரன் இதழ் – செப்டம்பர் 07 – 2011 (Vol.24 No.41)

Saturday, September 24, 2011

நாடகக் கலை விழா 2011 - புரிசை

“புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றம்” மற்றும் “தென்னகப் பண்பாட்டு மையம், தஞ்சாவூர்” இணைந்து வழங்கும் கலைமாமணி கண்ணப்பத் தம்பிரான் நூற்றாண்டு விழா, எட்டாம் ஆண்டு நினைவு நாடகக் கலை விழா – 2011, கலைமாமணி கண்ணப்ப தம்பிரான் திருவுருவச் சிலை திறப்பு விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா மற்றும் மறைந்த தெருக்கூத்துக் கலைஞர்களின் உருவப்படத் திறப்பு விழா


நாள்: 01, 02, 03 - அக்டோபர் 2011
இடம்: கண்ணப்பத் தம்பிரான் அரங்கம், புரிசை கிராமம், செய்யாறு வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.

அன்புடையீர்,

வணக்கம், வருகிற 2011 அக்டோபர் 01, 02, 03 தேதிகளில் புரிசையில் நாடகக் கலைவிழா நாள்தோறும் இரவு 7.30 மணிக்குத் துவங்கி மறுநாள் காலை வரை சிறப்புடன் நடைபெறவுள்ளது.

பத்மபூஷன் டாக்டர் பத்மா சுப்பிரமணியம்தலைவர், நிர்த்யோதையா பரதர் – இளங்கோ ஆசிய கலாச்சார மையம்,

பத்மஸ்ரீ தோட்டாதரணி கலை இயக்குனர்,

திரு சதானந்த மேனன் - “ஸ்பேசாஸ்” சென்னை – கலை விமர்சகர், நிழற்படக் கலைஞர்,

திரு நா முத்துசாமி நிறுவனர், கூத்துப்பட்டறை சென்னை,

திரு ச தமிழ்ச்செல்வன் - தலைவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம்,

பேராசிரியர் செ. ரவீந்திரன் - மேனாள் துறைத் தலைவர், நவீன இந்திய மொழிகள் மற்றும் இலக்கியத் துறை, தில்லி பல்கலைக் கழகம்,

பேராசிரியர் மு ராமசாமி - நாடகத் துறை, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்,

யதார்த்தா கி போன்னேச்வரன்ஆசிரியர், வடக்கு வாசல், புது தில்லி,

கவிஞர் ஆரிசான் - செயலர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம், திருவண்ணாமலை மாவட்டம்,

R லட்சுமணன்ஊராட்சி மன்றத் தலைவர் புரிசை,

R. லோகநாதன் தாளாளர், செய்யாறு ஐ. டி. ஐ,

ஆகியோர் வருகைத் தர இசைந்துள்ளனர். இவ்விழாவிற்கு அனைவரும் வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு...

கலைமாமணி கண்ணப்ப சம்பந்தன் – தலைவர்.
கண்ணப்ப காசி – செயலர்.
[புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் பரம்பரைத் தெருக்கூத்து மன்றம்]

முதல் நாள் நிகழ்வு – 01-10-2011

இரவு 7.30 மணி: மங்கள இசை

இரவு 7.45 மணி: கலைமாமணி கண்ணப்ப தம்பிரான் திருவுருவச் சிலை திறப்பு, திறப்பாளர்: பத்மபூஷன் டாக்டர் பத்மா சுப்பிரமணியம்

இரவு 8.15 மணி: புரிசை கண்ணப்ப தம்பிரான் தெருக்கூத்துப் பள்ளி மாணவர்கள் வழங்கும் “வீர விளையாட்டு” பயிற்சியாளர்கள் திரு. 'சென்செய்' மா. சம்பத்குமார் & ஏழுமலை, புரிசை அரசு பள்ளி மாணவர்கள் வழங்கும் “கலை நிகழ்ச்சி” – பயிர்த்சியாளர்கள் செல்வி அகிலா மற்றும் செல்வி கௌரி

இரவு 8.45 மணி: “விழா சிறப்புரை” – திரு சதானந்த மேனன் “கலைமாமணி கண்ணப்ப தம்பிரான் வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்குதல்...
விருது பெறுபவர்: திரு முருகன் ராவ், மதுரை தோற்பாவை நிழற்கூத்துக் கலைஞர்,
விருது வழங்குபவர்: பேரா மு. ராமசாமி

காப்ரியல் கார்சியா மார்க்வெசின் “பெரிய சிறகுடைய ஒரு வயோதிக மனிதன்” தெருக்கூத்துப் பனுவல் வெளியீட்டு விழா
ஆசிரியர்: கலைமாமணி கண்ணப்ப தம்பிரான்
புத்தகம் வெளியிடுபவர்: பத்மஸ்ரீ தோட்டா தாரணி
புத்தகம் பெற்றுக் கொள்பவர்: பேரா செ. ரவீந்திரன், திரு போன்னேஷ்வரன்,

”மறைந்த தெருக்கூத்துக் கலைஞர்களின் திரு உருவத் திறப்பு”
திறப்பாளர் நா முத்துசாமி

இரவு 9.30 மணி: கலாக்ஷேற்ற சென்னை வழங்கும் கண்ணப்பர் குறவஞ்சி நாட்டிய நாடகம், இயக்கம் - ருக்மணி அருண்டேல், இசையமைப்பு பாபநாசம் சிவன்

இரவு 11.00 மணி: வைகறைக் கலைக்குழு, திருவண்ணாமலை வழங்கும் “கிராமிய இசை”

இரவு 11.30 மணி: “மூன்றாம் அரங்கு” சென்னை வழங்கும் பாதல் சர்க்காரின் “ஸ்பர்டகஸ்” – நாடகம், இயக்கம் பேரா மு ராமசாமி

அதிகாலை 1.30 மணி: புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றம் வழங்கும் “இந்திரஜித் தெருகூத்து”, ஆசிரியர்: கலைமாமணி கண்ணப்ப சம்பந்தன்

இரண்டாம் நாள் நிகழ்வு – 02-10-2011

பிற்பகல் 3.00 மணி: “இயற்கை விவசாயம்” – சிறப்பு சொற்பொழிவு: திருமிகு பாமயன் – செயலர், தாளாண்மை உழவர் இயக்கம். திரு: ராமசுப்ரமணியன் – சமன்வையா, சென்னை. திரு பாலாஜி சங்கர், தற்சார்பு இயக்கத்தின் “கத்திரிக்கா” குறும்படம் திரையிடல்.

