Friday, July 19, 2013

மரியான் – திரை விமர்சனம்

ராஞ்சனா ஹிந்தியில் ஹிட் என்று சொல்கிறார்கள். நம்மாட்கள் குருவி படத்தையும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் என்று தானே சொல்லுவார்கள். ராஞ்சனாவின் தமிழ் டப்பிங் வெர்ஷனான அம்பிகாபதி அட்டர் பிளாப். “ஆடுகளம்” – 2011-ல் தனுஷுக்கு தேசியவிருது வாங்கிக் கொடுத்த வெற்றிமாறனின் படம். அதன்பிறகு தனுஷ் நடித்த “சீடன், மாப்பிள்ளை, வேங்கை, மயக்கம் என்ன, 3” போன்றவற்றில் பலவும் சுமாரான படங்கள். கடைசி மூன்று படங்களும் பிளாப் என்றே சொல்லலாம். “3” படத்தின் தோல்வி தனுஷை “எதிர் நீச்சல்” படத்தைத் தயாரிக்கும் அளவிற்குக் கொண்டு சென்றுள்ளது. தொடர் தோல்வியிலிருந்து மீண்டு ஒரு பம்பர் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தான், விதவிதமாக கதாப்பாதிரங்களாகத் தேர்ந்தெடுத்து, அதீதமான உழைப்பைக் கொடுத்து தனுஷ் நடித்து வருகிறார். 
“சீடன், மாப்பிள்ளை, வேங்கை” போன்ற கமர்ஷியல் படங்களை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால், “மயக்கம் என்ன?, 3” ஆகிய படங்களில் தனுஷ் தனது கடினமான உழைப்பையும் நடிப்பையும் கேரக்டர் மாடுலேஷனில் கொட்டியிருப்பார். தனுஷின் நடிப்பு மெச்சப்பட்டாலும் இரண்டு படங்களுமே பெரிதாகப் போகவில்லை. இரண்டு நெருங்கிய சொந்தங்களுடன் கைகோர்தப் படங்கள் (செல்வராகவன் & ஐஸ்வர்யா R தனுஷ்) என்பது குறிப்பிடத்தக்கது. “3” – வெளியான பின்பு - இனி ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் நடிப்பேனா என்பது சந்தேகம் தான் என்ற ரீதியில் பேட்டி கூட கொடுத்திருந்தார். ராஞ்சனாவில் துடுக்குத் தனமான கதாப்பாத்திரம். கடினப் பிரயத்தனப் பட்டு வேற்றுமொழியில் சொந்தமாகப் பேசியும் நடித்திருந்தார். ஹிந்தியில் படம் ஹிட் என்கிறார்கள். நான் தான் சொன்னேனே நம்மாட்கள் குருவியைக் கூட பம்பர் ஹிட் என்பார்கள். தேவயானி நடித்த “திருமதி தமிழ்” திரையரங்குகளில் 80 நாட்கள் ஓடியிருக்கிறது. தேவயானியின் கணவர் ராஜகுமாரனின் நடிப்பை திரைத் துறையைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகள் தொலைபேசியில் கூப்பிட்டுப் பாராட்டினார்களாம். திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் பாராட்டு விழாகூட சமீபத்தில் நடந்தது.

கொலைவெறி தந்த அடையாளத்தை அளவீடாகக் கொண்டும் ராஞ்சனாவின் ஹிட்டைப் பார்க்கவேண்டி இருக்கிறது. இனி கொலைவெறி போன்ற மெட்டுக்களில் பாடல்கள் பாடப்போவதில்லை எனவும் தனுஷ் பகிர்ந்ததாக நாளேடுகளில் படித்த ஞாபகம். மேலும், ஹிந்தி சினிமாவின் லேட்டஸ்ட் டிரென்ட் 80’s லவ். அந்த கான்செப்டில் ராஞ்சனாவிற்கு முன்பு வெளிவந்த ஒன்றிரிரண்டு ஹிந்திப் படங்கள் சூப்பர் ஹிட் என்று சினிமா பற்றி எழுதும் நண்பரொருவர் பகிர்ந்துகொண்டார். ஆகவே டிரென்டிற்குக் கிடைத்த வெற்றியாகவும் ராஞ்சனாவைப் பார்க்க வேண்டி இருக்கிறது.

