Saturday, July 20, 2013

லவ் + முத்தம் = ஜோடனையற்ற காதல்

நட்புவட்டதிலுள்ள ஒருவனுக்கு மின்னஞ்சல் அனுப்பும் சமயத்தில், வேறொரு நண்பர் பக்கத்தில் இருந்தார். சில வார்த்தைகளைக் கண்டு நம் மக்கள் ஏன் தான் முகம் சுளிக்கிரார்களோ தெரியவில்லை!. கோக்கு மாக்கா யோசிக்கிறதே நம்ம பொழப்பாச்சே.

பொதுவாகவே “Sorry” என்ற வார்த்தைக்கு அடுத்ததாக நான் அதிகம் பயன்படுத்தும் வார்த்தை “Thanks”.அதற்கடுத்தது “Love” என்ற வார்த்தையைப் பல வாக்கிய அமைப்பில் பயன்படுத்துவேன். “Thanks & regards” – என்ற வார்த்தையை மின்னஞ்சலில் ஃபார்மலாக எல்லோரும் பயன்படுத்துவார்கள். நானோ “Thanks & Love” –என்றுதான் பயன்படுத்துவேன். சில நெருக்கமான நண்பர்களுக்கு “Love to you” – என்று அனுப்புவேன். குறுஞ்செய்திக்கும் இது பொருந்தும். சிலருக்கு “Hugs & Love” – என்று குறிப்பிட்டு அனுப்பி வைப்பேன்.

குடும்ப உறவுகள், கல்லூரியில் உடன் படித்த நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்த மனதிற்கு நெருக்கமான நண்பர்களுக்கு மட்டும் எவ்வளவு பெரிய உதவி செய்தாலும் - “Thanks” என்ற வார்த்தை மட்டும் வாயிலிருந்து வரவே வராது. அவர்களுக்கு வெறுமனே “With Love” என்று சுருக்கமாக முடித்துக் கொள்வேன்.

என்னுடைய தலையெழுத்து, ஆண் நண்பர்கள் தான் எனக்கு ஜாஸ்தி. தோழிகளோ சொற்பத்திலும் சொற்பம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை அவர்களிடம் பேசினாலே அதிகம். தொடர்பில் இருக்கும் தோழர்கள் எல்லோரிடமும் இந்த “லவ்” கலந்த வார்த்தைகளை – ஜோசியக்கிளி சீட்டை இழுத்துப் போடுவதைப் போல ஆளுக்கேற்றார்போல் பயன்படுத்துவேன்.

“அதென்னங்க கிருஷ்ணா... கூச்ச நாச்சமில்லாம கூடப் பழகற ஆம்பளைங்க எல்லாருக்கும் லவ் போட்டு மெசேஜ் பண்றிங்க...” என்று கேட்டார் அருகிலிருந்த நண்பர். மேலும் “உங்க முகநூலில் கூட இதுபோன்ற காமெடித் தனங்களைச் செய்கிறீர்களே...!” என்றார் அவர். ராணுவ அதிகாரிகள் பயன்படுத்தும் ரகசிய சங்கேத வார்த்தையா “லவ்”. நேசத்தை வெளிப்படுத்தும் சாதாரண வார்த்தைதானே அது. “அதைப் பயன்படுத்துவதில் உங்களுக்கு என்ன பிரச்னை?” என்றேன்.

“ஜென்ஸ் ஃபிரண்ட்டுங்க கிட்ட லவ் டெக்ஸ்ட் அனுப்பறது கொஞ்சம் Hard-டா இருக்குங்க கிருஷ்ணா...!” என்றார்.

“ஆரம்பத்துல எனக்கும் Hard-டா தான் இருந்துச்சு... இப்போல்லாம் பழகிடுச்சி...” என்றேன்.

“ஐயையோ நீங்க பலான ஆளா?” என்று நக்கலடித்தார்.

“சில பேரு, சில விதமான நேசங்களை அனுபவிக்காமலேயே காலத்த கடந்து வந்துடறாங்க ப்ரோ... அந்த மாதிரி ஆட்கள் என்னோட நட்பு வட்டத்துல ரொம்ப ரொம்ப அதிகம். அதுபோன்ற ஆட்கள் இது போன்ற லவ் டெக்ஸ்ட் மெசெக் பார்த்தாங்கன்னா ரொம்ப சந்தோஷப்படுவாங்க. ஒருசில லவ் பீலிங்கை கிராஸ் பண்ணாம சாகக் கூடாது ப்ரோ..” என்றேன்.

