Sunday, June 30, 2013

ஆடுகளம் to அம்பிகாபதி – திரை மொழி

“என்னுடைய தம்பி கஷ்ட்டப்பட்டு ஹிந்தியில் பேசி நடிக்கிறான். ரான்ஜனா டிரைலர் பார்த்தேன். பெருமையாகவும் பிரம்மிப்பாகவும் இருக்கின்றது.” என இயக்குனர் செல்வராகவன் டிவீட் செய்திருந்தார். தம்பியின் அடுத்தடுத்த வெற்றியை ஒரு அண்ணனாக கொண்டாட்ட மனநிலையில் பகிர்வது தவறில்லை தான். ஆனால் செல்வராகவன் பகிர்ந்திருந்ததை ஜனரஞ்சகப் பத்திரிகைகள் உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டார்கள் போல.

இரண்டு மாதங்களுக்கு முன்பு எக்மோர் மியூசியம் தியேட்டரில் “சென்னை அரங்கம்” ஏற்பாடு செய்திருந்த எழுத்தாளர் சுஜாதாவின் “கடவுள் வந்திருக்கிறார்” நாடகத்தைப் பார்க்க நேர்ந்தது. ஏறக்குறைய இரண்டு மணிநேர நாடகம். அதில் ஓர் இளம் பெண் அக்ரஹார பாஷை பேசி நடித்திருந்தார். அவளுடைய கதாப்பாத்திரம் பிரதானமானது. வசனங்களை பேசிக்கொண்டே இருக்க வேண்டிய பாத்திரம் அவளுடையது. நாடகத்தின் முடிவில் சென்னை அரங்கத்தின் நிறுவனர் பாரதிமணி நடிகர்களை அறிமுகப்படுத்திக் கொண்டே வந்தார். இளம் பெண்ணை முன்னே நிறுத்தி “இவள் ஆந்திரா கொல்டி. இந்தப் பெண்ணுக்கு தமிழ் மொழிய எழுதி படிக்கத் தெரியாது. நாடகத்தின் முழு ஸ்க்ரிப்டையும் தெலுங்குல எழுதி வச்சிக்குனு பேசி நடிச்சா” என்றார். வதவதன்னு ஏகப்பட்ட வசனங்கல வேற்று மொழியில் எழுதி வைத்து, மேடை நாடகத்தில் நடிப்பதற்கு ஓர் அசாத்தியத் திறமை வேண்டும். அவளுடைய பிராமண தமிழ் உச்சரிப்பு அவ்வளவு சுத்தமாக இருந்தது. நடிகர் பாரதிமணி சொல்லவில்லை என்றால், அந்தப் பெண் தெலுங்கு கொல்டி என்பதே பார்வையாளர்களுக்குத் தெரிந்திருக்காது. ஆனால், அந்தப் பெண்ணின் கடினமான உழைப்பு மெச்சத் தகுந்த ஒன்று. 


தெலுங்கு பேசுபவர்கள் எந்த ஒரு மொழியையும் இலகுவாகக் பேசலாம் என்று தெலுங்கு பேசும் நண்பர்களில் சிலர் பகிர்ந்திருக்கிரார்கள். ஏனெனில் எல்லா ஒசைக்குமான எழுத்து தெலுங்கில் இருக்கிறது என்கிறார்கள். சமஸ்கிருத ஸ்லோகங்கள் கூட தெலுங்கர்கள் சொல்லுவார்கள். சிறுவயதில் தொலைக்காட்சியில் பார்த்த மகாபாரத சீரியலில் வரும் கீதா உபதேசம் “சமஸ்க்ரதம், தெலுங்கு” ஆகிய இரு மொழிகளிலும் கேட்டதாக ஞாபகம். தனுஷ் – தெலுங்கு குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர். ஒருவேளை வீட்டில் அவர்கள் தெலுங்கு கூட பேசலாம். அந்த பரிச்சியம் இதர மொழி பேசி நடிக்கும் பொழுது அவருக்குக் கைகொடுக்கலாம். நாடகத்தில் நடித்த பெண்ணாக இருக்கட்டும், நடிகர் தனுஷாக இருக்கட்டும் – இருவருமே திறமையானவர்கள் தான்.

