Friday, March 18, 2011

கிழக்கின் இருட்டில் வெளிச்சம்

பாலுசத்யா எழுதிய "இன்று விடுமுறை" என்ற சிறுகதைத் தொகுப்பை அவரிடமிருந்து கடன் வாங்கியிருந்தேன். புத்தகத்தைத் திருப்பிக் கொடுப்பதற்கும், கிழக்கின் மொட்டை மாடிக் கூட்டத்திற்கும் சேர்த்து நியூ ஹொரிசன் மீடியாவிற்குச் சென்றிருந்தேன். பாலுசத்யா வெளியில் சென்றிருந்ததால் வரவேற்பரையில் உட்கார்ந்து, 'நம்ம சென்னை' இதழில் யுத்தம் செய் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் சத்யா பற்றி (ஒரு கலைஞனின் பயணம்) நண்பர் சந்தோஷ் எழுதியிருந்த கட்டுரையை வாசித்துக் கொண்டிருந்தேன். என்னருகில் இருந்த சிறுவன் பேச்சுக் கொடுத்தான். இதழிலிருந்து பார்வையை விலக்கி குரல் வந்த திசையைப் பார்த்தேன்.

"புத்தகம் வாங்க வந்திருக்கிங்களா... அண்ணா?" என்றான்.

"இல்ல கண்ணா... நண்பரைப் பார்க்க வந்திருக்கேன். ஆமா நீ இங்க என்ன பண்ற?"

"நான் கிழக்கு WareHouse-ல வேலை செய்யிறேங்கன்னா" என்றான்.

"சின்ன பையனா இருக்கியே. மேலபடிக்க வேண்டியது தானே" என்ற கேள்வி என்னையும் மீறி வெளிவந்துவிட்டது.

"படிக்கணும்ணா... 10th-ல 75% மார்க் வாங்கியிருக்கேன். கொஞ்ச பணத்தேவை இருந்தது. அடுத்த வருஷம் படிக்கப் போறேண்ணா" என்றான்.

"படிக்கறத விட்டுடாதப்பா. நல்ல மார்க் வேற வாங்கியிருக்கியே" எனும்போது அவனுடைய அலுவலகத் தோழன் அழைக்கவும் என்னைப் பார்த்து சிரித்துவிட்டு சொந்தக் காலில் ஓடினான். தரைக்கும் வலிக்காமல், காலுக்கும் வலிக்காமல் எச்சரிக்கையுடன் பாலுசத்யா நடந்து வந்தார். என்னைப் பார்த்ததும் உதட்டைக் குவித்து "உஸ்ஸ்ஸ்" என்று ஊதினார்.

"சின்ன குழந்தையா மாறிட்டிங்களா பாலு? இது என்ன விளையாட்டு?" என்றேன்.

"சத்தம் போடாதீங்க... குருநாதர் வராரு..." என்று கண்களை உருட்டி பரபரப்பாகக் கூறினார். தொலைந்த பொருளைத் தேடுவது போல, கீழ் தளத்தை உற்றுநோக்கியவாறு பாலுமகேந்திரா கடந்து சென்றார். கிழக்கின் ஊழியர்களைப் பார்த்துவிட்டு, மீண்டும் என்னைக் கடந்து செல்லும்போது "கிருஷ்ண பிரபு, இலக்கிய வாசகர் சார். தேடித்தேடி படிக்கக் கூடியவர் சார்" என்று ராட்சசப் படைப்பாளியிடம் பாலுசத்யா அறிமுகப்படுத்தி வைத்தார்.

ஒரு நிமிடம் நிதானித்து "அப்படியா..." என்று என்னைப் பார்த்தவர், "நம்ம எல்லாம் ஒரே வட்டத்தில் இருக்கோம். சந்தோசம்..." என்றவாறு இறுக்கமாகக் கையைப் பற்றினார். அந்தப் பற்றுதலில் இலக்கியத்தின் மேலுள்ள அவருடைய பிடிப்பு வெளிப்பட்டது. உரையாடலின் தொடக்கத்தைக்கூட இலக்கியப் பரிட்சயத்திலிருந்தே ஆரம்பித்தார். அன்றையதினம் பேச வேண்டிய தலைப்பும் "எழுத்திலிருந்து சினிமாவிற்கு" என்பதால் வாகாக அமைந்தது.

