Thursday, August 1, 2013

எளிமை - பிரபஞ்ச ஆற்றல்

ஒவ்வொருவரின் முனேற்றத்திலும் உழைப்பு தவிற்க முடியாத அம்சம். எனினும் பிரபஞ்ச ஆற்றல் ஒருவரை ஓரிடத்தில் நிற்க வைக்க முடிவு செய்துவிட்டால், அதனை மீறி யார் தான் என்ன செய்துவிட முடியும்? நீங்களே சொல்லுங்கள்...!

ஏ. ஆர். ரகுமானின் வாழ்வில் திருப்பு முனையாக அமைந்த தருணம் என எதைச் சொல்வது?

திலீபிற்கு உடல் சுகமில்லாமல் போகிறது. தந்தையை வேறு அவர் சிறுவயதிலேயே இழந்திருக்கிறார். அவருடைய தாயார் எங்கெங்கோ அழைத்துச் சென்று வைத்தியமும் பார்த்திருக்கிறார். குழந்தை திலீபிற்கு குணமாவது போலத் தெரியவில்லை. கடைசியாக பழவேற்காடு செல்லும் வழியில், ஆண்டார் குப்பத்தின் அருகில் முஸ்லீம் நகர் பகுதிய ஓட்டினார் போல இருந்த - ஒரு முஸ்லீம் மார்க்க ஆன்மீகப் பெரியவரிடம் அழைத்துச் சென்றிருகிறார். (நான் தினமும் நடை செல்லும் பகுதிக்கு மிக அருகில் தான் இந்த இடம் இருக்கிறது. அமீர்கான் போன்ற திரை நட்சத்திரங்கள் கூட இந்தப் பெரியவரைப் பார்க்க வந்ததுண்டு. பெரியவர் இறந்ததும் அதே இடத்தில் அவரை சமாதியாக்கிவிட்டார்கள் என்று கூட கேள்விப்பட்டேன்.)

என்ன ஆச்சர்யம்!? பெரியவரின் வழிகாட்டுதலில் திலீபிற்கு கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுகிறது. பின்னர் பூரணமாகவும் உடல் நலம் தேரியிருக்கிறார். அதன் பிறகு திலீபும், அவரது தாயாரும், சகோதரியும் முஸ்லீம் மார்க்கத்தைத் தழுவியது தனிக் கதை. பின்னர் “திலீப்” என்ற பெயரை மாற்ற வேண்டி – ஒன்றிரண்டு பெயர்களை பரிசீலனையில் வைத்திருக்கிறார்.

“ரோஜா” திரைப்படம் வெளிவரும் சமயம். பெயரைக் கூட உடனே முடிவு செய்ய வேண்டிய கட்டாயம். இறுதியில் “அல்லா ரக்கா ரகுமான்” என்ற பெயரைச் சூட்டிக் கொள்கிறார். அதனை மணிரத்னம் “ஏ.ஆர். ரகுமான்” என்று சுருக்கி அம்சமாகவும், கேச்சியாகவும் பயன்படுத்துகிறார். (மணிரத்னம் தான் இந்த பெயரை செலக்ட் செய்தார் என்றும் கூறுகிறார்கள்.)

“ரோஜா” – ரகுமானின் முதல் படம் அல்ல என்பதுதான் சுவாரஸ்யமான விஷயம். மலையாளத்தில் ஒரு பாடலுக்கோ / இரண்டு பாடலுக்கோ அவருடைய அப்பா வேலை செய்த படத்தில் டியூன் போட்டிருக்கிறார் என்று அரசால் புரசலாக பேசிக் கொல்கிறார்கள். எனினும் “உழவன்” தான் ரகுமானின் முதல் திரைப்படம் என்பது தமிழ்மகன் எழுதியுள்ள “செல்லுலாயிட் சித்திரங்கள்” நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரோஜாவிற்கு பின்னர் வெளிவந்த கதிர் இயக்கிய “உழவன்” தோல்விப் படம். செண்டிமெண்ட் பார்க்கும் இந்திய சினிமா உலகில் “உழவன்” திரைப்படம் முதலில் வெளிவந்திருந்தால் ரகுமான் என்னவாகியிருப்பார்?