ஆக “சீடன், மாப்பிள்ளை, வேங்கை, மயக்கம் என்ன, 3” என்ற பட்டியலில், தனுஷ் நடித்து தென்னகத்தில் வெளியான “அம்பிகாபதி”யும் தோல்விப் பட்டியலில் சேர்க்கிறது என்பதுதான் உண்மை. எனவே தனுஷைப் பொருத்தவரை மரியான் படத்தின் வெற்றி மிக முக்கியமான ஒன்று. சும்மா சொல்லக் கூடாது, இந்தப் படத்தில் ஒரு நடிகனாக தனுஷ் வெளுத்து வாங்கியிருக்கிறார். அருமையாக நடித்திருக்கிறார். ஏற்றுக் கொண்ட கதாப் பாத்திரத்திரத்திற்கு வாங்கும் சம்பளத்திற்கேற்ப துலாக்கோளில் துல்லியமாக பாரம் நிறுத்தி, கூடவும் கூடாமல் குறையவும் குறையாமல் ஞாயம் செய்துவிடுகிறார். பார்வதி மேனன், அப்புக்குட்டி, உமா ரியாஸ்கான் போன்றோரும் பக்கபலமாக நடித்திருக்கின்றனர்.

மைலாப்பூர் வாசியான இயக்குனர் பரத் பாலாவுக்கு இதுதான் முதல் தமிழ் படம். ஏ. ஆர். ரகுமான் இசையமைத்து நடித்த “வந்தே மாதரம்” ஆல்பத்தை இயக்கியதன் மூலம் இவர் அகில இந்திய ஃபேமஸ் என்பது குறிப்பிடத்தக்கது. தினசரிகளில் படித்த ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு, கற்பனை வேர்களில் பயணித்து மரியான் படத்தின் கதையை பரத்பாலா ஆக்கியிருக்கிறார். நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய முயற்சி தான். திரைக்கதை ஆக்கத்தில் பரத் பாலா – ஸ்ரீராம் ராஜன் என்பவருடன் கைகோர்த்திருக்கிறார். உண்மையில் இருவரும் சேர்ந்து கொஞ்சம் போல சொதப்பி இருக்கிறார்கள். முதல் பாதி ஜவ்வு போல இழுக்கிறது. இரண்டாம் பாதி ஓரளவிற்குப் பரவாயில்லை. கடல் மற்றும் கடல் சார்ந்த படங்களில் வரும் ஹீரோக்கள் வித்தியாசமானவர்கள். தனியாளாக சமுத்திரத்திற்குச் செல்லுவார்கள். ஆளுயர மீனை கயிற்றில் கட்டி நடுவிரலில் கொக்கிபோட்டு இழுத்து வருவார்கள், புயல் எச்சரிக்கை விட்டு காற்றடிக்கும் சமயத்தில் தான் கவனம் பிசகாமல் ஹீரோக்கள் மீன்பிடிக்க நடுக் கடலுக்குச் செல்வார்கள். இதுபோன்ற ஏகப்பட்ட அசகாய சாகசத்தை கதாநாயகர்கள் செய்வார்கள். அதற்கு இந்தப் படமும் விதிவிலக்கல்ல.
(மரியான் இயக்குனர் பரத்பாலா & அவருடைய உதவியாளர்கள் டீம்)

ஒருவகையில் கமர்ஷியல் சினிமாவில் இதுபோன்ற சாகசங்கள் தவிர்க்கமுடியாத ஒன்று. வில்லன் கதாப்பாத்திரமும் அடி வாங்குகிறாரே ஒழிய ஒருவரையும் திருப்பி அடிக்கவில்லை. யாருமில்லா நேரத்தில் ஹீரோயினியை மட்டும் வில்லங்க ஆசாமி ஓரிடத்தில் பலவந்தம் செய்கிறார். அந்த நேரம்பார்த்து கதாநாயகியின் தந்தை பின்மண்டையில் அடிக்கவும், வில்லன் செத்த பாம்பாகப் படுத்துவிடுகிறார். தனுஷிடம் கூட அடிவாங்குகிறாரே ஒழிய திருப்பி அடிக்கவில்லை.

மரியான் கதாப்பாத்திரம் சூடான் கம்பெனியில் வேலை செய்வதில் இருந்துதான் திரைப்படம் ஆரம்பிக்கிறது. காலத்தை நிர்ணயிக்கும் எந்த ஒரு விஷயமும் படத்தில் இல்லை. சுவற்றில் மாட்டிய கேலண்டர் இருந்தாலும், அதில் தேதிகள் முழுவதும் கிழிக்கப்பட்டு கன்னி மரியாள் அல்லது ஜீசஸின் உருவம் அச்சிடப்பட்ட காகித அட்டை மட்டும் சுவற்றில் தொங்குகிறது. ஒரேயொரு அதரகாலத்துத் தொலைபேசிதான் மரியானின் சொந்த ஊரான கடல் கிராமத்தில் இருக்கின்றது. அதுவம் ஓர் அரசு பள்ளியில் தான் இருக்கின்றது. பள்ளியின் கரும்பலகையில் ஏதோதோ எழுதியிருந்தாலும், தேதி மட்டும் நுட்பமாகத் தவிற்கப் பட்டிருக்கின்றது. 


