Thursday, July 18, 2013

திசை மாறும் பறவைகள் – கல்விச் சூழல்

ஹிந்து நாளிதழில் ZOHO ஊழியர் “சரண்பாபு”-வைப் பற்றி வெளிவந்திருந்த ஒரு செய்தியை முகநூலில் பகிர்ந்திருந்தேன். (Coding a success)

“+2 படித்துவிட்டு கணினி நிரல் எழுதுபவராக இருக்கிறாரா?” என்று சில நண்பர்கள் வியப்புடன் கேட்டனர். சிலர் ஸ்ரீதர் வேம்புவை பாராட்டித் தள்ளினர். இதுபோன்ற “வியப்புகளும், பாராட்டுகளும்” தேவையில்லாத விஷயமாகத் தான் எனக்குப் படுகிறது.“ஸ்ரீதர் வேம்பு” - தெளிவான பிசினஸ் மேன். “சரண் பாபு” – தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, தனது பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்ட ஒருவர். பரஸ்பர இருத்தலியல் தேவைதான் இவர்கள் இருவரையும் பிணைத்திருக்கிறது. “மகாபாரத மனிதர்கள் காட்டும் மகத்தான வாழ்க்கை” என்று சாருகேசி மொழிபெயர்த்த குர்சரண் தாஸ் எழுதிய “The Difficulty Of Being Good” என்ற ஆங்கிலப் புத்தகத்தில் ஒரு வாக்கியம் வரும்.

“ஒருவரது சுயநலம் சமுதாய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் எனில் சுயநலமானது சிறப்பான ஒன்றுதானே..!” என்கிறார் குர்சரண் தாஸ். இந்திய கல்வி நிறுவனங்களில் என்ஜினியரிங் படித்த மாணவர்கள் குரங்குகளைப் போல சுயநலம் சார்ந்து நாடுவிட்டு நாடு தாவுகிறார்கள். தனியார் கல்லூரிகளில் படித்த என்ஜினியரிங் மாணவர்கள் வானரங்களைப் போல ஆறுமாதத்திற்கு ஒருமுறை கம்பெனி விட்டுக் கம்பெனி மாறுகிறார்கள். பெரிய பெரிய நிறுவனங்கள் இந்தத் தாவுதலை சுலபமாகத் தாங்கி விடும். என்றாலும் சிறு மற்றும் நடுத்தர தனியார் நிறுவனங்கள் – பட்டதாரிகளின் இந்த சுயநலத் தாவுதலைச் சமாளிக்க முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள். இங்குதான் ஸ்ரீதர் வேம்பு – Zoho-வை வளர்த்தெடுக்கும் நேரத்தில் புத்திசாலித் தனமாக “Zoho University” என்ற தொலைநோக்குத் திட்டத்தைப் பற்றி யோசிக்கிறார். தன்னுடைய தொழில் வளர்ச்சி சார்ந்த சுயநலம் Zoho-வின் நிறுவனருக்கு இதில் இருக்கிறது. எனினும் மறைமுகமாக சமுதாய முன்னேற்றத்திற்கும் ஸ்ரீதர் வேம்புவின் சுயநலம் வழிவகுக்கிறது. (கிராமப்புற எளிய மாணவர்களின் நலன் கருதி யாரேனும் Zoho University-ன் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டால், பதில் மின்னஞ்சல் வருவதில்லை என்ற வருத்தத்தைப் பலரும் தெரிவிக்கின்றனர். இதனை Zoho கவனத்தில் எடுத்துக்கொண்டால் மகிழ்சியே.)

பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் ஒரு புள்ளியில் தன்னுடைய விருப்பப் படிப்பைத் தவிர்த்து, வேறு பாதை நோக்கிப் பயணிக்கத் தொடங்குகிறார்கள். கிண்டி கார்பொரேஷன் பள்ளியில் படித்த சரண் பாபுவை சூழல் தான் வேலை தேட வைத்திருக்கிறது. இன்று அவர் கணினி நிரல் எழுதுபவராக மென்பொருள் துறையில் முத்திரைப் பதித்து வருகிறார் என்பதை ஹிந்து நாளிதழின் மூலம் அறிய நேர்ந்தது. எல்லோருடைய வாழ்விலும் இதுபோன்ற மடைமாற்றங்கள் நிகழும் என்று சொல்லுவதற்கில்லையே. மடைமாற்றங்கள் நல்ல பாதைக்கு எல்லோரையும் இட்டுச் செல்லும் என்பதையும் எதிர்பார்க்க முடியாது தானே.

சமீபத்தில் தொலைதூர கிராமத்தில் வசிக்கும் தம்பியொருவரிடம் பேசினேன். இளங்கலையில் தேறிய அந்தத் தம்பி, சென்னை பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறையில் முதுநிலை படிக்க விண்ணப்பித்திருக்கிறார். தம்பியை நேர்முகத்திற்கும் அழைத்திருக்கிறார்கள். தம்பியின் பதில்கள் நேர்முகம் செய்தவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

“பாருங்க... நீங்க பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். அந்த கோட்டாவுல உங்களுக்குக் கண்டிப்பா எடம் கெடைக்கும். நீங்க வந்து உடனே ஜாயின் பண்ணிக்கலாம்” என்று நம்பிக்கை அளித்திருக்கிறார் தேர்வு செய்தவர்.

“நான் தொலைதூர கிராமத்துல இருக்கேன் சார். ஹாஸ்டல் ஃபெசிலிட்டிக்கு உத்தரவாதம் கொடுத்திங்கன்னா... நான் உடனே வந்து ஜாயின் பண்ணிக்கிறேன். சென்னையில ரூம் எடுத்து பிரைவேட்டா தங்கி படிக்கறது கஷ்டங்க சார்.” என தனது சூழலை சொல்லி இருக்கிறார் அந்தத் தம்பி.

“அதுக்கெல்லாம் நாங்க உத்தரவாதம் கொடுக்க முடியாது. படிக்கறதுக்கு சீட்ட கன்ஃபார்ம் பண்ணிட்றேன். மத்தத நீங்க தான் பாத்துக்கணும்.” என்கிறார் நேர்முகம் செய்தவர்.

ஏன்யா... கிராமத்துல இருந்து சென்னையில் படிக்க ஒரு மிடில் கிளாஸ் பையன் வரான், இளங்கலையில் தமிழுக்குச் சமந்தமே இல்லாத வேறு பாடத்தை எடுத்துப் படித்திருந்தாலும் இலக்கியம் படிக்க விருப்பத்தோட வரான், அதுவும் முதல் தலைமுறை பட்டதாரி என்னும் பொழுது, அவனுக்கான வசதிகளை செய்துகொடுப்பதில் – ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஜெர்க் அடிக்கிறது என்பது வேதனைக்குரிய விஷயம். சென்னையைச் சுற்றிலுமுள்ள தலித்துகளும், பிற்படுத்தப் பட்டவர்களும் மட்டுமே, சென்னை போன்ற நகரங்களில் படிக்க இயலும் எனில் அதனைவிட வேதனைக்குரிய விஷயம் என்னவாக இருக்க முடியும். கல்லூரியில் இடம் கிடைத்தாலும், விடுதியில் இடம் கிடைக்க இவர்கள் போராட வேண்டி இருக்கிறது. இதோ அந்தத் தொலைதூர கிராமத்தில் வசிக்கும் இளைஞர் வேறு துறையைச் சார்ந்து, தொலைதூரத் தமிழகத்தில் இருக்கும் வேறொரு கல்லூரியில் சேர்ந்து படிக்க இருக்கிறார். அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் வசதி படைத்த அல்லது சென்னையிலுள்ள அல்லது புறநகர் சென்னையிலுள்ள பிற்படுத்தப்பட்ட மாணவர் ஒருவர் – அந்த தமிழ் இலக்கியத் துறையின் கேஸ்ட் கோட்டா இடத்தை நிரப்பக் கூடும் என்றாலும் பொருளாத மற்றும் யதார்த்தச் சிக்கல் மாணவரின் விருப்பப் படிப்பை சூறையாடத் தானே செய்திருக்கிறது.