இரவு 8.00 மணி: “துடும்பாட்டம்” – சேரன் துடும்பாட்டக்குழு, காரமடை, கோவை.

இரவு 8.30 மணி: “தமிழிசை” – செல்வி அகிலா & செல்வி கௌரி

இரவு 9.15 மணி: கலா அரங்கம், கேரளா வழங்கும் “கிரதம்” கதகளி நடன நிகழ்ச்சி, குழுத் தலைவர்: கலா அரங்கம் பிசு லால்

இரவு 11.15 மணி: “வாலி வதம்” – இராமாயண தோற்பாவை நிழற்க்கூத்து, நிகழ்த்துபவர்: முருகன் ராவ், மதுரை.

அதிகாலை 12.15 மணி: “கட்டியக்காரி”, சென்னை வழங்கும் “கருக்கு” எழுத்தாளர் பாமாவின் சிறுகதை நாடக வடிவம். “மொளகாப்போடி” – நாடகம், இயக்கம் – ஸ்ரீஜித் சுந்தரம்.

அதிகாலை 01.15 மணி: எலிமேடு வடிவேல் கலைமகள் நாடக சபா, கட்ட பெட்டி, மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் வழங்கும் “மதுரை வீரன்” – தெருக்கூத்து, ஆசிரியர்: ஹரிஹரன்.

மூன்றாம் நாள் நிகழ்வு – 03-10-2011

இரவு 8.00 மணி: ஆரணி “ராஜ நிலா” பிரகாஷ் வழங்கும் “மேற்கத்திய இசை நிகழ்ச்சி – டிரம்ஸ்”

இரவு 8.30 மணி: “கண்ணப்ப தம்பிரான் – ஆவணப்படம்” – இயக்கம்: பென்னேஸ்வரன், யதார்த்தா, புது தில்லி.

விழா சிறப்புரை: ச. தமிழ்செல்வன் - தலைவர் த.மு.எ.க.ச தமிழ்நாடு

இரவு 9.30 மணி: ஜனகரளியா, மக்கள் களரி, இலங்கை வழங்கும் “சரண்தாஸ்” – தமிழ் நாடகம், இயக்கம்: பராக்ரம நீரியல

இரவு 11.30 மணி: சப்தார் ஹஸ்மி கலைக்குழு, புதுச்சேரி வழங்கும் “கிராமிய இசை”

இரவு 12.00 மணி: பரீக்ஷா சென்னை வழங்கும், பாதல் சர்க்காரின் “முனியன்” – நாடகம், இயக்கம்: ஞாநி.

அதிகாலை 1.30 மணி: யாகசேனா நாடக மன்றம் செய்யாறு வழங்கும் “சைந்தவ பங்கம்” தெருக்கூத்து, ஆசிரியர்: விபீஷன நாயக்கர்.

இவ்விழாவிற்கு வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறோம்:
கலைமாமணி கண்ணப்ப சம்பந்தன் (தலைவர்), கண்ணப்ப காசி (செயலர்) மற்றும் புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றம் விழா குழுவினர்.

விழா குழுவினர்: திரு. சதானந்த மேனன், திரு பசுபதி, திரு பிரவீன், திரு லோகநாதன், திரு ஸ்ரீஜித் சுந்தரம், கவிஞர் ஆரிசான், திரு அஸ்வினி, திரு ஸ்ரீராம் நடராஜன்.

புரிசை – செய்யாறுக்கும் வந்தவாசிக்கும் இடையில் இருக்கிறது. சென்னையிலிருந்து 120 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

தொடர்புக்கு:
கண்ணப்ப காசி: 94447 32783, 2474 2743
கண்ணப்ப சம்பந்தன்: 94861 71771, 2412 2343
விழா இயக்கம்: மு பழனி – 95661 71624
தொழில்நுட்ப இயக்குனர்: வ. பாஸ்கரன் – 9444 481263

டிஸ்கி: கிராமியக் கலைகளில் விருப்பமுள்ள நண்பர்களுக்குத் தெரியப்படுத்தி விழா சிறப்பே நடைபெற உதவுங்கள். இதனை தொடர்பதிவாக எடுத்துக் கொண்டாலும் சரி... ஆர்வமுள்ளவர்களின் கவனத்திற்கு இந்த விழா சென்று சேர்ந்தால் சரி... நன்றி..

Friday, September 16, 2011

மாலதி மைத்ரி - கேணி சந்திப்பு

நவீன இலக்கிய வகைமைகளில் கவிதை இலக்கியம் பரவலாக வாசகர்களால் விரும்பப்படுகிறது. வாசக அனுபவத்தை மனதில் உகுத்தி கவிதை எழுதுவது சுலபமான விஷயம் என்றே எல்லோரும் நினைக்கிறார்கள். அதன்படி எழுதவும் செய்கிறார்கள். “தரமாக இருக்கிறதா?” என்பது வேறு விஷயம். சொல்ல நினைக்கும் மன கிலேசத்தை அல்லது உள்மன அனுபவத்தை பழகிய வார்த்தைகளில் இலகுவாக இறக்கி வைக்க நினைக்கின்றனர். அதற்கு கவிதை வடிவத்தை எளிதாக அடையாளம் காண்கின்றனர். மரபுக் கவிதை, நவீனம், பின்நவீனம், பின் காலனியத்துவம், ஹைக்கூ, புதுக்கவிதை என்று பல வடிவங்களில் பாய்ச்சலுடன் செயல்படுகிறார்கள். உரைநடையை உடைத்துப்போட்டு, அதையும் கவிதையென விவாதம் செய்யும் படைப்பாளிகளும் இருக்கத்தான் செய்தார்கள்.

