Monday, October 31, 2011

புனர்ஜனி – ஆவணப்படம்

உரசிச் செல்லும் பனிக்காற்று, தவழ்ந்தோடும் குளிர் நதிகள், பச்சைப் பசேல் மலைப் படுகை, மின்னல் போல் நீரூற்று என இயற்கை எழில் கொஞ்சுவதால் “கடவுளின் சொந்த நாடு” என்று கேரளா வர்ணிக்கப்படுகிறது. உலகில் பார்க்க வேண்டிய 50 சுற்றுலா இடங்களின் பட்டியலில் கேரளாவிற்கும் முக்கிய இடமுண்டு. இதனால் வெளிநாடுகளிலிருந்தும், அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட இந்தியாவிலிருந்தும் விடுமுறை நாட்களைக் கழிக்க ஏராளமானோர் கேரளாவிற்கு வந்து செல்கின்றனர். உண்மையில் தென்னிந்தியாவின் இதர மாநிலங்களைக் காட்டிலும் கேரளாவின் தட்பவெட்பம் வசிப்பதற்கேற்ற சூழலாக இருக்கலாம். ஆனால் ஐம்பதாண்டு கால இயற்கை வள புள்ளியியல் விவரங்களை ஆராய்ந்தால் இன்றைய கேரளாவின் உண்மை நிலவரம் தெரியவரும். குளிர்பானக் கம்பெனியின் நச்சுக் கழிவுகள் பாதித்த பிளாட்சிமடா நிலச் சீரழிவு மற்றும் அளவிற்கு அதிகமான நிலத்தடி நீர் சுரண்டல் ஆகியவை தேசிய அளவில் எதிர் விளைவுகளை ஏற்படுத்திய பிரச்சினைகளில் மிக முக்கியமானவை. அதைப் போன்றதொரு பிரச்சினைதான் 1980-களின் மத்தியில் துவங்கிய ‘கொடுங்கரப்பள்ளம்’ நீராதாரப் பிரச்சினை. பெருக்கெடுத்து ஓடிய நதி, கிராம மக்களின் அபரிமிதமான இயற்கை சுரண்டலால் 1990–களின் இறுதியில் முற்றிலும் உலர்ந்து வறண்டிருக்கிறது. அதனால் பல வாழ்க்கைப் பிரச்சினைகளைச் சந்தித்த கிராம மக்களின் கூட்டு முயற்சியால், ஏறக்குறைய இறந்துவிட்ட நதிக்கு 25 ஆண்டுகள் கழித்து உயிர் கொடுத்திருக்கிறார்கள். அதைத்தான் மது எரவன்கரா ‘புனர்ஜனி’ என்ற ஆவணப்படமாக எடுத்திருக்கிறார். ‘புனர்’ என்றால் மறுபடியும், ‘ஜனி’ என்றால் பிறப்பு – ஆகவே இறந்த நதியின் மீள்பிறப்பு ஆவணமே புனர்ஜனி .


(Punarjjani – The River).

The rivers are our brothers;
they quench our thirst.
The rivers carry our canoes,
and feed our children.
You must remember,
and teach your children,
That the river are our
brothers and yours,
and you must henceforth give the rivers
the kindness you would give any brother.

– என்று அமெரிக்க ஜனாதிபதிக்கு 1854-ல் சிகப்பிந்தியர்களின் தலைவர் எழுதிய கடிதத்தின் வரிகளிலிருந்தே ஆவணப்படம் துவங்குகிறது.

நீலகிரி, கோயம்புத்தூர், மல்லபுரம் மற்றும் பாலக்காடு ஆகிய பகுதிகளை எல்லைகளாகக் கொண்டுள்ள ‘அட்டப்பாடி’ தமிழக-கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. குறும்பர், முடுகர், இருளர் போன்ற பழங்குடியினர் இங்கு காலங்காலமாக வசித்து வருகின்றனர். காட்டிலுள்ள வளங்களுக்காகவும், விவசாய நிலங்களை அபகரிக்கவும் திருவிதாங்கூர் மற்றும் கோயம்புத்தூரில் இருந்து 1940 முதல் 1980 வரையுள்ள காலகட்டத்தில் தொல்குடியினர் அல்லாதோர் அதிகமாக குடியேறி மலைக்காடுகளை அபகரித்திருக்கின்றனர். பவானி, குந்தி, சிறுவாணி, வரகர், கொடுங்கரப்பள்ளம் ஆகிய முக்கிய நதிகள் இங்கு ஓடி செழிக்கின்றன. பவானி தமிழகத்தில் தவழ்ந்து காவேரியில் சங்கமிக்கிறது. முக்கியமாக, நெல், தேங்காய், பாக்கு, மரச்சீனி, வாழை, இஞ்சி, மஞ்சள், தேயிலை, ஏலக்காய், லவங்கம் போன்றவை தென்மேற்கு மலைச் சரிவுகளில் பயிரிடப்படுகின்றன. வறட்சிப் பகுதிகளான கிழக்கு மலைச்சரிவில் ராகி, நிலக்கடலை, சூரியகாந்தி, கரும்பு, பருத்தி போன்றவை பயிரிடப்படுகின்றன. அடர்ந்த காடுகளில் மருத்துவ குணம் நிரம்பிய அரிய வகை மருத்துவ மூலிகைகள் கூட ஏராளமாகக் கிடைக்கின்றன.

