நவீன இலக்கிய வகைமைகளில் கவிதை இலக்கியம் பரவலாக வாசகர்களால் விரும்பப்படுகிறது. வாசக அனுபவத்தை மனதில் உகுத்தி கவிதை எழுதுவது சுலபமான விஷயம் என்றே எல்லோரும் நினைக்கிறார்கள். அதன்படி எழுதவும் செய்கிறார்கள். “தரமாக இருக்கிறதா?” என்பது வேறு விஷயம். சொல்ல நினைக்கும் மன கிலேசத்தை அல்லது உள்மன அனுபவத்தை பழகிய வார்த்தைகளில் இலகுவாக இறக்கி வைக்க நினைக்கின்றனர். அதற்கு கவிதை வடிவத்தை எளிதாக அடையாளம் காண்கின்றனர். மரபுக் கவிதை, நவீனம், பின்நவீனம், பின் காலனியத்துவம், ஹைக்கூ, புதுக்கவிதை என்று பல வடிவங்களில் பாய்ச்சலுடன் செயல்படுகிறார்கள். உரைநடையை உடைத்துப்போட்டு, அதையும் கவிதையென விவாதம் செய்யும் படைப்பாளிகளும் இருக்கத்தான் செய்தார்கள்.
சங்ககாலம் தொடங்கி எந்த படைப்பாக இருந்தாலும் ‘இயற்கை, இறை தத்துவம், பெண் - அவள் மீதான காதல், பிரிவு, கலவி’ இவைகள் தான் கருப்பொருளாக உருக்கொள்கின்றன. குறிப்பாக பெண்களை வானமாகவும், பூமியாகவும், நதியாகவும் மற்றுமுள்ள எல்லா இயற்கை வடிவங்களாகவும் போற்றிப் புகழ்ந்துள்ளனர். மயக்கப் போற்றுதலின் ஆணாதிக்க சட்டகத்திலிருந்து முரண்பட்டு நிற்கும் நேரெதிர் பெண்ணிய ஒடுக்கு முறைகளை நவீன இலக்கியங்கள் தான் வீச்சுடன் பேசியிருக்கின்றன.
மீனாட்சி, பூரணி, திரிசடை போன்ற பெண் படைப்பாளிகள் தொண்ணூறுளுக்கு முன்பே நவீன கவிதைப் படைப்புகளில் பங்களிப்பு செய்திருந்தாலும், தொண்ணூறுகளுக்கு பின் வந்த பெண் படைப்பாளிகளால் தான் பெண்ணிய சிந்தனைகள் வளரத் தொடங்கியது. பெண்ணியம் சார்ந்த கவிதைகள் குறைந்த அளவே வெளிவந்தாலும் பரவலான சலசலப்பிற்கும் கவனத்திற்கும் உள்ளாயின. அவைகள் பெண்ணிய உரிமையைப் பெற்றுத் தரும் அடையாளக் குரலாக ஒலித்தன. ஒலித்த கவிக்குயில்களில் மாலதி மைத்ரி குறிப்பிடத்தக்க முக்கியமான கவிஞர்.
புதுச்சேரியில் வாழும் இவர் 1968 -ஆம் ஆண்டு பிறந்தார். முதல் சிறுகதை “பிரயாணம்” 1988 ஆம் ஆண்டு கணையாழியில் வெளிவந்தது. இதுவரை சங்கராபரணி(2001), நீரின்றி அமையாது உலகு(2003), நீலி(2005) ஆகிய கவிதைத் தொகுப்புகளும், விடுதலையை எழுதுதல், தந்தையைக் கொல்வதெப்படி என்ற கட்டுரை தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. ‘சங்கராபரணி’ தொகுப்பின் மூலம் திருப்பூர் தமிழ்ச் சங்கம் விருதும், புதுவை அரசின் கம்பன் விருதும் பெற்றிருக்கிறார். தொடர்ந்து இலக்கியம், சமகால அரசியல் மற்றும் மனித உரிமைத் தளங்களில் இயங்கிக் கொண்டிருப்பவர். ‘அணங்கு’ எனும் பெண்ணிய இதழின் ஆசிரியராக முனைப்புடன் செயல்பட்டவர். ‘அமீபா’ என்ற சிற்றிதழை நடத்தியுள்ளார். கிரணம் வெளியீட்டகத்தின் பதிப்பாளர்.
ஒரு சமூக மற்றும் மனித உரிமை ஆர்வலராக இருந்து, அதிலிருந்து எப்படி ஓர் எழுத்தாளராக உருவானார் என்பதை மாதந்தோறும் நடக்கும் கேணி சந்திப்பு வாசகர் கூட்டத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில் “நானும் என் எழுத்தும்” என்ற தலைப்பில் பகிர்ந்துகொண்டார். எழுத்தாளராக தன்னை அடையாள படுத்திக் கொள்வதைவிட மனித உரிமை ஆர்வலராக முன்னிறுத்திக் கொள்வதையே முக்கியமாகக் கருதுகிறார். அந்த எண்ணமே எழுத்தை நோக்கி நகர்த்தியது என்கிறார்.