சங்ககாலம் தொடங்கி எந்த படைப்பாக இருந்தாலும் ‘இயற்கை, இறை தத்துவம், பெண் - அவள் மீதான காதல், பிரிவு, கலவி’ இவைகள் தான் கருப்பொருளாக உருக்கொள்கின்றன. குறிப்பாக பெண்களை வானமாகவும், பூமியாகவும், நதியாகவும் மற்றுமுள்ள எல்லா இயற்கை வடிவங்களாகவும் போற்றிப் புகழ்ந்துள்ளனர். மயக்கப் போற்றுதலின் ஆணாதிக்க சட்டகத்திலிருந்து முரண்பட்டு நிற்கும் நேரெதிர் பெண்ணிய ஒடுக்கு முறைகளை நவீன இலக்கியங்கள் தான் வீச்சுடன் பேசியிருக்கின்றன.

மீனாட்சி, பூரணி, திரிசடை போன்ற பெண் படைப்பாளிகள் தொண்ணூறுளுக்கு முன்பே நவீன கவிதைப் படைப்புகளில் பங்களிப்பு செய்திருந்தாலும், தொண்ணூறுகளுக்கு பின் வந்த பெண் படைப்பாளிகளால் தான் பெண்ணிய சிந்தனைகள் வளரத் தொடங்கியது. பெண்ணியம் சார்ந்த கவிதைகள் குறைந்த அளவே வெளிவந்தாலும் பரவலான சலசலப்பிற்கும் கவனத்திற்கும் உள்ளாயின. அவைகள் பெண்ணிய உரிமையைப் பெற்றுத் தரும் அடையாளக் குரலாக ஒலித்தன. ஒலித்த கவிக்குயில்களில் மாலதி மைத்ரி குறிப்பிடத்தக்க முக்கியமான கவிஞர்.

புதுச்சேரியில் வாழும் இவர் 1968 -ஆம் ஆண்டு பிறந்தார். முதல் சிறுகதை “பிரயாணம்” 1988 ஆம் ஆண்டு கணையாழியில் வெளிவந்தது. இதுவரை சங்கராபரணி(2001), நீரின்றி அமையாது உலகு(2003), நீலி(2005) ஆகிய கவிதைத் தொகுப்புகளும், விடுதலையை எழுதுதல், தந்தையைக் கொல்வதெப்படி என்ற கட்டுரை தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. ‘சங்கராபரணி’ தொகுப்பின் மூலம் திருப்பூர் தமிழ்ச் சங்கம் விருதும், புதுவை அரசின் கம்பன் விருதும் பெற்றிருக்கிறார். தொடர்ந்து இலக்கியம், சமகால அரசியல் மற்றும் மனித உரிமைத் தளங்களில் இயங்கிக் கொண்டிருப்பவர். ‘அணங்கு’ எனும் பெண்ணிய இதழின் ஆசிரியராக முனைப்புடன் செயல்பட்டவர். ‘அமீபா’ என்ற சிற்றிதழை நடத்தியுள்ளார். கிரணம் வெளியீட்டகத்தின் பதிப்பாளர்.

ஒரு சமூக மற்றும் மனித உரிமை ஆர்வலராக இருந்து, அதிலிருந்து எப்படி ஓர் எழுத்தாளராக உருவானார் என்பதை மாதந்தோறும் நடக்கும் கேணி சந்திப்பு வாசகர் கூட்டத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில் “நானும் என் எழுத்தும்” என்ற தலைப்பில் பகிர்ந்துகொண்டார். எழுத்தாளராக தன்னை அடையாள படுத்திக் கொள்வதைவிட மனித உரிமை ஆர்வலராக முன்னிறுத்திக் கொள்வதையே முக்கியமாகக் கருதுகிறார். அந்த எண்ணமே எழுத்தை நோக்கி நகர்த்தியது என்கிறார்.

இவருடைய தாய் மனநலம் குன்றியவர் என்பதால் முழுமையான குழந்தைப் பருவத்தை அனுபவிக்க முடியாமல் புறக்கணிக்கப்பட்ட குழந்தையாகவே வளர்ந்திருக்கிறார். இவரைத் தொடர்ந்து 6 குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். தாயையும் சேர்த்து உடன் பிறந்த சகோதர சகோதிரிகளையும் பராமரிக்க வேண்டிய பெரும் பொறுப்பு இவர் தலையில் விழுந்திருக்கிறது. அவர்களை வளர்த்தெடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இதனால் “சுயத்தைப் பற்றியே சிந்திக்காமல் பிறரைப் பற்றியும் சிந்திக்க வேண்டிய நிர்பந்தம் சமூக விழிப்புணர்வை நோக்கி என்னை கொண்டு சென்றது”” என்றார்.

தம்பி, தங்கைகளை பள்ளிக்கு அனுப்புவது, உடல் நிலை சரியில்லாத பொழுது அவர்களை கவனத்துடன் பார்த்துக் கொள்வது மற்றும் பிரச்சனைகளை நேர்கொண்டு சமாளிக்க வேண்டிய சூழ்நிலைகளால் இவருடைய ஆளுமை வளர்ந்திருக்கிறது. அதன் மூலம் எந்த ஒரு விஷயத்தையும் முன்னெடுத்துச் செல்லும் துணிவையும் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் பெற்றிருக்கிறார். எனவே “புறத்தாக்குதல்கள் இல்லா நிழலில் குழந்தையை சுதந்திரமாக வளரவிடுங்கள். அவர்களே தங்களை ஆரோக்கியமாக வளர்த்துக் கொள்வார்கள்” என்கிறார். யாரையும் சாராது கட்டற்று சுதந்திரமாக வளர்ந்த தனது உடன்பிறப்புகளையே இதற்கு உதாரணமாகக் கூறுகிறார். புற வன்முறைகள் இல்லாமல் வளர்ந்ததால் மட்டுமே சாத்தியமானது. அப்படி ஏதேனும் நடந்திருந்தால் வேறுமாதிரி வளர்ந்திருப்போம் என்பதையும் ஒத்துக்கொள்கிறார்.

