Sunday, July 21, 2013

அரசுப் பள்ளி ஆசிரியரின் ராஜினாமா

தான் செய்யும் வேலையை ராஜினாமா செய்யும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்குத் தெரியும். நீங்கள் திறமைசாலியாக இருந்து, நீண்டகாலம் ஒரு நிருவனத்தில் வேலை செய்கிறீர்கள் என்றால் உங்களது ராஜினாமா கடிதத்தை சுலபத்தில் ஏற்க மாட்டார்கள். “எதுக்காக வேலைய விட்டுட்டுப் போறீங்க? உங்களுக்கு இங்க என்ன பிரச்சனை? கம்பெனி பெனிஃபிட்ஸ் எதாச்சும் ஒத்து வரலையா? சம்பளம் பத்தலையா?” போன்ற பல கேள்விகளை நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் முதல், உங்களைத் தலைமையேற்று நடத்தும் ஊழியர் வரை எல்லோரும் கேட்பார்கள். நாம் சொல்வோம், “நல்ல ஆப்பர்ச்சூநிட்டிங்க. மிஸ் பண்றதுக்கு மனசு வரல...” போன்ற ஏதேனும் பொய்யான காரணங்கள் அதன் பின்னால் இருக்கும். உண்மையான காரணம் “காசு, பணம், துட்டு, மணி மணி”.

ஆனால் நானிங்கு பேச விரும்புவது சக்திவேல் சிதம்பரம் என்ற அரசுப் பள்ளி ஆசிரியரைப் பற்றி. கடந்த ஓராண்டுகாலமாகவே சக்தியை முகநூலில் பின்தொடர்ந்து வருகிறேன். மனதிற்கு நெருக்கமான சமூக இணையதள நண்பன் கூட. எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி வசதிகளற்ற கிராமப்புற மாணவர்களின் நலன் சார்ந்து அர்பணிப்புடன் வேலை செய்து வருபவன். தன்னுடைய சம்பளத்தின் பெரும் பகுதியை மாணவர்களின் படிப்பிற்காக பயன்படுத்திய உன்னதமானவன். தனது நண்பர்களின் மூலமும் தொடர்ந்து உதவி செய்து வந்தவன். தான் செய்யும் ஆசிரியப் பணியை மணம் ஒன்றி செய்ய இயலவில்லை என்றால், நண்பனது ராஜினாமாவைப் பற்றி பெரிதாக பேசும் எண்ணம் எழுந்திருக்காது.
(இன்போசில் கம்பெனியில் வேலை செய்த சங்கரன்கோவிலைச் சேர்ந்த அசோக் என்பவன் ஆறு மாதங்களுக்கு முன்பு வங்கித் தேர்வெழுதி IOB-ல் வேலைக்குச் சேர்ந்தான். ஒரே மாதத்தில் அந்த வேலையை உதறித் தள்ளிவிட்டு மீண்டும் இன்போசிஸ் வேலையில் சேர்ந்துகொண்டான். அசோக் போன்றவர்களின் முடிவானது கவனத்தில் கொண்டு அலச வேண்டியதில்லை. வங்கி பணிச்சூழல் அசோகிற்கு ஒத்துவரவில்லை ஆகவே உதறித் தள்ளினான். அவனுடைய இந்தச் செயலால் சமூகத்திற்குப் பெரிய இழப்பொன்றும் இல்லை.)
ஆனால், வசதியிலாத மாணவர்களின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு – மனம் ஒன்றி ஆசிரியப் பணியைச் செய்தவர் சக்திவேல் சிதம்பரம். சரியாகப் படிக்காத மாணவர்களுக்கு, பொதுத் தேர்வு நெருங்கும் சிலமாதங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் பள்ளியிலேயே கூட பாடம் எடுத்திருக்கிறார். தமிழகத்தின் மின்வெட்டு பிரச்சனை எல்லோரும் அறிந்ததே. அதனைச் சமாளிக்க நண்பர்களின் துணைகொண்டு UPS வாங்கி, அதன்மூலம் மாணவர்களின் படிப்பிற்கு உதவி செய்திருக்கிறார். (இதைப் பற்றி தி ஹிந்து நாளிதழில் நண்பர் AD பாலா எழுதியிருக்கிறார்.) எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பள்ளி மாணவர்களை, தனது சொந்தப் பிள்ளைகளாக பாவித்து பணி செய்யும் ஆசிரியர்கள் மிகக் குறைவு. அதிலும் சக்திவேல் போன்றவர்கள் அரிதிலும் அரிது. சக்தி முகநூலில் பின்வருமாறு எழுதி இருக்கிறார்:

ஆரம்ப காலத்தில் தனியார் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது TRB தேர்வுகளுக்கு விண்ணப்பித்தது கூட இல்லை. "ABCD கூட தெரியாத பையனுக்கு நான் என்னத்த English சொல்லி குடுக்கறது சார்?"

உடன் பணிபுரிந்த அஷோக் மாஸ்டர் சொன்னார்,"நீங்க exam எழுதாமயே வேலை வேணாம், விருப்பமில்லைனு சொன்னா எப்டி சார்? எழுதுங்க, select ஆகுங்க, அப்புறம் வேலை வந்ததுக்கு அப்புறம் வேணாம்னு சொல்லுங்க!"

அடுத்த தேர்வில் வெற்றி பெற்றேன். வேணாம்னு சொல்ல என் மக்க விடல.

அம்மா கண்ணுல ஆனந்தக் கண்ணீரைப் பாத்த பிறகு ஒரு பொறுப்புள்ள (!) பிள்ளை என்ன பண்ண முடியும் சொல்லுங்க? கழுதை ஒரு எட்டு வருஷம் பொறுத்து resign பண்ணிக்கலாம்னு அப்பவே decide பண்ணிட்டேன்!!!!!!

அதுக்கு அப்புறம் நானும் பல முறை தலையால தண்ணி குடிச்சி பாத்துட்டேன். ஒவ்வொரு நாளும் இந்த Government வாத்தியாருங்க பண்ற அலும்பு தாங்க முடியல என்னால.

"நான் ஒரு senior வாத்தியாரு, எனக்கு தொடர்ந்து 3 period போட்டா என்ன அர்த்தம்"-னு கேட்டாரு ஒரு வாத்தியாரு!

"எதுக்கு இப்ப evening class? எதாவது ஆச்சுன்னா என் வேலை போகும், என் தாலிய அறுக்காத"-னாரு ஒரு Headmaster!

"இந்த பையனுக்கு இன்னா வயசிருக்கும் இவன் என்னை போயி Games நடத்துடான்றான்? நான் என்ன PT Master-ஆ இல்ல Drill Master-ஆ" என்று நடு கிரவுண்டில் நின்று கத்தினார் ஒரு PET Master!!!!!
-------------------------------
இவர்களையும் இந்த மானங்கெட்ட பிழைப்பையும் உதறித் தள்ள பலமுறை எத்தனித்துள்ளேன். ஒவ்வொரு முறையும் குடும்பப் பொருளாதாரம் குறித்தும், நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் என்னிடம் சுருங்கச் சொல்லி விளங்கச் செய்தவர் அன்புத் தங்கை Cimi Meena.

"Private school போனா இத விட அடிமைத்தனமா இருக்கனும். இங்க நாலு ஏழை பசங்களுக்காவது உதவி பண்றோம். நாமளும் போயிட்டா அவங்க என்ன பண்ணுவாங்க?"
---------------------
அரசுப் பள்ளி மாணவர்களை என்னுடனே வைத்து நாள் முழுவதும், வருடம் முழுவதும் பார்த்துக்கொள்ள முடியும் என்ற எண்ணம் கடந்த மாதம் ஏற்பட்டபோது, தொலைபேசியில் அழைத்து விவரம் சொன்னேன்.

"நல்ல வாய்ப்பு. Resign பண்ணிடு."
---------------------------
தம்பி உடையானைப் பற்றி எனக்குத் தெரியாது.
தங்கை உடையான் Government-க்கு அஞ்சான்.
நன்றி மீனா.

சக்திவேல் சிதம்பரம் போன்றவர்களின் ராஜினாமா அரசுப் பள்ளிகளுக்குப் பெரிய இழப்பு. அதனினும் இழப்பு சக்தி வேலை செய்த பள்ளியில் படித்த கிராமப்புற மாணவர்களுக்குத் தான். சக்திவேல் அரசு அங்கீகாரம் பெற்ற வேறொரு தனியார் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்துவிட்டார். அந்த மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள். நல்ல வழிகாட்டலுடன் கூடிய தெளிவான கல்வி அவர்களுக்குக் கிடைக்கும். சக்திவேல் தரமான ஆங்கில ஆசிரியர் என்பதையும் நம் மக்களின் கவனத்திற்குக் கொண்டுவரக் கடமைப் பட்டிருக்கிறேன். (எல்லா பாடங்களும் எடுக்கக் கூடிய ஆசிரியரும் கூட.) கீழ்நாத்தூர் புறவழிச் சாலையில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் “பகவான் உயர்நிலைப் பள்ளியை” நண்பர்களுக்குக் கொஞ்சம் அழுத்தமாகவே பரிந்துரை செய்கிறேன்.
திருவண்ணாமலை – கீழ்நாத்தூர் பகுதியில் வசிக்கும் நண்பர்களுக்கு சக்திவேலைப் பற்றியும், அவர் பொறுப்பேற்றுள்ள பள்ளியைப் பற்றியும் அறிமுகம் செய்து வையுங்கள். சக்தி போன்றவர்களிடம் குழந்தைகள் பாடம் படிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

சக்திவேல் சிதம்பரத்தைத் தொடர்புகொள்ள: 

4 comments:

 1. அருமையான ஆசரியர் பற்றிய அறிமுகம் ..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 2. யாருடைய முகநுாலுக்கும் நான் பெரும்பாலும் கமென்ட் சொல்லியது இல்லை. இதில் தலைக்கனம் என்று சொல்லமாட்டேன். எந்த விஷயமும் என்னை ஈர்க்கவில்லை. ஆனால், நானும் என் கருத்தை பதிவு செய்ய வேண்டும் என துாண்டியது உங்களின் செய்கை.
  அதிக நாட்கள் விடுமுறை. உள்ளூரில் வேலை என்பதால் அரசுப்பள்ளியில் ஆசிரியராக ஏராளமான போட்டி. அதை சிறப்பாக செய்ய உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைக்கவில்லை எனபதால் உதறித்தள்ளிய சக்திவேல் சிதம்பரத்தின் செயல் சிந்திக்க வைக்கிறது.

  ReplyDelete
 3. யாருடைய முகநுாலுக்கும் நான் பெரும்பாலும் கமென்ட் சொல்லியது இல்லை. இதில் தலைக்கனம் என்று சொல்லமாட்டேன். எந்த விஷயமும் என்னை ஈர்க்கவில்லை. ஆனால், நானும் என் கருத்தை பதிவு செய்ய வேண்டும் என துாண்டியது உங்களின் செய்கை.
  அதிக நாட்கள் விடுமுறை. உள்ளூரில் வேலை என்பதால் அரசுப்பள்ளியில் ஆசிரியராக ஏராளமான போட்டி. அதை சிறப்பாக செய்ய உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைக்கவில்லை எனபதால் உதறித்தள்ளிய சக்திவேல் சிதம்பரத்தின் செயல் சிந்திக்க வைக்கிறது.

  ReplyDelete
 4. கிராமப்புறப் பள்ளிகளில் வேலை செய்து மிகவும் சவாலான விஷயம்.
  அருமையான பதிவு.
  நன்றி. வாழ்த்துகள்.

  ReplyDelete