“இதெல்லாம் டகால்டி பேச்சு... டிப்ளோமாசி (Diplomacy)...” என்றார்.

அடக் கடவுளே என்று நினைத்துக் கொண்டேன். “ஓர் ஆண் ஒரு பெண்ணுக்கு சொல்லும் லவ் எவ்வளவு முக்கியமோ, அது போலவே ஓர் ஆண் ஓர் ஆணிடம் வெளிப்படுத்தும் கள்ளங்கபடமற்ற லவ்வும், ஒரு பெண் ஒரு பெண்ணிடம் வெளிப்படுத்தும் கள்ளங்கபடமற்ற லவ்வும் ரொம்ப மிக முக்கியம்... ப்ரோ...” என்றேன்.

“இதெல்லாம் கேக்கறதுக்கு நல்லாருக்கும் கிருஷ்ணா...” என்றார்.

இப்படித் தான் என்னுடைய பழைய கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது, ஒரு சந்தேகம் எழுந்தது. மருமகனும் அதே கம்பெனியில் வேறொரு கட்டிடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவனை இண்டர்காமில் அழைத்துப் பேசினேன். அந்த சம்பவத்தை உரையாடிக் கொண்டிருந்த ப்ரோ-விடம் பகிர்ந்துகொண்டேன்.

“மருமகனே, உனக்குத் தெரிஞ்ச ஆண்களிடமிருந்து முத்தங்கள் கிடைத்திருக்கிறதா? If you say yes... யாரெல்லாம் முத்தம் கொடுத்திருக்காங்க? கடைசியாக உனக்கு முத்தம் கொடுத்த ஆண் யார்? ஏதாச்சும் ஞாபகம் இருக்கா?” என்று கேட்டேன்.

“இல்லியே மாமா...! அப்பாவுக்கு என்ன ரொம்ப பிடிக்கும். அப்பான்னா எனக்கு உயிராச்சே. அவரும் கூட சின்ன வயசுல கொடுத்ததா ஞாபகம். வளர்ந்த பின்னாடி பேசரதோட சரி... சரியா ஞாபகப்படுத்த முடியலங்க மாமா... அப்பா கொடுத்த முத்தங்கள் கூட சுத்தமா ஞாபகம் இல்லியே...!” என்று இழுத்தான்.

“அண்ணன்... ஃப்ரென்ட், சித்தப்பா, மாமா... இப்பிடி யாராச்சும் கொடுத்து இருக்காங்களா?” என்றேன்.

“அப்பா கொடுத்ததே ஞாபகம் இல்ல... நீங்க இதெல்லாம் வேற கெளறி விடுறிங்ன்களே...” என்றான்.

“உனக்கு பிடித்தமான பெண்கள் யாராவது....” என்று முடிப்பதற்குள், “ஆங்... நல்லா ஞாபகம் இருக்குங்க மாமா...” என்று சில உறவுகளை ஞாபகம் கூர்ந்தான்.

ஹேம்நாத், ராமகிருஷ்ணன் போன்ற இதர அலுவலக நண்பர்களிடமும் “ஆண் உறவின் அன்பான முத்தம்” சார்ந்த கேள்வியை எழுப்பினேன். “என்ன கிருஷ்ண இதெல்லாம் கேட்டுக்குனு? அப்படி எதுவும் ஞாபகம் இல்லை...” என்று மண்டையைச் சொறிந்தார்கள். இன்னொரு நண்பரான பிரதீப்பிடம் கேட்டேன்.

“யோவ் சாமியாரெ... நம்மள எல்லாம் ஏன்டா பெத்தம்னு மண்டையைக் கவுந்துக்குனு பூரா பேரும் நிக்கறாங்கன்னா... அவங்க முத்தம் வேற கொடுப்பாங்களா? குசும்புதானே இதெல்லாம்...” என்றார்.