சேவற் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆடுகளம், பலரது வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்திய முக்கியமான திரைப்படம். வெற்றிமாறனுக்கும், தனுஷுக்கும் இந்தப் படம் ஒரு மைல்கல் என்று கூட சொல்லலாம். சேவற் சண்டையில் அதீத ஆர்வமுள்ள ஒருவன், ஆங்கிலோ இந்தியப் பெண்ணை துரத்தித் துரத்திக் காதலிப்பதை கதைக் கருவாகக் கொண்ட திரைப்படம். மதுரைத் தமிழை அச்சு அசலாகப் பேசி நடித்ததால், நடிகர் தனுஷுக்கு தேசிய விருது கூட பெற்றுத்தந்த படமிது. இங்கு இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். அதே ஆண்டில் எழுத்தாளர் பாஸ்கர் சக்தியின் “அழகர்சாமியின் குதிரை” என்ற சிறுகதை, இயக்குனர் சுசீந்திரனால் திரைப்படமாக எடுக்கப்படுகிறது. குதிரை வளர்க்கும் ஒருவன் மலைப்பிரதேச அழகி ஒருத்தியை கரம்பற்ற நினைக்கிறான். அவளுக்காகவே தனது தொலைந்துபோன குதிரையைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். குதிரை வளர்ப்பவனாக நடித்த அப்புக்குட்டிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அதே ஆண்டில் அறிவிக்கப்படுகிறது.

தனுஷ் ஏற்று நடித்ததைப் போலவே முக்கியமான கனமான பாத்திரத்தை, அதாவது ஹீரோ போன்ற ஒரு கதாப் பாத்திரத்தை ஏற்று நடித்த அப்புக்குட்டிக்கு எந்த அளவுகோலில் துணை நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது என்பதை ஒரு ஜனரஞ்சகப் பத்திரிகை கூட கேள்வி எழுப்பவில்லை. மாறாக தனுஷை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு களியாட்டம் போட்டார்கள். சரி... உடல் சார்ந்த விருது அரசியலை பின்னர் பிறிதொரு சந்தர்பத்தில் பேசலாம். இப்பொழுது தனுஷின் மதுரை ஸ்லாங்கிற்கு வருவோம். இதைப் பற்றி தனுஷே கூட பெருமையாக நேர்முகங்களில் பகிர்ந்த பொழுது:

ஷூட்டிங் ஸ்பாட்ல நான் (தனுஷ்) டயலாக் பேசிட்டு இருக்கும்போது, ஒரு வயசான மதுரைக்காரர் இருந்தாரு. அவரு என்னை பார்த்து கைய காமிச்சி கூப்பிட்டு “தம்பி, இங்க இருக்கவங்க பேசுறதுலையே - நீங்க பேசுறது தான் அச்சு அசலா மதுரத் தமிழாட்டும் இருக்குதுன்னு சொன்னாரு”.

மேற்கூறிய சம்பவத்தை நினைவு கூர்ந்த பொழுது தனுஷ் மிகவும் பெருமிதப்பட்டார். இயக்குனர் வெற்றிமாறனோ விஜய் டிவி விருது வழங்கும் விழாவில் – ஆடுகளம் திரைப்பட ஆக்கம் குறித்து பேசும் பொழுது, தனது உதவி இயக்குனர்களைப் பற்றி மிக உயர்வாகப் பேசி பெருமிதப்பட்டார்.

“ஒவ்வொருநாளும் ஷூட்டிங் நடக்கறதுக்கு முன்னாடி, உதவி இயக்குனர்கள் ரெண்டு பேர் தனுஷின் ரூமுக்கு போயிடுவாங்க. ஹோட்டல் ரூமுல இருந்து ரெடியாகி ஷூட்டிங் ஸ்பாட் வர வரைக்கும் மதுர தமிழ்லயே அவர் கூட பேசிட்டு இருப்பாங்க. அப்புடி ரொட்டீனா வார்ம்அப் பண்ணிட்டுதான் இந்த ஷூட்டிங் எல்லாம் எடுத்தோம்” என்றவர், டப்பிங்கில் கூட அந்த உதவி இயக்குனர் சமரசம் செய்துகொள்ளாமல் மிக வருத்திக்கொண்டு, பல முறை பேச வைத்து குரல் பதிவு செய்ததாகவும் கூறினார். (அந்த உதவி இயக்குனரின் பெயர் தான் ஞாபகத்தில் வந்து தொலைக்கமாட்டேன் என்கிறது.)