காடுகளை அழிப்பது, மரங்களை வெட்டுவது, கட்டுப்பாடில்லாத நில ஆக்கிரமிப்பு, மண் அரிப்பு போன்ற காரணங்களால் பசுமையுடன் காட்சியளித்த மலைப் பிரதேசம் எண்பதுகளின் மத்தியில் பாறைகளாக காட்சியளிக்க ஆரம்பித்திருக்கிறது. மழை நீர் சேமிப்பிலும் தடை ஏற்பட்டு நிலத்தடி நீர் மட்டமும் குறையத் துவங்கியிருக்கின்றது. மக்களின் பேராசை இயற்கைச் சுழற்சியில் சிக்கலை ஏற்படுத்தியதால் நீரூற்றும் இல்லாமல் போக, ‘கொடுங்கரப்பள்ளம்’ உலர்ந்து வற்றியிருக்கிறது. பெரு நதிகளான பவானி மற்றும் குந்தியின் மூன்று முக்கிய கிளை நதிகளில் கொடுங்கரப்பள்ளமும் ஒன்று. நதியின் இறப்பால் ஆற்றின் நீர்வரத்து குறையவே அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் விவசாயமும், தன்னிச்சையான விளைச்சலும் பாதித்திருக்கிறது. இதனால் இயற்கை வளங்களை நம்பியிருந்த தொல்குடியினர் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். சிலர் வறண்ட பகுதிகளிலிருந்த களிமண்ணால் செங்கல் சூலை அமைத்து பிழைத்திருக்கின்றனர்.

(கடைசியில் இருப்பவர் கவிஞர் சுகதகுமாரி)

கவிஞரும், சுற்றுப்புற ஆர்வலருமான சுகதகுமாரி இந்த நெருக்கடிகளை தனது நாட்குறிப்பில் எழுதியிருக்கிறார். பசுமையான நாட்களையும், வறட்சியான நாட்களையும் நேரில் கண்டவர் என்பதால் படைப்பாளிக்குரிய அக்கறையுடன் இதனை பதிவு செய்திருக்கிறார். 1980-களின் மத்தியில் எழுதிய சில பகுதிகளை வாசித்துக்காட்டும் அதே நேரத்தில் திரையிலும் மலையாள எழுத்துக்கள் பின்னணியில் ஓடுகின்றன. பழங்குடி வயோதிகர்களின் நேர்முகமும் கவிஞரின் வரிகளுக்கு வலு சேர்க்கிறது.

ஒருகட்டத்தில் நீர் பற்றாக்குறையால் கிராம மக்கள் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். ஆயிரமாயிரம் வருடங்களாக இயற்கையுடன் இசைந்து வாழ்ந்தவர்களில் சிலர், பிழைப்பு தேடி அருகிலுள்ள நகரங்களுக்கு இடம்பெயர நேர்கிறது. காலூன்றிய நிலத்தை விட்டு வெளியில் செல்ல மனமில்லாத கிராமவாசிகள் AHADS (Attapady Hills Area Development Society) என்ற வளர்ச்சித் திட்ட சுய உதவிக் குழுமத்தில் ஒன்றிணைந்து வற்றிய நதிக்கு மீண்டும் உயிர் கொடுக்க முயற்சி செய்கிறார்கள். இதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கேரள அரசு ஜப்பானிய நிதி நிறுவனத்துடன் (Japan Bank for International Cooperation - JBIC) இணைந்து 258.31 கோடி ரூபாய் அளவிற்கான திட்டங்களை தொலைநோக்குப் பார்வையில் செயல்படுத்தி இருக்கிறது. அதற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்ட அரசு அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்கள். கிராம மக்களும் முனைப்புடன் செயல்படவே நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆலோசனைகளை வழங்கி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி வறண்ட ஊற்றுக்கு உயிர் கொடுக்கிறார்கள்.

