Sunday, March 20, 2011

சிட்டுக்குருவி தினம்

மார்ச் 20 - சிட்டுக்குருவி தினம் (House Sparrow) என்பதால் கவிஞர் ஆசைத்தம்பியுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன். அதன் தாக்கத்தில் தான் இந்தப் பதிவு. இந்தப் பறவையினத்தை சிட்டு, ஊர்க் குருவி, அடைக்கலாங் குருவி என்றும் கூட அழைக்கிறார்கள். "இந்தியாவில் அதிகமாகக் காணக் கிடைக்கும் பறவை எது?" என்று பறவையியல் அறிஞர் சலீம் அலியிடம் கேட்கப்பட்டதாம். காக்கையையும், சிட்டுக்குருவியையும் சொல்லலாம் என்று பதில் கூறினாராம். மனிதர்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் இவையிரண்டையும் காணமுடியும். ஓட்டு வீடுகளும், கூரை வீடுகளும் சிட்டுக் குருவிகளுக்கு வசதியான இருப்பிடங்கள். வீட்டின் எதோ ஒரு மூலையில் உத்திரத்திற்கு இடையில் கூடுகட்டி வாழப் பழகியவை. வீதிகளில் உள்ள மின்சாரக் கம்பிகளின் சட்டகத்தில் கூட இவற்றின் கூடுகளைப் பார்த்திருக்கிறேன்.

என்னுடைய தாய் வழிப் பாட்டி வீடு அந்த காலத்தில் கட்டப்பட்ட மூன்றடுக்கு சுண்ணாம்பு வீடு. கட்டடத்தைத் தாங்குவதற்காக நீண்ட மரச் சட்டங்களை உத்திரத்தில் ஆதாரமாகக் கொடுத்திருப்பார்கள். ஆங்காங்கு முற்றங்கள் இருக்கும் பெரிய வீடு. அந்த முற்றங்களில் நிமிர்ந்து பார்த்தால் சிட்டுக் குருவிகள் குதூகலத்துடன் கூட்டில் உறவாடும். ஒட்டடை அடிக்கும்பொழுது கூட பறவைகளின் கூடுகளை சிதைக்க மாட்டார்கள். "கூட்டக் கலச்சா குடும்பத்துக்கு ஆகாது" என்று சொல்வதைப் பலமுறை கேட்டிருக்கிறேன். மாட்டு வண்டிகளில் நெல்மூட்டைகள் ஏற்றும்பொழுது சிந்தும் நெல் பருக்கைகளையும், சாயந்திர நேரத்தில் தண்ணீர் தெளித்து போடும் வெள்ளைக் கோலங்களின் அரிசி மாவையும் சிறிய அலகால் கொத்தித் தின்பதைப் பார்த்திருக்கிறேன். நம்முடைய வீட்டின் கட்டுமானம் தற்போது முற்றிலும் மாறி இருக்கிறது. வீட்டின் வடிவமைப்பு நம்முடைய இருப்பிற்கு வேண்டுமானால் வசதியாக இருக்கலாம். நம்மை ஒட்டி வாழும் பறவைகளுக்கு ஏற்றதாக இல்லை என்பதே வருத்தமான உண்மை.