அரசு பள்ளியின் தொலைபேசி மூலம் தான் கதாநாயகியை சூடானிலிருந்து கதாநாயகன் தொடர்பு கொள்கிறான். “செல் ஃபோன், டிவி” போன்ற நவீன சாதனங்கள் எதுவும் திரைப்படத்தில் தென்படவில்லை. சூடானிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பும் வழியில் தான், மரியான் கொள்ளையர்களால் கடத்தப்படுகிறான். பின்னோக்கு யுக்தியில் திரைப்படம் பயணித்து, சூடானில் கடத்தப்பட்ட இடத்திலிருந்து மீண்டும் நிகழ்காலத்தில் தொடர்கிறது. கடத்தல் காரன் ஒருவனுடைய கழுத்தில் மண்டை ஓடுபோன்ற ஒன்று தொங்குகிறது. அவனுடைய கும்பல் எப்பொழுதும் துப்பாக்கியால் சுட்டவன்னமே இருக்கிறார்கள். சொந்த நாட்டின் எண்ணெய் வளம் சுரண்டபடுவதை எதிர்த்து அவர்கள் தீவிரவாதத்தைக் கைகளில் எடுக்கிறார்கள். அவர்களைக் குடிகாரர்களாகவும், மோசமானவர்களாகவும் மட்டுமே சித்தரிக்கும் வேலையைச் செய்யாமல் - அவர்களது பாத்திரத்திற்கு இன்னும் கூட ஞாயத்தைச் செய்திருக்கலாம்.   

கடத்தல்காரர்களிடம் இருந்து மரியான் தப்பி இந்தியா திரும்புவதுதான் கதை. “அவன் ஏன் வெளிநாடு செல்கிறான்? எப்படித் தாயகம் திரும்புகிறான்?” என்பதுதான் வலைப் பின்னலில் சொல்லப்பட்டுள்ளது. மீன்பிடி வலையில் சிக்கிய சத்தைகள் போல சில இடங்கள் சோர்வையே ஏற்படுத்துகின்றன. தமிழர்கள் கடத்தப்பட்டதைக் குறித்த நாளிதழ் செய்தியோ அல்லது வானொலி செய்தியோ படத்தில் எங்குமே பதிவு செய்யப்படவில்லை. தூதரகங்கள் தலையிட்டது போன்ற எந்தப் பதிவும் திரைப்படத்தில் இல்லை.

நடிகர்களின் காஸ்டியூம் பெரும்பாலான காட்சிகளில் தகதக ஜகஜகவென ஜொலிக்கின்றன. மூச்சடக்கி கடலின் ஆழத்தில் சென்று ஏதேனும் சேகரிப்பவர்கள் காட்டர்ன் டிரெஸ் போடுவார்களா என்பது சந்தேகமே. அப்படியே போட்டாலும் தகதக ஜகஜகவென போடுவார்களா என்பது அதனினும் சந்தேகமே. ஒருகிராமத்தில் மின்சாரம் இருக்கிறது. வீடுகளில் மின்விசிறியும் இருக்கின்றது. பொத்தானைத் தட்டினால் பளீரென ஒளிரும் மின்விளக்கும் இருக்கின்றது. அப்படியிருக்க லாந்தர் விளக்கையும், சிம்னி விளக்கையும் பயன்படுத்துவானேன். காட்சிகளின் அழகியலைக் கூட்ட பயன்படுத்தியிருக்கும் இதுபோன்ற விஷயங்கள் ஒருவிதமான அந்நியத் தன்மையை ஏற்படுத்துகின்றன. மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் செய்தது போலவே ஏ. ஆர். ரகுமான் இந்தப் படத்திலும் செய்திருக்கிறார். பாடல்கள் ஒன்று கூட படத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்டவில்லை. ஜவ்வுபோல இழுக்கும் திரைக்கதையை இவரது மெட்டுக்கள் மேலும் ஜவ்வு போல இழுக்கின்றன.

