Friday, November 9, 2012

மாற்று சினிமா மார்கெடிங்


விளையாடவில்லை, சீரியசாகத் தான் சொல்கிறார் குனித் மோங்கா. அனுராக் காஷ்யப் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிட் (A.K.F.P.L)” நிறுவனத்தின் சூத்திரதாரி இவர்.

காதோரம் நரைத்த முடிகளையும், உருவத்தையும் பார்த்தால் வயதானவர் போல் தோன்றும். ஆனால் 28 வயதுதான் ஆகிறது. விநியோகஸ்தர்களையும் தெரியாது. திரையரங்க உரிமையாளர்களுடனும் பழக்கமில்லை. வானுயர்ந்த கட்டிடத்தில் அலுவலகம் இல்லை. மெத்தப் படித்த மேதாவிகள் துணையும் இல்லை. ஒரு லேப்டாப். ஒரு செல்போன். சினஞ்சிறு குடிசையில் அலுவலகம். காபி, டீ குடிக்க வேண்டுமானால் பக்கத்திலேயே கடை. கை தட்டினால் தேநீர் வரும்.


இதுதான் குனித் மோங்கா. இதுதான் இவரது அன்றாட வாழ்க்கை. ஆனால், இவர் தான் மெகா பட்ஜெட் படங்களையும், 50, 60 கோடி ரூபாய் களில்  சம்பளம் வாங்கும் இந்தி நடிகர்களையும் எதிர்த்து லோ பட்ஜெட் படங்களை வெளியிட்டு வருகிறார். மாற்று சினிமாவுக்காக தன் உடல் பொருள் ஆவி என சகலத்தையும் அர்பணித்திருக்கும் அனுராக் காஷ்யபின் படங்களை உலகம் முழுக்கத் திரையிட இவர் ஒருவர் தான் முழு மூச்சாக போராடி வருகிறார்.

முழு நேர பணி அனுராக் காஷ்யபின் நிறுவனத்தில், என்றாலும் காஷ்யபின் அனுமதியுடன் சிக்யா என்டர்டயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் சொந்தமாக நடத்தி வருகிறார். ‘சைத்தான்’, ‘தட் கேர்ள் இன் யெல்லோ பூட்ஸ்’, ‘கேங்க்ஸ் ஆப் வாசேபூர்’ (2 பாகங்கள்), ‘அய்யா’ ஆகியவை இவரது முயற்சியில் வெளிவந்த படங்கள். தயாரிப்பில் இருப்பவை ‘மைக்கேல்’, ‘பெட்லர்ஸ்’, ‘ஹராம்கோர்’, ‘மான்சூன் சூட்’, ‘லூவ் சுவ் தே சிக்கன் குரானா’, ‘வக்கிர துண்ட மஹாகாய’.

பெரிய பெரிய கார்பரேட் நிறுவனங்களே ஒரு நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு படங்களை மட்டுமே தயாரிக்கின்றன. அப்படியிருக்க வெரும் கையில் முழம் போட்டபடி இவரால் எப்படி இவ்வளவு படங்களை ஒரே நேரத்தில் உருவாக்க முடிகிறது.

சிம்பிள் தயாரிப்புச் செலவை வெளியில் மக்களிடமிருந்தே வசூலிக்கிறார்கள். அதிகபட்சம் 4 கோடிக்கு மேல் எந்தப் படத்தின் தயாரிப்புச் செலவும் போகக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். ஸ்கிரிப்ட் வேலைகள் தொடங்கும் போதே மார்கெட்டிங் செய்ய ஆரம்பிக்கிறார்.

உதாரணமாக ‘பெட்லர்ஸ்’ படத்தின் மொத்தச் செலவு 2 கோடி ரூபாய். கைவசம் இருந்தது 1 கோடி ரூபாய் தான். எஞ்சிய தொகையை பேஸ் புக் மூலமாக நண்பர்களிடமிருந்து திரட்டியிருக்கிறார். ‘மான்சூன் சூட்’ பட ஸ்க்ரிப்டை பிராஸ் நாட்டிலுள்ள தனியார் தொலைக்காட்சிக்கு அனுப்பி, அந்த நாட்டின் சாட்டிலைட் உரிமையை அவர்கள் வாங்கும்படி செய்திருக்கிறார். இதற்காக அந்த தொலைகாட்சி நிறுவனம் கொடுத்த பணத்தில் தான் ‘மான்சூன் சூட்’ படப்பிடிப்பே ஆரம்பமாகியிருக்கிறது.
இதுதான் குனித் மோங்காவின் வழிமுறை. எத்தனை கோடி ரூபாய் செலவாகும்? எவ்வளவு வசூலாகும்? பரஸ்பரம் ஷேர் எவ்வளவு? இந்த மூன்று கேள்விகளுக்கான பதிலை முதலில் அணுகுபவர்களிடம் இருந்து பெற்று விடுகிறார். அதற்கேற்ப அக்ரிமென்ட் தயாரித்து கையெழுத்து போட்டு கொடுத்து விடுகிறார். பட வெளியீட்டுக்குப் பிறகு சொன்ன சொல்லைக் காப்பாற்றி விடுகிறார்.

உலகில் எங்கு திரைப்பட விழா நடந்தாலும் அங்கு சென்று தயாரித்த, தயாரிப்பில் இருக்கும் படங்கள் குறித்து மார்கெட்டிங் செய்கிறார். உடனடியாக யாரும் படங்களை வாங்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அவர்களது மின்னஞ்சல், செல்போன் எங்களை வாங்கி வந்து அடிக்கடி தொடர்பு கொண்டு, பேசி, மெல்ல மெல்ல தன் பக்கம் ஈர்க்கிறார்.

வெளிநாட்டு ரைட்ஸ், வெளிநாட்டு டிவிடி ரைட்ஸ், அங்கு சேட்டிலைட் ரைட்ஸ் என திட்டமிட்டு நாட்டுக்கு நாடு காய் நகர்த்தி அனுராக் காஷ்யபின் கனவுகளுக்கு உயிர் கொடுக்கிறார்.

ஸ்டுடியோ சிஸ்டம் எனப்படும் கார்பொரேட் நிறுவனங்களை நம்பாமல் இண்டிபெண்டன்ட் சினிமா என்கிற சுதந்திர சினிமாவுக்காக தனந்தனியாகப் போராடிவரும் குனித் மோங்கா, லோ பட்ஜெட் படங்களாலும் லாபம் சம்பாதிக்க முடியும் என நடைமுறை ரீதியாகக் காண்பித்து வருகிறார். இவரது பாதையில் நாமும் ஏன் செல்லக் கூடாது?

"கே. என். சிவராமன்" - தினகரன் வெள்ளி மலர். 

2 comments:

  1. இந்த அருமை என்ற வார்த்தை சென்று சேர வேண்டியது யாருக்கெனில்.... பைத்தியக்காரன் என்று அழைக்கப்படும் அண்ணன் சிவராமனுக்கு....

    ReplyDelete