நம்முடைய கலாச்சாரமும் வாழ்வியல் முறையும் மாறமாற, நம் சார்ந்த பூகோள உயிரினங்களின் வாழ்வியல் பிரச்சனையாக மனிதர்கள் மாறிவிடுகிறார்கள். இன்றும் என்னுடைய கிராமத்தில் மார்கழி மாத கோலம் போடுகிறார்கள். சாணியை கோலத்தின் நடுவில் வைத்து பூசணிப்பூவை நடுகிறார்கள். கோலத்தில் அரிசி மாவைவிட வேதிப் பொருளான வண்ணப் பொடிகளையே (Color Powder) அதிகம் இட்டு நிரப்புகிறார்கள். புகைபடிந்த பனியின் இருளில் இறங்கி நடந்தால் மஞ்சளும், சிவப்பும், பச்சையும், வெல்வெட்டும் தெறிக்கின்றன. முற்றத்தை அழகுபடுத்துவதாக நினைத்துக் கொண்டு மண்ணின் தரத்தை வேதிக் காரங்களும், அமிலங்களும் தின்னக் கொடுக்கிறோம். இன்னும் சிலர் கோலம் அழியாத வண்ணம் Paint-டால் கூட வரைந்துவிடுகிரார்கள். வீட்டின் சுவர்களுக்கு பயன்படுத்தப்படும் வண்ணப்பூச்சுகளின் உப பொருட்களான வார்னிஷ் போன்றவற்றின் பயன்பாட்டினால் காற்றின் வெப்பநிலை அதிகரிக்கிறது என்றும் கூறுகிறார்கள். AC, Fridge போன்றவற்றின் க்ளோரோ ஃப்ளோரோ கார்பன் பற்றி எல்லோரும் பரவலாக அறிந்ததே. காற்றின் வெப்பநிலை உயர்வும் பறவைகளின் இயல்பான வாழ்க்கையை நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றன.

விவசாயப் புரட்சி என்ற அதி நவீனக் கொள்கையில் நச்சுத்தன்மை கொண்ட உரங்களையே நிலங்களில் பயன்படுத்துகிறோம். 65% விவசாய நிலங்கள் வேதி உரங்களால் தான் பயிராகிறது. பயிர்கள் வளர்ந்த பிறகும் பூச்சிக் கொல்லி அமிலங்களை இயந்திரத்தின் மூலம் தெளிக்கிறோம். வேதித் தன்மை அதிகமாகும் நிலங்களில் புழுக்கள் எப்படி வளரும். காற்றில் கலந்த அமிலத்தை மீறி பூச்சிகள் எப்படி வளரும். பின்னர் பறவைகளுக்கு எப்படி பசி தீரும். இதில் பிளாஸ்டிக், பாலித்தீன், உலோகப் பூச்சு மைக்காப் பைகளினால் வேறு சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறோம். முன்பெல்லாம் கிராமத்திற்கு வருபவர்களை நிழல்தரும் மரங்களே வரவேற்கும். இப்பொழுதெல்லாம் மக்கா குப்பைகளே வரவேற்கின்றன. இதில் பாலித்தீன் கவர்களுக்கு தடைவிதித்த கேரளா அரசின் தைரியமான முடிவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பசு, எருது போன்ற கால்நடை வளர்ப்பு இயற்கையை வளப்படுத்த பெரிதும் உதவும் என்கிறார்கள். குறிப்பாக பசுவின் சாணம் கிருமி நாசினியாக மட்டுமில்லாமல் அணுப் பிளவின் கதிர்வீச்சுத் தன்மையிலிருந்தும் பாதுகாக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

அடுத்த முக்கியமான பிரச்சனை பெட்ரோல் மற்றும் தொழிற்ச்சாலைகளால் ஏற்படும் கற்று மாசுபாடு. இந்த மாசுக் காரணிகளால் பாதிக்கப்படும் பூச்சிகளை சிட்டுக்குருவிகள் உண்பதில்லை. அதிகரித்துவரும் வாகனப் பயன்பாடும், முடுக்கிவிடப்படும் தொழில்மயமும் காற்றின் மாசுபாட்டை நாளுக்கு நாள் அதிகரிக்கவே செய்யப்போகின்றன. அண்டார்ட்டிக்காவிலிருந்து திரும்பிய பனி மனிதனின் ஆங்கிலப் பேட்டி உறைய வைப்பதாகவே இருக்கிறது. இதே முறையில் மக்கள் வாழ்ந்தால், பெட்ரோலை அதிகமாகப் பயன்படுத்தினால் இன்னும் 80 முதல் 100 ஆண்டுகளில் சென்னை போன்ற கடற்கரை நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் இருக்கிறது என்று ஆரூடம் சொல்கிறார். "ச்சே ச்சே இதெல்லாம் நடக்குமா என்ன?" என்ற சந்தேகம் வரலாம். கடலில் மூழ்கிய பூம்புகாரில் ஏராளமான தங்க வைர நகைகள் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். மாமல்லபுர அழகிய சிற்பங்களில் பலவும் கடலில்தான் மூழ்கி இருக்கின்றன என்றும் சொல்கிறார்கள். அதுபோலவே சென்னையின் கோட்டையும், இதர நகரங்களின் சிம்மாசனங்களும் மூழ்கலாம் இல்லையா? சென்னையின் மக்களே உங்களின் பங்காக கடலன்னைக்கு என்ன கொடுக்கப் போகிறீர்கள்?.