இவருடைய தாய் மனநலம் குன்றியவர் என்பதால் முழுமையான குழந்தைப் பருவத்தை அனுபவிக்க முடியாமல் புறக்கணிக்கப்பட்ட குழந்தையாகவே வளர்ந்திருக்கிறார். இவரைத் தொடர்ந்து 6 குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். தாயையும் சேர்த்து உடன் பிறந்த சகோதர சகோதிரிகளையும் பராமரிக்க வேண்டிய பெரும் பொறுப்பு இவர் தலையில் விழுந்திருக்கிறது. அவர்களை வளர்த்தெடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இதனால் “சுயத்தைப் பற்றியே சிந்திக்காமல் பிறரைப் பற்றியும் சிந்திக்க வேண்டிய நிர்பந்தம் சமூக விழிப்புணர்வை நோக்கி என்னை கொண்டு சென்றது”” என்றார்.
தம்பி, தங்கைகளை பள்ளிக்கு அனுப்புவது, உடல் நிலை சரியில்லாத பொழுது அவர்களை கவனத்துடன் பார்த்துக் கொள்வது மற்றும் பிரச்சனைகளை நேர்கொண்டு சமாளிக்க வேண்டிய சூழ்நிலைகளால் இவருடைய ஆளுமை வளர்ந்திருக்கிறது. அதன் மூலம் எந்த ஒரு விஷயத்தையும் முன்னெடுத்துச் செல்லும் துணிவையும் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் பெற்றிருக்கிறார். எனவே “புறத்தாக்குதல்கள் இல்லா நிழலில் குழந்தையை சுதந்திரமாக வளரவிடுங்கள். அவர்களே தங்களை ஆரோக்கியமாக வளர்த்துக் கொள்வார்கள்” என்கிறார். யாரையும் சாராது கட்டற்று சுதந்திரமாக வளர்ந்த தனது உடன்பிறப்புகளையே இதற்கு உதாரணமாகக் கூறுகிறார். புற வன்முறைகள் இல்லாமல் வளர்ந்ததால் மட்டுமே சாத்தியமானது. அப்படி ஏதேனும் நடந்திருந்தால் வேறுமாதிரி வளர்ந்திருப்போம் என்பதையும் ஒத்துக்கொள்கிறார்.
சோழர்களின் கட்டுமானத்தில் உருவாக்கப்பட்ட பெரிய கிராமம் வில்லியனூர். 11-ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட பெரிய கோவில் அங்கிருக்கிறது. கோவிலை சுற்றி அக்ரஹாரம், மேலவீதி, செட்டியார் தெரு, உடையார் தெரு, வன்னியத் தெரு, நாவிதர் தெரு என்று சாதிப் படி நிலைப்படி கடைசியில் சேரி அமைந்திருந்தாலும் வண்ணாரும் நாவிதர்களும் வசிக்கக் கூடிய தெரு இவர்களுடையது. இவருடைய சாதியினர் நேரடித் தீண்டாமைக்கு உள்ளாக்கப் படவில்லை என்றாலும் சாதிப்பெயர் சொல்லி அழைக்கும் முறை கிராம பழக்கத்தில் இருந்திருக்கிறது. அண்டை வீட்டார் சாதம் வாங்குவதற்கு மேல்குடி தெருவிற்கோ அல்லது வேலை செய்யும் வீட்டிற்கோ செல்லும்போது கூடவே இவரும் செல்வாராம். ‘படுகளம்’’ என்ற கவிதையில் அதனைக் காட்சிப் படுத்தியிருப்பார்.
தெரு வாசலில் வெளிச்ச
சட்டத்துக்கு அப்பால் நின்று
குரலெடுப்போம்
அம்மா அன்னம் போடுங்க
கூடப்படிக்கும் பொடிசுகள்
எட்டிப்பார்த்துவிட்டுச் செல்லும்
நம்முடைய பாட திட்டங்கள் தீண்டாமையை மறுக்கிறது. ஒரே பாரத தேசம், எல்லோரும் சமம்’ என்று பாடத் திட்டம் போதிக்கிறது. சட்டமும் அதை உறுதி செய்கிறது. கற்பிக்கும் விழுமியத்திலிருந்து முரண்பட்ட சமுதாயத்தைத் தானே காண நேரிடுகிறது. விளிம்புநிலை மனிதர்களின் மீது திணிக்கப்படும் வன்முறைகளும், ஒடுக்குமுறைகளும் கவிதை வரிகளில் பதிவாகிறது.
ஏகாலி வந்திருக்காம்மா…
அம்பட்டவன் வந்திருக்காம்மா…
தோட்டி வந்திருக்காம்மா…
சக்கிலி வந்திருக்காம்மா…
குடிப்புள்ள வந்திருக்காம்மா…
படியளப்பவர்கள் என்ன சொன்னாலும் பொறுத்துக்கொள்ள வேண்டிய இயலாமையை பின்வருமாறு சொல்லியிருப்பார்.