மூன்று பகுதிகளாகப் பிரித்து, திட்டம் வகுத்து, பல குழுக்களாக இவர்கள் உழைத்திருக்கிறார்கள். முதலில் மலைச் சரிவுகளில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்திருக்கிறார்கள். விலங்குகளிடமிருந்து மரக்கன்றுகளைப் பாதுகாக்கவும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். இரண்டாவதாக மலைகளில் கிடைக்கும் சிறுசிறு கற்பாறைகளைக் கொண்டே மதகுகளை ஏற்படுத்தி மண் அரிப்பையும் குறைத்திருக்கிறார்கள். கற்கள் நகர்ந்துவிடாமல் இருக்க கம்பி வலைகளையும் பொருத்தியிருக்கிறார்கள். அந்த மதகுகளின் மூலமே தேவையான இடங்களில் பள்ளம் வெட்டி மழைநீர் சேமித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயரும்படி செய்திருக்கிறார்கள். மூன்றாவதாக தாழ்ந்த நிலப்பகுதிகளில் ஆங்காங்கு மலைக்காடுகளில் பாதுகாப்பான குழிகளைத் தோண்டி, பலநூறு பள்ளங்களை ஏற்படுத்தி, மழைக்காலங்களில் உருண்டோடும் தண்ணீரை வீணடிக்காமல் குளங்கள் ஏற்படுத்தி நீரினை சேமித்திருக்கிரார்கள்.1996 முதல் செயல்படுத்தப்பட்ட திட்டம் 2008-களின் இறுதியில்தான் பலன் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. 2008-ஆம் ஆண்டிலிருந்து வருடத்தின் 10 மாதங்கள் கொடுங்கரைப்பள்ளம் காலநிலைக்கு ஏற்றார்போல வழிந்தோடுகிறது. செயலூக்கத்துடன் கூடிய சுய உதவிக் குழுவின் பயிற்சி திட்டமே இதையெல்லாம் சாத்தியப்படுத்தியிருக்கிறது. இதனை மக்களும் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
மேலும் காய்கறித் தோட்டம், மண்வள மேம்பாட்டுத் திட்டம், ஆட்டு மந்தைக் குடில் அமைப்பு, காற்றாலை மின்சாரத் திட்டம் போன்ற எல்லா திட்டங்களுமே சுய உதவிக் குழுவின் மூலமே பெரும்பாலும் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு திட்டத்தின் சரியான வளர்ச்சியிலும் பெண்களின் பங்கு கணிசமானது. அதிலும் பழங்குடியின பெண்களே அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டிருக்கிறார்கள்.

கேரளாவின் காற்றாலை மின்சார விசைகள் அட்டப்பாடியில்தான் அதிகமாக இருக்கிறதாம். அதற்காக ஏராளமான மரங்களை வெட்டி, காட்டினை அழித்து இதனை சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள். கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உயிரைக்கொடுத்து, இறந்த நதிக்கு 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜீவன் கொடுத்திருக்கிறார்கள். காற்றாலைகள் முக்கியமா? இயற்கை வளங்கள் முக்கியமா? என்பதை அரசு இயந்திரம் உணர வேண்டும். ஆவணப் படத்தின் இறுதியில் ஓடும் வரிகள் அதனை அழுத்தமாக உணர்த்துகிறது.

When the last tree is fellled
When the last fish is floating dead
only then you will realize its value
you will then realize that
there is no value for the money
you value now the most
(Tribal chief, Papa new Guinea)

கடந்த மாதம் ‘மது எரவான்கரா’ சென்னை வந்திருந்ததால் தேசிய நாட்டுப்புறவியல் உதவி மையத்தில் (NFSC - Chennai) சிறப்புத் திரையிடல் ஏற்பாடாகியிருந்தது. திரையிடலின் முடிவில் படம் உருவான விதம் பற்றி மது பகிர்ந்துகொண்டார். “மாத்ருபூமி மலையாள இதழின் இணைப்பு மலரில் கொடுங்கரப்பள்ளம் பற்றி நோபல் ஜோஸ் எழுதிய கட்டுரையே இந்த ஆவணப்படத்தை எடுப்பதற்கு உந்துதலாக இருந்தது. முழுப்படத்தையும் முடிக்க 15 மாதங்கள் எடுத்துக் கொண்டது. பல்வேறு கால நிலைகளில் அங்கு சென்று உண்மை நிலவரங்களை உள்வாங்கி, பல்வேறு கிராம மக்கள் மற்றும் அலுவலர்களுடன் உரையாடி, அதிலிருந்து தேவையான விஷயங்களை படம் பிடித்தோம். கடைசி மூன்று மாதங்கள் மட்டுமே படப்பிடிப்பை வைத்துக் கொண்டோம்.” என்று பகிர்ந்துகொண்டார். தயாரிப்புச் செலவுகளை வி.ஆர். ரவி ஏற்றுக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான சன்னி ஜோசப் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இசை, படத்தொகுப்பு, கலை என்று ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். இந்தப்படம் இத்தாலி, ஜப்பான், ஜேர்மனி, கனடா மற்றும் அமெரிக்க உலகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட தேர்வாகி இருக்கிறது.

