Monday, March 14, 2011

கேணியில் ட்ராஸ்கி மருது - 01

12-08-1953-ல் மதுரையில் இருக்கும் கோரிப்பாளையம் என்ற பகுதியில் ஓவியர் ட்ராஸ்கி மருது பிறந்தார். நவீன ஓவியத்தின் கூறுகளை ஆதிமூலம், தட்சிணா மூர்த்தி, நாகை பாஸ்கர் போன்றவர்களுக்குப் பின் வெகுஜனப் பத்திரிகையில் பயன்படுத்திய முன்னோடிகளில் மருதுவின் பங்கு தனிச்சிறப்பு நிறைந்தது. பள்ளி வாழ்க்கையை மதுரையிலும், அதன் பிறகு ஓவியத்தை பாடமாக எடுத்து சென்னை கலைக் கல்லூரியிலும் படித்தவர். ஓவிய பட்டயப் படிப்பில் 1976ஆம் ஆண்டு, முதல் மாணவராக தேர்ச்சி பெற்றவர். 1977-ஆம் ஆண்டு அதே கல்லூரியின் முதுநிலை பட்டயப் படிப்பிலும் தேர்ச்சி பெற்று 1978-ல் டெல்லியிலுள்ள Garhi Arts Studio -வில் சேர்ந்து வரைகலை பயிற்சி பெற்றவர். மத்திய அரசின் Weavers Service Center-ல் டெக்ஸ்டைல் டிசைனராக சிறிது காலம் பணியாற்றியவர். அனிமேஷன் துறையில் ஆர்வம் இருந்ததால் வேலையை ராஜினாமா செய்தவர்.

1980-களில் சினிமா போஸ்டர் டிசைனராகவும், 1990-களில் தமிழ், தெலுங்கு மற்றும் இதர தென்னிந்தியப் படங்களின் Special Effects & Digital Effects இயக்குனராகவும் பணியாற்றியவர். முதன் முதலில் கணினியைப் பயன்படுத்திய தமிழக ஓவியர்களில் ஒருவர். தமிழ்நாடு திரைப்பட இயக்கத்தைத் துவக்கியவர்களில் ஒருவர். அனிமேஷன் பயிலரங்குகள் மற்றும் அது சார்ந்த முயற்சிகளில் முனைப்புடன் செயல்படுபவர். தேவதை, நந்தலாலா போன்ற படங்களின் கலை இயக்குனராகவும் அவதாரம் எடுத்தவர் என்று அவருடைய ஓவியம் சார்ந்த பன்முகத் தன்மையை சொல்லிக் கொண்டே போகலாம். இந்த மாதக் கேணி சந்திப்பில் தன்னுடைய ஓவியம் சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை ஆர்வமுடன் பகிர்ந்து கொண்டார்.

காந்தியின் வார்தா ஆசிரமத்தில் சேர்வதற்காக என் தாத்தாவின் ஒரே வாரிசான அப்பா 14 வயதில் வீட்டைவிட்டு ஓடியிருக்கிறார். சில மாதங்கள் கழித்து இந்த விவரம் தெரிந்த தமிழர் ஒருவர் வீட்டிற்கு கடிதம் எழுதி தெரியப்படுத்தியிருக்கிறார். அப்பாவையும் ரயிலில் ஏற்றி மதுரைக்கு அனுப்பியிருக்கிறார்.

அதன்பின் அவருக்கு இலங்கைப் போராளிகளுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. பண்டார நாயக் ஆட்சி காலத்தில், தலைமறைவு வாழ்க்கை வாழ மதுரைக்கு வந்த ட்ராஸ்கியவாதிகளுடன் நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாகவே என்னுடைய பெயரை 'ட்ராஸ்கி' என்று வைத்தார். 'மருது' என்பது குடும்பப் பெயர். குடும்பத்தின் ஒரே மகன் என்பதால் இயக்கவாதிகள் அவரை தீவிர அரசியலில் ஈடுபடுத்தவில்லை. கொல்வினார் டி சில்வா, என்.எம்.பெரேரா போன்றவர்களுடன் சேர்ந்து கையெழுத்து பத்திரிகை எல்லாம் நடத்தி இருக்கிறார். அப்பாவிற்கு பெரியார் மீது ஈடுபாடு இருந்தது. அதனால் பாரதிதாசன் நடத்திய குயில் பத்திரிகை, திராவிட நாடு இவைகளெல்லாம் சிறுவயதிலேயே படிக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. புராண, இதிகாசங்களை கேலி செய்து வரும் சித்திரக் கதைகளை (Comics) ஆர்வத்துடன் படித்த ஞாபகம் பசுமையாக இருக்கிறது. சிறுகதை, நாவல், இலக்கியம் சார்ந்து கொஞ்சமாக படித்திருக்கிறேன்.

