Thursday, November 8, 2012

கனவு மெய்ப்பட வேண்டாம்!

வேலையை எழுதிக் கொடுத்துவிட்டு, ஊர் உலகத்தை சுற்றிக் கொண்டிருந்த சமயம் அது. அதிகாலையில் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தேன். செல்பேசி ஒலிக்கவும் எடுத்துப் பேசினேன். உடன் வேலை செய்த கார்த்தி தான் அழைத்திருந்தான்.

“மாமா... எங்க இருக்க? எப்படி இருக்க?” என்றான்.

“நல்லா இருக்கேண்டா! சொல்லு... இந்த நேரத்துல என்னடா அதிசயமா
Phone call? Anything Urgent...?” என்றேன்.

“ச்சே.. ச்சே... ஒன்னும் இல்ல மாமா... நீ நல்லா இருக்கியான்னு சொல்லு?” என்றான்.

“டேய்... நல்லா தூங்கிட்டு இருக்கவன எழுப்பி கேக்குற கேள்வியாடா இது? உனக்கே நல்லா இருக்கா?” என்றேன்.

“தப்பா நெனக்காத மாமா...?” என்றவனின் குரலில் பயத்தை உணர முடிந்தது.

“டேய் ச்சீ... எதுன்னாலும் சொல்லுடா...பார்த்துக்கலாம்!” என்றேன்.
“மாமா... கரண்ட் போஸ்ட் உன்மேல உழுந்து, நீ சாவுறது போல கனவுகண்டு மெரண்டு போயிட்டேன்! அதான் உன்ன உடனே கூப்பிட்டேன்” என்றான். மனம் விட்டு சிரித்ததில் தூக்கம் கூட கலைந்துவிட்டது.

“சிரிக்காத மாமா...! பார்த்து பத்திரம்” என்றான். அவனைச் சமதானம் செய்துவிட்டு செல்பேசியைத் துண்டித்தேன்.

எல்லோருக்கும் கனவு வரும். தெரிந்த நண்பர்களும், உறவினர்களும் கனவில் வருவார்கள். எனக்கோ – தூக்கத்தில் கனவு காண்பது அரிதிலும் அரிது. நீண்ட நாட்களாக பார்க்காத போது, அக்கா மகன் அகில் மட்டும் எப்பொழுதாவது சொப்பனத்தில் வந்து சேட்டை செய்வான். அவனுடைய குறும்புத் தனத்தைக் காட்டி விட்டு ஓடிவிடுவான்.

மற்றபடி, மிகவும் அரிதாக துர்-சொப்பனங்கள் வந்து நடு இரவில் எழுந்து கொள்வதும் நடக்கும். மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு கனவு! என்னுடன் வேலை செய்த, புதிதாகக் கல்யாணமான நண்பர் ஒருவர் சாலை விபத்தில் இறப்பது போல கனவு கண்டேன். மறுநாள் அலுவலகத்தில் நுழைந்தபோது மனமெல்லாம் குழப்பம்.

“ஏன் கிருஷ்ணா டல்லா இருக்கீங்க?” என்றான் ஹேம்நாத்.

அவனிடம் பகிர்ந்த போது “தயவு செஞ்சி வாய மூடுங்க கிருஷ்ணா! வேற யாருகிட்டயும் சொல்லிடாதிங்க?” என்றான். ஏதோ! அந்த நேரம் மன பாரம் குறைந்தது போல இருந்தது. ஆனால், சில மாதங்களிலேயே சொப்பனத்தில் வந்த நண்பர் அகால மரணம் அடைந்தார். சுடுகாட்டில் நண்பருக்கு வாய்க்கரிசி போடும் சமயம், சக மனிதரின் இழப்பையும் மீறி குற்ற உணர்ச்சிதான் மேலோங்கியது.

இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு கனவு. உடன் படித்த தோழி ஒருத்தி, பரிட்சயமான கிராமத்தில், நடந்து பழகிய தெருவில் இருப்பது போல கனவில் வந்தாள். தூரத்தில் பார்த்தபோது சாந்தமாக இருந்த முகம், நெருங்கிச் சென்றதும் கோரமாக மாறியது. மன நலம் பாதிக்கப்பட்ட பெண் போல அவளது நடத்தை இருந்தது.

“ஹே... நீ என்ன பண்றன்னு உனக்குத் தெரியுதா? எல்லோரும் உன்ன தான் பாக்குறாங்க. உனக்குக் கொழந்தைங்க வேற இருக்காங்க! You Please… control yourself” என்கிறேன்.

“அத சொல்ல நீ யாருடா? பைத்தியம்...” என்கிறாள்.

தெருவில் நடந்து போவோர் என்னைத் தான் விநோதமாகப் பார்ப்பது போல தோன்றியது. “ஒ... மை காட்... ஹே... ஹே...” என்று குரலெழுப்பும் சமயம் கால்போன போக்கில் தோழி நடக்கலானாள். அதோடு தூக்கம் கெட்டு எழுந்துவிட்டேன். அந்தத் தோழி இதுவரை நன்றாகத் தான் இருக்கிறாள். இரண்டு குழந்தைகளுக்குத் தாயும் கூட. அவள் ஏன் பைத்தியமாக என்னுடைய கனவில் தோன்ற வேண்டும்? தூரத்தில் பார்த்தால் சிரித்து விட்டு நகர்ந்துவிடும் அவளிடம் பகிர்ந்துகொள்ள முடியுமா என்ன?

கடவுளே! யதார்த்த வாழ்கையிலேயே எனக்கு கனவுகள் இல்லை. ஆழ்ந்த உறக்கத்திலும் அந்த எழவு தேவையில்லை. ஆகவே, கடைசியாக வந்த எழவையும் பலிக்காமல் செய்யும். என்னுடைய "கனவுகள் மெய்ப்பட வேண்டாம்!"

(சுபம்... மங்களம்...)

No comments:

Post a Comment