Friday, August 2, 2013

புன்னகைக்கும் மங்கை

நடுத்தர வயதுப் பெண் வழிமறித்தாள். இதுவரை அவளிடம் பேசியதில்லை. கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் என்னைவிட எழெட்டு வயது கூடுதலாக இருக்கும். இதழில் புன்னகையை வேறு தவழவிட்டாள். என்றேனும் பேருந்துப் பயணங்களில் எதிர்பட நேர்கையில் பார்த்துச் சிரிப்பாள். ஒவ்வொரு முறையும் நான் பார்க்காதது போலத் திரும்பிக் கொள்வேன். இவளது வீடு எனது கிராமத்தின் காலனியை விட்டு சற்றே தள்ளி இருக்கிறது. தனிமையில் அமைந்த வீடு. காலையோ, மாலையோ – அவளது வீட்டைக் கடக்கும் பொழுதெல்லாம் ஏதாவது வேலை செய்து கொண்டிருப்பாள்.

சில நேரங்களில் பாத்திரத்தை சுழற்றி அதிலுள்ள கழிவை வீதியில் வீசுவாள். சுழற்றி வீசிய நீர் முச்சந்தியில் வந்து விழும். சில நேரங்களில் எனது பாதத்தில் வந்து தெறிக்கும். அப்பொழுதும் கூட இதழ்களில் புன்னகையைத் தவழ விடுவாள். சிரிப்பதற்கென்றே பிறந்தவள் போல. நான் கவனிக்காதது போல சென்றுவிடுவேன்.

“என்னடா இவன் திமிர் புடிச்சவனா இருக்கறானே..”–ன்னு தானே அவள் நினைத்திருக்க வேண்டும். அவளோ...! அதற்கடுத்து பார்க்கும் தருணங்களில், என்னுடைய செய்கையை முற்றிலுமாக மறந்தவாறு அதே டிரேட் மார்க் புன்னகையை மீண்டும் வீசிச் செல்வாள். இன்றும் அப்படித்தான் நடந்தது. புன்னகையை வீசியது மட்டுமல்லாமல் – அருகில் நெருங்கியவாறு வந்தாள். நான் ஸ்தம்பித்து நின்றேன்.

“உங்ககிட்ட பழைய ஃபோன் இருக்குமா? இருந்தா வெலைக்குக் கெடைக்குமா?” என்றாள்.

இந்தப் பெண்மணிக்கு இரண்டு பிள்ளைகள். இருவருமே பத்தாம் வகுப்பு படிக்கிறார்கள். மூத்த மகனை இரண்டு நாட்களுக்கு முன்பு பேருந்தில் சந்தித்தேன். அதுவும் இரவு 10 மணிக்கு. ஸ்கூல் யூனி ஃபார்மில் வேறு இருந்தான். அந்தப் பேருந்தை விட்டால் – ஏதேனும் லாரியைப் பிடித்துத் தான் ஊருக்குத் திரும்ப வேண்டும். எத்தனையோ நாட்கள் “இலக்கியக் கூட்டம், நண்பர்களுடைய சந்திப்பு, இலக்கற்ற பயணம்” என பேருந்தைத் தவற விட்டுவிட்டு “ஷேர் ஆட்டோ, டாட்டா மேஜிக், வேன், லாரி” என பலவாறு பயணப்பட்டு ஊருக்குத் திரும்பியிருக்கிறேன். ஒருமுறை கல்கத்தா நெடுஞ்சாலையில் ஏழு கிலோ மீட்டருக்கு டிராபிக் ஜாம். இரவு பத்தரை மணி இருக்கும். வாகனங்கள் ஒரு இன்ச் கூட நகரவில்லை. கொஞ்சம் கூட யோசிக்காமல் பேருந்தைவிட்டு கீழே இறங்கினேன். பொடிநடையாக 7 கிமீ தூரம் நடந்தே, வியர்க்க விறுவிறுக்க அந்தப் பின்னிரவில் வீட்டிற்கு வந்து சேர்ந்திருக்கிறேன். என்னுடைய அம்மா தொந்தரவுகள் இன்றி நிம்மதியாக படுத்து உறங்கிக் கொண்டிருப்பாள்.

இரவு பத்து மணி வாக்கில் கிராமத்துச் சிறுவன் தனியொருவனாக பேருந்தில் அமர்ந்திருக்கிறான். கடைசி இருக்கையில் உட்கார்ந்து கொண்டு அந்தப் பையனையே கவனித்துக் கொண்டிருந்தேன். அவனோ முன்னிருக்கையில் அமர்ந்துகொண்டு, எந்தவித பதற்றமும் இன்றி மூக்கில் விரல்விட்டு நோண்டிக் கொண்டிருந்தான். வாகனம் புறப்பட்டு ஊருக்கு வந்து சேர்ந்தது. இருவரும் பேருந்தை விட்டு கீழே இறங்கினோம். அவனிடம் கேட்டேன்:

“என்ன ஸ்கூல் கட் அடிச்சிட்டு சினிமாவுக்கு போயிட்டு வரியா?”

“இல்ல’ண்ணா...” என்று தலையாட்டினான்.

“ஃப்ரண்ட்ஸ் கூட ஊர் சுத்திட்டு வரியா...?” என்றேன்.

“அதெல்லாம் இல்லிங்கண்ணா...” என்றான்.

“சொந்தக்காரங்க வீட்டுக்கு போயிட்டு வரியா...?” என்றேன்.