பிறந்த நாளுக்குக் கூட புத்தகங்களை பரிசாகக் கொடுப்பதை என் தந்தை வழக்கமாகக் கொண்டிருந்தார். தன்னுடைய நண்பர்களுக்கும் புத்தகங்களையே பரிசாகத் தருவார். சேகுவேராவின் வாழ்க்கை, தான்பரீனின் இயக்கம், மருது பாண்டியர்களின் புத்தகம் என பலவற்றையும் படிக்கக் கொடுப்பார். அவற்றில் ஓரியன்ட் லாங்மேன் தமிழில் வெளியிட்ட வீர சிவாஜி, மார்கபோலோ போன்றவை என்னை அதிகம் கவர்ந்தன. திப்பு சுல்தான், கான் சாஹிப், குஞ்ஞி மரக்காயர் போன்ற கலகக்காரர்களைப் பற்றியும் சிறுவயதிலேயே படிக்கக் கிடைத்தது. தாத்தா ஊரில் செல்வாக்குள்ள மனிதர் என்பதால் அப்பாவை கவுன்சிலர் பதவிக்கு நிற்குமாறு வற்புறுத்தினார்கள். சங்கரையா வருவதற்கு முன்பு அதற்கான வாய்ப்பிருந்தது. மேடைப் பேச்சு, கட்சிப் பணி, அரசியல் செயல்பாடு ஆகியவற்றில் அப்பாவிற்கு ஆர்வமில்லை என்பதால் மறுத்துவிட்டார்.

மதுரை ரயில் நிலையத்திற்கு எதிரில் உள்ள கட்டிடத்தில் பாரதி புத்தக நிலையம் இருந்தது. அப்பாவின் நண்பரான சுவாமிநாதன் அதனை நடத்தி வந்தார். எனவே அப்பாவுடன் அங்கு செல்வது வழக்கம். விளையாட்டில் ஆர்வம் இல்லாததால் விருப்பமுடன் செல்வேன். இருவருக்குமே பெரிய மனிதர்களுடன் தொடர்பிருந்தது. அவர்களெல்லாம் மதுரைக்கு வரும்பொழுது கட்டிடத்தின் மேல்தளத்திலுள்ள அறையில் தான் தங்குவார்கள். ஜீவானந்தம், பாரதிதாசன் போன்றவர்கள் கூட தங்கியிருக்கிறார்கள். அங்குதான், "ஓவியம் வரைவது எப்படி?" போன்ற புத்தகங்களை படிக்கக் கிடைத்தது. மாலை முழுவதும் அங்குதான் இருப்போம். நான் ஆரம்பத்தில் இருந்து ஆங்கில வழிக் கல்வியில் படித்தேன். அப்பொழுது ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். ஓர் அளவிற்கு மேல் ஆங்கில வழியில் படிக்க வாய்ப்புகள் இல்லை. எனவே தமிழ் வழிக் கல்விக்கு மாற்ற என்னுடைய மாமா யோசனை கூறினார். அதன்படியே தமிழ்வழிக் கல்விக்கு மாற்றிவிட்டார்கள்.