ஏண்டி உன் அப்பன், ஆத்தா வரலியா
ஒனக்கு நேரங்காலமே தெரியாதா
இப்பத்தான் சாப்பிடப்போறோம்
இருட்டுல நின்னு பூதங்காக்காதே
தோட்டத்துப்பக்கமா வந்து ஓரமா நில்லு
எட்டு வயதிலிருந்து இதுபோன்ற அனுபவங்கள் கிடைத்ததால் சாதியானது எவ்வளவு மூர்க்கமாக இந்த சமுதாயத்தின் மேல் தனது பிடியை கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறார். பொருளாதாரத்தில் உயர்ந்திருக்கும் மேல்சாதியிரனால் ஒடுக்கப்பட்டு ஒரமாக நின்ற நாட்களை நினைத்து மனித தர்மத்தை விசாரணைக்கும் உட்படுத்துகிறார். முடிவில் புனிதமானதாகக் கற்பிக்கப்படும் தர்மங்களை பழகிய விலங்குககளாக்கி பிச்சைப் பாத்திரத்தில் கிடத்துகிறார்.
உடலே பெரும் பிச்சைப் பாத்திரமாக
வாய்ப்பிளந்து நிற்கிறோம்
எல்லாக் காலங்களுக்குள்ளும்
எல்லாத் தர்மங்களும்
நமது பாத்திரத்தில்
இடப்படுகின்றன
அவை ஒரு பழகிய
விலங்கெனப் படுத்திருக்கிறது
தொலைதூர கிராமத்தில் இருந்ததால் பெண்கல்வி என்பதும் இவருடைய சமுதாயத்தில் கவனிக்கப் படவேண்டிய விஷயமாக இருக்கவில்லை. பெண் குழந்தைகளின் கல்விக்கு அவர்களுடைய தந்தைகளே முட்டுக் கட்டையாக இருந்திருக்கிறார்கள். கிராமத்தின் முதலியார் சமூகத்திலும் பெண்கள் ஒடுக்கப் பட்டிருக்கிறார்கள். வரதட்சனையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மன அழுத்தத்தாலும், மன நோயாலும் தவித்திருக்கிரார்கள். இதனால் முதிர் கன்னிகள், வயோதிகத் திருமணம், தற்கொலை போன்ற பெண்ணிய சிக்கல்கள் உருவாகியிருக்கிறது. “வீடுகளால் ஆன இனம்” என்ற கவிதையில் பெண்கள் எதிர்கொள்ளும் குடும்ப வன்முறை சார்ந்து பதிவு செய்திருப்பார்.
ஊரின் அனைத்து வீடுகளும்
நடப்பட்ட பெண்களென நிற்கின்றன
சாளரங்கள் கண்களாகவும் வாசல் யோனியாகவும்
யாரோ ஒரு ஆணிற்காக
ஆயுள் முழுவதும் காத்துக்கிடக்கின்றன
வயதுக்கேற்றபடித் தம் உறவுகளுக்காக
கொலைகாரன் திருடன்
குடிகாரன் துரோகி மோசடிக்காரன்
ஊழல் செய்பவன் ஏமாற்றுபவன் விபச்சாரன்
கொடுங்கோலன் காமவெறியன்
சாதிவெறியன் மதவெறியன் இனவெறியன்
இவர்கள் யாரையும் வீடு கைவிட்டுவிடுவதில்லை
அவரவருக்கான வீடு எப்போதும் இருக்கிறது
உடம்பு தொட்டிலாகவும் மார்பாகவும் இருந்து
உயிரும் உணவும் அளித்து
அரவணைத்துப் பாதுகாக்கப்படும் ஆண் பந்தங்கள்
ஆண்கள் வீட்டைப் புணர்வதன் மூலம்
பூமியை வளர்க்கிறார்கள்
பெண்களையல்ல
காலத்தை ஆளும் பெண்கள் வீடாவதில்லை
வன்முறை மற்றும் இதர காரணங்களால் ஒப்பாரி வைக்கும் பெண்கள் நிறைந்த சூழ்நிலையில் வாழ்ந்ததால், எல்லாவற்றையும் ரட்சிக்கும் ‘கடவுள்’ என்ற விழுமியத்தின் மீதான கேள்வி எழுந்திருக்கிறது. கடவுள் இருந்தால் “எளிய மக்களின் கஷ்டங்களை தீர்க்க வேண்டும் இல்லையா? கடுமையாக உழைக்கக் கூடிய இவர்களுக்கு ஏன் நிம்மதி கிடைப்பதில்லை? இவர்களுக்கு ஏன் முன்னேற்றம் வாய்க்கவில்லை?” போன்ற விசாரணைகளின் முடிவில் கடவுள் மறுப்பாளராக மாறியிருக்கிறார்.சுயநலமாக தானுண்டு தன் வேலையுண்டென வாழ்ந்தால் பிரச்சனை இல்லை. மனித அக்கறையும், சூழல் மீதான அக்கறையும் இருக்கும்போது “நாம் நாமாக இருக்க முடியாது””, மனித அக்கறை இருந்ததால் “நான் நானாக இருக்க முடியவில்லை”” என்கிறார்.