மற்ற சினிமாக்களில் இல்லாத ஏதோ ஒன்று என்னுடைய சினிமாக்களில் இருப்பதாக எல்லோரும் நினைக்கிறார்கள். அல்லது பேசிக் கொள்கிறார்கள். அது இலக்கியப் பரிட்சயம் தவிர்த்து வேறொன்றும் இல்லை என்று பேசத் தொடங்கியவர் எழுத்துலக அரசியலையும், சல்ஜாப்புகளையும் மெல்லிய ஸ்ருதியில் ஒரு பிடி பிடித்தார். சுஜாதாவின் கொடியை இலக்கியவாதிகள் என்றும் உயர்த்திப் பிடித்ததில்லை. ஏனென்றால் அவர் வெகுஜனப் பத்திரிகையில் நிறைய எழுதிவிட்டார் என்று சொல்கிறார்கள். வெகுஜனப் பத்திரிகையில் எழுதியதாலேயே அவருடைய எல்லாப் படைப்புகளும் குப்பைகள் என்று சொல்வோரும் இருக்கின்றனர். அந்த குப்பைகளைக் கிளறிப் பார்த்தால் 10 சிறந்த படைப்புகள் இருக்காதா என்ன? என்ற கேள்வியை முன்வைத்தார். ஜெயகாந்தனின் முத்திரைக் கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தபோது தவறவிடக் கூடாது என்று நினைப்பேன். அவருடைய கதைகளைப் படிப்பதற்காகவே காலை நான்கு மணிக்கு அலாரம் வைத்து கொழும்புவிற்குச் சென்று வாசித்துவிட்டுத் திரும்புவேன். புத்தகம் வாங்குவதற்கு பணம் இருக்காது என்பதால் ஒரு பிரதியை இரவல் வாங்கி, ரயில்வே பிளாட்பாரத்தின் இருள் சூழ்ந்த மஞ்சள் நிற வெளிச்சத்தில் படித்துவிட்டுத் திரும்புவேன். அவருடைய கதைகள் சோடை போனவையா என்ன?

சினிமா கலைஞர்கள் வித்யாசமான முயற்சிகள் மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. சன் தொலைக்காட்சிக்காக 'கதைநேரம்' என்ற வித்யாசமான முயற்சியை, தமிழின் முக்கியமான படைப்பாளிகளின் சிறுகதைகளை தொலைகாட்சித் தொடர்களாக எடுத்தபொழுது ஒருவரும் அதைப் பற்றிய பதிவை முன்வைக்கவில்லை என்ற கோவம் எனக்கிருக்கிறது. எழுத்தாளர்களும், எழுத்தாளர்களின் சங்கங்களும் கூட அதைப் பற்றி வாய்திறக்கவில்லை. சரி... அதற்குள் செல்ல நான் விரும்பவில்லை என்றவாறு 'இலக்கியத்திலிருந்து சினிமாவிற்கு' பற்றி தொடர்ந்து பேசினார். அவற்றின் சாரத்தை ஏற்கனவே இந்தப் பதிவில் எழுதி இருக்கிறேன். கேணியில் பேசியதை சிறிதே மாற்றி கிழக்கின் மொட்டை மாடியில் பகிர்ந்து கொண்டார்.