நீர் மாசுபாட்டின் ஏகோபித்த பங்கு தொழிற்ச்சாலைகளையே சாரும். எனினும் ஆற்றில் நீர் இருந்தால் தானே நீர் மாசுபடுவதற்கு. மணல் திருடுவதற்கு நீர் இருந்தால் எப்படி?. நிலத்தடி நீர் மட்டும் என்ன வாழ்கிறது. இந்தியாவிலிருந்து சுரங்கப்பாதை தோண்டி அமெரிக்க, ஜப்பான், வளைகுடா போன்ற நாடுகளுக்குச் செல்ல ஆராய்ச்சி நடக்கிறது. இதைச் சொல்லும் என்னை பைத்தியக்காரன் என்று நீங்கள் சிரிக்கலாம். வானத்தில் பறக்க முடியும் என்று சொன்னபோது ரைட் சகோதரர்களைப் பார்த்து உலகமே சிரித்ததாம். இதைப்படிக்கும் தமிழ் சமூகம் ரொம்பக் குறைவு. அதிலும் சிவனைக் கூட பித்தன் என்று சொல்லும் மரபுதானே நம்முடையது. யதார்த்தமாக யோசித்தால், மழைநீர் சேமிப்பை செயல் திட்டமாகக் கொண்டுவரும் அரசை அடுத்த முறை வீட்டிற்கு அனுப்புவோம். நமக்கு கிரைண்டரும், மிக்ஸியும், டிவியும் தானே முக்கியம். மின்சாதனப் பொருட்களை மீறி யோசித்தால் மூலையில் ரத்தக் கசிவு அல்லவா ஏற்படும்.

கடைசியாக செல்போன் கோபுரங்களுக்கு வருவோம். வானுயர்ந்த கோபுரங்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு சிட்டுக் குருவியின் அழிவிற்கு முக்கியமான காரணம். இவற்றின் அருகில் குருவிகளின் கூடு இருந்தால் அவற்றின் வாழ்நாள் குறைகிறது. குருவிகளின் மலட்டுத் தன்மைக்கும், நாட்கடந்த குஞ்சு பொறித்தலுக்கும் இந்த அலைக்கற்றைகள் காரணமாக அமைகின்றன. பொதுவாக 10 முதல் 15 நாட்களில் குஞ்சு பொரிக்கும் இந்த பறவைகள், செல்போன் கோபுரங்களின் அருகில் குஞ்சு பொறிக்கும் காலங்களில் இருக்க நேர்ந்தால் ஒரு மாதத்திற்கும் அதிகமான நாட்களை எடுத்துக் கொள்வதாக சொல்கிறார்கள். தெருவில் புணரும் நாயின் குறி மீது கல்லெறிவதும், அடைகாக்கும் பறவைக்கு சிக்கலை ஏற்படுத்துவதும் ஒன்றுதானே.

பூச்சி புழுக்களையும், பூவின் மொட்டுக்களையும், தானிய வகைகளையும் உண்டு வாழும் பறவைகளுக்காக கொஞ்சம் யோசிப்போம். எளிய வாழ்க்கை வாழும் அவைகளுக்காக நம்முடைய அதீதமான வசதிகளில் தேவையில்லாத கொஞ்சத்தைக் குறைத்துக் கொள்வோம். சிட்டுக் குருவிகளும் ஊரில் உலகத்தில் வாழட்டுமே.

1 comment: