Wednesday, October 26, 2011

ஏக்கத்தின் குரல்

பதினைந்து வருடங்களுக்கு முன் சண்டிகரில் ஒரு நாடகம் நடக்கிறது. ஒத்திகைக்குப் பின் நாடகக்காரி விரதம் இருப்பது போல் தனித்திருக்கிறாள். பிராணாயாமம் அவளை விழித்திருக்கச் செய்கிறது. ரசிகர்களின் பசிக்காக மேடையேறியவள் சபையினரை வணங்குகிறாள். மீண்டும் வணங்குகிறாள். மறுபடியும் மறுபடியும் வணங்குகிறாள். நாட்டியம், கிராமியக் கலை, சிலம்பாட்டம் உள்ளிட்ட சில பாரம்பரிய கலை வடிவங்களின் குரு வணக்கத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, வார்த்தைகளற்ற பாவங்களை உடலசைவில் உண்டாக்கி, அதையே படிமமாகக் கொண்டு – ஒரு பெண் தனக்குள் இருக்கும் அக்னியை (சக்தியை) வெளிக்கொணர்வதாக மேடையில் நாடகம் அரங்கேறுகிறது. கூத்துப்பட்டறையில் தன்னை புடம் போட்டுக்கொண்ட கலைராணியின் ‘பெண்’ என்ற இந்நாடகம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெறுகிறது.

அரங்கின் மூலையில் கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்திருந்த, கோவாவைச் சோந்த ஹாட்மேன் டிசூசா என்ற நாடக இயக்குநர் கலைராணியின் திறமையால் கவரப்பட்டு தன்னுடன் ஒரு நாடகம் செய்ய அழைக்கிறார். அதற்காக உகாண்டா கவிஞர் Okot p’Bitek’ எழுதிய ‘Song of Lowino’ என்ற கவிதையை தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். கணவனை இழந்த பழங்குடிப் பெண் ஒருத்தி தன் மணவாழ்க்கையில் அனுபவிக்க நேர்ந்த ஒடுக்குமுறை அவஸ்தைகளையே இக்கவிதை பேசுகிறது. ஜாஸ் இசையின் பின்னணியில் ஆங்கிலத்தில் போடப்பட்ட இந்நாடகம் பின்னர் மு. நடேஷ் என்பவரால் தமிழாக்கம் செய்யப்பட்டு, இந்திய வாத்தியக் கருவிகளின் இசைப் பின்னணியில், 1994 ம் ஆண்டிலிருந்து பல மேடைகளில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. கூத்துப்பட்டறை நவராத்திரி விழாவிற்காக நீண்டநாள் கழித்து மீண்டுமொரு முறை கடந்த வியாழனன்று அரங்கேற்றப்பட்டது.

செம்மண் விளக்கின் மஞ்சள் வெளிச்சத்தில் கொலுவில் வைக்கப்பட்ட பொம்மைகள் பிரகாசிக்கின்றன. பொம்மையின் பல வண்ணத் திட்டுக்கள் இருண்ட அரங்கில் தெறிக்கின்றன. அமைதியை குலைக்கும் வகையில் பறையொலி முழக்கம் அதிர்வை உண்டாக்குகிறது. பறையொலி தேய்ந்து பூனையின் கத்தல் லேசாக ஒலிக்கிறது. விம்மிக்கொண்டே தன்னுடைய கணவன் இறந்ததாக நினைத்து அழத் தொடங்குகிறாள் பழங்குடிப் பெண் லெவினோ. ஆப்ரிக்க தொல்குடி அச்சோலி மரபில் வாழும் இவளுக்கும், மேற்கத்திய மோகத்தில் திளைக்கும் தன் கணவன் ஒகோல் என்பவனுக்குமான முரண் எண்ணங்களே நாடகத்தின் அடிநாதம். கலாசாரத்தையும், சகமனித உணர்வுகளையும் மதிக்கத் தெரியாத தன்னுடைய கணவன் இறந்ததாக நினைத்து அழுகிறாள்.

ஒகோல் இறந்தான். ஊர் தலைவனின் மகன், எருதின் மைந்தன், அளவில்லாத வன்முறைகளால் கொல்லப்பட்டான். ஓர் அசைவில்லாத குட்டை போல பிணமாகக் கிடக்கிறான்’ என்ற ஒப்பாரியுடன் பிதற்றலை ஆரம்பிக்கிறாள். சொந்த கலாசாரத்தை மறந்து மேற்கத்திய மோகத்தில் வாழும் அவனைச் சாடுகிறாள். பாழடைந்த கட்டடத்தில் விட்டுவிட்டுப் போன பயன்படுத்த முடியாத பொருளைப் போலவும், காட்டு விலங்கினைப் போலவும் தன்னை பாவித்த கணவனை கொச்சையான அசைவுகளின் மூலம் நையாண்டி செய்கிறாள். தன்னுடைய முன்னோர்களின் மரபுசார் கலாசாரத்தை அன்றாட வாழ்வில் பின்பற்றியதை நினைத்து கர்வமும் கொள்கிறாள். தன்னுடைய இயலாமையை நினைத்து கொலுவிற்கு மத்தியில் நின்று லெவினோ மூர்க்கமாக அழுகிறாள். சாம்பலை எடுத்துத் தூவிக்கொண்டே ருத்ரதாண்டவம் ஆடுகிறாள். அப்பொழுது பழைய நினைவுகளின் பொருட்டு தலையிலும், பாசத்தின் வெளிப்பாடாக மார்பிலும், விரக வேதனையில் பெண்ணுறுப்பிலும் அடித்துக்கொண்டு அழுகிறாள்.