அந்நேரத்தில் சின்னம்மாவின் திருமணம் சென்னையில் நடந்தது. அதற்காக எல்லோரும் சென்றிருந்தோம். என்னுடைய குடும்பத்தினர் சினிமா துறையில் தொடர்புடையவர்கள். சின்னத் தாத்தா M S சோலைமலை பிரபல கதை வசனகர்த்தா. 'பாகப் பிரிவினை', 'பாவ மன்னிப்பு', 'பதிபக்தி' போன்ற வெற்றிப் படங்களின் வசனகர்த்தா அவர்தான். டைரக்டர் பீம்சிங் திருப்பதியிலிருந்து வந்தவர். அவருக்கு மதுரை, திருநெல்வேலி, தென்மாவட்டங்களின் வாழ்வியல் கலாச்சாரம் தெரியாது. அவருடைய படங்களில் அந்தந்த வட்டார வழக்கங்கள் தெளிவாக இருப்பதற்கு தாத்தாதான் காரணம். நடிகர் S S ராஜேந்திரன் (SSR) என்னுடைய பெரியப்பா மகன். SSR பிக்சர்ஸ் என்ற பெயரில் படங்கள் கூட எடுத்தார்.

திருவிளையாடல் படம் வெளிவந்த பின் சென்னை வர நேர்ந்தது. தாத்தாவின் மூலம் ஸ்டுடியோவிற்கு சென்றிருந்தேன். படத்திற்காக போடப்பட்ட அரண்மனை போன்ற SetUp-ல் உலாவியது மறக்க முடியாத அனுபவம். எல்லோரும் ஷூட்டிங் பார்க்க சென்று விடுவார்கள். யாருமற்ற அரங்குகளில் தனியாக நின்று கொண்டிருப்பேன். இல்லாத ஒன்றை இருப்பது போல காண்பிக்கும் அந்த மேஜிக் என்னை மயக்கியது. அரண்மனை போன்ற பெரிய Setup-ல், பூப்போன்ற டிசைன்களைப் பேப்பரில் வரைந்து மொசைக் போல தரையில் ஒட்டியிருப்பார்கள். அவற்றை உரித்தெடுக்க கணுக்காலுக்கும் அதிகமாக தண்ணீரை ஊற்றி ஊற வைத்திருந்தார்கள். தண்ணீரில் நின்றுகொண்டு காலியான அரண்மனை சிம்மாசனங்களையும், இருக்கைகளையும் பார்ப்பதற்கு விநோதமாக இருந்தது. சிவாஜி விறகு விற்கும் வீதி போன்ற SetUp-ல் கூட தன்னந் தனியாக அலைந்திருக்கிறேன். சினிமா உருவாகும் இடத்தில் இருக்கிறோம் என்பது சிலிர்ப்பாக இருந்தது. இந்த அனுபவங்களே ஓவியம் சார்ந்த என்னுடைய ஆர்வத்தை அதிகப்படுத்தியது.

பள்ளி அளவிலான ஓவியப்போட்டி எங்கு நடந்தாலும் என்னுடைய பள்ளியின் சார்பாக கலந்துகொண்டு பரிசினை வாங்கிவருவது வழக்கமானது. அப்படி ஒருமுறை நடந்த போட்டியில் சென்னை ஓவியக் கல்லூரியில் இருந்து ஓர் ஆசிரியர் வந்திருந்தார். என்னுடைய வரையும் திறமையைப் பார்த்துவிட்டு ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படிக்குமாறு ஆலோசனை கூறினார். எனக்குள் ஏற்கனவே இருந்த முடிவுக்கு அச்சாணி போல அது அமைந்தது. ஓவியக் கல்லூரியில் சேர எட்டாவது படித்திருந்தால் போதும். எனவே அதற்கு மேல் படிக்கமாட்டேன் என்று வீட்டில் சொல்லிவிட்டேன். வீட்டிற்கு தெரியாமல் சென்னைக் கல்லூரிக்கு விண்ணப்பமும் அனுப்பிவிட்டேன். அவர்களும் நேர்முகத்திற்கு அழைத்திருந்தார்கள். உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்ததால் நேர்முகத்திற்கு அந்த ஆண்டு செல்ல முடியவில்லை.