பொருளாதாரத்தால் நலிவுற்ற மற்றும் படிப்பறிவில்லாத பெண்களின் திருமணங்கள் விருப்பத்துக்கு மாறாகவே நடைபெறுகின்றன. ஆண்களின் தேவைகளுக்காக பலியாகும் பெண்களின் வலியை பெண்ணை வீடாக உருவகிக்கும் அதே கவிதையில் பின்வருமாறு சாடியிருப்பார்.
இந்திராகாந்தி எமர்ஜென்சி மற்றும் மொராஜி தேசாய் காலத்தில் ஏற்பட்ட பாண்டிச்சேரி இணைப்பு போராட்டத்தை ஒட்டியே அரசியலைத் தெரிந்து கொள்ளும் ஆவல் மாலதிக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆண்கள் எல்லோரும் செய்தித்தாள் வாசிக்கும் பொழுது “நாம் ஏன் படிக்கக் கூடாது?”” என்ற எண்ணம் எழவே மாலை நேரங்களில் டீக் கடையில் இருந்து தினத்தந்தியை கடன்பெற்று படிக்க ஆரம்பித்திருக்கிறார். ஈழத்தில் தீவிரமான அரசியல் போராட்டம் நடைபெற்ற 1983-ஆம் ஆண்டுகளில் சிறை உடைப்பு, குட்டிமணி, ஜெகன் கண் பறிப்பு” போன்ற சம்பவங்களைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற்ற பேரணிகளில் மாணவர் அணியில் பங்கெடுத்ததின் மூலம் தி.க மாணவர்களின் பரிட்சயமும் ஏற்பட்டிருக்கிறது.
வயதிற்கு வந்த பெண்களை வீட்டைவிட்டு வெளியில் அனுப்ப தயங்கும் காலத்தில் இலக்கிய சந்திப்பு, தர்ணா, போராட்டம், உண்டி குளுக்குதல்’ போன்ற காரணங்களுக்காக பல இடங்களுக்கும் சென்று வந்ததால் “பெண்களின் களம் என்ன? எப்படி ஒடுக்கப்படுகிறார்கள்? சுற்றிலும் என்ன நடக்கிறது?”” என்பதையெல்லாம் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறார். சிறுவயதிலேயே குடும்ப பொறுப்பைப் பார்த்துக் கொண்டதால், பெரியவர்களின் தடையில்லாமல் சுதந்திரமாக செயலாற்ற முடிந்திருக்கிறது.
வீதியிலேயே ஆண்களும் பெண்களுமாக சரிசமமாக விளையாடி, ஒரே தட்டில் சாப்பிட்டு, தெருவிலேயே உறங்கும் அளவிற்கு சுதந்திரமாக இருந்தாலும், குடும்ப அமைப்பில் பெண்கள் மீது வன்முறை திணிக்கப்பட்டுள்ளது என்கிறார். சராசரி குடும்பங்களைவிட அதிகப்படியான அடக்குமுறைகள் இயக்கத்தில் ஈடுபட்ட தோழர்களின் வீடுகளில் இருந்திருக்கிறது. எப்பொழுதாவது “தோழர், உங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்களேன். எல்லோரையும் பார்க்க வேண்டும்” என்று கேட்டால், “அதெல்லாம் சரிவராது” என்று மறுத்து விடுவார்களாம்.
அப்படியே சென்றாலும் அம்மா, அக்கா, தங்கை என வீட்டிலுள்ள எல்லா பெண்களும் ஆளுக்கொரு மூலையில் ஓடி ஒளிந்து கொள்வார்களாம். “என்ன தோழர்? மனித உரிமையைப் பற்றி பேசுகிறீர்கள், உங்கள் வீட்டிலேயே இப்படி இருக்கிறதே?” என்று கேட்டு அவர்களை கேலியும் செய்வாராம்.
இவர்களெல்லாம் மனித உரிமை பேசினாலும், மார்க்சியம் பேசினாலும், குடும்ப சூழல் என்று வரும்போது ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட ஆண்களுக்கான அதிகாரத்தை அனுபவிக்கவே செய்கிறார்கள். திராவிட கழகத் தோழர்கள் தான் இப்படி என்று நினைத்தால், புரட்சி பேசக்கூடிய மாக்ஸிய தோழர்களின் குடும்ப சூழலும் அதேபோலத் தான் இருந்திருக்கிறது. இதுபோன்ற அவதானிப்புகளால் இயக்கம் சார்ந்த கனவுகள் தகர்ந்து, அதிகார அரசியலை அடையாளம் கண்டிருக்கிறார். ஒரு கலாச்சார மாற்றத்தையோ, பெண்களுக்கான சுதந்திரத்தையோ, இடத்தையோ கொடுக்க முன்வராதவர்களை எதிர்த்து பெண்களே போராடவேண்டும் என்ற புரிதலுக்கு வந்திருக்கிறார். அந்த காலகட்டத்தில் தான் தீவிரமாக எழுதவும் ஆரம்பித்திருக்கிறார்.