சோழர்களின் கட்டுமானத்தில் உருவாக்கப்பட்ட பெரிய கிராமம் வில்லியனூர். 11-ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட பெரிய கோவில் அங்கிருக்கிறது. கோவிலை சுற்றி அக்ரஹாரம், மேலவீதி, செட்டியார் தெரு, உடையார் தெரு, வன்னியத் தெரு, நாவிதர் தெரு என்று சாதிப் படி நிலைப்படி கடைசியில் சேரி அமைந்திருந்தாலும் வண்ணாரும் நாவிதர்களும் வசிக்கக் கூடிய தெரு இவர்களுடையது. இவருடைய சாதியினர் நேரடித் தீண்டாமைக்கு உள்ளாக்கப் படவில்லை என்றாலும் சாதிப்பெயர் சொல்லி அழைக்கும் முறை கிராம பழக்கத்தில் இருந்திருக்கிறது. அண்டை வீட்டார் சாதம் வாங்குவதற்கு மேல்குடி தெருவிற்கோ அல்லது வேலை செய்யும் வீட்டிற்கோ செல்லும்போது கூடவே இவரும் செல்வாராம். ‘படுகளம்’’ என்ற கவிதையில் அதனைக் காட்சிப் படுத்தியிருப்பார்.

தெரு வாசலில் வெளிச்ச
சட்டத்துக்கு அப்பால் நின்று
குரலெடுப்போம்
அம்மா அன்னம் போடுங்க
கூடப்படிக்கும் பொடிசுகள்
எட்டிப்பார்த்துவிட்டுச் செல்லும்

நம்முடைய பாட திட்டங்கள் தீண்டாமையை மறுக்கிறது. ஒரே பாரத தேசம், எல்லோரும் சமம்’ என்று பாடத் திட்டம் போதிக்கிறது. சட்டமும் அதை உறுதி செய்கிறது. கற்பிக்கும் விழுமியத்திலிருந்து முரண்பட்ட சமுதாயத்தைத் தானே காண நேரிடுகிறது. விளிம்புநிலை மனிதர்களின் மீது திணிக்கப்படும் வன்முறைகளும், ஒடுக்குமுறைகளும் கவிதை வரிகளில் பதிவாகிறது.

ஏகாலி வந்திருக்காம்மா…
அம்பட்டவன் வந்திருக்காம்மா…
தோட்டி வந்திருக்காம்மா…
சக்கிலி வந்திருக்காம்மா…
குடிப்புள்ள வந்திருக்காம்மா…

படியளப்பவர்கள் என்ன சொன்னாலும் பொறுத்துக்கொள்ள வேண்டிய இயலாமையை பின்வருமாறு சொல்லியிருப்பார்.

ஏண்டி உன் அப்பன், ஆத்தா வரலியா
ஒனக்கு நேரங்காலமே தெரியாதா
இப்பத்தான் சாப்பிடப்போறோம்
இருட்டுல நின்னு பூதங்காக்காதே
தோட்டத்துப்பக்கமா வந்து ஓரமா நில்லு

எட்டு வயதிலிருந்து இதுபோன்ற அனுபவங்கள் கிடைத்ததால் சாதியானது எவ்வளவு மூர்க்கமாக இந்த சமுதாயத்தின் மேல் தனது பிடியை கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறார். பொருளாதாரத்தில் உயர்ந்திருக்கும் மேல்சாதியிரனால் ஒடுக்கப்பட்டு ஒரமாக நின்ற நாட்களை நினைத்து மனித தர்மத்தை விசாரணைக்கும் உட்படுத்துகிறார். முடிவில் புனிதமானதாகக் கற்பிக்கப்படும் தர்மங்களை பழகிய விலங்குககளாக்கி பிச்சைப் பாத்திரத்தில் கிடத்துகிறார்.

உடலே பெரும் பிச்சைப் பாத்திரமாக
வாய்ப்பிளந்து நிற்கிறோம்
எல்லாக் காலங்களுக்குள்ளும்

எல்லாத் தர்மங்களும்
நமது பாத்திரத்தில்
இடப்படுகின்றன
அவை ஒரு பழகிய
விலங்கெனப் படுத்திருக்கிறது

தொலைதூர கிராமத்தில் இருந்ததால் பெண்கல்வி என்பதும் இவருடைய சமுதாயத்தில் கவனிக்கப் படவேண்டிய விஷயமாக இருக்கவில்லை. பெண் குழந்தைகளின் கல்விக்கு அவர்களுடைய தந்தைகளே முட்டுக் கட்டையாக இருந்திருக்கிறார்கள். கிராமத்தின் முதலியார் சமூகத்திலும் பெண்கள் ஒடுக்கப் பட்டிருக்கிறார்கள். வரதட்சனையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மன அழுத்தத்தாலும், மன நோயாலும் தவித்திருக்கிரார்கள். இதனால் முதிர் கன்னிகள், வயோதிகத் திருமணம், தற்கொலை போன்ற பெண்ணிய சிக்கல்கள் உருவாகியிருக்கிறது. “வீடுகளால் ஆன இனம்” என்ற கவிதையில் பெண்கள் எதிர்கொள்ளும் குடும்ப வன்முறை சார்ந்து பதிவு செய்திருப்பார்.

ஊரின் அனைத்து வீடுகளும்
நடப்பட்ட பெண்களென நிற்கின்றன
சாளரங்கள் கண்களாகவும் வாசல் யோனியாகவும்
யாரோ ஒரு ஆணிற்காக
ஆயுள் முழுவதும் காத்துக்கிடக்கின்றன
வயதுக்கேற்றபடித் தம் உறவுகளுக்காக

கொலைகாரன் திருடன்
குடிகாரன் துரோகி மோசடிக்காரன்
ஊழல் செய்பவன் ஏமாற்றுபவன் விபச்சாரன்
கொடுங்கோலன் காமவெறியன்
சாதிவெறியன் மதவெறியன் இனவெறியன்
இவர்கள் யாரையும் வீடு கைவிட்டுவிடுவதில்லை
அவரவருக்கான வீடு எப்போதும் இருக்கிறது

உடம்பு தொட்டிலாகவும் மார்பாகவும் இருந்து
உயிரும் உணவும் அளித்து
அரவணைத்துப் பாதுகாக்கப்படும் ஆண் பந்தங்கள்
ஆண்கள் வீட்டைப் புணர்வதன் மூலம்
பூமியை வளர்க்கிறார்கள்
பெண்களையல்ல
காலத்தை ஆளும் பெண்கள் வீடாவதில்லை

வன்முறை மற்றும் இதர காரணங்களால் ஒப்பாரி வைக்கும் பெண்கள் நிறைந்த சூழ்நிலையில் வாழ்ந்ததால், எல்லாவற்றையும் ரட்சிக்கும் ‘கடவுள்’ என்ற விழுமியத்தின் மீதான கேள்வி எழுந்திருக்கிறது. கடவுள் இருந்தால் “எளிய மக்களின் கஷ்டங்களை தீர்க்க வேண்டும் இல்லையா? கடுமையாக உழைக்கக் கூடிய இவர்களுக்கு ஏன் நிம்மதி கிடைப்பதில்லை? இவர்களுக்கு ஏன் முன்னேற்றம் வாய்க்கவில்லை?” போன்ற விசாரணைகளின் முடிவில் கடவுள் மறுப்பாளராக மாறியிருக்கிறார்.சுயநலமாக தானுண்டு தன் வேலையுண்டென வாழ்ந்தால் பிரச்சனை இல்லை. மனித அக்கறையும், சூழல் மீதான அக்கறையும் இருக்கும்போது “நாம் நாமாக இருக்க முடியாது””, மனித அக்கறை இருந்ததால் “நான் நானாக இருக்க முடியவில்லை”” என்கிறார்.