(முற்றும்)

NFSC – சிறப்புத் திரையிடல் - ஆகஸ்ட் 18, 2011
புனர்ஜனி / ஆவணப்படம்/ ஆங்கிலம்/ 30 நிமிடம் / 2011

இடம்: தேசிய நாட்டுப்புற உதவி மையம்,
#505, காவேரி காம்ப்லஸ், 96 எம்.ஜி சாலை,
நுங்கம்பாக்கம், சென்னை - 600 034


*********************************************************
மது ஏறவங்கரா பற்றி...

மது ஆலப்புழாவிலுள்ள எரவன்கராவில் பிறந்தவர். ஆவணப்பட இயக்குனர், எழுத்தாளர், சினிமா விமர்சகர், சினிமா திறனாய்வாளர், உலக திரைப்பட விழாக்களில் ஜூரி என பன்முகத் தன்மையைக் கொண்டவர்.

மும்பை - இந்தியா (2003), யமகடா – ஜப்பான் (2005). பிரிஸ்பேன்– ஆஸ்திரேலியா (2006), இஸ்தான்புல் – துருக்கி (2008), டொராண்டோ– கனடா (2010) ஆகிய இடங்களில் நடந்த உலகத் திரைப்பட விழாக்களில் ஜூரியாகப் பங்காற்றியிருக்கிறார். சிறுகதை, பயணக் கட்டுரை, சினிமா திறனாய்வு, மொழிபெயர்ப்பு, சினிமா வரலாறு என்று எழுத்து சார்ந்து இயங்கக் கூடியவர்.

ஸ்நானகதங்கள் (சிறுகதை), மலையாள சினிமாயும் சாஹித்யவும் (ஆய்வு), அலிவின்டே மந்தரங்கள் (சினிமா திறனாய்வு), அமர்த்தியா சென்னின் சம்ஸ்காரம், யுக்தி, சமூஹம், சலபயாத்ரகள் (பயணம்), மலையாள சினிமாயிலே அவிஷ்மரநீயர் (சினிமா வரலாறு), நிஷாதம் (வசனம்), பர்லிவயலுகளே உலகுன்ன காட்டு – சமகலீனா லோக சினிமா (சினிமா திறனாய்வு) ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார். சில புத்தகங்களுக்காக தேசிய மற்றும் மாநில அரசின் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

நங்கூரம் என்ற மலையாள சினிமாவில் வேலை செய்திருக்கிறார். “Plastics, The Milky Way, The Story of PDDP, Crystals, Bricks, Kalarippayattu, Forensic Science, The Films of Adoor Gopalakrishnan, Asmara- The City of Dreams ( Eritrea ), Victims of Silence ( Eritrea ), Nehna I-V ( Eritrea ), Punarakhyanam , The Magic Wheel ( Bahrain ) and Punarjjani” போன்ற ஆவணப் படங்களை எடுத்திருக்கிறார். நிஷாதம் மற்றும் பக்கள்மழா என்ற ஆவணப் புனைவையும் முயற்சி செய்திருக்கிறார்.

1999 ஆம் வருடத்தின் தேசிய விருதையும், ஜனாதிபதியின் தங்கப் பதக்கத்தையும் பெற்றவர். ‘மலையாள சினிமாயும் சாஹித்யவும்’ என்ற சினிமா புத்தகத்திற்கான அதே வருடத்தின் மாநில விருதையும் பெற்றிருக்கிறார். 2000 & 2002 –ற்கான சினிமா விமர்சகர் விருதையும் 2003-ல் கேரள அரசின் சினிமா விமர்சகர் விருதையும், 2007–ஆம் ஆண்டிற்கான கேரள அரசு தொலைகாட்சி விருதையும் பெற்றிருக்கிறார். இலக்கியம் மற்றும் சினிமா சார்ந்து தீவிரமாக இயங்குவதால் இந்திய கலாச்சாரத் துறையால் சிறந்த படைப்பாளியாக கெளரவிக்கப் பட்டிருக்கிறார். FIPRESCI – இந்தியக் கிளையின் செயற்குழு உறுப்பினர்.

அவருடைய படைப்புகளுக்காக தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி:

மது எரவன்கரா,
எரவன்கரா அஞ்சல்,
மவேளிக்கரா, கேரளா
பின்கோடு- 690 108,
இந்தியா.

மின்னஞ்சல்: eravankara@gmail.com

*********************************************************

மேலதிக தகவலுக்கு

1. http://indianfolklore.org/home.htm
2. http://ahads.org
நன்றி - சொல்வனம் இணைய இதழ்.

No comments:

Post a Comment