Thursday, October 4, 2012

திருடன் போலீஸ்


ராயப்பேட்டை பென்ஷன் ஆபீசுக்குப் போய்விட்டு, அங்கிருந்து அங்கிள்-ஐ சந்திக்க  கீழ்ப்பாக்கம் சென்றிருந்தேன். இன்றைய தினம் பகல் நேரத்தில் கொளுத்திய வெயிலைச் சொல்லிமாளாது. ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்தபோது அங்கிள் சொன்னார்.

“ரெண்டு பெரிய வேலய இன்னிக்கி முடிட்சிட்டப்பா. நீ இல்லன்னா ரொம்ப கஷ்டப்பட்டிருப்பேன்பா. நீ நல்லா இருக்கணும்.”

ஒவ்வொரு மாதமும் அந்த இரண்டு வேலையை முடித்துவிட்டுத் திரும்பும்  பொழுதும் இதே வார்த்தைகளை அங்கிள் சொல்லுவார். பெரிதாக ஒன்றும் இல்லை. ATM-ல் இருந்து அவர் கேட்கும் தொகையை எடுத்துக் கொடுப்பேன். அப்படியே சூப்பர் மார்கெட் சென்று வீட்டிற்குத் தேவையான மளிகைப் பொருட்களை வாங்கி வருவோம். ஹப்பா... எவ்வளவு கடினமான பணி. இதை முடித்துவிட்டுத் தான் அந்த பேருந்து நிலையத்திற்குச் சென்றிருந்தேன்.
கோயம்பேடு பிளாட்ஃபா(ர்)ம் ஒரு பார்வையில் ஆங்கில எழுத்து “E வடிவில் இருக்கும். எப்பொழுது அங்கு சென்றாலும் அந்த “E வடிவை நான்கு முறையாவது சுற்றி வருவேன். நடைப் பயிற்சிக்கு நடைப் பயிற்சியும் ஆச்சு, பொழுதுக்குப் பொழுதும் போகும் இல்லையா?


நேற்றைய தினமும் அப்படித்தான் நடந்து கொண்டிருந்தேன். எனக்கே தெரியாமல் அந்த போலீஸ் என்னை பின் தொடர்ந்திருக்கிறார். ஒரு புள்ளியில் என்னை மடக்கி விசாரிக்க ஆரம்பித்தார்.

“நீ எந்த ஊருக்குப் போகணும்? நீ இங்க எப்ப வந்த?”

“நான் கும்மிடிபூண்டி செல்லும் வழியிலுள்ள கிராமத்துக்குப் போகணும். இங்க வந்து 2 மணி நேரம் ஆகுது...

“எங்க வேல செய்யுற?” என்றார்.

“வேல எதுவும் செய்யல. ராயப்பேட்டை பென்ஷன் ஆபீஸ் போயிட்டு ஊருக்குத் திரும்பி கொண்டிருக்கிறேன்.”

“அப்ப இங்க ஏன் ரொம்ப நேரமா சுத்திட்டு இருக்க? உன்ன கேமராவுல வாச் பண்ணிட்டாங்க! போலீஸ் ஸ்டேஷன்-கு கூட்டிட்டு வரச் சொல்லிட்டாங்க!” என்றார்
“சரி... வாங்க போகலாம்.”

“ப்ரூப் எதாச்சும் இருக்கா?” என்றார்.

“ஓ இருக்கே! இந்தாங்க என்னோட டிரைவிங் லைசென்ஸ். இதோ என்னோட வோட்டர்ஸ் ஐடி.”

“உன்னோட மொபைலைக் கொடு...” என்றதும் சற்றும் யோசிக்காமல் எடுத்துக் கொடுத்துவிட்டேன். அப்படியே “உன்ன பாத்தா சும்மா இருக்க மாதிரி தெரியலையே?” என்றார்.

“ஆமா... வீட்டில் இருந்தே வொர்க் பண்றேன். கொஞ்சம் தமிழில் எழுதுவேன்.”
“பைத்தியக்காரன் மாதிரி சுத்தச் சொல்லவே நெனச்சேன்... உங்களுக்கு எல்லாம் வெக்கமா இல்ல!? எவன் பின்னாடியாவது சுத்த வேண்டியது. அத அப்படியே எழுத வேண்டியது. இதுல உங்களுக்கு இன்னாயா கெடைக்குது. பல்லான மேட்டர்ல கூட உன்ன உட்கார வெக்க முடியும் தெரியுமா?”

அவ்வளோ எல்லாம் நான் வொர்த் இல்லை என்பதாக மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். நானும் போலீசும் நடந்து கொண்டிருந்தோம். ஸ்டேஷனுக்குத்தான் போகப் போகிறோம் என்று ஜாலியாகச் சென்று கொண்டிருந்தேன். காலியாக இருந்த பயணியர் இரும்பு இருக்கையில் உட்கார வைத்துக் கொண்டார்.

உன்னோட பேக்கில் (Bag) என்ன இருக்கு?என்றார்.

“ரெண்டு மூணு புத்தகங்கள்....” என்று அவரிடம் முதுகுப் பையை நீட்டினேன். உதாசீனமாக என்னைப் பார்த்தவர் “உங்களோட ரிலேஹான்ஸ் யாராவது வந்து தான் உங்களை கையெழுத்துப் போட்டுட்டு கூட்டிட்டுப் போகணும்” என்றார்.

“சரி என்னோட மொபைலைக் கொடுங்க என்னோட மருமகனை வரச் சொல்றேன்.”
“நீயே பொடிசு மாதிரி இருக்க?” என்றார்.

“சரி என்னோட அக்காவ வந்து கூட்டிட்டுப் போகச் சொல்றேன். இல்லன்னா என்னோட இன்னொரு கசின் வருவாரு...”

“எழுத்தாளர்னு சொல்ற... ஜர்னலிஸ்ட் யாரையும் தெரியாதா? அந்த வார்த்தைய சொல்லித் தானே மெரட்டுவிங்க...” என்றார்.

“ஓ... பாலபாரதியைத் தெரியுமே...! அவர வேனும்னாக் கூட கூப்புட்றேன்...” என்று சொல்லிவிட்டு, “பத்திரிகையாளராக அல்ல, ஓர் அண்ணனாக” என்பதை மனதில் நினைத்துக் கொண்டேன். அந்த போலீஸ் கடைந்தெடுத்த முட்டாள். நான் தமிழில் கொஞ்சம் எழுதுவேன் என்றுதானே சொன்னேன். ஜர்னலிஸ்ட் என்றா சொன்னேன். வார்த்தைகள்... வார்த்தைகள் ரொம்ப முக்கியம்.

சீருடைப் பணியாளர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. “சரி நீங்க போங்க...” என்று சொல்லிவிட்டு கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டார். எனக்கும் முகமெல்லாம் வியர்த்திருந்தது. சட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு நடக்கலானேன். 

# (மருமகன், ஜெயா, பாலபாரதி – இவங்க மூணு போரையும் போலீஸ் ஸ்டேஷனில் நிருத்தலாம்னு நெனச்சேன். ஜஸ்ட் மிஸ்...)

No comments:

Post a Comment