இலக்கியமும் சினிமாவும் - கேணி இலக்கிய சந்திப்பு

பாலு மகேந்திரா போன்ற உன்னதப் படைப்பாளிகளை நாம் இரண்டாம் இடத்திலேயே வைத்திருக்கிறோம் என்பதுதான் உலுக்கக் கூடிய உண்மை. "ரஜினியையும், கமலையும் அறிமுகப்படுத்தினார் என்பதாலேயே பாலச்சந்தர் கொஞ்சம் உயரமான பீடத்தில் வைத்துப் பார்க்கப்படுகிறார். அவர்களுக்கு வித்யாசமான பாத்திரங்களைக் கொடுத்ததால் பாரதிராஜாவும் மெச்சப்படுகிறார். இயக்குனர் சிகரம், இயக்குனர் இமையம் என்றெல்லாம் அடைமொழி வேறு கொடுக்கிறார்கள். ஊமைப் படமாக (Silent Cinema) பார்க்கப்பட்ட திரைப்படம் பேசும் சினிமாவாக (Verbal Cinema) பரிமாற்றம் அடைந்தது பெரிய வரப்பிரசாதம். பேச்சே சினிமாவாக மாறிக்கொண்டிருந்த சமயத்தில் மகேந்திரன், பாலுமகேந்திரா போன்றவர்கள் சினிமாவை வேறு தளத்திற்கு நகர்த்தினார்கள். அதிலும் உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், வீடு, சந்தியாராகம் போன்ற படங்கள் உலகத் தரத்திற்கு நிகரானவை. Pure Indian Content. ருத்ரையா, ஞான ராஜசேகரன் போன்றவர்கள் கூட குறிப்பிடப் பட வேண்டியவர்கள். பல இடங்களிலும் இவர்களுடைய இருப்பு இருட்டடிப்பு செய்யப்படுகிறது" என்று சினிமாத் துறை நண்பர் ஆக்ரோஷமாகப் பகிர்ந்து கொண்டார்.

இரண்டு தேசிய விருதுகள் பெற்ற பாலு மகேந்திராவிற்கு சரியான கௌரவம் தரப்படுகிறதா என்ற சந்தேகம் எனக்கும் இருக்கிறது. சுய லாபத்திற்காக தேவையானவர்களைப் புகழ்ந்து பேசி காரியம் சாதிக்கும் உலகில் வாழ்கிறோம் என்பது மேலும் மேலும் சோம்பலை ஏற்படுத்துகிறது. வியாபார யுக்தியிலும், அதிகார மையத்திலும் கட்டுண்ட சினிமா உலகம் என்றுதான் இயல்பு நிலைக்குத் திரும்புமோ, உச்சத்தில் இருப்பவர்கள் சமரசம் இல்லாமல் பேசக் கூடிய தருணம் எப்பொழுதுதான் வாய்க்குமோ தெரியவில்லை.

தொடர்புடைய பதிவு:

1. கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம் - பிரதிபலிப்பான்
2. நிசப்தத்தில் மிதந்துவந்த குரல் - ஹரன்பிரசன்னா
3. நிகழ்வின் ஒலிவடிவம் - ரேடியோஸ்பதி

7 comments:

 1. அருமை பிரபு ...
  //பாலு மகேந்திராவிற்கு சரியான கௌரவம் தரப்படுகிறதா என்ற சந்தேகம் எனக்கும் இருக்கிறது//
  எனக்கும் தான் . அதுவும் பாலசந்தரை முதல் இடத்தில் வைத்திருப்பது தான் எனக்கு பெருங்கோபம்... பிரபு

  ReplyDelete
 2. அட... நீயுமாய்யா! ஒரே குருதி (Same Blood).

  :-)

  ReplyDelete
 3. prabu i thought that balu sir photo is mine...i took that in prasad lab

  ReplyDelete
 4. உங்கள் கணிப்பு சரியே ஜாக்கி. புகைப்படத்தை உருவியதற்கு நன்றி தெரிவித்து மின்னஞ்சல் அனுப்ப நினைத்தேன். அதற்குள் உங்களுடைய பின்னூட்டம் வந்துவிட்டது.

