Wednesday, August 17, 2011

இராமாயணக் கோ கதை - கல்பதரு

காலம் சென்ற என்னுடைய தந்தையார் அடிப்படையில் தபால் அலுவலர். எம் ஜி ஆர் ஒரு சுற்றறிக்கையை விட்டு, ஒரே அலுவலர் இரண்டு வேலைகளைப் பார்க்க இயலாது என்ற சட்டத்தைக் கொண்டு வரும்வரை கிராம முன்சீப்பாகவும் வேலை பார்த்தவர். அதைவிட அவர் முக்கியமாகச் செய்த வேலை பசு வளர்ப்பு. காலையும் மாலையும் பசுவினை அழைத்துக் கொண்டு, இரண்டு கிலோமீட்டர் நடந்து சென்று புல் மேய விடுவார். சில நேரங்களில் அவர் பசுவினை மேச்சல் செய்யும் விதத்தைப் பார்த்திருக்கிறேன்.

அவர் சொல்லை மந்திரம் போல ஏற்று "நில்" என்றால் நிற்கும். "போ" என்றால் நடக்கும். பசுவின் மூளையில் எந்த விஞ்ஞானி நிரல் எழுதி தந்தையின் குரலை பதிவு செய்தார் என்று நினைத்துக் கொள்வேன். என் தந்தை வெளியூருக்குச் சென்றிருந்தால் பசுவினை வீட்டிற்குக் கொண்டுவரும் வேலை என்னுடையது. அப்பப்பா.... அதைவிட பகீரதப் பிரயத்தனம் வேறெதுவும் இல்லை. நான் என்ன கட்டளை இடுகிறேனோ அதற்கு நேரெதிராகச் செயல்படும். கோவத்தில் ஓங்கி ஓர் உதை கொடுப்பேன். பசுவதை நரகத்தில் தள்ளும் என்பார்கள். எனக்கென்ன காத்திருக்கிறதோ தெரியவில்லை. அநேகமாக என் தலை கால்பந்தாகலாம்.

வீட்டிற்கு வந்ததும் அம்மாவிடம் முரண்டு பிடிக்காது. பசுவிடம் அம்மா ஒரு வார்த்தை பேசி நான் பார்த்ததில்லை. இருந்தாலும் கால் கட்டும் கயிறை எடுத்தால் பொத்தான் அழுத்தியது போல எழுந்து நிற்கும். பால் கறந்து முடிக்கும் வரை அமைதியாக இருக்கும். பிறகு தன போக்கில் அசைபோட ஆரம்பிக்கும். அம்மா வெளியூருக்கு சென்றாலும் பிரச்சனைதான். யாரையும் பால் கறக்க விடாது. துணிந்து இறங்கினால் பின்னங்காலால் எட்டி உதைக்கும்.

ஏழு கழுதை வயதாகியும் வாயில்லா ஜீவன் எதனுடனும் என்னால் ஓட்ட முடியவில்லை. வாயில்லா ஜீவன்கள் மொழியை புரிந்து கொள்வது இன்றுவரை வியப்பாகவே இருக்கிறது. தன்னிடம் அன்பு செலுத்துபவர்களுக்கு எவ்வளவு அழகாகக் கட்டுப்படுகிறது. அன்பாகப் பார்த்துக் கொள்பவர்கள் இல்லாதபோது அவர்களின் இழப்பை எவ்வளவு சேட்டைகள் செய்து கோடிட்டுக்காட்டுகிறது. பசு, பூனை, கிளி, எருமை போன்ற விலங்குகளிலிருந்து சற்றே மாறுபட்டது நாய். எஜமானர்களுக்காகவே குரல்கொடுக்கும் விசுவாசிகள். நடிகர் பாரதி மணியுடன் பேசிக் கொண்டிருக்கும்பொழுது ஒரு விஷயத்தைப் பகிர்ந்துகொண்டார். அவருடைய பெண்தோழி ஒருவர் வீதியில் நாயைக் கண்டால் எடுத்துச் சென்று வளர்ப்பாராம். சுமார் 40 நாயை அதுபோல வளர்த்துக் கொண்டிருந்தாராம். வீதியிலுள்ள நாய்களுக்காகவே சில பணியாளர்களை அமர்த்திய வித்யாசமான பெண்.

நாய் வளர்க்கும் நண்பர்களின் வீட்டிற்குச் சென்ற சிலர் கடிபட்டதுண்டு. அதைக் கேள்விப்பட்டதிலிருந்து நாய் வளர்க்கும் எந்த நண்பர்கள் வீட்டிற்கும் செல்வதில்லை. தர்ஷன் பிறந்ததிலிருந்துதான் ஹேமுவின் வீட்டிற்குக் கூடச் செல்கிறேன். 8 மாதக் குழந்தையை நாம் தானே சென்று பார்க்க வேண்டி இருக்கிறது. பிறந்த குழந்தை நம் மீது எச்சில் தெளிப்பதும், சிறுநீர் கழிப்பதும், விசை கொண்டு அடிப்பதும் தவறவிடக் கூடியதா என்ன?