நவீன உலகுடன் தொடர்பற்று வாழும் லெவினோவை முற்றிலும் வெறுக்கிறான் ஒகோல். அவனுடைய நெருக்கத்தையும், அந்தரங்க உணர்வுகளை நேசமுடன் பகிர்ந்து கொள்ளவும் லெவினோ விரும்புகிறாள். அது முடியாமல் போகவே தனிமையில் பேசிக்கொள்கிறாள். உலகத்தின் ஆண்கள் தங்களை நேசிக்கும் பெண்களின் உணர்வுகளை ஆற்றுப்படுத்துவதே இல்லை. அதற்கு பெரும்பாலான ஆண்கள் முயல்வதுகூட இல்லை. உலகமெல்லாம் இந்த முரண் பொருந்திப் போவதால் காலனியாதிக்க கலாசார நகலெடுப்பின் குறியீடாகவே ஓகோலை கருத வேண்டியிருக்கிறது. தேவையான இடத்தில் பறவைகளின் சப்தங்களையும், விலங்குகளின் கேவல்களையும் கச்சிதமாகப் பயன்படுத்தி நாடகத்தின் உணர்ச்சி வெளிப்பாட்டை வேறு தளத்திற்கு நகர்த்திச் செல்கிறார் கலைராணி.

சூரியனின் மறைவிற்காக காத்திருக்கிறாள் லெவினோ. “அவன் வருவானா? அடுத்து சாவதற்குமுன் இதே இடத்திற்கு நேரத்தில் வந்து சேர்வானா?” என்று தனிமையில் ஏங்குகிறாள். ‘பிறப்புறுப்பை பித்தநீர் எரிக்கிறது. அவயங்கள் காற்றில் அலைக்கழிக்கப் படும் அதே நேரத்தில் அவர்களது கொட்டைகள் வகுப்பறையில் நசுக்கப்பட்டன, பெரிய பக்கங்களுக்கு இடையே’ என்று, ஏட்டுப்படிப்பின் மேற்கத்திய மோகத்தில் தறிகெட்டுத் திரியும் அறிவுஜீவி ஆண்களை விரையடிக்கப்பட்ட வண்டி மாடுகளாகச் சித்தரிக்கிறாள். சிலர் கோவில் மாடுகளாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மையே. மேற்கின் சூரியன் சீக்கிரமே அஸ்தமிக்கும். அவளுடைய கணவன் ஒகோலும் வந்து சேர்வான். இரவின் முடிவில் உதயமாகும் விடிகாலைச் சூரியனை பூனை விழுங்கி சப்தமிடும் அதே வேலையில் லெவினோவின் குரல் மீண்டும் ஒலிக்கத் துவங்கும்.

சாங் ஆஃப் லெவினோ–வைத் தொடர்ந்து நந்திகிராமில் 1993ம் ஆண்டு முதன்முறையாக பரிசோதனை முயற்சியில் அரங்கேற்றப்பட்ட கலைராணியின் மற்றொரு நாடகமான ‘வருகலாமோ அய்யா…’ நிகழ்த்தப்பட்டது.
ஓர் ஊர்வலத்தில் தேரானது நகரும்பொழுது நாதஸ்வரத்தில் மல்லாரி ராகம் வாசிப்பார்கள். அதற்குமுன் பறை மேளம் கொட்டப்பட வேண்டுமென்பது ஐதீகம். அப்பொழுதுதான் தேர் புறப்படும். இதனை நா.முத்துசாமி தான் எழுதிய ‘England’ என்ற நாடகத்தில் பயன்படுத்தி இருப்பார்.

‘மல்லாரியில் நகராத தேருக்கு
பறை கொட்டும் வேண்டும்’

இதனை ஆரம்ப வரிகளாக வைத்து, நந்தனார் சரித்திரக் கீர்த்தனையின் பல்லவி மற்றும் அனுபல்லவியைத் தவிர்த்துவிட்டு சரணத்தை மட்டுமே முழுவதுமாக எடுத்துக்கொண்டு, நா.முத்துசாமியின் வரிகளுக்கு அடுத்து வருமாறு அமைந்த கலைராணியின் தனிநடிப்பு பல பரிசோதனை முயற்சிகளை உள்ளடக்கியதாக இருந்தது. பக்தியை லட்சியமாகக் கொண்ட நந்தனார் தில்லை நடராஜனை தரிசிக்க பேராவல் கொள்ளும் பகுதிகளை பரதத்தின் அபிநய சாயலிலும், ஒடுக்கப்படும் பெண்களின் குரலாக வெளிப்படும் கலைராணியின் உள்ளார்த்த சுயபரிசோதனைப் பகுதிகளை நவீனத்தின் சாயலிலும் அமைத்து திறம்படச் செய்திருந்தார். ஓர் ஆணின் குரலில் நந்தனாராகவும், அதேவேளையில் ஒடுக்கப்படும் பெண்களின் குரலாகவும் ஒலிப்பதால் இருபாலினரையும் அடையாளப்படுத்தும் விதமாக உடையலங்காரத்தில் கவனம் செலுத்தியிருந்தார்.

கோபலகிருஷ்ண பாரதியார் தான் இயற்றிய நந்தனார் சரித்திர பாடல்களில் தில்லை நடராஜனின் அருங்குணத்தையும், நந்தனாரது எளிமையான திட பக்தியையும் புகழ்ந்துப் பாடியுள்ளார். நந்தன் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர் என்பதால் கோவிலுக்குள் நுழைய தடைவிதிக்கிறார்கள். எனவே சந்நிதிக்குள் நுழைந்து மூலவரை தரிசிக்க முடியாமல் தவிக்கிறார்.

திட பக்தியால் ஈசனின் மனம் குளிர்ந்து, நந்தனின் கனவில் தோன்றி “நான் உன்னைப் பொன்னம்பலத்திற்கு வரச்செய்து தரிசனம் தருகிறேன்” என்று உறுதிமொழி கொடுக்கிறார். நந்தனுக்கு சந்தேகம் வலுக்கிறது. “இவ்வளவு நாள் தன்னை கீழ் சாதியன் என்று கோவிலுக்குள் நுழையவிடாத சமூகம் இதற்கு எப்படி சம்மதிப்பார்கள்?” என்ற பயம் அவருக்கு ஏற்படுகிறது. தன்னுடைய கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
எனவே ‘உன் அருகில் நான் வருகலாமோ ஐயா’ என்று சிவனை நோக்கி கசிந்துருகிப் பாடுகிறார். புண்ணியம் செய்யாததால் இந்தப் பூவுலகில் கீழ்சாதியில் பிறந்து, சந்நிதிக்கு வெளியே நின்று உன் தரிசனம் கிடைக்காமல் தவிக்கிறேன்’ என்று ஏங்குகிறார்.

“பூமியில் புலையனாய்ப் பிறந்தேனே
புண்ணியம் செய்யாமல் இருந்தேனே
சாமி உன் சந்நிதி வந்தேனே
பவசாகரம் தன்னையும் கடந்தேனே
கரை கடந்தேனே
சரணம் அடைந்தேனே
தில்லை வரதா பரிதாபமும் பாவமும் தீரவே (வருகலாமோ ஐயா…)”

நந்தனார் தில்லை அம்பல நடராஜனை வெளியில் தேடுகிறார். சிவம்தான் அவருக்கு லட்சியம். ஆருத்ரா நன்னாளில் நடராஜரை நேரில் தரிசித்து அவருடன் இரண்டறக் கலக்க வேண்டும் என்பதே அவருடைய குறிக்கோள். ஆகவே பக்தி வழியில் மென்மையாக வெளிப்படுகிறார். நந்தனார் சிவத்தில் கலந்தபோது கலைராணி ரசிகர்களுடன் கலந்ததை நான் உணர்ந்தேன். ஒரு நடிகையாகவும் ஒரு ரசிகனாகவும் இது ஓர் உச்சம். கலையே தெய்வம் என்ற அகம் வெளிப்படும் தருணம். சாமானியர்களின் லட்சியம் இருப்பைச் சார்ந்தது. இருப்பின் தேவைகளைச் சார்ந்தது. வாழ்வின் இருப்பில் கோவம் வெறுப்பு, காதல், தோழமை என்று எல்லாமே கலந்திருக்கும். அதற்கேற்பவே நம் குரல் அமையும்.
இரண்டு வெவ்வேறு முரண் தன்மைக்கேற்ப குரலையும், உடல் மொழியையும் சரியாக வெளிக்கொணர்வது மிகக் கடினமான செயல். கலைராணிக்கு அது சர்வ சாதாரணமாக வாய்க்கிறது.

இயக்கி நடித்தவர்: நடிகை கலைராணி
அரங்க ஒளியமைப்பு: ஆவணப்பட இயக்குனர் R.V.ரமணி
இசை: கருணா பிரசாத், மணிகண்டன், சரத் மற்றும் பரத்
அரங்க வடிவமைப்பு: கலைச் செல்வன்.
பின்னரங்க உதவி: பிரபு.

பயன்பட்ட தளங்கள்:
1. http://www.youtube.com/watch?v=mrvk-aFVjUw
2. http://kalairaani.weebly.com

(நன்றி - தமிழ் பேப்பர் - இணைய இதழ்)

2 comments:

  1. அருமையான பதிவு.
    மனசை நெகிழ வைக்கிறது.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நன்றி தோழர். தொடர்பில் இருப்போம்...

    :-)

    ReplyDelete