வசனப் பங்களிப்பை ஜோ டி குரூஸ் ஏற்றிருக்கிறார். எனினும் சிறப்பாகப் பங்காற்றியிருக்கிறார் என்று சொல்ல முடியாது. சில தருணங்களில் தேய்ந்த வட்டார வழக்குகளும், சில இடத்தில் தெளிவான தமிழ் உச்சரிப்புகளும் இருக்கின்றன. ஏற்கனவே சொல்லியதுபோல செல் ஃபோன் வராத நவீன அறிவியியல் கண்டுபிடிப்புகளுக்கு முற்பட்ட, தொலைக்காட்சியும் அதிக புழக்கத்தில் இல்லாத, வானொலி மட்டுமே இருக்கக்கூடிய கிராமத்தில் புழங்கும் வட்டார மொழி இந்தப் படத்தில் இருப்பதுபோல தெரியவில்லை. மரியானின் பின்னால் சுற்றுவதால் ஹீரோயினின் வீட்டிற்கு முன்பு நின்று மரியானின் தாய் கூச்சலிட்டு விட்டுச் செல்கிறார். அதன் பின்னர் இரவுநேரத்தில் தனியறையில் படுத்திருக்கும் ஹீரோ மரியானை சந்தித்து லிப் லாக் செய்யப் போராடுகிறார் ஹீரோயின் பனிமலர். 

(நடிகர் தனுஷுடன் - எழுத்தாளர் ஜோ டி குரூஸ்)

“ஏய்... சீவி(அம்மா) சும்மாவே ஊரைக் கூட்டிடுவா... நீவேற கூட இருக்குற... இங்கிருந்து போயிடு...” என்கிறார் ஹீரோ.

“காலைலயே வீட்டுக்கு முன்னாடி நின்னு announcement பண்ணிட்டாங்க” என்கிறாள் ஹீரோயின் பனிமலர்.

ரொமான்ஸ் சீன் என்பதால் தனுஷின் இளவட்ட ரசிகர்கள் அரங்கைப் பிளக்கும் வகையில் கோஷமிட்டார்கள். என்றாலும் இந்த “announcement” என்ற வார்த்தை அமெரிக்கன் ஆக்செண்டில் தெளிவாகக் காதில் கேட்டது. உண்மையில் “ஜோ டி குரூஸ்” நிறையவே பங்காற்றியிருப்பார் என்ற நம்பிக்கையில் தான் சென்றிருந்தேன். அவரை முழுமையாகப் பயன்படுத்தினார்களா என்பதும் சந்தேகமாகவே இருக்கின்றது.

தனுஷ் மற்றும் பார்வதி மேனனுக்கு அடுத்தபடியாக பாராட்டப்பட வேண்டிய முக்கியமான நபர் கேமரா மேன் Marc Koninckx. இவரது செய் நேர்த்தியால் தான் ஒவ்வொரு ஃப்ரேமும் கண்களைக் கவர்கிறது.

நடிப்பாலும், கேமராவாலும் ஓரளவிற்குத் தப்பி இருக்கும் படம் “மரியான்”. அதற்குமேல் வேறொன்றும் சொல்லுவதற்கு இல்லை. படத்தை எத்தனை முறை பார்க்கலாம் என்பது அவரவர் விருப்பம். (இத்தனை முறை பார்க்கலாம், அத்தனை முறை பார்க்கலாம் என்று நாட்டாமை செய்யும் தீர்ப்பு என்னுடைய தன்மைக்கு ஒத்துவராத ஒன்று.)

“படம் என்ன அரசியல் பேசுது? இதுவரைக்கும் பேசாத எந்த விஷயத்தைப் பேசுது?” என்று ஆராய்ந்து அலசுவது தேவையில்லாத வேலை என்று நினைக்கிறேன். இதற்கு முன்பு அதுபோல ஆராய்ந்து ஏதேனும் தீர்வு கண்டோமா? ஒவ்வொரு கடல் சார்ந்த படங்கள் வெளியான போதும் இது போன்ற ஆதங்கங்கள் ஏராளமாக முன் வைக்கப்பட்டுள்ளன. கமர்ஷியல் சினிமா காதலைத் தான் மையமாகப் பேசும். ஏனெனில் காதல் மட்டுமே எல்லா காலங்களிலும் சினிமா மூலம் விற்பனையாகும் ஒப்பற்ற பண்டம். மரியான் படமும் காதலைத் தான் பேசுகிறது. இது ஆவரேஜ் மூவி தான். என்றாலும் இளைஞர்கள் இருக்கிறார்கள் மரியானைக் காப்பாற்ற. அப்படியும் இல்லையெனில், நாந்தான் ஆரம்பத்திலேயே சொன்னேனே “குருவி”-யைக் கூட பாக்ஸ் ஆபீஸ் ஹிட் லிஸ்டில் சேர்த்து அழகு பார்க்கும் வம்சாவளி நாம். அவ்வளவு சீக்கிரத்தில் மாறிவிடுவோமா என்ன?

மரியானை நடுக்கடலில் தவிக்க விடுவோமா என்ன?

No comments:

Post a Comment