சாதிய அடிப்படையில் ஒருவருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கிறீர்கள் சரி. அவரை நேர்முகத்திற்கும் அழைக்கிறீர்கள் அதுவும் சரி. எனினும் பொருளாதாரச் சிக்கலால் அவருடைய படிப்பு கேள்விக் குறியாகிறது எனில் அதனைப் பல்கலைக் கழகம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டாமா? அதுவும் முதல் தலைமுறை பட்டதாரி எனில் அவரது விண்ணப்பப் படிவத்தை கவனமாக கருத்தில் கொண்டு பல்கலைக் கழகம் இந்த மாணவரின் சூழ்நிலையை பரிசீலனை செய்ய வேண்டாமா? அப்படி செய்யாமல் துறை சார்ந்த எதிர்கால ஆளுமைகளை எப்படி உருவாக்குவீர்கள்? கல்விக் குழுக்கள் சமுதாயத்தை எப்படி கடைத்தேற்றும்? பல்கலைக் கழகத்தில் சேருவதற்கான தகுதியிருந்தும், அதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியாத சூழல் இந்த மாணவ இளைஞர் ஒருவருக்கு மட்டும் இல்லை. எத்தனை எத்தனை இளைஞர்கள் இவரைப் போல ஆண்டுதோறும் பாதிக்கப் படுகிறார்களோ தெரியவில்லை!

கிராமப்புற தலித் மாணவர்களுக்கு மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் – தரமான படிப்பானது எட்டாக் கனியாகவே இருக்கின்றது. திறமையான மாணவர் என்று தெரிந்தால், நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு வைத்து – அதன் மூலம் தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு பணி உத்தரவாதத்துடன் ஒரு தனியார் நிறுவனம் மாணவர்களை படிக்க வைக்க முன்வருகிறது. ஆனால் நூற்றாண்டுகால பழமைமிக்க ஆசியாவின் புகழ்பெற்ற ஒரு பல்கலைக் கழகம், ஏராளமான கல்வி மானியங்களை சன்மானமாகப் பெரும் பிரசித்திபெற்ற ஒரு பல்கலைக் கழகம் – கிராமப்புற மாணவர்கள் தகுதியானவர்கள் தான் என்று தெரிந்திருந்தும், அவர்களின் வாழ்வியல் முன்னேற்றத்தில் பங்கெடுக்க முடியாத சூழலில் இருக்கிறது எனில் அது வேதனைக்குறிய விஷயம். ஒரு பல்கலைக் கழகத்திற்கே இதுதான் நிலைமை எனில் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளை என்ன சொல்வது?

மனிதர்களின் பதில் காற்றைக் குழைத்து நீரால் எழுதுவதற்குச் சமமானது. காலம் சொல்லும் பதிலோ அர்த்தம் நிறைந்தது. சரண் பாபுவைப் பற்றிய ஹிந்து நாளிதழ் செய்தி காலம் சொல்லிய பதில்களில் ஒன்று. போலவே, தொலைதூர கிராமத்துத் தம்பியைப் பற்றியும் ஒருநாளில்லை ஒருநாள் காலம் நிச்சயமாக பதில் சொல்லும். அன்றைய தினம் உங்களுக்கு அவனை அறிமுகப்படுத்துகிறேன். காலம் சொல்ல வேண்டிய பதிலுக்கு தம்பி தன்னை ஆயத்தப் படுத்திக்கொண்டு வருகிறார். மீண்டும் சிந்திப்போம்.

2 comments:

 1. Mani Jayaprakashvel (Phd)

  கிருஷ்ண பிரபு

  நான் சென்னைப் பல்கலைக் கழகத்தில் படித்த மிகவும் பிறபடுத்தப்பட்ட வகுப்பு மாணவன் தான். விடுதியில் இடமும் கிடைத்தது.முதலில் வருபவர்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் முன்னுரிமை கிடைக்கிறது. ஆனால் எனது முனைவர் பட்ட ஆய்வில் முதல் இரண்டு ஆண்டுகள் முடிந்த பின் தான் விடுதியில் இடம் கிடைத்தது. விடுதிகள் எல்லாம் நிரம்பி வழிகின்றன. பதிமூண்று ஆண்டுகளில் எந்த மாற்றமும் இல்லை. எல்லா படிப்புகளும் ஒழுங்கானதே. தமிழ் படிப்பதால் மட்டும் சலுகைகள் தேவை என்ன? மற்றபடி பல்கலைக்கழகம் விடுதி வசதிகளை பெருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சென்னை மிகவும் சாகசக்காரர்களுக்கான ஊர். விடுதியில் இடம் வாங்காமல் விடுதி வசதியகளை உபயோகித்தவர்களும் உண்டு.

  ReplyDelete
 2. ஒருவரது சுயநலம் சமுதாய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் எனில் சுயநலமானது சிறப்பான ஒன்றுதானே..!”//

  பதிவின் ஆதங்கமும் ஆழ்ந்த அலசலும் யோசிக்கச் செய்கின்றன.

  ReplyDelete