“ச்சே ச்சே... அங்கெல்லாம் போக மாட்டேண்ணா...” என்றான்.

“ஏன்டா எதைக் கேட்டாலும் இல்ல இல்லன்னு சொல்றியே... அப்போ உன் கேர்ள் ஃப்ரண்ட் கூட ஊர் சுத்திட்டு வரியா...!?” என்றேன் நக்கலாக.

சோர்வாக இருந்தாலும் கேட்ட கேள்வியை சரியாக புரிந்துகொண்டு, அதன் அர்த்தத்தை முழுவதுமாக உள்வாங்கிக் கொண்டு வெட்கப்பட்டுச் சிரித்தவாறே “சென்னை ஸ்கூல்ல சேர்ந்து படிக்கிறேண்ணா” என்றான்.

“சோழவரம் கவர்மென்ட் ஸ்கூல்ல தான நீயும், உன்னோட தம்பியும் ஒரே க்ளாஸ் படிக்கிறீங்க?” என்றேன்.

“இந்த வருஷம் நான் மட்டும் கிண்டிக்கு பக்கத்துல இருக்க (ஆலந்தூர் அரசினர் பள்ளி) ஸ்கூல்ல சேர்ந்துட்டேண்ணா” என்றான்.

“ஏன்டா... சோழவரம் ஸ்கூல் உனக்கு சரிப்பட்டு வரலையா? அதுகூட எங்கயோ போய் சேர்ந்து இருக்கியே. டெய்லி போயிட்டு வர கஷ்டமா இல்ல?” என்றேன்.

“அங்கதாண்ணா... வாலிபால் நல்லா சொல்லி கொடுப்பாங்க.” என்றான்.

“ஒஹ்... வாலிபால்னா இட்டரெஸ்ட்டா...!?” என்றதும், கூச்சத்துடன் கூடிய சந்தோஷத்தில் சிரித்தான்.

“ஸ்கூல் ஹாஸ்டல்ல தங்கிட வேண்டியதுதானே.” என்றேன்.

“அங்கெல்லாம் தங்க புடிக்காதுன்னா...” என்றான்.

“போயிட்டு வறதுக்கே நேரம் சரியா இருக்குமே! நீ எப்படி படிப்ப? எப்படி பாஸ் பண்ணுவ?” என்றேன். பதில் சொல்லத் தெரியாமல் திருதிருவென முழித்தான்.

யார் சொல்லி ஐம்பது கிலோமீட்டர் தள்ளி இருக்கும் பள்ளியில் சேர்ந்தானோ தெரியவில்லை? எப்படி அந்தப் பள்ளியில் சேர்த்துக் கொண்டார்கள் என்பதும் தெரியவில்லை. “புயல், மழை, காற்று, வெயில்” என பருவநிலை எப்படி மாறினாலும் தினந்தோறும் நிச்சயமாக அவன் பள்ளிக்குச் சென்று திரும்புவான். அவனென்ன படிப்பதற்காகவா போகிறான். விளையாடத் தானே பயணம் செய்கிறான். அதுவும் தனக்குப் பிடித்த விளையாட்டை. விடுமுறை நாட்களில் கூட அவன் பள்ளிக்குச் சென்றாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை. என்னுடைய கிராமத்துச் சிறுவனுக்கு இருப்பது விருப்பமோ அல்லது ஆர்வக் கோளாறோ! – ஏதோ ஒன்று தான் அவனை உந்தித் தள்ளுகிறது.

எனினும் பின்னிரவு நேரத்தில் தனியொருவனாக அந்தச் சிறுவன் வீடு திரும்புகிறான். இளம் வயதிலேயே கணவனை இழந்து விட்டு, தனது மனக் கவலைகளை எல்லாம் மறைத்துக் கொண்டு, பார்க்கும் பொழுதிலெல்லாம் புன்னகையை அள்ளி வீசும் நடுத்தர வயதுக் கைம்பெண் – தனது பதின்பருவ மூத்த மகன் நெடுந்தூரம் பயணம் செய்து, பின்னிரவு நேரத்தில் மீண்டும் வீடு வந்து சேரும் வரை களங்கத்தானே செய்வாள்.

“உங்ககிட்ட பழைய ஃபோன் இருக்குமா? இருந்தா வெலைக்குக் கெடைக்குமா?” என வழிமறித்து அந்தக் கைம்பெண் விசாரித்தது, மூத்த மகனுக்காகத் தான் இருக்க வேண்டும்.

“இல்லிங்களே... எங்கிட்டே பழைய ஃபோன் எதும் இல்லிங்களே...” என்றதும் சிரித்தவாறே தலையாட்டிக் கொண்டு “சரிங்க...” என்ற வார்த்தையை மட்டும் உதிர்த்தவாறு தனது வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தாள். அவளது இரண்டாவது மகனோ கிராமங்களில் பயன்படுத்தும் லோக்கல் கிரிக்கெட் ஸ்டம்பை கைகளில் பிடித்து - காற்றில் சுழற்றி மேற்சட்டையின்றி விளையாடிக் கொண்டிருந்தான்.

இதமான மாலைநேரக் குளிர்காற்று முகத்தில் அறைந்தது. நான் எப்பொழுதும் போல இலக்கின்றி நடந்துகொண்டிருந்தேன்.

4 comments:

  1. Krishna, you could have easily made this as good short story. It is very interesting.

    ReplyDelete
  2. அருமையான எழுத்து நடை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. அருமை. நல்லது.
    அவர்களுக்கு உதவிற்க்கலாமே

    ReplyDelete