ஞாயமாகப் பார்த்தால் தனுஷ் பகர்ந்ததை வெற்றிமாறன் பேசியிருக்க வேண்டும். வெற்றிமாறன் பகர்ந்ததை தனுஷ் பேசியிருக்க வேண்டும். அப்படிப் பேசியிருந்தால் ஆரோக்கியமாக இருந்திருக்கும். என்றாலும் தன்னை முன்னிருத்திக்கொள்ளும் யுக்தி சினிமாத் துறையில் சாதாரணமான ஒன்றுதான். ஆகவே தனுஷை குற்றம் சொல்லி ஆகப்போவதில்லை. தூக்கத்திலிருந்து எழுப்பினால் கூட நுனிநாக்கில் பேசக் கூடிய, பொதுவில் புழங்கும் வட்டார மொழியின் ஓசையில் பேசுவதற்கே இத்தனை மெனக்கெடல்கள் வேண்டுமெனில், கொஞ்சமும் பரிச்சயமற்ற வேறொரு மொழியை பேசி நடிக்க – எவ்வளவு பக்கபலங்கள் தேவையிருக்கும். ஷூட்டிங் ஸ்பாட்டில் இதற்காக எவ்வளவு பேர் உதயிருக்க வேண்டும் என்ற யோசனைதான் என்னுள் எழுந்தது. ராஞ்ஜனாவைப் பொருத்தவரை 90% சதவீத ஒளிப்பதிவு செய்தது நட்டி தான். நட்டியிடம் இருக்கும் நான்கில் ஒருவர் மட்டுமே ஹிந்திக்காரர். மற்றவர்கள் அனைவரும் தமிழர்கள் தான். அதிலும் நட்டி “ஹிந்தி, தமிழ், ஆங்கிலம்” போன்ற மொழிகளை லாவகத்துடன் பேசக் கூடியவர். ஹிந்தியில் இவர் பிசியான ஒளிப்பதிவாளரும் கூட. இவர் “நாளை (2006), சக்கர வியூகம் (2008), மிளகா (2010), குலசேகரனும் கூலிப்படையும் (2010), முத்துக்கு முத்தாக (2011)” போன்ற படங்களில் முக்கியமான பாத்திரத்தில் கூட நடித்திருக்கிறார்.

“சக்கர வியூகம்” – திரைப்படத்தின் இணையம் சார்ந்த பங்களிப்பை நான் வேலை செய்த கம்பெனிதான் செய்துக் கொடுத்தது. எங்களுடைய கிரியேடிவ் ஹெட் பிரஜோஷ் பாலகிருஷ்ணன் இணையதளத்திற்கு தேவையான புகைப்படங்களை தேர்ந்தெடுக்கும் பொழுது நானும் பக்கத்தில் இருந்திருக்கிறேன். நட்டி நடித்த சில ஸ்டில்சும் அதிலிருந்தது. பிரஜோஷிடம் கேட்டேன்:

“இவருதான் இந்தப் படத்துக்கு ஹீரோவா?” என்றேன் சிரித்துக் கொண்டே நக்கலாக.

“நட்டி யாருன்னு உனக்குத் தெரியுமா கிருஷ்ணா?” என்றார்.

“இந்தப் படத்தோட தயாரிப்பாளரா?” என்றேன்.

“படம் ப்ரடியூஸ் பண்றது அவருக்கு பெரிய விஷயமே இல்ல. ஆனா அவருக்கு இன்னொரு முகமும் இருக்கு. அது தெரியுமான்னு கேட்டேன்?” என்றார் பிரஜோஷ்.

“ஆமா... படத்தோட டைரக்டரா இருக்கும். நடிக்க வந்துட்டாரா?” என்றேன்.

பிரஜோஷ் தலையிலடித்துக் கொண்டார். “நட்டி ஹிந்தியில முக்கியமான சினிமட்டோகிராபர்-யா. பாலிவுட்ல ரொம்ப பிசியான ஆளு. ஃப்ரண்ட் யாராச்சும் கேட்டிருப்பாங்க. அதான் நடிச்சி கொடுத்திருப்பாரு. கூகுள்ல போயி அவர பத்தி தேடிப்பாரு. என்னிக்கி தான் இதையெல்லாம் தெரிஞ்சிக்கப் போறியோ?” என்றார்.

“எம்மோ... ஆளப் பார்த்தா அந்த மாதிரி தெரியிலையே ப்ரஜோஷ். சரியான கல்லூலி மங்கனா இருப்பாரு போல.” என்றேன். “நீ வேஸ்ட் கிருஷ்ணா. ஏதாச்சும் சினிமா பார்த்தா தானே!...” என்று ப்ரஜோஷ் சொல்லியதும் தான் நட்டியைப் பற்றி மேலும் சில விஷயங்களை தேடித் தெரிந்துகொண்டேன்.