தி முருகன் (குங்குமம் இணை ஆசிரியர்), நாகு, சரவணன், அருணன், தி சிவக்குமார், ‘எதிரு’ சிவக்குமார் போன்ற நண்பர்களுடன் சேர்ந்து கையெழுத்துப் பிரதி துவங்கி, அதில் சில ஆரம்ப கவிதைகளை எழுதியிருக்கிறார். அதன் பின் ‘எதிரு’ பத்திரிகையை எழுத்தாளர் பாவணன் துணைகொண்டு முன்னெடுத்திருக்கிறார்கள்.
இலக்கியம் சார்ந்து இயங்குவதைவிட மாக்ஸிய, ML கூடங்களில் பங்கெடுப்பது காவல் துறையில் பணியாற்றுவதால் மாலதியின் தந்தைக்கு அலுவலக நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. “இலக்கியக் கூட்டங்களுக்கு வேண்டுமானால் கலந்துகொள். போலீஸ்காரனின் மகளாக இருந்து கொண்டு தடைசெய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு கொள்ளாதே, தர்ணா, உண்டி குளுக்குதல், சோசியலிச புரட்சி போன்ற செயல்பாடுகளில் பங்கெடுக்காதே” என்று சொல்லி இருக்கிறார்.
“எதை செய்ய வேண்டும்? எதை செய்யக் கூடாது?” என்று எனக்குத் தெரியும். “என் சமந்தப்பட்ட விஷயங்களில் முடிவெடுக்கும் உரிமை உங்களுக்கு இல்லை” என்று மாலதியும் பதிலளித்திருக்கிறார்.
“அப்போ நீ கல்யாணம் செய்துக்கிட்டு போயிடு”
“இப்போ நான் கல்யாணம் செய்துக்கிற மாதிரி இல்லை”
“உன்கூட எவ்வளோ தோழர்கள் பழகுறாங்க, அவங்கள்ள ஒருத்தரை வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கோ…”
“இதென்ன வேடிக்கையா இருக்கு? என்னுடன் பேசுபவர்கள் எல்லோரும் என்னுடைய காதலராகிவிடுவாரா? எல்லாரையும் நான் கல்யாணம் செய்துக்க முடியுமா?” என்று மாலதி பதில் சொல்ல, “அப்போ வீட்டை விட்டு வெளிய போயிடு” என்று அவருடைய தந்தை சொல்லியிருக்கிறார்.
20 வயதில், வீட்டைவிட்டு வெளியேறி தனியாக வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. 11 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது ஏற்பட்ட தீவிபத்தால் பள்ளிக்கு செல்வதை பாதியில் நிறுத்தி இருக்கிறார். வங்கிக் கடன் பெற்று வீட்டைக் கட்டி முடிப்பதற்குள் மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டது. மீண்டும் வீட்டிலிருந்தே படிக்கலாம் என்றபோது அறிவியல் மற்றும் கணிதப் பாடத்தைத் தவிர்த்து, வரலாறு பாடத்தை எடுத்து தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
ஓய்வு நேரத்தில் நூலகம், தோழிகளின் வீடு, இலக்கியக் கூட்டம்” என்று பொதுவாக சுற்றிக் கொண்டே இருப்பாராம். நூலகத்திற்கு வரும் பெண்கள் தேவையான புத்தகத்தை எடுத்துக் கொண்டு சென்றுவிட இவர் மட்டும் அங்கேயே உட்கார்ந்து படிப்பாராம். வீட்டிற்கு எடுத்துக்கொண்டு வந்தால் அவருடைய அம்மா கிழித்து எரித்து விடுவார்களாம். எல்லா விதத்திலும் இலக்கிய வாசிப்புக்கான இடையூறுகளைக் கொடுப்பார்கள். இதிலிருந்து தப்பிப்பதற்காக பத்தாம் வகுப்பு விடுமுறையில் மூன்றுமாத தையற் பயிற்சியில் சேர்ந்திருக்கிறார். வீட்டிலிருந்து வெளியேறியதும் ஒரு வேலை கிடைக்க அதுவே காரணமாக இருந்திருக்கிறது. எக்ஸ்போர்ட் கம்பெனி, ஸ்வீட் ஸ்டால், ஜவுளிக் கடை போன்ற பல இடங்களில் 1988 –ஆம் ஆண்டு முதல் சொற்ப சம்பளத்திற்கு (200 ரூபாய், 300 ரூபாய்) வேலை செய்திருக்கிறார்.