பிரபஞ்ச ஆற்றல் ஒருவனை ஓரிடத்தில் நிற்க வைக்க முடிவு செய்துவிட்டால் – யார் தான் என்ன செய்துவிட முடியும்? சந்தற்பங்களும் பிரபஞ்சத்தின் முடிவுக்கு ஏற்பத் தானே அமைகிறது. உருத்தெரியாத அந்த ஆற்றலிடம் ரகுமான் தன்னை முழுவதுமாக ஒப்படைத்து விட்டதுதான் அவர் மென்மேலும் மெருகேறக் காரணமோ என்று கூட நினைத்திருக்கிறேன்.

முதலில் கமிட் ஆகிய “உழவன்” பின்னர் ரிலீஸ் ஆனதும், இரண்டாவதாக கமிட் ஆகிய “ரோஜா” முன்னர் ரிலீஸ் ஆகி மியூசிகல் ஹிட் அடித்ததும், அதன் பின்னர் ரகுமான் உச்சத்தைப் பிடித்ததும் வரலாறு. ரகுமானை தேவதூதன் போல நம் மக்களும் தற்சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

போலவே, லதா மங்கேஷ்கர் வாழ்வில் நடந்த சம்பவமும் சுவாரஸ்யம் நிறைந்தது. அப்போது லதா மங்கேஷ்கருக்கு பதிமூன்று வயது. ஹிருதயக் கோளாறால் தந்தை இறந்துவிட்டார். லதாஜிக்கு சம்பாதித்தே ஆகவேண்டிய கட்டாயம். ஓர் இசையமைப்பாளர் ரயிலுக்காகக் காத்துக் கிடந்தாராம். அந்த நேரம் பார்த்து அங்கு சென்ற லதாஜி சினிமாவில் பாடுவதற்கு ச்சேன்ஸ் கேட்டிருக்கிறார்.

“எதாச்சும் ஒரு பாட்டு பாடு பார்க்கலாம்!” என்று கேஷுவலாகக் கேட்டிருக்கிறார் அந்த ம்யூசிக் அடிப்பவர். ஆம்... “ம்யூசிக் அடிப்பவர்” என்றல் இசைப்பவர் என்று அர்த்தம். லதாஜி சுற்றும் முற்றும் பார்த்திருக்கிறார். அருகில் ஒரு காலி சிகரெட் பெட்டி இருந்ததாம். அதனை எடுத்து, தாளம் போட்டு பாடியிருக்கிறார். பின்னர் லதாஜி இந்திய சினிமா இசையுலகில் உச்சத்தைத் தொட்டார் என்பது வரலாறு. இசைப் பிரியர்களுக்கு லதாஜியும் ஒரு தேவ தூதர்தான். பூமிக்கு வந்து அவதாரம் எடுத்த கந்தர்வ குல மங்கை தான்.

இந்திய திரைவானில் ஜொலிக்கும் நட்சத்திரமான லதாஜியின் இசைவாழ்வு சாதாரண ரயில் நிறுத்தத்தில், காலி சிகரெட் பெட்டியுடன் தொடங்கி இருக்கிறது. நான் தான் சொன்னேனே...! பிரபஞ்ச ஆற்றல் ஒருவரை ஓரிடத்தில் நிற்க வைக்க முடிவு செய்துவிட்டால் யார் தான் என்ன செய்ய முடியும்?

இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் இருவருமே உச்சத்தைத் தொட்டவர்கள். போலவே சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர்கள். இந்திய திரையிசை வரலாற்றில் இருவரது இடத்தையும் இன்னொருவர் அடைவது கூட ஒருநாளில்லை ஒருநாள் சாத்தியமாகலாம். காலம் அவர்களை கடந்து செல்லும்.

“திறமை என்ன திறமை? புகழ் என்ன புகழ்?” – இவையெல்லாம் எல்லோருக்கும் தான் வாய்க்கிறது. ஆனால் மனிதம் சுரக்கும் “எளிமை”. அது தான் முக்கியம். எளிமையைக் காட்டிலும் மனிதர்களுக்குக் கவர்ச்சியையும், ஒளியையும் கொடுக்கக் கூடிய வேறென்ன இருக்கிறது இத்த ஜீவகாருண்ய வாழ்வில்?