  :-)

  ReplyDelete
 5. பாலச்சந்தர் பாரதிராஜாவுடன் ,பாலுமஹேந்திரா மகேந்திரனை ஒப்பிடுவது மேல் சொன்ன அதே ரஜினியுடன் கமலை ஒப்பிடுவது போன்றே உள்ளது.இருவரும் ஏதோ ஒரு விதத்தில் உழைப்பால் உயர்ந்தவர்கள்.அவர் அவர்களது பாணியும் வேறு.அதே போல்தான் பாலு மகேந்திராவும் பாலச்சந்தரும்.மேலும் ரஜினியும் கமலுமின்றி அவர்களைவிடஇன்னும் நடிப்பில் தேர்ந்த பல நடிகர்களை பாலச்சந்தர் உருவாக்கியவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.மேலும் தங்கள் நண்பர் கூறியதுபடி பார்த்தால் ஒரு மனிதனுக்குத் தரும் அடைமொழிதான் அவனுக்கு அனைத்திலும் சிறப்பு தரும் என்பது போலும் அவனை அனைவர் மத்தியிலும் பேசப்பட வைக்கும் என்பது போலும் உள்ளது.உண்மையில் அது நாமாக உருவாக்கிக்கொண்ட ஒரு பிம்பம்,எம்மைப் பொறுத்தவரையில்.பாலு மகேந்திராவின் படங்கள் பெரும்பாலும் ஒரு சமூகத்திலோ அல்லது ஒரு சமுதாயத்திலோ ஏற்படும் நிகழ்வுகளை ஒரு தனி மனிதன் என்ற ரீதியிலாக பாவித்து எடுக்கப்பட்டது.கே.பி யின் படங்கள் பெரும்பாலும் தனி மனித உளவியலைப் படிப்பதாக சமுதாயம் என்ற பார்வையில் இருக்கும்.இவ்விரண்டிலுமே ஏதோ ஒரு விதத்தில் இயக்கம் நுணுக்கம் சமூகத்திற்கான அக்கறை என அனைத்தும் சிறந்ததாகவே இருக்கும். இதில் முதல் இடம் இரண்டாம் இடம் ஒப்பிடுதல் ஆகியன எங்கிருந்து வந்தது? மீண்டும் அது பொது ஜனமாகிய நாமும் நம்மை சுற்றி இருப்பவர்களும் உருவாக்கிகொண்டதே.தமிழ் சினிமாவை நேசிப்பவர்கள் கண்டிப்பாக இவ்விரண்டையுமே குறைத்து மதிப்பிடமாட்டார்கள்,தாங்களும் நன்று அறிந்ததே.

  ReplyDelete
 6. அன்பின் கிருஷ்ணா நீ எடுத்து கையாள்வது எனக்கு பிரச்சனையே இல்லை... இந்த படம் ஏன் எனக்கு பிடிக்கும் என்றால் என்னிடம் அன்று பிளாஷ் இல்லை...வெறு ஒரு பிளாஷில் வந்த வெளிச்சத்தின் போது மிகசரியாக என் கிளிக்கும் அமைந்த காரணத்தால் அந்த படம் ஏதெச்சையாக அழகாக எனக்குபடும்...

  நான் எடுத்த ஒரு புகைபடம் எனது நண்பரின் பதிவுக்கு உதவியது மகிழ்ச்சியே..

  ReplyDelete
 7. நிச்சயமாகத் தோழி. என்னுடைய நோக்கமும் ஒப்பிடுவது அல்ல. பாலச் சந்தரைக் குறைவாக மதிப்பிடுவதும் அல்ல. நான் குறிப்பிட விரும்புவது பாலு மகேந்திரா நிறுத்தப்படும் இடத்தைப் பற்றி. சினிமா விழாக்களில் உன்னிப்பாகப் பாருங்கள் அந்த நின் அரசியல் உங்களுக்குப் புலப்படலாம்.

  இயக்குனர்களுக்கான விழா எடுக்கப்பட்டால் அது அரசியல் கலப்பில்லாமல் நிகழ்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

  சமூக அரசியலின் நிழல், கலையின் மீது விழுகிறதே என்பதுதான் என் சார்ந்தவர்களின் வருத்தம். அதிலும் அதீதத் திறமை படைத்த சமரசம் இல்லாப் படைப்பாளிகள் புறக்கணிக்கப் படுகிறார்கள் என்பதே அதனினும் சொல்ல முடியாத வருத்தம். சமீப சினிமா விநியோகம் சார்ந்த பிரச்சனைகள் கூட உங்களின் கவனத்திற்கு வந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

  http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=8

  ReplyDelete