பொருளாதாரத்தால் நலிவுற்ற மற்றும் படிப்பறிவில்லாத பெண்களின் திருமணங்கள் விருப்பத்துக்கு மாறாகவே நடைபெறுகின்றன. ஆண்களின் தேவைகளுக்காக பலியாகும் பெண்களின் வலியை பெண்ணை வீடாக உருவகிக்கும் அதே கவிதையில் பின்வருமாறு சாடியிருப்பார்.

இந்திராகாந்தி எமர்ஜென்சி மற்றும் மொராஜி தேசாய் காலத்தில் ஏற்பட்ட பாண்டிச்சேரி இணைப்பு போராட்டத்தை ஒட்டியே அரசியலைத் தெரிந்து கொள்ளும் ஆவல் மாலதிக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆண்கள் எல்லோரும் செய்தித்தாள் வாசிக்கும் பொழுது “நாம் ஏன் படிக்கக் கூடாது?”” என்ற எண்ணம் எழவே மாலை நேரங்களில் டீக் கடையில் இருந்து தினத்தந்தியை கடன்பெற்று படிக்க ஆரம்பித்திருக்கிறார். ஈழத்தில் தீவிரமான அரசியல் போராட்டம் நடைபெற்ற 1983-ஆம் ஆண்டுகளில் சிறை உடைப்பு, குட்டிமணி, ஜெகன் கண் பறிப்பு” போன்ற சம்பவங்களைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற்ற பேரணிகளில் மாணவர் அணியில் பங்கெடுத்ததின் மூலம் தி.க மாணவர்களின் பரிட்சயமும் ஏற்பட்டிருக்கிறது.

வயதிற்கு வந்த பெண்களை வீட்டைவிட்டு வெளியில் அனுப்ப தயங்கும் காலத்தில் இலக்கிய சந்திப்பு, தர்ணா, போராட்டம், உண்டி குளுக்குதல்’ போன்ற காரணங்களுக்காக பல இடங்களுக்கும் சென்று வந்ததால் “பெண்களின் களம் என்ன? எப்படி ஒடுக்கப்படுகிறார்கள்? சுற்றிலும் என்ன நடக்கிறது?”” என்பதையெல்லாம் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறார். சிறுவயதிலேயே குடும்ப பொறுப்பைப் பார்த்துக் கொண்டதால், பெரியவர்களின் தடையில்லாமல் சுதந்திரமாக செயலாற்ற முடிந்திருக்கிறது.

வீதியிலேயே ஆண்களும் பெண்களுமாக சரிசமமாக விளையாடி, ஒரே தட்டில் சாப்பிட்டு, தெருவிலேயே உறங்கும் அளவிற்கு சுதந்திரமாக இருந்தாலும், குடும்ப அமைப்பில் பெண்கள் மீது வன்முறை திணிக்கப்பட்டுள்ளது என்கிறார். சராசரி குடும்பங்களைவிட அதிகப்படியான அடக்குமுறைகள் இயக்கத்தில் ஈடுபட்ட தோழர்களின் வீடுகளில் இருந்திருக்கிறது. எப்பொழுதாவது “தோழர், உங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்களேன். எல்லோரையும் பார்க்க வேண்டும்” என்று கேட்டால், “அதெல்லாம் சரிவராது” என்று மறுத்து விடுவார்களாம்.

அப்படியே சென்றாலும் அம்மா, அக்கா, தங்கை என வீட்டிலுள்ள எல்லா பெண்களும் ஆளுக்கொரு மூலையில் ஓடி ஒளிந்து கொள்வார்களாம். “என்ன தோழர்? மனித உரிமையைப் பற்றி பேசுகிறீர்கள், உங்கள் வீட்டிலேயே இப்படி இருக்கிறதே?” என்று கேட்டு அவர்களை கேலியும் செய்வாராம்.

இவர்களெல்லாம் மனித உரிமை பேசினாலும், மார்க்சியம் பேசினாலும், குடும்ப சூழல் என்று வரும்போது ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட ஆண்களுக்கான அதிகாரத்தை அனுபவிக்கவே செய்கிறார்கள். திராவிட கழகத் தோழர்கள் தான் இப்படி என்று நினைத்தால், புரட்சி பேசக்கூடிய மாக்ஸிய தோழர்களின் குடும்ப சூழலும் அதேபோலத் தான் இருந்திருக்கிறது. இதுபோன்ற அவதானிப்புகளால் இயக்கம் சார்ந்த கனவுகள் தகர்ந்து, அதிகார அரசியலை அடையாளம் கண்டிருக்கிறார். ஒரு கலாச்சார மாற்றத்தையோ, பெண்களுக்கான சுதந்திரத்தையோ, இடத்தையோ கொடுக்க முன்வராதவர்களை எதிர்த்து பெண்களே போராடவேண்டும் என்ற புரிதலுக்கு வந்திருக்கிறார். அந்த காலகட்டத்தில் தான் தீவிரமாக எழுதவும் ஆரம்பித்திருக்கிறார்.

தி முருகன் (குங்குமம் இணை ஆசிரியர்), நாகு, சரவணன், அருணன், தி சிவக்குமார், ‘எதிரு’ சிவக்குமார் போன்ற நண்பர்களுடன் சேர்ந்து கையெழுத்துப் பிரதி துவங்கி, அதில் சில ஆரம்ப கவிதைகளை எழுதியிருக்கிறார். அதன் பின் ‘எதிரு’ பத்திரிகையை எழுத்தாளர் பாவணன் துணைகொண்டு முன்னெடுத்திருக்கிறார்கள்.