வேறு வழியில்லாமல் ஒன்பதாவது சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன். அந்த சமயத்தில் தான் National Geography-ல் அனிமேஷன் பற்றி வெளியான 27 பக்கக் கட்டுரையை வாசித்தேன். அதற்கு முன்புவரை அனிமேஷன் எப்படி செய்கிறார்கள் என்று தெரியாது. பின்னணியைத் தனியாகவும், அசையும் பிம்பங்களைத் தனியாகவும் வரைகிறார்கள் என்ற அடிப்படை உண்மைகளைக் கூட அதிலிருந்துதான் தெரிந்துகொண்டேன். அந்த நேரத்தில் 101 Dalmatians படம் மதுரைக்கு வந்தது. பின்னணிக்காக ஒருமுறை, அனிமேஷனுக்காக ஒருமுறை, இயக்கத்திற்காக ஒருமுறை என்று ஒரே நாளின் நான்கு காட்சிகளை தொடர்ந்து பார்த்தேன். வீட்டில் என்னைக் காணாமல் தேடியிருக்கிறார்கள். மாமாதான் திரையரங்கிற்குச் சென்று பார்க்கச் சொல்லி இருக்கிறார். உறவினர்கள் வந்து அடித்து இழுத்துக் கொண்டு போனார்கள். புதுமைப் பித்தனையும் அந்த வயதில் தான் படிக்க ஆரம்பித்தேன். அவருடைய கதைகள் பிடித்திருந்ததால் தொடர்ந்து வாசித்தேன்.


இரண்டாவது முறை ஓவியக் கல்லூரியில் விண்ணப்பித்த போது, வீட்டில் அனுமதி பெற்று சென்னைக்குச் சென்றேன். ஆரம்பத்தில் அப்பா அனுப்புவதற்குத் தயங்கினார். ஓவியத்தைப் படித்தால் எதிர்காலத்தில் தேவையான அளவிற்கு பொருளீட்ட முடியுமா என்று யோசிக்கலானார். இந்தத் துறைக்கு இருக்கும் வரவேற்பும், வாய்ப்புகளும் சரியாகத் தெரியாததால் குழப்பத்துடனே இருந்தார். தாத்தாவின் சமாதானத்தின் பொருட்டாக மட்டுமே என்னை படிக்க அனுப்பினார். சென்னையில் தாத்தா இருந்த இரண்டு தெருக்கள் தள்ளி ஓவியர் சிற்பி தனபால் இருந்தார். அவர் எழுதிய 'உயிருள்ள படிப்பு' என்ற ஆனந்த விகடனில் வெளிவந்த கட்டுரையை படித்திருக்கிறேன். ஓவியக் கல்லூரியில் தரப்படும் பயிற்ச்சிகள் குறித்து தெளிவாக அதில் எழுதியிருந்தார். ஓவியத்தை பாடமாக எடுத்துப் அந்தக் கட்டுரையும் ஒரு வகையில் காரணமாக அமைந்தது. வரைந்திருந்த படங்களை எடுத்துக்கொண்டு அவரிடம் சென்றேன். அது RB பாஸ்கருக்கு திருமணம் முடிந்த இரண்டாம் நாள். ஆதிமூலம், கன்னியப்பன் போன்ற முக்கியமான ஓவியர்கள் அங்கிருந்தனர். படங்களை அவர்களிடம் கொடுத்து கருத்துக் கேட்டேன். எல்லோரும் பாராட்டினார்கள்.

கேணி ஓவியர் சந்திப்பு - ட்ராஸ்கி மருது - 02

பின் குறிப்பு:
1. என்னுடைய ஞாபகத்தில் இருப்பதை மட்டுமே எழுதி இருக்கிறேன்.
2. அவருடைய 4 மணிநேர பேச்சின் சிறுவடிவம் தான் இது. ஆகவே தகவல்கள் நிறைய விடுபட்டிருக்கலாம். அதற்கு நானே பொறுப்பு. பிழை இருந்து யாரேனும் தெரிவித்தால் சரிசெய்துவிடுகிறேன்.
3. அடுத்த மாதம் நடக்கும் கேணி சந்திப்பில், ஓய்வுபெற்ற தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா I.A.S அல்லது கர்னாடக சங்கீத கலைஞர் T.M கிருஷ்ணா இவர்களில் யாரேனும் ஒருவர் பங்குகொள்ளலாம். நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளவும்.


1 comment:

  1. பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே. அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்.

    ReplyDelete