Monday, July 8, 2013

சிறுவர் இலக்கிய வட்டம்

குழந்தைகளின் உலகம் பேண்டஸி நிறைந்தது. பேண்டஸியாக வாழும் பொழுது யதார்த்தச் சிக்கல்கள் தவிர்க்க முடியாத ஒன்று. கற்பனை உலகில் சுற்றித் திரிய பெரியவர்கள் விரும்புவதில்லை. பெரியவர்களின் யந்திரத் தனமான வாழ்க்கை சிறுவர்களை தனிமைச் சிறையில் வலிந்துத் தள்ளுகிறது. சமீப ஆண்டுகளின் தமிழ் மாநில மின்வெட்டுப் பிரச்சனை எல்லோரும் அறிந்த ஒன்றுதான். விடுமுறை நாட்களில் என்னுடைய அக்காவின் மகன் அகில் சொல்கிறான்:

“அம்மா... போர் அடிக்குது’ம்மா...” – எட்டு வயது கூட நிரம்பாதவன் இந்த வசனத்தைப் பேசுகிறான். வீட்டிலிருக்கும்போது, மின்சாதன விளையாட்டுப் பொருட்கள் தான் அவனுடைய நண்பர்களாக இருக்கின்றன. அல்லது சிறுவர் தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் தான் மூழ்கிவிடுகிறான்.

இது ஒரு பக்க பிரச்சனை என்றால், பெரியவர்களின் மனச் சிக்கல் வேறு விதமானது. மைன்ட் ஃப்ரஷ் நிறுவனர் கீர்த்தனா கிருஷ்ணமூர்த்தியிடம் முன் வைக்கப்படும் கேள்விகளில் பெரும்பாலும் இந்தக் கேள்வி இடம்பெற்றுவிடும்.

“மேடம், இந்த பசங்க தொல்ல தாங்கல...! சரியான வாலா இருக்காங்க... எந்தப் பொருள வாங்கி வச்சாலும் ரெண்டு வாரத்துல ரிப்பேர் பண்ணி வச்சிடுறாநுங்க. இல்லன்னா ஓடச்சிடுறானுங்க. என்ன பண்றதுன்னே தெரியல? எதனோட வேல்யுவுமே இவங்களுக்குத் தெரிய மாட்டேங்குது.”

பெற்றோர்களுக்கான குழந்தை வளர்ப்பு பயிலரங்கில் இந்தக் கேள்வி ஒவ்வொரு முறையும் கேட்கப்படும். “ஐயையோ.. இந்தப் பிரச்சனை எங்களுக்கும் இருக்கு... என்ன பண்றதுன்னே தெரியல” என மற்ற பெற்றோர்களும் ஆமாம் சாமி போடுவார்கள்.

“நீங்க கேக்குற கேள்வி சிக்கல் நிறைந்த ஒன்றுதான். ஞாயமான கேள்வியும் கூட. இதுக்கு பதில் சொல்றதும் கஷ்டம் தான். ஏன்னா...? உங்களோட வேர்வை நீங்க வாங்குற எல்லா ப்ராபர்டிலையும் இருக்கு. உங்க கஷ்டம் எனக்கு புரியுது. ஆனா... நீங்க ஒரு 300 வருஷத்துக்கு முன்னாடி வாழறதா இப்ப நெனசிக்கொங்க. அப்பல்லாம் அரசர்களோட ஆட்சிதான் நடந்துட்டு இருந்ததுன்னு உங்களுக்கே தெரியும்.” “ம்... ம்... ம்...” என்ற சப்தம் பெற்றோர்களிடமிருந்து எழும்.

“பாருங்க... நீங்க வாழற சமஸ்தானத்தோட ராஜா உங்ககிட்ட வந்து...இதோ பக்கத்துல இருக்க விளையாட்டு மைதானத்த ரெண்டு ரவுண்ட் ஓடிட்டு வாங்கன்னு சொல்றாரு. என்ன செயவிங்க?”

“கண்டிப்பா ஓடுவோம்...!” – இது பெற்றோர்கள்.

“சரி.... மைதானத்த ரென்று ரவுண்டு ஓடிநிங்க இல்ல... உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லன்னு வச்சிக்கோங்க?” என கீர்த்தனா சொன்னதும், சிலரது முகங்களில் அதிர்ச்சி ரேகைகள் எழும்.

“நெருப்புன்னா வாய் சுடாதுங்க. உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்ல. ஆனா. அந்த ராஜா உங்க எல்லோரையும் – ஊர் எல்லையில் இருக்கும் காவல் தெய்வமான கருப்பசாமி கோவிலை 101 முறை சுத்தச் சொல்றாரு... என்ன செயவிங்க?”