இலக்கியம் சார்ந்து இயங்குவதைவிட மாக்ஸிய, ML கூடங்களில் பங்கெடுப்பது காவல் துறையில் பணியாற்றுவதால் மாலதியின் தந்தைக்கு அலுவலக நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. “இலக்கியக் கூட்டங்களுக்கு வேண்டுமானால் கலந்துகொள். போலீஸ்காரனின் மகளாக இருந்து கொண்டு தடைசெய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு கொள்ளாதே, தர்ணா, உண்டி குளுக்குதல், சோசியலிச புரட்சி போன்ற செயல்பாடுகளில் பங்கெடுக்காதே” என்று சொல்லி இருக்கிறார்.

“எதை செய்ய வேண்டும்? எதை செய்யக் கூடாது?” என்று எனக்குத் தெரியும். “என் சமந்தப்பட்ட விஷயங்களில் முடிவெடுக்கும் உரிமை உங்களுக்கு இல்லை” என்று மாலதியும் பதிலளித்திருக்கிறார்.

“அப்போ நீ கல்யாணம் செய்துக்கிட்டு போயிடு”

“இப்போ நான் கல்யாணம் செய்துக்கிற மாதிரி இல்லை”

“உன்கூட எவ்வளோ தோழர்கள் பழகுறாங்க, அவங்கள்ள ஒருத்தரை வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கோ…”

“இதென்ன வேடிக்கையா இருக்கு? என்னுடன் பேசுபவர்கள் எல்லோரும் என்னுடைய காதலராகிவிடுவாரா? எல்லாரையும் நான் கல்யாணம் செய்துக்க முடியுமா?” என்று மாலதி பதில் சொல்ல, “அப்போ வீட்டை விட்டு வெளிய போயிடு” என்று அவருடைய தந்தை சொல்லியிருக்கிறார்.

20 வயதில், வீட்டைவிட்டு வெளியேறி தனியாக வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. 11 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது ஏற்பட்ட தீவிபத்தால் பள்ளிக்கு செல்வதை பாதியில் நிறுத்தி இருக்கிறார். வங்கிக் கடன் பெற்று வீட்டைக் கட்டி முடிப்பதற்குள் மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டது. மீண்டும் வீட்டிலிருந்தே படிக்கலாம் என்றபோது அறிவியல் மற்றும் கணிதப் பாடத்தைத் தவிர்த்து, வரலாறு பாடத்தை எடுத்து தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

ஓய்வு நேரத்தில் நூலகம், தோழிகளின் வீடு, இலக்கியக் கூட்டம்” என்று பொதுவாக சுற்றிக் கொண்டே இருப்பாராம். நூலகத்திற்கு வரும் பெண்கள் தேவையான புத்தகத்தை எடுத்துக் கொண்டு சென்றுவிட இவர் மட்டும் அங்கேயே உட்கார்ந்து படிப்பாராம். வீட்டிற்கு எடுத்துக்கொண்டு வந்தால் அவருடைய அம்மா கிழித்து எரித்து விடுவார்களாம். எல்லா விதத்திலும் இலக்கிய வாசிப்புக்கான இடையூறுகளைக் கொடுப்பார்கள். இதிலிருந்து தப்பிப்பதற்காக பத்தாம் வகுப்பு விடுமுறையில் மூன்றுமாத தையற் பயிற்சியில் சேர்ந்திருக்கிறார். வீட்டிலிருந்து வெளியேறியதும் ஒரு வேலை கிடைக்க அதுவே காரணமாக இருந்திருக்கிறது. எக்ஸ்போர்ட் கம்பெனி, ஸ்வீட் ஸ்டால், ஜவுளிக் கடை போன்ற பல இடங்களில் 1988 –ஆம் ஆண்டு முதல் சொற்ப சம்பளத்திற்கு (200 ரூபாய், 300 ரூபாய்) வேலை செய்திருக்கிறார்.

கடுமையான உழைப்பின் மூலம் அனுபவம் பெற்று ஆரோவில் நூல் கத்தரிக்கும் பெண்ணாகச் சேர்ந்து Tailoring மற்றும் pattern making கற்றுக்கொண்டு லெதர் ஜாக்கெட் டிசைன் செய்யும் அளவிற்கு முன்னேறியிருக்கிறார். அவருடன் வேலை செய்தவர்கள் எல்லோரும் 40 முதல் 50 வருட அனுபவமும் கல்விச் சான்றிதழ் பெற்றவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு இணையாக உழைத்திருக்கிறார். இதனால் தன்னம்பிக்கை பெற்று முன்னேறினாலும் 6 வருடங்கள் எழுத்தில் கவனம் செலுத்த முடியாத சூழலில் வாழ்ந்திருக்கிறார்.

அவர் வேலை செய்த இடங்களிலேயே தோல் ஆடை தொழிற்சாலையில் வேலை செய்ததையே கடினமான பணியாகக் கூறுகிறார். “ஆயிரம் நபர்கள் வேலை செய்யக்கூடிய இடத்தில் சுகாதாரமே இருக்காது. பல வேதி மாற்றங்கள் தொழிற்சாலையில் நிகழும் என்பதால் காற்றில் துர்நாற்றம் பரவும். சாப்பிடவே முடியாது. அங்கு வேலை செய்பவர்களுக்கு எடைக்குறைவு, நரம்பு வியாதிகள், தோல் வியாதி, TB என ஏதாவது உடல் நலக் குறைவுகள் ஏற்படும். சில பெண்களுக்குக் கருச்சிதைவும் ஏற்படுவதுண்டு. இதையெல்லாம் விட கீழ் நிலைகளில் வேலை செய்யும் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப் படுவார்கள்” என்றார்.

CPM, CPI போன்ற தொழிலாளர் இயக்கங்கள் இருந்தாலும் இதையெல்லாம் கவனிக்காது. அவர்களுக்கு சந்தா கிடைத்தால் போதுமென்று இருந்துவிடுவார்கள். முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையிலான உறவு தவிர்த்து மார்க்ஸிய அரசியல்வாதிகள் உள்ளார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துவதில்லை. ஓர் அளவிற்கு மேல் இந்த சூழலில் வேலை செய்ய முடியாமல் தவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து மீண்டும் எழுத்த ஆரம்பித்திருக்கிறார்.