பாலச்சந்தர் இயக்கிய “ஏக் துஜே கேலியா” படத்தின் பாடல் பதிவு. லதாஜியும், SPB-யும் அருகருகே அமர்ந்து, கொடுத்த டியூனுக்கு ஏற்ப ஹிந்தி வரிகளைப் பாடி பயிற்சி செய்து கொண்டிருகிறார்கள். SPB-க்கு முதல் ஹிந்தி பிரவேசம். குடிப்பதற்கு சுடச்சுட காஃபி கொண்டுவருகிறார்கள். எதிர்பாராத விதமாக கோப்பை தடுமாறி லதாஜியின் பக்கம் சாய்ந்திருக்கிறது. லதா மங்கேஷ்கரின் புடவையெல்லாம் காஃபிக் கறை. அதற்கு மேல் SPB-யே சொல்கிறார்.

“நம்மளோட ஹிந்தி ச்சேப்டர் இத்தோட க்ளோஸ். நம்ம வீட்டுக்குப் போக வேண்டியது தான்” என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் “லதாம்மா அதை ரொம்ப கேஷுவலா எடுத்துக்கிட்டாங்க. என்னோட பதட்டத்த பார்த்து, சிரிச்சி பேசி ரிலாக்ஸ் பண்ணாங்க. ஹிந்தி சினிமாவுல அவங்க உச்சத்துல இருக்கறவங்க கிட்ட இந்த மாதிரி முட்டாள் தனம் பண்ணிட்டோம்!. எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியல. துக்கடா பையன் தானேன்னு லதாம்மாவும் கோவப்படாம, அருமையா ரெக்கார்டிங் பண்ணி கொடுத்தாங்க. அவங்கள பத்தியெல்லாம் பேசறதுக்கே எனக்கு தகுதி இல்ல. அவங்கெல்லாம் போட்ட பிச்சை தான் இந்த வாழ்கை” என்று அடுக்கிக் கொண்டே செல்கிறார்.

“தேர் மேரே பீச்சுமே... கேசா ஹேனா பந்தன் அஞ்சாஆஆஆஅ....நா” என்ற பாடல் SPB-க்கு தேசிய விருது பெற்றுத் தந்தது தனிக்கதை. SPB-யும் ஒரு வரலாறு. நான் தான் சொன்னேனே. பிரபஞ்ச ஆற்றல் நினைத்தால் அதற்க்கு மாற்றேது...!

ரஜினியாக இருக்கட்டும்,ரகுமானாக இருக்கட்டும், லதாஜியாக இருக்கட்டும், எஸ்.பி.பி -யாக இருக்கட்டும் – “திறமையானவர்கள், புகழ் வாய்ந்தவர்கள், உச்சத்தில் இருப்பவர்கள், திரைவானின் நட்சத்திரங்கள்” என ஏதேதோ பகிர்கிறார்கள். இவற்றையெல்லாம் விட “எளிமையானவர்கள், தன்மையானவர்கள்” என்பது தெறிய வரும் பொழுதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனெனில் எளிமை தானே ஜீவகாருண்யம். அந்த எளிமை தானே வாழ்வை மெருகேற்றுகிறது. பிரபஞ்ச ஆற்றலும் எளிமையத் தானே வலைவீசித் தேடுகிறது.

சுபம்... மங்களம்...

2 comments:

  1. பிரபஞ்ச ஆற்றல் ஒருவரை ஓரிடத்தில் நிற்க வைக்க முடிவு செய்துவிட்டால் யார் தான் என்ன செய்ய முடியும்?/// ஆந்த ஆற்றலைதான் பல வருஷமா வலை வீசி தேடிக்கிட்டு இருக்கேன்.. சிக்கமாட்டேன்கிறான்...ஒரு நாள் கண்டிப்பாக சிக்குவான்... நம்பிக்கையோடு வலை வீசிக்கிட்டு இருக்கேன்.. கிருஷ்ணா.. நல்ல பதிவு... இப்ப எல்லாம் உன் எழுத்தை விரும்பி படிக்க ஆரம்பிச்சிட்டேன்... காரணம் அதில் அலட்டல் இல்லாத உண்மைதன்மை...


    சிறப்பாய் தொடாந்து எழுதுங்கள்.


    பிரியங்களுடன்
    ஜாக்கிசேகர்.

    ReplyDelete