“ம்....ம்... கண்டிப்பா சுத்துவோம்.” – இது பெற்றோர்கள்.

“சரி... நீங்க எல்லோரும் ராஜா சொல்றாருன்னு ஏன் ஓடணும்?”

“ஓடலைன்னா கழுத்த வெட்டி தெருவுல தொங்க வுட்டுட மாட்டாரு...!” – இது யாரேனும் ஒரு பெற்றோர்.

“ஹாங்... அந்த காலத்து ராஜா மாதிரியே - உங்க பசங்களையும் நீங்க கண்ட்ரோல் பண்ணனும்னு ஆசப்படுறீங்க...! இது நடக்கற காரியமா?”

“கண்ட்ரோல் பண்ணலைன்னா பசங்க எப்படி ஒழுக்கமா வளருவாங்க?”

பசங்க கூட நெறைய பேசுங்க. நல்ல நல்ல ஒழுக்கக் கதைகள் சொல்லுங்க. வெறுமனே “பசிக்குதா? சாப்புடுறீயா? ஹோம் வொர்க் பண்ணிட்டியா? மெகா சீரியல் போடப்போறாங்க... இப்பவே சாப்புட்டுட்டு போயிடு?” – இதைத் தவிர குழந்தைகளிடம் வேறேதாவது பேசுறோமா?. குழந்தைகள் விளையாடும் கம்ப்யூட்டர் கேம்ஸ் எல்லாமே வன்முறை நிறைந்ததாகத் தான் இருக்கிறது. அப்படியிருக்கையில் குழந்தைகளிடம் மென்மையான சுபாவத்தை எப்படி எதிர்பார்க்கிறீர்கள் என்ற விதமாகத் தான் இருக்கும் கீர்த்தன்யாவின் கேள்விகள். கீர்த்தனா கேட்பதிலும் ஞாயம் இருக்கிறது. பெற்றோர்கள் தயங்குவதிலும் ஞாயம் இருக்கிறது. ஏனெனில் “மெகா சீரியல், ஆபீஸ் வொர்க்” என்று மூழ்கிவிடும் நாம் குழந்தைகளுக்கு எப்படிக் கதைகளைச் சொல்லுவது. கதைகளைப் படித்தால் தானே, சுவாரஸ்யம் குறையாமல் அடுத்தவர்களுக்கு கதை சொல்ல முடியும். இதற்கெல்லாம் நமக்கு நேரம் இருக்கிறதா? இந்த சிக்கலைத் தீர்வாகத் தான் “சிறுவர் இலக்கிய வட்டம்” முன்னெடுக்கப்பட இருக்கிறது.

குழந்தைகள் இலக்கியம் சார்ந்து தீவிரமாக இயங்கிவரும் நண்பன் விழியன் (உமாநாத்) மற்றும் இன்னும் சில வாசக நண்பர்களால் துவங்கப்பட்ட வட்டம் இது. குழந்தைகள் சார்ந்த கதையுலகினை வாசிப்பின் மூலமும், கதை சொல்லல் மூலமும் – கட்டி எழுப்ப ஒரு சிறு முயற்சிக்கான அடித்தளமாக நண்பர்கள் வட்டம் துவங்கிச் செயல்பட இருக்கிறது. சென்ற மாதம் இந்த ஆயத்தப் பணிகளுக்கான முதற் கூட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக சென்ற ஞாயிறன்று இரண்டாம் சந்திப்பும் இனிதாகவே நடந்து முடிந்தது. பல நண்பர்களும் சந்திப்பிற்கு விருப்பத்துடன் வந்திருந்தார்கள்.

கதை சொல்ல நண்பர்கள் தயாராக இருக்கிறார்கள். குழந்தைகளைத் தேடி நண்பர்கள் வருவார்கள். பெற்றோர்கள் அருகில் இருக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. வாரத்திற்கு ஒருமுறை உங்களுடைய குடியிருப்புப் பகுதிக்கு வந்து, குழந்தைகளை அமர்த்தி கதையுடன், கிராப்ட் செய்யவும் கற்றுத் தருகிறார்கள். ஒரு மொட்டை மாடி கொடுத்தால் போதுமானது. 7 வயது முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இது மிகவும் பயன்படும். ஆர்வமிருக்கும் நண்பர்கள் விழியனை (உமானாத்) தொடர்பு கொள்ளலாம். முதலில் சென்னை போரூரைச் சுற்றியுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இருந்தும், சென்னையிலுள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளிளிருந்தும் இதனைத் துவங்கலாம் என்றிருக்கிறோம்.