இதில் யானை தான் அபாயகரமான விலங்கு. அதற்கு உணவிட்டு மாளாது. ஒருவேளை உணவு இல்லையென்றாலும் பசி தாங்காது. பசி வயிறைக் குடைந்தால் கோவம் கொள்ளும். கோவத்தால் மதம் தலைக்கேறும். மதத்தால் பாகனைப் போட்டு மிதிக்கும். அதனால் தான் யானைகளைக் கோவிலில் வளர்க்கிறார்கள். மதம் வளர்க்கும் இடத்தில் தானே இன்னொரு மதத்தை இல்லாமல் செய்ய முடிகிறது.

எஜமானனுக்காக கொலை செய்த பசுக்களைப் பற்றி இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. நண்பர் அதிஷா buzz -ல் பகிர்ந்திருந்த கல்பதரு இதழின் சிறு குறிப்புச் செய்தி உண்மைதானா! என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். இவ்வளவு அபரிதமான அன்பை மிருகத்திடமிருந்து பெற்ற அந்த பிராமணர், எவ்வளவு அன்பைப் பொழியக் கூடியவாராக இருந்திருப்பார். அதே நேரத்தில் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காத கள்ள பிராமணராகவும் இருந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பத்து ரூபாய்க்கு இந்த சம்பவம் நடந்திருப்பதால் காலச்சக்கரத்தை வேகமாகச் சுழற்றி முக்கால் நூற்றாண்டு முன் செல்ல வேண்டி இருக்கிறது. அந்த காலத்தில் பிராமணர்கள் மட்டுமே பத்திரிகை நடத்திக் கொண்டிருந்ததால் தற்செயலான விபத்தை வர்ண சாதகமாக்க, பத்திரிகை தர்மப்படி அற்புத நிகழ்ச்சியாகவும் மாற்றி இருக்கலாம். அந்த வகையில் செய்தியின் சந்தேகம் வலுக்கிறது. (இது எழுதப்பட்டது 1917ஆம் ஆண்டு! - நன்றி - நண்பன் அதிஷா)

தரித்திர பிராமணர் வளர்த்த பசுக்களுக்குத் தெரியுமா "எஜமானனைத் தாக்கியவர் இலுப்பைக்குடி கள்ளரா? அல்லது காரைக்குடி ஜமீனா?" என்ற கேள்வியும் மனதில் எழுகிறது. இந்த நிகழ்வு எனக்கு வாய்மொழி இராமாயணக் கதையை நினைவுபடுத்தியது.

நிருகன் என்ற அரசன் புஷ்கரனம் என்ற ஆற்றங்கரையில் ஏழை அந்தனர்களுக்கு கோதானம் செய்ய ஏற்பாடு செய்திருந்தான். அதற்காக மாடுகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஊழ் செய்த பயனால் அதே ஊரில் வசிக்கும் ஓர் ஏழை அந்தனனுடைய பசுவும் அதில் கலந்துவிட்டது. இதை அறியாத நிருகனும் "கனகலம்" என்ற சிற்றூரில் வசிக்கும் ஓர் ஏழை பிராமணனுக்கு அந்தப் பசுவை தானத்தோடு தானமாக கொடுத்துவிட்டான். வெளியூருக்கு சென்றிருந்த பிராமணன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பசு இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான்.

அரசன் தானம் செய்ததை அறிந்த பிராமணன் ஊர் ஊராகச் சுற்றி பசுவைத் தேடினான். ஒவ்வொரு ஊரிலும் பசுவின் பெயரைச் சொல்லி அழைத்தவாறு சென்று கொண்டிருந்தான். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. "கனகலம்" சென்றபோது பிராமணனின் குரலை பசு கேட்டுவிட்டது. கயிற்றினை அறுத்துக்கொண்டு எஜமானனிடம் வந்துவிட்டது.

தானம் பெற்றவன் "பசு தனக்குத் தான் சொந்தம்" என்கிறான். "இல்லை, பசு எனக்குத் தான் சொந்தம்" என்கிறான் ஏழை பிராமணன்.

இருவருக்கும் இடையில் பிரச்சனை அதிகமானதால், நீதி கேட்டு அரசனிடம் முறையிடுகிறார்கள். அரசனோ இவர்களைப் பார்க்க நேரம் கொடுக்காமல், அந்தப் புறத்தில் அலுவல் இருப்பதைக் காரணம் காட்டி இழுத்தடிக்கிறான்.

இரண்டு அந்தணர்களும் வெகுண்டெழுந்து "நீ யார் கண்ணிலும் படாத ஒனாயாகப் பிறக்கக் கடவது. கிருஷ்ண அவதாரத்தில் விஷ்ணு வந்து உன் பாவத்தை அகற்றுவார்" என்று அரசனுக்கு சாபம் இடுகிறார்கள்.

- ஆனால் கிருஷ்ண அவதாரத்தில் இதே அரசன் விமோசனம் பெற்ற குறிப்புகள் காணக் கிடைக்கவில்லை.

பசு வளர்த்தாலும் பிரச்சனை, அதை தானம் கொடுத்தாலும் பிரச்சனை. தமிழக அரசு இது தெரியாமல் கறவை மாடுகளை இலவசமாகக் கொடுக்க இருக்கிறார்கள். அம்மா லோகமாதா நீதான் இந்த உலகத்தைக் காப்பாற்ற வேண்டும்.

2 comments:

  1. அருமையான காமடி

    ReplyDelete
  2. அப்பாவின் திறமையையும், அதிஷாவிற்க்கான பதிலையும், அம்மாவின் செயலையும் ஒரே பதில் சொல்லிய விதம் நல்லா இருக்கு

    ReplyDelete