மூன்று பிரிவான எழுத்துகள் இளைஞர்களுக்கு ஒரு குழப்பத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. எழுத்து, மணிக்கொடி’ போன்ற சிற்றிதழ் காலங்களிலிருந்து எழுத்தானது இரண்டு வகைகளில் பார்க்கப்பட்டது. கலை, இலக்கியம்” என்று ‘எழுத்து’’ படைப்பாளிகள் உயிரை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இளைஞர்களுக்கான மாற்றத்தை நாங்கள் தான் கொடுக்கிறோம். எங்களுடையது தான் சிறந்த எழுத்து என்று ‘வானம்பாடி’கள்’ சொல்கிறார்கள். புரட்சி சார்ந்து பேசக்கூடிய மாக்ஸிய ஆளுமைகளும் செயல்படுகிறார்கள்.

“வாழ்வியலும், அரசியலும் பிரிக்கமுடியாதது. இவை இரண்டும் இல்லாமல் இயங்க முடியாது. நம் சார்ந்த சமூகம், அதிலுள்ள பிரச்சனை, மாற்றம், நசிவுகள், ஒடுக்கு முறைகள், பெண்களின் கனவுகள், அவர்களின் இருப்பு, உணர்வுத் தளங்கள்” ஆகியவையை தன்னுடைய எழுத்தில் கொண்டு வருவதாகவும் அரசியல் தவிர்த்து தன்னுடைய எழுத்தை வாசிக்க இயலாது என்றும் சொல்கிறார். சில எழுத்தாளர்களை அப்படி வாசிக்க முடியும். உள்மனப் பயணங்களை மட்டுமே பதிவு செய்திருப்பார்கள். அந்த வகைமையும் இருக்கிறது. அதுபோல எழுதுவதில் எனக்கு நம்பிக்கையில்லை. நம்முடைய அகமனப் பயணங்களை நாமே வைத்துக் கொள்ளலாமே வாசகர்களுக்கு ஏன் கொடுக்க வேண்டும். வாசிக்கும் படைப்பின் மூலம் வாழ்க்கை பரிட்சியமாக பொது விஷயத்தைத் தானே பேசவேண்டும். ஒரு வாழ்க்கை முறையை எழுத்தின் மூலம் கடத்த முடியும். அப்படி இல்லாத ஒன்று எழுத்தாக இருக்க முடியாது” என்பதை முழுமையாக நம்புவதாகச் சொல்கிறார்.

“மனித உரிமை மீறல்களையும், ஒழுங்கு முறைகளையும் படைப்பின் மூலம் பதிவு செய்ய முடியும். உணர்வுகளின் வடிகாலாகவும், ஆத்ம திருப்திக்காகவும், ஆளுமையை நிலைநாட்டவும் நான் எழுதவில்லை. வாழும் சூழலின் சமத்துவமின்மையை படைப்பின் மூலம் வெளிப்படுத்தவே செயல்படுகிறேன். பின் நவீனத்துவம், பின் காலனியத்துவம், தலித்தியம், பெண்ணியம் என்று எது பேசினாலும் அரசியல் நிலைப்பாடு வெளிப்பட வேண்டும். அரசியல் சட்டம் சொல்லியபடி வாழ்வது இடதாக இருப்பின், அவற்றை மீறி வாழ்வது வலதாக இருக்கிறது. மனித உரிமைகள் மீறாமல் நிலைநாட்டப்பட வேண்டுமெனில் சட்டப்படி வாழ்ந்தாலே போதும். யார் மேலும் வன்முறை செலுத்தாமல் மனித நேயத்துடன் வாழ்ந்தாலே போதும். பேராசை இதெல்லாவற்றையும் மீறச் செய்கிறது. பணம் இருந்தால் எல்லாவற்றையும் விலைகொடுத்து வாங்கிவிடலாம் என்று நினைக்கிறோம். அதே சூத்திரத்தின் படி அரசும் நம்மை விலை கொடுத்து வாங்க நினைக்கிறது. முகம் தெரிந்த மனிதர்களையே ஏமாற்றும் சமூகமாக மாறிவிட்டது. இப்போதெல்லாம் சமூகக் கூட்டுணர்வே இல்லாமல் போய்விட்டது. அரசு அலுவலர்கள் கையூட்டு பெறுவதை நிறுத்தினாலே இதெல்லாம் சரியாகிவிடும்.

நல்லவர்களை ஏமாளிகளாகவும், பணம் சம்பாதிக்க எதையும் செய்யத் துணிபவர்களை பெரிய மனிதர்களாகவும் பார்க்கப் பழகிவிட்டோம். இந்த நிலை 25 வருடங்களில் உருவாக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையை ஏன் உருவாக்கி வைத்திருக்கிறோம்? இதை ஏன் இலக்கியம் பேசவில்லை? இந்த கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன் பதில் சொல்லுங்கள்.

தமிழகத்தை ஆண்ட திராவிடக் கட்சிகள் 50 வருடங்களில் தவறான கலாச்சாரத்தையும் தவறான உணர்வுகளையும் நமக்குக் கொடுத்துவிட்டார்கள். சினிமா, பிற எழுத்து ஊடகங்கள் மூலம் தவறாக நம்மை வளர்த்தெடுத்து விட்டார்கள். ஊடகங்களில் ஆளுமைகளாகக் காட்டப்படுபவர்களின் பின்னால் ஒரு கூட்டம் செல்லும் அளவிற்குத் தயார் செய்துவிட்டார்கள். அவர்களே நம்மை ஆளும் அளவிற்கும் கொண்டுசென்றுவிட்டோம். தவறு செய்யும் அனைவரையும் கொண்டாடக் கூடிய மனோபாவத்திற்கு ஊடக அரசியல் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. இந்த அரசியலை எழுத்தில் கொண்டுவர வேண்டும்” என்பதுதான் தன்னுடைய விருப்பமெனக் குறிப்பிடுகிறார்.