“ஹேய்... உங்கள்ள யாரெல்லாம்பா காகிதக் கப்பல் செஞ்சி இருக்கீங்க?” என்று எழுத்தாளர் பாலபாரதி நண்பர்களைப் பார்த்து கேட்டார். ஏறக்குறைய எல்லோருமே தலையாட்டினோம். “சாதா கப்பல், கத்திக் கப்பல், மூடு கப்பல்” என எத்தனை விதமான கப்பல்களை மழைக்காலத்தில் செய்திருப்போம். இன்று மழை பெய்தால் எந்தக் குழந்தையாவது விதவிதமான கப்பல்கள் செய்கிறதா? இதனைப் பெரிய குறையாகவும் சொல்ல முடியாது தான். ஆனால் நாம் அருகில் அமர்ந்து சொல்லிக் கொடுத்தால் குழந்தைகள் செய்து மகிழ்வார்கள் இல்லையா? இதுபோலவே ஓவியத்தையும், இதர கிராப்ட் வகையராக்களையும் செய்துக் காண்பித்தால் குழந்தைகள் மகிழ்வார்கள் இல்லையா? இதுபோன்ற சின்னச் சின்ன சந்தோஷங்களை குழந்தைகளின் வாழ்கையில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது நம் எல்லோரின் கடமை இல்லையா?

“குழந்தைகள் எந்த புள்ளியில் கதை கேட்க ஆரம்பிக்கின்றன? எந்தப் புள்ளியில் கதை சொல்ல ஆரம்பிக்கின்றன?” என்பது சற்றே நுட்பமாக அவதானிக்க வேண்டிய ஒன்று. தவழும் குழந்தையை தோளில் வைத்துக்கொண்டு “அங்க பாரு காக்க...! இங்க பாரு குருவி...!” என்கிறோம்.

குழந்தையும் “ங்கா... ஆ... ம்ம்ம்ம்” என்று ஏதாவது பதிலை மழலையில் சொல்கிறது. புத்தி தெரியும் வரை பெற்றவர்களும் வேறு வழியில்லாமல் குழந்தைகளிடம் பேசுகிறார்கள். குழந்தைகளும் அவர்களை தொல்லை செய்கிறது. அதுவே ஓரளவிற்கு வளர்ந்து பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தவுடன் – குழந்தைகளிடம் பேசுவதே குறைந்துவிடுகிறது. குழந்தைகளும் “டிவி, விடியோ கேம்ஸ், ப்ளே ஸ்டேஷன்ஸ்” என்று மடைமாற்றி வேறு திசையில் பயணிக்க ஆரம்பிக்கிறார்கள். இங்கிருந்துதான் குழந்தைகளின் மொழி சார்ந்து, உறவுகள் சார்ந்த சிக்கல்களே ஏற்படுகிறது. அந்த இடைவெளியை இட்டு நிரப்பும் ஆவலில் தான் இந்த “சிறுவர் இலக்கிய வாசகர் வட்டம்” முன்னெடுக்கப்பட இருக்கிறது. கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த காலத்தில் “தாத்தாவும், பாட்டியும்” கதை சொல்வார்கள். குழந்தைகளும் “ம்” கொட்டி ஆவலுடன் கதைகளைக் கேட்பார்கள். இதனை, கவிஞர் “குகை மா புகழேந்தி” மிக அழகாகப் பதிவு செய்கிறார்.

"கதை சொல்லும்
குருட்டுக்கிழவி
“ம்...” சொல்லும் புறாக்கள்"

- இதோ கூடுவிட்டுக் கூடு பாய்ந்து குருட்டுக் கிழவிகளாக மாற, ஆர்வமிருக்கும் நண்பர்கள் காத்துக் கிடக்கிறார்கள். உங்கள் வீட்டிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் குழந்தைகள் இருக்கிறார்கள் தானே. மழைக்கு ஒதுங்கி நிற்கும் சிறு இடமே என்றாலும் போதும். நண்பர்கள் ஒதுங்கிக் கொள்ள இடம் தாருங்கள். குழந்தைகளை “புறா”-க்களைப் போல பறக்கவிடுங்கள்.

# “அரசு பள்ளி, தனியார் பள்ளி, அடுக்குமாடிக் குடியிருப்பு, வீட்டு வசதிக் குடியிருப்பு” என குழந்தைகள் அதிகம் வசிக்கும் பகுதியில் – சிறுவர்களுக்குக் கதை சொல்லுதல் மற்றும் சிறுவர் இலக்கியம் சார்ந்து ஆர்வமுடன் செயல்ப
ட  நினைக்கும் நண்பர்கள் இந்த வட்டத்தில் இணைத்துக் கொள்ளலாம். அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் எனில் மிக்க சந்தோசம். உங்களது நண்பர்களிடம் இதைப் பற்றி பகிர்ந்துகொள்ளுங்கள்.

2 comments:

  1. அருமையான பகிர்வு...
    கண்டிப்பாக செய்யலாம்...

    ReplyDelete