முத்தம் என்பது பாசத்தின் வெளிப்பாடு இல்லையா? ஆரத் தழுவி முத்தமிடுவதை எல்லோரிடத்தும் செய்ய முடியுமா? நெருங்கிய உறவுகளிடம் இது போன்ற நேசத்தைக் காட்டுவதில் நாம்மென்ன குறைந்துவிடப் போகிறோம். அப்படி என்ன வெட்கம் வேண்டிக்கிடக்கிறது. மேடவாக்கத்தில் வசிக்கும் என்னுடைய அக்காவின் வீட்டிற்குச் செல்லும் போதெல்லாம் அகிலைத் தான் என்னுடைய கண்கள் தேடும். அம்மா, பெரியம்மா, பாட்டி, தங்கை என பெண்கள் இருக்கும் சூழலில் அகில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். வீட்டில் நுழையும் சமயத்தில் டிவியில் ஏதேனும் சேனலில் மும்முரமாக மூழ்கியிருப்பான். அல்லது வெளியில் விளையாடிக் கொண்டிருப்பான்.

“ஏய் அகில்... இங்க வாடா...” என்பேன். வேண்டா வெறுப்பாக என்னிடம் வருவான்.

“உன்ன பாக்குறதுக்காக மாமா எவ்வளோ தொலைவு டிராவல் பண்ணி வந்திருக்கேன்.” என்று இருக்க அனைத்து முத்தமிடுவேன். “இங்க பாரு நீ ஸ்கூல் முடிச்சி காலேஜ் போனாக் கூட உனக்கு நான் முத்தம் கொடுப்பேன்... ஐ லவ் யூ அகில்” என்பேன். அகில் புரிந்தும் புரியாதுமாக தலையை ஆட்டிக்கொள்வான். இதுநாள் வரையில் அவனுக்கு “ஒரு சாக்லேட், ஒரு பிஸ்கட்” என்று எதையும் வாங்கிக் கொடுத்ததில்லை. ஒரு குழந்தையின் சராசரித் தேவைக்கும் அதிகமாகவே விளையாட்டுப் பொருட்களும், சிற்றுண்டிகளும் அவனுக்குக்க் இடைக்கின்றன. எனவே அகிலைப் பார்க்கும் ஒவ்வொரு தருணத்தில் அவனுக்காக என்னிடமிருப்பது முத்தங்களும், நேசங்களும், உச்சி முகர்தலும் மட்டுமே. வளர்ந்து வந்து ஓர் இளைஞனாக நிற்கும் பொழுது அகிலின் நினைவில் பூரணமாக என்னுடைய ஞாபகம் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். அக்காவின் மகனிடம் உணர்வுப்பூர்வமாகப் பகிர்வதை, நண்பர்களுடன் வார்த்தைகளைக் குழைத்து பகிர்ந்துகொள்வதில் எனக்குத் தயக்கமே இருந்ததில்லை.

பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு பலவிதங்களிலும் கேலி பேசிய நண்பர் நீண்ட நாட்கள் கழித்து ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அவரது வாழ்வின் முக்கியமான தருணத்தை என்னுடன் பகிர்ந்துகொண்டார். உடனே அவருக்கு பின்வருமாறு பதில் அனுப்பினேன்.

“So happy about it. Give a deep kiss & a warm hug to the cute little darling on behalf of me. The God may bless him”, With love, light & joy - Krishna Prabhu

“He said love to you in his language” – என்ற பதில் வந்தது.

ஒரு குழந்தை பிறந்தால் தான் கள்ளங்கபடமற்ற நேசம் ஆண்களின் இதயத்தில் பூக்கிறது போல. அந்தப் பூ மரணிக்கும் வரையிலும் உதிராமல் பார்த்துக் கொள்வது தான் ஆகச் சிரமமான காரியம். கொஞ்சம் போல பிரயாசைப் பட்டு பழகிக்கொண்டால் வாழ்வே இன்பமயம். (சமூகத்தில் குற்றங்கள் கூட பாதியாகக் குறைந்துவிடும். குடும்பத்திலுள்ள ஆண் உறவுகளின் முரண் தான் பலரையும் மிருகங்களாக்கி சமூகத்தில் உலாவும் படி செய்துள்ளன.)

என்னுடைய மருமகன் முத்துவிடம் கேட்ட, இதர நண்பர்களிடம் கேட்ட அதே கேள்வியைத் தான் உங்களிடமும் கேட்கிறேன். எனக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் கூட இல்லை. உங்களுக்குள்ளாகவே ஞாபகப்படுத்திப் பார்த்துக் கொண்டாலும் பரவாயில்லை. என்னுடைய கேள்வி இதுதான்:

“உங்களுக்கு முத்தமிட்ட ஆண் உறவுகள் யார் யார்? கடைசியாக முத்தமிட்டது யார்? அந்தத் தருணம் உங்களுக்கு ஞாபகம் இருகிறதா?” நிற்க. “I miss you da” என்ற வாக்கியத்தை நீங்கள் அதிகம் பயன்படுத்தி இருக்கலாம். ஓர் ஆணாக, “I love you da” என்று உங்களது நேசத்தை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்ட நண்பன் யார்?, ஆண் உறவுகள் யார்யார்?

வாழ்வில் பெண்களுக்கான நேசம் வெளிப்படையாகக் கிடைத்துவிடும். சில நேரங்களில் அந்த நேசம் காமத்துடன் சமந்தப்பட்டதாகக் கூட இருக்கும். இந்திய சூழலில் ஓர் ஆணுக்கு – சக ஆணிடமிருந்து வெளிப்படையான நேசம் கிடைப்பது அத்திப்பூ கதைதான். குறிஞ்சிமலர் கதைதான். மகாமகம் தெப்பக்குள விழா என்றும் சொல்லிக்கொள்ளலாம்.

ஏனெனில் நம்மிடமிருந்து முரண்படும் குடும்ப உறவுகளை “மோசமான தந்தை, மோசமான மகன்,மோசமான சகோதரன், மோசமான சித்தப்பா, மோசமான பெரியப்பா, மோசமான மாமன்கள், மோசமான பங்காளிகள், மோசமான மருமகன், மோசமான நண்பன்” என்றே நெற்றியில் பச்சைகுத்திவிட்டு அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பலரும் நம்மிடமிருந்து விலகியே இருக்கிறார்கள். நம்மைச் சுற்றிலும் மனதிற்கு நெருக்கமாக இருப்பவர்கள் சொற்பத்திலும் சொற்பமே. ஆகவே கூச்சநாச்சம் என்ன வேண்டிக் கிடக்கிறது?

அன்பான மனநிலையை வெளிப்படுத்தக் கிடைக்கும் அரிதான தருணங்களில் மகிழ்வுடன் “ஐ லவ் யூ” சொல்லுங்கள். அந்த வார்த்தை கடந்த கால மனக்குறைகளை ஆற்றும். மனதிற்கு மிக நெருக்கமான உறவு எனில் கள்ளங்கபடமற்று கட்டிப்பிடித்து முத்தத்தைக் கூட வெகுமதியாகத் தாருங்கள். அது கடந்த கால ரணங்களை ஆற்றும். அப்படிச் செய்யவில்லையேல் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் என்ன வித்யாசம்? நான் மறுபடியும் கேட்கிறேன். உண்மையுடன் பதில் சொல்லுங்கள். ““உங்களுக்கு முத்தமிட்ட ஆண் உறவுகள் யார் யார்? கடைசியாக முத்தமிட்டது யார்?”.

இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முன்வந்தால் நாம் எவ்வளவு நேச வறட்சியுடன் வாழ்கிறோம் என்பது உங்களுக்குப் புலப்படும். அந்த மனக் குறையை நீங்கள் யோசித்துப் பார்த்தால் ஜோசியக்கிளி சீட்டை இழுத்துப் போடுவதைப் போல “லவ்” என்ற வார்த்தையை ஆளுக்கேற்றார் போல் பயன்படுத்துவதிலுள்ள ஞாயமும் உங்களுக்குப் புரியும்.

யார் கண்டது? இந்த கணத்திலிருந்து நீங்களும் ஜோசியக் கிளியாக மாறலாம். அன்பெனும் திசையை நோக்கி சிறகடித்துப் பறக்கலாம்.

சுபம்... மங்களம்...

1 comment:

  1. ரொம்ப புரிதலனா கணங்கள்..
    என் நண்பன் திருப்பூரில் இருக்கிறான்..போனில் தான் அதிகம் பேசிக்கொள்வோம்.வருடத்தில் இரண்டோ அல்லது மூன்று முறைதான் சந்தித்துக்கொள்வோம்..அப்போது ஒரு தழுவலும் ஒரு முத்தமும் தர தவறுவதே இல்லை.
    இத்தனைக்கும் எவ்ளோ பேர் இருந்தாலும் கவலைப்படாமல் தருவான்..அதில் ஒரு அன்பு இருப்பதை கண்கூடாக உணர்கிறேன்..

    ReplyDelete