ஏ. ஆர். ரகுமான் போலவே நாட்டியும் பள்ளிப் படிப்பை முடிக்காதவர். சிறுவனாக இருந்த பொழுது வறுமையின் காரணமாக, இசைக் கருவிகளை வாடகை விடுவதற்காக, அதனை சுத்தம் செய்ய வெண்பட்டுத் துணியை கைகளில் எடுத்தவர் ரகுமான். போலவே, கேமராவை சுத்தம் செய்ய நட்டியும் துணியைக் கைகளில் எடுத்திருக்கிறார். இருவரும் இன்று தொட்டிருக்கும் உச்சம் சாதாரமானது அல்ல. அவரவர் பாதையில் சக்கைபோடு போடுகிறார்கள். (கீழே உள்ள புகைப்படம்: ராஞ்ஜனா திரைப்படத்தில் சோனம் கபூரை உட்கார வைத்துக்கொண்டு நட்டி ரிக்ஷா ஓட்டுகிறார். டெக்கான் க்ராநிகளில் வெளிவந்த கட்டுரை.

பத்திற்கும் மேற்பட்ட ஹிந்தி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சில படங்கள் ஒளிப்பதிவிற்காக பேசப்பட்ட திரைப்படங்கள் என்பதும் முக்கியம். இவருடைய முழுமையான பங்களிப்பு இல்லையெனில் – காட்சிகளை புரிந்துகொண்டு ராஞ்சனாவில் சுலபமாக ஹிந்தி பேசி நடிப்பவராக (தனுஷ்), இந்த அளவிற்கு மோல்ட் ஆகியிருப்பாரா என்பது குறித்த ஒரு விஷயம் இருக்கிறது. தனியாளாக பாலிவுட்டுக்குச் சென்று தனுஷ் சாதித்துவிட்டு வந்திருப்பதாக தூபம் போடுவது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்குச் சமம். நம்மாட்கள் ஏற்கனவே சென்று அடித்தளம் போட்ட இடத்தில் தான் தனுஷ் தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார். திரைப்பட சட்டகத்திற்கு பின்னாலுள்ள நபர்களின் பங்களிப்பையும் நாம் பார்க்க வேண்டும். அவர்களைப் பற்றி நினைவு கூறவும் பழக வேண்டும். “ராஞ்ஜனா” – ப்ரமோஷனில் நட்டியைப் பற்றி தனுஷ் ஏதேனும் நினைவுகூறக் கூடும் என்று நினைத்தேன். அப்படியின்றும் நிகழவில்லை. (ஹிந்தி தெரிந்த தமிழர் பக்கத்தில் இருக்கும் பொழுது, அவரிடமிருந்து தனுஷ் மொழி சார்ந்த உதவியை பெறாமலா இருந்திருப்பார்.) 

தனுஷ் ஹிந்தியில் அறிமுகமாகிய “ராஞ்ஜனா”, வட இதியாவில் பயங்கர ஹிட் என்கிறார்கள். இசையமைப்பாளர் ரகுமானுக்கு ஹிந்தியில் மார்கெட் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருக்காகவே திரைப்படம் பார்க்க வருபவர்களும் இருக்கிறார்கள். ரகுமானும் தமிழர். ஒளிப்பதிவாளர் நடராஜன் சுப்பிரமணியம் (நட்டி) கூட தமிழர் தான். ஆக, முக்கியமான துறைகளில் தமிழர்கள் வேலை செய்த படமிது. என்றாலும் தனுஷ் ஹிந்தியில் பேசி நடித்ததை – தமிழ் பத்திரிகைகள் வானளாவக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவகையில் நடிகனிடம் இருக்கும் இதுபோன்ற மெனக்கெடல்களை கொண்டாட வேண்டியதும் அவசியம் தான்.

பிரகாஷ்ராஜ் இல்லையா! கன்னடரான அவர் – “தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம்” என எங்கு சென்றாலும் தனது சொந்தக் குரலில் பேசி அசத்திவிட்டு வரவில்லையா?. முதுநிலை கன்னடம் படித்த நடிகர் கிஷோர் கூட, “வெண்ணிலா கபடிக்குழு, புதுப்பேட்டை, ஹரிதாஸ்” என தமிழில் பேசி கலக்கிக் கொண்டிருக்கிறார் இல்லையா?. (அடிப்படையில் பிரகாஷ்ராஜும் கிஷோரும் – அரங்க நாடகப் பின்னணியிலிருந்து வந்தவர்கள். ஆகவே இதுபோன்ற மெனக்கெடல்கள் இயல்பிலேயே ஊறி இருக்கும்.) அல்லாரி நரேஷ் தமிழ் பேசி நடிக்கவில்லையா? எத்தனை கதாநாயகிகள் ஹிந்தியிலிருந்து தமிழுக்கு வருகிறார்கள். இங்கிருந்து “வைஜெயந்திமாலா, ஸ்ரீதேவி” போன்றோர் மும்பை சென்று கலக்கவில்லையா? அதிலும் ஸ்ரீதேவி ஹிந்தியில் உச்சத்தைத் தொட்ட நடிகை. (ஆனால் கமல் & ரஜினியால் பாலிவுட்டின் பிரதான இடத்தை அடைய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.) அப்படியிருக்கையில், இனியொரு இனியொரு விதி செய்ய என்ன இருக்கிறது?