கடுமையான உழைப்பின் மூலம் அனுபவம் பெற்று ஆரோவில் நூல் கத்தரிக்கும் பெண்ணாகச் சேர்ந்து Tailoring மற்றும் pattern making கற்றுக்கொண்டு லெதர் ஜாக்கெட் டிசைன் செய்யும் அளவிற்கு முன்னேறியிருக்கிறார். அவருடன் வேலை செய்தவர்கள் எல்லோரும் 40 முதல் 50 வருட அனுபவமும் கல்விச் சான்றிதழ் பெற்றவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு இணையாக உழைத்திருக்கிறார். இதனால் தன்னம்பிக்கை பெற்று முன்னேறினாலும் 6 வருடங்கள் எழுத்தில் கவனம் செலுத்த முடியாத சூழலில் வாழ்ந்திருக்கிறார்.
அவர் வேலை செய்த இடங்களிலேயே தோல் ஆடை தொழிற்சாலையில் வேலை செய்ததையே கடினமான பணியாகக் கூறுகிறார். “ஆயிரம் நபர்கள் வேலை செய்யக்கூடிய இடத்தில் சுகாதாரமே இருக்காது. பல வேதி மாற்றங்கள் தொழிற்சாலையில் நிகழும் என்பதால் காற்றில் துர்நாற்றம் பரவும். சாப்பிடவே முடியாது. அங்கு வேலை செய்பவர்களுக்கு எடைக்குறைவு, நரம்பு வியாதிகள், தோல் வியாதி, TB என ஏதாவது உடல் நலக் குறைவுகள் ஏற்படும். சில பெண்களுக்குக் கருச்சிதைவும் ஏற்படுவதுண்டு. இதையெல்லாம் விட கீழ் நிலைகளில் வேலை செய்யும் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப் படுவார்கள்” என்றார்.
CPM, CPI போன்ற தொழிலாளர் இயக்கங்கள் இருந்தாலும் இதையெல்லாம் கவனிக்காது. அவர்களுக்கு சந்தா கிடைத்தால் போதுமென்று இருந்துவிடுவார்கள். முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையிலான உறவு தவிர்த்து மார்க்ஸிய அரசியல்வாதிகள் உள்ளார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துவதில்லை. ஓர் அளவிற்கு மேல் இந்த சூழலில் வேலை செய்ய முடியாமல் தவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து மீண்டும் எழுத்த ஆரம்பித்திருக்கிறார்.
மூன்று பிரிவான எழுத்துகள் இளைஞர்களுக்கு ஒரு குழப்பத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. எழுத்து, மணிக்கொடி’ போன்ற சிற்றிதழ் காலங்களிலிருந்து எழுத்தானது இரண்டு வகைகளில் பார்க்கப்பட்டது. கலை, இலக்கியம்” என்று ‘எழுத்து’’ படைப்பாளிகள் உயிரை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இளைஞர்களுக்கான மாற்றத்தை நாங்கள் தான் கொடுக்கிறோம். எங்களுடையது தான் சிறந்த எழுத்து என்று ‘வானம்பாடி’கள்’ சொல்கிறார்கள். புரட்சி சார்ந்து பேசக்கூடிய மாக்ஸிய ஆளுமைகளும் செயல்படுகிறார்கள்.
“வாழ்வியலும், அரசியலும் பிரிக்கமுடியாதது. இவை இரண்டும் இல்லாமல் இயங்க முடியாது. நம் சார்ந்த சமூகம், அதிலுள்ள பிரச்சனை, மாற்றம், நசிவுகள், ஒடுக்கு முறைகள், பெண்களின் கனவுகள், அவர்களின் இருப்பு, உணர்வுத் தளங்கள்” ஆகியவையை தன்னுடைய எழுத்தில் கொண்டு வருவதாகவும் அரசியல் தவிர்த்து தன்னுடைய எழுத்தை வாசிக்க இயலாது என்றும் சொல்கிறார். சில எழுத்தாளர்களை அப்படி வாசிக்க முடியும். உள்மனப் பயணங்களை மட்டுமே பதிவு செய்திருப்பார்கள். அந்த வகைமையும் இருக்கிறது. அதுபோல எழுதுவதில் எனக்கு நம்பிக்கையில்லை. நம்முடைய அகமனப் பயணங்களை நாமே வைத்துக் கொள்ளலாமே வாசகர்களுக்கு ஏன் கொடுக்க வேண்டும். வாசிக்கும் படைப்பின் மூலம் வாழ்க்கை பரிட்சியமாக பொது விஷயத்தைத் தானே பேசவேண்டும். ஒரு வாழ்க்கை முறையை எழுத்தின் மூலம் கடத்த முடியும். அப்படி இல்லாத ஒன்று எழுத்தாக இருக்க முடியாது” என்பதை முழுமையாக நம்புவதாகச் சொல்கிறார்.