“எங்கோ நடக்கும் விஷயங்களைக் கதை செய்வதைவிட நம்மைச் சுற்றிய விஷயங்களை இலக்கியமாக்க வேண்டும். சுய வரலாறாகவும் எழுதலாம். அதை பிராமண இலக்கியம் செய்திருக்கிறது. அதற்கடுத்த ஆதிக்க சாதிகள் இதைத் தொடாமலேயே தப்பித்து விட்டார்கள். அம்மா வந்தாள், மோகமுள், மரப்பசு” போன்ற படைப்புகளின் மூலம் தி ஜானகிராமன் இதைத் தொடங்கி வைத்தார். குடும்பத்திலுள்ள ஜோடனைகளை கட்டுடைத்து எழுதினர். ’குழந்தைகள், பெண்கள், ஆண்கள்”’ மூலம் சுரா குடும்ப வன்முறையை உடைத்தெழுதினார். படைப்பின் மூலம் பிராமணர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லித் தருகிறார்கள். பிராமண இலக்கியங்களைத் தொடர்ந்து வந்த திராவிட இலக்கியங்கள் ஏன் இதைத் தொடவில்லை? பிராமணர்களைத் திட்டித் திட்டியே இவர்கள் தப்பித்துவிட்டார்கள். சுய குறைகளைத் தொட்டு புனிதத்தை இழந்துவிடக் கூடாது என்பதில் முழிப்புடன் இருந்தார்கள். தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அடுத்தவர்கள் மீது பழிபோட்டு தப்பித்துக் கொள்வதில் குறியாக இருந்தார்கள். என்றாலும் தனித் தனியாக அரசியல், பெண்ணியம், ஒடுக்கு முறைகள் என்று பேசுவார்கள்.

தன்னுடைய ஜாதியில், தன்னுடைய குடும்பத்தில், தன்னுடைய சுற்றத்தில் என்ன நடக்கிறது என்பதை படைப்பாளிகள் பேச முன் வரவேண்டும். ஜாதி அரசியலை கட்டுடைக்க வேண்டியது மிக முக்கியமான விஷயம். ஜாதிய அரசியலை விமர்சனம் செய்யும் எழுத்தாளன் தான் நிலைத்து நிற்க முடியும். ஒரு ஜாதியைச் சேர்ந்த எழுத்தாளன் விருது பெற்றால், அந்த சாதியைச் சேர்ந்த சங்கம் கூட்டம் கூட்டி விழா எடுக்கிறது. இதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

ஆணோ, பெண்ணோ ஜாதி உறவுகளை முற்றிலும் முறித்துக் கொண்டு வெளிவருவதுதான் படைப்பாளிக்கு இருக்க வேண்டிய முக்கியத் தகுதி என்று நினைக்கிறேன். ஜாதியையும், குடும்பத்தையும் சுமந்துகொண்டு வரும் மனப்பான்மை படைப்பாளிகளுக்கு இருப்பதைக் காட்டிலும் படுபாதகச் செயல் வேறொன்றும் இல்லை. இந்த துரோகத்தை தமிழ் இலக்கியவாதிகள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். தயவு செய்து இந்த எழுத்துகளை நீங்கள் அடையாளம் காண வேண்டும். அவற்றிற்கு எதிரான விமர்சனங்களை தயவு தாட்சண்யமின்றி முகம் பார்க்காமல், எவ்வளவு பெரிய எழுத்தாளராக இருந்தாலும் முன்வைக்க வாசகர்களும் விமர்சகர்களும் முன்வர வேண்டும்.

ஏனெனில் இந்த ஆட்கள் தான் தமிழ் தேசியம் பேசிப்பேசி ஒரு லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள். ஜாதி அரசியலைத் தாண்டி இவர்கள் எதுவும் செய்யவில்லை. நம்முடைய மனசாட்சி விழிப்புடன் இருக்க வேண்டும். வாசகராக இருந்தாலும், எழுத்தாளராக இருந்தாலும் இதிலிருந்து நாம் தொடங்க வேண்டும்” என்று விரும்புவதாக உரையை நிறைவு செய்தார். அதன் பின் நீண்ட கலந்துரையாடளுடன் சந்திப்பு நிறைவு பெற்றது.

“பெண் உடல் தீட்டு என்று மதம் சொல்கின்றது. சடங்குகள் மூலமாக தீட்டை எப்படிப் போக்கலாம் என்பதையும் மதமே சொல்கிறது. ஆண்களுக்கு ஏன் இதுபோன்ற தீட்டுகள் இருப்பதில்லை. பெண்கள் இதற்கு எதிராக செயல் படவேண்டும். இந்த வரையறைகளை மீறி பெண் தன் உடலைக் கொண்டாட வேண்டும்” என மாலதி மைத்ரி கூறுகின்றார். இதற்கு அவரிடம் கவிதையும் இருக்கிறது. இதோ அவருடைய ‘விஸ்வரூபம்’.

ஏதோ ஒரு பருவ மாற்றத்தில்
எனது அங்கங்கள் ஒவ்வொன்றும்
மிருகமாகவும் பறவையாகவும் மாறி
என்னைவிட்டு விலகிச் செல்லத்தொடங்கின

அவையே திரும்பி வந்து சேர்வதும்
பல சமயங்களில் தொலைந்த ஆட்டுக்குட்டியை
தேடிச்சென்று அழைத்து வருவதென நிகழ்வதும்
பிறகு யாத்திரைபோலப் புறப்பட்டுச்
சென்றுவிடுவதும் வழக்கமாகி
எல்லாக் கால வெளியிலும் அலையத்துவங்கின

நீண்ட காலமாகிவிட்டது
பல திக்குகளின் நீர் நிலங்களை
நோக்கிச் சென்றிருக்கும்
எது எத்திசையில் உலவுகிறது
என யூகித்தறிய முடியவில்லை
திரும்பி வந்துவிடும்போது
வெவ்வேறு நிலத்தின் வாசனையோடும்
குரல்களோடும் என் உடலெங்கும் மேய்ந்து
என் அடையாளத்தைக் கலைத்து அடுக்குகின்றன

யோனி ஒரு பட்டாம்பூச்சியாக
மலைகளில் அலைவதைக் கண்டதாக
காட்டில் விறகு பொறுக்கச் சென்ற
பெண்கள் வந்து கூறக்கேட்டேன்
******************

சந்திப்பு நடந்த நாள்: ஜூன் 12, மாலை 4.30 மணி.
இடம்: ஞாநி இல்லம். கேகே நகர், சென்னை.