ராஞ்சனாவின் 10% சதவீத ஒளிப்பதிவை வேறொரு நபர் செய்திருக்கிறார். காரணம் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி ஹிந்தியில் படமாகிறது. அதற்கு நட்டிதான் ஒளிப்பதிவு. கஜினியின் ஹிந்தி படத்தை இயக்கிய அனுபவம் ஏற்கனவே ஏ.ஆர். முருகதாஸ்-க்கு இருக்கிறது. அதைப் பற்றிய சுவாரஸ்யமான ஒரு விஷயத்தை தனது தொலைகாட்சி நேர்முகத்தில், நீண்ட நாட்களுக்கு முன்பு பகிர்ந்தது தான் ஞாபகத்திற்கு வருகிறது.

அமீர்கான் பேசி நடித்த ஒரு காட்சியின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்ததாம். வசனத்தின் ஒரு வார்த்தையை அமீர் கான் மாற்றிப் பேசிவிட்டாராம். முருகதாஸ் அதனைக் கண்டுபிடித்து அமீர்கானிடம் சொல்லி இருக்கிறார். காட்சிகைப் போட்டுப் பார்த்ததில் அமீர்கான் மாற்றிப் பேசியிருப்பது தெரிய வந்ததாம். இதற்காக அமீர் கான் வெகுவாகப் பாராட்டினாராம்.

“ஏன்யா..! ஒருநாள்ல மூனு நிமிஷ காட்சியைத் தான் படமாக்கப் போறீங்க. அதுல முப்பது வார்த்தைக்கு மேல இருக்கப் போறது இல்ல. மனப்பாடம் செஞ்ச அந்த முப்பது வார்த்தையில இரு வார்த்தை புரண்டு போறத கண்டு புடிக்கறது அவ்வளோ பெரிய கஷ்டமாயா?”.

நடிகராவது? இயகுனராவது? நம்மவர்கள் செய்யும் எது ஒன்றுமே தனிப்பட்ட சாதனைதான் போல. இது இங்கிருந்து வடக்கில் செல்லும் எல்லோருக்குமே பொருந்தும். ஒரு வார்த்தை ஹிந்தி தெரியாது. லாவகமான ஆங்கிலமும் இல்லை. ஆனால் மாஸ் ஹீரோவை வைத்து ஹிந்தி படத்தை ஒருவர் இயக்குகிறார். இதெப்படி சாத்தியம் என்றே தெரியவில்லை. ஏ. ஆர், முருகதாசுக்கு கஜினியில் ரவி.கே.சந்திரன். துப்பாக்கி ஹிந்தி வெர்ஷனில் நட்டி என்கிற நடராஜன் சுப்பிரமணியன். எனினும் அவர்களைப் பற்றி ப்ரஸ் மீட்டில் ஒரு வார்த்தை பேச மாட்டார்கள்.

நடிகராவது! இயக்குனராவது! இட்ஸ் ஆல் இன் த கேம்.

“ஆடுகளம் to அம்பிகாபதி – திரைமொழி” – இதைப்பற்றி ஒன்றுமே எழுதவில்லை என்ற வருத்தம் எனக்கும் இருக்கிறது. திரைமொழியைப் பற்றி பேச அந்த மொழி எனக்கு தெரிந்திருக்க வேண்டுமில்லையா? எனக்கு தான் தமிழைத் தவிர வேறெந்த மொழியும் தெரியாதே.

1 comment:

  1. Aadhavan Ssk கூகுள் ப்ளஸ்சில் சொல்லியது:

    மிளகா வந்தப்ப தான் யார்ரா இவர்னு நட்டியை தேடி தெரிஞ்சுகிட்டேன்.

    விகடனோட வீடியோ பேட்டில நட்டியைப் பத்தி தனுஷ் சொல்லியிருப்பார்.

    # விகடன் பேட்டியில் தனுஷ் நட்டியைப் பற்றி பேசியிருப்பார் போல.

    ReplyDelete