“மனித உரிமை மீறல்களையும், ஒழுங்கு முறைகளையும் படைப்பின் மூலம் பதிவு செய்ய முடியும். உணர்வுகளின் வடிகாலாகவும், ஆத்ம திருப்திக்காகவும், ஆளுமையை நிலைநாட்டவும் நான் எழுதவில்லை. வாழும் சூழலின் சமத்துவமின்மையை படைப்பின் மூலம் வெளிப்படுத்தவே செயல்படுகிறேன். பின் நவீனத்துவம், பின் காலனியத்துவம், தலித்தியம், பெண்ணியம் என்று எது பேசினாலும் அரசியல் நிலைப்பாடு வெளிப்பட வேண்டும். அரசியல் சட்டம் சொல்லியபடி வாழ்வது இடதாக இருப்பின், அவற்றை மீறி வாழ்வது வலதாக இருக்கிறது. மனித உரிமைகள் மீறாமல் நிலைநாட்டப்பட வேண்டுமெனில் சட்டப்படி வாழ்ந்தாலே போதும். யார் மேலும் வன்முறை செலுத்தாமல் மனித நேயத்துடன் வாழ்ந்தாலே போதும். பேராசை இதெல்லாவற்றையும் மீறச் செய்கிறது. பணம் இருந்தால் எல்லாவற்றையும் விலைகொடுத்து வாங்கிவிடலாம் என்று நினைக்கிறோம். அதே சூத்திரத்தின் படி அரசும் நம்மை விலை கொடுத்து வாங்க நினைக்கிறது. முகம் தெரிந்த மனிதர்களையே ஏமாற்றும் சமூகமாக மாறிவிட்டது. இப்போதெல்லாம் சமூகக் கூட்டுணர்வே இல்லாமல் போய்விட்டது. அரசு அலுவலர்கள் கையூட்டு பெறுவதை நிறுத்தினாலே இதெல்லாம் சரியாகிவிடும்.
நல்லவர்களை ஏமாளிகளாகவும், பணம் சம்பாதிக்க எதையும் செய்யத் துணிபவர்களை பெரிய மனிதர்களாகவும் பார்க்கப் பழகிவிட்டோம். இந்த நிலை 25 வருடங்களில் உருவாக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையை ஏன் உருவாக்கி வைத்திருக்கிறோம்? இதை ஏன் இலக்கியம் பேசவில்லை? இந்த கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன் பதில் சொல்லுங்கள்.
தமிழகத்தை ஆண்ட திராவிடக் கட்சிகள் 50 வருடங்களில் தவறான கலாச்சாரத்தையும் தவறான உணர்வுகளையும் நமக்குக் கொடுத்துவிட்டார்கள். சினிமா, பிற எழுத்து ஊடகங்கள் மூலம் தவறாக நம்மை வளர்த்தெடுத்து விட்டார்கள். ஊடகங்களில் ஆளுமைகளாகக் காட்டப்படுபவர்களின் பின்னால் ஒரு கூட்டம் செல்லும் அளவிற்குத் தயார் செய்துவிட்டார்கள். அவர்களே நம்மை ஆளும் அளவிற்கும் கொண்டுசென்றுவிட்டோம். தவறு செய்யும் அனைவரையும் கொண்டாடக் கூடிய மனோபாவத்திற்கு ஊடக அரசியல் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. இந்த அரசியலை எழுத்தில் கொண்டுவர வேண்டும்” என்பதுதான் தன்னுடைய விருப்பமெனக் குறிப்பிடுகிறார்.
“எங்கோ நடக்கும் விஷயங்களைக் கதை செய்வதைவிட நம்மைச் சுற்றிய விஷயங்களை இலக்கியமாக்க வேண்டும். சுய வரலாறாகவும் எழுதலாம். அதை பிராமண இலக்கியம் செய்திருக்கிறது. அதற்கடுத்த ஆதிக்க சாதிகள் இதைத் தொடாமலேயே தப்பித்து விட்டார்கள். அம்மா வந்தாள், மோகமுள், மரப்பசு” போன்ற படைப்புகளின் மூலம் தி ஜானகிராமன் இதைத் தொடங்கி வைத்தார். குடும்பத்திலுள்ள ஜோடனைகளை கட்டுடைத்து எழுதினர். ’குழந்தைகள், பெண்கள், ஆண்கள்”’ மூலம் சுரா குடும்ப வன்முறையை உடைத்தெழுதினார். படைப்பின் மூலம் பிராமணர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லித் தருகிறார்கள். பிராமண இலக்கியங்களைத் தொடர்ந்து வந்த திராவிட இலக்கியங்கள் ஏன் இதைத் தொடவில்லை? பிராமணர்களைத் திட்டித் திட்டியே இவர்கள் தப்பித்துவிட்டார்கள். சுய குறைகளைத் தொட்டு புனிதத்தை இழந்துவிடக் கூடாது என்பதில் முழிப்புடன் இருந்தார்கள். தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அடுத்தவர்கள் மீது பழிபோட்டு தப்பித்துக் கொள்வதில் குறியாக இருந்தார்கள். என்றாலும் தனித் தனியாக அரசியல், பெண்ணியம், ஒடுக்கு முறைகள் என்று பேசுவார்கள்.
தன்னுடைய ஜாதியில், தன்னுடைய குடும்பத்தில், தன்னுடைய சுற்றத்தில் என்ன நடக்கிறது என்பதை படைப்பாளிகள் பேச முன் வரவேண்டும். ஜாதி அரசியலை கட்டுடைக்க வேண்டியது மிக முக்கியமான விஷயம். ஜாதிய அரசியலை விமர்சனம் செய்யும் எழுத்தாளன் தான் நிலைத்து நிற்க முடியும். ஒரு ஜாதியைச் சேர்ந்த எழுத்தாளன் விருது பெற்றால், அந்த சாதியைச் சேர்ந்த சங்கம் கூட்டம் கூட்டி விழா எடுக்கிறது. இதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
ஆணோ, பெண்ணோ ஜாதி உறவுகளை முற்றிலும் முறித்துக் கொண்டு வெளிவருவதுதான் படைப்பாளிக்கு இருக்க வேண்டிய முக்கியத் தகுதி என்று நினைக்கிறேன். ஜாதியையும், குடும்பத்தையும் சுமந்துகொண்டு வரும் மனப்பான்மை படைப்பாளிகளுக்கு இருப்பதைக் காட்டிலும் படுபாதகச் செயல் வேறொன்றும் இல்லை. இந்த துரோகத்தை தமிழ் இலக்கியவாதிகள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். தயவு செய்து இந்த எழுத்துகளை நீங்கள் அடையாளம் காண வேண்டும். அவற்றிற்கு எதிரான விமர்சனங்களை தயவு தாட்சண்யமின்றி முகம் பார்க்காமல், எவ்வளவு பெரிய எழுத்தாளராக இருந்தாலும் முன்வைக்க வாசகர்களும் விமர்சகர்களும் முன்வர வேண்டும்.
ஏனெனில் இந்த ஆட்கள் தான் தமிழ் தேசியம் பேசிப்பேசி ஒரு லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள். ஜாதி அரசியலைத் தாண்டி இவர்கள் எதுவும் செய்யவில்லை. நம்முடைய மனசாட்சி விழிப்புடன் இருக்க வேண்டும். வாசகராக இருந்தாலும், எழுத்தாளராக இருந்தாலும் இதிலிருந்து நாம் தொடங்க வேண்டும்” என்று விரும்புவதாக உரையை நிறைவு செய்தார். அதன் பின் நீண்ட கலந்துரையாடளுடன் சந்திப்பு நிறைவு பெற்றது.
“பெண் உடல் தீட்டு என்று மதம் சொல்கின்றது. சடங்குகள் மூலமாக தீட்டை எப்படிப் போக்கலாம் என்பதையும் மதமே சொல்கிறது. ஆண்களுக்கு ஏன் இதுபோன்ற தீட்டுகள் இருப்பதில்லை. பெண்கள் இதற்கு எதிராக செயல் படவேண்டும். இந்த வரையறைகளை மீறி பெண் தன் உடலைக் கொண்டாட வேண்டும்” என மாலதி மைத்ரி கூறுகின்றார். இதற்கு அவரிடம் கவிதையும் இருக்கிறது. இதோ அவருடைய ‘விஸ்வரூபம்’.
ஏதோ ஒரு பருவ மாற்றத்தில்
எனது அங்கங்கள் ஒவ்வொன்றும்
மிருகமாகவும் பறவையாகவும் மாறி
என்னைவிட்டு விலகிச் செல்லத்தொடங்கின
அவையே திரும்பி வந்து சேர்வதும்
பல சமயங்களில் தொலைந்த ஆட்டுக்குட்டியை
தேடிச்சென்று அழைத்து வருவதென நிகழ்வதும்
பிறகு யாத்திரைபோலப் புறப்பட்டுச்
சென்றுவிடுவதும் வழக்கமாகி
எல்லாக் கால வெளியிலும் அலையத்துவங்கின
நீண்ட காலமாகிவிட்டது
பல திக்குகளின் நீர் நிலங்களை
நோக்கிச் சென்றிருக்கும்
எது எத்திசையில் உலவுகிறது
என யூகித்தறிய முடியவில்லை
திரும்பி வந்துவிடும்போது
வெவ்வேறு நிலத்தின் வாசனையோடும்
குரல்களோடும் என் உடலெங்கும் மேய்ந்து
என் அடையாளத்தைக் கலைத்து அடுக்குகின்றன
யோனி ஒரு பட்டாம்பூச்சியாக
மலைகளில் அலைவதைக் கண்டதாக
காட்டில் விறகு பொறுக்கச் சென்ற
பெண்கள் வந்து கூறக்கேட்டேன்
******************
சந்திப்பு நடந்த நாள்: ஜூன் 12, மாலை 4.30 மணி.
இடம்: ஞாநி இல்லம். கேகே நகர், சென்னை.
Friday, September 16, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment